எனக்கு பாபரோடு எந்தவித உறவும் இல்லை. ராமரோடு எந்தவிதப் பகையும் இல்லை. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் இருவரும் என்னோடு பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இறக்கி விட முடியாத வரலாற்றுச் சுமை அவை. நான் மானசீகனாக அறியப்படுகிற வரை பிரச்சினை இல்லை. முகம்மது ரஃபீக் தான் மானசீகனாகியிருக்கிறான் என்று அறிய நேர்ந்தவுடன் ஏதோ ஒருவிதத்தில் நான் பாபரோடு இணைக்கப்பட்டு விடுவேன். ராமனைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இது தமிழ்நாட்டில் குறைவாக இருக்கலாம். நான் இந்தியில் எழுதுகிற எழுத்தாளனாக இருந்தால் இந்த நெருப்பாற்றில் நீந்தியே நான் சுவர்க்கம் சென்றடைய முடியும்.
ராமர் என்றொருவன் என்னோடு படித்தான். மூன்றாம் வகுப்பில் ராமாயணக் கதையை வகுப்பில் சொன்ன போது அவனைத் தான் தமிழ் சார் ராமனாகத் தேர்ந்தெடுத்திருந்தார். சீதையாக நடிக்க மல்லிகா என்ற பெண்ணை முன்னால் வரச் சொன்னார். எங்கள் வகுப்பில் அவள் மட்டும் தான் அழகி. அந்தச் சிற்றூரில் அழகியென்பது வேறொன்றுமில்லை. தினமும் குளித்து, படிய வாரி, நேற்று போட்ட பாவாடை சட்டையையே போடாமல் வேறொரு பழைய பாவாடை சட்டையோடு, நெற்றியில் பொட்டு வைத்து வந்தாலே அவள் அழகி தான். நாங்கள் அழகென்பதை அவ்வாறு ஏற்கவே பழகியிருந்தோம். அதனால் மல்லிகாவை அவ்வளவு அழகனில்லாத ராமனுக்கு ஜோடியாகப் போட்டதில் அவளைப் போலவே தினந்தோறும் குளித்து, சட்டை, டவுசர் மாற்றி, சித்திமார்களின் கைவண்ணத்தால் பவுடர் சகிதம், நெற்றிப் பொட்டில் மையெல்லாம் வைத்து வரும் எனக்குச் சற்று கோபம் தான். முதலும், கடைசியுமாக நான் வெறுத்த ஒரே ராமன் அவன் தான்.
இஸ்லாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் நண்பர்களோடு கோவிலுக்குப் போவதில் எந்த மனத் தடையும் இல்லாதவன் நான். அந்த வகையில் குச்சனூர் சனீஸ்வரன் கோவில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில், கருங்கட்டான் குளத்திலிருந்த பத்ரகாளியம்மன் கோவில், போடி பரமசிவன் கோவில், தீர்த்தத் தொட்டி கோவில், நந்தவனம் காளியம்மன் கோவில், உத்தம பாளையத்தில் நான் படித்த பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த கருப்பசாமி கோவில், எங்கள் வீட்டுக்கு அருகில் பள்ளிவாசலோடு இரட்டைப் பிள்ளையைப் போல் ஒட்டிக் கிடந்த விநாயகர் கோவில், நான் அடிக்கடி இளைப்பாறும் முனீஸ்வரன் கோவில், அனுமந்தன்பட்டி அனுமார் கோவில், எங்களுடைய எல்லா லீலைகளுக்கும் சாட்சியாய் இருந்த நண்பன் திருமலையின் குடும்பச் சொத்தான தர்மர் கோவில், பல விடுமுறை நாட்களில் குளித்து விட்டு முழு நிர்வாணமாய் படுத்திருக்க அனுமதித்த ஞானம்மன் கோவில், மாலைப் பொழுதுகளில் பொரி கடலையோடு இந்தப் பக்கம் பெருமாள், அந்தப் பக்கம் சிவன் என்று இருவரையும் பார்த்துக் கொண்டே மெரீனா கடற்கரையில் அமர்கிற பாவனையில் இருந்து களித்த கம்பத்தின் கம்பராயர் கோவில், மாட்டுப் பொங்கலன்று தவறாது போய் வரும் நந்தகோபால் கோவில், ஆரம்பத்தில் ஒவ்வொரு வருடத் திருவிழாவிலும் ஏதோ ஒரு ஜாதியைச் சேர்ந்த அத்தை அழைத்துப் போய் காட்டி ஆச்சர்யப்படுத்த, கொஞ்சம் வளர்ந்த பிறகு நானே நண்பர்களோடு அங்கு போய் கூட்டத்தில் அத்தை மகள்களைத் தேடிய வீரபாண்டி மாரியம்மன் கோவில் என்று இளமைப் பருவத்துக் கோவில்களின் வரிசையில் இராமருக்கு இடமேயில்லை. எனக்குத் தெரிந்து எங்கள் மாவட்டத்தில் ராமருக்கு தனியாகக் கோவிலே இல்லை. தமிழகம் முழுவதும் தேடினால் கூட அரிதாகவே காணக் கிடைக்கும்.
ஆசிரியர்களின் தொடர்கதை கூறல்களாலும், தூதர்ஷனின் தயவாலும் தான் எனக்கு ராமர் அறிமுகமானார். அப்போதும் கூட அவர் கடவுளாக மனதில் பதியவில்லை. போடியில் எங்கள் அம்மா வீட்டுக்குப் ( எனக்கு தாத்தா வீடு தான் எங்கள் வீடு ) பக்கத்தில் ஒரு பாட்டி இருந்தார். நாயக்கரம்மா என்று தான் எல்லோரும் அழைத்துக் கேட்டிருக்கிறேன். ‘நாய்க்கர் பாட்டி’ என்று நான் அழைப்பேன். அவர் வீட்டில் நிறைய சாமி படங்கள் இருக்கும். அதில் ராமரும் இருப்பார். கொஞ்சம் தள்ளி எம்ஜிஆரும் படமாகத் தொங்கிக் கொண்டிருப்பார். ஆனால் நாயக்கர் தாத்தா அவரை அடித்து விட்டால் கிழவி ராமரை விட்டு விட்டு எம்ஜிஆரிடம் தான் முறையிடுவார். ‘நீ செத்து மண்ணடில போயிட்டேன்னு கிழவனுக்கு தெகிரியம் வந்துருச்சு’ எனச் சொல்லி ஓவென்று அழுது விட்டு கிழவனை சுந்தரத் தெலுங்கில் ஏசுவார். அவர் சொல்லித் தான் ‘ராமர்’ சாமி என்பதே தெரியும்.
ஒரு நள்ளிரவில் அவர் தான் ராமரின் கல் நெஞ்சத்தால் சீதையை நிலம் விழுங்கிய கதையையும் முதன்முதலாகச் சொன்னார். அதைச் சொல்லும் போது அவர் உடலில் அப்படி ஒரு நடுக்கம். கண்களில் கண்ணீர் பெருக, துடைத்துக் கொண்டே கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னால் நிறைய ஆசிரியர்களிடம் ராமாயணம் கேட்டிருந்த எனக்கு, கிழவி சொன்னது புதிதாக இருந்தது. இதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. ராமர் சாமியுமில்லை. நம்மைப் போல் நல்லதும் கெட்டதும் கலந்த ஆள் என்று மனதில் பதிய வைத்துக் கொண்டேன். ஊருக்குப் போனதும் ஆசிரியரிடம் இதைக் கேள்வியாகக் கேட்டேன். ஆசிரியர்கள் தங்கள் இயல்புப்படி ‘உக்காந்து படிடா’ என்று ஆணையிட்டு என் ஆர்வத்தை புஸ்வானமாக்கி விட்டார்கள். ஆனால் நிலம் விழுங்கிய பெண்ணின் படிமம் ‘ராமன்’ என்கிற பெயரோடு என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. ராஜா சாரை சந்தித்த பிறகு தான் எனக்கு விடை கிடைத்தது. அவர் தான் அது ராமாயணத்தின் ‘உத்தர காண்டம்’ என்பதையும் அதைத் தமிழில் கம்பன் பாடவில்லை, ஒட்டக்கூத்தன் தான் பாடினான் என்பதையும் சொன்னார். அதற்குப் பிறகு கம்பனைத் தேடத் தொடங்கினேன்.
தொண்ணூறுகளில் இந்துத்துவ அரசியல் இந்தியாவில் கருக்கொண்டதன் உப விளைவாக தூதர்ஷனில் தொடர்ந்து ராமாயணம் ஒளிபரப்பானது. அதில் வரும் ராமரை நான் கண்டுகொண்டதேயில்லை. சீதை, மண்டோதரி, சூர்ப்பநகை, ஊர்மிளை, திரிசடை என்று தேடல் வேறு திசையில் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு சீரியலில் கோசலை, கைகேயி கூட இளமையாக இருந்தனர். அதே காலகட்டத்தில், கூடப் படித்த மாணவர்களில் சிலர் காவி வண்ணத்தில் கயிறு கட்டி ஜாமிண்ட்ரி பாக்ஸில் ‘அயோத்தி செல்வோம்; ஆலயம் அமைப்போம்’ என்கிற ஸ்டிக்கரை ஒட்டி வைத்திருந்தனர். நானும் கூட அதே பாதிப்பில் ‘பைபாஸ் செல்வோம்; புரோட்டோ தின்போம்’ என்று வீட்டில் சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருப்பேன். அந்த நண்பர்கள் யாருக்கும் ராமர் பற்றியும், ராமாயணம் பற்றியும் எனக்கு அப்போது தெரிந்திருந்ததில் கால்வாசி கூடத் தெரியாது. அவர்கள் வீட்டில் புகைப்படமாகக் கூட ராமர் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் இந்துத்துவ அரசியல், தனக்குத் துளியளவும் சம்பந்தமே இல்லாத ஒரு மாநிலத்தில் வசிக்கிற ஒரு ஏழாம் வகுப்பு மாணவனிடமும் கூட ஊடுருவியிருந்தது. எனக்கு அது இன்னதென்று விளங்கவில்லை என்றாலும் இது நல்லதுக்கில்லை என்று மட்டும் தோன்றியது.
அத்வானி ரத யாத்திரை வருகிற செய்தியைப் பத்திரிக்கைகள் வாயிலாகப் படித்திருந்தேன். தாத்தா நிஜமான சமூக அக்கறையோடு புலம்பிக் கொண்டிருப்பார். நாங்கள் வசித்த பிடிஆர் நகரில் ஏதோ ஒரு சுவரில் அத்வானி படம் ஒட்டப்பட்டிருந்தது. இது மாதிரி சம்பவங்கள் எதைப் பற்றியும் கேள்வியுறாத, அரசியல் அறிவற்ற அப்பாவிகளான என் இந்து நண்பர்கள் சொல்லைக் கேட்டு அத்வானி போஸ்டர் மீது கற்களை எறிந்தது இப்போதும் நினைவிருக்கிறது. விஷயத்தை நான் விளக்கியவுடன், மணிகண்டன் கேட்டதை நினைத்தால் இப்பவும் கூட சிரிப்பு வந்து விடும். ‘இப்போது எதுக்காம் இவருக்கு கோவில்? இவரு என்னா பெரிய்ய முருகனா? ஐயப்பனா? இல்ல மந்தையூர் உப்பிலியா? ( அது அவன் குலதெய்வம் )
1992 டிசம்பர் 6 அன்று மதியம் நான் தேனியில் இருந்த சித்தி வீட்டிலிருந்து தனியாக பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. பஸ்ஸில் எல்லோரும் சத்தமாக இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சின்னமனூரில் ஒரு கடையில் மாலை முரசில் ‘நானூறு ஆண்டு கால மசூதி இடித்து நொறுக்கப்பட்டது’ என்கிற தலைப்புச் செய்தியை பார்த்த போது தான் எனக்கு விஷயம் விளங்கியது. ஆனால் எனக்குள் எந்தப் பதட்டமுமில்லை. ஏனென்றால் எங்கள் ஊர் அவ்வளவு அமைதியாக இருந்தது. ‘பெரிய வீட்டுப் பொம்பள புள்ள கல்யாணத்தன்னிக்கு ஓடிப் போனதை’ பரபரப்பாக பேசுவதைப் போல் எல்லோரும் கூடி நின்று பேசிக் கொண்டார்கள். அவ்வளவு தான். அப்படி கூடி நின்றவர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள் என்கிற பேதமே இல்லை. ‘வடக்க பெரிய கலவரமாம்ல’ என்று யாரோ சொல்ல ‘வடக்க வரும். இங்க பூராம் தாய் புள்ளைகப்பா’ என்று யாரோ சடாரென்று சமாதானக் கொடியை உயர்த்திப் பிடித்தார்கள். சரியாக அதற்கு மறுநாள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனிடம் ஹவுஸ் ஓனரான ராஜேந்திரன் மாமா ‘அடியே மாப்ள, பள்ளிவாசல இடிச்சுப்புட்டானுக. நீ ஊம்னு சொல்லு. எந்தங்கச்சி பொண்ணு நிவேதிதாவ உனக்குக் கட்டி வச்சு வீட்ட எழுதி வச்சுர்றேன். என்னடா சொல்ற? ஒக்காலோலி’ என்று வழக்கம் போலவே வம்பிழுத்தார்.
நான் பார்த்த இடத்திலெல்லாம் எல்லா இந்துக்களின் மனதிலும் பேச்சிலும் குற்ற உணர்வே நிரம்பியிருந்ததை உணர முடிந்தது. வகுப்பில் ஆசிரியர்கள் கூட இடித்தது தவறென்றே பேசிக் கொண்டிருந்தனர். RSS கும்பலைத் தவிர வேறு எவரிடமும் எந்த சந்தோஷமுமில்லை. நானும் பிற இந்து நண்பர்களும், ‘கமல்தேண்டா ஃபர்ஸ்ட் தப்புன்னு சொல்லி ஜனாதிபதிய பார்த்தார்’, ‘ரஜினிக்கும் புடிக்கல மாப்ள. ஆனால் அரசியலாக்கக் கூடாதுன்னு அமைதியா இருக்கார். ஆனா இடிச்சவனுகள தட்டிக் கேட்காம விட மாட்டார்’, ‘இவனுகளெல்லாம் சும்மாடா. விஜயகாந்த் அயோத்திக்கே இப்ராஹிம் ராவுத்தரோட போயிட்டு வந்துட்டார். அடுத்த நோம்புக்குள்ள மசூதியக் கட்டி கும்பாபிஷேகம்(?) வச்சுடுவார்’ என்று நாங்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் ரசிகர்களாக சண்டையிட்டோமே தவிர இந்துவாகவோ, முஸ்லீமாகவோ சண்டையிடவேயில்லை. எங்களை வீடும் ஊரும் அப்படித் தான் வளர்த்து வைத்திருந்தது.
அதற்கடுத்து இளைஞர்களிடம் மெல்ல மெல்ல மாற்றங்கள் உருவானதைக் கண்கூடாகக் கண்டேன். பள்ளி மாணவர்களில் சிலரும் தங்களையறியாமல் மத உணர்வுகளுக்கு ஆட்பட்டனர். இந்தப் புதிய தட்ப வெப்பத்தால் பெரியவர்கள் ஆழமான அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தனர்.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிற குதான் தமிழக இஸ்லாமியர்களிடையே திடீர் தலைவர்கள் நிறைய உருவானார்கள். வருடத்திற்கொரு முறை ஆர்ப்பாட்டம் நடத்துவது, வருடம் முழுவதும் உணர்ச்சியைத் தூண்டுவது – இந்த இரண்டைத் தவிர அவர்களிடம் வேறு திட்டங்களே இல்லை. என்னோடு படித்த நண்பர்களில் சிலர் திடீரென்று நீண்ட தாடி வைக்க ஆரம்பித்தார்கள். பாபர் மசூதியை ஒரு சாக்காக வைத்துத் தான் சூஃபி மரபாலும், திராவிட உறவாலும் நெய்யப்பட்ட தமிழ்ச் சமூகத்திற்குள் வஹாபியம் உள்நுழைந்தது. அதன் துணை விளைவாக இன்று வரை கலாச்சாரத் தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் கொடுத்த விலை மிக அதிகம்.
பெரும்பாலான இஸ்லாமிய வீடுகளில் வெள்ளை நிறம் கொண்ட துப்பட்டியையே அன்று பெண்கள் சேலைக்கு மேல் சுற்றியிருப்பார்கள். முகம் மூடப்பட்டிருக்காது. எங்கள் வீட்டில் அது கூடக் கிடையாது. பெண்கள் வெளியே செல்லும் போதும், வழிபாட்டின் போதும், உணவு உண்ணும் போதும் சேலையின் நுனியை இழுத்து முக்காடாகப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு எல்லா வீடுகளையும் கருப்பு புர்காக்கள் ஆக்ரமித்தன. உறுதியாகச் சொல்கிறேன். அந்த நிகழ்வு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இங்கு வஹாபியமும் சரி கருப்பு புர்காவும் சரி எட்டிக் கூடப் பார்த்திருக்க முடியாது. பாபர் மஸ்ஜித் இடிப்பு என்பது இந்திய முஸ்லிம்களின் உளவியலில் ஏற்படுத்திய பாதிப்பு வார்த்தைகளில் அடங்காதது. பலரும் நினைப்பது போல அது வெறும் கட்டிடம் சார்ந்த பிரச்சினையே அல்ல. சொந்த வீட்டில் சோற்றுத் தட்டைப் பிடுங்கி விரட்டப்பட்ட பிள்ளைகளின் மனநிலைக்கு இஸ்லாமியர்கள் வந்து சேர்ந்திருந்தனர். மசூதி இடிப்பைத் தொடர்ந்த கலவரங்களால் வடக்கின் நிலைமை இன்னும் மோசமானது. தமிழகத்தில் அது போன்ற சூழல்கள் ஆரம்பத்தில் உருவாகவில்லை என்றாலும் அதே விரக்தி மனநிலை இங்கும் ஊடாடியது. சரியாக அந்த நேரத்தில் இந்துத்துவ ஆதரவு கொண்ட, கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததும், சமூக நீதியின் குரலாக அறியப்பட்ட கலைஞரின் தொடர் தடுமாற்றங்களும் மெல்ல மெல்ல இஸ்லாமிய இளைஞர்களை வஹாபியத்தின் பக்கம் அழைத்துச் சென்றது.
1994 ல்தான் பம்பாய் படம் வெளிவந்தது. காட்சிப்பூர்வமாக எனக்குப் பிடித்த இயக்குநர் தான் மணிரத்னம். ஆனால், சுத்தமாக அரசியல் புரிதலே இல்லாமல் அவர் எடுத்த பல அரசியல் படங்கள் வெகுஜன மனநிலையில் ஆபத்தான சிந்தனைகளை விதைத்தன. தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் நேர்மறையாகவே சித்திரிக்கப்பட்ட இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்கிற சட்டகத்துக்குள் அடைக்க முயன்றவர் அவர் தான். ரோஜாவில் அவர் வெளிப்படுத்திய அரசியலை தமிழ்நாட்டில் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. எல்லோரும் ரஹ்மானின் இசையிலும், அரவிந்த் சாமிக்கும், மதுபாலாவுக்கும் முதலிரவு நடந்து கொண்டிருக்கும் போதே அறைக்கு வெளியே இடுப்பை ஆட்டி ஆடிக் கொண்டிருக்கும் கிழவிகளின் நடனத்திலுமே மயங்கிக் கிடந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வெளிவந்த பம்பாய் வெறும் காதல் படமாகப் பார்க்கப்படவில்லை. ஏற்கனவே திடீரென்று உருவாகியிருந்த ‘கறுப்பு புர்கா கலாச்சாரத்தால்’ துணுக்குற்றிருந்த தமிழ் இந்துக்களின் பொது மனத்திற்கு இப்படத்தின் பல காட்சிகள் தீனி போட்டன. பல இடங்களில் காட்சிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டன. அதற்கு முன்பாக ரசிகர்களின் மோதல்களால் தான் திரையரங்குகளில் படங்கள் இடையிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் முதன்முறையாக மதம் திரையரங்கிற்குள் எட்டிப் பார்த்தது.
என்னோடு இருந்த நண்பர்களில் சிலரும் சாதாரணமாக RSS, ராமர் கோவில், பாகிஸ்தான், ஜின்னா போன்ற வார்த்தைகளைத் தொடர்ந்து பிரயோகிக்க ஆரம்பித்தனர். இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகனான நான் இந்தியா – பாகிஸ்தான் மேட்சின் போது என்னுடைய நண்பர்களாலேயே சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்பட்டேன். சில இடங்களில், பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போட்டார்கள்.
இரண்டு விதமான நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறின. ஒன்று, அதுவரை தமிழகத்தில் ஊடுருவ முடியாத இந்துத்துவா, பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பிந்தைய சூழல்களை சாக்காக வைத்து தமிழக இளைஞர்களிடையே பண்பாட்டுத் தளத்தில் ஊடுருவியது. அரசியல் ரீதியாக பிஜேபி வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அது பண்பாட்டுத் தளத்தில் ஓரளவிற்கு வென்று விட்டது. தொண்ணூறுகளுக்குப் பிறகு ஊரெங்கும் முளைத்த திடீர் விநாயகர்களும், ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டேயிருந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களும், பொங்கலைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்த தீபாவளியும், பெரிதாக கண்டு கொள்ளப்படாமல் இருந்த சரஸ்வதி பூஜை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களும் இதற்கான சாட்சிகள். திராவிட இயக்கங்கள் பதவிப் போட்டியைப் பிரதானமாகக் கருதி, கொள்கைகளைக் கைவிட்டதாலும் அப்போது வட இந்தியாவில் பெரிய அளவில் வளர்ந்து விட்ட பிஜேபியை ஆதரிப்பதில் இங்கிருந்தபடி போட்டி போட்டதாலும் இந்த மாற்றங்கள் எளிதாக நிகழ்ந்தன.
இன்னொரு புறத்தில் காயிதே மில்லத், ஆஸாத் போன்ற அற்புதமான தலைவர்களை திட்டித் திட்டி பழனிபாபா ஒரு உணர்ச்சிகரமான கும்பலை வளர்த்தெடுத்தார். அதன் தொடர்ச்சியை, பலர் தங்களுக்கான லாபமாக்கி பங்கு போட்டுக் கொண்டனர். ஆனால் இந்துத்துவமும், வஹாபியமும் என்ன தான் முயன்றாலும் தமிழகத்தில் பண்பாட்டு ரீதியான அசைவுகளை உருவாக்க முடிந்ததே தவிர, வட இந்தியாவைப் போல் இஸ்லாமிய வெறுப்பையோ, கலவர அரசியலையோ கட்டமைக்க முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தின் பொது உளவியல் இவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஆனால் அப்படி ஒன்று இங்கேயும் நிகழ்ந்து விடுமோ என்கிற பதட்டத்தை கோவை கலவரம் உண்டாக்கியது. கோவையில் இன்று வரை அதன் பாதிப்புகள் நீடிக்கின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இரண்டு சமூகங்களுக்கு இடையே ஒரு மெல்லிய விலகலை கோவை கலவரங்களே கட்டமைத்தன. ஊடகங்களின் பொறுப்பற்ற பிரச்சாரமும், உளவுத் துறையின் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடும், வஹாபிய இயக்கத் தலைவர்களின் தொடர் உளறல்களும் விரிசல்களை அதிகரித்தன. பல அப்பாவி இஸ்லாமியர்கள் காவல்துறையினரின் அராஜகத்தாலும், இயக்கங்களின் சிறுபிள்ளைத்தனத்தாலும் தங்கள் வாழ்வையே தொலைத்தனர்.
என்னோடு கல்லூரியில் படித்த நண்பரின் அண்ணன் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். திடீரென்று கலைஞரைத் திட்ட ஆரம்பித்தார். சம்பந்தமில்லாத நபர்களுடன் இரவெல்லாம் தனியே நின்று குசுகுசுப்பார். பெரும்பாலும் தொழுகை நடக்கும் போது இந்தக் கும்பல் பள்ளிவாசலுக்கு வெளியே தான் நிற்கும். திடீரென்று என்னிடம் வந்து ‘உமரோட ஆட்சி வரப் போகுதுடா. உன்னையெல்லாம் கலெக்டராக்கிடுவோம்’ என்று உளறுவார். எந்த உமர்? பள்ளிவாசல் பக்கத்தில் முடிவெட்டுவாரே அவரா?’ என்று கேட்பதற்குள் அவரைத் தேடி நான்கு மார்க்கப் புலிகள் வந்து விடுவார்கள். சம்பந்தமே இல்லாத கேஸில் ஜெயிலுக்குப் போனார். அவரை உசுப்பி விட்ட தலைவர்கள் யாரும் ஜெயிலில் களிக்கு நல்லெண்ணெய் தந்து கூட உதவவில்லை. கடைசியில் அவர் தந்தை தான் தன் கட்சித் தொடர்பை வைத்து மீட்டெடுத்து வந்தார். பல இடங்களிலும் இது தான் நிலைமை. அந்த அண்ணன் இன்று வரை தூங்கி எழுந்தவுடன் இயக்கவாதிகளுக்காகவே புதுப்புது கெட்ட வார்த்தைகளைக் கண்டுபிடித்துத் திட்டிக் கொண்டிருக்கிறார்.
கோவை கலவரம் வேறு வகையான சொல்லமுடியாத துயரங்களை இஸ்லாமிய சமூகத்திற்குத் தந்தது. அதற்குப் பிறகு தான் பொதுவெளியில் இஸ்லாமியர்கள் அச்சத்தோடு பார்க்கப்பட்டனர் அல்லது தீவிரவாதி என்கிற சொல்லோடு இணைத்து கேலிப் பொருளாக்கப்பட்டனர். பெரு, குறு நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதிலும் ( கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கே ஹமீது என்கிற பெயரால் சென்னையில் வீடு எளிதாகக் கிடைக்கவில்லை ), தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் போதும் பாரபட்சமாக நடத்தப்பட்டனர். விடுதிகளில் தங்குகிற போது நானே இந்த அவஸ்தைகளைப் பலமுறை அனுபவித்திருக்கிறேன். ‘ஆயிஷா’ என்கிற ஒற்றைப் பெயர் தீவிரவாதத்தின் குறியீடாக பத்திரிக்கைகளால் பரப்பப்பட்டது. ( அந்தக் கட்டமைப்பை உடைப்பதற்காகவே கல்வி தொடர்பாக எழுதப்பட்டு புகழ்பெற்ற தன் சிறுகதைக்கு ‘ஆயிஷா’ என்று பெயர் வைத்ததாக ‘ஆயிஷா நடராஜன்’ சமீபத்தில் ஒரு மேடையில் பேசிக் கேட்டேன் ). இந்த இழிநிலையைப் பற்றி அந்த இயக்கங்களுக்கோ அவற்றின் தலைவர்களுக்கோ எவ்விதக் கவலையுமில்லை. தம் வெறித்தன உரைகளால் ஏதுமறியாத அப்பாவிகளை சிறைக்கு அனுப்பி விட்டு அவர்கள் கல்லாப்பெட்டியின் பூட்டுகளை உடைக்க படுக்கையறைகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு புறத்தில், கோவை கலவரத்தில் தம் பங்கை தைரியமாக மறைத்தபடி எதிர்த்தரப்பினரின் குற்றங்களை பூதக்கண்ணாடியில் பெருக்கி அதையே தமிழ் முஸ்லிம்களின் பொது குணமாகத் திரித்து, இந்துத்துவவாதிகள் ஊரெங்கும் கடைபரப்பி, தம் சரக்கை விற்க முனைந்தனர்.
இரண்டாயிரத்து இரண்டில் குஜராத் கலவரம் நிகழ்ந்தது. பிற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை பாபர் மஸ்ஜித் மற்றும் கோவை கலவரங்களுக்குப் பிறகு கொந்தளிப்பில் திரண்ட இஸ்லாமிய இயக்கங்கள் இறுக்கமானவையாக உருமாறின. இந்தியாவில் இஸ்லாமியர்களால் இனி எதுவும் செய்ய இயலாது என்கிற பயம் பலரையும் ஆட்டிப் படைத்தது. பல இளைஞர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இயக்கங்களும் அடக்கி வாசித்தன. ஒன்றிரண்டு உதிரிகள் மட்டும் சிறுபிள்ளைத்தனமான ரகசிய சந்திப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
இந்தத் தருணத்தில் இன்னொன்றையும் பதிவு செய்ய வேண்டும். கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்த இஸ்லாமிய சமூகம் தமிழகத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு கல்வியில் பெருங்கவனம் செலுத்தி முன்னேறியது. இந்த வளர்ச்சியில் எந்த இஸ்லாமிய அரசியல் இயக்கங்களுக்கும் பெரிதாய்ப் பங்கில்லை. உள்ளூர் செல்வந்தர்கள், ஏற்கனவே படித்து பதவிகளில் இருந்த முற்போக்கான இஸ்லாமியர்கள், ஜமாத் அமைப்பினர், தன்னார்வக் குழுவினர் இவர்களாலேயே இது நிகழ்ந்தது. சச்சார் அறிக்கை வெளியான பிறகு, ஆழமான விழிப்புணர்வு தமிழ் முஸ்லிம் சமூகத்தில் நிகழ்ந்தது. பெண் கல்வியே குறிப்பிடத்தக்க விகிதத்தில் மிக வேகமாக உயர்ந்தது. இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த உணர்ச்சிகளின் வெப்பத்தில் சில இளைஞர்கள் சிக்கியிருந்தாலும் பொது சமூகம் அதற்கு நேர்மாறாக கல்வியையே தனக்கான ஆயுதமாகக் கண்டது. இன்று வரை பொது இஸ்லாமியர்களும், ஜமாத் அமைப்புகளும் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு உருவான இந்த இயக்கங்களின் பிடியில் இல்லை. ஆனால் அரசியல் தலைமைகளிடம் பேரம் பேசுவதற்காக அப்படி ஒரு மாயையை அந்த இயக்கங்களின் தலைவர்கள் பொதுவெளியில் கட்டமைத்திருக்கின்றனர். அதே மாய பிம்பத்தை இந்துத்துவாதிகள் தங்கள் தோசைச் சட்டியில் திருப்பிப் போட்டு, ‘பார்த்தீங்களா? அவங்க பூராம் ஒன்னாயிருக்கங்க. நீங்களும் கடப்பாரைய கைல பிடிங்க’ என்று ஆளில்லாத சந்தையில் நின்று கத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடந்து ஆறு, ஏழு ஆண்டுகளில் இஸ்லாமிய இயக்கங்கள் உட்பகையால், ஆடிட்டிங் குழப்பங்களால், அந்தரங்க சிடிகளால் பெரிய அளவில் கலகலத்து விட்டன. ‘2K kids’-ஐ அந்த இயக்கங்களால் ஈர்க்கவே முடியவில்லை. ஏற்கனவே அங்கிருந்த ’90s மற்றும் 80s kids’ நள்ளிரவில் தூக்கம் வராமல் வீட்டிலிருந்து கிளம்பி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக நடக்கும் மனிதர்களின் மனநிலையில் தனியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் சாதி உணர்வால் நிரம்பிய மாநிலமாக இருக்கிறதே தவிர இடையில் சில காலம் எட்டிப் பார்த்த மதவெறுப்பு மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மோடி எதிர்ப்பும், புத்தெழுச்சியாக இங்கு உருவாகியிருக்கிற தமிழ் அடையாள உணர்வும் இன்றைய இந்து – முஸ்லிம் இளைஞர்களை பெரிய அளவில் ஒன்றுபடுத்தியிருக்கிறது. தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தாமல் இங்கு இஸ்லாமிய அடையாள அரசியலைப் பேச முடியாது என்கிற இடத்துக்கு வஹாபிய இயக்கங்களும் வந்து சேர்ந்திருக்கின்றன.
இரண்டாவது தடவை மோடி ஆட்சிக்கு வரும் போதே ‘பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்சினை’ குறித்த தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்தத் தீர்ப்பு குறித்து பிற முற்போக்கு சக்திகளிடம் இருந்த கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும் கூட இஸ்லாமிய மக்களிடம் சுத்தமாக இருக்கவில்லை என்பதே நிதர்சனம். இப்போது நிலவுகிற பேரமைதிக்குப் பின்னால் இருப்பது பயம் மட்டுமல்ல. ஏற்கனவே எல்லாவற்றையும் கை உதறி விட்ட விரக்தி மனநிலையும் தான். ஜனநாயகப் பண்புகளை வரித்துக் கொண்ட இந்துக்கள் தாம் குற்ற உணர்வின் அலைகளில் நீந்தித் தவிக்கின்றனர்.
இந்தத் தீர்ப்பை பலர் சமரசமான ஏற்பாடாகக் காண்கின்றனர். சிலர் ஜனநாயகத்துக்கு நிகழ்ந்த அவமானமாகக் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் இரண்டு தரப்பினரோடும் இல்லை. அவர்கள் எந்தக் கருத்துமில்லாமல் அமைதியாக இருக்கின்றனர்.
‘ஐந்து ஏக்கர் நிலத்தை தந்து விடுகிறோம்’ என்று பெருந்தன்மை கொண்ட நீதிப் பெருந்தகைகள் கொடைக் கரம் நீட்டியிருக்கின்றனர். மதுரையில் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்று சொன்னால் அதை செல்லூர் ராஜூவே தந்து விடுவார்.
ஆனால் வேறுபாடே இல்லாமல் முயங்கிக் கிடந்த எங்கள் உறவை, நல்லிணக்கத்தின் பெருவாசனையை, பண்டிகைகளின் கூட்டுக் களியாட்டத்தை, வரலாற்றின் நனவிலி மனங்களிலிருந்து மிதந்து வந்த பேரிசையை, அருவமான சுவர்கள் முளைக்காத பக்கத்து வீடுகளை, மசூதிகளில் குழந்தைகளோடு ஓதிப் பார்க்க நின்றிருந்த பெண்களின் நம்பிக்கையை, நிவேதனங்களில் ‘ஷிர்க்கைத்’ தேடாத நட்புணர்வை நீங்கள் எப்படித் திருப்பித் தர முடியும் பெருந்தகையீரே?
அப்பாவி இஸ்லாமியர்களின் இளமையை சிறைக் கம்பிகள் பலி கேட்க, தாடி வைத்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாத ஒரு முதியவர் கேலியான பட்டத்தைச் சுமக்க, சொந்த ஊரில் அநாதையாக்கப்பட்ட துக்கத்தோடு தகப்பனின் மரணத்தில் ஊரே திட்டியும் அழ முடியாத பிரமையில் நின்றிருக்கும் பிரிய மகளைப் போல, தலைகுனிந்தபடி மௌனமாய் மொத்த இஸ்லாமியர்களும் நின்றிருக்க, கலவரத்தை விதைத்தவர்கள், வழி நடத்தியவர்கள், மசூதியை இடித்தவர்கள் எல்லோருமே மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்து கொண்டு சமாதானப் புறாக்களைப் பறக்க விட்டபடி பேசுவதை எப்படி எளிதாகக் கடந்து விட முடியும்?
இந்தத் தீர்ப்பு முடிவா தொடக்கமா என்கிற கேள்வி தான் எல்லோரையும் பிடித்தாட்டுகிறது. பாபர் மசூதியை விட பல மடங்கு பெரிதான வேறொன்று ஏற்கனவே இடிக்கப்பட்டு விட்டது. அதை இந்திய அதிகார வர்க்கம் உணர்ந்து திருத்திக் கொள்ளும் வரை எல்லா தீர்ப்புகளும் சம்பிரதாயக் குறிப்புகளாகவும், ஊடகங்கள் மென்று துப்பும் ஒரு வார அவலாகவும் மட்டுமே இருக்க முடியும். கரசேவைக்கு செங்கல் அனுப்பியவர்கள் தாங்கள் மிதித்துக் கொண்டிருக்கும் பழைய மண்ணிலிருந்து கசியும் ஈரத்தை கொஞ்சமாவது உணர வேண்டிய தருணம் இது.