அந்த ஞாயிற்றுக் கிழமையை அப்படியே தொந்தரவு செய்யாமல், அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் எனத் தான் சரிதா விரும்பினாள். வாரயிறுதி நாட்களில் பொழுது போக்குவது சற்று சிரமமாகத் தான் இருந்தது. கல்லூரிக் காலங்களிலும், புதிய இடங்களில் அவள் பெரும்பாலும் தனி ஆளாகத் தான் இருந்திருக்கிறாள். ஆனால், இவ்வளவு தூரம் தனிமையை உணர்ந்ததில்லை. தற்போதைய வேலையா அல்லது இந்த மனநிலையா என்று தெரியவில்லை. கடந்த ஆறு மாத காலமாக அவளை எந்த விஷயத்திலும் நாட்டம் காட்ட விடாத ஒரு விசித்திரமான உணர்வு ஆட்கொண்டிருந்தது. ஜேஸ்டன்வில் ஓரளவிற்கு பெரிய ஊர் தான். முந்தைய நாள் கூட எடி அவளை ஆர்ட் கேலரியின் விழா ஒன்றுக்கு கூப்பிட்டிருந்தான். நியுயார்க் நகரில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு வேலைக்கு இன்டர்வியூ இருந்ததால் அவளால் போக முடியவில்லை. ஒருவேளை எடி வருத்தப்பட்டிருப்பானோ என்று யோசனையாக இருந்தது.
தொட்டி மீன் போன்ற அந்தச் சிறிய பரப்பளவான வேலைச்சூழலில் எடியின் அண்மை தான் பெரிதும் ஆசுவாசமாக இருந்தது. ஆனால் அதுவும், எவ்வளவு மாதம் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை. அதற்குள் அந்த நியூயார்க் வேலை சாதகமாகி விட்டால் சற்று விடுதலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். பெரிய இடம். புதிய நிலம். சவாலான வேலை. மேலும் மனிதர்கள். அதிக ஈர்ப்புகள் என நினைத்துக் கொண்டாள்.
தூக்கம் கலையா கண்களும் பூச்சில்லா முகமுமாக, படுக்கைக்கு போன உடையோடு புரண்டபடி, யாருடனாவது மனம் போன போக்கில் பேசியபடி கிடக்க வேண்டும் என்று நினைத்துத் தான் கைப்பேசியைத் தேடினாள். எடுத்துப் பார்த்தால் ‘கிளம்பிவிட்டேன். இம்ப்ளோஷன் 10:30 மணிக்கு. தயாராக இருக்கவும்’ என்று எடியின் செய்தி எட்டரைக்கு வந்திருந்தது. அடடா, இதை எப்படி மறந்து போனோம் என அவசர அவசரமாக தயார் ஆன போது எடியின் கார் அபார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து விட்டிருந்தது.
சரிதா இருந்த மேக்னோலியா குடியிருப்பிலிருந்து கிழக்குப் பக்கமாக குவேக்கர் டவுன் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் மூன்று மைல்கள் சென்றால், பெர்க்கில் டவர்ஸ் என்னும் பெரிய கட்டடம் வரும். மேடான பகுதியில், வளைந்தபடி ஊருக்குள் செல்லும் சாலையை ஒட்டியபடி, வானுயர நிற்கும் 32 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான கட்டடம்.
அதைத் தான் அந்த ஞாயிறு காலை பத்தரை மணிக்கு, தளம் தளமாக வெடிபொருளை வைத்து, தகர்க்கப் போகிறார்கள். அந்த இம்ப்ளோஷனைப் படம் எடுக்க எடி அத்தனை காலையிலேயே கிளம்பிவிட்டிருந்தான். இது போன்ற வீடியோ படங்கள் எடுப்பது அவனுக்கு பொழுதுபோக்கு. தவிர, நல்ல காசும் வந்து கொண்டிருந்தது போல. விதவிதமான காமிரா லென்சுகள், ட்ரோன் என வைத்துக் கொண்டு தரமான வீடியோக்கள் எடுத்து ஜேஸ்டன்வில் ஹெரால்டு பத்திரிகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். முழுநேரத் தொழிலாக, சரிதாவின் டீமில், தரவு கட்டமைப்பு வேலை செய்து கொண்டிருக்கிறான். சுருக்கமாக டிபிஏ வேலை. சாம்பியன் என்னும் காப்பீடு நிறுவனத்தின் தலைமையகம் ஜேஸ்டன்வில்லில் தான் இருந்தது.
‘1974 இல்லை, 1975 இருக்கும். இந்த டவர்ஸ் மேல ஒரு ரேக்கூன் ஏறியது தெரியுமா? முழுவதுமாக ஏறி முடிக்க மூன்று நாட்களாயிற்று அதற்கு. கடைசியாக மேல் மாடிக்கு போனதும், டவர்ஸில் இருந்த எல்லோரும் அங்கே போய் அதைப் பாத்தோம். டிவியில கூட காட்டினார்கள் அப்பொழுது’ என்றார் பாப்.
அவர்கள் பெர்க்கில் டவர்ஸ்ஸை முழுவதுமாக பார்க்கும் தூரத்தில் வந்துவிட்டிருந்தார்கள். இம்ப்ளோடிங்கிற்காக (Imploding), பெர்கில் டவர்ஸை சுற்றிய ஒரு மைல் வட்டாரத்தை மனித நடமாட்டம் இல்லாமல் தடை செய்து வைத்திருந்தார்கள். சுற்றிக்கொண்டு ரௌட் மூன்று வழியாக போக வேண்டியிருந்தது. சரிதாவின் அபார்ட்மெண்ட் ஜன்னலில் இருந்தே அந்தக் கட்டிடத்தைப் பார்க்க முடியும். முதல் இருபது தளங்கள், அடுத்து இருபதிலிருந்து இருபத்து ஏழு வரை, அதற்கு மேல் ஐந்து தளங்கள் என மூன்றடுக்கு மடிப்புகளாக எழுப்பப்பட்டிருந்த, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டடம். ஜான் பெர்கிலின் ஸ்டீல் வர்த்தகம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அந்நிறுவனத்தின் பெருமையை பறைசாற்ற கட்டப்பட்டது.
நிலத்திலிருந்து முளைத்து எழுந்த ஆணவக் கொம்பு என நீண்டுயர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்பொழுது ஜேக்ஸன்வில்லும் அதன் சுற்றுவட்டாரமும் தொழில் வளர்ச்சியில் அபாரமான முன்னேற்றம் கண்டிருந்தது. தொண்ணூறுகளில் பெர்கில் கம்பெனி திவாலாகிப் போனதும் அந்த ஆணவக் கொம்பு வெறுமனே துருத்திக் கொண்டிருக்கும் முள்ளாக மாறியது. அதன் முறையான பராமரிப்புத் தேவைகளும், அவை செய்யப்படாமல் போனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும், நகராட்சிக்கு பெரும் தலைவலி என ஆனது. அதுதான் பத்து ஆண்டுகளாக பல்வேறு இழுபறி விவாதங்களுக்குப் பிறகு, இம்ப்ளோடிங் செய்து, அந்த 32 தளங்கள் உயரக் கட்டிடத்தை தகர்க்க முடிவாகி அன்றுதான் நேரம் குறித்திருந்தார்கள்.
எடியுடன் அவன் காரில் அந்த இம்ப்ளோடிங்கை வேடிக்கப் பார்க்க சையதும், ஜூடியும் வந்திருந்தாலும், பாப் ஜோன்ஸின் இருப்பு தான் சரிதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பாப்பிற்கு கிட்டத்தட்ட 65 வயதுக்கு மேலிருக்கும். அவர்கள் நிறுவனத்தின் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் பிரிவில் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருந்தார். ரிடயர்ட்மெண்ட்டுக்கான எல்லையில் இருந்தார். தனியராக வாழ்ந்து வருகிறார் என்பது அவருடைய பேச்சிலிருந்து சரிதா புரிந்து கொண்டது. அவருடைய கடந்த கால பிரத்யேக வாழ்க்கைப் பற்றி அலுவலகத்தில் அவ்வளவு பரவலாகத் தெரியவில்லை.
‘பெர்க்கில் டவர்ஸ் கட்டப்படும் முன்னரிலிருந்து பாப்பிற்கு இந்த இடம் பற்றித் தெரியும். இல்லையா பாப்?’ என்றான் எடி.
பெர்க்கில் டவர்ஸ் ஒரு பெருஞ்சாலை மற்றும் ஒரு குறுக்குச்சாலையின் சந்திப்பில் இருந்தது. அதன் மேற்குப் பகுதி முழுவதும் பெருஞ்சாலையை பார்த்தபடி இருக்க, அங்கிருந்து அரை மைல் தொலைவில் வேகபாண்ட் இன் என்ற இரண்டு மாடி ஓட்டலைத் தான் எடி தேர்வு செய்திருந்தான். இம்ப்ளோஷனுக்கான, பாதுகாப்பு வளையம் தாண்டி, சற்று உயரமான இடத்தில் இருந்தது ஓட்டல். அதன் மேல் மாடியில் ஜேஸ்டன்வில் நகர சனம் பலரும் கூடியிருந்தனர்.
‘நல்ல அழகான கட்டடம். இன்னும் இரண்டு மணி நேரத்தில் இடித்து விடுவார்கள் எனக் கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது’ என்றான் சையித்.
‘ஆமாம். எம்பயர் ஸ்டேட் பில்டிங்க்கை முன்மாதிரியாக வைத்துக் கட்டினார்கள். அப்பொழுது இது போன்ற கட்டுமான கம்பெனிகளுக்கு ஏகப்பட்ட மரியாதை உண்டு. இதைக் கட்டி முடிக்க மூணு வருடங்களாயிற்று. அந்த மேக்னோலியாவிற்கு பக்கம் தான் பெரிய கேட்டோ ஒன்று அமைத்து கட்டடத் தொழிலாளர்கள் எல்லாம் தங்கியிருந்தார்கள். ஸ்பியர்மேன் என ஒரு சீஃப் ப்ளம்பர் இருந்தார்’ பாப் முடிப்பதற்குள் பக்கத்தில் இருந்த இன்னொரு முதியவர் ‘ஸ்பியர்மேன்? அந்த யூதரா? ஆம். அவரை எனக்கு நினைவிலிருக்கிறது’ என்றார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இன்னமும் சிலர் அவர்களுடைய உரையாடலை கவனிக்க ஆரம்பித்தனர்.
எடி வேகமாக தன்னுடைய வீடியோ கேமராவைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களைப் படம்பிடிக்க ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்து ‘உன்னுடைய பறவையைக் கொண்டு வரவில்லையா?’ என்றார். அப்பொழுது பத்து மணி போல் ஆகியிருந்தது.
‘இம்ப்ளோஷன் போது ட்ரோனை பறக்க விடலாம் என்றிருக்கிறேன். இப்பொழுது உங்களுடைய பேச்சுகளை எல்லாம் கொஞ்சம் பதிந்து கொள்ளலாம். சொல்லுங்கள் பாப். நீங்கள் அந்த கட்டடத்தில் வேலை செய்திருக்கிறீர்களல்லவா?’ என்று தொடங்கினான்.
அவர்கள் கேட்காவிட்டாலும் பாப் ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பார். அவருக்கு ரிடயர்மெண்ட் வயது நெருங்க நெருங்க, தன் இருப்பை விடாமல் அறிவித்துக் கொண்டிருக்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்தார்.
‘ஓ! இது கட்டப்படுவதற்கு முன்பு பெரிய பொட்டல் வெளியாக இருந்தது. அதோ பில்லிஸ் ஸ்டோர் இருக்கிறதல்லவா, அப்போது அதொரு சிறிய வீடு மட்டும் தான். அங்கே தான் மீஸ்டர் பீட்டர்ஸ் இருந்தார். இந்த நிலமெல்லாம் அவருடையது தான். கனடாவிலிருந்து வந்திருந்தார். நாங்கள் எல்லாம் அந்த இடத்தில் டர்ட் பைக்கெல்லாம் ஓட்டி விளையாடியிருக்கிறோம். அறுபத்தியேழோ, அறுபத்தி ஒன்பதோ என நினைக்கிறேன். அப்பொழுது தான் பெர்க்கில் நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. அப்போது பீட்டர்ஸும் ஒரு பங்குதாரர் என்றார்கள். ஆனால் பின்னாளில் இது பெர்க்கிலுக்கு மட்டும் என ஆகிவிட்டது. நிறைய சர்ச்சைகள் எல்லாம் உண்டு’ என்றார்.
‘சொத்து வில்லங்க பத்திரமெல்லாம் மனப்பாடமாக சொல்வீர்கள் போல. இந்தக் கட்டடம் திறக்கப்பட்ட நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா பாப்?’ என்று கேட்டான் சயீத்.
பாப் இன்னமும் அதிக உற்சாகத்துடன் ‘அப்போது கோர்ட்டில் கேஸெல்லாம் நடந்ததே. எழுபதில் கட்டடம் கட்டத் தொடங்கினார்கள். மூன்று ஆண்டுகள் ஆயிற்று. அப்போது பிரபல ஐரிஷ் ஓவியர் ஜார்ஜ் வெல்ஷ் கட்டி முடிக்கப்பட்ட பில்டிங்கை அழகானதொரு ஓவியமாக வரைந்திருந்தார். மே பதினெட்டாம் தேதி சனிக்கிழமை திறப்பு விழா என்று எழுதி, விளக்கொளிகளால் அலங்கரிக்கப்பட்ட அருமையான படம். சிட்டி ஹாலில் பெரிய திரையில் கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள்.’
‘அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்’ என்றார் அந்தப் பார்வையாளர் கூட்டத்தில் இருந்த வட்டவடிவ, விளிம்பில்லாத கண்ணாடி அணிந்திருந்த முதியவர். ‘அருமையான படம் அது’.
பாப், அவர் சொன்னதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார். ‘அந்தப் படத்தின் மேலே கூம்பில் கொடிக்கம்பம் மூங்கில் போல வரைந்திருப்பார். ஆனால் உண்மையில் அது இரும்பால் ஆனது. மேயர் முதன்முறையாக கீழிருந்து கொடியேற்ற முயன்ற போது ரிமோட் நுட்பம் பழுதாகி ஒரே களேபரம். மேயருக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. அப்போது தான் நிக்சனின் வாட்டர்கேட் விசாரணை தொடங்கியி.…’
பாப் சொல்லி முடிக்கும் முன்னர், ‘மேயர் காலின்ஸ்தானே, இல்லை அந்த போலிஷ்காரர் ஒருத்தர் இருந்தாரே’ என்று இடைமறித்தார் வட்டக் கண்ணாடி.
‘73ல் பாவ்லோஸ்கி இல்லை. காலின்ஸ் தான். குடியரசு கட்சிக்காரர்.’ என்று சொல்லி விட்டு பெர்கில் டவர்ஸ்க்கு தெற்குபுரத்தில் இருந்த தெருவைக் காட்டி, ‘அந்த கிட்டங்கியெல்லாம் இருக்கிறதே, அது அப்பொழுது பெரிய திறந்த முற்றமாக இருந்தது. மேயர் மற்றும் ஊர் மக்கள் எல்லாம் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் பசங்கள் எல்லாம் டவர்ஸ் மேலே இருபத்தி ஏழாம் தளத்தில் இருந்த கட்டட தொழிலாளர்களுடன் நின்று கொண்டிருந்தோம். அதற்கு மேலான ஐந்து மாடிகளில் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த மாடியில் இருந்தோம். அப்பொழுது தான் அந்தச் சம்பவம் நடந்தது.. டாலியாவும் எங்களுடன் தான் இருந்தாள்.’ என்றார் பாப்.
வட்டக் கண்ணாடிக்காரர், பாப் என்ன சொல்ல வருகிறார் எனப் புரிந்தது போல குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார். அவர் பக்கத்திலிருந்து அம்மையார், அவர் தோளைத் தட்டி நிறுத்த முயல, முதியவருக்கு இன்னமும் சிரிப்பு வந்தது.
அவர்கள் பக்கம் பார்த்துவிட்டு, பாப் தொடர்ந்தார். “அங்கே ஸ்பியர்மேனும் அவருடைய குழுவும் நின்றிருந்தார்கள். அவர் பெண் டாலியா பிரமாதமான பெண். நாங்கள் எல்லாம் ஒரே செட். ஒரே கல்லூரி. ஒரே மேஜர். நிறைய ஊர் சுற்றுவோம். அன்று டாலியா ஓர் அழகான பிங்க் வண்ண ஸ்கார்ஃபை தலையைச் சுற்றிக் கட்டியிருந்தாள். கீழே மேயர் கட்டடத்தை நகருக்கு அர்ப்பணித்து பேசி முடித்ததும், மாடியிலிருந்த ஜன்னல் வழியே ஸ்கார்ஃபை சுற்றி ஆட்டினாள்”
‘அங்கிருந்தா? திறந்தா வைத்திருந்தார்கள் அப்பொழுதெல்லாம்?’ என்றான் எடி.
‘ஆமாம். பிறகு தான் கண்ணாடிகளை மூடி சீல் செய்தார்கள். அப்புறம் உள்ளிருந்து திறக்கவே முடியாது. அது தான் அந்த ரேக்கூன் ஒன்று டவர்ஸ் மேல் ஏறிய போது எங்களால் அதை உள்ளிருந்து தூக்கி காப்பாற்ற முடியவில்லை. அது முழுவதும் ஏறி மேல் மாடிக்கு போகும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று’ என்றார்.
அந்த ஓட்டலின் மாடியில் இருந்தவர் அனைவரும் இப்பொழுது பாப்பைச் சுற்றி வந்துவிட்டார்கள். ‘ஆமாம். அந்த ரேக்கூனை நானும் மேலே மாடிக்குப் போய் பார்த்தேன். என்னவொரு அழகு’ என்றார் வட்டக்கண்ணாடி பெரியவர். உடன் நான்கைந்து பேர்கள் அந்த ரேக்கூனின் தீரச் செயலைப் பற்றியும், பிறகு அதற்கு கொண்டு கொடுத்த சாப்பாடு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். வட்டக் கண்ணாடிக்காரரின் பக்கத்திலிருந்த அம்மையார் முகம் சற்று கடுகடுக்கத் தொடங்கியது.
எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சற்று திகைத்து விட்டு, பிறகு நினைவு மீண்டவராக, பாப் தொடர்ந்தார், ‘ஆங்… டாலியா. மேலிருந்து ஸ்கார்ஃபை ஆட்டியபடியே டாலியா கூட்டத்தை நோக்கி குனிய, வேகமாக வீசிய காற்றில் அது பறந்து போய்விட்டது. எட்டிப் பிடிக்க எம்பினாள் பாருங்கள், அவள் ஸ்கர்ட்டும் அப்படியே தூக்கிக் கொண்டு விட்டது… அவள் பதறிப் போய் பின்னால் ஓடிவந்தாள்.’’
அந்த வட்டக்கண்ணாடி மனிதர் மீண்டும் குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார். ‘ஆமாம். நினைவிருக்கிறது. அவள் செம அழகு’ என்று ஆமோதித்துக் கொண்டே தொடர்ந்து சிரித்தார்.
பாப் அவரைப் பார்த்து, ‘உங்களுக்கும் நினைவிருக்கிறதா? அவளைப் போல அழகி அப்பொழுது யாருமே இல்லை என நான் சொல்ல முடியும். ஆனால் அந்த ஸ்கர்ட் சம்பவம் நடந்ததும் அங்கே நாங்கள் எல்லாம் ஒரே சிரிப்பு. அவளோ ஒரே அழுகை. மறக்க முடியாத நிகழ்ச்சி’ என்று பெரியதாக சிரித்தார்.
அவர் நிறுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்தவன் போல தோளைக் குலுக்கிக் கொண்டு, ‘இது தான் எங்கள் பாப்… நீங்கள் கேட்கக் கேட்க சுரங்கம் போல சொல்லிக் கொண்டே போவார்’ என்று சொல்லி விட்டு காமிராவை மெள்ள மற்றவர்களிடம் திருப்பி கேள்விகள் கேட்க ஆரம்பித்தான்.
‘அப்புறம் டாலியாவும் அவள் குடும்பமும் அடுத்தக் கட்டட வேலைக்கு என வெர்ஜினியா பக்கம் போய் விட்டார்கள். சொற்பமானவர்கள் மட்டும் தான் இந்த ஊரில் தங்கினார்கள்’ என்று பாப் அவர்பாட்டுக்கு மெலிதான குரலில் சரிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறேழு பேரிடம் கேட்டுவிட்டு, சரிதாவிடம் வந்த எடி, ‘நீங்கள் இந்த நிலத்திற்குப் புதியவர். நீங்கள் சொல்லுங்கள் சாரிதா’ என்றான். அவள் பெயரை அப்படிச் சற்று நீட்டி ஒலித்துத் தான் அவனுக்குப் பழக்கம். சரிதாவிற்கு இப்படி திடீரென காமெராவைக் கொண்டு வந்து முகத்திற்கு நேரே திருப்புவான் என எதிர்பார்ப்பு இல்லாததால் தூக்கி வாரிப் போட்டது.
‘என்ன எடி’ என்று அவள் கூச்சத்துடன் காமிராவை விலக்கப் பார்க்க, எடி விடவில்லை. ‘சும்மா சொல்லுங்கள். இல்லையென்றால் பாப் உங்களைப் பற்றி புதிய கதை ஏதாவது சொல்ல ஆரம்பித்து விடுவார்’ என்றான்.
‘நான்… என்ன… ‘ என்று தடுமாறியவள், மெள்ள சுதாரித்துக் கொண்டு, ‘அந்தக் கட்டடம் ஓர் அழகிய அடையாளம். ஒரு காலத்தின் அடையாளம். அதன் கம்பீரமும் கலையம்சமும் பிரமிப்பாக இருக்கிறது. அதைக் காப்பாற்ற முடியாமல் போனது நம் துர்பாக்கியம். ஆனால், மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை அல்லவா? மாற்றங்கள் இயல்பாக நிகழ்பவை.’ என்றாள். பிறகு என்னமோ தோன்றியது போல, ‘மாற்றங்களை நோக்கிய உணர்வுமயமான கனவுகளுடனான பயணம் தானே வாழ்க்கை. சிற்றோடையின் நீரோட்டம் போல’ என்றாள். அந்த Journey as a Rivulet running என்னும் உவமை அங்கே சுற்றியிருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. ‘வாவ்’ என்றான் எடி. கூடியிருந்த சிலர் கை தட்டினர். சரிதா மிகவும் கூச்சத்துடன் விலகிக் கொண்டாள். அதற்குள் அந்த வட்டக் கண்ணாடி மனிதரின் பக்கத்தில் இருந்த கறார் அம்மையார், எடியின் தோளைத் தட்டித் திருப்பி, ‘மிஸ்டர், மிஸ்டர் …. உன்னைத் தான்’ என்று கூப்பிட்டார்.
எடி அந்த அம்மையாரை நோக்கி காமிராவைத் திருப்ப, அவர் தன் கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனை சுட்டிக் காட்டி ‘இதோ, இன்று காலை தான் ஜேஸ்டன்வில் ஹெரால்டு தளத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள். பெர்கில் டவர்ஸ் திறப்பு விழா பற்றிய படங்கள் தேதிவாரியாக இருக்கின்றன. இவர்…’, பாப்பைச் சுட்டிக் காட்டி, ‘சொல்வதெல்லாம் புளுகும் கற்பனையுமாக இருக்கிறது பார். மே மாதம் பத்தொன்பதாம் தேதி ஞாயிற்றுக் கிழமை எடுத்த படம். மேயர் கையை உயர்த்தி சல்யூட் செய்கிறார் பாருங்கள். அங்கே யாரும் ஸ்கர்ட் பறக்க ஆடவில்லை. சுத்த புல்ஷிட். கொஞ்சம் கண்ணியத்தோடு பேசச் சொல்லுங்கள் அவரை’ என்றார் கடுகடுத்த குரலில்.
சுற்றியிருந்தவரெல்லாம் சட்டென அமைதி ஆகிவிட, அந்தக் கடுகடு அம்மையாரின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த வட்டக்கண்ணாடி மனிதர் சுதாரித்துக் கொண்டு ‘நீ சொல்வது உண்மை தான் டெபி. பத்தொன்பதாம் தேதிதான் அது. அன்று தான் டவர் பில்டிங்கை திறந்து வைத்தார்கள். எனக்கும் நன்றாக நினைவிலிருக்கிறது’ என்றார். டெபி அவரைத் திரும்பி முறைத்து, ‘பிராடி, கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருங்களேன், தயவுசெய்து’ என்றார். அதற்குள் யாரோ, ‘மணி ஆகி விட்டது. மணி ஆகி விட்டது. பத்தரை மணி’ என்று சொல்ல, பாப்பைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் திரும்பி பெர்கில் டவர்ஸை நோக்கி பார்க்க ஆரம்பித்தார்கள்.
எடி அவசர அவசரமாக ட்ரான்ஸ்மிட்டர் வழியே ட்ரோனை மேலெழுப்பி பறக்க விட்டான். அதன் ப்ரொபெல்லரின் வ்வ்ர்ர்ரூரூம் என்கிற சத்தம் மட்டும் அப்போது பிரதானமாக கேட்க, எல்லோரும் அமைதியாக பெர்கில் டவர்ஸையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதலில் நான்காவது, ஒன்பதாவது, பதினாறாவது, இருபத்தியிரண்டு மற்றும் இருபத்து ஒன்பதாவது தளங்களில் சிறிய அளவில் வெடித்து பக்கவாட்டில் சீறியது. அடுத்து கிழக்குப் பக்கம் இருந்த படிகள் பகுதி அப்படியே மொத்தமாக குலுங்கிச் சரிய, அந்த நொடியின் பின்னப்பகுதி முடிவதற்குள் மொத்தக் கட்டடமும் மளமளவென சரியத் தொடங்கியது. பதினாறு நொடிகள் தான். சரியாக பதினாறு நொடிகள். மொத்த கட்டடமும் இடிந்து தரைமட்டமாக ஆனது. இடிதலினால் ஏற்பட்ட தூசி படலம் எழுந்து அடங்க மேலும் சில நிமிடங்கள் ஆனது. வியப்புக் கூக்குரல்களிடையே பெர்கில் டவர்ஸ் காற்றோடு கரைந்து தரையோடு தரையாக கல்லும் தூசியுமாகி விட்டது. கொஞ்ச நேரம் அந்த வெட்ட வெளியை நோக்கி விட்டு எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். காரில் திரும்பும் போது பாப் எதுவும் பேசவில்லை. கட்டடத்தோடு சேர்ந்து அவரும் குலைந்து போய் விட்டாரோ என்று நினைத்துக் கொண்டாள் சரிதா.
அடுத்த இரு வாரங்களில், எடியின் அழைப்பின் பேரில் சரிதா ஓர் ஆப்பிரிக்க உணவுத் திருவிழா மற்றும் ஒரு நவீன நாடகம் ஒன்றுக்கும் போய் வந்தாள். அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நியூயார்க் காப்பீடு நிறுவனம், நேர்காணலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. கிட்டத்தட்ட வேலை தகைந்து விடும் போலத் தான் இருந்தது.
ஜேஸ்டன்வில்லில் இருந்த அறிவியல் பயிற்சியகத்தில் ஐஸ்க்ரீம் போட்டி ஒன்றுக்கு போன போது எடியிடம் நியுயார்க் வேலையைப் பற்றிச் சொல்லி விடுவது நல்லது என சரிதா நினைத்துக் கொண்டாள். இந்த ஊரில் அவளுக்கென சொற்ப நண்பர்கள் வட்டம் இருந்தாலும், அதில் எடி என்னவோ ஸ்பெஷலாக ஆகிவிட்டிருந்தான். அறிவியல் கூடத்தில் போட்டி களைகட்டியிருந்தது. போட்டியிடும் அணிகள் எல்லாம் விதவிதமான வகைகளில் ஐஸ்க்ரீமை தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஐஸ்க்ரீம் செய்வதற்கான சகல சாமக்கிரியைகளையும் தயார் செய்து கொண்டு, திரவ நைட்ரஜனை அதனுடன் கலந்தால் போதும். மந்திரம் போல் இரண்டொரு நிமிடங்களில் ஐஸ்க்ரீம் தயாராகி விடுகிறது.
‘கவிதைக்காரப் பெண்ணே! உனக்கென்ன, அதி வேக சம்பவங்களில் தான் எப்போதும் நாட்டமா?’ என்று குரல் கேட்டு திரும்பினால் பாப் ஜோன்ஸ் நின்று கொண்டிருந்தார்.
‘இங்கே நாங்களும் போட்டியாளர்கள்’ என்று அவரைச் சுற்றியிருந்த குழுவைக் காட்டினார். ‘அவர்கள் எல்லாரும் கடும் உழைப்பாளர்கள். நான் சும்மா கதையடித்துக் கொண்டு அவர்களை குஷிபடுத்துவதற்காக வந்திருக்கிறேன்’ என்றார். பிறகு நினைவு வந்தவர் போல, ‘உன்னிடம் அன்றே சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். அன்று நீ ஏதோ பயணம் பற்றி அழகாக சொன்னாய் இல்லையா? எனக்கு அது வால்ட் விட்மனின் வரிகளை நினைவுப்படுத்தியது. விட்மனின் பாசேஜ் டூ இன்டியா படித்திருக்கிறாயா?’ என்று கேட்டார்.
சரிதா மறுப்பாக தலையை அசைக்கவே, ‘அதனால் என்ன, உன் நண்பனுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. என்னுடைய பேச்சுக்களை எல்லாம் வெட்டிவிட்டு, உன் முகம் தான் நிறைய இருந்தது அந்த வீடியோவில். இல்லையா’ என்றார்.
சரிதா அதைப் பார்த்திருந்தாள். அன்று பாப் சுரத்தில்லாமல் ஆகிவிட்டதில் அவளுக்குச் சற்று வருத்தமாகி விட்டாலும், எடி அவள் மீது காட்டிய அதீத கவனம் அவளுக்கும் புரிந்திருந்தது. பாப் அதைப் பற்றி சொல்லும் போதே அவள் கன்னங்களில் இரத்தம் பாய்ந்து சிவப்பதை உணர முடிந்தது.
‘உன் நண்பனைச் சொல்லியும் குற்றமில்லை. அன்று நான் கொஞ்சம் அதிகமாகத் தான் பேசி விட்டேன்’ என்று சொல்லிவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டார்.
‘ஆனாலும், அன்று நீங்கள் பழைய நினைவுகளால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தீர்கள் பாப். பெர்க்கில் டவர்ஸ் இடிவது உங்களை தீவிரமாக பாதித்திருத்ததால் தான் தேதிகளைக் குழப்பிக் கொண்டீர்கள் போல’ என்றாள்.
பாப் திடுக்கிட்டது போல நிமிர்ந்து பார்த்தார். ‘சேச்சே! நான் எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை. அன்று நான் சொன்னது, சிட்டி ஹாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஜார்ஜ் வெல்ஷின் ஓவியத்தைப் பற்றித் தான். அதில் மே பதினெட்டு திறப்பு விழா என்று எழுதியிருந்தார். ஆனால், நகராட்சி மன்றத்தில் திட்டத்தை மாற்றி விட்டார்கள். மேயர் காலின்ஸ், கட்சிக் கூட்டம் என வாஷிங்டென் போக வேண்டியதிருந்ததால், தேதியை மாற்ற வேண்டியதாகப் போய் விட்டது. அதனால் தான் பத்தொன்பதாம் தேதி ஞாயிற்றுக் கிழமைக்கு பெர்க்கில் டவர்ஸை திறந்து வைத்தார்கள்’ என்று சொல்லி விட்டு, சற்று நெருங்கி, மெலிதான குரலில் ‘உனக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. அப்போது தான் அதிபர் நிக்சன் மீதான வாட்டர்கேட் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. சொல்லப் போனால் அந்த வாரம் தான் டிவியில் செனட் கமிட்டியின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கினார்கள். நிக்சனின் கேடு காலம் பெர்கில் டவர்ஸின் திறப்பு விழாவோடு தான் தொடங்கியது. மே மாசத்திலிருந்து வெடிகுண்டு மேல் வெடிகுண்டாக வந்து, அக்டோபரில் அவர் ஆள் மொத்தமாக காலி’ என்று சிரித்தார்.
‘என்ன பாப், அன்றைக்கு நீங்கள் தேதியைத் தப்பாகச் சொல்கிறீர்கள் என்று குற்றம் சொன்னபோதே இதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே?’ என்றாள் சரிதா.
‘அன்று எல்லாருமே உணர்ச்சிகளால் ஆட்பட்டிருந்தார்கள். ஒரு பெரும் அடையாளம் கண்ணுக்கு முன்னால் மறையப் போகிறதே என்றிருந்தது. அதான் அப்படியே விட்டுவிட்டேன்’ சிரித்துக் கொண்டார்.
‘சில விஷயங்களை அப்படியே விட்டு விடுவது நல்லது. அப்படித் தான் டாலியாவும் சொல்லிக் கொண்டிருந்தாள். பெர்க்கில் டவர்ஸ் கட்டட வேலை முடிந்ததும், அவள் பெற்றோர், அடுத்த பிராஜெக்ட்டிற்காக வெர்ஜினியாவிற்கு குடிபெயர வேண்டியிருந்தது. அப்பொழுது அவளும், அப்படித் தான் சொல்லிவிட்டுச் சென்றாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை’, என்று சற்று அமைதியானார்.
“அந்தத் திறப்பு விழா முழுவதும் நாங்கள் ஒன்றாகத் தான் இருந்தோம். அவள் ஜன்னல் வழியே கூட்டத்தை நோக்கி ஆரவாரித்துக் கொண்ட போது நான் அவள் பின்னே நின்று கொண்டிருந்தேன். அந்த ஆரவாரமும் கொண்டாட்டமும் எப்போதும் என் வாழ்க்கையில் தொடரப் போகிறது என்ற நம்பிக்கையுடன். ஆனால் அது நடக்கவில்லை.’ பிறகு சரிதாவை நிமிர்ந்து பார்த்து, எடி இருந்த திசையைச் சுட்டிக் காண்பித்து, ‘நான் டாலியாவை போதுமான அளவு தடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், உன் நண்பன் அப்படியில்லை. ஹி இஸ் எ கீப்பர். உன்னை எப்படியும் இருக்க வைத்து விடுவான் எனத் தெரியும்’ என்று அவள் முகத்தையே பார்த்தார். அதிலிருந்த மெல்லிய நாணத்தை அடையாளம் கண்டுகொண்டதும், அவள் கன்னத்தைத் தட்டிச் சிரித்தார்.
தன்னை மெள்ள சுதாரித்துக் கொண்ட சரிதா, ‘ஆனால் பாப், அன்று டெபி அவ்வளவு கோபமாக பேசியிருக்க வேண்டியதில்லை.’ எனத் தொடங்க, ‘போகட்டும்’ என்பது போல் கையை ஆட்டினார், ‘அதெல்லாம் பழைய நினைவுகளின் இடிபாடுகள். அந்தக் கட்டடக்காரர்கள் தங்கியிருந்த கேட்டோவை சுற்றி பலருக்கும் பல்வேறு நினைவுகள் இருக்கும். டெபி எதனால் உணர்ச்சிவயப்பட்டாளோ. விட்டுக் கொடுத்தல் என்பது எல்லாருக்கும் அமைதியைத் தந்து விடுவதில்லை. அதையெல்லாம் விட்டுத்தள்ளு’ என்று கண்களைச் சிமிட்டிவிட்டு திரும்பிச் சென்றார்.
அந்தப் போட்டிக்கு அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் தான் நீதிபதிகள். எல்லா குழுவினரின் ஐஸ்க்ரீம் தயாரிப்பையும் ருசித்துப் பார்த்து, அவற்றைத் தர வரிசைப்படுத்தி எழுதிக் கொடுக்க வேண்டும்.
பாப்பின் குழு மூன்றாம் பரிசை வென்றது. மகிழ்ச்சியோடு அவருக்கு கைகாட்டி வாழ்த்து சொல்லி விட்டு சரிதாவும் எடியும் திரும்பினார்கள். பெர்க்கில் டவர்ஸ் இருந்த மைதானத்தைச் சுற்றியபடி போகும் போது, அந்தச் சாலை வளவின் பின்னால், பெரிய அறிவிப்புப் பலகை இருந்ததைக் காட்டினான் எடி.
இப்போது அந்த இடம், இடிபாடுகள் எல்லாம் அகற்றப்பட்டு நன்கு செப்பனிடப்பட்டிருந்தது. அங்கே இனி புதியதாக வரப்போகும் ஒரு மெக்ஸிகன் உணவகம், ஒரு சினிமா தியேட்டர், இருநூற்று சொச்சம் அறைகள் கொண்ட ஓட்டல், ஒரு மருத்துவ காப்பீட்டு அலுவலகம், ஐநூற்றி முப்பது வீடுகள் என்று இருநூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் பெரிய பிராஜெக்ட் பற்றிய திட்ட அறிவிப்பு அது.
‘இவ்வளவு துரிதமாக வேலையைத் தொடங்கி விட்டார்களா’ என்று ஆச்சரியப்பட்டாள் சவிதா.
‘அபார்ட்மெண்ட்களுக்கு இப்போதே அட்வான்ஸ் புக்கிங் கூட ஆரம்பித்து விட்டது. நான் சொல்வதைக் கேள்.. நீயும் கூட இங்கே ஒரு வீட்டை வாங்கிப் போடலாம்‘ என்று சிரித்தான்.
நினைவு வந்தவளாக அடுத்த வாரம் இருக்கும் நியூயார்க் இண்டர்வ்யூ பற்றி சொல்ல வாயெடுத்தாள். அதற்கென்ன இப்போது அவசரம் என்று தோன்ற, பேசாமல் சிரித்தாள். அவளைத் திரும்பிப் பார்த்த எடியின் சிரித்த முகம் இன்னமும் சிவந்து கனிந்தது.
பெரும் ஸ்க்ரேப்பர்கள் கொண்டு அந்த நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தார்கள். புதியதாக.