டேவிட் அட்டன்பரோ: செய்திப்படங்களின் பிதாமகன்

0 comment

அட்டன்பரோ என்ற பெயர் நமக்குப் புதிதல்ல. உடனடியாக ‘காந்தி’, ‘ஜூராஸிக் பார்க்’ எனத் திரைப்படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் ‘காந்தி’ படத்தை இயக்கியவரும் ‘ஜுராஸிக் பார்க்’கில் நடித்தவரும் ரிச்சர்ட் அட்டன்பரோ.

இன்னொருவர் டேவிட் அட்டன்பரோ. உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கும் சூழலியலில் அக்கறை கொண்டோர்களுக்கும் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத பெயர்.

ரிச்சர்ட் அட்டன்பரோவும் டேவிட் அட்டன்பரோவும் உடன்பிறந்தவர்களே. இன்னொரு சகோதரரும் உண்டு. இவர்களைத் தவிர குடும்ப உறுப்பினர்கள் பலரும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்றவர்களே.

டேவிட் அட்டன்பரோ தனது இரண்டு சகோதரர்களுடன். இடது ஓரத்தில் இருப்பவர் வாகன உற்பத்தி நிறுவனமொன்றில் அதிகாரியாக இருந்த ஜான் அட்டன்பரோ. நடுவில் இருப்பவர் ரிச்சர்ட் அட்டன்பரோ.

உலகின் மாபெரும் சாதனையாளர்களாக, மேதைகளாக நாம் மதிக்கும் பலரும் மானுட வாழ்வை ஏதேனுமொரு விதத்தில் மேன்மைப்படுத்தியவர்கள். மனிதனின் அனைத்து கீழ்மைகளுக்கு நடுவே இந்த உலகம் வாழத் தகுந்ததே என உரக்கச் சொல்லி அதற்காகவே உழைத்தவர்கள். டேவிட் அட்டன்பரோவும் மானுட குலத்தின் மேன்மைக்காகவும் மனிதனுக்கு இவ்வுலகில் உள்ள உரிமைகளுக்கு சரிசமமாக பிற உயிர்களுக்கும் உண்டு என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி நிற்பவர். மனிதனுக்கும் இயற்கைக்குமான சிக்கலான உறவையும் மோதல்களையும் புரிந்துகொண்டு இருவருக்குமான சமநிலையை உருவாக்கக் குரல் கொடுத்திருப்பவர்.

இத்தனைக்கும் அவர் ஒரு தொழில்முறை சூழலியலாளரோ இயற்கை விஞ்ஞானியோ அல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஆனாலும் பிரபஞ்சத்தின் உயிர்ச்சூழலை அறிந்துகொள்ளவும் உலகின் அனைத்து உயிர்களின் இருப்பையும் இன்றியமையாமையைப் புரிந்துகொள்ளவும் தன் நூற்றுக்கணக்கான  செய்திப்படங்களின் வழியாக அவர் தந்துள்ள பங்களிப்பு பிற எவற்றுடனும் ஒப்பிட முடியாதது. அளப்பரியது.

1926ம் ஆண்டு லண்டனில் பிறந்த டேவிட் ஃபிரெடரிக் அட்டன்பரோ புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலில் பட்டம் பெற்றபோதே தன் பணி என்ன என்பதை தெளிவுற உணர்ந்திருந்தார். இயற்கை அறிவியல் நாற்புறமும் சுவர்கள் கொண்ட ஆய்வகத்தில் கற்றுக் கொடுக்கப்படும் அபத்தத்தையும் பொருத்தமின்மையையும் கவனித்திருந்தார். 1952ல் பிரிட்டிஷ் செய்தி ஒலிபரப்பு நிறுவனத்தில் அப்போது தான் தொடங்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பிரிவில் சேர்ந்தார். உலகின் தொலைதூரப் பிரதேசங்களுக்கு பயணம் செய்வதும் இயற்கையின் பல்வேறு முகங்களைக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதுமே அவரது நோக்கமாக இருந்தது. பி.பி.சி.யின் தொலைக்காட்சிப் பிரிவில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பணியைத் தனது நோக்கத்திற்கு ஏற்ப மெல்ல மெல்ல ஒருங்கிணைக்கலானார். ஸ்டூடியோவுக்கு வெளியே செல்லாமலேயே நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொண்டிருந்த பி.பி.சி.யை மெல்ல மாற்றினார். இந்த வகையில் 1954ம் ஆண்டு அவர் தயாரித்து அளித்த ‘Zoo Quest’ என்ற நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.

Zoo Quest நிகழ்ச்சி

1964ம் ஆண்டு பிரிட்டனின் மூன்றாவது தொலைக்காட்சி அலைவரிசையான பி.பி.சி.2 தொடங்கப்பட்டது. ஒரு வருடத்துக்குப் பின்பு அட்டன்பரோ அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிரிட்டனில் வண்ணத் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினார். இவர் இயக்குநராக இருந்த காலகட்டத்தில்தான் ‘Civilization and Ascent of Man’, ‘Monty Python’s Flying Circus’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன. 1969ல் பி.பி.சி.யின் நிகழ்ச்சி இயக்குநராக பொறுப்பேற்ற பின் புகழ்பெற்ற பல தொடர்களும் வெளியாயின. 1972ல் பி.பி.சி. மேலாண் இயக்குநராக பதவியேற்க அவருக்கு பெரும் வாய்ப்பிருந்தது. அந்தச் சமயத்தில் பி.பி.சியிலிருந்து விலகினார். சுதந்திரமான நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்க முடிவு செய்தார்.

இன்று உலகின் தூரங்களிலும் ஆழங்களிலும் மனிதர்கள் எளிதில் பார்க்க முடியாத இயற்கையின் பல்வேறு முகங்களையும் உயிரினங்களையும் தாவரங்களையும் அட்டன்பரோவின் செய்திப் படங்களின் வழியாக சுலபமாகப் பார்த்துவிட முடியும். செய்திப்படங்கள் என்றாலே உயிரோட்டமில்லாத வறண்ட குரலும் சலிப்பூட்டும் படத்தொகுப்பும் என்ற நிலையை அடியோடு மாற்றியவை அட்டன்பரோவின் படங்கள். 1954ம் ஆண்டு ‘Zoo Quest’ என்ற படத்தில் தொடங்கியது அவரது பயணம். கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திப் படங்களை அவர் தயாரித்து அளித்திருக்கிறார். 1975ல் வெளியான ‘The Tribal Eye’, 1979ல் வெளியான ‘Life on Earth’, 1984ல் தயாரிக்கப்பட்ட ‘The Living Planet’, 1995ல் ஒலிபரப்பான ‘The Private Life of Plants’, 1998ல் வெளியான ‘The Life of Birds’, 2001ல் வெளியான ‘The Blue Planet’, 2006ல் வெளியான ‘Planet Earth’, 2011ல் ஒலிபரப்பான ‘Frozen Planet’ உள்ளிட்ட செய்திப்படங்கள் சமகால இயற்கை அறிவியல் துறைக்கும் சூழலியல் துறைக்கும் மிகப் பெரும் கொடைகளாகும். அட்டன்பரோவின் செய்திப்படங்கள் தகவல்களாலும் புகைப்படங்களாலும் நிரப்பப்பட்டவை அல்ல. தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் அட்டன்பரோவின் வசீகரிக்கும் குரல் பின்னணியில் ஒலிக்க காட்சிகள் உயிர்ப்பெற்று அந்த உலகத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும். காட்டப்படும் உயிரினத்தின் அசைவுகளை மிக நெருக்கமாக பார்க்க முடியும். அவற்றின் பல்வேறு தனித்துவமான அம்சங்களை குறித்து அட்டன்பரோ விளக்கம் தரும்போது கேமராவின் கோணங்கள் அவற்றை நமக்குக் காட்டும்.

உலகின் அபூர்வமான பறவையினங்களை, தாவரங்களை, பூக்களை, பூச்சிகளை, மனித வாழ்க்கை முறைகளை, இயற்கையின் பல்வேறு உருமாற்றங்களை அட்டன்பரோவின் படங்கள் அழிவற்ற காட்சிகளாக பதிவேற்றி வைத்திருப்பது என்பது நாளைய தலைமுறைக்கும் அவரது கொடையாகும்.

அட்டன்பரோவுக்கு இப்போது வயது 95. பிரிட்டிஷ் ராணியைவிட மூன்று வாரங்கள் இளையவர். இன்று பிரிட்டன் பெருமைகொள்ளும் இருவேறு மூத்த ஆளுமைகள் இவர்கள். பிரிட்டனின் பெருமை மிகுந்த மனிதர்களில் ஒருவராகத் திகழும் அட்டன்பரோவுக்கு இரசிகர்கள் ஏராளம்.

ஸ்காட்லாந்தின் தெற்குப் பிரதேசத்தில் ‘The Living Planet’ படப்பிடிப்பின்போது அவர் பறந்து கொண்டிருந்த பலூன் பழுதடைந்து தரை இறங்கி விட்டது. கீழே விழுந்த இடத்திலிருந்து தோன்றிய திசையில் நடந்தபோது ஒரு சிறிய விளைநிலத்தையும் அதிலிருந்த விவசாயியையும் சந்தித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் அந்த விவசாயி அட்டன்பரோவை அடையாளம் கண்டுகொண்டு வரவேற்றார். தொலைபேசியை உபயோகித்துக் கொள்ள அனுமதி கேட்டபோது அந்த விவசாயி தன்னுடைய சின்ன மகளுக்கு அன்று பிறந்த நாள் என்றும் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தைச் சொன்னால் தொலைபேசியை உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார். வீட்டுக்குள்ளிருந்து மகளை அழைத்து வரும் அவர் அட்டன்பரோவை அறிமுகப்படுத்துகிறார் “உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இந்த மாமா பலூனில் பறந்து வந்திருக்கிறார்.” சின்னப் பெண்ணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி முடித்ததும் விவசாயி வீட்டின் மூலையிலிருந்த தொலைபேசியைக் காட்டி உபயோகித்துக் கொள்ளும்படி சிரிக்கிறார்.

50 ஆண்டுகளாக இயற்கை அறிவியல் சார்ந்த படப்பிடிப்புகளுக்காக உலகெங்கிலும் பயணம் செய்திருக்கும் அட்டன்பரோ மனித வரலாற்றில் அதிக தொலைவு பயணித்த மனிதராக இருக்கக்கூடும்.

இந்த வயதிலும் இன்னும் அதே உற்சாகத்துடன் அதே செயல்வேகத்துடன் உள்ள அட்டன்பரோவுக்கு தன் வயதையொத்த பல நண்பர்களும் நினைவுகளை இழந்து முதுமையில் வாடுவதைக் கண்டு வருந்துகிறார். “என்னை யாரென்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு நினைவிழந்த ஒருவரை நான் போய் பார்ப்பதில் பெரும் சோர்வே ஏற்படுகிறது.”

உடன் பிறந்த இரண்டு சகோதரர்களும் இன்றில்லை. மனைவியும் இறந்து போனார். ஆனால் ஒரு மகனும் மகளும் நிறைய பேரக் குழந்தைகளும் உள்ள குடும்பம் அவருக்குப் பெரும் சந்தோஷத்தைத் தருகிறது. “பி.பி.சி.யில் முதன்முதலாக நான் தான் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்தேன் என்று சொன்னால் என் பேரக் குழந்தைகள் உரத்துச் சிரிக்கிறார்கள். ஏனென்றால் அவற்றைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனாலும் பொறுப்பில் இருக்கும் போது தெரியாதவற்றையும் நாம் செய்யத் தானே வேண்டும்.”

பி.பி.சியில் பணிபுரிய நேர்ந்ததே தன் வாழ்வின் மிகப்பெரும் திருப்பம் என்று சொல்லும் அட்டன்பரோ, அதன் கட்டற்ற சுதந்திரமே உண்மையில் வெற்றிக்கான காரணம் என்கிறார். பணியில் சேர்ந்த போது தன் மேலதிகாரிகளிடம் எது மாதிரியான நிகழ்ச்சிகள் தயாரிக்க வேண்டும், நிறுவனத்தின் கொள்கைகள் என்ன என்று கேட்டிருக்கிறார். “அது உன் வேலை. நீயே தீர்மானித்துக் கொள்” என்று பதில் கிடைத்திருக்கிறது. அதுவே அந்த நிறுவனத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றும் உத்வேகத்தைத் தந்திருக்கிறது.

93 வயதைக் கடந்துவிட்ட அவர் சமீபத்தில் தனது இரு மூட்டுகளையும் மாற்றியுள்ளார். எனவே இன்னும் ஊக்கத்துன் உழைக்கிறார். NETFLIXக்காக புதிய தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார். செயல்வேகமும் உற்சாகமும் அவருக்கு இன்னும் ஆயுளை நீட்டித்துத் தந்திருக்கிறது. இயற்கைக்கும் சூழலியலுக்குமான தன் பங்களிப்பைத் தரும் ஆர்வத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

***

டேவிட் அட்டன்பரோவின் புகழ்பெற்ற செய்திப் படங்களை நண்பர்களிடமிருந்து பெற்றுப் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது துல்லியமான உச்சரிப்பும் செய்திகளை விவரிக்கும் விதமும் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைக் கூட்டுபவை.

நண்பர்கள் ஆனந்த், ஜெயராம் ஆகியோருடன் இதைப் பற்றி உரையாடியபோது அவரது சுயசரிதையான “Life On Air” புத்தகத்தைப் பற்றி அறிந்தேன். ஜெயராம் அவர்களிடமிருந்து புத்தகத்தைப் பெற்று வாசிக்கத் தொடங்கிய போது அவரது செய்திப்படத்தை பார்க்கும் அனுபவத்துக்கு நிகராகவே உணர்ந்தேன். மொழி அழகும் சித்தரிப்பு நேர்த்தியும் கொண்ட இந்தப் புத்தகம் சூழலியல் உலகுக்கு மிக முக்கியமான ஒன்று.

ஒரு செய்திப்படத் தயாரிப்பாளராக அட்டன்பரோவின் வாழ்வை மட்டும் சொல்வதல்ல இது. கடந்த அறுபது ஆண்டுகளில் இயற்கை விஞ்ஞானம், சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்து விவரிக்கிற ஆவணமும் கூட.

காலமும் சூழலும் ஒத்துழைத்தால் முழுமையாக இதை மொழிபெயர்க்கவே விருப்பம். இப்போதைக்கு நூலில் இருந்து சில பகுதிகள்.

“லண்டன் பப்ளிஷிங் ஹவுஸில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசை அருகே இருந்த ஜன்னலின் வழியே பார்த்த போது செயின்ட் பால் பேராலயத்தின் தென் மேற்கு கோபுரத்திலிருந்த மணிகாட்டி தன் துடிப்பை நிறுத்தி விட்டது போலிருந்தது. நான் மெய்ப்பு பார்க்க வேண்டிய அச்சுத் தாள்கள் மேசையில் படபடத்தன. ஆரம்பப் பள்ளி ஒன்றுக்கான பாடப்புத்தகத்தின் ஒரு பகுதி அது. வெகுபாடுபட்டு உழைத்து இயற்கை அறிவியலில் நான் பெற்றிருந்த இளங்கலைப் பட்டத்துக்கும் இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேலைக்கும் என்ன சம்பந்தம்?

இப்போது எனக்கு வயது 24. ஏதேனும் ஒரு ஆராய்ச்சிக்காக உலகின் மிக அபூர்வமான அழகான பிரதேசங்களுக்கு செல்ல முடியும் என்ற எண்ணத்துடன் தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலை தேர்ந்தெடுத்தேன். பட்டப்படிப்பு முடிந்தவுடனே தேசிய சேவைக்காக கடற்படையில் பணியாற்ற வேண்டி வந்தது. கடற்படையைத் தேர்வு செய்ததே உற்சாகமான அனுபவங்கள் கிடைக்கும்படியான இடங்களுக்கு நான் அனுப்பப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் தான். காஸ்போர்ட்டில் ஆரம்பப் பயிற்சியில் இருந்த போது மூத்த கடற்படை அதிகாரிகள் பலர் திரிகோணமலையைப் பற்றிச் சொல்லக் கேட்டேன். கடற்படையில் தொலைகிழக்குப் பிரிவு அங்கே நிலைகொண்டிருந்தது. பயிற்சியின் முடிவில் திரிகோணமலையில் என்னை பணியமர்த்த வேண்டும் என்று விரும்பினேன். நான் கனவு கண்டிருக்கும் இடம் இதுதான் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

தேசிய சேவைக் காலம் முடிந்தது. மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்துக்கு திரும்பவும் செல்ல விருப்பமில்லை. அந்தக் காலகட்டத்தில் உயிரியியல் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஆய்வுக்கூடங்களில் மட்டுமே நிகழ்ந்தன. அவ்வாறான ஆராய்ச்சிகளில் எனக்கு ஆர்வமிருக்கவில்லை. இதற்கிடையில் பல்கலைக்கழகத்தில் சந்தித்த ஜேனை மணம் முடித்திருந்தேன். எனவே, பல்கலைக்கழகத்தில் கிடைக்கச் சாத்தியமாயிருந்த மாணவர் ஊக்கத் தொகையை நம்பியிருக்க நான் விரும்பவில்லை. பதிப்புத் துறை எனக்குச் சரியாக வரும் என்ற தீர்மானத்துடன் இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன். ஆனால் நாளெல்லாம் காகிதக் கட்டுகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது இது அவ்வளவு உற்சாகமான வேலையில்லை என்ற எண்ணம் எழுகிறது.

டைம்ஸ் நாளிதழில் வெளியாகும் ’ஆட்கள் தேவை’ விளம்பரங்களை அவ்வப்போது பார்ப்பதுண்டு. அப்படித்தான் வானொலியில் உரையாடல் நிகழ்ச்சி தயாரிப்புக்குத் தகுதியான ஆட்களைக் கேட்டு பி.பி.சி வெளிட்ட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது. உலகின் தொலைதூரப் பிரதேசங்களுக்கு என்னை கொண்டு செல்லும் வாய்ப்புகள் அமையாமல் போய்விட்டன. ஆனால் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் வழியாக அப்படி பயணம் செய்தவர்களுடன் உரையாடி அவர்களது அனுபவங்களை அறிய வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த வேலைக்கு நான் விண்ணப்பித்தேன். இரண்டு வாரங்களுக்குப் பின்பு பதில் கிடைத்தது, அந்த வேலை வேறு ஒருவருக்கு தரப்பட்டுவிட்டது என்று பணிவுடன் தெரிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் நான் சிறுவர் பாடப் புத்தகங்களின் மெய்ப்புகளைப் பார்க்கத் தொடங்கினேன்.

ஆனால், எதிர்பாராத விதத்திலும் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையிலும் என் அலுவலக எண்ணுக்கு அழைப்பு வந்தது. தனிப்பட்ட விஷயங்களுக்கு தொலைபேசியை உபயோகிக்க அனுமதி கிடையாது. எனவே அந்த அழைப்பு பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. மறுமுனையில் தன்னை மேரி ஆடம்ஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பெண்மணி தான் அழைப்பது கார்பரேஷன் டெலிவிஷன் சர்வீஸிலிருந்து, பி.பி.சி.யிலிருந்து இல்லை என்றும் விளக்கினார். நிகழ்ச்சித் தயாரிப்புக்காக அனுப்பியிருந்த விண்ணப்பத்தைக் கண்டதாகவும் ரேடியோ நிகழ்ச்சிக்கு விருப்பம் தெரிவித்திருந்த போதும் தொலைக்காட்சி வேலைக்கு நான் தகுதியானவனாய் இருப்பேன் என்று நம்புவதாகவும் சொன்னார். எனக்கு விருப்பம் உள்ளதா என்று கேட்ட போது நான் திகைத்தேன். அவ்வளவாய் தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்பதை ஒப்புக்கொண்டேன். என்னுடைய மாமனார் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் தான் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன் என்றும் என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டியில்லை என்பதையும் சொன்னேன். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததையோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காததையோ தகுதிக் குறைவாகத் தான் நினைக்கவில்லை என்று ஆடம்ஸ் தெரிவித்தார். பயிற்சியில் சேர்வதைக் குறித்து உரையாட தன்னை வந்து நேரில் சந்திக்க முடியுமா என்றும் கேட்டார். அந்த ஆண்டு எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பதினான்கு நாட்கள் விடுமுறையிலிருந்து ஒரு நாளைக் கழித்துக் கொள்ளும்படி என்னுடைய நிறுவனத்திடம் விண்ணப்பித்து விட்டு திருமதி ஆடம்ஸைச் சந்திக்கவென லண்டன் வடக்குப் பகுதியிலிருந்த அலெக்ஸாண்ட்ரா பேலசுக்குச் சென்றேன்.

லண்டன் வடகிழக்கு புறநகர்ப் பகுதியில் குன்று ஒன்றின் உச்சியில் இயற்கை எழில் சூழ அமைந்திருந்தது அலெக்ஸாண்ட்ரா பேலஸ். இசை நடன நிகழ்ச்சிகளுக்காக பிரமாண்டமான கூடத்துடனான அந்த மாளிகையில் அலுவலக உபயோகத்துக்கென நிறைய அறைகள் உள்ளன. அவற்றில் இரு சிறிய தொலைக்காட்சி ஸ்டூடியோக்களுக்கென இரண்டு அறைகளை இணைத்து மாற்றி அமைத்திருந்தனர். உச்சியில் அமைக்கப்பட்டிருந்தது தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒலிபரப்புவதற்கான நெடிய கோபுரம். 1936ம் ஆண்டு மக்கள் கண்டுகளித்த உலகின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதன் வழியாகத்தான் ஒலிபரப்பப்பட்டது. அந்த கோபுரத்துக்கு நேர்கீழே திருமதி. ஆடம்ஸின் அலுவலகம்.

ஐம்பதுக்கும் மேல் வயது. நரைத்த தலைமயிர். இனிமையான பேச்சுக்கு நடுவே சன்னமான இருமல். துளைக்கும் பார்வை. உரத்தச் சிரிப்பு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற திருமதி. ஆடம்ஸ் சிறிது காலம் கல்வித் துறையில் பணியாற்றிய பின்பு பி.பி.சி.யின் கல்வித்துறையில் இணைந்திருந்தார். உலகின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது பங்களிப்புகள் இருந்துள்ளன. உலகப் போருக்குப் பின்பு மீண்டும் பி.பி..சி.யில் இணைந்த அவருக்குத் தரப்பட்ட பணி தொலைக்காட்சிக்கென நேர்காணலை அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு துறையை உருவாக்குவது.

மேரி ஆடம்ஸ்

உடனடியாக வேலை தரமுடியாத நிலையை விளக்கி என்னை மூன்று மாத காலப் பயிற்சியில் சேரும்படியும் வாய்ப்பு வரும்போது பணியில் சேரமுடியும் என்றும் தெரிவித்தார். உத்தரவாதம் எதுவும் கிடையாது. திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் எனக்கு ஏற்கெனவே ஒரு வேலை உள்ளது, எனவே அதை விடுத்து இப்படியொரு வாய்ப்பை ஏற்பது குறித்த தயக்கத்தைத் தெரிவித்தேன். மூன்று மாத காலப் பயிற்சியின் போது எனக்கு ஊதியமாக ஆயிரம் பவுண்டுகள் தரப்படும் என்றும் குறைந்த தொகையே ஆனாலும் அதற்கு மேல் தர தொலைக்காட்சித் துறையில் அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்த போது நான் அதிர்ந்து போனேன். கீழே விழாமல் இருக்க நாற்காலியை கெட்டியாகப் பற்றிக் கொண்டேன். ஏனெனில் அவர் சொன்ன தொகை என் பதிப்பாளர் ஆண்டொன்றுக்கு தருகிற சம்பளத்தை விட இரு மடங்காகும். உடனடியாக ஒப்புக்கொண்டு வெளியே வந்தபோது என் கால்கள் காற்றில் மிதந்திருந்தன.

ஒரு வாரம் கழித்து எனக்கான பயிற்சிக் கடிதம் வந்தது. என் முதலாளியிடம் நன்றியுடன் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தேன்.”

***

“பயிற்சியில் சேர்வதற்கு முன்பே திருமதி. ஆடம்ஸ் தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு நேர்காணல் செய்து தர முடியுமா என்று கேட்டார். உற்சாகத்துடன் மீண்டும் நான் அலெக்ஸாண்டிரா மாளிகைக்குச் சென்றேன். அங்கே சென்ற பின்புதான் தெரிந்தது, நேர்காணல் செய்யும் முதன்மை செய்தியாளருக்கு உதவுவதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜான் ரீட். அப்போது பெண்களுக்கான பிற்பகல் நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்தவர் மிஸ் கில்பெர்ட். ‘மிஸ் கில்பெர்டின் வார இறுதி நாட்குறிப்பு’ என்ற புதிய தொடரின் முதல் நிகழ்ச்சியே அன்று ஒளிப்பதிவு செய்யப்படவிருந்தது.

ஜான் ரீட் என்னை மேக்கப் அறைக்குச் செல்லும்படி பணித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான சக்தி வாய்ந்த மின்னொளிக்கேற்ப என் முகத்தில் திடமான பூச்சுவேலைகள் நடந்தன. பின்பு அரங்கத்துக்கு என்னை அழைத்துச் சென்று மிஸ் கில்பெர்டிடம் அறிமுகப்படுத்தினார். திடமான உடலும் ஈர்க்கும் வனப்பும் கொண்டிருந்த மிஸ் கில்பெர்ட் நுட்பமான சிகையலங்காரத்துடன் காட்சியளித்தார். ஒப்புக்குக் கை கொடுத்துவிட்டு சரேலென திரும்பி தனது அறைக்குத் திரும்பினார்.

அன்று நேர்காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தவர் ஒலிம்பிக் தொலைதூர ஓட்டப் பந்தய வீரர் கார்டன் பைரி. எங்கே எப்படி உட்கார வேண்டும், ஒளியை எப்படி முகத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் வகுப்பெடுத்தார்கள்.

ஒளிபரப்பு தொடங்கியது. மிஸ் கில்பர்ட் தனது புதிய நிகழ்ச்சி குறித்து விரிவாகச் சொல்லி தனது இரசிகர்களை வரவேற்றார். அவர் என்ன சொல்கிறார், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை என்னால் சரியாக கவனிக்க முடியாத தவிப்பில் இருந்தேன். திடீரென்று அவளது குரல் என் செவியில் அதிர்ந்தது. “இப்போது எனது நெருங்கிய நண்பரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதோ, டேவிட்.” நெருங்கிய நண்பரென்று என்னைத்தான் அவர் குறிப்பிட்டார் என்பதை சற்றே ஆச்சரியத்துடன் உணர்ந்த நொடியில் எனக்கருகில் இருந்த கேமராவுக்கு மேலிருந்த சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது. முகத்தில் கட்டாயமாக புன்னகையை வரவழைத்தபடி பேசத் தொடங்கினேன்.

கார்டன் அவராக முன்வந்து பேசும் சுபாவம் கொண்டவரில்லை. நான் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கும் அவரது பதில் ஒற்றைச் சொல் கொண்டதாகவே இருந்தது. அவராகச் சொல்ல வேண்டிய பல விஷயங்களை நான் என் கேள்விகளின் வழியாக அவருக்குப் புகட்ட வேண்டியிருந்தது.

இராணி எலிசபெத்துடன்

“கார்டன், உங்களுக்கென பிரத்யேகமான பயிற்சி முறைகளை வைத்திருக்கிறீர்களா?” எனக்கெதிரே உள்ள கேமராவை நோக்கி நான் கேட்கிறேன்.

அவர் தனக்கு எதிரில் உள்ள கேமராவைப் பார்த்தபடி சொல்கிறார் “ஆம்.”

“பயிற்சிகளின்போது பெரும்பாலும் நீங்கள் தலையாணிகள் பதித்த காலணிகளையே பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.” சேகரித்த தகவல்களை நினைவுக்குக் கொண்டு வந்து நான் கேட்கிறேன்.

“ஆம்.”

“நீங்கள் ஏன் அப்படி தலையாணிகள் கொண்ட காலணிகளைப் பயன்படுத்துகிறீர்கள்?”

“ஏனென்றால் அப்போதுதான் என்னால் வேகமாக ஓட முடிகிறது.”

அடுத்த கேள்வியை மிஸ் கில்பர்ட் தொடங்க என்னுடைய பணி அத்துடன் முடிந்தது.

நான் சிறப்பாக வேலையைச் செய்ததாக ஜேன் என்னிடம் சொன்னார். வேறு யாரும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் மிஸ் கில்பர்ட் அடுத்த நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை. திருமதி ஆடம்ஸிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. தொலைக்காட்சியில் எனது முதல் நிகழ்ச்சி சோபிக்கவில்லை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

இந்தக் கதைக்கு இன்னொரு சுவாரஸ்யமான பின்கதை உள்ளது.

ஆண்டுகள் பல கழிந்தது. நிறுவனத்திலிருந்து திரு. ஜான் ரீட் ஓய்வு பெற்றபோது அவரது பிரிவுபச்சார விழாவில் அவரைப் பற்றி பேசும் பணியை என்னிடம் ஒப்படைத்திருந்தனர். இதற்காக ஜான் ரீட் அவர்களின் விபரங்கள் அடங்கிய கோப்பு என்னிடம் வந்தது. அதைப் புரட்டியபோது நான் பங்கேற்ற அந்த முதல் நிகழ்ச்சி முடிந்த பின்பு திருமதி. ஆடம்ஸ் எழுதியிருந்த குறிப்பு கண்ணில் பட்டது. “டேவிட் அட்டன்பரோ புத்திசாலி. நம்பிக்கை தரும் விதத்தில் செயல்படுகிறார். ஒரு தயாரிப்பாளராக அவர் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் நேர்காணல் செய்பவராக மறுபடியும் அவரைப் பயன்படுத்தக்கூடாது. அவரது பற்கள் மிகப் பெரியவை.”

***

“பி.பி.சி.யின் எங்கள் துறையிலிருந்து நாங்கள் தயாரித்த ஆரம்பகால வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்று, ‘Animal, Vegetable, Mineral?’. எங்கள் துறையின் மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சி இது. ஏதேனும் ஒரு அருங்காட்சியகம் காட்சிப்படுத்தும் குறிப்பிட்ட ஒரு பொருளை அகழ்வாராய்ச்சியாளர்களும் கலை வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களையும் கொண்ட குழு கண்டறிந்து அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பதே சவால். நிகழ்ச்சியின் நெறியாளர் கிளின் டேனியல் உற்சாகமான இரசிகரும் கலை ஆர்வலரும் ஆவார். நிகழ்ச்சித் தயாரிப்பாளரான பால் ஜான்ஸ்டோனுக்கு உதவியாளர் நான். தேர்ந்தெடுக்கப்பட்ட அருங்காட்சியகத்திலிருந்து அபூர்வமான ஒரு பொருளைக் கண்டறிந்து நிகழ்ச்சிக்குத் தருவது தான் என்னுடைய வேலை. வசீகரிக்கும் பின்னணிகளைக் கொண்ட பொருட்களைக் கொண்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யபடுத்தத் திட்டமிட்டோம். ஜப்பானின் ஹேரி அய்னு தனது மீசையை பராமரிக்கப் பயன்படுத்திய மீசை முறுக்கான், ரோமானியர்களால் தாயக் கட்டையாகப் பயன்படுத்தப்பட்ட குதிரை எலும்பு போன்றவை அவ்வாறான கலைப் பொருட்களில் சில. துறை வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்துவதோ தர்மசங்கடப்படுத்துவதோ எங்கள் நோக்கம் அல்ல. பதிலாக, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட கலைப் பொருளை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள், எந்த முறையில் அதை வகைப்படுத்துகிறார்கள், அவற்றின் சரித்திரப் பின்னணியை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதும் அதன் வழியாக பார்வையாளர்களை ஈர்ப்பதுமே நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

Animal, Vegetable, Mineral?

ஒரு முறை மேரி ஆடம்ஸ் தனது நண்பரான சர் ஜூலியன் ஹக்ஸ்லியை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவிருப்பதாகவும் அதற்கென சிறப்பான ஒரு கலைப் பொருளை ஏற்பாடு செய்யும்படியும் சொல்லியிருந்தார்.

அருங்காட்சியகம் ஒன்றின் காட்சிப்பொருட்களின் நடுவே சிறிய முட்டை ஒன்றைக் கண்டேன். தடித்த ஓடு கொண்ட அது புறா முட்டையின் அளவில் இருந்தது. இந்தக் கலைப்பொருள் நிகழ்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் நினைத்ததற்குக் காரணம் இது பறவையினால் இடப்பட்டதல்ல, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய நத்தை ஒன்றினுடையது. சர் ஜுலியன் ஹக்ஸ்லிக்கு இதைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்காது என்று நான் எண்ணினேன். ஏனெனில் இதுபோன்ற முட்டைகள் உயிரியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பரிசோதனைக் கூடத்தில் தேர்வுக்கென வழங்குவதுண்டு. ஆனாலும் கூட அவர் இதைக் குறித்து ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சொல்லக்கூடும் என்று நினைத்தேன்.

நிகழ்ச்சி தொடங்கியது. அன்றைய சவாலுக்கான கலைப்பொருள் விருந்தினரான ஹக்ஸ்லிக்குக் காட்டப்பட்டது. எல்லா கோணங்களிலிருந்தும் அதன் பரிணாமத்தைக் காணும் வகையில் சுழலும் மேசையிலிருந்தது அந்த முட்டை.

“சர் ஜுலியன், இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய கலைப்பொருள்” என்று தனக்கேயுரிய குரலுடன் சொன்னார் கிளின்.

“இதைக் குறித்து பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை…” என்று உடனடியாகச் சொன்னார் சர் ஜுலியன் ஹக்ஸ்லி. “உலகில் இது போன்ற கனத்த ஓடு கொண்ட முட்டைகளை இருவகையான உயிரினங்களே இடுகின்றன. ஊர்வனவும் பறவைகளும். இதனுடைய அளவைப் பார்த்தால் இது பறவையின் முட்டை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே இது ஊர்ந்து செல்லும் விலங்குடையதாகத் தான் இருக்க வேண்டும். ஏதேனுமொரு பல்லியுடையதாக இருக்கலாம். மேலும் இதை துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு போதுமான அறிவியல் தன்மைகள் எவையும் இப்பொருளில் இல்லை.”

“அப்படி இல்லை” என்று மெல்லச் சொன்னார் கிளின் “எனக்குத் தரப்பட்டிருக்கும் பெயர் பல்லியினுடையது இல்லை.”

“ஏனென்றால் உயிரியலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.”

“இருக்கலாம். ஆனாலும் கூட, இது ஊர்வன இன விலங்கு இல்லை என்பது உறுதி.”

சர் ஜுலியன் பொறுமையிழக்கலானார். “சவால். நான் சொல்லிய விடை தவறென்றால் ஐந்து பவுண்டுகள் தருகிறேன்.”

“என் கையில் இருக்கிற இந்த அட்டையில் எழுதப்பட்டுள்ள பெயர்…” என்று நிதானமாகச் சொன்னார் கிளின் ”அசாடினா, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய நத்தை.”

குறிப்பிட்ட இந்தத் தருணத்தில் கேமரா இயக்குநராக என்னுடைய வேலை வெற்றிச் சிரிப்புடன் முறுவலிக்கும் கிளினின் முகத்தைக் காட்டுவதா அல்லது பற்களை நெறித்தபடி சிவந்திருக்கும் சர் ஜுலியன் ஹக்ஸ்லியைக் காட்டுவதா என்று முடிவு செய்வது தான். யாருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தா வண்ணம் சமயோசிதமாக மேசையின் நடுவில் இருக்கும்  முட்டையைக் காட்டச் செய்தேன்.

நிகழ்ச்சி முடிந்து விருந்தினர் அறைக்கு வந்த போது சர் ஜுலியன் ஹக்ஸ்லி ஐந்து பவுண்ட் நோட்டை எடுத்துத் தருவதை படம் பிடிக்கச் செய்தியாளர்கள் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.”

93 வயது

– தொடரும்.