8ஆம் நூற்றாண்டில் அரபியில் தொகுக்கப்பட்ட ‘அல்ப்ஃ லைலா’ என்ற பெருங்கதைத் தொகுப்பு பெர்சிய, இந்திய மூலங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரத்தொரு அராபிய இரவுக் கதைகள் (அல்ப்ஃ லைலா வ லைலா / Alf Leiyla Wa-Layla) என்ற பாரசீகத்துக் கதைத் தொகுதியை கால்லன்ட் (Antoine Galland 1704–1717) பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வழி ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினார். கிழக்கத்திய (ஓரியண்டல்) பண்பாட்டுக்களம் அப்போதிலிருந்து மேற்கத்திய (ஆக்சிடென்டல்) இலக்கியக் களத்தில் விளக்கம் கொண்டது. பென்ப்ஃபே (Theodor Benfey) தமது பஞ்சதந்திரக் கதை (1859) ஜெர்மன் மொழிபெயர்ப்பு முன்னுரையில் மேற்குக் கதையுலகுக்கு கிழக்கு அளித்த கொடையை நிறுவினார். பின்பு இந்தியக் கதை மூலங்கள் எகிப்திய மூலங்களுக்கும் பாரசீக அராபிய மூலங்களுக்கும் தந்துள்ள தாக்கங்கள் தெரியவரலாயிற்று. சர் ரிச்சர்ட் பர்ட்டன் விக்ரமாதித்தன் வேதாளக் (Vikram and the Vampire) கதையை இந்தியாவிலிருந்து முதலில் எடுத்து (1870) மேற்குலகுக்குத் தந்தார். (அவர் மனைவி இஸபெல் பர்டன் பின்பு மறுபதிப்பு 1893-ல் செய்த அந்த நூல் இந்தியப் பழங்கதைகளில் அதன் முக்கியத்துவத்தையும் மேற்கில் அதன் பாதிப்பையும் சுட்டிக் காட்டுகிறது. 1885-ல் தான் ரிச்சர்ட் பர்டனின் அரபியக் கதைத் தழுவல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது) Towney-யின் கதாசரித் சாகர மொழிபெயர்ப்பு (முதல் தொகுதி 1880, இரண்டாம் தொகுதி 1884) வெளிவந்தது.
இந்தியச் செவ்விலக்கியங்கள், குறிப்பாக வடமொழி இலக்கியத்தின் காவியங்களும் நாடகங்களும் வசன இலக்கியங்களும், நான்கு பெரும் பழங்கதைக் களஞ்சியங்களில் இருந்து தம் கதைக் கருக்களை எடுத்தாண்டுள்ளன. ராமாயணம் (கி.மு./பி.சி.இ/பொ.யு.மு.5-1), மகாபாரதம் (பொ.யு.மு.4-3), பிருகத்கதை, புத்தர் ஜாதகக் கதைகள் (பொ.யு.மு.4), ஆகியவையே இவ்வகையில் மூலங்களாக அமைந்தன. அரிதாகவே வரலாற்றுச் சம்பவங்களும் நாட்டுப்புறக் கதைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. இவை போன்றே பஞ்சதந்திரக் கதைகள் (கி.மு.300), வேதாள பஞ்சவிம்சதி போன்றவையும் பழங்கதைகளின் களஞ்சியமாக இருந்தவை.
ஆதிகவி வால்மீகி, வியாசர் ஆகிய இருவருக்கும் இணையாக குணாட்டியரும் புகழப்படுகிறார். பிருகு கோத்திர பிரமண அக்னிசர்மன் வால்மீகி ஒரு வழிபறிக் கொள்ளையனாக இருந்து கவியானவன். கிருஷ்ண துவைபாயன வியாசன் பராசர ரிஷிக்கும் மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். குணாட்டியர் நாக பிராமணராக (நாகருக்கும் பிராமணருக்கும் பிறந்தவராக) இருக்கலாம் என்கிறார்கள். க்ஷேமேந்திரர் காஷ்மீர பிராமணர். சோமதேவர் காஷ்மீர சைவத்து பிராமணர்.
ஆறாம் நூற்றாண்டில் பிரதிஸ்தானத்தை ஆண்ட சாதவாகன அரசர் காலத்தில் குணாட்யர் (கி.மு. 1 -கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்) எழுதிய பிருகத்கதை என்ற பைசாசமொழி நூல் பின்பு கிடைக்காமல் போனது.
ஆரம்ப புத்த மதக் குழுக்களின் மொழிகளாக நான்கு வகை மொழிகள் விளங்கியதாக திபெத்திய பௌத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மகாசாங்கியர் பிராகிருதத்தையும் சர்வாஸ்திவாதிகள் சமஸ்கிருதத்தையும் ஸ்தாவிரவாதிகள் பைசாசியையும் சம்மித்யர் அபபிராம்ச மொழியையும் பயனபடுத்தியுள்ளார்கள். மத்திய இந்திய மொழியாக இருந்தது பைசாசி மொழி. கி.மு.10 – 3 க்கு இடைப்பட்ட காலத்தில் அது வழக்கில் இருந்திருக்கலாம். (கி.மு. 6/5ல் குணாட்டியர் அம்மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம்). பிராகிருதத்தின் கொச்சையல்ல பைசாசி. பேச்சுமொழியும் அல்ல. இலக்கிய வழக்குமொழியே. தேரவாத பாலி மொழியின் பழைய பெயர் என்பவரும் உண்டு. விந்திய மலையின் முண்டா மொழியுடன் தொடர்புடைய பாலியுடன் அதற்கு நெருக்கம் இருந்திருக்கலாம். தண்டி தன் காவிய தர்ஸனத்தில் அதை பூதபாஷை என்கிறார். இறந்த பாஷை என்ற அர்த்தத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம்.
பிருகத்கதை வசனத்தில் எழுதப்பட்டது. பிருகத்கதையை ஒட்டிய முன்னோடிப் பிரதிகள் சில முக்கியமானவை. கி.பி. 3க்கு முன் பாஸன் உதயணன் கதையை ஸ்வப்ன வாசவத்தம், யௌகந்தராயம் போன்றவற்றில் எடுத்தாண்டான். ஹர்ஷனின் ரத்னாவளியும் பெருங்கதைத் தொடர்புடையது. பிருகத்கதையைக் குறிப்பிடும் சுபந்து (கி.பி. 600-700) வின் வாசவதத்தா, 7ஆம் நூற்றாண்டு ஹர்ஷ சரிதத்தில் பிருகத்கதையைக் குறிப்பிட்டு எழுதிய பாணபட்டனின் காதம்பரி, 7-8ஆம் நூற்றாண்டில் தம் காவ்ய தர்சனத்தில் பிருகத்கதையைக் குறிப்பிட்ட பல்லவ நாட்டு தண்டியுடையதாகக் கருதப்படும் வசன காவியங்கள் தசகுமார சரிதம், அவந்தி சுந்தரிகதை ஆகியவையும் பெருங்கதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவைதாம். 6ஆம் நூற்றாண்டில் கன்னடத்தைச் சேர்ந்த கங்க மன்னன் துர்விநீதன் சமஸ்கிருதத்தில் பிருகத்கதையை படைத்தாகவும் தகவல் மட்டும் உள்ளது. எனவே மறைந்து போன பிருகத்கதையின் பல்வேறு பிராந்தியப் பிரதிகள் 11ஆம் நூற்றாண்டு வரைக்குமே பரவலாகக் கிடைத்துள்ளன எனத் தெரிகிறது. 6ஆம் நூற்றாண்டு பிருகத் கதா ஸ்லோக சங்கிரகா என்ற நேபாள புதஸ்வாமி பிரதியும் கொஞ்சமான சுலோகப் பகுதிகள் தவிர மறைந்து போனது.
பிருகத்கதையின் வழி நூல்களாக சமஸ்கிருதத்தில் க்ஷேமேந்திரன் (கி.பி.1025-75) எழுதிய பிருகத் கதா மஞ்சரி, சோமதேவன் (1063-81) எழுதிய கதாசரித் சாகரம் ஆகிய இரண்டும் இன்று கிடைக்கின்றன. தமிழில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டைச் சேர்ந்த கொங்குவேள் எழுதிய பெருங்கதை காப்பியமும் (முன்பின் சில பகுதிகள் போக), பிற இந்திய மொழிகளில் சிலவும் இருக்கின்றன; கொங்குவேள் மாக்கதை, பிருகத்கதையின் பெரும் கதைப்பகுதியில் ஒன்றான உதயணன் கதையை மட்டும் சொல்கிறது. பாஸன் எழுதியதாகக் கருதப்படும் ஸ்வப்ன வாசவதத்தம், யௌகந்தராயணம் என்ற இரு நாடகங்களும், இந்த உதயணன் கதையின் சில சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டவை. உதயணன் கதை மேலும் பலவாறு இந்திய இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. கதைக் கடலில் மட்டுமே உதயணன் மகனாகிய நரவாகனதத்தன் காவியத் தலைவனாக விளங்குகிறான். இலியட், ஒடிஸி இரண்டையும் சேர்த்தாலும் அவற்றைவிட இருமடங்கு நீளம் கொண்டது கதைக்கடல். மகாபாரதம், அரபிக்கதைகள், கதைக்கடல், ஜதகக்கதைகள் ஆகிய நூல்கள் தான் உலகின் பெரும் கதைத் தொகுதிகள் என வேண்டும்.
உலகின் மிகப் பழைய பழங்கதைகளின் தொகுதியான பிருகத் கதையில் இருந்து 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது தான் கதாசரித் சாகரம். அது 124 தரங்கங்கள் (அலைகள்), 18 இலம்பகங்கள் (அலையேற்ற இறக்கங்கள்), 22000 சுலோகங்களைக் கொண்டது. சில வசனப் பகுதிகளும் உள்ளன. ஆங்கில ஐயாம்பிக் பென்டா மீட்டர் அளவுப்படி 66000 அடிகளைக் கொண்டது கதைக்கடல். உதயணன் மகன் நரவாணதத்தனைக் கதைத்தலைவனாகக் கொண்டு, அவனைச் சுற்றிக் கதைகளைக் கோக்கப்பட்டுள்ளன. பஞ்சதந்திரக் கதைகளும் வேதாள பஞ்சவிம்சதி கதைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. பெரும்பாலான புத்த ஜாதக் கதைகளின் குறிப்புகளும் உள்ளன.
1824-ல் முதல் 5 இலம்பகங்களின் சுருக்கத்தை H.H.Wilson ஆங்கிலத்தில் (ஓரியண்டல் குவாட்டர்லி மேகசின்) தந்தார். பேராசிரியர் Brockhaus 1839-ல் முதல் 5 இலம்பகங்களையும் 1862-ல் மீதி 3 இலம்பகங்களையும் கொண்ட நூலை ஜெர்மனியில் பதிப்பித்தார். கிடைத்த பிரதியைக் கொண்டு இப்படி இலம்பகங்களையும் தரங்கங்களையும் பகுத்தவரும் அவர்தான். இதையும் சில மூலச் சுவடிகளையும் அடிப்படையாகக் கொண்டு இரு தொகுதிகளாக அதை ஆங்கிலத்தில் (சோமதேவரின் கதாசரித்சாகரம் : Ocean of the Streams of Stories) மொழிபெயர்த்தவர் C.A.Tawney (1837-19204). 1889-ல் துர்காபிரசாத்தின் திருத்திய பம்பாய் சமஸ்கிருத மூலப்பதிப்பு வெளிவந்தது. இந்த இரு மூல நூல்களையும் ஒப்பிட்டு விளக்கமான விமர்சனத்தைத் தந்தவர் பென்ப்ஃபே. டேளனியின் மூலத்தை புதுக்கியும் விரித்தும் விரிவான குறிப்புகளோடு பத்து தொகுதிகளாக The Ocean of Stories (கதைக்கடல்) என N.M.Penzer 1924ல் தந்தார்.
டௌனியின் மொழிபெயர்ப்புப் பதிப்பைப் பிறகு பென்ஸர் 1924-ல் விளக்கமுறைப் பதிப்பாக 10 தொகுதிகளில் கொண்டு வந்தார். (The Ocean of Story, being C.H.Tawney’s Translation of Somadeva’s Katha Sarit Sagara or Ocean of Streams of Story, Now edited with Introduction, Fresh explanatory Notes and Terminal Essay by N.M.Penzer, in Ten Volumes, London: Privately Printed For Subscirbers only, by Chas.J.Sawyer Litd, Grafton House, W.I. MCMXXIV, 1924)
கஷ்மீர் மன்னன் ஆனந்தனின் அவைக்களப் புலவராக விளங்கியவர் சோமா / சோமதேவா என்கிற சோமதேவ பட்டர். ராமா என்ற பிராமணருக்குப் பிறந்த காஷ்மீர சைவ சமயத்தவர் அவர். ஆனந்தனின் பட்டத்து ராணியான சூர்யவதியின் பொழுது போக்குக்காக இயற்றப்பட்டது கதாசரித் சாகரம். இந்தத் தகவலும் பின் வந்த பதிப்பொன்றில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட ஆசிரியரின் தனி சுலோகம் ஒன்றால் தெரிய வந்தது. இதற்கு மேல் எந்த விவரமும் சோமதேவனரைப் பற்றிக் கிடைக்கவில்லை. கல்ஹனரின் ராஜதரங்கிணி என்ற கஷ்மீர் அரசவம்சம் பற்றிய வரலாற்று நூல் மூலம் ஆனந்தனைப் பற்றி அறிய முடிகிறது. ஆனந்தனுக்கு ஹலஸன், ஹர்ஷன் என்ற இருவேறு குணங்களைக் கொண்ட புதல்வர்கள் இருந்தனர். இழிவும் உயர்வும் சாத்விகமும் கொடூரமும் என்ற வேறுவேறு எல்லைகளில் வளர்ச்சிபெற்றவர்கள். ஆனந்தன் 1063-ல் ஆட்சியை விட்டு விலகி ஹலஸனுக்கு முடிசூட்டினான். பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்தான். மீண்டும் 1077-ல் முடி துறந்தான். மகன் பின்பு தந்தையின் செல்வங்களையெல்லாம் பறிமுதல் செய்தான். 1081-ல் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டான். சூர்யவதி சதி பாய்ந்தாள். எனவே 1070 வாக்கில் கதாசரித்சாகரம் எழுதப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கதைக்குள் கதைகள், உதயணன் கதை, நரவாகனதத்தன் கதை என்ற வகையில் அமைந்த கதைக்கடல், அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்தது. 350 கதைகள் கொண்டது.
வசுகுப்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட காஷ்மீர சைவம் கல்லாட பட்டரால் பரப்பப்பட்டு பாஸ்கரராலும் அபிநவகுப்தராலும் விரிவடைந்தது. காஷ்மீர சைவம் தோன்றி 250 வருடங்களுக்குப் பிறகே சோமதேவர் அதில் வருகிறார்.
குணாட்டியர் பைசாசி மொழியில் எழுதிய பிருகத்கதை, சாதவாகன மன்னனின் புறக்கணிப்பால் 600,000 சுலோகங்கள் எரிக்கப்பட்டு பின்பு 100,000 கண்ணிகள் மட்டும் காப்பாற்றப்பட்ட நிலையில் இலம்பகங்கள் சேர்க்கப்பட்ட வடிவில் இருந்து மறைந்ததாகக் கருதப்படுகிறது. அதை மூன்றில் ஒருபங்காகச் சுருக்கி ஷேமேந்திரன் என்ற காஷ்மீரப் பிராமணர், பிருகத் கதா மஞ்சரி என்று எழுதிய நூல் ஒன்று எழுந்துள்ளது. அவ்வளவாக ரசமற்ற நூலாக அது இருப்பதால் இதற்குப் பின் இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குப்பின் எழுந்த கதாசரித்சாகரம் புகழ் பெற்றதாக விளங்குகிறது. ஆனால் இரண்டும் வேறுவேறு பிரதேச மூலப் பிரதிகளை அடியொட்டியதாகத் தெரிகிறது. ஒன்றையொன்று அறியாமலும் எழுதப்பட்டுள்ளன. சோமதேவா தன் நூலை அக்காலத்தின் வழங்கிய ரிக்வேதம், பஞ்சதந்திரம், மகாபாரதம், வேதாள பஞ்சவிம்சதி போன்றவற்றையும் கொண்டே எழுதியிருக்கலாம் என்று 1871-ல் Buhler ஆராய்ந்து தெரிவித்தார்.
கதைக்கடல் இந்தியாவிலிருந்து பெர்ஸியன் வழியாக அரபிக்குச் சென்று கான்ஸ்டான்டிநோபிள் வழியாக வெனிஸ் சென்று பொக்காசியோ, சாஸர், லா ஃபோன்தேன் போன்ற கதைத் தொகுப்பாளர்களைப் பாதித்திருப்பது தெரிகிறது. பென்ப்ஃபே இதை அறிவிக்கிறார்.
சமஸ்கிருத திறனாய்வுக் கோட்பாடுகள் இலக்கியவைகளாக இதிகாசம், புராணம், காவ்யம் (ஸ்ரவ்ய காவியம் திருஷ்யகாவியம், மகாகாவியம், கண்ட காவியம், சம்பு காவியம், நாடக காவியம், லகு காவியம்), ஆக்யானம், உபாக்கியானம், கதாநகம், கதா/கதை என்றெல்லாம் பிரித்துக் கூறுகின்றன.
கதா வகைகளாக பலவற்றை சமஸ்கிருத அலங்கார நூல்கள் காட்டுகின்றன. தர்ம, அர்த்த, காம, மிஸ்ர கதைகள் என்றும் திவ்ய, மனுஷ்ய, மிஸ்ர கதைகள் என்றும் சகல, கண்ட, பாரி, பரிகாச, உல்லாச, சங்கீர்ண, சம்கதாக்கள் (ஆனந்தவர்த்தனர்) என்றும் பிரிக்கப்படுகின்றன. கிருஷ்ணமாச்சாரியார் கதாநகாவின் பிரிவுகளாக புரதான, தேவ, நீதி, லோக, திருஷ்டாந்த, கல்பித கதைகள் என்கிறார். ஹேமச்சந்திரர் ஆக்யானம், நிதர்சனம், பிரவகலிகா, மத்தல்லிகா, மணிகுல்பா, பாரிகதா, கண்ட கதா, சகல கதா, உபகதா, பிருகத்கதா எனப் பாகுபாடு செய்துள்ளார். இவருடைய கதை வகைகளில் பிருகத்கதை என்ற பிரிவு சுட்டிக் காட்டப்படுவதைக் காணலாம்.
கதாசரித் சாகரம் பொருளடக்கம் :
- கதாபீடம்: வரருசியின் விருத்தாந்தம்
- கதாமுகம்: குணாட்யனுடைய விருத்தாந்தம்
- லாவாணகம்: உதயனன் வரலாறு
- நரவாகனதத்தன் ஜனனம்: நரவாகனதத்தனுடைய பிறப்பு
- சதுர்தாரிகா லம்பகம்: நரவாகனதத்தனுடைய இளமைப் பருவம். மானிடன் வித்யாதரனாகும் முறையைக் குறித்த சக்திவேகன் கதை.
- மதன மஞ்சுகா லம்பகம்: களிங்க சேனா வத்ஸராஜனை மணம்புரிய வருவதும், பிறகு அவள் மதன வேகனென்ற வித்யாதரனை மணந்து மதனமஞ்சுகாவை ஈன்றான். பிறகு நரவாகனதத்தன் மணம் புரிந்தான்.
- ரத்னப்பிரபா லம்பகம்: நரவாகன தத்தன் ரத்னப்பிரபா வென்ற வித்யாதரியை மணம் புரிதல். கர்பூரிகாவையும் மணந்து கொள்வது.
- சூர்யப்பிரபன் லம்பகம்: வஜ்ரப்பிரபனென்ற வித்யாதரன், மானிடர் எப்படி வித்யாதரனாவதென்று சூர்யப்பிரபனுடைய கதையைச் சொல்லுதல்.
- அலங்காரவதி லம்பகம்: அலங்காரவதியை மணம்புரிதல். பிறகு நாராயணனை தரிசித்து தேவரூபா, தேவரதி, தேவமாலா, தேவப்பிரியா யென்ற நான்கு அப்சரசுகளை அடைதல்.
- சக்தியசோ லம்பகம்: சக்தியஸோவை மணம்புரிதல்
- வேலா லம்பகம்: வைசாகபுரம் சென்று ஜயேந்திர சேனை
- சசாங்கவதி லம்பகம்: நரவாகனதத்தன் லலிதலோசனா வென்ற தரப் பெண்ணால் எடுத்துச் செல்லப்பட்டு பிறகு அவளை மணந்து கொள்கிறான். அவளைப் பிரிந்திருந்த சமயம் பிசங்கஜடனென்ற முனிவர் தன் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று மிருகாங்கதத்தன் கதையைச் சொல்லுகிறார்.
- மதிராவதி லம்பகம்: பிராம்மண குமாரனொருவன் மதிராவதியைத் மணம் புரிந்த கதையை நரவாகனதத்தனுக்குச் சொல்லுதல்.
- பஞ்ச லம்பகம்: மதன மஞ்சகா காணாமற் போவது. இயென்ற வித்யாதரரைக் கன்னிகை மதனமஞ்சுகா வேஷம் தரித்து தத்தனை மணம் புரிதல், பிறகு காந்தர்வதத்தா, பகீரதயசோ என்பவர்களை மணந்து மதன மஞ்சுகாவை மானசவேகன் இதில் சந்திப்பது, பிறகு பிரபாவதியால் சித்தக்ஷேத்ரம் எடுத்து படுவது. பிறகு அஜூனாவதியை மணந்து கெளசாம்பி திரும்புதல், வித்யாதரர்களெல்லாம் கெளசாம்பி வந்து சேருதல். நரவாகன தத்தன் சித்திகளை அடைவது, கெளரீமுண்டன் மானசவேகனுடன் சண்டை. நரவாகனதத்தன் அக்நிபர்வதத்தில் வீழ்த்தப்பட்டு அமிருதப்பிரபனால் காப்பாற்றப்பட்டு கைலாசகிரி சென்று பரமசிவனிடமிருந்து பத்மவிமானம் அடைதல். பிறகு சுலோசனாவை மணம் புரிதல், சிநேகிதர்கள் திரும்புதல். சண்டைக்குச் செல்லுதல். கெளரீமுண்டனைக் கொன்று ஆத்மனிகா, காலிகா, வித்யுத்புஞ்சா, மதங்கினி, பத்மப்பிரபா ஐவரையும் மணம் புரிதல்.
- மகா அபிஷேக லம்பகம்: பிறகு பல சித்திகளை அடைந்து கைலாசகிரியில் உத்திரபாகம் செல்லுதல். மார்க்கத்தில் வாயுபதன் வீட்டில் தங்குதல். அங்கே வாயு வேகயசஸ் இன்னும் நான்கு சகிகளையும் மணம் புரிதல். மந்திரதேவனை ஜெயித்து மந்திரதேவி, கனகவதி, கலாவதி, தநூத்பவ, அம்பரப்பிபா ஐவரையும் மணம் புரிதல். மீண்டும் கைலாசம் செல்லுதல். பிறகு மதன மஞ்சுகாவுடன் மகா அபிஷேகம் செய்து கொள்ளுதல். பெற்றோர்களும் வந்து சேருகின்றனர். அபிஷேகம் முடிந்ததும் பெற்றோர் கெளசாம்பீ திரும்புதல்.
- சுரதமஞ்சரி லம்பகம்: சண்ட மகா சேனனும் மனைவியும் மரித்ததைக் கேட்டு வத்சராஜன் பாலகனை இரு தேசங்களையும் அரசாட்சி செய்து வர நியமித்து விட்டு மனைவிகளுடன் காடு சென்று மந்திரிகளுடன் பிராணத் தியாகம் செய்ததை நரவாகனதத்தன் அறிந்து, கஸ்யப முனிவர் ஆஸ்ரமத்தில் மாமன் கோபாலகன் இருப்பதை அறிந்து அங்கே செல்லுதல். பாலகன் மனைவி சுரதமஞ்சரியின் வரலாறு. இங்கே ரிஷிகளிடையே தவம் செய்து கொண்டும், ராஜ்யத்தை கவனித்தும் இருத்தல்.
- பத்மாவதி லம்பகம்: பத்மாவதியின் வரலாறு
- விஷமசீலன் லம்பகம்: கன்வமகரிஷியால் சொல்லப்பட்ட விக்ரமாதித்யன் கதை.
விக்கிரமாதித்தன் கதை மூலங்கள் மிகப் பழைமை வாய்ந்தவையாய் இருக்க வேண்டும். ஆனால் முதன் முதலில் கதைக்கடலில்தான் வேதாள விக்கிரமாதித்தன் கதை நமக்குக் கிடைக்கிறது. பின்பு ஜாம்பாலதத்தா (11-14ஆம் நூற்றாண்டு) எழுதிய வேதாள பஞ்சவிம்சதியும் இதே காலகட்டத்து சிவதாசனின் விக்கிரமாதித்தன் கதையும் எழுகின்றன. இறந்தவர் உடலில் புகுந்து அதை சலனிக்க வைக்கும் வேதாளம் என்ற ரத்தக் காட்டேரியின் மூலம் தென் ரஷ்யாவாயிருக்கலாம். ஐரோப்பாவில் எழுந்த டிராகுலா, வெம்பயர், இக்காலக் கதைகளில் வரும் ஜோம்பிகள், நவீனமான வாக்கின் டெட் சினிமாக்களுக்கெல்லாம் இந்த வேதாளம் என்ற கருத்துரு மூலமாகியிருக்கிறது. கதைக்கடலில் மனித விரோதிகளாக வேதாளர், ராக்ஷசர், பிசாசர், பூதம், தஸ்யூக்கள் (தாசர்/பழங்குடி), கும்பாண்டர், குஸ்மாண்டர் ஆகியோர் வருகின்றனர். (பின் இருவரும் கதைக்கடலில் மட்டும் குறிப்பிடப்படுபவர்கள்) தனித்த மீமனித இனங்களாக நாகர், சித்தர், வித்யாதரர்கள் காட்டப்படுகிறார்கள். தேவர்களிடம் பணியாற்றுபவர்களான கந்தர்வர், அப்ஸரஸ்கள், கணங்கள், சிண்ணரர் கிஹ்யகர், யட்சர் ஆகியோர் வருகிறார்கள். (இவர்களில் கிம்புருஷர் கதைக்கடல் சுட்டப்படாத ஒரு வகை) மண்ணுலகோடு தொடர்பற்ற தேவர்களின் விரோதிகளான அசுரர், தைத்தியர், தானவர் போன்றோர் சித்தரிக்கப்படுகிறார்கள்.
பென்குவின் வெளியிட்ட Arshia Sattar (1997) கதாசரித்சாகர ஆங்கில மொழிபெயர்ப்பும் தேர்ந்தெடுத்த கதைகளை உடையதுதான். பிருகத் கதா மஞ்சரி சுருக்கமானது; கதாசரித் சாகரம் விரிவானது; ஆங்கிலத்தில் இதன் விரிவான மொழிபெயர்ப்பு கிடைப்பது போலவே தமிழில் சில மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான வே. ராகவன், யுனஸ்கோவின் தென்மொழி புத்தக நிறுவனம் ஆதரவில், கதாசரித் சாகரத்தின் சில முக்கியமான கதைகளை மட்டும் (1959) மொழிபெயர்த்துத் தந்தார். மலிவுப் பதிப்பாக பிரேமா பிரசுரம், தன் வழக்கமான எளிமைப்படுத்தி சுவையூட்டித் தரும் பாணியில், சிரஞ்சீவி என்ற மர்மக்கதை எழுத்தாளரால் சுருக்கமாகவும் ஆனால் பெரும்பாலான கதைப் பகுதிகளும் அடங்கிய தொகுதியாக கதைக்கடல் (1958) என்ற நூலை வெளியிட்டது. இதுவே தமிழில் கதாசரித் சாகரத்தின் முழுமையை அறிந்து கொள்ளக் கிடைக்கும் ஒரே நூலாக விளங்கியது.
(வீரபாண்டியன் மனைவி என்ற சரித்திர நாவலாசிரியராக, காதல் என்ற பத்திரிகை நடத்தியவராக இன்று அறியப்படும் அரு. ராமநாதன், தமிழில் முதன்முதலில் தம் பிரேமா பிரசுரத்தின் மூலம் ‘இல்லஸ்ட்ரேஷன்’ என்னும் சித்திரங்களை இடையிட்டு, மலிவுப் பதிப்பாகவும் எளிமையும் சுவாரஸ்யமும் தகவல்பூர்வமும் கொண்டவையாக, ஒட்டுமொத்தமாக உலக-இந்திய-தமிழ்ச் சிந்தனையாளர்களையும் பழம்பெரும் இலக்கியங்களையும் பழங் கதைகளையும் புராணங்களையும் பிரசுரித்து, தனியொரு முன்னோடிப் பதிப்பாளராக விளங்கினார். ஜனரஞ்சக இலக்கிய வாசகர்களும் வெகுஜன இலக்கிய வாசகர்களும் தான் அவர் குறிக்கோள். பின்னர் இவ்வகை மலிந்தது. அவர்தாம் முதன் முதலில் கையடக்கமான மர்ம நாவல்களை – பி.டி.சாமி, மேதாவி, சந்திரமோகன், சிரஞ்சீவி என்று – பல விதங்களில் வெளியிட்டவர். ஹத்திம்தாய் என்ற பாரசீககக் கதை, குரங்கு மாமுனிவர் கதை என்ற சீன இதிகாசம், பஞ்ச தந்திர கதைகள், போதிசத்துவர் கதைகள், திராவிட நாட்டுக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், மதன காமராஜன் கதைகள் போன்ற பலவற்றையும் அரு.ராமநாதன் வெளியிட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் முறையான நல்ல புதிய பதிப்புகளும் புதிய மொழிபெயர்ப்புகளும் வரவேண்டியது மிக அவசியம். தமிழ்ப் பழங்கதைகளின் மூலமான சுவடிப் பதிப்புகளும் வரவேண்டும்.)
தற்காலத்தில் முன்பாகவே கதாசரித் சாகரம் என்ற வடமொழி நூலை, தமிழில் பலரும் மொழிபெயர்க்க முனைந்திருக்கிறார்கள்.
- கதாசரித் சாகரம். 1905. வா.பி.வேங்கடராம சாஸ்திரி. சென்னை: டவ்டன் அண்டு கம்பெனி. (167 பக்கம்).
- உதயணன் கதை. 1916. வை.மு.கோபாலசிருஷ்ணமாசாரியர். சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம். (154 பக்கம் – கதாசரித்சாகரம் தழுவல்).
- கதாசரித் சாகரம். வீராசாமி ஐயங்கார். (செந்தமிழ் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது).
- கதாசரித் சாகரம். 1942. காசிகாநந்த ஞானாசார்ய சுவாமிகள். சென்னை: ராஜேஸ்வரி பிரஸ். (495 பக்கங்கள்).
சோமதேவரின் கதாமஞ்சரி (1913) என்ற பெயரில் 236 பக்கங்கள் உள்ள தமிழ் நூலொன்று (நரவான தத்தன் கதையை மட்டும் கூறுவது) இணைய நூலகத்தில் கிடைத்தது.
சமீபத்தில் அல்லையன்ஸ் பதிப்பகம் கதாசரித் சாகரம், (2010) 2014 என்ற பெரும் நூலை வெளியிட்டுள்ளது. (1040 பக்கங்கள், 950 ரூ.) சரளமான மொழிபெயர்ப்பு. எஸ்.வி. கணபதி (1890-1985) என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்தது இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் மின் பொறியியலில் ஜெர்மன் வரை சென்று படித்து உயர் பட்டம் பெற்று, மென் நிறுவனத்தில் பணியாற்றி (1922-57) ஓய்வு பெற்றவர். சோம வேதம், யஜூர் வேதம் பதஞ்சலி யோகசூத்ரம், யோகவாசிஸ்டம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வேதாந்தி. தமிழில் கதாசரித் சாகரமும் யோக வாசிஸ்டமும் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றை இப்போது அல்லயன்ஸ் வெளியிட்டுள்ளது. அவருடைய மகள் கலாநிதி நாராயணன் பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற கலைஞர்.
தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட ‘கதைக்கடல்’ நூலை வே. ராகவன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். (இத்தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட இந்நூல் 2019-ல் என்னால் தமிழினி பதிப்பகத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது) கதைக்கடலின் கதையோட்டத்தையும் படைப்பாற்றலையும் தெரிந்து கொள்ள சமஸ்கிருத மூலத்தை அறிந்த வே. ராகவன் கதைக்கடலுக்கு எழுதிய முன்னுரையின் சில பகுதிகளை மட்டும் இங்கு தருவது உத்தமம்.
“இப்போது தெரிந்த வரையில், குணாட்யனின் பிருகத்கதையே மிகப்பழமை வாய்ந்த கதைத் தொகை நூல். பல துறைகளில் இலக்கியத்தை ஆக்கிய மேதையான வரருசி-காத்யாயனர் என்பவரின் முதல் நூலிலிருந்து குணாட்யன் தம் நூலின் பொருள்களைத் திரட்டி எடுத்துக் கொண்டார்; கோதாவரிக் கரையில் ப்ரதிஷ்டானம் என்ற இடத்தில் ஆண்ட சாதவாகன் அரசனின் ஆஸ்தானத்தில் தன் நூலை உரைநடையில் பைசாச மொழியில் எழுதினார். முப்பத்திரண்டு லக்ஷம் சுலோகங்களின் (32 எழுத்துகள் ஒரு சுலோகம்) அளவைக் கொண்ட குணாட்யனின் நூல் பெரும்பாலும் அழிந்து போய்விட்டது என்றும், அதில் ஏழில் ஒரு பங்கையே அரசன் காப்பாற்ற முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஏழில் ஒரு பங்கும் வெகுகாலமாய் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. பைசாச மொழியில் எழுதப்பட்ட இக்கதை எவ்வாறு இருந்திருக்கும் என்று காட்டக் கூடிய வகையில் ஒரு சிறு பகுதியை, போஜராஜனின் சிருங்கார ப்ரகாசத்தில் தரப்பட்ட மேற்கோள்களுக்கு இடையே கண்டெடுத்து நான் வெளியிட்டிருக்கிறேன்….
பிருகத்கதை, அலங்கார நூல்களிலும் காவிய நூல்களிலும் காணப்படும் குறிப்புகளிலிருந்து மட்டுமல்ல, அதற்கு ஏற்பட்ட சமஸ்கிருத மொழிபெயர்ப்புகளில் இருந்தும் நமக்குத் தெரிய வருகிறது….
க்ஷேமேந்திரனை விட சோமதேவனுக்குக் கதைசொல்லும் திறமையும் அதிகம். சோமதேவன் கவித்திறன் அற்றவல்லர். ஆனாலும் கவிதை கதையின் ஓட்டத்தினைத் தடை செய்யுமளவு செல்லாது பார்த்துக் கொள்வார். கதைக்குக் கவர்ச்சி கொடுக்க வேண்டிய அளவிற்கு அக்கவியம்சங்கள் தென்படும். பொருந்திய கவனிக்கத்தக்க உவமைகளும் அறிவு நிறைந்த நன்மொழிகளும் அடிக்கடி வரும். ஆனாலும் நடை அணி மிகுந்ததாகவோ கதைச்சுவை தேக்கப்பட்டதாகவோ இருக்காது. சோமதேவனின் நூலிற்கு இருக்கும் வழக்கும் புகழும் அதற்கு நன்கு பொருந்துமென்பதில் ஐயமில்லை.
கதைக்கடலில் துவக்கத்திலுள்ள நூன்முகத்தில் இக்கதை எழுந்த கதை சொல்லப்படுகிறது. சிவன் முதல்முதலில் இக்கதைகளைப் பார்வதிக்குச் சொல்லிக் கொண்டிருந்ததும், அதை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த சிவகணங்கள் மானிடப் பிறவியை அடையுங்கள் என்று சபிக்கப்பட, அவர்கள் மூலம் இக்கதைகள் உலகிற்கு வந்ததும், இவற்றை முதலில் வரருசி-காத்யாயனர் நூலாய் தொகுத்ததும், அதிலிருந்து குணாட்யன் பைசாசி என்ற பிராக்ருத மொழியில் எழுதியதும் சொல்லப்படுகின்றன. நந்த, மோரிய, சாதவாகன அரசர் காலத்திய எழுத்தாளர். அவரைத் தாங்கியவர்களைப் பற்றிய வரலாறும் இந்த நூன்முகத்தில் அடங்கி இருக்கிறது. அடுத்த பகுதியில் கதைகள் துவங்குகின்றன. ஆனாலும் இதுவும் நூலிற்குத் தோற்றுவாய் போன்ற பகுதியே. விரிவாயிருந்த போதிலும், இப்பகுதியில் சொல்லப்படும் கதைகள் கௌசாம்பியை ஆண்டு வந்த உதயணனைப் பற்றியவை. உதயணன் மகன் நரவாகன தத்தனே சிறப்பாக கதைக்கடல் என்ற நூலின் தலைவனாவான். இந்த நரவாகனதத்தனைப் பற்றிய கதைத் தொகுதிகள் மூன்றாவது பகுதியிலிருந்து துவங்குகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் லம்பகம் என்று பெயர். பொதுவாய் ஒவ்வொரு லம்பகமும் அதில் வரும் தலைவியின் பெயரைக் கொண்டிருக்கும். ஆனது பற்றி, நரவாகன தத்தனுக்கு ஏற்படும் காதல் நிகழ்ச்சிகளையும் மணங்களையும் இக்கதைத் தொகுதிகள் சொல்வதாகும். விரிந்து போகும் இக்கதைப் பரப்பிலே உட்செல்லும் நடுநூலான கதை, ராமாயணத்தில் காணப்படுவது போல், தலைவன் நரவாகனதத்தன் தன் மனைவி மதன மஞ்சிகையை இழப்பதாகும்.
மானசவேகன் என்ற வித்யாதரனால் துக்கிப்போகப்பட்ட அவளைத் தேடிக்கொண்டு போகும்போது, மயிர் சிலிர்க்கும்படியான பல நிகழ்ச்சிகளும் அவற்றின் மூலம் மணங்களும் தலைவனுக்கு ஏற்படுகின்றன. இறுதியில் தலைவன் தன் வீரத்தைக் கொண்டு போராடி தலைவியை அடைகிறான். நடுவே, பல உதாரணக் கதைகள் எழுகின்றன. இவற்றுள் சில, இடையே பல சிறு உப கதைகளைக் கொண்ட தனிப்பட்ட பெரும் காதல் கதைகளாக அமைகின்றன. ஆகவே கதைக்குள் கதை; ஒரு கதை முடிவதற்குள் மற்றொன்று தலையெடுக்கும். காதற்கதைகள், வீரக்கதைகள், நகைச்சுவைக் கதைகள், பயங்கரக் கதைகள், கொடுஞ்செயல் கதைகள், தரையிலும் திரையிலும் பயணங்களைச் சொல்லும் யாத்திரைக் கதைகள், பறக்கும் விமானத்தையும் யந்திர மனிதரையும் சொல்லும் கதைகள் – இப்படிப்பட்ட கதைகள் இங்கு அடங்கியிருக்கின்றன. பஞ்ச தந்திரத்தின் விலங்குக் கதைகள், விக்கிரமாதித்திய வேதாளக் கதைகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. வாழ்க்கையும் மதமும், ஆடலும் பாடலும், வைத்தியம் முதலிய விஞ்ஞானங்களும், பெரும் தகையாளரில் இருந்து போக்கிரி வரைக்கும் எல்லாத் தரங்களிலுமுள்ள மனிதர் எல்லாம் இங்கே, முடிவில்லா அசை படத்திலே போல, சித்திரித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பெரியோரின் மடியில் படுத்துக் கேட்டிருந்த கதை, கதையிலக்கியத்தில் – இந்தியாவிலோ உலகம் முழுவதிலுமோ – வரும் கதைக் கருத்துகள் எல்லாவற்றையும் இங்கே பார்க்கலாம்…..
கதைக்கடலில் காணப்படும் கதைகளுக்கும் சுவை வகைகளுக்கும் எடுத்துக்காட்டாக சில கதைகள் பொறுக்கப்பட்டிருக்கின்றன. உதயணன் கதைகள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். நூலில் சிறப்புக் கதையாக நரவாகன தத்தன் கதை பரந்து கிடப்பதால், அதைக் குறுகிய அளவில் தரமுடியாது. ஆகையால் இங்கு தரப்பட்டிருக்கும் கதைகள், மலிந்து கிடக்கும் உப கதைகளிலிருந்து பொறுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் தனிக்கதையாய் நிற்கக் கூடியது.” (வே. ராகவன், 1959).
டாக்டர் வே. ராகவன் பற்றியும் இன்றைய இலக்கியவாதிகளும் வாசகர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
டாக்டர் வேங்கடராமன் ராகவன் (1908-1979) தமிழகத்துக்குக் கிடைத்த ஒரு அபூர்வமான சமஸ்கிருதப் பேரறிஞர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இசை ஆய்வாளராகவும் விளங்கியவர் அவர். 120 நூல்களும் 1200 கட்டுரைகளும் எழுதியவராக அவர் அறிய வருகிறார். பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஓரளவு சமஸ்கிருதத்திலும் அவர் எழுதியிருந்தாலும் தமிழில் எழுதியவையும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவையும் கணிசமானவையாகும். இன்று அவரது பல ஆங்கில நூல்கள் மட்டும் மறுபதிப்பாக்கப்படும் நிலையும் அவரது தமிழ்ப்பணி மறக்கப்பட்டிருப்பதும் வருத்தத்துக்கு உரியது. உலகின் சிறந்த பதிப்பகங்களும் இந்தியப் பதிப்பகங்களும் தமிழ்நாட்டில் குப்புஸ்வாமி அய்யர் ஆய்வு நிறுவனமும் டாக்டர் வே.ராகவன் நிகழ்கலை மையமும் அவரது நூல்களைக் பதிப்பித்து வருகின்றன. அவரது மகள் நந்தினி ரமணி கலை விமர்சகர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறையின் தலைவராக (1955-68) விளங்கிய அவர், இந்தியாவின் மிகச்சிறந்த சமஸ்கிருதப் பேராசிரியர் என்பதால், உலகளவில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு மிகுந்த ஆதரவைத் தந்து வரும் இந்திய அரசின் சர்வதேச, இந்திய சமஸ்கிருதக் கருத்தரங்குகளின் தலைவராகவும் ஆய்வு நிறுவனங்களின் ஆலோசகராகவும் திட்ட வரைவாளராகவும் கௌரவிக்கப் பெற்றிருக்கிறார். போஜஸ்ருங்காரப் பிரகாஸம் நூலுக்காக சமஸ்கிருத இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி பரிசையும் பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளையும் பாராட்டுகளையும் அடைந்த தகுதியாளர் அவர். 1944லிருந்து மியூசிக் அகாடமியின் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். கலைமகள் காரியாலயம் போன்ற சில தமிழ்ப் பதிப்பகங்கள் அவரது கலை இலக்கியத் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளன. அவற்றில் பல இன்று மறுபதிப்புக் காணவேண்டிய தகுதி படைத்தவை. அவரது சில முக்கிய நூல்களின் விபரங்கள் மட்டும்:
1. Bhoja’s Sringaraprakasa. 2, The Social Play in Sanskrit. 3. Love in the Poems and Plays of Kalidasa. 4. Modern Sanskrit Writings. 5. Srngaramajari of Akbarshah. 6. Agamadambara of Jayanta. 7. Natakalakshanaratnakosa of Sagaranandin. 8. Nrttaratnawali of Jayasenapati. 9. Sanskrit Ramayanas other than Valmiki’s.
எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன, எல்லாக் கதைகளும் கதைக்கடலில் சங்கமித்துள்ளன.