பொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்

0 comment

‘த்ரில்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மருத்துவத் துறையில் ஓர் அர்த்தமுண்டு. மாரில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்தால் கேட்கும் இருதயத்தின் வித்தியாசமான அதிர்வை அது குறிக்கும். இலக்கியத்திலும் கிட்டத்தட்ட அதை ஒட்டிய பொருள் தான். நன்றாக வனையப்பட்ட‌ த்ரில்லரொன்றை வாசிக்கையில் இதயம் தடதடக்கத்தான் செய்யும்!

முத்தமும் த்ரில் தான், யுத்தமும் த்ரில் தான். இரண்டிலும் ஆர்வமும் பதற்றமும் தொற்றிக் கொள்ளும். கவனித்தால் இரண்டிலுமே ஆதார போதை “அடுத்து என்ன நடக்குமோ?” என்ற நிச்சயமின்மை. அந்தப் புகைமூட்டம் வாசகனுள் கிளர்த்தும் ஊகங்கள் படைப்பாளியின் முடிச்சவிழ்ப்புக்களுடன் மோதும் சுவாரஸ்யம். அது புத்திக்கான சவால் என்ற விளையாட்டாகிறது. அதனால் வாசகன் உற்சாகமாகப் பங்கேற்கிறான். இந்த உளவியலால் தான் வேறெந்த வகைமையை விடவும் த்ரில்லர் எனப்படும் மர்மப் புனைவுகள் உலகம் முழுவதும் பரவலாக வாசிக்கப்படுகின்றன.

த்ரில்லர்கள் எழுத்தில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் கோலோச்சுகின்றன. ‘Edge of the seat’ என்பார்கள். அப்படி இருக்கை நுனியிலமர்ந்து, நகங்கடித்தபடி, உள்ளங்கை சில்லிட்டு நாம் ரசிக்கும் த்ரில்லர் படங்கள் உண்டு. வேறெந்த வகைமைக்காவது நம் ஐம்புலன்களும் இப்படி ஒருங்கிணையுமா? (பாலியல் படங்கள் விதிவிலக்கு. அது இயற்கையின் நியதி.) நம் உடற்பாகங்கள் கூட‌ அப்படிக் கதைக்கேற்ப இயல்பாவதன் பொருள் நாம் அதனுடன் எத்தனை ஒன்றிப் போகிறோம் என்பதற்கான‌ உதாரணம்.

பால்யத்தில் காமிக்ஸையும், பதின்மத்தில் மில்ஸ் அண்ட் பூனையையும் கடந்த பின் இளமையில் நுழையும் ஒரு வாசகனை த்ரில்லர் கதைகளே வரவேற்கும். அதற்கு அவன் கை நீட்டினால் அப்புறம் நெடுங்காலத்துக்கு அதுவே அவனை விடாமல் அணைத்துக் கொள்ளும். அந்த‌க் காலகட்டத்தில் அறிமுகமாகும் எழுத்தாளர்களே அவன் வாழ்நாள் முழுமைக்கும் ஆதர்சப் படைப்பாளிகளாக ஆகும் வாய்ப்பதிகம். அதனால் தான் அகதா க்றிஸ்டியும், சிட்னி ஷெல்டனும், ஜெர்ஃப்ரி ஆர்ச்சரும், டான் ப்ரௌனும், இயான் ஃப்ளெமிங்கும் பல கோடி நபர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

மர்மப் புனைவுகளுக்கு எல்லைக்கோடு ஏதும் கிடையாது. த்ரில்லர் என்றதும் குற்றப் புலனாய்வுக் கதைகள் தாம் பிரதானமாய் நம் நினைவுக்கு வரும் என்றாலும் பேய்க் கதை, விஞ்ஞானக் கதை, உளவாளிக் கதை எனப் பலவும் குறுக்குவெட்டாய் இந்த வகைமையைத் தொட்டுச் செல்லும். சொல்லப் போனால் காதல் கதைகளில் கூட த்ரில்லர் சுவையை நுழைக்க முடியும். ‘96’ திரைப்படத்தின் இரண்டாம் பாதி ஒரு சிறந்த த்ரில்லர் அனுபவத்தைத் தந்தது தானே! ராமும் ஜானுவும் புணர்வார்களா என்ற கேள்வி பார்வையாளர் ஒவ்வொருவருக்குள்ளும் பதற்றத்தை ஏற்படுத்தியது தானே! ஆக, எந்தக் கதையில் எல்லாம் அடுத்து என்ன ஆகும் என்கிற பதற்றம் எழுப்பப்படுகிறதோ அவற்றுக்கு எல்லாம் மர்மக் கதையின் சாயலேறி விடுகிறது.

தமிழில் மர்மக் கதைகள் ஏராளம் எழுதப்பட்டு விட்டன. பெரும்பாலும் பல்ப் ஃபிக்ஷன் எனப்படும் மேலோட்டமான‌ மாத நாவல் வகை எழுத்துகள் தான் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் தரமான த்ரில்லர்களும் இங்கு எழுதப்பட்டிருக்கின்றன. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி தொடங்கி இன்று அம்பை, அபிலாஷ் வரை தமிழ் மர்மக் கதைகளுக்கு ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு. சுஜாதாவை அதன் பிதாமகன் எனலாம். நவீன இலக்கியம் எழுதுபவர்கள் த்ரில்லர் வகைமையை ஒரு தீட்டுப் பொருள் போல் தள்ளி வைத்தாலும் ஜெயமோகன் உள்ளிட்ட பேரிலக்கிய ஆளுமைகளும் த்ரில்லர் வகையை அவ்வப்போது முயலவே செய்திருக்கிறார்கள்.

இன்று நல்ல மர்மக் கதைகள் அதிகம் எழுதப்படுவதில்லை. சொல்லப் போனால் இன்றைய பத்திரிக்கைகள் மர்மப் புனைவுகளை ஆதரிப்பது போலவே தெரியவில்லை. வெகுஜன எழுத்துக்கும், நவீன இலக்கியத்துக்கும் இடைப்பட்ட ஒருவித இடைநிலை எழுத்துகளுக்கு மட்டுமே இடமளிக்கின்றன. அதிகபட்சம் தினத்தந்தி குடும்ப மலரில் (அதுவுமே தனி இதழ் கிடையாது; நாளிதழின் மற்றுமொரு பக்கமாகச் சுருங்கி விட்டது.) பட்டுக்கோட்டை பிரபாகர் தொடர்கதை வருகிறது. அதனால் த்ரில்லர் கதைகள் மாத நாவல்களோடு தேங்கி விட்டன. சமகாலத்தில் வெகுஜன எழுத்தின் தேவை குறித்து சில‌ விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் சுவாரஸ்யமானதும், தரமானதுமான த்ரில்லர்கள் எழுதப்படுவதும் வாசகர்களால் கொண்டாடப்படுவதும் வெகுஜன எழுத்தின் தரப்பு வாதத்தை வலுவாக்க உதவும்.

ஷான் கருப்பசாமியின் ‘பொன்னி’ அப்படியான ஒரு நல்ல த்ரில்லர் நாவல்.

இரண்டாம் படைப்பு என்பது ஒவ்வொரு கலைஞனுக்குமே சற்று தடுமாற்றமானது தான். அது எழுத்தோ, திரைப்படமோ, இசையோ. அதுவும் முதல் படைப்பு நல்ல ரசிக‌ வரவேற்பைப் பெற்றதெனில் இரண்டாவதில் குழப்பம் வந்துவிடும். முதற்காரணம், நெடுநாளைய தன் உழைப்பையும் சிந்தையையும் முதல் படைப்புக்குப் போட்டு இழைத்திருப்பார்கள். அதன் பெருவெற்றி காரணமாய் இரண்டாவதை உடனடியாய் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். முதலாவதன் பிரபல்யத்தை அல்லது வணிகத்தைத் தக்க வைக்கும் எத்தனம் படைப்பில் சமரசத்தைப் புகுத்தியிருக்கும்.

‘பொன்னி’ நாவலுக்கு அப்படி ஏதும் நிகழவில்லை. ஷான் கருப்பசாமியின் இரண்டாம் நாவல். அவரது முதல் நாவலான ‘வெட்டாட்டம்’ போலவே இதுவும் ஒரு பரபரப்பான வெகுஜன த்ரில்லர் தான். கேஜிஎஃப் பகுதியில் நிகழும் பொன் வேட்டை தான் கரு.

இரண்டாம் நூற்றாண்டு, 1940கள், தற்காலம் என மூன்று காலகட்டத்தில் கதை நகர்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா எனப் பல நாடுகளில் நடக்கும் கதை.

ஹாரி பாட்டர் தொடர் நாவல்கள் போல் ‘பொன்னி’ சீரிஸ் எழுதும் திட்டமிருப்பது தெரிகிறது. இப்போது வெளியாகி இருப்பது முதல் பாகமான ‘இரணிய சேனை’.

முன்னதைப் போலவே இந்நாவலும் சுவாரஸ்யமாகவே போகிறது. திரைமொழியில் கதை சொல்வது ஷான் திட்டமிட்டுச் செய்யாமல் இயல்பாகவே நேர்வது என்பது புரிகிறது. அவரது தனித்துவம் அது தான். வெகுஜன எழுத்துக்கு அது பெரும்பலம்.

நாவலில் வரும் மூன்று காலகட்டங்களிலும் அழகானதும், செறிவாக எழுதப்பட்டதும் 1940களில் கேஜிஎஃப்புக்கு தங்கத்தாது கண்டறிய வரும் ஜேம்ஸ் என்ற ப்ரிட்டிஷ் இளைஞனுக்கும், உள்ளூர்ப் பெண்ணான செல்லம்மாவுக்குமான காதலை ஒட்டிய பகுதிகள் தாம். நாவலை வெகுஜன எழுத்து என்பதிலிருந்து நகர்த்தி உயர்த்துவதும் அதுவே. அவ்விடங்களில் கொஞ்சம் ‘லிங்கா’ பட ராஜா லிங்கேஸ்வரன் பகுதியின் சாயலும், லேசாய் ‘வெள்ளை யானை’ நாவலின் சாயையும் ஒட்டிக் கொண்டிருகிறது. மையச்சரடும் சில இடங்களும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை நினைவூட்டுகின்றன.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை உலகெங்கும் 88,000 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு தோராயக் கணக்கீடு. அதில் 8,000 டன் தங்கம் கேஜிஎஃப்பிலிருந்து எடுக்கப்பட்டது என பொன்னி நாவல் சொல்கிறது. தங்கத்திற்காக அதை எடுக்கும் போதோ, அபகரிக்கும் முனைப்பிலோ எத்தனையோ உயிர்கள் போயிருக்கின்றன. எல்லாவற்றையும் செரித்து மின்னலாய்ச் சிரிக்கிறது மஞ்சள் உலோகம். துளி குருதியில் எழுதப்படும் சாகசம் எத்தனை ரம்மியமானது!

தங்கச் சுரங்கங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள், அதனுள்ளே அவர்கள் படும் துயர் எல்லாம் சில அத்தியாயங்களில் நன்றாகத் தீட்டப்பட்டிருக்கிறது. நாவலையே கேஜிஎஃப்பில் உயிர் நீத்த தொழிலாளிகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

தங்க வேட்டை தொடர்பான‌ சொல் ‘எல்டொராடோ’. அந்தத் தலைப்பில் தங்கமே இல்லாமல் உருவகமாகப் பயன்படுத்தி ஒரு சிறுகதை எழுதியிருப்பார் சுஜாதா. ‘பொன்னி’ நாவல் நேரடியாய்த் தங்க வேட்டையை, தங்க வேட்கையைப் பேசுகிறது.

பெண்கள் அல்லது காதல் தொடர்பானவற்றை ரசிக்கும்படி எழுத‌ ஷானுக்கு நன்கு கைவருகிறது என்பது வெட்டாட்டம் நாவலிலேயே புலப்பட்டது. இந்நாவல் அதை மேலும் சில உதாரணங்களுடன் உறுதி செய்கிறது. பொன்னியின் சினேகிதியாக வரும் எலீனா பற்றி வரும் குறிப்பு ஒருசோறு பதம்: “அவள் சொடக்குப் போட்டால் ஆண்கள் அவளிடம் வந்து விழுந்து கொண்டிருந்தார்கள். அவளும் அவ்வப்போது சொடக்கு போட்டபடியே தான் இருந்தாள். சொடக்குகளே அவளுக்குப் போதுமானதாக இருந்தன. நீண்ட உறவுகளில் சிக்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை.” அத்தியாய ஆரம்பங்களில் தமிழ் ப்ராமி எழுத்துகளில் வாக்கியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. யாராவது படித்து விளக்கவுரை எழுதினால் என்னவெனத் தெரிந்து கொள்ளலாம்.

நாவலின் சில உறுத்தல்களையும் சொல்லி விடலாம். நாவலின் நாயகி பொன்னி. ஆனால் ஏனோ அந்தப் பாத்திரம் நம் மனதில் ஏறவில்லை. அசுரத்தனமாய் பைக் ஓட்டுவதாலும், எல்லாத் திட்டமும் அவளுடையதே என்று சொல்வதாலும் மட்டும் அவளது ஆளுமையின் பிரம்மாண்டத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ‘வெட்டாட்டம்’ வருண் தந்த பாதிப்பை பொன்னி ஏற்படுத்தவில்லை. அந்த‌ப் பாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாய்ச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

என் வரையில் செல்லம்மா தான் நாவலின் நாயகி. ‘பாகுபலி’ பட அனுஷ்கா போல்!

எண்பதாண்டுகளுக்குப் பின் மீண்டு வரும் பழனி பாத்திரமும் அதற்குறிய வலுவுடன் சித்தரிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. சக்தி பாத்திரம் கூட சற்று சவசவவெனத் தான் இருக்கிறது. பொன்னி மீது அவனுக்குக் காதல் வர முகாந்திரம் இருக்கிறது. பேரழகி, பணக்காரி, திறமைசாலி என. ஆனால் பொன்னிக்கு அவன் மீது பிரியம் வர என்ன தர்க்கம் இருக்கிறது? ஒருவேளை இரண்டாம் பாகத்தில் பதில் கிடைக்கலாம்.

பொன்னி பேசும் கம்யூனிசம் பற்றிச் சில குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணமாய், கேஜிஎஃப்பிலிருந்து வெளியே போன தங்கம் பல நாடுகளாலும் நேர்மையாகக் காசு கொடுத்து வாங்கப்பட்டது; கொள்ளையடிக்கப்பட்டது எனச் சொல்ல முடியாது. அதை விற்ற சுரங்கக் குத்தகைதாரர்கள் அதற்குரிய பணத்தை ஏற்கனவே பெற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்கள் கேஜிஎஃப்பில் தொழிலாளர்களை நடத்திய விதத்தில் அவர்கள் தான் சுரண்டல்காரர்கள். இந்நிலையில் அவர்களை விடுத்து வாங்கியவர்களிடமிருந்து தங்கத்தைத் திருடி மீட்டு வருவது என்பது விஷயத்தில் தொடர்பற்ற‌ அவர்களின் வயிற்றில் அடிப்பது தான் அல்லவா! திருட்டு நகை அது திருடியதென்றே தெரியாமல் நியாய விலை கொடுத்து வாங்கியவனிடமிருந்து நகையைப் பறிப்பது நியாயமில்லை!

ஆனால் அதெல்லாம் விடுத்து செல்லம்மா ஜேம்ஸிடம் அறிமுகமாவதே ஆப்பிள் மரம் பற்றிய கம்யூனிசப் பேச்சில் தான் என்பது சுவாரஸ்யம். இப்படிச் சில‌ பாத்திர வார்ப்புகள் நன்றாக இருக்கின்றன. சிறுபாத்திரமான சிஐஏ டிரேசியின் டயட் கோக் வரை அது நீள்கிறது. கண்ணகி சுனையின் தேன்கூடு, ஆதி என்ற குதிரை எனப் பல சுவாரஸ்யங்கள். புற ஊதாக்கதிர், மோர்ஸ் கோட் சங்கதி போன்றவற்றில் ஏற்கனவே கேட்ட வாடை. போலவே நாடகக் காதல் நிஜமாவது என்பது ‘புதிய பறவை’ அளவு பழைய சரக்கு!

அடுத்தது சிலப்பதிகாரக் கண்ணகி இரணியர்களுக்குக் குலதெய்வம் ஆனது பற்றிச் சொல்லப்படும் தங்கத்தை முன்வைத்த காரணம் சுவாரஸ்யமாக, புத்திசாலித்தனமாக இருந்தாலும் அத்தனை திருப்திகரமாக இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாய் புதிய இடத்தில் தங்க நக்கெட் எப்படிக் கிடைத்தது என்பதற்குச் சொல்லப்படும் விளக்கம் இன்றைய சுரங்கப் பொறியியலின்படி சாத்தியமானதா எனத் தெரியவில்லை. தவிர, அனுபவம் மிக்க ஒரு தங்க வேட்டைக்காரனுக்கு அது பற்றிய‌ வித்தியாசம் கூடத் தெரியாமல் போகுமா என்றும் புரியவில்லை. இப்படிச் சில தர்க்கக் குழப்பங்கள்.

ஆனால் இவை சிறுபிசிறுகள் தாம். நாவல் தரும் ஒட்டுமொத்த வாசிப்ப‌னுபவத்தைப் பாதிப்பதில்லை. வாசிக்க‌ எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு நல்ல த்ரில்லர்.

ஷானின் ராசி வில்லங்கமானது. ஒரு முதல்வரின் படித்த, புத்திசாலி மகன் விபத்தாக முதல்வராகும் கதையை ‘வெட்டாட்டம்’ என்ற நாவல் வெளிவரும் கொஞ்ச காலம் முன் தெலுங்கில் ‘பரத் அனே நேனு’ படம் வெளியானது. இப்போது கேஜிஎஃப் தங்க வயலை மையமாக எழுதி இருக்கும் பொன்னி முதல் பாகம் வெளிவருவதற்குச் சில மாதம் முன் கன்னடத்தில் ‘கேஜிஎஃப்: சேப்டர் 1’ வெளியாகி இருக்கிறது. இந்நாவலும் எந்த மாற்றமுமின்றி சினிமாவாகவோ வெப் சீரிஸாகவோ எடுக்கத் திராணியுள்ளதே.

‘வெட்டாட்டம்’ நாவலில் ஏராளமான சந்திப் பிழைகள் தென்பட்டன. இம்முறை அதைச் சரி செய்திருக்கிறார். அந்த மொழி அக்கறைக்கு நன்றியும் வாழ்த்தும்.

2000ங்களின் முதற்பகுதியில் டான் ப்ரவுன் ‘Da Vinci Code’ நாவல் வெளியான போது உலகெங்கிலும் அதே பாணியிலான நாவல்களை எழுத முயன்றார்கள். அதாவது முற்காலத்தையும் சமகாலத்தையும் இணைக்கும் மிகுபுனைவுகள் (Fantasy). தமிழிலும் கே.என். சிவராமன் (கர்ணனின் கவசம், சகுனியின் தாயம், விஜயனின் வில்), சுதாகர் (6174), இரா.முருகவேள் (மிளிர்கல்), பா.விஜய் (சௌபர்ணிகா), தமிழ்மகன் (வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்) எனப் பலர் இவ்வகைமையை முயன்றிருக்கிறார்கள். இவற்றில் சிலவற்றை நான் வாசித்தும் இருக்கிறேன். ‘பொன்னி’ அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. மிக முக்கிய வித்தியாசம், தேவையான தகவல்களுடன் துல்லியம் காட்டும் அதே நேரம் இந்நாவலில் எங்கும் வலிந்து முனையும் திணிப்பு இல்லை.

அவ்வகையில் ஷானை தமிழில் டான் ப்ரவுனை நெருங்கியவர் எனச் சொல்லலாம்.

நானும் ஷானும் (நல்ல எதுகை அல்லவா!) 2017ல் ஒன்றாக இணையப் பிரிவில் சுஜாதா விருது பெற்றோம். அதன் பிறகு எங்கள் முதல் நாவல் (ஆப்பிளுக்கு முன், வெட்டாட்டம்) கிட்டத்தட்ட ஒரே சமயம் தான் வெளியாகின‌. இப்போது இரண்டாம் நாவலும் (கன்னித்தீவு, பொன்னி) ஒரே சமயத்தில் தான் வெளியாகி இருக்கின்றன‌. (ஆச்சரியமாய் விலையும் பக்க எண்ணிக்கையும் கூட ஒரே மாதிரி இருக்கின்றன‌.) யோசித்துப் பார்த்தால் எண்பதுகளின் கமல், ரஜினி எழுச்சி போல் தோன்றுகிறது.

மனிதன் தங்க வேட்டையாட விழைகிறான்; தங்கம் மனிதனை வேட்டையாடுகிறது. இதைத் தான் முதல் பாகம் நவில்கிறது. இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்கலாம்.