இந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்தே தமிழகத்தில் இருக்கிற பல கட்சிகளின் நிஜமான பலத்தைக் கண்டறிய முடியும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மாபெரும் அராஜகங்களை, ஜனநாயகப் படுகொலைகளை, மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்களை, தலித்துகள் மீதான தாக்குதல்களை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மீறல்களை, தேசத்தையே திகைக்க வைத்த பொருளாதாரத் தடுமாற்றங்களை மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கிற ஒரு கட்சி செய்து முடித்த பிறகு வந்திருக்கிற தேசம் தழுவிய தேர்தல் இது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களிடத்தில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான மனநிலை இருக்கும் என்று நான் நம்பவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிற பிரத்யேகக் காரணங்களே தேர்தல் முடிவினைத் தீர்மானிக்கப் போகின்றன. மோடி உறுதியாக மீண்டும் வந்து விடுவார் என்றோ, கண்டிப்பாக வர மாட்டார் என்றோ உறுதியாகக் கணித்து விட முடியாத திரிசங்கு நிலையிலேயே இந்தத் தேர்தல் இருக்கிறது. மோடி எதிர்ப்பு வாக்குகளை முழுமையாகத் தன் பக்கம் திருப்புவதற்கான செயல்பாடுகளை காங்கிரஸ் முழு வீச்சில் செய்யவில்லை. ராகுலின் மனோபாவமும் செயல்பாடுகளும் முதிர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவரது கட்சியே அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்குகிற சூழலே நிலவி வருகிறது. மாநிலக் கட்சிகள் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பாத்திரத்தை வகிக்கக் கூடும். அதனால் தான் காங்கிரஸின் பெரியண்ணன் மனோபாவத்தை உதறி ராகுல் ‘ஐக்கிய இந்தியா’ என்று மாநிலங்களின் உரிமை குறித்துப் பேசத் தொடங்குகிறார். இந்த மாற்றம் இந்திய அளவில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் இந்தச் சூழலே தமிழகத்தில் அழிந்து போகும் நிலையிலிருந்த எடப்பாடி தரப்புக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
ஜெயலலிதா மரணித்த உடனேயே தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்குகள் தொடங்கி விட்டன. பிஜேபி அப்போதே பல்வேறு திட்டங்களை போடத் தொடங்கி விட்டது.
1. அதிமுகவை சிதைத்து அந்தக் கட்சியை பிஜேபியாக மாற்றுவது.
2. ரஜினியோ அல்லது அவரை மாதிரியான ஒரு பிரபலத்தையோ அதிமுகவிற்குத் தலைமையேற்க வைத்து வெளியிலிருந்து ஆட்டுவிப்பது.
3. குறைந்தபட்சம் அதிமுக ஆட்சியைக் காப்பாற்றி கூட்டணிக்கு வைத்துக் கொண்டு தமிழகத்தில் தம் கணக்கைத் தொடங்குவது.
இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் பிஜேபி செய்து கொண்டிருந்தது. சசிகலா குடும்பத்தின் இமாலயத் தவறுகளும், ஜெ ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதும் அதிமுக அமைச்சர்களின் புத்திசாலித்தனமே இல்லாத ஊழல்களும் பிஜேபிக்கு சாதகமாய் இருந்தன. இன்கம்டாக்ஸ், சிபிஐ ஆகியவை ‘நின்று கொல்லும் தெய்வங்களாக’ அவதாரம் எடுத்தன. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பன்னீர் தர்மயுத்தம் செய்து புனிதராக்கப்பட்டார். ஒரே ஒரு டயரியால் அதிமுக என்கிற இயக்கமே மோடி தயாரித்த சீசாவுக்குள் போய் படுத்துக் கொண்டது.
எடப்பாடியின் புத்திசாலித்தனமும், சாதிய ரீதியிலான நெட்வொர்க்கும் பிஜேபியின் முதலிரண்டு திட்டங்களைக் கை கழுவ வைத்தன. மீனுக்குத் தலையாகவும், பாம்புக்கு வாலாகவும் இருந்தபபடி பிடி கொடுக்காமல் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த ரஜினியின் ‘சித்தம்போக்கும்’ பிஜேபியை இந்த முடிவை நோக்கி நகர்த்தியிருக்கலாம்.
மக்களின் கடுமையான கோபத்திற்கு மத்தியிலும் இந்த ஆட்சி மத்திய அரசின் தயவால் நீடித்தது. அவ்வப்போது தம்பித்துரை ‘விதுரநீதி’ பேசுவார். ஆனால் எடப்பாடியார் மோடியைப் பார்த்துச் செய்யும் புன்னகை சகலத்தையும் மறக்கடித்து ‘நண்பன் போட்ட சோறை’ திங்க வைத்தது. பிஜேபிக்கு சேவகம் செய்வதில் தனக்குப் போட்டியாளராக இருந்த பன்னீரை எடப்பாடியார் ஓரங்கட்டி ஒன்றும் இல்லாமல் ஆக்கிய போதே பிஜேபிக்கு அவர் மீது நம்பிக்கை வந்து விட்டது. கொள்ளைக் கூட்டத் தலைவனைப் போல் துப்பாக்கியை அவரிடம் இருந்து பிடுங்கி இவரிடம் தந்து விட்டார்கள்.
தமிழகத்தின் நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்க்காத கோபம், சமூக நீதிக்கு எதிரான போக்கு, உள்ளூர் பிஜேபி தலைகளின் திமிர்த்தனம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தூத்துக்குடி, கூடங்குளம், தேவாரம் போன்ற போராட்டங்கள் தமிழகத்தை மோடி எதிர்ப்பு மாநிலமாக உருமாற்றியது. ‘அம்மா காலேஜ் போயிட்டு வர்றேன்’ என்று சொல்லி விட்டு அடுத்த வார்த்தையாக ‘Go back Modi’ என்று சொல்கிற டிரெண்ட் இங்கே உருவாகி பிஜேபியை சங்கடப்படுத்தியது. போதாக் குறைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியை ‘பிஜேபியின் பினாமி ஆட்சியாக’ பார்க்கிற போக்கு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வந்தது. ஜனவரி மாதம் வரையிலும் கூட பிஜேபி – அதிமுக கூட்டணி வைத்தால் நாற்பதிலும் தோற்று விடும் என்பதே தமிழகம் முழுவதும் பேச்சாக இருந்தது. அவர்களுடன் வேறு எவரும் கூட்டணி சேர மாட்டார்கள். அதிமுகவே பிஜேபி என்கிற பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்காது என்கிற வியூகங்களும் உலா வந்தன.
இந்தத் தேர்தலில் அடையப் போகும் வெற்றி இரண்டாம்பட்சம் தான். ஆனால் இந்த வியூகங்களை மாற்றிக் காட்டியதே எடப்பாடியின் சாமர்த்தியம் என்று சொல்லி விட முடியுமா என்றால் முழுமையாக அப்படிக் கூற இயலாது. ஏனென்றால் இந்திய அளவிலான சூழலே எடப்பாடிக்குச் சாதமாகியிருக்கிறது. பிஜேபியின் மிக மோசமான ஆட்சி கடுமையான மோடி எதிர்ப்பாக மாறாத தைரியம் தான் பாமகவையும் விஜயகாந்தையும் பிஜேபியின் பக்கம் நெருங்கி வர வைத்திருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை லாபம் அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் மட்டுமே. தங்களது ஆட்சி மீதான மக்களின் வெறுப்பை அவை இந்தக் கட்சிகளை கேடயங்களாக்கித் தடுத்திருக்கின்றன. ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற லட்சியத்தோடு கலைஞர்,ஜெயலலிதாவிற்கு நான்தான் மாற்று என்று கிளம்பிய அன்புமணி எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பது இனி பாமகவை மாற்று அரசியலே பேச முடியாத சிறுகட்சியாகச் சுருக்கி விட்டிருக்கிறது. ( ஏழு தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா எம்பி என்று இப்போதைக்கு பிரமாண்டமாகத் தோன்றினாலும் அது நீண்ட கால நோக்கில் பாமகவின் வீழ்ச்சியே. மீண்டும் பாமக இருதுருவ திராவிட அரசியலை ஏற்றுக் கொண்டதற்கான சமிக்ஞையைக் கொடுத்து விட்டது)
தேமுதிகவின் நிலை இன்னும் மோசம். ஆனால் கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட வாக்கு வங்கி வீழ்ச்சியும், விஜயகாந்த்தின் உடல்நிலையும் சேர்ந்து ‘கிடைக்கிறத சுருட்டிக்கிடுவோம்’ என்கிற மனநிலைக்கு அக்கட்சியைத் (அக்கா, தம்பி, மகனை) தள்ளியிருக்கிறது. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை வாக்கு வங்கி அடிப்படையில் பலமான கூட்டணி போலத் தெரிந்தாலும் மக்கள் மனநிலைக்கு எதிராகவே இக்கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் மேஜிக் என்பது வாக்கு வங்கிகளையும் தாண்டிய அதிசயம். ஆனால் மக்களிடம் ‘பத்தாவது ஜெயிச்சுருமோ’ என்கிற மாயையை உருவாக்கித் தன் பலவீனங்களை மறைத்து மைனஸிலிருந்து அக்கூட்டணி நியூட்ரலுக்கு வந்து விட்டது என்பதே உண்மை.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை இது ஸ்டாலினுக்கான அரைப்பரீட்சை. பலரும் இந்த ஆட்சியை ஸ்டாலின் ஏதாவது செய்து கலைத்து விட்டு சி. எம் ஆனால் கூடப் பரவாயில்லை என்று யோசித்தபோது ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. அதனை ஸ்டாலினின் பலவீனமாகக் கூட மதிப்பிட்டனர். ஆனால் அது ஸ்டாலினின் தொலைநோக்கையே காட்டுகிறது. ஸ்டாலின் இந்த ஆட்சியின் மீதான வெறுப்பு மக்களிடத்தில் கூடிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் தன்னுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்று ஆசைப்பட்டார். அவர் முன் வேறொரு வாய்ப்பும் இருந்தது. எடப்பாடி வலுவாக தன்னை ஊன்றிக் கொள்வதற்கு முன்னால் மக்களிடம் இருந்த அதிமுக எதிர்ப்பைக் கருதி பிஜேபி லேசாக வலை விரித்துப் பார்த்தது. அதில் கொஞ்சம் சலனப்பட்டாலும் பின்னர் சுதாரித்து பிஜேபியை ஒதுக்கி வைத்து கடுமையாக விமர்சித்தார். கலைஞரின் இறுதி அஞ்சலியின் போது ஏற்பட்ட மாபெரும் எழுச்சி அவரை இன்னும் உறுதியாக்கி இருக்கக் கூடும்.
‘பிஜேபி மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை முழுமையாகத் தன்னை நோக்கித் திருப்ப வேண்டும். கூடுதலாக, கட்சியும் சின்னமும் நம்மிடமும் இருக்கிறது. இதன் மூலமாகவே தமிழக அரசியலில் தன் ஆளுமையை நிரூபிக்க முடியும்’ என்று கணக்குப் போட்டு அவர் காய்களை நகர்த்தியிருக்கக்கூடும். கமலஹாசனுடன் நட்பும் இல்லாமல் விலகலும் இல்லாமல் ‘மய்யமாக’ உறவைப் பேணிக் கொண்டு தேர்தல் நேரத்தில் அவரைக் கழற்றி விட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். சினிமா பிரபலங்களோ, மாற்று அரசியல் பேசுகிறவர்களோ தமிழக அரசியலில் தன் கணக்கைத் தொடங்குவது நல்லதல்ல என்று அவர் சிந்தித்திருக்கலாம். அதே மாதிரி தன் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களின் ‘பாமக விருப்பத்தை’ தானும் ரசிப்பது மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கி பாமகவை கூட்டணியில் சேர்க்காமல் தனியாக நிற்க வைக்க வேண்டும் என்றும் அவர் ரகசியமாய் திட்டம் போட்டிருக்கலாம் ( பாமகவும் கமலஹாசனும் அதிமுகவின் மீது வைத்த மிகக் கடுமையான விமர்சனங்களால் அவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டார்கள் என்பது அவருடைய கணிப்பு )
இதில் கமல் விஷயத்தில் வெற்றியடைந்திருந்தாலும் பாமக விஷயத்தில் அவர் தோற்று விட்டார். இந்தத் தேர்தலில் ஸ்டாலின் பதறிய இடமும், எடப்பாடி எழுந்த இடமும் அதுதான். விஜயகாந்த் உடல்நிலை காரணமாக தேமுதிகவை அவர் சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை. பாமக தந்த அதிர்ச்சியால் தேமுதிகவிடம் துரைமுருகனை வைத்து விளையாடி அவர்களை இன்னும் பலவீனமாக்கி அதிமுகவின் கால்களில் சரணடைய வைத்திருக்கிறார். பாமக, தேமுதிக மோதலால் கூட்டணி நாசமாகட்டும் என்கிற கணக்காக இருக்கலாம். ஆனால் ஸ்டாலினின் ஒவ்வொரு அடி வைப்பையும் நுட்பமாகக் கணித்து விடுகிற ‘மருத்துவர் அய்யா’ இதை உடைப்பதற்காகவே விஜயகாந்தை சந்தித்து பழைய பகைக்குத் ‘தடை உத்தரவு’ வாங்கி வந்து விட்டார். ஸ்டாலின் தேர்தல் வெற்றியை விட தனக்கான பாதுகாப்பை உருவாக்குவதிலும் தன் ஆளுமையை நிரூபிப்பதிலுமே அதிகக் கவனம் எடுத்துக் கொண்டார்.
ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அகில இந்திய அளவில் மோடி எதிர்ப்பு பெரிய அளவில் இல்லாமல் போனதுதான் இங்கு சூழலை மாற்றி எளிதான வெற்றியை கடினமாக்கியிருக்கிறது. காங்கிரஸூக்கு அவர் தந்த பத்து தொகுதிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் அவற்றில் காங்கிரஸ் வென்றாலும் கூட அதனை காங்கிரஸின் வாக்கு வங்கியாக நான் கருத மாட்டேன். காங்கிரஸிற்கு இத்தனை தொகுதிகள் தந்ததால் அதிமுக, பிஜேபி, தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஆகியவை ‘ஈழம் குறித்த பழைய பல்லவியை’ புதிய ராகங்களோடு பாட முயற்சிக்கலாம். இனப்படுகொலை நிகழ்ந்த 2009ல் கூட அது பெரிய தாக்கத்தை இங்கு ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட தேவையற்ற கவனச் சிதறலுக்கு அது காரணமாகும்.
பாரம்பரியமான ஒரு இஸ்லாமியக் கட்சிக்கு மட்டும் சீட்டு கொடுத்த அதே நேரத்தில் பிற கட்சிகளுடன் நட்பு பேணிக் கொண்டார். போன தடவை மாதிரியே ஒரு ‘குறிப்பிட்ட கட்சியை’ கண்டு கொள்ளாமல் விலக்கி வைத்திருக்கிறார். அவர்களின் உண்மை முகத்தையோ, கேரளாவில் அவர்கள் செய்யும் வரம்பு மீறிய செயல்களையோ அவர் அறிந்திருக்கலாம். அதனால் திமுகவின் இமேஜிற்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்றே இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஏனென்றால் சீட் தராவிட்டாலும் பிறரிடம் காட்டிய சுமூகத்தை அவர் அவர்களிடம் காட்டவில்லை. வைகோவிற்கு மரியாதை தந்து கூடவே வைத்துக் கொள்வதன் வழியாகவே தன் மீதான பழைய விமர்சனங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்று கண்டறிந்து அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலின் வாக்கு ஒருங்கிணைவிற்கு திருமாவளவன் எவ்வளவு முக்கியம் என்பதை அவர் சரியாகவே உணர்ந்திருக்கிறார். தன்னுடைய பிற போட்டியாளர்களைப் போல் திருமாவளவனையும் அவர் ஒதுக்கி விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். திருமாவளவனின் அரசியல் அணுகுமுறையையும் தமிழகத்து சாதிய அரசியலின் தன்மையையும் ஸ்டாலின் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் அந்த முடிவை நோக்கிச் செல்லவில்லை. மேலும் இப்போதைய சூழலும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
திமுக செல்வாக்காக இருக்கும் வட மாவட்டங்களில் பாமக, தேமுதிக இரண்டும் அதிமுவுடன் சேர்ந்திருப்பதால் திமுகவின் வெற்றி பாதிக்கும் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வன்னியர், தேவர், கொங்கு வேளாளர், நாடார் போன்ற பெரும்பான்மை சாதிகள் அல்லாத ‘பிறரின்’ வாக்குகளே மிக அதிகம். வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோருக்கு எதிராக பிறரின் ஒருங்கிணைவு கடந்த காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ( கொங்கு மண்டலத்தில் மட்டும் அது நிகழ்வதில்லை ) அவ்வாறு நிகழும் என்பதுதான் திமுகவின் நம்பிக்கையாக இருக்கக் கூடும். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் பிஜேபி கொங்கு மண்டலத்தில் தன் பழைய செல்வாக்கை இழந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் விஸ்வரூபமெடுத்த ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு’ அதிமுக கூட்டணிக்கு பெரிய அளவில் சேதாரத்தை ஏற்படுத்தலாம். ஆனால், முதல்வரின் மீதான சாதிப்பாசம் கொங்கு மண்டலத்தை தடுமாற வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எல்லாவற்றையும் தாண்டி தேர்தல் அரசியலில் நிகழும் பணப் பரிமாற்றம், சாதி அபிமானம், அதிகார துஷ்பிரயோகம், கடைசி நேர நிகழ்வுகள் ஆகியவை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கலாம். கலைஞர், ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தலில் சின்னங்களும் கூடப் பொருட்டில்லை. அந்தந்தத் தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களின் தகுதியும், பின்னணியும் இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை பெரிய அளவில் தீர்மானிக்கப் போகிறது .
18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடையே நிகழவிருக்கும் இடைத்தேர்தல் அதிமுகவிற்கான வாழ்வா சாவா பிரச்சினை. மொத்த அதிகார மையமும், பணபலமும் அங்கே குவிக்கப்படலாம். அதிமுகவிற்கு 40 தொகுதிகள் பொருட்டே அல்ல; இந்த 18 தான் அதன் இலக்கு என்று அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இடைத்தேர்தல் ஜனநாயகத்துக்கான சவாலாகவே இருக்கப் போகிறது.
விகிதாச்சார பிரதிநிதித்துவம் வராத வரை ( அது வருவதற்கு பெரிய கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது ) மாற்று அரசியல் என்பதெல்லாம் தேர்தலுக்கு முன்பான பொழுதுபோக்குகள் மட்டுமே. தேர்தல் நெருங்கியவுடன் எல்லா வாய்ச்சவடால்களும் முடிவுக்கு வந்து இருதுருவ அரசியலின் கைகளுக்குள்ளே சகலரும் ஆயுதங்களாக அடைக்கலமாகி விடுவார்கள். எனவே இந்தியாவின் தேர்தல் அமைப்பில் ‘புனிதர்களுக்கே வாக்களிப்பேன்’ என்கிற பிடிவாதம் ஆளும் திறனற்ற அயோக்கியர்கள் ஆட்சிக்கு வரவே மறைமுகமாகத் துணை புரியும். சீமான், கமல் ஆகியோர் யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகின்றனர் என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. சில இடங்களில் தேர்தல் முடிவுகளை அவை மாற்றியமைக்கலாம். (அவர்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது)
டிடிவியை ஒரு பெரிய சக்தியாக நான் கருதவில்லை. தென் மண்டலத்தின் சில இடங்களிலும், தஞ்சை பகுதியிலும் மட்டுமே அவர் கொஞ்சம் ஓட்டுகளைப் பிரிக்கலாம். இல்லையென்றால் அவர் நாடாளுமன்றத் தேர்தலையே புறக்கணித்து விட்டு 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே நின்று எடப்பாடியிடம் ‘கெத்து’ காட்டலாம். அவருடைய அணுகுமுறையில் அரசியலே இல்லை. பண பலத்தையும் ஊடகங்கள் வழியாக மக்களை ஏமாற்றும் அணுகுமுறையையுமே வைத்துக் கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருப்பது பழைய விசுவாசிகளின் மீதான பெரும்பணக்காரரின் கோபம் மட்டுமே. அதற்கெல்லாம் தேர்தல் அரசியலில் மதிப்பில்லை. பன்னீரும் எடப்பாடியும் ஒன்றுமில்லாமல் போகிற போது தினகரனை எல்லோரும் மறந்து விடுவார்கள்.
திமுகவிற்கு மிக எளிதாகக் கிடைத்திருக்க வேண்டிய வெற்றி ஏன் கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது? ஸ்டாலினின் ஆளுமை மட்டுமே பிரச்சினை இல்லை. திமுகவின் மிக மோசமான ஐந்தாண்டு கால ஆட்சியும், வாரிசு முன்னிலைப்படுத்தல்களும், குறுநில மன்னர்களின் அராஜகங்களும் சாதாரண மக்களின் நினைவில் இருந்து நீங்கவில்லை. சமூகநீதி, மதச்சார்பின்மை, பாசிச எதிர்ப்பு ஆகியவற்றுடன் ‘ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்’ என்பதையும் பேசத் தொடங்க வேண்டும் ( எம்பி தொகுதிகளில் தராமல் எம்எல்ஏ தொகுதிகளில் மட்டும் தருவார்கள் என்கிற பேச்சு அடிபடுகிறது ) உதயநிதி, சபரீசன், துர்கா, KD (கலாநிதி, தயாநிதி) பிரதர்ஸ், செல்வி ஆகியோரின் ஆதிக்கமில்லாத ‘தொண்டர்களின் திமுகவாக’ அக்கட்சியை கட்டமைக்க வேண்டும்.
ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூவாக இருப்பது கண்டிப்பாக அந்த சமூக நீதி இயக்கத்திற்கு பெருமை அல்ல. லாட்டரி விழுந்த மனநிலையில் இருக்கும் தமிழக காங்கிரஸ் மாறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், அகில இந்திய அளவில் ராகுலின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பிஜேபி முன்வைக்கிற ஏகாதிபத்தியம், மதவெறி, கார்ப்பரேட் அரசியல், ஒற்றை தேசியம் ஆகியவற்றுக்கு மாற்றாக லிபரல் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கலப்புப் பொருளாதாரம், மாநில உரிமைகளுடன் கூடிய ஐக்கிய தேசியம் ஆகியவற்றைத் தீவிரமாக முன்வைக்க வேண்டும். இந்த மாற்றம் மட்டுமே காங்கிரஸின் இருப்பை நியாயப்படுத்தும் .
இந்தத் தேர்தல் யார் வெல்ல வேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை. யார் வெல்லக் கூடாது என்பதற்கான தேர்தல். சகலரின் மீதும் குறை காணும் உங்கள் தத்துவ அறிவை மூட்டைக் கட்டி வைத்து விட்டு ஒற்றை விரலை ஆயுதமாக்குங்கள். ஆயிரம் முகம் கொண்ட அரக்கனை உங்கள் ஒற்றை விரல்தான் வீழ்த்தப் போகிறது. ஆம், ஜனநாயகம் எனும் மதத்தில் வயது வந்த ஒவ்வொருவரும் ஓர் அவதாரமே!
– மானசீகன்