தராசு

1 comment

நாடு முழுவதும் ஒரு நாளில் சுமார் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஆஸ்திரேலியாவின் “த ஏஜ்” பத்திரிகையின் முதல் பக்கத்தில் அன்று அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இடமிருந்து வலமாக நீளமாக போடப்பட்ட பெரிய தலைப்பின் கீழ் கட்டம் கட்டப்பட்ட அந்தச் செய்தி தலைப்புச் செய்திக்கு இணையான முக்கியத்துவத்துடன் பிரசுரமாகியிருந்தது.

‘தும்பளை’ ஆறுமுகசாமி ஜட்டி போடாததற்கு எதிரான வழக்கு விசாரணை ஐந்து நாட்களாக மெல்பேர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்து அன்று தீர்ப்பு வெளியிடப்படவிருந்தது.

யாழ்ப்பாணத்தின் ஈசான மூலையில் முப்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெயர் போன வியாபாரப்பட்டினம் பருத்தித்துறை. அதிலிருந்து கிழக்காக கிளை பிரித்து உள்ளே போகின்ற தெருவிலுள்ள கிராமம் தான் தும்பளை. அங்கு தனது பெயர் போன வியாபாரத்தினால் பெரும் பணம் புரட்டிய தும்பளை ஆறுமுகசாமிக்கு இப்போது தொண்ணூற்றெட்டு வயதாகிறது. பொச்சுமட்டையிலிருந்து தும்பெடுத்து நூல் திரித்து அதனை லொறிகளில் ஏற்றி அனுராதபுரத்துக்குக் கொண்டுபோய் விற்று வந்த பெரிய வியாபாரி. ஆரம்பத்தில் மாட்டு வண்டிகளில் கொண்டுபோய் வியாபாரம் செய்துவிட்டு, வரும்போது அதே வண்டிலில் குரக்கன் ஏற்றிக்கொண்டு வந்து தொழிலைத் தொடங்கி, பிற்காலத்தில் அது அசுர வேகத்தில் எந்நேரமும் இரைந்து கொண்டிருக்கும் வியாபாரமான போது, தலைநகர் கொழும்பிலும் பசைப்பிடிப்பான ஆள் என்று அநேகரால் அறியப்பட்டிருந்தார்.

லொறியெடுத்து வியாபாரம் செய்வதற்கு முன்னர் வீட்டுக்கு முன்னாலிருந்த பனை மரத்தடி வளவுக்குள் பெரிய கொட்டில் போட்டு அங்கு தான் தும்பளை ஆறுமுகசாமி தும்படிப்பது வழக்கம். சொந்த வளவென்ற காரணத்தினால் எப்போதும் அங்கு பனம்பாத்தியொன்று போடுவார். அதில் அவருக்கு எந்த லாபமும் கிடையாது. அவர் தும்படிப்பதை பார்ப்பதற்கும் பேச்சு பராக்கிற்கும் வந்து போகும் ஊர்ச் சனத்திற்கு பாத்தியைக் கிண்டி கிழங்குகளைக் கொடுத்தனுப்புவார். வளவுக்குள் விழுந்திருக்கும் பனம்பழங்களை பொறுக்கிக் கொடுப்பார். பனம்பாளைகளை எடுத்துக்கொண்டு போகச் சொல்வார். அந்த வளவு அவருக்கு மாத்திரமல்லாமல் ஊர்ச்சனத்துக்கும் அட்சய பாத்திரமாக – ஒரு ஷோப்பிங் கொம்ப்ளக்ஸ் போல – சுரந்து கொண்டேயிருந்தது.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவிலில் போய் கை நிறைய திருநீற்றை அள்ளி பூசிக்கொண்டு பனங்காணிக்கு முன்னாலிருந்த சிறிய தகரக்கடையில் பால் வாங்கிக் குடிப்பார் ஆறுமுகசாமி. பிறகு மூன்றுவரிச்சு வைத்து பனையோலையால் சுற்றியடைத்த காணியின் மூலையில் வேட்டியைத் தூக்கிக்கொண்டு குந்தியிருந்து சிறுநீர் கழிப்பார். அப்படியே வந்து வேட்டியை மேலே இழுத்துவிட்டு வேலையில் இறங்கினார் என்றால் இயந்திரம் தான்.

இப்படி ஆறுமுகசாமி தும்படித்துக் கொண்டிருக்கும் போது வளவுப்பக்கமாக பனம்பழம் பொறுக்கச் சென்ற பற்குணத்தின் மனைவி கோமேதகத்துக்கு ஆறுமுகசாமி தனது ஆணுடம்பைக் காட்டிவிட்டார் என்பது தான் மெல்பேர்னில் இப்போது நடந்து முடிந்திருக்கும் வழக்கு.

ஆறுமுகசாமி ஆணுடம்பைக் காட்டியதாக சொல்லபடுகின்ற காலப்பகுதியில் பற்குணம் செத்துப் போயிருந்தார். மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் மண்டை வெடித்து, வவுனியா ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் கொண்டுபோய் சேர்த்த இரண்டாவது நாள் பற்குணத்துக்கு சீவன் போய்விட்டது.

கோமேதகத்தின் மகள் சத்தியராணி வடமராட்சியிலிருந்து கொழும்புக்கு படிக்கப் போய் லண்டன் சோதனை எழுதியவள். அதில் சித்தியும் அடைந்தவள். சின்ன வயதிலிருந்தே வெளிநாட்டு வாழ்க்கையில் பச்சம்கொண்டவள். ஊர் தொழுவாரங்களை அறவே வெறுப்பவள். பரீட்சை முடிந்து கொழும்பில் வேலை கிடைத்த நாளொன்றில் விடுமுறையில் வந்து வளவு துறவுகளை சொந்தக்கார சாத்திரியாரின் மகனிடம் பொறுப்பு கொடுத்துவிட்டு தாயையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு போனாள். கொஞ்ச காலத்தில் இருவரும் லண்டன் போய்விட்டார்கள்.

லண்டன் போய்ச்சேர்ந்த மாத்திரத்திலேயே சுடச்சுட வேலை. சத்தியராணிக்கு தாயோடு தனி வாழ்க்கை பெரிதாக பிரச்சினையிருக்கவில்லை. நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் வழக்கம் போல வேலைக்குப் போய் வரும் போது ரயிலில் கண்ட உயரமான ஜேர்மன்காரன் ஒருத்தனோடு பழக்கம் வந்தது. கூடவே பரஸ்பரம் குடும்பக் கதைகளும் பரிமாறப்பட்டன. மிச்சக்கதையை கேட்பதற்கு அடுத்த நாளும் வரச் சொல்லியிருக்கிறான் அந்த தடித்த மீசைக்காரன். கதை கேட்கப் போன இடத்தில் பற்குணத்தின் பேரன் வயிற்றில் தங்கி விட்டான். தகவலைச் சொன்னவுடன் ஜேர்மன்காரன் “நோ ராணி” என்று தலையை ஆட்டிக் கொண்டு லண்டனை விட்டே ஓடிவிட்டான்.

கோமேதகத்தையும் பிள்ளையையும் ஒருமாதிரி வளர்த்து வந்த சத்தியராணி அடுத்து ஹங்கேரி நாட்டுக்காரன் ஒருவனோடு காதலோ கருமமோ ஏதோ ஏற்பட்டு இன்னொரு பிள்ளையையும் வயிற்றில் வாங்கி விட்டாள். அவனுக்கும் நல்ல பெரிய மீசை. “ஆறுமுகசாமியண்ணையிண்ட தும்புலொறி மாதிரி இவளென்னப்பா ஒவ்வொருமுறை போகும்போதும் ஏற்றிக்கொண்டு வாறாள்” – என்று கோமேதகத்துக்கு கவலை. இரண்டு நாடுகளுக்கு சம்மந்தியாக இருந்தும் வாந்தியெடுத்துக் கொண்டேயிருப்பவளுக்கு முன்னால் வாயெடுத்துப் பேசுவதற்கு அவள் பயந்தாள். வீட்டுக் கிழவியாக பேரனுக்கும் பேத்திக்கும் குண்டி கழுவும் வேலையை மாத்திரம் செய்து கொண்டிருந்தாள்.

பேத்திக்காரி வேழினிக்கு தமிழ் என்றால் நல்ல விருப்பம். அதைச் சொல்லிக் கொடுப்பதில் கோமேதகத்திற்கும் நல்ல விருப்பம். சின்ன வயசிலிருந்து கிழவியோடு தான் படுப்பாள். ஒட்டிக் கொண்டிருந்து கதை கேட்பது அவளுக்குப் பிடிக்கும். கிழவியின் மரகதக்கல் மூக்குத்தியை சின்ன விரலால் தட்டிக்கொண்டே கதை கேட்டபடி தூங்குவாள். ஊர்க்கதைகள் எல்லாமும் சொல்லி முடித்து ஆறுமுகசாமி அண்ணரின் பனங்காணிக் கதைகளையும் விரிவாகச் சொன்னாள் கோமேதகம். எப்படி தும்படிக்கிறது, நூல் நூற்கிறது என்பவற்றையெல்லாம் நடித்துக் காட்டி விளங்கப்படுத்தும் போது குப்புறப் படுத்துக்கொண்டு நாடியை இரண்டு கைகளாலும் ஏந்தியபடி கண்வெட்டாமல் கதை கேட்பாள் வேழினி.

ஒருநாள் சம்மந்தமே இல்லாமல் “அம்மப்பா ஏன் செத்தவர்” – என்று வேழினி கேட்ட போது, எதுவுமே யோசியாமல் “ஆறுமுகசாமி தாத்தாவின் தும்புலொறி ஓடிக்கொண்டு வரும் போது தான் மதவாச்சியில் விபத்து நடந்து அம்மப்பா செத்துப் போனார்” – என்றாள் கோமேதகம். கதைகளோடு ஒரு கதையாகச் சொல்லிவிட்டு பாத்திரங்களைக் கழுவப் போய்விட்டாள் அவள்.

தாய்க்காரி போவே நாடுவிட்டு நாடுபோய்த் தான் படிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்கு வந்தாள் வேழினி. வந்து மூன்று மாதங்களில் ஒரு வெளிநாட்டுக்காரனோடு நெருக்கம் கூடியது. அவனொரு இலங்கைக்காரன். வேலையெதுவும் இல்லை. பகலில் மீன் பிடிப்பான். இரவிலே மீன் பொரிப்பான். வேழினி பொரியல் சாப்பிடப் போன ஒருநாளிரவு மீன் கருகிவிட்டது. கட்டிலிலிருந்து இரண்டு பேரும் இறங்கி ஓடிப்போய் தாச்சியை இறக்குவதற்கிடையில் பக்கத்து வீடு வரைக்கும் புகை போய்விட்டது. இலங்கைக்காரன் திரும்பவும் தாச்சியை கழுவி மீனைப் பொரித்துக் கொடுத்தான். வேழினி சுவைப்பதைப் பார்த்து மகிழ்ந்தான். அவள் சிரிக்கும் போது குலுங்கும் கண்கள், தான் பிடித்த மீன்களைப் போலவே துள்ளுவதாக சொல்லி கன்னத்தைக் கிள்ளினான். அதன் பிறகு இருவரும் சிரித்தார்கள்.

அந்த இலங்கைக்காரன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்பவன் என்ற செய்தியை அடுத்தடுத்த நாட்கள் மீன் பொரியல் சாப்பிடப் போன போது தான் வேழினி அறிந்துகொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு போய்வந்த இடங்களும் பழகிய தோழர்களும் கூட ‘கண் சிவந்தால் தான் மண் சிவக்கும்’ என்று பாடமெடுப்பவர்களாக தெரிந்தார்கள். அவனது தோழர்கள் குழுவிலிருந்த இரண்டு பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்பதற்காக மார்பு கச்சையே அணிய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காணும் போது தோள்களினால் இடித்து வணக்கம் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினாலும் வேழினியை ‘தோழர்’ என்றே தமிழில் அழைத்தார்கள். அந்தச் சொல்லுக்காகவே ஏதாவது செய்து தன்னை தோழராக நிரூபிக்க வேண்டும் என்று கலவரப்பட்டுக் கொண்டிருந்தாள் வேழினி. இலங்கைக்காரனுக்கும் அவனது புரட்சிக் குழுவுக்கும் ஒரேயடியாக தன்மீது மதிப்பு வர வைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கரிசனைப்பட்டாள்.

ஒரு நாளிரவு மெல்பேர்னிலிருந்து இருநூறு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற்கரைக் கிராமம் ஒன்றில் எல்லோருமாக சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இரவான பிறகு கரையிலிருந்த காடொன்றுக்குள் நுழைந்து, நெருப்புமூட்டி சுற்றிவர இருந்து பன்றி இறைச்சியை சுடத் தொடங்கினார்கள். கால்களை மடித்து கைகளால் கட்டியபடி நெருப்பில் நெளிந்து கொண்டிருக்கும் பன்றி இறைச்சியைப் பார்த்து நாவூறியபடியிருந்தார்கள். வேழினியை தங்களுக்குள் ஒருவராக அணைத்துக் கொள்வதற்காக பரஸ்பரம் தங்கள் கதைகளை சொல்லத் தொடங்கினார்கள். எல்லோரும் குடும்பமென்ற கட்டமைப்பின் மீது மிகப்பெரிய ஒவ்வாமையுடன் அதைவிட்டு வெளியேறியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அதன்பிறகு சமூகமும் கூட ஒவ்வாமையாக தெரியத் தொடங்கியிருந்தது. சமூகக் கட்டமைப்புகள் கொண்டிருக்கின்ற புத்திசாலித்தனமாக பாவனைகள் அனைத்தும் போலி என்றும் அவற்றை பின்பற்றுகின்றவர்கள் எவரும் தங்களின் பிரியத்துக்குரியவர்கள் இல்லை என்றும் திரும்பத் திரும்ப கூறினார்கள். இரத்தம் கொதிக்க திட்டினார்கள். அவர்களின் வாயில் கெட்ட வார்த்தைகள் பன்றியை எரித்துக் கொண்டிருக்கும் தீ போல கொழுந்துவிட்டெரிந்தது.

அடுத்தடுத்த வாரங்களில் வேழினி வேலையை முடித்துக்கொண்டு நேரடியாக இலங்கைக்காரனின் அறைக்கே சென்று தங்கத் தொடங்கினாள். வேழினி கருவுற்றிருப்பதை கேட்டவுடன் இலங்கைக்காரன் மீன்குஞ்சு போல துள்ளிக் குதித்தான். ‘இந்த நாட்டில் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதற்கு ஒரு போராளி பிறக்கப் போகிறான்’ என்று நெஞ்சிலடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்து கூவினான்.

கர்ப்பவதியாகவே வேழினி மெல்பேர்ன் நகரில் நடந்த போரட்டங்களில் முன்னுக்குப் போய் நின்று உரத்த குரலெடுத்து கத்தினாள். நகரின் மத்தியில் வேலைக்கு போகிறவர்களும் பொலீஸ்காரர்களும் கூட வேழினிக்காவே அந்தப் போராட்டத்தைப் பரிவோடு பார்த்தார்கள். ஒவ்வொரு வார விடுமுறைகளின் போதும் கொடிகளின் நிறங்கள் மாறினவே தவிர, ஏதாவதொரு நாட்டுக்கான உரிமைப் போராட்டம் நகர் மையசதுக்கத்தின் அமைதியை கிழித்துக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் உள்நாட்டில் கட்சிகளுக்கு எதிரான போராட்டங்களாகவும் கட்சிக்காரர்களின் படங்களை எடுத்துவந்து கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களாகவும் அவை நடந்து முடிந்தன.

ஒருநாள் அதிகாலை கிழக்கு மெல்பேர்ன் பிரதேசத்தில் அமைந்துள்ள றோவில் அரச ஆஸ்பத்திரியில் வேழினி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த உயிர்க்குஞ்சு வெளியில் வந்து விழுந்ததைப் பார்த்தபோது இலங்கைக்காரனுக்குள்ளிருந்த புரட்சியெண்ணங்கள் அனைத்தும் ஒருகணம் கரைந்து வழிந்தோடின. அகல விரிந்து சிரித்த கண்களோடு செவிலியாள் தூக்கிக் கொடுத்த தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபோது அவன் நடுங்கிப் போனான். விட்டுச்சென்ற தன்னுடலின் பகுதியொன்று மீட்டும் ஒட்டிக்கொண்டது போல இறுக்கி அணைத்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. கைகளின் வழியாக அந்தச் சிறிய உயிர் கசியும் மொழியை புரிந்தவனாக மூடியிருந்த அதன் பிஞ்சுக் கண்களைப் பார்த்துச் சிரித்தான். வேழினி எல்லாவற்றையும் பார்த்து ரசித்தாள்.

இலங்கைக்காரனின் தோழர்கள் விடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தார்கள். தங்கள் தோழரின் குழந்தையைப் பார்த்து ஆக்ரோஷமாக ஆளுக்காள் கைகளை அடித்தார்கள். அதிலொருத்தி இலங்கைக்காரனின் ஆணுடம்பைத் தட்டி ‘வாழ்த்துகள்’ என்றாள். வேழினி சிரித்தாள். பெரிதாக சத்தம் போடக்கூடாது என்று செவிலியாள் சிரித்தபடி சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு வெளியே போனாள்.

அந்தக் கூட்டத்துக்கு முதல்தடவையாக தாய்மையுணர்வோடு ஒருத்தி வந்து சேர்ந்திக்கிறாள். அது அவர்களுக்கு பெரியதொரு அந்தரத்தை கொடுத்தது. வேழினியை எப்படி அணைத்துக் கொள்வது என்பதைக் கூட சிலவேளைகளில் புரியாதவர்களாகவே கைகளைத் தட்டிக்கொண்டார்கள். சிலர் இப்போதும் அவள் நிலை புரியாமல் தோளைத் தோளால் இடிக்கப் போனார்கள். அவையெல்லாம் வேழினிக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

ஊருக்கு அழைப்பெடுத்து தாயிற்கு சொன்னபோது சத்தியராணி சந்தோஷம் என்றாள். வேழினி ஆஸ்திரேலியா வந்தவுடனேயே ஹங்கேரிக்காரனை சத்தியராணி கைகழுவி விட்டிருந்தாள். கோமேதகம் பாட்டியோடு இதைப்பற்றி பேசினால் கவலைப்படுவாள் என்ற காரணத்தினால் குழந்தையைப் பற்றி மாத்திரம் வேழினி சிரித்து சிரித்து பேசினாள். கோமேதகமும் வேழினியோடு பேசும்போது, விட்ட வாழ்வை திரும்பப் பிடித்தது போன்ற மகிழ்ச்சியோடு முகத்தின் சுருங்கிய தசைகள் அனைத்தும் நடுநடுங்க குதூகலித்தாள்.

ஒருநாள் நள்ளிரவு லண்டனிலிருந்து வந்த அழைப்பில் வேழினியின் பெயர் விவரங்களை கேட்டு ஒரு பொலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். அதன்பிறகு, அவளது தாய் சத்தியராணி பாலமொன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துவிட்ட செய்தியை கூறினார்.

குழந்தையை அணைத்தபடி படுத்திருந்தவள் துள்ளியெழுந்து விறாந்தைக்கு ஓடினாள். இரவுடையின் ஒரு நுனியை இழுத்துப் பிடித்துக்கொண்டு வாயைப் பொத்தியவாறு வீரிட்டு அழுதாள். இலங்கைக்காரன் எழுந்து பின்னாலேயே ஓடினான். தொலைபேசி உரையாடல் முடிவடைந்து அது நழுவி தன்பாட்டுக்கு கீழே விழுந்தது. முன் சோபாவில் அப்படியே விழுந்து குழறத் தொடங்கினாள் வேழினி.

சத்தம் கேட்டு எழுந்த குழந்தை உள்ளே வீரிட்டது. ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிய இலங்கைக்காரன் வேழினியை ஒருகையால் அணைத்தபடி தேற்றினான். அவனது நெஞ்சிலே முகம் புதைத்து அழுதபடியிருந்தாள். தாயோடு பெரிதாக அவளுக்கு ஒட்டில்லையென்றாலும் இனி தனக்கு தாயென்றொருத்தி இல்லை என்ற உணர்வு அவளுக்குள் அநாதையான உணர்வொன்றினால் ஓங்கியடித்தது. இரவில் வந்த அழைப்பென்றபடியால் இன்னும் பயத்தைக் கூட்டிவிட்டது. இயல்புநிலையை அடைவதற்கு அதிக நேரமெடுத்தது.

மறுநாளே லண்டனுக்கு டிக்கெட் எடுத்து குடும்பமாக போவதற்கு ஆயத்தங்களை செய்த போதுதான் இலங்கைக்காரன் லண்டன் போவதற்கு விஸா எடுக்க முடியாத அகதியாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது வேழினிக்குத் தெரிந்தது. குழந்தையோடு தனியாக லண்டன் போவதா? போகத்தான் வேண்டும்.

லண்டனுக்கு போய் தாயின் இறுதிக் கிரியைகளை முடித்துக்கொண்டு கோமேதக கிழவியையும் அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தாள் வேழினி.

கிழவிக்கு தனது வாழ்க்கை இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்று அந்தரத்தில் அலைந்து கொண்டிருப்பது போலிருந்தது. ஆனால், தன்னுடலில் இரண்டு உடல்கள் மீண்டும் ஒட்டிக்கொண்டது போல உற்சாகம் கரைபுரண்டது. புது தேசத்தில் புகுந்துகொண்ட உணர்வு ஆயுள் கடிகாரத்தை அவளுக்குள் முறுக்கிவிட்டிருந்தது. லண்டனை விட அதிக சுறுசுறுப்பு உடலில் நுழைந்துகொண்டது.

இலங்கைக்காரனை பார்க்கும்போதெல்லாம் கோமேதகத்துக்கு தும்பளை ஞாபகம் துரத்திக் கொண்டேயிருந்தது. அவனைத் தன் பேத்தியின் துணையாகப் பார்ப்பதை விடவும் தனது ஊர்க்காரனாகப் பார்ப்பதே கோமேதகத்துக்கு பிடித்திருந்தது. அவனுக்கு தேனீர் போட்டுக் கொடுத்தால் கூட குடித்து முடிந்து குவளையை வாங்கும்போது தாடியைத் தடவி விடுவாள்.

குழந்தை பிறந்து சில நாட்களிலேயே புரட்சியணி கொஞ்சம் கொஞ்சமாக பழைய மாதிரி வீட்டுக்குள் நுழையத் தொடங்கியது. குழந்தைக்கு ஹில்டா என்று பெயரிடலாம் என்றார்கள். ஒருத்தி தாமரா என்றாள். அவர்களோடு சேர்ந்து உலகின் புரட்சியாளர்கள் பலரின் காதலிகளும் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்பது வேழினிக்கு பிறகு தான் விளங்கியது. தன் குழந்தையின் மீது அவர்கள் கொண்ட பிரியம் அவளுக்குப் புதிதாக இருந்தது. எல்லோருக்குள்ளும் பெண்மையிருப்பது ஒரு குழந்தையின் அருகில் ஊர்ஜிதமாவதை கண்கூடாகப் பார்த்தாள்.

எல்லாவற்றையும் கோமேதக கிழவி கதவோரங்களில் நின்று பார்ப்பாள். அவர்கள் பேசுவது எதுவும் புரிவதில்லை. இரண்டொரு வார்த்தைகள் புரிந்தாலும் அவர்களின் பலத்த சிரிப்பொலிகள் அவற்றின் மீது விழுந்து குழப்பிவிடும். குழந்தைக்கு பால் கரைத்துக் கொடுப்பதற்கும் தூக்கமானால் உள்ளே தூக்கி வந்து வளர்த்துவதற்கும் மாத்திரம் அவர்களின் முன்பாக போவாள். அவர்கள் எல்லோரும் குழந்தையைப் போலவே கோமேதகத்தையும் கிள்ளி விளையாடுவார்கள். வெட்கம் கொப்பளிக்க குழந்தையோடு உள்ளே வந்துவிடுவாள்.

குழந்தைக்கு மெரீட்டா என்று பெயரிட்டார்கள்.

கோமேதகம் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரி. மகளே போய் சேர்ந்துவிட்ட அவளின் வாழ்க்கையில் பூட்டப்பிள்ளையையும் கண்டிருக்கிறாள் என்றாள் எவ்வளவு கொடுத்து வைத்தவள்.

வேழினியைப் போலவே மெரீட்டாவும் தமிழை மிகவும் விரும்பினாள். பால் கரைத்துத் தந்த கோமேதகம் பாட்டியம்மாவையும் அதேயளவு விரும்பினாள். தமிழைக் கொஞ்ச முடியாத காரணத்தினால் பூட்டியை எந்நேரமும் கொஞ்சிக்கொண்டிருந்தாள். பல் இல்லாத வாய்களினால் இருவரும் முத்தமிட்டுச் சிரிப்பதும் தவழ்ந்து விளையாடுவதுமாக வீட்டுக்குள் உற்சாகமாக இருக்க, வேழினி பெரிய பொறுப்பொன்று நீங்கியவளாக மீண்டும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் போகத் தொடங்கியிருந்தாள்.

வேழினியின் மீட்சி அவளது அணிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. குடும்பமென்பது தங்களின் குறிக்கோளுக்கு இடைஞ்சலாக இராது என்பதை வேழினி கற்றுத் தந்துவிட்டாள். மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறாள் என்று பூரித்துப் போனார்கள் புரட்சிக்குழுவினர். வேழினி முன்னுக்கு நிற்கும் தற்போதைய ஆர்ப்பாட்டங்களில் அனைவரது குரல்களுக்கும் புதிய சக்தி கிடைத்தது.

பதினைந்து வயதாகிய மெரீட்டா இரண்டு தடவைகள் கோமேதகத்தை அதிர்ச்சியடைய செய்திருந்தாள். ஒன்று அவள் ஒன்பது வயதிலேயே பெரியவளாகியது. இரண்டாது பத்தாவது வயதில், வேழினியைப் போலவே, ஒரு நாள் பற்குணத்தை பற்றி விசாரித்தது. அவள் அந்தக் கேள்வியை கேட்ட போது உள்ளி இடித்துக்கொண்டிருந்த கோதேகம் பதற்றத்தில் கையை நசுக்கி விட்டாள். அவளால் அதனை மறக்கவே முடியவில்லை.

பிறகொரு நாள் மெரீட்டா தாயிடம் சென்று சத்தியராணியைப் பற்றி விசாரித்ததாக கோமேதகத்திடம் வேழினி சொல்லியிருந்தாள். வேழினி முதல்தடவையாக சத்தியராணிக்கு என்ன நடந்தது என்பதை முழுமையாக மெரீட்டாவுக்கு சொன்னதாக கோமேதகத்திடம் கூறினாள்.

“சின்னப் பிள்ளையளுக்கு பழைய விஷயங்கள ஏனம்மா சொல்லி மனசை காயப்படுத்திறாய்? அதெல்லாம் எப்பவோ முடிஞ்ச காரியங்கள்” என்று தன்னையும் வேழினியையும் சேர்த்து ஆற்றுப்படுத்தினாள் கோமேதகம். வேழினியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவளின் முகபாவனையிலேயே தெரிந்தது. ஆனால், கோமேதகத்தை காயப்படுத்த வேழினி விரும்பவில்லை. ஆகவே பேத்தியாருடன் கதையைத் தொடரவில்லை.

வேழினியைப் பொறுத்தவரைக்கும் தனது வாழ்விலும் தனது தாயின் வாழ்விலும் நடந்த எல்லா சம்பவங்களும் மகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்பினாள். தன்னுடைய வாழ்க்கை முதற்கொண்டு கோமேதகம் சொன்ன கதைகள் வரைக்கும் அனைத்தும் மெரீட்டாவுக்கு தெரிந்திருப்பது தான் தான் கடந்து செல்கின்ற வாழ்வின் முழுமையென்று நம்பினாள்.

மூன்று வருடங்களில் மெரீட்டாவும் வேழினியோடு சேர்ந்து போராட்டங்களுக்கு செல்லத் தொடங்கினாள். புரட்சி அணி துள்ளிக் குதித்தது. இலங்கைக்காரனை அள்ளியெறிந்து அன்பு முத்தம் கொடுத்தார்கள். தனது மகளையே தங்களது போராட்டத்துக்கு தந்த வீரத் தந்தை என்று மெச்சினார்கள். வேழினியை தங்களது அணியின் புதிய தலைவியாக பார்க்கத் தொடங்கினார்கள். சொல்லாலும் செயலாலும் பின்னிப்பிணைந்த பெருந்தலைவியாக வணங்கினார்கள்.

தன் தாயிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தினால் வந்தது என்ற உண்மை மெரீட்டாவுக்கு ஒவ்வொரு போராட்டங்களுக்கு சென்று வருகின்றபோதும் மனிதில் மேலும் மேலும் ஆழமாக வேர் விட்டுக்கொண்டு சென்றது. எம்மை உறுத்திக் கொண்டிருக்கும் எதையும் எதிர்ப்பின் மூலம் மாத்திரமே களைய முடியும் என்ற உணர்வு அவளிலிருந்து பிரிக்க முடியாத திரவ உயிராக உடலெங்கும் பரந்தோடி கலந்துவிட்டிருந்தது. சின்னச் சின்ன விடயங்களையும் எதிர்ப்பின் மூலம் சாதிப்பதை ஒரு சாகசமாக பழகத் தொடங்கினாள். அதன் மூலம் கிடைக்கின்ற வெற்றி அவளுக்கு போதை போல உடலில் ஊறத் தொடங்கியது.

வேழினியை விட அதி தீவிரத்தோடு பாயும் தோட்டாவாக கூர்மையடையத் தொடங்கிய மெரீட்டாவின் வளர்ச்சி புரட்சி அணிக்கு பிரமிப்பை கொடுத்தது. புரட்சி அணியினரில் பலரும் இப்போது வயதானவர்களாக மாறத் தொடங்கியதால் இயல்பான பலவீனங்கள் அவர்களின் உடலிலும் குரலிலும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தன. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுவாகத்தானிருந்தது. இந்த இடைவெளியை தனியொருத்தியாக மெரீட்டா நிரப்பத் தொடங்கினாள். பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஒழுங்குசெய்யும் கூட்டங்களில் போர்க்குணம் கொண்ட புலியாக சென்று உறுமிவிட்டு வந்தாள். வேழினிக்கு கிடைத்ததை விட பலமடங்கு கரகோஷம் அவளுக்கு கிடைக்கத் தொடங்கியது. அவளுக்கு பின்னால் பெரும்படையே திரளத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவில் அதிகாரத் தரப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பெண்ணுரிமை ஊர்வலங்கள், மீ டூ போராட்டம் என்று எதுவென்றாலும் அங்கே மெரீட்டா தான் பிரதான பேச்சாளர். இரத்தத்தைச் சுண்டி விட்டதுபோல அவள் மேடையில் பேசுகின்ற பேச்சும் அவள் குரலும் கேட்பவர்களை அவளருகில் கொண்டுபோய் இருத்தியது.

ஒருநாள் மெல்பேர்ன் நகரின் மத்தியில் ஒழுங்குசெய்த பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்ட தொழிலாளர் பேரணியை முடித்துக்கொண்டு தாயோடு காரில் வந்துகொண்டிருந்தபோது –

“உங்கட தாத்தாவுக்கு மாத்திரம் அந்த விபத்து நடந்திருக்காவிட்டால் அம்மம்மா செத்திருக்க மாட்டா இல்லம்மா” – என்றாள் மெரீட்டா.

வேழினிக்கு ஒரு செக்கன் கார் பின்னோக்கிப் போவது போலிருந்தது. பற்குணம் தாத்தாவின் சாவைப் பற்றி ஏன் இவள் தாயின் தற்கொலையோடு கொண்டு வந்து தொடர்புபடுத்துகிறாள்?

குழப்பத்தோடு அவளின் கேள்வியை மீண்டும் தனது வாயால் உச்சரித்துப் பார்ப்பதற்கு ஆரம்பித்த போது –

“பூட்டியம்மா கூட இத்தனை வருஷமா தனியக் கிடந்து கஷ்டப்பட்டிருக்க மாட்டா” – என்றாள்.

“……..”

“இது எல்லாத்துக்கும் காரணம் அந்த மனுசன் தான்”

“யார்…..”

“ஊரில் முந்தி பெரிய வியாபாரி எண்டு சொன்னியள்”

“விளங்கிற மாதிரி சொல்லன் மெரீட்டா”

“ஆறுமுகசாமி”

வேழினி காரை கரையாக நிறுத்தினாள். நெத்தியை இரண்டு விரல்களினால் அழுத்தியபடி குனிந்தாள்.

“உங்களுக்கு இதுநாள் வரைக்கும் இதுபற்றி ஒருநாள்கூட தோன்றினதில்லையாம்மா? யோசிச்சுப் பாருங்கோ, எங்கட குடும்பம் ஒவ்வொன்றாக சிதறிக் கொண்டு போகத் தொடங்கி, உங்கட அண்ணா போதைப் பொருளுக்கு அடிமையாகி அநாதையாக அடிபட்டு செத்து, அதுக்குப் பிறகு உங்கட அம்மா செத்து, குடும்பம் மொத்தமாக சீரழிஞ்சு போனதுக்கு ஆரம்பக் காரணம் அந்த விபத்து தான்”

அதற்குப் பிறகும் மெரீட்டா பேசிக்கொண்டே போனாள். அவளுக்கு முன்னால் பெரிய கூட்டமொன்று இருப்பதற்கு பதிலாக வேழினி இருந்து கொண்டிருந்தாள். அந்தப் பல நூற்றுக்கணக்கானவர்கள் கேட்க வேண்டிய பேச்சை தனியொருத்தியாக வேழினி கேட்டாள். மெரீட்டாவுக்கு சொல்வதற்கு அவளிடம் பல இடங்களில் பதிலில்லை, என்றாலும் ஆங்காங்கே சில இடங்களில் குறுக்கிட முயன்றாள். ஆனால், அதனைச் சொல்வதற்கு எங்குமே மெரீட்டா இடைவெளி கொடுக்கவில்லை. தான் சொல்லப்போகும் பதில்கள் அவளுக்கு வேறு பக்கத்தைக் காண்பிக்கும் என்று வேழினியும் நம்பவில்லை.

மெரீட்டா பேசி முடித்த பிறகு அமைதியாக காரை ஸ்டார்ட் செய்துகொண்டு வீட்டை நோக்கிப் போனாள் வேழினி.

வீட்டில் காரை விட்டு இறங்கும் போது, “எனக்கு ஒன்றுவிடாமல் நடந்தது எல்லாம் தெரியும் அம்மா. நீங்கள் சொன்னது – சொல்லாதது எல்லாம். இதை நான் சும்மா விட மாட்டன்” – என்றாள் மெரீட்டா.

அடுத்தடுத்த வாரங்கள் மெரீட்டாவுக்கு மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்த மாணவர் அமைப்பு பயிற்சி பட்டறையொன்றில் பேச வேண்டியவையாக கழிந்தன.

அதற்கு அடுத்த மாதம் முதல்கிழமை தாய் வீட்டில் இல்லாத சமயம், கோமேதகத்தையும் கூட்டிக் கொண்டு பொலீஸ் நிலையத்துக்குப் போனாள் மெரீட்டா. வெளியில் போகப் போவதென்றவுடன் கோமேதகத்துக்கு நல்ல உற்சாகம். குளிருக்கு ஒரு ஜம்பரை எடுத்து, உடுத்தின சேலைக்கு மேலால் போட்டுக்கொண்டு குழந்தை போல காரில் போய் ஏறிக்கொண்டாள்.

ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருந்த ஆவணங்களில் பொலீஸ் நிலைய வாசலில் வைத்து கோமேதகத்தை கையொப்பமிடச் சொன்னாள். கோமேதகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், பூட்டிக்காரி வைக்கச் சொன்ன இடங்களில் நடுங்கிய விரல்களினால் ஆறுதலாக தன் பெயரை வரைந்து கொடுத்தாள்.

உள்ளே அழைத்துச் சென்ற மெரீட்டா தனது பூட்டிக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லி, அவள் சொல்வதை தான் மொழிபெயர்ப்பதாக உத்தியோகத்தருக்கு சொல்ல, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அந்தச் சந்திப்பினை ஒரு அறையில் அழைத்துச் சென்று ஆரம்பித்தார்கள் பொலீஸார். பதிவுசெய்யும் கருவியில் நேரம் ஆரம்பமானது.

பொலீஸ் சந்திப்பு முடிந்து காருக்குள் வந்து ஏறும்போது –

“ஏனம்மா பழைய கதையள அவங்களிட்ட போய் சொல்லுவான். அது உனக்கு சின்னபிள்ளையில சொன்ன கதையள் மெரீட்டா” – என்று அச்சம் தோய்ந்த கெஞ்சிய குரலோடு மெரீட்டாவின் முகத்தைப் பார்த்தாள் கோமேதகம்.

“அதொண்டும் இல்ல, எல்லாம் உங்கட நல்லதுக்குத் தான்” – என்று பூட்டியின் இருக்கைப் பட்டியை இழுத்து பூட்டிவிட்டாள்.

பொலீஸ் நிலையத்துக்கு கோமேதகத்தோடு போய்வந்த செய்தியை கேட்டவுடனேயே ஏதோ நடந்திருக்கிறது என்று வேழினிக்குத் தெரிந்தது. ஆனால், என்ன நடக்கிறது என்று பேத்தியாரிடம் கேட்டால் விளக்கம் கிடைக்காது, மகளிடம் கேட்டால் பதில் கிடைக்காது என்ற காரணத்தினால் இரவு புருஷனை உருட்டத்தொடங்கினாள். அவன் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

கோமேதகத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய பொலீஸாரினால் தும்பளை ஆறுமுகசாமிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

திருமதி பற்குணம் கோமேதகம் என்பவர் அவரது சொந்த ஊரான தும்பளையில் தனது 38ஆவது வயதில் உணவுத் தேவைக்காக வீட்டுக்கு அருகிலிருந்த கடைக்கு சென்று கொண்டிருந்த போது தும்பளைஆறுமுகசாமி என்ற பெயருடையவர் தன்னிடம் உணவுப் பொருட்களிருப்பதாக கூறி திருமதி கோமேதகத்தை தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அவ்வாறு வீட்டுக்குள் சென்ற திருமதி பற்குணம் கோமேதகத்திற்கு திரு. தும்பளைஆறுமுகசாமி தனது ஆணுடம்பைக் காண்பித்திருக்கிறார். 

இந்தப் பாலியல் தாக்குதல் காரணமாக உடனடியாகவே வீட்டுக்கு ஓடிவந்த திருமதி. பற்குணம் கோமேதகம் அந்த ஊரில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறி லண்டனுக்குச் சென்று மகளோடு அடைக்கலமடைந்துள்ளார். தனது தாயாருக்கு ஏற்பட்ட இந்த மன உளைச்சல் காரணமாக மகளும் வாழ்க்கையின் விரக்திக்கு சென்றுள்ளார். அவளால் கவனிக்கப்படாத மகன் போதைக்கு அடிமையாகி மரணிக்க, அதன் பின்னர் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 ஆரம்பத்திலேயே முறைப்படி பதிவுசெய்யப்படாத இந்தக் குற்றம் ஒரு குடும்பத்தை முற்றாக சிதைத்திருக்கிறது. இரண்டு உயிர்களைக் காவுகொண்டிருக்கிறது. 

திரு. தும்பளைஆறுமுகசாமி வேறுயாரிடமெல்லாம் இவ்வாறு நடந்துகொண்டார் என்கின்ற விவரத்தை இலங்கை நீதித்துறை தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய பிரஜையாகிய திருமதி. பற்குணம் கோமேதகத்திற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

– என்று ஆஸ்திரேலிய பொலீஸார் தயாரித்த குற்றப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டதுடன் இதனை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய திகதியையும் கோரியிருந்தனர்.

சிறிலங்காவில் அப்போது தான் தேர்தல் முடிவடைந்து ஆட்சிபீடமேறியிருந்த அரசாங்கத்தில் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஏகாந்த பண்டார ஒரு போயா தினத்தன்று அவசர ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டினார்.

ஆஸ்திரேலிய சமஷ்டி பொலீஸாரிடமிருந்து தங்களுக்கு கிடைத்த தகவல் பற்றி முழுதாக கடிதத்தை வாசித்துக்காட்டி எல்லோருக்கும் விளங்கப்படுத்தினார்.

சிறிலங்காவின் நீதித் துறையானது ஜனநாயகத்தின் விழுமியங்களை உயர்நிலையில் வைத்துப் பேணுவது. ஓவ்வொரு குடிமகனதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதில் சர்வதேச சட்டங்களுக்கு இணையாக செயற்படுவது. மத ரீதியாகவும் கூட வன்முறைகளை வெறுப்பது. இப்படிப்பட்டதொரு புனித தேசத்தில் பாலியல் தாக்குதல்களை அறவே அனுமதிக்க முடியாது. 

 பெண்ணொருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பாரதூரமான குற்றத்தின் மீதான நீதி விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்கு குறிப்பிட்ட நபரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு மாண்புமிகு ஜனாதிபதி முடிவெடுத்திருக்கிறார். இந்த விசேட ஏற்பாட்டுக்கு நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது

– என்று கூறி மூடித்துவிட்டு முன்னுக்கிருந்த தண்ணீர் போத்தலை திறந்து குடித்தார்.

“யாராவது கேள்விகள்?”

“இலங்கையிலிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றமெனப்படுவதை தற்போது ஆஸ்திரேலியாவிலிருக்கும் 83 வயது பெண் முறைப்பாடு செய்தமைக்காக சிறிலங்கா பிரஜையான தும்பளை ஆறுமுகசாமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி விசாரிக்கவேண்டும் என்பது என்ன நியாயம்?”

ரெனோலட் போனாவை முகத்துக்கு முன்னால் ஆட்டி ஆட்டி மிக முக்கியமான கேள்வியொன்றை முன்வைத்தார் ஊடகவியலாளர் சேதுராமன்.

“பாலியல் குற்றங்களுக்கு எதிராக திருத்தப்பட்ட சர்வதேச சட்டத்தின் விசேட உறுப்புரையில் அதற்கான இடமுண்டு என்பதை இரண்டு நாட்டு சட்ட அதிபர்களும் உறுதிசெய்திருக்கிறார்கள்” – என்று ஒரே வரியில் பதிலை முடித்தார் ஏகாந்த பண்டார.

“வேறு கேள்விகள்?” – என்று தலையைத் தூக்கிப்பார்த்து கேட்டுவிட்டு மாநாட்டை முடித்துக் கொண்டார். மாநாட்டில் கலந்துகொண்ட கொழும்புக்கான ஆஸ்திரேலிய தூதுவராலய அதிகாரி சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறிவிட்டு பண்டாரவுடன் எழுந்துபோனார்.

தொண்ணூற்றெட்டு வயதானா தும்பளை ஆறுமுகசாமியின் மனைவி இறந்து எட்டு வருடங்களாகின்றன. தும்பு வியாபாரத்திலிருந்து காலத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றாக மாறி மாறி கயிறு வியாபாரியாகி கடைசியில் அதனை மகனிடம் கொடுக்க அவனது கவனயீனத்தினால் வியாபாரம் முற்றாகவே அறுந்துவிட்டது.

இப்போது தனியொரு வீட்டில் ஆறு மணியானால் எழுந்துபோய் விளக்கை போடக்கூடிய உடல்வலுவோடு மாத்திரம் வாழ்ந்து வந்தார் ஆறுமுகசாமி. அவ்வப்போது வாசல்படியில் வந்து நின்று முன் பனைமரக்காணியைப் பார்ப்பார். அதில் தற்போது இரண்டு மாடி ‘பான்ஸி பலஸ்’ ஒன்று எழுந்து நிற்கிறது. சுவிஸிலிருந்து வந்த பெரும் வர்த்தகர் ஒருவர் காணியையும் வாங்கி அதில் பெரிய முதலையும்போட்டு வியாபாரம் செய்துவருகிறார். ஆனால், ஆறுமுகசாமியின் கண்களுக்கு அந்த கட்டடம் இன்னமும் பனைமரம் போலவே தெரியும். காற்றுக்கு ஆடுவது போலவும் ஓலைகள் உரசி சத்தம் போடுவது போலவும் கேட்கும். வெளியில் ஒருநடைபோட்டு வரவேணும் போலிருக்கும். ஆனால், இருமல் ஒன்று வந்து உள்ளே போகுமாறு உத்தரவு கொடுக்க கட்டிலில் போய் சாய்ந்து விடுவார்.

கொழும்பிலிருந்து அன்றிரவு தும்பளை போய்ச்சேர்ந்த சிறிலங்கா பொலீஸாரின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பெரிய தம்பிரான் கோவிலடியில் விசாரித்துவிட்டு நேரடியாக கிராம சேவகர் கார்த்திகைச் செல்வனின் வீட்டைத் தேடிப் பிடித்தார்கள். அவரின் உதவியோடு ஆறுமுகசாமியின் வீட்டைக் கண்டுபிடித்து படலையை திறந்துகொண்டு உள்ளிட்டார்கள். ஆறுமுகசாமியை பலாலி விமான நிலையத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வந்து தந்தால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துப் போவதற்கு ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தது.

லைட்டு போட்ட வாகனங்களில் பலர் தன்னை அழைத்துப் போக வந்திருக்கிறார்கள் என்றவுடன் ஆறுமுகசாமி குதூகலமானார். வீட்டின் அயலில் இருந்தவர்களும் வீதியில் கூடிநின்று வேடிக்கை பார்த்தார்கள். ஆட்களே போகாத ஆறுமுகசாமி வீட்டுக்கு இவ்வளவு கூட்டமாக பொலீஸ் வந்திருப்பதைப் பார்ப்பதற்கு ஊர்மக்கள் முண்டியடித்தார்கள்.

கிராம சேவகர் கார்த்திகைச் செல்வன் வீட்டுக்குள் சென்று ஆஸ்திரேலியாவுக்கு வழக்கு விஷயமாக போக வேண்டும் என்று ஆறுமுகசாமிக்கு விளங்கப்படுத்தினார்.  ஆறுமுகசாமிக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால், எங்கேயோ போக வேண்டும் என்று புரிந்தது. அனுராதபுரத்தில் அந்தக் காலத்தில் வாங்கிப் போட்ட அதிர்ஷ்ட சேர்ட் ஒன்று வைத்திருந்தார். வெளியில் நல்ல காரியங்களுக்கு போகும்போது அதைத் தான் தவறாமல் போடுவார். அதனை எடுத்துப் போட்டார். கை குலுங்க குலுங்க வேட்டியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு கார்த்திகைச் செல்வனின் கையைப் பிடித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தார்.

எதையோ அனுங்கிய குரலில் சொன்னார். பொலீஸ் அதிகாரி ஒருவர் அருகில் சென்று அவரது வாயருகில் காதை வைத்து கேட்டார்.

“போகும்போது பனம்பாத்திய ஒருக்கா பாத்திட்டுப்போவமே” – என்றார்.

1 comment

Kasturi G October 16, 2021 - 8:17 pm

Simply reveting yarn spun with so much ease and events tightly knit together .
Fantastic talent & warm salutations to author P Deivegan. Good Luck
Thanks

Comments are closed.