மென்மழை நிச்சயம் பொழியும்: ரே பிராட்பரியின் ‘There Will Come Soft Rains’

by எஸ்.கயல்
0 comment

ஓய்வறையின் பேசும் கடிகாரம் பாடியது. ‘டிக் டாக்! ஏழு மணி! எழ வேண்டிய நேரம்! ஏழு மணி! எழ வேண்டிய நேரம்!’. யாரும் எழ மாட்டாரோ எனப் பயந்தது போலப் பாடியது. காலையில் வீடு வெறுமையாக இருந்தது. கடிகாரம் தொடர்ந்தது. “காலையுணவு உண்ணும் நேரம். ஏழு ஒன்பது, காலையுணவு உண்ணும் நேரம். ஏழு ஒன்பது” என்று கடிகாரம் திரும்பத் திரும்ப வெறுமையில் ஒலித்தது.

சமையலறையில் இருந்த சிற்றுண்டி அடுப்பு உஸ்ஸென சீறலாகப் பெருமூச்சொன்றை எழுப்பி, மிகச் சரியாக வாட்டப்பட்ட எட்டு பழுப்பு ரொட்டித்துண்டுகள், ஒருபக்கம் மட்டும் வறுத்த எட்டு முட்டைகள், பன்றி இறைச்சித் துண்டுகள் பதினாறு, இரண்டு காஃபி மற்றும் இரண்டு கோப்பைகள் குளிர்ந்த பால் என அனைத்தையும் அதன் சூடான உட்பகுதியிலிருந்து வெளிக்கொணர்ந்தது.

சமையலறை மேற்கூரையில் இருந்து இரண்டாவது குரல்.

“கலிஃபோர்னியா ஆலன்டேல் நகரத்தில் இன்று ஆகஸ்ட் 4, 2026” என்றது. நன்கு நினைவில் நிற்கும் வண்ணம் தேதியை மீண்டும் மூன்றுமுறை சொன்னது.

தொடர்ந்து “இன்று திரு. ஃபெதர்ஸ் டோனின் பிறந்த நாள், டிலிட்டாவின் திருமண ஆண்டு நிறைவு நாள். காப்பீடு செலுத்த வேண்டிய நாள். தண்ணீர், எரிவாயு, மின்சாரக் கட்டணங்களும் செலுத்த வேண்டும்” என்றது அக்குரல்.

சுவரில் எங்கோ மின்சுற்று கிளிக்கிட்டது, நினைவு நாடாக்கள் மின்சாரக் கண்பார்வையில் நழுவின.

“எட்டு-ஒன்று, டிக்டாக், மணி எட்டு ஒன்று, வேலைக்குச் செல், ஓடு, ஓடு, எட்டு ஒன்று” என்றது குரல். ஆனால் எந்தக் கதவும் அறைந்து சாத்தப்படவில்லை, எந்தக் கம்பளமும் ரப்பர் செருப்புகளின் மென்நடை உணரவில்லை. வெளியே மழை பெய்தது. முன்வாசற்கதவில் இருந்த வானிலைப் பெட்டி, “மழையே மழையே போய்விடு; ரப்பர் செருப்பும், மழையங்கியும் இன்றைக்கு……” என்று அமைதியாகப் பாடியது. மழை அந்த வெறுமை வீட்டின் மீது தாளமிட்டு எதிரொலித்தது.

வெளியே கார்நிறுத்தும் இடம் மணியோசையுடன் தன்கதவைத் தூக்கித் திறந்தது. அதனுள் கார் ஒன்று காத்திருந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பின்கதவு மீண்டும் கீழே இறங்கியது.

மணி எட்டு முப்பது ஆன போது முட்டைகள் உலர்ந்து சுருங்கியும், ரொட்டி கல்லைப் போலவும் ஆகியிருந்தன. ஓர் அலுமினியக் கரண்டி அவற்றைச் சுரண்டி கழுவும் தொட்டியில் கொட்டியது. அதிலிருந்து வந்த சுடுநீர் அவற்றை ஒரு உலோகத் தொண்டைக்குள் செலுத்த, அது அவற்றைச் செரித்து, தொலைவிலிருந்த கடலில் வெளியேற்றியது. அழுக்குப் பாத்திரங்கள் தூய்மைப்படுத்தும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு, அவை கழுவப்பட்டு, உலர்ந்து மிளிர்ந்து வெளிவந்தன.

“ஒன்பது பதினைந்து. தூய்மையாக்கும் நேரம்” எனப் பாடியது கடிகாரம்.

உடனே சுவரின் வளைகளில் இருந்து குறுஎந்திர எலிகள் துள்ளிப் பாய்ந்தன. ரப்பராலும் உலோகத்தாலும் ஆன அச்சிறிய துப்புரவு எந்திர எலிகள் அறை முழுதும் ஊர்ந்தன. மீசை கொண்ட அவை நாற்காலிகளில் மோதிச் சுழன்று, தரை விரிப்பின் இழைகளைக் கசக்கி, மறைந்துள்ள தூசையும் மென்மையாய் உறிஞ்சின. பிறகு அந்த மர்மப் படையெடுப்பாளர்கள் தங்கள் வளைகளுக்குள் திரும்பக் குதித்தனர். அவற்றின் இளஞ்சிவப்பு மின்சாரக் கண்கள் மங்கின. வீடு தூய்மையானது.

பத்து மணி.

மழைக்குப் பின்னான சூரியன் வெளியே வந்தது. இடிந்த குவியல்களும் சாம்பலும் மட்டுமே காணப்படுகிற நகரத்தில் அவ்வீடு மட்டும் தனித்து எஞ்சி நின்றது. இரவில் அழிந்துபோன அந்நகரத்திலிருந்து வீசிய கதிர்வீச்சின் வெளிச்சத்தைப் பல மைல்களுக்கு அப்பாலும் பார்க்க முடிந்தது.

பத்து-பதினைந்து.

தோட்டத்தின் தெளிப்பான்கள் பொன்னான நீர் ஊற்றைச் சுழற்றியடித்து, அந்தக் காலையை மென்காற்றில் ஒளிச்சிதறல்களாய் நிறைத்தன. ஜன்னல் கண்ணாடிகள் மீது தெறித்த நீர், அவ்வீட்டின் வெள்ளைப்பூச்சு முழுதும் அறவே எரிந்திருந்த மேற்குப்புறமாக ஒழுகியோடியது. அவ்வீட்டின் மேற்குமுகம் ஐந்து இடங்களைத் தவிர, முழுதும் கருகிப்போயிருந்தது. அச்சுவர்ப் பூச்சில் தெரிந்த நிழலுருவில் ஒருவன் புல்தரையை சீர்செய்து கொண்டிருக்கிறான். இன்னொரு உருவத்தில் ஏதோ ஒரு புகைப்படம் போல ஒரு பெண் பூக்களை எடுக்கக் கீழே குனிந்து இருக்கிறாள். சற்றுத்தள்ளி, மரத்தின் எரிந்து பதிந்த பிம்பங்களில், காற்றில் கைகளை வீசியவாறே ஒரு சிறுவனும், இன்னும் மேலே, எறியப்பட்ட ஒரு பந்தின் உருவமும், அச்சிறுவனுக்கு எதிரே ஒருபோதும் கீழே வராத பந்தைப் பிடிக்க கைகளை உயர்த்தியபடி ஒரு சிறுமியும் இருந்தனர். அந்த ஐந்து உருவங்களில் மட்டும் – ஆண், பெண், இரு குழந்தைகள், பந்து ஆகியவற்றில் மட்டும் – சுவர்ப்பூச்சு தெரிந்தது. பிறபகுதி அனைத்தும் ஒருமெல்லிய கரிப்படலமாகக் காணப்பட்டது.

நீர்த் தெளிப்பானிலிருந்து வந்த மென்மழை, தோட்டத்தைச் சிதறும் ஒளியால் நிறைத்தது.

இதுநாள் வரையில் அவ்வீடு எவ்வளவு அமைதி காத்தது. தனித்துத் திரிந்த நரிகளிடமும் ஊளையிடும் பூனைகளிடமும் எந்தப் பதிலும் வராமல் “அங்கே செல்வது யார்?”, “கடவுச் சொல் என்ன?” என்றெல்லாம் எவ்வளவு கவனமாக அது விசாரித்தது. அது தன்னுடைய ஜன்னல்களை அடைத்துக் கொண்டது. பழைய கன்னிப் பெண்களை ஆக்கிரமித்த தற்காப்புணர்வெனும் ஒரு எந்திரத்தன பிரமையில் ஜன்னல்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிக்கொண்டது அவ்வீடு.

ஒவ்வொரு சத்தத்திற்கும் அவ்வீடு நடுங்கித் துடித்தது. ஒரு குருவி ஜன்னலை உரசினால் கூட ஜன்னல்திரை வேகமாகத் திறந்தது. குருவி திடுக்கிட்டுப் பறந்து விடுகிறது. ஒரு பறவை கூட அந்த வீட்டைத் தொடக்கூடாது.

அவ்வீடு ஒரு ஆலயம் போலிருந்தது. சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கில் எந்திரப் பணியாளர்கள் ஒரு சேர்ந்திசை போல பணிவிடை செய்திருந்தனர். ஆனால் கடவுள்களான மனிதர்கள் காணாமற்போன பின்பும் மதத்தின் சடங்குகள் போலஅர்த்தமற்று, பயனற்று எந்திரப் பணிகள் தொடர்ந்தன.

மதியம் பனிரெண்டு மணி.

வீட்டின் முகப்பில் ஒரு நாய் நடுங்கியபடி ஊளையிட்டது.

நாயின் குரலை அடையாளம் கண்டுகொண்ட முன்வாசற்கதவு திறந்தது. முன்பு பெரிதாகச் சதைப்பிடிப்புடன் இருந்த அந்த நாய் இப்போது எலும்பும் தோலுமாக, புண்களுடன் காணப்பட்டது. அது வீட்டில் நுழைந்து சேற்றுக்கால் தடங்களுடன் அலைந்தது. அந்நாயின் பின்னால் சேற்று மண்ணைத் துடைக்க எந்திர எலிகள் விர்ரென்ற சத்தத்துடன் கோபமாகத் தொடர்ந்தன. சேற்றை வாரிச் சுத்தப்படுத்தும் அசௌகர்யத்திற்காக அவை சினமடைந்தவை போலிருந்தன.

ஒரு பழுத்த இலை, கதவுக்கு அடியில் பறந்து வந்தால் கூட போதும். உடனே சுவரின் பலகைகள் திறக்க, செம்புத் துண்டாலான எந்திர எலிகள் பாய்ந்து வந்தன. தூய்மையை அவமதிக்கும் தூசோ, முடியோ, காகிதமோ எதுவாயினும் தங்கள் மீச்சிறு எஃகுத் தாடைகளில் கவ்விக்கொண்டு வேகமாக தங்கள் வளைகளுக்குள் ஓடின. அங்கே இருந்து பாதாள அறை வரை நீண்ட குழாய்கள், ‘பேயல்’ என்கிற பூதம் இருட்டு மூலையில் அமர்ந்திருப்பது போலக் காட்சியளித்த எரிதொட்டியின் துளையில் குப்பைகளைக் கொட்டின.

அவ்வீட்டு நாய் ஒவ்வொரு கதவருகேயும் வெறியுடன் குரைத்தபடி மாடிக்கு ஓடியது. இறுதியில் அந்த வீடு புரிந்து கொண்டதைப் போலவே அங்கு மௌனம் மட்டும்தான் இருக்கிறது என்பதை அந்த நாயும் புரிந்துகொண்டது.

நாய் காற்றை முகர்ந்து சமையலறைக் கதவைச் சுரண்டியது. அந்தக் கதவுக்குப் பின்னால்அடுப்பு, தோசைகளை இட்டுக்கொண்டிருந்தது. அது சுடும்அடர்வாசனையும் ‘மேப்பிள்’ பாகின் நறுமணமும் அந்த வீட்டை நிறைத்தது.

வாயில் நுரைதள்ள காற்றை முகர்ந்தபடி கதவருகே படுத்துக்கிடந்த நாயின் கண்கள் நெருப்பாக மாறின. அது மூர்க்கமாக வட்டமிட்டு, தன்வாலைக் கடித்தபடி வெறிகொண்ட வேகத்தில் சுழன்று, இறுதியில் உயிரை விட்டது. அதன் உடல் வீட்டின் வரவேற்பறையில் ஒரு மணிநேரம் கிடந்தது.

“இரண்டு மணி” எனப் பாடியது ஒரு குரல்.

இறுதியில் மெல்லிய அழுகல் வாடையை உணர்ந்த எந்திர எலிப்படை மின்சாரக் காற்றில், பழுப்புச் சருகுகள் புரள்வதைப் போல், மென்மையான ரீங்காரத்துடன் வெளிவந்தன.

இரண்டு-பதினைந்து.

இப்போது அந்த நாய் மறைந்து போயிருந்தது.

நிலவறையில் எரிதொட்டி திடீரென ஒளிர, புகைபோக்கியில் தீப்பொறிகள் சுழன்று மேலெழுந்தன.

இரண்டு-முப்பத்தைந்து.

வீட்டின் உள்முற்றத்துச் சுவர்களில் இருந்து இணைப்பு மேசைகள் வெளியே வந்தன. சீட்டின் புள்ளிகள் மழையாகப் பொழிவது போல சீட்டுக் கட்டுகள் பலகைகளின் மீது படபடத்து விழுந்தன. ஓக் மரத்தாலான நீள் இருக்கையின் மீது கோப்பைகளும், முட்டையும், ரொட்டியும் வெளிப்பட்டன. இசை ஒலித்தது. ஆனால் மேசைகள் அமைதி காத்தன. சீட்டுகள் சீண்டப்படவில்லை.

நான்கு மணிக்கு பெரிய வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் போல அந்த மேசைகள் மடிந்து, பலகைகளால் ஆன சுவர்களுக்குள் திரும்பச் சென்றன.

நான்கு-முப்பது.

சிறார் அறைச் சுவர்கள் ஒளிர்ந்தன.

மஞ்சள் ஒட்டகச் சிவிங்கிகள், நீலச் சிங்கங்கள், இளஞ்சிவப்பு மான்கள், வெளிர் ஊதா சிறுத்தைகள் எனப் பளிங்கினாலான பல விலங்குகள் வடிவம் பெற்று நடனமாடின. கண்ணாடியால் ஆன சுவர்கள் வண்ணங்களாலும் கற்பனை நிறைந்த வடிவமைப்பாலும் தனித்துத் தெரிந்தன.

நன்கு எண்ணெய் இடப்பட்ட பற்சக்கரங்களினூடாக சுவரில் மறைந்திருந்த படச்சுருள் இயங்க, சுவர்கள் காட்சிகளால் உயிர்பெற்றன.

சிறார் அறை தரைப்பகுதி மிருதுவான ஒரு தானிய வயல்வெளி போல் தோற்றமளிக்குமாறு நெய்யப்பட்டிருந்தது. அதன்மீது அலுமினியக் கரப்பான்களும், இரும்புச் சுவர்க்கோழிப் பூச்சிகளும் ஓட, விலங்குக் கழிவின் வாசனையினூடே அசைவற்ற சூடான காற்றில் மெல்லிய சிகப்புத் திசுக்களாலான வண்ணத்துப் பூச்சிகள் அலைந்தன.

மஞ்சள்நிற பெருந்திரட்சியான தேன்கூட்டில் ஈக்களின் முரலொலி போல, சிங்கத்தின் சோம்பலான உறுமலைப் போல, ஓர் ஓசை கேட்டது.

ஒகாபி வரிமான் குளம்பொலியும், வனத்துள் பெய்கின்ற புதுமழையின் முணுமுணுப்பாகவும் கோடையில் காய்ந்திருந்த புல்லின் மீது குளம்படி ஓசைகள் எழுந்தன. இப்போது வறண்ட களைச்செடி நிலங்களின் தொலைவுகளில், இன்னும் சில மைல்களுக்கப்பால் தெரிந்த இதமான முடிவிலி வானில் என அவ்வீட்டின் சுவர்கள் கரைந்து மறைந்தன. விலங்குகள் விலகி முட்புதர்களுக்குள்ளும் நீர்க் குட்டைகளுக்குள்ளும் மறைந்தன.

அது குழந்தைகளுக்கான நேரமாக இருந்தது.

ஐந்து மணி.

குளியல் தொட்டி தெளிந்த வெந்நீரால் நிரப்பப்பட்டது.

ஆறு, ஏழு, எட்டு மணி.

இரவு உணவுப் பண்டங்கள் மாயவித்தை போல கையாளப்பட்டன. படிக்கும் அறை ஒரு நொடியில் தயாரானது. கணப்பு அடுப்புக்கு எதிரிலிருந்த உலோகத் தாங்கியில் இப்போது ஒரு தீச்சுடர் கதகதப்புடன் சுடர்ந்தது.

ஒன்பது மணி. படுக்கைகள் மறைவுக்குள் இருந்த தங்கள் மின்சுற்றுகளை வெம்மைப்படுத்தின. ஏனெனில், அங்கு இரவுகள் குளிர் மிகுந்தவை.

ஒன்பது ஐந்து.

படிக்கும் அறையின் கூரையில் இருந்து ஒருகுரல் பேசியது, “திருமதி மெக்கலெல்லன்! நீங்கள் எந்தக் கவிதையை இன்று மாலை வாசிக்க விரும்புகிறீர்கள்?”

வீடு அமைதியாக இருந்தது.

இறுதியில் அந்தக் குரல், “உங்கள் விருப்பத்தைச் சொல்லாததால் நானே ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்” என்றது. இப்போது அந்தக் குரலின் பின்னணியில் மெல்லிய இசை கேட்டது.

“உங்களுக்கு மிகவும் பிடித்த சாரா டீஸ்டேலின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது……

“மென்மையான மழையும் மண்ணின் மணமும் இங்கு சூழும்.
தகைவிலான் குருவிகள் தம்மினுங்குகிற குரலுடன் வட்டமிடும்.
குளத்துத் தவளைகள் இரவுகளில் பண்ணிசைக்கும்.
காட்டு ப்ளம் மரங்களோ நடுங்கும் வெண்ணிறமடையும்.
கருஞ்சிட்டுகள் இறகுகளாலான தழலணிந்து
தாழ்வான வேலிக்கம்பிகளில் அமர்ந்து
தம் விருப்பத்தைச் சீழ்க்கையில் சொல்லும்.
போரைப் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
இறுதியில் அது முடிந்ததும் ஒருவருக்குமே அதைப் பற்றிய அக்கறை இராது.
மரமோ பறவையோ இல்லை.
யாரொருவரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்.
மனித இனம் முற்றிலும் அழிந்தொழிந்தாலுங் கூட.
வசந்தமெனும் பெண்ணாளும் விடியலில் துயில் கலைந்தெழும் போது
நாம் மறைந்து விட்டோம் என்பதைச் சிறிதும் அறிந்திடாள்.”

 

கல் அடுப்பில் நெருப்பு எரிந்தது. அமைதியான சுவர்களுக்கு இடையில் வெற்று நாற்காலிகள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. இசை ஒலித்துக் கொண்டிருந்தது.

பத்து மணிக்கு அவ்வீடு உயிரிழக்கத் துவங்கியது.

காற்று வீசியது. சமையலறை ஜன்னல் வழியே ஒரு மரக்கிளை முறிந்து விழுந்தது. கண்ணாடிப் போத்தலில் இருந்த தூய்மைப்படுத்தும் கரைசல் அடுப்பின் மீது உடைந்து சிதறியது. ஒரு நொடியில் அந்த அறை தீப்பற்றிக் கொண்டது.

“நெருப்பு” என்றொரு குரல் அலறியது. வீட்டின் விளக்குகள் ஒளிர்ந்தன. உட்கூரையிலிருந்த நீர்க் குழாய்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தன. ஆனால் லினோலியம் விரிப்பில் அந்தக் கரைசல் பரவி அறையில் இருந்த அனைத்தையும் நெருப்பு தின்று சமையலறைக் கதவின் வழியாகத் தன் நாவைச் சுழற்றியது. பல குரல்கள், “நெருப்பு”, “நெருப்பு”, “நெருப்பு” என்று ஒத்திசைந்து ஒலித்தன.

அந்த வீடு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயன்றது. கதவுகள் இறுக்கமாகச் சாத்திக் கொண்டன. ஆனால் ஜன்னல்கள் வெம்மை தாங்காமல் நொறுங்கின. அப்போது வீசிய காற்று நெருப்பை உறிஞ்சி வளர்ந்தது.

நூறு கோடி கோபப் பொறிகளாக நெருப்பு ஒவ்வொரு அறையாக எளிதாக நகர்ந்து, மாடியை அடைந்தது. பிழம்பிடம் வீடு பணியத் துவங்கியது. நீர்கொணரும் அவசரத்தில் சுவரிலிருந்து எந்திர எலிகள் கீச்சொலி எழுப்பியவாறே நீரைப் பீய்ச்சி அடித்தன. இன்னும் நீர்கொணர விரைந்து ஓடின. சுவர்த் தெளிப்பான்கள் இயந்திர மழையைப் பொழிந்தன.

ஆனால் அதற்குள் வெகுதாமதமாகி விட்டிருந்தது. எங்கோ ஒரு குழாய் அலட்சியப் பெருமூச்சுடன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. தீயணைக்கும் மழை நின்றது. வெகுநாளாக குளியல் தொட்டியை நிறைத்த, பாத்திரங்களைத் தூய்மைப்படுத்திய, சேமிப்பு நீர் இப்போது தீர்ந்து போனது.

நெருப்பு சடசடத்து மாடியை அடைந்தது. மாடியின் கூடங்களில் இருந்த பிக்காசோ மற்றும் மேட்டிசின் ஓவியங்களை, ருசியான பண்டமென உண்டது. எண்ணெய்க் கொழுப்புள்ள இறைச்சியை வாட்டுவது போலக் கருக்கி, ஓவியக்கித்தான்களை மென்மையான மொறுமொறுப்பான கரிய குப்பையாக்கியது.

அடுத்து அங்கிருந்த படுக்கைகளின் மீது பரவியது. ஜன்னல்களில் நின்றெரிந்து திரைச்சீலைகளின் நிறத்தை மாற்றியது. நேரம் ஆக ஆக தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டது.

பரணின் கதவுகளிலிருந்து, குருட்டு எந்திர முகங்கள் கீழ்நோக்கித் தம் குழாய் வாய்களில் பச்சை இரசாயனங்களைப் பீறிட்டு உமிழ்ந்தன. செத்த பாம்பைப் பார்த்ததும் வலிமையான யானையும் எப்படிப் பின்வாங்குமோ நெருப்பும் அப்படிப் பின்வாங்கியது. இப்போது அங்கே இருபது பாம்புகள் நஞ்சைக் கக்குவது போல் குழாய்கள் தரைமீது தெளிந்த குளிர்ந்த பச்சை நுரையைக் கக்கி நெருப்பை அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.

ஆனால் நெருப்போ புத்திசாலித்தனமாகத் தன் பிழம்புகளை வீட்டுக்கு வெளியேயும், மேலே பரண் வழியே குழாய்களிடத்தும் அனுப்பி இருந்தது. ஒருபெரும் வெடிச்சத்தம்!

வீட்டின் குழாய்களையெல்லாம் இயக்கிய பரணிலிருந்த இயந்திர மூளை வெடித்து வெண்கலத் துண்டுகளாக உத்தரத்தின் மீது நொறுங்கி வீழ்ந்தது.

வேகமாக ஒவ்வொரு அலமாரிக்குள்ளும் சென்ற நெருப்பு, அவற்றில் தொங்கிக் கொண்டிருந்த துணிகளைத் தழுவியது.

அந்த வீடு ஓக் மர எலும்புக்கூடாக வெப்பத்தில் அஞ்சி நடுங்கியது. அதனுடைய கம்பி நரம்புகள் எல்லாம் வெளியே தெரிந்தன. ஓர் அறுவை சிகிச்சையாளர் உடலின் தோலைக் கிழித்து சிகப்பு ரத்த நாளங்களையும் நரம்புகளையும் கொதிக்கும் காற்றுபட்டு துடிக்க வைப்பது போல அவ்வீடு காட்சியளித்தது.

“உதவி, உதவி! நெருப்பு! ஓடு, ஓடு!” எளிதாய் உடைபடக் கூடிய குளிர்காலத்தின் முதல் பனிக்கட்டியைப் போல நெருப்பின் வெம்மை, வீட்டின் கண்ணாடிகளை உடைத்தது. ஒரு துயரமான நர்சரி பாடலைப் போல, “நெருப்பு, நெருப்பு! ஓடு, ஓடு!” என ஒரு டஜன் குரல்கள், காட்டுக்குள் விடப்பட்ட குழந்தைகள் தனித்து மிகத் தனித்து இறப்பது போல,ஓங்கியும் தேய்ந்தும் ஒலித்தன.

மின்கம்பிகளின் மேலுறை, சூடான கஷ்கொட்டைகள் போலத் தெறிக்கையில் அந்தக் குரல்கள் தேயத் துவங்கின. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து எனக் குரல்கள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மறைந்தன.

சிறார் அறையில் இருந்த காடு எரிந்தது. நீலச் சிங்கங்கள் கர்ஜித்தன. ஊதா ஒட்டகச் சிவிங்கிகள் எம்பிக் குதித்தன. சிறுத்தைகள் நிறம் மாறி வட்டத்தில் ஓடின. நூறுகோடி விலங்குகள் நெருப்பின் முன் ஓடி, தூரத்தே ஒரு வெள்ளாவி நதியில் மறைந்து போயின.

மேலும் பத்து குரல்கள் மறைந்தன.

அந்த நெருப்பாற்றின் சீற்றத்தின் இறுதித் தருணத்தில் அதைப் பற்றி ஏதுமறியா சில குரல்கள் நேரத்தை கூட்டாக அறிவிக்க, இசை ஒலிக்க, தொலையியக்கி புல்லறுக்கும் கருவி புல்வெளியை சீராக்க, அதில் பரபரப்பாக ஒரு குடை விரிய, முன்கதவு திறந்து பின்அறைந்து மூட எனஆயிரம் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன.

கடிகாரக் கடைகளில் அனைத்து கடிகாரமும் மணியோசையை முன்னுக்குப் பின்னாக பித்துப்பிடித்தது போல தொடர்ந்து ஒலிக்கையில், வெறித்தனமாய் ஒரு குழப்பக் காட்சியாக இருப்பினும், அதிலுமோர் ஒத்திசைவு இருக்குமே, அது போலிருந்தது இப்போது எழுந்த ஓசைகள். தூய்மைப்படுத்தும் சில எந்திர எலிகள் பாடிக்கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் தைரியமாகத் துள்ளிப் பாய்ந்து, மண்டிய கொடூரச் சாம்பலை அப்புறப்படுத்தின. கனன்று கொண்டிருந்த படிக்கும் அறையில் எல்லா படச்சுருள்களும் கருகி கம்பிகள் இற்று மின்சுற்றுகள் தெறிக்கும் வரை, சூழ்நிலையைப் பொருட்படுத்தா கம்பீரக் குரலொன்று உரத்தக் குரலில் கவிதை வாசித்தது.

நெருப்பு அந்த வீட்டை வெடிக்கச் செய்து, முழுதுமாகத் தரைமட்டமாக்கி, தீப்பொறியும் புகையுமாக ஊதித் தள்ளியது.

சமையலறையில் நெருப்பு மழை பொழிவதற்கு முந்தைய தருணம் வரை அடுப்பு ஒரு மனம் பிறழ்ந்த வேகத்தில் சிற்றுண்டியைத் தயாரித்துக் கொண்டிருந்தது. பத்து டஜன் முட்டைகள், ஆறு ரொட்டிகள், இருபது டஜன் பன்றி இறைச்சித் துண்டுகள் என அனைத்தையும் நெருப்பு தின்று தீர்த்து, அடுப்பை மறுபடியும் வெறித்தனமாக உஸ் என்ற சத்தத்துடன் இயங்க வைத்தது.

இடிந்து நொறுங்கும் ஓசை கேட்டது. சமையல் அறை மீதும் வரவேற்பறை மீதும் பரண் விழுந்து நொறுக்கியது. வரவேற்பறை நிலவறை மீதும், நிலவறை கீழே இன்னொரு சிறு நிலவறை மீதும் இடிந்து நொறுங்கின. குளிர் சாதனப்பெட்டி, கை வைத்த நாற்காலி, படச்சுருள்கள், மின்சுற்றுகள், படுக்கைகள் யாவும் தாறுமாறாக வீசப்பட்ட எலும்புக் கூட்டின் குவியலென அடியாழத்தில் மேடாகக் குவிந்தன.

எஞ்சியது புகையும் அமைதியும். பெருமளவு புகையே.

கிழக்கில் பெரும் புகையின் இடையே தோன்றியது மங்கலான விடியல்.

இடிபாடுகளுக்கிடையே ஒரு சுவர் தனித்து நின்றது. கட்டடக் குவியலின் மீதும் அதிலிருந்து எழும் நீராவியின் மீதும் உதித்த சூரியன் ஒளிரத் துவங்கிய பிறகும் கூட, அந்தச் சுவருக்குள் இருந்து ஒரு கடைசிக் குரல் திரும்பத் திரும்பச் சொன்னது:

இன்று ஆகஸ்ட் 5, 2026.

இன்று ஆகஸ்ட் 5, 2026.

இன்று…