சிவபெருமான் வீட்டுச் சிக்கல்
கயிலாயத்துக்கு போன வாரம் போய் வந்தது அருமையானதொரு அனுபவமாக அமைந்தது. சிவபெருமான் தனது வீட்டில் நிற்கவேணும் என்று போன தடவை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முறை இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். பயங்கர பிஸியான ஆளென்றாலும் வீட்டுச் சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது என்று உமாதேவி அக்காவை இருத்தி எழுப்புறார். “லண்டன் – கனடா பக்கமிருக்கிற பெண்ணியவாதிகள் இதையெல்லாம் கண்டால் உங்களை துலைச்சுப்போடுவினம் தெரியுமோ?” – என்று கேட்க அவர் நீலம் பாரித்த கழுத்தின் வழியாக நைக் ரீ சேர்ட்டை போட்டுக்கொண்டு “உந்த விசர் கதையளை விட்டுட்டு கால்ஃப் விளையாட வாரும்” – என்று கூட்டிக்கொண்டு போனார்.
“உங்களுக்கும் அக்காவுக்கும் இடையில பெரிசா நல்ல உறவு இல்ல போல இருக்கு. இதை நாரதர் கேட்டால் இன்னும் பற்ற வைப்பாரே” – என்று மெதுவாக பந்தைப் போட்டு பார்த்தேன். அதைப் பற்றியெல்லாம் அந்தாள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சடையை சிலுப்பிக் கொண்டு பந்தை ஓங்கி அடித்துவிட்டு அது போகும் திசையில் உடம்பை வளைத்துப் பார்த்துக்கொண்டு நின்றார். ஒவ்வொரு நாளும் ஒரு நிமிட வீணை ‘கிளிப்’ விடுகின்ற ராஜேஷ் வைத்யாவை பார்த்து நாரதரையும் வீணை பழகச் சொல்லியிருக்கிறாராம். ‘சும்மா கழுத்தில ஒரு வீணை டிசைனை கொழுவிக்கொண்டு திரியாமல், சிவபெருமான் சொல்லிவிட்டார் என்ற பயத்தில் நாரதர் பயல் இப்போது வலு சீரியஸாக வீணை பழகுறாராம். எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
“அது சரி ‘காலைக்கதிர்’ பேப்பர் வட்ஸ் அப்பில் மாத்திரம் தான் வருகிறதா திரும்பவும் பிறிண்ட்டில் வரப்போவதாக அறிந்தேனே. இன்னும் தொடங்கவில்லையா” – என்றார். வெளிநாடுகளுக்கு மாத்திரம் தான் காலையிலேயே வருகிறதென்று பார்த்தால் கயிலாயம் வரைக்கும் ‘காலைக்கதிர்’ வட்ஸ் அப்பில் வட்டமடிக்கிறது என்பதைக் கேட்டவுடன் எனக்குத் தாடை விழுந்துவிட்டது.
எவ்வளவு தான் பிஸியான ஆளாக இருந்தாலும் நடப்பு விவகாரங்களில் அவரை மிஞ்சுவதற்கு ஆளில்லை. அவ்வளவுக்கு ஆண்டவர் அப்டேட்டாக இருந்தார். “அசுரன் படம் அவ்வளவு எழுப்பமில்லை” என்றார். அடுத்த ரஜினி படத்துக்கு இமான் மியூஸிக் நல்ல கொம்பினேஷன் என்றார். தர்ஷன் எலிமினேஷன் தனக்கே குழும்பிவிட்டது என்று தலையை இரண்டு பக்கமும் ஆட்டினார். “உங்கட ஊர்க்காரி லொஸ்லியா பரவாயில்லை. நல்ல நடிகை தான்” – என்றுவிட்டு தனது நெற்றிக்கண்ணை சிமிட்டினார்.
விளையாடி முடித்து அன்றிரவு அவர் வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலையிலேயே கிளம்ப வேண்டியிருந்தது. நல்ல சாப்பாடு. பிள்ளையார் நண்பர்களோடு விடுறைக்கு பாலி போயிருக்கிறாராம். முருகன் மாத்திரம் தான் ஊரில் நிற்பதாக சொன்னார் உமாதேவி அக்கா. விஜய் ரிவி சீரியல் பார்ப்பதற்கு வள்ளிக்கு வாங்கிக்கொடுத்த அதே அளவு பிளாஸ்மா ரீவி தனக்கும் வேணுமென்று பல்லை நெரும்பியதால் மற்ற மனுசியை கூட்டிக்கொண்டு முருகன் கொஸ்கோவுக்கு போயிருக்கிறாராம். பெருமூச்சு விட்டார். முன்னுக்கிருந்த முயல் குழம்புக்கறி மூச்சுக்காற்றில் கொஞ்சம் அதிர்ந்துவிட்டு அமைதியானது. கட்டிக்கொடுத்தவர்களுக்குத் தானே கஷ்டம் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியபடி நான் மீன்பொரியலைக் கொஞ்சம் சேர்த்து வெள்ளைப்புட்டை வாய்க்குள் அனுப்பினேன்.
சாப்பிட்டு கை கழுவி விட்டு பாத் ரூம் போனபோது தான் தெரிந்தது. கையிலாயம் என்பதற்காக எந்த விதிவிலக்கும் இல்லை. பெண்கள் வசிக்கும் வீட்டு பாத் ரூம்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரித் தான் இருக்கும் போல. உமா தேவியாரின் முடி, காசு மாலை, ஒட்டியாணம் என்று எல்லாம் கழற்றினது கழற்றியபடி பாத் ரூம் கண்ணாடி மேசையில் அப்படி அப்படியே எறிந்து கிடந்தது. சிவபெருமானும் அந்த பாத் ரூம் தான் பயன்படுத்துகிறார் போலிருந்தது. குளித்துவிட்டு வெளியில் வந்த பிறகும் தலையிலிருந்து கங்கை பாய்ந்த வெள்ளம் தரையெங்கும் “மொப்” செய்யப்படாமல் அப்படியே இருந்தது. நான் நுனிக்காலில் சென்று பல்லு குத்துகின்றன குச்சியை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடி வந்துவிட்டேன்.
வரும்போது “பாத் ரூம்” கதவடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தலைப்பில் ஏதோ கசக்கி எறிந்து கிடந்தது. யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற துணிச்சலுடன் நைஸாக எடுத்து கடகடவென்று வாசித்தேன்.
“கௌரவ சிவபெருமான் அவர்களுக்கு…” – என்று தொடங்கி –
“இன்னும் ஓரிரு வாரங்களில் நாங்கள் எண்ணியவாறு அரசியல் நிலைமைகள் கனிந்து கொண்டால், கோத்தபாயவுடன் சேர்ந்து _________ (தமிழ்அரசியல்வாதி ஒருவரது பெயர்) என்பவரை தை மாதமளவில் நீங்கள் கடத்தவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை நீங்கள் செய்யாவிட்டால், அடுத்த மாதம் – மாசியில் – வரவுள்ள சிவராத்திரியை எங்களது கட்சி புறக்கணிக்கும்”
“வாசிச்சு முடிஞ்சுதா?”
‘சுளீர்’ என்றிருந்தது.
நிமிர்ந்து பார்த்தேன். தலையிலடித்துக் கொண்டார் மை காட்!
ஈழத்தின் “மதம்”
வெளிநாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டு சிறிலங்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரை சகல விசாரணைகளுக்கும் உட்படுத்தி முடிந்த காலப்பகுதியொன்றில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரவை செயலர் கோத்தபாய ராஜபக்சேவை சந்தித்து பேசினாராம். அப்போது அந்த முக்கிய உறுப்பினரிடம் சில முக்கிய விடயங்களைப் பேசிவிட்டு –
“போர் முடிந்துள்ள தற்போதைய அமைதியான காலப்பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழர்களுக்கு அள்ளி வழங்கி அவர்களது மனதில் போர் குறித்த நினைவுகளையும் புலிகள் பற்றிய எண்ணத்தையும் முற்றாக துடைத்தெறியப் போகிறோம். இவற்றை விட தமிழ் மக்களின் மனங்களில் லாவகமாக இடம்பிடிப்பதற்கு வேறு என்ன வழி?” – என்று கோத்தபாய கேட்டாராம். அதற்கு சாதுவான புன்னகையோடு பதிலளித்த அந்தப் புலிகளின் முக்கிய உறுப்பினர் – “மக்களின் மனங்களில் இடம்பிடிப்பதற்கு என்ன செய்வது என்பதை யோசிப்பதற்கு முதல், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை, கோயில்கள் – காணிகள். இந்த இரு விடயங்களும் அவர்களும் மிகவும் முக்கியமானவை. உணர்வுப்பூர்வமானவை. இவற்றில் நீங்கள் கை வைத்தீர்களானால், அதற்குப் பிறகு நீங்கள் எதைச் செய்தாலும் அவர்களின் மத்தியில் அவை எடுபடப்போவதில்லை” – என்று கூறினாராம்.
இந்த சம்பாஷணையில் உள்ள யதார்த்தத்தினை கோத்தபாய புரிந்தாரோ இல்லையோ புலிகள் தங்களின் ஆட்சிக்காலம் முழுவதும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள். விடுதலைப் புலிகளது ஆட்சியின் எந்தக் காலப்பகுதியிலும் அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் வெறித்தனமாக மத நம்பிக்கை, அதன் வழி நீண்ட கோயில் கலாச்சாரங்கள், மத ரீதியான மூட நம்பிக்கைகள், அதன் வழியாக வீண் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான பணம் என்பவற்றை அவர்களால் கட்டுப்படுத்தவே முடிந்திருக்கவில்லை.
மாறாக, விடுதலைப் புலிகளின் தலைவரையே முருகனுக்கு உருவகித்து பாடல் பாடுமளவுக்குத் தான் சைவ சமயம் என்பது போராட்டத்தை சுற்றி வளைத்து வைத்திருந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் இது வெளிப்படையாக தெரியும் விடயமாக இல்லாவிட்டாலும், அகவயமாக வியாபித்துக் கிடந்த உண்மை. இன்னொரு விதத்தில் கூறப்போனால், உலகின் மிகப்பலம் வாய்ந்த மக்கள் இராணுவங்களில் ஒன்றாக பல்வேறு தரப்பினராலும் வியந்து போற்றப்பட்ட விடுதலைப் புலிகளினால் கூட தங்களது கட்டுப்பாட்டிலிருந்த – தீவிரமான மத நம்பிக்கையில் ஊறிப்போய் கிடந்த – மக்கள் கூட்டத்தின் விசர்கூத்துகளை ஒருபோதும் நேர் சீரான வழிமுறைகளுக்குள் கொண்டுவர முடியவில்லை.
அப்போதே அந்த நிலையென்றால், இப்போது?
போர் முடிந்து இன்னமும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றே தெரியாத ஒரு மண்ணில் இன்றைக்கும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி கோயில் கும்பாபிஷேகம் நடத்துகின்ற ஒரு இனமாக, திமிரோடு நிற்பதும் –
ஒரு இனத்தின் மிகப்பெரிய விடுதலைக்காக போராடிய அமைப்பின் போராளிகள் இன்னமும் சமூகத்தின் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுகின்ற மண்ணில், அவர்களிலும் பார்க்க மேலான கடவுள் தமக்குள்ளார்கள் என்று அதே மண்ணில் காவடிகள் எடுக்கும் பக்திமான்கள் வாழ்வதும் –
தமிழர் தாயகத்தில் மாத்திரம் தான் சாத்தியமாகிக் கிடக்கிறது..
என்னைப் பொறுத்தவரை, ஈழத்திலுள்ள சைவ நம்பிக்கையும் அதற்காக எமது மக்கள் காண்பிக்கும் வெறித்தனமான பக்தியும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அட்டகாசங்களை விட பயங்கரமானது.
ஆனால், அந்த அரியண்டங்களிலிருந்து ஈழத்தின் மத நம்பிக்கை தனித்துத் தெரிவதற்கு காரணம், எம்மவர்கள் பிற மதங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்வதில்லை. பிற மதங்களின் மீது வன்முறைகளில் இறங்குவதில்லை. தங்களது வெறித்தனமான பக்தியை கலாச்சார அடையாளமாகவும் பண்பாட்டுக் கூறாகவும் காலம் காலமாக பேணி வருவதால் பெரியளவிலான வரலாற்றுப் பாதகங்கள் எதுவும் நிகழவில்லை.
வேறு வகையில் சொல்லப்போனால், ஈழத்திலுள்ள சமய நம்பிக்கை – பிற மதங்களைக் காயப்படுத்தாத – “இராஜதந்திர ரீதியான பக்தியில்” நிலைநிற்கிறது. அது எமது மக்களுக்குள் கலந்து கிடக்கும் வடிவமே வேறு.
இந்த மத நம்பிக்கையானது பன்னெடுங்காலமாக மக்களாலேயே வரைவிலக்கணப்படுத்தப்பட்டு ஊறிப்போய் கிடப்பதும், சமரசம் செய்யமுடியாத அகவயமான கூறுகளோடு பயணிப்பதும் எம்மினத்தில் அமிழ்ந்து கிடக்கும் “அதிசயங்களில்” ஒன்று.
மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் திட்டம் போடுவது போல இந்தச் சமய நம்பிக்கையின் வழியாக புதிதாக எதுவும் செய்துவிடவும் முடியாது. அதற்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராகவும் மாட்டார்கள்.
‘புதினம்’ இணைய தளத்துக்காக அனிதா பிரதாப்பினை செவ்வி கண்ட பின்னர், அடுத்ததாக நான் பா.ஜ.க.வின் இல. கணேசனை செவ்வி கண்டிருந்தேன். அப்போது அவர் – “விடுதலைப் புலிகள் மாத்திரம் தங்களது போராட்டத்தினை இந்து மதப் போராட்டமாக அறிவித்திருந்தால், பா.ஜ.க. எப்பவோ ஆதரவளித்திருக்கும்” என்றார். “அவரது கருத்து குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” – என்று விடுதலைப் புலிகளிள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கேட்டபோது – அவர் வழக்கத்தை விட அதிகமாக சிரித்தார்.
ஆக, தமிழர் தாயகம் இந்து மதத்தினை தங்களின் மீது திணிக்கப்படுகின்ற அடையாள அழிப்புக்கு எதிரான கருவியாக பயன்படுத்துவதற்கு நினைத்திருந்தால் அது எப்பவோ நடந்திருக்கும். அது அன்றைக்கும் நடக்கவில்லை. இன்றைக்கும் நடக்கவில்லை. என்றைக்கும் நடக்கப் போவதில்லை.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பலமே அதுதான்.
தமிழ் தேசியத்திலிருந்து எந்த மதத்தினைத் தூக்கி வெளியே போட்டாலும் அது போராட்டத்திற்கு எந்த பங்கத்தையும் ஏற்படுத்தாது.
ஆனால், சிங்கள தேசியத்திலிருந்து பௌத்தத்தினைத் தூக்கி வெளியில் போட்டுப் பாருங்கள். அவர்களது தேசியம் சிரிக்கத் தொடங்கிவிடும்.
இதைப் புரிந்துகொள்ளாத மறவன்புலவு சச்சிதானந்தம், இப்போது மாட்டு இறைச்சியை மெனு கார்ட்டிலிருந்து அகற்றுவதன் மூலம் எங்களது சனங்களுக்கு தான் நினைத்தவாறு “சாமத்திய வீடு” செய்யலாம் என்று நினைப்பது படு முட்டாள்தனம்.
அவள் ஒரு இடர் கதை
அவர் ஒரு கொடூரமான பெண்ணியவாதி. ஆண் வர்க்கத்தின் பிறப்பென்பது எந்த உயிரினத்துக்கும் சாபக்கேடானது என்ற கருத்துடையவர். தமிழ்ச் சமூகத்தோடு அதிகம் தொடர்பில்லாத தமிழர். இருந்தாலும் என்னோடு மிகுந்த நட்புடையவர். பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பிறந்தநாள் நிகழ்வில் அபூர்வமாக சந்தித்து பிடித்துப் போனவர். இலக்கியக் கலந்துரையாடல்களின் வழி இன்னும் உறவைத் தொடர்பவர். அவரது வீட்டுக்கு இதுவரையில் பத்து – பதினைந்து தடவைகள் போயிருக்கிறேன். அங்கு அவரது (ஒரு) கணவர், நான்கு குழந்தைகள், மூன்று பூனைகள் ஆகியவை உள்ளன.
முதல்தடவை அவருடைய வீட்டுக்குப் போகும் போது அவர் எனக்காக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். நான் போனவுடன் – “இங்க வந்து பாருங்கோ, யார் வந்திருக்கிறார் எண்டு” – என்று கதவின் உள்புறமாக பார்த்து யாரையோ அழைத்தார். அவரது கடைசி மகள் அல்லது மகன் ஓடி வந்து என்னில் அன்பாகத் தாவக்கூடும் அல்லது எனது உருவத்தைப் பார்த்து – சிலவேளைகளில் – மிரளக்கூடும் என்று எதிர்பார்த்தேன். அவர் மூன்று தடவைகள் வெளியில் வருமாறு அழைத்த பின்னர், இறுதியாக ஒருவாறு உள்ளேயிருந்த – அவர் அழைத்த – அந்தக் கொழுத்த பூனை வெளியே வந்தது. அது அவரது முழந்தாள் வரையிலான உயரத்தையும் நான் அணிந்து சென்ற மண்ணிற காலுறையின் நிறத்திலுமிருந்தது. அது தனது எஜமானியுடன் நெருக்கம் என்று எனக்கு காண்பிக்கும் பொருட்டு அவர்மீது தாவி ஏறிக்கொண்டது. அவரது கைகளுக்குள் பதுங்கிக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.
அதன்பிறகு வீட்டின் உள்ளே சென்ற போது, அவர் வளர்க்கும் அவரது கணவரைக் கண்டேன். அவர் அந்தப் பூனையிலும் விட மென்மையானவராகவும் அடக்கமானவராகவும் காணப்பட்டார். சத்தமின்றி சிரிப்பது அவரது அழகுக்கு கூடுதல் சிறப்பாக இருந்தது. அவரது வீட்டுக்கு மூன்றாவது தடவை போனபோது தான் அவரது குரல் எத்தனை தடித்தது என்பதைக் கணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பிறகு, அந்த வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்தப் பெண்ணியவாதி ஊரில் – உலகில் – நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடிய சம்பவங்கள் குறித்து என்னுடன் பேசத் தொடங்கினார். இலக்கியம் – வாசிப்பு என்பவற்றைவிட பெண்ணுரிமை, அதற்கு ஆண்கள் எவ்வளவு தடையாக இருக்கிறார்கள் என்பது குறித்துத் தான் அதிகம் பேசுவார். அப்போதெல்லாம் அவர் ஆண்களை சுள்ளி முறிப்பது போல ஒவ்வொன்றாக முறித்து முறித்து எரிந்துகொண்டிருக்கும் தனது பேச்சுகளில் போட்டு எரிப்பார். பெண்கள் எவ்வளவு பாவப்பட்டவர்கள் என்றும் உலகில் உள்ள அத்தனை ஆண்களும் காலையில் அலாரம் வைத்து எழும்புவதே இந்தப் பெண்களை கொடுமைபடுத்துவதற்குத் தான் என்பது போன்ற வசனங்களினாலும் பல்லை நெரும்புவார். அவர் அவ்வாறு பேசும்போதெல்லாம் தனது கணவரை பார்த்துக்கொண்டே குரலை உயர்த்துவார். வசனங்களை நெருப்பில் மூட்டி வாட்டி வெளியில் தள்ளுவார். தவறு செய்கின்ற எல்லா ஆண்களினதும் ஒற்றைப் பிரதிநிதியாக தனது கணவரைப் பார்த்துப் பார்த்து கத்துவார். அது அவருக்குப் பழகிப்போன ஒன்றாகவும் தெரிந்தது. அவரது கணவரோ அதுபற்றி எதுவுமே கண்டுகொள்ளாதவராக – தாள முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தனது மனைவிக்கு ஆறுதல் கொடுப்பவர் போல – அந்தப் பேச்சுகளை ஒவ்வொரு தடவையும் புதிதாகக் கேட்பவர் போல – பரவசத்தோடு கேட்பார்.
நான் ஒவ்வொரு தடவை போகும்போதும் ஆண்களுக்கு எதிராக சவுக்கு வீசும் அவரது பேச்சுகள் தவறாது இடம்பெறும். அந்தப் பேச்சு தொடங்கும்போதெல்லாம் அவரது கணவர் வீட்டில் எங்கிருந்தாலும் அழைக்கப்படுவார். அழைத்தவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவார். உடனடியாகவே ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தின் பிரதிநிதியாக கூண்டில் ஏற்றப்படுவார். பெண்ணியவாதி பெடலில் எழும்பி நின்று கத்தத் தொடங்குவார்.
கடந்த ஒரு வாரமாகவே அந்தப் பெண்ணியவாதி என்னை வீட்டுக்கு வரும்படி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கவில்லை. நேற்றைய தினம் தான் போயிருந்தேன். இலக்கியம் குறித்து அதிகம் பேசிக்கொண்டிருந்தார். ஏதாவது சந்தியில் ஆரம்பிக்க வேண்டிய அவரது வழக்கமான ஆணெதிர்ப்புப் படைநடவடிக்கை நேற்று கனநேரமாகியும் ஆரம்பிக்கப்படவேயில்லை. என்னவோ தெரியவில்லை நேற்று அவர் மேலும் அழகாக வேறு தெரிந்தார். மண்ணிறப் பூனை அவரது மடியில் ஏறியிருந்து விளையாடியபடியிருந்தது. அதனை வருடியபடி என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர், வழக்கம் போல தனது கணவரை அழைத்து தேனீர் கேட்காமல் தானே போய் எடுத்துவந்தார். அவர் வீட்டிலிருக்கிறாரா என்றும் தெரியவில்லை.
வீட்டில் நான் முன்பு பார்த்த பொருட்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அழகாகவும் காணப்பட்டன. மாற்றத்துக்கான காரணத்தையோ அதுவரை அங்கு வராத அவரது கணவரைப் பற்றியோ எப்படி அவரிடம் கேட்பது? அந்தத் தேனீர் எனக்குள் இறங்குவதற்கு மறுத்தபடி இருந்தது. என்னை அழைத்த காரணத்தைக் கேட்பதின் ஊடாக ஏதாவது தகவலை அறியலாம் என்ற யோசனையோடு பேச்சை அவிழ்த்தேன்.
தனது கணவர் என்னுடன் ஏதாவது பேசினாரா என்று கேட்டார். நான் “இல்லையே” என்றேன். பூனை கண்சிமிட்டாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.
அதன் பின்னர் குனிந்து பூனையை தடவியபடி – தன்னை தனது கணவர் முகநூல் நண்பர்கள் பட்டியிலில் இருந்து நீக்கிவிட்டதாக சொன்னார்.
பூனை சொடுக்கென்று தலையைத் தூக்கி அவரைப் பார்த்தது. பிறகு என்னைப் பார்த்தது. வன்முறைகளுக்கு ஆதரவில்லாதவன் என்ற பதில் பார்வையை நான் வீசிய பின்னர் கண்களை சற்று சிமிட்டிக்கொண்டது.
தாமரைக்குள ஞாபகங்கள்
தமிழினி வெளியீடு, விலை ரூ.150
1 comment
Nice commentary on Lankan Tamil society their cultural mores and evolving culture among the tamil diaspora who have become slaves of consumerism, social media , the Sinhalese government diabolical move to gloss over the past by offering tamils lollipops all put forward with a classic black comedy satirical tone.
Good luck
Thanks
Comments are closed.