நம் மூதாதையர் வரலாறு: டோனி ஜோசஃபின் ‘Early Indians’

by வெ.சுரேஷ்
1 comment

கலைஞர் கருணாநிதி – சிவாஜி இணையில் பராசக்திக்குப் பின் மிகப் பிரபலமான படம் மனோகரா. அப்படத்தின் உச்சக்காட்சியில், “இன்பச்சோலையின் இடையே தோன்றி விட்ட கணவாயின் வழியாக இந்தப் பூமியில் குடியேறி நிலைபெற்றுவிட்ட குள்ளநரி” என்று ஒரு வசனம் வரும். அப்போது தியேட்டரில் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும். நான் மனோகரா முதன் முதலாக பார்த்தது 70களின் துவக்கமாக இருக்கலாம். சிறுவனாக இருந்த எனக்கு அந்த வசனத்தின் முக்கியத்துவம் உடனே புரியவில்லை. மேலும் அந்தப் படத்தில் எல்லோருமே நீள நீளமாக பேசிக்கொண்டே இருந்தார்கள். அந்த வசனம் பேசும் முறையும் சில சொற்களும் பிடித்திருந்தாலும் இந்த வசனத்தின் முக்கியத்துவம் அப்போது புரியவில்லை.

பின் எனது பதின்ம வயதுகளில் அண்ணாதுரை, பெரியார் ஆகியோரின் எழுத்துகளை படிக்கத் தொடங்கிய போது தான், அந்தக் கணவாய் என்பது இந்தியாவின் வடமேற்கே உள்ள போலன் கைபர் கணவாய் என்பதும் அந்த குள்ளநரி/கள் என்போர் இங்கே வந்தேறிகள் என்று திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படும் ஆரியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் பிராமணர்கள் என்பதும் புரிந்தது.

அது புரிந்தவுடன் அந்தப் பிராமண சாதியில் பிறந்திருந்ததாலும் வரலாற்றின்/சமூக வரலாற்றின் மேல் இருந்த இயல்பான ஆர்வத்தாலும், அது சம்பந்தமாக நிறைய படிக்கத் துவங்கினேன். இந்த ஆரிய-திராவிட இனப் பிரச்சனை மிக மிக குழப்பமான ஒன்றாகவே இருந்தது. இங்கே தமிழகத்தில் ஒரு பொதுவான சித்திரம் என்னவென்றால், இந்தியாவில் ஒரு காலகட்டத்துக்கு முன், அதாவது சுமார் 4-5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சிவந்த நிறமும் நீள் மூக்கும் முகமும்  கொண்ட ஆரியர் எனப்படுபவர்கள், வடமேற்கே உள்ள நிலங்களிலிருந்து மேலே சொன்ன கணவாய்கள் வழியே வந்து, இங்கே ஏற்கனவே இருந்த திராவிடர்கள் இனத்தை வென்று அடிமைப்படுத்தி – வர்ணம் சாதி முறையை அறிமுகப்படுத்தி, இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.

அதில் இந்தப் பிரிவினைகள் மொழி சார்ந்ததே ஒழிய இனம் சார்ந்தது அல்ல என்று இன்னொரு குழுவினர் சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும், இதில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், சமூக இயக்கங்களுக்கும் வெவ்வேறான பார்வை இருப்பதும் புரிந்தது. இந்தியாவின் தலைசிறந்த அறிவுஜீவிகளுள் ஒருவரும் சாதி அமைப்பை மிக விரிவாக ஆராய்ந்தவருமான அம்பேத்கர், இந்த ஆரிய படையெடுப்பு தியரியை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் வாசித்தேன்.

இந்தியாவின் வடநாட்டவர், குறிப்பாக பிராமண க்ஷத்ரிய வர்ணத்தார், ஐரோப்பியர் வழி வந்தவர் என்ற வாதம், இரு விதமான விளைவுகளை உருவாக்கியிருந்தது. இதில் பெருமிதம் கொள்வோரும் இருந்தனர். இங்கிலாந்து இந்தியாவை ஆண்ட காலகட்டத்தில், அவர்களிடையே நிலவிய இத்தகைய மனோபாவம் பிரிந்தவர் கூடிய உணர்வினை ஏற்படுத்தியிருந்ததையும் பார்க்க முடிந்தது. இங்கே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் மத்தியில், தாங்கள் இந்த நிலத்தைச் சேர்ந்தவர்களா இல்லையா என்கிற கடும் அடையாளச் சிக்கலும் எழுந்தது. ஆரியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட வேண்டுமா சிறுமை கொள்ள வேண்டுமா என்பதே குழப்பமாகவும் இருந்தது. இந்த ஆர்யன் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஹிட்லர் ஏற்படுத்திய பேரழிவுகள் தனிக்கதை.

இங்கே இருந்த அரசியல் சூழல் மெல்ல மெல்ல மாறி, 90களுக்குப் பின் இந்த இனப் பிரச்னை சற்றே ஓய்ந்தாற் போலவே இருந்தது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். அறிவியலும் மானுட குலவியலும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக மனித குலமே ஒரே இனம் என்றும் Homo Sapiens எனும் நவீன மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் மட்டுமே என்றும் எல்லோருமே அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்றும் ஸ்தாபித்தது. இன்னொன்று, 90களுக்குப் பிறகு அறிமுகமான புதிய பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட வளர்ச்சி இந்த விஷயங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது.

ஆனால், இந்த ஆயிரமாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் மீண்டும் இந்த விவாதங்கள் தலை தூக்குவதையும் பார்க்கிறேன். இதற்கான காரணங்களை ஆராய்வதற்கு இது பொருத்தமான இடமல்ல. இந்தப் பின்னணியில் தான், கடந்த ஜூன் 15, 2017 அன்று வெளியான ஆங்கில இந்து நாளிதழில், டோனி ஜோசஃப் எழுதிய,”How genetics is settling the Aryan migration debate?” எனும் கட்டுரை வெளியாகியது. இதுவரை மொழி இன கலாச்சார அடிப்படையில் அதிகமும் தொல்லியல் அடிப்படையில் சற்றே குறைவாகவும் விவாதிக்கப்பட்ட ஒரு பொருளுக்கு நவீன மரபணு அறிவியல் ஒரு புது ஆட்டக்காரராக வந்து சேர்ந்தது. இந்தக் கட்டுரை நிறைய எதிர்வினைகளை தோற்றுவித்தது. பின் இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தியும் இன்னும் அந்தத் துறையில் புதியதாக வந்திருக்கும் கண்டுபிடிப்புகளையும் தகவல்களையும் சேர்த்து, டோனி ஜோசஃப் எழுதியுள்ள புத்தகமே ‘Early Indians’.

https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

இது நிச்சயமாக கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான புத்தகம். மேலும் இந்திய வரலாற்றின், சமூகத்தின் அடிப்படைகளை ஆராயும் ஒன்று என்பதால் இயல்பாகவே சுவாரசியமும் அதிகம். புத்தகம் எதிர்கொள்ளும் கேள்விகள் இவைதாம்.

 • யார் இந்தியாவின் உண்மையான பூர்வ குடிகள்?
 • ஹரப்பன் அல்லது சிந்து சமவெளி அல்லது சரஸ்வதி நதி  நாகரிகம் என்று சொல்லப்படும் அந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் யார்?
 • அவர்கள் தான் வேதங்களை இயற்றியவர்களா அல்லது அதற்கும் முந்தையவர்களா?
 • ஹரப்பாவின் நாகரிகம் பலர் சொல்வது போல ஒரு ஆதி திராவிட நாகரிகமா? அதன் மொழி, தமிழ் உட்பட பல தென்னிந்திய மொழிகளுக்கு ஊற்றாக இருந்த ஒரு தொல் திராவிட மொழியா?
 • கிமு 2600லிருந்து 1900 வரை செழித்திருந்த ஹரப்பன் நாகரிகம் ஏன் அழிந்தது? அந்த மக்கள் பின் எங்கே போனார்கள்? அவர்களின் பங்களிப்பு இன்றைய இந்திய நாகரிகத்தில் என்னவாக இருக்கிறது?
 • இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் சர்ச்சைக்குரிய ஆரியர் படையெடுப்பு அல்லது வருகை உண்மையா?

 

இந்தக் கேள்விகளையெல்லாமே கோர்வையாக, மிகை உணர்ச்சி ஏதும் இல்லாமல், தொல்லியல், மொழியியல், மற்றும் மிக முக்கியமாக இன்றைக்கு சாத்தியமாகியிருக்கும் மரபணுவியல் ஆகிய அறிவியல் பூர்வமான புற வயமான  சாட்சியங்களுடன் இந்த நூலாசிரியர் அணுகி இருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அணுகுமுறையின் மூலம் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறார்.

இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் எல்லாருக்குமே ஆப்பிரிக்காவிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வெளியேறி வந்த தொல் மனிதர்கள் தான் மூதாதையர். எல்லோருமே வந்தேறிகள் தான்.

இந்தியாவுக்கு சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனங்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துவிட்டன (Homo Erectus போன்றவை) ஹோமோ சேபியன்ஸ் எனும் நவீன மனித இனம் 65ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தது. அதை முதல் இந்தியர்கள் (First Indians) என்கிறார் நூலாசிரியர். இவர்கள் இந்தியாவெங்கும் சிதறிக்  கிடந்தார்கள் என்றும் முக்கியமாக வட மேற்கிலிருந்து விந்தியம் வரை பல இடங்களில் அவர்கள் இருந்த சாட்சியங்கள் கிடைக்கின்றன என்கிறார்.

நாகரிகங்கள் என்பவற்றுக்கு நகரங்கள் தாம் அடிப்படை என்ற நோக்கில் ஹரப்பன் நாகரிகம் என்று சொல்வதே சரியானது என்று சொல்லும் நூலாசிரியர், பல்வேறு ஆதரங்களோடு ஹரப்பன் நாகரிகம் இங்கிருந்த முதல் இந்தியர்கள் மற்றும் இரானிய விவசாய குடிகள் என்றழைக்கப்படும் ஈரானின் சார்கோஸ் மலைப்பகுதியில் இருந்த மக்களின் கலப்பினால் உண்டான ஒரு மக்களினத்தால் உருவானது என்கிறார். ஹரப்பான் நாகரிகத்துக்கும் முன்னோடியாக இன்றைய பலுச்சிஸ்தானத்தில் இருக்கும் மேஹர் கர் கிராமத்தில் இருக்கும் சில சிறு தொன்மையான குடியேற்றங்களைச் சுட்டுகிறார். இந்தியாவின் உள் நிலங்களிலிருந்து வந்து ஹரப்பாவில் நாகரிகம் உருவாக்கியமைக்கான சான்றுகள் இல்லை என்கிறார். இந்த நாகரிக மற்றும் மானுடப் பரவல் இந்தியாவின் வடமேற்கிலிருந்து தென் கிழக்காக நிகழ்ந்ததேயன்றி, தெற்கு தென்கிழக்கிலிருந்து வட வடமேற்காக நிகழவில்லை என்பதற்கும் மரபணு பரவல் ஆதாரங்களையே காட்டுகிறார்.

ஹரப்பன் நாகரிகம் கி.மு.2600லிருந்து கி.மு.1700 வரை நீடித்தது. அதற்குப்பின் அதன் சிதைவும் அழிவும் தொடங்கி ஆரியர் என்று தங்களை அழைத்துக் கொண்ட மக்கள் இங்கே வருகையில் கிட்டத்தட்ட அழிந்தது விட்டது அல்லது அதன் இறுதிக் காலகட்டத்தில் இருந்தது என்கிறார். அதற்கான மிக முக்கியமான காரணம் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக மழை குறைந்து விவசாயம் அழிந்தது தான் என்கிறார்.

அந்த மக்கள் என்னவானார்கள் என்றால் அவர்கள் இந்தியாவின் வடமேற்கிலிருந்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிக்குப் பரவினார்கள் என்பதே நூலாசிரியரின் முடிவு.

மிக முக்கியமான ஒரு முடிவாக, ஆரியர் என்ற மக்கள் கூட்டம் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி பகுதிகளிலிருந்து இந்தியாவுக்கு, சுமார் கி.மு. 2000-லிருந்து வந்ததை மரபணு வழி ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்று தீர்மானமாகச் சொல்கிறார். அவர் தரும் மரபணு ஆதாரங்களை நான் புரிந்து கொண்டேன். அவற்றின் நம்பகத்தன்மை குறித்து எனக்குச் சந்தேகங்கள் இன்றைய நிலையில் இல்லை.

ஆரியர் இங்கே வருகை தந்த அதே காலகட்டத்திலும் அதற்குச் சற்று முன்னரும், தென் கிழக்கு ஆசியாவிலிருந்து Austro-Asiatic மற்றும் Tibeto-Burmese மொழி பேசும் மனித இனங்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது என்று சொல்கிறார். இங்கும் அந்தப் பரவல் இந்திய நிலப் பகுதியிலிருந்து அங்கே என்றல்லாமல் அங்கிருந்து இங்கே என்றே நிகழ்ந்தது என்கிறார். அதற்கும், மரபணுப் பரவல் விதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்.

ஹரப்பன் நாகரிகத்தின் மொழி என்ன? அதுவும் முக்கியமாக, ஹரப்பாவில் வடமேற்கே இருந்து வந்த எலாமைட் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் அதை ஒரு தொல் திராவிட மொழி என்று சொல்வதற்கே அதிக ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருகிறார். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதும் அவர் முடிவு. இதன் தொடர்ச்சியாக, வேதங்கள் இயற்றப்பட்டது ஹரப்பன் நகரங்கள் முற்றிலும் அழிந்த பிறகே என்பதும் அவர் கண்டடைவது.

இந்தக் கருத்துக்கள் எல்லாமே ஏதோ ஒரு வடிவில் முன்னரே புழக்கத்தில் இருந்தவை தான். அதனால், இந்த நூல் இதுவரை இல்லாத எந்த உண்மையையும் வெளிக் கொணரவில்லை. ஆனால், மேற்கண்ட கருத்துகளுக்கு புதிய ஆதாரமாக ஹரப்பாவிலும் மொஹஞ்சதாரோவிலும் உலகெங்கிலும் பரவிக் கிடந்து தற்போது அகழ்ந்து எடுக்கப்படும் பண்டைக்கால மனிதர்களின் சடலங்களின் மேலான மரபணு பரிசோதனைகளை ஆதாரமாகக் கொள்வதே இந்த நூலின் சிறப்பு.

இன்னொரு முக்கியமான விஷயம். ஆசிரியர் எங்குமே Aryan Invasion என்ற பதத்தைக் கையாள்வதில்லை. மாறாக, Migration என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இதுவும் இன்று மாறிவிட்ட சூழலைக் குறிப்பதாகப் பார்க்கலாம்.

புத்தகத்தின் தனிச் சிறப்பான விஷயமாக, இதன் பின்னிணைப்பில் தரப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியல் பெருமூச்சு விட  வைக்கின்றன. ஆயுட்காலம் முழுதும் படித்தாலும் படித்து தீராதவை நூல்கள். இருப்பினும், கீழ்க்காணும் நூல்களையாவது வாசித்து விட வேண்டும்..

 1. The Horse,the Wheel and Language; How Bronze Age Riders from the Eurasian steppes shaped the Modern World.
 2. The Global History of Human Migration.
 3. The History and Geography of Human Genes.
 4. The Vedic People.
 5. The Evolution and History of Human Populations in South Asia.
 6. Who we Are and How we got here? Ancient DNA and the New Science of Human Past.
 7. The Roots of Hinduism
 8. Dravidian proof of the Indus Script Via the Rig Veda, A case Study.
 9. The Rig vedic People – Invaders, Immigrants or Indigenous? Evidence of Archaeology and Literature.
 10. Uruk – The First City.

 

இன்னும் நீண்டு கொண்டே போகும். பத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

என் வரையில், இந்த நூல் பல கேள்விகளுக்குத் திருப்திகரமாக விடையளிக்கிறது என்றே நினைக்கிறேன். இருப்பினும், The Hindu நாளிதழில் இந்த நூலுக்கு முன்னோடியான இதே ஆசிரியரின் கட்டுரை வெளிவந்திருந்த போது அதற்கான எதிர்வினைகளையும் வாசித்தேன். அவையெல்லாம் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சியடைந்த போது அங்கிருந்து மக்கள் தெற்கு நோக்கிப் பரவினர் என்று சொல்லும் ஆசிரியர் அதன் மூலம் உருவானது தான் தென்னிந்திய நாகரிகங்கள் என்று வலுவாகச் சொல்வதில்லை. அதே சமயம், ஹரப்பன் நாகரிகத்தை தென்னிந்தியாவின் தொல் திராவிட நாகரிகங்கள் இங்கிருந்து சென்று உருவாக்கியது என்பதையும் மறுக்கிறார். அது வடமேற்கே இருந்த வந்த மக்கள் (ஈரானிய உழவர்கள்) மற்றும் அங்கேயே இருந்த முதல் இந்திய மக்கள் கலப்பினால் உருவானது என்கிறார்.

இந்த இடத்தில் வரும் சந்தேகம் – தமிழ் தொன்மங்களில் மீண்டும் மீண்டும் கடல் கொண்ட தென் நிலத்திலிருந்து வடக்கே வந்த மக்கள் என்ற பார்வையே இருக்கிறதே தவிர, மழை பொய்த்தும் நதிகள் வற்றியும் விவசாயம் பொய்த்தும் வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்தது போல ஒரு தொன்மமும் இல்லை என்பதே. கடல் கொண்ட குமரி நிலம் என்பது இங்கு வழங்கப்படும் வலுவான ஒரு தொன்மம். இந்நூலின் வடக்கிலிருந்து தெற்கிலான மக்கட் பரவல் எனும் கோட்பாடு அதற்கு எதிராக இருக்கிறது. இந்தக் கோணத்திலும் இந்நூலுக்கான எதிர்வினைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன்.

நூல் : Early Indians, The story of our ancestors and where we came from

ஆசிரியர் : டோனி ஜோசஃப்

வெளியீடு : Juggernaut

விலை : ரூ, 699

1 comment

M.Gopal July 20, 2021 - 9:31 am

நகரத்தார் மற்றும் கொங்கு மக்களின் தொன்மங்கள் வடக்கிலிருந்து வந்ததாக இருக்கிறது. அதனை சிந்துவெளி ஆராய்ச்சியாளர் ஆர்.பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ். அவர்களும் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார்.

Comments are closed.