அறிந்துணர்வில் யாவும் உள: ஜென் துறவி திக் நாட் ஹஞ்ச் நினைவுக்குறிப்பு

0 comment

‘டீச்சிங்ஸ் ஆஃப் லவ்’ எனும் நூலில் தன் மேலிருந்த பெருவெறுப்பால் வியட்நாம் அரசு ‘தே இறந்துவிட்டார்’ எனப் புரளி கிளப்பியதைப் பற்றி திக் நாட் ஹஞ்ச் எழுதுகிறார். ‘சில வருடங்களுக்கு முன்பு, அரசுச் சார்புக் குழுவொன்று நான் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஹோசிமின் நகரத்தில் வதந்தி பரப்பிற்று. நாடே நம்ப முடியாமல் குழம்பியது. பிற்பாடு பெளத்தப் பிக்குணி ஒருத்தி எனக்கொரு கடிதம் அனுப்பியிருந்தாள். எனது மரணச் செய்தியைக் கேட்டபோது துறவுக்கான ஆரம்ப வகுப்புகளைத் தனது பெளத்தப் பள்ளியில் நடத்திக்கொண்டிருந்தாளாம். துறவு மாணவருள் ஒருத்தி துக்கம் தாளாமல் அப்படியே மயங்கி விழுந்தாளாம். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பொருட்டும் கடந்த இருபதாண்டுகளாகத் தாயகம் நீத்து அகதியாகத் திரிந்தேன். தற்போதில் வாழும் வியட்நாமின் இளம் துறவிகளை நான் அறிந்திருக்கவில்லை.

‘வாழ்வும் இறப்பும் புனைவுதான், சகோதரி. ஆழமற்றது அது. எதற்கு அழுகிறாய் நீ? என்னைப் போலவே நீயும் பெளத்தம் பயில்கிறாய். எனவே, நீ உயிர்த்துள்ளாய் எனின் நானும்தான். இலதானது உளதாய் இருக்கவியலாது, உளதாய் இருப்பது இல்லாமலாகாது. இதை நீ உணர்ந்துள்ளாயா, சகோதரி? ஒரு நுண் தூசியைக்கூட ஒன்றுமற்றதிலிருந்து உளதாக்க நம்மால் இயலாதெனின் ஒரு மனிதனை அப்படி இல்லாமலாக்க முடியுமா? இப்புவியில் மானுட உரிமைக்கும் உலக அமைதிக்கும் சுதந்திரத்திற்கும் சமூக நீதிக்கும் போராடி மாய்ந்தோர் ஏராளம். ஆனால் ஒருவராலும் அவர்களை அழிக்க முடியவில்லை. அவர்கள் இங்கே இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

‘சகோதரி, ஏசு கிறிஸ்துவும் மகாத்மா காந்தியும் கிரிகோரி லம்பராக்கிஸும் (கிரேக்க அமைதிப் போராளி), மார்டின் லூதர் கிங் ஜுனியரும் இறந்தோரென்றா எண்ணுகிறாய்? நமது உடலணு ஒவ்வொன்றிலும் அவர்களை நாம் உவந்தேற்றுள்ளோம். இதுபோன்ற செய்தியை இனி நீ மீண்டும் கேட்க நேர்ந்தால் தயவுசெய்து புன்னகைத்துப் போ. உனது மாசற்ற புன்னகை மலையன்ன வீரத்தையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்தும். பெளத்தமும் மனுக்குலம் அனைத்தும் இதையே உன்னிடம் எதிர்பார்க்கிறது’.

இவ்வுரையில் அவரது பெளத்தத் துறவு வாழ்வையும் பெளத்தம் அவரது உள்ளார்ந்த வாழ்விதத்தோடு பின்னிப் பிணைந்திருந்ததையும் அறியலாம்.

மார்ட்டின் லூதர் கிங்குடன் திக் நாட் ஹஞ்ச்

சுமார் நூறாண்டு கால ஆலமரம். எத்தனையோ பறவைகள் தமது வீடென வாழ்ந்து போன மரம். மன அமைதி, அகவிழிப்பு, மெய்ஞானமெனத் தேடிவந்த வீடு. எல்லோருக்குமான சரணாலயமாய்த் திகழ்ந்த, அன்பர்களால் ‘தே’ என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட திக் நாட் ஹஞ்ச். அது வியட்நாமிய பெயர். பல நண்பர்களுக்கு நாவு வளைந்து கொடுக்காத அல்லது உச்சரிப்பது எப்படி எனும் தயக்கம் கொண்ட பெயர். 1926-ல் பிறந்தவரின் இயற்பெயர் நிகுயென் ஸுஆன் பாவோ.  

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘அகவிழிப்புநிலை’ (மைண்ட்ஃபுல்னஸ்) எனும் பெளத்த தியானப் புத்தகத்தின் மூலம் உலகம் முழுக்க அறியப்பட்டவர். கவிஞர், பேராசிரியர். வியட்நாமின் ஹியூ எனும் ஊரிலுள்ள து ஹியூ பெளத்த ஆலயத்தில் தனது பதினாறாவது வயதில் ஜென் துறவியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். 

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் பணியாற்றியவர். எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கா வியட்நாமில் போர் தொடுத்ததை அடுத்து தனது சக துறவிகள் அமெரிக்காவின் ஆதிக்க வன்செயலுக்கெதிராக ஆங்காங்கே பொது இடங்களில் தம்மைத் தவக்கோலத்தில் நடுத்தெருவில் நெருப்பேற்றி மாய்த்துக்கொண்டதைக் கண்டு பதறி அப்போருக்கு முடிவு காணும் பொருட்டு துறவினூடே ஒரு சமூகச் செயற்பாட்டாளராக மாறியவர். தவம், துறவு, சேவை இவற்றோடு சமூக, சூழியல் செயற்பாட்டில் இறங்கும்பொருட்டு ‘என்கேஜ்டு பெளத்தம்’ என்றதொரு கருத்தாக்கத்தைக் கொண்டுவந்தவர்.  

வடக்கும் தெற்குமாய் வியட்நாம் பிரிவுபட்டு அமெரிக்க ஊடுருவலால் அழிவுற்றிருந்த போதில் மார்டின் லூதரைச் சந்தித்து போரை நிறுத்தும்படி அமெரிக்காவை நிர்பந்திக்க முயன்றவர். அவரது பெளத்தப் பயிற்சியையும் தவ வலிமையையும் ஞானத் தெளிவையும் கண்டு லூதர் அவரை நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைத்தார். பிற்பாடு வியட்நாமில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு கடல்மூலம் அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுவதைத் தடுத்து அப்பெண்களைப் பாதுகாக்கும் பணியில் தீவிரப்பட்டவர். படகுகளில் காணாமல் போன பலரை மீட்டார். நாட்டு இளைஞர்களை ஒன்று திரட்டி அமைதி வழியில் போராடினார். ‘தயவுகூர்ந்து, எனது நிஜமான பெயர்கொண்டு எனை அழையுங்கள்’ என்று 1970-களில் எழுதிய கவிதை உலகப்புகழ் வாய்ந்தது.

ஆழ்ந்து நோக்கு

ஒவ்வொரு கணத்திலும் 

வசந்தகால மரக்கிளையில் மொட்டாக முகிழ்ப்பதை,

புதிய கூட்டில் மென்குறுங் குஞ்சென,

பூவொன்றின் ஆழத்தில் பட்டுப்புழுவென, 

பாறைக்குள் ஒளிந்திருக்கும் ஒளிர்கல்லென 

அச்சமுறவும் நம்பிக்கை கொள்ளவும், 

சிரிக்கவும் அழவுமென நான் வந்தடைகிறேன்.

என் இருதயத்தின் தாளகதியே 

உயிர்ப்புள்ள அனைத்தின் 

பிறப்பும் இறப்புமாம்.

நீர்ப்பரப்பின் மேல்புறத்தில் 

வளர்சிதை மாற்றத்திற்குள்ளாகும் தட்டான் நான்.

அத்தட்டானைக் கொத்தி விழுங்கப் பார்க்கும்  

பறவை நான்.

தெண்ணீர் குளத்தில் 

மகிழ்வோடு நீந்தும் அத்தவளை நான்.

அமைதிகாத்து அத்தவளையைக் கடிக்கும் 

பச்சைப் பாம்பு நான்.

மூங்கில் கால்களோடு 

எலும்பும் தோலுமான உகாண்டாவின் 

சிறுகுழந்தை நான்.

அழிவுக்குட்படுத்தும் 

ஆயுதத் தளவாடங்கள் விற்கும் 

வர்த்தகன் நான்.

கடற்கொள்ளையரால் வன்புணர்வுக்குள்ளாகி 

அகதிப் படகிலிருந்து கடலுக்குள் குதித்தழிந்த 

பதின்பருவப் பெண் நான்.

துயரை உணரவும் அன்பைச் சுரக்கத் 

திறனற்ற இதயம்கொண்ட 

கடற்கொள்ளையர் நான்.

ஏராளமாய் அதிகாரம் கைக்கொண்டுள்ள 

பொலிட்பீரோவின் பங்காளன் நான் 

கட்டாய வேலை சுமத்தும் ராணுவ முகாமில் 

தம்மக்களுக்கென ரத்தக் கடனை அடைத்து  

மெல்லச் சாகும் தொழிலாளி நான்.

வசந்தம் போன்றது என் களிப்பு

அதன் கதகதப்பு 

இப்பூமியின் அனைத்து பரப்பிலும் 

பூக்களை விரிக்கின்றது.

என் வலியின் கண்ணீர் ஆறு அகண்ட 

நான்கு சமுத்திரங்களை நிரப்புகிறது.

தயவுகூர்ந்து, எனது நிஜமான பெயர்கொண்டு 

எனை அழையுங்கள்.

அப்போதுதான் எனது அனைத்து 

அழுகைகளையும் சிரிப்புகளையும்

உடனுக்குடன் செவிமடுக்க இயலும். 

களிப்புகளையும் வலிகளையும்  

ஒன்றென பார்க்க முடியும்.

தயவுகூர்ந்து, எனது நிஜமான பெயர்கொண்டு 

எனை அழையுங்கள்.  

அப்போதுதான் என்னால் 

விழித்துக்கொள்ள இயலும்.

கருணை எனும் எனது இதயக் கதவு 

திறந்தே இருக்கும்.

இதற்கிடையில் தேச துரோகக் குற்றம் சுமத்தி அவரின் சொந்த நாடு அவரைப் புறக்கணிக்க, புகலிடம் தேடி பிரான்சில் தஞ்சம் புகுந்தார். நாற்பதாண்டுகளுக்குப் பிறகு 2008-ல் சொந்த மண்ணில் காலடி வைக்க அரசு ஒப்புக்கொள்ள, உலகிலிருந்து சுமார் நானூறு பயிற்சியாளர்களும் துறவிகளும் அவருடன் ஹோசிமின் நகரத்திற்குப் பயணித்தோம். ஹனோய் என்ற இடத்தில் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கிப் பயின்றோம். பத்து நாள் அகவிழிப்புப் பயிற்சியும் தீட்சையும் புதுப்பெயருமாய் உலகளவில் ஒன்றுகூடி கொண்டாடித் திரும்பினோம். இந்தியாவிலிருந்து சென்ற ஒரேயொருவன் என என்னிடம் அன்பு பாராட்டினார். முதல் நாள் பத்மாசனத்தில் சிலையென அமர்ந்து தியானிக்க பல ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்கள் யாவரோடும் ஒன்றாக உண்டு உறங்கி தியானம் பயின்று டாய் சீ செய்து களிப்பூறிய நாட்கள் அவை.

ஜென் பெளத்தத்தின் சித்த மாத்திரம் எனும் உட்பிரிவைச் சேர்ந்தவர் திக் நாட் ஹஞ்ச். துறவு தாண்டி சாமானியர்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் எளிய முறையில் படைப்பூக்கம் கொண்ட நுண்ணிய முறையில் தியானங்களைப் பயிற்றுவித்தவர். அவரது ஓல்ட் பாத் ஒயிட் க்ளவுட் எனும் புத்த சரிதையை அப்போது பாலிவுட் படமாக இயக்க முடிவானது. பின்னர் கைவிடப்பட்டது. அமைதியில் திகழ்தல் நூலும் அருமையானது. உனது பையில் ஒரு கூழாங்கல் எனும் சிறுவர் புத்தகமும்கூட. நோ டெத் நோ லைஃப், பீஸ் இஸ் எவ்ரி ஸ்டெப், நத்திங் டு டூ நோவேர் டு கோ, அண்டர்ஸ்டாண்டிங் அண்ட் ட்ரான்ஸ்பர்மேஷன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.  

சாமானியரும் துறவியரும் இணைந்த ‘ஆர்டர் ஆஃப் இன்டெர்பீயிங்’ எனும் இப்பிரபஞ்சத்தில் ஒன்றோடொன்றின் சார்புப் பண்பைக் குறிப்புணர்த்தும் பெயரில் உலகளவில் குழுவொன்றை ஏற்படுத்தினார். சார்புப்பண்பு பற்றிய நீண்ட கவிதையொன்றை எழுபதுகளில் எழுதியிருந்தார்.

பாறையாகவும் வாயுவாகவும் 

பனிப்படலமாகவும் மனமாகவும் 

பால்வீதியில் ஒளிவேகத்தில்

பயணிக்கும் நுண்ணணுத் துகள்களாகவும் 

இங்கே வந்திருக்கிறாய், என் இனியவளே.

ஆழ்த்தும் அழகுடன் உன் நீலவிழிகள் சுடர்கின்றன

தொடக்கமும் முடிவுமற்ற 

உனக்கான பாதையை அடியொற்றிப் போகிறாய்.

உன் வழிகளில் இங்கே ஆயிரக்கணக்கில்  

பிறப்பு இறப்புகளுக்குள்ளானாய் என்கிறாய்.

எண்ணற்ற முறை புறவெளியில்

நெருப்புப் புயலாக உருமாறியிருக்கிறாய்.

உனது சொந்த உடலைக் கொண்டு  

மலைகளின் ஆறுகளின் 

வயதைக் கணக்கிட்டிருக்கிறாய்.

நீயே மரங்கள், புற்கள், பட்டுப்பூச்சிகள், ஓரணு உயிரிகளாக 

பூக்களாகவும் பரிணமித்துள்ளாய்.

எனினும் இன்று காலை என்னை நோக்கினாய்

அந்த விழிகள் இதுகாறும் 

நான் இருந்ததேயில்லை என்கின்றன.

எனை வரவேற்கும் இக்கண்ணாமூச்சி விளையாட்டின் 

தொடக்கம் யாருமறியாதது.

அருமை பட்டுப்புழுவே, 

கடந்த கோடையில் முளைத்த 

அந்த ரோஜாக் கிளையின் நீளத்தை 

உனது உடலால் பவித்திரமுடன் அளவிடுகிறாய். 

இந்த வசந்ததில்தான் நீயே பிறந்தாய் என்று 

எல்லோரும் சொல்கிறார்கள், என் இனியவளே.

எவ்வளவு காலமாய் இங்கிருக்கிறாய்

என்று சொல்லெனக்கு.

உனது ஆழ்ந்த மௌனப் புன்னகையைச்  சுமந்தபடி 

உன்னைக் காணும் இக்கணம் வரையில் 

ஏன் காத்திருந்தாய் என்று சொல்லெனக்கு. 

அருமை பட்டுப்புழுவே, 

எனது ஒவ்வொரு வெளிமூச்சிலும் 

ஞாயிறுகளும் திங்கள்களும் விண்மீன்களும்

பாய்ந்தோடுகின்றன.

யாருக்குத் தெரியும் அழிவற்ற பெரும்பொருள் 

உனது துளியுடலில் கிடக்கிறதென்று? 

உனது உடலின் ஒவ்வொரு புள்ளியிலும் 

ஆயிரமாயிரம் புத்தவெளிகள் அமையப்பெற்றுள்ளன.

உனதுடலின் ஒவ்வொரு நீட்சி கொண்டு  

தொடக்கமும் முடிவுமற்ற காலத்தை நீ அளக்கிறாய்.

கழுகு மலையுச்சியில் 

எழிலார்ந்த சூரிய அஸ்தமனத்தைக் கண்ணுற்றபடி 

அம்முதிய மாபரதேசி கிடக்கிறான்.

கௌதமா, என்ன ஆச்சரியமிது!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் 

உடும்பரா பூக்கள் மலருமென்று யார் சொன்னது?

அழுந்தியெழும் அலையின் ஒலி 

செவிகளில் விழாமல் போகாது 

கூர்மையுடன் உற்றறிந்தால்!

இறுதிச்சடங்கு

எந்த நாட்டிலும் உலகின் எந்த மூலையிலும் நாலைந்து பேர் இணைந்து ஒரு தியானக் குழுவை அமைத்து பிரான்ஸிலுள்ள ப்ளம் வில்லேஜ் எனும் அவரது தலைமையக தியான மையத்தோடு இணைத்துக்கொள்ளலாம். அடிப்படைகளை மட்டும் கைக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படலாம். அது தவிர, சூழியல் பாதுகாப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, பூமி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், மரங்களைக் காத்தல் போன்ற களங்களில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட முயன்றார்.

கடைசியாக இந்தியாவுக்கு வந்த இரண்டாவது முறை நாக்பூரில் உள்ள நாகலோகாவில் ஒன்றாகத் தியானித்தோம். 2014-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வரை முழு அக்கறையுடன் செயல்பட்டவர். தமிழில் மொழியாக்கம் செய்த அவரது நூல்களை மொத்தமாகப் பிளம் வில்லேஜுக்கு அனுப்பினேன். அவரது மனம் பூரித்துப் போகும் என்றெண்ணி. ஆனால் அதற்குள் அவரது நிலைமை மோசமாகிப் போக தனது சொந்த ஊருக்கே கூட்டிச் செல்லப்பட்டார். உலகெங்கும் பயணித்து நடைத்தியானம் கற்றுத்தந்தவர். சக்கர நாற்காலியில் அமைந்திருந்தார். தொடர்ந்து பயிற்சியும் சொற்பொழிவும் தந்தவர் ஆழ்ந்த அமைதிக்குள்ளானார். தான் துறவைத் தொடங்கிய சிற்றூர் ஆலயத்திற்கே மீண்டும் போய்ச் சேர்ந்தார். குழந்தையாக வளர்ந்த இடத்திற்கு மீண்டும் குழந்தையாகவே திரும்பினார். மெய்ஞானம் மட்டுமே அப்போது அவரிடம் வசப்பட்டிருந்தது. யாரிடமும் அதைப் பகிர்ந்தளித்தார். பகிரப் பகிர இரட்டிப்பானது, மேன்மேலும் சுரந்தது. பெரும் ஞானச்சுனையாக அங்கேயே அடக்கமானார். இறுதிவரையில் அரசின் கண்காணிப்பிலேயேதான் அங்கு வாழ்ந்தார்.   

அகண்டு மேடேறிய முன்நெற்றி, அகல்விளக்கன்ன செவிமடல்கள், முன்பல் இடைவெளி, தெற்றிய புன்முறுவல், கூர்ந்த நோக்கு, மென்னடை, தணிந்து ஆழ்ந்தோடும் நடுங்கு குரல், செம்பழுப்புத் துறவங்கி போர்த்த சிற்றுடல் … மகான், சான்றோன், மெய்ஞானி.. எப்படி வேண்டுமானாலும் அழைக்கத் தகுதி வாய்ந்தவர். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் ஹியூ எனும் குக்கிராமத்தில் தனது வாழ்க்கையைத் துறவியாகத் தொடங்கி அவரது தவப்பயணத்தில் ஜென் பெளத்த தியானப் போதனைகளின் மூலம் எண்ணற்ற விழுதுகளை வளர்த்துப் பெருக்கியவர். அவை உலகெங்கிலும் செழித்து வருகின்றன. அவ்விழுதுகள் புத்தரோடு அவரது பெயரையும் ஒரு போதிசத்வராக ஏற்றுக் கொண்டாடும். அவரின் வழிகாட்டுதல் என்றுமுண்டு தேடுபவர்க்கு!

‘இத்தட்டு காலியாகிவிட்டது 

எனது பசியோ திருப்தி கொண்டது…

அனைத்துயிர்களின் பயனுக்கென்றே  

வாழ உறுதி கொள்கிறேன்’ 

ஒருமுறை தனது நண்பருக்கு எழுதிய குறிப்புரையை ‘த சன் த ஹார்ட்’ என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். ‘அறிவியலாளரான எனது நண்பர் முனைவர் பட்டம் பெற்று அறிவியலாய்வில் பல மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார். அவர் கவிஞர் என்பதால் சில சமயங்களில் அறிவியல்பூர்வமாகக் காரியங்களை நோக்க இயலாமல் போனார். மெய்யறிவுப் பாதையில் மேலும் குழம்பியவாரானார். அதையறிந்த அவருக்கு மென்பட்டுப் பரப்பில் நீரலைத் திரள்கொண்ட ஓவியமொன்றை அனுப்பினேன். ‘எப்போதும்போல, அலையொன்று அலையாகவே வாழ்கிறது. அதே நேரம், நீராகவும். நீ சுவாசிக்கையில், நம்மனைவருக்காகவும் சுவாசி’ என்று அதிலொரு குறிப்பை எழுதி வைத்தேன்.  

அவ்வாக்கியத்தை எழுதுகையில் அவருடைய கடிய காலப் பரப்பில் உதவவென நானும் அவருடன் நீந்தினேன். நல்வாய்ப்பாக எங்கள் இருவருக்கும் அம்முயற்சி உதவிற்று. பெரும்பாலும் மக்கள் தங்களை அலைகள் மட்டுமேயாகப் பார்க்கிறார்கள். அந்நீரும் தாங்களே என்பதை மறந்துவிடுகிறார்கள். பிறப்பு, இறப்பு என்ற வரையறையில் வாழ்கிறார்கள். பிறப்பும் இறப்பும் தாண்டிய இருப்பை மறந்துபோகிறார்கள். அலையொன்று நீரின் வாழ்வாகத் திகழ்கிறது. நாமும் பிறப்பும் இறப்பும் தாண்டிய இருப்பில் திகழ்கிறோம். அப்பேருண்மையை அறிவதே இக்கணத்தின் தேவை. அறிந்துணர்வதில்தான் எல்லாம் அடங்கியுள்ளது. அறிவதே மெய்ஞானம். மெய்ஞானமே அகவிழிப்பு. தியானத்தின் பேறு என்பது அவ்வொன்றே ஒன்றை அறிந்துணர்வதாம். “பிறப்பும் இறப்பும் நம்மை எந்த வழியிலும் ஒருக்காலும் தீண்டவியலாது” என்று. ஆம், அறிந்துணர்வு தாண்டி யாவுள?  

*

இங்கே தொகுக்கப்பட்டுள்ள தேர்வுசெய்த குறுங்கவிதைகள் மூலம் அவரது கவி மனதையும் அதன் வழி பெளத்த அகவிழிப்புநிலை பற்றியும் ஜென் கருத்தியலையும் நம்மால் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் இயலும்.

‘சின்னஞ்சிறு மலரே, உன்னை வெட்டிச் செல்லவா 

மண்ணின் விண்ணின் கொடையென?

அருமை போதிசத்வனே, நன்றியுனக்கு 

இவ்வாழ்வை அழகாக்கினாய்!’

*

‘மரணத்தை ஒருபோதும் அறியா

இக்கரம் யாருடையது?

கடந்தகாலம் பிறந்தவர்தான் யார்?

வருங்காலம் இறப்பவர்தான் யார்?’ 

*

‘என்னிரு கைகளில் இத்தேநீர் கோப்பை 

நிமிர்த்திப் பிடித்திருக்கிறது அகவிழிப்பு 

எனது உடலும் மனமும் 

இங்கே இத்தருணமதில் திகழ்கின்றன…’

*

‘உள்மூச்சில் இவ்வுடலை 

அமைதிப்படுத்துகிறேன் 

வெளிமூச்சில் நான் புன்னகைக்கிறேன் 

இத்தருணத்தில் வாசம் கொள்கிறேன் 

இக்கணம் அற்புதம் என்றறிகிறேன்!’ 

*

‘புதிதான இக்காய்கறிகளில் 

பசிய சூரியனைக் காண்கிறேன் 

அனைத்து தர்மங்களும் ஒன்றிணைந்து

உயிர்களைச் சாத்தியமாக்குகின்றன’  

*

‘இவ்வுடையை அணிகையில் 

இதைத் தயாரித்தோருக்கு நன்றி சொல்கிறேன் 

உற்பத்தி செய்ய உதவிய உயிர்ப்பொருட்களுக்கும்.

இவ்வுலகில் யாவருக்கும் போதிய உடுப்புகள் கிடைக்க விழைகிறேன்’ 

*

‘பத்துப்பாத்திரங்களைத் தேய்ப்பது

குழந்தை புத்தனை குளிப்பாட்டுவது போன்றது 

மாசுக்களே புனிதம் கொள்பவை  

சாதாரண மனமே புத்த மனம்’  

*

‘பூமி நமக்கு உயிர்கொடுக்கிறது 

நம்மை ஊட்டப்படுத்துகிறது 

பூமி மீண்டும் நம்மை எடுத்துக் கொள்கிறது 

பிறப்பும் இறப்பும் ஒவ்வொரு கணத்திலும் திகழ்கின்றன.’

*

‘எருக்குப்பையில் ரோஜாவைப் பார்க்கிறேன் 

ரோஜாவில் எருக்குப்பையைப் பார்க்கிறேன் 

ஒவ்வொன்றுமே நிலைமாற்றத்தில் அமைந்திருக்கிறது 

நிரந்தரம் என்பதுகூட தாற்காலிகம்தான்.’