பனிமுடிப் பணிதல்: ஷௌகத்தின் ‘ஹிமாலயம்’

0 comment

‘இதைக் காணும் ஒருவன் கடவுளைக் கண்டதில்லையென்று சொல்வானெனில், இனி ஒருபோதும் அவனால் கடவுளைக் காண முடியாது.’ – நடராஜ குரு

‘ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து முடித்து அவ்வுலகின் அவசங்களில் இருந்து வெளிவர முற்றிலும் வேறு மனநிலையைத் தரவல்ல ஒரு நூலைத் தேடும்போது ‘ஹிமாலயம்’ வசப்பட்டது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக என் புத்தக அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தது. ஜெயமோகன் ‘கீதா முஹுர்த்தம்’ எனச் சொல்வார். அதுபோல் கவிதைகள் திறந்து கொள்ளவும் சில புத்தங்களை நாம் கையில் எடுக்கவும் உரிய நேரம் இருக்குமோ என்னவோ! புத்தங்களை நாம் வாங்குகிறோம் எனினும் புத்தகங்கள் நம்மைத் தேர்வு செய்கின்றன என்று எண்ணிக் கொள்வது இனிய கற்பனையாக உள்ளது.

பயண இலக்கியத்தில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? சூழல் விவரணை- புதிய இடத்தை சொற்களின் வழியாக புலன் நிகர் அனுபவமாக ஆக்குதல் என்பதே முதன்மையான எதிர்பார்ப்பு. குளுகுளுவென இருந்தது, குளிர் வெடவெடத்தது, உடல் நடுங்கியது, மலர்கள் பூத்துக் குலுங்கின, நதி அமைதியாக தவழ்ந்தது, அருவி ஆர்ப்பரித்தது, சூரியன் சுட்டெரித்தது, அழகான அந்தி, அருமையான புலரி என பயண நூலுக்கென நாம் உருவாக்கி வைத்திருக்கும் தேய்வழக்குகளை மீறி அசலான காட்சி அனுபவங்களை அளிக்க வேண்டும். பயண அனுபவத்திற்கும் பயண இலக்கியத்திற்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என சிலவற்றைச் சொல்லலாம். ஆசிரியனின்/ எழுத்தாளனின் தனியாளுமையின் தடத்தைப் பதிவது. அவனுடைய தத்தளிப்புகளை,கேள்விகளை, கண்டடைதல்களை வாசகருக்கு கடத்துவது. சிறந்த பயண இலக்கியம் ஏறத்தாழ நாவலின் வடிவத்தை ஒத்திருக்க வேண்டும். ஒருவகையில் தன்வரலாற்று நாவலின் வடிவத்திற்கு நெருக்கமானது. ஒட்டுமொத்தமாக தன் அடையாளத்தைக் கண்டடையும் ஒரு முகிழ்தல் நிகழ வேண்டும். தனித்துவமான அவதானிப்புகள் இருக்க வேண்டும். புதிய மனிதர்கள், புதிய நிலம், புதிய வாழ்க்கையை அறிகிறோம் எனும் உற்சாகத்தை வாசகருக்கு கடத்த வேண்டும். இதே தடத்தைப் பின்பற்றி பயணிக்க விரும்புபவருக்குத் தேவையான எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ இவை எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது. மேலதிகமாக ஆன்மீக தளத்தில் அகப் பயணமாகவும், மெய்யியல் விசாரணையாகவும் தன்னை விரித்துக் கொள்கிறது.

இந்நூலுக்கு ஆங்கில அறிமுகம் எழுதியிருக்கும் கீத காயத்ரி ஷௌக்கத்தின் சக பயணி. ஊட்டி நாராயண குருகுலத்தில் அவரை இருமுறை சந்தித்திருக்கிறேன். காயத்ரி மா என்றே எனக்கு பரிச்சயம். பரபரவென இருப்பார். அவர்தான் இவர் என்பது எனக்கு மற்றுமொரு ஆச்சரியம். இல்லறத்தில் ஈடுபட்டு பின்னர் துறவு பெற்றவர். ஒரு குருகுலத்து மாணவர்கள், கணவன் மனைவி அல்லாதவர்கள், இஸ்லாமியரும் இந்துவும் என ஒரு பொது சமூகம் ஐயம்கொள்ளத் தேவையான எல்லா அம்சங்களும் கொண்ட பயணிகள் இப்பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதே இந்நூலை சுவாரசியமாக்குகிறது. இருவரும் குரு நித்யாவின் சீடர்கள். அவருடைய சமாதிக்குப் பிறகு இப்பயணம் துவங்குகிறது. அடுத்து என்ன என்றொரு கேள்வி எழும்போது காயத்ரி ஹிமாலயப் பயணம் எனச் சொல்கிறார். தானும் உடன் வருவேன் என்கிறார் ஷௌக்கத். ஐசிங் வழி காயத்ரி அம்முடிவை எட்டுகிறார். ஷௌக்கத் தன்னை நித்யாவாக உருமாற்றிக் கொண்டு காயத்ரியுடன் புறப்படுகிறார். பன்மொழி ஆற்றல்கொண்ட காயத்ரி பயணம் முழுவதுமே ஷௌக்கத்தின் மொழிபெயர்ப்பாளராக செயல்படுகிறார்.

ஷௌக்கத் ஒரு சுவாரசியமான ஆளுமை. வழமையான இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தவர். ஆனால் உபநிஷதுகள், கீதை, தம்மபதம், அத்வைதம் என அவருடைய பயணம் விரிந்தது. இறுகிய மத நம்பிக்கை ஏதுமற்றவர். அனைத்து மதங்களையும், மத நூல்களையும் ஒன்றாக பாவிப்பவர். வரட்டுத்தனமான ஆச்சாரங்களை பின்பற்றுவதைத் தவிர்ப்பவர். மூடநம்பிக்கைகளை விமர்சிப்பவர். தேசங்கள் கடந்த உலகளாவிய வாழ்க்கைப் பார்வை கொண்டவர். நாராயண குரு மற்றும் குரு நித்யாவின் அத்வைத மரபை தலை கொண்டவர் என்பதாலேயே மாந்த்ரீக மரபுகளை ஏற்பவர் அல்ல. சங்கரரை மார்க்சியர்கள் நெருக்கமாக உணர்ந்தது உண்டு. அத்வைதத்தை ஏற்கும் கீழை மார்க்சியர்கள் உண்டு. குரு நித்யாவும் ஷௌக்கத்தும் கூட மார்க்சியவாதம் மீது கரிசனப் பார்வை கொண்டவர்களே. ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் நம்மைப் போன்ற ஒருவர் எனும் அணுக்கம் ஷௌக்கத்திடம் ஏற்படுகிறது. அவ்வப்போது எழும் அகங்காரத்தைக் கவனிப்பதும் அதை மீற தொடர்ந்து முயல்வதும் பல்வேறு தருணங்களில் நிகழ்கிறது. ஒருவகையில் ஆன்மீகப் பாதை என்பது அறுபடாத விழிப்புணர்வு என்றே தோன்றுகிறது.

அவரை ஒரு ஞானியாகக் கருதி பக்தி பரவசத்தோடு அவர் முன் சிலர் அமர்ந்த போது “இப்படி கொஞ்சம் பக்தர்கள் கிடைத்தால் ஒரு குருவாகி பந்தா பண்ணலாமே என்றொரு எண்ணம் தோன்றாமலில்லை. குருத்துவம் முதலில் கொஞ்சம் சுகமாகத்தான் தோன்றும். நம்மை கிரீடமணிந்து சிம்மாசனத்தில் அமர்த்தும். கடைசி விதி சிலுவையேற்றல்தான் என்பதை அனுபவசாலிகள் எழுதியும் பேசியும் வைத்திருக்கிறார்களே.” காயத்ரியை விட்டுவிட்டு மலையேறுகிறார். மலையிறங்கி அவரைத் தேடினால் அவர் வரச் சொன்னார் எனப் புரிந்துகொண்டு அவரும் ஏறி வந்திருக்கிறார் என அறிகிறார்.மற்றொரு தருணத்தில் காயத்ரியை காணவில்லை எனத் தேடி அலைகிறார். காயத்ரி பின்தங்கி ஒரு குகையில் பாபாவிடம் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து மனதார கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்.

இந்நூலில் ஷௌக்கத் பல்வேறு புதிய அவதானிப்புகளை (குறைந்த பட்சம் எனக்கு) வைக்கிறார். மரபார்ந்த சொற்றொடரை தனக்குள்ளாக செரித்து புதிய அர்த்தத் தளங்களை திறக்கிறார். மாதா பிதா குரு தெய்வம் வரிசையைப் பற்றியும் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வான பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் ஆகிய நான்கு ஆசிரமங்களைப் பற்றிய அவருடைய விளக்கம், எப்போது புனித நூல்கள் சுருதிகள் ஆகின்றன, புத்தகத்தின் இறுதிப் பகுதியில் விநாயகரின் உருவத்தை தத்துவமாக விளங்க வைத்தல் என இப்பகுதிகள் அனைத்துமே அசலான பார்வை கொண்டதாக உள்ளன. புனித நூல்களின் சொற்கள் நம்முள் நிரந்தரமான நிம்மதியை ஏற்படுத்தும் வரை வெறும் நினைவு சடலங்களாகவே எஞ்சும். அந்நிலையை அடையும்போது தான் அவை சுருதியாக பரிணாமம் கொள்ளும் என்கிறார். ‘மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையை சாதகன் கடக்க வேண்டிய ஏணிப் படிகள், ஒவ்வொன்றையும் உதறி மேலே செல்கிறான்’ எனப் பொருள் கொள்கிறார். கங்கைப் பயணத்தை அவர் காணும் விதம் அபாரமானது. ஹரித்துவாரின் கங்கையைக் காணும்போது சிந்தனை சிடுக்கில் சிக்கித்தவிக்கும் மனித அறிவாக கங்கை அவருக்குத் தோன்றுகிறது. அதுவல்ல கங்கை. அங்கிருந்து கங்கையை, அதன் ஊற்றைத் தேடிப் பயணிக்க வேண்டும் என சொல்லும்போது புறப் பயணம் அகப் பயணத்தின் குறியீடாக, நீட்சியாக ஆகிறது.

பிரம்மச்சரியம் என்றால் விரிவடைவது, பிருஹத் எனும் சொல்லிலிருந்து அஹ்டன் வேரை கண்டுகொள்கிறார். கட்டற்ற சுய அக விரிவாக்கம் தான் பிரம்மச்சரியம். விரிந்து விரிந்து நானற்ற நிலையை அடைவது என்கிறார். குறுகிய பொருளாக பாலியல் இச்சையுடன் இதை அவர் தொடர்புபடுத்துவதை ஏற்கவில்லை. கிருஹஸ்தனுக்கு “தன்னுடையதான கிருகத்தில் ஸ்திதி செய்பவன்” என்பதாக பொருள் அளிக்கிறார். நம் மனதின் மீதான அதிகாரம் பிறர் சார்ந்திருக்கிறது. அதை நமதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அந்நிலையை அடைந்தவனே கிருஹஸ்தன். அதற்கும் திருமணத்திற்கும் தொடர்பில்லை என வாதிடுகிறார். பிரம்மச்சரியனின் முதல் தகுதியே அவன் கிருஹஸ்தனாக இருக்க வேண்டும் என்பதுதான் என்கிறார். வானப்பிரஸ்தத்தை வேதாந்திகள் முன்மொழியும் சாட்சி பாவத்துடன் ஒப்பிடுகிறார். இந்நூலின் மிகச் சிறந்த பகுதி என்பது விநாயகரின் புராணக் கதை மற்றும் உருவத்தை தத்துவார்த்தமாக விளக்கிக் கொள்ளும் முயற்சி. சிவன் எனும் புருஷனுக்கும் சக்தி எனும் பிரகிருதிக்கும் இடையில் இருக்கும் ‘நான்’ தான் விநாயகன் என்கிறார். உடைந்த தந்தம் உடைந்த அகங்காரத்தை குறிக்கிறது. தர்க்கத்தால் நிரம்பிய தலையை நீக்கிவிட்டு யோகியின் தலையை யானையின் வடிவம் கொண்டு அளிக்கிறார். சின்னக் கண்கள்,பெரிய காதுகள் என  எல்லாவற்றிற்கும் முற்றிலும் புதிய முறையிலான அர்த்தத்தை அளிக்கிறார்.

“அழகு என்பது கணப்பொழுதின் வரப்பிரசாதம் தான். சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் இவ்வளவு அழகாயிருப்பது அது கொஞ்ச நேரமே இருந்து பின் இல்லாமல் போவதால்தான்.” நூல் முழுக்க இமையத்தின் அழகும் கம்பீரமும் அமைதியும் மேன்மையும் விரவிக் கிடக்கிறது. யமுனோத்திரியின் வெந்நீர் ஊற்றுகள், ஹேம் குண்ட் சாகிப், அமர்நாத், நீலகண்ட பர்வதம், சிவலிங்க மலை, பத்ரிநாத், கேதார்நாத், பாகீரதி, பிரயாகைகள், உத்தரகாசி என பல்வேறு இமையத் தொடரின் பல அழகான இடங்களை காட்சிகளாக அனுபவிக்க முடிந்தது. துத் கங்கா, ஆகாச கங்கா போன்ற தூய நீர் ஓடும் வெளிகளை அதன் ஓசைகளுடனும் மௌனத்துடனும் உணர முடிந்தது. இமையத்தின் பௌர்ணமி, இரவுகள், வெயில்கள் என எல்லாமே பேரனுபவம். சுடுநீர் தகிக்கும் பாறையின் மீது கம்பளியின்றி உறங்கி வியர்க்க விறுவிறுக்க எழுகிறார்கள். இமாலயத்தில் உச்சி வெயிலில் சூரிய வெப்பம் தாக்கி பலியாகலாம் என்பது புதிய செய்தி. அங்கு வெய்யில் பனியை உருக்க முடியாது மழையே பனியை விலக்குகிறது. மழையின்போது குடையுடன் அல்லது மழை கோட்டுடன் நடந்து செல்கிறார்கள். யமுனையின் அருகே நல்லிரவிலமர்ந்து எக்காரணமும் இன்றி மௌனத்தில் அமிழ்ந்தபடி அழுகிறார். இயற்கையின் முன் மனிதன் ஏதுமற்றவன் என உணரும்போது ஏற்படும் விகசிப்பின் கண்ணீர் அது. வாழ்வின் மீது என்னவென்று சொல்ல முடியாத ஒரு நன்றியுணர்வு.

எலிகளுக்கு அன்னமிடும் பாபா, கடும் குளிரில் குகையின் போத்தலை மூட நள்ளிரவு எழுந்து வரும் பாபா, இரவெல்லாம் இவர்கள் உறங்க விறகில் நெருப்பு வளர்க்கும் பாபா, இனிய தேநீரும், ரொட்டிகளும் தனி கையால் சமைத்து பரிமாறும் பாபாக்கள் என பெரும் கருணை சூழ்ந்த உலகை ஷௌக்கத் காட்டுகிறார். பெரும்பாலான பாபாக்கள் அனைவரும் நன்றாக சமைப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அவதானிக்கிறார். காலா கம்பளிவாளா தனியொருவராக இமையத்தில் பாதையமைத்துக் கொடுத்தவர். பத்ரியில் தவமிருக்கும் பாபா எவரையும் சந்திக்க விருப்பமற்றவர். அவருடைய எச்சரிக்கையை மீறி சந்திக்கச் சென்ற காவல் துறை அதிகாரியை கவட்டைக் கல்லால் துரத்துகிறார். துரதிஷ்டவசமாக அவர் இறந்து போகிறார். அந்த பாபாவை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். இப்படியான பல கதைகள் உள்ளன. குருத்துவாராவிற்கு சென்று ஒரு நூலுக்கு (குரு கிராந்த் சாகிப்பிற்கு) குருவின் இடம் அளிக்கப்படுவதை எண்ணி புளங்காகிதம் அடைகிறார். அப்போது யார் உண்மையான இஸ்லாமியன் என்பதற்கு ராபியாவின் கதையைச் சொல்கிறார். ராபியா ஒரு கையில் தீப்பந்தத்துடனும் மறு கையில் தண்ணீர் வாளியுடனும் நடந்து வந்தபோது எதிர் வந்தவன் அவரிடம் இவை எதற்கு என்று வினவினான். தீபந்தம் உங்கள் சொர்க்கத்தை எரிப்பதற்கு. தண்ணீர் உங்கள் நரகத்தை அணைப்பதற்கு.

பயணங்களில் தாங்கள் சந்தித்த இடர்களை விமர்சனபூர்வமாக பதிவு செய்யவும் தயங்கவில்லை. யமுனோத்திரியின் பூசாரி ராம்லால் தட்டில் காசு விழவில்லை என்றால் வசைபாடுபவன். ஆனால்  அவனே இவர்கள் மீது பெரும்பிரியம் கொண்டவனாகவும் இருக்கிறான். வசைக்கு பயந்தே காசிடுபவர்கள் உண்டு.  உத்தரகாசியில் கைலாச ஆசிரமத்தில் தங்கும்போது அவர்கள் உண்மையில் ஆசிரமவாசிகளா எனும் ஐயம் எழுகிறது. ஆணும் பெண்ணுமாக பயணிக்கும் பல இடங்களில் இதே சிக்கலை சந்திக்கிறார்கள். ஐயத்துடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு அறை அளிக்கிறார்கள். மாலை வழிபாட்டின்போது வலம் வரும் சமயத்தில் காயத்ரியை மட்டும் நிறுத்தி விடுகிறார்கள். பெண்கள் சுற்றக்கூடாது என கறாராகச் சொல்லிவிடுகிறார்கள். பெயரளவில் வேதாந்தம் பேசிக்கொண்டு திரிபவர்கள் என அவர்களை பற்றி விமர்சனம் வைக்கிறார். பெரும்பாலான சுவாமிகள் காயத்ரி வணங்கச் சென்ற சமயங்களில் பாம்பைக் கண்டது போல் காலை இழுத்துக் கொண்டதைச் சொல்கிறார். பெண்ணல்ல சிக்கல், பெண் பற்றிய பார்வையே சிக்கல் என்பதை உணர்ந்தால் அவளைத் தடையாக உணர மாட்டார்கள் என வாதிடுகிறார். தாழ்த்தப்பட்டவர்களின் கிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைவது கேதார்நாத்தில் எல்லோராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. மற்றொரு இடத்தில் பெண்களுக்கு தங்குமிடம் மறுக்கப்பட்ட போது காயத்ரி அந்த பாபாவிடம் சென்று ‘கங்கையும் குகையும் எவருடைய தனிச்சொத்தும் அல்ல மறுப்பதற்கு’ என கூறிவிட்டு விடைபெறுகிறார். ஷௌக்கத் “தெய்வமே இதுதான் சந்நியாசம் என்றால் ஒரு ஜென்மத்திலும் நான் சந்நியாசி ஆகிவிடக்கூடாதே என மனமுருகிப்  பிரார்த்தித்துக் கொண்டேன்” என எழுதுகிறார்.

பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ சுவாமி ராமாவின் ‘ Living with Himalayan Masters’ ஆகிய இருநூல்களையும் முன்னரே வாசித்திருக்கிறேன். இவ்விரண்டு நூல்களில் இருந்து ஹிமாலயம் மாறுபடுகிறது. அவ்விரு நூல்களுமே இந்திய ஆன்மீகத்தின் மறை ஞானப் பகுதியை, அற்புதங்களை தேடி அலைவுறுகிறது. “மனிதன் அவனுடைய அறிவினால் கண்டடையும் உண்மைகளின் எல்லை வரையறுக்கப்பட்டது. ஒன்றைச் சார்ந்தேயிருப்பது. பிரபஞ்சம் முழுவதையும் உட்கொள்ளும்படியான வகைப்படுத்தலொன்றும் அதனுள் இருக்காது. நம்மால் செய்ய முடிவது அந்தக் காட்சியை நோக்கி ஆச்சரியம் கொள்ளுதல் மட்டுமே. ஸ்ருஷ்டியின் மகத்துவத்தில் பேரானந்தம் அடையலாம். அவ்வளவுதான். அப்படியென்றால் இந்தப் பிரபஞ்ச ரகசியத்தை உணர்ந்தவர்கள் தத்துவ ஞானிகளை விடக் கவிஞர்கள்தான்.” ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ யோகியாக முயன்று கொண்டிருக்கும் கவிஞனின் கூற்று என்பதாலேத்யே நெருக்கமாக இருக்கிறது. குரு நித்யாவின் மரபில் வந்த ஷௌக்கத் காயத்திரிக்கு அற்புதங்களின் மீது மதிப்போ ஈடுபாடோ இல்லை. ஷௌக்கத் சில இடங்களில் அவற்றை விமர்சனபூர்வமாகக் கூட அணுகுகிறார்.

ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என்றால் முற்பிறவியில் தான் விவேகானந்தர் என நம்பும் மகாவீர்சிங் ராணா எனும்  சுவாமியை ஷௌக்கத்தும் காயத்ரியும் சந்திக்கிறார்கள். இருவருமே அவரைத் தொல்லையாகப் பார்க்கிறார்கள். ‘உச்சக்கட்ட வேடிக்கை’ என்றே அவரது நம்பிக்கையைச் சொல்கிறார். முற்பிறவியில் ஷௌக்கத் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அவருடைய சிஷ்யை பூனம் நம்பி மேற்கொண்டு கிலி கிளப்புவார். இருவரும் தன்னைத் தேடி வருவார்கள் என தனக்குள் சில சமிக்ஞைகள் தோன்றியதாக ராணா சொல்கிறார். ஆனால் ஷௌக்கத் அவர்களை கேலியுடன் தான் அணுகுகிறார். ராணா இரவு தங்கும்போது அவருடைய சிஷ்யையுடன் தங்குவதைத் தவிர்க்கிறார். ஏதேனும் தவறிப் போனால் இத்தனையாண்டு தியானம் வீணாகிவிடும் என அவர் சொன்னதைக் கேட்டு ஷௌக்கத் வெடித்துச் சிரிக்கிறார்.

ஷௌக்கத் ஆங்காங்கு குரு நித்யாவின் வரிகளையும் நாராயண குருவின் வரிகளையும் மேற்கோள் காட்டுகிறார். “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல, காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறித்துப் போகும் முகங்களைக் கண்டு உருவான ஆன்மீக மரபு மனித மீட்பையே கொள்கையாகக் கொண்டிருக்க முடியும்.

ஒட்டுமொத்தமாக ஹிமாலயப் பயணம் என்ன அளிக்கக்கூடும்? இந்நூலில் நரேஷின் சொற்கள் அதன் சாரம். “நாமொன்றுமில்லை என்பதே ஹிமாலய குரு நமக்கு சொல்லித் தருவது”. இயற்கையின் வசீகர பிரம்மாண்டத்திற்கு முன் நம் அகங்காரம் பணியும்போது நம் அகம் விரிவடைந்து பிரம்மாண்டத்தின் ஒரு துளியாக உணர்வோம். அந்த அனுபவமே ஹிமாலயத்தை நோக்கி நம் அனைவரையும் செலுத்துகிறது எனத் தோன்றுகிறது. நேர்த்தியான மொழியாக்கம் செய்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

நூல் : ஹிமாலயம், சிகரங்களினூடே ஒரு பயணம் –  ஷௌக்கத்

தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ

வெளியீடு : வம்சி பதிப்பகம்

விலை : ரூ. 300