அழைப்பு – சு. வேணுகோபால்

0 comment

ஐந்து வருடங்களில் ஏழு வீடு மாறிய பின்தான் சொந்தமாக வீடு வாங்கியே தீர வேண்டும் என்று நடத்திக்காட்டி விட்டாள் செண்பகம். எஞ்சினியர்கள் கட்டிக் கட்டி விற்கும் வீடுகளில் ஒன்று தான் இது. செண்பகமும் குடியிருக்கும் வீட்டில் அது குறை இது குறை என்று கசப்பை வளர்த்துத் தான் வெளியேறுவாள். சாத்தூருக்கும் கோவைக்கும் ஏழுமணி நேரப் பயணம். வர ஒரு நாள். போக ஒரு நாள். புதுமனை புகுவிழாவிற்கு ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியதாகி விட்டது. புது வீட்டிற்கு வந்த பின் சென்ற மாதம் ஒருநாள் வந்து திரும்பியது தான். விடுமுறை எடுக்க முடியாததால் இரண்டு மாதம் கழித்து இப்போது தான் வர நேர்ந்தது.

மாடியில் பாத்ரூம் டாய்லெட்டோடு கூடிய விசாலமான ஒரு அறை. மீதமுள்ள பகுதி மொட்டை மாடி. துணி துவைப்பதற்கும் காயப் போடுவதற்கும் தோதாகக் கட்டியிருந்தான். வேண்டாம் என்று சொல்லியும் இளந்தம்பதிகளுக்கு 1800 ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டாள். வீட்டு வாடகையாகக் கொடுத்ததை எல்லாம் இப்படி திரும்ப வசூலித்து விட வேண்டும் என்று ஆசை. வீட்டின் பின்புறம் மாடிப்படி வைத்திருப்பதால் பின்பக்கமும் வரும்படி சிறு கேட் வைத்து கட்டியிருக்கிறான். வீடு வாங்கியாகி விட்டது தான். கோவைக்கு மாற்றலாகி வருவது அவ்வளவு எளிதாக இல்லை. டெபுடேசன் பீரியடாக ஓராண்டு கோவைக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதை விட்டால் ஓய்வு பெறும் வரை சாத்தூர் வெக்கையில் கிடந்து கருக்க வேண்டியது தான்.

போர்டிகோவில் பெரியவனும் சின்னவனும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேட் லேசாகத் திறந்திருந்தது. வாசல்படியில் அமர்ந்து ‘ட’ வடிவிலான போர்ட்டிகோவில் டச்சப் லெவலில் ஆடினார்கள். வாசலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். செண்பகம், “கண்ணாடியில படப் போகுது. பேட்ட கொண்டு போயி வைய்யி” எனத் திட்டிக் கொண்டு அழுக்குத் துணிகளை வெளியே வைத்திருக்கும் வாஷிங் மெஷினில் அமுக்கிக் கொண்டிருந்தாள்.

நொண்டி கரும்புள்ளி நாய் கேட்டில் நின்று ‘அய்ங் அய்ங்’ என்று முனகியது. யாரும் பொருட்படுத்தவில்லை. அங்கிங்கு நகரும் பையன்களின் முகத்தைப் பார்த்துக் குரைத்தது. காம்புகள் பெருவிரல் அளவு தடித்திருந்தன. அதனுடைய வயிறு நன்றாக இரையெடுத்திருப்பது தெரிந்தது. வலது முன்னங்கால் வளைந்து திரும்பி இருக்கிறது. அது ஆக்ரோசமாக குரைக்க “டேய் டேய்… நாய் உள்ள வரப்போகுதுடா கேட்ட மூடு” என்றேன். அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஸ்பின் பால் போல ரப்பர் பந்தைப் போட்டான். முகத்தைப் பார்த்து மறுபடி குரைத்தது. சின்னவன் “இரு” என்று கேட்டை திறந்தான். அது உள்ளே வந்து விடும் என்ற அவசரத்தில் படியை விட்டு இறங்கி, “டேய் கேட்ட மூடு கேட்ட மூடு” என்றேன். சின்னவன் கேட்டை இன்னும் நன்றாகத் திறந்து விட்டு தெருவில் இறங்கி பக்கத்து வீட்டுப் பக்கம் போனான். குரைத்த பெண் நாய் அவன் பின்னாலே ஆர்வமாக வாலை ஆட்டிக் கொண்டு போனது.

“டேய் கேட்ட மூடச் சொன்னா எங்கடா போற?” என்றேன்.

“இருப்பா அது கேட்ட திறந்துவிடச் சொல்லுது.”

நானும் தெருவிற்கு வந்தேன். பக்கத்து வீட்டு கேட்டை திறந்து விட்டான். அவசரமாக அந்த வீட்டின் முற்றத்தில் ஏறி ‘வ்வவ் வவ்’ என்று குரைத்தது. பழைய கட்டில் ஓரம் படுத்திருந்த ஒரு பசலைக் குட்டி எழுந்து ஓடிவர முயன்றது. கட்டப்பட்டிருந்த மெல்லிய சங்கிலி சுண்டி இழுக்க மல்லாந்து விழுந்து எழுந்தது. நொண்டி நொண்டி ஓடிய தாய் நாய் அதன் அருகில் வாகாகப் படுத்து நக்கிக் கொடுத்தது. கொழுகொழுவென்றிருந்த குட்டிக் கால்களை வயிற்றில் வைத்துப் புதைத்து காம்பில் உதடு பற்றி உறிஞ்சத் தொடங்கியது. அந்தக் குட்டிக்கு முதுகில் இரண்டு பெரிய மஞ்சள் நிற வட்டங்கள் அமைந்திருக்கின்றன. தெரு முக்கிலிருந்து வளர்ந்த பெரிய குட்டிகள் இரண்டு ஓடி வந்தன. நான் சற்று ஒதுங்கினேன்.

“டேய், இதுகளை பார்றா… கேட்டுக்குள்ள போகப் போகுது.”

“போனாலும் வந்திரும்பா. அதுக அந்த நாயோட முந்தின ஈத்து குட்டிகப்பா. ஆண் குட்டி பேரு கோலி. நான் வச்சேன். அண்ணன் என்னை முந்திக்கிட்டு பெண் குட்டிக்கு சிந்துன்னு பெயர் வச்சிட்டான்” என்றான்.

வெளியே வாசலில் நின்று அந்தக் குட்டிகள் வாலாட்டின. வீட்டிற்குள் செல்லலாமா வேண்டாமா என்பது போல அவை கேட் அருகே சென்று ‘ங்ங் ங்ங்’ முனகின. கேட்டைத் திறந்து விட்ட என் பையன் விளையாடும் ஆர்வத்தில் வந்து விட்டான். பெரிய குட்டிகளில் ஒன்றின் முதுகு நிறம் பனங்கருப்பு. மற்ற பகுதி சிவப்பு நிறம். ஆண்குட்டி அது கோலி. வாட்டசாட்டமாக அழுக்கு வெள்ளை நிறத்தில் இருப்பது பெண்குட்டி சிந்து. பசலைக் குட்டிக்குத் தாய் பால் கொடுப்பதை நிமிர்ந்து கூர்ந்து பார்த்தன. பின் முன்காலை நீட்டி அம்மாவைப் பார்த்தபடி அமர்ந்து வாலை ஆட்டின.

இந்தப் பக்கத்து வீட்டுக்காரர் மயிலானந்தத்திற்கு தோட்டந்துரவு உண்டு. இப்போது இந்த ஈற்றில் பிறந்து கண் திறந்த குட்டிகளிலிருந்து இந்த மஞ்சள் குட்டியை மட்டும் பிரித்துக் கொண்டு வந்திருக்கிறார். கொஞ்சம் வளர்ந்த பின் தோட்டத்திலேயே காவலுக்கு கொண்டு போய் விடத் தேர்ந்தெடுத்த குட்டி அது. காலையில் தோட்டத்திற்கு வண்டியெடுத்துப் போனால் மாலையில் தான் வருவார்கள். அங்கே வேலை இல்லாத நாட்களில் பகலில் வீட்டில் இருப்பார்கள். பெண்ணும் பையனும் விடுதியில் இருந்து படிக்கிறார்கள். வீட்டை வாங்குவது என்று செண்பகம் பேசி முடிவான பிறகு வீட்டு இஞ்சினியர் சாவியை இந்த வீட்டுக்கார அண்ணனிடம் தான் கொடுத்திருந்தார். வந்தால் திறந்து பார்க்கவும், விட்டகுறை தொட்டகுறையாக இருந்த வேலைகளை முடிக்கவும் உதவியாக இருந்தார்.

இந்த கலிக்கம்பாளையம் பேரூராட்சி இன்னும் ஐந்தாண்டுகளில் நகராட்சியாக மாறி விடும். மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் கூட வந்து விட்டன. ஊரைச் சுற்றிலும் உள்ள தோட்டங்கள் வீட்டடி மனைகளாக மாறி ஏகமாக வீடுகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. இந்த ஊர் தாலுகாவாக மாறியதிலிருந்து தான் தோட்டங்களில் எல்லாம் வீடுகள் முளைக்கத் தொடங்கின. நீண்ட நீண்ட தெருக்கள். எங்கள் பகுதி வி.பி.காலனி, குமரன் தெரு. மற்ற தெருக்களைப் போலவே குமரன் தெருவின் இருபுறமும் கட்டிய வீடுகளும், கட்டிக் கொண்டிருக்கும் வீடுகளும், கட்டாத மனையிடங்களுமாக கிடக்கின்றன.

எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே திருச்சிக்காரர் வீடு. அதன் இடப்புறம் அடுத்தடுத்து நான்கு பிளாட் மனையிடங்கள். வலப்புறம் ஆறு சென்ட் மனையிடமும் சீமைக்கருவேல மரங்களும் எருக்கஞ்செடிகளும் கொடிமுறுக்கிச் செடிகளுமாக அடர்ந்திருக்கின்றன. மயிலானந்தத்தின் வீட்டிற்கு அடுத்து காலி இடம் கிடக்கிறது. தொடர்ந்து மூன்று வீடுகள். அடுத்து ஒரு காலியிடம். அடுத்து உரக் கம்பெனிக்குப் போகும் அவருடைய வீடு. மேற்குப்புறம் கவரிங்கடை வைத்திருப்பவர் வீடு. காலிமனை இடங்கள் அடுத்தடுத்து. அப்புறம் வாத்தியார் வீடு. நேர் எதிரே கணபதி சில்ஸ்சிற்குப் போகும் ரேவதி வீடு. அப்படியே வீடுகளையும் மனை இடங்களையும் தாண்டிப் போனால் இன்னும் உயிரை வைத்திருக்கும் தோட்டங்கள்.

திருச்சிக்காரர் வீட்டை ஒட்டிய காலியிடப் புதரிலிருந்து நாய்க்குட்டிகள் ஒன்றையடுத்து ஒன்று ‘கைங் கைங்’ என்று கத்தின. வாசல்முன் படுத்திருந்த வளர்ந்த மூத்த குட்டிகளான கோலியும் சிந்துவும் கத்தும் இடத்திற்கு ஓடின. கருப்பு நிறக்குட்டி பசியால் மெல்லிய நாக்கை நீட்டி இளைத்தபடி தெருமேட்டிற்கு ஏற முயன்று அருகம்புல்லில் சரிந்து உருண்டது. சிந்து அந்தச் சின்னஞ்சிறிய குட்டியை வாயில் கவ்வியதும் என்னமோ செய்து விடும் என்று வேகமாகச் சென்றேன். நான் அமட்டுவதைத் திரும்பி பார்த்து சற்று முதுகை குறுக்கி கவ்வியபடி புதருக்குள் சென்றது.

வேலிப் பருத்திக் கொடியும் பூனைக்காலிக் கொடியும் சீமைக்கருவேல மரத்தில் படர்ந்து அப்பி குடையாகத் தாழ்ந்திருந்தது. அதன் அடியில் வட்டமான பள்ளத்தில் சிவப்பும், வெள்ளையும், கருப்பும், கலவையான போர் நிறங்களிலும் இருக்கும் குட்டிகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறிச் சரிந்து விழுந்து கொண்டிருந்தன. பாதுகாப்பான குழி. பிறந்து பதினைந்து நாட்களான குட்டிகளாக இருக்கும். எல்லாக் குட்டிகளும் பாலுக்காக மெல்லிய நாக்கை நீட்டி ஒன்றின் மேல் ஒன்று புரண்டு தாய்மடி தேடின.

எங்கள் மாடியில் இருக்கும் லதா தெருவில் நின்று பெரிய குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாலைத் தரைதேய அசைத்து காதுகளை விடைத்து தாயையே பார்த்துக் கொண்டிருந்தன. நாக்கை உதடுகளில் தடவி எழுந்தன. வீட்டு முற்றத்திலிருந்து நொண்டிக் கரும்புள்ளி நாய் வெளியே வந்ததும் பெரியகுட்டிகள் முன்னங்கால்களைத் தூக்கி தாயின் முகத்தில் முத்தம் கொஞ்சின. முத்தத்தைத் தாங்க முடியாது தாய் முகத்தை மேலே தூக்கியது. பெரிய குட்டிகள் முன்னங்கால்களைத் தரையில் தட்டிக் குரைத்தன. பார்த்துக் கொண்டிருந்த லதா வீட்டிற்குள் போனாள்.

மயிலானந்தத்தின் வீட்டை ஒட்டிய காலி இடத்திற்குச் சென்ற நொண்டி நாய் அருகம்புல்லைக் கடித்தது. நாவில் ஒட்டிய புல்லின் இலையைத் துப்ப முயன்றது. அடுத்த நொடி காய்ந்த வாழையிலைச் சருகில் சொலக் சொலக்கென கக்கியது. எங்கோ இரையெடுத்து வந்த கறியும் சாப்பாடுமாக இருந்தது. இரண்டு பெரிய குட்டிகளும் அதை ஆர்வமாகத் தின்றன. நொண்டி நாய் வாலாட்டியபடி தன் வெள்ளைக் குட்டியை முகர்ந்தது. பின் ஆண்குட்டியை முகர்ந்து விட்டு, புதரில் வரும் கைங்கைங் சத்தத்தை நோக்கி ஓடியது. செடிகளில் புகுந்து குட்டிகள் இருக்கும் இடத்தில் தாய் நின்று ஆசையுடன் மெல்ல குரைத்தது. ஒவ்வொரு குட்டியும் மற்ற குட்டியை மிதித்து ஏறித் தாய்மடிக்கு முந்தின. இந்த நொண்டி நாயின் முகத்தில் சிரிப்பும் கனிவும் தோன்றியது.

குட்டியிருக்கும் பள்ளத்தில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் குனிந்தபடி தலையைத் திருப்பிப் படுத்தது. குட்டிகள் போட்டிபோட்டு காம்புகளைப் பற்றின. தாய் வாலை ஆட்டியபடி தலையைத் தூக்கி ஒவ்வொன்றையும் கவனித்து முகர்ந்து நக்கியது. பிறகு ஒட்டுமொத்தமாய் குட்டிகளைப் பார்த்து விட்டு சந்தோசமாக அக்கடாவென்று படுத்தது. இந்தக் குட்டிகளிலிருந்து தான் மயிலானந்தம் நல்ல பலமான குட்டியைப் பிரித்தெடுத்து விட்டில் வளர்க்கிறார்.

வீட்டின் முன் உள்ள செவ்வரளிச் செடியின் ஓரம் லதா நின்றிருந்தாள். புதரிலிருந்து வெளிவந்த நொண்டி நாய் தொய்ந்த காம்புகள் ஆட லதாவை நோக்கி ஓடி வந்து வாலாட்டியது. கைப்பிடிச் சுவர் மேல் வைத்திருந்த தட்டை எடுத்த போது பெரிய குட்டிகளும் அவள் பாதங்களில் விழுந்து கொஞ்சிக் குதித்து ஓடின. மீந்த பழைய சாப்பாட்டை கொண்டு போய் புல்லின்மேல் மூன்று பிரிவாகப் பிரித்துப் போட்டாள். தாய்க்கு அதிகமாக இருந்தது. செல்லமாகத் தட்டை ஓங்கிய போது அந்த சிந்து மேல்பார்வை பார்த்து பம்மியபடி வாலாட்டிக் கொண்டு நின்றது. இந்த லதாப்பிள்ளை இதற்கு முன் இதே ஊரில் மேசன் காலனியில் ஆறு மாதம் இருந்திருக்கிறாள். வீட்டுக்காரர் குப்பனூர் எல்.ஜி.மில்லில் சூப்பர்வைசராகப் போகிறார். எங்கள் வீட்டுக்கு வந்த ராசியில் இவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்து விட்டால் அவர்களை விட செண்பகம் தான் பெருமைப்படுவாள்.

என் பையன்கள் பந்து போடும்படி என்னை அழைத்தார்கள். தெருவில் மூன்று குச்சிகளை செங்கல்களுக்கு இடையில் நிறுத்தினார்கள். எனக்கு இந்த கிரிக்கெட்டில் எந்த நுட்பமும் தெரியாது. ஆனால் அவர்கள் அடிப்பதற்குத் தோதாக பிச்சில் விழுந்து எழும்பும்படி போடுவேன். எப்போதாவது குச்சிகளைச் சாய்க்கும்படி வேகமாகப் போட்டால் “அடிக்கிறது மாதிரி போடுப்பா” என்பார்கள். தூக்கி அடிக்காத என்று சொன்னாலும் சின்னவன் தூக்கி அடிப்பான். அது பெரும்பாலும் காலியாக உள்ள மனையிடமுள்ளிலோ, செடிக் கூட்டத்திலோ போய் விழுந்து விடும். சில சமயம் அடுத்த தெருக்காரர்களின் பின் கட்டிலோ, முன் வீட்டுக்காரர்களின் வரவேற்பறையிலோ போய்விழும். இந்த மனுசன் வயசென்ன… சின்னப் பயல்களுடன் சேர்ந்து நோணலியம் பண்றத பாரு என்பார்கள். ஒதுங்கினாலும் பிள்ளைகள் விட மறுக்கிறார்கள்.

கோல்டு கவரிங் கடை வைத்திருப்பவர் வீட்டுப்பக்கம் நின்று பந்தை மனக்கணக்கு செய்து போட்டேன். பெரியவன் ஸ்டைலாக வலது காலைத் தூக்கி பக்கவாட்டில் திருப்பி விட்டான். அப்படிப் பழகுறானாம். மூன்றாவது பந்து போடும் போது கோல்டு கவரிங் வீட்டுக்காரர் மனைவி அடுக்களையிலிருந்து “நானெல்லாம் பார்க்க முடியாது. எனக்கு மட்டுந்தான் வேர்த்து வடியுதா. போகச் சொல்லு. ஏன் மக வீட்டுக்குப் போக வேண்டியது தான” என்றாள்.

“உனக்கென்னடி அப்படி ஒரு அராத்து. அவரு இங்க தான் இருப்பாரு” என்றார்.

அடித்த பந்து திருச்சிக்காரர் முற்றத்தின் பேரலில் விழுந்து குதித்தது. நான் பவ்யமாக வீட்டிற்கு வந்தேன். சின்னவன் பேட்டை ரோட்டில் வைத்து விட்டு வந்து கேட்டை திறந்து எடுத்து சிரித்தபடி ஓடி வந்தான்.

“போதுமடா சாமி நீங்களே விளையாடுங்க” என்றேன்.

அவன் குதித்து “இனி மெல்ல அடிக்கிறேன்” என்றான்.

வீட்டினுள்ளே கொஞ்சம் சண்டை வலுத்தது. கடைக்காரரின் வீட்டு கேட் அருகில் குறிப்பிடும் அந்தப் பெரியவர் நின்றிருந்தார்.

“போகட்டும். இந்தக் குடும்பத்துக்கு அப்படி என்ன படி அளந்திட்டாரு. தாங்கு தாங்கணுமன்னு தாங்க”.

“வாய அடக்கிப் பேசு. விட்டேன்னா மூஞ்சி மொகறையெல்லாம் பேந்திடும். இருந்ததத் தான் நாலு பேத்துக்கு பங்கு போட்டு தந்திட்டாரில்லடி இனி என்ன வேணும்.”

“அந்த நகை என்ன ஆச்சு. கால் முளச்சு எங்கயோ போயிடுச்சா. தம்பி தான வச்சிருக்கான்.”

“தம்பி வச்சிக்கில்ல. பேங்கில இருக்கு. என்ன கேவலப்படுத்துறயா?”

“கேட்டு வாங்கத் துப்பில்ல. பேங்கிலன்னு ஒரு பொய் வேற. நான் என்ன ஏமாளியா? அப்படியெல்லாம் இருக்க மாட்டேன். அங்க போயி மண்டி போட்டுத் திங்கட்டும்”

“ஒன்ன….” என்றவர், நான் பந்து போட்டுக் கொண்டிருப்பது தெரிந்ததோ என்னவோ கதவை மூடினார். இரண்டு பெண்கள் +1ம், கல்லூரியும் போகிறார்கள்.

துணிகளை மாடியில் உலர்த்திப் போடும்படி செண்பகம் அழைத்தாள். “அம்மா, ஒரு நாளாவது எங்கள நிம்மதியா விளையாட விடுறயா? அப்பா எனக்கு மூணு ஓவரு, அண்ணனுக்கு அஞ்சு ஓவர் போட்டுட்டுப் போங்கப்பா” என்று சின்னவன் கையைப் பிடித்து இழுத்தான். மனைவிக்கு கோவம் எகிறிக் கொண்டு வந்தது. அவன் கோவத்தில் பேட்டைத் தூக்கி நடுரோட்டில் எறிந்து விட்டு “பேயி பிசாசு” என்று அம்மாவைப் பார்த்துக் கத்தினான்.

“நான் பேய்தான்டா. ஒனக்கு தொவச்சு, தேச்சு, மூக்கு வழிச்சு, சாப்பாடு போட்டு, பேக்க தூக்கிட்டு லொங்கு லொங்குன்னு வேனுக்கு ஓடி…. பேசுவடா நீ”

“ஐயோ ஒருநாள் என்ன உருப்படியா விளையாட விடுறயா…” கேட்டைப் பிடித்து கோவத்தில் ஆட்டினான். பெரியவன் முகத்தைச் சுழித்துக் கொண்டு வந்தான்.

மொட்டை மாடி கொடிக் கம்பியில் துணிகளை உதறிப் போட்டு கிளிப்புகளையும் கவ்வ வைத்தேன். அந்தப் பெரியவர் கையில் லட்சுமி பைனான்ஸ் லெதர் பேக்கை பிடித்தபடி போய்க் கொண்டிருந்தார். சங்கடமாக இருந்தது. துணிகளைப் போட்டு விட்டு கீழே இறங்கி வாளியை எடுத்தேன்.

“அண்ணா நீங்க புளியங்குடி பக்கமெல்லாம் போவீங்களா” லதாப் பிள்ளை கேட்டது.

“கோவில்பட்டியிலிருந்து மேக்கால இருக்கிற புளியங்குடிதான?”

“அது தான்.”

“எனக்கு டூட்டி சாத்தூர் வட்டம் நல்லி பஞ்சாயத்து கிராமங்கள் மட்டுந்தாம்மா. அங்க நான் போனதில்ல. அது ரொம்ப தொலைவும்மா. நீ அந்த ஊரா?”

“இல்லண்ணா, எங்க அம்மா பொறந்த ஊர். எங்க பக்கமும் ஒரு சாத்தூர் இருக்கு, அதனால தான் கேட்டேன்.”

“அப்படியா!”

எப்படியும் இந்தப் பிள்ளைக்கு இருபத்தேழு இருபத்தெட்டு வயசு இருக்கும். பார்க்க சின்னப் பிள்ளையாட்டம் இருந்தாள்.

நேற்றும் இன்றும் ஒரு வழியாக ஆட்டமும் வசவுமாகப் போய்க் கொண்டிருந்தது. இருவரையும் படிக்க உட்கார வைப்பதற்குள் செண்பகத்திற்குத் தாவு தீர்ந்துவிட்டது. மூன்றரை மணிக்குத் தான் அந்தா இந்தா என்று புத்தகத்தைப் பிரித்து வீட்டுப் பாடம் எழுத அமர்ந்தார்கள். அவள் கத்திக் கத்தி ஒரு வழியாகி விட்டாள்.

திறந்திருந்த கேட் வழியாக அந்த நொண்டி நாய் ரொம்ப வேகமாக நுழைந்தது. குரைக்கவில்லை. எழுந்து மடக்கி மடக்கி முடுக்குவதற்குள் சுற்றுச் சுவர் ஓரம் உள்ள சிறிய பாதையில் ஓடியது. ‘சே… சே…’ கத்திக் கொண்டு பின்னால் ஓடினேன். அது நாங்கள் மூலையில் வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் மேசையில் தாவி ஏறியது. பின் கோட்டைச் சுவரில் தாவிப் பற்றியது. அடுத்த நொடி மயிலானந்தம் அவர்களின் பாத்ரூமின் மேல் பகுதிக்குப் போகக் குதித்துப் பற்றியது. பிடியிலிருந்து கீழே விழுந்து விடும் போல பின்னங்கால்களால் சுவரைப் பிறாண்டியபடி உன்னியது. எப்படியோ அடி நெஞ்சுப் பகுதி முன் நகர ஏறிவிட்டது. அங்கிருந்து பத்தடிக்குக் கீழே குதித்தது.

மாடியிலிருந்து “நம்ம கேட் திறந்திருந்தா அது இப்பிடித்தாண்ணா பண்ணுது” என்றாள் லதா.

“அது சரிம்மா. மறுபடி விழுந்து இன்னொரு கால ஒடிச்சிக்கிடும் போலயே”

“அங்க கேட் தெறந்து விட ஆளில்லைன்னா இப்படித்தாண்ணா பண்ணுது.”

அது நுழைந்து வரும் போது எதையோ கவ்வத்தான் வருகிறது என்று நினைத்தேன். என்ன வேகம்! அந்த வேகத்தில் ஓடவில்லை என்றால் அடுத்தடுத்து சுவரைப் பற்றி ஏற முடிந்திருக்காது. தெருவில் இறங்கி மயிலானந்தம் கேட்டிற்கு பக்கமாய் வந்தேன். அந்தத் தாயின் மூத்த குட்டிகள் சந்தோசமாக கேட்டுக்கு வெளியே நின்று முனங்கின. நொண்டி நாய் கட்டில் ஓரம் படுத்து குட்டிக்குப் பால் கொடுத்தபடி தலையை நக்கிக் கொடுத்தது. இந்த நொண்டி நாய் எங்கெங்கோ ஓடுகிறது. வருகிறது. பாலைக் கொடுக்கிறது. வயிற்றுக்கு உணவைக் கொடுக்கிறது. திரும்ப ஓடுகிறது. என்ன சுறுசுறுப்பு. என்ன வேகம். என்ன முலையூட்டும் பந்தம்! என்ன உயிரியல்பு இப்படி ஓயாமல் ஓட வைக்கிறது?

* * *

எப்படியோ ஒரு வருடத்திற்கு தற்காலிக மாற்றல் பெற்று கோவை வந்தேன். கெம்பனூரில் வேலை. ஒரு வருடத்திற்குச் சின்ன நிம்மதி. டி.வி.எஸ். 50யில் வீட்டிலிருந்தே போய் வரலாம். ஒன்றியத்தின் விவசாய அலுவலகம் உள்ள ஆலந்துறையும் பக்கம் தான். ஒரே சமயம் எல்லா பொருட்களையும் எடுத்துவர முடியவில்லை. மறுபடி சாத்தூர் வட்டத்திற்கே திரும்ப அனுப்பி விட்டால் என்ன செய்வது என்று நண்பர் தங்கியிருந்த அறையில் மாற்றி வைத்து விட்டேன். இரவு பதினோரு மணிக்கு வரும் போது பையன்கள் தூங்கி விட்டார்கள்.

சுமையோடு வந்ததால் உடம்பு கசகசவென்று ஆகிவிட்டது. ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்து படுத்தேன். ஜம்மென்று கண்ணை அசத்தி விட்டது அலுப்பு. அழுவது போல் ஏதோ கேட்டது. மனைவி எதுக்கு அழுகிறாள் என்று அவசரமாக எழுந்தேன். “யம்மா… அடிக்காத. நான் போகல. என்னைய ஏன் இந்தப் பாடுபடுத்துற” என்றாள்.

லைட்டைப் போட்டேன். பையன்களுடன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். வெளி லைட்டையும் போட்டேன். அழுகையை அடக்குவது போல ஒரு விசும்பல் கேட்டது. “வாய மூடுடி…. அப்படியே….” குரலை இறுக்கிப் பேசுவது கேட்டது. எந்த அலுக்குப்பலுக்கும் இல்லாமல் அழுகை அடங்கியது. லதா தான்.

செண்பகத்தை எழுப்பினேன். “என்ன” என்றாள். “அடிச்சது மாதிரியும் அழுகிறது மாதிரியும் இருந்திச்சு.” மாராப்பை சரி செய்து, தளர்ந்த கூந்தலைக் கோதி இறுக்கிக் கொண்டையாகப் போட்டாள். “மேல தான். இப்ப அடிக்கடி அந்தப் பையன் ரவிக்கும் லதாவுக்கும் சண்டை வருது. ஆனால் எல்லாம் தூங்குனதுக்குப் பின்னாடி தான் நடக்குது. நானும் ரெண்டு மூணு நாள் கேட்டிட்டேன்.”

“இதுக்குத் தான் வேணாம்ன்னு சொல்றது. எம் பேச்ச என்னக்கி நீ கேட்ட. இந்த 1800 ரூபாய் வந்து தான் உனக்கு நிறைய போகுதா?”

“ஒரு கைச்செலவுக்கு ஆகுமேன்னுதான் பாத்தேன்”

“நாம நிம்மதியா இருக்க நல்ல அறை வேணுமன்னு பாத்தா நீ எதையாவது இழுத்து வச்சிர்ற. இது என்னான்னு பாரு.”

எழுந்து படுக்கைக்குப் போனேன். “ஒரு நிமிசம் இங்க வாங்க” வராந்தாவில் உள்ள சோபா செட்டில் வந்து அமர்ந்தாள். நான் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தேன்.

“மூணு நாளுக்கு முன்னாடி சாயந்திரம் நாலுமணி இருக்கும். பசங்க ஸ்கூல் விட்டு வரல. இவன்க வந்தா திங்க எதையாவது கேப்பானேன்னு கடல மாவ கலக்கி வடை சுடலாம்னு பாக்கட்டை எடுத்தேன். லதாப் பிள்ளை அக்கான்னு வந்திச்சு. ஏம்பிள்ள தலை சீவாம இப்படி இருக்கேன்னு கேட்டேன். அவ்வளவு தான் கேட்டேன். ரெப்பையில கரைகட்டிருச்சு. நான் ஊருக்குப் போறேங்க்கா. என்னால இருக்க முடியலக்காண்ணா. ஏம் பிள்ளன்னேன்… பதில் சொல்லாமலே ரொம்ப நேரம் நின்னா. சரி பிள்ள. தனியா இருந்தா வெறுக்கு வெறுக்கன்னு இருக்கும். எங்ககூடயே இரு. வடைய சுடுவோம்ன்னேன்.”

“கொடுக்கா நான் நல்லா சுடுவேன்னு” தண்ணில அளவா ஊத்திப் பெசஞ்சா. நான் வாழைக்காய நாக்கு நாக்கா சீவிப் போட்டேன். நல்லா பொரியப் பொரிய எடுத்தா. ஒன்ன தின்னு பாத்தேன். உப்பு, காரம், கலவை எல்லாம் கச்சிதமா இருந்திச்சு. ஏம்பிள்ள நீயும் எடுத்து தின்னு பிள்ளன்னேன். ஒன்ன எடுத்தா ஒரு கடி கடிச்சவ மெல்லாம மலங்க மலங்க பார்த்தா. என் ரெண்டு கையப் பிடிச்சு வாங்கி அவ கன்னத்தில மட்டுமட்டுன்னு போட்டா. நான் பதறிட்டேன்.

“என்ன பிள்ள ஒனக்கு பிரச்சனைன்னேன். எதென்னாலும் ரவி கிட்ட கலந்து பேசு. ஒனக்கு குழந்தை தானே வேணும்? இப்ப எல்லாம் இது பெரிய விசயமே இல்ல. எத்தன சக்சஸ்புல்லான டாக்டர்கள் இருக்காங்கன்னு சொன்னேன். எழுந்து போயிட்டா.

“அதுக்கெதுக்கு அடிக்கணும்?”

“அவங்கக்குள்ள வர்ற பிரச்சனையே பதினோரு மணிக்கு மேல தான வருது.”

“சரி தூங்கு காலையில பாப்போம்” என்றேன்.

* * *

இந்த நாய்க்குட்டிகள் தாய்க்குப் பின்னால் தெரு வரைக்கும் வந்து நிற்கும். கொழுக்முழுக்கென்று விழுந்து தடுமாறி வரும். தாய் போன பின் அப்படியே நிற்கும். என் பசங்கள் ஊஊய் என்று கத்தினால் திரும்ப அந்த புதர்ப் படுக்கைக்கு ஓடும். முக்கு வீட்டுக்காரப் பையனும் வந்து கத்துவான். தாய் போனபின் மூத்த குட்டிகள் இரண்டும் மனையடி இடத்தில் செல்லாட்டம் ஆடும். சில சமயம் தாயுடன் கூடவே போய்விட்டு வரும். என் பையன் “அப்பா அதுல ஒரு குட்டிய எடுத்து வளக்கலாம்ப்பா” என்றான். கிராமம் என்றால் நாய் வளர்ப்பது சுலபம். நகரமாக மாறிக் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் வளர்ப்பது சிரமம். அதிலும் செண்பகம் “எனக்கிருக்கிற வேலையில நாய் மூத்திரமும் பீயும் அள்ள நேரமில்ல” என்று மறுத்து விட்டாள்.

மாலை நேரம் தெருவோரப் புல்லில் நொண்டி நாய் வந்து படுத்தது. குட்டிகள் எல்லாம் தடுமாறி ஒன்றை ஒன்று முந்தி வந்தன. பாலருந்தின. கவரிங் கடைக்காரர் மனைவி “பாரு என்ன ராஜ போகமா விழுந்திருக்கு. இதுக பவிசப் பாருங்க” என்றாள். மூத்த அக்கா சிந்து பாலருந்தி வந்த செம்போர் குட்டியின் வாலைப் பிடித்துக் கவ்வியது. அது உருண்டெழுந்து இதன் முன்னங்காலைக் கவ்வியது. ஹர்ஹர் என்று சத்தம் வேறு போட்டது. பின் மூத்த குட்டியை வீழ்த்தி விட்டது போல மேலேறி தோள்பட்டையைக் கடித்தது. இந்த அக்காக்காரியும் அதனிடம் தோற்று விட்டது போல படுத்துப் பாசாங்கு செய்தது. நைட்டியில் வந்த லதா பின்புறம் கைகளைக் கட்டிக் கொண்டு சந்தோசமாகப் பார்த்தாள். பந்தலுக்கு வாங்கிய ஒல்லியான மூங்கில் குச்சியை எடுத்து வந்து நீட்டினான் மூத்தவன். கோலி கம்பின் நுனியைக் கடித்து இழுத்தது. “போன ஈத்து அந்த சீமைக் கருவேல மரம், இந்த ஈத்து இந்த சீமைக்கருவேல மரம். அடுத்த ஈத்து எந்த சீமைக்கருவேல மரமோ? ஒரு வருசம் போனா இந்தத் தெருவே நாய்த் தெருவா மாறிடும்” என்றார் திருச்சிக்காரர்.
இந்தத் தெருப் பெண்கள் இதுகளை முடுக்கி விரட்டாமல் மீந்த உணவை வெளியில் கொட்டிக் கொட்டிப் பழக்கி வைத்துவிட்டார்கள்.

எனக்கு கடைகளில் சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு ஒருவித மந்தாரம் பிடித்துக் கொண்டது. அவ்வப்போது ஓமத்திரவம் சாப்பிட்டால் ஏப்பம் வந்து சரியாகும். ஒன்பது மணிக்கு ஓமத்திரவ பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்தேன். என் செருப்புச் சத்தத்தைக் கேட்டு மூத்த குட்டிகள் கோலியும் சிந்துவும் நடுத்தெருவில் நின்று குரைத்தன. செருப்புச் சத்தம் நெருங்க நெருங்க இன்னும் ஆக்ரோசமாக குரைத்தன. “என்ன ஆள் அடையாளம் தெரியலையா?” என்றேன். அப்புறம் தான் அண்ணனும் தங்கையும் வாலாட்டி கழுத்தைத் தாழ்த்தி உடலை ஆட்டின. கேட்டை சாத்திவிட்டு பூட்டு போட்டேன். ஹீரோ ஹோண்டாவில் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு வந்த கொடிக்கால்காரரைக் குட்டிகள் குரைத்துக் கொண்டே துரத்தின. மயிலானந்தம் வீட்டிலிருந்த குட்டி மெல்ல கத்தியது. அந்த அம்மாள் “பால் தான் ஊத்தியிருக்கேன். அதுக்கு மேல என்ன நோணாயம்! பேசாம இருக்க மாட்டியா” என்றது. அது தாய்ப்பாலோடு வீட்டுப்பாலையும் கலந்து கட்டி அடித்துப் பழகி விட்டிருந்தது. மிரட்டவும் கத்தாமல் முனகலை வெளிப்படுத்தி அடங்கியது.

இரவு பத்தே முக்கால் இருக்கும். தெருவில் நின்று கடுமையாகக் குரைத்தன பெரிய குட்டிகள். பசலைக் குட்டிகளின் கைங் கைங் சத்தம் இடைவிடாமல் கேட்டது. “என்ன இழவு இப்படி கத்துதுக. புல்லும் புதருமா இருந்தா இப்படித் தான். தெரு நாய்க இப்படி குட்டியப் போட்டுட்டு இம்சைப்படுத்தும். அதுகள கொஞ்சம் துரத்திவிடுங்க” என்றாள் செண்பகம். போர்ட்டிகோ விளக்கைப் போட்டுவிட்டு சின்ன பேட்டரியை எடுத்துக் கொண்டு வந்தேன். அந்தப் பக்கம் இருந்து வந்த வேறு ஒரு நாயை இரண்டு பெரிய குட்டிகளும் பக்கவாட்டில் நின்று கோபமாக குரைத்தபடி வந்தன. அந்தப் பெரிய நாய் குர்ர்ர்ரென நிமிர்ந்து பார்த்துவிட்டு மேலேறிப் போனது. முக்கின் வெளிச்சத்தில் கணபதி சில்க்ஸ் போகும் ரேவதி ரோஸ் நிறமும் நீலக்கரை பாடரும் கொண்ட சீருடையில் நின்றிருந்தாள்.

“என்னம்மா அங்கேயே நிக்கிற?”

“அங்கிள் பயமா இருக்கு அங்கிள். இப்படி குரைக்குது. இன்னக்கித்தான் இப்படி பண்ணுது” என்றாள்.

“வாம்பா நம்ம தெரு நாய்தான” சொல்லிவிட்டு அமட்டவும் சிந்து புதருக்குள் ஓடியது. கோலி ஒதுங்கி நின்று வாலாட்டியது. மயிலானந்தமும் வெளியே வந்தார். “ஏதாவது பாம்பு கீம்பு ஊடாடுதா. இந்தக் கத்து கத்துது” என்றார். ரேவதி செல்பேசி லைட்டை அடித்தாள். வாய் ஓயாமல் பசலைக் குட்டிகள் கத்திக் கொண்டிருந்தன.

புதர் செடிகளில் கவனமாக பேட்டரியை அடித்து உள்ளே போனேன். அக்காக்காரி சிந்து ஐந்து சின்னக் குட்டிகளின் நடுவில் படுத்து என்னை ஒரு மாதிரி பார்த்தது. குட்டிகள் மெல்லிய நாக்கை நீட்டி நிறுத்தாமல் கத்துகின்றன. வயிறெல்லாம் ஒட்டிப்போய் பசியில் இருந்தன. குட்டிகள் கிறங்கித் தான் போய்விட்டன. அக்காக்காரியின் உடலில் ஏறுவதும் காம்பைத் தேடுவதும் சறுக்கி விழுவதுமாக இருந்தன. டார்ச் வெளிச்சத்தில் கண்கள் மினுங்க என்னையே பார்த்தது சிந்து. ஏக்கப் பார்வையாக இருந்தது.

“சார், நொண்டிய காணோமே” என்றேன்.

“கழுத எங்க போயிருக்கோ! குட்டிக இருக்கிறது நினைவில்லையா” என்றார் மயிலானந்தம்.

செடிகளை விலக்கிக் கொண்டு வந்தேன். எங்கள் மாடியில் வெளிச்சம் வந்தது. “அங்கிள் இருங்க. வீட்டில பால் இருந்தா இருக்கும்” ரேவதி சொல்லிக் கொண்டு வேகமாகச் சென்றாள். எங்கள் வீட்டைத் தாண்டி அவள் வீடு. எங்கள் தெருவிலேயே ரேவதியின் வீடுதான் ஓட்டு வீடு.
லதா ஒரு துண்டை தோளுக்கு மேல் போட்டு க்கொண்டு வந்து “என்னாச்சுண்ணா” என்றாள். “தாய்க்காரி இன்னும் வரல போல. இந்தக் கத்து கத்துதுக” என்றேன்.

மயிலானந்தமும் புதருக்குள் சென்று பார்த்து வந்தார். “அந்த அக்காக்காரி குட்டிகளோடு படுத்திருக்குது. என்ன அறிவு பாருங்க” என்றார். தெருவில் வரும் எவரையும் குட்டிகள் பக்கம் நெருங்க விடாமல் அரணாக நின்று அண்ணன்காரன் கோலி குரைப்பது அப்போது தான் விளங்கியது. ஒரு ஈயவட்டியில் பாலை ஊற்றிக் கொண்டு ரேவதி வந்தாள். பின்னால் அவளுடைய அம்மாவும் அப்பாவும் தம்பியும் வந்தார்கள். அதை வாங்கி உள்ளே கொண்டு போனேன். என் பின்னால் கோலியும் வந்தான். அதன் பின்னாலே லதாவும் வந்து நின்றாள். தட்டு கவிழ்ந்து விடாமல் செத்தைகளை ஒதுக்கி சமமாகப் பதித்து வைத்தேன். பால்வாசத்திற்கு குட்டிகள் வட்டிலைச் சுற்றி வந்தன. அக்காக்காரியும் அண்ணன்காரனும் எழுந்து நின்று குட்டிகளை உன்னிப்பாக கவனித்து வாலாட்டினர். பின்னே தள்ளி இரண்டும் முன்னங்கால்களை நீட்டி அமர்ந்து கொண்டன. “வட்டில் அங்கேயே இருக்கட்டும் அங்கிள்” என்றாள் ரேவதி. மெல்லிய நாக்கில் பாலை நக்கிக்கு டித்தன.

காலையில் அலுவலகம் போகும்போது ஒரு நிமிடம் வண்டியை நிறுத்திப் பார்த்தேன். குட்டிகள் மறுபடி கத்தின. சிந்து குட்டிகளின் இடையில் நின்று நக்கிக் கொண்டிருந்தது. வயிறு வக்கிப் போயிருந்தது. கோலி குட்டிகளிடம் செல்வதும், படுப்பதும் திரும்ப தெருவிற்கு வருவதுமாக இருந்தது. ஐந்து மணிக்குத் திரும்பி வரும்போது தெருப் பெண்கள் நின்றிருந்தார்கள். ரேவதியின் அம்மா “அந்த அக்காக்காரிய பாருங்க. அதுகள விட்டு ஒரு எட்டு எங்கயும் போக மாட்டெங்குது” என்றார்.

நொண்டி நாய் நேற்று மாலை போனது திரும்பி வரவே இல்லை. “தெரு நாய்களைப் பிடிக்க வந்தவர்களிடம் ஏதும் மாட்டிக் கொண்டதோ” என்றார் உரக் கம்பெனிக்குப் போகிறவர். நான் வண்டியை உருட்டிக் கொண்டு வந்து வீட்டின் முன் நிறுத்திவிட்டு திரும்ப புதருக்கு நேர் எதிரே வந்து நின்றேன். பையன்கள் உள்ளே போய் பார்த்து விட்டு வந்தார்கள். தோட்ட வேலைக்குப் போகும் செல்வராணியின் பெண் பிள்ளைகளும் பார்த்துவிட்டு வந்தார்கள்.

குட்டிகள் ஓரிடத்தில் இருக்க முடியாமல் நாலாதிசைகளிலும் தாயைத் தேடி ஓடின. அண்ணன் கோலி மடக்கி மடக்கி குரைத்தது. தூரமாகப் புதர் வழியே சென்ற குட்டியை சிந்து வாயால் கவ்வி வந்து படுக்கைக் குழியில் போட்டது. லதா தயிரில் பிசைந்த உணவைக் கொண்டு வந்து தந்தாள். உரக் கம்பெனிக்காரர் வாழை இலையில் மாற்றிக் கொண்டு போய் வைத்தார். அதைக் குட்டிகள் தின்று பழகாததால் முகர்ந்து பார்த்து விட்டு கத்தத் தொடங்கின.

சைக்கிளில் பெரிய புல்கட்டை வைத்து உருட்டிக்கொண்டு வந்த கீழடிக்காரர் சைக்கிளை இடுப்பில் அணைகொடுத்து “நேத்திலிருந்து புத்தூர் போற வழியில நசுங்கிப்போய் ஒரு நாய் கிடக்குது. பஸ்காரன் அடிச்சானா, வேன்காரன் அடிச்சிட்டானான்னு தெரியல” என்றார். அது மொண்டிதானா, வேறு நாயா என்று தெருக்காரர்களுக்குத் தெரியவில்லை. அதுவும் நசுங்கி ரெண்டு நாளாகக் கிடப்பதைப் போய்ப் பார்க்க அசூயையாக இருந்தது.

தாய்க்காரி கேட்டின் முன் நின்று குரைத்து பசலைக்குப் பாலூட்ட அடுத்த கேட்டைத் திறந்து விடுங்கள் என்று அழைக்கிற அழைப்பு கண்முன்னால் இருக்கிறது. ஒருமுறை அப்படிக் குரைத்த போது போர்ட்டிகோவிற்கு வராமல் ஜன்னல் கண்ணாடியிலிருந்து பார்த்தேன். வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர் தெரியாது. அது திரும்பத் திரும்ப குரைத்துப் பார்த்தது. பின் திருச்சிக்காரர் வீட்டின் முன்போய் நின்று குரைத்தது. அவர் வரும்வரை அழைப்புக் குரலை விட்டுக் கொண்டே இருந்தது. ‘அடிசக்க’ என்னை அறியாமல் வியந்தேன். அவர் வந்ததும் வாலை ஆட்டி மயிலானந்தம் சார் வீட்டுக்கு ஓடியது. இந்தத் தெருவில் ஏழெட்டு வீட்டுக்காரர்களுக்கு இந்த அனுபவம் வாய்த்திருப்பதைச் சொன்னார்கள். மயிலானந்தம் வளர்க்கும் குட்டி வெளியே வரும் போது மூத்த குட்டிகள் அதனோடு ஒரு மணிநேரம் புரண்டு விளையாடும். பெரும்பாலும் மாலையில் அவர் அவிழ்த்து விடுவதற்காக இரண்டும் வாசலில் காத்திருக்கும். அதுவும் ஓடிவந்து தாவும். மறுபடியும் பால் கொண்டுவந்து ஈயத்தட்டில் ஊற்றினார்கள்.

இரவு எட்டுமணிக்கு என்ன நடக்கிறது என்று நானும் செண்பகமும் நடந்து வந்து பார்த்தோம். ரோட்டோரம் சிந்து படுத்திருக்கிறது. அதன் மீது ஐந்து குட்டிகளும் ஏறிப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தன. கோலி கால்நீட்டி விழித்தபடி காவலாய் நான்கு பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தது. தெருக்காரர்கள் ஆச்சரியமாக வந்து பார்த்தார்கள். நாய்க்குட்டி தேவைப்படுவோர் தூக்கிக் கொண்டுபோய் வளர்த்தால் பரவாயில்லை என்று தோன்றியது. மூன்று பெண்குட்டிகள். பெண்குட்டிகளை விரும்பி வளர்க்க மாட்டார்கள். அதில் கொஞ்சம் வெடுப்பாக நொண்டி இருக்கும் போதே தெருவரை வந்து எட்டிப்பார்த்து ஓடும் கருப்பியை ரேவதியின் அம்மா தூக்கிக் கொள்வதாகச் சொன்னார். என் பையன் “என்னோட ப்ரண்ட்ஸ நாளைக்கிக் கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

தெருப்பக்கம் யார் வந்தாலும், ஒரு பறவை படபடவென மரத்தில் பறந்து அமர்ந்தாலும் கோலி குரைத்தது. அது குரைக்கவும் சிந்துவும் குரைத்தது. குட்டிகளை விட்டு எங்கும் போகாமல் அக்காக்காரியும் அண்ணன்காரனும் அம்மா வரும் என்று காத்துக் கிடந்தன. அம்மா தொலைந்ததே தெரியாமல் நம்பிக்கையோடு காத்துக் கிடந்தன. தாயை விட கவனமாகப் பாதுகாத்தன. இந்த பந்தத்தை அந்தத் தாய் இதுகளின் ரத்தத்தில் எப்படிக் கடத்தியது என்று தெரியவில்லை. இது ஒரு இயற்கையின் ரகசியம். அம்மா வராமல் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு.

ஒரு ஓலம் வந்தது. “அடி அடிச்சுக் கொல்லு. உன்ன நம்பி வந்தேனே என்ன செருப்பால அடிக்கணும். இப்படிப் பேசுறது உனக்கு அசிங்கமா இல்ல.” எழுவோமா வேண்டாமா என்று கிடந்தேன். அதற்குள் மனைவி மின்விளக்கைப் போட்டதும் மாடியிலிருந்து வந்த சண்டை நின்றது.

“நீ காலையில ரெண்டு பேத்தையும் கூப்பிட்டு வீட்ட காலி பண்ணச் சொல்லிடு. இது சரியாப்படல.”

“ஆமா. பக்கத்து வீட்டுக்காரர்களும் என்ன நடு ஜாமத்துக்கு மேல நடுஜாமத்துக்கு மேல சண்டை நடக்குதுன்னு கேக்குறாங்க” என்றாள்.

போர்ட்டிகோ டியூப்லைட்டை போட்டு விட்டு வந்தேன். இரவெல்லாம் எரியட்டும். ரவி இரவு எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் வருகிறான். காலையில் எட்டுமணிக்குப் போகிறான். அவனோடு பேசுவதற்கு சாவகாசமான நேரம் வாய்ப்பதில்லை. ஆனால் இதை இப்படியே கேட்காமல் விடக்கூடாது என்று மட்டும்பட்டது.

நல்ல உறக்கம். செண்பகம் தட்டி எழுப்பினாள். கண்ணையே திறக்க முடியவில்லை. ‘என்ன’ என்றேன். பதட்டமாக இருந்தாள். எழுந்தேன்.

போர்ட்டிகோ டியூப்லைட் எரியவில்லை. வீட்டு வராந்தாவில் தலைவிரிகோலமாக லதா அமர்ந்திருந்தாள். மஞ்சள் இரவு விளக்கு மட்டும் எரிகிறது. மணி இரண்டே முக்கால். அவள் அருகில் சிறு பை இருந்தது. இடது கன்னம் வீங்கி இருந்தது. “சொல்லு பிள்ளை” என்றாள் செண்பகம் மெதுவாக. அவள் தலைதூக்கிப் பார்க்காமல் தரையில் சுட்டுவிரலால் தடவினாள்.
“என்னம்மா உங்களுக்குள்ள பிரச்சனை?”

“அண்ணா எனக்கு…..” அவளுக்கு நா கட்டுப்படுத்த முடியாதபடி தழுதழுத்துவிட்டது.

“இந்தா பிள்ளை. பயப்படாம சொல்லு”

“அண்ணா எனக்கு ரெண்டு பிள்ளைக இருக்காங்கண்ணா. அதுகள விட்டுட்டு இவரோட வந்திட்டேன். என்னை பஸ் மட்டும் ஏத்தி விடுங்க. ஊர் போய்ச் சேர்ந்திடுறேன்.”

அவளது விரல்கள் நடுங்குவது தெரிந்தது. எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இந்த மர்மத்தை என் மனைவி விநோதமாகப் பார்த்தாள்.

“இவனோட வந்திட்டு இவனையும் விட்டுட்டுப் போறேன்னா என்னம்மா அர்த்தம்”

அவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள், “இந்த வீட்ட காலி பண்ணிட்டு வா வான்னு இந்த ரெண்டு மாசமா கொடையுறான்.”

“சரி அதனால என்ன? கூப்பிடுற இடத்துக்குப் போம்மா”

“இல்லண்ணா… இவரு போறது மில் மேனேஜர் பாத்து வைக்கிற வீடு. அந்தாளோட அட்ஜஸ் பண்ணிப் போ. செட்டிலாகிடலாமன்னு நா கூசாமப் பேசுறாரு. அடிக்கிறாரு. என்னால எம் பிள்ளகள விட்டும் இருக்க முடியல. நாசமாயிடுவேண்ணா. எனக்கு கொஞ்ச நாளா தூக்கமே இல்லை. தலைவலி விண்ணு விண்ணுன்னு பிடுங்குது. திரும்பத் திரும்ப நீ என்ன பெரிய பத்தினியான்னு சொல்லியே அடிக்கிறான். தூக்குப் போட்டுக்கிடத் தான் மனசு ஓடுது. எம் பிள்ளைக அநாதியாயிடுமே. மகளுக்கு ரெண்டரை வயசு. இவன நம்பி தரையில போட்டிட்டு அப்படியே வந்திட்டேன். என்னை பஸ் மட்டும் ஏத்திவிடுங்க போயிடுறேன்.”

“பணம் வச்சிருக்கியாம்மா?”

இல்லை என்று தலையாட்டினாள்.

“சாப்பிட்டீயாம்மா?”

மெதுவாக இல்லை என்று தலையசைத்தாள்.

“உன் புருசன் உன்ன சேத்துக்கிடுவாரா?”

“தெரியலை.”

“என்ன பண்றார்ம்மா?”

“கம்பெனிய விட்டுட்டு மறுபடி விவசாயம் பாக்குறாரு.”

“சரி கிளம்பும்மா. செண்பகம், நீயும் கூட வா. அவன் காலையில வந்து கேட்டா நான் வச்சுக்கிடுறேன்.”

நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். செண்பகம் கதவு கேட்டை சாத்திவிட்டு வந்தாள். ரோட்டில் படுத்திருந்த மூத்த குட்டிகள் பட்டென எழுந்து குரைத்தன. “ஆய் நாங்க தான்” என்றாள் செண்பகம். முனகி வாலாட்டின. சிந்து மறுபடி குதித்து குட்டிகள் இருக்கும் பக்கம் போனது.

“மூணே முக்காலுக்கு உழவர் சந்தை வண்டி வரும். எங்கம்மா போற?”

“அம்மா வீட்டுக்கு.”

“சரி. எப்போதாவது தோனினா எங்களக் கூப்பிடு. நாங்க ரெண்டுபேரும் வந்து பேசுறோம்.”

பிறகு பேச்சே இல்லாமல் நிழல்களைப் போல நடந்தோம்.