அமெரிக்கத் திரைவனத்தின் ஆதி விதை: ஜான் ஃபோர்டின் திரைப்படங்கள்

0 comment

திரைப்பட வரலாற்றில் இனிய முரண்கள் நிறையவே உள்ளன. உலகெங்கும் வன்மேற்கு வகைமையின் (Western Genre) பிதாமகனாக அறியப் பெற்ற ஜான் ஃபோர்டின் பல சாதனைக் குறிப்புகளுள் முதன்மையானது 4 ஆஸ்கார் விருதுகளைச் சிறந்த இயக்குநர் பிரிவிற்காகப் பெற்றவர் அவர் ஒருவர் மட்டுமே என்பது. அவை நான்குமே (The Informer, The Grapes of Wrath, How Green was my Valley & The Quiet Man ) வெஸ்டர்ன் திரைப்படங்கள் அல்ல என்பது அப்படி ஒரு அழகிய முரண். முதல் பேசும் வெஸ்டர்ன் திரைப்படமான Stagecoach-ற்காக இதே பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டாலும் விருது பெறவில்லை.

ஃபோர்டின் வெஸ்டர்ன் அல்லாத திரைப்படங்கள் அனைத்துமே நேரடியாக மானுட உணர்வினையும், தேசிய சச்சரவுகளையும் உணர்வுகள் தளும்ப பேசியதால் அதன் மீதான மரியாதை தனித்துவமானதாய் அகாடமியில் மிளிர்ந்திருந்தது. இருப்பினும் வன்மேற்கு வகைமைத் திரைப்படங்களின் வாயிலாகவே அமெரிக்க உளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் இயங்கு முறைகளையும் பேசி சினிமாவில் எவரும் தொடாத உச்சங்களைத் தொட்டு ஒரு பண்பட்ட வகைமையை உலகத் திரைப்படங்களுக்குத் தொடர்ந்து மெருகேற்றி வழங்கியவர்களுள் முதன்மையானவர் ஃபோர்ட்.

வெஸ்டர்ன் திரைப்படங்களின் வழியே விழியுகுக்கும் உன்னத தருணங்களையும் மயிர்க்கூச்செறியும் சண்டைக் காட்சிகளையும் ஒரு சேர அவரால் காண்பிக்க முடிந்தது. நேரடியாகப் பேசும் கதைகளை விட புராணங்கள் போன்றோ தேவதைக் கதைகள் போன்றோ இயல்புவாதத்திலிருந்து ஒரு திருப்பமெடுத்து கற்பனையுலகில் புனையப்பட்ட சுழித்தோடும் கதை நதிகள் இன்னும் வாய்மைக்கு நெருக்கமானவை, இன்னும் ஆழ்மனம் தொட்டு நெகிழச் செய்பவை. வன்மேற்கு திரைப்படங்கள் அமேரிக்க கதைகளைச் சொல்ல வெகு பொருத்தமான அற்புத களம். அமேரிக்கர்களின் நிலம் மீதான, செல்வம் மீதான வேட்கைகளை இது பகடி செய்வதன் ஊடே ஒரு உருப்பெருக்கி லென்சினை அவர்களது மரபின் ஒவ்வொரு அணுக்களின் மீதும் வைக்கிறது. நீண்ட பாலை நிலத்தின் மீது எவர் தான் சொந்தம் கொண்டாடுவது.

கடவுள்களைக் கைவிட்ட மனிதர்கள் அல்லது கடவுள்களால் கைவிடப்பட்ட மனிதர்கள் எல்லோரும் ஒன்று போலவே திரிகிறார்கள். தலைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெவ்வேறு ஆட்களாய் நடமாடும் விளையாட்டு மகத்தானது. பெரும்பாலானோரின் செயல்பாடுகளும் பாவங்களும் பாணிகளும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. நிலம் அவர்களுக்கு அந்த பொதுத் தன்மையைத் தந்துவிட்டிருக்கிறது. அழுக்கான ஆடைகள், திமிரும் ஒய்யாரமும் கலந்த நடை, கைகளில் இன்னொரு விரலாய் முளைத்திருக்கும் கைத்துப்பாக்கி, கறைபடிந்த பற்கள் என எல்லாம் ஒன்றுதான். ஆனால் கல்லின் வடிவில் காற்றே போல திடீரென்று மாறும் ஓவியங்களால் ஒவ்வொருவரும் தன்னை மானுடக் கணக்கில் சேர்க்கத் தகுந்தவர்களாய் நிரூபித்துக் கொள்கிறார்கள்.

பரம்பரை எதிரிகளால் ஒரு குடும்பமே சிதைக்கப்பட்டு விடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான இறுதிச் சடங்கினை நடத்தி விட்டு பைபிள் வசனங்களும் தோத்திரப் பாடல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் “விரைந்து ஆமென் சொல்லுங்கள், இறைவனை நமஸ்கரிக்கவெல்லாம் நேரமில்லை, ஆமென்” என்று சொல்லிவிட்டு பழிவாங்கும் படலத்தைத் துவக்கும் ஒருவனுக்குத் தான் வன்மேற்கு கதைகளில் முதலிடம். இக்கதைகளில் பூசாரி நிலையில் எவருமில்லை, அப்படி எவரேனும் காண்பிக்கப்பட்டால் ஒரு கோமாளிக்கு நிகராக மட்டுமே அவரது பாத்திரப் படைப்பு இருக்கும்.

ஃபோர்டின் இரு முக்கிய பரிமாணங்களில் இந்த வன்மேற்கு முகத்தை மட்டுமே இங்கு அறிமுகம் செய்ய விழைகிறேன். ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஒரு முதன்மையான வெஸ்டர்ன் திரைப்படம் என்கிற ரீதியில் நான்கு திரைப்படங்களைப் பற்றிய அறிமுகத்தை மட்டும் முன்வைக்கிறேன்.

Stagecoach (1939) : வெஸ்டர்ன் வகைமையின் வரையறை

Stagecoach (1939) ஜான் ஃபோர்டின் முதல் பேசும் வெஸ்டர்ன் திரைப்படம். அதனாலேயே அது முட்காட்டினை நிரவி பயணப் பாதைக்கு உகந்த சமதளம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கடும் சவாலை எதிர்கொள்கிறது. பேசும் படங்கள் வந்த பிறகு வெஸ்டர்ன்கள் பெரிதும் எடுக்கப்படவில்லை. ஃபோர்டே 1926க்குப் பிறகு வெஸ்டர்ன் படங்கள் எடுக்கவில்லை. அதற்கு முதன்மையான காரணம் படப்பிடிப்பு தளங்களில் நேரடியாகக் குரல் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள். ஆனால் முதல் முயற்சியிலேயே இயன்ற அளவு சிறப்பான ஒளி/ ஒலிப்பதிவுகளுடன் படம் பிடிக்கப்பட்டது மட்டுமின்றி சமரசமற்ற சமூக அரசியல் விவாதங்களை உருவாக்கிய கதைக்களத்திற்குள் அழகான கதாபாத்திரங்களை உலவ விட்டிருப்பதனால் இது முக்கியமான வெஸ்டர்ன் திரைப்படங்களுள் ஒன்றாக இன்றும் முதன்மைப்படுத்தப்படுகிறது.

ஒரே குதிரை வண்டியில் ஒன்பது கதாபாத்திரங்களைப் பயணம் செய்வது போல அமைக்கப்பட்ட கதையின் வாய்ப்பு இயல்பாகவே பல கோணங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பேச அழைக்கிறது. இருப்பினும் ஃபோர்ட் பெரிதும் உரையாடல்களைப் பயன்படுத்தாமல் கதாபாத்திர நிலைப்பாடுகளை முன்வைத்து முகங்களின் அண்மைக் காட்சிகள் மூலமாகவும் காமிராக்களின் நிலைத்து நிற்கும் இடங்களின் மூலமாகவும் பார்வையாளர்களின் நாடி பிடித்துக் கொள்கிறார். கற்பனைத் திறன் வழியே ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பின்புலத்தையும் பின்கதையையும் மெல்லிய இடைவெளிகளில் விவரித்து எடுத்துக் கொள்ளவும் ஆழமான புரிதலை ஏற்படுத்தவும் செய்துவிடுகிறார். மேதமைக்குப் பதம்! பின்னாளில் இத்திரைப்படத்தினைக் குறிப்புதவியாய்க் கொண்டு தான் Citizen Kane (1941), 12 Angry Men (1957) போன்ற  திரைப்படங்கள் உருவாகி உள்ளன. அதிலும் பின்னது முழுக்க முழுக்க இதன் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது எனில் மிகையன்று.

வெஸ்டர்ன் வகைமைக்கே ஒரு சின்னமாகப் பின்னாளில் விளங்கவிருக்கும் நினைவுப் பள்ளத்தாக்கு முதன்முதலாய் இந்தத் திரைப்படத்தில் தான் வருகிறது. அதைக் கண்டுகொண்ட மகிழ்வில் தானோ என்னவோ பலமுறை திரையின் பின்புலத்தில் காண்பிக்கிறார் இயக்குநர். இந்த அமைவிடமே அவருக்கு இத்தகைய முயற்சியில் இறங்குவதற்கான உத்வேகத்தை அளித்திருக்கும் என்று தோன்றுகிறது. நினைவுப் பள்ளத்தாக்கின் பெருங்காதலர் ஃபோர்ட்.

அபேசிகளின் தாக்குதல் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வந்த பிறகும் அந்த அபாயமிக்க பாதையில் குதிரை வண்டியில் பயணிக்க வேண்டிய தேவையும் காரணமும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. குதிரை வண்டியில் ஒவ்வொருவரது அமர்விடத்தின் தேர்வில் சமூக நிலைப்பாட்டின் நுணுக்கத்தையும் கதாபாத்திர நடத்தையையும் பேசும் அடர்த்தியான தொய்வற்ற திரைக்கதையில் உன்னித்துக் கண்டறிந்து பேச வேண்டிய ஆழமான பேசுபொருட்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

மேலே அமர இடமின்றி தரைத்தளத்தில் அமர்ந்திருக்கும் சிறைக் கைதி, இரு பெண்மணிகளையும் இடித்தவண்ணம் அமர்திருக்கும் குண்டான வீராப்பு பேசும் வணிகர், பெண்மனி லூசியைப் பாதுகாக்க வந்து நேரெதிரே அவரைக் கண்காணித்த வண்ணமே அமர்ந்திருக்கும் முன்னாள் படை சேவர்கர், விஸ்கி விற்பனையாளருக்கு அருகே நட்பு பாராட்டிய வண்ணம் அமர்ந்திருக்கும் குடிகார மருத்துவர் எல்லாமே கவனத்திற்கு உரியவர்கள்.

ஃபோர்டின் படங்களில் வரும் காதல் ஒவ்வொரு முறையும் மனங்களுக்கிடையே நழுவிச் சென்று விடுகின்றன. தன்னைப் பற்றிய முழு உண்மையையையும் அறியாமல் தன்னை நேசிக்கும் அவனைப் பார்த்து பரிதாபம், காதல், சுய பச்சாதாபம் என அத்தனை உணர்வுக் கலவையையும் சுகித்தும் மருகும் தலாஸின் தயக்கத்திற்கு “உன்னைப் பற்றி எனக்குத் தேவையான விவரங்கள் எனக்குத் தெரிகிறதே; அது போதுமே” என்று பதிலிறுக்கும் ரிங்கோவின் மனம் அடிப்படையில் மானுடத்தை அணைக்கும் தளிர்விரல்கள். வெகு குறைவான காட்சிகளிலேயே நேசத்தின் பல்வேறு முகங்கள் குடிகொண்டு விடுகின்றன.

பயணத்தின் துவக்கத்தில் தோற்றமளிக்கும் அல்லது இருக்கும் கதாபாத்திரங்கள் விழியறியா இடைவெளிகளிலெல்லாம் திருப்பங்களெடுத்து பயணத்தின் இறுதியில் வேறொரு புள்ளியினை அடைந்திருப்பதும் அது கதைக்குள் நம்மை உறுத்தாமல் நடைபெற்றிருப்பதும் ஜோசப் கேம்பெல்லின் ’ஹீரோவின் சாகசப் பயணத்தினை’ மேலும் ஒருமுறை மெருகேற்றித் தந்திருக்கிறது.  கைவிடப்பட்ட நிலமான பாலை எந்த திடமனதையும் சற்றே அசைத்து விடும் திறன் பெற்றது. அத்தகைய பாலையின் பரந்த வெளியில் எறும்பு போல ஊறும் உணர்ச்சிப் பொம்மைகள் தான் எத்தனை அபத்தப் பிராணிகள்!

சண்டைக் காட்சிகள் அனைத்தும் விழியிமை மறக்க வைக்கும் தரம். மூன்று வரிசைகளில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையிணைகளின் இடையில் ஏறிவிட்ட அபேசி சுடப்பட்டு விடுகிறான். அவன் குதிரையிணைகளின் ஊடே நழுவி விழுந்து அவனைக் குதிரை வண்டி கடந்து செல்லும் காட்சி காலத்தையும் ஆபத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் கடும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் நில்லாமல் ரிங்கோ கதாபாத்திரம் மீண்டும் அந்தக் குதிரை நிரைகளிடையே தாவி முன்னிணை குதிரைகளைத் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வருவதும் மயிர்க்கூச்செறியும் சண்டைக் காட்சிகள். இரண்டுமே யகிமா கானட் என்ற சண்டை வல்லுநரால் நடிக்கப்பட்டவை. இந்தத் திரைப்படம் வெளியாகி எண்பதாண்டுகளான பின்னரும் இத்தகைய சண்டைக் காட்சிகளில் யாரும் மெனக்கெடுகிறார்களா என்பது சந்தேகத்திற்குரியதே.

அமேரிக்காவில் முதல் வெஸ்டர்ன் திரைப்படம் வெளியாகி மூன்று தசாப்தங்கள் கடந்த நிலையில் உலக வெஸ்டர்ன் ரசிகர்களுக்கு ஃபோர்டின் இத்திரைப்படம் அருங்கொடை. Citizen Kane திரைப்படத்தை இயக்குவதற்கு பயிற்சியாக Stagecoach திரைப்படத்தினை 40 முறை பார்த்ததாக Orson Welles தெரிவிக்கிறார். Steven Speilberg, Akira Kurosowa, Martin Scorsese போன்ற உலகின் முக்கிய இயக்குநர்கள் அத்தனை பேரும் இந்தத் திரைப்படத்தின் பாதிப்பில் தொடர்ந்து இயங்கி வந்திருப்பதையும் தனித்தனியே தனக்கென பாதிப்புகளையும் ஏற்படுத்தி வந்திருப்பதையும் காணலாம். விதை ஃபோர்ட் இட்டது.

ஃபோர்டின் பிற்காலத் திரைப்படங்களான The Searchers (1956) / The Man Who Shot Liberty Valance (1962) ஆகிய திரைப்படங்களும் கூட Stagecoach-இன் குறிப்புகளுடனே  இருக்கின்றன. ரிங்கோ கதாபாத்திரத்தின் தன்மையின் உன்னதத்தினைத் தெரிவிப்பதன் மூலமே அப்போதே உருவாக்கப்பட்டிருந்த வெஸ்டர்ன் வகைமையின் தீய சக்திகளுள் ஒன்றான சிறைக் கைதியினை வைத்து நாயகனாக்குவதன் மூலம் நிறுவனத்திற்கெதிரான கேள்விகளைத் தொடங்கி வைத்திருக்கிறார். ரிங்கோ, தல்லாஸ் மற்றும் மருத்துவர் ஆகிய மூவரும் சமூகத்தினால் விலக்கப்பட்டிருப்பதனாலேயே வாழ்வின் மனித அன்பின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் ஆடையில் இருக்கும் அழுக்கு அகத்தில் இருப்பதில்லை.

பெண்மனி லூசிக்கு வெள்ளிக் கோப்பையில் நீர் தரும் பாதுகாவலர் தலாஸிற்கு தர மறுத்து தன் சட்டைக்குள் ஒளித்துக் கொள்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் சிரித்த வண்ணம் நீரைத் தரும் ரிங்கோ இன்னும் அழகாகத் தெரிகிறார். வெஸ்டர்ன் நாயகர்களில் முதன்மையான நடிகரான ஜான் வெயினுக்கு இது 80 ஆவது படம். ஆனாலும் இதில் தான் அவர் புகழ்பெற்ற நடிகராகத் தன் வெற்றியை அடைகிறார். ஃபோர்டிற்குமே 13 ஆண்டுகள் கழித்து வெளியான வெஸ்டர்ன் திரைப்படம் என்றளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.

காமெடியின் வழியே அரசியலையும் நெருக்கடிகளையும் பேசும் திறன் ஃபோர்டிடம் கெட்டி! ஒருவன் இறப்பதற்கு முன்னரே அந்தச் செய்தியை அச்சிட ஆணையிடும் செய்தித்தாள் ஆசிரியர், வில்லன் இறக்கப் போவதை அவனது சீட்டாட்டத்தின் வழியே (Dead man’s Hand) என்று குறிப்பிடும் வழிப்போக்கன், குதிரையோட்டியின் பயமும் மடமும் கலந்த சொற்டொடர்கள் எனச் சிரிக்க பல இடங்கள் உண்டு. வெறும் 96 நிமிடங்களிலா இத்தனை உணர்ச்சிகள், சாகசங்கள், நகைச்சுவை, அரசியல், சமூக விவரணைகள், அமேரிக்க உளவியல் எல்லாம் நடந்தேறின என்று மீள்சிந்தனை கொள்வது சற்றேனும் சந்தேகத்தை வரவழைக்கிறது.

My Darling Clementine (1946) : அமைதியான வெஸ்டர்ன்

வழக்கமாக ஜான் ஃபோர்ட் வன்மேற்கு கதைகளில் காட்சிப்படுத்தும் சாகசக் காட்சிகள் குறைவாகவும் ஒரு அமைதியான நிதானமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படம். அத்தகைய குறை வேகத்தைப் பயன்படுத்தி காதல், காதல் பற்றிய தயக்கம், மரணம் பற்றிய பயம், தவிப்பு என பல மெல்லிய உணர்வுகள் படம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. ஸ்டேஜ் கோச் திரைப்படத்தைப் போல கதாபாத்திரங்களின் விரிவை வகைமையின் குணநலன்களை முன்வைத்துப் பேசாமல், சம்பவங்களையும் அதனூடே விரியும் விவரணைகளையும் அடிப்படையாக வைத்துப் பேசுகிறது. படத்தில் க்ளமெண்டைன் வரும் காட்சிகள் வெகு சொற்பம், இருந்தாலும் தலைப்பைப் போலவே படம் காதலைத் தான் மையத்தில் வைத்துப் பேசுகிறது.

சாலையில் பயணிக்கும் ஒரு காதலிணையைக் கண்டதுமே கலாச்சார புலம்பல்களை முன்வைக்கும் இயல்பினரது மனநிலையில் இருப்பவர் எவருக்கும் ’என்ன இது ஆக்‌ஷனே இல்லை’ என்பது போன்ற கேள்விகள் எழுவது நிகழும். உடலம் மாற்றி மாற்றித் தழுவிக் கொள்ளும் மேகங்களைக் கூட ’பைத்தியக்கார மேகங்கள்’ என்று சொல்லிப் புன்னகைத்து விட்டு காதலின் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு படம் வெகுவான பரிசு.

என்னை மிகவும் கவர்ந்த காட்சி! வயாட் ஏர்ப் (ஹென்ரி ஃபாண்டா) முடி திருத்தும் கடையிலிருந்து வெளியேறுகையில் அவரை வாழ்த்தி அனுப்பிவிட்டு, பின் தொடர்ந்து வந்து அவரது பின்னங்கழுத்தில் சுகந்தம் தரும் வாசனை திரவியத்தைத் தெளித்து விட்டுச் செல்வார் முடி திருத்துபவர். புது மார்ஷலை நன்கு கவனிக்க வேண்டியது அவர் பணி அல்லவா? அக்காட்சிக்கு முன் வரை, தலைகீழாய் எதிலும் அழுக்குடனும் பிழைகளுடனும் காணப்பட்டு வந்த டூம்ஸ்டொன் எனும் அந்நகரம் திடீரென நம் கண்களுக்கும் மார்ஷலின் கண்களுக்கும் அழகியல் நிறைந்த ஊராகத் தெளிகிறது.

அப்போது தான் க்ளெமெண்டைன் வயாட்டை நடனமாட அழைப்பாள். பலரும் சிரிப்பார்கள். இனிமையான காற்றை, தான் ரசிப்பதாகவும், அந்த நகரத்து மலரின் மணம் தன்னை ஈர்ப்பதாகவும் க்ளெமெண்டைன் சொல்வாள். அதற்கு “அது என் மணம்” என்று சற்றே தாமதித்து “ பார்பர்” என்று வயாட் பதிலிறுப்பார். இப்படி வன்மங்களுக்கிடையேயான அழகியலின் கசிவை மலைமுகடுகளுக்கிடை ஊற்றென பார்வையாளர்களுடன் மறைமுகமாய் உரையாடும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன.

நோயால் சுய பச்சாதாபமும் தனிமையையும் உடைபோல் உடுத்திக் கொண்டு ஊருக்கு முன் கர்ஜித்து வாழ விரும்பும் மருத்துவர் ஹாலிடேவிற்கு இப்படியொரு ஒழுங்கற்ற நகரம் தேவைப்படுகிறது. தன் சகோதரனைக் கொன்ற தீயோரைத் தேடி அந்நகரை வந்தடையும் ஏர்ப் சகோதரர்களுக்கு அங்கு பணி கிட்டுகிறது. பழிவாங்கலுக்காக அவர்களுக்கு அந்நகரம் தேவைப்படுகிறது. அந்த நகரின் ஒழுங்கின்மைக்கு முன் பயணிகள் வண்டியில் வந்திறங்கும் க்ளமெண்டைன் ‘வனத்தின் நடுவே தேவதை’ போல நிற்கிறாள். (அப்படித்தான் ஸ்டேஜ் கோச் திரைப்படத்தில் ஒரு வரி வரும்) தேவதைகளும் அங்கீகரிக்கப்பட அப்படி ஒரு நகரம் தேவைப்படுகிறது.

அங்கிருந்து அவள் விழியசைவுகளும், அதரச் சுழிவுகளும், சாதாரண புன்னகைகளும் கூட நாயகர்களை உந்தித் தள்ளும் திறன் பெற்றிருக்கிறது. பனிமலர் பற்றிய எண்ணமே பனியின் இனிமையைத் தந்துவிடும் தானே. The Grapes of Wrath திரைப்படத்திற்குப் பிறகு இன்னும் இளமையாய்த் தோன்றும் ஹென்றி ஃபாண்டாவின் ஒற்றைச் சொல் பதில்களும், வளையாத கால்களுடன் க்ளமெண்டைனுடன் ஆடும் நடனங்களும் அழகானவை தான்.

கடவுள் இல்லாத நிலத்தில் சர்ச் கட்டியெழுப்ப முனைவதும், ரெளடிகளால் சுற்றி வளைக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் நாடக நடிகரை மீட்பதும், மெல்லிய காதல் நீளுருளை போத்தலுக்குள் முன்பின்னாய் ஓடித் தவிப்பதும் மெல்லிய இறகென நெஞ்சில் ஸ்பரிசித்துப் பார்க்கிறது. வானம் போலவே ஒரு பிரம்மாண்ட விரிவுடனும் ஒரு சிலந்தி வலையின் வஞ்சகத்துடனும்  இருக்கும் நிலத்தினைக் காதலின் கையடக்க சிந்தனையைக் கொண்டு தான் கடக்க முடியும்.

இதிலும் ஃபோர்டின் ஆதர்ஷமான நினைவுப் பள்ளத்தாக்கு வருகிறது. பேரழகியின் தோற்றமாய் எக்கோணத்திலும் எத்திசையிலும் அழகை மட்டுமே விழிகளுக்குப் படைக்கிறது. இதற்கு முன்வரை பீதியூட்டும் பின்னணியாய்த் திகழ்ந்து வந்த நினைவுப் பள்ளத்தாக்கு இத்திரைப்படத்தில் ஒரு அழகியல் சொத்தாக வளர்த்தெடுக்கப்படுகிறது. படம் நிகழும் இடமான டூம்ஸ்டோன் அரிசோனா மாகாணத்தில் வேறெங்கோ இருக்க நினைவுப் பள்ளத்தாக்கின் அருகேயே அந்த ஊரைக் கட்டமைத்து இருக்கும் ஃபோர்டிற்கு அப்பள்ளத்தாக்கே க்ளமெண்டைன் எனில் மிகையன்று.

The Searchers (1956) : முழுமையான வெஸ்டர்ன்

ஆஸ்கார் வென்ற How Green Was My Valley / The Quiet Man ஆகிய ஃபோர்டின் திரைப்படங்களை விட பல மடங்கு அருமையான தொழில்நுட்ப சாதனைகள் நிகழ்த்தப்பட்ட இப்படம் அகாடமியில் ஒரு பரிந்துரை கூட செய்யப்படவில்லை என்பது ஒன்றையும், மிகச்சிறந்த வெஸ்டர்ன்கள் என்ற அநேக பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இத்திரைப்படம் ஹாலிவுட் இயக்குநர்களிடம் இன்றும் ஒரு வழிபாட்டு ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது என்பது வேறொன்றையும் நமக்குத் தெரிவிக்கிறது.

ஜான் வெய்ன் கெளபாய் உடையில் வந்தபோதே வன்மேற்கின் கூறுகள் படத்தில் நிறைந்து விடுகிறது. இருப்பினும் இது தேடலைப் பற்றிய கதையாகவே இருக்கிறது. தன் சகோதரனையும் அவனது குடும்பத்தையும் சிதைத்து விட்டு பெண் குழந்தையைக் கடத்திச் சென்றுவிடும் செவ்விந்தியர்களின் இனக்குழுவைத் தேடிச் செல்லும் பயணத்தில் படிபடியாகக் கதையின் அடர்த்தி உயர்ந்து கொண்டே வருகிறது.

தேடிக் கண்டடைந்த முத்து தன் சொத்தாக எஞ்சவில்லை என்றதும் அவளைக் கொலை செய்யத் துணிவதும் மெல்ல அன்பினால் உருகும் மானுடனாகி அவளைக் காத்து வருவதும் நிகழ்கிறது. ஊதியணைக்கப்படும் ஹரிகேன் விளக்கு இருளை உயிர்ப்பித்துத் தன்னை நினைவில் தந்து செல்கிறது. அந்த ஒளியின் நினைவின் தொடர்ச்சியில் எத்தகைய வன்மனிதருக்கும் ஆத்ம சுரபி ஒன்று அன்பைக் கசியவிட்டு விடுகிறது. இடையே அமெரிக்க கலாச்சாரத்தின் அத்தனை பரிமாணங்களும் வந்து போய் விடுகின்றன.

Vera Miles-இன் கதாபாத்திரம் தவிப்புடனும் கோபத்துடனும் உணர்ச்சி விதும்பி நிற்பதாகவே இருக்கிறது. The Man Who Shot Liberty Valance-லும் அப்படியே இதன் தொடர்ச்சி போலத் தான் தெரிகிறார். அவர் தன் காதலன் மார்டினின் கடிதத்தை வாசிப்பதும், தன் திருமண நிகழ்வில் நிகழும் சண்டைக் காட்சியை ரசிப்பதும் மகிழ்வான தருணங்கள்.

படத்தின் மிகச் சிறப்பே முதல் சட்டகத்திலிருந்து புத்துணர்வுடன் மிளிரும் விரிநிலக் காட்சிகள் தான். Vista-vision வண்ணத்தில் காண்பிக்கப்படும் நினைவுப் பள்ளத்தாக்கு தன்னழகைத் தானே மிஞ்சும் வானம் போல இருக்கிறது.  இன்னும் பனி நிலம், நீர்நிலைகள், ஒளிசிந்தும் வெயில், குவிந்த பாலை என அத்தனை காட்சிகளும் அற்புதமான தொடக்கம். Orson Welles தனது Citizen Kane திரைப்படத்திற்காக 40 முறையேனும் Stagecoach திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார் என்ற செய்தியைப் போலவே Lawrence of Arabia திரைப்படத்திற்காக David Lean இத்திரைப்படத்தைப் பல முறைகள் பார்த்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது எண்பதாவது படத்திலும் கூட (Stagecoach இல்) ஜான் வெய்ன் ஃபோர்டிடம் கடுஞ்சொற்களால் திட்டு வாங்கியிருக்கிறார். பொதுவாகவே ஜான் ஃபோர்டு எல்லா நடிகர்களையும் மோசமாகத் திட்டுவதும், அவமானப்படுத்துவதும் உண்டு. சில சமயங்களில் கைகள் கூட நீளும். இந்தத் திரைப்படப் படப்பிடிப்புக்கு இடையே பாலைவனத் தேள் தீண்டிவிடுகிறது ஃபோர்டை. தயாரிப்பாளர் மிகுந்த மனக் கிலேசத்துடன் என்னாகுமோ ஏதாகுமோ என ஜான் வெய்னிடம் புலம்புகிறார். மருத்துவம் முடிந்த பிறகு ஃபோர்டைச் சந்தித்து வெளியே வந்த வெய்ன் தயாரிப்பாளரிடம் “வருந்தத் தேவையில்லை; ஃபோர்ட் நலம், அவரைக் கொட்டிய தேள் தான் இறந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார். மனதில் “இவர் சிந்தாத விஷமா, என்ன?” என்றிருப்பார்.

The Man who shot Liberty Valance (1962): நவீன சமூக வெஸ்டர்ன்

மேற்கைப் பற்றிய கதைகளைக் கேட்டு அங்கு வந்து சேரும் இளவயது சட்ட வல்லுனர் Ransom Staddord (James Stewart) துவக்கத்திலேயே லிபர்டி வேலன்ஸ் எனும் திருடர் தலைவனால் பலவந்தத்தால் தூக்கி எறியப்படுகிறார். அங்கேயே இந்தியாவிலிருந்து சென்று இரயிலில் அனுமதிக்கப்படாமல் வெளித்தள்ளப்பட்ட மோகன்தாஸ் நினைவில் எழுந்தார்.

அங்கிருந்து தினங்களைக் கடக்க கிடைத்த வேலையினைச் செய்கிறார். மெல்ல அவர் மீதான மரியாதை முதலில் பெண்களிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் வரும் கல்வி கற்கும் துணிவில் கிடைக்கிறது. வன்மேற்கு நிலத்தில் நிகழும் காட்டுமிராண்டித்தனங்களை எதிர்க்கத் திராணியில்லாவிடிலும் தான் நம்பும் சட்ட ரீதியான முன்னேற்றத்தை முன்வைத்துப் பேசிக் கொண்டே இருக்கிறார். மோகன்தாஸே தான் என முடிவில் நினைத்துக் கொண்டேன்.

தேவர் மகன் திரைப்படத்தில் காட்ஃபாதரின் சாயலிருப்பதைப் போலவே இந்தத் திரைப்படத்தின் மையக்கூறுகளும் இருந்தது வியப்பு. வன்முறையான மொழியிலே தான் அன்பைக் கூட பேசும் உலகில் கல்வியின் முக்கியத்தைப் பேசும், கைகளில் துப்பாக்கி வைத்திருக்காத முட்டாள் நாயகன், தூக்கம் வராத பொழுதுகளில் அருகிலிருப்பவனை வைத்துச் சுட்டு விளையாடும் நபர்கள் மத்தியில் அகிம்சையைப் பேசும் நாயகன் என சக்தி பெரிதும் தென்பட்டார். முதல் காட்சியில் ஊரில் நுழைந்து இறுதிக் காட்சியில் ரயிலில் விடைபெறுவது வரை ஒன்றாய் இருந்தது மகிழ்ச்சி. ஒருவேளை தேவர் மகன் இதன் நகலா என்ற கேள்வி வருமாயின், இல்லை அது தன்னளவில் வேறொரு உச்சத்தைத் தொட்ட திரைப்படம் என்ற பதில் சரியாக இருக்கும்.

ஜான் ஃபோர்டின் வழக்கமான பயணங்கள் அல்லது நீண்ட வெளிநிலக் காட்சிகள் எதுவுமில்லாத போதும் கதையின் முதிர்வும் குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் எவ்வித பிசிறுமின்றி அடைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களின் தேர்ச்சியுமே ஃபோர்டின் பாணியில் வந்திருக்கிறது. லிபர்டி வேலன்ஸை யார் சுட்டதென்ற திருப்பம் திரைப்படத்தை ரசிக்க வந்திருப்பவர்களுக்கான விளையாட்டு.

லிபர்டி வேலன்ஸை வன்முறையின் அறியாமையின் காட்டுமிராண்டித்தனத்தின் குறியீடாக முன்னிருத்தி அதை அறிவாலும் அன்பாலும் கல்வியாலும் உலகைக் காண்கிற ரான்சம் ஸ்டாட்டர்டால் சுட வைத்தது அதன் மறைபொருள். துப்பாக்கியால் அறியாமையைச் சுட முடியாதே. அவ்விதத்தில் Tom Doniphon (John Wayne), Ransom Staddord இருவருமே நாயகர்கள் தான்.

டாம் ரான்சமை அன்புடன் யாத்ரீகனே என்ற பதத்தில் அழைத்துக் கொண்டே இருப்பது தான் அம்மண்ணின் மைந்தன் என்பதைச் சொல்லவும் தன் காதலை தன்னுடன் இருத்திக் கொள்ளவும் தான். துப்பாக்கி வீரர்களை விடவும் புத்தகங்களை முன்வைப்பவர்களைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு தவிக்கும் காட்சி மேற்கின் மரபுக் குதிரைகளை இரும்புக் குதிரைகள் எனும் இரயில் வண்டிகள் வெல்லப் போகும் காலகட்டத்தினைச் சொல்லிச் சென்றன.

அன்றைய அமேரிக்க அரசியல் முன்னெடுப்புகளைப் பற்றிய விவாதங்கள் அனைத்தையும் இந்தக் கதையில் வைத்திருப்பது கவனிக்கும் விழிகளுக்கானது. பத்திரிக்கைச் சுதந்திரம், நகரமயமாதல், கல்வியின் துவக்கம், நகரக் குழுமங்கள் போன்ற நவீனமயமாதலின் பண்புகள் படமெங்கும் சுட்டப்படுகிறது.

”கதை உண்மையாகி விட்ட நிலையில் கதையினை அச்சிடு” என்பது எங்கள் பத்திரிக்கையின் கொள்கை என்று சொல்வதில் ஒரு நேர்மையும் மக்கள் நலனும் முன்னிற்கிறது. இந்த ஒற்றை வரியிலிருந்து முழுத் திரைக்கதையின் சாராம்சமும் விரிகிறது. அன்றைய ஊடகங்கள் கதைகளை உருவாக்கித் தந்ததற்கும் இன்றைய ஊடகங்கள் கதைகளைத் தவிடு பொடியாக்குவதிலேயே குறியாய் இருப்பதற்குமான வேறுபாடு உள்ளது.

The Searchers திரைப்படத்தில் இருப்பதைப் போல பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை அறவே தவிர்த்து நிதானமான நிலைத்த காமிராக்களைக் கொண்டு சட்டகங்களில் கதாபாத்திரங்களின் அசைவுகள் கதை கூறும் விந்தை நிகழ்ந்திருக்கிறது. வன்மேற்குக் கதைகளின் வேறொரு பரிணாமம்.

தொடர்ந்து கடுமையான பணிகள் மேற்கொண்டு 100 திரைப்படங்களுக்கும் மேலாக இயக்கி, பல செவ்வியல் திரைப்படங்களை உருவாக்கித் தந்து துவக்கத்திலேயே ஒரு வலுவான அடித்தளத்தை ஹாலிவுட்டிற்கு அமைத்துத் தந்தவர் ஜான் ஃபோர்ட்.

ஸ்பீல்பெர்க், ஸ்கார்சசி போன்றவர்கள் பொருளாதார ரீதியாக அமெரிக்க சினிமாவை உச்சத்திற்கு எடுத்துச் சென்றதற்கும், குரோசோவா முதல் கமல்ஹாசன் வரை உலகெங்கும் சினிமாவிற்கு பல ஆதார நோக்கங்களையும் வாய்ப்புகளையும் தந்ததற்குமான புரிதலைப் பெற இன்னும் தமிழ் சூழலில் ஜான் ஃபோர்டைப் பற்றிய கனவம் அதிகமெழ வேண்டும்.