போர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. மனித நாகரிகமும், மனித குடிகளின் கலாச்சார கருத்தியல் பரிமாற்றங்களும் போரின் மூலமாகவே நடந்துள்ளன. கலாச்சார மொழி விழுமிய திணித்தல் மிக அதிகமாக நடப்பது போரின் மூலம் தான். அமர்ந்து பேசி இத்தகைய பரிமாற்றம் சமூகத்தின் விளிம்பில் இல்லாமல் பண்டமாற்று போல் நடப்பது உலக மயமாக்கல் வந்த பின்னரே. இந்த வகை பரிமாற்றத்திலும் திணித்தல்கள் உண்டு. அதை முடிவு செய்வது உலகமய சந்தையின் விசைகள். நவீன போரில் இரண்டு விடயங்கள் மாறியுள்ளன. முதலாவது, எதற்காக போர் ஆரம்பம் என்பது. மண், பெண், பொன் என்பதில் இருந்து இன்று விழுமிய திணிப்பாக தன்னுடைய அடையாளத்தை நிரூபிப்பதாக – திணிப்பதாக மாறியுள்ளது. இரண்டாவது, முதலாம் உலக போர் வரை கூட போர் என்பது பெரும்பான்மை தள சண்டைகளாக இருந்துள்ளன. மக்கள் கூடி வாழும் இடம் தள்ளி சண்டையின் இரு திறத்தாரும் போர் செய்து வெற்றியை முடிவு செய்து கொண்டுள்ளன. அதன் பின் வெற்றி பெற்ற படையினரின் நகர் சூறையாடுதலும் உண்டு.

இவ்வகையில்லாமல் விலகி நடந்த போர் முற்றிலும் நாகரிகப் பொதுமை இல்லாத குடிகளுக்குள் நடந்துள்ளது, எடுத்துக்காட்டு செங்கிஸ் கானின் படையெடுப்புகள். ஆனால் இப்போதைய எல்லா போர்களும் செங்கிஸ் கானின் யுத்தங்கள் போல் மாறியுள்ளன. இத்தகைய மாற்றம் என்பது நாம் நாகரீகத்தில் ஒரு பின்னெட்டு வைத்தது போல. நாம் உணராமலே அந்த இடத்திற்கு வந்துவிட்டோம். இன்று போர்த் தழும்புகளை சுமக்கும் பெரும்பான்மையானோர் போரில் பங்கெடுக்காதவர்கள் தான். பெண்கள், குழந்தைகள், எளியவர்கள், முதியவர்கள். போரை யாரால் சந்திக்க முடியாதோ அவர்களைத் தான் போர் மிகவும் தாக்குகிறது என்பது இப்போதைய போர்களின் கொடூரம். வீரமென்பது நவீன போரில் நுண்ணிய அளவு தான். இன்றைய போர்களை ஆள்வது ‘chaos’ மட்டுமே. ஜெனீவா வழக்காறின் மூன்றாம் ஆர்டிக்கள் போரில் ஈடுபடாதோர்களின் உரிமையை நிலைநாட்டுபவை. அதனை பல இடங்களில் நடைமுறைப்படுத்த முடியாதது இன்றைய சிக்கலான போர்களின் அவலம்.

போர் பற்றிய புத்தகங்கள் வருடந்தோறும் நிறைய எழுதப்படுகின்றன. நினைவில் உள்ள பல்லாயிரம் போர்களின் ‘இத்தனையாம் வருட அஞ்சலி மீள் வாசிப்புகள்’ புதிய கண்ணோட்டங்களுக்கும் பழையதை மறு உருவாக்கம் செய்வதற்கும் வழி வகுக்கின்றன.இத்தகைய வகைமையில் போரில் ஈடுபடாத மக்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுக்க வேண்டியுள்ளது. அத்தகையதொரு நூல், போரில் பெரும்பான்மை மக்களின் துயரைச் சொல்லும் புத்தகம், டாக்டர் டேவிட் நாட் எழுதியுள்ள War doctor ( War Doctor: Surgery on the Front Line by David Nott, Picador). டாக்டர் டேவிட் லண்டனில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளில் பணிபுரிபவர். St Mary’s மருத்துவமனையில் செல்குழாய் நாளம் மற்றும் காயங்களுக்கான அறுவை மருத்துவராக (vascular and trauma surgeon), Royal Marsden மருத்துவமனையில் கான்சர் அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படுகின்ற செல்குழாய்நாள புனரமைப்பு (vascular reconstruction) சிகிச்சை மருத்துவராக, Chelsea and Westminster மருத்துவமனையில் laparoscopy மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் பன்முகத் திறமை படைத்தவர்.

டாக்டர் டேவிட் நாட்

அவரது தாயார் ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள Wales பகுதியைச் சேர்ந்தவர். Welsh மொழி பேசுபவர். டாக்டர் டேவிடின் தந்தை Malcolm Nott-ஐ அவர்  ஜூனியர் டாக்டராக பணிபுரிந்த அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த போது சந்தித்து பின்னர் மணம் செய்திருக்கிறார். டாக்டர் மால்கம் பர்மாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்து வந்தவர். மால்கமின் தந்தை இந்திய ராணுவ அதிகாரி. தாய் பர்மியர். நாட் என்பது வடக்காசிய குடி பெயர் இல்லை எனச் சொல்லும் டாக்டர் டேவிட், அதனைப் பற்றி அவர் தந்தையிடம் சொல்லப்பட்ட எந்த கதையையும் உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறார். ஒரு கதைப்படி அவரின் மூதாதையரில் ஒருவர் ஆப்கானியப் போரை பிரிட்டன் சார்பாக தலைமை தாங்கிய Sir William Nott-இடம் வேலையாளாகப் பணிபுரிந்தவர். அந்தப் பெயரையே சிறப்புப் பெயராக போட்டுக் கொண்டார்கள். இன்னொரு கதைப்படி மால்கமின் இரண்டாம் பாட்டனார் இங்கிலாந்திலிருந்து ரயில் பாதை இட வந்தவர் என்றும் இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தவர் எனவும் ஊகங்கள் உள்ளன. பர்மாவின் மீது ஜப்பான் படையெடுத்தபோது மால்கம் தன்னுடைய தாயுடனும் தம்பியுடனும் இந்தியாவிற்குத் தப்பி வந்தவர். அவரது அண்ணன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த போது ஜப்பானிடம் சிக்கி மரண ரயில் என்று பின்னர் அழைக்கப்பட்ட பர்மா சியாம் ரயில்பாதைக்கு வேலை செய்ய விடப்பட்டு இருபத்து இரண்டு வயதிலேயே இறந்தும் போனார். மால்கமின் தந்தை ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். மால்கம் இந்தியாவில் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.

இத்தகைய போர்க் கதைகளாலும் போரின் அவலங்களை சந்திக்க நேர்ந்த அவர் குடும்ப அனுபவத்தினாலும் போரினால் பாதிக்கபட்டவர்களின் மீது மிக இரக்கம் கொண்டவராய் மாறியிருக்கக் கூடும். டாக்டர் டேவிட் ஆப்கானிஸ்தான், சியாரா லியோன், லைபீரியா, ஐவரி கோஸ்ட், காங்கோ , இராக், பாகிஸ்தான், லிபியா, காசா, சிரியா போன்ற பல நாடுகளின் போர் முனையில், Médecins Sans Frontières (Doctors without borders) சார்பாக பணியாற்றியவர். போர் பற்றிய அவரது புத்தகம் போரின் இன்னொரு பக்கத்தை அதன் கொடூரத்தைக் காட்டுவது. அதன் பரிமாணங்கள் எவ்வாறு மனிதத்தன்மை இல்லாமல் போகின்றன என்பதைப் பற்றி பேசுகிறது.

தான் போர் முனைகளில் உயிர் காக்கும் மருத்துவம் செய்யச் செல்வது இரு காரணிகளால் என்கிறார் டாகடர் டேவிட். தன்னுடைய நிபுணத்துவம் மூலம் மனித நாகரிகத்தின் கொடுமையான நடத்தையை அனுபவிப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும், யாரும் போக விரும்பாத அங்கிருப்பவரும் தப்பிக்க முயற்சிக்கிற இடத்திற்கு முன்வந்து செல்வதில் உள்ள சிலிர்ப்பும் தான் அந்தக் காரணிகள்.

டாக்டர் டேவிட்டின் ஆப்கானிஸ்தான் அனுபவங்கள் தாலிபானின் கலாச்சார சட்ட கொடூரங்களை அருகில் இருந்து பார்த்த வேதனையைக் கொடுக்கின்றன. 2001ஆம் ஆண்டின் முதற்பாதியில் தாலிபானின் தலைமையான கந்தஹாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் MSF சார்பாக சில மாதங்கள் பணிபுரிந்தார். அவர் இருந்த இடத்தில் இருந்து பார்க்கக் கூடிய தொலைவில் உள்ள பாதுகாக்கப்பட்ட பங்களாவில் பின்லேடன் வாழ்ந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை நடத்த விட்டாலும் அதனை அடக்கியாள்வது தாலிபானாக இருந்தது. பெரிய கருப்புத் தலைப்பாகை அணிந்த தாலிபான் போலீஸ் ஒருவர் எப்போதும் அறுவை சிகிச்சை அரங்கு முன் நின்றிருப்பார். அவர் அனுமதி கொடுத்த பிறகே யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியும். அந்த தாலிபான் போலீஸிற்கு மருத்துவம் பற்றி ஒன்றுமே தெரியாதென்றும் எழுதப் படிக்கத் தெரியுமா என்பதே சந்தேகம் என்றும் அவனது கையில் ஒருவர் மருத்துவத்தால் காப்பாற்றப் பட வேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்கும் அதிகாரம் இருந்தது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.

அவரது மருத்துவமனையில் இருக்கும் மொஹம்மத் என்னும் ஆண் செவிலியர் தொற்று நோய் பரவாமல் இருக்கவும் தன்னுடைய அறுவை சிகிச்சை முகமூடியை சரியாக அணிவதற்காகவும் தன்னுடைய தாடி அளவை குறைத்து விடுகிறார். மிகக் கடுமையான ஷரியா சட்டம் தாலிபானால் அப்போது பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்த சூழல். பெண்களின் உடல் முழுவதும் மறைத்து இருக்க வேண்டும். குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடக் கூடாது. பட்டம் விடுதல், இசை கேட்பது ஆகியன் தடை விதிக்கப்பட்டவை. ஆண்கள் தாடியை எடுக்கக் கூடாது. மொஹம்மதை பார்த்த தாலிபான் போலீஸ் இது இஸ்லாமியத் திட்டங்களுக்கு எதிரானது என கப்பல் சரக்கு பெட்டகத்தில் அவரை ஒரு நாள் முழுக்க அடைக்க ஆணையிடுகிறார். ஐம்பது நபர்களோடு எந்த வெளிச்சமும் காற்றும் இல்லாமல், மலஜலம் ஆங்காங்கே கழிக்கப்பட்டிருந்த சுமார் 50 டிகிரி சூடேறிய அந்தப் பெட்டகத்தில் ஒரு நாள் முழுக்க உணவு நீர் இல்லாமல் இருப்பது தாடியைத் திருத்தம் செய்ததற்கான தண்டனை.

ஒரு நாள் ஒரு பிரசவித்தப் பெண்ணைப் பார்க்குமாறு இவரை செவிலியர்கள் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்து நலமாய் இருந்தாலும் தாய்க்கு நிறுத்தமுடியாத உதிரப் போக்கு இருக்கிறது. அதற்கு சிகிச்சை செய்ய தாலிபான் போலீசை அனுமதி கேட்கிறார்.அதை ஒரு சம்பிரதாயமாக நினைத்துக்கொண்டிருந்த டேவிட்டிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ‘கூடாது’ என தலை அசைக்கிறார். தாய் இறக்கக் கூடும் என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் கெஞ்சினாலும் அவர் முடிவை மாற்றவில்லை. டாக்டர் டேவிட்டும் தலைமை செவிலியரும் ஒரு காரில் ஏறி முல்லா உமரை பார்க்கச் செல்கிறார்கள். முல்லா உமர் தாலிபானின் தலைவர். தலைமை செவிலியர் மிகவும் பிடிவாதம் காட்டிய பின்னே தான் அவரைச் சந்திக்க விடுகிறார்கள். எந்தச் சலனமும் இல்லாமல் தன் ஒற்றைக் கண் வழியே அவர்களைப் பார்த்த முல்லா உமர் அவர்களை அங்கிருந்து அனுப்புவதற்கு வேண்டா வெறுப்பாக அனுமதி கொடுக்கிறார். அதன் பின்னரே அவரால் அந்த பிரசவித்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது.

தான் தாலிபான் நடத்திய ஷரியா சட்ட நிலைநாட்டல் நிகழ்வை காற்பந்து மைதானத்தில் பார்த்து அதிர்ச்சியானதை பதைபதைக்கப் புத்தகத்தில் விவரிக்கிறார். முகம் வரை மணலால் மூடப்பட்டு கல்லெறிந்து கொள்ளப்படும் பெண்கள்; நாள் முழுக்க அவர்களை வெறுங்கைகளால் ஒரு சுவர் கட்டிமுடிக்கச் செய்த பின்னர் வரிசையில் நிற்க வைத்து லாரி விட்டு அடிக்கிறார்கள். உணவு திருடுதல் போன்ற குற்றங்களுக்கு எல்லாம் கடுமையான சட்டங்கள். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப கையையோ காலையோ தண்டனையாக வெட்டுகிறார்கள். வெட்டப்பட்டவுடன் இஸ்லாமிய முறைப்படி வெட்டப்பட்ட உடல் பாகத்தை புதைக்க வேண்டுமென்பதால், திருப்பிக் கொடுக்கப்படுகின்ற உடல் பாகத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு மருத்துவமனையின் வெளிநோயாளிகள் வார்டிற்கு ஒட்ட வைக்க வருவார்கள் என்கிறார் டாக்டர் டேவிட். அவர் மீண்டும் இங்கிலாந்து திரும்பிய சில மாதங்களில் இரட்டை கோபுரத் தாக்குதல் நடக்கிறது.

போரில் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுவர் என்பதை 2005ல் நிகழ்ந்த சூடான் உள்நாட்டுப் போர் பற்றி எழுதியிருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அங்கே அரசாங்கமே அரேபியப் படை ஒன்றை உருவாக்கி வானளாவிய அதிகாரம் தந்து விட்டிருந்தது. அவர் அங்கே பெரும்பாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்கிறார். ஒவ்வொரு நாளும் நான்கு ஐந்து சிசேரியன் செய்யும் அவர் அதன் இறப்பு விகிதம் இருபத்து ஐந்து சதவீதம் என்கிறார். ஊட்டச் சத்து குறைவும் மலேரியாவும் முக்கியக் காரணிகள். ஒன்பது வயது கர்ப்பிணிக் குழந்தைகள் கூட வருகிறார்கள். அவர்கள் சூடானிய ராணுவத்தால் அல்லது ஜ்ஞாவீட் என்னும் அரேபியப் படைகளால் சீரழிக்கப்பட்டவர்கள். அந்தப் பெண் குழந்தைகள் கர்ப்பமாகியிருந்தாலும் அவர்களின் சிறிய வயதினால் அடிவயிற்றெலும்பு பிள்ளை பேறுக்கு தேவையான அளவு வளர்ச்சியடையாமல் இருக்கிறது. அவர்கள் பெறப் போகும் குழந்தையின் தலை இவர்களின் இடுப்பெலும்பை விட பெரிதாக இருப்பதால் பல மணி நேரம் போராடிய பின்னரே குதிரையிலோ கட்டை வண்டியிலோ அழைத்து வருகிறார்கள். சில முறை கருப்பையிலேயே குழந்தை இறந்து விட்டிருப்பதால் Foetal Necrosectomy செய்ய வேண்டியிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் அந்த அறுவை சிகிச்சை பழமை காலத்திய பல வருடம் அனுபவமுள்ளவர்கள் கூட செய்யாதது, செய்ய வேண்டிய நிலையில்லாதது.

ஒரு முறை செவிலிகள் பதிமூன்று வயது பெண்ணிற்கு சிசேரியன் செய்ய டாக்டர் டேவிட்டை அழைக்கிறார்கள். மூன்று நாட்களாய் பிள்ளைப் பேறு வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை அப்போது தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். கருப்பை வாய் விரிந்திருந்தாலும் குழந்தை வெளிவரவில்லை. ஆனால் செவிலிகள் தாங்கள் குழந்தை உயிருடன் இருப்பதை உணர முடிவதாக தெரிவிக்கிறார்கள். டேவிட் அந்த பதிமூன்று வயது பெண்ணிற்கு முகமன் கூறும் விதமாக கைகளைத் தொடுகிறார். திடீரென்று அந்தப் பெண் கோபத்துடன் கைகளை விலக்கி அவரது முகத்தில் காரி உமிழ்கிறாள். அதிர்ச்சியான அவர் டெண்டை விட்டு வெளியேறுகிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்தில் எவரும் உயிருடன் இல்லை என்றும் கற்பழிக்கப்பட்டவர் என்றும் அதனால் அனைத்து ஆண்களின் மீதும் வெறுப்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர் சிசேரியன் செய்ய அனஸ்தீசியா கொடுக்கச் சொல்கிறார். ஆனால் அதற்குள் அந்தப் பெண் இறந்து விட்டிருந்தார். தான் எப்போதுமில்லாமல் அதற்குத் தேம்பி அழுததாக எழுதுகிறார் டாகடர் டேவிட்.

சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் போரைப் பற்றி டாகடர் டேவிட் எழுதியிருப்பது நம்மைத் தூங்க விடாமல் செய்பவை. Atmeh என்னும் நகரத்தில் MSF ஒரு பங்களாவை மருத்துவமனை ஆக்கியிருந்தார்கள். அந்த மருத்துவமனையின் அருகே உள்ள பங்களாவில் ISIS தீவிரவாதிகள். அங்கே அவர்கள் பார்த்த பெரிய அபாயம் மிசைல்கள். அது நேரடியாக அடித்தால் கண நேர மரணம். அவ்வாறு இல்லாவிட்டாலும் அது தாக்கும் கட்டிடங்களை இன்னொரு ஆயுதம் ஆகிவிடும். அது தாக்கிய பின் பறக்கும் கான்கிரீட் துண்டுகள் அதே வேகத்தில் மென்மையான மனித உடலை அடிப்பது துப்பாக்கிச் சூட்டிற்கு இணையானது. அந்த நகரில் உள்ள பல ஆண்கள் வீட்டில் வெடிகுண்டு செய்பவர்கள். ஆனால், அதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் என்னவோ அந்த வீட்டின் பெண் குழந்தைகளும் முதியோர்களும் தான் என்கிறார். அவர் பார்த்த ஒரு கேஸில், அந்த வீட்டின் தலைமை ஆண் சிறிய உருளை வடிவ குண்டுகளை வீட்டில் தயாரிப்பவர். அவர்கள் வீட்டின் வெளியே தொழும் போது, ஆணின் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய குண்டு விழுந்து வெடித்து விடுகிறது. மருத்துவமனைக்கு எட்டு பேரை எடுத்து வருகிறார்கள். அதில் உள்ள ஆறு குழந்தைகளும் மனைவியும் ஏற்கனவே இறந்து விட்டிருந்தனர். வெடிகுண்டு செய்தவர் மட்டுமே பிழைக்கிறார்.

அலெப்போ நகரில் பணியாற்றிய அனுபவங்களை புத்தகத்தில் பிரதானமாக எழுதியிருக்கும் டேவிட் அதை ‘Sniper City’ என்கிறார். அவர் சேவை செய்யும் மருத்துவமனைக்கு ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் காயங்களுடன் அன்று முழுக்க வருவதை அவதானிக்கிறார். ஒரு நாள் முழுக்க நிறைய நோயாளிகள் இடது தொடை அருகே சுடப்பட்டு வருகிறார்கள், இன்னொரு நாள் வலது மார்பருகே சுடப்பட்டு. அவர் அங்கிருந்து கிளம்பும் நாள் நெருங்குகையில் அந்த நாள் முழுக்க சுடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களாய் வருகிறார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் சிசுவில் இருந்து கொஞ்சம் தள்ளி தொப்புள்கொடியைத் தாக்கயிருக்கிறது குண்டு. குழந்தையை சிசேரியன் மூலம் எடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிராணவாயு தரும் தொப்புள் கொடி சிதைக்கப்பட்டிருப்பதால் குழந்தை இறந்து விட்டிருக்கிறது. இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையாவது இவருக்குத் தரவேண்டும் என அவரது கருப்பையைத் தைக்கிறார்.

அதே நாள் இன்னொரு கர்ப்பம் பூண்ட பெண் வருகிறார். அந்தப் பெண்ணை எக்ஸ்ரே எடுக்கையில் குண்டு அவர் வயிற்றில் உள்ள பிறக்காத குழந்தையின் தலையில் அடித்திருப்பது தெரிகிறது. ஸ்னைப்பர் அந்தப் பெண்ணை பக்கவாட்டாக சுட்டிருக்கிறார் என யூகிக்கிறார். கருப்பை முழுமையும் சேதாரமிருப்பதால் கருப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்கிறார். அந்தப் பெண்ணின் குழந்தை கருவிலேயே இறந்ததும் இனி அவரால் கர்ப்பம் தரிக்க முடியாதென்பதும் அவர் பார்த்ததிலேயே ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது நிகழ்த்திய உச்சக்கட்ட வன்முறை இது தான் என்கிறார். ஸ்னைப்பர்கள் தங்களுக்குள் பந்தயம் கட்டி ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது வகையான மனிதர்களைத் தாக்குகிறார்கள் என்று அவருடன் பணிபுரியும் செவிலியர் சொல்கிறார். பெரும்பாலும் அந்த பெட் ஒரு பாக்கெட் சிகரெட்டுகளுக்காக.

2014 அக்டொபர் வாக்கில் இங்கிலாந்து மஹாராணியிடமிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் அவருடன் மதிய உணவு கொள்ள அழைப்பு வருகிறது. அழைக்கப்பட்ட மற்ற விருந்தினர்கள் மத்தியில் சிரியா போர் நினைவுகளை மறக்க முடியாமல் மனக் கலக்கத்துடன் நின்று கொண்டிருந்ததாகச் சொல்கிறார் டாக்டர் டேவிட். அவரை மகாராணியின் இடது பக்கம் அமர வைக்கிறார்கள். நெறிமுறைப்படி, மதிய விருந்தின் முதல் பாதியில் தன் வலது பக்கம் உள்ளவருடனும் பிற்பாதியில் இடது பக்கம் உள்ளவருடனும் மஹாராணி பேசுவார். உணவிறுதியில் எலிசபெத் ராணி இவருடன் பேச்சு கொடுக்கிறார். அலெப்போவில் மருத்துவமனை அருகில் நடந்த குண்டுவெடிப்பினால் அவருடைய கேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ராணி பேசப் பேச அவரால் ஏதும் பேச முடியாமல் போகிறது. அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என வினவும் ராணிக்கு தன்னுடைய இங்கிலாந்து இடத்தைச் சொல்லாமல் அலெப்போவிலிருந்து திரும்பி வந்திருப்பதாகச் சொல்கிறார். அந்த இடம் எவ்வாறு இருக்கிறது என வினவுகிறார் ராணி.

https://www.townandcountrymag.com/society/tradition/a26550057/queen-elizabeth-helped-veteran-pet-feed-corgis/

டாக்டர் டேவிட் மனதில் தன்னுடைய சக மருத்துவர்கள் கொல்லப்பட்டதும் உடைந்த பள்ளி மேஜைகளும் குருதியுடன் அங்கங்கள் துண்டான குழந்தைகளும் வந்து போகிறது. தான் கீழுதடு துடிக்கக் கதறி கண்ணீர் விடும் நிலைக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார் டேவிட். ராணி இன்னொரு கேள்வி கேட்டால் உடைந்துவிடுவேன் என்றளவுக்குச் சென்றதாக எழுதுகிறார். அது ஒரு வேளை எலிசபெத் அந்த தேசத்திற்கே தாயாக இருப்பதாலும் தன்னுடைய தாயை அவர் இழந்துவிட்டதாலும் இருக்கக்கூடும் என்கிறார் டாக்டர். ஆம், அரசியில் அவர் தன் அன்னையைப் பார்க்கிறார். அவரின் உணர்வுகள் புரியாத ராணி அவரது கையை ஆறுதலாகத் தொடுகிறார். அவர் தன்னுடைய சாமந்தரிடம் பேச ஒரு வெள்ளிப் பெட்டியைக் கொண்டு வருகிறார்கள். அதில் உள்ள நாய் பிஸ்கெட்டை இவருக்கும் கொடுத்து இருவரும் ராணியின் வளர்ப்புப் பிராணிகளுக்கு இடுகிறார்கள். தான் வளர்த்தும் கார்கி (Corgi) நாய்கள் பற்றியும் அவற்றின் வயது பற்றியும் சொல்கிறார். விருந்தின் பிற்பகுதியில் அவற்றை தட்டிக்கொடுத்தும் தடவியும் இருவரும் கொஞ்ச நேரம் போக்கிய பின் பேசுவதை விட இவ்வாறு நேரங்கழிப்பது சிறந்ததாக இருந்ததல்லவா என்கிறார் ராணி.

சிரியாவில் இருந்து திரும்பிய பிறகும் அதன் நினைவுகளும் அது வரை பார்த்த போரின் அத்தனை கொடுமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவர் மனதை தினமும் நிலை கலங்க வைக்கின்றன. திருமணம் முடிந்த வருடத்தின் கிறிஸ்துமஸிற்கு ஃபிரஞ்சு நாட்டின் Chamonix நகருக்கு பனிச்சறுக்கு விளையாட நாட் தம்பதிகள் செல்கிறார்கள். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் 101. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் சர்வாதிகாரக் கட்சி தன்னுடைய Ministry of Love வழியாக கைதிகளை கொடுங்கனவு மூலம் டார்ச்சர் செய்யும் அறை எண். தான் வலிந்து அடக்கிய போர் நினைவுகள் மீண்டும் மனதில் எழுந்து சித்த பிரமையும் உளப்பிணியும் சேர்ந்து தன்னை மயக்கமடையச் செய்ததாகச் சொல்கிறார் டாகடர் டேவிட்.

எந்த நம்பிக்கை அவரை இந்தப் பணி செய்ய வைக்கிறது என்பதை வாசகராய் நாம் புத்தக ஆரம்பத்தில் இருந்து எண்ணிக் கொண்டே படிக்க வேண்டியிருக்கிறது. சிரியாவில் அடிபட்ட ISIS தலைவருக்கும் உயிர் காக்கும் மருத்துவம் செய்கிறார். அவர் இங்கிலாந்து பிரஜை என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக கொன்றிருப்பார்கள் என்றும் எழுதியிருக்கிறார். அதே போல பாகிஸ்தானில் சேவை செய்யும் போது ஒரு IED (Improvised Explosive Devices ) வெடிகுண்டு செய்யும் தாலிபானின் உயிரைக் காப்பாற்றுகிறார். அந்தத் தீவிரவாதி கண்டிப்பாக அங்கே போர்புரியும் இங்கிலாந்து அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பொது மக்களுக்கு எதிராகத் தான் இனியும் வெடிகுண்டு செய்வார் எனினும் அவர் உயிரைக் காப்பாற்றுவது கடமை என நினைக்கிறார். அவர் சொல்லும் காரணம் காந்தியை நினைவுறுத்துகிறது. எதிரியிடம் அவனது மனசாட்சியின்பாற் முறையிடுவது. அவனை மனிதத் தன்மையுடன் யோசிக்க வைப்பது. ஒரு நாள் ஒரு கிறித்தவ மேற்குலக மருத்துவர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றினார் என்று அவர்கள் எண்ணக் கூடும் என்ற சாத்தியக்கூறு குறைவான தன் நம்பிக்கையைச் சொல்கிறார். அவரின் இந்த வரிகள் அவரின் நம்பிக்கையின் சாராம்சம் எனக் கொள்ளலாம் :

“I don’t get to choose who I work on. I can only try to intervene to save the life of the person in front of me who is in desperate need of help. Usually I have no idea who they are or what they have done until afterwards anyway – but even if I did know, nothing would change. I rationalize it by thinking, Well, maybe that Taliban guy or this ISIS fighter will find out his life was saved by a Western, Christian doctor, and that might make him change his outlook. Some people may consider this is naive, but that’s how it is.”