ஸொல்தான் ஃபாப்ரி : ஹங்கேரியிலிருந்து பேசுகிற கலைஞன்

by எம்.கே.மணி
0 comment

“…you must make them hate themselves!“

உக்கிரமான சூழல் அது. பேராசையும் இனவெறியும் செலுத்தின இரண்டாம் உலகப் போரின் கொந்தளிப்பான தருணத்தில் மனிதன் குழி எலியைப் போல பதுங்க வேண்டியிருந்தது. பித்து நிலையை ஒரு நோய் போல பரவச் செய்த அதிகாரம் சாமான்ய மனிதர்களை கையாண்ட முறைமைகள் கற்காலத்தில் இருந்தும் கேள்விப்பட்டிருக்க முடியாதவை. தி ஃபிப்த் சீல் (The Fifth Seal) படத்தில் மனிதனின் அதிகாரம் எந்த எல்லைக்கும் போக முடியுமென்பதை உணர்த்தும் ஒரு வசனம் தான் மேற்கண்டது. மிகுந்த கட்டுப்பாட்டுடன், அறிவாளுமையுடன், அனுபவித்துப் பேசப்படும் அது. கூட்டத்தையும் மந்தையையும் ஆளுவதற்கு அது எளிமையான வழி. இருண்மையான, அடர்த்தியான, தனிமை நிரம்பிய இந்தப் படம் நம்முடன் உரையாடிக் கொண்டே வரும் போது எழுகிற பீதி அசாதரணமானது. ஒருவேளை உள்ளுக்குள் இருக்கிற நம்முடைய அடிப்படைகளைக் கூட அது வெளியே கொண்டு வருகிறதோ? எப்போதுமே கொழுத்துத் திரியும் அதிகாரம் நமது விரைகளை மிதித்து நசுக்கத் தயங்காது என்று நாமறிந்ததைக் காட்டிலும் பதினாறு அடிக்குப் பாய்ந்து நமது ஆன்மாவை ஒரு பாதாம் கொட்டையைப் போல உடைத்து அதன் பருப்பை சாக்கடையில் எடுத்துப் போடும் என்பது நாம் உள்ளில் எடுத்துக் கொள்ள வேண்டிய உண்மை. மனிதன் வெறும் மயக்கத்துடன் பிழைத்துப் போகும் போது எந்தப் படுகொலைகளையும் தொடர முடியும்.

ஃபிப்த் சீலின் இயக்குனர் தான் இக்கட்டுரையின் நாயகன்.

ஹங்கேரியில் இருந்து நம்மோடு பேசுகிறவர்.

Zoltan Fabri

ஒரு படத்தின் வழியே அவர் பேச வருகிற அபாயம் ஒரு ஆராய்ச்சியின் முடிவைப் போல இருக்கிறது எனலாமா? உளவியல் டச் ? இல்லை, இது போதாது, அதற்கு மேலும் சொல்ல வேண்டும். ஒரு இதழியலாளர் போலவோ, கார்ட்டூனிஸ்டைப் போலவோ இதை ஒரு போதும் அவர் அரசியல் மொழியில் சொல்லவில்லை என்பது மிக முக்கியம். ஸொல்தான் ஃபாப்ரி ஒரு கலைஞன். அங்கே உருவாகி வருகிற சுழலின் வட்டங்களே வேறு. ஒரு செய்தித்தாளைப் படித்து விட்டு, தொலைக்காட்சி வர்ணனைகளைக் கேட்டு விட்டு, அல்லது இணைய தொடர்புகளில் கொதித்துக் கொள்ளுவதைப் போல அன்றாடப் பொழுது போக்காக கலை முடிந்து போவதில்லை. ஃபிப்த் சீல் 1976 இல் வந்திருக்கிறது. இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படம் தன்னுடைய மடிப்புகளை அதிகரித்தவாறு இருக்கிறது.

ஃபாப்ரி முதலில் ஓவியத்திலிருந்து தன்னை அடையாளம் காணத் துவங்கியிருக்கிறார். அரங்க வடிவமைப்பாளராக, நாடக இயக்குநராகத் தொடர்ந்திருக்கிறார். அவரது திரைப்படங்கள் இலக்கிய அடிப்படையை எடுத்துக் கொண்டவை. அவர் எடுத்துக் கொள்கிற படிமங்கள் எல்லாவற்றிலும் இலக்கியப் புழக்கம் உள்ள யாவருக்கும் அதில் ஓடுகிற அச்சு வரிகளைப் படித்து விட முடியும். அவருடைய மனம் தனது படிப்பினால் அனுபவங்களால் வெகு எளிமையாக காட்சிகளை உருவகித்துக் கொண்டு அதி விரைவாக முன்னேறியவாறு இருந்திருக்கும் என்று யூகிக்கிறேன். அவரது படங்கள் அவருக்கு எப்போதும் சிரமமானதாக இருந்திருக்காது என்பது என் துணிபு.

The Fifth Seal, 1976

ஏனெனில் அவரது ஆரம்ப காலப் படங்களில் கூட வழுக்கிக் கொண்டு செல்வது அந்த சரளம் தான். ஒருபோதும் சினிமாவை விற்றவாறு இருக்கிற திறமைசாலிகளுக்கு கைவர ஆகாத சரளம். இந்த அளவிற்கு முழுமை கொள்ள வேண்டுமா என்கிற சந்தேகமே வரும். Merry Go-Round (1956) படத்தின் துவக்கத்தில் கதையின் நாயகி சந்தோஷம் கொள்ள ஆரம்பிக்கிறாள் என்பதில் துவங்கி, அது பறப்பதாக எல்லையற்று நிற்கும் நிலம் விட்டு எழுவதாக கிறங்கி, இறுதியில் மண்ணுக்கு யதார்த்தத்துக்கு வந்து சேர்வது வரை எடுக்கப்பட்டு கோர்க்கப்பட்டிருக்கிற ஒரு அத்தியாயம் மலைக்க வைத்தது என்பதை சொல்ல வேண்டும். அது அந்தப் படத்தின் முக்கிய குறிப்பு. மேலும் ஒரு முறை பயன்படுத்த வேண்டியது. இம்மி பிசகாமல், கைகள் கொண்டு மூடி தீபத்தைக் காப்பாற்றுவது போல எடுத்து வந்து முழு படத்திற்குமான ஜீவனை நிறைத்திருப்பார்.

Merry Go-Round (1956)

அப்படத்தில் மேலும் அசலான காட்சிகள் உள்ளன. தனது காதலி வேறு ஒருவனுக்கு நிச்சயமான பிறகு அவ்வீட்டை விட்டு வெளியேறி வந்து இருளில் நிற்கிற நாயகனின் முகத்தில் அசைகிற நிழல்கள் மனதின் எவ்வளவோ ஊஞ்சலாட்டங்களை நினைவுறுத்துகின்றன. அதில் தெய்வமும் சாத்தானும் வந்து போகிறார்கள். அப்புறம் திருமணக் கொண்டாட்டத்தில் மாரியும் அவளது காதலனும் ஆடத்துவங்கி அது உச்சத்திற்குப் போகிற காட்சி படு உக்கிரம். உலகின் மகத்தான  திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கக் கூடிய எந்தக் காட்சிக்கும் சவால் வைக்கக் கூடியது. முன்பு சொன்ன அந்த ராட்டினத்தின் வேகம் இந்த நடனத்திலும் சுழல்கிறது. எவ்வளவு உறுதியான காட்சி என்று நினைக்கிறீர்கள்?

உறுதி. சரியான சொல். அது ஃபாப்ரியின் படங்களில் மிக முக்கியமான செயற்பாடு.

ஒவ்வொரு திரைப்படமும் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கும். அதற்கு வேண்டிய ஒழுங்கில் திரைக்கதை வேண்டும் என்பது நடைமுறை. எனினும் அமைகிற கதாபாத்திரங்கள் அதன் நேர்க்கோட்டில் பயணிக்காமல் கதையின் சுவாரசியங்களுக்காக, அல்லது ஒருவிதமான கோழைத்தனத்தில் கூட அவ்வப்போது முதுகு வளைந்து விடுவது நடக்கக் கூடியது தான். இங்கே அந்த மாதிரி கலாச்சாரமே இல்லை. The Boys of Paul Street (1969)-இல் சொல்லப்படுவது சிறுவர்களின் கதைதான். இரண்டு குழுவினராக இருக்கிறார்கள். அவர்கள் திட்டமிடுகிறார்கள். மோதுகிறார்கள். எல்லாம் தான். சிறியவர்கள் எல்லாம் யார், பெரியவர்களின் நகலாக தங்களை பண்ணிக் கொள்கிறவர்கள் தானே? மும்முரமாக யுத்தம் செய்கிறார்கள். ஆனால் அதன் விளைவு இருக்கிறது. எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு உயிர் பலியாவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்தக் கதையில் ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப்பட்ட சிலை போல அத்தனைக் கூர்மையோடிருந்தன. அந்தத் திரைக்கதை மிக வலுவான அடிப்படையுடன் எந்த அவசரமுமில்லாமல் மெல்ல வளர்ந்து பரவி அதன் இறுதியில் தனது பார்வையாளர்களைக் கலங்க வைத்ததை ஒரு உறுதியாகவே காண்கிறேன். Merry Go-Round-ஐ எடுத்துக் கொள்ளலாம். மாரி என்கிற பெண் எங்கே அமைதி கொண்டாலும், குமைந்து கண்ணீர் விட்டாலும், சூழ்நிலைக்கேற்ப, மனதின் அலைகழிப்பிற்கேற்ப பேச நேர்ந்தாலும் இறுதியாய் தனது காதலனுடன் எப்படி இணைகிறாள் என்றது கதை. இக்கதை ஆயிரம் படங்களில் இருக்கிறது. ஆனால் இதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திரைக்கதையைப் பார்க்க வேண்டும். மனிதர்களுக்கிடையே உள்ள முரண்களை தீர்த்துக் கொள்ள முடியுமென்றால் அதனிடையே வருகிற சகல மோதல்களையும் நாடகங்களையும் வரிசைப்படுத்தி ஒவ்வொருவரையாக கனிய வைத்து வெற்றி கொண்டே வருவது மாரி மட்டுமல்ல, திரைக்கதையும் தான். Two half Times in Hell (1962) படமும் அப்படியே. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவர்களிடையே மெதுவாக வருகிற மனப்பொருத்தத்தை வைத்து தான் ஒரு குழுவை உருவாக்கி ஜெர்மானியர்களுடன் கால்பந்து விளையாட முடியும். ஓரிரு பூசல்களுடன் நெருடலாக செல்லும் அவர்களின் உறவு மேம்படுவதற்கான உறுதியுடன் வருகிற ஒரு அத்தியாயம் சட்டென சிக்கல்களை அவிழ்க்கிறது. அவர்களை ஒன்றுபடுத்துகிறது. ஃபாப்ரி தனது கதைகளில் திரைக்கதைகளில் கூட கொடி பறக்க செய்தவர்.

Two Half Times in Hell (1962)

தனக்கு இன்னது வேண்டும் என்கிற தெளிவை எட்டி விட்டவர்கள் தமக்குரிய தொழில்நுட்ப கலைஞர்களை எட்டுவதில் பின்னடைய மாட்டார்கள். பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றை படமாக்கத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். நடிக, நடிகையரை அவர் மனதால் அறியும் காரியம் இறுதி வரை இருந்திருக்கிறது. சொந்த தேசத்திலும், வெளியிலும், உலக அளவிலுமாக அவரைத் தேடி விருதுகள் வந்திருக்கின்றன. இருபதுக்கும் அதிகமான படங்கள் செய்திருக்கிறார். 1917 இல் பிறந்திருக்கிறார். 1994 இல் இறப்பு நடந்திருக்கிறது. மேலதிக செய்திகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன.

சினிமா சிலருக்கு தொழில்.

சினிமா சிலருக்கு தான் பேசக் கூடிய மீடியம்.

சமூகத்தின் மீது மனமார்ந்த பற்று கொண்டவனுக்கு, அவன் படைப்பாளியாக இருக்கிற பட்சம் அவனுக்கு ஒரு பார்வை அமையும். அவனுள்ளே திமிறும் எண்ணத்தொலையா உணர்வுகளுக்கு கலையின் வழியே வடிகால் வேண்டுமென்றால் அவனுக்கு தன்னைத் திரட்ட தெரிந்திருக்க வேண்டும். எல்லா கோணங்களிலும் மும்முரமாயிருந்து தான் தன்னை யார் என்று தனது படங்களில் வெளிப்படுத்தும் திறன் கொண்டவராக ஃபாப்ரி இருந்திருப்பார். கால் பந்தாட்டம் விளையாடப் போனவர்களின் வெற்றி அவர்களுக்கே தோல்வியாகிறது என்கிற கதையை நாம் கிளர்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால் வீரத்துடன் தீரத்துடன் ஒரு செயல் செய்யப்பட்டு விட்டது என்கிற திருப்தி. ஆனால் அதே நேரம் இனவெறி எதையும் அழித்து தன்னை ஸ்தாபித்துக் கொள்ளுவதை மிகுந்த வலியுடன் திரை அணைந்து முடிந்த பின்னரும் யோசித்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் விடுதலை அடைவதையும் நாம் ஒரு பொறிக்குள் சிக்கி கொள்வதையும் அறியலாம். உண்மை எட்டெட்டு அறுபத்து நான்கு திசைகளிலும் தோகை விரிக்கக் கூடியது என்பதின் வழியே பல்வேறு சாத்தியப்பாடுகளின் வழியே உண்மைக்கு சென்று சேரக் கூடிய நம்பகமான பாதையை நல்ல படைப்பாளிகள் காட்டுகிறார்கள்.

ஃபாப்ரிக்கு அது தண்ணீர் போல பெருகி வருகிறது.

Zoltan Fabri, The Boys of Paul Street (1969)

ஒரு சில படங்களைக் கொண்டு மட்டுமே நான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். இன்னும் மிச்சம் இருப்பவைகளை பார்க்க வேண்டும். சினிமா என்ன சினிமா ? ஒரு படம் அப்படியே நம்மை கொத்திக் கிளறி பண்படுத்தி விடப் போவதில்லை என்று பலரும் பேசிக் கேட்டிருக்கிறேன். அது ஒரு சவடால் தான். படைப்பவன் ஒரு பக்கம். பார்வையாளன் மறு பக்கம். இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் நெருங்கும் போது ஃபாப்ரி போன்றவர்களின் இன்றியமையாமை தெரியும்.

உலகின் கொஞ்சம் நல்ல விஷயங்களை போற்றத் தெரிந்து அவற்றில் இருந்து எதையாவது எடுத்துக் கொள்ள விழைந்தால் அவரிடம் அந்த சரக்கிருக்கிறது.