ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம்

0 comment

பிரபல இலக்கிய விமர்சகரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ப்ளூம் மறைந்து விட்டார். இலக்கிய விமர்சன உலகில் தொடர்ச்சியாக கடும் மதிப்ப்பீடுகளை வைத்துக் கொண்டே இருந்தவர். அதன் மூலம் நிறைய எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். உலகெங்கும் சிதறிக் கிடக்கும் அருகிக் கொண்டே வரும் ரசனைவாத விமர்சகர்களின் மெசையா.

ப்ளூம் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் மிக முக்கியமான அதிர்வுகளை ஏற்படுத்தியவையாக இரண்டு நூல்களைச் சொல்வேன். Western Canon மற்றும் The Anxiety of Influence.

இதில் Western Canon கடும் சர்ச்சைகளை எதிர்கொண்டது, அவர் இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் பழமைவாத மதிப்பீடுகளைத் திரும்பவும் புழக்கத்துக்கு கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டார். அவரது இலக்கிய விமர்சன முறைகளில் வெள்ளை இனவாதமும் ஆணாதிக்க மனப்பாங்கும் கொஞ்சம் யூத மேன்மைக் கருத்துகளும் கூட இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவர் ஒரு யூதர் என்பதும் கிறித்துவம் என்பது குறைபட்ட யூதமே என்பது போன்ற கருத்துகளை முன்வைத்து எழுதிய Book of J, Kabbalah and Criticism போன்ற புத்தகங்களும் இந்தக் கருத்தை மாற்ற உதவவில்லை. முதல் புத்தகத்தில் அவர் விவிலியம் முழுவதும் ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என்கிறார்! உலக இலக்கிய ஆளுமைகளை எல்லாம் யூத மறைஞானவியலில் மையமாக வரும் ‘the tree of life’- இன் பத்து கிளைகளை மையமாக வைத்து வகைப்படுத்தி அவர் எழுதிய ‘Genius: A Mosaic of One Hundred Exemplary Creative Minds’ புத்தகம் ஒரு வியக்கத்தக்க முயற்சி. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு காலகட்டத்தில் இத்தகைய புத்தகங்கள் ப்ளூமுக்கு என்ன புகழை வாங்கிக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். (சைவ சித்தாந்தமும் இலக்கிய விமர்சனமும் என்ற தலைப்பில் இன்று யாராவது ஒரு கட்டுரை எழுதினால் தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகை வெளியிடும்?)

இந்த மேற்கத்திய கேனன் என்னும் ‘அரசவை‘ என்ற கருத்தே அடிப்படையில் ஒரு ஆதிக்க மனப்பான்மை கருத்து என்ற விமர்சனங்களை மார்க்சியர்களும் பின்னால் புதிய விமர்சனம் என்று அழைக்கப்பட்ட பின்நவீனத்துவர்களும் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த விமர்சனங்கள் அரசியலால் உந்தப்பட்டவை என்பது ப்ளூமின் பதில். அவரைப் பொருத்தவரை இலக்கியம் என்பது மதமோ தத்துவமோ அறவியலோ அரசியலோ அல்ல. அது தனியான ஒரு விசை. ஒருவர் மற்ற விஷயங்களுக்காக இலக்கியத்தைப் படிக்கக் கூடாது என்று அவர் தனது ‘How to read and why’ என்ற நூலில் சொல்கிறார். Jane Austen எழுதிய Pride and Prejudice நாவல் உலக இலக்கியத்தின் மைகல்களுள் ஒன்று. ஆனால் அந்த நூல் எதை மாற்ற முனைகிறது, அதன் அரசியல் என்ன என்று ப்ளூம் கேட்கிறார்.

இந்தச் சிந்தனை அவரை டோனி மாரிசன், மாயா ஏஞ்சலூ, டோரிஸ் லெசிங் போன்ற எழுத்தாளர்களை வெறும் அரசியல் சத்தங்களை மட்டும் எழுப்பி இலக்கிய அரசவைக்குள் கள்ளத்தனமாக புகுந்து கொண்டவர்கள் என்ற கருத்துக்கு இட்டுச் சென்றது. இது அவருக்கு பெண் வெறுப்பாளர், நிற வெறியர் என்ற பட்டங்களை வாங்கித் தந்தது. அவர் இது பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் மேலும் கடுமையாக விமர்சனம் செய்யத் துவங்கினார். உயர் கலாச்சாரம் என்று ப்ளூம் வரையறுக்கிற அரசவைக்குள் அவர் அனுமதிக்கிறவர்கள் எல்லோருமே செத்துப் போன வெள்ளை ஆண்களாக இருக்கிறார்கள் என்று பதில் விமர்சனத்துக்கும் உள்ளானார். பெண்ணியம், பின்காலனியம், பிரய்டியம், மார்க்சியம் போன்ற கோட்பாடுகளின் பிரச்சினை என அவர் கருதியது அவை குதிரையை அதன் வால் நோக்கி அமர்ந்து கொண்டு செலுத்த முயல்கின்றன என்றார். ஒருவர் ஷேக்ஸ்பியர் எப்படி ப்ராய்டையும் மார்க்ஸையும் பாதித்திருக்கிறார் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் சந்தைப் பொருளாதாரம், இடிபஸ் காம்ப்ளக்ஸ் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் என்றார் அவர்.

ப்ளூம் புதிய விமர்சனம் என்பதே பிரஞ்சு சிந்தனையாளர்கள் ஷேக்ஸ்பியரைச் செரித்துக் கொள்ள விரும்பாததால் வந்தது என்கிறார். புதிய விமர்சனத்தின் பிதாமகர்கள் அனைவரும் பிரஞ்சுக்காரர்களே. லகான், தெரிதா, பூகோ.. நமது கல்விப்புலங்களை நிறைத்துக் காணப்படுகிறவர்கள் இவர்களே. இல்லாவிட்டால், ஜெர்மனியர்கள். நமது புகழ்பெற்ற மார்க்சிய விமர்சகர்களும் இவ்விரு நாடுகளிலிருந்து கிளம்பியவர்களே. இவர்கள் மறந்தும் ஷேக்ஸ்பியரிடமிருந்து மேற்கோள்கள் காட்டுவதில்லை. இவர்கள் தனிமனித மேதமை என்ற ஒன்று இல்லை, இருப்பவை சமூக விசைகளே என்கிறவர்கள். கூர்ந்து கவனித்தால் நமது பல்கலைக்கழகங்களிலும் இது எதிரொலிப்பதைக் கானலாம். ஷேக்ஸ்பியரை நினைவில் வைத்துப் பேசுகிறவர்கள் பழமைவாதிகளாகவும் தெரிதா பூக்கோ போன்றவர்களைப் பேசுகிறவர்கள் நவ உலக சிந்தனையாளர்களாகவும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கின்றனர்.

இதில் நாம் ஷேக்ஸ்பியருக்குப் பதில் நமது மகாகவிகளை காவிய வியாசர்களை பிரதிசெய்து கொள்ளலாம். மூல நூல்களைப் படிக்காமலேயே பூக்கோ தெரிதா போன்றவர்களைப் படித்தால் போதும் என்ற போக்கு காணப்படுவதோடு அல்லாமல் இவர்கள் மூல ஆசிரியர்களை விடவும் மேலானவர்கள் என்ற பிரமையும் காணப்படுகிறது என்கிறார் ப்ளூம்.

ஷேக்ஸ்பியரின் மீது ப்ளூமுக்கு ஏறக்குறைய வழிபாடு என்கிற அளவுக்கு மதிப்பு இருந்தது. ஷேக்ஸ்பியரை மனித போதத்தின் அத்தனை முன்மாதிரிகளையும் தனது எழுத்தில் உருவக்கிக் காண்பித்தவர் என்கிறார்.

Western Canon எனப்படும் உயர் கலாச்சாரத்தின் வரலாற்றை ப்ளூம் நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கிறார்.

1. மதங்களின் காலம்: விவிலியம், கில்கா மேஷ், மஹாபாரதம் போன்ற நூல்கள் இந்த அரசவையில் வரும்.

2. அரசதிகாரத்தின் காலம்: ஷேக்ஸ்பியர், மில்டன், செர்வாண்டிஸ் போன்றவர்கள் இந்தக் காலகட்டத்தின் பிதாமகர்கள்.

3. ஜனநாயகத்தின் காலம்: டால்ஸ்டாய், வால்ட் விட்மன், செக்கோவ், எமிலி டிக்கின்சன், விக்டர் ஹூகோ.

4. குழப்ப காலம்: இதில் தாமஸ் பிஞ்சான், பிலிப் ரோத், தாமஸ் மான் முதல் சமகாலத்தில் எழுதும் பலரை அனுமதிக்கிறார்.

இவர்கள் அனைவரும் ‘கிளாசிக்குகள்’ எனப்படும் ஒரு நூலையாவது எழுதியவர்கள்.

ப்ளூம் புதிய அலை விமர்சனம் மற்றும் மார்க்சியர்கள் கொண்டு வந்த “மேதமை என்ற ஒன்றில்லை, எல்லா படைப்புகளும் தன்னளவில் ஒரே தரத்தினுடையவையே. அவற்றின் முக்கியத்துவம் வரலாற்று முக்கியத்துவம் மாத்திரமே” என்கிற கருத்தை வன்மையாக மறுத்தார். அவரது Western Canon குறித்த புத்தகம் இதைக் குறித்து தான். இதில் ப்ளூம் மேலை இலக்கியத்தின் பிதாமகர்கள் யாரென்று சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறார். இவர்கள் அவர்கள் காலகட்டத்துக்கு மாத்திரமானவர்கள் மட்டுமல்ல.

நான் படித்தவரை ப்ளுமின் மீது வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகள் தூய இலக்கியம், தூய கலைவாதம் பேசும் எல்லோர் மீதும் வைக்கப்படுகிறவை. இதை வைக்கிறவர்களின் அரசியலை விட, ப்ளூமின் அரசியல்சாராத தன்மை தான் பலருக்கு எரிச்சலை மூட்டியது. உதாரணமாக, பெண் வெறுப்பாளர் என்று அழைக்கப்படும் ப்ளுமுக்கு எமிலி டிக்கின்சன் மீதும் ஜேன் ஆஸ்டின், சார்லொட்டே பிராண்டே மீதும் பெரிய மதிப்பு இருந்தது. அவர்களை அவர் தனது வரிசையில் மிக முக்கியமானவர்களாக வைக்கிறார். காலம் கடந்த விழுமியங்களை இவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது அவர் சொன்ன காரணம். இவர்கள் படைப்புகளிலிருந்து இவர்கள் காலத்தை, அதன் அரசியலை அறிந்துகொள்ள முயல்வதன் அபத்தம் பற்றி அவர் சுட்டிக் காட்டியுள்ளார். புதுமைப்பித்தன் கதைகளில் சுதந்திரப் போராட்டம் பற்றிய குறிப்பு வரவில்லை என்பதற்காக அவர் மேதை இல்லை என்றாகி விடுமா?

மேதைகள் இருக்கிறார்கள், இலக்கியத்தில் தரமும் படிநிலைகளும் உண்டு என்பதில் ப்ளும் உறுதியாக இருந்தார். சிங்கங்களின் உணவை கழுதைகளுக்குப் போடுவதைப் பற்றிக் கடும்சினம் அவருக்கு இருந்தது.

இவை அனைத்தும் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத கல்விப்புல பேராசிரியர்கள் கொண்டு வந்த ஒரு நோய் என்கிறார் அவர். அவரைப் பொருத்தவரையில் இலக்கியம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல. இலக்கியவாதிகளுக்கு அதுதான் வாழ்க்கை. வாழ்க்கை முறை. இதில் அவர் சாமுவல் ஜான்சனைப் பின்பற்றினார் என்று சொல்லலாம். வாழ்க்கை முழுவதும் இலக்கியம் வாசிக்கவும் எழுதவும் மட்டுமேயான ஒரு வாழ்க்கை. ப்ளூம் கல்விப்புலத்தால் ஒரு ஆசிரியராக இருந்த போதும் கடுமையாக ஏன் வெறுக்கப்பட்டார் என்பது இப்போது புரிந்திருக்கும். இலக்கியப் பிரதிகளை எழுதியவருடைய அரசியல் பிரகடனமாக வாசிப்பதன் அபத்தங்களை நாம் சமகாலத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதால் இந்த நோய்ப் போக்கைக் கடுமையாக எதிர்த்த ஓர் ஆளுமையான ஹரால்ட் ப்ளூமின் மறைவு இலக்கியத்தை நேசிக்கிற அனைவருக்கும் பெரிய இழப்பாகும்.

ப்ளூம் தன் வாழ்நாள் எல்லாம் இன்னொரு விஷயம் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார் எனில் அது ஒரு எழுத்தாளரின் மீது மற்ற எழுத்தாளர்களின் பாதிப்புகளைப் பற்றி என்று சொல்லலாம். ஷேக்ஸ்பியர் கடவுள் தான் எனினும் அவரிடம் கிறிஸ்டோபர் மார்லோசாசர் போன்றவர்களின் பாதிப்பு லேசாக இருந்தது என்று ப்ளூம் ஒப்புக்கொள்கிறார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல ஏற்கனவே ஐரொப்பாவில் உலவி வந்த கதைகளின் நாடகங்களின் மறு உருவாக்கம் என்பதால் ஷேக்ஸ்பியர் சுயம்பு என்று ஒத்துக்கொள்வதில் ப்ளூமுக்கு சில சிரமங்கள் இருந்திருக்கக் கூடும்.

ப்ளூம் தனது முக்கியமான வாழ்க்கை அறிக்கை என்று சொல்லிக் கொள்கிற ‘The Anxiety of Influence’ நூலில் இது பற்றி விரிவாகப் பேசுகிறார். ப்ளூமின் முக்கியமான இலக்கியப் பங்களிப்பு என்று நான் இந்த நூலையே சொல்வேன். அவரும் இப்படியே சொல்கிறார். அவர் தனது இறுதிக் காலங்களில் இந்தப் புத்தகம் தன் வாழ்விலும் இலக்கியத்திலும் செலுத்திய பாதிப்பைப் பற்றி ‘The Anatomy of Influence’ என்ற நூலில் விரித்து எழுதினார்.

ஒரு எழுத்தாளனின் படைப்புகளில் காணக்கூடிய இந்தப் பாதிப்பு அவனைச் சுற்றி நிலவும் சமூக அரசியல் விசைகளின் பாதிப்பு தான் என்று குறுக்கும் மார்க்சிய விமர்சனத்திலிருந்தும், “தனிமனிதன் எதையும் சிந்திப்பதில்லை, எல்லாம் மொழியில் இருக்கிறது, மொழியில் இருந்தே வருகிறது, மொழி தானே சிந்தித்துக் கொள்கிறது” என்று பேசும் பின்நவீனத்துவ விமர்சனங்களில் இருந்தும் மாறுபட்டு ஒரு எழுத்தாளன் எப்படி அவனது முந்தைய எழுத்தாளர்களுக்கு கடன்பட்டு இருக்கிறான் என்ற ப்ளூமின் விமர்சனம் மாறுபட்டு இருக்கிறது என்பதைக் காணலாம். சுயம்பு என்பது மொழியில் முற்றிலும் இயலாத ஒன்று என்பது அவர் கருத்து.

எந்த ஒரு எழுத்தாளனும் முன்னே சென்ற ஒரு எழுத்தாளனோடு பிணைக்கப்பட்டிருக்கிறான். அவனைத் தழுவவும் தழுவி மீறவும் முயல்கிறான். தனது நூல்களில் ஷேக்ஸ்பியரின் நிழல் எப்படி சமகாலக் கவிகள் வரை அவர்கள் அறியாமலோ அறிந்தோ வந்து சேர்ந்திருக்கிறது என்பதை விவரிக்கிறார். அதாவது அவன் ஒரு பரம்பரையை உருவாக்குகிறான். ஷேக்ஸ்பியரின் ஆவி மில்டன் வழியாக ஜேம்ஸ் ஜாய்சின் மீது படிகிறது.

இந்தப் பரம்பரையில் பேரன் தாத்தாவைப் போல இருப்பதோடு தாத்தா பேரன் போல இருக்கவும் கூடும். ஷேக்ஸ்பியர் போலவே ப்ளூம் பெரிய ஆளுமையாக நினைத்தவர் வால்ட் விட்மன். வால்ட் விட்மனின் பாதிப்பு இல்லாத கவிகளே அமெரிக்காவில் இல்லை என்கிறார். அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் அவனது பாதிப்பு இருந்ததாகச் சொல்கிறார். தமிழில் பாரதியிடம் நிச்சயமாக வால்ட் விட்மென், ஷெல்லி இருவரின் பாதிப்பும் இருந்தது. வால்ட் விட்மனைப் பின்தொடர்ந்து எழுதிய வாலஸ் ஸ்டீவன்ஸ் கவிதைகளைப் போன்ற கவிதைகளை மிக முன்கூட்டியே விட்மன் எதிர்பார்த்து எழுதியிருக்கிறார் என்கிறார் அவர். இது ஒரு சுவராசியமான கருத்தாகும். ஒரு மேதமையான எழுத்தாளர் தனது காலத்தை மீறி வாழ்கிறார். தனது எழுத்துகள் மூலமாக மட்டுமல்லாது தனது சந்ததிகள் மூலமாகவும்.

ஷேக்ஸ்பியர், மில்டன் போன்ற மேதைகள் இலக்கியத்துக்குள் நுழைந்ததுமே அந்த மொழியே ஒரு குலுக்கலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகிறது. அதன் பிறகு அதில் நிகழ்வதெல்லாம் அவர்களுக்கான எதிர்வினைகளே என்கிறார் ப்ளூம்.

இதைக் குறித்து போர்ஹேஸ் முதல் பலர் எழுதியிருக்கிறார்கள். பால் வேலரி தான் எப்படி மல்லர்மேயின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்தேன் என்று விரிவாக எழுதியிருக்கிறார். மல்லர்மே ஒரே நேரத்தில் தான் இன்னும் இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்ல விரும்பிய காதலனாகவும் எதிரியாகவும் இருந்தார் என்று பால் வேலரி விவரித்திருக்கிறார்.

இந்தக் கருத்தைத் தமிழில் புகுத்திப் பார்த்தால் சில சுவராசியமான பிரச்சினைகளையும் பதில்களையும் அடையலாம். ஒருவகையில், ப்ளூம் தனக்கு சந்ததிகளை இலக்கியத்தில் உருவாக்க முடியாதவர்களை மேதைகள் என்று ஒத்துக்கொள்வதில்லை. இங்கே சுந்தர ராமசாமிக்கு ஜெயமோகனுக்கு தி.ஜா.வுக்கு சுஜாதாவுக்கு வாரிசுகள் உண்டு. புதுமைப்பித்தனின் வாரிசு யார்.?

அஞ்சலிகள்.