பணம் இல்லாத ஒருவன் அழகனாக இருந்து எந்தப் பயனும் இல்லை. காதல், பணக்காரர்களின் பிறப்புரிமையே தவிர வேலைவெட்டி அற்றவர்களின் தொழில் அல்ல. ஏழைகள் யதார்த்தவாதிகளாகவும் கற்பனைத் திறன் அற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அத்துடன் கவர்ச்சி மிகுந்த அதிகமான வருமானத்தை விட நிலையான வருமானம் மேலானது. இவையெல்லாமே ஹுகி எர்கினால் எப்போதும் புரிந்து கொள்ளப்படாத நவீன வாழ்வின் பெரும் உண்மைகள். பாவப்பட்ட ஹுகி ஒன்றும் அவ்வளவு அறிவாளி இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அறிவுப்பூர்வமாகவோ கீழ்த்தரமாகவோ கூட அவன் தன்னுடைய வாழ்க்கையில் எதுவும் பேசியதில்லை. மிருதுவான பழுப்பு நிறத் தலைமுடியும் செதுக்கியது போன்ற உடலமைப்பும் சாம்பல் நிறக் கண்களுமாக அவன் அற்புதமான அழகுடையவனாக இருந்தான்.
அவன் பெண்கள் ஆண்கள் என அனைவரிடமும் புகழ்பெற்று இருந்தான். பணம் சம்பாதிப்பதைத் தவிர எல்லாவிதமான சாதனைகளையும் அவன் செய்திருந்தான். அவனுடைய தந்தை குதிரைப்படையில் இருந்த போது தன்வசமிருந்த வாளையும் தீபகற்பப் போர் வரலாற்றின் பதினைந்து தொகுதிகளையும் அவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். இப்போது அந்த வாளை வீட்டிலிருந்த நிலைக் கண்ணாடியின் மீதும் போர் வரலாற்றின் தொகுதிகளை அலமாரியில் இருந்த ரஃப்பின் கைடுக்கும் பெய்லிஸ் பத்திரிகைக்கும் இடையிலும் வைத்திருக்கிறான். வயதான உறவுக்காரப் பெண்ணொருத்தி ஒரு வருடத்துக்கு இருநூறு என்று வாடகைக்கு அளித்திருக்கிற இடத்தில் தான் அவன் வாழ்கிறான். வாழ்வில் முன்னேறுவதற்காக எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்து விட்டான். ஆறு மாதங்கள் பங்குச் சந்தைக்கு சென்றான். ஆனால், எருதுகளுக்கும் கரடிகளுக்கும் இடையே வண்ணத்துப்பூச்சி என்ன செய்ய இயலும்?
சில காலத்துக்கு அவன் தேநீர் விற்பனை செய்தான். ஆனால் கருநிறத் தேயிலையும், இளந்தளிர் தேயிலையால் செய்யப்படும் சௌச்சாங் என்னும் கடும் பான விற்பனையும் அவனை வெகு சீக்கிரம் அயர்ச்சியடைய வைத்தன. பிறகு அவன் திராட்சை ரசம் விற்பதற்கு முயற்சி செய்தான். திராட்சை ரசம் அதிகமான உலர்வுத் தன்மையுடன் இருந்ததால் அதுவும் பலன் அளிக்கவில்லை. மகிழ்ச்சியான, அறிவார்ந்த, நல்ல தோற்றமுடைய ஒரு வாலிபனாக இருந்தும் வேலை இல்லாததால் கடைசியில் ஏதும் அற்ற ஒருவனாக அவன் ஆகிப் போனான்.
நிலைமையை மோசமாக்க அவன் காதலித்துக் கொண்டு வேறு இருந்தான். அவள் பெயர் லோரா மெய்டன். தன் மன அமைதியையும் ஜீரண சக்தியையும் இந்தியாவில் இழந்து விட்டிருந்த ஒரு ஓய்வு பெற்ற கர்னலின் மகள். அவை இரண்டையும் மீண்டும் அவர் கண்டடையவே இல்லை. லோரா அவனை மிகவும் நேசித்தாள். அவனோ அவளுடைய காலணியின் கயிறுகளை முத்தமிடத் தயாராக இருக்குமளவுக்கு அவள் மீது பைத்தியமாக இருந்தான். அவர்களை லண்டனின் மிக அழகிய ஜோடி எனுமளவுக்கு அவர்களுக்கு இடையே ஒரு சிறிய வேறுபாடு கூட இருந்ததில்லை. கர்னலுக்கு ஹுகியின் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஆனால் நிச்சயதார்த்தத்தைப் பற்றிப் பேசினால் கண்டுகொள்ளவே மாட்டார்.
“சொந்தமாக பத்தாயிரம் பவுண்டுகள் உன்னிடம் இருக்கும் போது என்னிடம் வா, அதற்குப் பிறகு நாம் நிச்சயதார்த்தத்தைப் பற்றி பார்ப்போம்” என்று சொல்வார். அத்தகைய நேரங்களில் மிகவும் வாடிப் போகிற அவன் ஆறுதல் தேடி லோராவிடம் தான் செல்ல வேண்டியிருக்கும்.
ஒரு நாள் காலை மெர்ட்ட்டன் குடும்பத்தினர் வாழ்கிற ஹாலண்ட் பார்க் வழியாக நடந்து போய்க் கொண்டிருக்கையில் அலன் ட்ரெவர் என்கிற தன் நெருங்கிய நண்பன் ஒருவனைச் சந்திக்கச் சென்றான். ஆலன் ஒரு ஓவியன். இப்போதெல்லாம் சிலர் இது போன்ற கலைப் பித்தில் இருந்து தப்பித்து விடுகின்றனர். ஆனால் அலனோ ஒரு கலைஞனும் கூட. கலைஞர்கள் அரிதினும் அரிதானவர்கள். உடலளவில் பார்த்தால் தவிட்டு நிறப் புள்ளிகளையுடைய முகமும், சிகப்பான கரடு முரடான தாடியும் கொண்ட ஒரு விசித்திரமான முரட்டு மனிதனாகவே அலன் தெரிவான். ஆனால் தூரிகையை கையில் எடுத்து விட்டால் அவன் ஒரு வித்தகன். அவருடைய ஓவியங்கள் ஆர்வமாக வாங்கப்பட்டன. முதல் பார்வையிலேயே ஹுகி அவனைக் கவர்ந்து விட்டான். அதற்கு முழுக் காரணம் ஹுகியின் வசீகரமான தோற்றமே.
“யாரெல்லாம் அழகானவர்களோ, யாரைப் பார்த்தால் கலைப் பூர்வமான மகிழ்ச்சி தோன்றுகிறதோ, யாரிடம் பேசினால் அறிவார்ந்த இளைப்பாறுதல் கிடைக்கிறதோ அத்தகையவர்களை மட்டும் ஓவியர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த உலகம் ஆடைத் தேர்வுகளில் மிகுந்த அழகுணர்ச்சி கொண்ட ஆண்களாலும் அன்பான பெண்களாலும் ஆட்சி செய்யப்படுகிறது அல்லது குறைந்தபட்சம் அவர்கள் அவ்வாறு இருக்க வேண்டும்” என்று அவன் சொல்வதுண்டு. அவன் ஹுகியுடன் நன்றாக பழகத் துவங்கிய பிறகு அவனுடைய தோற்றப் பொலிவு, குதூகலம், பெருந்தன்மை, எதற்கும் கவலைப்படாத அவன் குணம் ஆகியவற்றால் கவரப்பட்டு எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய ஓவிய அறைக்கு வரும் உரிமையை ஹுகிக்கு நிரந்தரமாகத் தந்திருந்தான்.
ஹுகி அங்கே வந்த போது ட்ரெவர் ஒரு பிச்சைக்காரனின் அற்புதமான முழு நீள ஓவியம் ஒன்றை முடிக்கும் தருவாயில் இருந்தான். ஓவியக் கூடத்தின் உயரமான நடைமேடையின் மூலையில் கசங்கிய காகிதம் போன்ற முகச்சுருக்கங்களுடன் மிகப் பரிதாபமான முகபாவமும், சுருங்கிப் போன உடலுமாக வயதான ஒரு பிச்சைக்காரன் நின்று கொண்டிருந்தான். கந்தலும் கிழிசலுமாக ஒரு பழுப்பு நிற அங்கி அவன் தோள்களின் மீது தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய காலணி அங்கங்கு ஒட்டுப் போட்டும் சில இடங்களில் தைக்கப்பட்டும் இருந்தது. அவன் தன்னுடைய ஒரு கையை வலிமையான குச்சியொன்றின் மீது சாய்த்து வைத்துக் கொண்டு, இன்னொரு கையை பிச்சை கேட்பது போல தன் தொப்பியின் மீது வைத்திருந்தான்.
“எவ்வளவு அற்புதமான மாடல்!” ஆலனுடைய கைகளைக் குலுக்கியபடி ரகசியமாக கிசுகிசுத்தான் ஹுகி.
“அற்புதமான மாடலா?” என்று உச்சபட்சமான ஒரு குரலில் கத்தியபடி, “அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. இவனைப் போன்ற ஒரு பிச்சைக்காரனை நாம் தினம் சந்திக்க முடியுமா என்ன? இது என்னுடைய அரிய கண்டுபிடிப்பு, நண்பா! ஒரு உயிர்பெற்ற வெலாஸ்கஸ் ஓவியம்! என் அதிர்ஷ்டம்! ஓவியர் ரெம்ப்ரெண்ட் இருந்திருந்தால் இவனை எவ்வளவு தத்ரூபமாக வரைந்திருப்பார் தெரியுமா?’ என்றான் ட்ரெவர்.
“இந்த பாவப்பட்ட முதியவன் எவ்வளவு பரிதாபமாகக் காட்சி அளிக்கிறான்! ஆனால், எனக்குத் தெரிந்தவரையில், உங்களைப் போன்ற ஓவியர்களுக்கு இத்தகைய பாவப்பட்ட முகம் தான் அதிர்ஷ்டம் தருவது. சரி தானே?” என்றான் ஹுகி.
“நிச்சயமாக. ஒரு பிச்சைக்காரன் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் விரும்புவதில்லை தானே?” என்று பதிலுரைத்தான் ட்ரெவர்.
ஒரு திவான் இருக்கையில் வசதியாக அமர்ந்தபடி, “ஒருமுறை மாடலாக இருக்க ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்படும்?” என்று கேட்டான் ஹுகி.
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஷில்லிங்க்”
“உன்னுடைய ஓவியங்களுக்கு உனக்கு எவ்வளவு கிடைக்கும்?”
“இதற்கு எனக்கு இரண்டாயிரம் கிடைக்கும்.”
“இரண்டாயிரம் பவுண்டுகளா?”
“வெறும் இருபத்தியோரு ஷில்லிங்க். ஓவியர்கள் கவிஞர்கள் மருத்துவர்களுக்கெல்லாம் எப்போதுமே அவ்வளவு தான் கிடைக்கும்”
“சரி, ஆனால் ஓவியர்களுக்குக் கிடைப்பதில் ஒரு கணிசமான சதவீதம் மாடல்களுக்கும் தரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உங்கள் அளவுக்கு அவர்களும் கடினமாக உழைக்கிறார்கள்” எனச் சொல்லிச் சிரித்தான்.
“அபத்தம், அபத்தம்! வர்ணம் தீட்டுவதில் உள்ள கஷ்டத்தை மட்டும் பார். அத்துடன் நாள் முழுவதும் நிற்க வேண்டியிருக்கும். நீ சொல்வதெல்லாம் சரி தான். கலையும் ஏறத்தாழ உடல் உழைப்பின் அளவுக்கு மரியாதை எய்துகிற தருணங்கள் உண்டு என நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். ஆனால் நீ தொணதொணக்காதே. நான் இப்போது வேலையாக இருக்கிறேன். ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு அமைதியாக இரு”
சிறிது நேரத்தில் வேலையாள் உள்ளே வந்து சட்டகம் செய்பவர் ட்ரெவரிடம் பேச விரும்புவதாக சொன்னான்.
“எங்கும் போய் விடாதே. நான் சீக்கிரம் திரும்பி வந்து விடுவேன்” என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றான் ட்ரெவர்.
ட்ரெவர் இல்லாததைப் பயன் படுத்திக்கொண்ட அந்த வயதான பிச்சைக்காரன் தனக்குப் பின்னால் இருந்த ஒரு மரப் பலகையின் மீது சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வெடுத்தான். இரங்கத்தக்க ஏழ்மையான தோற்றங் கொண்ட அவனைப் பார்த்து ஹுகியால் உதவி செய்யவோ பரிதாபப்படாமல் இருக்கவோ இயலவில்லை. அவன் தன்னுடைய பாக்கெட்டுகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தான். ஒரு பவுண்டும் சில செப்பு நாணயங்களும் மட்டும் தான் இருக்கிறது என்பதைக் கண்டான். பாவப்பட்ட முதியவன். என்னை விட இவனுக்குத் தான் இதன் தேவை அதிகம். ஆனால் இதன் பொருள் ஒரு வாரத்துக்கு ஜட்கா குதிரை வண்டியில் பயணிக்க எனக்குப் பணமிருக்காது என நினைத்துக் கொண்டவன், ஓவியக் கூடத்தின் குறுக்கே நடந்து சென்று அந்தப் பிச்சைக்காரனின் கையில் ஒரு பவுண்டை நழுவ விட்டான். வியப்படைந்த அவனுடைய உலர்ந்த உதடுகளில் ஒரு வெளிறிய புன்னகை சடுதியில் தோன்றி மறைந்தது.
“நன்றி ஐயா, நன்றி” என்றான் அவன்.
பிறகு ட்ரெவர் வந்ததும் தான் செய்ததை நினைத்து சிறிது வெட்கப்பட்டுக் கொண்டே ஹுகி அங்கிருந்து கிளம்பினான். ஆடம்பரச் செலவு செய்ததற்காக லோராவின் அழகிய வசையை வாங்கிக்கொண்டு தன்னுடைய அந்த நாளைக் கழித்த பின் வீட்டுக்கு நடந்து சென்றான். அன்றிரவு சுமார் பதினோரு மணிக்கு பேலட் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தான். புகைக்கும் அறைக்கு அருகில் அமர்ந்து ட்ரெவர் ஹாக் அண்ட் செல்ட்ஸர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
“ஆலன்! உன்னுடைய ஓவியத்தை வரைந்து முடித்து விட்டாயா?” என்று தன் சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டே கேட்டான்.
“முடித்து சட்டமும் இட்டுவிட்டேன்” என்று பதில் சொன்னான் ட்ரெவர்.
“இதற்கிடையில் ஒரு விஷயம் நடந்தது. நீ ஒரு வெற்றியை அடைந்து இருக்கிறாய். நீ பார்த்த அந்த முதிய மாடலுக்கு உன் மீது மிகுந்த அன்பு ஏற்பட்டுவிட்டது. நீ யார், எங்கு வாழ்கிறாய், உன்னுடைய வருமானம் என்ன, உனக்கிருக்கும் வாய்ப்புகள் என்ன என்று உன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நான் அவனிடம் சொல்ல வேண்டியதாகி விட்டது”.
“என் அருமை ஆலன்!”, உரத்த குரலில் கத்தினான் ஹுகி. “நான் வீட்டுக்குச் செல்லும் போது என்னிடம் எதாவது உதவி எதிர்பார்த்து ஒருவேளை அவன் எனக்காகக் காத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நீ நிச்சயமாக வேடிக்கை தானே செய்கிறாய். அந்த பாவப்பட்ட முதியவனுக்காக நான் ஏதாவது செய்திருக்கலாம். அவ்வளவு பரிதாபகரமாக யாராவது இருப்பது எனக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. பழைய துணிகள் குவியலாக என் வீட்டில் இருக்கின்றன. அவன் அவற்றில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொள்வான் என்று நீ நினைக்கிறாயா? ஏன், ஏற்றுக்கொள்ள மாட்டான்? அவனுடைய கந்தல் ஆடை அங்கேயே துண்டுதுண்டாக விழுந்தபடி இருந்தது”
“ஆனால் அவற்றில் தான் அவன் அற்புதமாக இருக்கிறான். அத்துடன் ஒரு முழு அங்கியில் நான் அவனை ஓவியமாக வரைய முடியாது” என்றான் ட்ரெவர். “நீ கந்தல் என்பதை நான் அழகு என்கிறேன். எது உனக்கு வறுமையாகத் தெரிகிறதோ அது என் கண்ணுக்கு அழகான காட்சியாகத் தெரிகிறது. ஆனாலும் நீ தருவதாக சொன்னவற்றைப் பற்றி அவனிடம் சொல்கிறேன்”.
“ஆலன்! ஓவியர்களாகிய நீங்கள் ஒரு இதயமற்ற கூட்டம்” என்று கோபமாக சொன்னான் ஹுகி.
“கலைஞனின் இதயம் அவனுடைய தலையில் இருக்கிறது” என்று பதில் சொன்னான் ட்ரெவர்.
“அதுமட்டுமில்லாமல் நாங்கள் காணும் உலகத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வது தான் எங்கள் வேலையே தவிர எங்கள் அறிவுக்கெட்டியது போல அதை மாற்றிச் சீரமைப்பது அல்ல. இப்போது சொல். லோரா எப்படி இருக்கிறாள்? அந்த முதிய மாடல் அவளைப் பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான்” என்றான்.
“நீ அவளைப்பற்றி அவனிடம் எதுவும் பேசவில்லை தானே?” என்று கேட்டான் ஹுகி.
“சர்வ நிச்சயமாக நான் பேசினேன். கருணையற்ற அந்த கர்னலைப் பற்றி, அழகிய லோராவைப் பற்றி, அந்த பத்தாயிரம் டாலர்களைப் பற்றி என எல்லாமே அவனுக்குத் தெரியும்”
“என்னுடைய எல்லா தனிப்பட்ட விஷயங்களையும் அந்த வயதான பிச்சைக்காரனிடம் நீ சொன்னாயா?” மிக சிவந்து கோபத்துடன் காணப்பட்ட ஹுகி சத்தமாகக் கத்தினான்.
“என் அன்பு நண்பா! உன்னால் வயதான பிச்சைக்காரன் என்று அழைக்கப்படும் அவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவர் நினைத்தால் தன்னுடைய வங்கிக் கணக்கின் இருப்புத் தொகைக்கு அதிகமான பணத்தை வங்கியிலிருந்து கடனாகப் பெறாமல் மொத்த லண்டனையும் விலைக்கு வாங்க முடியும். எல்லா நாட்டின் தலைநகரங்களிலும் அவருக்கு வீடு இருக்கிறது, அவர் தங்கத் தட்டில் உண்பவர், தான் நினைத்தால் ரஷ்யாவைப் போருக்குச் செல்லாமல் தடுக்கக் கூட அவரால் இயலும்” என்றான் ட்ரெவர்.
“நீ என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய்?”என்று வியப்புடன் கேட்டான் ஹுகி.
“அதாவது, இன்று நீ ஓவியக் கூடத்தில் பார்த்த அந்த வயதான மனிதரின் பெயர் பேரண் ஹாஸ்பெர்க். அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். என்னுடைய எல்லா ஓவியங்களையும், ஓவியங்கள் போன்றவற்றையும் வாங்கிக் கொள்பவர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிச்சைக்காரனுடைய உருவத்தில் தன்னை ஓவியமாக வரைவதற்காக ஒரு தொகையை முன்பணமாக எனக்குத் தந்தார். நீ பார்த்தது அவர் அதற்கு மாடலாக நின்ற காட்சியைத் தான். தன் கந்தல் ஆடையில் அவர் இன்று அற்புதமாகத் தோற்றமளித்தார். இல்லை, ‘என்னுடைய’ கந்தல் ஆடை என்று தான் சொல்லவேண்டும். ஸ்பெயினில் நான் முன்னெப்போதோ வாங்கிய ஒரு பழைய ஆடை அது” என்றான் ட்ரெவர்.
“பேரண் ஹாஸ்பேர்க்!” முதலில் கூச்சலிட்ட ட்ரெவர் பிறகு வெடிச் சிரிப்பு சிரித்தான்.
“நீ இதை என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் நான் அவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டதைத் தவிர்த்திருக்கலாம்” என்று எரிச்சல்பட்டான் ஹுகி.
“முதலில், கொஞ்சமும் பொறுப்பற்ற முறையில் நீ அவ்வாறு பிச்சை இடுவாய் என்பதை நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஒரு அழகிய மாடலை நீ முத்தமிட்டாய் என்றால், அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அருவருப்பான தோற்றமுடைய ஒருவனுக்கு நீ ஒரு பவுண்டு தருவது என்பது கடவுள் மீது ஆணையாக, நிச்சயமாக எனக்குப் புரியவில்லை. அதுமட்டுமின்றி உண்மை என்னவென்றால், நான் யாரையும் வீட்டிற்குள் வரவேற்கும் நிலையில் அன்றைக்கு இல்லை. நீ உள்ளே நுழைந்தபோது இங்கு ஹாஸ்பெர்க் இருக்கிறார் என்று நான் சொல்லியிருந்தால் அதை அவர் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார். ஏனெனில், அப்போது அவர் முழு ஆடையுடன் இல்லை” என்றான் ட்ரெவர்.
“இவன் என்ன இவ்வளவு முட்டாளாக இருக்கிறான் என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார்” என்றான் ஹுகி.
“இல்லவே இல்லை. நீ சென்ற பிறகு அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார். சுருங்கிய தோலுடன் காணப்பட்ட தன் கைகளைத் தேய்த்துக் கொண்டு அமர்த்தலாக சிரித்தார். உன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்வதில் அவர் ஏன் அவ்வளவு ஆர்வம் காட்டினார் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது நன்றாகப் புரிகிறது. நீ தந்த அந்த ஒரு பவுண்டை அவர் உன் பெயரில் முதலீடு செய்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதற்கான வட்டியை உனக்குத் தருவார்.”
“அடச்சே! நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்ட சாத்தான். நான் இப்போது செய்யக்கூடிய சிறப்பான செயல் படுக்கைக்கு செல்வது தான். என்னுடைய அருமையான ஆலன், நீ இதை யாரிடமும் சொல்லாதே. என்னுடைய முகத்தைப் பொதுவில் காட்டுவதற்கே எனக்கு அச்சமாக இருக்கிறது” என சோகமாக சொன்னான் ஹுகி.
“இப்படி நீ வருத்தப்படுவது மடத்தனம்! உன்னுடைய வள்ளல் தன்மைக்கு இது ஒரு மிகப்பெரிய சாட்சி. ஓடாதே ஹுகி. இன்னொரு சிகரெட் எடுத்துக்கொள். லோராவைப் பற்றி எவ்வளவு பேச வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ அவ்வளவும் நீ இப்போது பேசலாம்” எனக் கிண்டல் செய்தான் ட்ரெவர்.
அதை ஏற்காத ஹுகி சத்தமாக சிரித்துக் கொண்டிருந்த ட்ரெவரை விட்டுவிட்டு மிகுந்த சோகத்துடன் தன் வீட்டுக்கு நடந்து சென்றான்.
அடுத்த நாள் காலை அவன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது வேலையாள் ஒரு அட்டையைக் கொண்டு வந்தான். அதன் மீது ‘திருவாளர் கஸ்டவ் நாடின் பேரண் ஹாஸ்பெர்க்’ என்று எழுதியிருந்தது.
தன்னை அவமதித்தததற்காக மன்னிப்பு கேட்கச் சொல்லி பேரண் அனுப்பிய ஆள் தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறான் என்று தனக்குள் பேசிக் கொண்டு வேலையாளிடம் அவரை அழைத்து வருமாறு சொன்னான் ஹுகி.
தங்கச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடிகள் அணிந்து சாம்பல்நிறத் தலைமுடியுடன் இருந்த ஒரு முதிய கனவான் உள்ளே நுழைந்தார். லேசான பிரெஞ்சு உச்சரிப்புடன், “திருவாளர் எர்ஸ்கினிடம் நான் பேச இயலுமா?” என்று கேட்டார்.
பேசலாம் என்று பொருளில் ஹுகி தலையசைத்தான்.
“திரு. பேரண் ஹாஸ்பெர்க் என்னை அனுப்பினார். அவர்…….” எனச் சொல்லிக் கொண்டே போனதை இடைமறித்த ஹுகி, “மன்னிக்க வேண்டும் ஐயா! மிக உண்மையான என் மன்னிப்பை அவரிடம் சொல்லி விடுங்கள்” என்று தடுமாறிய குரலில் சொன்னான்.
அந்த முதிய கனவான் ஒரு புன்னகையுடன், “திரு. பேரண் இந்தக் கடிதத்தை உங்களிடம் சேர்க்கச் சொல்லி என்னை அனுப்பினார்” என்று ஒட்டப்பட்ட ஒரு உறையை அவனிடம் நீட்டினார். அதன் மீது, ‘எர்ஸ்கினுக்கும் லோராவுக்கும் திருமணப் பரிசு – வயதான ஒரு பிச்சைக்காரனிடமிருந்து’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த உறைக்குள் பத்தாயிரம் டாலர்களுக்கான ஒரு காசோலை இருந்தது.
சில காலத்துக்குப் பிறகு நடைபெற்ற ஹுகியின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார் பேரண். அதற்குப் பிறகு பேசிய ஹுகியின் மாப்பிள்ளைத் தோழனான ஆலன், “லட்சாதிபதி மாடல்கள் அரிதானவர்கள். ஆனால் இறைவனின் பெயரால் சொல்கிறேன், மாடல் லட்சாதிபதிகள் அதை விட அரிதானவர்கள்!” என்றான்.