தஸ்தாயேவ்ஸ்கி பற்றி நபக்கோவ்

1 comment

தஸ்தாயேவ்ஸ்கி பற்றிய என் நிலைப்பாடு ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் அதே சமயம் ஏற்கக் கடினமானதாகவும் இருக்கிறது. என் அத்தனை இலக்கிய விரிவுரைகளிலும் இலக்கியத்தில் நான் பொருட்படுத்தும் ஒரேயொரு பண்பைத் தவறாமல் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். கலைச்செயல்பாட்டின் நோக்கமும் தனியரின் மேதமையுமே அவை. இந்த அடிப்படையில் தஸ்தாயேவ்ஸ்கி ஒரு சிறந்த எழுத்தாளர் அல்ல, மாறாக ஒரு சாதாரணமான எழுத்தாளர். ஆங்காங்கே அரிதாக நகைச்சுவை வெளிப்பாடு இருந்தபோதும் இலக்கியத் தளத்தில் வெறுமை நிரம்பிய படைப்பாளர் அவர். ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் ரஸ்கோல்நிகோவ் ஏதோவொரு காரணத்தினால் கிழட்டு அடகுக்கடைக்காரியையும் அவளது சகோதரியையும் கொலை செய்கிறான். இரக்கமற்ற காவல்துறை அதிகாரி மெல்ல மெல்ல தன் அருகே நெருங்கிவிட்டிருக்கும் தருணத்தில், தான் மனம் ஒப்பி கொலைசெய்ததை வாக்குமூலமாகத் தருகிறான். மேன்மையான பரத்தையிடமிருந்து கிட்டும் காதலின் வழியாக ஆத்ம மறுமலர்வு அடைகிறான். பரத்தையிடமிருந்து பெறும் காதலைக் கொண்டு முக்தி அடைவது போன்ற செய்திகள் அனுபவமிக்க வாசகர்களால் துடுக்குத்தனமாக இன்று ஆராயப்படுவதைப் போல 1866ல் இந்த நூல் எழுதப்பட்ட போது வியக்கத்தக்கதாக கருதி ஆராயப்படவில்லை. நான் பேசும் இந்த வகுப்பில் உள்ள அனைவரும் அனுபவமிக்க வாசகர்கள் என்பது எனக்குப் பெரிய தடையாக இருக்கப் போவதில்லை என நம்புகிறேன். மூன்றில் ஒரு பங்கு வாசகருக்கு நல்லிலக்கியத்திற்கும் போலி இலக்கியத்திற்குமிடையே உள்ள வேறுபாடே தெரிவதில்லை. அத்தகைய வாசகர்களுக்கு நம் அமெரிக்க வரலாற்று நாவல்கள் அல்லது ‘From Here to Eternity‘ என்று அழைக்கப்படும் கீழ்த்தரமான குப்பைகளுக்கு முன் தஸ்தாயேவ்ஸ்கி மிகவும் முக்கியமானவராகவும் கலைநயமிக்கவராகவும் தெரிகிறார். 

நிற்க. நான் பல மாகலைஞர்களைப் பற்றி நீண்ட சொற்பொழிவுகளை மேற்கொண்டு வருகிறேன். அத்துடன் இந்த உயர்நிலை வகுப்பில் தஸ்தாயேவ்ஸ்கி பற்றிய விமர்சனமும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

ஃபியோதர் மிகைலோவிச் தஸ்தாயேவ்ஸ்கி 1821ல் ஏழை ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை மாஸ்கோவில் இருந்த அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றினார். அன்றைய ரஷ்யாவின் அரசு மருத்துவராகப் பணிபுரிவது ஒரு நடுத்தர குடும்பத்திற்கு மிதமான வருவாய் தரக்கூடிய ஒரு பணி. தஸ்தாயேவ்ஸ்கி குடும்பம் வாழ்ந்த குறுகலான வீடும் பொருளாதார நிலையும் சமகாலத்தில் சொகுசானவை என்றே கருத முடியும். 

அவரது தந்தை அற்பமான கொடுமைக்காரனாக இருந்தார். தெளிவிலாச் சூழ்நிலைகளில் அவர் கொல்லப்பட்டார். தஸ்தாயேவ்ஸ்கியின் இலக்கியப் படைப்புகளை அலசும் ஃபிராய்டிய மனம் கொண்ட ஆய்வாளர்களால், தன் தந்தையின் கொலையை ஒட்டி இவான் கரம்சோவ் கொள்ளும் தவிப்பில் தஸ்தாயேவ்ஸ்கியின் தன்வரலாற்றுக்கூறுகள் இருப்பதாகச் சுட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இவான் உண்மையில் தன் தந்தையைக் கொல்லவில்லை என்றபோதும் அவனது தளர்வான மனோபாவமும் தன் தந்தையின் கொலையை எவ்விதமேனும் தான் நினைத்திருந்தால் தடுத்திருக்க இயலும் என்ற தவிப்பும் தந்தையின் கொலையில் தனக்குப் பங்கு இருப்பதாக அவனைக் குற்றவுணர்வில் வாட்டுவதைக் காண முடிகிரது. தனது பயிற்றுனரால் தன் தந்தை கொல்லப்பட்டது குறித்த மறைமுகமான குற்றவுணர்வின் சுமையுடனேயே தஸ்தாயேவ்ஸ்கியும் தன் வாழ்வுநாள் முழுமையையும் கடந்திருக்கிறார் என்று இந்த விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். முதலில் மாஸ்கோவில் உள்ள தங்குபள்ளியிலும் பின் பீட்டர்ஸ்பர்கில் உள்ள இராணுவப் பொறியியல் பள்ளியிலும் தஸ்தாயேவ்ஸ்கி கல்வி கற்றார். தஸ்தாயேவ்ஸ்கிக்கு இராணுவப் பொறியியலில் எந்தத் தனிப்பட்ட ஆர்வமும் இல்லாத போதும் அவர் தந்தையின் விருப்பத்திற்கிணங்க அப்பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கும் அவர் இலக்கிய வாசிப்பிலேயே நிறைய காலத்தைச் செலவிட்டார். தன் கல்வி முடிந்ததும் கட்டாயச் சேவை காலம் முடியும் வரை மட்டுமே பொறியியல் துறையில் இருந்தார். 1844ல் அச்சேவையிலிருந்து பணித்துறவு செய்துவிட்டு இலக்கியத்தில் நுழைந்தார். அவரது முதல் நூல் ’பாவப்பட்டவர்கள்’ (Poor Folk, 1846) இலக்கிய வட்டங்களிலும் பொதுமக்களின் வாசிப்பிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.  

அவரது தொடக்க காலத்தில் தீவிர புரட்சியாளர்களின்பால் ஈர்ப்புகொண்டிருந்தார். மேற்கின் போதகர்களிடம் அவர் தீவிர மனச்சாய்வு கொண்டிருந்தார். ஃபெளரியர், புனித சைமன் ஆகியோரின் குமுகவுடைமை கொள்கைகளை ஏற்றிருந்த இளைஞர்கள் அடங்கிய ஒரு இரகசிய குமுகத்தில் – நேரடி உறுப்பினராக இல்லாதிருந்த போதும் – நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவ்விளைஞர்கள் அரசுத்துறை அலுவலர் மிஹைல் பெத்ராஷெவ்ஸ்க் என்பவரது இல்லத்தில் கூடி ஃபெளரியரின் நூல்களை உரக்க வாசித்தும் விவாதித்தும் குமுகவுடைமைக் கொள்கைகளைப் பேசி அரசைக் கடுமையாக விமர்சித்தும் வந்தனர். 1848ம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின் பல ஐரோப்பிய தேசங்களிலும் இருந்த புரட்சியலை ரஷ்யாவையும் தீண்டியது; எச்சரிக்கையான அரசு மாற்றுக் கருத்துடையோரை ஒடுக்கத் தொடங்கியது. பெத்ராஷெவ்ஸ்கிய ஆட்கள் அனைவரையும் கைது செய்தனர். அவர்களுள் ஒருவராக தஸ்தாயேவ்ஸ்கியும் கைதானார். அரசைப் பற்றியும் மரபுவழி தேவாலயம் பற்றியும் வசைகளும் விமர்சனங்களும் கொண்டிருந்த பெலின்ஸ்கி கடிதத்தைச் சுற்றில் விட்டதற்காகவும் அரசுக்கெதிராக தனியார் அச்சகத்தின் துணைகொண்டு துண்டு பிரசுரங்களை மக்களிடையே பரப்பியதற்காகவும் சிலருடன் கூட்டாளியாகச் சேர்ந்து பல்வேறு குற்றச் சதிகளில் ஈடுபட்டவராகக் கருதி அவரைக் கைது செய்திருந்தனர். அவர் புனித பீட்டர் – பால் கோட்டையில் தன்மீதான விசாரணையை எதிர்நோக்கி இருந்தார். அங்கு எனது மூதாதையான தலைவர் நபக்கோவ் அதிகாரியாக இருந்தார் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். சைபீரியாவில் எட்டு ஆண்டுகள் (பின்னர் நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டத்) தீவிர பணியில் ஈடுபட வேண்டுமென அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இந்தத் தண்டனைக் கூற்று வாசித்துக் காண்பிக்கப்படும் முன்னரே கைதிகளுக்குக் கொடூரமான முறையில் தண்டனைச் செயல்முறைகள் பின்பற்றப்பட்டது. அவர்கள் சுட்டுக் கொல்லப்படவிருப்பதாக அவர்களிடமே தெரிவிக்கப்பட்டு சுடுகை மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். (ரஷ்ய இலக்கிய விமர்சகர் விசாரியன் பெலின்ஸ்கியிடமிருந்து 1847ல் நிகோலாய் கோகோலுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.) கைதிகள் மரண தண்டனைக்கு தயாராக்கப்பட்டு, சட்டைகள் கழற்றப்பட்டன. தண்டனை வழங்கும் அதிகாரிகள் முதல் வரிசையில் இருந்த கைதிகளைக் கம்பங்களில் கட்டினர். அதன் பிறகே உண்மையான தண்டனைக் கூற்றை வாசித்துக் காட்டினர். அதிலொரு கைதி அஞ்சி மனப்பிறழ்வு ஏற்பட்டதைப் போல வெறியொலி எழுப்பினார். அந்நாளின் பட்டறிவு தஸ்தாயேவ்ஸ்கியின் மனத்தில் தீராத்தழும்பாக நிலைத்துவிட்டது. அதை அவரால் கடந்து வெளியேற முடியவே இல்லை. 

https://cdn.dribbble.com/users/2000886/screenshots/7804868/dostoevsky-drr_4x.png

திருடர்களுடனும் கொலைகாரர்களுடனும் சைபீரியாவில் தஸ்தாயேவ்ஸ்கி கழித்த நான்காண்டு தண்டனைக் காலம் முழுதும் அரசியல் குற்றவாளிகளுக்கும் சாதாரண குற்றவாளிகளுக்குமான வகைப்பாடு மேற்கொள்ளப்படவே இல்லை. அவர் தனது ‘மரண இல்லத்தின் நாட்குறிப்பு’ (1862) எனும் நூலில் அவர்களைப் பற்றி விவரிக்கிறார். அது இனிமையான வாசிப்பாக இல்லை. அவர் தாங்கிய கொடுமைகளையும் அவமானங்களையும் மிக நுட்பமான விவரணைகளுடன் சொல்கிறார், கூடவே அவர் எத்தகைய குற்றவாளிகளின் மத்தியில் வாழ்ந்திருக்கிறார் என்பதையும். அந்தக் கொடுஞ்சூழலில் முழுப்பைத்தியம் ஆவதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு எதையேனும் தேட வேண்டி அவசியம் அவருக்கு ஏற்பட்டது. அவ்வாறான தேடலில் அவர் கிறித்தவ பக்தியைப் பற்றிக்கொண்டு அந்தக் கொடூரமான ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். அவர் மிருகத்தனமான குற்றவாளிகள் இடையில் வாழ்ந்திருந்த போதும் அவர்களுக்குள் இருந்த சிலரது சில செயல்பாடுகளில் மனித உணர்வுகளும் இருந்தது இயல்பானதே. இந்த மனித வெளிப்பாடுகளை எடுத்துக் கொண்டு அதன் மீது செயற்கையான, மிகவும் நோய்த்தன்மை கொண்ட எளிய ரஷ்ய மானுடர்கள் என்ற கற்பிதத்தை கதாபாத்திரங்களாகத் தஸ்தாயேவ்ஸ்கி கட்டமைக்கிறார். அவர் தொடர்ந்த நீண்ட ஆன்மீகப் பயணத்திற்கு இதுவே முதற்படி. 1854ல் தனது சிறைவாசம் முடிந்ததும் சைபீரிய நகரத்தில் இருந்த பாதுகாப்பு சேனையில் ஒரு வீரராக நியமிக்கப்பட்டார். 1855ல் முதல் நிகோலஸ் இறந்து அவரது மகன் அலெக்ஸாண்டர், இரண்டாம் அலெக்ஸாண்டர் என்ற பெயரில் பேரரசரானார். 19ஆம் நூற்றாண்டின் அதுவரையிலான அரசர்களில் இவரே சிறந்தவர். (ஆனால் வன்முரணாக இவரே புரட்சியாளர்கள் கைகளில் சிக்கி வெடிகுண்டால் இரண்டாக உடல்பிளந்து இறந்தார்.) இவரது ஆட்சியின் தொடக்கம் பல சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது. தஸ்தாயேவ்ஸ்கிக்கு அவரது அலுவலகப்பணி மீள வழங்கப்பட்டது. நான்காண்டுகளுக்குப் பின் அவர் பீட்டர்ஸ்பர்குக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

தனது நாடுகடத்தலின் இறுதி ஆண்டுகளில் தனது ‘ஸ்டெபன்சிகோவோ மாளிகை’ (1859), ‘மரண இல்லத்தின் நாட்குறிப்பு’ ஆகிய படைப்புப் பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பீட்டர்ஸ்பர்கிற்குத் திரும்பிய பிறகு இலக்கியப் பணிகளில் முற்றிலும் மூழ்கினார். தன் சகோதரர் மிக்கெலுடன் சேர்ந்து விரெம்யா (காலம்) என்ற இலக்கிய இதழைத் தொடங்கி உடனடியாக பிரசுரிக்கவும் செய்தார். அவரது ‘மரண இல்லத்தின் நாட்குறிப்பு’ம் ‘The Humiliated and the Insulted’ (1861) நாவலும் இந்த இதழில் வெளியானவை. அவரது முன்னிளமை காலங்களில் இருந்த அரசுக்கு எதிரான மனோபாவங்கள் யாவும் இப்போது மாறிவிட்டிருந்தன. ’கிரேக்க கத்தோலிக்க தேவாலயம், முற்றான முடியாட்சி, ரஷ்ய தேசியவாத மரபு’ ஆகிய அஸ்திவாரங்களின் மீது தனது அரசியல் கொள்கையான ஸ்லாவியப் பண்பாட்டை உருவாக்கினார். குமுகவுடமை கருத்துகளும் மேற்கத்திய சுதந்திரவாதமும் சேர்ந்து மேற்கில் நிகழும் தீமைக்கும் களங்கத்திற்கும் காரணமாகின்றன என்பதும் அவை ஸ்லாவிய பண்பாட்டையும் கிரேக்க – கத்தோலிக்க உலகையும் சிதைக்கின்றன என்பதும் அவரது கருத்தாக இருந்தது. ஃபாசிசத்திலும் கம்யூனிசத்திலும் மலிந்து காணப்படும் அதே மனோநிலையான ஒட்டுமொத்தத் தீர்வு என்பது இதிலும் இருக்கிறது. 

இக்காலம் வரை அவரது உணர்ச்சிகரமான வாழ்வு துயர்மிக்கதாகவே இருந்தது. சைபீரியாவில் இருந்தபோது முதல் திருமணம் செய்துகொண்ட தஸ்தாயேவ்ஸ்கிக்கு அத்திருமணம் அதிருப்தியானதாக இருந்தது. 1862-63ல் ஒரு பெண் எழுத்தாளருடன் அவருக்கு உறவு ஏற்பட்டு அவளுடன் சேர்ந்து இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களுக்குச் சென்றார். அவரால் பிறகு ‘பேய்த்தனமானவள்’ என்று குறிப்பிடப்பட்ட இந்தப் பெண்மணி மோசமானவளாக இருந்திருக்கிறாள். பின்னாட்களில் அவள் ரோசனோவ் என்ற அற்புதமான எழுத்தாளரை – அவர் தனித்துவமான மேதமையும் திகைப்பூட்டும் புதுமையும் ஒருங்கே கொண்ட எழுத்தாளர் – மணந்தாள். அப்பெண்மணி ஏற்கனவே தடுமாற்றம் மிகுந்த ஆன்மாவாகிய தஸ்தாயேவ்ஸ்கியின் மீது மேலும் பதற்றத்தையும் தீய விளைவையும் ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருந்தாள். இந்த முதல் ஜெர்மனி பயணத்தின் போதுதான் இவருக்கு சூதாட்ட பழக்கம் முதல்முறை தொற்றி இருக்கிறது. அது அவரது மீது வாழ்க்கை முழுவதும் படர்ந்திருக்கிறது. மேலும் அவர் தனிப்பட்ட முறையிலும் குடும்பமாகவும் எந்த விதத்திலும் ஆன்ம அமைதியோ பொருளாதார திருப்தியோ அடையாத வண்ணம் அப்பழக்கம் ஒரு பெருந்தடையாகவே இருந்திருக்கிறது. 

தனது சகோதரனின் மறைவிற்குப் பின் தனது எழுத்துப் பணிகள் முடங்கிட தஸ்தாயேவ்ஸ்கி நொடித்துப் போனார். சகோதரனின் குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய சுமை தன் மீது விழவே உடனடியாக சுயமாக எழுத்து வேலையில் இறங்கினார். இத்தனை சுமைகளையும் தாங்குவதற்கான ஏற்பாடாக தன்னைக் கடும் வேலையில் ஈடுபடுத்திக்கொண்டார். அவரது புகழ்பெற்ற படைப்புகளான ‘குற்றமும் தண்டனையும்’ (1866), ‘சூதாடி’ (1867), ‘அசடன்’ (1868), ‘The Possessed’ (1872), ‘கரமசோவ் சகோதரர்கள்’ (1880) போன்ற அனைத்துமே தொடர்ந்த மனவழுத்தத்திற்கு இடையே எழுதப்பட்டவை. அவர் எப்போதும் தனக்குத் தரப்பட்ட கெடுவை நோக்கி அவசர அவசரமாக, பெரும்பாலும் மறுவாசிப்பிற்குக்கூட அவகாசமில்லாமல், எழுதியபடி இருக்க நேர்ந்தது. தனக்குக் கீழ் பணியில் சேர்ப்பதாக உறுதியளித்திருந்தவர்களிடம் தன் படைப்பைச் சொல்லி தட்டச்சு செய்ய வைத்தபடியே இருக்க நேர்ந்தது. இவை கடும் அயற்சியைத் தந்தன. தனது தட்டச்சாளர்களின் வரிசையில் ஈடுபாடும் பயிற்சியும் செயலறிவும் கொண்ட ஒரு பெண்ணை இறுதியாகக் கண்டடைந்தார். அவள், இவரது கெடுக்களுக்கு முன்பாகவே பணிகள் அனைத்தையும் முடித்து அனுப்பினாள். மெல்ல மெல்ல அவரை நிதிச் சிக்கல்களிலிருந்து முற்றிலும் விடுவித்தாள். 1867ல் அவளை தஸ்தாயேவ்ஸ்கி மணந்தார். இதுவொரு பூரணமகிழ்வான இணை. 1867 முதல் 1871 வரையிலான நான்காண்டுகளில் அவர்கள் ஓரளவு நிதித் தன்னிறைவு பெற்று மீண்டும் ரஷ்யாவிற்குத் திரும்பினர். அது முதல் தன் இறுதி நாட்கள் வரை தஸ்தாயேவ்ஸ்கி இனிய அமைதியை அனுபவித்திருக்கிறார். ‘The Possessed’ மாபெரும் வெற்றி பெற்றது. அது பிரசுரமான உடனே அவருக்கு இளவரசர் மெஸெர்ஸ்கியின், அதிர்வுகளை ஏற்படுத்திய வார இதழான, The Citizenக்கு ஆசிரியராகச் சேரும்படி பணியழைப்பு வந்தது. அவரது இறுதிப் படைப்பான ‘கரமசோவ் சகோதரர்கள்’ அவருடைய அனைத்து நாவல்களிலும் மிகுதியான புகழைப் பெற்றுத் தந்த ஒன்றாக இருந்தது. அவர் அந்நாவலின் முதல் தொகுதியை மட்டுமே முடித்திருந்தார். இரண்டாவது தொகுதியை எழுதிக்கொண்டிருந்தபோதே இறந்துவிட்டார். 

இவற்றை எல்லாம்விட மிகப்பெரிய புகழ் 1880ல் மாஸ்கோ நகரில் புஷ்கின் நினைவிடத் திறப்பு விழாவின் போது தஸ்தாயேவ்ஸ்கிக்குக் கிடைத்தது. அதுவொரு மாபெரும் விழா. ரஷ்ய மக்கள் புஷ்கின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் வெளிப்பாடு. அந்தக் காலத்தின் அத்தனை முக்கிய எழுத்தாளர்களும் அதில் பங்கேற்றனர். ஆனால் அங்கு பேசப்பட்ட சொற்பொழிவுகளிலேயே தஸ்தாயேவ்ஸ்கியின் சொற்பொழிவே பெருவாரியான ஈர்ப்பைப் பெற்றது. ரஷ்யாவின் தேசிய உணர்வின் குறியீடாக புஷ்கினை வருணித்ததே அவரது பேச்சின் சாரமாக இருந்தது. புஷ்கின் இதர நாடுகளின் நல்ல கொள்கைகளை ஒருபுறம் ஏற்றபடியே தன் தாய்நாட்டின் ஆன்மீக மரபை முழுவதும் உள்ளீர்த்து செரித்துக்கொள்ள வேண்டும் என்ற மரபின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தார். இந்த அடிப்படையை தஸ்தாயேவ்ஸ்கி ரஷ்ய மக்களின் கூட்டு மனமாகக் கண்டார். இப்போது இந்தச் சொற்பொழிவை வாசித்துப் பார்த்தால் அதற்குக் கிட்டிய அதீத வரவேற்பைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ரஷ்யாவின் வளர்ச்சிக்கும் அதிகாரத்திற்கும் எதிராகத் திரண்ட அந்தக் காலப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது நம்மால் தஸ்தாயேவ்ஸ்கியின் சொற்பொழிவைக் கேட்ட தேசப்பற்றாளர்களின் கிளர்ச்சியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். 

ஓராண்டுக்குப் பின், 1881ல் இரண்டாம் அலெக்ஸாண்டர் கொல்லப்படுவதற்குச் சற்று முன்பாக, சாலப் புகழுடனும் நல்ல அங்கீகாரத்துடனும் தஸ்தாயேவ்ஸ்கி இறந்தார். ஃபிரெஞ்சிலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்புகள் செய்வது, மேற்கத்தியப் பண்பாட்டுத் தாக்கம், மெல்லுணர்ச்சிகள், கோதிக் படைப்புகள் – சாமியுல் ரிச்சர்ட்சன் (1689-1761), ஆன் ராட்கிளிஃப் (1764-1823), டிக்கின்ஸ் (1812-70), ரூசோ (1712-78), யூஜின் சூ (1804-57) ஆகிய படைப்பாளிகளின் ஆக்கங்கள் – என இவை அனைத்தின் தாக்கங்களும் கருணை மதக் கொள்கைகளும் மிகைநாடகீய மெல்லுணர்ச்சிகளும் ஒன்றிணைந்து தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளை நிறைக்கின்றன. 

https://cdn.dribbble.com/users/1319543/screenshots/11294353/dr_4x.jpg

நாம் மெல்லுணர்ச்சியையும் உணர்வெழுச்சியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். ஒரு மெல்லுணர்ச்சிவாதி தன் ஓய்வு நேரங்களில் முழு மூர்க்கனாக இருக்கக்கூடும். ஆனால் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர் ஒருபோதும் கொடூரனாக இருக்கமாட்டார். மெல்லுணர்ச்சிவாதி ரூசோ ஒரு முன்னேற்றத்திற்கான யோசனையைக் குறிவைத்து அழுது வடிந்தவாறே, தனக்குப் பிறந்த பல குழந்தைகளையும் வெவ்வேறு பணிமனைகளுக்கும் ஏழ்மை கூடாரங்களுக்கும் அனுப்பிவிட்டு அவர்களுக்காக ஒரு சோற்று உருண்டையைக்கூடக் கிள்ளிப் போடாமல் இருக்க முடியும். ஒரு மெல்லுணர்ச்சி கொண்ட கிழட்டு வேலைக்காரி தன் கிளியை அளவுக்கதிகமாகக் கொஞ்சி பழம் ஊட்டிவிட்டு, அதே கையால் தன் மருமகளுக்குச் சோற்றில் விசம் வைக்க முடியும். மெல்லுணர்ச்சிகார அரசியல்வாதி தாய்மை தினத்தை நினைவில் வைத்தபடியே எதிராளியை இரக்கமற்ற முறையில் கொல்ல முடியும். ஸ்டாலின் குழந்தைகளை மிகவும் நேசித்தார். லெனின் ஆபெராவில் அழுதிருக்கிறார் – குறிப்பாக ‘திராவியட்டா’ நிகழ்வின் போது கண்ணீர் உகுத்திருக்கிறார். ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்கள் ஏழைகளின் எளிய வாழ்வைப் போற்றி வந்தனர். மெல்லுணர்ச்சிவாதிகளுள் ரிச்சர்ட்சன், ரூசோ, தஸ்தாயேவ்ஸ்கி ஆகியோரைப் பற்றிப் பேசுகையில் நாம் வாசகர்களுக்குப் பாரம்பரியமாகப் பழகிப்போன உணர்ச்சிகளைக் கலைத்துவமற்ற மிகைப்படுத்துதல் வழியாக எழுதி வாசகர்களிடம் தன்னிச்சையாக தயவையும் நன்மதிப்பையும் பெற முனைபவர்கள் எனும் பொருளில் பேசுகிறோம். 

ஐரோப்பிய மர்ம நாவல்களும் மெல்லுணர்ச்சி நாவல்களும் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தஸ்தாயேவ்ஸ்கி ஒருபோதும் வெளியேறவில்லை. அவர் உருவாக்கிய சச்சரவுப் படலங்கள் – நன்னெறி வழுவாத நல்லவர்களைப் பரிதாபகரமான சூழல்களில் சிக்கவைத்து பின் அவர்களைக் கடைசி நேர உணர்வு வெளிப்பாட்டினைத் தெரிவிக்கும் விதத்தில் அத்தகைய சூழல்களில் இருந்து விடுவிப்பதான பாவனையில் – அத்தகைய மெல்லுணர்ச்சியின் தாக்கத்தைப் பறைசாற்றுகின்றன. சைபீரியாவிலிருந்து மீண்டுவந்த பின் அவரது அடிப்படை யோசனைகள் பலனளிக்கத் தொடங்கின. வரம்பு மீறுதலின் வழியே அடையும் ரட்சிப்பு, எதிர்ப்புக்கும் தடைக்கும் பதிலாக நிற்கும் தன்வருத்தம், கீழ்ப்படிதல் போன்ற உயர்நிலை ஒழுக்கக் கருத்துகள், உளவியல் பூர்வமான தன் விருப்பம் அன்றி, ஒழுக்க நெறியை நோக்கி முன்மொழியப்படும் தன்விருப்பம் ஆகியவை. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு புறம் அகங்காரம் – எதிர்கிறித்து – ஐரோப்பா என்ற அணியையும் இன்னொரு புறம் சகோதரத்துவம் – கிறித்து – ரஷ்யா என்ற அணியையும் வைத்து பயன்படுத்தப்பட்ட திறமையான சூத்திரம். (இவை குறித்து எண்ணற்ற நூல்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.) இவையே தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளில் பரவிப் பரந்துள்ளவை. இவற்றையெல்லாம் தாண்டியும் மேற்குலகின் தாக்கம் இவர் படைப்பில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு விதத்தில் மேற்குலகைக் கடுமையாக வெறுத்த தஸ்தாயேவ்ஸ்கிதான் ரஷ்ய எழுத்தாளர்களிலேயே முதன்மையான ஐரோப்பியராக இருக்கிறார் என்ற முரணை எவரும் சுட்ட முனையலாம். 

தஸ்தாயேவ்ஸ்கியின் குறைபட்ட இரசனை, ஃபிராய்டிற்கு முந்தைய காலச் சிக்கல்களை அவர் கையாளும் சலிப்பேற்படுத்தும் காட்சிகள், சாமான்ய புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலச் சொற்களான ”cheap,” ”sham,” ”smutty,” ”highfalutin,” ”in bad taste” போன்றவற்றை அளவுக்கு அதிகமாகவும் சுவாரஸ்யமின்றியும் அவர் பயன்படுத்தும் இடங்கள் எல்லாம் அவரைப் போற்ற வழியின்றி செய்கின்றன. அவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் கைக்கொள்ளும் ‘பாவத்தின் பாதையில் சென்று கிறித்துவை அடைதல்’ என்ற உத்தி எனக்கு உவக்கவில்லை. ரஷ்ய எழுத்தாளர் இவான் புனின் இன்னும் மழுங்கலாகச் சொன்னது போல ‘ஏசுவை எல்லா இடங்களிலும் சிந்தி வைப்பது’ மேதமையன்று. இசைக்கு என் செவி எப்படி விருப்பமற்று இருக்கிறதோ அதே போல தஸ்தாயேவ்ஸ்கி என்ற தீர்க்கதரிசிக்கும் என்னிடம் செவி இல்லை. அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த படைப்பாக ‘இரட்டையர்கள்’ நூலைத்தான் என்னால் கருத முடிகிறது. இந்தக் கதை உண்மையில் வெகு விரிவாக, நுட்பமான செய்திகளை உள்ளடக்கி, ஒலியும் தாள லயமும் மிக்க மொழியினால் நிரம்பி இருக்கிறது. தன்னுடன் இருக்கும் ஒரு பணியாளன் தன் அடையாளத்தைத் திருடிக்கொண்டான் என்ற குழப்பத்தினால் ஒரு அரசாங்க எழுத்தருக்குப் பைத்தியம் பிடிக்கிறது என்பதுதான் மையம். இது நிச்சயம் ஒரு பூரணமான படைப்பே. ஆனால் இது 1840களில், அதாவது அவரது மகத்தான படைப்புகள் என்று முத்திரை குத்தப்பட்டவை எல்லாம் எழுதுவதற்கு வெகு முன்னர், எழுதப்பட்டது இந்த நூல் என்பதால் தஸ்தாயேவ்ஸ்கி, தீர்க்கதரிசியின் விசிறிகள் இதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. அது மட்டுமின்றி அந்தக் காலத்தில் இவ்வெழுத்து கோகோலின் தாக்கத்தால் நிரம்பி இருந்தது. ஆங்காங்கே கோகோலை அப்படியே படியெடுத்தது போலவும் தோன்றுகிறது. 

கலைத்துவ நோக்கின் வரலாற்றுப் படிநிலைகளின் ஒளியில் தஸ்தாயேவ்ஸ்கி ஒரு கவர்ச்சியூட்டும் நிகழ்வு. அவரது எந்தப் படைப்பையும் உற்று நோக்குவீர்களாயின் – உதாரணமாக ‘கரமசோவ் சகோதரர்களை’ எடுத்துக்கொள்வோம் – அதில் புலனுணர்வு கொள்ளக்கூடிய இயல்பான பின்புல விபரங்கள் எதுவும் இருக்காது. அங்கிருக்கும் நிலக்காட்சிகள் அனைத்தும் சிந்தனைகளின் நிலக்காட்சிகளே, ஒழுக்க நிலக்காட்சிகளே. அவரது உலகில் பருவநிலை இருப்பதில்லை, எனவே மக்கள் எவ்விதத்தில் உடையணிகிறார்கள் என்பது பொருட்டே இல்லை. தஸ்தாயேவ்ஸ்கி தன் மாந்தர்களைச் சந்தர்ப்பங்களின் வழியே, நன்னெறிகளின் வழியே, உளவியல் எதிர்வினைகளின் வழியே, அக அதிர்வுகள் வழியே மட்டும் உருவாக்குகிறார். பொதுவான தோற்றத்தை வருணித்தப் பிறகு வழமையாகச் செய்யும் மேலதிக வருணணைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு அந்தப் பாத்திரத்தின் காட்சிகளைக் கையாள்கிறார். இது கலைஞர்களின் பண்பாகாது. உதாரணமாக, தல்ஸ்தோய் தனது கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் ஒவ்வொரு செயலின் போதும் அப்பாத்திரம் கொள்ளும் தோரணையையும் எந்நேரமும் தன் மனத்தில் மிகத் தெளிவாகக் காண்கிறார். இவை எல்லாம் தவிர்த்தும் தஸ்தாயேவ்ஸ்கியிடம் வியப்பதற்கு ஒன்று இருக்கிறது. ரஷ்ய எழுத்துலகில் மாபெரும் நாடகாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழ் கொண்டவர், பாதையை மாற்றித் தேர்வுசெய்து நாவலாசிரியராகிறார். நாடகத்திற்குக் கச்சிதமாகத் தேவைப்படுகின்ற அளவிலான மரச்சாமான்களையோ, பிற நாடக நடிகர்களுக்குத் தேவைப்படும் வட்ட மேசைகளையோ, அதில் வைக்கப்பட்டிருக்கும் குடுவைகளையோ, வெளியே அடிக்கும் சூரிய ஒளியை மேடையில் காட்டும் விதமாக மஞ்சள் நிறம் பூசப்பட்டிருக்கும் சாளரங்களையோ அவற்றுடன் துரித கதியில் மேடையில் பக்கவாட்டில் ஓடிவந்து ஒரு செயற்கைப் புதரை அமைத்துவிட்டுச் செல்லும் மேடை ஒருங்கிணைப்பு உதவியாளரையோ கொண்டு திணறிக்கொண்டிருக்கும் ஒரு நாடகமாகவே ’கரமசோவ் சகோதரர்கள்’ நாவல் எனக்கு எப்போதும் தோன்றுகிறது.

இலக்கியம் வாசிக்கும் போது இன்னொரு விதி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் – இதுவே மிக முக்கியமானதும் எளியதும்கூட. நீங்கள் ஒரு நூலை வெறுக்கிறீர்கள் எனில், தன்னிச்சையாக அதில் வேறு கோணத்தில் பார்வையைப் பாய்ச்சி, அதைச் சிறப்பாக கற்பனை செய்து அதிலிருந்து கலையம்சத்தை வெளிக்கொணர முற்படுவீர்கள். நீங்கள் வெறுக்கும் அந்த நூலின் ஆசிரியரை விடவும் அதிகமாக அதில் இல்லாத கருத்துகளை எல்லாம் கண்டறிந்து வெளிப்படுத்த முயல்வீர்கள். விருது வழங்கப்பட்ட ஓர் இரண்டாம் தர நூலைவிடவும், சராசரியான, போலியான, சாமான்யத்தனமான நூல்களில்கூட சற்று சுவாரஸ்யமும் வாசிப்புவகையும் கிடைக்கச் சாத்தியங்கள் உண்டு. நாம் விரும்பும் நூல்களையும்கூட நடுக்கமும் தவிப்புமாகத்தான் வாசிக்கிறோம். ஒரு எளிய நடைமுறை அறிவுரை ஒன்றை முன்வைக்கிறேன். இதயத்திற்கோ ஆன்மாவின் வயிறான மூளைக்கோ நலம் பயக்கும் என்று கருதி ஒரே மிடறில் அருந்தும் திரவமாக இலக்கியம் – நல்ல இலக்கியம் – இருக்கக்கூடாது. இலக்கியத்தைக் கையில் எடுத்து, துண்டுகளாக்கி, பிய்த்து, நசுக்கி, அதன் மணத்தை உள்ளங்கையில் போட்டு உணர்ந்து, பின் பற்களில் கடித்து நாவில் வைத்து உருண்டையாக்கிச் சுழற்றி மகிழ்ந்து சுவைக்க வேண்டும். அப்போதுதான் அரிய சுவையின் சாற்றை உணரவும் உடைந்து நசுங்கிய பகுதிகள் எத்தகைய மேன்மையான ஓர்மையைக் கொண்டிருந்தது என உணரவும் முடியும். நம் ஈடுபாட்டின் அடர்த்தியின் வழியாக அதை நம் குருதிக்குள் உட்செலுத்திக்கொள்கிறோம். 

ஒரு கலைப்படைப்பைத் தொடங்கும் கலைஞன் கலைச் சிடுக்கையும் அதன் தீர்வையும் பற்றிய ஒரு வரையறையைத் தனக்குள் உருவாக்குகிறான். தன் கதா மாந்தர்களையும், இடம், நேரம் ஆகியவற்றையும் தேர்வுசெய்கிறான். தான் விரும்பும் முன்னகர்வுகள் எந்தக் குறிப்பிட்ட சூழல்களில் இயல்பாக நிகழக்கூடும் என ஆராய்கிறான். எந்தவிதமான வன்மமும் இன்றி கலைஞன் தான் விரும்பிய முடிவை தர்க்கப்பூர்வமாகவும் இயல்பாகவும் தான் அமைத்து வைத்திருக்கும் காரணிகளின் விசை – எதிர்விசைகளைப் பொறுத்து வளர்த்தெடுக்க வேண்டியதாகிறது. 

இந்த நோக்கத்திற்காக எழுத்தாளர் உருவாக்கும் உலகம் முற்றிலும் இயல்பிற்குப் புறம்பானதாக இருக்கலாம். உதாரணமாக காஃப்கா அல்லது கோகோல் உருவாக்கும் உலகங்கள். ஆனால் இவ்விடத்தில் ஒரு தீர்க்கமான கேட்பை நாம் முன்வைக்க உரிமை இருக்கிறது. இந்த உலகம் எப்படி இருந்தாலும் வாசகருக்கோ பார்வையாளருக்கோ இந்தக் கதை முடியும் வரை அது தன்னளவிலான தர்க்கத்தை நம்பத்தகுந்ததாகத் தொடர்ந்தாக வேண்டும். உண்மையில் இது அத்தனை பொருட்படுத்தத் தக்கதல்ல. ஷேக்ஸ்பியர் ‘ஹாம்லெட்டில்’ ஹாம்லெட்டின் தந்தையின் ஆவியை அறிமுகப்படுத்துகிறார். ஷேக்ஸ்பியர் காலத்து வாசகர்களிடையே ஆவி, பேய் போன்ற கருத்துகள் தீவிரமாக நம்பப்பட்டன என்றோ அந்த ஆவி கதாபாத்திரம் நாடக மேடையின் ஒரு அலங்கரிப்பு என்றோ சொல்லப்பட்டு அதனால் ஷேக்ஸ்பியர் ஆவியை தன் நாடகத்தில் புகுத்தியிருப்பது சரியான உத்திதான் என்று தோள்தரும் விமர்சனங்களை எல்லாம் நீங்கள் ஏற்றாலும் சரி மறுத்தாலும் சரி, இங்கு அதை நான் குறிப்பிடவில்லை. அரசன் கொல்லப்பட்டு அந்த ஆவி நாடகத்திற்குள் அறிமுகமானதும் அதைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கிறோம். இப்படியெல்லாம் செய்வது ஷேக்ஸ்பியரின் உரிமைதானா, அதை அவர் செய்வது வரம்பு மீறலாகாதா என்றெல்லாம் நாம் சந்நேகிப்பதில்லை. மேதையின் அளவுகோல் என்பது, ஆசிரியர் உருவாக்கிய உலகை எத்தகைய தனித்துவத்துடன் இதற்கு முன்பு பிறிதொன்றிலாததாக இவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது (குறைந்தது இலக்கியத்திலேனும்) என்பதே. அதைவிட அதை நம்ப வைப்பதில் எத்தனை வெற்றி கண்டிருக்கிறார் என்பது மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோணத்தில் நீங்கள் தஸ்தாயேவ்ஸ்கியையும் அணுக வேண்டும் என்று விரும்புகிறேன்.

இரண்டாவதாக, நாம் கலைப்படைப்பை அணுகும் தோறும் அதுவொரு தெய்வீக விளையாட்டு என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சொற்கள் – தெய்வீகம், விளையாட்டு – இரண்டுமே முக்கியமானவை. தன்னளவில் முழுமையான படைப்பவனாகி இறைவனுக்கு அருகில் ஒரு மனிதன் வருவதால் தெய்வீகம் என்றாகிறது. நம் மனம் இது கலை என்பதைத் தெளிவாக அறிந்திருப்பதால் மட்டுமே கலையாகிறது. ஆனால் உண்மையில் மேடையிலோ நூலிலோ யாரும் நிஜமாகக் கொல்லப்படுவதில்லை – இதுவொரு நம்ப வைக்கும் உருவகமாக எஞ்சுவதால் இது விளையாட்டு என்றாகிறது. நமது பீதியும் உவகையும் மேடையில் நிகழும் நாடகத்தை நிஜமென்று நம்புவதில் எந்தவித உறுத்தலும் இல்லாத வரை அந்த வசீகரமான விரிவான விளையாட்டில் பார்வையாளர்களாகிய நாமும் தயக்கமின்றி பங்கேற்கிறோம். இச்சமநிலை குலையும் அடுத்த கணத்தில் மேடையில் அருவருக்கத்தக்க மிகை நாடகம் அரங்கேறுகிறது. நூலில், செய்தித்தாளில் வந்திருக்க வேண்டிய ஒரு கொலை பற்றிய மந்தமான விவரிப்பு அச்சாகிய உணர்வு வருகிறது. உவகையும் திருப்தியும் கொண்ட உணர்வு நீங்கி நமது ஆன்மீக அதிர்வு சிதறி அப்படைப்பின் மீது ஈடுபாட்டை இழக்கிறோம். இந்த உணர்வுகளின் சேர்க்கையே உண்மையான கலையை நோக்கிய நம் எதிர்வினைகள். உதாரணமாக இதுவரை எழுதப்பட்ட மூன்று மகத்தான நாடகங்களின் முடிவுகளில் நாம் எரிச்சலடையவில்லை. கார்டிலியாவின் தூக்கிடல், ஹாம்லடின் மரணம், ஓதெல்லோவின் தற்கொலை யாவும் நமக்குத் துணுக்குறலைத் தந்தாலும் அதைக் கடந்து நமக்கு வலுவான ஒரு உவகையும் உண்டாகிறது. இது மாந்தர்கள் இறப்பதைக் கேட்டு நம்மில் எழும் குரூர உவகை அல்ல, மாறாக ஷேக்ஸ்பியரின் மேதமையை உணர்ந்து நம்மில் எழும் மகிழ்ச்சி. இவ்விடம் ‘Crime and Punishment’-ஐயும் ‘Memoirs from a Mousehole’ [‘Notes from Underground’ (1864)]-ஐயும் இந்தக் கோணத்தில் சற்று சிந்தித்துப் பார்க்கக் கோருகிறேன். நோய்ப்பட்ட இந்தக் கதாபாத்திரங்களின் ஆன்மாக்களில் தஸ்தாயேவ்ஸ்கியின் துணையோடு நீங்கள் பயணிக்கையில் கலையுவகை அடைகிறீர்களா? வேறு எந்த உணர்வைவிடவும் மேலான உணர்வை இவை தொடர்ந்து அளிக்கின்றனவா? அருவருப்பினால் உண்டாகும் சிலிர்ப்பை விடவும் குற்றத் திகில் நாவலில் இருக்கும் கொலைமீதான இச்சையையும் தவிர ஏதும் மேலதிகமாக இருக்கின்றனவா? தஸ்தாயேவ்ஸ்கியின் பிற நாவல்களில் அழகியல் சாத்தியங்களுக்கும் குற்றவியல் அறிக்கைகளுக்கும் இடையிலான சமநிலை இன்னும் கீழ்த்தரமானவையாகவே இருக்கின்றன. 

மூன்றாவதாக, ஒரு ஆசிரியர் தாங்கவொண்ணாத வாழ்வின் அவசங்களுக்கு இடையில் ஒரு மானுட ஆன்மா எப்படி அலைவு கொள்கிறது, எப்படி எதிர்வினைகள் புரிகிறது என்பதை ஆராயத் தொடங்கியதுமே நாம் அந்த ஆசிரியரை ஒரு வழிவிளக்காக கைகளில் ஏந்திக்கொண்டு ஓரளவிற்கு சராசரி மனிதன் என்று கருதப்படக்கூடிய அந்தக் கதாமாந்தரின் மனத்தின் உள்ளே, அடர் இருள் வழியும் இடங்களுக்கெல்லாம் பயணப்படத் தயாராகிவிடுகிறோம். இதன் வழியே ஒரு சராசரி மனிதனின் ஆன்மீக வாழ்வின் மீது நாம் ஆர்வம்கொள்ள வேண்டும் என்று நான் பொருள் சுட்டவில்லை. நிச்சயமாக இல்லை. நான் சொல்ல வருவது, கடிய மனிதன் தன்னளவில் முடிவற்ற வேறுபட்ட எதிர்வினைகளைக் கொண்டிருக்கிறான். அப்போதுதான் மனநிலை பிறழ்வு விடுதியிலிருந்து வெளியேறிய ஒருவனை அல்லது உள்ளே செல்லவிருக்கும் ஒருவனை, பொது மானுடத்தின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் சராசரி குடிமகனாகக் கருதுவது பொருத்தமற்றது. அத்தகைய சிதைந்த, குழம்பிய, பாவப்பட்ட ஆன்மாக்களை மானுடர்கள் என்று நாம் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கும் பதத்தின் கீழ் பொருத்துதல் சரியன்று. இத்தகைய இயல்புக்கு மீறிய மனம் வழுவியவர்களது பிரச்சினைகளை உருவாக்கிவிட்ட பிறகு வெறித்தனமான மனச்சிடுக்குகளைச்  சரியான முறையில் தீர்வு காணாமல் எழுத்தாளர்களே விட்டுவிடுவது நடந்தபடி இருக்கிறது. 

தன் பல படைப்புகளிலும் நரம்பு தளர்ந்தவர்களையும் பைத்தியங்களையுமே நாயகர்களாக நிரப்பி வைத்திருக்கும் ஒரு ஆசிரியரைப் பற்றி விவாதிக்கையில் ‘யதார்த்தவாதம்’ அல்லது ‘மானுடானுபவம்’ போன்ற பதங்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதா என்பதே முன்னாடும் கேள்வி. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தஸ்தாயேவ்ஸ்கியின் கதை மாந்தர்களுக்கு இன்னொரு குறிப்பிடத்தக்க குணம் இருக்கிறது. நூல் முழுவதும் அவர்கள் ஒரு ஆளுமையாக உருமாற்றம் அடைவதில்லை. கதைத் துவக்கத்தின் போதே முழுமையடைந்த வரையறுக்கப்பட்ட ஒருவராக அவர்கள் அறிமுகமாகின்றனர். அவர்களது சுற்றுச்சூழல் மாறலாம், அசாதாரண நிகழ்வுகள் அவர்களுக்கு ஏற்படலாம், ஆனாலும் அவர்கள் அகத்தே பெரிய பரிணாம வளர்ச்சிகள் கொள்வதில்லை. ரஸ்கோல்நிகோவ், தான் கொலையைத் திட்டமிடுவது தொடங்கி புற உலகுடன் ஒருவகையான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வது வரை பெரிய அகமாற்றம் அடைவதில்லை. முக்கியமாக புற உலகத்தின் சஞ்சலங்கள் இன்றியே இருக்கிறது. குறிப்பிடும்படியான எந்தவிதமான ஆளுமை மாற்றத்தையும் ரஸ்கோல்நிகோவ் அகத்தே அடைவதே இல்லை. தஸ்தாயேவ்ஸ்கியின் பிற நாயகர்கள் இன்னமும் குறைவான அதிர்வுகளையே வெளிப்படுத்துகின்றனர். 

அவ்வப்போது மாறிக்கொண்டும் அலைவுற்றும் திருப்பங்களை உண்டாக்கியபடியும் சடுதியில் திசைமாறி வெவ்வேறு பாத்திரங்களையும் இடங்களையும் உருவாக்கியபடியும் இருப்பது ஒன்றே ஒன்று – கதைக்கோர்வை. அடிப்படையில் தஸ்தாயேவ்ஸ்கி மர்மக்கதைகளை எழுதுபவர் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். அவ்வகைமையில் ஒரு கதாபாத்திரம் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இறுதி அடிவரை அப்படியே இருந்தாக வேண்டிய தேவை உண்டு. தன் தனித்துவமான பண்புகளாலும் தனிப்பட்ட பழக்கங்களாலும் அப்பாத்திரங்கள் அனைத்தும் நூல் முழுவதும் நாற்களப் புதிரைத் தீர்க்கும் ஆட்டக்காரர் போல இருந்தாக வேண்டும். கடும் சிடுக்குகளைப் போடும் எழுத்தாளராக, வாசிப்பவரின் கவனத்தை ஈர்ப்பதில் தஸ்தாயேவ்ஸ்கி வெற்றி பெற்றவர். மெல்ல உச்சகட்டத்தை நோக்கி அழைத்துச் செல்வதிலும் சுவாரஸ்யத்தை கையாளுவதிலும் அவர் முழுமையான திறமைசாலி. ஆனால் ஏற்கனவே வாசித்த அவரது ஒரு நூலை மறுவாசிப்பு செய்வீர்களேயானால், ஏற்கனவே பதில் தெரிந்துவிட்ட புதிர்களும் பழகிவிட்ட திருப்பங்களும் இப்போது இல்லாமல் போயிருப்பதை உணர்வீர்கள். 

தஸ்தாயேவ்ஸ்கியின் ஆதர்ஷ பொருளான மானுட மேன்மையின் பிறழ்வுகள், நாடகத்தோடு கேலிக்கூத்து எத்தனை இணக்கம் கொண்டதோ அத்தகைய இணக்கம் கொண்டது. அவரது கேலித் தன்மையைக் கூர்ந்து நோக்கினால் – அவருக்கு உண்மையான நகைச்சுவை உணர்வு இல்லை என்பது வேறு – சில சமயங்களில் அவர் அலங்காரமான ஆபாசமான மூடத்தனங்களை நோக்கிச் செல்கிறார். (The Possessed நாவலில் வரும் வலிய மனநிலை கொண்ட நரம்புச் சமநிலையற்ற கிழவிக்கும் பலவீனமான மனநிலை கொண்ட கிழவனுக்கும் இடையிலான உறவு, சோர்வூட்டக்கூடியதாகவும் யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பானதாகவும் இருக்கிறது.) கேலியை துயர நாடகத்தில் நுழைக்கும் கபடச் செயல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானது. அவரது கதைக்கோர்வைகளில் இரண்டாம் தர ஃபிரெஞ்சு கதைகளின் வடிவமைப்பு இருக்கிறது. இதன்படி அவரது கதாபாத்திரங்களை வைத்து அவர் எழுதிய காட்சிகள் அனைத்திலும் நல்ல காட்சிகள் ஏதுமே இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. ‘The Possessed’ நாவலிலேயே துர்கனேவை வைத்து நகைச்சுவையாக ஒரு பகுதி வருகிறது. கர்மாசினோவ் என்ற நூலாசிரியன் ‘செந்நிற முகம் கொண்ட ஒரு முதியவர், அவரது புகைப்போக்கி போன்ற தொப்பியின் கீழும் இளஞ்சிவப்பு நிற காதுகளைச் சுற்றியும்  மயிர்க்கற்றை ஆடியது. ஆமையோட்டு உறையிட்ட கண்ணாடி, குறுகிய கருநாடா, பதிக்கப்பட்ட பொத்தான்கள், முத்திரை மோதிரம் என எல்லாம் கச்சிதமாக இருந்தன. சர்க்கரை போல இனித்தாலும் கீச்சிடும் குரல் அவருக்கு. “இறந்த பெண்மணியின் மடியில் இறந்து கிடக்கும் மதலையின் கோரத்தைப் பார்க்க ஒண்ணாது துடிக்கும் என் முகத்தை நன்கு பாருங்களேன்” என்கிற ரீதியில் ஆங்கிலேய கடற்கரையில் விபத்தில் கரையொதுங்கி நிற்கையிலும் தன்னை முன்னிறுத்தியே எழுதும் பண்பு.’ மிகத் தந்திரமான துர்கனேவ் தன்வரலாற்று விவரணையில் கப்பலில் தீப்பிடித்ததைப் பற்றி எழுதியிருந்தார். அவரது இளமையில் எதிர்பாராத விதமான பல சம்பவங்கள் நிகழ்ந்ததை அவரது பகைவர்கள் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தனர். 

தஸ்தாயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களிலும் இருப்பதைப் போலவே அவசர கதியில் முடிவேயின்றி மீண்டும் மீண்டும் (இவற்றில் புலம்பல்களைச் சேர்க்கவில்லை) வரும் பதங்களும் சொற்றொடர்களும் – உதாரணமாக லெர்மோண்டோவின் வெளிப்படையான அழகிய உரைநடையைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் சொற்கள் – வரும்போது அந்தச் சொல்லோடை வாசகர்களைக் குலைக்கிறது. சத்தியத்தின் கருவைத் தேடும் நாம் அறிந்த அதியற்புத ஆன்மீகவாதியான தஸ்தாயேவ்ஸ்கி ஆன்மீக நோய் பற்றி அனைத்தும் அறிந்த மாமேதை. ஆனால் நாம் தல்ஸ்தோயையோ, புஷ்கினையோ, செக்காவையோ மாபெரும் எழுத்தாளர்கள் என்று சொல்கிறோமே அந்தப் பொருளில் இவர் நிச்சயம் மேதையல்ல. அவரை இப்படிச் சொல்வதற்குக் காரணம், அவர் உண்மைக்குப் புறம்பான உலகங்களை உருவாக்குபவர் என்பதல்ல – புனைவு எழுத்தாளர்கள் உருவாக்கும் அத்தனை உலகங்களும் உண்மையற்ற கற்பனையே – மாறாக, அவற்றை எந்தவொரு சமநிலையும் வளமும் இல்லாத அவசரகதி படைப்புகளாக உருவாக்கி இருக்கிறார் என்பதே பிரச்சினை. உள்ளதிலேயே அறிவிற்கு முரணான உலகச் சூழலைப் பின்னணியில் அமைத்து உருவாக்கியிருந்தாலும் ஒரு மகத்தான படைப்பு, அப்படி மகத்தான படைப்பாகக் கருதப்படுவதற்கான அடிப்படை நியதிகள் இவை. உண்மையில் தஸ்தாயேவ்ஸ்கி தன் உத்திகளில் மிகவும் தன்னறிவு கொண்டவராகவும் பண்படாதவராகவும் இருக்கிறார். அவர் வழங்கும் தகவல்கள் எல்லாம் ஆன்மீகத் தகவல்களாகவும் அவரது கதாபாத்திரங்கள் எல்லாம் அந்தக் காலத்து மக்களிடையே நிலவிய பரவலான சிந்தனைகளின் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. பிந்தைய 18ம் நூற்றாண்டு அல்லது முன் 19ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இயந்திரகதியான இலக்கியச் செயல்முறைகளின் அடிப்படையில் அந்தப் பாத்திரங்களுக்கு இடையில் நிகழும் விளைவுகளும் மிகச் சாதாரணமானவையாகவே எஞ்சுகின்றன. 

*

குறிப்பு : 1977ல் இறந்த விளாடிமிர் நபக்கோவ் வெல்லெஸ்லியிலும் காரென்லிலும் இலக்கிய வகுப்புகளில் நிகழ்த்தும் சொற்பொழிவுகளுக்காக குறிப்புகளைக் குவித்து வைத்திருந்தார். இந்தப் பொக்கிசத்தில், ஆங்கில, ஃபிரெஞ்சு, ஜெர்மானிய எழுத்தாளர்கள் பற்றிய வழமைக்கு மாறான சிந்தனைகளையும் கருத்துகளையும் தொகுத்து வைத்திருக்கிறார். 

https://lithub.com/wp-content/uploads/sites/3/2018/09/nabokov-mystery-feat.jpg
விளாடிமிர் நபக்கோவ்

அத்தொகுப்பில் அவர் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகள் யாவும் ஆச்சரியமூட்டுபவை. குறிப்பிட்ட அழகியல் பாணியைப் பின்பற்றும் எழுத்தாளராக மட்டும் அறியப்பட்டிருந்த நபக்கோவ் இதன் வழியே இத்தனை தீவிர கட்டுடைப்பாளராகப் பரிணமிக்கிறார். ’ரஷ்ய இலக்கியங்கள் பற்றிய விரிவுரைகள்’ என்ற தொகை நூலில் இருந்து இந்தக் கட்டுரை எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1 comment

ஜி.குப்புசாமி March 29, 2021 - 1:59 pm

நல்ல மொழிபெயர்ப்பு. வாழ்த்துகள். நபக்கோவை அறிந்தவர்களுக்கு இத்தகைய shooting from the hip வாதங்கள் ஆச்சரியமளிக்காது. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளுக்கு எதிராக நமக்கோ வண் வைக்கும் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க முடியும். ஆனால் அது வியர்த்தமாகவே முடியும். இதுவும் ஒரு பார்வை. அவ்வளவுதான்.

Comments are closed.