விளையாட்டல்ல விதி – இளங்கோ கல்லாணை

0 comment

நகரத்தார் சமூகத்தில் பெண் பார்க்கச் சென்ற உறவினர்களிடம், பெண் எப்படி இருந்தார் என்று கேட்டால் நான்கு விதமாகச் சொல்வார்கள். இருக்கு, திருத்தமா இருக்கு, உள்ளபடி இருக்கு, நல்லா இருக்கு. இதற்குப் பெரிய அர்த்தமெல்லாம் தேவையில்லை. ஒரு வணிகச் சமூகத்தின் மொழியில் தன்னடக்கத்தோடு எதையும் சொல்வது வழக்கம். கோவையின் தொழில் சமூகமும் அத்தகைய மொழியைக் கைக்கொண்டுள்ளதைக் காணலாம். எப்படி இருக்கிறது தொழில் என்றால் “என்னத்தங்க? ஏதோ போயிக்கிட்டு இருக்குங்க” என்பார்கள். தொழில் என்பது இந்தியாவில் சாதிய வழியில் எப்போதும் அடைபட்டிருப்பதை மொழியில் இருந்து உணர முடிகிறது. The Marwaris: From Jagat Seth to the Birlas (The Story of Indian Business) மற்றும் Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars போன்ற நூல்களை வாசிக்கும் போது இந்தியாவின் தொழில் மொழி ஒரு தன்னடக்க – மிகவும் பயந்தாகொள்ளித்தனத்தை வெளிப்படுத்தும் ஒரு மொழியாகவே இருந்து வந்துள்ளது. இந்த வணிக மொழியைப் பற்றி அதிகம் பேசக் காரணம் இருக்கிறது. இந்தியாவில் பொருளாதார மந்த நிலை என்பதை வழக்கமான தன்னடக்க மொழியுடன் தொழில் நகரங்கள் சொல்லி அது பரப்பபடுகிறதா? தொழில்களில் வந்துள்ள புதிய தொழில்நுட்பங்களும் பல தொழில்களை அப்புறப்படுத்தியுள்ளதா? போன்ற கேள்விகளை மனதில் வைத்தே பொருளாதார மந்தம் குறித்த பார்வைகளை முன் வைக்க வேண்டியுள்ளது. அதே போல வரலாற்றுப் பாதைகளில் இத்தகைய மந்த நிலைகளில் ஒரு சமூகம் தன்னைத் தகவமைத்துக் கொள்வதைப் பற்றிய உரையாடலும் இங்கு தேவையாகிறது.

பொருளாதார மந்தம் என்பது பெரும்பாலும் உணரப்படுவது தான். ‘கையில் இருக்கும் காசை செலவழிக்கலாமா வேண்டாமா?’ என்கிற எச்சரிக்கை உணர்வு ஒரு நிச்சயமற்ற அரசியல் பொருளாதாரச் சூழலில் நிகழும். அத்தகைய ஒரு உணர்தல் இப்போது நடக்கிறதா?

பொருளாதாரத்தின் இரு வேறு பிரிவுகளான micro economics மற்றும் macro economics பற்றிய பார்வைகளில் நமக்கு இந்தப் பொருளாதார மந்தம் உண்மையா என்கிற தெளிவு கிடைக்கலாம். இந்த macro அல்லது பேர் பொருளாதாரவியல் ஒரு நாட்டின் அல்லது உலகளவில் நடக்கும் பொருளாதார மாற்றங்களைப் பற்றிய அலசல்கள். உதாரணமாக மோதி இஸ்ரேல் சென்ற போது அந்த நாட்டுக்கு தானமாக பத்து பில்லியன் டாலர்களை இலவசமாகக் கொடுத்தார். எதற்கு என்றெல்லாம் சாமானியனுக்குத் தெரியாது. இப்போது கூட ரஷ்யா சென்ற போது, தூரக் கிழக்கு நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏழாயிரம் கோடி ரூபாயைக் கொடுத்தாராம். பேர் பொருளாதாரத்தின் சூத்திரங்களை அரசாங்கங்கள் யாருக்கும் சொல்வதில்லை. பொருளின் மதிப்பு ஆட்சியாளர்களின் அகங்காரத்தின் அளவில் இருக்கிறது. பொருளாதார மந்த நிலை உண்மையில் இருக்கிறதா என்பதை ஆய்வுகளுடன் விளக்க, போதுமான தரவுகளை முன்பு போல் பெற முடியவில்லை. காரணம், இன்றைய அரசு தகவல்களைத் தினமும் திசை திருப்பி விளையாடும் ஒரு மோசமான போக்கைக் கொண்டுள்ளது.

முன்பிருந்த காங்கிரஸ் அரசும் தவறான அளவில் வளர்ச்சியைக் கணக்கிட்டுப் பரப்பியது. இப்போதுள்ள மோதி அரசாங்கம் நாளொன்றிற்கு எவ்வளவு பொய்கள் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. தகவல்களைக் கட்டுபடுத்துவதோடு மட்டுமின்றி பொய்யான செய்திகளைப் பரப்புவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஐந்து சதவீதத்திற்கு கீழ் வளர்ச்சி சென்றுள்ளது என்பதை வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் பண வீக்கம் பற்றிய செய்திகளை இன்னும் உறுதிபடுத்தவில்லை. கட்டுக்குள் இருப்பதாகவே நிதி மந்திரி சொல்லி வருகிறார், இந்தச் செய்திக் குழப்பங்களைக் கலைத்துப் போட்டுத் தான் பொருளாதார மந்த நிலை பற்றிய உண்மையைத் தேட வேண்டும். பண வீக்கமும் அதிகம் இருந்தால் இந்தியா வளருவதை நிறுத்தி விட்டது என்றே கருத வேண்டும்.

தொழில் நசிவைப் பற்றிய பார்வைகள் விதவிதமானவை. இப்போது பாஜகவை ஆதரிப்பவர்கள் சொல்வது என்ன? தொழில்நுட்ப வளர்ச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல தொழில்கள் மூடப்படுகின்றன என்கிறார்கள். அதாவது டிஜிட்டல் தொழில் நுட்பம் வரும்போது பிலிம் தொழிற்சாலை மூடப்படுவது வழக்கம் தானே என்பதாக அவர்களின் வாதங்கள் இருக்கின்றன. நெசவுத்தொழில் மந்தம் என்பது போதுமான அளவிற்கு அதன் உச்சத்தைத் தொட்டு விட்டது. ஆன்லைன் கம்பெனிகள் வந்தவுடன் இவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.

இவர்கள் சொல்வது அனைத்துமே பொய். ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி என்பது இன்னும் இந்தியாவின் ஐந்து சதவீத வியாபாரத்தைக் கூடத் தொட முடியாது. அதே போல சிறிய அளவில் நடக்கும் தோழிகளுக்குக் கூட முதலீடுகள் கிடைக்காமல் வங்கிகள் திருப்பி அனுப்பி விடுகின்றன. பொருள் நசிவைக் கணக்கிட சிறு மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்களின் சந்தைகளில் நிலவும் சூழல் தான் பெரிதும் உதவுகிறது. Demand and Supply என்கிற சூத்திரத்தை பொருளாதார வல்லுனர்கள் சொல்லுவார்கள். தேவையைப் பற்றிய கனவு கூட வரக்கூடாது என்கிற அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆகையால் இனி மக்கள் பொருட்களை வாங்க ஆசைப்படுவதைக் கூட தள்ளிப் போடத் தான் வேண்டும்.

‘புத்தகங்களைக் கிண்டிலில் வாசிக்கிறார்கள். அதனால், மக்கள் இனி புத்தகங்களை வாங்க மாட்டார்கள்’ என்கிறது ஒரு தரப்பு. புத்தகங்களைக் கிண்டிலில் வாசிப்போரின் சதவீதம் ஒன்றிற்கும் கீழே. ஆனால் புத்தக விற்பனை சரிவோ நாற்பது சதவீதம் வரை. ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சிக்குக் காரணம் மக்கள் வாடகை வண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது நிதி அமைச்சரின் வாதம். ஆனால் அதே வாடகை கார் நிறுவனங்கள் தாங்கள் இரண்டு ஆண்டுகளாகச் சரிந்து வருவதாகச் சொல்கிறார்கள். நடைபெற்று வரும் வேலையிழப்புகள், அலுவல் விடுமுறை, நிறுவன அடைப்புகள் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு இப்போதைய பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்க முடியவில்லை என ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பேர் பொருளாதாரவியல் என்பது நேரடியாகச் சிறு பொருளாதார அளவீடுகளைத் தாக்கும் போது மட்டுமே உணரப்படுவது. உண்மையில் பெரும் முதலாளிகளின் கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் பதினோரு சதவீதம் மட்டுமே. அவர்களால் கொடுக்கப்படுகிற வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை அரசுகள் தெளிவாகச் சொல்வதேயில்லை. அவர்களுக்காக கட்டமைப்புகளைச் செய்து கொடுக்கும் அரசுகள் சொல்வது எதையுமே கணக்கில் கொள்ளவும் முடியாது. சிறு மற்றும் குறு தொழில்களால் தான் இந்தியா போன்ற நாட்டின் எண்பத்து ஒன்பது சதவீதப் பொருளாதாரம் தாங்கிப் பிடிக்கப்படுகிறது. இந்த மந்த நிலையின் முக்கிய அம்சமே அந்த எண்பத்து ஒன்பது சதவீதத்தையும் மூடி வைக்க அரசுகள் முனைப்பு காட்டுகின்றன என்பது தான். இந்தியப் பொருளாதாரத்தில் பதினோரு சதவீதப் பங்களிப்பைச் செய்யும் கார்ப்பரேட்டுகள் தரும் கையூட்டின் அளவு பெரிது. அதனாலேயே அவர்கள் பெரிதாக கார்ப்பரேட்டுகளின் பக்கம் நிற்கிறார்கள். ஹயுண்டாய் கம்பெனி 2௦௦௦  பேருக்கு வேலை தருவதாகச் சொன்னால் இரண்டாயிரம் கோடிக்குச் சாலைகளையும் பாலங்களையும் அமைத்துத் தருகிறார்கள். ஆனால் போதுமான நுகர்வு இல்லை என்பது நல்லதா?

‘ஏன் நுகர்வுக் குறைதல் நல்லது தானே?’ எனலாம். ஆனால் ரீகனிசம் என்று சொல்லப்படுகிற பொருளாதாரச் சித்தாந்தத்தை ஏற்றுத் தான் இந்த நாட்டைச் சந்தைக்கு அர்ப்பணித்தார்கள். அதாவது உற்பத்தியைச் சுகிக்கும் நுகர்வோருக்கான வாங்கும் சக்தியை அதிகப்படுத்தினால் பொருள் trickle down ஆகும், மேலே குவிக்கப்பட்ட பொருள் கீழிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்கும். இந்தத் திசையில் வாதாடும் அமெரிக்கப் பொருளாதார அறிஞர்களின் ஒரு பெரும் வரிசை உண்டு. மில்டன் ஃப்ரீட்மன் போன்றோர், சந்தைகள் திறக்கப்பட்டு அரசுகளின் தலையீடு முற்றிலுமாக இல்லாமல் இருந்தால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்பவர்கள். அதே போல, தொழில்நுட்பங்கள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் எளிதாக்கிக் கொடுத்தால் சந்தையின் பங்காளிகளாக ஏழை எளியவர்களும் வருவார்கள் என்பது அவர்களது பொருளாதார மாதிரி.

ஆனால் வெறும் பொருளாதார அறிஞர்களாக மட்டுமல்லாமல், சமூகப் பார்வையோடு பொருளாதாரத்தைக் கலந்து பேசும் சாம்ஸ்கி போன்றோர், ‘கட்டற்ற சந்தையின் சண்டியர்கள் சாமானியர்களை விழுங்கி விடுவார்கள். அவர்களைப் பாதுகாக்க அரசுகள் தலையிட்டு காப்பாற்ற வேண்டும்’ என்பார்கள்.

நீரோட்டம் போல பொருளாதாரம் இருக்க வேண்டும். மறு சுழற்சியில் எல்லோருக்கும் எட்டும் வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பது தான் ஆவல். ஒவ்வொரு காசும் மறு முதலீடாகி மக்களின் சமூக நலத் திட்டங்களில் பங்கேற்று சமூகக் குறியீடான கல்வி, மருத்துவம், கட்டமைப்புகள், தொலைத் தொடர்புகள் போன்றவற்றை எட்டிப் பிடிப்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நமக்கு அப்படி வாய்க்கவில்லை என்பதே உண்மை.

இதில் அமர்த்தியா சென் போன்றோர் அரசுகள் பொருளை மக்கள் நலத் திட்டங்களில் போட எந்த வகையான பொருளாதார மாதிரியை கைக்கொள்ள வேண்டும் என்கிற தரப்பு. மக்களின் வரிகளை வாங்கிக் கொண்டு வணிகர்களுக்கு பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் அரசமைப்பைப் பற்றிய கவலை நமக்கு இருக்கிறது. மற்ற தொழில்களில் முனகல்களாவது கேட்கிறது. ஒரு காஃபி டேயின் முதலாளி தற்கொலை செய்வது செய்தியாகிறது. ஒரு கார் விற்பனை நிறுவனத்தின் துணைத் தலைவர் தற்கொலை நமக்குத் தெரிகிறது. ஆனால் விவசாயி?

கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தேசிய புள்ளி விபரக் கணக்கு. அதே போல, வேளாண்மைக் கடன் தற்கொலைகள் மட்டும், சராசரியாக, ஒரு நாளைக்கு ஐம்பதிற்கும் குறையாமல் இருக்கிறது. முதலிடத்தில் மராட்டியம். அடுத்து கர்நாடகம், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா என்று இந்தப் பட்டியல் செல்கிறது. கிட்டத்தட்ட 97% பாசன வசதியுள்ள பஞ்சாபில் நிகழும் வேளாண்மைத் தற்கொலைகள் நான்கு. ஹரியானாவில் விவசாயிகளின் மனைவிமார்களின் தற்கொலைகள் அதிகமாம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள்’ என்று விவசாயிகளுக்கு அறைகூவல் விடுத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ எவ்வளவு விவசாயிகளை வேளாண்மையை விட்டு வெளியேற்றுகிறோம் என்று சட்டசபையில் பெருமை பொங்கச் சொன்னார்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வேளாண்மையின் அடுத்த படி நிலையான தொழிற்சாலைகளுக்கு நகர வேண்டியது தானே? என்ன கேடு வந்தது என்று தானே? ஆனால், கிராமப் பின்புலத்தில் இருந்து நகரங்களுக்கு வந்தவர்கள் என்ன வேலைக்குச் செல்ல முடியும்? எழுபதுகளில் ஒரு மில் வேலைக்குச் செல்ல முடியும். இப்போது கடைநிலை வேலைகளுக்குச் செல்ல முடியும். பிற மாநிலத்தவர் இங்கு வந்து சாலை போடும் வேலைகள் அல்லது கட்டிட வேலைகள் செய்ய முடியும். ஆக, தொழிற்துறையில் வேளாண் சார்ந்த மக்களுக்கு போக்கிடம் கூட சுத்தமாகக் கிடையாது. நகரங்களின் கழிவு வேலைகளே அவர்களுக்குக் காத்திருக்கின்றன என்பது தான் உண்மை. கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் எத்தனை உள்ளூர் உற்பத்தியாளர்கள் தாக்குப் பிடித்துள்ளார்கள் என்கிற உண்மையும் முகத்தில் அறையக் கூடியதே. ஆக, வேளாண்மையை அழித்து பிற தொழில்களும் சிறக்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஒரு விவசாயி நகரத்திற்கு நகர்வது என்பது ஒரு தனி மனிதன் மட்டுமே நகர்வது அல்ல. அவருடைய குடும்பமும் சேர்ந்து நகர வேண்டும். அந்த நகர்தல் சார்ந்து பிறவற்றையும் யோசிக்க வேண்டும். நகரத்தில் வாழத் தேவையான வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமில்லை. நகரச் சீமான்களின் கழிவுகளை உண்டு வாழ அவர்களைத் தள்ளியிருக்கிறோம். இது தவிர, மருத்துவம் கல்வி போன்ற தேவைகளுக்கு அவர்களால் சம்பாதிக்க முடியாது. அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று வரும் கிராம விவசாயிக்கோ கூலிக்கோ, ரெயில் கட்டணத்தில் இரண்டு ரூபாயைக் கூடினால் கூட, அவரால் தொடந்து வேலைக்குச் செல்ல முடியாது.

அடுத்தபடியாக, அதிகப் பேரை வேலை இழக்கச் செய்வதன் மூலம் பெஞ்சில் நிறைய பேர் வேலையில்லாமல் இருப்பதன் மூலம் அலுவலகங்களில் பயம் தொடர்ச்சியாக இருக்கும். அந்தப் பயத்தைக் கொண்டே முதலாளித்துவ அரசுகள் வெற்றிகரமாக நடக்கும் என்று கார்ல் மார்க்ஸ் சொல்கிறார். விவசாயிகளின் தற்கொலைகளை எளிதாக கடந்து செல்லும் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் வாழும் புழுக்கள் தான்.

ஒரு விவசாயி ஏன் வேலையில்லாமல் இருக்கிறான் என்று IIT புகழ் பாசிச அடிவருடிகளிடம் கேளுங்கள். அவன் தகுதியும் திறனுள் இல்லாதவன் என்று சொல்வார்கள். ஏனென்றால் விளையாட்டின் விதிகளை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு நியாயம் பேச இவர்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது.

விளையாட்டின் விதிகளை மாற்றினாலும் பரவாயில்லை. அவர்களை விளையாடவே அனுமதிக்கப் போவதில்லை என்பதே உண்மை.