கவிதையும் தத்துவமும்

0 comment

கத்திரி முடிந்தும் காய்கதிர் சினம் தணிந்தபாடில்லை என்று நொந்து, இப்பொழுது தான் ஏதோ வெறித்த வான் அருள் கூர்ந்திருக்கிறது. எத்துணை வியர்ப்பு, வேட்கை, நோதல், நலிதல். எத்தனை உயிரின் ஏக்கம். அத்தனையும் காதில் விழுந்து தான் அகல்வான் கடுவெயில் ஆற்றிக் கொள்ளை அருள் மழை பெய்கிறதோ? ஆம் என்று எவரே கூறவல்லார்? இல்லை என்றும் கூற எவருக்குத் தான் மனம் வரும்?

எங்கும் மழை, மழை, மழை, வெள்ளக்காடு, நீரோடை. கதிரின் முகம் கண்டே பன்னாள் ஆகிறது. அப்படிப்பட்ட நிலையையும் அனுபவிக்கிறோம். வெயிலைக் காண மாட்டோமா என்று ஏங்குகிறோம். ஒருநாள் பெயலோய்ந்து புதுக்கதிர் வானெங்கும் இழை நெய்கிறது. ஆஹா! ஒளி வந்தது என்று வையம் மகிழ்கிறது. ஒளிக்கு ஏங்கிய உயிர்களின் ஏக்கம் தெரிந்து தான் உடுவிண் இளவல் உள்ளம் கனிந்து வந்தான் என்று யார் கூறுவார்? அவ்வாறு இல்லை என்று மறுத்துக் கூறத் தான் எவருக்கு மனம் வரும்?

இஃது இவ்வண்ணம் இருக்க, இந்த உயிர் என்பதே துயர் தானோ? அருள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு நிமித்தம் தானோ? மறைந்திருக்கும் அருள் இருக்கிறது என்று துப்பு சொல்லும் ஒரு உளவுத் தத்துவம் தானோ இந்த உயிர்? இதற்கெல்லாம் என்ன பொருள்? ஏன்? யாருக்குத் தெரியும்? நமக்குத் தெரிவதெல்லாம் வானுண்டு, அதன் கீழே உருள்கின்ற வையம் உண்டு என்பது மட்டும் தான்.

“வானின் மழை வீழும் – தரை
வாடும் பயிர் வாழும் 
வானின் மழை வாராவிடில் 
வாழும் பயிர் வாடும்.
 
வாடும் பயிர் வாழ்வும் – உயிர் 
வாழும் பயிர் தாழ்வும் 
தேடிப் பெயல் எனும் கொள்கை (அத்)
தேனார் மழைக்கில்லை.
 
எனினும் 
 
வானின்று அருள் பொழியும் – தரை 
வாடும் பயிர் வாழும்.
 
கதிரால் திசை ஒளிரும் – புவி 
கண்டே முகம் மலரும் 
கதிரே புவி காணாதெனில் 
கரையாது இருட்கரையே.
 
இருள் ஏகிட என்றோ – ஒளி 
இனிதாகிட என்றோ 
வருகின்றதோர் கொள்கை 
ஒளிவளரும் கதிர்க்கில்லை.
 
எனினும் 
 
கதிரால் திசை ஒளிரும் – புவி 
கண்டே முகம் மலரும்.
 
உயிர் என்பனும் துயரோ – அருள் 
உளதென்பதோர் உளவோ 
பெயு மாமழை வெயில் தாரகை 
பிறிதுள்ளவை எல்லாம் 
 
ஏனென்றதை யார் கண்டவர் 
ஏதே பொருள் தெரிவார் 
வானுண்டு அதன் கீழே உருள் 
வையம் எனல் அல்லால்.”
* (கவிதை — திருலோக சீதாராம், கந்தர்வ கானம், கலைஞன் பதிப்பகம்)

கவிதைக்கு ஆக மொத்தப் பொது ஒற்றை விளக்கம் என்று எதுவும் கிடையாது. பின் என்னவெனில், விளக்கம் என்பதற்கே இந்தக் கவிதையில் ஒரு திறவுகோல் தரப்பட்டிருக்கிறது. அதைக் கைப்பற்றினால் தான் பிறகு மனோதர்மத்தின்படி விளக்கம் காணலாம். அதாவது கவிதையின் மர்ம பிரதேசங்களுக்குள் நுழைய ஒரு சாவி.

இருக்கிறது என்பதன் விசித்திரமாய் விரிந்த உலகில், இருப்பதை உணர்கிறது என்று எங்கு தொடங்குகிறது? உயிரற்ற பகுதியிலா? அப்படி ஒரு பகுதி உண்டு என்று கொள்வோமாக. அல்லது உயிர் என்பது உண்மை என்று முகாந்தரமிட்டுத்தானே உள்ளதை உணர்கிறது என்பதுவாய் மலர்கிறது. ஒருவகையில் உயிரின் logbook தானே இருப்பதன் தகவல் பிரபஞ்சம் அனைத்தும்? உயிர் இருந்து உணர்தற்கு ஏற்று அனுகூலமாய் அமைந்திருக்கிறது இருப்பு என்பது தானே உண்மையின் அருள்.

‘இறைவனை உயிராய்க் கொண்ட தன்மையினாலே அனைத்துப் பொருட்களும் அருளின் வழீஇயதே’ என்பது தானே பிள்ளை உலகாரியனின் வாக்கு. அப்பொழுது எங்கும் யாண்டும் நின்று நிலவும் அருள் நினைவுக்கு வரும், போகும் என்பது உயிரின் மறதி என்னும் வசதியின் பாற்பட்டதேயன்றி அருளின் நிலைப்பாட்டிற்கு தொடர்புடையதன்றே!! தன் வசதிக்காக மறந்து தனை மறந்து, தன்னிலை மறந்து திரியும் உயிர் தன்னுணர்ந்து தவிக்கும் கணத்தில் புதிதாக அருள் முளைப்பது இல்லையே!

இருந்தாலும் முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் பேர்த்தும் அப்பெற்றிமையாய் பூரித்த அருள் முகம் காட்டுவதாய் உயிர் தன்னுடைய logbook-ல் பதிவு இட்ட இடுகைகள் தானே பல்லனுபவப் பெருக்கம்? இது மறந்து நினைத்த கணத்தை அது மறைந்து காட்டிய முகமாய்க் கணக்கில் கொண்டால் அது முற்றுண்மையா? கணக்கே அனுபவம் என்று கொண்ட பின்னர் ஈதொன்று மட்டும் வேற்றுண்மையாகி விடுமா? ஆயினும் உயிரின் துயர் என்றும், பரியும் அருள் என்றும் ஒரு விளையாட்டு நடந்துகொண்டு தானே இருக்கிறது?

எங்கும் பரவியிருக்கும் கதிரை எடுத்துக் காட்டுகிறது ஒரு சிறு துகள் என்கிறார் மாணிக்க வாசகர். நம்மை எக்காலும் சூழ்ந்திருக்கும் கதிரை நமது செல்பேசி தானே எடுத்துக் காட்டுகிறது. ஒருவரிடமிருந்து வரும் செய்தியை செல்பேசி காட்டுமென்றால் உண்மையிடமிருந்து எக்காலும் வந்தவண்ணம் இருக்கும் செய்தியை ஒவ்வொரு பொருளும் எடுத்துக் காட்டிய வண்ணமே இயன்று கொண்டிருக்கிறது என்பது தானே குகை மனிதனிலிருந்து கோள் மனிதன் என்ற நிலை வரை வந்து விட்ட ஓருயிரின் பயண ஏடு புகலும் சேதி.

ஆனால் என்றுமிருக்கும், இயலும் அருள் உயிரின் உணர்த்திக்கு உட்பட துயர் வாயில் என்பது ஒரு வினோத ஏற்பாடு. துயர் என்பதே நாம் நினைப்பது போல் இல்லை போலும்! அருளை மறந்த நிலையை சுகமென முயங்கிய உயிரின் விழிப்பு துயர் எனச் சார்பு அனுபவமாய் உணரப்படும் போலும்! ‘சுகம் உன்னை மறக்கச் செய்யும். துயரே தருக. அதுவே என்றும் உன்னை நினைக்கச் செய்யும்’ என்ற குந்தியின் வேண்டுதலில் நியாயம் இல்லாமலா இருக்கிறது? ‘சற்றேனும் உளவு புகலாய்’ என்கிறார் தாயுமானவர். அருளை எடுத்துக்காட்டும் உளவாய் என்றும் இலங்குகிறது உயிர் என்கிறார் நம் கவிஞர்.

உயிர் என்பனும் துயரோ – அருள் 
உளதென்பதோர் உளவோ
*

விசாரம் தான் மனிதன். நம்பிக்கை என்னும் போக்கு மனத்திற்கு ஏதோ தடவிவிடும் சுகம் அளிக்கலாமே ஒழிய உண்மையின்பால் நம்மை நகர்த்திச் செல்லும் வல்லமை விசாரம், அறிவுத்தேட்டம் என்பதற்கு உண்டு.

‘ஆன்மா மாறாதது என்றால் ஏன் உடலுக்கு மட்டும் இந்தப் பரிணாமம்?’ அடுத்து ‘மூளை என்ற நுண்ணிய கட்டமைப்பு கொண்ட இந்தத் திறனமைப்பு ஏன்?’ அடுத்து ‘மாறிவரும் இந்த வடிவ அமைப்புகள் முக்கியம் இல்லையென்றால் ஏன் நடக்கிறது?’, மேலும் ‘இந்த ஆன்மாவால் உடலுக்கு என்ன நன்மை? அல்லது இந்த உடலால் ஆன்மாவுக்கு என்ன நன்மை?’ கடவுளைப் பற்றிய விசாரம் என்பதே இந்த மாதிரியான நோண்டல்களில் தான் இருக்கிறது. God is the abstraction of abstractions. வேதாந்தமாகட்டும், அறிவியலாகட்டும், மனிதனின் விசாரம் எந்த நூலுக்குள்ளும் அடங்கி முடங்கி விடத் தேவையில்லை. மனிதனின் தேட்டம் என்பது அவனுடைய அறிவு, அனுபவம், உணர்ச்சி, கற்பனை, உள்ள நெகிழ்ச்சி, உய்த்துணர்தல் எல்லாம் கலந்து ஏகபோகியாய் எழுவது. எங்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்கிறோம் என்பது நமது சௌகரியமே அன்றி தேட்டத்திற்கான தேவை தீர்ந்துவிட்டது என்று பொருள் அன்று.

ஆத்மா, உடல் என்பதற்கு வருவோம். எதை ஆத்மா என்கிறோம்? எதை உடல் என்கிறோம்? இது இது என்று எது எல்லாவற்றையும் தனக்குப் புறத்ததாய் உணர்கிறதோ அதுவே ஆத்மா எனலாமா? அப்பொழுது அது தன்னைத் தானே குறித்து எப்படி உணரும்? இது என்று உணருமா? அது என்று உணருமா? உது என்று உணருமா? அன்றேல் உணர்ந்து கொண்டிருப்பதுவாய் நிற்குமா? அப்பொழுது அந்த ‘உணர்வின் நிகழ்’ உடல் என்பதற்கு முற்றிலும் அந்நியப்பட்டு, பொருள்தன்மையே அற்று, உரு, செயல் என்ற வகைப்பாட்டிற்கெல்லாம் தொடர்பற்று நிற்குமா? அப்படியென்றால் பொருள் என்பது வடிவு, பொதிவு, உருவு, எல்லை, செய்தி என்பனவற்றின் குனிப்பாய்த் தட்டுப்படும் இருப்பு எனலாமா? பொருள் இருப்பு என்றால் பொருட்களை உணரும் ஒன்று தானும் பொருளாய் இருக்க இயலாதே! எனவே உணர்வு என்பது பொருள்பற்று எதுவும் அற்ற இருப்பு நிலை எனலாமா? அல்லது பொருள் என்னும் இருப்பே அற்ற நிலை எனப்பகரலாமா? ஒருவேளை அதைத்தான் ழான் பால் ஸார்த்ரு கூறும்பொழுது Being and Nothingness என்று சொன்னாரோ? Nothingness என்பதை No Thingness என்று பிரித்துப் படிக்க வேண்டுமோ?

அந்த நுண்ணுணர்வு நிலை உடல், மூளை, மனம் என்பதற்கெல்லாம் எவ்விதத்திலும் தட்டாத நிலை என்று நாம் சொன்னாலும், அந்த அனுபவம் மூளையில், மனத்தில் நிகழ்ந்தது தானே? இல்லையென்றால் அவ்வாறு ஒரு நிலையில் நான் இருந்தேன், உணர்ந்தேன் என்ற அனுபவச் சொல் மட்டும் எப்படி பிறக்கும்? சரி அப்படியே நமக்காக ஓர் ஆத்மா உடல் எதுவும் இன்றி அந்தரத்தில் உணர்வாய்ப் புலப்படுகிறது என்று கற்பனை செய்வோம். முடியாது. இதிலும் பல ஓட்டைகள் விழும். எனினும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்பொழுது ஏதேனும் ஒரு விதத்தில் புலப்பட்டால் தான் அதன் இருப்பே நமக்குத் தெரியவரும். புலப்பட்டால் அதை நாம் காலதேச வர்த்தமானத்திடையே சூழ்வரம்பிடப்பட்டதாய்த் தான் உணர்வோம். அபொழுது பொருள்மய உலகிடையே ஒரு நுண்பொருள் என்ற அளவிற்குத் தான் அது நிற்கும். அப்பொழுது உடல் என்பது இல்லாமல் ஆத்மா இல்லையா என்று கேட்டு முடிக்குமுன்னரே, ஆத்மா என்று ஒன்று இல்லாமல் எப்படி உடல் என்பதை மட்டும் உணர வந்தோம் என்ற கேள்வியும் வால்பிடித்து வந்துவிடும்.

இன்னும் துல்லியமாக இந்த இரட்டைமுகக் கேள்வியைக் கையாள வேண்டுமென்றால், Can the Subjective be explained by mere the Objective alone? — அகம் என்பது வெறுமனே புறத்தின் நுண்மை தானோ? இதுவே வேறுவிதமாய்க் கேட்டால், புறம் என்பதே அகத்தின் அனுபவமாய்ப் பிறங்கியது தானோ? அகம் சாராத கேவல புறப்பொருள் தெரிதலும் எங்கும் சாத்தியமில்லையே! இதைத்தான் வேதாந்தம் அறிவோன், அறிபடுபொருள், அறிவு என்ற முப்புரியாக்கிக் (திரிபுடி) கூறுகிறது. (ஞாதா, ஞேயம், ஞானம்). இந்த மூன்றில் ஒன்றுண்டு மற்ற இரண்டு இல்லை என்று வகைதொகை செய்து பார்த்தால் கிட்டத்தட்ட பல தத்துவ மதக் கருத்தியல்களை வகைப்பாடு செய்துவிடுவோம்.

இப்பொழுது ஒரு கேள்வியை எடுப்போம். இந்த ஆன்மாவிற்கு உடல் எதற்காக? இதையே வேறுவிதமாய்க் கேளுங்கள். இந்த உடலுக்கு ஆத்மா எதற்காக? இல்லை. நமக்கு ஏன் இரண்டு கண்கள் என்பதற்கு இதுவும் ஒரு குறியீட்டு விளக்கம் போலும். இப்படியும் அப்படியுமாக இருபுறக் காட்சி கொள்ளாமல் நாம் நாமாக இருப்பதில்லை.

ஒன்றாகக் காண்பதே காட்சி என்று ஔவை கூறவந்த நிலை வேறு. அந்த நிலை புரியும்வரை ‘ஒருமித்துக் காண்பதே காட்சி’ என்று நடைமுறை சௌகரியத்திற்காக நாம் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆத்மா, உடல் இரண்டும் digital, discrete என்ற எண்ணத்தில் நாம் ஒன்றிற்கு ஒன்று தேவையா என்று எண்ணுகிறோம். ஆனால் ஏதோ ஒன்று இருவித முகமூடி கொண்டு நமக்கு முகம் காட்டிப் பழகுகின்றது. அந்த ஒன்று யாதென அறிந்தோமில்லை அல்லது என்றும் அறிந்தே இருக்கும் அந்த ஒன்றை இரட்டையில் இழக்கிறோம் என்றும் சொல்லலாமா? ஆனால் பிரபஞ்சத்தின் இந்த உளவைத் துப்புத் துலக்கும் இந்த நிலை வரை நாம் வந்ததே இந்த sophisticated body, sophisticated brain, manifested mind நுண்மையாகக் கட்டமைக்கப்பட்ட உடல், மூளை, சர்வதோமுகமான மனம், இவையில்லாமல் இயன்றிருக்குங்கொல்?

அப்பொழுது இந்த உயிர்ப்பொருள், உயிரல்பொருள், அறிவுப்பொருள், அறிவில் பொருள் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமை அறிவுப்பொருளாக இருக்குமா? அல்லது அறிவில் பொருளாக இருக்குமா? அறிவுப்பொருளாகத் தான் என்று சொல்ல நமக்குத் தோன்றும். ஒருகணம் யோசித்துப் பாருங்கள். அது அறிவுப்பொருளாகவும் எப்படி இருக்க முடியும்? ஏனென்றால் நாம் அறிவுப்பொருள் என்று எந்தமாதிரி பொருளை எதைக் கொண்டு வகைப்படுத்துகிறோமோ அந்த மாதிரிப் பொருளாக, அவ்வகையில் அந்த முழுமை இருந்தது என்றால் அது முழுமையாக இன்றி தன்னையும் உள்ளடக்கிய பெரும் முழுமைக்குள் ஓர் அங்கத்தினராக அன்றோ ஆகிவிடும். சரி அது அறிவில் பொருள் என்றும் எப்படி சொல்வது? அறிவில் பொருள் என்ற முழுமைக்குள் அறிவுப்பொருள் எப்படி அடங்கும்? எனவே தான் முழுமையைப் பேரறிவு, பரம சேதனன், பரம்பொருள் என்றெல்லாம் வேதாந்திகள் குறிக்கின்றனர். ‘பேரறிவு’ என்றால் அறிவு என்று வகைப்படுத்த முடியாது விஞ்சி நிற்பது. இந்த இடத்தில் இந்த முழுமையை ‘பெரும் ஆள்’ என்று கற்பனை செய்து பாருங்கள். உடனே அவர் எங்கோ இருக்கிறார்! எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர், அவருக்கு என்று ஒரு லோகம் இருக்கிறது என்ற பல எண்ணங்களும் உடனே முளைத்து விடும்.

அப்பொழுது பேரறிவு என்றால், நாம் கொஞ்சம் படித்திருக்கிறோம், அது நிறையப் படித்திருக்கிறது என்று பொருள் அன்று. உலகம், அதை அறியும் அறிவு அனைத்தும் தன்னுள் இயல, அறியும் அறிவும் அறிவதற்கேற்ற வகையில் இயன்ற முழுமையை, அறிவு என்று சொல்லி வகைப்படுத்த முடியாத இயலாமையை, மொழி ‘பேரறிவு’ என்று சொல்லி மழுப்புகிறது. அவ்வாறே ‘பரம்பொருள்’ என்பதற்கும் கொள்க. இங்கு பரம் பரம் என்றால் meta என்ற பொருளில் கொள்வது தெளிவைத் தரும்.

நாம் நம்மை எப்படி விவரித்துக் கொள்கிறோம் நமக்குள்ளேயே என்பது, உள்ளத்தில் ஆழ்ந்த நெடுங்காலமாக படிப்படியான ஐக்கியப் படுத்திக்கொள்ளல்களால் ஆன பரம்பரை, முன் முடிவை அடிப்படையாக்கிப் பின்முடிவு எழுந்த தொடர்ச்சி, அதைப் பொறுத்து இருக்கிறது. எனவே தான், இதுவே நான் இதுவே நான் என்று பல சமயம் நாம் கொள்ளும் ஐக்கியத்தின் முகவரி மாறிக் கொண்டே இருக்கிறது. இந்தத் தாற்காலிக முகவரிகளையெல்லாம் ‘இது நானன்று, இது நானன்று’ நேதி நேதி என்று கழித்துக் கட்டச் சொல்கிறது வேதாந்தம். இது எப்படியென்றால் ஒரு ப்ரொக்ராம் எழுதியவர் அந்த நீண்ட வால் போன்ற படிவழிகளில் எங்கு சிக்கல் என்று சூக்ஷ்ம சீப்பு கொண்டு அலகு அலகாகத் தேடுவது போன்றது. ஏனெனில் மனிதன் தன்னைப் பற்றியே பிரக்ஞை அடைவதும், தான் இவ்வாறு வந்து இவ்வண்ணம் நிற்பதாகத் தன்னுணர்த்தி பெறுவதும், இந்த ஐக்கியப் பன்மைகளின் அடிப்படையில் எழுந்த பல்கிய சுய விவரிப்புகள், புற விவரிப்புகள் இவற்றின் மத்தியில் தான். இந்தப் பெரும் களரியில் முதலில் உள்ளே போயிருப்பதே தான் என்னும் உணர்வு தான். ஆனால் அதைத் தான் மனிதன் கட்டக்கடைசியில் வந்து உணர்கிறான். ஒருவேளை இந்தத் தான் என்பதை உணர இவ்வளவு தகவல், விவரிப்புப் பெருக்கம் தேவைப்படுகிறது போலும். அதாவது அசித் சித்திற்குக் கண்ணாடி காட்ட. அதாவது பிரதிபலிக்க. அதாவது வெளியில் வரும் உணர்வை மடக்கி உள்ளே திருப்பி அனுப்ப, பிரவிருத்தி நிவிருத்தி ஆக. அதாவது நான்தான் இது என்று உடலைச் சொன்ன ஆத்மா, என்னுடையது இது என்று சொல்ல ஆரம்பித்து, இது வேறு தான் வேறு என்று உணரத் தொடங்கிப் பின்னர் தான் யார் என்று உட்குவிந்து, தான் எப்பொழுதுமே பொருள்வகையற்ற உணர்வுமயமான ஒன்றாகத் தானாகத் தான் இருக்கிறோம் பின் ஏன் இந்த விளையாட்டு என்று ஒரு பெரும் சிரிப்பு சிரித்து ஆட்டத்திலிருந்து அவுட்டாகி விடத்தான். எனவே தான் வேதாந்தம் இதை, படைப்பையே, ஆத்மாவும் உடலும் பிணைந்த சேராச் சேர்த்தியை, கூடாக் கூட்டை, அத்வைதம் சொல்லும் சித்+ஜடக் கிரந்தியை, லீலை என்கிறது. லீலை என்றால் எந்த நோக்கமும் கிடையாது. கண்டுபிடித்து விட்டால் ஆட்டம் க்ளோஸ். பார்வையாளர் வரிசையில் அமர்ந்து சாட்சிபூதம் தான்.

இந்த வாழ்க்கையின் குறிக்கோள், உடல் எடுத்த பயன் ஆத்ம ஞானம் அடைவதே என்ற பழைய கட்டளை என்றும் புது மெருக்கு கலையாத புத்தம் புதுக் கட்டளையாகவே இருந்து கொண்டிருக்கிறது. பக்தி உணர்வு உள்நுழைந்து அதையே பல உருவக மொழியில் பேச வைக்கிறது. ‘வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை’ என்று சொல்லும் போதும் சரி, ‘அசித்தோடு ஒரு வேறுபாடுமின்றி கிடந்த இந்த ஆத்மாக்களின் தசையைக் கண்டு பெருங்கருணை கொண்டு, இவை போகமும், மோக்ஷமும் அறிந்து, நல்லதும் தீயதும் விவேகிக்கைக்காக, கரண களேபரங்களைக் கொடுத்து, சாஸ்த்ர பிரதானம் பண்ணியருளினான்’ என்று கூறும் போதும் சரி, ‘தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே’ என்றாலும் சரி எல்லாம் கூறவருவதும், டெல்பி அருள்வாக்கு மொழிந்ததும் யவனப் பிராந்தியத்தில் இதையேதான் ‘உன்னையே நீ அறிவாய்’

ஏன் இவ்வளவு நுண்ணிய கட்டமைப்பு? சிறு உயிர்களின் உடல்களில் துவங்கி படிப்படியாக இவ்வளவு உடல் வரிசை ஏன்? மூளை இத்துணை complicated design கொண்டு இருக்கக் காரணம் என்ன? ‘இந்த ஆத்மாவே உண்மையாகப் பார்க்கப்பட வேண்டியவன், கேட்கப்பட வேண்டியவன், நினைக்கப்பட வேண்டியவன், தியானிக்கப்பட வேண்டியவன்’ என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த ஆத்மாவையே பார்க்கலாம், கேட்கலாம், நினைக்கலாம் என்று போனால் உபநிஷதம் என்ன சொல்கிறது, ‘எதனால் கண் பார்ப்பதாக ஆகிறதோ, எதனைக் கண் பார்க்காதோ அதனையே பிரம்மம் என்று அறி, எதனால் காது கேட்பதாக ஆகிறதோ, எதனைக் காது கேட்காதோ அதனையே பிரம்மம் என்று அறி, எதனால் மனம் நினைப்பதாக ஆகிறதோ, எதனை மனம் நினைக்கவொண்ணாதோ அதனையே பிரம்மம் என்று அறி, இவர்கள் கருதும் இது அன்று’. மற்றோரிடத்தில் உபநிஷதம் எந்த உடல் வேண்டும் என்று ஆத்மாவிற்கு ஒரு அணிவரிசையே நடத்திக் காட்டுகிறது. மிருகம், பறவை, நீர்வாழ்வன என்று வரிசையாகக் காட்டிவந்து மனித உடல் வந்ததும் இதுதான் பொருத்தமானது என்று முக்கிய பிராணன் தேர்ந்தெடுத்ததாகப் பேசுகிறது.

அதாவது கவிதை என்பதும், தத்துவம் ஏன்பதும் ஒரே விஷயத்தைப் பேசும் இருவேறு விதமான மொழிகள் என்பதை நாம் உணரும் காலமும் வரவேண்டும். அதாவது கவிதை உளவுபுகலும் அதே உண்மையின் உள்ளபடி வரைவைத் தந்துவிடவே தத்துவம் முயலும். தத்துவத்திற்குச் சிக்காத சேய்மையாய்ப் பயிலும் ஒன்று கவிதையின் எழிலில் சிக்கிக் கொள்ளும் சாகசமும் சாத்தியம் ஆம்.