சாத்தானின் வாரிசு – பால்சாக்

by எஸ்.கயல்
0 comment

பாரீசின் புகழ்பெற்ற நாட்ரே டேம் தலைமைத் தேவாலயத்தின் மதகுரு ஒருவர் புனித பியர் ஆக்ஸ் பஃப் அருகே தன் சொந்த வீட்டில் வசித்தார். அவர் பாரீசுக்கு வந்தபோது உறையில்லா வாளைப் போல ஏதிலியாக வந்தார். வசீகரத் தோற்றமும் பொருள் வளமும் இருந்ததாலும் பலரது வேலையைத் தனி ஒருவராகத் தானே செய்ததாலும் நல்ல மதிப்பு பெற்று உயர்ந்தவர், அதிக உடலுழைப்பு தேவைப்படாத, பெண்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கும் பணியை ஏற்றார். துயரத்தில் இருந்தவர்களை அதிலிருந்து மென்மையாக விடுவித்தும் நோயுற்றவர்களுக்குத் தன் வசமிருந்த ஆறுதல் எனும் களிம்பைத் தடவியும் அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பரிசளித்தார். விவேகமாக முடிவெடுப்பதற்காகவும் கருணையான குணத்துக்காகவும் சமயப் பணியில் அர்ப்பணிப்புக்காகவும் கிறித்தவ சடங்குகளைப் பின்பற்றும் பண்புகளுக்காகவும் அவர் புகழும் செல்வாக்கும் திருச்சபை மன்றம் வரை பரவியிருந்தது.

அதிகாரிகள், கணவன்மார்கள் போன்றோரது பொறாமை தூண்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நிலை அவருக்கு வழங்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் புனிதத்தன்மையை அளிக்கும் நன்மையும் லாபமும் மிகுந்த பாவ மன்னிப்பு வழங்குதல் என்ற புனித விக்தரின் எலும்பைத் தெகார்தே சீமாட்டி அவருக்கு அளித்ததாலேயே இந்த அற்புதம் சாத்தியமானது. ஆர்வம் காட்டியவர்களுக்கு ‘சகல நோய்களையும் குணப்படுத்தும் எலும்பு அவரிடம் இருக்கிறது’ என்று சொல்லப்பட்டது. அதற்கு மறுப்பாக யாரும் எதுவும் பேசவில்லை. ஏனெனில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்து உயிர்நீத்தவரின் எச்சமாக உள்ள நினைவுச்சின்னத்தைச் சந்தேகிப்பது ஏற்புடையதல்ல. ஆயுதங்கள் உடையவனை எப்படி வீரனாகக் கருதுவரோ அப்படியே சமய அங்கி அணிந்திருந்த அவரை மதத்தலைவராக முழுமனத்தோடு ஏற்றனர். அவர் ராஜ வாழ்க்கை வாழ்ந்தார். புனித நீரைத் தெளித்து பிறகு அதை ஒயினாக அறிவித்து நன்கு பணம் ஈட்டினார்.

அதுமட்டுமின்றி அவரது பெயர் சான்றாவணங்களிலும் சொத்து கொடிசில்களிலும் ஓசையின்றி இடம்பெற்றது. சிலர் கொடிசில் என்பதை மரபு என்று பொருள்தரும் காடா என்ற வார்த்தையெனத் தவறாகப் புரிந்துகொண்டு காடாசில் என்று குறிப்பிடுகிறார்கள். அவர் ஒருவேளை, “என்னுடைய தலையைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள கைக்குட்டைக்குப் பதிலாக நீள்பாவாடையில் ஒரு தலைப்பாகை செய்யவேண்டும்” என்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தால் அவை பேராயருடைய சீருடையின் அங்கமாக உடனே மாறியிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தன.  தனக்குக் கிடைத்த பல வாய்ப்புகளில் சாதாரண இருக்கை கொண்ட பாவமன்னிப்பு பணியையே தேர்ந்தெடுத்தார். அதில்தான் கொள்ளை லாபம் என்பது அவருக்குத் தெரியும். ஒருநாள் அறுபத்தி எட்டு வயதான தனக்கு முதுகில் இருந்த பலவீனத்தை உணர்ந்தார். அப்போது அதுவரை ஏராளமான பாவமன்னிப்புகளை அதே இருக்கையில் அமர்ந்து வழங்கியது அவர் நினைவுக்கு வந்தது. 

தன் உடலை வருத்தி வியர்வை சிந்தி தன்னுடைய எண்ணற்ற நற்செயல்கள் வாயிலாக லட்சக்கணக்கிலான பாராட்டுகளை நினைத்துப் பார்த்தவர், அருள் பணி சார்ந்து தனது கடின உடலுழைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாக முடிவுசெய்தார். அன்றுமுதல் உயர்குடிப் பெண்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு வழங்க முடிவெடுத்து அப்பணியை மிகச் சிறப்பாகச் செய்தார். ஆகவே, பாரீசில் இருந்த அத்தனை இளம் மதகுருக்களும் கூடி முயன்றாலும் புனித பியர் ஆக்ஸ் பஃப்ஃபின் மதகுருவைப் போல உயர்குடிப் பெண்டிரின் பாவக்கறையை வெளுக்க முடியாது என்று திருச்சபை மன்றத்தில் பேசிக்கொண்டனர்.

கால ஓட்டத்தில் மாற்ற முடியாத இயற்கையின் முன்னகர்வால் பனியென நரைத்த தலையும் நடுங்கும் கைகளுமாகத் தொண்ணூறு அகவையரான பின்பும் ஓங்கி உயர்ந்த கோபுரமென இருந்தார். இருமல் வருவதற்கு முன்பே எச்சிலைத் துப்பியதால் இப்பொதெல்லாம் அவர் இருமும்போது எச்சிலே வருவதில்லை. மானுடநலனுக்காக எத்தனையோ முறை வெகுண்டு எழுந்தவர் இப்போது நாற்காலியில் இருந்தே எழுவது இல்லை. தண்ணீர் கலக்காத மதுவை அருந்தி, மனதாரச் சாப்பிட்டு எதுவும் பேசாமல் இருந்தாலும் நாட்ரே டேமில் வாழ்வதற்கு உகந்த ஒரு புனிதரின் தோற்றத்துடன் இருந்தார்.

பாதிரியின் அசைவற்ற தோற்றத்தைப் பார்த்த அறீவிலி மக்கள் அவரைப் பற்றிய மோசமான கதைகளை உற்பத்தி செய்தனர். அவருடைய விசித்திரமான தனிமையையும் அகவை கடந்தாலும் முன்னேறியபடியே இருந்த அவருடைய ஆரோக்கியமான உடல்நிலையையையும் அவருடைய இளமையான தோற்றத்தையும் பார்த்து, வியக்கத்தக்க செயல்களைச் செய்யவல்ல புனித மதத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக உண்மையான மதகுரு எப்போதோ – ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே – இறந்துவிட்டதாகவும் அவருடலைச் சாத்தான் ஆக்கிரமித்திருப்பதாகவும் பேசத் தொடங்கினர். 

மாயசக்தி மூட்டிய நெருப்பில் பாவங்கள் அனைத்தையும் உருக்கி வடிகட்டி ஆன்மாவைக் தூய்மையாக்குவது சாத்தானால் மட்டுமே இயல்வது என மதகுருவிடம் இருந்து பாவமன்னிப்புப் பெற்ற அவருடைய முன்னாள் வாடிக்கையாளர்கள் கருதினர். ஆனால் இப்படிப் பேசியே சாத்தானை உருவாக்கியவர்களே மீண்டும் சந்தேகத்துக்கு இடமின்றி அதை அழிக்கவும் தலைப்பட்டனர். இயல்பிலேயே நட்புணர்வு கொண்டவர்கள், சுயபுத்தி உள்ளவர்கள், எல்லாவற்றுக்கும் வாதிடுபவர்கள், வழுக்கைத் தலையில் பேனைக் கண்டுபிடிப்பவர்கள் என அனைவருமே ‘இந்தப் பிசாசு ஏன் பாதிரி உடலில் இறங்கியது? நாட்ரே டேம் தேவாலயத்துக்குப் பாதிரிகள் வழக்கமாகச் செல்லும் நேரங்களில் எல்லாம் ஏன் உடன் சென்றது?’ என்பது தொடங்கி ‘ஊதுவத்திகளின் நறுமணத்தை நுகர்ந்து புனித நீரை ருசித்து அது என்ன சாதித்தது?’ என்பதுவரை கேள்வி கேட்டனர். வேறு சிலர் மத நிந்தனைக் கருத்துகளுக்கு எதிராக, ‘ஐயத்திற்கு இடமின்றி அந்தப் பிசாசு மனம் திருந்தி மதம் மாற விரும்பியே அங்கு சென்றிருக்கும்’ என்று பதில் சொன்னார்கள். வேறு சிலர் வீரம்மிக்க இந்தப் பாதிரியின் மூன்று மருமகன்களையும் வாரிசுகளையும் கேலிக்கு ஆளாக்கவும், இள வயதினரான அவர்கள் இறக்கும் காலம்வரை தங்கள் மாமாவின் வாரிசு உரிமைக்காக அவர்களைக் காத்திருக்க வைப்பதற்காகவுமே பிசாசு பாதிரியின் உடலில் குடிபுகுந்ததாகக் கூறினர். இந்த மருமகன்களும் வாரிசுகளும் பாதிரியினுடைய கண்கள் திறந்திருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனித்து வந்தனர். பாதிரியின் கண்கள் எப்போதுமே தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதைப் பார்த்தவர்கள், தங்கள் தாய்மாமன் மீது கொண்டிருந்த மிதமிஞ்சிய அன்பினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் – பேச்சளவில்! 

வயதான பெண்மணி ஒருத்தி அந்த மதகுரு நிச்சயமாக ஒரு ஆவிதான் என்று உறுதியாகச் சொன்னாள். ஏனெனில் வக்கீலும், சிப்பாயுமான பாதிரியின் இரண்டு மருமகன்களும் இரவு உணவுக்குப் பிறகு ஒற்றை விளக்கோ கூட்டு விளக்கோ இல்லாமல் மடத்தின் சமையலறையில் இருந்து ஒரு நாள் பாதிரியை அழைத்துச் செல்வதை அவள் பார்த்திருக்கிறாள். புனித கிறிஸ்டோஃபருக்குச் சிலை எழுப்புவதற்காகக் குவிக்கப்பட்டிருந்த கற்குவியல் மீது எதிர்பாராத விதமாகப் படுமோசமாக விழுந்து உருண்டார் பாதிரி. ஆனால் அந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து கையடக்க மின்விளக்கை வாங்கிக்கொண்டு பெருங்கூச்சலோடு அங்கு வந்து பார்த்த அவருடைய மருமகன்கள் அவர் விறைத்த விறகைப் போல நிமிர்ந்தும் நெசவுத்தறியின் பரபரப்புடன் குதூகலமாகவும் நிற்பதைப் பார்த்தார்கள். பாதிரிகளுக்குக் கிடைக்கும் அருமையான மது அவருக்கு இந்த அதிர்ச்சியை எதிர்கொள்ளும் மனோதிடத்தைக் கொடுத்ததாகவும் அவருடைய எலும்புகள் மிகுந்த உறுதியுடன் இருப்பதாகவும் அதனால் முரட்டுத்தனமான அடிகளை அவை தாக்குப் பிடித்தன என்றும் வியந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்று நம்பியிருந்த அவருடைய மருமகன்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை வழியனுப்ப வேண்டிய நாள் இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது என்பதையும் இது தொடர்பான பணியில் கல் விசயத்தில் என்ன ஆனது என்பதையும் உணர்ந்தனர். ஆகவே அவர்கள் தங்கள் மாமாவை வெறும் வாய் வார்த்தையாகச் சிறந்தவர் என்று அழைக்கவில்லை. உண்மையிலேயே அதற்கு அவர் தகுதி பெற்றவர்தான்.  சில பொய் புரட்டு பேசுவோர் பாதிரியார் தான் செல்லும் பாதையில் நிறைய கற்களைக் கண்டதாகச் சொன்னார்கள். கற்களின் மீது விழுந்து உடல்நிலை கெட்டுப் போக வேண்டாம் என்ற அச்சமே அவர் வீட்டிலேயே தங்கி தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள காரணம் என்றனர்.

கதைகளும் வதந்திகளும் சொல்வதுபோல அவர் பிசாசின் வயப்பட்டிருந்தாரோ இல்லையோ தெரியாது; ஆனால் அவர் சாவை மறுத்து தன் இல்லத்தில் கல்லைப் போல் வாழ்ந்தார். நரம்பு வலி படர்வு, இடுப்பு வலி, முதுகுத் தசை – மூட்டு வலியுடனும் ஆகியவற்றோடு வாழ்வதைப் போலத் தன் வாரிசுகளுடனும் வாழ்ந்தார். மூன்று வாரிசுகளில் முதலாமவன் ஒரு சிப்பாய். பெண்ணின் வயிற்றில் ஜனித்த உயிர்களிலேயே அவன்தான் மிகத் தீயவன் எனலாம். பிறக்கும்போதே பற்களுடனும் குச்சி போன்ற தலைமயிருடனும் பிறந்ததால் கருமுட்டை உடைந்தபோதே பெரும் வலியைத் தாய்க்குத் தந்திருப்பான். நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து இருமடங்கு சாப்பிட்டு, வேசிகளுக்காகச் செலவழித்து வந்தான். தொடர்ச்சி, பலம், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகியவற்றைத் தன் மாமாவிடமிருந்து மரபாகப் பெற்றிருந்தான். பெரிய யுத்தங்கள் அனைத்திலும் தீர்க்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினை யார் தாக்குதல் நடத்துகிறார்கள், யார் அதை வாங்குகிறார்கள் என்ற வேறுபாடுதான். அவன் எப்போதும் தாக்குகிற இடத்தில் மட்டுமே இருந்தான். வீரத்தைத் தவிர வேறு எந்த நற்குணமும் இல்லாத அவன், குதிரைப் படைப்பிரிவின் தலைவனாக இருந்தான். தன் வீரர்கள் தன் சொந்த நாட்டைத் தவிர மற்ற இடங்களில் என்ன செய்தாலும் அதற்காக அவர்களுக்குத் தொந்தரவு தராத பர்கோன் பிரபுவால் மிகவும் மதிக்கப்பட்டான். பிசாசின் இந்த மருமகன் அணித்தலைவன் கோசேக்ரு என்று அறியப்பட்டான். அவன் எவ்வளவு தொல்லைகள் தருவானோ அதே அளவு பலமும் உடையவன் என்பதால் அவனுக்குக் கடன் தந்தவர்கள், முட்டாள்கள், பொதுமக்கள், அவனிடம் தங்கள் சட்டைப்பை கிழிபட்டவர்கள் என அனைவரும் அவனை மாசிஞ்சே என்றே அழைத்தனர். அதற்கு மோசமானவன் என்று பொருள். உயரத்திலிருந்து பார்த்தால் காட்சிகள் தெளிவாகத் தெரியும் என்பதற்காக அவனுடைய முதுகின் மீது ஏற முயல்வது அறிவீனம். ஏனெனில் இயற்கையாகவே கூன் விழுந்த அந்த முதுகின் மீது யாராவது ஏறினால் அவன் சர்வநிச்சயமாக அவர்களைக் கீழே தள்ளிவிடுவான்.

இரண்டாம் மருமகன் சட்டம் பயின்றவன். தன் மாமாவின் தயவால் வக்கீலானவன், ஏற்கெனவே அவரிடம் பாவ மன்னிப்பு பெற்ற பெண்களுக்காக அரண்மனையில் வாதாடும் வேலையைச் செய்தான். அவனுடைய பெயரும் படைத்தலைவன் கோசேக்ருவின் பெயரேதான். அவனையும் பில்லிக்ரூ என்று பட்டப்பெயரிட்டு அழைத்தனர். ஒல்லியான பில்லிக்ரூ வெளிறிய முகமும், மரநாய் போன்ற முகவெட்டும் கொண்டிருந்தான். மிகக் குளிர்ந்த நீரை அருந்தினால் ஒத்துக்கொள்ளாமல் துப்பிவிடுவான்.

அவன் சிப்பாயைவிடக் கொஞ்சம் மதிப்புடையவன். அவனுக்கு மாமாவின் மீது சிறிதளவு அன்பு இருந்தது. ஆனால் இரண்டாண்டுகளாக அவனுடைய இதயத்தில் ஏற்பட்ட விரிசலால் விசுவாசம் துளித் துளியாகக் குறைந்தது. மாமாவின் சுவாசக்குழாயில் தன் பாதத்தை வைத்து அழுத்தி தனக்கு வரவேண்டிய வாரிசு உரிமையை முன்கூட்டியே பிதுக்கி எடுக்கும் எண்ணம் அவனுக்கு அடிக்கடி ஏற்பட்டது.

பாதிரியின் இன்னொரு தங்கையின் மகன் நாண்டெர்ரேவுக்கு அருகில் இருந்த கிராமத்தில் ஆடு மாடு மேய்த்தான். அவன் மீது பாதிரிக்கு சிறிது அன்பு இருந்தது. சொத்தில் மூன்றாவது பங்கை அந்த ஏழை மருமகனுக்குத் தரவேண்டியது சட்ட நியாயப்படி மட்டுமின்றி மரபாக பின்பற்றுகிற வழக்கமாகும். தங்கள் பங்கு போதுமானதாக இல்லை என்று ஏற்கெனவே முதலிருவரும் கருதினர்.

எளிய விவசாயியான அவன், இரண்டு அண்ணன்களும் தந்த அறிவுரையின் பேரில் நகரத்துக்கு வந்தான். தம்பியின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளையும், முட்டாள்தனத்தையும் கண்டு கடுப்பாகி, பாதிரியார் அவனுடைய பெயரை உயிலில் இருந்து நீக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருவரும் அவனைப் பாதிரியின் வீட்டில் தங்க வைத்தனர். சிக்குவான் என்ற பெயருடைய இந்தப் பாவப்பட்ட இடையன், வயதான தன் மாமனுடைய வீட்டில் ஏறத்தாழ ஒரு மாதம் தங்கியிருந்தான். மதகுருவைக் கவனித்துக்கொள்வதில் ஆடு மேய்ப்பதைவிட அதிக லாபமும் அதிக மகிழ்ச்சியும் அடைந்தவன், மெல்ல மெல்ல அந்தப் பாதிரியாரின் காவல் நாயாக, வேலையாளாக, வயதான அவருக்குக் கை கொடுக்கும் ஊன்றுகோலாக மாறினான். அவர் வாயுவை வெளியேற்றினால் “இறைவன் உம்முடன் இருக்கட்டும்” என்றான். தும்மினால் “இறைவன் உம்மைக் காக்கட்டும்” என்றான். அவரது முகம் சிறிது வாடினாலும் “இறைவன் உமக்குப் பாதுகாவலாக இருக்கட்டும்” என்றான். மழை பெய்கிறதா என்று வெளியே போய்‌ எட்டிப் பார்ப்பான், பூனை எங்கிருக்கிறது என்று பார்ப்பான். அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, தேவையானபோது மட்டும் பேசுவான். அந்த வயதான பாதிரி இருமும்போது அவனுடைய முகத்தில் எச்சில் தெறிக்கும். தன் குட்டிகளை நாவால் நக்கிக்கொடுத்துச் சுத்தப்படுத்தும் விலங்குகளின் தாய்மை உணர்வுடன் சேவைகளை மனதாரச் செய்தான். இந்த உலகிலேயே மிகச்சிறந்த பாதிரி இவர்தான் என அவரை மரியாதையுடன் வியந்து பார்த்தான். தனக்கு வேண்டியதைப் பெற யாரை எப்படி நடத்த வேண்டும் என்று நன்கு அறிந்திருந்த பாதிரியார், பாவப்பட்ட சிக்குவானைத் தன்னை நெருங்கவிடாமல் விரட்டினார், அவனை ஒரு பகடைக்காயாக மாற்றிவிட்டார். எப்போதும் அவனைச் சிக்குவான் என்று விளித்தார். படுமுட்டாளான அவன் தன்னை மரணத்தை நோக்கித் தள்ளுவதாகத் தன்னுடைய மற்ற இரண்டு மருமகன்களிடம் கூறினார். தன்  மாமாவின் உடல்நலம் தேறிவிடும் என்ற உறுதியுடன் அவரிடம் நல்ல பெயரெடுக்க விரும்பிய சிக்குவான் குழப்பமடைந்தான். அவன் நீண்ட மூட்டுகளும், இரட்டைப் பூசணிகளைப் போன்ற பரந்த முதுகுடனும் இருந்ததால் மேற்குத் திசையின் கடவுளாக வழிபடப்படும் இனிய ஜெஃபயர் போல கனவானாக இல்லாமல் குதிரையின் காதுகளும் வாலும்கொண்ட நாட்டுப்புறக் கடவுளான சைலனசின் போல இருந்தான். உண்மையில், மிக எளியவனான அந்த இடையன், தன் பருத்துப் பெருத்த தோற்றம் சொத்து தனது கைக்கு வந்த பிறகு மெலிந்துவிடும் என்று நினைத்துக் காத்திருந்தான்.

ஒருநாள் மாலை பாதிரி பிசாசைப் பற்றியும் தவங்கள், கடும் துயரங்கள், சித்ரவதை ஆகியவற்றைப் பற்றியும் பிரசங்கம் செய்தார். சபிக்கப்பட்டவர்களுக்காகக் கடவுள் மனம் இளகுவார் என்று அவர் சொன்னதைக் கேட்ட சிக்குவான், அவர் சொன்ன ஒரு வார்த்தையைக்கூட நம்பமுடியாதவனாக அடுப்பின் மூடியைப் போல வாயை அகலப் பிளந்தான்.

அதைக் கண்ட பாதிரியார், “ஏன், நீ கிறித்தவன் இல்லையா?” என்றார்.

“ஆமாம். நான் கிறித்தவன்தான்” என்றான் சிக்குவான்.

“நல்லவர்களுக்குச் சொர்க்கம் என்ற ஒன்று உள்ளது போல, தீயவர்களுக்கு நரகம் என்ற ஒன்று இருக்கவேண்டியது அவசியம் தானே?”

“ஆமாம். பாதிரியாரே! சாத்தானுக்கென்று தனியாக வேலை இல்லை. எல்லாவற்றையும் கெடுக்கிற தீயவன் ஒருவன் இங்கிருந்தால் நீங்களே அவனை வெளியே துரத்தியடித்துவிடுவீர்கள் தானே?”

“ஆமாம், சிக்குவான்.”

“மாமா! பேரார்வத்துடன் தான் உருவாக்கிய இந்த உலகை அழிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பிசாசை அப்படியே விட்டுவைப்பதற்குக் கடவுள் என்ன முட்டாளா? சீச்சீ! கடவுள் என்ற ஒருவர் இருக்கும்போது, பிசாசு என்கிற ஒன்று இருக்க முடியாது. எனக்குப் பிசாசைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. ஹாஹா! எனக்கு அதனுடைய கூரிய நகங்களைக் கண்டு பயமில்லை!”

“உன்னைப் போல இருந்திருந்தால் என் இளமைக்காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து முறையாவது நான் பாவமன்னிப்பு கேட்க வேண்டி இருந்திருக்காது.”

“மறுபடி பாவமன்னிப்புக் கேளுங்கள் பாதிரியாரே! நிச்சயமாக அது மிக நல்ல குணம் என்று நான் உறுதியளிக்கிறேன்.”

 “அப்படியா? உண்மையாகவா சொல்கிறாய்?”

“ஆமாம். பாதிரியாரே!”

“உன் உடல் நடுங்குவது போலிருக்கிறதே, சிக்குவான் பிசாசுகள் இருப்பதை நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்?”

 “அப்படியெல்லாம் ஒரு சுக்கும் இல்லை.”

“இந்த அவநம்பிக்கை உனக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்.”

“நிச்சயமாக இல்லை. பிசாசை எதிர்த்து கடவுள் எனக்காகப் போராடுவார். ஏனெனில் அறிவாளிகளும் அறிஞர்களும் இறைவனைப் பற்றி விளக்குவதைவிட அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.”

அப்போது மற்ற இரண்டு மருமகன்களும் உள்ளே நுழைந்தனர். இதற்கு முன்வரை பாதிரி அவனைப் பற்றி பேசிய தொனியை வைத்து அவருக்குச் சிக்குவானை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று நினைத்தனர். அவனைக் குறித்த அவருடைய புலம்பல்கள் எல்லாமே அவருக்கு அவன் மீதிருந்த அன்பை மறைப்பதற்காக அவர் செய்த உள்ளடி வேலைகள் என்பதை இப்போது உணர்ந்தவர்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் பெரும் வியப்புடன் பார்த்துக்கொண்டனர்.

தங்கள் மாமா சிரிப்பதைப் பார்த்தவர்கள் அவரிடம், “நீங்கள் ஒரு உயில் எழுதினால் வீட்டை யார் யார் பெயரில் எழுதுவீர்கள்?” என்று கேட்டனர்.

“சிக்குவான் பெயரில்.” 

“புனித டெனிஸ் பகுதியில் உள்ள பண்ணையில் இருந்து கிடைக்கும் வாடகைத் தொகையை?” 

“சிக்குவான் பெயரில்.” 

“அப்புறம் சமயக் குழுக்களுக்கான விலே பாரிசிஸ் நிலம்?”

“சிக்குவான் பெயரில்.” 

 “அப்போது.. எல்லாமே அவனுக்குமட்டும் என்றாகிவிடுமே?” என்று உரத்த குரலில் சிப்பாய் கேட்டான்.

“இல்லை. நான் என்னுடைய உயிலைச் சரியான முறையில் எழுதுவேன். உங்கள் மூவரில் அதிபுத்திசாலியான ஒருவருக்குச் சொத்துரிமை போய்ச் சேரும். எதிர்காலத்தின் மிக அருகே நான் இருப்பதால் உங்கள் அனைவருடைய விதியும் என் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

தந்திர குணமுடைய பாதிரியார் சிக்குவான் மீது வன்மப் பார்வையை வீசினார். பறவைகளை விரட்டுவதற்காகக் குடியானவர்கள் தங்கள் வயலில் வைக்கும் பொய் பொம்மை, குஞ்சுப் பறவையைப் பாசத்துடன் பார்ப்பது போல இருந்தது அப்பார்வை. அவருடைய கண்களில் தெரிந்த சுடர் அந்த இடையனைத் தெளிவடைய வைத்தது. அந்த நொடியில் இருந்து தன் புரிதலையும் காதுகளையும் கூர்மையாக வைத்துக்கொண்டவன், திருமணத்துக்கு அடுத்தநாள் ஒரு மணப்பெண்ணின் மனம் இருப்பதைப் போலத் தன் மூளையை எதற்கும் தயாராக வைத்திருந்தான். சிப்பாய் இவற்றை ஏசுவின் போதனைகளில் உள்ள தீர்க்கதரிசன வாசகங்களாக எடுத்துக்கொண்டான். தலை தாழ்த்திப் பாதிரியை வணங்கியவர்கள், அவருடைய அபத்தமான திட்டங்களை நினைத்துப் பெருங்குழப்பத்துடன் அந்த வீட்டைவிட்டு வெளியேறினர். 

“நீ சிக்குவான் பற்றி என்ன நினைக்கிறாய்?” பில்லிக்ரூ மாசிஞ்சேயிடம் கேட்டான்.

“நான் ஜெருசேலத்தில் உள்ள தேவாலயத்தில் அவனுடைய தலையைக் கொண்டுபோய் வைத்துவிடலாமென நினைக்கிறேன். விருப்பம் இருந்தால் அவர் பிறகு அதை அங்கிருந்து எடுத்துக்கொள்ளட்டும்” என்று கோபத்துடன் உறுமினான் சிப்பாய்.

“அடடா! உன்னுடைய வழிமுறைகள் யாவுமே யார் வேண்டுமானாலும் எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடிய விதத்தில் உள்ளன. மக்கள் ‘இதைச் செய்தது குரோசேக்ருதான்’ என்று உடனே சொல்லிவிடுவார்கள். நான் ஒரு யோசனை சொல்கிறேன். அவனை இரவு விருந்துக்கு அழைப்போம். விருந்து முடிந்த பிறகு நாம் மூவரும் கோணிப்பைக்குள் புகுந்துகொண்டு யார் இந்த உடையில் நன்றாக நடப்பது என்று பொய்யாக ஒரு விளையாட்டை ஆரம்பிப்போம். பிறகு அவனை அதே கோணிப்பைக்குள் வைத்துக் கட்டி சியான் நதிக்குள் வீசுவோம். பிறகு ’நீச்சல் அடி’ என்று சத்தமாகக் குரல் கொடுப்போம்” என்றான்.

“இது மிகவும் சிறப்பான யோசனை” என்றான் சிப்பாய்.

“இதென்ன பிரமாதம்! அவன் செத்து பிசாசிடம் செல்வான். நாம் சொத்தை இருவருக்குள் பகிர்ந்துகொள்ளலாம்” என்றான்.

“இந்தத் திட்டத்தை நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உடம்பின் இரண்டு கால்களைப் போல நாம் இருவரும் இனி ஒன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீ பட்டு போல மென்மையாக இருந்தால், நான் இரும்பைப் போல உறுதியாக இருப்பேன். குறுவாள்களும் தந்திரப் பொறிகளைப் போலவே சிறப்பானவை – புரிகிறதா தம்பி?”என்றான்.

“ஆம், ஏற்கிறேன். இதைச் செய்யப் போகிறோம் என்பது தெரிந்துவிட்டது. ஆனால் செய்யப்போவது நூலின் துணைகொண்டா இரும்பின் துணைகொண்டா என்று சொல்”  என்றான்.

“அடக் கடவுளே! என்ன இது!  நாம் என்ன ஒரு அரசனையா முடிக்கப் போகிறோம்? ஒரு சாதாரண முட்டாள் இடையன். அவனைப் பற்றி எதற்காக இவ்வளவு சொற்களை நாம் தேவையில்லாமல் விவாதிக்க வேண்டும்? அவனுடைய தலையை முதலில் துண்டிப்பவனுக்குச் சொத்தில் கிடைக்கப்போகும் பங்கோடு சேர்த்து மேலதிகமாக இருபதாயிரம் ஃபிராங்குகள் சேரும். நான் அவனிடம் போய் தலையை வெட்டிவிட்டு நற்பண்புடன் ‘உன் தலையைக் கையில் எடுத்துக்கொள்’ என்று சொல்வேன்” என்றான்.

அதைக் கேட்டு வக்கீல் வெள்ளத்தால் உடைந்த மதகைப் போல வாயைப் பிளந்து சிரித்தபடி நான் அவனிடம் ‘நீ நீந்து நண்பா’ என்று சொல்வேன்” என்று உரத்த குரலில் சொன்னான்.

அதன் பிறகு சிப்பாய் தனது வேசியின் வீட்டுக்கும், வக்கீல் நகை வியாபாரியின் மனைவியின் வீட்டுக்கும் இரவு உணவுக்காகக் கிளம்பினர்.

தன்னைக் கொல்லும் இந்தத் திட்டத்தைக் கேட்டு அந்த எளிய இடையன் அதிர்ந்தான். இரண்டு அண்ணன்களும் அவன் இருந்த இடத்துக்குச் சிறிது தொலைவில், தேவாலயத்தின் வாசலில் நடந்தபடி, இறைவனிடம் வேண்டுவது போன்ற முணுமுணுப்பான குரலில் பேசியும், எப்படியோ அது அவன் காதில் விழுந்தது. இப்போது அவனுக்கு அந்தச் சொற்கள் வானத்திலிருந்து வந்தவையா என்றும் தன்னுடைய காதுகள் பழுதாகினவா என்றும் இரட்டைச் சந்தேகம் உண்டானது.

“உங்கள் காதில் எதாவது விழுந்ததா பாதிரியாரே?” என்றான்.

“ஆம் கேட்கிறது. கணப்பு அடுப்பில் விறகு உடையும் சத்தம் எனக்குக் கேட்கிறது.”

“ஹா ஹா! எனக்குப் பிசாசின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என் காவல் தெய்வமான புனித மைக்கேலை நான் நம்புகிறேன். அவர் என்னை எங்கு அழைக்கிறாரோ நான் அங்கு போவேன்.”

“மகனே உன்னுடைய உடலை ஈரப்படுத்திக் கொள்ளாமல் கவனமாக இரு. அத்துடன் உன்னுடைய தலையைக் காப்பாற்றிக்கொள். ஏனெனில் மழைச்சத்தம் எனக்குக் கேட்கிறது. சாலைகளில் அமர்ந்து பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்கள் மட்டுமே மிக அபாயமான பிச்சைக்காரர்கள் என்று கிடையாது” என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சிக்குவான் இன்னும் அதிர்ந்துபோனவனாகப் பாதிரியாரை வெறித்துப் பார்த்தான். அவர் அதைச் சொன்ன விதம் உற்சாகமாக இருந்தது. அவருடைய கண்கள் கூர்மையாகவும் அவருடைய பாதம் குறுகியும் இருந்தது. ஆனால் தன்னை எதிர்நோக்கியிருந்த மரணத்தைக் குறித்த விஷயங்களை இப்போது அவன் உடனே கவனிக்கவேண்டி இருந்ததால் பாதிரியாரை வியந்து போற்றுவதற்கும், தன்னுடைய நகங்களை வெட்டுவதற்கும் நிறைய ஓய்வுநேரம் – பிறகெப்போதாவது – கிடைக்கும் என்று கருதி, நகரத்தை நோக்கித் துள்ளியோடினான். அவன் அவ்வாறு ஓடியது சிறுமிகள் விளையாட்டாகத் துள்ளுவது போலிருந்தது.

எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல்கொண்ட இடையர்கள், தம் மீது நடக்க இருந்த நிறைய தாக்குதல்களை இதற்கு முன்பும் கடந்து வந்துள்ளனர். இதைப் பற்றிய எவ்விதமான யூகங்களும் அற்ற அவனுடைய இரண்டு அண்ணன்களும், அவன் அருகில் இருப்பதைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் தங்கள் ரகசியத் திட்டங்களை அவனறியவே அடிக்கடி பேசினர்.

தன்மீது காதல் வயப்பட்டுள்ள நகை வியாபாரியின் மனைவியைப் பற்றி பாதிரியிடம் அவரைக் குஷிப்படுத்துவதற்காகப் பில்லிக்ரூ மீண்டும் பேசினான். இளவரசனுடைய தலையில் பொருத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பளபளப்பான சில கொம்புகளைப் பொற்கொல்லனின் தலைக்கு ஏற்றவாறு அவன் வடிவமைத்துத் தந்திருந்தான். அந்தப் பொற்கொல்லனின் மனைவி குதூகலமான உணர்வுகளுடைய ஒரு கீழ்மகள். கிடைக்கிற எந்தச் சந்தர்ப்பத்தையும் நழுவவிடாமல், அவளுடைய கணவன் மாடிப்படியேறி வருவதற்குள் அவனைத் தழுவுவாள். ஒரு ஸ்ட்ராபெரியை ருசித்து விழுங்குவதைப் போல அவனுடைய உடலை அதிவிரைவாகச் சுவைப்பாள். எப்போதும் கலவி இன்பத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு, கணவனை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்தபடி இருப்பாள். ஆனால் குறை சொல்லவியலாத, கள்ளங்கபடமற்ற ஒரு பேதையைப் போல துள்ளிக் குதித்துத் தன் கணவனுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள். அவள் கணவனோ தன் உணவுக் குழலைப் போல அவளை மனதார நேசித்தான். அவள் ஒரு இல்லத்தரசியாகத் தன் கடமைகளையும், தன் கள்ளக்காதல்களையும், இருந்த இடத்தில் இருந்தபடி மென்மையாகப் படர்கிற நறுமணம் மிக்க திரவியத்தின் லாகவத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறப்புறச் செய்து சமாளித்து வந்தாள். அதனாலேயே விவேகமுள்ளவள் என்று புகழ் பெற்றிருந்தாள். தன் கணவனின் நம்பிக்கை, வீட்டின் கொத்துச் சாவி, பணப்பை என அனைத்தும் அவள் வசம் இருந்தன என்றெல்லாம் அவரிடம் கூறிக்கொண்டிருந்தான்.

பாதிரி, “இந்த இனிமையான புல்லாங்குழலை நீ வழக்கமாக எப்போது இசைப்பாய்?” என்று கேட்டார்.

“எல்லா மாலை நேரங்களிலும் இசைப்பேன். சில சமயங்களில் இரவுகளில் தங்கியும் வாசிப்பதுண்டு” என்றான்.

வியப்படைந்த பாதிரி “ஆனால், எப்படி?” என்று கேட்டார்.

“இதோ இப்படித்தான்! பெரிய மரப்பெட்டி இருக்கும் ஒரு அறைக்குள் நான் சென்றுவிடுவேன். அவளுடைய கணவன் தினந்தோறும் மாலை வேலைகளில் உணவருந்துவதற்காக ஜவுளி வியாபாரியாகிய தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டுக்குப் போவான். அவன் திரும்ப வரும்போது என் காதலி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டு அவனைத் தனியே படுக்கைக்கு அனுப்புவாள். பிறகு தன்னுடைய காமநோயைத் தீர்த்துக்கொள்ள அறைக்குள் இருக்கிற அவளுடைய ரகசிய மருத்துவனான என்னைத் தேடி வருவாள். நகை வியாபாரி வீட்டின் முகப்புப் பகுதியை அடைந்ததும் நான் வெளியேறுவேன். அந்த வீட்டின் ஒரு வாசல், பாலத்தின் அருகேயும் இன்னொரு வாசல் சாலையிலும் இருப்பதால், அவளுடைய கணவன் இல்லாதபோது அவனுடைய வழக்கு பற்றி பேசுகிற பாவனையில் நான் கதவருகே வந்து நிற்பேன். அந்த உரையாடல் எப்போதும் மகிழ்ச்சியானதும் மனதாரப் பேசுவதாகவும் தொடங்கும். அது முடிவுக்கு வராதது போல நான் பார்த்துக்கொள்வேன். நடத்தை கெட்ட பெண்ணின் கணவனுக்குக் கிடைக்கும் அந்த வருமானம், சில சிறிய செலவினங்களுக்கும் வழக்குகளுக்கும் தன் லாயத்தில் உள்ள குதிரைகளுக்குச் செலவுசெய்வது போல் அவன் செலவழிப்பதற்குப் பயன்படும். தன் ஒழுக்கக்கேட்டால் கணவனுக்குப் பணம் சம்பாதித்துத் தரும் எல்லா நடத்தைகெட்டவள்களும், காமன் தோட்டத்தில் பயிரிட்டு, நீரூற்றி, செழிப்பாக்குவதற்கு உதவி செய்கிற, தத்தம் கணவனை நேசித்தே ஆகிவேண்டி இருக்கிறதே, அதே போல, அவனும் என்மீது மிக அன்பாகவே இருப்பான். நான் இல்லாமல் எதுவுமே செய்யமாட்டான்.”

இந்த விஷயங்கள் எல்லாம் மறுபடியும் இடையனுக்கு நினைவுக்கு வந்தன. தனக்கு நேரப்போகிற அபாயம் இப்போது அவனுக்கு வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. என்ன செய்தால் தற்காப்பது, எப்படி இறுதிவரை போராடுவது என்பது எல்லா விலங்குக்கும் உள்ள அடிப்படைக் குணம். அந்த நகை வியாபாரி தன் கூட்டாளியுடன் மாலையுணவு உண்ட இல்லம் இருக்கும் ரூ-டி-லா கலெண்ட்ரேவுக்கு அதிவிரைவாக நடந்து சென்றடைந்து கதவைத் தட்டினான் சிக்குவான். “யாரது?” என்ற கேள்விக்குச் சிறிய கம்பிக் கதவின் வழியே எட்டிப் பார்த்து, “நாட்டின் ரகசியங்கள் குறித்துத் தகவலுடன் வந்துள்ள தூதன்” என்று பதிலளித்தான். ஜவுளி வியாபாரியின் வீட்டுக்குள் நுழைய அவனுக்கு அனுமதி கிடைத்தது. சுற்றி வளைக்காமல் அந்த நகை வியாபாரியிடம் அவன் நேரடியாக விஷயத்தை உடைத்ததும் உணவு மேஜையில் இருந்து எழுந்த நகை வியாபாரியை அறையின் மூலைக்குத் தள்ளிச்சென்று, “கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள ஒருவனை உன் அண்டை வீட்டான் உன்னிடம் கொண்டுவந்து ஆற்றில் தள்ளச் சொன்னால் தள்ளுவாயா?” என்று கேட்டான்.

”கண்டிப்பாக” என்று பதிலளித்தான் நகை வியாபாரி. “ஆனால் ஒன்று… நீ என்னிடம் விளையாடுகிறாய் என்றுமட்டும் தெரிந்தால் பலத்த அடி கிடைக்கும்.”

“பொறுங்கள். துணி வியாபாரியின் மனைவியுடன் நீங்கள் எத்தனை முறை பேசினீர்களோ – ஏறத்தாழ – அத்தனை முறையும் உங்களுக்குச் சேவை செய்யும் அதே விதத்தில் பில்லிக்ரூவுக்கும் உங்கள் மனைவியிடமிருந்து சேவை கிடைத்திருக்கிறது என்பதைக் கூறி உங்களை எச்சரிக்க வந்த நண்பன் நான். நீங்கள் அகம் தெளிவடைந்தால் தீங்கு ஒளிந்திருக்கும் இடம் துலங்கும். நீங்கள் எங்கெங்கு போகிறீர்கள் வருகிறீர்கள் என்பவற்றைப் பற்றி மிகத் தெளிவாக அவன் தெரிந்து வைத்திருப்பதால் அதற்குத் தக்கவாறு ஆடைகள் வைக்கின்ற பெரிய மரப்பெட்டிக்குள் ஒளிந்துகொள்கிறான். இப்போது நீங்கள் சென்று அந்தப் பெட்டியை நான் பணம் கொடுத்து வாங்கிவிட்டதாக நடித்து அதை எடுத்து வாருங்கள். நான் பாலத்தின் மீது ஒரு வண்டியோடு உங்களுடைய உத்தரவுக்காகக் காத்திருப்பேன்.”

அந்தப் பொற்கொல்லன் அதற்கு பிறகு தன் நண்பனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மேல் அங்கியையும் தொப்பியையும் அணிந்து விஷத்தைச் சாப்பிட்ட எலி போலத் தன் வீட்டை நோக்கித் துடித்தபடி ஓடினான். அவன் தட்டிய உடனே கதவு திறந்தது. வேகமாகப் படியேறி ஓடியவன் மஞ்சத்தில் இரண்டு உறைகள் இருப்பதைப் பார்த்தான். அதே நேரம் அவனுடைய மனைவி அறையில் இருந்து வெளியே வந்தாள்.

அவன் அவளிடம், “அன்பே இங்கு இரண்டு படுக்கை விரிப்புகள் கிடக்கின்றனவே!” என்றான்.

“ஆம் பிரியமானவரே. நாம் இருவர் அல்லவா?” என்று கேட்டாள்.

“இல்லை. நாம் மூன்று பேர்!” என்றான்.

“உங்களுடைய நண்பர்கள் யாராவது வருகிறார்களா?” என்று கேட்டபடி அப்பாவித்தனமான முக பாவனையுடன் மாடிப் படிகளை ஏறிட்டுப் பார்த்தாள்.

“இல்லை! நான் பெட்டிக்கு உள்ளே இருக்கிற நண்பனைப் பற்றிப் பேசுகிறேன்.”

“எந்தப் பெட்டி? நீங்கள் நல்ல நிதானத்தில்தான் இருக்கிறீர்களா?  இங்கே மரப்பெட்டி எங்கிருக்கிறது?  நண்பர்களை அதற்குள் வைப்பது வழக்கமா என்ன? நான் என்ன மரப்பெட்டி முழுக்க நண்பர்களை நிரப்பிவைக்கிறவளா? நாம் இதற்கு முன் எப்போதாவது நண்பர்களைப் பெட்டிக்குள் வைத்திருக்கிறோமா என்ன? மரப்பெட்டிகளின் உள்ளே உங்கள் நண்பர்களை வைப்பதற்காக நீங்கள் இப்போது கோபமாக வீட்டுக்கு வந்திருக்கிறீர்களா? அந்த ஜவுளி வியாபாரியைத் தவிர வேறு எந்த நண்பனையோ, நம் ஆடைகள் மடித்து வைக்கப்பட்டுள்ள பெட்டியைத் தவிர வேறு பெட்டியையோ எனக்குத் தெரியாது.”

“ஐயோ! பிரியமான என் மனைவியே!  ஒரு மோசமான இளைஞன் என்னிடம் வந்து நீ நம்முடைய வக்கீலைத் தழுவிக் கிடப்பதாகவும் அவனை மரப்பெட்டிக்குள் வைத்திருப்பதாகவும் என்னை எச்சரித்தான்” என்றான்.

“ஓ! அவனுடைய இந்தக் கொடிய துரோகத்தை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. எல்லாவற்றையும் அவன் தவறாகச் சொல்லி இருக்கிறான்.”

“அன்பே! பொறுத்திரு. நீ மிகவும் நல்லவள் என எனக்குத் தெரியும். இந்தப் பெட்டி குறித்து உன்னோடு எனக்கு எந்தச் சச்சரவும் இருக்க வாய்ப்பில்லை என்பதும் உனக்குத் தெரியும். பெட்டிகள் தயாரிக்கிற ஒருவனே இப்படி என்னை எச்சரித்தான். சபிக்கப்பட்ட அந்தப் பெட்டி என் கண்ணிலேயே படாதபடி நான் அதை அவனுக்கு விற்கப்போகிறேன். இந்த ஒரு பெட்டிக்கு ஈடாக அவன் அழகான இரண்டு சிறிய பெட்டிகளை எனக்குத் தரப்போகிறான். அதில் ஒரு சிறு குழந்தை உட்காரும் அளவுக்குக்கூட இடம் இருக்காது. ஆகவே உன்னுடைய நற்பண்புகள் குறித்துப் பொறாமைகொண்டவர்கள் செய்யும் இத்தகைய அவதூறுகளும் உளறல்களும் முடிவுக்கு வந்துவிடும்” என்றான்.

“நீங்கள் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் பெட்டியின்மீது எனக்கு எந்தவித மதிப்பும் கிடையாது. நல்லவேளையாக அதனுள் இப்போது எதுவுமே இல்லை. நம்முடைய ஆடைகளைத்  துவைக்கப் போட்டிருக்கிறேன். சங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பெட்டியை நாளை காலை எடுத்துக்கொண்டு போகலாம். இப்போது சாப்பிடுகிறீர்களா?” என்றாள்.

 “இல்லை. இல்லை. அந்த மரப்பெட்டி போன பிறகுதான் எனக்குப் பசியே எடுக்கும். அதன் பிறகே நான் இரவு உணவை உண்பேன்” என்றான்.

“ஓ! அப்படியா! உங்களுடைய சிந்தனையில் இருந்து அந்த மரப்பெட்டியைத் தூக்கி வீச மாட்டீர்களா?” என்று கேட்டாள்.

அந்த நகை வியாபாரி, “யார் அங்கே! கீழே வாருங்கள்!” என்று தன்னிடம் பணிபுரியும் ஏவலர்களையும் உதவியாளர்களையும் உரக்கக் கூவி அழைத்தான். 

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவன் கூப்பிட்ட அத்தனை பேரும் எதிரே வந்து நின்றனர். அவன் அந்தப் பெட்டியை அங்கிருந்து தூக்கிச் செல்லுமாறு ஆணையிட்டான். கள்ளக்காதலின் சின்னமான அந்த மரச்சாமான் அறையின் குறுக்கே உருண்டதில் தன்னுடைய கால்களில் காற்றுபடுவதை வக்கீல் உணர்ந்தான். அவனுக்கு இது பழக்கம் இல்லாத ஒன்று என்பதால் ஏதும் புரியாமல் அவனும் அதனோடு சேர்ந்து உருண்டான். அப்போது பெட்டிக்குள் இருந்து ஓசை கேட்டது. 

நகை வியாபாரியின் மனைவி, “தூக்கிப் போய்க்கொண்டே இருங்கள். பெட்டியின் மூடிதான் சத்தமிடுகிறது” என்றாள்.

“இல்லை, இல்லை. பிரியமானவளே! அது பெட்டியினுடைய தாழ்ப்பாளில் உள்ள திருகு போடும் சத்தம்” என்றான் கணவன். அதன் பிறகு எதிர்ப்பேதும் இல்லாமல் அந்த மரப்பெட்டி மெல்ல மாடிப் படிகள் வழியே சாய்த்துக் கீழிறக்கப்பட்டது.

அதன் கூடவே சென்ற நகை வியாபாரி சாலைக்கு வந்ததும், “வண்டி எதாவது இருக்கிறதா?” என்று தேடினான். சிக்குவான் சீழ்க்கையடித்தபடி கோவேறு கழுதைகள் பூட்டிய தன் வண்டியுடன் அங்கு வர, ஏவலர்கள் மரப்பெட்டியைத் தூக்கி அந்த வண்டியில் வைத்தனர்.

அதே தருணத்தில் பெட்டிக்குள் இருந்து வக்கீல், “ஏய்! ஏய்” என்று குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட ஒரு ஏவலன், “எஜமான்! மரப்பெட்டி பேசுகிறது” என்றான்.

“அப்படியா? அது எந்த மொழியில் பேசுகிறது?” என்று கேட்ட நகை வியாபாரி அவனை நன்றாக உதைத்தான். நல்லவேளை அவன் உதைத்த பாகம் கண்ணாடியால் ஆனதாக இல்லாமல் போனது. உதை வாங்கியவன் படியின் மீது உருண்டு விழுந்தான். மரப்பெட்டி பேசும் என்பதை அவன் இனி வாழ்க்கை முழுவதும் பேசப்போவதில்லை. இடையனும் நகை வியாபாரியும் சேர்ந்து, சத்தமாக ஏதேதோ பேசிய அந்த மரப்பெட்டியின் வார்த்தைகளுக்குக் காது கொடுக்காமல் அதை நதிப்புறமாகக் கொண்டு சென்றனர். பிறகு நிறைய கற்களை அதன்மீது வைத்துக் கட்டிய நகை வியாபாரி அதை செயின் நதிக்குள் தூக்கி வீசினான்.

வாத்து நீருக்குள் குதிப்பது போல அந்தப் பெட்டி தடாலென்று விழுந்து மூழ்கியபோது இடையன் அதைப் பார்த்து, “நீந்து நண்பா” என்று எக்காளமிட்டான்.

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய சிக்குவான் ரூ-டி-யூ சாலைவரை நடந்து நாட்ர டேம் தேவாலயத்தின் கன்னிமாடத்தை அடைந்தான். அதனருகே ஒரு வீடு இருந்ததைப் பார்த்தவன், கதவை அடையாளம் கண்டுகொண்டு வேகமாகத் தட்டினான். 

“கதவைத் திறக்கவும்! அரசனின் ஆணை! கதவைத் திறக்கவும்” என்றான்.

சத்தம் கேட்டு வெளியே புகழ்பெற்ற வங்கியாளரான வெர்சாசிஸ் வெளியே வந்தார்.

அவர் இடையனிடம், “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“இன்று இரவு நீங்கள் அதிகக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று உங்களை எச்சரிக்குமாறு என்னை அரசின் உயரதிகாரி அனுப்பி வைத்தார். அவரைப் பொறுத்தவரை அவர் தன்னுடைய வில் வீரர்களைத் தயார்நிலையில் வைத்திருப்பார். உங்கள் பொருட்களைத் திருடிச் சென்ற அந்த கூன் முதுகுக் கொள்ளையன் மறுபடியும் வந்துவிட்டான். எல்லாவற்றிற்கும் தயார்நிலையில் இருங்கள். ஏனெனில் அவன் உங்களை வெகு எளிதாகக் கையாளும் திறம்பெற்றவன்” என்று பதில் சொன்னான்.

இதைச் சொல்லிவிட்டு, பின்னங்கால் பிடரியில்பட வேகமாக ஓடி ரூ-டெ-மர்மோஜேஸ் சாலையை அடைந்தான் இடையன். குரோசேக்ரு அங்கு நகரின் பேரழகியான பாஸ்குவரட்டே என்பவளுடன் உணவருந்திக்கொண்டிருந்தான். அவளைப் போலப் பாலியல் வக்கிரம் கொண்டவள் இதுவரை யாரும் இல்லை எனுமளவுக்கு காம வித்தையில் கரை கண்டவளாக இருந்தாள். துளைக்கும் குறுவாளைப் போன்ற பார்வை அவளுடையது. அத்தனைக் கண்களையும் உறுத்திய அவளுடைய தோற்றம் எல்லா அரண்மனைகளையும் அழிக்கவல்லது. அது மட்டுமின்றி துடுக்குத்தனமே வடிவான அவள் மிகத் துணிச்சலானவள். மர்மோஜேஸ் சாலையில் இருந்த குடியிருப்புப் பகுதிக்குப் போன சிக்குவான் மிகுந்த சங்கடப்பட்டான். உறங்கி ஓய்வெடுக்கப் போயிருக்கிற அந்த இரண்டு ஜோடிப் புறாக்களையும், அந்த வீட்டையும் தன்னால் கண்டுபிடிக்க முடியாதோ என்று அஞ்சினான். ஆனால் ஒரு தேவதை அதை அவனுக்காகக் கச்சிதமாக செய்து தந்தது. அவன் அந்தத் தெருவில் நுழைந்ததும் ஜன்னல்களில் ஏராளமான விளக்குகள் எரிந்தன. தங்கள் இச்சையைத் தணித்துக்கொள்ள அந்த ஓர் இரவை மட்டும் அங்கு கழிப்பதற்காக வந்திருந்த பல முகங்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தன. வேசிகள், சிறுமிகள், இல்லத்தரசிகள், கணவர்கள், இளம் பெண்கள் என அனைவருமே கட்டிலில் இருந்து எழுந்து, கையளவு சிறிய மின்விளக்கின் வெளிச்சத்தில், தூக்கில் இடுவதற்காக ஏதோ ஒரு திருடன் அழைத்துக்கொண்டு செல்லப்படுவதைப் போல, ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.

கைகளில் ஒரு கிண்ணத்துடன் அவசரமாக கதவருகே ஓடிவந்த ஒருவனைப் பார்த்த இடையன் “என்ன விஷயம்?” என்று கேட்டான். 

“அது ஒன்றும் இல்லை. நகரத்திற்கு ஏராளமான மது வந்து இறங்குகிறது என்றுதான் நாங்கள் முதலில் நினைத்தோம். ஆனால் அது பாஸ்கவரெட்டேவை மாசிஞ்சே வெளுக்கும் ஓசை மட்டுமே.”

“எங்கே?” என்று கேட்டான் இடையன்.

“பறக்கும் தவளையின் உருவம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட அழகிய வீடு இருக்கிறதே அங்கேதான். சேடிகள், ஏவலர்களின் இரைச்சல் உனக்குக் கேட்கவில்லையா?” என்று கேட்டான்.

ஆனால் உண்மையில், “கொலை! உதவி! யாராவது இங்கு வாருங்கள்” என்ற கூக்குரல்தான் கேட்டது. வீட்டில் இருந்து அடி உதை மழையாகப் பொழிகிற சத்தமும் மாசிஞ்சே தன் முரட்டுக்குரலில் “செத்துப் போ! கத்துகிறாயா? உனக்குப் பணம் வேண்டுமா? அதோ, அதை எடுத்துக்கொள்.”

“ஐயோ! ஐயோ! நான் சாகப் போகிறேன்! உதவி! உதவி! அய்யோ அய்யோ” என்று பாஸ்கவரெட்டே வலியில் முனகினாள். அதன்பிறகு ஒரு வாள்வீச்சு ஓசையும் அதைத் தொடர்ந்து மெலிந்த தேகங்கொண்ட ஒரு பெண் தரையில் விழும் சத்தமும் கேட்டது. அதைத் தொடர்ந்து பெருத்த மௌனம். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு வேலையாட்கள், பணிப்பெண்கள், கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் மறுபடியும் வீட்டுக்குள் புகுந்துவிட்டார்கள். சரியான நேரத்தில் அங்கு வந்த இடையன், அவர்களோடு படிகளில் ஏறினான். உடைந்த கண்ணாடிச் சில்லுகள், கிழித்தெறியப்பட்ட கம்பளிகள், துணிகள், உணவுப் பாத்திரங்கள் ஆகியவை தரைமீது கிடக்க, அனைவரும் சற்றுத் தள்ளி நின்று அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

பாஸ்கவரட்டே உறங்கிய அறைக்கதவை, எதற்கும் அஞ்சாத மாவீரனைப் போலத் திறந்த இடையன், தலைமுடி கலைந்த நிலையில், கழுத்து ஒரு பக்கமாகத் தொங்க, குருதி தோய்ந்த கம்பளத்தின் மீது அவள் தரையில் வீழ்ந்து கிடந்தாள். மாசிஞ்சே மிகத் தாழ்ந்த குரலில் தன்னுடைய கீதத்தை இப்போது எந்தச் சுருதியில் பாடுவது என்று தெரியாதவனாக நின்றான்.

“போதும்! பாஸ்குவரட்டே! செத்துப் போனது போல நடிக்காதே. வா! அழுக்காகிவிட்ட உன் ஆடைகளின் கறைகளைப் போக்கித் தூய்மையாக்குவோம். அடியே, வெட்கங்கெட்டவளே, உயிரோடு இருக்கிறாயோ செத்துப் போய்விட்டாயோ, எப்படியானாலும் சரி, இப்படி ரத்தம் வழியக் கிடக்கிற நீ அவ்வளவு அழகாக இருக்கிறாய்! நான் இப்போது உன்னை முத்தமிடப் போகிறேன்” என்றான்.

இதைச் சொன்ன பிறகு தந்திரக்காரனான அந்தச் சிப்பாய் அவளைத் தூக்கிக் கட்டில்மீது போட்டான். ஆனால் அவள் ஒரு துணிக்குவியலைப் போல, தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்துபோன உடலைப் போல விறைப்பாக விழுந்தாள். இதைப் பார்த்ததும் அவளுடைய கள்ளக்காதலனுக்கு இது விளையாட்டில் இருந்து விடைபெற வேண்டிய நேரம் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் கலாரசிகனான சிப்பாய் சிறிது குற்ற உணர்வுடன் “இவ்வளவு நல்லவளை, நான் மிக அதிகமாகக் காதலித்தவளை என்னால் எப்படிக் கொல்ல முடியும்? ஆனால், ஆம்! நான் உன்னைக் கொன்றுவிட்டேன் என்பது தெளிவு. ஏனெனில் நீ உயிருடன் இருந்தவரை உன்னுடைய இனிமையான மார்பு இப்படித் தொய்வானதே கிடையாது. கடவுளே! அது பணப்பையின் அடியில் கிடக்கிற கிரீடம் போன்றதாயிற்றே!” என்றான்.

பிறகு அவள் தன் கண்களைத் திறந்து தலையை மெல்லச் சாய்த்து, உறுதியான தன் வெண்ணிற உடலைப் பார்த்தாள். காதில் தட்டித்தட்டித் தனக்குத்தானே உயிரூட்டிக்கொண்டாள். “இறந்துபோனவர்களைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள இது உனக்கு உதவியிருக்கும்” என்று புன்னகை செய்தபடியே கூறினாள்.

இடையன் அவளிடம், “அவன் உன்னை ஏன் கொன்றான் சகோதரி?” என்று கேட்டான்.

“ஏன் என்று கேட்கிறாயா? திரும்பச் செலுத்தாத கடனுக்காக அதிகாரிகள் இங்கிருக்கும் அனைத்தையும் நாளை எடுத்துக்கொள்வார்கள். சட்டத்தின் கரங்களில் இருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு அழகிய ஆண்மகனிடம் நான் இணங்கிப்போக விரும்பினேன் என்ற காரணத்திற்காக, கற்பு என்று பேசுவதைத் தவிர சல்லிக்காசு இல்லாத ஒருவன் என்னை இழிவாகப் பேசிவிட்டான்” என்றாள்.

சிப்பாய் அவளைப் பார்த்து, “பாஸ்குவரட்டே, உன்னுடைய உடலில் இருக்கிற மொத்த எலும்பையும் உடைத்துவிடுவேன்” என்றான்.

“ஓ! அவ்வளவுதானா! அருமை நண்பா! நான் உனக்கு ஒரு பெரிய தொகையைக் கொண்டுவந்து கொடுக்கிறேன்” என்ற சிக்குவானை அப்போதுதான் மாசிஞ்சே அடையாளம் கண்டான்.

வியப்படைந்த சிப்பாய், “நீ எங்கிருந்து கொண்டுவந்து தருவாய்?” என்று கேட்டான்.

“இங்கே வாருங்கள். உங்களுடைய காதுகளில் அதைச் சொல்கிறேன். ஒருவேளை முப்பது ஆயிரம் கிரெளன்கள் பேரி மர நிழலில் நடந்து செல்லுமாயின் அதைப் பறிக்க மாட்டாயா? அவை அங்கேயே கிடந்து கெட்டுப் போவதிலிருந்து அவற்றைக் காப்பாற்ற மாட்டாயா?” என்று கேட்டான். 

“சிக்குவான், என்னிடம் உன்னுடைய விளையாட்டுகளை விளையாடினால் நாயைக் கொல்வது மாதிரி உன்னைக் கொல்வேன். அப்படியில்லாமல் முப்பதாயிரம் கிரெளன்களுக்கு எதிரே நீ என்னைக் கொண்டுபோய் நிறுத்தினால் உனக்குப் பிடித்த அங்கத்தில் உன்னை முத்தமிடுகிறேன். அவசியம் ஏற்பட்டால் கடற்கரைப் பாறையின் மூலைக்கு இழுத்துச் சென்று அந்த மூன்று குடிமகன்களைக் கொல்லவும் தயாராக இருக்கிறேன்” என்றான்.

“நீ ஒருவரைக்கூட கொல்லவேண்டிய அவசியமில்லை. விஷயம் இதுதான். எனக்காக எதையும் செய்யக்கூடிய, விசுவாசமான என் செல்லக்குட்டி ஒருத்தி, வங்கியாளரின் வேலையாளாக இருக்கிறாள். அந்த வங்கியாளர் நகரத்தில் நம் மாமாவின் வீட்டருகே வசிக்கிறார். அவர் இன்று காலை தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் பேரி மரத்தின் அடியில் ஏகப்பட்ட தங்கத்தைப் புதைத்துவிட்டு ஊருக்குள் சென்றிருப்பதாக நம்பத்தகுந்த செய்தி. ஆனால் பல் வலியுடன் இருந்த அந்தப் பெண் தன்னுடைய ஜன்னலருகே காற்று வாங்கியபடி அமர்ந்திருந்தபோது, ஏதோ யோசனையில் அங்கிருந்த நாடோடிகளிடம் இதைச் சொல்லிவிட்டாள். அவளுக்கு என் மீதிருக்கும் பிரியத்தால் இதை எனக்கும் சொன்னாள். எனக்கு அதில் இருந்து ஒரு நல்ல பங்கைத் தருவதாக நீ சத்தியம் செய்தால் நீ சுவரேற என் தோள்களைத் தந்து உதவுவேன். பிறகு சுவரின் எதிரே உள்ள பேரிக்காய் மரத்தின் மீது நீ குதித்துவிடு. இப்போதும் முட்டாள் விலங்குகளில் நானும் ஒருவன் என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

“இல்லை. உத்தமனான என் தம்பியே! நீ சொல்வது சரிதான். உன்னுடைய வழியில் இருந்து ஒரு எதிரியைத் துரத்த வேண்டும் என்கிற நிலை வந்தால் நான் இருக்கிறேன். உனக்காக என்னுடைய நண்பர்களில் ஒருவனைக் கொல்லவும் நான் தயாராக இருக்கிறேன். இன்றிலிருந்து நான் உன்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன் கிடையாது, சொந்த அண்ணன்” என்றவன், பாஸ்கவரெட்டேவைப் பார்த்து, “ஏய் செல்லம்! மேஜைகளை நேராக வை. ரத்தத்தைத் துடை. அது எனக்குச் சொந்தமானது. இதற்கு ஈடாக நூறு மடங்கு ரத்தத்தை உனக்கு நான் திரும்பத் தருகிறேன். செய்யும் அனைத்தையும் சிறப்பாகச் செய். எழுந்திரு. துயரத்தைத் தூக்கி வீசு. உன்னுடைய உள்பாவாடைகளைச் சீர்செய். நீ சிரிக்க வேண்டும். அதுவே எனக்குப் பிடிக்கும். அப்படியே அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் காய்கறி இறைச்சி கலந்த சூப்பைக் கவனி. விட்ட இடத்தில் இருந்து நம்முடைய மாலை நேரப் பூசையை மீண்டும் தொடர்வோம். ஒரு மகாராணியைவிடச் செல்வம் மிக்கவளாக நாளை காலை உன்னை மாற்றுவேன். இதோ பார்! இவன் என்னுடைய தம்பி. இவனுடைய சந்தோஷத்துக்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறேன். நமக்குச் சொந்தமான அனைத்தையும் நாம் நாளை காலை திரும்பப் பெற்று, அவற்றை நிலவறைக்குள் வைத்துப் பூட்டுவோம் என்று நான் நம்புகிறேன். வா! விரைந்து அனைத்து வேலைகளையும் தொடங்கு” என்றான்.

இப்படியாக, மிகக் குறைவான நேரத்தில், அதாவது ஒரு பாதிரி “கடவுள் உன்னோடு இருக்கட்டும்” என்று சொல்வதற்காகும் நேரத்திற்குள், அந்த காக்கைக் கூடு எப்படி இதற்கு முன் சிரிப்பில் இருந்து கண்ணீருக்கு மாறியதோ, அதேபோல வேகமாகக் கண்ணீரிலிருந்து சிரிப்புக்கு மாறியது. பரத்தையர் இல்லங்களில்தான் அன்பு என்பது குறுவாள் வீச்சிலும் நிகழ்கிறது. மகிழ்ச்சிக் கொந்தளிப்பு சீற்றங்களுக்கிடையே நான்கு சுவர்களுக்கு நடுவே நடக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் படோடோபமான ஆடைகளை அணிகிற பெண்களால் புரிந்துகொள்ள முடியாது.

பள்ளிச் சிறுவர்கள் வகுப்பு இடைவேளை நேரங்களில் மகிழ்ச்சியோடு இருப்பார்களே, அதன் அளவில் நூறு மடங்கு குதூகலத்துடன் இப்போது இருந்தான் சிப்பாய். அவன் தன்னுடைய சித்தப்பா மகனை நன்றாகக் குடிக்க வைத்தான். அவன் கிராமத்தான் போல எல்லாவற்றையும் மேலும் கீழும் சிந்தி, குடிப்பது போல நடித்து, “நாளை அவன் பாரீசை விலைக்கு வாங்குவான். ஒரு லட்சம் கிரெளன்களை அரசனுக்குக் கடனாகக் கொடுப்பான். தங்கத்திலேயே புரள்வான்” என்பது போன்ற பல நூறு முட்டாள்தனமான வார்த்தைகளை உளறிக் கொட்டினான். இதைக் கேட்ட சிப்பாய்க்குக் குற்றத்தை அவனே பகிரங்கமாகப் பிரகடனம் செய்துவிடுவானோ என்று பயம் உண்டாகும் அளவுக்கு உளறினான். அவன் மூளை சுத்தமாக வேலை செய்யவில்லை என்று நினைத்த சிப்பாய், சுரெஸ்னே பகுதியில் கிடைக்கும் மதுவை, ஒரு லிட்டருக்கும் மேலாக அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்ட சிக்குவானுடைய வயிற்றைக் கிழித்து அதற்குள் அவை அனைத்தையும் உறிஞ்சும் பஞ்சுப்பொதி எதையாவது வைத்திருக்கிறானா என்று பார்க்க நினைத்தான். ஆனால் இதைப் பற்றி அவனிடம் எதுவும் கூறாமல் அவனை வெளியே அழைத்துப் போனான். ஆயிரக்கணக்கான சமய விஷயங்களைப் பேசிப் பலவிதமாகக் குழப்பியபடி கிரெளன்கள் புதைக்கப்பட்டிருந்த வங்கியாளனின் தோட்டத்தின் எதிரே சத்தமின்றி தள்ளாடியபடி போய்ச் சேர்ந்தனர். அதன் பிறகு சிக்குவானின் அகன்ற தோள்களின் மீது ஏறிய கோசேக்ரு, ஏற்கெனவே பல நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ள நிபுணத்துவம் வாய்ந்தவனைப் போல பேரிக்காய் மரத்தின் மீது குதித்தான். ஆனால் அங்கு அவனை எதிர்பாத்துக் காத்திருந்த வெர்சோரிஸ் அவனுடைய கழுத்தில் ஓங்கி அடித்தான். பிறகு மீண்டும் மீண்டும் அதிவேகமாக மூன்று முறை அடித்ததில் குரோசேக்ருவின் கழுத்தின் மேல் பகுதி துவண்டு தொங்கியது. இடையனின் “தலையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்கிற தெளிவான குரல் கேட்டும் அவன் அசையாது இருந்தான். பாதிரியின் சொத்தையும் ஒழுக்கத்தையும் கடவுளின் ஆசியால் கட்டிக்காத்த தாராள மனம் கொண்ட சிக்குவான் பாதிரியின் வீட்டுக்குத் திரும்புவதே சரியென நினைத்தான். 

ஆகவே புனித பியர் – ஆக்ஸ் – பாஃப் தெருவைச் சென்றடைந்தவன், பிறந்த குழந்தையைப் போல நன்கு தூங்கினான். அவனைப் பொறுத்தவரை அண்ணன் தம்பி என்ற சொல்லுக்குப் பொருளே இல்லை. அடுத்த நாள் காலை இடையர்களின் பழங்கால வழக்கத்தைப் போல சூரியன் உதிக்கும் நேரத்திற்குள் எழுந்துவிட்டான். மாமா துப்பிய எச்சில் வெள்ளையாக இருந்ததா, அவர் இருமினாரா, நன்றாக உறங்கினாரா என்று கேட்பதற்காக அவருடைய அறைக்குள் சென்றான். அங்கிருந்த வயது முதிர்ந்த பணியாள் “நாட்ர டேம் தேவாலயத்தின் முதல் பரிபாலகரான புனித மோரிசின் மணியோசை காதில் கேட்டதும் மிகுந்த பக்தியுடன் பாதிரியார் தேவாலயத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு திருச்சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாரீசின் தலைமை ஆயருடன் காலை உணவு உண்பார்கள்” என்று அறிவித்தான். 

இதைக் கேட்ட சிக்குவான், “என் துணை இல்லாமல் தன்னந்தனியாக அங்கு செல்லுமளவுக்கு அவருக்குப் புத்தி மழுங்கிவிட்டதா? அவருக்குச் சளி பிடித்துவிடாதா? பனியில் முடக்குவாதம் ஏற்பட்டுவிடாதா? சாக விரும்புகிறாரா என்ன? அவர் திரும்பி வரும்போது மிகப்பெரிய கணப்பு அடுப்பை உருவாக்கி அவர் கதகதப்பு பெறச் செய்வேன்” என்றான். இதைச் சொல்லிவிட்டு பாதிரி ஓய்வெடுக்கும் அறைக்குள் ஓடியவன், அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த பாதிரியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

“என்னாயிற்று! அந்த முது பணிப்பெண் என்ன சொன்னாள்? உடல் நடுங்க இங்கு அமர்ந்திருக்கும் அளவுக்கு நீங்கள் உலக அனுபவம் அற்றவர் இல்லையே?”

பாதிரி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மற்ற சிந்தனையாளர்களைப் போலவே, புத்திசாலித்தனம் வெளிப்படையாகத் தெரியாத தோற்றமுடைய சிக்குவான், கணிக்க முடியாத அளவு விசித்திரமான விஷயங்கள், மாய மந்திரங்கள் தொடர்பான உரையாடல்கள், தேவையே அற்ற பல காரணிகளைத் தமக்குள்ளேயே முணுமுணுத்தல் ஆகியவற்றில் வயதானவர்கள் சிற்சமயங்களில் ஈடுபடுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தான். ஆகவே, பாதிரியாரின் மீது அவனுக்கிருந்த பக்தியாலும் மரியாதையாலும் தொலைவில் சென்று அமர்ந்து இத்தகைய கனவுகள் நின்று போகட்டுமெனக் காத்திருந்தான். செருப்பு தைப்பவர் கையில் உள்ள குத்தூசியைப் போல நீளமாக இருந்த அவருடைய கால் நகங்களைப் பார்த்தான். அவருடைய பாதங்களை உற்றுப் பார்த்தபோது அவருடைய கால்களில் இருந்த தோல் அடர்சிவப்பாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தான். அது அவர் அணிந்திருந்த காற்சட்டையையே சிவப்பாகக் காட்டியது. அத்துடன் அவருடைய மூக்கின் வழியே நெருப்பின் நிறத்தில் திரவம் வழிந்தது போலத் தெரிந்தது.

அவர் இறந்துவிட்டார் என்று நினைத்தான். அதே தருணத்தில் அறையின் கதவு திறந்தது. பனியில் உறைந்த மூக்குடன் தேவாலயத்திலிருந்து பாதிரி திரும்ப வந்தார்.

“ஐயோ மாமா! உங்களுக்கு என்ன புத்தி பேதலித்துவிட்டதா? இந்தக் கதவின் அருகே நீங்கள் இப்போது நிற்க இயலாது. ஏனென்றால் நீங்கள் கணப்பு அடுப்புக்கு அருகே உங்களுடைய நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களைப் போலவே இருக்கிற இரண்டு பாதிரிகள் இந்த உலகத்தில் இருக்க வாய்ப்பே இல்லை” என்றான்.

“அடடா! இரண்டு இடங்களில் நான் இருக்கவேண்டும் என்று நினைத்த காலமெல்லாம் முன்பு இருந்தன. ஆனால் ஒரு மனிதனின் விதி அப்படி எல்லாம் இருந்துவிட்டால் அவன் அளவுக்கு அதிகமாக மகிழ்ந்திருக்க மாட்டானா! உன் கண் மங்கலாகத் தெரிகிறதா என்ன? இங்கு நான் ஒருவன் மட்டும்தான் இருக்கிறேன்” என்றார்.

சிக்குவான் தலையைத் திருப்பி நாற்காலியைப் பார்த்தான். இப்போது அது காலியாக இருந்தது. மிகுந்த வியப்புடன் அவன் அதை நோக்கிச் சென்றான்‌. நாற்காலியின் இருக்கை மீது நிலக்கரிக் கங்குகள் காணப்பட்டன. அதிலிருந்து சல்ஃபர் நெடி வீசியது.

“பிசாசு என்னிடம் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். நான் அவனுக்காகக் கடவுளிடம் பிரார்த்திப்பேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

அதற்குப் பிறகு அவன் பாதிரியிடம், அவனுடைய கடவுள் நம்பிக்கையோடு விளையாடியதன் மூலமாகப் பிசாசு தன்னைத்தானே எப்படிக் குஷிப்படுத்திக்கொண்டது என்றும் தீய எண்ணங்கொண்ட தன் ஒன்றுவிட்ட அண்ணன்களிடம் இருந்து தப்பிக்க அவனுக்கு அது எப்படி விசுவாசத்துடன் உதவியது என்றும் அப்பாவியான முகபாவனையுடன் கூறினான். இதையெல்லாம் கேட்ட பாதிரி மிகுந்த வியப்புடன், ‘நல்லது, பிசாசுக்கு அனுகூலமாக இருப்பவற்றை எல்லாம் இவன் முன்பே கூர்ந்து கவனித்திருக்கிறான், இவனிடம் இன்னும் ஏராளமான புத்திசாலித்தனம் மிச்சமிருக்கிறது’ என்று நினைத்தார். ஆகவே அந்த முதிய பாதிரி, “நன்மை எந்தளவு தீமையைச் சந்திக்கிறதோ அதே அளவுக்குத் தீமையும் நன்மையைச் சந்திக்கும். ஆகவே அந்த இன்னொரு உலகத்தை நாம் அதிகமாகத் தொந்தரவு செய்யக்கூடாது. சமய நம்பிக்கைகளுக்கு எதிரான அந்த உலகை நிறைய ஆற்றல் விசைகள் இணைந்து சமநிலைப்படுத்தி உள்ளது.”

இப்படியாக, சிக்குவான் வம்சாவழியினர் செல்வந்தர்களாகித் தம் மூதாதையர்களின் அதிர்ஷ்டத்தைக்கொண்டு, இந்தச் சாகசத்தின் நினைவாக இப்போது நிர்மாணிக்கப்படும் புனித மைக்கேலின் பாலத்தைக் கட்டுவதற்கு உதவி செய்கிறார்கள். பொய்க் கலப்படமற்ற இந்த வரலாற்றில் தேவ தூதருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பிசாசுக்கும் பெரும் பங்கு உள்ளது.

*

ஆங்கில மூலம்: The Devil’s Heir by Honoré de Balzac, Short Stories of Honoré De Balzac, Published by Modern Library, April 2005 Edition.