எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா?

2 comments

இந்தக் கேள்வியை நான் என்னை நோக்கியே எழுப்பிக்கொள்கிறேன். இதில் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் பலனிருக்கும் என்பதால் இங்கு பதிவுசெய்கிறேன்.

இளவரசன் ஆணவக்கொலை செய்யப்பட்ட நாள், அதை ஒரு கட்சியே திட்டமிட்டு நடத்தி ஒரு இளைஞனைப் பலிகொடுத்து விட்டார்களே என எண்ணி நான் கொந்தளித்து அன்றைய நாள் முழுக்க நிம்மதியற்று இருந்தேன். அன்று நான் பணிசெய்த கல்லூரியில் என் சக ஊழியர்களோ மாணவர்களோ இப்படி ஒரு விசயமே நடக்கவில்லை என்பது போல மற்றொரு உலகில் இருந்தார்கள். எனக்கு அவர்களுடைய நடத்தை கடுமையான கசப்புணர்வை, கோபத்தை, கையாலாகாத உணர்வை ஏற்படுத்தியது. தமிழ்த் துறையைச் சேர்ந்த ஒரு நண்பரை அன்று மாலை சந்தித்த போது அவர் மட்டும் இந்தக் கொலையைப் பற்றி என்னைப் போன்றே கடும் வருத்தத்தில் இருந்ததை அறிந்தேன். நாங்கள் பரஸ்பரம் மௌனமாகக் கண்ணீர் விட்டோம். எனக்குச் சிறிது நிம்மதி கிடைத்தது. நான் இதைப் பற்றி முகநூலில் எழுதினேன். கருத்துகள் தெரிவித்தேன். ஊடகத்தில் வருவதை எல்லாம் பின்தொடர்ந்தேன். ஆனால் இன்று அக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்துவிட்டார்கள். எங்களுடைய மனக்கொந்தளிப்பால், கோபத்தால் ஒன்றுமே நடக்கவில்லை. ஊடகவியலாளர்களின் ஈடுபாட்டாலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஆணவக்கொலைகள் அதன் பிறகு எத்தனையோ நடந்தன. தொடர்கின்றன.

சட்டப்பிரிவு 370 ரத்தாகி, ஜம்மு காஷ்மீரின் மாநில உரிமைகளும் அடிப்படைச் சுதந்திரமும் மறுக்கப்பட்டு அம்மாநிலம் உடைக்கப்பட்ட நாள் நான் ஒரு அலுவலகச் சந்திப்பில் இருந்தேன். அது ஒரு முழுநாள் கூட்டம். எல்லாரும் பரபரப்பாக இருந்தார்கள். ஒரு இடைவேளையின் போது இச்செய்தியைப் படித்து நான் மனமுடைந்து போனேன். என் சக ஊழியர்கள் ஏன் ஒன்றுமே நடக்காததைப் போலச் சிரித்துப் பேசியபடியும் தம் பிரச்சினைகளில் ஆழ்ந்தபடியும் இருக்கிறார்கள் என வியந்தேன். எனக்கு அவர்களிடம் கடும் கோபம் ஏற்பட்டது. எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இப்பிரச்சினையைப் பொருட்படுத்தாமல் இருக்கிறாரே என அவரிடம் கோபித்துக்கொண்டு சில நாட்கள் பேசாமல் இருந்தேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் அது சுத்த முட்டாள்தனம் எனப் புரிகிறது. ஒரு குடிமகனாக என் கோபத்தில் நியாயம் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்தும் வெகுவாக விலகி இருக்கும் நான், அவர்களுக்காகக் கண்ணீர் விட்டதால் அவர்களுக்கோ எனக்கோ என்ன பயன்? இணையத்தொடர்போ, வணிகம் செய்யும் வாய்ப்போ, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவோ முடியாமல் அவர்கள் துயருறுவதில் ஒரு சிறு பகுதியைக்கூட நான் அனுபவிக்கப் போவதில்லை. முழுக்க முழுக்க ஊடகங்கள் வழியாக அறிந்துகொள்வதை வைத்து நான் எதிர்வினையாற்றி, கவலைப்பட்டு, கதறி, பின் மெல்ல மெல்ல அடங்கிப் போகிறேன். அதன் பிறகு எத்தனையோ புயல்கள் இந்தத் தேசத்தைத் தாக்கிவிட்டன. காஷ்மீரத்து ஜனங்களும் தம் பிரச்சினைகளை எதிர்கொண்டு கடந்துவர முயல்கிறார்கள். நாம் தனித்தனித் தீவுகளாக இருக்கையில் வெறும் லட்சியவாத மதிப்பைத் தவிர இத்தகைய ஆவேசங்களுக்கு வேறென்ன மதிப்பு உள்ளது? என் சக ஊழியர்களின் விட்டேத்தியான எதிர்வினைதான் சரியா?

நமது நவீன இலக்கிய முன்னோடிகள் அவர்களுடைய இத்தகைய அரசியல் விலகலுக்காக நிறைய செருப்படி வாங்கி இருக்கிறார்கள். தூய்மைவாதம், எலைட்டிசம், பிராமணியம், திராவிட அரசியல் மீதான வெறுப்பு எனப் பல காரணங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. ஒரு எழுத்தாளனாக எனக்கு அரசியலையும் சமூகத்தையும் கவனிப்பதில் ஆர்வமுண்டு. மக்கள் பிரச்சினைகளில் கருத்து சொல்வதும் அவசியமே என நினைக்கிறேன். ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உள்ளது.

நாம் அரசியலை அல்ல, அதன் விளைவை, விளைவு குறித்த கதையாடல்களைப் பார்த்தே எதிர்வினையாற்றுகிறோம். நடைமுறை அரசியல் எப்போதும் ஒரு கண்ணாடி அறைக்குள் உயர்தட்டு மக்களின் அரசியல் கொடுக்கல் வாங்கலாகவே நடக்கிறது. அதே நேரம் அரசியலாக நாம் ஊடகங்களில் காண்பது இப்போதெல்லாம் ஒரு சினிமாவைத்தான். ஒரு சம்பவம் எப்படி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கட்டமைக்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள், கட்சியின் சமூக ஊடகக் குழுக்கள், கட்சிப் பணியாளர்கள், அதிகாரிகள், போலீஸ் எனப் பல தளங்களில் ஒன்றிணைந்து வேலைசெய்து நமக்கு ஒரு படமாக ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகிறது. இதற்குத் திரைமறைவில் வேலை பார்ப்பவை அச்சு, காட்சி ஊடகங்கள். இப்போது யூடியூபர்களும் அப்பணியைக் கொள்கைக்காகவும் பணத்துக்காகவும் செய்கிறார்கள்.

உளவுத்துறைக்கும் இதில் ஒரு பங்கிருக்கலாம். ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து தனு, சிவராசன் படத்தை ஹிந்து நாளிதழ் வெளியிட்டது ஒரு உதாரணம். பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரும் முன் செய்யப்பட்ட “குஜராத் ஒரு முன்மாதிரி மாநிலம்” எனும் பிரச்சாரம் வெறுமனே பாஜகவின் மோடி பிம்பக் கட்டமைப்புப் பிரச்சாரம் மட்டுமல்ல. அதன் பின்னால் தமக்குச் சாதகமான கட்சி அடுத்து வர வேண்டும் என விரும்பிய, அதற்கு முதலீடு செய்த கார்ப்பரேட்டுகள் இருந்தார்கள்.

இன்னொரு பக்கம் சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் பல வருடங்கள் ஆன பின்னரும் மர்மம் நீடிப்பது இதனால்தான். ஒரு சர்ச்சையைத் தோற்றுவிப்பதுகூட நாம் அல்ல, அவர்களே. ஒரு கட்சிக்குள் யாரோ சிலரை ஒழித்துக் கட்டுவதற்காகச் சர்ச்சையை உருவாக்கி, சமரசம் ஏற்பட்டதும் சர்ச்சையையும் முடித்துவிடுவார்கள். ஒவ்வொரு செய்தி, சர்ச்சை, போராட்டம், விவாதம், உணர்ச்சி மேலிடலின் பின்னும் திட்டவட்டமான கணக்கு நம்மை ஆட்டுவிக்கும் கருத்து நிர்வாகிகளுக்கு உண்டு. அவர்கள் எதை முடிவுசெய்கிறார்களோ அதை மட்டுமே நாம் பேசுகிறோம்.

இதுவொரு பின்நவீன / சமகாலப் பிரச்சினை மட்டுமல்ல. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் அனேகமான எழுத்தாளர்கள் சுதந்திரப் போராட்டத்தின் பின் திரண்டிருந்தார்கள், ஆங்கில அரசின் மீது கடுங்கோபத்தில் இருந்தார்கள், காந்தியப் போராட்டத்தின் முடிவில் தன்னாட்சி வரும்போது புது உலகம் மலரும் என நம்பினார்கள். ஆனால் உயர்மட்டத்தில் ஆங்கில அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையில் நல்லுறவு நிலவியதை, கொடுக்கல் வாங்கல்கள் இருந்ததை இந்தப் படைப்பாளிகளும் போராளிகளும் அறியவில்லை. தேசப்பிரிவினை இரு கட்சிகளின் நலனுக்காக மட்டுமே நடத்தப்பட்டது, மக்கள் இடப்பெயர்வு மோசமாக ஒருங்கிணைக்கப்பட்டது, கலவரங்களில் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதுவொரு தவிர்க்க முடியாத விபத்தோ வரலாற்றுத் துயரமோ அல்ல. அன்றைய ஆங்கில அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் தங்களுடைய அதிகாரத்தைப் பத்திரப்படுத்திக்கொள்வதில் மட்டும் அக்கறை இருந்ததே பிரிவினையில் பல லட்சம் பேர் பலிகொடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். இதை மக்களும் படைப்பாளிகளும் அடுத்த சில ஆண்டுகளில் புரிந்துகொண்ட போது அதுவொரு பலத்த அறையாகவே அவர்களுடைய கன்னத்தில் விழுந்திருக்க வேண்டும். அடுத்து, சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவில் எந்தப் பாரித்த மாற்றங்களும் வரவில்லை, நாடு அப்படியே இருக்கிறது, வறுமையும் கொடுமைகளும் ஒழியவில்லை, நேருவும் பட்டேலும் காந்தியைத் தூக்கிப் பரணையில் போட்டுவிட்டார்கள் எனும் எதார்த்தம் தந்த கடும் ஏமாற்றம். இதைச் சில எழுத்தாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். குறிப்பாக, வைக்கம் முகம்மது பஷீர். புதுமைப்பித்தனும் சில கதைகளில் பகடி பண்ணியிருக்கிறார். 

சமூக அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், இந்தியச் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து நாம் இன்று முன்னேறி இருக்கிறோமா? இன்று சமூக வலைதளங்கள் மூலம் சாமானியர்களுக்கு அதிகாரம் வந்துள்ளதாக ஒரு போலிப் பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தாண்டிப் பார்த்தால், நாம் இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறோம்.

இதைப் பற்றி பல நூறு வருடங்களுக்கு முன்பே பிளேட்டோ தனது Dialogues நூலில் குறிப்பிட்டிருக்கிறார். Cave allegory – குகை உருவகக்கதை. வெளியுலகம் என ஒன்றே தெரியாத மனிதர்கள் ஒரு குகைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் முன்னால் ஒரு திரை உள்ளது. அதில் சில நிழலுருவங்கள் அசைகின்றன. அதை மட்டுமே உண்மை என நினைக்கும் இம்மனிதர்கள் கண்கொட்டாமல் பார்த்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியே சென்று உலகத்தைப் பார்த்து வரவேண்டும் என்றே தோன்றவில்லை. தமக்குப் பின்னால் சிலர் குதிரை, தெய்வங்கள் போன்ற பொம்மைகளை அசைத்து அவற்றின் நிழல்களைத் திரையில் காட்டுகிறார்கள் என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களில் எவனோ ஒருவன் குகையில் இருந்து தப்பித்து வெளியே போனால் எப்படியான அதிர்ச்சி அவனுக்கு ஏற்படக்கூடும் எனப் பிளேட்டோ கேட்கிறார்.

இங்கு பிரதான பிரச்சினை பொதுமக்களான நமக்கு நாம் எதை அறிகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதில் கட்டுப்பாடோ உரிமையோ இல்லை என்பதே. அன்றில் இருந்து இன்று வரை நிலைமை மாறவில்லை என்பதே. அதுவும் கடந்த பத்தாண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சினை, புதிய கிளர்ச்சியூட்டும் விவாதங்கள், அடுத்தடுத்த நாட்கள் முந்தின நாள் பேசியதற்கு என்னவாயிற்று எனும் அக்கறையில்லாத சிவாலய ஓட்டம். ஆனால் நீங்கள் கவனித்துப் பாருங்கள் – பொதுமக்கள், சமூக வலைதளப் போராளிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் அளவுக்குக்கூடக் களத்தில் நிற்கும் அரசியல்வாதிகள், முடிவுகளை எடுக்கும், பேரங்களில் ஈடுபடும், பணத்திலும் அதிகாரத்திலும் புரளும் தலைவர்கள் உணர்வுவயப்படுவதில்லை. அதாவது ஊடகங்களில் கொந்தளிக்கிற எந்த அரசியல்வாதியிடமும் நேரில் பேசிப் பாருங்கள். ரொம்பவே இயல்பாக இருப்பார்கள். எதிர்க்கட்சியினரிடமும் பிரியமாகவும் நட்பாகவும் இருப்பார்கள். கிட்டத்தட்ட வக்கீல்களைப் போல. மோதல் எல்லாமே களத்தில் மட்டுமே. 

ஆனால் மக்களால் இப்படி இருக்க முடிவதில்லை. போராளிகளால் முடிவதில்லை. அவர்கள் சித்தாந்த அடிப்படையில் பிரிந்து கிடந்து மோதிக்கொண்டே இருக்கிறார்கள். கசப்பும் வெறுப்பும் எல்லாத் திசைகளில் இருந்தும் சூழ்கிறது. ஒரு தேர்தல் முடிவில் ஏதோ தம் வாழ்க்கையின் முடிவே அடங்கி இருப்பதைப் போல் நடந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பணமோ அதிகாரமோ தமது வாழ்க்கை மேலான உரிமையோ எதுவுமே எஞ்சுவதில்லை. ஆனால் பல தேர்தல்களைக் கண்ட அரசியல்வாதியோ அலட்டிக்கொள்ளாமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். தனக்கான கதவுகள் அடைக்கப்படும் போது மட்டுமே அவன் கொந்தளிப்பான். இது  லாட்டரி வாங்குபவனுக்கும் லாட்டரி கம்பெனிக்காரனுக்குமான உறவைப் போன்றது. லாட்டரி கம்பெனி முதலாளி அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. அதிர்ஷ்டம் என்பது தனது முதலீடு என அவருக்குத் தெரியும். 

அரசியல், சமூக உறவாடல்கள் முழுக்க வணிகம் ஆகிவிட்டன (குடியாட்சி காலத்தில் இருந்தேதான்.) மக்கள் இந்தப் பிரம்மாண்ட மாலில் விண்டோ ஷாப்பிங் பண்ணுகிறவர்கள் மட்டுமே. ஆம், பூக்கோ சொல்வதைப் போல அன்றாட அரட்டைகளிலும் நுண்ணரசியல் உள்ளது. அரசியல் ஈடுபாடு என்பது நடைமுறை அரசியல் பேச்சுகள் மட்டுமல்ல. பரஸ்பரம் நம்மிடையே அதிகாரப் பங்கீட்டுக்கான கருவியாகவே அரசியல் கதையாடல் உள்ளது. கேரளாவிலும் வங்காளத்திலும் நாளிதழ்களைப் படிப்பவர்கள் அதிகம். அவர்கள் அவ்வளவு ஆவேசமாக அரசியலை விவாதிக்கிறார்கள். ஏனென்றால், மொழியளவிலும் பண்பாட்டு அளவிலும், தமது சமூக அதிகாரம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் முனைப்பு அவர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்களும்கூட நடைமுறை உலகில் அரசியல் பலாபலன்களுக்கு வெளியேதான் நிற்க வைக்கப்படுகிறார்கள். அந்த இடத்தைத் தொழிலதிபர்களும் கட்சிகளுமே ஆள்கின்றன. இன்றைய சோஷியல் இன்ஜியரிங் தேர்தல் களத்தில் அரசியல் ஆர்வம் மிக்க இம்மக்களால் தேர்தல் முடிவுகளில்கூடத் தாக்கம் செலுத்த முடிவதில்லை – இன்று 30-40% வாக்குகளைப் பெறும் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி செய்ய முடியும். குறைந்த இடங்களைப் பெற்றாலும் பணபலமும் ஒன்றிய அதிகாரமும் உள்ள ஒரு கட்சி குதிரை வியாபாரம், அமலாக்கத்துறை மூலம் ஆசை காட்டியும் மிரட்டியும் ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும். எப்படிப் பார்த்தாலும் மக்கள் புள்ளி வைக்கிறவர்களாகவும் கார்ப்பரேட்டுகளும் தலைவர்களும் கோலம் இடுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு கட்சியின் தலைவர் அடுத்த ஐம்பதாண்டுகளும் நாங்களே ஆளப்போகிறோம் எனக் கூறும்போது பொதுமக்களுக்கு என்ன செய்வதெனத் தெரிவதில்லை. என்னதான் சமூக ஊடகங்கள், வாக்களிப்பு போன்ற ஆயுதங்கள் இருந்தாலும் அவர்களுடைய கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையினரின் விருப்பமே தேர்தல் முடிவுகள் எனும் காலம் முடிந்துவிட்டது. இன்று ஒரு சிறுபகுதியினரின் தீவிர ஆதரவு, அதிக பணபலம், எதிர்வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலம் பெரும்பான்மையின் முகத்தில் கரியை வாரித் தேய்க்க முடியும் என்பதே எதார்த்தம். இப்போது நாம் காண்பது மக்களாட்சி அல்ல, வாக்கு மேலாண்மை ஆட்சி.

அரசியல் கோட்பாட்டாள லட்சியவாதிகள் மட்டும், நாடு அடைந்துள்ள வளர்ச்சியின் பகுதியாகச் சமூக அளவில் ஏற்பட்ட படிநிலை மாற்றங்களால் முன்னேறிய சமுதாயங்களைக் காட்டி மக்களாட்சி மக்களின் ஆட்சியே என நிரூபிக்கப் போராடுகிறார்கள். ஆனால் சமூகப் பொருளாதார முன்னேற்றம் வேறு, தம் வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் சுதந்திரம் வேறு என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. காலனிய ஆட்சியின் போதுகூட இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறினர். அதனால் அது அடிமை யுகம் அல்லாமல் ஆகிடுமா?

இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கையில், நடைமுறை அரசியல் சமூக விவாதங்கள் எழுத்தாளனுக்குத் தேவையில்லாதவை என நமது நவீனத்துவ முன்னோடிகள் நம்பியதில் நியாயம் உள்ளது என்றே தோன்றுகிறது. உலகம் முழுக்கத் தத்துவவாதிகள் (ஹைடெக்கர் போன்றோர்), இலக்கியவாதிகள் தமது அரசியல் சமூகப் பார்வையைத் தெரிவித்து பின்னர் காலம் மாறும்போது அக்கருத்துகளுக்காக வசைபாடப்பட்டிருக்கிறார்கள், விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழிலும் இது சில இலக்கியவாதிகளுக்கு நடந்துள்ளது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் பாதி உண்மைகளை வைத்தே பேசினார்கள். முழு உண்மை கட்சித் தலைமைக்கு மட்டுமே தெரியும். உணர்ச்சிவயப்படும் மனநிலை கொண்டோர் என்பதால் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தம் முன் காட்டப்படும் பிம்பத்தை, திட்டங்களை முன்யோசனையற்று நம்பி ஏமாறவே வாய்ப்பு அதிகம். வாசகர்களுக்கு இவர்கள் ஏன் ஒரு இனவாத, சாதிய கொள்கைகளை முன்னிறுத்தும் கட்சிகளை அன்று ஆதரித்தார்கள் என்றே பின்னாளில் இந்தப் படைப்பாளிகளைப் பார்க்கையில் தோன்றும். அவர்கள் மீது கோபமும் கசப்பும் வரும். (முன்பு பா.ம.கவை ஆதரித்த எழுத்தாளர்களுக்கும், அண்மையில் கண்மணி குணசேகரனுக்கும் நடந்ததைப் போல.)

தம் பண்பாட்டு அதிகாரத்தை உருவாக்குவது, அதைத் தமக்கோ ஒரு அதிகார மையத்துக்கோ பயன்படுத்த அனுமதிப்பதைத் தாண்டி அரசியலில் படைப்பாளிகள் இறங்குவதால் லாபம் இல்லை, நேரமே வீணாகிறது. ஆனால், லட்சியபூர்வமாகப் பார்த்தால், அது அவனுடைய கடமையாகவும் இருக்கிறது. ஆனால் கடமையா வாழ்க்கையா என்பதை அவனே முடிவெடுக்க வேண்டும்.

பாஜக அடுத்த நாற்பது ஆண்டுகள் ஆளும் என்றால் ஒரு முற்போக்கான படைப்பாளி தன் அறுபது, எண்பது வயது வரை அதன் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கலாம். அதனால் ஏற்படும் மனநெருக்கடி, ஏமாற்றம், கசப்புகள் ஒன்றுதிரண்டு ஒரு மலையாக மாறி இருக்கும். அந்த நினைவுகளின் மலையைப் பார்த்தபடியே அவன் தன் வயோதிக காலத்தில் பிரமித்துக்கொண்டிருக்கலாம். பாஜக போன பிறகு மற்றொரு கட்சி அதைவிடக் குறைவான தீமை கொண்டதாகவோ அதைவிட இன்னும் பயங்கரமானதாகவோ வரலாம். ஆனால் இந்த நாற்பது ஆண்டுகளில் தம் எழுத்திலும் தொழிலிலும் கவனமாக ஈடுபடுகிறவர்கள், அரசியலைக் கவனிக்காதவர்கள் வளர்ச்சி கண்டு எங்கோ போய்விடுவார்கள். யார் ஆண்டாலும் தொழிலதிபர்கள் ஆயிரம் கோடிச் சொத்தை லட்சம் கோடியாகப் பெருக்குவார்கள். சினிமா நடிகர்கள் வாழ்ந்து கெட்டிருப்பார்கள். அரசியல் அக்கறையற்ற பொதுமக்களும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்து, தாம் கட்டிய வீட்டில் சொகுசாகப் படுத்து டிவி பார்த்துக்கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகள் கொந்தளிக்கும் கடலில் மூழ்காத தோணியைப் போல மிதந்துகொண்டிருப்பார்கள்; யார் ஆட்சிக்கு வந்தாலும், சர்வாதிகாரமோ குறை-அதிகாரமோ ஆண்டாலோ அவர்கள் நல்ல பதவிகளைப் பெற்று எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்று வளர்வார்கள். வளர்ச்சி இல்லாவிடினும்கூட, குறைந்தபட்சம் லட்சியவாதத்தினால் அவர்களுடைய நிம்மதி ஒருபோதும் குலையாது.

ஆக, எழுத்தாளனின் அரசியல் ஈடுபாடானது லட்சியவாதத்துக்காகத் தன் ஆயுளைப் பலிகொடுக்கப் போகிறானா நடைமுறை புத்திசாலித்தனத்துடன் தன்னைப் பாதுகாக்கிறானா என்பதைப் பொறுத்தது என நினைக்கிறேன். இனிமேல் ஒரு படைப்பாளி சமூகத்துக்காக, அரசியல் பிரச்சினைகளுக்காகக் கொந்தளித்தாலும் அதன் எல்லை என்ன, குறைகள் என்ன, தன்னை யாரெல்லாம் பயன்படுத்துவார்கள் என்று அவன் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அவன் சமூக நோக்கிற்காகவே ஒரு கட்சியை ஆதரிப்பதாக நினைப்பான். ஆனால் அக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் எல்லாக் கட்சிகளையும் போலவே நடந்துகொள்ளும். அப்போது அவன் மனம் உடைந்து போவான். அதனால்தான் சொல்கிறேன், “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை”. நமது நவீன இலக்கியவாதிகள் செய்ததைப் போலத் தம் எழுத்து, தாம் கொண்டு வரும் சிறுபத்திரிகை, தம் இலக்கியம், பண்பாடு, தமது ஒண்டுக்குடித்தன வீடு என அவர்கள் இருந்ததைப் போல நாமும் ஒரு சின்ன வட்டத்துக்குள் இருப்பதொன்றும் தவறில்லை. சமூக அதிகாரம் இல்லாத போது சமூக அக்கறை மட்டும் எதற்கு?

2 comments

Anand Raja R July 26, 2022 - 10:54 am

நன்றி சார் 🙏 நிறைவான தகவல்

Akilan August 2, 2022 - 5:57 pm

உண்மைதான். எழுத்தாளனுக்கு அரசியல் பற்றிய விழிப்பு நிலை வேண்டும். அதே நேரத்தில் தன் அரடியல் அறவுணர்வு சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை உடனடியாக நிகழ்த்தி விடும் எனும் பிரமை விலக வேண்டும். மேலும், தான் நம்பும் அறக்கோட்பாடுகள், லட்சியவாதங்கள் மட்டுமே உலகை உய்விக்கும் எனும் தீவிரப் பிடிப்பு காலப்போக்கில் நகைப்பிற்குரியதாகி விடும் எனும் உணர்வும் கலைப்படைப்பாளியிடம் படிய வேண்டும். காலத்தால் அழியாத பேருண்மை என்பது எதுவும் இல்லை என்றாகிப் போன நாளில் எழுத்தாளன் ஏடுக்கும் எவ்வித தார்மிக நிலையும் அவலட்சணமானதாகவே முடியும்.

Comments are closed.