உலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்

0 comment

என் பெயர் கதிர். என் தந்தையின் பெயர் அர்ஜூனன். அவர் ஒரு விவசாயக் கூலி. நான் திருக்கோயிலூர் விழுப்புரம் சாலையில் இருக்கும் வில்லிக்குப்பம் என்ற கிராமத்தின் காலனியைச் சேர்ந்தவன். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் திருவெண்ணெய்நல்லூர் கோவிலில் தான் கம்பன் வந்து பாடிச் சென்றதாகச் சொல்வார்கள். நான் எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு வரை பக்கத்து கிராமமான திருக்குறிச்சியில் படித்தேன். நான் என் வகுப்பின் முதல் மாணவனாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். எனக்கு திருக்கோயிலுரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் படிக்க இடம் கிடைத்தது. சென்னையில் கிறிஸ்டியன் கல்லூரியில் முதுகலை படித்தேன். அங்கேயே எம்.பில் படிக்க முடிந்தது. பின்னர் மத்திய பல்கலைக்கழகத்தில் உயர் ஆராய்ச்சியில் சேர்ந்தேன். நான் இயற்பியலுக்கும் மேற்குலகின் தத்துவத்திற்குமான உறவைப் புரிந்துகொள்ள மிகவும் பிரயாசைப்பட்டேன். அவை குறித்து பிற்காலத்தில் நிறைய எழுத வேண்டும் என்று கனவு கண்டேன்.

ஆங்கிலத்தில் சொல்லப்படும் Atom என்ற வார்த்தைக்கு இதற்கு மேல் பிரிக்க முடியாதது என்று பொருள். தமிழில் அணு என்கிறோம். அணு அளவு என்ற வார்த்தையை நாம் பிரயோகிக்கிறோம். இன்று நீண்ட தூரம் வந்து விட்டோம். அணுவைப் பிளந்து அணுசக்தி அணுகுண்டு எல்லாம் உருவாக்குகிறோம். இன்று அணுவில் இருக்கும் நுண்துகள்கள் குறித்து தான் உலகில் மிகப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் நிகழ்கின்றன. அதை அறிவதன் வழியாக பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். நியூட்ரினோவை புரிந்துகொள்ளவும் ஆராயவும் தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சூழலியாளர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெகார்தே, காண்ட் என்று துவங்கிய மேற்குலகின் தத்துவக் கேள்விகள் அதன் வழி உருவான பார்வைகள் நவீன இயற்பியலுக்கு வித்திட்டன. ஐன்ஸ்டீன் சாத்தியப்பட்டார். ஐன்ஸ்டீன் நியூட்டனின் காலத்தில் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அந்த அறிவுச்சூழலே அப்போது இல்லை. ஐன்ஸ்டீன் உருவாகி வர மேக்ஸ்வேல்லின் ஒளி பற்றிய கணிப்பு, நியூட்டனின் இயற்பியல் விதிகள், லொரன்சு, கலிலீயோ போன்றோரின் கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டன.

ஒரு பார்வை உருவாகி வர எத்தனை நூற்றாண்டுகள் ஆகிறது! ஒரு வேளை நமது சாதி பற்றிய பார்வைகள் மாறுவதற்கு கூட அத்தனை நூற்றாண்டுகள் ஆகக் கூடும். நான் நன்றாகப் படித்தேன். கால்பந்து விளையாடுவேன். பார்வேர்ட். எனக்குப் பள்ளியில் அமைந்த ஆசிரியர்கள் மீது எந்தப் புகாரும் இல்லை. ஆனால் ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் ஏன் நூலகங்கள் அமைக்கப்படுவதில்லை என்று தான் எனக்கு இன்றும் புரியவில்லை. நூலகத்திற்கு என்று ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரங்கள் ஏன் ஒதுக்கப்படுவதில்லை?

என் சிறுவயதில் அன்னைக்கும் தந்தைக்கும் அடிக்கடி மனக்கசப்பு முற்றி என் அன்னை அவளின் அன்னை வீட்டிக்குச் சென்று விடுவாள். என் அன்னை என் தந்தையை எந்தளவு நேசித்தார் என்று தெரியவில்லை. என் அன்னை என் தந்தையைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும் நான் கேள்விப்பட்டதுண்டு. என் அன்னையின் வீட்டில் எல்லோரும் இப்போது கிறிஸ்துவர்களாக மாறி விட்டார்கள். அவர்களுக்கு என் தந்தையைப் பிடிக்காது. என் அன்னை வீட்டார்கள் கிராமத்தில் இல்லை. விழுப்புரத்தில் இருக்கிறார்கள். கான்கீரிட் வீடு. மொசைக் தரை என்பதால் குண்டூசி விழுந்து விட்டால் எடுப்பது கடினமாக இருக்கும். என் அன்னையின் அன்னை எப்போதும் கையில் எதாவது ஒரு துணியை வைத்து தைத்துக் கொண்டே இருப்பார். விழும் ஊசியை சில முறை நான் எடுத்துத் தந்திருக்கிறேன். என் அன்னையின் அன்னை எங்களை அவர்களோடு விழுப்புரத்திலேயே இருந்துவிடச் சொல்லியிருக்கிறார். என் அன்னையின் மனம் கலிலீயோ தேவாலயத்தில் பார்த்து அதிசயத்த ஊசலி போல ஆடிக் கொண்டிருக்கும். இறுதியில் அவள் என் தந்தையைத் தேடி வந்து விடுவாள். இவர்களின் மனக்கசப்பு எனக்கு மனித உறவுகள் மீதே ஒர் அச்சத்தை அளித்தது. என் தந்தை குடிக்க மாட்டார். ஆனால், பீடி பிடிப்பார். என் அன்னை அவரை நேசித்தாள் என்றே இப்போது தோன்றுகிறது. ஆனால் அதை மீறிய ஏதோ ஒன்று அவளுக்குள் ஓர் ஊசலை உருவாக்கியது.

என் அன்னை அடிக்கடி அவளது அன்னை வீட்டிற்குச் சென்று விடுவதால் என் தந்தை சில காலம் என்னை அவரது தங்கை வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வரச் சொன்னார். இரண்டு வருடம் அப்படிச் சென்று வந்தேன். எனக்குள் இது சிறுவயதிலிருந்தே தனிமையை உருவாக்கி விட்டது. நான் என் அன்னையின் மடியில் படுத்து உறங்கியிருக்கிறேனா, அவள் என்னை எந்தளவு சீராட்டினாள், எடுத்துக் கொஞ்சியிருக்கிறாள், தெரியவில்லை. ஒரு முறை என்னைக் கால்பந்து அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று அழுதேன். மறுநாள் நான் அழுதது அருவெருப்பை உருவாக்கியதாக என் அன்னை சொன்னாள். கால்பந்து விளையாடினாலும் நண்பர்களுடன் பேசினாலும் நான் எப்போதும் தனி ஆள் தான். நாம் யார் மீதாவது அதீதப் பற்று வைத்து அவர்கள் நம்மைப் பிரிந்துவிட்டால் நாம் என்ன செய்வது? ஏன் மனிதர்கள் பிரிந்து விடுகிறார்கள்? ஏன் மனிதர்கள் மனிதர்களை உதாசீனம் செய்கிறார்கள்? மனிதர்களால் மனிதர்களை எந்தவித அகங்காரமும் இல்லாமல் நேசிக்க முடியாதோ? எனக்கு இதெல்லாம் உண்மையில் புரியவில்லை.

நான் ஒரு முறை இடைநிலைப் பள்ளியில் படித்த போது யாரோ ஒரு அரசியல் தலைவரைக் கைது செய்துவிட்டார்கள் என்று சொல்லி பேருந்துகளை நிறுத்தி விட்டார்கள். என் பள்ளியிலிருந்து என் கிராமத்துக்கு எட்டு கிலோ மீட்டர். என் கிராமத்திலிருந்து பத்தாவது படித்துக் கொண்டிருந்த ரகுராமன் என்னை அவனது சைக்களில் ஏற்றிக் கொண்டான். அன்று நல்ல காற்று வீசியது. சாலையின் இருபுறங்களிலும் புளியமரங்கள். சிறிது தூரம் சென்ற பின் நான் அயர்ந்து போய் அவன் முதுகில் சாய்ந்து தூங்கி விட்டேன். அவன் என்னை இறக்கி விடும் போது தான் வீட்டிற்குச் சென்றவுடன் குளிக்க வேண்டும் என்று சொன்னான். வகுப்பறையில் எஸ்.சி எஸ்.டி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சில முறை கணக்கு எடுப்பார்கள். சில முறை ஆசிரியர்கள் உங்களுக்கு இவ்வளவு மார்க் எடுத்தால் போதும் என்று நினைத்து படிக்காதீர்கள், நிறைய தெரிந்து கொள்ள படியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைத் தவிர்த்துப் பார்த்தால் பெரிதாக சாதியப் பாகுபாடு எனக்குத் தெரிந்து இல்லை. என் தந்தை அர்ஜூனன் வேலை செய்யும் கொல்லியில் நானும் சில முறை விடுமுறைகளில் அறுவடை செய்ய, நீர் பாய்ச்ச, காவல் காக்க என்று செல்வேன். அப்போது என் தந்தையை அவர்கள் பெயர் சொல்லி வாடா போடா என்று அழைப்பார்கள். சிறு வயதில் இருந்தே அப்படிப் பார்த்து பழகி இருந்ததால் எனக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் கல்லூரிக்குச் சென்ற பின் என் தந்தை அப்படி அழைக்கப்படுவதை அசெளகரியமாக உணர்ந்தேன். ஆனால் நான் எதுவும் கேட்டதில்லை. என் வயதேயான கொல்லிக் குத்தகைகாரனின் மகன் கூட அப்படித் தான் அழைப்பான். நான் அதன் பின் கொல்லிக்கு அதிகம் செல்வதில்லை.

எங்கள் ஊரில் எப்போதும் எல்லாத் தெருக்களும் மிக அழகாக, சுத்தமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். என் காலனிப் பகுதி எப்போதும் அழுக்காக இருக்கும். எங்கள் ஊரில் காலனிக்கும் ஊருக்கும் என்று இரண்டு தனித்தனி நீர்த்தொட்டிகள். ஊரில் ஒரு பெருமாள் கோயில் மற்றும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. எங்கள் பகுதியில் ஒரு மாரியம்மன் கோயிலும் பெந்தகோஸ்தே தேவலாயமும் இருக்கிறது. எங்கள் பகுதியை சேர்ந்த பத்து சதவிகித்தினருக்கும் அதிகமானோர் கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டார்கள். என் அன்னையும் கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டாள். என் தம்பியும் நானும் தந்தையும் மாறவில்லை. என் அன்னையும் சில முறை கொல்லி வேலைக்குச் செல்வாள். என் தந்தைக்குச் சரியாக எழுத படிக்கத் தெரியாது. என் அன்னை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தாள். அவளது பள்ளிச் சான்றிதழ்களை எங்கோ தொலைத்து விட்டாள். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அதற்கான ட்ரூ காப்பியை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காததால் அவள் மேற்கொண்டு படிக்கவில்லை. அவள் வைத்திருந்த விவிலயத்தை எடுத்து அடிக்கடி வாசிப்பேன். இப்போது நினைத்துப் பார்க்கும் போது இயேசு கிறிஸ்து தேவகுமாரன் என்பதை விட அவர் ஒரு புரட்சியாளர் என்று தான் தோன்றுகிறது. அவர், ‘நான் பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன்’ என்கிறார். தன் தந்தைக்கு மாமிக்குப் பாத்திரமானவன் தனக்குப் பாத்திரமானவன் இல்லை என்கிறார். தந்தையிலிருந்து மாமியிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்வதென்றால் மரபில் இருந்து பிரித்துக் கொள்வது தானே? அதுவரை சொல்லித் தரப்பட்டதை மீறுவது தானே? மரபில் இருந்து பிரிவோரே இயேசு கிறிஸ்துவின் பாத்திரமாக முடியும். ஆனால் இந்தியர்களுக்கு எப்போதும் மாறாத மரபு சாதிய மரபு.

நான் கல்லூரிக்குச் சென்ற பின்னர் எனக்கு ஊக்கத்தொகை கிடைத்தது. நான் நன்றாகக் கால்பந்து விளையாடியதால் என்னைக் கல்லூரி அணியில் சேர்த்துக் கொண்டனர். நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்ததால் முதல் வருடம் ஆங்கிலத்தில் படிக்கச் சற்று தடுமாறினேன். சின்னத் தடுமாற்றம் தான். பின்னர் எனக்குப் படிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை. முதுகலையில் குவாண்டம் மெக்கானிக்கஸை சிறப்புப் பாடமாக எடுத்தேன். எம்.பில்லும் அதிலேயே தான் செய்தேன். என்னைச் சார்ந்து என் வீட்டில் யாருமில்லை. எனக்கு வரும் ஊக்கத்தொகை என் செலவுக்குப் போதுமானதாக இருந்தது. கல்லூரி ஆண்டுக் கட்டணத்தைத் தந்தை செலுத்தி விடுவார். என் தம்பி இப்போது கணிதத்தில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மேற்கொண்டு படிக்கும் ஆர்வம் இல்லை. அவன் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இடைநிலைப் பள்ளி ஆசிரியராகி விடும் எண்ணத்தில் இருக்கிறான். நானும் அப்படியான எண்ணத்தோடே இருந்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். நான் உயர் ஆராய்ச்சியில் படிப்பதற்காகத் தமிழகத்தை விட்டு வெளியேறி இந்த மத்திய பல்கலைக்கழகத்திற்கு வந்தது என்னை மனரீதியில் வெகுவாக வலுவிழக்கச் செய்துவிட்டது.

நான் இந்த பல்கலைக்கழகத்தில் தான் முதல்முறையாக என்னை ஒரு புழுவாக உணர்ந்தேன். தமிழகத்தில் நான் படித்த போது கல்லூரிகளில் அரசியல் அணித் திரள்வு நிகழவில்லை. சாதி இந்திய ஒற்றுமை. ஆனால் தமிழகத்தில் நான் படித்த கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான அணித்திரள்வுகள் நான் இளங்கலை முதுகலை படிக்கும் போது இல்லை. சட்டக் கல்லூரிகளில் மட்டும் ஓரளவு இருந்தது. இப்போது அந்த நிலை சற்று மாறி வருகிறது என்று நினைக்கிறேன். இன்றும் சாதி அடிப்படையிலான குழுக்கள் உருவாகவில்லை என்றாலும் இன்று யார் என்ன சாதி என்ற புரிதலும் படிநிலையில் அந்தச் சாதி எந்த இடத்தில் இருக்கிறது என்ற அறிதலும் இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இருக்கிறது. தொண்ணூறுகளில் உருவான சாதிக் கட்சிகளுக்கும் இன்று தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகியிருக்கும் சாதி பிரக்ஞைக்கும் தொடர்பு உள்ளது.

சாதியக் கட்சிகளின் நோக்கம் என்ன? எண்கள். ஆதிகாலத்து மனிதன் தனக்குப் பத்து விரல்கள் இருந்ததால் பத்தைக் கொண்டு எண்ணினான். இன்றும் தசப்தங்கள் நமக்குக் கூட்டல் கழித்தலுக்கு ஏதுவாக இருக்கின்றன. ஆயிரத்து நூற்றிப் பத்து ரூபாயிலிருந்து பதினெட்டு சதவிகிதத்தைக் கணக்கிடுவதை விட பத்து சதவிகிதத்தைக் கணக்கிடுவது எளிதானதாக இருக்கிறது. இன்று புள்ளியியல் மிகவும் வளர்ந்து நிற்கும் துறை. ஜனநாயகத்தில் எண்கள் மிகவும் முக்கியமான சக்தியாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் சட்டமன்றத்தில் மட்டுமல்ல சமூகத்தில் கூட எண்கள் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்று வருகின்றன. எண்கள் சூழ் உலகு. இந்த எண்கள் அதிகம் இருந்தால் அதிகாரத்தை அடைய முடியும். அதிகாரத்தை அடைந்தால் எதையும் அடைய முடியும். சாதிய அணித்திரள்வு மத அடிப்படையிலான கூட்டத்தை விட இன அடிப்படையிலான கூட்டத்தை விட மேலும் வேர் கொண்டது. அத்தகைய சாதியக் கட்சியை உருவாக்குவது அதிகாரத்தை அடைவதற்கான நல்ல வழி. சாதிக் கட்சித் தலைவருக்கு தன் சாதியின் மீது அபிமானம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. அவர் தன் மகளை அல்லது மகனை வேற்று சாதி ஆணுக்கோ பெண்ணுக்கோ கட்டித் தரலாம். ஆனால் அவனது சாதிக்காரர்கள் சாதிக்குள் திருமணம் செய்து சாதியை வளர்க்க வேண்டும். சாதிய எண்களைக் கூட்ட வேண்டும். தமிழகத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட சாதியாக தன் சாதி இருக்க வேண்டும் என்று சாதித் தலைவர் ஆசைப்படுகிறார். அப்போது தான் அவர் அந்தச் சாதிக் கூட்டத்தின் தலைவராக அரசவையில் அமர்ந்து ஆட்சி செய்யலாம். இதனால் தான் சாதிய கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி சாதித் தலைவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். மற்றொரு பக்கம் வேறு எந்த வகையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் கூட்டத்தில் ஒருவனாக கரைந்து போக தன்னை அந்தச் சாதிக் கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இப்படியான ‘தெரியாதவர்கள்’ மதக் கட்சியிலும் போய் சேர்ந்து கொள்கிறார்கள். இனக்குழு அமைப்புகளில் உறுப்பினராகிறார்கள். பின்னர் கொடி தூக்குகிறார்கள். கோஷம் போடுகிறார்கள். கண்ணாடிகளை உடைக்கிறார்கள். சட்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். ஏதேனும் பதவியில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள். கல்லூரி துவங்குகிறார்கள். பட்டங்கள் வழங்குகிறார்கள். தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போல ஒரு வாழ்க்கை.

நான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது விவேகானந்தரின் புகைப்படம் ஒன்றை என் அறையில் மாட்டியிருந்தேன். நான் அதுவரை எந்தக் குழுவிலும் இருந்ததில்லை. மூன்று வருடத்தில் இந்த ஆராய்ச்சியை முடித்து திஸிஸை சமர்பித்து வெளியே சென்று நான் விரும்பியபடி இயற்பியலுக்கும் தத்துவத்திற்குமான உரையாடலைப் பற்றி எழுத வேண்டும். நல்ல பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர வேண்டும். நான் விரும்பும் பெண்ணுடன் உரையாடி காதலித்துத் திருமணம் செய்து வாழ வேண்டும். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. இனி நடக்க போவதுமில்லை. முதல் வருடம் முடிவடைவதற்குள் அம்பேத்கர் குழு ஒன்றில் இணைந்தேன். அப்போது விவேகானந்தர் எனக்கு முற்றிலும் தேவையற்றவராக மாறிவிட்டார். காந்தி புனே ஏர்வாடா சிறையில் வைத்து அம்பேத்கரை இரட்டை வாக்குரிமைக்கான கோரிக்கையைத் திரும்பப் பெறச் செய்தார். பின்னர் அதற்குப் பதிலாக தனித்தொகுதிகள் உருவாகின. இந்தப் பிரதிநித்துவம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது? கடந்த நூறு வருடங்களை எடுத்துக் கொண்டால் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மெல்ல மெல்ல அந்த மாற்றம் நிகழ்கிறது. ஜனநாயகத்தில் அப்படித்தான் நிகழ முடியும். மாவோ போல கலாச்சாரப் புரட்சியைக் கொண்டு வந்து ஏழு கோடி மக்களைக் கொல்வதற்குப் பதில் இது எத்தனையோ மேலானது. ஆனால் இன்று அதன் மறுபக்கமாக ஊர் – சேரி என்ற இறுக்கம் மேலும் வலுவடைகிறது. இதைத் தான் என்னால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. கல்வி சாதியை அழிக்கும் என்று தானே நமது தலைவர்கள் நினைத்தார்கள். ஏதோ ஒரு வகையில் படித்து அல்லது படிக்காது பெருநகரங்களில் அதிகாரம் நோக்கிச் செல்லும் கூட்டத்தினருக்கு சேவை செய்யும் மற்றொரு கூட்டத்தை உருவாக்க இந்த அமைப்பே ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொள்கிறது என்று தோன்றுகிறது. அந்தச் சேவை செய்யும் கூட்டத்தை உருவாக்கவே சாதி என்ற அமைப்பு தேவைப்படுகிறது. நீங்கள் பெருநகரத்துச் சேரிகளை பார்த்திருக்கக் கூடும்.பெருநகரங்களும் ஊர், சேரி என்று பிரிந்து தான் இருக்கின்றன.

காந்தி சாதிய பிரச்சனையைத் தனிமனிதப் பிரச்சனையாகப் பார்த்தார். அம்பேத்கர் அதை இந்து அமைப்பின் பிரச்சனையாகப் பார்த்தார். தனிமனிதனைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்வதன் வழி சாதியற்ற சமூக அமைப்பு உருவாகும் என்று காந்தி கனவு கண்டார். இந்து அமைப்புக்கு வெளியே பெளத்த மதமும் பெருநகர உருவாக்கமும் சாதியிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று அம்பேத்கர் கனவு கண்டார். இரு கனவுகளும் பொய்த்து விட்டன அல்லது அம்பேத்கரின் கனவுகளில் இன்னும் சில வாய்ப்புகள் தென்படலாம். நான் அப்படியான ஒரு அம்பேத்கர் குழுவில் இணைந்தேன். அங்கே இடதுசாரி குழுக்கள், மற்ற அம்பேத்கரிய குழுக்கள், வலதுசாரி குழுக்கள் எல்லாம் இருந்தன. இடதுசாரி குழுக்களிலும் அவர்களுக்குள் நிறைய வேற்றுமை இருந்தன. காந்திய அமைப்பு ஒன்று கூட இல்லை. இடதுசாரிகளுக்கு எங்களுடன் அன்பும் இல்லை பகையும் இல்லை. அம்பேத்கரிய குழுக்களில் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் இணைந்தே இருந்தோம். ஆனால் நான் ஏன் இந்த குழுவில் சேர வேண்டும்? நான் இங்கு படிக்க வந்தேன். எனக்கு ஏன் குழுவின் அடையாளங்கள்? நான் இந்த படிப்பை முடித்து வெளியே சென்று பெரு வாழ்வு வாழ வேண்டும். நான் ஏன் ஒரு எண்ணாக மாற வேண்டும்? ஏன் ஒரு அடையாளத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டும்? நான் ஏன் அரசியல்படுத்தப்பட வேண்டும்? நான் உண்மையில் என் படிப்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் நீங்கள் ஒரு குழுவாக மாறாவிட்டால் அங்கே இருப்பது கடினம். நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் அங்கே வந்து அமர்ந்து விட்டதாகவே எல்லோரும் கருதுகிறார்கள். அப்படி இல்லை என்று கத்திச்சொல்ல குழு தேவைப்படுகிறது. இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் எங்களுக்குப் பரிவாக பேசுவார்கள். எங்களைப் பார்த்து நாங்கள் பாவம் என்பார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் என் சட்டையைப் பிடித்து முகத்தில் காறி உமிழலாம் என்று தோன்றும். வலுதுசாரிகள் எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. பேராசிரியர்கள் எங்களுக்கு எதாவது புரியுமா என்று புருவம் தூக்கிப் பார்ப்பார்கள். என் கைடு என்னை எடுத்துக் கொண்டதற்கே நான் நன்றிக்குரியவனாக இருக்க வேண்டும் என்று கருதினார். நான் என் நன்றியை எப்படிக் காண்பிப்பது என்று புரியாமல் இருந்தேன். கூட்டங்களில் பேசினேன். எங்கள் குழுவின் கொள்கைகளைச் சொன்னேன். ஆனால் நான் உள்ளுக்குள் தினமும் தனித்துப் போய் கொண்டிருந்தேன். எனக்கு நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தினமும் தோன்றிக் கொண்டிருந்தது. பேசிக் கொண்டிருந்த பேராசிரியர்கள் கூட விலகிச் செல்ல ஆரம்பித்தனர். என் கைடு எனக்கு ஆராய்ச்சிக்கான தலைப்பைக் கொடுக்கவே ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். எங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு பன்றி மேய்ப்பாளனின் மகன் படித்தான். அவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் தமிழகத்தைச் சேர்ந்தவன் தான். கடலூர் மாவட்டம். விருத்தாச்சலம் தாலுக்கா. கம்மாபுரம் ஒன்றியம். நல்லூர் என்ற கிராமம். அதைப் பற்றிய செய்தியை நீங்கள் எந்தச் செய்தித்தாளிலாவது வாசித்திருக்கக் கூடும். பன்றி மேய்ப்பாளனின் மகன் உயர் ஆராய்ச்சி வரை எப்படி சென்றான் என்று வாய் விரித்திருக்கவும் கூடும். உங்களுக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றிக் கூட உங்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை. தற்கொலை கோழைகளின் செயல் என்று நீங்கள் சொல்லக் கூடும். சரிதான் விரியன் பாம்புக் குட்டிகளே.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக எங்கள் குழு கோஷம் எழுப்பியது. மரண தண்டனைக்கு எதிராக கோஷம் போட்டது முக்கியம் அல்ல. உண்மையில் எங்களுக்கு அதிகாரத்தின் எந்தத் தீர்ப்புக்கும் எதிராக எதையாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் கிட்டத்தட்ட நிஹிலிஸ்டுகள் ஆகிக் கொண்டிருந்தோம். எங்கள் நோக்கம் எதிர்ப்பது மட்டுமே என்றாகி விட்டது. ஆனால் இந்த எதிர்ப்பினால் நாங்கள் எதைக் கட்டி எழுப்ப போகிறோமோ தெரியவில்லை. நான் கோஷம் எழுப்பி கோஷம் எழுப்பி சோர்வடைந்திருந்தேன். என்னுடன் இருந்தவர்களும் சோர்ந்து போயிருந்தார்கள். அன்று நான் கோஷம் போட்டுக் கொண்டிருந்த போது நீண்டு வளர்ந்திருந்த அகோக் என்ற ஒருவன் வந்து என்னை கோஷம் எழுப்புவதை நிறுத்தச் சொல்லி அதட்டினான். நான் அவனை அடித்து விட்டேன். என் ஒட்டுமொத்த சோர்வையும் திரட்டி அவனை நான் குத்தினேன். சட்டையைக் கிழித்தேன். பின்னர் எங்கள் குழுவைக் கேலி செய்து அவன் பேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவுக்கு பேஸ்புக்கில் மற்றொரு பதிவாக மன்னிப்பு கேட்கச் சொன்னோம். அவன் மன்னிப்பு கேட்டான். அவனைக் கிளம்பச் சொன்னோம். அவன் முறைத்தான். நான் அவன் தலையில் தட்டி ஒரு வசவுச் சொல்லைச் சொல்லி, ‘போடா’ என்றேன். நான் மேலும் வெறுமைக்குள் சென்று சேர்ந்தேன். சுண்ணாம்பு போன்ற வெறுமை.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் எங்கள் மீது இரண்டு வலதுசாரி அமைப்புகள் துணை வேந்தரிடம் புகார் அளித்தன. எங்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கச் சொல்லி அழுத்தம் தந்தனர். கூட்டம் கூடிக் கத்தினர். அவருக்கு எங்கள் மீது கருணை இருந்தது. துணைவேந்தர் எங்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கவில்லை. மாறாக, அங்கே சில இடங்களில் மட்டுமே நாங்கள் உலவ முடியும் என்று கட்டளையிட்டார். அதாவது உலவுவதற்கான வெளி சுருக்கப்பட்டது. வகுப்புக்குச் செல்லலாம். நூலகத்திற்குச் செல்ல முடியும். ஹாஸ்டலை காலி செய்யச் சொல்லி விட்டார்கள். பிற இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மீறினால் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. ஊர் சேரியில் தான் எங்களுக்கு உலவுவதற்கான வெளி சுருக்கப்பட்டது. இங்கும் சுருக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நாங்கள் போராட்டம் நடத்தினோம். இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. எங்கள் மீதான தடையை விலக்கிக் கொள்வதற்கான எந்த சமிக்ஞையும் இல்லை. நான் இனி செய்ய ஒன்றுமில்லை. ஆராய்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. வகுப்புகளுக்குச் செல்வதில்லை. நான் எதற்காக இந்தப் பல்கலைகழகத்தில் சேர்ந்தேனோ அதிலிருந்து விலகி வெகு தொலைவு வந்துவிட்டேன். நான் இனி இந்த ஆராய்ச்சியை முடித்து சமர்ப்பித்துப் பட்டம் பெற எந்தச் சாத்தியமும் இல்லை.

என் பால்ய காலத்திலிருந்து எனக்குள் இருந்த தனிமை பேருருவம் கொண்டுள்ளது. நான் ஒரு போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. நான் ஆராய்ச்சி முடித்து பட்டம் பெற்று பணியில் சேர்ந்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ விரும்பினேன். என் தனிமை மேலும் என்னை இறுக்குகிறதே தவிர நான் கூட்டத்தில் அமைப்பில் முழ்க இயலாதவனாக இருக்கிறேன். என் கண் முன்னே என் காலம் கரைந்து விட்டது. இதோ எனக்கு இருபத்தியேழு வயதாகி விட்டது. என் கனவுகளை எட்டிப் பிடிக்கும் தொலைவில் கூட நான் இல்லை. மரியான் படத்தின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன என்ற பாடல் பக்கத்து அறையிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்குக் காதலி இல்லை. என் அறையிலிருந்த விவேகானந்தரின் புகைப்படம் எங்கே போனது என்றே தெரியவில்லை. வெறும் முப்பத்தொன்பது வயது வாழ்ந்த அவர் எத்தனை பெரிய ராமகிருஷ்ண மிஷனை உருவாக்கி விட்டு போய் விட்டார். அவர் அந்த மிஷன் ஒரு போதும் ஒரு மதமாக மாறிவிடக் கூடாது என்று விரும்பினார். அப்படியே நிகழ்ந்தது. அதன் வழி எத்தனை மாணவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். நேர்மறையாக எதையாவது செய்யும் போது அதில் நண்மையாக எதாவது நிகழத்தான் செய்கிறது.

சிசிபஸின் தொன்மத்தில் ஆல்பர் காம்யூ தற்கொலை தான் மிக முக்கியமான தத்துவப் பிரச்சனை என்று சொன்னார். உண்மை தான். அவமானம், பேரிழப்பு, மரணம் போன்ற கையறு நிலை ஆகிய சூழல்களில் தான் மனிதர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளத் தோன்றுகிறது. முனிஸிபாலிட்டி தண்ணீர் விடவில்லை என்று யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேனா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல முடியும். நான் அவமானப்படவில்லை. மாறாக நான் பெரிதாக எதையோ இழந்து விட்டதைப் போலவே உணர்கிறேன். காலத்தை நான் இழந்துவிட்டேன். இனி திரும்பப் பெற இயலாத காலம். என் வயிற்றில ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது. இனி அதை ஒன்றும் செய்ய இயலாது. நான் இந்த உலகில் எதையாவது பற்ற விரும்பினேன்.

முறையிட ஒரு கடவுள்
நம்ப ஒரு சித்தாந்தம்
உலவ ஒரு வெளி
வாழ ஒரு கனவு 
கதை கேட்க ஒரு செவி
அடையாளத்திற்கு ஒரு பணி
பற்றிக்கொள்ள ஒரு கரம்

 

நவீன மனிதன் முறையிட இருக்கும் ஒரே கடவுள் இயேசு கிறிஸ்துவாகவே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் முறையிட்டதில்லை. நுண்ணுணர்வு உள்ள ஒருவன் இங்கே ஒவ்வொரு அசைவிலும் சாதியைப் பார்க்க முடியும். நீங்கள் பெற்றிருக்கும் இந்த தோல் நிறம், அறிவு, சமூக அந்தஸ்து, பணம், செளகரியங்கள், பாலினம், சாதி, மதம், இனம், நாட்டுரிமை இவைகளுக்காக நீங்கள் போராடவில்லை. சரி. ஆனால், நீங்கள் அறிவுக்காகப் போராடியிருக்கலாம். ஆனால் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் பலவற்றை இலவசமாக பெற்றீர்கள். அறிவைப் பெறும் அறிவு இலவசமாக பெறப்பட்டது.  Apriori. ‘இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்’ என்கிறார் தேவகுமாரன். நீங்கள் இலவசமாக எதையும் கொடுக்க வேண்டாம். ஆனால், இவைகளை உங்கள் சொத்தாகக் கருதாதீர்கள். இந்தப் பூமிப்பந்து இத்தனை பெரிய பிரபஞ்ச வெளியில் ஒரு தூசு மட்டுமே. நமது இருப்பு மிக அற்பமானது. அற்பமான இந்த இருப்பை வைத்துக்கொண்டு தான் நாம் டினோசராக மாற முயல்கிறோம். நீங்கள் எவ்வளவு முயன்றாலும் நீங்கள் ஒரு நீர்க்குமிழி தான். இந்தப் பூமியே ஒரு நீர்க்குமிழி தான்.

என் கனவுகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. என் வெளி சுருக்கப்பட்டுள்ளது. எனக்கு அடையாளம் இல்லை. நான் கூட்டத்தில் ஒருவன் இல்லை. எனக்கு எந்த சித்தாந்தத்திலும் நம்பிக்கை இல்லை. அம்பேத்கர் பெளத்தம் நம்மை சாதியிலிருந்து விடுவிக்கும் என்று நம்பினார். நமது பக்கத்து தேசத்திலேயே பெளத்தப் பேரினவாதம் எப்படி அரை நூற்றாண்டுக்கு மேலாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டது என்பதை நாம் பார்த்தோம். ஈழத்தமிழன் தன் மகனுக்கு கெளதம், சித்தார்த்தன், நாகார்ஜூனன் போன்ற பெயர்களை வைக்க இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் தமிழன் வைக்க முடியும். அப்படியானால் இரு தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. மனிதர்கள் அடிப்படையில் பிறழ்வானர்கள் என்று நினைக்கிறேன். மிருகங்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் இயல்புடையது. மனிதர்களுக்கும் அந்த இயல்பு உள்ளது. இந்தப் பிறழ்வும் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் இயல்பும் இருக்கும் வரை எந்தச் சித்தாந்தமும் நம்மை மீட்கப் போவதில்லை. மனிதனுக்கு மீட்சி இல்லை.

நான் இயற்பியல் வழி இயற்கையை அறிய முயல்பவன். நான் காலம் முழுதும் வேண்டியது என் கதை கேட்க ஒரு செவியும் பற்றிக்கொள்ள ஒரு கரமும். ஏனோ அப்படி எதுவும் நிகழவே இல்லை. நான் மிகவும் தனித்து விடப்பட்டிருக்கிறேன். என் அன்னை தேவாலயத்தில் மண்டியிட்டு தேவகுமாரனை வணங்குகிறாள். என் தந்தை பீடி பிடித்துக் கொண்டிருக்கிறார். என் தம்பி தன் நண்பர்களுடன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். எனது நண்பர்கள் வெளியில் நாளைக்கான போராட்டத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் கடைசி கடிதம். இதோ நான் இந்த பிரபஞ்ச வெளியில் ஒரு தூசாக மாறிவிடப் போகிறேன். நான் ஒரு எண்ணாக ஓட்டாக மாறி விட்டேன். நான் அடையாள அணிச் சேர்க்கையில் சென்று சேர்ந்து விட்டேன். இந்தத் தற்கொலை ஒர் அறிவிப்பு. நான் இந்த வாழ்வை நான் விரும்பும் வகையில் வாழ விரும்பினேன். ஆனால் வாழ்க்கை என்னை வேறு வகையில் இழுத்துச் சென்று விட்டது. அதை நான் மறுக்கிறேன். அதுவே இந்தத் தற்கொலைக்கான காரணம். எப்போதும் தத்துவத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கேள்வியாக இருக்கின்றன. நியதி மற்றும் சுதந்திர இச்சை. எனது இந்தத் தற்கொலை முடிவு நியதியின் வழி நடக்கிறதா அல்லது அது என் சுதந்திர இச்சையின் விளைவா? நுண்துகள்கள் பற்றிய ஆராய்ச்சி ஏதேனும் ஒரு நாள் இதற்கான பதிலைச் சொல்லிவிடக் கூடும். அன்று எனது தற்கொலை அமைப்பால் நேர்ந்த ஒன்றா அல்லது என் தேர்வா என்று நாம் முடிவு எடுக்கலாம். இரண்டில் எது உண்மை என்றாலும் என் தற்கொலை ஒரு விளைவு மட்டுமே. காரணம் நான் இல்லை அல்லது நான் மட்டுமே இல்லை. இந்த மட்டுமே என்பதற்கு மட்டும் தான் நுண்துகளின் ஆராய்ச்சி பதில் சொல்லும். தேவலாயத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் என் அன்னைக்கு நான் இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அன்னையே, நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனித குமாரனுக்குத் தலை சாய்க்க இடமில்லை.

நன்றி,

கதிர்.