25.5.2019 அன்று திருநெல்வேலியில் பிரமிள் படைப்புகள் அறிமுகவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரமிளின் எழுத்துகளை வெளியிடும் உரிமை பெற்று தொகுப்புகளைக் கொண்டு வந்த பதிப்பாசிரியர் கால.சுப்ரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். நான்-பிரமிள் விமர்சனங்கள், எழுத்தாளர் போகன் சங்கர்-பிரமிளின் ஆன்மீகம், எழுத்தாளர் சுந்தர்காளி-பிரமிள் உரையாடல், காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன்-பிரமிளின் கதைகள் குறித்து உரையாற்றினோம். இந்நிகழ்வில் நான் வாசித்த கட்டுரையை கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.
“பிரமிள் எல்லா வகையான குழுக்களுக்கும் எதிரானவர். ஜே.கிருஷ்ணமூர்த்தியை ஆதர்ஷமாகக் கொண்ட தனிநபர்வாதி அவர். பிரமிளின் எழுத்துகளில் சமூகக் குரலும் ஓங்கி ஒலித்தது. ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒரு துளியே. தன்னை உண்மையாய் பிரதிபலிப்பவன் ஒட்டுமொத்த உலகையே பிரதிபலிக்கிறான். கலை கலைக்காகவே என்று இலக்கியத்தின் எல்லையை குறுக்கிக் கொண்டவரில்லை அவர். திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான். பிராமணியத்துக்கு எதிராக நிறுத்த வேண்டியது திராவிட அரசியல் தான் என்பது அப்போதைய அவரது எதிர்வினையாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே அண்ணா, பெரியார் போன்றோரை அவர் ஆதரித்தார். அதை எதிர்வினையாக மட்டுமே கருதலாம். இடதுசாரிகளிடமும் திராவிடக் கட்சியிலும் அவர் வைத்த முக்கியமான விமர்சனம் அவர்களது ஆன்மீக வறட்சி. இன்று பிரமிளின் பிராமிணியத்துக்கு எதிரான கலகக்குரலை முன்னிறுத்தி சில குரல்கள் எழுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அவரது இலக்கிய மதிப்பீடுகளை மீட்டெடுக்க வேண்டியதே இன்றைய அவசியத் தேவையாக உள்ளது. பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களாக அல்லாமல் விரிவான விமர்சனங்கள் அவரது கவிதைகள் மீது வைக்கப்பட வேண்டும். அவரது விமர்சனக் கோட்பாடுகளைப் பின்பற்றி சமகால இலக்கியத்தின் மீதான விமர்சனப் பார்வை விழ வேண்டும். அதுவே பிரமிளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வழி.”
அண்ணா, பெரியாரை ஆதரித்தது அப்போதைய எதிர்வினை மட்டுமே என்று நான் எழுதியிருந்ததை வைத்து ஒரு சிறு விவாதம் எழுந்தது. நான் கூறியிருப்பதை தர்க்கப்பூர்வமாக மட்டுமே நிரூபிக்க இயலும். அதேயளவுக்கான தர்க்க நியாயம் எதிர்த்தரப்பிலும் நிச்சயம் உண்டு. என் வாசிப்பு முறை வார்த்தைகள் அர்த்தங்கள் தாண்டி ஒட்டுமொத்தமாக ஆசிரியரின் பார்வையைத் தொட முயற்சிப்பது. ஓஷோவின் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘look where I’m pointing to, don’t bite my finger’. வார்த்தைகளை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் பிழையாகவே புரிந்து கொள்ள நேரிடும். அடிப்படைவாதிகளிடம் உள்ள சிக்கலே அதுதான். என்னுடைய வாதம் இது தான். பிரமிள் ஆரம்பகட்டத்தில் திராவிட இயக்கம் பற்றி எதுவும் குறிப்பிடும்படி பேசவில்லை. இங்கே வந்தபின் இலக்கியத்தில் பிராமணியத்துவ குழு மனப்பான்மைக்கு எதிராகத் தொடர்ந்து எழுத்தின் வழி எதிர்வினை புரிந்த போது, திராவிட இயக்கத்தின் எழுச்சியை அதன் விளைவுகளைப் பார்த்து அதனை ஆதரித்தார். ஈ.வெ.ரா.வையும் அண்ணாவையும் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிட்டு (லயம் இதழ் 11, ஜனவரி 1995) அவர் விவாதித்திருக்கும் கட்டுரை நேர்த்தியான ஒன்று. இது வெளியான வருடம் 1995 என்பதை, அதாவது அவர் எழுதத் தொடங்கி 35 ஆண்டுகளுக்குப் பிறகே இப்படியொரு கட்டுரை வருகிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். பிரமிள் தனது கருத்துக்களை காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளத் தயங்கியதில்லை. அதே நேரம் அதற்கான காரணங்களை விரிவாகவும் சொல்லிச் செல்கிறார். எனவே, பிரமிள் சொன்னார் என்று மேற்கோள்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருப்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
அதே போல் பிரமிளுக்கு இலக்கியத்தை விட ஆன்மீகமே பிரதானம். சத்தியத்தின் வழி பாதையற்ற பாதை எனச் சொன்ன ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை ஏற்றுக் கொண்டவர். அவரே தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி, திராவிட இயக்கத்தின் பெருங்குறையே அதன் ஆன்மீக வறட்சி தான். சுயமரியாதைக்கும் சமூக நீதிக்கும் போராடிய இயக்கத்தில் வள்ளலார் போன்ற சாதியத்துக்கு எதிரான சமத்துவத்தை வலியுறுத்திய ஆன்மீகவாதிகளையும் ஆன்மீகக் கூறுகளையும் இணைத்து அந்த வெற்றிடத்தை நிரப்பியிருந்தால் அது ஒரு முழுமையான இயக்கமாக அமைந்திருக்கும். பிராமணியத்தை தனிமைப்படுத்தியிருக்கலாம் என்று பிரமிளே சொல்லியிருக்கிறார். அடிப்படையில் பிரமிள் ஒரு நடுநிலைவாதி. ஒரு நடுநிலைவாதி ஆன்மீகத் தளத்தில் வலதுசாரியாகவும், சமூகத் தளத்தில் இடதுசாரியாகவும் இருப்பது இயல்பு.
ஜூலை 1975ல் ‘இளவேனில் ஒரு எதிரொலி’ என்ற கட்டுரையை எழுதுகிறார் பிரமிள். இதில்தான் முதன்முதலாக வெங்கட் சுவாமிநாதனுடன் முரண்பாடு ஆரம்பிக்கிறது. இதன்பிறகு ஒருவருக்கொருவர் கடுமையாய்த் தாக்கிக் கொண்டார்கள். வெங்கட் சுவாமிநாதன் பிரமிளைத் தாக்கி எழுதத் தோதாய் யாத்ரா இதழை உபயோகித்துக் கொண்டார். இந்தக் கட்டுரை ஆச்சரியமூட்டும் ஒன்று. முரண்பாட்டுக்கான காரணம் வெகு சாதாரணமானதொரு குற்றச்சாட்டு. எனக்கென்னவோ இதற்குப்பின் எழுத்தில் வராத வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. பிரமிள் 1970 வாக்கில் இலங்கையிலிருந்து தனது சொத்துகளை விற்றுவிட்டு (கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாயுடன் வந்தார் என்று வைகை குமாரசாமி குறிப்பிடுகிறார். 70களில் ஒரு இலட்சம் என்பது இன்றைய தேதிக்கு பலமடங்கு மதிப்புள்ள பணம்) இங்கே வந்தபின்பு சுந்தர ராமசாமியுடனும், வெங்கட் சுவாமிநாதனுடனும் தான் சில வருடங்கள் இருந்தார். தனது நண்பருக்கு எழுதும் ஓர் கடிதத்தில் 70-75 காலகட்டத்தையே தான் நினைவுகூற விரும்பவில்லை, அந்தக் காலத்தில் பல நாட்கள் முழுப் பட்டினியாக இருக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 1970ல் அவரிடமிருந்த பணம் என்னாயிற்று? அதே சமயம், அவரது பதிப்பாசிரியர் கால.சுப்ரமணியம் பிரமிளிடம் காசே தங்காது, எப்படியாவது செலவழித்துவிடுவார் என்று குறிப்பிடுகிறார்.
சரி, இந்த ‘இளவேனில் ஒரு எதிரொலி’ கட்டுரையைப் பார்ப்போம். இளவேனில் என்ற இதழில் வெ.சா. ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் ‘இன்றைய வர்த்தகச் சூழலின் மனோபாவங்களை உணர்ந்துள்ள சுரணையும் தீக்ஷண்ய நோக்கும் கலையுணர்வும் கொண்ட ஒருவனின் கவனம், இன்று இச்சூழலின் பேரில்தான் விழும். இச்சூழலை மாற்றி, திரும்பவும் ஒரு கலாபூர்வமான மரபை ஸ்தாபிக்கும் முயற்சியில் அக்கறை,’ என்ற வரிகளைப் பயன்படுத்துகிறார். இதை பிரமிள் ஆட்சேபிக்கிறார். பிரமிளின் வாதம் என்னவென்றால், மாற்றம் என்பது தானாகவே நிகழ்வது. போலி செய்யாத தன்னளவில் படைப்பூக்கத்துடன் வெளிப்படும் கலைஞர்களின் வருகை தானாகவே மாற்றத்தைக் கொண்டு வருமே ஒழிய, இது உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. இதனால் என்னாகிறதென்றால் இலட்சியவாதம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையும் நோக்கமும் கொண்டவர்களை அவர்களின் தகுதி/திறனை மீறி ஆதரிக்க வேண்டி வருகிறது. இது தட்டையான படைப்புகளை உருவாக்குகிறது என்பது பிரமிளின் வாதம். இங்கே இன்னொரு குற்றச்சாட்டையும் வெ.சா. மீது பிரமிள் வைக்கிறார்.
‘அவரது கலையுணர்வு சிருஷ்டிபூர்வமானதல்ல, ரசனாபூர்வமான ஒன்று’
கலையுணர்வில் அதென்ன சிருஷ்டிபூர்வம், ரசனாபூர்வம்?
முந்தைய கட்டுரையில் ஓர் இடத்தில் படைப்பு மனநிலை குறித்துப் பார்த்தோம். வாசகர், படைப்பு மனநிலையை அடைவதே சரியான வாசிப்பு. அந்நிலையில் படைக்காவிடினும் வாசகரும் எழுத்தாளரோடு அம்மனநிலையில் பங்கு கொள்கிறார். இத்தகைய கலையுணர்வே சிருஷ்டிபூர்வமானது. மாறாக ரசனாபூர்வமானது என்பது ஒருவித மேட்டுக்குடித்தனமான, அனைத்தையும் இரசனை என்ற அளவீட்டின்படி விலகி நின்று பார்ப்பது. இதில் படைப்பாளியின் உணர்வுத்தளத்தின் ஆழத்துக்குள், படைப்பு மனநிலையை வாசிப்பவர் தொடுவதில்லை. எளிமையாகச் சொல்வதென்றால், முதலில் சொன்ன வாசகர் வாசிப்பது படைப்பை, இரண்டாவதுள்ளவர் வாசிப்பது பிரதியை.
1976ல் பிரமிளின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ’கைப்பிடியளவு கடல்’ வெளிவந்தது. அவர் ஆரம்பத்தில் கொண்ட கருத்தியலுக்கும் இந்தக் காலகட்டத்துப் புரிதலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அதை விவரிக்கிறார். அது அவர் எந்தளவு மேலும் கூர்மையான பார்வையைக் கொண்டவராக மாறியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இந்தப் பார்வையை அவர் அடைந்ததற்குப் பின்புலமாக அவரது அகமுக அவதானமும் ஆன்மீக நாட்டமுமே காரணம் என்று சொல்லலாம்.
”மனம் விட்டுச் சொல்வதானால், கவிதைகளை எழுதுகிற மனிதனிடத்தே உள்ள ஒன்றுதான் கவிதை உள்ளம் என்ற பரவலான முடிபு, 1963லேயே என்னுள் விரிசலடைய ஆரம்பித்துவிட்டது. இருந்தும் எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக இந்த இருநிலைகளையும் இணைக்கிற மோப்பங்களைப் பிடிக்க அலைந்திருக்கின்றன. இணைப்புக்கு முரணான முடிபு நிச்சயம் பெற்றமைதான் இன்றைய விளைவு. ஏனெனில், உன்னதமான கணங்களில் கவிதை எழுதுகிற தன்மை செயல்படுவதே இல்லை, கவித்துவமான ஒரு தன்னிருப்பு மட்டுமே நிகழ்கிறது.”
இது ஆழமாக தன்னைத்தானே அவதானித்ததினால், காலாதீதத்தின் சொற்களற்ற தன்மையோடு கவிதை வரிகள் உருவாவதைப் புரிந்துகொள்ள முயன்றதின் அதிதீவிர முயற்சியை மேற்கண்ட பத்தி காட்டுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கவிதை ஏன் உன்னதமான கணங்களில் மட்டும் உருக்கொள்ளும் ஒன்றாக நாம் கருத வேண்டும்? உதாரணத்திற்கு பகடிக்கவிதை கூட எழுதலாம். இதற்கு கீழே பிரமிள் தரும் விடை இருக்கிறது. உன்னதமான கணங்களில் கவித்துவம் நிறைந்திருக்கிறது ஆனால் அங்கே சொற்கள் இல்லை. கவித்துவ மனநிலை தன்னளவில் நிறைவானது. அது சொற்களின் வழி வெளிப்படுத்தும் உந்துதலைக் கூட துறந்துவிடும். அப்படியானால், கவிதை எங்குதான் அல்லது ஏன் உருக்கொள்கிறது? அந்த படைப்பு மனநிலை என்ன?
“எங்குமே, கவித்துவமயமான அகநிலையின் சிகரத்தையடைந்த மகா புருஷர்களுள், அபூர்வமான ஒரு சிலரன்றி பெரும்பாலோர் எழுதிய எதுவும் கவிதையானதில்லை. ஏனெனில், வெளியீட்டை நாடுகிற மனோரூபம் சலனமயமானது. நிச்சலனமே லட்சியமானோர்க்கும் மௌனத்தின் வசமானோர்க்கும் வெளியீடு அநாவசியம், அல்லது இரண்டாம் பட்சம்.
இந்த நிலைகளை நாடாத – அடையாத – சலனமயமான உள்ளம், வெளியீட்டினூடே, அதுவும் ஒரு குறிப்பிட்ட உக்ரத்தை வெளியீட்டில் சாதிப்பதினூடேயே ஒருவகை நிம்மதி கொள்ளும். சோகத்தின், அவசத்தின் வயப்படுகிற நுண்ணுணர்வின் தேவை இது என முடிவுகட்டி, வெளியீட்டை நாடுகிற இயல்பு, மனித மனத்தின் முரண்பாடுகளிடையேற்பட்ட நுண்ணுணர்விலே தோன்றும் அதிசூஷ்மமான மூர்க்கமெனலாம். இந்த மூர்க்கத்தின் அகம்பாவ நிலைக்களனையும் நுண்ணுணர்வை அவச வயப்படுத்துகிற முரண்பாடுகளையும், விவேகபூர்வமான விழிப்பின் மூலம் சந்திப்பவனோ, மனசின் நிச்சலன ஸ்திதியை நிறைவேற்றி விடுகிறான். இவன் கவித்துவத்தினின்றும் பிரிக்கப்படாமல் அதனோடு ஒன்றி விடுபவன். தனது அவசங்களை வெளியிடுவதன் மூலம் ஒரு தற்காலிக நிம்மதியை-மனோலயத்தையல்ல, நிம்மதியை – அடைகிற கவிஞனோ, கவித்துவத்தின் சாகரத்திலிருந்து ஒரு கைப்பிடியளவு நீரை அள்ளி உலகிற்குச் சொற்கள் மூலம் அளிக்கிறான்.”
கவிதை உன்னதமான கவித்துவ மனநிலையில் பிறக்கிறது என்ற கருத்திலிருந்து அவர் இந்த முடிவுக்கு தனிநபராக தன்னையே விளக்காக்கி நகர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சொற்கள் இருக்குமிடம் பிளவுபட்ட நிலையில் நிகழ்வது. அப்படியானால் கவித்துவ உணர்வு கவிதையில் எப்படி கடத்தப்படுகிறது? நிச்சலன உள்ளத்தை அடையாதோர் அல்லது அதில் விருப்பமற்ற உள்ளம் உக்ரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் நிம்மதி அடைகிறது, அதுவே கவிதை. நுண்ணுணர்வு (இது கவித்துவ நிலையுடனும் ‘நான்’ என்பதனுடனும் இடையில் ஊசலாடுவது) தன் மேல் விழுந்த ஏதோ ஓர் அழுத்தமான உணர்வை, தாங்க முடியாத ஓர் கதியை வார்த்தைகளில் தீர்த்து நிம்மதி அடைகிறது என்று படைப்பின் நோக்கத்தைச் சொல்கிறார்.
பிரமிள் 1966 முதல் 1972 வரை எதுவும் எழுதவில்லை. இதற்குக் காரணம் வெளிப்படுத்தும் தன்மையானது சலனத்தைக் குறிப்பது. பிரமிளுக்கு இந்த இடம் சிக்கலாகிறது. வெளிப்படுத்தாமல் கவித்துவ மனநிலையில் இருப்பது கவிதை எழுதுவதை விட பேரனுபவமாகத் தோன்றுகிறது. சொல்லப்போனால் மௌனமே சிறந்த கவிதை என்று சொல்லி விடலாம். கவிதை எழுதும் மனதுக்கு நுண்ணுணர்வே அடிப்படை. Being sensitive. (Being sensitive is sick என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி). நுட்பமான மனம் எளிதில் பாதிக்கப்படுகிறது. அது தூண்டப்படவும், பாதிப்படையவும் எதிர்மறையாக எதுவும் நடக்கவேண்டியது கூட இல்லை. அது தானே தன்னொழுங்கில் ஒரு தூண்டுதலை நிகழ்த்துகிறது. இது ஆன்மீக நிலையை நோக்கி நகரும் வழி. ஆனால், அதை நாடாத சலனமுற்ற உள்ளம், அதை வார்த்தைகளில் கடத்திச் செல்கிறது. இதை பிரமிள்,
“நுண்ணுணர்வை அவச வயப்படுத்துகிற முரண்பாடுகளை விவேகபூர்வமான விழிப்பின் மூலம் சந்திப்பவனோ, மனசின் நிச்சலன ஸ்திதியை நிறைவேற்றி விடுகிறான்.” என்கிறார். கவிதானுபவம், படைப்பனுபவம் குறித்து நிறைய கவிஞர்கள் பேசியிருந்தாலும் அவர்கள் அதை ஒருவித புனிதப்படுத்தி மர்மமாக்கும் முயற்சியாகவே செய்திருக்கின்றனர். பிரமிள் மட்டுமே தெளிவாக வார்த்தைப்படுத்தியுள்ளார்.
‘நுண்ணுணர்வின் அவசம்’ என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கருத்து தான். ஆனால் அந்த அவசம் மூல காரணம் மட்டுமே. இந்த மூல காரணத்தினால் படைப்பூக்கம் தூண்டப்பட்டு எடுக்கப்படும் கச்சிதமான வரிகள் எங்கிருந்து வருகின்றன? இங்கே பிரமிள் சொல்லும் ‘கவித்துவத்தின் சாகரத்திலிருந்து ஒரு கைப்பிடியளவு நீர்’ எப்படி கிடைக்கிறது? கவித்துவத்துள் நுழைந்த சலனமற்ற மனதினால் தானே நீரைக் கொண்டுவரவும் முடியும்? எனவே நுண்ணுணர்வு என்பது கவித்துவமான அகநிலைக்கு அருகில் இருப்பது. ஓர் அருவியில் குளிக்காமல் அதன் சாரலில் நனைந்து கொண்டிருப்பது போல. எனவே உள்ளும் வெளியுமாக அது உறவாடியபடியே இருக்கிறது. உள்ளே நுழைந்தால் வெளிவர முடியாது. வெளியில் இருந்தால் உள்ளே நுழைய பயமாய் இருக்கும். இந்த இருநிலைகளுக்கும் இடையில் இருக்கிறது நுண்ணுணர்வு. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூட ஓரிடத்தில், ‘கலைஞர்களுக்கு அனைத்திலிருந்தும் விடுபடும் வாய்ப்பு அதிகம் உண்டு’ என்று சொன்னது கவனிக்கத்தக்கது.
இங்கே பிரமிள் சொல்லும் நுண்ணுணர்வின் அவசம் என்ற பதத்துக்கு எதிராக ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வரிகளையே வைத்துப் பார்க்கலாம்.
“The freedom to create comes with self-knowledge; but self-knowledge is not a gift. One can be creative without having any particular talent. Creativeness is a state of being in which the conflicts and sorrows of the self are absent, a state in which the mind is not caught up in the demands and pursuits of desire. To be creative is not merely to produce poems, or statues, or children; it is to be in that state in which truth can come into being. Truth comes into being when there is a complete cessation of thought; and thought ceases only when the self is absent, when the mind has ceased to create, that is, when it is no longer caught in its own pursuits. When the mind is utterly still without being forced or trained into quiescence, when it is silent because the self is inactive, then there is creation.”
நுண்ணுணர்வின் அவசம் என்பது நான் என்பதின் அவசம். புறவுலகோடு தனிமனிதன் கொள்ளும் பிணக்கு, தனிமனித அக நுண்மைக்கு ஏற்பப் பொருந்தாத மந்தமான புரிதலற்ற புறவுலகு தரும் ஏமாற்றம் என்று கொண்டால், கவிதை ஓர் ஈகோவின் வெளிப்பாடு என்று ஆகிறது. கவிதையை படைப்பு என்று சொல்வதாய் இருந்தால், படைப்பாற்றல் குறித்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பிரமிளின் கருத்து முரண்படுகிறது. இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது நாம் ஒரு வரியைப் படிக்கும்போது அது வெறுமனே எழுத்தும் அர்த்தமுமாகவே கிரகித்துக் கொள்கிறோம். ஆனால் அதற்குப் பின் மிக நீண்டதொரு வாழ்க்கை அனுபவம் இருக்கிறது என்பது நமக்கு உறைப்பதில்லை. எத்தனை தூரம் தொடர்ந்து தன்னுள் அவதானம் கொண்டிருந்தால் ஒருவரால் இத்தனை தெளிவாக கவிதானுபவத்தை வார்த்தையில் விவரித்துச் சொல்லமுடியும் என்பதை யோசிக்க வேண்டும்.
தனது நண்பர் நாரணோ ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் பிரமிள். பிறிதொரு சமயம் ஒரு பேட்டியில் (என்று நினைக்கிறேன்), என் மீது காழ்ப்புணர்வைக் கொட்டுபவர்கள், நான் முன்வைக்கும் கருத்துகளை எதிர்த்து, அதை விமர்சித்து ஏதாவது சொல்லட்டுமே. ஏன், நாரணோ ஜெயராமன் தொகுப்பை நான் ஆதரித்து முன்னுரை எழுதியிருக்கிறேன். அதில் நான் சொல்லியிருப்பதை விமர்சிக்க எவ்வளவோ இருக்கிறது. கருத்தியல் ரீதியாக எதிர்க்கத் திராணியில்லாதவர்கள் தனிநபர் விமர்சனத்தில் இறங்குகிறார்கள்’ என்று கேட்டு வைக்கிறார். உண்மையில் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் நாரணோ ஜெயராமனின் கவிதைகள் ஒன்றும் சிலாக்கியமாக இல்லை. பிரமிளை வரிந்துகட்டி அடித்தவர்கள் இதை மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் கல்லைக் கூட பிரமிளே எடுத்துத் தருகிறார் என்பதுதான் விசேசம். தமிழ் இலக்கியச் சூழலில் அப்படி ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடக்க வேண்டும் என்பதுதான் அவர் அவா.
இளவேனில் ஒரு எதிரொலி என்ற கட்டுரையில் வெ.சா.வை விமர்சித்து பிரமிள் எழுதியிருந்ததற்குப் பதிலாக, சூழலே ஒரு நபரை உருவாக்குகிறது என வாதித்து வெ.சா. ’கசடதபற’வில் எழுதுகிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக கலைஞனும் கோட்பாடும் என்ற 17 பக்கக் கட்டுரையை பிரமிள் எழுதுகிறார். இதன் விஷய சாரத்தைப் பேசுவதாய் இருந்தால் அதைத் தனிக்கட்டுரையாகத் தான் எழுத வேண்டும். இங்கே ஆச்சரியம் என்னவென்றால், அக்டோபர் 1976ல் இந்தக் கட்டுரையை பிரமிள் எழுதியிருக்கிறார். 1977ல் வெ.சா.வின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ புத்தகமாக வெளிவருகிறது. அதற்கு முன்னுரை பிரமிள் எழுதித் தருகிறார்!
1975ல் வெ.சா.வின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதில் தொடங்கி பின் அவர் எழுதிய பெருவாரியான கட்டுரைகள் எதிர்வினைகள் தாம். ஆனால் ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரது படைப்புகளையும் விமர்சிக்கும் போது அதை விரிவாக தர்க்கப்பூர்வமாக அதன் நியாயங்களைச் சொல்லி விடுகிறார். அக்டோபர் 1978ல் யாத்ரா இதழில் வந்த கட்டுரையில் அ.மி.யின் பயணம் என்ற சிறுகதை எவ்வாறு இலக்கியத் திருட்டு என்றும் எவ்வாறு உண்மைக்குப் பொருந்தாமல் இருக்கிறது என்பதையும் விவரிக்கிறார். இந்தக் கதையை முதலில் பாராட்டியும் பிறகு அதைத் திருட்டு என்றும் குற்றம்சாட்டிய வெ.சா. எதன் அடிப்படையில் அதைத் திருட்டு என்கிறார் என்று விளக்கவில்லை. அந்தக் கதையில் உடல்நிலை குன்றிய குருவும் சீடனும் மலைப்பகுதியில் பிரயாணம் செய்யும்போது ஓநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். கதையின் முடிவில் ஓநாயுடன் போராடி குரு இறந்துவிட அவர் கையில் ஓநாயின் பின்னங்கால் ஒன்று மட்டும் இருக்கும். அப்படித் தனியாக ஒரு கால் வரச் சாத்தியமே இல்லை. ஜாக் லண்டனின் ‘The Love of Life’, ‘The law of life’ என்ற இரண்டு கதைகளில் பயணம் சிறுகதைக்கான மூலகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு அந்தக் கதைகளையும் விவரிக்கிறார். இது திருட்டாக இல்லாமல் சுய எழுத்தாக இருந்தாலும் அவர் விமர்சனப்படி இலக்கியத் தரமான படைப்பல்ல என்று நிறுவுகிறார். ஓர் இலக்கியத் திருட்டு எப்போது ஏற்கக்கூடிய ஒன்றாக மாறுமென்றால், மூலத்தை விட சிறப்பாக அமைந்திருந்தால் அது அதற்கான நியாயத்தைப் பெற்றுவிட்டதாக அர்த்தம் என்று சுட்டிக்காட்டுகிறார்.
இன்று கோட்பாடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் எல்லாம் முன்பு இலக்கணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவர்களின் மாற்றுருவே. வீட்டில் வெள்ளை கரப்பான்பூச்சி இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். எனக்கு அதைக் கண்டாலே அருவருப்பு. நசுக்கிப்போட்டால் வெள்ளையாய் ஜலம் மாதிரி வெளிவரும். இரத்தச் சிவப்பணுக்களே மருந்துக்கும் இல்லாத அந்த உயிரிகள் போலத்தான் இந்தக் கல்விப்புலத்தில் கோட்பாடுகளை வைத்து ஆய்வு செய்பவர்களும். சமீபத்தில் அப்படி என்னதான் இந்த கோட்பாட்டை வைத்து நாவலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று ஓர் ஆய்வுக்கட்டுரையை பல்லைக் கடித்துக்கொண்டு படித்தேன். அவர் என்ன செய்கிறார் என்றால், கண்முன்னே ஒரு யானை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கண்ணால் பார்த்தாலே அதன் முழு உருவும் அடைபட்டுவிடும். கொஞ்சம் வரையும் திறன் இருந்தால் வரையக்கூட செய்யலாம். அதன் நிறம், அது என்ன சாப்பிடுகிறது, அதன் விளையாட்டுகள், அதன் வாழ்க்கை எல்லாமே புரியும். இவர்கள் அதைப் பார்ப்பதற்கு முன்பே கோட்பாட்டுத் துணியை எடுத்துக் கண்ணை இறுகக் கட்டிக்கொள்கிறார்கள். பின் மெதுவாகத் தடவித் தடவிக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் யானையின் சில ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கின்றன. இதையெல்லாம் வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு வாசகன் முதலில் பைத்தியமாக மாற வேண்டும்.
“சுயமாக ஒரு கருத்தை வெளியிடும் லட்சணம்தான், கருத்துலகக்காரனுக்கு முக்கியமாகும். நமது சூழல் இத்தகையதல்ல. ஆங்கிலத்தின் மூலம் ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை ஒரு பிரக்ஞை அறிகிறது. அதற்கு புரிகிறதா அது என்பது வேறு விஷயம். உடனே, ‘இந்த இவனுகள்ளாம் தமிழிலே எளுதறானே, இம்மாம் பெரிசா எளுதிப்புடுவானா?’ என்று அதன் மண்டை யோசிக்கிறது. உடனே, தானே ஆங்கிலத்தில் அந்த பிரம்மாண்ட விஷயத்தை எழுதியது போன்ற ஒரு வீக்கம், இந்த மண்டைக்கு உண்டாகிறது. இந்த அளவுகோல்களின் குணமும் கம்யூனிஸ்டுகளுக்கே வரக்கூடிய அலாதியான இலக்கிய விரோதமும் சேர்ந்து, இன்று பிரக்ஞையின் பிரகடனங்களில் இடியொலி எழுப்புகின்றன: ‘எங்களுக்கு எக்கனாமிக்ஸ் வரும்; கலைஞர்களுக்கு வருமா?’ இதைவிட அபத்தமாக, மடமையும் மனோவியாதியின் குணங்களும் மலிந்ததாக, தமிழ் கலாச்சார சூழல் கீழிறங்க இனிமுடியுமா?”
– தொடரும்.