இயற்கை முன் மண்டியிடும் கடவுள்: சு.வேணுகோபாலின் நுண்வெளி கிரகணங்கள் 

by மானசீகன்
1 comment

‘நுண்வெளி கிரகணங்கள்’ என்கிற பெயரைக் குமுதத்தின் அட்டையில் பார்த்ததுதான் அந்த நாவல் குறித்த என் முதல் ஞாபகம். இது தொண்ணூறுகளின் இறுதியில் குமுதம் – ஏர் இந்தியா இணைந்து நடத்திய பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்டது. பலரும் இந்த நாவலை என்னிடம், ‘அறிவியல் புனைவு நாவல்’ என்று சொல்லும்போதெல்லாம் மெல்லச் சிரித்துக்கொள்வேன். கிரகணங்கள் என்பதை அவர்களாகவே தம் மனத்தில் ‘கிரகங்கள்’ என்று உருமாற்றித் தட்டச்சு செய்து நாவல் குறித்து வேறொரு பிம்பத்தை சுஜாதா சாயலில் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு பேராசிரியர், தான் கட்டுரை வாசித்த கருத்தரங்கத்திலேயே ‘இதனை அறிவியல் புனைவு நாவல்’ என்று கூசாமல் அடித்துவிட்டார். தமிழ்நாட்டில் பலரும் புனைவுகளைப் படிக்காமலேயே எங்கோ, எவரிடமோ கேள்விப்பட்டதை வைத்து அடித்துவிடுவதில் சமர்த்தர்கள். உண்மையில் இந்த நாவல் இன வரைவியலின் அனைத்து அம்சங்களையும் நம்முன் கடை பரப்பி அதைக் கடந்துசெல்வதற்கான பாதையை நுட்பமாகக் காட்டுகிறது. வெளிப்பார்வைக்கு இன வரைவியல் நாவலாகத் தோற்றமளிக்கும் நுண்வெளி கிரகணங்கள், அதன் ஆழத்தில் மானுடத் தரிசனத்தையே முன்வைத்திருக்கிறது.

தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வாழும் காப்புக் குல ஒக்கலிகர்களின் பண்பாட்டையும் செவிவழிக் குல வரலாற்றையும் இந்த நாவல் மிக நுட்பமாகப் பேசுகிறது. பல்வேறு அரசியல் காரணங்களால் பெனுகொண்டாவில் இருந்து இங்கே வந்து குடியேறிய இவர்கள், பூர்வீகத்தில் தெலுங்கர்கள்தான். காப்புக் குல ஒக்கலிகர்களின் 48 குலப்பெயர்களும் தெலுங்கிலேயே அமைந்திருக்கின்றன. நாயக்கர் ஆட்சி நிலைபெறுவதற்கு முன்பாகவே தேனி, திண்டுக்கல் பகுதிகளில் குடியேறி விவசாயம் செய்த சமூகத்தின் இன வரைவியல் நாவல்தான் ‘நுண்வெளி கிரகணங்கள்’ என்றாலும், பிற இன வரைவியல் நாவல்களில் நாம் காணுகிற சுயசாதிப் பெருமிதங்களோ அல்லது போலியான சீர்திருத்த ஆவேசங்களோ இல்லாமல் இருப்பதே இந்த நாவலின் தனித்தன்மை ஆகும். மரபு, புதுமை இரண்டையும் மோதவிட்டு நாவலாசிரியர் மௌனமாக நகர்ந்துவிடுகிறார். அவர் எதன் பக்கமும் இல்லை. நான்கு தலைமுறைகளின் வரலாற்றை நம் கண்முன்னே விரித்துக் காட்டிவிட்டு, ‘ இவ்வளவுதாம் மக்கா மனுசப்பய வாழ்க்கை’ என்று துண்டை உதறித் தோளில் போட்டபடி ஆகாயம் வெறிக்கும் கனிந்த முதியவரின் நிதானம் நாவல் உருவாக்கிக் காட்டும் உச்சங்களைத் தாண்டியும் நம்மைத் தீண்டுகிறது.

இந்த நாவலின் சமநிலை ஆச்சரியமான ஒன்று. மனிதர்களின் அக இருளை எழுத்தின் வழியாக அள்ளிக்கொட்டும் இந்த நாவல், அவற்றினூடாக வெளிப்படுத்தும் சமநிலை காரணமாக இருத்தலியல் நாவலாக மாறிவிடாமல் ஒளி பொருந்திய தருணங்களைக் கண்டடைகிறது. நாவலில் வருகிற பல கதாபாத்திரங்கள் தம்முடைய மனத்திலும், பிறரிலும் உறைந்திருக்கும் பேரிருளை அடையாளம் கண்டுவிடுகிறார்கள். அதற்குப் பின்பும் யாரோ ஒருவருடன் கொண்ட பிணைப்போ அல்லது அப்படி ஒரு நம்பிக்கையோ அவர்களை வாழ்வின் மீது நேசம்கொள்ள வைக்கிறது. இந்த முரணியக்கத்தை நம்பகத்தன்மையோடு நேர்த்தியாகச் சித்தரிக்கும் சு. வேணுகோபால், அதன் வழியாக மகத்தான தரிசனமொன்றை உருவாக்கிவிடுகிறார். பெண் கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையோடு சித்தரித்திருப்பதிலும் கிராமிய வாழ்க்கை, விவசாயப் பின்னணி சார்ந்த நுட்பமான தகவல்களைக் கூறுவதிலும் வேணு தனித்தன்மையோடு மிளிர்கிறார். நாவலில் இடம்பெறும் மாட்டு வண்டிப் பந்தயம் குறித்த சித்தரிப்பு தமிழ்ப் புனைவுவெளியின் சிகரத் தருணங்களில் ஒன்றென உறுதியாகக் கூற முடியும்.

பண்பாட்டுச் சித்தரிப்புகள்:

விவசாயிகள் என்பதால் மாடுகள் மீதான தனி நேசம் (கடவுளின் பெயரே நந்தகோபாலன்) கொண்டிருக்கிற சமூகமாக ஒக்கலிகர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். மாட்டுப் பொங்கலன்று பிறந்த அட்டி மாடை அவர்கள் ஒருபோதும் விற்பனை செய்யவே கூடாது. குல வரலாறுகளின் அடிப்படையில் கம்பளி அவர்களுக்கு மிக முக்கியமானது. அவர்களின் அனைத்து சுப காரியங்களும் நீதி பரிபாலனங்களும் கம்பளியில் அமர்ந்தபடிதான் நிகழும். ஆனால் அந்தக் கம்பளியில் பெண்களோ விதவையை மணந்த ஆண்களோ அமரக்கூடாது. பெண்கள் தாலி அணிய மாட்டார்கள். ஆனால் திருமணமான ஆண்கள் தம் கால்களில் மிஞ்சி அணிய வேண்டும். வயதுக்கு வந்த பெண்கள் 17 நாள்கள் தனிக்குடிசையில் இருக்க வேண்டும். வண்ணான்கள் வெளுத்த உடை கொண்டு தருவர். அவர்கள் வீடு திரும்பும் நாளில் நாய்க்குப் பலகாரமிடுவர். நாய் உணவைத் தின்பதை வைத்தே குழந்தைப் பாக்கியத்தை ஊகித்துக்கொள்ளலாம். பெண்கள் நிர்வாணமாகக் குடும்பத்திற்காக மங்களவார் சாமி கும்பிடுகிறார்கள். செத்து மேலே போன பிறகு, ‘எனக்கு என்ன கொண்டுவந்தாய்?’ என்று கிருஷ்ணன் கேட்கும்போது பதில் சொல்வதற்காக உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். பச்சைப் பிள்ளைகளுக்குக்கூடச் சூடு போடுகிற சடங்கு உண்டு.

அனைத்துக் குடும்ப நிகழ்வுகளிலும் காப்புக் குலத்துக்கு மட்டுமே உரித்தான துந்துபி இசைக்கப்படுகிறது. துலுக்கர்களிடமிருந்து தப்பித்து வருகையில் ஆற்றைக் கடக்க கோரைப்புல் உதவியதால் கோரைப்பாயில் உட்காரக் கூடாது. திண்டுக்கலுக்கு அருகில் உள்ள வீருமாரம்மா கோவிலில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாவில் குடும்பத்தில் பிறந்த பெண்கொடியாள் மொத்தக் குடும்பத்திற்காகவும் வேண்டிக்கொண்டு தம் புண்ணியங்களைத் தாரை வார்ப்பது என்று நாவல் முழுவதும் ஏராளமான பண்பாட்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. விக்னேஷ் என்கிற இளைஞன் இந்தச் சமூகம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கிற‌ மாணவனாக நாவலில் வருகிறான். அவன் பலரிடம் கேட்டுப் பெறும் தகவல்கள் வழியாகவும் பொம்மிப் பாட்டியின் உரையாடல்கள், மனவெளி வழியாகவும் பண்பாட்டுச் சடங்குகள், குல வரலாறு, இடப்பெயர்ச்சிக்கான காரணம், அந்தக் குடும்பத்தின் இரண்டு தலைமுறைக் கதைகள் ஆகியவற்றைச் சொல்லிச் சமகாலத்தோடு அனைத்தையும் இணைத்துவிடுகிறார் சு.வேணுகோபால்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கதை நிகழ்கிறது. இந்தக் காலத்தில் இனக்குழுவின் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் வழக்கொழிந்துவிட்டன. சில விஷயங்கள் வெறுமனே கடமைக்கு மேற்கொள்ளப்படுகின்றன. புற உலகில் நிகழும் மாற்றங்கள் இளைய தலைமுறையிடம் மெல்ல மெல்லப் பரவி வருகின்றன. இந்தச் சித்திரங்களை நாவல் எந்தவித பாவனையுமின்றி நிதானமாகப் பேசுகிறது. பொம்மிக் கிழவியின் புலம்பல்களைப் பொருட்படுத்தாது காரை வீட்டு மருமகள் தங்கம் உட்காருவதற்காகக் கோரைப்பாய் வாங்குகிறாள். ‘எனக்கும் சேர்த்து நீயே பச்சை குத்திக்க தாத்தி’ என்று இளம்பெண்கள் வைகுண்டத்தில் கேட்கப்படும் கிருஷ்ணரின் கேள்விக்கு இங்கே தயாராகாமல் அசட்டையோடு இருக்கின்றனர். கீழே விழுந்தது போல் ‘அம்மா’ என்று போலியாகக் கத்தி, மாதவிடாயிலிருக்கும் தாயைக் குடிசையிலிருந்து மச்சு வீட்டில் கால் பதிக்க வைக்கிறான் தனசேகரன். பெண்கள் பிற சாதி ஆண்களோடு கலந்து தவறு செய்துவிட்டால் தலைமுடி, சேலை நூல், காலடி மண் ஆகியவற்றோடு உருவ பொம்மை எரிக்கும் பழைய சடங்கினை ஒரு காலத்தில் அதனை ஆவேசத்தோடு செய்த முதியவரான திம்மையாவே ‘இப்ப வேண்டாம்’ என்று மகன் ரெங்கசாமியிடம் கெஞ்சுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மரபின் எதிர்க்குரலாகவே முன்னாள் சுயமரியாதைக் கட்சிக்காரரான சீரங்கு படைக்கப்பட்டிருக்கிறார். செத்துப்போன அட்டி மாட்டினைச் சம்பிரதாயங்களோடு புதைக்காமல் குடிப்பதற்காகத் தோலுரிப்பவர்களிடம் விற்று ‘நந்தகோபாலனைச்’ சீண்டுகிறார். ‘பிள்ளை பெறுவதற்கும் நாய் சோறுண்பதற்கும் என்ன தொடர்பு?’ என்று குல நம்பிக்கையைக் கேலி செய்கிறார். குத்த வைக்கும் பெண்களின் 17 நாள் சடங்கை ‘மூளையற்ற வீண்செலவு’ என்று காட்டமாக விமர்சிக்கிறார். மழை வருவதற்காகக் கழுதைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தும் மேகம் ஒன்றுகூடாததைக் கண்டு கவலைப்படுகிறவர்களிடம், ‘கல்யாணம் பண்ணி வச்சீங்களே, ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணீங்களா?’ என்று எகத்தாளமாகக் கேள்வி கேட்டு அதகளம் செய்கிறார். மகள் வளைகாப்பின்போது ‘அவள் கம்பளியில் உட்கார்ந்தால்தான் பொட்டு வைப்பேன்’ என்று அடம்பிடித்து அடிப்படையையே ஆட்டிப் பார்க்கிறார். ஆனால் இந்த எதிர்க்குரல் சமஸ்கரா நாவலின் நாரணப்பா போல் பூமியில் கால்படாமல் வெறும் கருத்தாக நாவலின் கதைப்பரப்பில் மிதக்கவில்லை. அவருடைய குணச்சித்திரத்தின் எல்லையை மீறாமல் போதுமான தர்க்கங்களுடனேயே இந்தக் கருத்துகள் நாவலில் பொருத்தமான இடத்தில் வந்துபோகின்றன. நாவலாசிரியரிடம் வலிந்து சீர்திருத்தம் பேசும் போலித்தனமில்லை.

‘தாலி ‘என்பதை அடிமைத்தனத்தின் குறியீடாகப் பெண்ணியர்கள் விமர்சிக்கின்றனர். ஒக்கலிகர் சமூகத்துப் பெண்கள் தாலி அணிவதில்லை. அதற்குரிய காரணமாகத் தசரத ராஜாவோடு தொடர்புடைய தொன்மமொன்று சிறுவர்கள் விளையாட்டாக நாவலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தை முற்போக்காகப் பார்க்காமல் வெறும் சமூக வழக்கமாகவே வேணுகோபால் பார்க்கிறார் என்பதற்கான தடங்கள் நாவலில் உண்டு. ஒக்கலிகர்கள் அதிகம் இல்லாத ஊர்களில், ‘கன்னடம் பேசுவதால் தம்மை எவரும் சக்கிலியர் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது’ என்பதற்காகவே பெண்கள் வெளியில் செல்லும்போது பொய்த் தாலி அணிகின்றனர் என்கிற சித்தரிப்பு நாவலில் இடம்பெற்றிருக்கிறது. ஒக்கலிகப் பெண்கள் தாலி அணியாததை, ‘பெரும் சீர்திருத்தமாக’ மேடையில் ஜெயகரன் முழங்குவதைச் சீரங்கு ‘அசட்டுத்தனம்’ என்று விமர்சிக்கிறார். தாலி அணியாவிட்டாலும் வேறு எதுவுமே இங்கும் மாறவில்லை என்கிற நிதர்சனத்தை வேணுகோபால் தெளிவாகப் பேசுகிறார்.

மனித மனங்களின் ஆழம்:

இன வரைவியல் நாவல்களில் வெளிப்படும் குலப் பெருமிதங்களோ பண்பாடு குறித்த மிகைப் பாவனைகளோ குடும்ப அமைப்பின் மேன்மைகளோ மரபு கட்டிக் காக்கும் புனிதத்தின் வல்லமையோ நாவலில் பெரிதாக வெளிப்படுவதில்லை. நாவலின் தொடக்கத்தில் தனாவுக்கு வருகிற கனவை நுட்பமாக வாசித்தாலே இந்த நாவல் எந்தத் திசைநோக்கி நகரப் போகிறது என்பதை ஊகிக்க முடியும். ‘தலைமுறைகள்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய நாவல்களிலும் புலம்பெயர்ந்த பல்வேறு சமூகங்களின் செவிவழிக் கதைகளிலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிற தொன்மம் ஒன்றுண்டு‌. துலுக்க ராஜா அவர்கள் வீட்டுப் பெண்ணைத் தூக்க முயல, அவள் கற்பைக் காப்பாற்றுவதற்காகச் சமூகமே ஒன்றிணைந்து ஊரைவிட்டு ஓடிவருகிற அல்லது கொலை செய்கிற கதைகள் பல சமூகங்களில் உண்டு. அந்தப் பெண்களே பிறகு கற்பின் புனிதத்தாலோ சமூகத்தின் குற்ற உணர்வாலோ தெய்வமாக்கப்படுவர். இந்த நாவலிலும் அதே மாதிரியான தொன்மம், கூடுதலாகக் குழந்தை செண்டிமெண்ட்டோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நாவலின் மைய இழையாக இல்லை. ராஜாக்கள் காலம் முடிந்து ஜனநாயகம் கோலோச்சுகிற போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கிற எந்த அதிகாரமும் இல்லாத துலுக்கனோடு காரை வீட்டின் மைய அச்சாக இருந்த சௌடம்மா ஓடிப்போகிறாள். (அது இன்னொரு குல தெய்வத்தின் பெயர்.)

ஆண், பெண் உறவின் சிக்கல்களுக்கும் அதனால் விளையும் சமூகத் தவறுகளுக்கும் அடையாள பேதமோ அரசியலோ இல்லை என்கிற நுட்பமான புரிதலை நாவலை வாசிக்கும் வாசகர் சென்றடைய முடியும். குடும்பம் என்கிற அமைப்பால் பல்லிளிக்கும் மனிதர்களின் அற்பத்தனங்களை வேணுகோபால் மிக நுணுக்கமாகப் படைத்துக் காட்டியிருக்கிறார். மிலேச்சர்களிடம் இருந்து பெண்ணைக் காப்பாற்றியதாக இறும்பூது எய்துகிற பண்பாட்டு மரபின் சொந்தக்காரர்களாகிய ஆண்கள்தாம் அவரவர் மனைவிகளிடம் கொடூரமாக நடந்துகொள்கின்றனர். கணவனின் ஆண்மையை இலேசாகச் சீண்டியதற்காகக் கர்ப்பிணியாயிருக்கும் சௌடம்மாவின் பிறப்புறுப்பில் ‘களைக்கொத்து’ சொருகப்பட்டு, பேருந்தில் குழந்தை குருதியாய்க் கசிந்து வெளியேற, உடைந்த மனத்தோடு தன் பிறந்த வீட்டுக்கு வருகிறாள். கணவனின் தொழிலுக்குப் பிறந்த வீட்டில் பணம் வாங்கித் தராமல் இருந்த அற்பக் காரணத்துக்காக உடலுறவின் உச்சத்தில் பத்மாவின் பிறப்புறுப்பில் அவள் கணவன் தன் உயிரணுவுக்குப் பதிலாக மிளகாய்ப் பொடியைப் பரிசளிக்கிறான். பதைபதைக்க வைக்கிற இவ்விரு காட்சிகளையும் வேணுகோபால் அவ்வளவு யதார்த்தமாகப் படைத்திருக்கிறார். பழைய காலத்துச் சௌடம்மா அதனை எவரிடமும் பகிராமல் வாழாவெட்டியாக வந்துவிடுகிறாள். பள்ளி இறுதிவரை படித்த பத்மாவால் அந்தப் பாதகச் செயலைப் பிறந்த வீட்டில் சொல்ல முடிகிறது என்பதே காலத்தால் நிகழ்ந்த ஒரே மாற்றமாக இருக்கிறது. துலுக்கர்களிடமிருந்து தப்பிவந்த கதையைப் பொம்மிப் பாட்டி பிள்ளைகளுக்குச் சொல்கிறபோது அதில் எந்தப் பெண்ணுக்கும் எதுவும் நிகழ்வதில்லை. ஆனால் அதே கதையை தனா கனவாகக் காண்கிறபோது அவன் அம்மா உட்பட எல்லோருமே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள். உடலுறவு குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் மன வேறுபாட்டை இந்த விஷயம் போகிறபோக்கில் தொட்டுச் செல்கிறது.

ஆண்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தம் சுயநலத்தாலும் பொறாமையாலும் பிற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்கிற கொடூரங்களும் நாவலில் பதிவாகியிருக்கின்றன. சக்களத்தியிடமிருந்து தன் கணவனை மீட்பதற்காகவும் சொத்துக்காகவும் ‘இவை எல்லாம் கணவன் உயிரைக் காப்பாற்றத்தான்’ என்கிற பாவனையோடு தன் மகன் கதிரய்யாவை நரபலி கொடுக்கத் துணியும் சீனியம்மாவும் இதே நாவலில்தான் வருகிறார். மூத்த மருமகள் குணவதிக்கும் பொம்மிப் பாட்டிக்கும் இடையே நிகழும் சண்டையில் வெளிப்படும் மனத்தின் குரூரங்களை நாவல் பச்சையாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால் அதே பொம்மிக் கிழவி இளைய மருமகள் தங்கத்திடமும் அவள் குடும்பத்திடமும் அவ்வளவு கனிவோடு நடந்துகொள்கிறாள். மனத்தில் உறையும் குரூரங்கள் வன்முறையாகவோ தீர்க்க முடியாத வன்மமாகவோ வெளிப்படுவதைத் திரை விலக்கியபடி மிக நுணுக்கமாக வேணுகோபால் படைத்துக் காட்டியிருக்கிறார். யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ ஆகியவற்றைவிட நுட்பமாக இந்த நாவல் குடும்ப வன்முறையின் பன்முகப் பரிமாணங்களை எந்தச் சாய்வுமின்றிப் பேசிச் செல்கிறது.

ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைப் பண்பாட்டு மரபின் பின்னணியில் விளக்க முயலும் நாவல்களில் தவறாமல் இடம்பெறுவது ‘சாபத்தின் பேராற்றல்’. இந்த நாவல் அதனையும் கடந்துசெல்கிறது. சிறுவன் கதிரய்யா நரபலி கொடுக்கப்படுகிறபோது, ‘என்னைக் கொன்றவன் குலம் அழிய வேண்டும்’ என்று தீராத துயரத்தோடு வானத்தைப் பார்த்துச் சாபம் கொடுக்கிறான். ஆனால், ‘சொன்னபடி சாலி மரத்தோட்டம் ஒச்சத்தேவனுக்கு எழுதி வைக்கப்பட்டது. அவனுக்குத் தலை நடுங்கவில்லை. வம்ச விருட்சம் அழியவில்லை. அவன் மனைவி மூன்றாவதாக ஒரு குழந்தையைப் பெற்றாள்’ என்று வேணுகோபால் அந்தக் காவிய மரணத்தைச் சாதாரணமாகக் கடந்துசெல்கிறார். செய்யாத தவறுக்கு வேசிப்பட்டம் கட்டி ஊராரால் கொடும்பாவி கொளுத்தப்பட்டு வெளியேறிய காமுலம்மாளின் சுய சாபத்தைக்கூட ‘வைராக்கியம்’ என்கிற அளவிலேயே நாவல் கையாண்டிருக்கிறது.

இந்த நாவல் சராசரித் தளத்தைத் தாண்டி மேலெழுவது மரபுக்கு எதிராக ஒலிக்கும் சீர்திருத்தக் குரல்களால் மட்டுமே அல்ல. அவற்றையெல்லாம் தாண்டிய மனித மனத்தின் ஆழங்களை நாவல் மிக நுட்பமாகத் தொட்டுச் செல்வதால்தான். தன் முன்னாள் மனைவி துலுக்கனுடன் ஓடிவிட்டதற்காக அவள் பிறந்த வீட்டினர் கொலைவெறியில் இருப்பதை அறிந்த வீரசிக்கு, மிகுந்த பக்குவத்தோடு அவர்களிடம் பேசுகிறான். ‘மாடு தின்பதுதான் குற்றமென்றால் ஆடு தின்னும் நாம் யார்?’ என்றெல்லாம் முற்போக்காகவும் நல்லிணக்கத்தோடும் விரிந்த பார்வையோடும் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். ஆனால் அன்றிரவின் கனவில் தன் முன்னாள் மனைவியைப் புணர முயல்கிறவனை விரட்டிவிட்டு அவளை அதே வெறியோடு புணர்கிறான் வீரசிக்கு. பசு தின்னும் துலுக்கன் பன்றியில் ஏறி அவ்விடத்தை விட்டுப்போகிறான். உண்மையில் இது அதிர்ச்சியூட்டும் தரிசனம். புற உலகில் நாம் பேசும் முற்போக்குப் பாவனைகளைத் தாண்டி நிஜத்தில் நம்மை ஆக்கிரமித்திருக்கும் ஆதி இச்சையையும் கடக்கவே முடியாத கருவறைப் பதிவுகளையும் அற்புதமான படிமமாக வேணுகோபால் படைத்துக் காட்டியிருக்கிறார்.

சாதி அடையாளங்கள்:

தம் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் நாவலில் எவரும் சாதி சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தத் துணிய மாட்டார்கள். அது தம்மைச் சீராட்டும் அன்னை மடியையே பதம் பார்க்கும் இருமுனைக் கத்தி என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் வேணுகோபால் இந்த நாவல் முழுவதும் உண்மையான மனச்சுத்தியோடு சாதி குறித்துத் திறந்த மனதுடன் உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்.

தம் அதிகாரப் போட்டிக்காக ஒட்டர்களையும் சக்கிலியர்களையும் கல்லோடும் கம்போடும் சண்டைபோட விட்டுக் குளிர்காய்கிற கம்பளத்து நாயக்கரையும் ஒக்கலிகக் கவுண்டரையும் வேணுகோபால் ஒளிவுமறைவின்றிப் படைத்திருக்கிறார். காரை வீட்டுக் குடும்பத்தினரிடம் பாசத்தைப் பொழிந்து நல்ல மகனாக, உதாரணப் புருஷனாக, அற்புதமான தந்தையாகத் திகழ்கிற ரங்கசாமி, தன்னைப் பண்ணையாள் நிமிர்ந்து பார்த்த ஒரே காரணத்துக்காக அந்த விசுவாசமான சக்கிலியனைக் கொலைவெறியோடு சவுக்கால் அடிக்கிறார். அவன் தன் மகளைப் படிக்கப் போடுவதைத் கண்டு, ‘சாணி அள்ளுறவளுக்கு எதுக்குடா படிப்பு?’ என்று அசூயை அடைகிறார். நாவலில் காட்டப்படும் நகரத்திலும்கூட அரசாங்க வேலையில் இருந்தும் கிறித்தவனாக மாறிய பறையனுக்கு அவன் பிறந்த சாதி அடையாளத்திற்காகவே வீடு மறுக்கப்படுகிறது. ‘ எல்லாம் வல்ல இயேசுவே, உன்னை ஒருபோதும் கை விடுவதில்லை என்றாயே! யாரை? எதை? சொர்க்கம் சமீபத்தில் இருக்கிறது என்றாயே? எந்த நாட்டின் சமீபத்தில் இருக்கிறது அங்கு போக?’ என்று அவன் பைபிளை விரித்து வைத்து விநோதமாகப் புலம்புகிறான். இதனைக்கூட எவரும் எழுதிவிடலாம். ஆனால் அந்தத் தலித் கிறித்தவன், ‘இவ்வளவு நடந்த பின்னாடியும் நான் ஏன் சிவப்பான பெண்களை விரும்புகிறேன்?’ என்று சுய விமர்சனம் செய்யும் இடம்தான் வேணுகோபாலின் நுட்பம்.

மற்றவர்களிடம் படம் காட்டும் ஒக்கலிகர்களை, அவர்களையும்விட மேலான பார்ப்பனர்கள் உச்சிக்கிளையில் நின்று, ‘ஓரம் போ’ என்று சைகை செய்கிறார்கள். வெள்ளையனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் தீவிரவாதியான மல்லையா அமர்ந்துபோன நாற்காலியில் குண்டிச்சூடு ஆறும் முன்னரே ஒரு வைதீகப் பெண்மணி அருவருப்போடு நீர் ஊற்றிச் சுத்தம் செய்கிறாள். தான் பிறந்த சமூகத்தின் மேல்நிலையாக்கக் கொடுமைகளையும் அவர்களே கீழ்நிலையில் நின்று சந்திக்கும் அவமானங்களையும் வேணுகோபால் கூடுதல் குறையின்றிச் சமநிலையோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வெளியில் மட்டுமல்ல, ஒக்கலிகர்களுக்கு இடையேயும் சாதி நாவை விரித்துப் பாம்பைப் போல் படம் காட்டுகிறது. எப்போதோ ஒரு குடும்பத்தில் முதல் கணவன் இறந்த பிறகு இரண்டு முறை அவன் சகோதரர்களையே ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த வழக்கம் அதன் பிறகு பெரிதாய் நீடிக்கவில்லை. ஆனால் அந்தக் குடும்பத்தின் வழிவந்த ஒக்கலிகர்களை ‘மூணு பளவு’ என்றழைத்து, குஞ்சவடிகள் என்றழைக்கப்படுகிற ஒக்கலிகர்கள் ஒதுக்கி வைத்துத் திருமண உறவு மேற்கொள்ளாமல் இருப்பதை நாவல் சுட்டிக் காட்டுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை ஆகிய இருவரின் காதலுக்கு (அசோக்- நித்யா, சதீஷ்- காயத்ரி) இந்த உட்சாதி முரணே காரணமாக இருக்கிறது. பசு வழியாகவோ பெண் வழியாகவோ சாதி உள்ளே நுழைந்து ஒருவரைப் புனிதமாக்கி இன்னொருவரைத் தீட்டாக்கிவிடுகிறது என்பதை நாவல் குறிப்பால் உணர்த்துகிறது.

ஆனால், சாதித் தீட்டை எவருடைய சதியாகவும் அல்லாமல் மனிதர்களின் பழக்கத்தால் உருவாகும் அசூயை உணர்வாகவே வேணுகோபால் புரிந்து வைத்திருக்கிறார். அண்ணன் மனைவியோடு பலமுறை எவருக்கும் தெரியாமல் உறவுகொள்ளும் ரங்கசாமி, எப்போதோ அண்ணியை மணக்கும் வழக்கம் கொண்ட மூணு பளவினரிடம் தீண்டாமை பாராட்டுகிற முரண் நாவலில் மௌனச் சரடாக வந்துபோகிறது.

அக, புறச் சித்திரங்கள்:

இந்த நாவலில் அக உணர்வுகளும் புறச் சித்திரங்களும் வெகு இயல்பாய் இணைந்து வந்திருக்கின்றன. நாவலின் இடையில் பொம்மியின் நினைவோட்டமாக முந்தைய தலைமுறையின் கதை விவரிக்கப்படுகிறது. சித்தைய கௌடர் காவல்துறையினரிடமிருந்தும் கம்பளத்து நாயக்கர் வகையறாவிடமிருந்தும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன் பிரியமான இளைய மனைவி தேவம்மாவிடம் இளைய மகனை நரபலியாகக் கேட்கிறார். அவள் சொத்துகளைத் துச்சமாகக் கருதிப் பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள். அதனால் கோபமடைந்த சித்தையா கௌடர், தனக்கு அறவே பிடிக்காத மூத்த மனைவி சீனியம்மாவைச் சரணடைந்து கெஞ்சுகிறார். அவள் சொத்துக்காகவும் சக்களத்தியை வெல்வதற்காகவும் தன் மகன் கதிரய்யாவைப் பலி கொடுக்கச் சம்மதிக்கிறாள். அவர் கோபத்தில் அனைத்துச் சொத்துகளையும் சீனியம்மா பிள்ளைகளுக்கே எழுதி வைத்துவிட்டுத் தேவம்மாவை மொத்தமாகப் புறக்கணித்து அவள் வீட்டுக்கே செல்ல மறுக்கிறார். அந்த விரக்தியில் தேவம்மா தூக்கிலிட்டுச் செத்துப் போகிறாள். குற்ற உணர்வில் தான் கட்டிய கோட்டை போன்ற காரை வீட்டை மட்டும் அவள் பிள்ளைகளுக்கே எழுதி வைக்கிறார்.

இந்தக் கதை சொல்லப்படுகிறபோது இணைகோடாகச் சுதந்திரப் போராட்டத் தருணங்கள் நாவலில் விரிகின்றன. சித்தைய கௌடர் நீதிக்கட்சி ஆதரவாளர். அவருக்குக் காந்தியோ காங்கிரசோ பிடிக்காது. தேவம்மாவின் மூத்த மகன் மல்லையா ஆரம்பத்தில் காந்தியின் மீது மரியாதை வைத்திருந்தாலும் போகப்போகக் கடுமையாக வெறுக்கிறான். பகத்சிங் தூக்கு, சுபாஷ் சந்திர போஸ் வெளியேற்றம் ஆகியவற்றில் காந்தியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி, ‘இதுவா அகிம்சை? அவரிடம் தியாகம் துளிக்கூட இல்லை. அவருக்கு அவர் மட்டுமே முக்கியம்’ என்று கூறி நிர்தாட்சண்யமாகக் காந்தியைப் புறக்கணிக்கிறான். அவரை விமர்சித்துப் பேசுவதோடு, வாஞ்சிநாதன் நண்பர்கள் குழுவில் இணைந்து பல தீவிரவாதச் செயல்களை மேற்கொள்கிறான். பிடிபட்டுப் பலகாலம் சிறையில் இருந்து அதனாலேயே நோய்வாய்ப்படுகிறான். அவன் வெளியில் வந்து சிலகாலம் நோய்வாய்ப்பட்டவனாகவே வீட்டிலிருக்கிறான். காந்தி சுடப்பட்டபோது ‘இறுதி வெற்றி அவருக்குத்தாம்பா’ என்று உணர்வுப்பூர்வமாகக் கண்ணீர் மல்குகிறான்.

நாவலில் இடம்பெறும் மேற்கண்ட அகப்புறச் சித்திரங்களைத் ‘தியாகம்’ என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைத்து வேறொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால் வேணுகோபாலின் மேதைமை புரியும். நாவலின் சமகாலக் கதையில் எல்லாப் பண்பாட்டு விஷயங்களும் கை விடப்பட்டாலும் அந்த வீட்டைத் தாங்கிக்கொண்டிருப்பது சௌடம்மாவின் தியாகம்தான். அதனை அனைவருக்கும் சுட்டிக்காட்டியபடியே ரங்கசாமி தன் மரபார்ந்த அதிகாரத்தைப் புற்றுப் பிடித்து இற்றுப்போன வீட்டிலும் நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார். இதன் மறுபுறத்தில் விவசாயத்தில் ஏற்படும் வீழ்ச்சி, வீட்டை வங்கியில் அடமானம் வைப்பது, மாட்டுவண்டிப் பந்தயத்தில் தோற்பது, அடுத்தவர்களிடம் வீட்டுப் பெண்கள் கூலி வேலைக்குச் செல்வது, மாடுகளைக் கை மாற்றுவது ஆகிய நிகழ்வுகள் புறரீதியான தகவல்களாக நாவலில் பதிவாகியிருக்கின்றன.

இந்த இரண்டும் இணைகிற புள்ளியும் அற்புதமானது. விவசாயம் அழிகிறபோது நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் கூடச்சேர்ந்து உடன்கட்டை ஏறித்தானே ஆக வேண்டும்? வாழாவெட்டியாகத் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு குடும்பத்திற்காக உழைத்துத் தேயும் சௌடம்மாவின் தியாகத்தால் காப்பாற்றப்பட்ட அந்தப் பழைய வீட்டிலிருந்து வெளியேறும் குடும்பத்தை நிதானமாக யோசித்துச் செயலாற்றும் புத்திசாலியான நித்யாவின் கைகளில் சீரங்கு ஒப்படைக்கிறார். இந்த நுணுக்கமான மாற்றத்தை நாவல் அகம், புறம் ஆகிய இரண்டிலும் தொட்டுக் காட்டிவிடுகிறது. அதைவிட முக்கியம், தம் மரபின் அனைத்து வேர்களையும் மனதளவில் துறந்தாலும்கூட, ‘மனைவி உடல் மீதான உடைமை உணர்வை’ விட்டு விலக முடியாமல் தத்தளித்து, தம்பியையோ மனைவியையோ தண்டிக்க மனமின்றித் தன்னையே தண்டித்துக்கொண்டு நாவலின் இறுதியில் சீரங்கு அடைகிற அக விடுதலை. அதுவே நாவலின் அனைத்துச் சிக்கல்களையும் நுட்பமாக விடுவித்து அந்தக் குடும்பத்திற்கு வேறொரு பாதையைக் காட்டுகிறது.

நிறைவாக:

நாவலில் ஓர் அற்புதமான காட்சி வரும். சீரங்கு ஒரு கோவிலுக்குச் செல்வார். மக்கள் நீரருந்தும் ஊருணி மேட்டிலும் பகவதியம்மன் கோவில் கீழேயும் அமைந்திருக்கும். கங்கா தேவி தொடர்புடைய புராணக்கதை ஒன்று அங்கே தல வரலாறாகச் சொல்லப்படும். ஆனால் அதைப் பார்த்தவுடன் சீரங்கு மனதில் ஒரு வரி தோன்றும். ‘இயற்கை முன் மண்டியிடும் கடவுள்’. உண்மையில் மரபுகள், பண்பாடுகள், நம்பிக்கைகள், வரலாறுகள், புனிதங்கள் யாவற்றையும்விட வல்லமை கொண்டதாய் எழுந்து நிற்கிறது பேதமற்ற இயற்கை. அதன் மகத்தான வல்லமையின் முன் அடிபணிவதைத் தவிர வேறென்ன சாதித்துவிட முடியும் இந்தச் சிறு உயிரால்?

மனத்தில் துளியளவும் பக்தியே இன்றி கோவிலின் சிற்பங்களை, கட்டடக் கலை நுணுக்கங்களை, தல விருட்சத்தின் மகிமைகளை வழிப்போக்கனுக்கு வகை வகையாய் விவரித்துவிட்டுக் காக்கை தூக்கிப் போகும் அணில் குஞ்சின் வெறும் சடலம் கண்டு மனம் ஒடுங்கிக் கை கூப்பும் அறிவார்ந்த முதியவரின் கனிவை சு.வேணுகோபால் தன் 25 வயதிற்குள் அடைந்திருக்கிறார் என்பதற்கான வரலாற்றுச் சாட்சியே இந்த நாவல். அந்த அறிவார்ந்த கனிவே இந்த நாவலை முக்கியமானதாக்குகிறது.

*

நுண்வெளி கிரகணங்கள், சு.வேணுகோபால், தமிழினி வெளியீடு, விலை: ரூ.400

1 comment

YASMIN July 1, 2023 - 12:22 pm

சு. வேணுகோபாலன் எழுதிய ‘நுண்வெளி கிரகணங்கள்’ பற்றிய தங்கள் நூல் மதிப்புரையை வாசிக்கும்போது நூலின் சிறப்பு அதன் தன்மை இவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் இந்த கட்டுரையின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கும் தங்களின் நுட்பமான, நுணுக்கமான சிந்தனை வடிவங்கள் வழக்கம்போல் மனம் கவர்கின்றன..

‘உண்மையில் இந்த நாவல் இன வரைவியலின் அனைத்து அம்சங்களையும் நம்முன் கடை பரப்பி அதைக் கடந்து செல்வதற்கான பாதையை நுட்பமாகக் காட்டுகிறது. வெளிப்பார்வைக்கு இன வரைவியல் நாவலாகத் தோற்றமளிக்கும் நுண்வெளி கிரகணங்கள், அதன் ஆழத்தில் மானுட தரிசனத்தையே முன் வைத்திருக்கிறது.’ தங்கள் ஆழமான உணர்தலைத் தங்கள் வரிகளில் படிக்க சுகம்..

‘நான்கு தலைமுறைகளின் வரலாற்றை நம் கண் முன்னே விரித்துக் காட்டிவிட்டு இவ்வளவுதான் மக்கா மனசுப்பய வாழ்க்கை என்று துண்டை உதறித் தோளில் போட்டபடி ஆகாயம் வெறிக்கும் கனிந்த முதியவரின் நிதானம்’… தங்கள் டச்!!

‌ சமஸ்கரா நாவலின் நாரணப்பா, ‘தலைமுறைகள்’ ‘கோபல்லபுரத்து மக்கள்’ யூமா வாசுகியின் ‘ரத்த உறவு ‘ , உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’….
இவையெல்லாம் தங்கள் பரந்த வாசிப்பை, அதைத் தாங்கள் எழுதும் கட்டுரையோடு பொருத்தும் திறமையை உணர்த்தும் இடங்கள்!!!

இந்த கட்டுரையின் வாயிலாக, தங்கள் எழுத்தை ரசித்த பல இடங்கள் உள்ளன..

‘மனிதர்களின் அக இருளை எழுத்தின் வழியாக அள்ளிக் கொட்டும் இந்த நாவல் அவற்றின் ஊடாக வெளிப்படுத்தும் சமநிலை காரணமாக இருத்தலியல் நாவலாக மாறிவிடாமல் ஒளி பொருந்திய தருணங்களைக் கண்டடைகிறது நாவலில் வருகிற பல கதாபாத்திரங்கள் தம்முடைய மனத்திலும், பிறரிலும் உறைந்திருக்கும் .பேரருளை அடையாளம் கண்டுபிடிகிறார்கள் அதற்குப் பின்பும் யாரோ ஒருவருடன் கொண்ட பிணைப்போ அல்லது அப்படி ஒரு நம்பிக்கையோ அவர்களை வாழ்வின் இது நேசம் கொள்ள வைக்கிறது’.. நாவலைப் பற்றிய தங்கள் உணர்தல் அருமை..

‘ஆண் பெண் உறவின் சிக்கல்களுக்கும் அதனால் விளையும் சமூகத் தவறுகளுக்கும் அடையாள பேதமோ அரசியலோ இல்லை என்கிற நுட்பமான புரிதலை நாவலை வாசிக்கும் வாசகர் சென்றடைய முடியும்’… அருமையான வரிகள் டாக்டர்!

‘மனத்தில் உறையும் குரூரங்கள் வன்முறையாகவோ தீர்க்க முடியாத வன்மம் ஆகவோ வெளிப்படுவதை திரை விலக்கியபடி மிகவும் நுணுக்கமாக வேணுகோபால் படைத்துக்காட்டி இருக்கிறார்’… தங்கள் டச்!!!

நம்மைக் கவர்ந்த தங்கள் எழுத்தின் பல இடங்கள்…👇

‘ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை பண்பாட்டு மரபின் பின்னணியில் விளக்க முயலும் நாவல்களில் தவறாமல் இடம்பெறுவது ‘சாபத்தின் பேராற்றல்’. இந்த நாவல் அதனையும் கடந்து செல்கிறது’

‘இந்த நாவல் சராசரித்தளத்தை தாண்டி மேலெழுவது மரபுக்கு எதிராக ஒலிக்கும் சீர்திருத்தக் குரல்களால் மட்டுமே அல்ல. அவற்றையெல்லாம் தாண்டிய மனித மனத்தின் ஆழங்களை நாவல் மிக நுட்பமாகத் தொட்டுச் செல்வதால் தான்’

‘ புறவுலகில் நாம் பேசும் முற்போக்கு பாவனைகளைத் தாண்டி நிஜத்தில் நம்மை ஆக்கிரமத்திருக்கும் ஆதி இச்சையையும் கடக்கவே முடியாத கருவறைப் பதிவுகளையும் அற்புதமான படிமமாக வேணுகோபால் படைத்துக் காட்டியிருக்கிறார்.’

‘ பசு வழியாகவோ பெண் வழியாகவோ சாதி உள்ளே நுழைந்து ஒருவரை புனிதமாக்கி இன்னொருவரைத் தீட்டாக்கி விடுகிறது என்பதை நாவல் குறிப்பால் உணர்த்துகிறது’.

‘நாவலில் இடம்பெறும் மேற்கண்ட அகப்புறச் சித்திரங்களை தியாகம் என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைத்து வேறொரு கோணத்தில் பார்த்தால் வேணுகோபாலின் மேதைமை புரியும்’.

‘விவசாயம் அழிகிற போது நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் கூடச் சேர்ந்து உடன்கட்டை ஏறித்தானே ஆக வேண்டும்?’.

‘ தம் மரபின் அனைத்து வேர்களையும் மனதளவில் துறந்தாலும் கூட மனைவி உடல் மீதான உடைமை உணர்வை விட்டு விலக முடியாமல் தத்தளித்து தம்பியையோ, மனைவியையோ தண்டிக்க மனமின்றித் தன்னையே தண்டித்துக் கொண்டு நாவலின் இறுதியில் சீரங்கு அடைகிற அக விடுதலை. அதுவே நாவலின் அனைத்துச் சிக்கல்களையும் நுட்பமாக விடுவித்து அந்தக் குடும்பத்திற்கு வேறொரு பாதையைக் காட்டுகிறது.’

நிறைவாக, தாங்கள் எழுதி இருக்கும் வரிகள் மிகவும் ஆழமானவை… மனம் கவர்பவை….👇

‘ உண்மையில் மரபுகள், பண்பாடுகள், நம்பிக்கைகள், வரலாறுகள், புனிதங்கள் யாவற்றையும் விட வல்லமை கொண்டதாய் எழுந்து நிற்கிறது பேதமற்ற இயற்கை. அதன் மகத்தான வல்லமையின் முன் அடிபணிவதைத் தவிர வேறென்ன சாதித்துவிட முடியும் இந்தச் சிறு உயிரால்?’.

‘மனதில் துளயளவும் பக்தியே இன்றி கோவிலின் சிற்பங்களை, கட்டடக்கலை நுணுக்கங்களை, தலவிருட்சத்தின் மகிமைகளை வழிப்போக்கனுக்கு வகைவகையாய் விவரித்துவிட்டு, காக்கை தூக்கிப் போகும் அணில் குஞ்சின் வெறும் சடலம் கண்டு மனம் ஒடுங்கிக் கைகூப்பும் அறிவார்ந்த முதியவரின் கனிவை சு.வேணுகோபால் தன் 25 வயதிற்குள் அடைந்திருக்கிறார் என்பதற்கான வரலாற்று சாட்சியே இந்த நாவல்’

தங்கள் வழியில் வாசிக்காத ஒரு நாவலைத் கண்டடைவது, அழகாக படைக்கப்பட்ட வண்ணமற்ற ஓர் ஓவியத்தை, பிறகோர் ஓவியர் உரிய வண்ணங்களைத் தீட்ட, கண்டு ரசித்து ஆனந்திப்பது போல் இருக்கிறது… வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே!!!

Comments are closed.