இப்போது நாங்கள் குடியிருக்கும் வீடு நகரின் பிரதான பகுதியில் இருந்ததெனினும் பிற பகுதிகளை ஒப்பிட நெரிசலும் இரைச்சலும் இப்பகுதியில் குறைவு தான். அந்த ஞாயிற்றுக்கிழமையில் நான் வாசலில் கிடந்த தொங்கு நாற்காலியில் அமர்ந்து மெல்ல ஆடியபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். ஒடிசலான ஒரு பையன் வாசலில் வந்து நின்றதும் நான் புதிதாக வாங்கியிருந்த டைகர் அவனைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. அவன் பயத்தை சற்று நேரம் திருப்தியுடன் கவனித்த பிறகு “என்ன?” என்றேன்.

“ப்ளம்பர் சார். டேங்க்லேர்ந்து பைப்புக்கு தண்ணி வரமாட்டுதுன்னு கால் வந்துச்சு” என்றான். அவனை அனுப்பிய நிறுவனத்தின் பெயரை உறுதி செய்து கொண்ட பிறகு மாடிக்கு அழைத்துச் சென்றேன். இந்த வீடு கட்டிய பிறகு முதன்முறையாக இந்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தது. டேங்க் நன்றாக மூடப்பட்டிருந்தது. குழாயிலும் சீராகத் தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அடைப்பு எப்படி ஏற்பட்டதென கண்டறிய முடியவில்லை. ப்ளம்பர் குழாய் வாயில் ஏதோ கசடு அடைபட்டிருந்ததாகச் சொன்னான்.  பிறகு இது போன்ற அடைப்புகள் ஏற்படுவது சகஜம் தானென்றும் ஆனால் இந்த அடைப்புகளை கவனிக்காமல் விட்டால் கட்டிடத்துக்கு தீங்கு நேரலாம் என்றும் அப்படி நடைபெறாமல் இருக்க வருடம் இருமுறை அவர்களுடைய நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறும் என்னை கேட்டுக் கொண்டான்.

அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. மேற்சொன்ன தகவலை என்னிடம் அவன் அழுத்தவும் வேண்டும் ஆனால் அது என் அறிவினை சீண்டுவதாகவும் இருக்கக் கூடாது. எப்படியோ என் வீட்டு குழாயில் அடைப்பு ஏற்பட்டு நீருக்கென சிரமப்படக்கூடாது என அக்கறை கொள்ள ஒரு நிறுவனம் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவனை அனுப்பிவிட்டு மாடியறையிலே அமர்ந்து விட்டேன். அவன் குழாயை சரி செய்ததை மறந்துவிட்டு தண்ணீர் குடிக்க கீழிறங்கிக் கொண்டிருந்த போதுதான் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு இந்த ப்ளம்பர் வந்திருந்தால் நிகழ்ச்சிகள் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்கிற நினைப்பு எனக்கு வந்தது.

அப்பா என்னை முதன்முறையாக அறைந்த போது எனக்கு முப்பதியோரு வயது. அவர் அறைந்த அந்த குறிப்பிட்ட தினத்தில் என்னை மணம் புரிந்து கொள்ளவிருந்த ப்ரியதர்ஷினியும் அம்மாவும் கொல்லைப்புறம் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த உரையாடலின் பேசுபொருள் நான்தான் என்பது எனக்கு அளவிட முடியாத கிளர்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தது. காதலித்துத் தான் மணமுடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை நண்பர்கள் உருவாக்கி இருந்தனர். வீட்டிலும் பெண் பார்ப்பதாக இல்லை. ப்ரியதர்ஷினியும் என்னைப் போன்ற முன்முடிவுடன் இருந்தாளா என்று தெரியவில்லை. ஆனால் தயங்கித் தயங்கி நான் காதலைச் சொன்ன அரைநாளில் ஏற்றுக்கொண்டாள். ஜாதி பிரச்சினையாகுமா என்று எனக்குள் அச்சம் எழுந்தது. அவள் சொந்தக்காரர்கள் கொலை வரை செல்கிறவர்களாக இருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் ஜாதி அவர்கள் முகத்தில் சில சுருக்கங்களை உண்டாக்கினாலும் என்னுடைய மாதச் சம்பளமும் எனக்கு ஓரளவு கட்சியில் இருந்த செல்வாக்கும் பிரபலமும் அவர்களை சரியென்று சொல்ல வைத்தது. இருந்தும் ப்ரியதர்ஷினியின் அண்ணன்கள் என்னை அவ்வப்போது முறைக்கவே செய்தனர். நான் முடிந்தவரை அவர்களை தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தேன்.

அவளுடைய பெரியப்பா மகன் “மாப்ள” என்று ஒவ்வொரு முறையும் தோளில் அடிப்பது போல கைபோடுவான். எனக்கு வெறுப்பாக இருக்கும். என்னை விட அவன் உயரமாக வேறு இருந்தான். ப்ரியதர்ஷினிக்கு பிரியமானவன் கூட. அவள் குடும்பத்தில் அவளுக்கு பிடித்த எல்லோருமே இப்படி முரட்டுத்தனமானவர்களாக இருக்க சாதுவான என்னை ஏன் காதலிக்கச் சம்மதித்தாள் என்பது எனக்குப் புரியாததாகவே இருந்தது. ப்ரியதர்ஷினியின் வீட்டில் நிச்சயதார்த்தத்தை எளிமையாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். நிச்சயதார்த்தத்துக்கு ஒரு நாளுக்கு முன் அவள் என் வீட்டுக்கு வந்திருந்த போதுதான் அப்பா என்னை அறைந்தார். ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை. பொதுவாக பெண்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் அப்பா தினசரியை தூக்கிக் கொண்டு மாடியறைக்குச் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறு சென்றவர் குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்கு வந்தார். அன்று இன்று போலவே மாடியறையில் குழாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரவில்லை.  சமையலைறையில் அப்பா சற்று அதிக நேரம் தாமதித்ததாக எனக்குப்பட்டது. அவர் திரும்பும் போது சோபாவுக்கு வெளியே நீட்டியிருந்த என் காலில் தடுக்கி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த சொம்பு கீழே விழுந்தது. சொம்பு விழுவதற்கு முன் அப்பா விழுந்திருந்தார்.

நான் உடனடியாக எழுந்து கொண்டேன். எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை. சாரி கேட்கலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும் அப்பாவிடம் போய் யாராவது சாரி கேட்பார்களா என்று மனம் சொன்னதால் அந்த யோசனையை தவிர்த்து விட்டேன். இவ்வளவு நெருக்கமான தருணங்கள் எனக்கும் அப்பாவுக்கும் இடையே ஏற்பட்டது இல்லை. படித்து முடித்து வேலைக்குச் சென்ற பிறகும் அதற்கு முன்பு போலவே அப்பாவுக்கும் எனக்கும் உறவு தொடரச்செய்தது.

“ஸ்கூல் போகலையா?”

“லோக்கல் ஹாலிடேப்பா”

“கான்வகேஷனுக்கு நான் வரணுமா?”

“வேணாம்ப்பா, எதுக்கு அலையணும்?”

“டியூட்டி டைம் என்ன?”

“டென் டூ சிக்ஸ்ப்பா”

இப்படி எப்போதாவது நடைபெறும் வினாடி வினாவைத் தாண்டி அவர் என்னைத் தொந்தரவு செய்ததில்லை. நானும் அவரைத் தொந்தரவு செய்ததில்லை. ரொம்பவும் மரியாதையாகத் தான் பழகிக் கொண்டோம் இருவரும்.

அவர் என்னை அறைவதற்கு சில கணங்களுக்கு முன் யாராவது நம் கண்முன்னே இடறி விழுந்தால் சிரிப்பு வருமல்லவா? அப்படி சிரித்து வைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஓங்கி அறைந்தார். முதலில் கன்னம் மரத்துப் போனது போலத் தோன்றினாலும் பின்னர் கடுத்து வலிக்கத் தொடங்கியது. சத்தம் கேட்டு அம்மாவும் ப்ரியதர்ஷினியும் எழுந்து வந்து வெறித்துப் பார்த்து நின்றனர். நாங்கள் நின்ற தோரணையிலேயே அப்பாதான் என்னை அறைந்துவிட்டார் என்று புரிந்து கொண்டனர். எனக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவர் அறைந்ததை விட அதிக விசையுடன் அவரைத் திருப்பி அறைந்தேன். ஒரு கணம் அவர் முகத்தில் திகைப்பு தோன்றினாலும் உடனே அவருக்கு கால்கள் தடதடக்கத் தொடங்கிவிட்டன. நின்ற நிலையில் அவ்விடத்திலேயே சிறுநீர் பிரிந்தது. ப்ரியதர்ஷினி யாரிடமும் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.

நானும் அவள் ஸ்கூட்டி சத்தம் காதில் இருந்து மறைந்த சில நொடிகளில் வீட்டை விட்டு வெளியேறினேன். பத்து நிமிடம் சாலையில் வெறுமனே உலாவிக் கொண்டிருந்து விட்டு வெயிலும் வாகன இரைச்சலும் எரிச்சல்படுத்தவே வீட்டுக்குள் வந்து விட்டேன். அப்பா மூத்திரம் போயிருந்த இடம் துடைக்கப்பட்டு டெட்டால் நறுமணம் டைல்ஸில் இருந்து வீசிக் கொண்டிருந்தது. அப்பா மாடியறையில் குளித்துக் கொண்டிருந்தார். மாலைக்குள் அப்பா சகஜமாகி விட்டார் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அன்று நள்ளிரவில் காய்ச்சலில் விழுந்தார். எனக்கும் ப்ரியதர்ஷினிக்கும் நிச்சயம் நடக்க இன்னும் ஒரு பகல் பொழுதே நடுவில் இருக்க ப்ரியதர்ஷினி வீட்டை விட்டுச் சென்றதில் இருந்து இன்னமும் என்னை அழைக்காமலேயே இருந்தது மனதை தொந்தரவு செய்ய நான் தூங்காமல் வெறுமனே படுத்திருந்தேன். வெக்கை அதிகமாக இருந்தது. என் அறையில் ஏசி வேலை செய்யவில்லை. மின்விசிறி அனலுமிழ்ந்தது.

கொஞ்சம் உலாத்தினால் தூக்கம் வரும் என்று தோன்றவே வீட்டை விட்டு வெளியே வந்தேன். மாடியறையில் அப்பா அனத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. படியேறியவன் எதற்கும் அம்மா எங்கே என்று உறுதி செய்து கொள்ளலாம் என கீழே இறங்கியது நல்லதாகப் போயிற்று. அம்மா அவள் அறையில் இல்லை. மேலே அப்பாவுடன்தான் இருப்பாள். நான் பூட்டப்படாமல் இருந்த அறைக் கதவை தட்டிய போது அம்மா கலைந்த உடையுடன் எழுந்து கதவைத் திறந்தாள். என் முன்னெச்சரிக்கையை எண்ணி நானே பெருமைப்பட்டுக் கொண்டேன்.

அப்பாவை அறைந்ததால் காலை முதல் பயந்து போய் என்னிடம் பேசாதிருந்த அம்மாவின் முகம் இப்போது சற்று தெளிந்திருந்தது.

“என்ன?” என்றாள்.

“ஏதோ அனத்துன மாதிரி தெரிஞ்சது”

சற்று நேரம் அமைதி.

“அப்படியெல்லாம் இல்லையே” என்று அம்மா பதறிப்போய் சொன்னாள். எனக்குப் பாவமாக இருந்தது. அவள் வேறெதையோ கற்பனை செய்து கொண்டாள் போல. அவள் சங்கடத்தை தெளிவிக்கும் விதமாக அப்பா மீண்டும் அனத்தினார். அம்மா இப்போது அவர் அனத்துவதற்காக வருந்துவதா அல்லது என் சந்தேகம் அவமதிப்பளிக்காத வகையில் உறுதிபட்டதற்காக நிம்மதி கொள்வதா என்று தெரியாமல் குழம்பினாள். அப்பா அனத்துவது அதிகரிக்கவே காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனை சென்றோம். அவர் சற்று நினைவு தவறியிருந்ததால் என்னைத் தூக்க அனுமதித்தார். இல்லையெனில் என்னுடன் வரமாட்டேன் என முரண்டு பிடித்திருப்பார்.  அப்பாவை பரிசோதித்த மருத்துவர் என்னையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தபின் என்னை வெளியேறச் சொன்னார். திரும்ப என்னை உள்ளே அழைத்த போது அம்மா குற்றவுணர்வு கொள்ளும்படி ஏதோ சொல்லியிருப்பார் என்று அவர் முகக்குறிப்பில் இருந்து தெரிந்து கொண்டேன்.

அப்பா ரொம்ப கஷ்டங்கொடுக்கவில்லை. மறுநாள் விடியலில் இறந்துவிட்டார். மருத்துவமனையில் சேர்த்ததுமே மயங்கிய நிலையிலேயே அவருக்கு பேதி போகத் தொடங்கியது. அதீதமான நீரிழப்பு காரணமாக அப்பா இறந்தார். அம்மா யாரைத் திட்டுவது என்று தெரியாமல் பொதுவாக “அய்யோ அய்யோ அய்யோ” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவதாள். என்னைத் திட்டி நான் கோபப்பட்டால் அவளுக்கு போக்கிடம் கிடையாது என்பதால் என் மேல் ஆத்திரப்பட இயலாமல் இப்படி அழுகிறாளே என்று புரிந்து அங்கு நிற்க முடியாமல் நான் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறினேன்.

நண்பர்கள் சிலரிடம் மட்டும் தகவல் சொன்னேன். நாங்கள் பிணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதற்குள் வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. ப்ரியதர்ஷினியின் அப்பாவும் அவள் மாமாவும் இறுகிய முகத்துடன் எங்களுக்கு முன்னே வந்து அமர்ந்திருந்தனர்.

“ப்ரியா வரலையா மாமா?” என்று கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.

மறுநாள் மதியம் பிண ஊர்வலக் களேபரங்கள் அடங்கி நான் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ப்ரியதர்ஷினியின் அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அம்மாவுடனும் என் சித்தப்பாவுடனும் நீண்ட நேரம் பேசி இருக்கின்றனர். நிச்சயம் நடக்காமல் போனது நல்லதென்றும் இந்தத் திருமணப் பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருக்கின்றனர். அம்மாவும் என்னை எழுப்பாமலேயே சம்மதம் சொல்லி அனுப்பி இருக்கிறாள். ப்ரியதர்ஷினியிடம் காதலைச் சொல்லும் போதே அவள் அடித்துவிட்டால் அல்லது அசிங்கமாக ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் எனக்கு இருந்ததே தவிர அவள் காதலை ஏற்பாளா மாட்டாளா என்பது குறித்தெல்லாம் நான் யோசித்திருக்கவில்லை. ஆச்சரியப்படும்படியாக “ஒரு ரெண்டு நாள் டைம் வேணும்” என்றாள். அதுவே அவள் எனக்குக் கொடுத்த பெரிய மரியாதையாகப்பட்டது. “சரி” என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். மாலையே அழைத்து “கல்யாணத்துக்கு அப்புறமும் உன்ன பப்ளிக்ல பேர் சொல்லி கூப்பிட ஒத்துப்பியா?” என்றாள்.

ஆகையால் இப்போது இந்தத் திருமணம் தடைபட்டது குறித்து எனக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் கழித்து சொந்த ஜாதியிலேயே அம்மாவிடம் வேறு பெண் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன். அப்படிப் பார்க்கும் பெண் ப்ரியதர்ஷினியை விட அழகாகவும் வசதியானவளாகவும் இருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டேன். ஆனால் என் ஜாதியில் அழகான பெண்களின் எண்ணிக்கை அவள் ஜாதியை ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவு. காதல் திருமணம் நடைபெறவில்லை என்றால் என்ன? ஒரு காதல் தோல்விக் கதை இருக்கிறதே. அது காதல் திருமணத்தை விட மதிப்புமிக்கது தானே. இந்த எண்ணம் எனக்கு அளப்பரிய மனச்ச மாதானத்தை கொடுத்தது. மேலும் காதல் தோல்வி என்ற நல்ல பருவடிவிலான ஒரு துயர் இருப்பது நண்பர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறவும் உதவக்கூடும்.

ஆனால் எனக்குப் பெண் பார்க்கத் தொடங்கிய போது புதிய சிக்கல்கள் முளைத்தன. நான் அறைந்ததும் அப்பா இறந்ததும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்றதாலும் அது அம்மா ப்ரியதர்ஷினி இருவரின் வழியாகவும் கசிந்து கசிந்து வெளியே சென்றிருந்ததாலும் எனக்கான சமூக மதிப்பீட்டில் இப்போது குறை வந்துவிட்டது. அக்குறை எனக்குப் பெண் கிடைக்கச் செய்யாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அமையும் வரன்களும் உறுதியான காரணங்கள் எதுவும் செல்லாமல் விலகிச் சென்று கொண்டிருந்தன. அப்பாவின் இறப்பு, நிச்சயத்தடை, உடனடி பெண் பார்த்தல் என்ற மூன்று அடுத்தடுத்த விஷயங்கள் இணைந்து என் மீது ஒரு எதிர்பிம்பத்தை உருவாக்குவதை நான் உணரத் தொடங்கினேன். கட்சியிலும் எனக்கிருந்த செல்வாக்கு இந்தத் தொடர் நிகழ்வுகளால் குறையத் தொடங்கியது. ஆனால் அதை பிற யாரும் உணருமுன்னே நான் அறிந்து கொண்டதால் பெண் பார்க்கும் நிகழ்ச்சியை அம்மாவிடம் சொல்லி நிறுத்தினேன். அம்மாவும் நான் என்ன சொன்னாலும் மறுகேள்வி இல்லாமல் கேட்டுக் கொண்டாள்.

இப்போது நான் செயல்பட்டாக வேண்டிய நேரம். சந்திக்க வரும் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரிடமும் அவர்களைப் பற்றியே விசாரித்தேன். முதலில் “நல்லா இருக்கீங்களா, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்று வழக்கம் போலத் தொடங்கி அவர்களுடைய குடும்பம் தொழில் என கேள்வியை விஸ்தரிப்பேன். ஏதேனும் ஒரு கேள்வி அவர்கள் முகம் சகஜ பாவத்தை இழந்து நிலை மீளும். என்னைச் சந்திக்க வருகிறவர்கள் நான் சந்திக்க நேர்கிறவர்கள் யாரும் என்னைப் பற்றி சிந்திக்கவிடாதவாறு செய்வது அவர்களது முகமாற்றத்தை கணித்து அவர்கள் சிக்கலுக்குள் நுழையும் என் திறனே.

பொதுவாக பலரிடம் சொல்லக் கூடியதாக அது இருக்காது. ஏனெனில் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் பலரிடம் சொல்லி விட்ட பிறகு அந்தப் பிரச்சினை அளிக்கும் அதிர்ச்சிக்கும் சோர்வுக்கும் நம் மனம் பழகிவிடும். யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவற்றுக்கு மட்டுமே நிலையின்மையை உருவாக்கும் ஆற்றல் உண்டு. மகளின் நடத்தை, மனைவியின் பிறன்மணை விழைவு, மகன் மீதான பயம், கணவன் மீதான வெறுப்பு அல்லது சலிப்பு, வேலை போய்விடுமோ என்ற பயம், எதையும் அனுபவிக்காமல் செத்து விடுவோமோ என்ற ஆற்றாமை என பகிர்ந்து கொள்ள விரும்பாத ஒரு மூலை பலருக்குள் இருந்தது. நான் சரியாக அங்கு நுழைந்தேன். ஆனால் அந்த சிக்கலுடன் நான் உரையாடியதே இல்லை. அந்த சிக்கலின் மீது இதமாக களிம்பு பூசிவிடும் வேலையை மட்டுமே செய்தேன். என்னைப் பற்றிய மனப்பதிவு மாறத் தொடங்கியது.

இன்னும் சற்று நாட்கள் கழித்து பெண் பார்க்கத் தொடங்கலாம் என்று நான் எண்ணியிருந்த போது ப்ரியதர்ஷினி மணமுடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பதாக எனக்குத் தகவல்கள் வந்தன. பின்னர் ஒருநாள் ப்ரியதர்ஷினியே என்னை அழைத்தாள்.

அப்பாவை நான் அறைவதற்கு முன்பு, அன்று காலை அவள் வீட்டுக்கு வந்திருந்த போது தான் நான் அவளிடம் கடைசியாகப் பேசியிருந்தேன்.

அலுவலகத்தில் ஒரு வேலையில் மும்முரமாக இருந்தபோது ப்ரியதர்ஷினியின் அழைப்பு வந்தது.

“நான் ப்ரியா பேசுறேன்” என்று சாதாரணமாக அவள் தொடங்கியதால் நானும் ‘சொல்லு’ என்று சாதாரணமாகத் தொடங்க நினைத்து ‘சொல்லு’ என்பதா ‘சொல்லுங்க’ என்பதா என்று குழம்பி “ம்” என்று மட்டும் சொன்னேன். அவள் உடனடியாக பதில் சொல்லாததில் இருந்து அவள் சாதாரணமாக உரையாடலைத் தொடங்கியது ஒரு பாவனை என்பதை உணர்ந்து ஆசுவாசமடைந்தேன். என்னுடன் அந்தரங்கமாக, அதாவது உன் மீதான என் உணர்வுகள் இன்னமும் மாறிவிடவில்லை என்ற முன்முடிவுடன் அவள் பேசியாக வேண்டிய கட்டாயத்தை நோக்கி அவளைத் தள்ளிவிட்டிருந்தேன்.

அவளே இறங்கி வந்தாள்.

“எப்டி இருக்க?”

“ஃபைன்”

“பொண்ணு பாத்துட்டு இருந்த போலருக்கு”

“நீதான் வேண்டான்னு போயிட்டியே”

“யார் சொன்னா உனக்கு”

“வேணும்னா நீ இவ்வளவு நாள் பேசாம இருந்திருக்கமாட்ட”

“ஏன் கூப்பிட்டெல்லாம் கன்வின்ஸ் பண்ணமாட்டீங்களோ”

அவள் வழிக்கு வந்துவிட்டாள். நான் அவளை சமாதானப்படுத்தினேன். அதன் பிறகு நான் இல்லாமல் அவளால் இருக்க இயலாது என்பதையும் நினைக்கக் கூடாது என்று உறுதிபூண்ட பிறகு என் மீதான காதல் பெருகிக் கொண்டே செல்வதாகவும் என் நினைவுகளும் என் நறுமணமும் அவளைக் கடுமையாக அலைக்கழிப்பதாகவும் என்னிடம் அழுது கொண்டே சொன்னாள். ப்ரியதர்ஷினியையே மணம் புரிந்து கொள்ளலாம் என்று நானும் முடிவெடுத்தேன். நாளை ஏதேனும் ஒரு பிரச்சினை வந்தால் அவள்தானே மணம்புரிந்து கொள்ள வற்புறுத்தினாள் என்று சொல்லி பழியை அவள் மீது திருப்பிவிடும் வாய்ப்பு இந்த ஒப்பந்தத்தில் இருப்பது எனக்கு அனுகூலமாக இருந்தது. அவள் குடும்பத்தினரை ஒப்புக்கொள்ளச் செய்வது அவளுக்கு சிரமமாகவே இருந்தது. என் ஆலோசனையில் மணமான பிறகும் சம்பளத்தை அவள் தம்பி வேலைக்குச் செல்லும்வரை வீட்டிற்கே கொடுப்பதாகவும் திருமணத்தை எளிமையாக ஊர் அவ்வளவாக அறியாதவாறு வைத்துக் கொள்ளலாம் என்பதையும் அவள் வீட்டில் சொன்னாள். இதுபோல நேரடியாக இல்லாமல் அவள் வேலைக்குச் செல்வதும் அவள் வருமானமும் குடும்பத்தின் அன்றாடத்திற்கும் தம்பியின் கல்விக்கும் எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை உணர்த்தி மெல்ல மெல்ல வீட்டினரை சம்மதிக்கச் செய்தாள்.

அம்மா இவ்வளவு உறுதியாக ப்ரியதர்ஷினியை மறுப்பாள் என்பது ப்ரியதர்ஷினி என்னை மீண்டும் மணம்புரிந்து கொள்ள சம்மதித்தது போலவே ஆச்சரியம் தான். என் நடவடிக்கைகளை சற்று மாற்றினேன். வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் வெளியில் சாப்பிடத் தொடங்கினேன். சில வாரங்கள் எப்படியோ சமாளித்து விட்டு மீண்டும் என்னை நோக்கி பேச்செடுப்பாள் என்று நம்பினேன். அம்மாவின் உறுதி தளரவேயில்லை. ஒருநாள் மாலை நான் வீட்டுக்கு வந்தபோது அம்மாவின் முகத்தில் உறுதியும் தைரியமும் தெரிந்தது.

சாப்பிட உட்கார்ந்தேன். அன்று அம்மா வைத்திருந்த நாட்டுக்கோழிக் குழம்பு அவள் இளமையில் வைத்துக் கொடுக்கும் அதே திருத்தமான ருசியுடன் இருந்தது. சரியாக முதல் கவலம் வாயில் பட்டு வாய் ருசியை உணரத் தொடங்கிய போது “என்ன பொண்ணு பாக்கட்டுமா?” என்றாள். கோபம் தலைக்கேற தட்டைத் தூக்கி தரையில் எறிந்தேன். அச்செயல் எனக்கே அதிர்ச்சியை கொடுத்தது. அம்மாவுக்கு அதிர்ச்சியில் கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. அப்பா அளவுக்குக் கூட படுத்தாமல் அம்மா அன்றிரவு வீட்டிலேயே இறந்துவிட்டாள். அம்மா இறந்த பிறகு தாய் தகப்பனை இழந்து நிற்பவன் திருமணமாகாதவன் என்று ஒருபக்கம் ஆறுதலும் தொடர்ச்சியாக தாய் தகப்பனைக் கொன்றவன் என்று ஒரு பக்கம் வசைகளும் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. ப்ரியதர்ஷினியை மணமுடித்துக் கொள்வதில் தடையாக மாற வாய்ப்பிருந்த அம்மா இறந்து போனது ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

சிலசமயம் நானே சமைப்பது துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்யும் போது அம்மா இன்னும் கொஞ்சநாள், அதாவது எனக்கு மணமாகும்வரை, இருந்திருக்கலாம் என்று தோன்றும். சில சமயம் நிறைய செலவு வைக்கும் வியாதிகளில் உழன்று எதையும் இழுத்து விடாமல் அவர்கள் இறந்து போனது பெரிய உதவியாகத் தெரியும். ஏனெனில் அந்தச் சமயம் நண்பர்களுடைய பெற்றோர்கள் நண்பர்களுக்கு அப்படி செலவு வைத்துக் கொண்டிருந்தனர். சிலர் குழந்தை பெறுவதற்காகவும் சிலர் பெற்ற குழந்தை சீக்கில் விழ அதனை மீட்பதற்காகவும் நிறைய செலவு செய்து போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் பரசுராம் பிறந்த பிறகு அத்தகைய செலவுகள் எதையும் எங்களுக்கு வைக்கவில்லை.

ப்ரியதர்ஷினியை சரிகட்டி திருமணம் செய்து கொண்ட சில நாட்களில் குடியிருந்த வீட்டை விற்று இப்போதிருக்கும் வீட்டை வாங்கி குடியேறினோம். நானும் வேலையை விட்டு பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தொழிலில் முழுமையாக இறங்கினேன். என்னுடைய தொழிலுக்கு ஏற்ற அளவுக்கு மட்டுமே இப்போது கட்சிகளுடன் தொடர்பில் இருந்தேன். மகன் பிறந்தால் பரசுராம் என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். அப்பா இறந்த சில நாட்களில் என்னிடம் இவ்விருப்பத்தை தெரிவித்திருந்தாள். ஆனால் நான் ப்ரியாவிடம் காரணத்தை சொல்லவில்லை. அவள் துருவிக் கேட்ட போது இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு “தோணுதுப்பா” என்று தலையைக் கோதியபடி சொன்னேன். “சரிப்பா” என கன்னத்தைப் பிடித்து உலுக்கினாள்.

பரசுராமை ஒரு நல்ல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்தோம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு கண்டிப்பாக விடுதியில் தங்க வைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்துக் கொண்டனர். ப்ரியாவும் அவள் சொன்னபடியே தம்பி வேலைக்குச் செல்லும் வரை குடும்பத்தை கவனித்துக் கொண்டாள். அவள் தம்பிக்கு வேலை கிடைக்க நான் உதவினேன். அவள் குடும்பம் என் குடும்பம் போல ஆனது. ப்ரியாவின் தூரத்து உறவினர்கள் எல்லாம் கூட வீட்டுக்கு வரத்தொடங்கினர். வீடு எப்போதுமே கூட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பரசு விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போதெல்லாம் கூட்டம் பெருத்துவிடும். அவனது ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து பெண்கள் ஆச்சரியப்பட்டனர். நானும் இதுபோன்ற பொழுதுபோக்குகளை வேடிக்கை பார்த்தபடி என் வேலையில் முனைந்திருப்பேன்.

ப்ரியா என்னிடம் கெஞ்சிக் கொஞ்சி அவள் வேலையை விட்ட பிறகு சொந்தக்காரர்களின் வரத்து அதிகமானது. விடுமுறைகளில் பரசுவையும் அழைத்துக் கொண்டு சென்று ப்ரியா தன்னுடைய சொந்தங்களின் வீடுகளில் தங்கத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் அவளால் தனியாக இருப்பதென்பதே இயலாத செயலாயிற்று. நானும் அவளும் மட்டும் வீட்டில் இருக்கையில் பரசு நிம்மதி இல்லாதவனாக மாறத் தொடங்கினான். ப்ரியாவை போட்டு அடிக்கத் தொடங்கினான். முதலில் விளையாட்டாகத் தெரிந்தாலும் அவன் குழந்தைத்தனம் நீங்காத சிறுவனாகவே நடந்து கொண்டாலும் அவனது போஷாக்கான உடலின் வலிமையை அவன் அறியவில்லை. அவன் வீம்புக்கென்ற அடிப்பதெல்லாம் ப்ரியாவுக்கு வலித்தது.

குழாயடைப்பு சரி செய்யப்பட்டிருந்தாலும் பாதி படிகள் இறங்கி விட்டதால் கீழே போய் நீரருந்திக் கொள்ளலாம் என்று தரைத்தளத்துக்கு வந்த இறுதிப்படியில் கால்வைத்த போது பரசு படியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு கண்ணாடி டம்ளரில் பழச்சாறு இருந்தது. ப்ரியா அவனை துரத்திக் கொண்டு வந்தாள். அவன் நான் இறங்கி வருவதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சரியாக என் மீது வந்து முட்டிக் கொண்டான். அவன் கையில் வைத்திருந்த பழச்சாறு என் சட்டையில் கொட்டி டம்ளர் கீழே விழுந்தது. ஆனால் உடையவில்லை. இதுவரையில் இதுபோன்ற உபாதைகளுக்கு என்னை அவன் ஆளாக்கியதில்லை என்பதால் எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்திருந்தது. அவனை ஓங்கி அறைந்தேன். சுருண்டு விழுந்தான். பின்னர் எழுந்து என்னைக் கண்டு பயந்து அலறியபடியே அவன் அம்மாவை நோக்கி ஓடினான். ப்ரியா ஒரு கணம் அதிர்ந்து அவனைத் தன் வயிற்றோடு சேர்த்துக் கொண்டு என்னை வெறுப்புடன் பார்த்து திரும்பிச் சென்றாள். அந்தப் பார்வையில் ஒரு மெல்லிய பிரியமும் இருந்தது.