பிரமிள்: தனியொருவன் ( பகுதி 6 ) – பாலா கருப்பசாமி

0 comment

சென்ற கட்டுரையில் வெ.சா. மீதான பிரமிளின் முதலாவதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டினைப் பார்த்தோம் (சிருஷ்டிபூர்வம், ரசனாபூர்வம்). வெளிப்படையாக அவர் சொல்லவில்லையே தவிர பிராமணீயக் குண இயல்பை அவர் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டி விமர்சிக்கத் தொடங்குகிறார். அதில் ஒன்றுதான் இந்த இரசனாபூர்வம்.

யோசித்துப் பார்த்தால் ஒட்டுமொத்த மக்களையே இரண்டாகப் பிரித்து விடலாம் என்று தோன்றுகிறது. வைஷ்ணவம்-சைவம். இம்மை-மறுமை. அறிவு-உணர்வு. Insensitive-sensitive. இகவாழ்வுத் தேடல் எனும் போது இதிலுள்ள இன்பங்களை நுகர, அனுபவிக்க, இரசனாப்பூர்வமாக அணுக இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மறுமை பரம்பொருளை தியானித்து மாயாவான இகவுலகை மறுக்கிறது. உள்ளொளியை நோக்கி மனிதனை நகர்த்துகிறது. பிராமணீயத்தின் ஒரு கூறாக இகவாழ்வுத் தேடலைச் சொல்லலாம். சுக வாழ்வினை, அதிகாரத்தினை நோக்கிச் செல்பவர்களாக, சடங்குகளுக்கும் மந்திரங்களுக்கும் கடவுளை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். மறுமைத் தேடல் உள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளாமல், மனசாட்சி, அறம், ஞான விழிப்பு என்ற தேடலுடன் பெரும்பாலும் வசதி குன்றியவர்களாக உள்ளனர். இந்தப் பிரிவினை பிராமணர்களை மட்டும் குறிப்பிடவில்லை. பிராமணீயம் என்பது பல குணாம்சங்களின் தொகுப்பு. அதில் இது ஒரு கருத்தியல் ரீதியான பார்வை மட்டுமே. இதைப் புரிந்துகொண்டால் இலக்கியத்தில் பிராமணியத் தாக்கத்தை அதன் கூறுகளை கடுமையாக பிரமிள் எதிர்ப்பதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம்.

”கோவில்களால் போஷிக்கப்பட்டவை சிந்தனை சாராத நுண்கலைகளான சங்கீதம் போன்றவை மட்டுமே. உண்மையில், இதுதான் பிரச்சினையின் மையம் என்று எனக்குத் தோன்றுகிறது. கோவில் கலாச்சாரத்துக்குச் சிந்தனையொழுக்கம் சார்ந்த இலக்கியம் அந்நியமானது.”

இங்கே கலை என்பது சிந்தனைவடிவ ஒழுக்கத்திலிருந்து வேறானதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பிரமிள். நான் விமர்சனக் கட்டுரைகள் எழுதத் தொடங்கியதும் இதற்குள் இயங்க ஆரம்பித்தால் அதன் தர்க்க ஒழுங்கு படைப்பு மனநிலைக்கு எதிராகத் திரும்பிவிடும் என்று சக கவிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். இதில் உள்ள இன்னொரு அபாயம் எழுத ஆரம்பித்தால் அதுதான் நம் அடையாளம் என்ற முத்திரை குத்தித் தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளாகக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தர்க்கம் அல்லது சிந்தனை வடிவ ஒழுக்கம் படைப்பு மனநிலைக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக உள்ளது. பொதுவாக பிற கலைகள் அனைத்திலிருந்தும் இலக்கியம் வேறானதாக உள்ளது. எழுத்தறிவு, சிந்தனை, அனுபவம், நுண்ணுணர்வு போன்றவை இலக்கியத்தின் முக்கியக் கூறுகள். இசை, நாட்டியம் போன்ற இன்னபிற கலைகளுக்கு எழுத்தறிவோ சிந்தனையோ தேவையில்லை. பிரமிள் மட்டுமே தமிழில் தனிச்சிந்தனை மரபை தனது ஸ்பஷ்டமான பார்வையில் முன்வைத்துள்ள அதேவேளையில் கவிதை, கதை, நாடகம் போன்றவற்றைப் படைப்பவராகவும் இருந்துள்ளார். நம் சூழலில் இது நிகழாமைக்கு அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு ஒரு முக்கியக் காரணம்.

சமகாலப் புனைவுகளை வாசிக்கையில் அவை ஜீவனற்று வறட்சியாக இருப்பதாய்த் தோன்றுகிறது. மிக நன்றாக எழுத்துக்கலை கைவரப் பெற்ற எழுத்தாளர்கள் கூட வெட்டியாய் ஆளற்ற இடத்தில் தனியே கம்பு சுற்றுவது போல எழுதி வைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இன்னொரு பக்கம் புதுமாதிரியாய் என்ன எழுதலாம் என்று யுக்தியில் மட்டும் கவனம் செலுத்துகிறது ஒரு கோஷ்டி. இந்த மாதிரிக் கதைகள் ஏதாவது வராதா என்று தேடி, தான் வாசித்த கோட்பாடுகளை, அதில் அடையாளம் கண்டு புளகாங்கிதம் அடைந்து தமிழின் முன்னோடி முயற்சி என்று கொண்டாடி கவனப்படுத்துவதை வாழ்நாள் கடனாக வைத்திருக்கிறது இன்னொரு அகாடெமிக் கோஷ்டி.

“படைப்பு, இயற்கையின் உயிர்த்தன்மை போன்ற ஒரு வீர்யத்தைக் கொண்டிருக்க வேண்டும். சமீபகாலங்களில், சுமார் பத்து வருடங்களாக, தமிழ் இலக்கியப் படைப்புகளில் இந்த உயிர்த்தன்மையைக் காணமுடிவதில்லை. இதற்கான காரணங்களுள் ஒன்றென, இலக்கியப் பிடிவாதம் என்ற வியாதியைக் காணமுடிகிறது. மேற்குறிப்பிட்ட இலக்கியப் பிடிவாதத்திலிருந்து விளைந்த மிக முக்கியமான குறைபாடு ஆழமானது; ஜனரஞ்சகமான எழுத்தின் சாயல்கள் யாவற்றையும் அஞ்சி ஒதுக்கும் குணமே இது. இலக்கியப்படைப்பு சிரமம் தரவேண்டும் – கரடுமுரடாக இருக்க வேண்டும் – வறட்சியாக இருக்கவேண்டும் என்பது போன்று உள்ளூர தீர்மானித்துக் கொண்டவர்கள்தான் இன்றைய தலைமுறையினரோ என்று, 1960களின் முடிவுக்குப் பிறகு பிறந்துள்ளவர்களின் படைப்புகள் எண்ண வைக்கின்றன. ஆர்வமோ, உத்வேகமோ, உயிரோ அற்ற எழுத்து இவர்களுடையது. கூடவே மௌனியின் எழுத்தை, அதன் பரிமாணம் புரியாமல், ஒரு கீழ்த்தளத்தில் போலிபண்ணிய தலைமுறையாக, இவர்களை ஒட்டுமொத்தமாகக் குரிப்பிடலாம். கூடவே, சமகால மேல்நாட்டு இஸம்கள்; அவற்றின் விளைநிலங்களை உணராமல் போலிபண்ணப்பட்ட மேல்நாட்டு இயக்கங்கள், ஆசிரியர்கள், சுயாதீனமான ஆர்வத்துக்கும் இயல்புக்கும் எட்டாத ஆதர்சங்கள், ஆபத்தானவை. ஆர்வத்தின் – உத்வேகத்தின் – மூலநிலையமான தன்னியல்பை, தன்னம்பிக்கையை சிதைப்பவை”

மேற்கண்ட கூற்று 1979ல் (கொல்லிப்பாவை: கட்டுரை- ருசிகரம்) பிரமிளால் சொல்லப்பட்டது. 1960க்குப் பிறகு பிடிவாதமாய் இலக்கியம் பண்ணுகிறேன் என்று முன்முடிவோடு எழுத முற்பட்டதன் விளைவாக இதைக் குறிப்பிடுகிறார். காலம் செல்லச்செல்ல அனைத்துமே தரமிறங்கியபடியே செல்வதாக உள்ளன. முப்பது வருடங்களுக்கு முன்பு பொருட்கள் தரமுள்ளதாக இருந்தன. காற்றும் நீரும் இந்தளவு மாசுபடாமல் இருந்தன. தமிழ் இன்னும் செழுமையாய் இருந்தது. இன்று, உலகமயமாக்கல் எல்லோரையும் விரட்டுகிறது. கிட்டத்தட்ட எல்லோரும் இயந்திரமாகி விட்டோம். ஆன்மாவை எதிர்த்து இடதுசாரிகள் இந்தளவு குரல் கொடுத்திருக்க வேண்டியதில்லை. உலகமயமாக்கல் எல்லா ஆன்மாக்களையும் சாகடித்து விட்டது. நுகர்வுப்பசி அத்தனை கொடூரமாய் மனிதர்களை வேட்டையாடுகிறது. இலக்கியமும் ஜீவனற்றுப் போய்விட்டது. மகாகவிக்குப் பிறகு பிறந்த ஒரே மெகாகவி மனுஷ்யபுத்திரன் என்று சாதிக்கும் அறிவுஜீவிகள் இங்கே நிறைய பேர் உண்டு. தான், தன் அனுபவம், வெளியே இருக்கும் காற்றுக் குழலுக்குள் சென்று இசையாய் எழும்புவதைப் போல தன்னுணர்வு எதுவுமற்று, இங்கே எல்லாமே செய்யப்படுபவையாக மாறிவிட்டன.

ருசிகரம் கட்டுரையில் இப்படி இலக்கியப் பிடிவாதத்துடன் எழுதும் போக்கும், வறட்சியான நடையும் எங்கிருந்து துவங்குகிறது என்று ஆய்வு செய்கிறார். சி.சு.செ.-விடம் சற்று வறண்ட நடை உண்டு. இன்னொருபுறம் மௌனி எழுத்துகளில் ஈர்ப்பு கொண்ட ந.முத்துசாமியும், அசோகமித்திரனும் செய்த அரைகுறை முயற்சியால் ஒருபுறம் வறட்சியான எழுத்தே கிடைத்தது. எதற்கென்றே தெரியாமல் அ.மி. சூழலை விவரித்துக் கொண்டிருப்பார். அ.மி. ஜனரஞ்சக பத்திரிகைகளுக்கு நகர்ந்தாலும், அங்கும் பெரிய வரவேற்பில்லை. சமகாலத்தில் அ.மி.யை ஒருசேர தூக்கி நிறுத்தியிருப்பதில் பெரும்பங்கு ஸ்டார் எழுத்தாளர்களான ஜெயமோகனுக்கும் சாரு நிவேதிதாவிற்கும் சேரும். பிரமிள் அ.மி.யின் மஞ்சள் கயிறு என்ற கதையைத் தவிர ஏனையவற்றை ஏற்கவில்லை.

கொல்லிப்பாவை இதழ் 7ல் (1979) பிரமிள் ‘தடுக்கி விழுந்த நெடும்பயணம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மார்க்ஸியரான ஞானி ‘தருமு சிவராமின் கவிதைகளில் நெடும்பயணம்’ (1978) என்ற கட்டுரையை யாத்ரா இதழில் எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை இது. இப்படி காலவரிசைப்படி பிரமிளின் எழுத்துகளைப் படிக்கையில் அதில் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி இருப்பதை உணர முடிகிறது. படைப்பின் நிழலுருவம் தான் விமர்சனம். ஆரம்பத்தில் படைப்புக்கான அனுபவ முதிர்ச்சியின்மையால் பிறரது படைப்புகளுக்கு விமர்சனம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். விமர்சனம் என்பது கலையுருப் பெறுகிற Admiration என்கிறார். பொதுவாக தூக்கி வைத்துக் கொண்டாடுவது இல்லை போட்டு உடைப்பது என்பது தான் இங்கே விமர்சனப் போக்காக உள்ளது. போட்டு உடைப்பது வெகு அரிது. ஆனால் இந்த அட்மிரேஷன் என்பது அப்படியல்ல. ஆகச்சிறந்த வாசகன் / இரசிகனின் செயல் அது. இது வெறுமனே இரசனை சார்ந்த விஷயம் அல்ல. படைக்கப்பட்டதின் சாரத்தை முழுவதும் உள்வாங்கிக் கொள்வதால் தோன்றும் உணர்வும் எதிர்வினையுமே அட்மிரேஷன்.

பிரமிள் தன்னிடம் பேராசிரியர் ஜேசுதாஸன் சொன்னதாகச் சொன்ன வார்த்தைகள் மிகவும் அர்த்தமுள்ளவை: ‘விமர்சகன் என்பவன் வெறுமனே கதை கவிதைகளுக்கு விமர்சனங்கள் எழுதுகிறவனல்லன், தனது நோக்கிற்கென சுயமான விமர்சன சித்தாந்தங்களை – Principles – உருவாக்குகிறவனைத் தான் விமர்சகன் –  Critic – என்று மேலைநாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள். இப்படிப் பார்த்தால் தமிழில் உங்களை மட்டும் தான் விமர்சகன் என்று கூறலாகும்.’ சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதையொன்று ஞாபகம் வருகிறது.

எடைக்கல் அழுத்த வெகுநேரம் காத்திருக்கிறது தராசு
கட்டி இரும்புத்தட்டு அந்தரத்தில் தொங்குகிறது 
எடைக்கல்லை எடுத்துவிடும்படி மன்றாடுகிறது 
அந்தரத்தில் தொங்கும் இரண்டு தட்டுகள் 
வேடிக்கையாய் இருக்கிறது 
கால்பாவ முடியாது தத்தளிக்கின்றன
சுத்த பைத்தியக்காரத்தனம் 
நீ எடைக்கல்லை வைத்து அழுத்து 
இப்போது எடை போடு

***

எப்போதும் தராசுக்கு எடைக்கல் தேவைப்படுகிறது. எடைக்கல் இல்லாமல் அளவிட முடியாது. ஒருதட்டு முழுக்க தன் எடையால் அது நிறைந்திருக்க, எதிர்த்தட்டை அளக்கிறது அது. ஒரு பொருளை மதித்தலும், மதிப்பிடலும் இருவேறு அம்சங்கள். இரண்டையும் படிக்கல் செய்கிறது. இதற்கு சுயமான பார்வை தேவை. துலாக்கோலின் முள்ளைப் போன்றது அது. கடன் வாங்கிய பார்வையில் பொருளின் உண்மையான மதிப்பும் தெரியாது. மதிப்பீடும் தவறாகிப் போகும். கோவை ஞானி எழுதிய தமிழ்க்கவிதை என்ற கட்டுரைத் தொகுப்பை பாதிவரை வாசித்திருக்கிறேன். மார்க்ஸிய நோக்கில் தமிழ்க் கவிதைகளை விமர்சித்து எழுதியிருக்கிறார். 700 பக்கங்களுக்கு மேல் இருக்கும். கடுமையான உழைப்பு. ஆனால் கவிதையின் உள்ளார்ந்த உயிர்ப்பை மருந்துக்குக் கூட தொட்டிருக்க மாட்டார். ஈரோடு தமிழன்பன் கவிதைகள் உட்பட இதில் விவாதிக்கிறார். நான் வாசித்தவரையில் அவரது கவிதைகளைத் தான் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். காரணம் அந்தக் கவிதைகள் பேசும் விசயங்கள் அவருக்கு (மார்க்ஸியத்துக்கு) உவப்பான ஒன்று. எவ்வளவு நேர / பொருள் விரயம்.

ஒரு மலைச்சிகரம், இரண்டு நாடுகளுக்கு நடுவே நிற்கிறது. ஒரு நாட்டில் பழைய அங்குலம், அடி, கெஜம் என்ற அளவையும் இன்னொரு நாட்டில் புதிய மீட்டர் அளவையும் புழங்குகின்றன. இந்த அளவைகளின் வித்தியாசத்தால், ஒரு நாட்டுக்காரர் மலையை மலை என்றும் மற்ற நாட்டுக்காரர்கள் மலையை மடு என்றும் அளவுகாட்ட இயலாது. தங்களை மார்க்ஸிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்வதைத் தவிர விமர்சனங்களிலோ வாழ்விலோ அந்த மார்க்ஸியத்தைச் செயல்படுத்தத் தெரியாத நம்மூர் கேஸ்களுக்கு இதுதான் புரியவில்லை. பொதுவாகத் தமிழில் இன்னும் வியாக்யானங்களை, வியாக்யானங்களுக்கு அகப்படும் பொருளம்சங்களுடன் கொள்ளும் ஒப்புதல்களைத் தான், ரஸனை என்றும் விமர்சனம் என்றும் கொண்டு வருகிறோம் என்பதையே இது காட்டுகிறது. கவிதையின் உயிர்க்குணம், அந்தக் குணத்தின் மூலம் படிப்பவன் பெறும் அனுபவ நிலை ஆகியன இந்த விமர்சகர்களுக்கு எட்டுவதில்லை. மொத்தத்தில் ஒன்று: படைப்பாளி தானே அறியாத சக்திகளின் வசதிகளைப் பெற்றுள்ளவன். அவன் இயக்கத்தில் கடினம், எளிது என்பவற்றுக்கு இடமில்லை. விமர்சனமோ இத்தகையதன்று. விமர்சனம் கலையாகக் கருதப்படுகிற போதே கடினமான ஒன்றுஅதிலும் கவிதைகளை விமர்சிக்கும் கலை மிகக் கடினமானது

திருநெல்வேலியில் பிரமிள் படைப்புகள் அறிமுக விழாக் கூட்டத்தில் வைகை குமாரசாமி அவர்களும் பேச அழைக்கப்பட்டிருந்தார். பிரமிள் கவிதைகளைப் பற்றித் தனக்குத் தெரியாது. அதுகுறித்து எந்த அபிப்ராயமும் இல்லை என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார். அவர் வெள்ளந்தியான மனிதராகத் தான் தோன்றியது. வைகை என்ற இதழை நடத்தியதால் அவருக்கு வைகை குமாரசாமி என்று பெயர் வந்தது. இவரது இதழில் பிரமிளின் ‘ஊர்த்துவ யாத்ரா’ தொகுப்பை வெளியிடக் கேட்ட போது முதலில் பிரமிள் ஒத்துக்கொண்டாலும் பின்னர் தனது கவிதைகளைப் பற்றி ஏதும் அறியாத ஒருவரிடம் ஏன் கொடுக்க வேண்டும் என்று மறுத்து விடுகிறார். நண்பர்களுடன் உரையாடும் போது பிரமிளை கிறுக்கு என்று அவர் சொல்லி வைக்க அவர் குழந்தையும் அதைச் சொல்லி விடுகிறது. யாத்ரா இதழாளர்களிடம் ஏன் பிரமிள் தொகுப்பு வைகை இதழில் வரவில்லை என்று குமாரசாமியிடம் கேட்கப்பட்ட போது, ‘அவரை என் குழந்தை கிறுக்கு என்று சொல்லிவிட்டது, அதனால் மறுத்துவிட்டார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைப் பிடித்துக்கொண்டு வெ.சா. குழந்தை வாக்கு வேதவாக்கு என்று சொல்லி தனிநபர் தாக்குதலில் இறங்குகிறார். இதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட மிக நீண்ட கட்டுரை ’மேலும் வசவுகள்’ (கொல்லிப்பாவை, இதழ் 10, 1980).

இந்தக் கட்டுரையில் 1977ல் நடந்ததாக பிரமிள் குறிப்பிடும் சம்பவம் முக்கியமான ஒன்று. மதுரையில் என்.பி.ராமானுஜத்தைச் சந்திக்க பிரமிள் சென்றிருந்த போது அங்கே வெ.சா.வும் இருக்கிறார். என்.பி.ஆர். மார்க்ஸியர். பிராமணர். பிரமிளுடன் என்.பி.ஆர். மதிப்புடனும் அக்கறையுடனும் பேசுவதைக் கவனித்த வெ.சா., பிரமிள் சென்ற பிறகு ஏன் அவருக்கு அவ்வளவு ரெஸ்பெக்ட் கொடுத்துப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். என்.பி.ஆர்., அவர் என் நண்பர். மேலும் அவரது கட்டுரைகள் எனக்குப் பல விஷயங்களை விளக்குகின்றன என்று சொல்லியிருக்கிறார். வெ.சா., ‘அது சரிதான். ஆனால் நீங்கள் பிராமணர். நானும் பிராமணன். அவர் பிராமணரில்லையே’ என்று சொல்லியிருக்கிறார். இந்த பிராமணீய மனோபாவ வலைப்பின்னலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் பிரமிள். அவர் அளவுக்கு வேறு யாருக்கும் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் துணிச்சல் இருக்கவில்லை. தன்னை பாதுகாத்துக் கொண்டபடி, அந்தப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போது தான் எதிர்ப்பு வருகிறதே தவிர, தாஜா பண்ணிக் கொண்டு போகும் மனப்பாங்கு எப்போதைக்குமான ஒன்றாகத்தான் இருக்கும் போலும்.

உண்மையில் இதையெல்லாம் தொடாமலேயே பிரமிளின் கருத்தாழம் மிக்க, முகநூலில் ஒரு கோட்பாட்டாளர் சொன்னபடி சுயம்புலிங்கமாய் அவர் பரிணமித்ததை மட்டுமே சுட்டிக்காட்டிவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் பிரமிள் குறித்து எழுத நினைத்ததே பதினைந்து ஆண்டுகளாக அவர் எழுதிய இதுபோன்ற எதிர்வினைகளை வாசித்துத் தான். ஒரு மனிதன் தனியாளாய் எத்தனை தூரம் போராடியிருக்கிறான். பிரமிள் குறித்து 60 பக்கங்களுக்கு எழுதி வைத்தது கைப்பிரதியாக இருக்கிறது அதைத் தட்டச்சிட நேரம் அமையவில்லை என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் என்று அவர் எழுதியிருக்கும் இலக்கிய ஆளுமைகளில் பிரமிள் பெயர் இல்லை. ஜெ.மோ. எழுத வந்த புதிதிலேயே அவரைப் பூசாரி என்றும் அறுவை இலக்கியம் எழுதுபவர் என்றும் விமர்சித்திருக்கிறார் பிரமிள். பிறகு எப்படி எழுதுவார்? ஆனால் நமது விருப்பு வெறுப்பா இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்துவது? அவர் பிரமிள் குறித்து எழுதாதது தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் நேர்ந்த இழப்பு கூடத்தான்.

போன கட்டுரையில் ஒரு நடுநிலைவாதி ஆன்மீகத் தளத்தில் வலதுசாரியாகவும், சமூகத் தளத்தில் இடதுசாரியாகவும் இருப்பது இயல்பு என்று சொல்லியிருந்தது குறித்து சிலர் கேள்வியெழுப்பி இருந்தனர். படிமம் என்ற காலாண்டிதழ் கால.சுப்ரமணியம் அவர்களால் தொடங்கப்பட்ட போது அதன் முகப்பில் பிரமிள் எழுதியிருக்கும் முதல் பத்தியை இங்கே தருகிறேன்:

“சமகால தமிழ்ச் சிந்தனையும் சிருஷ்டித் துறையும், இருவேறு விஷமுகில்களினால் இருண்டிருக்கின்றன. ஒன்று, தனக்குப் பாதகமானவற்றுக்கு எதிராக மட்டும் நவீனத்துவம் பேசிப் பதுங்கியபடி, எல்லாவித செயல்முறைகளிலும் தனது மனோபாவத்தை விட்டுக் கொடுக்காத இந்திய வைதிகம். மற்றது, மனித நுட்பங்களைக் கருவறுப்பதற்குச் சமாதானமாக மனிதாபிமானம் பேசுகிற கம்யூனிஸ வைதிகம்.”

வலதுசாரிகளையும் இடதுசாரிகளையும் ஒரே அளவிலேயே பார்க்கிறார். இரண்டுமே தனிமனித அகவிழிப்புக்கு எதிரானவை. ஒருபக்கம் இடதுசாரிகள் ஜடத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். எந்தவொன்றையும் உயிரிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து விடுவார்கள். மனோதத்துவம் மட்டும் கொஞ்சம் சந்தேகத்துக்குரியதாய் நிரூபிக்கப்பட்டிருந்தால், களவாணிப் பயல்கள் என்று அவர்களையும் விரட்டியிருப்பார்கள். வைதிகம் சடங்குகளில் கடவுள்களைக் கட்டிவைக்கின்றன. இரண்டுமே மனிதார்த்தத்திற்கு எதிரானவை. ஜாதீய மனோபாவம் இங்கே சிந்தனையாளர்களாக தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்களிடமும் வலுவாக வேரூன்றியுள்ளது. சொல்லப்போனால் தனது சுய ஜாதியை தற்காத்துக் கொள்ளவே தனது அறிவுத்திறமையை எல்லாம் காட்டுகிறார்கள்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.

***

இத்துடன் பிரமிள் விமர்சனங்களின் முதல்தொகுப்பு நிறைவுறுகிறது (1960-80). இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு பிரமிளின் விமர்சன அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் வருகிறது. எப்படி இடதுசாரிய நோக்கர்கள் ஒவ்வொரு வரிக்கும் அதற்கான நோக்கமும் அரசியலும் உண்டு என்று வாதிடுவார்களோ, கலை கலைக்காகவே என்பதை நிராகரிக்கிறார்களோ, பிரமிள் இலக்கியத்தை வேறு எதனோடும் தொடர்புபடுத்தாமல் தனித்த பிராந்தியமாகப் பார்த்து வந்ததில் இருந்து மாறுபடுகிறார். ஞானக்கூத்தனின் கவிதைகளில் வெளிப்படும் ஜாதீயம், சு.ரா.வின் ஜே.ஜே. பாத்திரத்தின் fake intellectuality, லா.ச.ரா., மௌனியின் வைதீக ஜாதீயப் பற்று போன்றவற்றை கடுமையாகத் தாக்கத் தொடங்குகிறார். ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அவர் எழுதிய ‘புதிய புட்டியில் பழைய புளுகு’ கட்டுரையிலிருந்து ஒரு பத்தி:

“ஒரு நாவலின் இயல்பான மதிப்பீட்டுப் பரப்பு என்ற அளவில், ஜே.ஜே. எதை நிறைவேற்றுகிறது என அளவிடுவதே சுந்தர ராமசாமியைப் புரிந்துகொள்ள உதவும். இந்தப் பரப்பு, கதாநாயகனான ஜே.ஜே.யின் அறிவார்த்தக் கிருதாவாகக் காட்டப்படுகிற அவனுடைய தீர்க்க தரிசனமான ‘தியரி ஆப் அப்ஹீவல்’ அல்ல. ஏனெனில், அந்தத் தியரியை வெறும் புஸ்வாண வெருட்டலாக, பெயரளவில் மட்டுமே நாவலில் ஓரிருவரிகள் குறிப்பிடுகின்றன. பொதுவாழ்வையும் விஷேச இந்தியப் பிரச்சினைத் தளங்களையும் தீண்டி விடாமல், சோடா குடிப்பதைவிட இளநீர் குடிக்கலாம், பஸ்ஸில் இடம்பிடிக்க முண்டியடிக்கிறார்கள், பசுமாட்டின் மீது யாரோ காறித் துப்புகிறான் எனப் பாமரமான தர்மாவேசங்களை மட்டுமே, ஜே.ஜே.யின் அறிவார்த்தக் கிருதா மயிர்களென நாம் சந்திக்கிறோம்.”

– தொடரும்.