கத்திக்காரன்

0 comment

ஒரு சனிக்கிழமை மாலை, விஜிக்குட்டியின் படுத்தல் தாளாமல் தான் தங்கராஜ் அந்த சர்க்கஸிற்கு சென்றான். பிக் ஆப்பிள் சர்க்கஸ் எனப் போட்டிருந்தார்கள். முந்தின நாளின் ஜேஸ்டன்வில் ஹெரால்டு பத்திரிகையில் பத்து சதம் தள்ளுபடி கூப்பன் ஒன்று கொடுத்திருந்தார்கள். விஜிக்குட்டிக்கு இன்னமும் நான்கு வயது முடியாததால் டிக்கெட் கிடையாது. வழக்கமாக, கோடை விடுமுறைக் காலத்தில் ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் ஏதாவது கார்னிவெல் போடுவார்கள். இந்த முறை இந்த சர்க்கஸ் போட்டிருந்தார்கள். சர்க்கஸ் கூடாரத்தின் முகப்பில் வெட்டிப்போட்ட தழைகளைத் துதிக்கையால் வளைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த யானையைப் பார்த்ததுமே விஜிக்குட்டிக்கு ஆனந்தம் ஆகிவிட்டது. மூக்கில் பெரிய பந்தை செருகிக் கொண்டு, அகலமாக வரைந்த உதடுகளும், வழுக்கைத் தலை விக்குமாக வந்த பஃபூன் ஒருவன் அவர்களை இருக்கையில் அமரச் செய்ய உதவி செய்தான். விஜிக்குட்டிக்கு ஒரே குஷி. தங்கராஜிற்கு சிறு வயதில், மதுரையில் தாத்தாவுடன் சர்க்கஸுக்கு போன நினைவு வந்தது. ‘நல்லா கைதட்டுய்யா. நல்லா தட்டு. இம்புட்டு ஆவலாதியும் இந்த கைதட்டுக்காகத் தானே செய்யறாய்ங்க. ஒரு நொடி தப்பினா மறு நொடி கிடையாதப்பு அவங்களுக்கு. நல்லா தட்டுய்யா’ என உணர்ச்சி வசப்பட்டு அவனுடைய தளிர்கைகளைப் பிடித்து தட்ட வைப்பார்.

இப்பொழுது தங்கராஜும் விஜிக்குட்டியும் போனது இரண்டாம் காட்சி என்பதால் முதலில் பார் விளையாட்டுகள் தான் தொடங்கின. அப்புறம் வலையெல்லாம் சுருட்டி வைத்ததும் மூன்று பஃபூன்கள் காரோட்டும் சிரிப்பு நிகழ்ச்சி. ஒரு கொக்கியை வாயால் கவ்விக் கொண்டு சுழன்று கொண்டே மேலெழும்பும் சாகசம், ஐந்து பெண்கள் படுத்துக் கொண்டு கால்களாலேயே பந்துகளை உதைத்து விளையாடும் சேர்ந்திசை விளையாட்டு, இரும்புக் கூண்டுக்குள்ளே இரண்டு பேர் எதிரெதிராக மோட்டார் சைக்கிள் விடுதல் என வரிசையாக அசத்தல் நிகழ்ச்சிகளாக வந்து கொண்டிருந்தன. தங்கராஜும் விஜிக்குட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு உற்சாகமாக கைதட்ட வைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் தான் அதிர வைக்கும் இசை பீடிகையோடு, கூடாரத்தின் மேலிருந்து கயிற்றைப் பிடித்தபடி அவன் இறங்கி வந்தான். வெற்றுடம்போடு, கீழே பளபளக்கும் ஜிகினா கால்சராயோடு, தோள்களுக்கு குறுக்கே அகலமான கருப்புப் பட்டிகளைக் கட்டிக்கொண்டு, பொன்னிற நீள்முடியோடு அரங்கின் நடு மையத்தில் வந்து நின்றான்.

உடலெங்கும் இறுக்கமான தசைக்கோளங்களும், செம்பொன் நிறமுமாக மினுமினுத்தபடி நின்றான். இரண்டு புறமும் இருந்த தோள்பட்டியில் வரிசையாக கத்திகள் செருகியிருந்தன. இந்தப்புறம் இரண்டு பஃபூன்கள் ஒரு பெரிய, வெண்ணிற வட்ட தட்டி போன்ற திகிரியை உருட்டிக் கொண்டு வந்தார்கள். அரங்கில் பாதி வரை வரும் போது தான் தங்கராஜ் கவனித்தான், அந்தத் திகிரியில் ஒரு பெண் பிணைக்கப்பட்டு இருந்தாள் என. அவனைப் போலவே, பார்வையாளர்களில் நிறைய பேர் அப்பொழுது தான் அவளைக் கவனித்தார்கள் என்பது அவர்களுடைய ஆச்சரியக் குரல் வழியே தங்கராஜுக்குக் புரிந்தது. அவளும் முழு வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். அரங்கத்தின் மையத்தில் கத்திக்காரன் நின்றிருக்க, அந்த வெண்ணிறத் திகிரியை அரங்கத்தின் வலது ஓரத்தில் இருந்த மேடையில் ஏற்றி நிற்க வைத்தார்கள். கத்திக்காரனிடம் இருந்து சுமார் எட்டடி நீளத் தொலைவில் அந்தத் தட்டியை நெட்டுக்காக நிறுத்தி விட்டு, பஃபூன்கள் அரங்கை விட்டு அகல, பின்னணி இசை நின்று, மெல்லிய பாடல் ஒன்று தொடங்கியது. கத்திக்காரன் கைகளை விரித்து ஆடத் தொடங்கினான்.

மெள்ள மெள்ள அந்த இசையில் வாத்தியங்கள் சேர கத்திக்காரனும் சுழன்று ஆட ஆரம்பித்தான். அதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திகிரியில் பிணைக்கப்பட்டது போலிருந்த அந்தப் பெண்ணும் இறங்கி நடனமாட ஆரம்பித்தாள். வட்ட தட்டியின் வெளிவட்டத்தில் இருந்த சிறிய பிடிகளில் இருந்த கைகளையும் கால்களையும் அவளாகவே எளிதில் விலக்கிக் கொண்டிருந்தாள். தங்கராஜுக்கு அப்பொழுதே அந்த நிகழ்ச்சியின் அழகியல் மீது பெரும் ஆர்வம் உண்டாக ஆரம்பித்துவிட்டது.

ஆடிக் கொண்டிருந்த பெண் அந்தத் திகிரியின் முன்னால் நின்று கைகளை விரித்து நிற்க, இசையின் நடுவே விஷ்க்கென ஒரு சத்தம். கத்திக்காரன் தோள்பட்டியிலிருந்து ஒரு கத்தியை உருவி, தட்டியின் மீது விட்டெறிந்து விட்டான். சரியாக அதன் பாதையிலிருந்து அவள் சற்றே நெகிழ, கத்தி தட்டியில் போய் பாய்ந்தது. அடுத்து அவன் வரிசையாக ஆறு கத்திகளை உருவி ஆடிக் கொண்டிருக்கும் அப்பெண்ணை நோக்கி எறிந்தான். அவள் மிக நேர்த்தியுடன், நடனமாடியபடி இருக்க, அந்தக் கத்திகள் எல்லாம் அவளை மிக மெலிதாக தவிர்த்தபடி அவள் பின்னாலிருந்த திகிரி மீது பாய்ந்தன.

அடுத்த சுற்றில் அவள் இப்பொழுது அந்த வெண்ணிற ஆடையை மெதுவாக பரப்பியபடி அந்த திகிரியில் சாய்ந்து திகிரியின் பிடிகளைப் பிணைத்துக் கொள்ள, திகிரி மெள்ள சுழல ஆரம்பித்தது. கத்திக்காரன், பார்வையாளர்களைப் பார்த்து முதுகை வளைத்து வணங்கி விட்டு, திகிரியை நோக்கி திரும்பி, சரக் சரக்கென அடுத்த ஆறு கத்திகளை வீசினான். இசை முடிந்தது. சக்கரமும் மெதுவாக சுழன்றுவிட்டு நின்றது. அந்தப் பெண் அப்படியே அதில் சாய்ந்திருக்க அவளுடைய வெண்ணிற அங்கியை திகரியுடன் சேர்த்து பிடித்தபடி ஆறு கத்திகளும் அந்தச் சக்கரத்தில் பதிந்திருக்கின்றன.

பார்வையாளர்களிடமிருந்து பெரும் ஆரவாரம் எழ தங்கராஜிற்கு மயிர்க்கூச்செரிந்தது. அந்த பிரமிப்பு குறைவதற்குள், கத்திக்காரன் முதுகுப்பக்கம் இருந்த பெரிய பட்டியிலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவினான். முதலில் எறிந்த சிறிய கத்திகளை விட இது இருபங்கு நீளமாக, ஒரு முழம் அளவிற்கு நீளமாக இருந்தது. என்ன செய்யப் போகிறான் என எல்லாரும் எண்ணி முடிப்பதற்குள், திகிரியில் பிணைக்கப்பட்ட ஆடையில் சிறைபிடிக்கப்பட்டு இருந்தவளின் முகத்தை நோக்கி அந்த பெருங்கத்தியை வீசிவிட்டான். தங்கராஜின் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டு மீண்டும் துடிக்கத் தொடங்க, அந்த இடைப்பட்ட நொடியின் பின்ன இடைவெளிக்குள் அப்பெண் தலையை இடதுபக்கமாக நகர்த்தி அண்ணாந்து பார்க்க, முழநீள கத்தி அவளது கழுத்துக்கருகே திகிரியில் பாய்ந்து நின்றது.

அந்த வெண்ணிற ஆடையை அப்படியே அந்தத் திகிரியிலேயே விட்டுவிட்டு, மின்னலென தன்னை விடுவித்துக் கொண்டு, பளபளக்கும் உள்ளாடைகளுடன் அவள் இறங்கிவர, மீண்டும் கோலாகல இசை தொடங்கியது. கத்திக்காரனும் அந்தப் பெண்ணும் அரங்கின் நடுவே வந்து கைக்கோர்த்தப்படி நின்றார்கள். அவர்களுக்கு இருபுறமும் வாணங்கள் கொளுத்தப்பட்டு பீறிட்டு எழ, இருவரும் குனிந்து பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, கைகோர்த்தபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.

அரங்கம் அதிர கைதட்டல் பறந்தது. விஜிக்குட்டியும் படபடவென தட்டினாள். தங்கராஜுக்கு மீண்டும் மயிர்க்கூச்செரிந்தது. அப்பொழுது அவன் பார்த்த நிகழ்ச்சியில் பிரும்மாண்டத்தை, அதன் தீவிர துல்லியத்தை, அதன் ஆழமான திகிலை, உயிரைத் துச்சமென மதித்து நிகழ்த்தப்படும் தன்மையை, அவன் அளவிற்கு அந்த அரங்கில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையென என அவன் உணர்ந்தான். ஏனென்றால், அதற்கு அப்புறம் வந்த யானை சைக்கிள் ஓட்டுவதை, ரிங்மாஸ்டர் சிங்கத்தின் வாயினுள் தலையை நுழைத்து விட்டு எடுக்கும் சாகசத்தை, அந்தரத்தில் தலைகீழாக நடந்த பெண்ணின் தீரத்தை எல்லாவற்றையுமே மக்கள் அதே கோலாகல விமரிசையோடு கைதட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கத்திக்காரனின் நிகழ்ச்சியில் இருந்த உயிரை உலுக்கும் சாகச திகிலுக்கு இவையெல்லாம் சமானமாகுமா என்ன!

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விஜிக்குட்டியை எதற்கோ சமாதானபடுத்தும் போது ‘சர்க்கஸ் பார்க்கப் போலாமா’ எனக் கேட்டான். அவளும் உற்சாகமாக தலையாட்ட, இரண்டு பேரும் மீண்டும் சர்க்கஸ் பார்க்கப் போனார்கள். அதற்கு மறுநாள், சந்திராவிற்கு வேலையில் இருந்து வர தாமதம் ஆகும் என்று சொல்ல, இவன் விஜிக்குட்டியைக் கூட்டிக் கொண்டு சர்க்கஸ் பார்க்கப் போய்விட்டான். அதே இரண்டாம் காட்சி. நான்காம் நாளும் இருப்புக் கொள்ளவில்லை. அவன் தனியே புறப்பட்டு சர்க்கஸுக்குப் போய்விட்டான். ஒவ்வொரு முறையும் அப்பெண் அந்த திகிரியின் முன்னால் மெல்லிய நடனமாடியபடி நிற்க, அந்தக் கத்திக்காரனின் கத்திகள் அவளைச் நூலிழையில் விலகியபடி திகிரியில் பாயும்போது தங்கராஜ் அந்தக் கணத்தின் துல்லியத்தை பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பான்.

செவ்வாய்க்கிழமை ஆட்டத்தின் போது, இறுதியில் அந்த முழ நீளக் கத்தி அப்பெண்ணின் கழுத்தருகே பாயும்போது அவளுடைய தலை முடிக்கற்றையில் ஒரு பகுதி சிக்கிக் கொண்டு விட்டது. திகிரியில் இருந்து இறங்கி வரும்போது அவள் அந்த முடிக்கற்றையை கையால் பிடித்து விலக்கிக் கொண்டு இறங்கி வந்தாள். அப்பொழுது தான் தங்கராஜ் ஒன்றைக் கவனித்தான். நிகழ்ச்சியின் முடிவில் வாணங்கள் சீற, பார்வையாளர்களின் கரகோஷத்திற்கு அவர்கள் ஜோடியாக பணியும்போது, அந்தப் பெண் கத்திக்காரனை திரும்பிப் பார்த்து தலையசைத்தாள் ஒருமுறை. அப்பொழுது அவளிடம் அப்படியொரு நெகிழ்ச்சி இருந்ததை தங்கராஜ் பார்த்தான். அந்தக் கடைசி கத்தி வீச்சு கிட்டத்தட்ட அவளுக்கொரு புனர்ஜென்மம், அதுவும் ஒவ்வொரு நாளும் அவள் இறப்பை எட்டிப் பார்த்துவிட்டு வருகிறாள் என எண்ணிக் கொண்டான்.

அன்று நள்ளிரவில், ஏதோ அரவத்தால் தூக்கம் கலைந்து எழுந்த சந்திரா, சமையலறையில் எட்டிப் பார்த்தபோது, அங்கே தங்கராஜ் காய் வெட்டும் கத்தியை கையில் வைத்துக் கொண்டு, சுவற்றில் மாட்டியிருந்த டார்ட் போர்டில் எறிய குறி பார்த்துக் கொண்டிருந்தான்.

‘என்ன இந்த அர்த்த ராத்திரி கூத்து’ என்று அவள் கேட்க, தங்கராஜ் அந்த சர்க்கஸ் சாகசத்தை விவரித்தான்.

‘நீ பாத்திருக்கனும் அதை. அவ தலை இப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கு. இவன் சரட்டுன்னு வீசறான்’ தங்கராஜ் கத்தியை டார்ட் போர்டை நோக்கி வீசினான். அது அங்கே சரியாக குத்தாமல் பட்டு கீழே விழுந்துவிட்டது.

‘இவன் கத்திய வீசினதும்.. நல்லா கவனி… இவன் வீசினதும், அதே செகண்ட்டு, அவ இப்படி தலைய ஒரு நிமித்து நிமித்திறா. சரக்னு அந்த தலை இருந்த இடத்துல கத்தி போய் சொருகுது. எப்படி தெரியுமா’.

சந்திராவிற்கு கொஞ்சம் திகிலாகக் கூட இருந்தது. இப்படி இவன் தொடர்ந்து நான்கு நாட்களாக சர்க்கஸ் பார்த்து பேயடித்ததுப் போல புலம்பிக் கொண்டிருக்கிறானே என.

‘ஆமாங்க. இந்த அமெரிக்கா காட் டேலன்ட் ஷோல கூட பாத்திருந்தேன். ஒருத்தன் அப்படியே கயித்து மேல் ஒத்தக்கால்ல நின்னுக்கிட்டு கத்தி வீச… ‘

தங்கராஜுக்கு கோபமே வந்துவிட்டது.

‘ஒங்க யாருக்கும் நான் சொல்றது புரியல. நானும் நீ சொல்ற ஷோவெல்லாம் பாத்திருக்கேன் சந்திரா. மத்ததுக்கும் இந்த ஷோக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. அது யாருக்கும் புரிய மாட்டேங்குது’ என்றான் சத்தமாக.

‘மத்தவங்க எதிரில் இருக்கிற ஆட்களை விட்டு விலகி விழனும்னு கத்தி வீசுவாங்க. இவன் அந்தப் பெண் இருக்கிற இடத்தை நோக்கி வீசறான். அதே நேரத்துல அவ அந்த இடத்தை விட்டு மாறிடறா. அதான் இங்க முக்கியமானது.’ என்றான்.

மறுநாளும் தங்கராஜ் தாமதமாக வீட்டிற்கு வந்தான். சந்திரா எதுவும் கேட்பதற்கு முன்னால் அவனே முந்திக் கொண்டு சொன்னான்.

‘இன்னிக்கு கொஞ்சம் ஸ்டேஜுக்கு பக்கத்தில இருந்து போன்ல வீடியோ எடுத்தேன். நீயே பாரு’ என அவளுக்கு போட்டுக் காட்டினான். அவள் பார்த்து முடித்ததுமே தங்கராஜுக்கு புரிந்து விட்டது, அவன் அடைந்த பிரமிப்பு அவளுக்கு இல்லை. அதுவும் அந்த ரிக்கார்டிங் அப்படியொன்றும் நன்றாகவும் இல்லை. இரண்டு மூன்று காமிராக்களைக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் அந்த கத்தி வீசுதலை ரிக்கார்ட் செய்து, ஸ்லோ மோஷனில் போட்டுக் காட்டினால் தான் இவர்களுக்கு எல்லாம் புரியும் என நினைத்துக் கொண்டான் தங்கராஜ்.

எட்டாம் நாளும் தொடர்ந்து சர்க்கஸ் பார்த்து விட்டு வந்ததும், ‘இன்னும் எவ்வளவு நாளுக்கு இந்த சர்க்கஸ் கூத்து’ என்று சலிப்புடன் கேட்டாள் சந்திரா. அவனுடைய சர்க்கஸ் பார்க்கும் தீவிரத்தில் அந்தச் சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து போகும் போது விஜிக்குட்டியைக் கூட அழைத்துச் செல்லவில்லை. தினம் சர்க்கஸ் பார்ப்பது மட்டுமல்லாது, அந்த கத்திவீசும் நிகழ்ச்சியில் இருந்த ஏதோ ஒன்று தங்கராஜ் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அந்த அலைக்கழிப்பு தான் அவனை விடாமல் அந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிக் கொண்டிருந்தது.

‘இந்த ஊர்ல பதினஞ்சு நாளைக்குத்தான போடுவாங்க’ என்று அவனும் அதே சலிப்புடன் சந்திராவிற்கு பதிலளித்தான். ஒன்பதாம் நாளாக, ஞாயிறு மாலையும் அவன் சர்க்கஸ் பார்க்க கிளம்ப, சந்திரா ‘நாங்களும் இன்னிக்கு வர்றோம்.’ என்றாள். ‘வர்றதப் பத்தி ஒண்ணுமில்ல. ஆனா உனக்கு நான் சொல்றது புரியாது’ என்றான் தங்கராஜ்.

இரண்டாம் வாரமே கூட்டம் கம்மியாகி சர்க்கஸ் டல்லடிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் ஜேஸ்டன்வில் மக்கள் கூட்டம் மொத்தமும் சர்க்கஸ் பார்த்து முடித்திருந்தது. முதலில் வந்த நிகழ்ச்சிகளில் அவன் ஆர்வம் காட்டாமல் தத்தளிப்புடன் அமர்ந்திருந்தான்.

ஆரவார இசையுடன் கத்திக்காரன் கூரைப்பகுதிலிருந்து கீழிறங்கி வர, தங்கராஜும் கூர்மையாகி விட்டான். சந்திராவை உசுப்பி ‘இப்பப் பாரு. முததடவ கத்திய எப்ப எடுக்கிறான், எப்ப வீசறான்னே தெரியாது. அவ்வளவு ஸ்மூத்தா செய்வான் பாரு’ என்றான். அவன் சொன்னது போலவே ‘விஷ்ஷ்க்’கென சத்தம் வந்ததும் தான் சந்திராவிற்கு அவன் கத்தியை வீசி விட்டான் என உணர முடிந்தது.

இறுதிப் பகுதியில் முழ நீளக் கத்தியை வீசும் போது, சந்திராவை தொட்டுக் காட்ட அவள் தோளைப் பற்றிய தங்கராஜ் அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டபடியே இருந்தான். அந்தப் பெண் திகிரியிலிருந்து இறங்கி வந்ததும் தான் கையை விட்டான். ‘பாத்தியா? நான் சொன்னேனே. அவள் செத்துப் பொழச்சு வந்திருக்காப் பாரு’ என்றான்.

தங்கராஜ் பலமுறை துல்லியமாக விவரித்திருந்ததாலோ என்னவோ சந்திராவிற்கு அந்த நிகழ்ச்சியை ஏற்கெனவே பாத்திருந்த உணர்வு தான் மேலோங்கியிருந்தது. பிரமிப்பாக இருந்தாலும் அப்படி நிறைய பார்த்தது போலத் தான் இருந்தது. இவன் புலம்புவது கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றியது. அவள் நினைத்தது புரிந்தது போல தங்கராஜ் அவள் கையை வெடுக்கென உதறிவிட்டு, ‘இன்னிக்கு அவங்களை நேர்ல பாத்து, கேட்டுடுவோம்’ என்றான்.

ஷோ முடிந்ததும் அரங்கின் பின்பகுதியை நோக்கி வேகமாகக் கிளம்பினான். மடியிலேயே தூங்கிவிட்டிருந்த விஜிக்குட்டியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு சந்திராவும் வேகமாக அவன் பின்னாலேயே போனாள்.

‘நல்லா கவனிச்சியா. எல்லாம் அந்த ம்யூசிக்கோட லயத்தில் இருக்கு. அந்தப் பொண்ணு கையை ஆட்டறது, காலை ஆட்டறது எல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் டெய்லி ஆடறா. அவ ஆட்டத்துக்கு சரியா ஒரு நொடி பிந்தினது போல அவன் கத்தியை வீசறான். பர்ஃபெக்ட் சிங்க். ஒரு செகண்ட் அவளும் பிந்திட்டா போச்சு, கத்தி அவ உடம்புல பாஞ்சிரும். அதும் அந்தக் கடைசி கத்தி வீச்சு இருக்கே. யம்ம்மாடி’ என தங்கராஜ் விளக்கிக் கொண்டே வந்தான்.

ரோஸ் நிறத்தில் ஃப்ரில் வைத்த முழுக்கை சட்டையும், முழு மேக்கப்புமாக இருந்த ரிங் மாஸ்டர், அவர்கள் குழந்தைக்கு யானையை காட்டத்தான் வருகிறார்கள் என அனுமானித்து ‘தேர், தேர்’ என முற்பகுதியைக் காட்டினான். அங்கே தான் யானை மீது குழந்தைகளை அமர்த்தி புகைப்படங்கள் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்கராஜ் தனக்கு கத்தி வித்தைக்கார ஜோடியைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அந்த ரிங் மாஸ்டருக்கு முதலில் புரியவில்லை. அவர்களை அளவெடுப்பது போல பார்த்துவிட்டு, கூடாரத்தின் பின்னால் இருந்த குடியிருப்பு ட்ரைலர்களுக்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல ட்ரைலர்களின் நடுவே, சிவப்பு வண்ண கோடுகள் போட்ட ஒரு ட்ரைலருக்கு வெளியே கூட்டமாக எல்லொரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரிங் மாஸ்டர் அவர்கள் அருகே போனதும் ஏதோவொரு மொழியில் சத்தமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

‘என்ன மொழிங்க பேசறாங்க’ என்றாள் சந்திரா. ‘ரோமானி டயலாக்ட் ஏதாவது இருக்கும். நாம ஜிப்ஸிம்போம்ல. இவங்களப் பாத்தா தென்னமெரிக்கா பக்கம் ஏதோ நாடோடி வகை பழங்குடியா இருப்பாங்க போல’ என்றான் தங்கராஜ்.

அங்கே வெட்டவெளியில் இருந்த சொற்ப விளக்கொளியில், அந்தப் பெண்ணை பார்த்த போது இன்னமும் சிறுவயதினளாகத் தெரிந்தாள். கத்திக்காரன் அந்தப்புறம் புல்வெளியில் இவர்களுக்கு வெற்று முதுகைக் காட்டிக் கொண்டு, கழட்டி வைத்திருந்த தோள்பட்டிகளை ஏதோ பழுது பார்த்துக் கொண்டிருந்தான்.

தங்கராஜ், அவர்களுடைய நிகழ்ச்சியைப் பற்றி பிரமிப்புடன் சிலாகித்து பாராட்ட, அந்தச் சிறுமிக்கு ஒரே மகிழ்ச்சி. மொழிச்சிக்கலால், அவன் பேசியது அவ்வளவாக புரியாவிட்டாலும், அது பாராட்டு என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. முன்பு சந்திராவிடம் அவன் விவரித்து சொன்னதையே அவர்களிடமும் அவன் திருப்பிச் சொன்னான். தங்கராஜ் சொன்ன அளவுக்கான நுணுக்கங்கள் எதுவும் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் நெகிழ்ச்சியோடு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னாள்.

‘என்றைக்காவது அவன் வீசும் கத்தி குறி விலகி உன் மீது பட்டிருக்கிறதா?’ என்று கேட்டான் தங்கராஜ்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் ரிங் மாஸ்டர் உரக்கச் சிரித்துவிட்டு, அவளுக்காக அதை விளக்கிச் சொன்னான். அவளும் சிரித்துவிட்டு என்னவோ வேகமாகச் சொன்னாள். மேலே கையைக் காட்டிவிட்டு கத்திக்காரனைத் திரும்பிப் பார்த்து இன்னமும் ஏதோ சொன்னாள்.

‘இந்தக் கத்தி வித்தை அவர்களுக்கு ஒரு வரம். கடவுள் கொடுத்தது என்கிறாள். இவனுக்கு அந்த வரம் அமைந்தது போல முழுமையாக எவருக்கும் அப்படி அமையாது. அப்படிப் பார்த்தால் இவனே அவர்களுக்கு ஒரு கடவுள் போலத்தானாம். இதுவரை அவன் குறி ஒரு மயிரிழைக் கூட பிழைத்ததில்லை. முன்பு இவளுடைய அக்கா தான் இந்த ஷோவில் இருந்தாள். இப்பொழுது அவளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதால் அவர்கள் ஊருக்குப் போய் விட்டாள். அவளுடைய இடத்திற்கு இந்தப் பெண் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இவ அக்கா குழந்தை பெத்து வந்ததும் இவ குழந்தை பெத்துக்க போய்விடுவாள்’ என்று தங்கராஜுக்கு புரியும்படி சொல்லிச் சிரித்தான் ரிங் மாஸ்டர். அந்தக் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தைக் கேட்டு அரைகுறையாக புரிந்து கொண்டவள் வெட்கப்பட்டு சிரித்தாள். ஷோ முடிவில் கத்திக்காரனை எப்படி நெகிழ்ச்சியுடன் திரும்பிப் பார்ப்பாளோ அதே போன்றொரு பார்வையுடன் இப்பொழுதும் கத்திக்காரனைத் திரும்பிப் பார்த்தாள்.

‘இரண்டே மாசத்தில இவ்ளோ ப்ராக்டிஸ் பண்ணிட்டாளா இவ’ என வியந்தாள் சந்திரா.

இப்படியொரு, சாகசக் கலை பூரணமாக பிழையின்றி கற்றுக்கொள்ள அவன் எந்த அளவு உழைத்திருக்க வேண்டும். உழைப்பு மட்டுமா? அந்த ரிங் மாஸ்டர் சொன்னது போல் இதொரு அபூர்வ வரமல்லவா என தங்கராஜ் எண்ணிக் கொண்டான். அப்படியொரு வரம் கிடைக்க என்னதான் விலை கொடுத்திருப்பானோ என்ற எண்ணமும் ஏற்படாமல் இல்லை. நினைவு வந்தவனாக, தனது பர்ஸிலிருந்து இரண்டு இருபது டாலர் நோட்டுக்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினான். அவள் கூச்சப்படாமல் அதை வாங்கிக்கொண்டு விட்டு, பக்கத்து புல்வெளியில் இருந்த கத்திக்காரனின் முதுகைத் தொட்டு உசுப்பினாள். அதுவரை அவர்கள் உரையாடலால் ஈர்க்கப்படாமல், தன்னுடைய வேலையை கவனித்துக் கொண்டிருந்தவன், அந்த தோள்பட்டிகளை கீழே போட்டுவிட்டு எழுந்து, கைகளை கட்டிக் கொண்டு இவர்களை நோக்கி பணிவோடு தலை வணங்கினான். அரங்கில் தூரத்தில் இருந்து பார்த்ததை விட அருகில் அவன் இன்னமும் பிரமாதமாக இருந்தான். தங்கராஜால் அவன் மீதிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அவன் மார்பில் கோர்த்து வைத்திருந்த கைகளைப் பார்த்தான். விரல்கள் ஒவ்வொன்றிலும் உலோக வளையங்கள் மாட்டி, நீளமாக, முடிவில் சற்றே கூம்பி, அழகியதொரு கத்தி போலவே இருந்தன. அமைப்பில் அவ்வளவு தூரம் பிரமாதமாக ஒத்திருந்தன. தங்கராஜிற்கு அந்த விரல்களைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

ஆனால், அந்த அமைப்பில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. நான்காவது விரலுக்கு அடுத்து கட்டை விரல் காணப்படவில்லை. மணிக்கட்டு எலும்போடு சீவப்பட்டு விட்டது போல மொண்ணையாக இருக்க அடுத்திருந்த ஆட்காட்டி விரல்தான் தெரிந்தது. தங்கராஜ் உற்று கவனிப்பதை உணர்ந்தோ என்னவோ, கத்திக்காரன் தன் கைகளை மார்பிலிருந்து பிரித்து பின்னால் கட்டிக் கொண்டான். ரிங் மாஸ்டர் இருவருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு நடக்க, தங்கராஜும், இப்பொழுது விழித்துக் கொண்டு சிணுங்கத் தொடங்கியிருந்த விஜிக்குட்டியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சந்திராவும் சர்க்கஸ் கூடாரத்தின் வாசலுக்கு திரும்பினார்கள்.

வெளியில் வரும்வரையில் தங்கராஜிற்கு தான் கண்ட காட்சியின் விசித்திரம் பூரணமாக உறைக்கவில்லை. மெள்ள மெள்ள அதன் தீவிரம் இறங்க அவனுக்குத் தலையெல்லாம் வேர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த எட்டு நாளும் அவன் பார்த்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் துண்டுகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் தோன்ற ஆரம்பித்தன. அப்படியொரு அற்புதமான, மகா துல்லியமான வித்தை சித்திப்பதற்கான விலையா இது என அவன் மனது கிடந்து அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. இதென்ன அபத்தம் எனத் தன்னையே சலித்துக் கொண்டான். அந்த அலுப்பினூடே அதுவரை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அலைக்கழிப்பு மெள்ள நழுவத் தொடங்கியிருந்தது.

முழுமையாக தூக்கத்திலிருந்து விடுபட்டுவிட்ட விஜிக்குட்டி, முன் கூடாரத்தில், ஆடி ஆடி நடந்து கொண்டிருந்த யானையைக் கண்களைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நாளைக்கும் சர்க்கஸ் வரலாம்ப்பா. பஃபூன் கூட கோட்டுப் போட்டுக்கிட்டு வர்ற மங்கிய இன்னிக்கு நான் பாக்கவேல்ல’ என்றாள் விஜிக்குட்டி.

‘ஆமா. இன்னும் ஒரு வாரத்துல அடுத்த ஊருக்கு போயிருவாங்க. அங்கயும் போய் சர்க்கஸ் பாருங்க அப்பாவும் பொண்ணும். கத்தி முனையில உயிரை வச்சு தொழில் செய்யறாங்க தான். அதுக்காக நாப்பது டாலரெல்லாமா கொடுப்பாங்க. உங்களுக்குன்னு ஒரு சர்க்கஸ் கிறுக்கு’ என அலுத்துக் கொண்டாள் சந்திரா. ஆனால் தங்கராஜ் அப்புறம் அந்த சர்க்கஸ் பார்க்கப் போகவில்லை.