இசையின் முகங்கள் (பகுதி 11): வாணி ஜெயராம் – அரிதாய் நிகழும் அற்புதம்

by ஆத்மார்த்தி
0 comment

ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான அனுபவம் ஒன்றைக் கலையின் ஊடாக ரசிகனுக்குக் கடத்துவது என்பது உண்மையாகவே ஒரு சவால். பெருமளவு கலைஞர்கள் இப்படிப்பட்ட அனுபவச் சாத்தியத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு முயலுவதில்லை. அவர்களது கலைச் செயல்பாட்டின் நோக்கம், ஒரு தேவை அல்லது எதிர்பார்ப்பை நோக்கியதாக அமைவதும்கூட அதற்குக் காரணமாக இருந்துவிட முடியும். விதிவிலக்காக வெகு சில கலைஞர்கள் தங்களது மேதைமை மற்றும் தனித்துவத்தின் வெளிப்பாடாக இப்படிப்பட்ட அனுபவக் கடத்தலைச் சாத்தியம் செய்வார்கள். அப்படியான கலைஞர்தான் வாணி ஜெயராம். எப்போதும் பாடல் நேயர்கள் தங்கள் பெருவிருப்பப் பாடல்களை உருவாக்குகிற இசையமைப்பாளர்களைத் தங்களது அக உலகத்துக்குள் வெகு தூரம் அழைத்துச் செல்லப் பிரியப்படுகிறார்கள். அவற்றை எழுதிய பாடலாசிரியர்களின் மேதைமையினை வேறு விதமாகச் சிலாகிக்க விரும்புகின்றனர். அந்த வார்த்தைகளை இசையோடு ஒருவிதமாகவும் தனியாகத் தன் கவித்துவ வாசிப்பில் வேறொரு வண்ணமாகவும் இரண்டு விதங்களில் பாடல் வரிகளோடு ரசிகர்கள் தொடர்புறுகிறார்கள். அதுவே பாடகரோடு அவர்களுக்கு இருப்பது விருப்பும் வெறுப்பும் கலந்த உறவாகப் படுகிறது.

தமக்கு இசையமைக்கத் தெரியாவிட்டாலும் அதை நோக்கிப் பெரும்பாலான நேயர்கள் செல்வதில்லை. இசையைக் கற்பதற்கோ பாடலிசையை மீவுருச் செய்யவோ பெரும்பாலானவர்கள் முயல்வது இல்லை. பாடல் வரிகளை எழுதத் தெரியாவிட்டாலும்கூட அதையும் எழுதிப் பார்க்க சாமானியர்களின் பெரிய சதவிகிதத்தினர் முயல்வது இல்லை. ஒரு பாடலின் குரல் பகுதியில் மட்டுமே நேயர்களின் பரியந்தம் நிகழ்கின்றது. இசைஞர் மற்றும் கவிஞர்களைச் சற்றே தூரத்தில் இருத்துகிற ரசிகர் பாடகர்களை மட்டும் நெருங்கிச் செல்கிறார். பாடலின் குரல் உலகத்தைத் தன் குரல் கொண்டு பாடிப் பார்க்க விழைகிறார். அவரைப் பொறுத்தமட்டில் பாடலென்பது இசையை நீக்கம் செய்துவிட்டு அது பாடப்பட்ட குரலையும் நீக்கிவிட்டுத் தன் குரலில் அதே வரிகளைப் பாட முயல்வதும் முடிவதும்தான்.

பாடலின் குரல் பாகத்தில் ஆழ்வதும் அன்னியம் கொள்வதுமாக இரட்டை மனோநிலையில் ஒரு ரசிகர் எப்போதும் நின்றுகொள்கிறார். சுமாராகப் பாடுவதென்பது கைவிட முடியாத போதைப் பழக்கத்திற்கு ஒப்பானதாக இருக்கின்றது. தன் குரலின் இயல்பும் யதார்த்தமும் நன்கு புரிபடுகிற ஒருவர், தோல்வி கலந்த சின்னஞ்சிறிய சுகந்தத்துக்காகக் காலமெல்லாம் பிரியமான பாடல்களை வானொலி மற்றும் காணூடக நிகழ்ச்சிகளில் கேட்க முனைகிறார். தனது செல்லிடப் பேசியின் அழைப்பொலியாகவும் மற்றவருக்கான கேட்பொலியாகவும் அத்தகைய பாடல்கள் தளும்புகின்றன. வாகனத்தை ரிவர்ஸ் கியர் போட்டுப் பின்னால் எடுக்கையில்கூடத் தன் பெருவிருப்பப் பாடலை ஒலிக்கச் செய்து இன்புறும் பலரை நானறிவேன். உலகம் பாடல்களால் ஆவது. பாடல்கள் மனிதர்களின் தோளமர்ந்த பறவை போல் சுதந்திரமாகத் திகழ்கின்றன. மனிதர்கள் மாயப் பூவிலங்கால் தம்மைத் தாமே பிணைத்துக்கொள்வதாய்ப் பாடல்களைச் சரணடைகின்றனர். பாடல்களை ரசிப்பது ஒருவிதத்தில் தன்னைச் சமர்ப்பிப்பது. ஆன்மாவை ஒப்புக்கொடுப்பதன்றி அது நிகழ்வதில்லை.

பாடகர்களில் ஒரு தனித்த பிரிவினர் உண்டு. அவர்கள் அநேகமாகப் பாடுகிற பாடல்கள் எழுதுபவர்களின் கவித்திறன் மற்றும் இசையமைப்பவர்களைத் தாண்டி ரசிகரைக் கட்டிப் பிணைத்துக்கொள்ளும் தனித்துவ வசீகரம் கொண்டவர்கள். ஒரு சில பாடகர்கள் தங்கள் தாய்மொழியில் அல்லது ஒரு சில மொழிகளில் அத்தகைய அடைதல்களைச் சாத்தியப்படுத்துவார்கள். ஆனால் வெகுசிலர் மாத்திரமே புகுந்து புறப்பட்டுத் திரும்புகிற வரை எல்லா மொழிகளிலும் ஒற்றை வண்ணமாக அப்படிப்பட்ட வசீகரத்தை ஏற்படுத்துவார்கள். அவர்களுள் ஒருவர்தான் வாணி ஜெயராம். வாணி பாடிய பெரும்பாலான பாடல்களை ரசிப்பவர்களுக்கு அவருடைய தாய்மொழி எது என்பதே தெரியாது.

வாணி ஜெயராம் பாடல் என்று முதன்முதலில் கேட்க வாய்த்தது இரண்டு பாடல்கள். முதலாவது புன்னகை மன்னன் படப்பாடல். “கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்” என்கிற தொடக்கம். தன் மாணவியான ரேவதி நடனத்தை ஒருமுகம் கொண்டு கற்றுக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டுவார் ஆசிரியை ஸ்ரீவித்யா. ‘நீ நடனத்தை உயிராய் நினைப்பது உண்மை என்றால் அதன் மீதான உனது பற்றுதலை நிரூபித்துக் காண்பி’ என்பார். ‘எப்படி?’ எனக் கேட்கும் ரேவதியிடம் ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று விலகிச்செல்வார். தானும் தன் நடனமுமாகத் தனிக்கும் ரேவதி ஒரு சாயந்திரம் தொடங்கி அடுத்த தினத்தின் காலை புலரும் வரை தொடர்ந்து ஆடுவார். சன்னதம் கொண்டு ஆடுகிற அந்தத் தருணத்தின் காட்சிக் கடத்தலாகத்தான் ‘கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்’ பாடல் ஒலிக்கும்.

அந்தக் குரலை எப்படி வர்ணிப்பது? அப்போதுதான் பதின்மத்தின் வாசலில் இருந்த சிறான் நான். என் வாழ்வில் எனக்கென்று தனியாக ‘இதெல்லாம் எனக்குப் பிடித்தவை’ என ரசனையின் சுவர்களை ஒவ்வொன்றாகக் கட்டமைக்கத் தொடங்கிய காலம் அது. எனக்குப் பிடித்த நிறம் என்ன என்பதை அப்போதுதான் கருநீலம் என்று சொல்லத் தொடங்கி இருந்தேன். அதுவும் எப்படி? ஆடைத்தேர்வின் போது அக்கா ஒருதடவை கேட்டாள். அவளுக்கு மஞ்சளும் வெளிர் நீலமும் பிடித்த வண்ணங்கள் என்பதைப் பகிர்ந்தபடியே, ‘தம்பி உனக்கு எந்த வண்ணம் மீது பெரும் பிரியம்?’ எனக் கேட்டாள். அதுவரை வண்ணங்கள் யாவற்றின் பொதுவுலகத்தின் உள்ளே சஞ்சரித்துக்கொண்டிருந்த நான், அவசர அவசரமாக எனக்குள் அலைந்து ஒரே ஒரு வண்ணத்தைச் சுட்ட முடியாதவனாகத் திகைத்தேன். இப்படி ஒரு வினா வந்து நிற்கும் என்பதே தெரியாத ஒருவனுக்கு முதலில் அந்த வினா புதிய தருணத்தைத் தாண்ட வேண்டும். அப்புறம் அல்லவா விடையறிதல்?

அன்றைக்கல்ல, சில தினங்கள் கழித்துதான் கருநீலத்தை எனக்கான வண்ணம் என்று கண்டுகொண்டேன். அந்த வண்ணம்தான் என்பதை நானறிவதற்கு உதவி செய்த உபாயம் ஒன்றே ஒன்றுதான். வேறெந்த வண்ணமும் கருநீலத்தின் அளவுக்கு மீண்டும் மீண்டும் என்னைத் தனக்குள் வரவழைக்கவே இல்லை. ஒரு சின்ன பிரியம், ஒரு சிறிய பற்றுதல் வண்ணத்தின் மீதான விருப்பத்தைக் காட்டிலும் கூடுதலாய் ஒரு நேசம் அங்கே துளிர்த்ததைக் கண்டு- உணர்ந்து- அதில் லயித்து அந்த நிறத்தைச் சென்றடைந்தேன். அப்படித்தான் என் வாழ்வின் வண்ணமாகக் கருநீலம் வந்தமைந்தது.

அதே போலத்தான் வாணி ஜெயராமின் குரல் எனக்குள் நிரம்பியதும் நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. முதலில் என் மனத்தினுள் வெற்றுப் பாத்திரங்களை உருவாக்கிக்கொண்டேன். அவற்றில் அனேகமாய்க் கேட்க வாய்த்த அத்தனை குரல்களையும் பல்லாங்குழி ஆடும்போது, ஒவ்வொரு பள்ளத்திலும் முத்துகளை நகர்த்திக் கூட்டிச்செல்வோம் அல்லவா? அப்படியே பிரதியிட்டுப் பார்த்தேன். எனக்கு மெத்தப் பிடித்த ஆண் குரல் எது என்பதை நான் அடைவதற்கு அதன் பின்னும் இரண்டு வருடங்கள் ஆயின. முதலில் வாணி ஜெயராம்தான் எனக்குப் பிடித்தமான பாடகி என்பதை உணர்ந்துகொண்டேன். அதற்கான வாசல் திறப்பைத் தந்த பாடல், புன்னகை மன்னன் படத்தின் ‘கவிதை கேளுங்கள்’ பாடல்.

கற்சிற்பத் தன்மைகொண்டது வாணியின் குரல். ஆயிரமாயிரம் அபிஷேகங்களுக்குப் பின்னரும் ஒரு சிலையின் மேனியில் தேய்மானம் ஏற்படுவது இல்லை. காலத்தோடு சர்வ காலச் சமரொன்றை நேர்த்துகிற கலா வடிவம்தான் சிலையும் சிற்பமும். அப்படிப்பட்ட சிலை போல, சிற்பம் போலத்தான் ஐம்பதாண்டுகளைக் கடந்து ஒலித்து வருகின்றது ஒரு குரல். இந்தியாவின் குரல் முகம் வாணி ஜெயராம். ‘எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரை நாம் ஆளவேண்டும்’ என்று ‘காக்க காக்க’ படத்தில் வருகிற பாண்டியா கதாபாத்திரம் அவன் அண்ணனான சேதுவிடம் சொல்வான். அது வாணியின் குரலுக்கான வசனம் என்பது என் எண்ண விருப்பம். ஆம். எந்தத் தேசத்துக்குச் சென்றாலும் அந்த மண்ணின் குரலாக மாற்றமெடுக்கக்கூடிய வல்லமை கொண்டது வாணியின் குரல். அந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டு தன் குரலை அந்த மண்ணின் மீதோன்றலற்ற மலரெனவே மாற்றிக்கொண்டு ஒலிக்கும் வாணியின் குரல். ஒலிக்கும் நிலமெல்லாம் தன் பெயரெழுதி அபகரித்துக்கொள்ளும் மிதாஸ் தனமான குரல். மாயங்களின் தலைவாயில்.

‘கவிதை கேளுங்கள்’ பாடல் வாணியின் குரல்வன்மைக்கு மிக அழகானதொரு தொடக்கச் சான்றாக அமைவது தற்செயல். நான் ஏன் அந்தப் பாடலினூடாக வாணியின் குரலுலகை வந்தடைய வேண்டும்? எல்லாத் தற்செயல்களுமே யாரோ முகமறியாதவர் செய்தளிக்கும் ஏற்பாடு என்பது ஒரு நம்பகம். அதை மெய்ப்பிக்கும் வண்ணம்தான் அந்தப் பாடலை நான் அடைந்தேன். முதல்முறை கேட்கும்போது என்னால் அந்த ஆனந்தக் கிறக்கத்திலிருந்து விடுபடவே முடியவில்லை. இன்னமும் அந்தப் பாடலின் முதன்முறை ஒலித்தல் முடியவே இல்லை. அதுதான் அந்தப் பாடல். அதுதான் வாணி ஜாலம்.

தனிமையைத் தூக்கிப் பிடிப்பதான ஒரு பாடல். நான் என்பவள் நான் மட்டுமே என்பதை மெய்ப்பிக்கும் பாடல். இசையும் நடனமும் போதும் எப்போதும் என்பதைப் பறைசாற்றுகிற பாடல். இந்த இரவு முடிவதும், தினம் இன்னொன்று விடிவதும் என் கால்கள் ஓய்வதற்கு முன்பாகத்தான் என்பதை விளம்பிச் செல்லும் பாடல். அகத்தை அகழ்ந்து பாதங்களுக்குப் பெயர்த்துத் தந்தாற் போலொரு பாடல். காதல் வேறல்ல கவிதை வேறல்ல என்பதை எடுத்துச்சொல்லும் பாடல். இசையை யூகித்துக்கொண்டு வார்த்தைகளை வாதிட்டுப் பார்க்கின்ற பாடல். ஒரு நபர் யாகம் அந்தப் பாடல். வரமே தவமாய்த் தகிக்கும் ஆராதனை அந்தப் பாடல். தமிழ் சினிமா அதுவரை அப்படி ஒரு சூழலைப் பார்த்ததில்லை என்பதை உணர்ந்து இளையராஜாவும் வைரமுத்தும் தந்தளித்த தாகசம்காரம் அந்தப் பாடல்.

அதில் அழகான ஒரு திருப்பம் வரும். இசையும் லயமும் ஒன்றாய்க் கூடிப் பேய் வேகமெடுத்துத் திரிகின்ற எதிர்ப்பற்ற எக்ஸ்பிரஸ் ரயில் போல் பாடல் விரைந்துகொண்டிருக்கும் போது நடுவாந்திரம் ஒரு தற்செயல் நிறுத்தம் போல, இல்லையில்லை, தற்செயல் வேகக் குறைவு கணம் போல ஒரு திருப்பம் வரும். அந்த இடத்தை இசையும் வரிகளும் கடப்பதைவிடவும் பல்லாயிரம் மடங்கு அழகதிகமாய்த் தன் குரல் கொண்டு அலங்கரித்திருப்பார் வாணி. அந்த இடம் இதுதான்.

பாறை மீது பவள மல்லிகை பதியன் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்துவிட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து துடிதுடிக்கிது மீனு

இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்.

இந்தப் பத்திகளைக் கடக்கும்போது தொனிக்கும் முழுமையும் மாறி மாறிப் பயணம் செய்கிற பரவசத்தின் வெவ்வேறு புள்ளிகளும் அத்தனை எளிதாகத் திரைப்பாடல் ஒன்றில் தோன்றிவிடாத அபூர்வங்கள். வாணி ஜெயராம் குரலுக்கு மாற்றுக் குரல் என்று எதுவுமே இல்லை என்பதை மெய்ப்பித்துப் பெருக்கெடுக்கும் பா நதிப் பிரவாகம்.

இந்தப் பாடல் என்னை வந்தடைந்த அதே காலத்தில் எனக்குக் கேட்க வாய்த்த வாணி பாடிய இன்னுமொரு பாடல் தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா” பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், அனேகமாக வாணியின் பாடல் வாழ்வில், அதிமுக்கியத் தொடக்கம் ஒன்றைத் தமிழ் நிலத்தில் ஏற்படுத்திய பாடல் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தப் பாடலை முதன்முதலில் ஒரு திருமண வீட்டின் மகா பிரம்மாண்டமான சவுண்ட் சிஸ்டத்தின் பொங்கி வழியும் பேரிசையாய்க் கேட்க வாய்த்தது. மனதைவிட்டு அகலவே இல்லை. பெரும்பாலான பாடல்களை முதன்முறை கேட்கையில் அதன் இசைகூடிய பல்லவித் தொடக்கத்தை எப்படியாவது நெட்டுரு செய்து மனதில் பதித்துக்கொள்ள முயலுவேன். சிறுவயது தொட்டு அப்படித்தான் என் ஆதிப் பிரியப் பாடல்களின் சேகரம் எனக்குள் நிரம்பி வழிகிறது. இந்த முறைமை அச்சம் கலந்தது. எங்கே பாடலை மீண்டும் கேட்பதற்குள் மறந்துவிடுவேனோ என்கிற அச்சம். மறுபடி கேட்பதற்கான யதார்த்த சாத்தியம் எத்தனை காலம் கழித்து நிகழும் என்பதனை அறியாத புதிர்மை கலந்த அச்சம் அது. வெகு சில பாடல்கள் மட்டுமே அந்த அச்சக்கோட்டினைத் தாண்டி முதன்முறை கேட்கையிலேயே மனதாழத்தில் தேங்கி நிற்கும். பெருமழையின் மறுதினம் போல் குளிர்விக்கும். இந்தப் பாடல் அப்படியானது. அடுத்தடுத்துக் கேட்பதற்கான வாய்ப்புகள் உடனுடனே கிடைத்ததும் இன்னுமொரு ரசம். இந்தப் பாடல் எனக்குள் மறுக்க முடியாத பாடலாயிற்று.

எம்.எஸ்.வி இசையமைப்பு முறையே அலாதியானது. அது ஒரு விதமான ஒழுங்கும் ஒழுங்கின்மையும் வெவ்வேறு விகிதாச்சாரத்தில் கலந்து தளும்புகிற பெருக்கெடுப்பு. ஒன்றை முன்வைத்து நகர்வது. ஒரு பாடலைப் போன்ற அதே முறைமைக்கு மீண்டும் அத்தனை எளிதில் திரும்பிவிடாத குன்றிடாத கற்பனா மேதமை அவருடைய வளம். சில பாடல்கள் மேலதிகத் தனித்தலோடு காலத்தின் மேனியில் ஒரு பாமாலையாய்த் தவழும். அப்படியான பாடல், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல். பொதுவாகவே எண்பதுகள் வரைக்கும் பெண் தனிப்பாடல்கள் ஏக்கப் பகிர்தலாகவோ விசுவாசத்தின் சாட்சியவாதமாகவோ அமைக்கப்பட்டவை. பேரதிகச் சூழல்களோ கதா நிர்பந்தங்களோ பாடல்களில் இல்லவே இல்லை எனலாம். மீண்டும் மீண்டும் நாயகனைப் போற்றுவதற்கோ நாயகியின் அந்தகாரத்தைப் பகிர்ந்தெடுப்பதாகவோ பாடல்கள் அமைக்கப்பட்டன. எப்போதாவது ஒன்றிரண்டு மீறல்கள் காணக் கிடைத்தாலும் பெரும்பாலும் இந்த வரைமுறைக் கோட்டின் உட்புறமே நிகழ்ந்தவை. ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலும் அப்படியானதொரு பாடல்தான் என்பதில் எள்நுனிச் சந்தேகமும் இல்லை. இந்தப் பாடலின் பரவசம் இதனைப் பாடிய தன்மையில் தொடங்குவது. சுசீலாவோ ஜானகியோ பாடி இருந்தால் இது மற்றுமொரு பாடலாகத் தண்ணீராழத்தில் கல்லொன்றென மூழ்கியிருக்கும். வெள்ளத் தனைய மலராய் இதனை உயர்த்தித் தந்த காரணங்கள் இரண்டு. ஒன்று பாடலினூடே மறைநிலவொன்றாய்க் கடைசி வரைக்கும் பயணித்த இந்தப் பாடலின் மைய இசை. இன்னொன்று வாணியின் குரல்.

ஒரு தொன்மத்தை அகழ்ந்து பிறந்தாற் போல் நகரத் தொடங்கும் இந்தப் பாடலின் தொடக்க இசையிலிருந்து பூர்த்திக் கணம் வரை குழப்பமற்ற ஆழ்தல் ஒன்றைச் சாத்தியப்படுத்தினார் எம்.எஸ்.வி. வாலியின் வரிகளிலும் எந்தச் சிடுக்குப் பிடியும் இல்லை. தெளிவான சொற்தோரணமாகவே பெருகித் தீரும் பாடலின் வரிகள். இதனை வாணி பாடிய வண்ணமிருக்கிறதே… அதுதான் பேசப்பட வேண்டிய விஷயம்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
என்னேரமும் உன்னாசை போல் பெண்பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

எளிதான சந்தம். எந்தத் திடுக்கிடலுக்கும் வாய்ப்பற்ற நேர்ச்சொற்கள். வாசித்தால் கவிதை, பாடினால் பாட்டு என்ற பதத்தில் எழுதப்பட்ட வரிகள். உள்ளே ஆழ்ந்தால் வேறொன்றாய்ப் பாதாளத்தில் தள்ளிப் பெருந்தூரத்துக்கப்பால் எழவைக்கும் மாயதானம் வாணியின் குரல் செய்தளித்த ஜாலம். பல்லவியிலேயே தொடங்கியிருப்பார் தன் சித்து வேலையை. மல்லிகை என்ற மலர்ச்சொல்லை இரண்டு முறைகள் பாடுவதாகப் பல்லவியின் கட்டமைப்பு வருடும். முதல்முறை ஒரு திறப்பு. அடுத்த முறை வேறொரு அழுத்தம். இந்தப் பாட்டின் உட்புற மல்லிகைகள் ஒவ்வொன்றையுமே வெவ்வேறு மலர்தலாக மாற்றித் தருவதன் மூலமாக அதுவரை தமிழ்ப் பாடல் நேயர் வந்தடையாத வேறொரு திட்பத்தை வந்தடையச் செய்தார் வாணி.

பல்லவியைக் கடப்பதற்குள் ரசிகமனத்தை முழுமையாகக் கட்டிப் போட்டிருப்பார்.

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர்பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

இந்தப் பாடல் சாதாரணம் அல்லவே அல்ல என்பதை மெய்ப்பிப்பது இதன் இடையிசைக் கோவைகள். மெல்லிசைச் சக்கரவர்த்தி விஸ்வநாதனின் மனத்தின் இருளும் ஒளியும் நூறு சதம் வெளிப்பட்ட வெகு சொற்பப் பாடல்களில் இதுவொன்று. இந்தப் பாடலின் தொடக்கத்தில் நமக்குள் நிரம்புகிற தொன்மச் சரடொன்றைத் தீராப் பூந்தோரணமாக்கிப் பாடலின் இறுதி வரைக்கும் பயணம் செய்யச் செய்தார் எம்.எஸ்.வி. இந்தப் பாடலைத் தாண்டி அந்த இசைக்கோவையை மாத்திரம் லயித்துக் கேட்டால் அதில் எந்த விசித்திரமும் இராது போலவே தோன்றும். ஆனால் ஆயிரம் முறை இதனைப் பாடலாய்க் கேட்கையில் மனதைக் கிளர்த்துவதில் பிறழாப் பேரின்பமெனத் திகழும். இசையோடு குரல் கூடுகையில் நிகழா நிகழ்வொன்றினை அர்த்தப்படுத்திவிடுகிறது பாடலின் தனித்துவம். வாணி குரலின் மகத்துவமும் அதுவே.

முதற்சரணம் முடிவடைந்து அடுத்ததை நோக்கிச் செல்லும்போது ஒலிக்கும் இணைப்பிசை, ஒரு சொல்கேளாப் பேரன்பை இசைத்தாற் போல் ஒலித்தது. குழலின் வேக நகர்தல் இந்தப் பாட்டின் பலம். மேற்கத்திய பேண்ட் இசையை அளவு மாறாமல் அலகிட்டிருந்தது இதன் கூடுதல் வசீகரம். மொத்தத்தில் இந்தப் பாடல் ஒரு பழக்கூடை, இல்லையில்லை, ஒரு பழக்காட்டுப் பெருமழை.

“நம் இல்லம் சொர்க்கம்தான், நம் உள்ளம் வெள்ளம்தான்”. இந்த வரிகளைத் தாண்டுகையில் பின்னால் ஒரு சிறு இசை கடக்கும். எப்படிச் சொன்னாலும் தீர்ந்து போகாத பேரழகுப் பெருவலம். கோடிமுறை கேட்ட பின்னரும் மீதமிருக்கும் யௌவனம். ஓர் ஒப்பீடாக ஜேசுதாஸை மலையாளிகள் கொண்டாடுவதற்கும் மற்றவர்கள் விரும்புவதற்கும் இடையிலான வித்தியாசமும் நுட்பமானது.

என்னைப் பொறுத்தமட்டில் ஜேசுதாஸ் மலையாளத்துக்கு அடுத்தபடியாக வெகு நுண்மையான விலக்கமான தனித்துவம் மிகுந்த பாடல்களை (எண்ணிக்கை அளவில் அவை மிகக்குறைவு என்றாலும்) ஹிந்தி மொழியில்தான் பாடி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் தமிழ், பின்பு கன்னடம், கொஞ்சம் தெலுங்கு எனப் பாடல் பட்டியல் அமையும். ஆனால் வாணி, தான் பாடிய அநேக மொழிகளில், தன் குரலில் ஒரு தாய்மொழித் தன்மையையும் சர்வதேச உணர்தலையும் ஒருங்கே கொண்டு பாடினார். மேலோட்டமாகப் பார்த்தால் அவரது குரல் ஒரே தன்மையில் எப்போதும் இருப்பது போன்ற பொதுத் தோற்றத்தை முன்னிறுத்தும். உற்றுப் பார்த்தால் அந்தக் குரலின் உப சரளிகள் யாவுமே பல்வேறு நுட்ப வித்தியாசங்களோடு ஒன்றுக்கொன்று பொருந்தியும் விலகியும் பயணம் செய்வதை உணர முடியும். இது மிகவும் அசாத்தியம் என்பது அவரது பல பாடல்களைக் கேட்கும் போது புரியவரும். பாடுவது என்பது வேலை அல்ல. ஒரே ஒரு அசலையும் அதன் பல்வேறு பிரதிகளையும் எப்போதும் தோற்றுவித்துக்கொண்டே இருப்பது . ஒரு பாடலின் பிரதிகள் நகல்கள் அல்ல. அவை அந்த ஒரே ஒரு அசலின் கூடுதல் பிரதிகள் என்பதுதான் அழகிய வித்தியாசம்.

நெடுங்காலம் சிதைவுறாத குரல்கள் இந்தியக் குரல்வானில் அபூர்வமானவை. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் மூன்று காலாதீத மாற்றங்களுக்கு உட்பட்டது. 1980களின் மத்தியில் அவர் குரல் வந்தடைந்த இடத்திலிருந்து கடைசி வரைக்கும் ஒரே தன்மையில் நீடித்திருந்தது. அவரைவிடவும் ஒரு படி மேலே ஒலிப்பது வாணியின் குரல். பாடப் புறப்பட்ட முதல் தினம் எங்ஙனம் எவ்வண்ணம் ஒலித்ததோ அதே போன்ற ஒரே தன்மையில் இன்றளவும் நிலைத்துவிட்டது. ஒரே தோன்றலின் ஒற்றை மகுடம் வாணி ஜெயராமின் பாடல் உலா.

வாணி ஜெயராமின் குரலில் மொழி பேதமில்லாமல் கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு மொழிகளில் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னக மொழிகளைப் பாடும்போது சற்றே ஒட்டாத குரலில் பாடுவதாகவும் அதுவே ஹிந்தி முதலான வடதிசைப் பாடல்களைக் கையாள்வதற்கென்று ஈரமும் உலர்தலும் கலந்தாற் போன்ற ஒரு குரலை வைத்திருப்பதாகவும் தமிழில் இந்த இரண்டு வகைகளைத் தாண்டிய இன்னுமொரு பரிபூரணக் குரல் அடைவை வாணி தொட்டடைந்தார் எனவும் நம்புகிறேன். இத்தனை ஆயிரம் பாடல்களை நெடுங்காலம் விடாமல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பதன் விளைதலாகத்தான் இந்த வார்த்தைகள். இவை என் அனுமானங்களாக மட்டுமே இருந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு. அதனால் என்ன?

ஒரு மாதிரி காதலைத் தாண்டிய பரவசத்தைக் கொண்டு வந்து காதலின் மீது அபிஷேகம் செய்தார் வாணி. ஆயிரம் டன் ஐஸ்க்ரீமைக் காட்டிலும் மென்-ஜிலீர் வகையறா சில்லிடல் சந்தோஷத்தைத் தன்னோடு யார் பாடினாலும் தன் குரலினூடே பிறப்பித்து அவர்களது குரலைத் தாண்டிய வேறோர் அதிசயாற்புதமாகத் தன் குரலை நிலைநிறுத்தக்கூடிய வல்லமை கொண்டவரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், எழுபதுகளின் இறுதி தொடங்கி தொண்ணூறாம் வருடம் வரைக்கும் வாணியோடு இணைந்து பல பாடல்களைப் பாடி இருக்கிறார். அவை பலவற்றில் வாணியின் குரல் ஓங்கி ஒலித்ததே ஒழிய பாலுவின் ஆதிக்கம் பெரும்பாலும் இல்லை. பேரரசன் ஒருவனின் நோய்மைக் காலம் என்று சொன்னால் தகாது. பேரரசன் ஒருவன் வசியப் பிடிக்குள் இருந்த காலகட்டம் என்றால் சரி வரலாம் அல்லது அவனது மது கிறக்கக் காலம். அப்படித்தான் கிறுகிறுத்தார் பாலு. அவர் மட்டுமல்ல, டி.எம்.எஸ், எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏன் பாலமுரளி கிருஷ்ணா வரை யாவரின் குரலையும் தன் குரல்கொண்டு பாடுகிற பாடலைத் தன்வயப்படுத்தினார் வாணி. இந்த வரிசையில் தப்பிப் பிழைத்த இரண்டொரு குரல்களில் ஜெயச்சந்திரனும் மலேசியா வாசுதேவனும் சொல்லத்தக்க இருவர். தனித்துத் தெரிவதல்ல விஷயம். ஆதிக்கமும் ஒடுக்கமுமான விகிதாட்படுதல்.

பாலுவுடன்தான் வாணி மிக அதிகப் பாடல்களைச் சேர்ந்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளிலும் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இந்த இணை சேர்ந்து பாடியிருப்பதும் அவற்றில் பெருமளவு 1976 முதல் 1995 வரையிலான இரு தசாப்தங்களைச் சார்ந்தவையாக அமைவதும் கூறத்தக்கவை. சேர்ந்து பாடுகிற டூயட் பாடல்களில் வாணி, பாலு இருவரும் எண்பது சதமானத்துக்கு மேல் வெற்றிப் பாடல்களைத் தந்தவர்கள் என்பது என் அனுமானம். இது அத்தனை எளிதாக இந்தியத் திரைநிலங்களில் நேர்ந்துவிடாத கணக்கு.

வெகு சில பாடல்களை எப்போது கேட்டாலும் அவற்றின் முதல் ஒலித்தல் காலத்தைத் தாண்டிப் பாய்கிற புரவிகள் என்பது புரியும். காலம் என்பது முதலில் எந்த ஒரு கலை வடிவத்தின் மீதும் எடையற்ற சாம்பல் திரை ஒன்றைப் படர்த்தி வைக்கிறது. முதலில் அந்தத் திரை நிழலைப் போல் இலகுவாய்த் தோன்றினாலும் அடுத்தடுத்த காலங்கள் அந்தத் திரையின் கனம் கூடிக்கொண்டே போகின்றது. ஒரு கட்டத்தில் பறவையின் சிறகுகளின் மீது சுமத்தப்பட்ட பெருங்கற்களைப் போலாகின்றது. பறத்தல் என்பதே சாகசமாக மாற்றம் கொள்கிறது. தப்பிப் பிழைப்பது சில பறவைகளே என்கிற யதார்த்தத்தை நிர்பந்திக்கிறது. வெகு சில பாடல்களே அத்தகைய கற்களைத் தங்கள் இறகுகளின்றும் உதிர்த்துவிட்டுப் பறக்கின்றன. பொன் வானம் அவற்றுக்கானதாக எப்போதும் இருக்கின்றது. அத்தகைய பாடல்கள் பலவற்றை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு வாணி ஜெயராம் சேர்ந்து பாடினார். கீழ்க்கண்டவை அவற்றில் சில.

  1. இலக்கணம் மாறுதோ (நிழல் நிஜமாகிறது)
  2. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா (நீயா)
  3. அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் (சட்டம்)
  4. ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது (இளமை ஊஞ்சலாடுகிறது)
  5. உன் உதடு என்னும் கதவு கொஞ்சம் திறக்க வேண்டுமே (சுகமான ராகங்கள்)
  6. அழகிய விழிகளில் அறுபது கலைகளும் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  7. சமுத்ர ராஜகுமாரா (எங்கள் வாத்தியார்)
  8. சங்கீத வானில் சந்தோஷம் பாடும் (சின்னப் பூவே மெல்லப் பேசு)
  9. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
  10. அவளே என் காதலி (பேரும் புகழும்)
  11. பாரதி கண்ணம்மா நீயே சின்னம்மா (நினைத்தாலே இனிக்கும்)
  12. கௌரி மனோகரியைக் கண்டேன் (மழலைப்பட்டாளம்)
  13. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை (என்னடி மீனாட்சி)
  14. மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே (வண்டிக்காரன் மகன்)
  15. மதனோற்சவம் ரதியோடுதான் சதுரங்கம் (சதுரங்கம்)
  16. நாலு பக்கம் வேடருண்டு (அண்ணன் ஒரு கோயில்)
  17. கொஞ்சும் மலர் மஞ்சம் (ஜனனி)
  18. தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி (மோகனப் புன்னகை) எம்.எஸ்.வி இசைத்த பாடல். முழுப்பாடல் இசையையும் மிகப்பலமான மேள தாளக் கோர்வையாக அமைத்திருப்பார் எம்.எஸ்.வி. சிவாஜிக்குப் பாலு பாடி நன்கு எடுபட்ட ஆரம்பகாலப் பாடல்களில் இதுவும் ஒன்று.
  19. ராகம் தாளம் பல்லவி (தீர்ப்புகள் திருத்தப்படும்)
  20. மழைக்கால மேகம் ஒன்று (வாழ்வே மாயம்)
  21. இதோ உன் காதலின் கண்மணி (சௌந்தரியமே வருக வருக)
  22. தேவி ஸ்ரீதேவி (வாழ்வே மாயம்)
  23. அதோ வாராண்டி வாராண்டி (பொல்லாதவன்)
  24. தேவாம்ருதம் ஜீவாம்ருதம் (மூன்று முகம்)
  25. தேவி வந்த நேரம் (வண்டிச்சக்கரம்)
  26. எது சுகம் சுகம் அது (வண்டிச்சோலை சின்ராசு)
  27. இல்லம் சங்கீதம் அதில் ராகம் சந்தோஷம் (அவன் அவள் அது)
  28. காலம் மாறலாம் நம் காதல் மாறுமா (வாழ்க்கை)
  29. கன்னி வண்ணம் ரோஜாப்பூ (ஜோதி)
  30. எஸ்.பி.பாலு இசையில் அவரோடு வாணி பாடிய “மேகம் முந்தானை” என்கிற பாடல். (துடிக்கும் கரங்கள்)
  31. ஷ்யாம் இசையில் “முத்து முத்துப் புன்னகையோ” பாடல் (சந்தோஷக் கனவுகள்)
  32. எனைத் தேடும் மேகம் (கண்ணோடு கண்)
  33. ஒரு பாடல் நான் கேட்டேன் (ஓசை)
  34. சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன். நாடகமே உலகம் படப்பாட்டு. நேரடியாகச் சரணத்தில்தான் இணைவார் வாணி. மீண்டும் அவர் வசம் பல்லவி வரும்போது அத்தனை அழகாக எடுத்தாள்வார்.
  35. ராக பந்தங்கள் படத்தில் குன்னக்குடி இசையில் கண்ணதாசன் எழுதிய “சரிகமபதநீ என்னும் சப்தஸ்வர ராகம்” என்று தொடங்கும் வித்தியாசப் பாடல். அழகான பாடலும்கூட.
  36. “லலிதா” படப்பாடலான “சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது” அழகான துள்ளலிசைப் பாடல். ஏறி இறங்கிப் பெருக்கித் தருகிற பரவசம் அலாதியானது.
  37. ஷ்யாம் இசையில் “வா இந்தப் பக்கம்” படத்தில் இடம்பெற்ற பாடல் “இவள் தேவதை இதழ் மாதுளை”. தமிழில் அபூர்வமாக நிகழ்ந்த ஃப்யூஷன் வகைத் திரைப்பாடல்களில் முக்கியமான பாடல். இதை எழுதியவர் வைரமுத்து. பாலுவும் வாணியும் முற்றிலும் இருவேறு மனோ நிலைகளைக் கைக்கொண்டு பாடிய புத்தம் தன்மையிலான பாடல். பாலு உருக்கி எடுத்த தங்கமாய் மனம் கெடுப்பார். வாணி அடித்துப் பெய்த மழை போல் ஆள்வார். இந்தப் பாடல் இன்றளவும் இணை சொல்ல முடியாத சாகசமாய் நிலைத்திருக்கிறது. முதல் ஒலித்தல் காலத்திலிருந்து நான்காவது தசாப்தத்திலும் வசீகரிக்கிறது.

மலேசியா வாசுதேவனுடன் வாணி பாடிய சாதனை படப்பாடல் எங்கே நான் காண்பேன். ஒரு காவிய சோகத்தைப் பிரதிபலித்துக் கண் கசங்கச் செய்த பாடல். பில்லா படத்தில் “இரவும் பகலும் எனக்கு இங்கே கொண்டாட்டம்” அல்லாட வைக்கும் அன்பாட்டப் பாடல். “கவிஞன் என்னைப் பாடலாம்” என்ற பாடல் தண்டனை படத்தில் மலேசியா வாசுதேவனுடன் வாணி பாடிய இன்னுமொரு மெச்சத்தக்க பாடல். கன்னிராசி படத்தில் “சுகராகமே என் சுகபோகம் நீயே” என்ற பாட்டு இனித்தது. நான் போட்ட சவால் படத்துக்காக இருவரும் பாடிய “சுகம் சுகமே ஏய் தொடத் தொடத்தானே” ஒரு உலர்போழ்து நதிக்காற்று. அந்த ஏழு நாட்களுக்காக இவர்கள் பாடிய “எண்ணி இருந்தது ஈடேறா” பாட்டு சொல்லில் தீராத சுகச்சாறு.

யார் கூடச் சேர்ந்து பாடினாலும் சின்னஞ்சிறிய உப நெளிவுகளின் மூலமாகத் தன் குரலை அந்தக் குரலுக்கு இணைநதியாக ஓடச்செய்கிற லாவகம் வாணியின் பெரும் பலம். இந்தப் பாடலும் அதற்கொரு உதாரணம். “நீ வெண் மல்லிகை” என்ற பாடலைச் சுரேந்தருடன் பாடினார். அட்டகாசமான டிஸ்கோ பாடல் இது. வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தில் இடம்பெறுவது.

ஜேசுதாஸ் – வாணி பாடியவற்றில் மறக்க முடியாத பாடல்கள் நீல மலர்கள் படத்தில் “இது இரவா பகலா நீ நிலவா தளிரா”ஏபிஸி நீ வாசி எல்லாம் என் கைராசி (ஒரு கைதியின் டைரி), அந்த மானைப் பாருங்கள் அழகு (அந்தமான் காதலி), செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா (ஒத்தையடி பாதையிலே), கோவர்த்தனம் இசையில் கங்கை நதியோரம் ராதை நடந்தாள் (வரப்பிரசாதம்), என் ஆசை உன்னோடுதான் படத்தில் தேவி கூந்தலோ பிருந்தாவனம், ராஜரிஷி படத்தில் “மான் கண்டேன் மான் கண்டேன்” பாடல், நிலவே மலரே படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “மாலை பொன்னான மாலை” பாடல். இதே பாடலை மலையாளப் பதிப்பிற்காக சித்ராவுடன் பாடினார் ஜேசுதாஸ். ஆனாலும் என்னவோ தமிழ் அளவுக்கு மலையாளம் இனிக்கவில்லை என்பது என் எண்ணம். தாயன்பனின் இசையில் உன்னிடத்தில் நான் படத்துக்காக இருவரும் பாடிய “நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்” பாடல் ஒரு சாகாவரம். மீனவ நண்பனுக்காக உருகித் தந்த பாடல் “தங்கத்தில் முகமெடுத்து” எனத் தொடங்குவது. இன்றெல்லாம் இனித்துக் கிடக்கும் இன்பகான அமுதம்.

ஜெயச்சந்திரனுடன் வாணி பாடிய பாடல்கள் பல. அவற்றில் என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே வரிசைப்படுத்த விழைகிறேன்.

கே.வி.மகாதேவன் இசையில் ஆஷா படத்தில் “மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்” எனும் பாடல், சாவித்ரி படத்தில் “மழைக்காலமும் பனிக்காலமும்” எனும் பாடல், சங்கர் கணேஷ் இசையில் மீனாட்சி குங்குமம் படத்தில் “ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ” என்ற பாடல். இந்தப் பாடலின் ஒரு பகுதியில் ஜெயச்சந்திரன் பாடுவது மெலடித் தெப்பம். இன்னொரு பக்கம் வாணி பாடும்போது அது துள்ளும் தெம்மாங்கு. கேட்பதற்குப் புதிய அனுபவத்தை விரித்துத் தந்தது இப்பாடல். இணைப்பிசைகூட ஒருபுறம் மெல்லிழையும் இன்னொரு பக்கம் மேள இசையுமாய்க் கலந்தொலிக்கும். இன்றைக்கும் கேட்டால் அத்தனை அயர்த்தும். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் “தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்” என்ற புலமைப்பித்தன் எழுதிய பாடல் இன்றும் நிலைத்தினிக்கும் ஜீராவூற்று.

ஒரு கைதியின் டைரி படத்தில் “இது ரோசாப்பூவு” பாடல் வாணி பாடிய ஜிகினா ஜிம்மிக்ஸ். உடன் பாடியவர் கங்கை அமரன். தங்க மகன் படத்தில் எஸ்.ஜானகியுடன் வாணி சேர்ந்து பாடிய “மச்சானைப் பாருடி” மறக்க முடியாத ஜாலப்பாடல். ஆனந்த் ஷங்கர் இசையமைத்த யாரோ எழுதிய கவிதை படத்தில் நான்கு பாடல்களைப் பாடினார் வாணி. நான் பாடும் ராகம்இதயம் முழுதும் ஆகிய இரண்டும் சோலோ மலர்கள். ஜேசுதாசுடன் சேர்ந்து பாடிய ஆஹா ஆயிரம்பருவம் கனிந்து வந்த பாவை ஆகிய இரண்டும் டூயட் பாடல்கள். இன்றெல்லாம் கேட்கலாம்.

சோலோ பாடல் என்றாலே கவிதை கேளுங்கள், மல்லிகை என் மன்னன் மயங்கும், மேகமே மேகமே ஆகிய பெருவிருப்பப் பாடல்கள் பலவற்றில் மனம் அமிழ்ந்து திரும்பும். வாணி பாடிய தனிப்பாடல்கள் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் தனித்துத் தோன்றுபவை. என்று கேட்டாலும் மனம் திருடுகிற பாடல்கள் அவை. வாணி பாடியவற்றுள் என்னால் மறக்க முடியாத சில சோலோ பாடல்கள் இங்கே.

  1. ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் (அடுக்குமல்லி)
  2. செல்லக் குழந்தைகளே (மை டியர் குட்டிச்சாத்தன்)
  3. காற்று நடந்தது மெல்ல மெல்ல (துணை)
  4. கட்டிக்கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்)
  5.  மலைராணி முந்தானை சரியச்சரிய (ஒரே வானம் ஒரே பூமி)
  6. “புனித அந்தோணியார்” படத்தில் ஒரு பாடல். “மண்ணுலகில் இன்று தேவன்” எனத் தொடங்கும் அற்புதமான பாடல் அது.
  7. “பெண்மணி அவள் கண்மணி” படத்தில் “மூங்கில் இலைக்காடுகளே”.
  8. முத்து முத்துத் தேரோட்டம்நான்தானே ஒரு புதுக்கவிதை ஆகிய இரண்டும் “ஆணிவேர்” படப்பாடல்கள்.

எனது பயணங்களில் நான் பற்பல முறைகள் ஒலிக்கச் செய்கிற சில பாடல்கள் உண்டு. எத்தனை முறை உடனுடன் கேட்டாலும் அலுக்காத பிரத்யேகப் பாடல்களில் வாணி பாடியவை அதிகம். அவற்றை மட்டும் தனியே சொல்வதற்கு விருப்பம்.

நானா பாடுவது நானா (நூல்வேலி), ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் (அபூர்வ ராகங்கள்), மேகமே மேகமே (பாலைவனச் சோலை), என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி), நாதமெனும் கோவிலிலே (மன்மத லீலை), நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா (இளமை ஊஞ்சலாடுகிறது), நானே நானா யாரோதானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்).

மந்திரக் குரல்வாணி. அவரது பாடல்கள் எப்போதும் தீராத பேராவல் ஒன்றாக மனத்துள் தகிப்பவை. ஓர் ஆயுட்காலத்துக்கும் போதுமான பாடலரசி வாணி ஜெயராம். வாழ்க அவரது பாடலுலா. வாணி பின்னணி பாடுவதை ஒரு செயல்பாடாக நிறுத்திவிடாமல் நளினமாக மாற்றியவர். உதடுகளிலிருந்து பாடாமல் உடலைத் தாண்டிய உள்ள ஆழமொன்றிலிருந்து தன் ஆன்மாவின் மாய இருளொன்றைத் துகளாக்கித் தூவினாற் போல் பாடல்முறையைக் கட்டமைத்துக்கொண்டவர் வாணி. அவரால் ஒரு பாடலின் உள்ளே பல்லாயிரம் முறைகள் உள்நுழையவும் வெளியேறவுமான மாய நடனம் ஒன்றைப் புரிய முடிந்தது. அவரது சகாக்கள் பலருக்கும் அப்படியான வித்தகம் கைவரவில்லை. அது அவரது தனித்துவங்களில் ஒன்று. வாணி திரைப்பாடலுக்கென்று தனிக்குரலோ கச்சேரிகளுக்கென்று கூடுதல் குழைதலோ கொள்ளத் தெரியாதவர். அவர் எப்போதுமே ஒரே சுயத்திலிருந்து பாடிய கலை ஞாயிறு. அவரை ஒப்பிடுவதற்குக்கூட அவரைத் தவிர வேறாரும் இல்லை. பாடலினூடாக நேயர் நெஞ்சங்களில் தவிர்க்க முடியாத நன்றிக்கடன் ஒன்றின் நிரந்தரக் கூச்சம் ஒன்றாகத் தன் குரலை ஊசி போலாக்கிச் செருகக்கூடிய மாயவாதி வாணி ஜெய்ராம். அவர் குரலைத் தொடர்பவர்களுக்கு அந்த மந்திரக் குரலுக்கு ஆட்படுவதைத் தவிர வேறு வழி இருப்பதே இல்லை. ‘ஒரே ஒரு வான் நீ’ என்று ஒருமுறை அவரது பாடலொன்றின் பரவசத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்த ஒரு தினத்தில் டைரியில் எழுதினேன். இந்தத் தொடர்பத்தியும் அந்த டைரியின் காகிதமாக மாறக் கடவதாக. ஒரே ஒரு வான் நீ! வாணி.

சின்ன வயதில் மாயப்புத்தகம் ஒன்றைப் பற்றி ஒரு கதையில் வரும். எப்போதோ வாசித்தது இன்னமும் பசுமையாக நினைவில் பதிந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை ஒவ்வொருவர் படிக்கும் போதும் ஒவ்வொரு கதை தோன்றும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு கதை மாறும். அடுத்தவர்க்கு இரவலளிக்கையில் வேறு கதைகள் வரும். ஒருமுறை வாசித்த கதையை இன்னொரு முறை வாசிக்க முடியாது. அந்தப் புத்தகத்தை நெடுநாள் தன் ரகசிய உடைமையாக வைத்திருக்கும் ஜோனி எனும் சிறுவன் ஒரு நாள் அதில் வாசித்த கதை ஒன்றில் மனதைப் பறிகொடுத்துவிடுவான். அதன்பின் அவன் மனம் அந்தப் புத்தகத்தை நேசிப்பதிலிருந்து வழுவி அந்தக் கதை மீதான நேசத்தை வளர்க்கத் தொடங்கும். அதன் பின்னர் அவனை வேறு எந்தக் கதையுமே வசீகரிக்காது. அவன் ஒரு கட்டத்தில் அந்தக் கதையை மீண்டும் வாசிக்க ஏங்கி ஏங்கி நோய்மையிலாழ்வான். அந்தப் புத்தகத்தை மூடி மூடித் திறந்து ஏமாற்றத்தின் சிகரத்தில் நிற்பான். அவனுக்கு வாழ்வு வெறுப்பாகி அந்த ஊரருகமை வனமொன்றிற்குச் சென்று அந்தப் புத்தகத்தைத் தூர எறிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போவான். தன் ஞாபகத்தில் இருந்து தனக்கு விருப்பமான அந்தக் கதையைத் தானொரு முறை எழுதிக்கொள்ளத் தொடங்குவதோடு அந்தக் கதை முடியும். அதன் பெயர் ஒரே கதை. இன்றைக்கு வாணி ஜெயராமின் பாடல்களைப் பற்றிய எனதிந்தக் கட்டுரை அப்படியான சிறுவன் தனது வெர்ஷனாக எழுதிக்கொள்ளும் மனவிருப்பக் கதையின் பிரதி போலத்தான். வாணி நிறைகுரல் நாயகி. அவரது பாடல் உலகை இன்னும் அருகில் சென்று முழுமையாகத் தரிசித்தெழுதுகையில் அது ஒரு கட்டுரையோடு நின்றுவிடாமல் மேலும் பலவாக வளரும். வேறு சந்தர்ப்பங்களில் அவற்றை எழுதுவேன்.

இந்தத் தொடர்பத்தி இசையின் முகங்கள் இத்துடன் நிறைகிறது. இதனைத் தமிழினி இதழில் வெளிக்கொணர்ந்த தமிழினி இதழாசிரியர் கோகுல் பிரசாத்துக்கும் இதனைத் தொடர்ந்து வாசித்து வருகிற அன்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் ஈரம் குறையா பிரியங்களும் என்றென்றும் அன்பும்.

அன்போடு,
ஆத்மார்த்தி.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்
  3. ஷ்யாம்
  4. மலேசியா வாசுதேவன்
  5. ஹரிஹரன்
  6. பி.ஜெயச்சந்திரன்
  7. ஹரீஷ் ராகவேந்திரா
  8. இசையில் இருவர்
  9. எண்பதுகளில் சங்கர் கணேஷ்
  10. ஷங்கர் மகாதேவன்