Editor’s Picks

0 comment

CRD (2016), Kranti Kanade

அசலான பின்நவீனப் படம். எல்லா வகையிலும் புதுமையான முயற்சி. இந்தியத் திரைப்படங்களின் குண்டுச்சட்டி எல்லையை விரிவாக்கியிருக்கிறார்கள் என மார்தட்டிச் சொல்ல முடியும். எப்படி இவ்வளவு ஆண்டுகளாக இப்படத்தைத் தவறவிட்டேன் என வெட்கமாக இருந்தது.

ஒரு காட்சிக்கோணம்கூட நாம் எதிர்பார்க்கிறபடி இல்லை. இந்த உணர்ச்சியைக் கடத்துவதற்கு இந்தச் சுடுவு (shot) என்கிற வழமையான விதிகளை மீறி, சட்டகங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டு, நிறைய இடங்களில் unconventional shots-ஆக அமைத்திருக்கிறார்கள். காட்சிகளை எழுதும்போதே தீர்க்கமான சிந்தனையும் திட்டமிடலும் இருந்திருக்காவிட்டால் இவ்வளவு தெளிவானதும் நேர்த்தியானதுமான திரைமொழி சாத்தியமாகியிருக்காது.

படமே ஒரு உற்சாகக் களிவிளையாட்டு போல இருக்கிறது. அதனால் எந்தப் பின்வாங்கலும் தயக்கமும் இல்லாமல் அநேக முறைகள் வேடிக்கை கவிழ்ப்புகள் நிகழ்கின்றன. மதிப்பீடுகளைத் தலைகீழாக்கி கெக்கலிக்கிறார்கள். ஒரு காட்சி பழைய பாதையில் தடம் புரள்கிறதே என ஏமாற்றமாக யோசிக்கும்போதே சட்டென ஒரு ஹோலி வெடிப்பு. பஞ்சுத் தலையணையை முகத்தில் அழுத்தி ஒரு குத்துவிடுவதைப் போன்ற மென்சாடல்கள். ஆனால், குத்து உறுதி.

படத்தின் நடிகர்கள் எவரையும் அழகு எனச் சொல்லிவிட முடியாது. ஆனால், படம் நகர நகர, சின்னச் சின்னக் காட்சிவெட்டுகள் மூலம் காட்டப்படுகிற உடலசைவுகள் வழியாக அழகாகிக்கொண்டே போகிறார்கள். முக்கால்வாசி படம் கடந்த பிறகு நாயகனும் நாயகியும் முத்தமிடும்போது ‘அட, என்னவொரு ஜோடி!’ என்று வியந்தேன்.

பகடிப் படங்களுக்கு எளிமையான கதைகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு அவசியம் என்பதற்கு இதைப் பாடமாகவே வைக்கலாம். கதை எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ விஷயங்களைக் கொட்டுவதற்கு அவ்வளவு இடைவெளி (space) மிச்சமிருக்கிறது என்று பொருள். வழக்கமாக, பகடிகளில் ஓர் அந்தர மிதப்பு இருக்கும். ஒரு பக்கம் உணர்ச்சி, இன்னொரு பக்கம் கேலி எனப் பகடியானது கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளுடன் பட்டும் படாமல் இருந்தால்தான் நகைச்சுவை எடுபடும் என்பதால்! இப்படத்தில் அதனை அனாயசமாக மீறியிருக்கிறார்கள். பாத்திரங்களின் உணர்வுகள் அசலாகவும் தீவிரமாகவும் வெளிப்படுகின்றன. அதே சமயத்தில், அவை பக்கச் சார்பற்ற பகடிக்கான இடத்தையும் தக்கவைத்திருக்கின்றன. சில சமயங்களில், கோடுகளின் எல்லையை அழிக்கவும் செய்கிறார்கள். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் தாவித் தாவி பார்வையாளரின் முன்முடிவான எதிர்பார்ப்புகளைப் போகிற போக்கில் குலைத்து ஒரு பொத்தலை இடுகிறார்கள்.

அரசியல் சரிநிலைக்கு அஞ்சாத பகடிகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு வலதுசாரியைத் துச்சமாகக் கேலிசெய்கிற அதே துணிச்சலுடன் தலித் படைப்பாளிகளும் சீண்டப்படுகிறார்கள். கலைக்குக் கொள்கை பேதமில்லை. அதனால், ஒற்றை வரி வசனமாக இருந்தாலும், இரு தரப்பினரது அஜண்டாவும் கூர்மையான விமர்சனங்களிலிருந்து தப்புவதில்லை.

டங்கல் படத்தில் ஒலித்ததைப் போலவே இதிலும் நாட்டுப்பண் இசைக்கப்படுகிறது. ஆனால், நாம் சிலிர்த்துப்போய் எழுந்து நிற்பதில்லை. அந்தக் காட்சியின் நோக்கத்தை அறிகிறோம். சிந்திக்கிறோம். கேள்வி கேட்கிறோம். ஒரு நல்ல படம் இப்படித்தான் தொழிற்பட வேண்டும். உச்சகாட்சியில், நாயகி நாயகனை ஒரு கேள்வி கேட்கிறாள். அதற்கான பதிலைப் பொறுத்து அவர்களது வருங்கால உறவு அமையும் என்று முடித்திருந்த விதமுமே திருப்தியாக இருந்தது.

முபியில் பார்க்கலாம்.

*

புழு (2022), ரதீனா

புழு என்கிற படிமத்தை மூன்று விதங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று, பரீக்ஷித் மன்னனின் கதையை நவீன நாடகமாக அரங்கேற்றுகிறார்கள். தன் மீதான சாபங்களுக்கு அஞ்சி, காடு மலைகளைத் தாண்டிய தனித்தீவில் பரீக்ஷித் தஞ்சமடைந்திருக்கிறான். உணவில் விஷம் கலந்து கொடுக்கப்படலாம் என்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பார்ப்பனர்கள் கொண்டுவரும் பழங்களை மட்டுமே உட்கொள்கிறான். அவற்றை உண்ணும்போது ஒவ்வொரு நாளும் விதவிதமான கதைகளைப் பார்ப்பனர்களிடம் கேட்கிறான். ஆறு நாட்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றிக் கடக்கின்றன. ஏழாம் நாள் அவன் சாப்பிடும் ஆப்பிளில் ஒரு புழு இருக்கிறது. அன்றைக்குக் கதையைச் சொல்லப்போவது அந்தப் புழுதான் (தக்ஷகன்). அவன் கேட்கவிருக்கும் கடைசிக் கதை.

இரண்டு, இந்தத் தக்ஷகப் புழுவின் தொன்மத்தைப் படத்தின் இறுதியில் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள். கதைப்படி மம்மூட்டி (குட்டன்) பார்ப்பனர். குட்டனின் பார்வையில் புழுவாகத் தெரியும் ‘இழிபிறவி’ ஒருவன் அவனைப் பழிவாங்க வந்திருக்கிறான். குட்டன் செய்த பாவத்தை நினைவுறுத்தும் விதமாகத் தன் கடந்த கால நிகழ்வொன்றை விவரிக்கிறான்.

மூன்றாவதுதான் முக்கியமானது. குட்டனின் தலைக்குள் நெளிகிற புழு. இது மறைபொருளாகச் (சப்டெக்ஸ்டாக) சொல்லப்பட்டிருக்கிறது. குட்டன் அடிக்கடி தன் தலையைப் பிடித்துக்கொண்டு பாரம் தாங்காமல் நிலைதடுமாறிச் சரிந்து விழுகிறான். அந்தப் புழு அவனது மண்டைக்குள் பயமாக, படபடப்பாக, நடுக்கமாக, குற்றவுணர்ச்சியாக, அடுத்தப் பாவத்துக்கான தூண்டுதலாக, ஆத்திரமூட்டும் அவதியாக, சாதி வெறியாக, ஒவ்வொரு முறையும் மாறி மாறி நெளிகிறது. தனது அன்றாடங்கள் ஒழுங்குக்குள் அமைய வேண்டும் எனக் குட்டன் விரும்புகிறான். தன் மகனை மாரல் போலீஸிங் செய்கிறான். விடாப்பிடியான கச்சிதத்தைக் கோருகிறான். ஆனால் புழுவின் குணாம்சம் நேரியல்மை அல்லவே? அது வளைந்து நெளிந்துதான் போகும். உள்ளிருந்து ராஜாவைக் கொல்லும்.

கதாபாத்திரங்களின் பின்னணி குறித்து குறைவான தகவல்களே நமக்குக் காட்டப்படுகின்றன. அவையும் ஒரேயடியாகக் கொட்டப்படாமல் துண்டு துண்டான காட்சிகள் வழியாகக் கோர்க்கப்பட்டுள்ளன. இந்த உத்தி படம் முழுக்கவே சிறப்பாக எடுபட்டிருக்கிறது. முழு விவிலியத்தை வாசிப்பதைவிட வண்டியில் கடக்கும்போது தென்படுகிற சுவர் வாக்கியங்கள் ஒரு நாளை அர்த்தமாக்கிவிடுவதைப் போல. ஒரு மேற்கோள் போதுமானதாக இருப்பதைப் போல. படத்தின் ‘revealing points’-உம் மிகுந்த நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருந்தன. சிறிய விஷயங்களைக் காட்டி அவற்றுள் பொதிந்திருக்கும் பெருவெடிப்புத் தருணங்களைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள். படம் முடிந்ததும் படத்துக்கும் தொன்மத்துக்குமான இணைக்கோடுகளைச் சிந்திப்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். உதாரணமாக, குட்டன் சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பும்போது அங்கே ‘புழு’ காத்திருக்கிறது. உயிர் பயத்தில் பரீக்ஷித் மன்னன் பாம்பைக் கொல்கிறான், குட்டன் நாயைக் கொல்கிறான்.

கேரளத்தின் மிகச்சிறந்த நடிகர் இப்போதும் மம்மூட்டிதான். முன்னறியிப்புக்குப் பிறகு அவர் நடித்திருக்கும் நல்ல படம். மகனிடம் கண்டிப்பு காட்டுவது, சட்டென்று குரல் கமறி “அப்பாவைக் கொல்லப் பார்க்கறியா?” எனச் சந்தேகிப்பது, ஒரு பார்வையில், முகச்சுழிப்பில் மிரட்டலையும் பச்சாதாபத்தையும் பிரதிபலிப்பது, பரிவுணர்ச்சியோ மனிதாபிமானமோ இல்லாமல் குரூரமாக நடந்துகொள்வது, பார்வையைத் தாழ்த்தியபடி பேசுவது என எல்லாக் காட்சிகளிலும் குட்டனின் ஆளுமையைக் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறார். அந்த நடிப்பில் துளியும் மெனக்கெடல் இல்லை என்பதுதான் ஆச்சரியம். அது மூச்சுவிடுவது போலச் சீராக இருக்கிறது. மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும்!

படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் பொருந்தி வரவில்லை. திடீரெனக் கடைசி நிமிடங்களில் நமக்கு நன்கு பரிச்சயமான ஃபிளாஷ்பேக் களத்தை விவரித்தது படத்தின் முந்தைய உத்திகளுடன் ஒட்டாமல் இருந்தது. அக்குறை இப்படத்தை ஒருபடி கீழிறக்குகிறது. கிளாசிக்காக மாற வேண்டியதைத் தடுக்கிறது. இருந்தாலும், இயக்குநர் ரதீனாவுக்கு இது முதல் படம். வானவில்லைத் தோற்றுவிப்பதற்கு ஒரு ப்ரிசம் போதும், ஒளியைச் சரியான கோணத்தில் பாய்ச்ச வேண்டும், அவ்வளவுதான் என அறிந்து வைத்திருக்கிறார். கவனிக்கப்பட வேண்டியவர்.

சோனி லைவில் காணக் கிடைக்கிறது.

*

Miracle in Milan (1951), Vittorio De Sica

கடந்த ஆண்டு கான் விழாவில் என நினைக்கிறேன். டிசிகாவின் Miracle in Milan படத்தின் மேம்படுத்தப்பட்ட பிரதியைத் திரையிட்டார்கள். முதன்முறை கண்டுகளித்த போது மட்டமான தரத்தில் பார்த்திருந்ததால் இதன் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிரதியைத் தரவிறக்கி சில மாதங்களுக்கு முன் மறுபடியும் பார்த்தேன்.

யதார்த்த களத்தில் திடீரென நிகழும் விநோதங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இப்படி எடுப்பது டிசிகாவின் வழக்கமான பாணியல்ல. எனக்குமே ஃபேண்டசி படங்கள் மீது கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அதனால் இரண்டாம் முறையும் அவநம்பிக்கையுடனேயே பார்க்கத் தொடங்கினேன்.

மனிதர்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சியை விரும்புவது மனங்களின் இயல்பு. தன்னால் இயன்றதை வளைத்துப் போடவே, தனக்கு எட்டுவதைத் தட்டிப் பறிக்கவே, அதன் சிந்தனைகள் பரபரக்கும். இப்படியான சராசரி ஆட்களுக்கு நடுவே புதையல் போல வெள்ளந்தி மனிதனொருவன் வந்துசேர்கிறான். களங்கமின்மைக்கே அபூர்வ வரங்கள் கிடைக்கும் என்பது எப்போதுமுள்ள விதி. அந்த ட்ரோப்பை எடுத்துக்கொண்டு டிசிகா செய்தது அசாத்தியமான புதிய பாய்ச்சல் என்பது படத்தைப் பார்க்கப் பார்க்கத் தெளிந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான கடுமையான வறுமை பெருவாரியான மக்களைச் சுருட்டி வெட்டவெளியில் நிறுத்தியிருக்கிறது. குளிரும் வெயிலும் அவர்களை வாட்டி வதைக்கிறது. பழைய இரும்போ, தகர டப்பாவோ, என்ன கிடைக்கிறதோ அதை வைத்து தங்கள் வாழ்வை ஒப்பேற்றுகிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் அற்புதம். பெரிய பெரிய மாயங்கள்கூட நிகழ வேண்டாம். ஒருவேளை உணவு போதும், பழுதடையாத காலணி போதும், இன்னுமொரு நாளை நம்பிக்கையுடன் வாழ்வோம் என்கிறார்கள். எதுவும் நிச்சயமில்லாதபோது கனவுகளும் ஆசைகளுமே எளியவையாகச் சுருங்கிவிடுகிற அவலம்!

அவர்களது வாழ்வு பதற்றத்தில் நகர்கிறது, சோர்வில் தள்ளுகிறது. ஆனாலும் படத்தில் காட்டப்படுகிற முகங்களில் புன்னகைக்குக் குறைவில்லை. நம்மை ஆழமான குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிற விஷயம் இதுதான். ஏழ்மையின் சிரிப்பைக் கண்கொண்டு சந்திக்கிற துணிச்சல் யாருக்குத்தான் இருக்கிறது?

சின்னச் சின்னச் செய்கைகள், உடலசைவுகள் வழியாகக் கதாபாத்திரங்களின் மனவோட்டங்களைக் கடத்துவதில் டிசிகா மேதை. நாம் எதிர்பாராத சமயத்தில் சட்டென்று காட்சிகளின் உணர்வுகள் மேலெழும்பிவிடும். முதுகுத்தண்டில் சொடுக்கும். ஒரு காட்சியை விவரிக்கிறேன். சுட்டெரிக்கிற வெயிலில் நின்றபடி தங்களது வாழ்விடத்தை ஒரு ரயில் நிதானமாகக் கடப்பதை அந்த மக்கள் கூடிநின்று வெறிக்கிறார்கள். ஏசி கோச்சில் சொகுசாகப் பயணம்செய்கிற இளம்பெண் அலட்சியத்துடன் இவர்களை நோக்குகிறாள். இதுவரை சாதாரண காட்சி. அடுத்து வருவதுதான் குரூரம். தன் கண்ணாடி ஜன்னலில் படிந்திருக்கும் ஏசி பனியைத் துடைத்துக்காட்டி மிடுக்காகத் தலையுயர்த்திப் பார்ப்பாள். மக்கள் உணர்ச்சியே இன்றி அவளது அவமதிப்பில் உறைந்து நின்றிருப்பார்கள்.

இன்னொரு காட்சி. மக்கள் சிறிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ஒரே ஒரு முழு கோழிக்கறி இருக்கிறது. எல்லோரது கையிலும் வரிசை எண்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு. சீட்டைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் யாருடைய எண் வருகிறதோ அவர்கள் அந்தக் கறியை உண்ணலாம். ஒரு கிழவனுக்குப் பரிசு விழுந்துவிடும். வாழ்நாள் முழுதும் கிடைத்த அடிகள் காரணமாகத் தான் துரதிர்ஷ்டசாலி எனக் கருதிக்கொண்டிருக்கும் அந்தக் கிழவனால் இந்த வெற்றியை நம்பவே முடியாது. அவனுக்குத்தான் யோகம் அடித்திருக்கிறது எனச் சுற்றியிருப்பவர்கள் உறுதிப்படுத்திய பிறகே உற்சாகமடைவான். கோழிக்கறி கிடைத்ததும் அவனது தெனாவெட்டைப் பார்க்க வேண்டுமே? ஒருவருடனும் கறியைப் பகிர்ந்துகொள்ள அவனுக்கு விருப்பமிருக்காது. குழந்தைகள், பெண்கள், கூட்டாளிகள் என நூறு பேர் சூழ்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அதைப் பற்றின கவனமோ வெட்கமோ இல்லாமல், ஒற்றை ஆளாகக் கறியை வெளுத்துக் கட்டுவான். ஒருபக்கம், ஓர் ஆள் வயிறாறச் சாப்பிடுவதைக் கண்டு வெறுப்படையும் முகங்கள், இன்னொரு பக்கம், எலும்பைக்கூட விட்டுத்தர மனமில்லாமல் வழித்துச் சப்பும் சுயநல முகம்.

இவரை விஞ்சிவிடும் ஓர் இயக்குநர் வந்துவிட்டாரா என்ன? மனிதம் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருந்த ஆள். பெருந்துயரங்களின் பரிதவிப்புகளுக்கு இடையேயும் கசப்புகளை மட்டும் கவனப்படுத்தாமல் கனிவை வைத்த மகோன்னதக் கலைஞன். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வென்றது போன்ற மிதப்பையே டிசிகா எடுத்த படங்களின் இறுதிக்காட்சிகள் எப்போதும் அளித்திருக்கின்றன. ஆமாம், டிசிகாவே உச்சகட்ட காட்சிகளின் விற்பன்னர். அவரது எல்லா கடைசி ‘ஷாட்’களும் காவியம். இப்படத்திலும் அப்படியான ஒரு பறத்தல் நிகழ்கிறது.

மேதைமைக்கான அளவுகோல் என்ன? அது சிறுவர்களின் உலகை ஒரு படைப்பாளி எப்படி காட்டுகிறார் என்பதைப் பொறுத்தது எனச் சொல்வேன். அதை அணுகி அறிய முடிந்தவருக்கு வாழ்வின் மற்ற சிடுக்குகளை மிக எளிதாகப் புனைந்துவிட முடியும். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் பிறருக்கு உணர்த்திவிட இயலும். அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் டிசிகா.

*

Great Freedom (2021), Sebastian Meise

சுடர் துடிப்பதைப் பார்த்திருப்போம். இருள் மினுமினுப்பதைக் கண்டிருக்கிறோமா? சிறையில், வதைமுகாம்களில், படுகொலைக்களங்களில் இருட்டு துடிப்பதைப் பார்க்க முடியும். இருள் பழகிப் பழகி ஒரு வத்திக்குச்சியின் ஒளிக்காக ஏங்கி ஏங்கி பின் எதுவுமில்லாமல் உடலைப் பொசுக்குகிற இருட்டு. தனிமையும் இருளும் முயங்கி, சித்தம் கலங்கி, வேறு நினைப்பின்றி, மொத்தக் கவனமும் உடலில் குவிந்திருக்கும்போது பளபளக்கிற இருட்டு. நீங்கள் இருளில் வீற்றிருக்கிறீர்கள். இன்னொரு இருட்டின் கண்கள் உங்களைக் கவனிக்கின்றன என்றால் அந்த இருளைக் காட்டிலுமான நரகக் கொதிப்பில் உள்ளுக்குள் அலறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தப் படம் அப்படி மெளனமாக நாக்கைக் கடித்துக்கொண்டிருந்தவனின் வேதனையைச் சொல்கிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் நவீனச் சமூகங்கள் உருவாகிவிட்டன. நவீன மனிதர்கள், நவீன அரசுகள், தொழில்நுட்பங்கள். சிறைக்கூடங்கள்கூட நவீனமயமாகி விடுகின்றன. இயற்கையை வெல்லும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. மனிதன் நிலவில் காலடி எடுத்து வைக்கிறான். ஆனால், சட்டங்கள் மட்டும் புதுப்பிக்கப்படுவதில்லை. நியமங்கள் மரபை மீறுவதில்லை. தாமதமான நீதி மட்டுமல்ல, காலதாமதமான சட்டத் திருத்தமும் அநீதிதான் என்பதைப் படத்தில் அழுத்தமாக நிறுவுகிறார்கள்.

படத்தில் சொற்ப நிமிடங்களுக்கே வெளியுலகம் காட்டப்படுகிறது. பெண்களே இல்லை. ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாறுவதொன்றே காட்சி மாற்றம். அந்தப் புதிய சிறையிலும் அதே பழைய முகங்கள். அவர்களைக் கண்டு எவரும் ஆச்சரியப்படுவதில்லை. இது இப்படித்தானே நடக்கும் என்கிற நடைமுறையைப் புரிந்துகொண்டு சிரிக்கிறார்கள். அளவளாவுகிறார்கள். சிறையின் விதிகளை ஏற்றுக்கொண்டு கொஞ்சம் அத்துமீறலை நிகழ்த்த முயல்கிறார்கள். விதி வேடிக்கை பார்க்குமா? அது அவர்களை மீண்டும் இருட்டில் தள்ளுகிறது. அதன் மூர்க்கம் உக்கிரமடைகிறது.

“Irony of fate” குறித்து படத்தில் பேசுகிறார்கள். ஒருவன் இரண்டாம் உலகப் போரில் சிப்பாயாக இருந்தவன். போர்க்களத்தில் அவன் ஒருவனையும் சுடவில்லை. எதிரிகளைக் கொல்லும் வாய்ப்பு கிடைக்காதவன், போர் முடிந்து வீடு திரும்பியதும் தன்னிலை இழந்து ஒருவனைக் கொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருபதாண்டுகளாக மேல் முறையீடுகள் செய்தும் பலனில்லாமல் மிச்ச வாழ்நாளைச் சிறையில் கழிக்கிறான்.

இந்த நகைமுரண் அம்சம் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களுக்குப் பங்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக எது விடுதலை என்கிற ஆதாரமான கேள்வியை முன்னிறுத்தி இப்படம் நகர்கிறது.

படத்தின் இறுதிக்காட்சி “Ida” படத்தை நினைவூட்டியது. வெளியுலகத்தில் அந்நியமாக உணர்பவர்கள் தம் விடுதலையைச் சலித்துக்கொள்கிறார்கள். விடுதலைக்கான வாய்ப்பையுமே மறுதலித்து நரகத்துக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் மலையுச்சியிலிருந்து விருப்பத்துடன் வீழ்வது அதலபாதாளத்தை நோக்கிதான். அவர்களுக்கு அந்த வீழ்ச்சியின்போது அடைகிற மிதப்பு போதும். ஒரு கணமேனும் கட்டுப்பாடற்ற விசையை உணர முடிந்தால் போதும். அப்போது அவர்களது அடிவயிற்றிலிருந்து எழும் ஓலம் இருக்கிறதல்லவா? அது உலகத்துக்கே கேட்கும்.

முபி தளத்தில் இருக்கிறது.