சிறுபிள்ளை விளையாட்டு
மரம் ஏறும் விளையாட்டு
எனக்கு மிகவும் பிடிக்கும்
‘கீழே இறங்கி வாடா’ என்பாள் அக்கா
நான் கேட்க மாட்டேன்
அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுவாள்
நானோ
கிளை மேல் உட்கார்ந்து கொண்டு
பழிப்பு காட்டுவேன்.
கல் எடுத்து விட்டெறிவாள்
சாதுர்யமாக தப்பித்துக் கொள்வேன்
ஆத்திரம் தாளாமல்
பூமியை உதைப்பாள்
அழுவாள்
கெஞ்சுவாள்
நானும்
கீழே இறங்குவது போல் இறங்கி
திரும்பவும்
மேலே ஏறிக் கொள்வேன்
மிகவும் சுவாரசியமான விளையாட்டு அது
கடைசி வரை
அக்கா
மரம் ஏற கற்றுக் கொள்ளவில்லை
நானும் கீழே இறங்கி வரவில்லை.
விளையாடிப் பார்த்தவன்
கிரிக்கெட் ஆட்டத்தில்
சூராதி சூரன் அவன்
அவன் மைதானத்துக்குள் நுழைந்தால்
கரகோஷம் விண்ணைப் பிளக்கும்
சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து விளாசினான்
துடிப்பான வீரனென
பத்திரிகைகள் பாராட்டின
ஒரு சில விளம்பரங்களில் தென்பட்டான்
முக்கியமான ஒரு போட்டியில்
பூஜ்யம் அடித்தான்
இரண்டு கேட்சுகள் பிடித்தான்
நான்கை கோட்டை விட்டான்
அவ்வப்போது பந்து வீசினான்
ரன்களை அள்ளிக் கொடுத்தான்
ரசிகர்கள் கடுப்பாயினர்
இனியும் தாங்காது என்ற
நிலை வந்த போது
ஆட்டத்திலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தான்
கிரி;க்கெட் வர்ணனையாளனாக மாறினான்
அவன்
சரியாக விளையாடவில்லையே என்று
கவலைப்பட்ட யாரும்
இப்போது
அவன் ஆங்கில உச்சரிப்பைப் பற்றி
கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.
ஒரு தவறு
தன்னைக் கவிஞன் என்று
நம்ப வைக்க முயலும் ஒருவன்
வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம்
அதற்காக தன்னைத் தயார் செய்து கொள்கிறான்
மேதமை பொருந்திய
தன் புகைப்படத்தை
பத்திரிகைகளில் கண்டு புளகாங்கிதமடைகிறான்
நண்பர்களிடம்
வாசகர்களிடமும் சொல்லி
தன்னை ‘பெருங்கவி’ என்றும் ‘மகாகவி’ என்றும்
அறிவிக்கச் செய்கிறான்
பத்திரிகை அலுவலகங்களுக்கு
அவ்வப்போது தொலைபேசியில் பேசி
தன் கவிதைகளை வெளியிட நிர்ப்பந்திக்கிறான்
விழாக்கள், சங்கங்கள் இன்னும்
கவிதைப் பட்டறைகள் அனைத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள என்னென்ன
செய்ய வேண்டுமோ
எல்லாவற்றையும் செய்கிறான்
நவீன கவிதை கூட்டங்களில்
‘சங்க காலத்தில் கவிதை.. ‘ என்றே
எப்போதும் தன் பேச்சைத் துவங்கும் அவன்
தான் கவிஞன் தான் என்பதை
உலகுக்கு உணர்த்த
இன்னும் ஒரே ஒரு தவறைச் செய்கிறான்
மேலும் சில கவிதைகள் எழுதுகிறான்.
போட்டி
ஆபூர்வமான தருணங்களை
எப்படி உருவாக்குவது
என்றே புரியவில்லை
கடவுளோ
அவர் பாட்டுக்கு
அது போன்ற தருணங்களைத்
தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்
அவரின் அசுர வேகத்துக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
நந்தையாக ஊர்கிறோம்
அதனால் தான்
ஒரு கவிதை எழுதி முடிப்பதற்குள்
பொழுது புலர்ந்து விடுகிறது
செம்பருத்தி பூத்திருக்கிறது
தட்டான்கள் எங்கும் பறக்கின்றன.
திடீரென அமைதியாகிவிட்டவன்
ஒருவன் திடீரென அமைதியாகிவிடுகிறான்
அவன் அவ்வாறு ஆகிவிடுவதற்கு
எவ்வளவோ காரணங்கள் இருக்ககூடும்
என்றாலும்
அவனின் அமைதி
நண்பர்கள் வட்டத்தில்
பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது
அவன் அமைதியைக் கலைக்க
அவர்கள்
மோகினிகளை ஏவி விடுகின்றனர்
கவிதை நூல்களை
பரிசாக அனுப்புகிறார்கள்
அவன் பிறப்பு குறித்து கூட
சந்தேகம் எழுப்புகின்றனர்
அவனோ
எதற்கும் அசைவதாயில்லை
அவர்கள்தாம்
சோர்ந்து விடுகிறார்கள்
ஆவன் இவ்வாறு ஆகிப் போனது
ஒரு நாளில் நிகழ்ந்தல்ல
ஒரு நொடியில் நிகழ்ந்தது.
பிறவிப் பயன்
எத்துணை பேர் கொண்ட மிருகம்
எம்முள் வளர்கிறது ஐயாவே
மனந்திரளும் நாக நஞ்சு
உயிரில் கலந்ததுவோர் பெருவிந்தை…
இரட்சிப்படிக்கும் அப்பாற்பட்டதன்றோ
எம் மானுட வாசம்
எம் பிறப்பின் அணுத்திரட்சி
யாவும் பொடிபடவே
எப்பிறப்பின் நீள் தொடர்ச்சி
இப்பிறப்பே முடிவுறவு
சொல்லுமின் ஓர் உபயம்
உம் இருப்பின் முழுமையிலே
கரைவோமோ ஐயாவே
நஞ்சசெல்லாம் அமிர்தமாகும்
நாள் வருமோ ஐயாவே.