ஆளில்லா ரயில்வே கேட்களில் தாழ்ந்து உயரும் அருட்கரங்கள்: பெருந்தேவியின் கவியுலகம்

0 comment

ஒரு தடித்த ஆய்வு நூலுக்கில்லாத கண்கள் ஒரு கட்டுரைக்கில்லாத உதடுகள் திமிர் பிடித்த கவிதைக்குண்டு – பெருந்தேவி

1

ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை என்ன அளிக்கும்? முதன்மையாக மொழியின் வார்ப்புருக்களைச் சிதைத்து அர்த்தங்களை உருக்கும். அவருடைய மொழியையும் சிந்தனையையும் பார்வையையும் தேய்வழக்காகாமல் காக்கும். அவருடைய உணர் கொம்புகளில் படிந்திருக்கும் பிசினை நீக்கித் துலங்கச் செய்யும். பெருந்தேவியின் கவிதை மேலதிகமாக ஒன்றை எனக்குச் செய்தது, மேற்சொன்ன வரிகளை எழுத்தாளன், அவன் என்று ஆண்பால் விகுதியிலேயே இதற்கு முன்பு வரை எழுதி இருக்கிறேன். அதை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

ஆயுர்வேதத்தில் ‘பிரகிருதி’ என்றொரு கோட்பாடு உண்டு. முக்குற்றங்களான வாத பித்த கபங்களின் விகிதாசாரம் பொருத்து அக புற இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அதன் நம்பிக்கை. பெருந்தேவியின் கவிதைகளை வாசிக்கும் போது, இவை வாத பிரகிருதி உடையவரின் கவிதைகள் என்பதே என் முதல் எண்ணம். சல சித்தம் என்பார்கள். எப்போதும் அலைவுறும் படைப்பு மனம் உருவாக்கும் கவிதைகள். சுவர்களில் ஓயாமல் முட்டும் குருட்டு மிருகத்தின் தவிப்பு.

தந்தையின் மரணம் பல கவிதைகளில் பேசுபொருள் ஆகிறது. புகைப்படங்கள்:- ‘இறந்த பெற்றோரின் புகைப்படங்களைப் போல/படுக்கையறையில் விரோதிகள் வேறில்லை / உயிரோடிருந்த சமயத்தைவிட / அதிகம் விழித்திருக்கிறார்கள்.’ ஆதார், பண மதிப்பிழப்பு, ஸ்டெர்லைட் போராட்டங்கள், பாலியல் பாகுபாடு எனத் தற்கால அரசியல் பற்றி தயக்கமற்ற வலுவான அரசியல் கவிதைகள் எழுதுகிறார். முக்கியமாக அவை வெகு அரிதாகவே பிரகடனத்தன்மை கொள்கின்றன (கம்பீரம் போன்றவை). ‘பின்பாலியல் உயிரியாக’ கவிதையில் அறிவித்துக் கொண்டு காமத்தின் என்சைக்ளோபீடியா மாற்றி எழுதப்பட வேண்டும் என்கிறார். மேஷங்கள் கன்னிகள் விருச்சிகங்கள் முதலைகள் கவிதையில் – ‘எந்த ஜோசிய இணையதளத்திலும் இல்லாத / ஆண்மையின் பொதுக் குணாம்சம் / அந்தக் கடைசித் தகவல் / ராசிகளைக் கடந்த மொத்த சாராம்சம் / ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் / சக ஆண்களைக் காட்டிலும் / முதலைகளையே பிடிக்கிறது / ஆண்களின் மனசு ஆக வினோதம்’ என அவருடைய குரல் ஒலிக்கிறது.

பெருந்தேவி கவிதைகளில் மரபு தொழிற்படும் இடங்கள் கவனிக்கத்தக்கவை. அவை மரபுடைப்பு அல்லது மரபு பேணல் என இரு எல்லைகளுக்குள் வகுக்கப்பட முடியாதவை. ஒரு எல்லையில் தில்லை காளி நடனப் போட்டியில் வென்ற ஆடலரசனை கேலி செய்கிறாள். மறு எல்லையில் எந்திர மனிதர்களும் அந்நியர்களும் யு.எப்.ஓக்களும் கவிதைகளில் நடமாடுகிறார்கள். எக்ஸ்பிரெஸ் அவென்யு கவிதைக்குள் த்ரேதா யுகம் பற்றிய குறிப்பு வருகிறது. டில்டோவும் ஸ்டில்லேடோவும் செக்ஸ்ட்டும் ஃபேஸ்புக்கும் ஃபேக் ஐடியும் கவிதைகளில் உலாவுகின்றன.

நிகழ்வுகளைக் காட்டிலும் சாத்தியங்களின் கற்பனைகளில் லயிப்பதையே கவிதைகள் பேசுகின்றன. “எப்போதும் நான் சாத்தியங்களிலேயே கிளர்ச்சியடைந்து விடுகிறேன் – (ஆனால்)”

சாத்தியத்துக்கும் நிகழ்வுக்குமிடையே
ஆனால் என்பது துருப்பிடித்த பாலம்
ஒவ்வொரு நொடியும்
விழுந்துகொண்டே இருக்கிறது
எல்லாம்வல்ல ஒரு
சிட்டுக்குருவி கூட
அதில் தத்தி நடக்க அஞ்சுகிறது

ஆற்றாமையும் ஆத்திரமும் பல கவிதைகளின் மைய உணர்வாகத் தொனிக்கின்றன. உதாரணம் – “இந்தக் கவிதை பழைய பாணியில்  எழுதப்படுகிறது.” அங்கதத் தொனி கொண்டதாகத் தோற்றமளிக்கும் இக்கவிதை முடிவுறும்போது ‘யாருமற்ற ஊரைச் சுற்றி ஓடும் ஆற்றையும் / யாருமற்ற உலகத்தில் வசிக்கும் என்னையும் / மயிராக நினைப்பவர்களுக்காக’ என ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறது. நவீன வாழ்வின் மீதான ஒரு கரிப்பு அவருடைய பல கவிதைகளில் தொனிக்கிறது. ‘தரிசனம்’ கவிதையில் காப்காவின் பூச்சியாக மனிதர்களை காண்கிறார்.. சொத்தைப் பல்லில் நிரவப்பட்ட பூசை, நாக்கால் நிரடி அதன் துளையை மீண்டும் மீண்டும் தொடும் ஒரு உணர்வு நிலை. எங்கு சென்றாலும் எப்படிச் சென்றாலும் அந்தத் துளையை நோக்கியே படைப்பாளிகள் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் பெருந்தேவியின் மரபு சார்ந்த அறிவும் எதிர்க்கவிதை பாணியும் அவரைப் பிற கவிகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

ஆத்மாநாமிடம் கேட்க ஒரு கேள்வி

நீரில் மூழ்கும் முன்
நீ அணிந்திருந்த ஆடையை
வக்கணையாக மடித்து வைக்க
உனக்கேன் தோன்றியது
சொல்லேன்
வாழ்வு – பைத்தியம்
சாவு – பைத்தியம்
இடையில்
இரண்டு மணிமுடிச்சுகள்
இறுகிக் கிடக்கின்றன
அவிழ்க்க உதவி செய்யேன்
ஒரு பதில்
ஒரு வாய்ப்பு
இங்கிருந்து விளையாட
அல்லது
முடிவை ஏமாற்ற
ஒரு குட்டிச் சாத்தியம்

***

இக்கவிதையை ஒரு செவ்வியல் நவீனத்துவ கவிதை எனக் கொள்ளலாம்.

பருன்மையை குலைத்தல் எப்போதும் கவிதைகளின் இயல்பு. மொத்தப் புடவியையும் நீர்மையின் அம்சமாக காணுதல். ‘அறையின் நடிப்பு’ அப்படியான ஒரு கவிதை. ரத்னா ஸ்டோர்ஸ் பகல் 3-3.15 கவிதை எனக்குத் தேவதச்சனின் ‘இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமி’ கவிதையை நினைவு படுத்தியது. ரத்னா ஸ்டோர்ஸ் பெண்கள் தங்களுக்கேயான பதினைந்து நிமிடக் கடலைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். ஏதோ ஒருவகையில் சின்னச்சின்ன இணைப் பிரபஞ்சங்களை நாம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.

இவை பெருந்தேவியின் கவிதைகளில் நான் உணர்ந்த பொதுவான அம்சங்கள். பெருந்தேவியின் புதிய தொகுதியான ‘விளையாட வந்த எந்திர பூதம்’ (யாவரும் வெளியீடு) முன்வைத்து அவருடைய கவிதைகளில் கடவுள் – கவிதை பற்றிய கூற்றுகள் என இரண்டு தளங்களை மட்டும் முன்வைத்து சில அவதானிப்புகளை நிகழ்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

2

அப்பா
இறக்கும்போது பொட்டலமாய்ச்
சுருங்கிய உடலோடு
பரலோகம் என்று ஒன்றிருந்தது
அங்கே அவர் சென்றிருந்தால்
முடிந்தவரை தன் குச்சிக் கைகளால்
அங்கிருந்து அதிசயமாக நீளும் கைகளைத்
தடுத்துக் கொண்டிருப்பார்
‘அவளுக்கு எதையும் தராதிரும்,
முட்டாள் பிழைத்துப் போகட்டும்!’

***

இந்தக் கவிதை எனக்கு இசையின் ‘பிதாவே’ கவிதையை நினைவுக்கு கொண்டு வந்தது. ‘ஒரு பந்தென இருக்கிறோம் / கடவுளின் கைகளில் / அவரதைத் தவறவிடுகிறார் / தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத் / தன் பாதத்தால் தடுத்து / முழங்காலால் ஏற்றி / புஜங்களில் உந்தி / உச்சந்தலையில் கொண்டு முட்டி / இரு கைகளுக்கிடையே / மாறி மாறி தட்டி விளையாடுகிறார் / மறுபடியும் பாதத்திற்கு விட்டு / கைகளுக்கு வரவழைக்கிறார் / ‘நான் உன்னை விட்டு / விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை / பிதாவே! தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.’

ஒருவகையில் கடவுளின் கரங்கள், அது அருட்கரமாகவே இருந்தாலும் அதன் பிடியிலிருந்து விடுபடுதலே நவீன மனிதனின், அவனுடைய கலையின் நோக்கமாக இருக்கிறது. தனக்கு எந்த அளியும் வரமும் தேவையில்லை, அல்லது தனக்கு அளிக்கப்பட்டவை சார்ந்த ஒரு வித மிரட்சி பல்வேறு கவிதைகளில் உணர்வு நீட்சி கொள்கிறது. ‘திரும்பி வந்த கிளி’ கவிதையில் ‘தவிர நீ எனக்கு அதிகப்படி அந்தஸ்து இப்போது உன்னை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்தால் யார் தான் போடுவார்கள்’ என எழுதுகிறார். ஒருவகையான இருதலைக்கொல்லி நிலை. இந்தக் கவிதையையும் இவ்வரிசையில் வைக்கலாம்.

வராத செய்தி

ஆழ்கடலில் அல்லாதவற்றுக்காய் காத்திருக்கும் முத்துக்கொத்தோ
போகாத செவ்வரளிப் பூப்பாதையில் கலந்துவிட்ட தங்கச் சாவியோ
சுற்றி வருபவர்களில் ஒருவராய் மாறிவிட்ட குருட்டு வேதாளமோ
மறைத்த திரையை அவிழ்க்காமல் காத்து இரட்சிக்கும் அருட்கரமோ
யானறியேன்
வராவிட்டாலும் வராதே இருக்கட்டும் வராத செய்தி.

***

பெருந்தேவியின் கவிதைகள் வழியாக கடவுளின் இருப்பையும்,  இன்மையையும், ஐயத்தையும் மாறி மாறி பரிசீலனை செய்கிறார் எனத் தோன்றுகிறது.

விண்ணப்பம்

சின்ன ஆன்மாக்கள் அழுகின்றன
பெரிய ஆன்மாக்கள் மன்னிக்கின்றன
இடைப்பட்டவை மருகுகின்றன
அவமானத்தில் அல்லது அச்சத்தில்
இறை
(ஒன்று இருந்தால்)
சிலவற்றைத் தேற்றட்டும்
பெரியவற்றைப் பொறுக்கட்டும்
தவறினாலும்
ஒன்றை மட்டும் செய்துவிடட்டும்
இடைப்பட்டவற்றை
சிறிதாகவோ
பெரிதாகவோ
ஆக்கிவிடட்டும்

***

‘உலோக ருசி’ தொகுப்பில் உள்ள கவிதை இது. இறைக்கு அருகே அடைப்புக் குறிக்குள் ஒன்று இருந்தால் என வருகிறது. ஏறத்தாழ இதே உணர்வை கொண்டிருக்கும் மற்றொரு கவிதை. ஆனால் இதில் ஐயமற்ற இறைஞ்சுதல் வெளிப்படுகிறது.

வேண்டுதல்

விண்மீன்கள்
அல்லிகளாய் போதவிழும்
இரவில்
எம் தேவமாதாவே
உன் ஒளிர்க்
கன்னமதாய்
அமைதி சிறிதே
காட்டித்தாரும்
விம்மி விம்மி நெஞ்சம்
உறைகிற
தன்னுணர்வை
மெழுகுவர்த்திக்கு
இணையாக்கி
உருக்கித்தாரும்.
சுகங்களின் கிளிஞ்சல்கள்
கனவில்
எம் பாதங்களைக்
கிளிக்காதிருக்கட்டும்.
துயரங்களை ஆண்டடக்கிய தாயே
மகனுக்கு உண்டானதை
மகளுக்குத் தாராதேயும்
இதயமுனத்தில்
ஏந்திய அம்புகளை
வாரத்தின் நாட்களாக்கிக் கொண்டோம்
இரவுக்கு விசனத்தை ஊட்டாதேயும்
அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாதத்தையாவது தாரும்

ஏன் ஏன்

அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்க்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளிக்
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.

***

இந்தக் கவிதை உன்னதமான எதையும் அல்ல, குறைந்தபட்சம் உடைந்து அழுவதற்குப் போதுமான கண்ணீரைக் கோருகிறது. கண்ணீர் வழியே வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள முனைகிறது.

தனிப்பட்ட முறையில் பெருந்தேவியின் மொத்தக் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதைகளில் ஒன்று என இக்கவிதையைத் தயங்காமல் சொல்வேன். அவரே மறுத்தாலும் கவிஞரின் முகத்தில் தேவனைத் தேடாமல் இருக்க முடிவதில்லை. பேரிருப்பின் சமிஞ்கையை உணர்ந்து கொண்ட திடுக்கிடல் வெளிப்பட்ட கவிதை.

உடல் பருத்த பெண்

நான் உடல் பருத்த பெண்
நடக்கும்போது மூச்சு வாங்குகிறது
நரைகளைப் பற்றி கவலையில்லை
பொடி எழுத்துகளைப் படிக்க கண்ணாடி தேவைப்படுகிறது
ஆனால் படிக்க முடியாது
எனக்கு சுகமாக நித்திரை வருகிறது
எந்தக் கனவுக் கோளாறுமில்லை
இரவில் படுக்கையில் படுத்தபடி
ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்
ஒரே நட்சத்திரக் கோலாகலம்
இப்படி நிரூபிப்பதெல்லாம்
அவசியமில்லையேயென்று
எப்போது புரியப் போகிறது
முட்டாள் கடவுளுக்கு

க்ரீம்ஸ் ரோடில் ஒரு காலத்தில் எனக்குச் சிரிப்பு இருந்தது

மாற்றக் கடவுளுக்குமுன்
மண்டியிட்டுக் கதறி அழுபவர்கள்
இரவில்தான் அழுவார்கள்
நிலாவின் ஒரு துண்டத்தோடுதான்
துக்கத்தை விழுங்க முடியும்

நவம்பர்

அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில் உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன

இக்கவிதைகளில் அவர் பயன்படுத்தும் அருள் எனும் சொல் என்னை வெகுவாக சலனப்படுத்துகிறது. அருளுக்கான இறைஞ்சுதல் கவிதைகளில் தொனிக்கிறது. பின்னர் அவை உதாசீனப்படுத்தப்படுகின்றன. மொத்தக் கவிதையுலகிலும் இந்த இருமை அவரை அலைக்கழிக்கிறது என்றே எண்ணுகிறேன். கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு வாசகரை பதட்டம் கொள்ளச் செய்கிறது. இவை தவிர்த்து முற்றிலும் விளையாட்டு தொனியில் கடவுள் வந்து செல்லும் கவிதைகளும் சில உண்டு.

அலகிலா விளையாட்டின்
அழிக்கும் கடவுள் டெட்டால் தான்
சந்தேகமேயில்லை
சக்திவாய்ந்த அதைத்தவிர
வேறெவரிடத்திலும் சரணடைவதில் பொருளில்லை.

விளையாட்டு

தம்ளர் காப்பியில் ஓர் எறும்பு
நீந்திச் செல்கிறது
கடவுளைப் போல நான்
சக்தியோடிருக்கிற
அபூர்வத் தருணம்
எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன்
உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத் தூக்கித் தான் கும்பிடேன்

***

வாழ்வின் ஒரு தருணத்தில், எவரேனும் ஒருவருக்காவது கடவுளாக வேண்டும் எனும் விசை மனிதர்களுக்கு உள்ளது தான். இக்கவிதை ஒரு எல்லையில் குரூரத்தையும் மறு எல்லையில் பகடியையும் கொண்டிருக்கிறது. ஒரு உயிர் தன் கட்டுப்பாட்டில் உள்ளதான எண்ணம் இல்லாத அதிகாரத்தைக் கற்பிதம் செய்து கொண்டு திருப்தியுறுவது மற்றொன்று.

தெரிந்ததைக் கூறுகிறேன்

சாமி கண்ணைக் குத்திவிடும் எனக்
குழந்தைகளுக்குச் சொல்வதைப் போல
தங்களுக்குச் சொல்லிக்கொள்கிறார்கள்
உண்மையில் இதுவரை எந்தச் சாமியும்
யார் கண்ணையும் குத்தியதில்லை
மனிதர்கள் பார்க்காதபோது சாமிகள்
அரிவாள் சூலம் பொருள்களைக்
கீழே வைத்துவிட்டு நெட்டி முறிக்கிறார்கள்
பார்த்துவிட்டுப் போன மனிதர்களைப் பற்றி
அவர்கள் பேசிக்கொள்ளும்
கிசுகிசுக்களைக் கேட்டால்
காதைப் பொத்திக்கொள்வோம்

மந்தகாசமாக இருக்கும் சாமிகளுக்கு
இதில் அதிக சுவாரசியம் இருக்கிறது
முட்டைக்கண்ணை உருட்டி விழிப்பவர்கள்
கேட்காததைப் போலப் பாவனை செய்கிறார்கள்

உங்கள் உலகம் அழியும்போது
உங்கள் கணக்காகச் சித்திரகுப்தன்
வாசிக்கப்போவதெல்லாம் கிசுகிசுக்கள்தான்
இது தெரிந்திருந்தால்
நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும்

3

கவிதைகள் வழியாகக் கவிதையை அவர் எப்படி பார்க்கிறார்? இத்தொகுப்பிலும் முந்தைய தொகுப்புகளிலும் பல கவிதைகள் கவிதைகளைப் பற்றியவை. இலக்கிய உலகம், படைப்பு மனம் சார்ந்து பல கவிதைகள் உள்ளன.

‘உலோக ருசி’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நேர்’ கவிதைக்கு இலக்கணம் அளிக்க முற்படுகிறது.

கவிதையெனப்படுவது யாதெனில் / உன் கண்ணை அது நேருக்கு நேர் / பார்க்க வேண்டும் / தவிர்த்துப் பார்வையைத் / திருப்பிக் கொண்டால் / உன் தாடையை உடைத்து / முகத்தைத் தன் பக்கம் / திருப்பி விடுமோ / என அச்சம் தருகிற வகையில் / வலிமையாக / அதன் வலிமை அதன் நேர் மட்டுமே.

இங்கிருந்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இளம் கவிஞர்களுக்கு’ கவிதையைக் கணக்கில் கொண்டால் ஒரு பயணம் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. கவிதைக்கும் எதிர்க்கவிதைக்கும் இடையிலான ஒரு பயணம் அல்லது ஊசலாட்டம். வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும் என பர்ரா கவிதைக்கு புதிய விளக்கம் அளிக்கிறார்.

இளம் கவிஞர்களுக்கு

ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்க வேண்டும்
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்’
என்கிறான் மகாகவி பர்ரா.

எதிர்க்கவிதையின் இயல்புகள் பற்றிய ஒரு கவிதை.

எதிர்க்கவிதையை வாசித்தல்

எதிர்க்கவிதை உங்களைக்
காதலிப்பதில்லை
உங்கள் கண்களில் தன் பிம்பத்தை அது தேடுவதில்லை
நான் சொல்வதை நம்புங்கள்
அதை உற்றுப் பார்க்காதீர்கள்
உறைந்து போக அதிக நேரம் பிடிக்காது.

***

கவிஞர் மீதிருக்கும் ஒளி வட்டங்களை நிராகரிக்கிறார். உணர்வுகளின் தேய்வழக்குகளில் சிக்கிப் போலித்தனத்தில் உழலும் கவிதைகளையும் நிராகரிக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘என்றாள் யூதாஸ்’ ஒரு உதாரணம்.

***

நல்ல கவிதை
அன்பைக் கோருவதில்லை
நல்ல கவிதை தன்னை
எழுதுவதையே கோருகிறது
யாருக்கு இது புரியப் போகிறது?
வெட்டுக்கிளிகளுக்குப் புரியப்போவதில்லை
ஏசுவின் முகத்தைக் கவிஞன் முகத்தில்
காண்பவர்களுக்குப் புரியப்போவதில்லை
ஏசுவின் முகத்தைக்
கவிஞனின் முகத்தில் காண்பவர்கள்
கவிதையைச் சிலுவையில் அறைந்துவிட்டு
வரும் வழியில்
தாகசாந்திக்கு சோடா குடிக்கிறார்கள்.

***

இதே தொகுதியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கவிதை. அன்றாடத்திலிருந்து வெகுவாக விலகும் கவிதையின் உன்னதத் தளங்களை பகடி செய்கிறது.

ரைட்டா?

உண்மையில்
நவீன கவிஞர்கள் பலரும்
வானம்பாடியின் வயிற்றுக்குள்தான்
பாண்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
வயிற்றுக்கு வெளியே ஒருசிலர்
வெண்ணெய்க் கத்திகளுடன்
உம்மென்று போஸ் கொடுக்கிறார்கள்
உலகமே அடுத்த ஜெனரேஷன்
ஆப்பிள் ஐபோனுக்காகப் பரபரத்துக்
காத்துக்கிடக்கிறது
உள்ளூரை டிக்டாக் கைப்பற்றிவிட்டது
நானோ ஒரு ஒட்டகச்சிவிங்கியை
வளர்க்கலாம் என்றிருக்கிறேன்
அதற்கு மூன்று வேளை தவறாமல்
சத்தான உணவு தருவேன்
அது தினமும் 10 சென்டிமீட்டர் வளரும்
ஒருநாள் வானத்தைத் தொடும்
அதில் நான் ஏறி உட்கார்ந்துகொண்டு
என் கவிதைகளை வாசிப்பேன்
ஒட்ட்கச்சிவிங்கி தலையசைத்து
அவற்றை ஆமோதிக்கும்

வினை என்றொரு கவிதையில் அன்பை கவிதையின் இடுபொருளாக கொள்வதன் மீதான விமர்சனம் தொடர்கிறது. ‘அன்பை அங்குலத்துக்கு / ஒரு முறை பேசும் கவிதைக்கு / மருக்கள் முளைத்து விடுகின்றன/ புற்றுநோயாக இருக்கக்கூடாது என/ அஞ்சிச் சந்தேகித்துப் பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது.

‘பெண் மனசு ஆழம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கவிதை அன்பொழுகும் கவிதையின் மீதான விலக்கம் ஏன் என சொல்கிறது. நான் ஒரு ரொமாண்டிக்:- எதிர்கவிதைப் பிரியர்கள் நிஜத்தில் ரொமாண்டிகாகத் தான் இருப்பார்கள் / தாய்மை இயற்கை அன்பு செண்டிமெண்ட் கவிதைகளைக் காலராவைப் போல் அவர்கள் தவிர்க்கிறார்கள்.

அதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றொரு கவிதை இப்படி முடிகிறது. ‘கவித்துவம் சொட்டக் கவிதை எழுத எனக்கு மட்டும் தோன்றாமலா இருக்கும் / ஆனால் ஒரு பெண் குரங்கின் புட்டம் குறுக்கே வந்து விடுகிறது / கவித்துவ அழகியலின் மலர்ப்பாதையில் அடைத்து நிற்கிறது அந்தக் குரங்கின் புட்டம் / கொப்புளங்கள் வேறு / வன்புணர்வு செய்யப்பட மழித்த யோனி கொண்ட ஒரு இந்தோனேசியக் குரங்கது.’ ஒட்டகச்சிவிங்கி கவிதையுடன் சேர்த்து வாசித்துக் கொள்ளும் போது கவிதையின் அன்றாடம் மற்றும் அரசியல் தளத்தை பெருந்தேவி முக்கியமாக கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

போலியான உன்னதக் கற்பிதங்களை தேய்வழக்காக ஆக்கும் கவிதைகளை விமர்சிக்கிறார். உன்னதங்களை காண்பதற்கு ஒட்டகச்சிவிங்கியாக வேண்டும், இல்லையேல் காணக் கிடைப்பது குரங்கின் புட்டம் தான். ‘வெயிலைப் பற்றிய கவிதைகள் இருக்கட்டும் வெயிலின் பயங்கரங்களுக்கு தயாராவோம்’ என்று எழுத அவரால் முடிகிறது. ‘உருவகப் பாவம் – போதுமான அளவிற்கு மேல் உருவகித்து விட்டார்கள் அதுவும் அந்த முயல்குட்டியின் பாவம் சும்மா விடாது’ என மற்றொரு கவிதையில் அவமரியாதை செய்யப்பட்ட உருவகங்களுக்காகச் சாபமிடுகிறார்.

பாருங்கள் எனும் இக்கவிதையும் ஏறத்தாழ இதே தொனியைக் கொண்டிருக்கிறது. எளிமைப்படுத்துவதையும் உன்னதப்படுத்துவதையும் ஒருங்கே நிராகரிக்கிறது.

உங்கள் வளர்ப்புப் பிராணிகள் அல்ல கவிதைகள் பாருங்கள்
உங்கள் வரவேற்பறையில் சொகுசாக வார்த்தை ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்து வரிகளை ஸ்கோர் செய்ய முடியாது பாருங்கள்
கவிதைகள் பெருந்தன்மையை வெறுப்பவை
பக்கத்திலிருக்கும் சிறுவனுக்கு
அழகு காட்டியபடி அவன் பார்க்க
முறுக்குகளைக் கடித்துத் தின்பவை
கவிதைகள் சுகாதாரம் நாகரீகம் பேணாதவை
பொதுச்சாலையில் பட்டப்பகலில்
ஆற அமர நின்று ஒன்றுக்கடிப்பவை
அவை இரவில் (குறிப்பாக)
பத்தாயிரம் விளக்குகளை
உடலில் எரியவிட்டு
ஓயாது ஓடும் வார்த்தைகளின் திரைகளாய்
மனத்தை பீடிப்பவை
அவை இரவில் (குறிப்பாக)
பூச்சிகளாக விதவிதம்
உடலில் ஊறி
பதைபதைக்க எழ வைப்பவை
பக்கச்சுவரற்ற கிணற்று நீர்களாய்
வா வா என்று அழைப்பவை

***

கவிதைகளை ஏறத்தாழ ஒரு கலகமாகவே முன்வைக்கிறார். ‘கவிதையை ஒற்றறிந்து கண்டுபிடித்தது’ கவிதையில் இப்படியொரு வரி வருகிறது “நீ எனக்குத் தொழில் என்றால் சண்டைக்கு வருகிறது.” அடையாளம் எனும் கவிதையில் பேராசிரியர் என அழைக்க வேண்டாம், உண்மையில் பாரதியின் தொழில் தான் என்னுடையதும் என்கிறார்.

“ஓர் எழுத்துப் பாணிக்கு வாழ்க்கைப்பட்டு, கட்டையில் வேகும் வரை அதே பாணியில் எழுதிக் குவிப்பது, ஓர் அலுவலர் வருகையேட்டில் தினசரி இடும் கையொப்பத்தில் இருந்து எவ்வகையில் மாறுபட்டது?’ என வாயாடிக் கவிதைகளின் முன்னுரையில் எழுதுகிறார். தொகுப்புகள் தோறும் வளர்சிதை மாற்றம் இருந்தாலும் சில ஆதாரப் புள்ளிகள், கேள்விகள் மாறவில்லை.

கவிதை என்ன செய்யும்? அதன் உக்கிர வெம்மை விளையாட்டல்ல. வாசிப்பும் எழுத்தும் ஒரு எல்லையில் மீட்சிக்கான சாதனங்கள் ஆகின்றன.

உன் வாழ்க்கையைத்தான் நீ வாழ்கிறாய்

உன் வாழ்க்கையைத் தான் நீ வாழ்கிறாய்
ஆனாலும் சில சமயம்
உன் இதயமும் பாலுறுப்பும் தீப்பிடித்து எரிகையில்
நீ எழுத்தைத் தான் நாட வேண்டியிருக்கிறது
உன் ஒட்டுமொத்த சதை தோல் திசுக்களுக்கிடையில்
உறைந்துபோய் விடுகையில்
எழுத்தைத் தான் நாட வேண்டியிருக்கிறது
கருகாதிருக்க புரையோடிப் போகாதிருக்க
நீ எழுதத்தான் வேண்டியிருக்கிறது
ஆனாலும் அப்புறப்படுத்த முடியாத
ஒரு தீய்ந்த முனை ஒரு துர்நாற்ற அழுகல்
பொறியில் மாட்டிக்கொண்ட உன் சின்ன உடலில்
ஆனாலும் அதில் கொஞ்சம் வெளியே நீண்டிருக்கிறது
உன் மூக்குக்கும் கொஞ்சம் வெளிக்காற்று
ஆம், உன் வாழ்க்கையைத் தான் வாழ்கிறாய்.

***

இது மற்றொரு கவிதை. நிலா முழுக்கக் கறையான்கள் எனும் பயன்பாடு அமைதியிழக்கச் செய்கிறது. முழுமதி, அமைதி, நிறைவு, அழகு, ஞானம் எனப் பல அடுக்குகளில் பொருள் கொள்ளத்தக்கது.

***

ஒருவேளை
எதற்காக வாசிப்பது எதற்காக எழுதுவது
தெரியவில்லை
என் நிலா முழுக்க கறையான்கள்
தொலைத்தவர்கள் செல்லும் கடைசி நரகம் எழுத்தாக
தொலைத்தவர்களுக்குக் கிடைக்கும் சுவர்க்கம் வாசிப்பாக (மட்டும்) இருக்கலாம்.

***

இதன் மறுமுனை ஒன்றுண்டு. இந்தப் பயணமே பெருந்தேவி கவிதைகள் வழியாக அடைந்த இடம் எனத் தோன்றுகிறது.

எப்படிக் கவிதை எழுதுகிறீர்கள்?

சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிற
வசீகரமான டில்டோக்களைப் போல பார்த்துத் தேர்தெடுத்த சொற்கள்
வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும்
திட்டமென்னவோ உங்களுக்கு உதவியாக இருப்பது தான்
ஆனால் சொற்களுக்கு நடுவில் சில பாம்புகள் புகுந்துவிட்டன
வாயை வேறு திறந்து வைத்திருக்கின்றன
நீங்கள் விழுந்து விடுகிறீர்கள் அவற்றுள்
ஆனால் இந்தப் பாம்புகளை நான் விடவில்லை
நம்புங்கள் நான் அத்தனை மோசமில்லை
ஆனால் உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை
இந்தப் பாம்புகளுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறேன்
விழுங்கித் துப்பி விழுங்குகின்றன
மாணிக்கமாக முடியாத சாதாரணத்தை.

***

கவிதைக்கு நடுவில் பாம்புகள் புகுந்து விடுகின்றன அல்லது நான் (x) பறவை கவிதையில் உள்ளது போல் மேஜையில் அமர்ந்திருக்கும் பறவை ‘முழுவதும் உண்ணப்படாமல் மிச்சம் வைக்கப்படும் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் அலகால் இயங்க வைக்கிறது இதயத்திற்குள் சட்டென நுழைகிறது-‘ ஏறத்தாழ எழுத்தை தன்னை மீறிய செயலாகவே முன்வைக்கிறார். ‘என் கவிதையின் குரல் என்னுடையதில்லை, அதன் கூக்குரல்களுக்கும் நான் பொறுப்பேற்பதாக இல்லை’ (நகரலாமே) என பொறுப்பைத் துறக்கிறார். ஸ்ரீ வள்ளி கவிதைகளுக்கான திறவுகோல் இங்குள்ளது. பெருந்தேவியை இவற்றைக் கொண்டு ‘inspired artist’ எனச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாக அவருடைய கவிதை உலகின் பிரகடனம் போல் ஒலிக்கும் ஒரு கவிதை இது.

இலக்கியக் கூட்டமொன்றில் மைக் பிடித்து உரையாற்றியது

நான் கடவுளை மறுக்கிறேன்
கடவுள் மறுப்பை மறுக்கிறேன்
கடவுள் அவர் பாட்டுக்கு பழைய மணைக்கட்டை ஓரத்தில்
உட்கார்ந்திருக்கட்டும் என்கிறேன்
தீவிர இலக்கிய சாமிக்கு பஜனை பாட மறுக்கிறேன்
அன்பை வலியுறுத்துகிறேன்
அன்பை எழுத்தில் கொட்டி முழக்காதீர்கள் என்கிறேன்
காதுகள் டமாரமாகிக் காலமாகிவிட்டது
உங்கள் ஆண் எழுத்தாளர் x பெண் எழுத்தாளர் ஆட்டம்
அலுத்துவிட்டது
இது பின்-பால் உயிரிகளின் காலம்

காலையில் கிழவனாக
மதியம் பெண்ணாக
முகநூலில் ஃபேக் ஐடியாக
இரவில் மிகை இயக்க ட்ரோன் ஆக
வாழ்பவர்களின் காலம்
நினைவேக்கம் புழுதிச் சித்திரம் என்கிறேன்
இல்லாத இடத்துக்குப் போகாத பாதையில்
தடதடத்து ஓடுகிறது பனங்காய் வண்டி.

***

தொல்ஸ்தோய் பாதை தஸ்தயேவ்ஸ்கி பாதை எனப் பொதுவாக இலக்கியம் குறித்து இரு வரையறைகள் உண்டு. அண்டத்தில் இருப்பது பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம். உன்னதங்களை, ஒழுங்குமுறைகளைக் கட்டி எழுப்புதலும் அதைக் குலைப்பதும் ஒரு இலக்கின் இரு பாதைகள். ஒளியையும் அன்பையும் கவிதைகளில் எழுப்புவதும் அதை உடைத்து வீசி எல்லாவற்றையும் தொந்திரவிற்கு உள்ளாக்குவதும் ஒன்றே. கோணங்கி ஒருமுறை ‘கவிஞன் உலகின் முதல் மனிதன், புனைவெழுத்தாளன் உலகின் கடைசி மனிதன்’ என்றார். கவிதையின் ஆதார இயல்பு எல்லாவற்றின் மீதான வியப்பு. ரிக்வேத சிருஷ்டி கீதங்களை இயற்றியவர் ஒரு கவிதான். புனைவின் ஆதார இயல்பு எல்லாவற்றின் மீதான விமர்சனம். உலகின் கடைசி மனிதர் ஒரு கவிஞராகவும் இருக்க முடியும் என்பதை பெருந்தேவி நிறுவுகிறார்.