1
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1999-2000ம் ஆண்டுகளில் தமிழ் நாவல்களில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் காரணமாக தமிழ்ச் சிறுகதைகளுக்குரிய கவனமும் முக்கியத்துவமும் சற்றே குறைந்தது. சிறுகதைகள் தொடர்ந்து எழுதப்பட்ட போதிலும் பெருந்தொகுப்புகள் வெளியாகின என்றாலும் சிறுகதைகள் மீதான வெளிச்சம் மங்கியிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அந்த நிலை மாறி நாவல்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாது சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகின்றன. புதிய தலைமுறையினர் தமிழ்ச் சிறுகதையின் தொடர்ச்சிக்கு அக்கறையுடன் பங்களித்து வருகிறார்கள். இவர்களின் கதைகள் சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இவர்களில் பலரும் இணையத்தில் எழுதத் தொடங்கியவர்களே.
இந்நிலையில் இன்றைய தலைமுறை சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை வாசிக்கும் போது சில கேள்விகள் எழுகின்றன. தமிழ்ச் சிறுகதை மரபிலிருந்து அவர்கள் விலகியிருக்கிறார்களா? புதியவற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா? அவர்களது நோக்கும் போக்கும் எவ்வாறு அமைந்துள்ளன? சிறுகதைக்கு அவர்களது தனித்த பங்களிப்பு என்ன? இத்தகைய கேள்விகளை எழுப்பிக் கொள்வதின் மூலம் அந்த சிறுகதைகளைக் குறித்து வாசக நோக்கில் உரையாட முடியும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
அண்மையில் வெளியான சில சிறுகதைத் தொகுப்புகளின் அடிப்படையில் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய முனைகிறது இக்கட்டுரை.
*
தூயனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘இருமுனை’ யாவரும் வெளியீடாக 2016ல் வெளியானது. எட்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் கதைகள் கணையாழி, உயிர் எழுத்து, தீராநதி, வாசக சாலை ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவை எழுதப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட காலம் குறித்த குறிப்புகள் தொகுப்பில் இல்லை.
*
தூயனின் சிறுகதை உலகம் நெருக்கடியானது. வலிகளும் நம்பிக்கையின்மைகளும் குரூரத்துடன் முகம் காட்டும் இருண்ட திசைகளைக் கொண்டது. தந்தையர்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான உள மோதல்களாலும் அவ்வாறான மோதல்களுக்கு பெரிதும் காரணமாக அமையும் அடையாளங்களாலும் உருவான ஒன்று.
தொந்தரவுக்கு உள்ளாக்கும் அடையாளங்களிலிருந்து முற்றிலும் துறக்க விரும்பினாலும் ஒட்டிக் கொண்டே உடன்வரும் தந்தையின் சுவடுகளிலிருந்தும் வெளியேறும் வழிகளில் ஒன்றாக அமையும் உடலிச்சையின் கட்டற்ற மூர்க்கம் இந்த உலகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
*
பிள்ளைகள் வளரும் பருவத்தில் அப்பாக்களே அவர்களது நாயகர்கள். எல்லாவற்றையும் அவரிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள். அவரைப் போலவே தங்களை உருவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். உலகில் வேறெவரையும் விட அவரே அனைத்திலும் வல்லவர். அவருக்கு எல்லாமே தெரியும், அவரால் எதையும் சாதிக்க முடியும் என்ற பலத்த நம்பிக்கை பிள்ளைகளின் மனதில் இயல்பாகவே பதிந்து விடுகிறது. இந்த அடிப்படையான நம்பிக்கையும் அதனால் ஏற்படும் பிரியமுமே தந்தை – மகன் உறவின் அனைத்து நிலைகளிலும் வெவ்வேறு பேதங்களுடன் இணைந்தும் முரண்பட்டும் விரிகின்றன.
அப்பாக்களை மீறும் முனைப்பு பதின்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண் பிள்ளைகளின் மனதில் நிலைத்து விடுகிறது. அடிப்படையான குணங்களுக்கும் தோற்றத்துக்கும் மூல காரணமாய் அமைந்த அடிப்படையை உடைத்து ‘நான் அவ்வாறில்லை’ என்று நிறுவும் முயற்சியின் பல்வேறு மீறல்களை அவர்கள் கையாள்கிறார்கள். அப்பாக்களைப் பார்த்தே வளரும் பிள்ளைகள் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் அவ்வாறான உருவாக்கத்தை கவனமாக உடைக்கவும் முயல்கிறார்கள். பிள்ளைகள் வளருந்தோறும் அப்பாக்களுடனான இந்த முரண் மேலும் மேலும் வளர்ந்து அவரை வாழ்வின் முதன்மையான எதிரியாகவே எதிரில் நிறுத்துகிறது. வாழ்வில் தான் சந்திக்கும் சறுக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் தந்தையின் நிழலும் கறையுமே காரணம் என உறுதிபடத் தீர்மானிக்கிறது.
‘உனக்கொண்ணும் தெரியாது, நீ சின்னப் பையன். நான் சொல்றதக் கேளு’ என்கிற அப்பாவின் மனப்பான்மை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதது போலவே ‘எனக்குத் தெரியாதா? இன்னும் என்ன சின்னப் பையனா? வயசான காலத்துல நீங்க பேசாம இருங்க’ எனும் தனையனின் சுய கௌரவமும் எந்தவிதமான சமரசத்துக்கும் தயாராக இருப்பதில்லை.
தந்தைக்கும் மகனுக்குமான நெகிழ்ச்சியும் வெறுப்பும் துயரமும் கலந்த இவ்வகையான முரண் உறவை வெகு நுட்பமாகவும் கனத்த அர்த்தச் செறிவோடும் சொல்ல முனைகின்றன தூயனின் கதைகள்.
நோய்மையினால் உடல் சிதைந்து நகரவும் எழவும் முடியாமல் உடற்கழிவுகளை வெளியேற்றவும் பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து கிடப்பில் கிடக்கும் தந்தையர்களின் நிலை பரிதாபத்துக்குரியதும் மிக அவலமானதுமாகும்.
‘இன்னொருவன்’ கதையில் வரும் அமிர்தி அமிலத் தொழிற்சாலையில் வேலை செய்து போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி மலப்புழை புற்றுநோய்க்கு ஆளான தன் தந்தையை பராமரித்த கதையை சொல்லும் போது அவனால் கண்ணீரை அடக்க முடிவதில்லை. இடுப்பில் தொங்கும் மலப்பையை சுத்தம் செய்து உலர்த்துவதையும் அவரது குறியில் சிறுநீர் குழாயைப் பொருத்துவதையும் உடலில் நெளியும் விதவிதமான புழுக்களைப் பிடித்துக் கொல்லும் சின்னத் தங்கையின் விளையாட்டையும் வாழ்வின் ஒருபகுதியாக ஆகிவிட்டதை விவரிக்கும் போது அவனிடம் வெறுப்பு தலைகாட்டுவதில்லை. தந்தையின் உடல் ‘காய்ந்த பீயின் கனத்துக்கு உடல் சுருங்கி விட்டதை’ கவனிக்கும் ஒரு மகனின் துயரம் இத்தகைய துர்நாற்றங்களையும் அருவருப்பையும் விட கொடியது.
தான் தூக்கிச் சுமந்த பிள்ளைகள் தன்னைப் பராமரிக்கும் நிலையைத் தந்தைகள் சகித்துக் கொள்வதில்லை. இந்தத் தாளாமையை சீற்றமாகவும் எரிச்சலாகவுமே அவர்களால் வெளிப்படுத்த முடிகிறது.
அம்ரிதி தன் தந்தையைப் பராமரித்ததைப் பற்றி நினைவுகூர்ந்து சொல்லும் போது நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறான் என்ற போதிலும் அதைச் செய்ய நேர்ந்த நாட்களில் தந்தையை அவன் இத்தனை கருணையோடோ அல்லது நெகிழ்ச்சியோடோ அணுகியிருக்க மாட்டான். ‘முகம்’ கதையில் வருகிற மகனுக்கு உள்ள மனநிலையே தான் அவனுக்கும் வாய்த்திருக்கக் கூடும்.
உணவகத்தில் தட்டுகளை கழுவிச் சுத்தம் செய்யும் அப்பா விபத்தில் இடுப்பொடிந்து கைகளை தரையில் ஊன்றி இடுப்பைத் தூக்கித் தாவி நகரும் நிலையில் வண்டியில் அமர்த்தி எங்கேனும் அழைத்துச் செல்லும்படியோ அல்லது திண்ணையில் இருத்திவிட்டுப் போகும்படி கெஞ்சினாலோ மகனுக்கு எரிச்சலும் கோபமும் தான் எழுகிறது. அவ்வாறான அவரது இருப்பை அவனால் தாங்க முடிவதில்லை. “சாவமாட்டியா நீ… கெடந்து உசுர வாங்குற” என்று அடிப்பதற்காக கையை ஓங்கும் போது அவர் அடங்கி அழுவதைப் பார்க்கச் சகிக்காமல் வெளியேறுகிறான்.
கிடப்பில் இருக்கும் தந்தைகளைப் பராமரிக்க நேரும் போது பிள்ளைகளின் மனம் பல சந்தர்ப்பங்களில் அவர்களது மரணத்தையே எதிர்பார்க்கிறது. வேண்டுகிறது. துயரிலிருந்து அவர்கள் விடுபட்டு நிம்மதியாக போய்ச் சேரட்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை பராமரிப்பதில் தாம் கொள்ளும் மன அவசங்களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்று எண்ணுகிறார்கள். இதை நேரடியாக வெளிப்படுத்த முடியாததன் சங்கடமே இருவருக்குமிடையில் வெறுப்பாகவும் சண்டையாகவும் வெடிக்கிறது.
தந்தையின் அடையாளங்கள் தரும் ஆதாயங்களை விட அது ஏற்படுத்தும் அசௌகரியங்களும் அழுத்தங்களும் பிள்ளைகளால் தாங்க இயலாதவை. அந்த அடையாளத்தை உடைத்து தனக்கென தனித்த ஒன்றை உருவாக்கவே முயல்கிறான்.
அடையாளங்களை தந்தையிடமிருந்து விலகுவதால் மட்டும் அழித்து விட முடியாது என்ற கசப்பான உண்மையை சொல்கிறது ‘தலைப்பிரட்டைகள்’.
சரக் சரக்கென கத்தரியும் சீப்பும் மோதிக் கொள்ளும் சத்தத்துடன் முடிதிருத்தும் அப்பாவுக்கு தொழிலிருந்து விலகி படித்து வேலைக்கு போகிற மகனைக் கண்டால் இயல்பாகவே எழும் கோபத்தை ‘தலைப்பிரட்டை’களில் வரும் அப்பாவிடம் காண முடிகிறது. ‘இந்த மயித்த படிக்கக்குத் தான் நா வரவனுக் குண்டிய கழுவி காசு புடிங்கி கட்டனுமா?’ என்ற அவரது வன்மம் இதுவரையிலும் தொடர்ந்த குடும்பத்தின் தொழில் தன்னோடு முடிந்து விட்டது என்கிற யதார்த்தைத் தாங்க முடியாமல் கிளைக்கிற ஒன்று. ரசம்போன கண்ணாடியுடனும் தையல் போடப்பட்ட குஷன் நாற்காலியுடனும் வாழ்வை ஒப்பேற்ற முடியாமல் போகும் போது கடையில் நெருப்பிட்டுக் கொழுத்தி தற்கொலை செய்து கொள்கிறார். குல அடையாளத்தைத் தொலைக்கும் பொருட்டே அவன் தந்தையிடமிருந்து விலகுகிறான். பெருநகரில் வேலைக்குச் சேர்கிறான். ஆனால் அவன் அறியாத திசைகளிலிருந்தும் கூட அடையாளத்தை அழுத்தமாக நினைவுபடுத்தும் குரல்கள் தொடர்ந்து ஒலித்து விரட்டுகின்றன. அவரை தற்கொலைக்குத் தூண்டியதில் அவரிடமிருந்த விலகிய மகனுக்கும் கணிசமான பங்கு உள்ளதல்லவா?
*
அடையாளங்களால் ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து கல்வியின் வழியாகவும் பொருளாதாரத்தின் மூலமாகவும் மீள முயலும் இளைஞர்களின் இருதலைக்கொள்ளி மனநிலையை தூயன் தன் கதைகளில் உணர்த்துகிறார். தனி அடையாளங்கள் அழிக்கப்பட்ட நவீனமயமான இன்றைய வாழ்நிலையிலும் பிறப்பின் சுமை என்பது மீண்டும் மீண்டும் வெவ்வேறு உருவங்களில் முளைத்தெழுந்து நினைவுபடுத்தியபடியே உள்ளது. அவ்வாறான துயரம் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளிவிடும். இத்தகைய அவலத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவனது தடுமாற்றங்களை ‘தலைப்பிரட்டைகள்’ கதை நுட்பமாக விவரிக்கிறது. கதையின் முதல் வரியில் அறை முழுவதும் சிதறிக் கிடப்பதாகச் சொல்லப்படும் அந்தச் ‘சொல்’ எது என்பதை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் கதை முழுக்க நம் காதில் அச்சொல் ஒலித்தபடியே தான் உள்ளது. விலைமாதர்களின் தனித்துவமான உலகமும் இரவின் பின்புலமும் இவ்வாறான தத்தளிப்பான மனநிலையை மேலும் உக்கிரமாக்கியுள்ளன.
பன்றிகள் உறுமித் திரியும் வாழ்நிலையில் உழலும் மனிதர்களிடையே தான் என்னவாகப் போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவின்மையும் தான் யார் என்பதைப் பற்றிய அச்சமும் சேர்ந்து உடல் முடங்கிப் போன தந்தையின் மீதான வெறுப்பாகவும் சோரம் போய்விட்ட அம்மாவின் மீதான சீற்றமாகவும் இதற்கெல்லாம் காரணமானவர்களின் மீதான கொலை வெறியாகவும் உருக்கொள்கிறது. அவன் மல்லிகாவை அடைவதும் சாமிக்காக நேர்ந்துவிட்ட பன்றியின் கழுத்தை அறுத்துக் கொல்வதும் கூட ஏதேனும் ஒருவிதத்தில் தன் மனச் சீற்றங்களை ஆற்றுப்படுத்தும் நோக்குடனே தான். கசப்பும் வன்மமும் மட்டுமேயான இவ்வாறான விதிக்கப்பட்ட சூழலிலிருந்து இனி விடுதலையில்லை என்ற நிலையில் அத்துடனே மடிந்து விடத் துணிவதும் சூழலின் ஒரு பகுதி தான்.
இந்த இரு இளைஞர்களின் வாழ்நிலைக்கு ஒப்பானது தான் பிழைப்புக்காக தன் மண்ணிலிருந்தும் உறவுகளிடமிருந்தும் தொலைதூரத்துக்கு வரும் நேபாளிச் சிறுவனின் வாழ்வும். இவர்கள் அடைய நேரும் சீரழிவுகளையே அவனும் எதிர்கொள்கிறான். இவர்களுக்கு உண்டாகும் சரிவுகள் மனநிலை அளவில் நின்றுவிடும் போது அவனுக்கு அவை உடலளவிலும் நீள்கிறது.
படிக்க விருப்பமில்லாமல் மீன்வாடையுடன் கடற்கரையில் சுற்றித் திரியும் செபாஸ்டியன்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே அம்மாக்களும் சித்தப்பாக்களும் விரும்புகிறார்கள். ஆனால் கடலாழத்தில் கிடப்பதாக நம்பும் மஞ்சள் மீனை என்றாவது ஒருநாள் கடலுக்குச் சென்று பார்த்து விடுவது தான் செபாஸ்டியன்களின் கனவாக இருக்கிறது. முரண்பட்ட இந்த இருவேறு மனநிலைகளைச் சொல்லும் ‘மஞ்சள் நிற மீன்’ முந்தைய இரண்டு கதைகளுக்குமான தொடக்கமாக அமைகிறது.
*
தமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் காமத்தைக் குறித்து எழுதாத சிறுகதையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதே சமயத்தில் காமத்தை உடல்சார்ந்த ஒன்றாக மட்டும் கருத்தில் கொண்டு கவன ஈர்ப்பின் பொருட்டு எழுதும் போக்கிலிருந்து மனத்தின் ஆழத்தில் அது நிகழ்த்தும் மாயங்களை கண்டுணர முயலும் படைப்புகளை பிரித்தறிய வேண்டியதும் அவசியம்.
காமத்தின் பெருவீச்சை உக்கிரமாக முன்னிறுத்தும் இரு கதைகள் ‘பேராழத்தில்’, ‘ஒற்றை கை துலையன்’.
கட்டுப்படுத்தப்படும் காமம் கட்டற்ற வன்முறைக்கும் அதன் மூலமாக பெருத்த அழிவுக்கும் வழிவகுக்கும் போக்கை மையமாகக் கொண்டது ‘ஒற்றைக் கை துலையன்’. நிறைவேறாத ஆசைகளுடன் பலியான உயிர்களைச் சார்ந்து மனிதர்களிடத்தில் நீடித்திருக்கும் குற்றவுணர்ச்சியின் காரணமாகவே மோகினிகளும் நீலிகளும் யட்சிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். காமத்தின் மூர்க்கத்தை கண்டுணர்ந்த மனிதர்கள் அதன் சன்னதத்தை சாந்தப்படுத்தவென பல்வேறு உத்திகளை கட்டமைத்துள்ள அடிப்படையை இக்கதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.
கலையின் ஏதேனுமொரு வெளிப்பாடு சாதாரண மனிதனை கலைஞனாக்குகிறது. ஆனால் அவனுக்குள் கலையின் ஆற்றலையும் மீறி எழும் கீழ்மையின் வெளிப்பாடு அவனது கலையை மதிப்பிழக்கச் செய்வதாகவும் அவனையே சிதைப்பதாகவும் அமைகிறது. ‘பேராழத்தில்’ கதையின் சிற்பி தான் வடித்த சிற்பத்தின் முன்னால் சாதாரண மனிதனாகி நின்றுவிட அவனது ஏற்றத்துக்கும் புகழுக்கும் காரணமான கலை அவனைக் கைவிடுகிறது.
தூயனின் கதையில் சொல்லப்படும் காமம் மூர்க்கம் கொண்டது. மானுட உயிர்களை பலி கொள்வது. அது கிளர்ச்சியூட்டுவது அல்ல. அச்சம் தருவது. அணுக முடியாமல் விலகி ஓடச் செய்வது.
“இன்னொருவன்’, ‘முகம்’, ‘தலைப்பிரட்டைகள்’ ஆகிய கதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காமம் வெகு இயல்பாகவும் கதையின் மையத்தையொட்டியுமே அமைந்துள்ளது.
*
சொல்முறையில் முன்னோடிகளின் சாயல்களைக் காண முடிவதை தூயனின் புனைவுலகின் மேல் ஒரு விமர்சனமாகச் சொல்லலாம். ஆனால் அது அவரது கதைகளின் இருப்பையும் பொருளையும் எந்த வகையிலும் குறைவுபடுத்துவதாக இல்லை.
*
தூயனின் கதைகள் அடர்த்தியானவை. சற்றும் ஆசுவாசத்தைத் தராமல் தொடர்ந்து வாழ்வின் இருண்ட மலினம் நிறைந்த பகுதிகளின் துயரையும் கசப்பையும் திரட்டித் தருபவை. கதைகளினூடாகச் சொல்லப்படும் துல்லியமான தகவல்களும் அவற்றின் சித்தரிப்பும் கதையின் மையத்தை மேலும் கூர்மையடையச் செய்கின்றன. மனம் கூசச் செய்யும் தருணங்கள் பலவும் கட்டற்ற மூர்க்கத்துடன் வெளிப்படுகின்றன.
விரிவாக எழுதப்பட்ட அடுக்கடுக்கான சம்பவங்களின் வழியாகவே தூயனின் கதைகள் உருக்கொள்கின்றன. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்கள். அன்றாடம் நம்மிடையே புழங்கித் திரிபவர்கள். அத்தகையோர் எதிர்கொள்ளும் தனித்துவமான நிகழ்வுகள் அவர்களை அசாதாரணமானவர்களாக்குகின்றன. அவ்வாறான கணங்களை இக்கதைகள் மையப்படுத்தியுள்ளன. அதன் காரணமாகவே அவை முக்கியத்துவம் பெறுகின்றன.