1986-ம் ஆண்டு. இலத்தீன் அமெரிக்காவின் விடுதலையாளர் சைமன் பொலிவரை மையப்படுத்திய “The General in His Labyrinth” நாவலை எழுதிக் கொண்டே ஆறு திரைக்கதைகளையும் எழுதினார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அமோரஸ் டிஃபிசில்ஸ் (Amores Dificiles) என்று ஸ்பானிஷிலும், டேஞ்சரஸ் லவ்ஸ் (Dangerous Loves) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படட அந்தப் படங்கள் மார்க்வெஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசில் – கொலம்பியா – கியூபா, மெக்சிகோ – ஸ்பெயின் – வெனிசுவேலா நாடுகளைச் சார்ந்த இயக்குனர்களால் பின்னர் திரையாக்கம் பெற்றன. கியூபாவின் முன்னணி இயக்குனர் தோமாஸ் கிட்டரஸ் ஆலியாவின் (Tomas Gutierrez Alea) ”Letters From the Park” , கொலம்பிய இயக்குனர் ட்யூகின் (Duque) ”Miracle in Rome”, பிரேஸில் நாட்டின் ரய் க்வேர்ராவின் (Ruy Guerra) ”Fable of the Beautiful Pigeon Fancier,” ஸ்பானிஷ் இயக்குனர் ஜெயிம் சவர்ரின் (Jaime Chavarri’) ”I’m the One You’re Looking For” போன்ற காலத்தால் அழிக்க முடியாத படங்கள் நமக்கு கிடைத்தது மார்க்வெஸின் பெரும் முயற்சியால் தான்.
அவரின் நாவல்களின் பகுதிகளிலிருந்தோ, சிறுகதைகளில் இருந்தோ, கிரானிக்கள்ஸில் இருந்தோ எடுத்தாளப்பட்ட ஆறு திரைக்கதைகளும் காதலின் ஆழங்களுக்குப் பாய்ந்து அதன் வேரடி மண்ணோடு புதைந்திருக்கும் மரணத்தை விடுவிப்பவை. இப்படங்களின் மூலம் வந்த வருவாய் மொத்தமும் மார்க்வெஸ்ஸும் – அர்ஜெண்டினாவின் கவிஞரும் திரைப்பட இயக்குனருமான பெர்னாண்டோ பிரியும் (Ferndando Birri), கியூபாவின் திரைப்பட மேதை எச்பினோஸாவும் (Julio Garcia Espinosa) இணைந்து பிடல் காஸ்ட்ரோவின் முழு ஆதரவுடன் தோற்றுவித்த லத்தின் அமெரிக்க – ஆப்பிரிக்க – ஆசிய மாணவர்களுக்கான கியூபாவின் சர்வதேச திரைப்பட கல்லூரிக்கு வழங்கப்பட்டது. புதிய இலத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்கத்தின் (New Latin American Cinema Movement) பிதாமகராக காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் கொண்டாடப்படுவதற்கான பல காரணங்களில் இந்தப் பின்னணியும் ஒன்று. புரட்சியாளர் சைமன் பொலிவர் இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு பேராற்றல் மிக்க அரசியல் புலமாக்க கனவு கண்டார். கலைஞன் மார்க்வெஸ் லத்தின் அமெரிக்க சினிமாவை அவற்றின் பண்பாட்டு அழகியல் தனித்துவம் பிறழாத ஒன்றுபட்ட கலை வெளிச்சமாகத் திரட்டும் அதிநுட்பமான கலாச்சாரப் புலத்தை கனவு கண்டார்.
எனக்கு இருக்கும் மேனியாக்களில் பிரத்யேகமானது கேபோ சினிமா (Gabo Cinema) மேனியா. கடந்த பதினைந்தாண்டுகளில் நான் சென்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் என் படங்களைத் திரையிடுவது, அதையொட்டிய செயல்பாடுகள் தவிர்த்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் ஓடி ஓடி பார்த்தவை இலத்தீன் அமெரிக்க சினிமா தான். அந்த ஆர்வத்தின் வித்து மார்க்வெஸ். கவிதைக்கு நெருடா, சிறுகதைகளுக்கு போர்ஹே, நாவலுக்கு மார்க்வெஸ், அபுனைவுக்கு கலியானோ, ஓவியத்திற்கு ஃப்ரீடா, சினிமாவுக்கு க்ளோபர் ரோச்சா என்று இலத்தீன் அமெரிக்காவின் பூகோள வரைபடத்தை கலை தான் எனக்கு கற்றுக் கொடுத்தது.
என்னுடைய புதிய முழு நீளக் கதைப்படம் “மாடத்தி”, இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பாரம்பரிய மிக்க Festival Internacional de Cine de cartegena de Indias (FICCI) -யின் அறுபதாவது ஆண்டு விழாவில் திரையிடலுக்காகத் தேர்வு பெற்றதும் “Thank you Gabo” என்று தான் தொண்டை கிழிய கத்தினேன். அவரது விசுவாசமான வாசகியின் குரல் வேகத்தில் கொலம்பியாவின் கார்டஹீனா நகரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு நிறுவப்பட்டிருக்கும் தூணுக்குக்கடியில் துயிலும் அவரது அஸ்தி சற்று சலனப்பட்டிருக்கக் கூடும்.
மார்ச் 11 முதல் 18 வரை விழா நாட்கள் முழுமையும் பங்கெடுக்கும் வகையில் என் பயணத்தை திட்டமிட்டேன். இடையில் ஒருநாள் மார்க்வெஸ் பிறந்த அரகடக்காவிற்கு செல்லவும் அவரது நினைவிடமாக இப்போதிருக்கும் அவரது வீட்டை தரிசிக்கவும் ஏற்பாடு செய்து தருவதாக திரைப்பட விழாக் குழு உறுதியளித்ததிலிருந்து, தூக்கத்தில் அனத்துவது அதிகமாகி இரவுகள் என் கட்டுப்பாட்டில் இருந்து நழுவின. பயணத்திற்கு முதல் நாள் என் சகோதரன் அழைத்து, சீனாவிலிருந்து தனது தீர்த்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் கொரோனா ஐரோப்பாவை நோக்கி விரைந்துக் கொண்டிருப்பதால், பாதுகாப்பிற்காக முகத்திற்கு மாஸ்க், கைகளுக்கு கையுறைகள் அணிந்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினான். வைட்டமின் சி, பாரசிடிமால் மாத்திரைகளையும் அவசரத்திற்கு தேவைப்படும் என வாங்கி வைத்துக் கொண்டேன்.
சென்னை- மும்பை- ஆம்ஸ்டடெர்ம்- பகோடா- கார்டஹீனா என்று டச் ஏர்லைன்ஸில் 36 மணி நேரப் பயணம். விமான நிலையங்களிலும், விமானத்திலும், நூற்றுக்கணக்கான முகக்கவசமணிந்த மனிதர்களை ஒரே சமயத்தில் பார்த்தது பீதியாக இருந்தது. ஸோம்பி படம் ஒன்றின் கதாபாத்திரங்களைப் போல எங்கள் நடவடிக்கைகள் இருந்தன. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லோரும் தங்கள் கைகளை சானிடைசரை ஊற்றிக் கழுவியபடி இருந்ததில் ஒரு பிரமாண்டமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரவரின் படுக்கைக்காக அகால வரிசையில் காத்திருப்பது போன்ற உணர்வு. அச்சமும் எச்சரிக்கையும் குழப்பமும் கூடிய வானிலையில் குளிர்கிறதா வியர்க்கிறதா என்று கூட எனக்கு உறைக்கவில்லை. வைனும் விமானத்தில் பார்க்கக் கிடைத்த திரைப்படங்களும் தான் என்னைக் காப்பாற்றின. ‘ஜோக்கர்’ படத்தை மூன்றாவது தடவை பார்த்தேன். ஜாக்வின் ஃபீனிக்ஸா அல்லது இந்தப் படம் நினைவுபடுத்தும் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் “டாக்சி ட்ரைவர்” மற்றும் “கிங் ஆஃப் காமெடி”யின் நாயகன் ராபர்ட் டி நீரோவா, யார் சிறந்த நடிகன் என்று மனம் அலைக்கழிந்தது. “Once upon a time in Hollywood” படத்தை இரண்டாவது தடவை பார்த்தேன். ஒரு படைப்பாளி தன் கைவசம் இருக்கும் எல்லா துருப்புகளையும் கடை விரித்துவிடடால், வாசகன் வேறு முகாமிற்கு போக வேண்டியது தான். ‘பல்ப் பிக்ஷன்’ பார்த்தபோதிருந்த எந்த ஆச்சிரியங்களும் இப்போது மிச்சம் இருக்கவில்லை.
‘லிட்டில் ஃபாரஸ்ட்’ என்ற உணவும் உணர்வுமான கொரியப் படம் பார்க்கக் கிடைத்தது. தாய்க்கும் மகளுக்குமான உறவு தான் திரைக்கதையின் நாடி என்றாலும் இயற்கையோடு இயைந்த எல்லாப் பருவங்களுக்குமான கொரிய உணவு ரெசிபிகளும் கதையினுயூடாக சொல்லப்படுகின்றன. ‘Food Fiction’ என்கிற வகையே இந்தியத் திரைப்படங்களிலும் இலக்கியத்திலும் ஏன் இல்லை என்ற யோசனையும் தூக்கமுமாக சில மணி நேரங்கள் கழிந்தன. “டாப் கியர்” என்கிற பிபிசியின் பயண நிகழ்ச்சியைப் பார்த்து பிரமித்துப் போய் பகோடாவிற்கு விடுமுறைக்காக சென்றுக் கொண்டிருந்த சக டச் பயணியிடம் பேச்சு கொடுத்ததில் ‘Polar Steps’ என்கிற பயணச் செயலி அறிமுகமானது. தரவிறக்கிக் கொண்டு அவரை நண்பராக இணைத்துக் கொண்டேன். இனி ஒருவருக்கொருவர் பயண வரலாறு, பயணம் செய்த – செய்கின்ற இடங்களைக் குறித்த தகவல்கள், அனுபவங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். அவர் பத்து வருடங்களுக்கு முன் இந்தியா வந்ததையும், ராஜஸ்தான், வாரணாசி என்று சுற்றிய கதைகளையும் சொன்னவர், தான் பார்த்த யானையை நினைவுகூர்ந்து, யானையின் ஞாபக சக்தி பத்து வருடங்கள் தானென்றும் இந்த வருட இறுதிக்குள் மீண்டும் வந்து அந்த யானை தன்னை மறப்பதற்குள் பார்த்துவிட வேண்டும் என்றும் அக்கறைப்பட்டார். இந்தியா என்கிற உணர்வு இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு ரகசிய கழிபேருவகையாக இருப்பதை பல முறை பார்த்திருக்கிறேன். இவருடைய பரவசத்தில் ஒரு சிறுவனின் கண்கள் பிரகாசித்தன.
கரீபியன் கடற்கரையை கண்ணுக்குக் கண் பார்த்தபடி இருக்கும் ஹோட்டல் கரிபேயில் ஐந்தாம் மாடியில் அறை. தகிக்கும் வெப்பமும், ஆவேசமாய் அடிக்கும் காற்றுமாக ஒருவித மிதவை நிலையிலேயே அசைந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்ற வைக்கும் நகரம் கார்ட்டஹீனா. மார்க்வெஸின் “Love in the time of Cholera” நாவல் நிகழ்ந்த நகரம் என்பதால் எனக்கு ஒரு நாவலுக்குள் நுழைந்து விடட உணர்வு. நாவலுக்குள் அசையும் பனைகளும், செங்குத்து சூரியனும், நூறாயிரம் முயல் குட்டிகள் பிரசவிப்பது போல சதா நுரைத்துக் கொண்டிருக்கும் கடலலைகளும், வியர்வை பிசுபிசுப்பு கூடிய கதாபாத்திரங்களும், காலனிய வாசமடிக்கும் துறைமுகமும், கப்பல்களும், கறுப்பர்களின் டாட்டூ உடல்களும், ‘சென்யோரிடா’ ‘பியூனஸ் டயஸ்’ ‘ஹோலா’ என்ற புன்னகை குரல்களும், சாதாரணமாக நடப்பதைக் கூட நடனமாக்க எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டே இருக்கும் ஸ்பானிஷ் இசையும், நேரில் உயிர் பெற்று வந்துவிட்டது போன்ற மாயை அல்லது அப்படி நம்ப விரும்புகிற மனம். கொலம்பியாவின் தேசிய சாராயம், நெருப்புத் திரவம் என்றழைக்கப்படும் அக்வார்த்தியந்தேவை (Aguardiente) தொண்டையில் இறக்கியதும் மார்க்வெஸின் நாவல் நாயகர்கள் பெர்மினாவும், ஃபலோரெண்டினாவும் உடை நழுவ முத்தமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி உறங்கிப் போனேன்.
2005-ல் வெனிசுவேலாவில் நடந்த சர்வதேச சோஷலிச இளைஞர் மாநாட்டுக்கு காரகஸ் சென்றிருந்த போது தங்கியிருந்த இரண்டு வாரங்களும் மிலிடரி கண்காணிப்பில் தான் இருந்தேன். உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்ததால் சர்வதேச விருந்தினர்களை பாதுகாப்பு செய்யும் நடவடிக்கைகளால் கிட்டத்தட்ட சிறைவாசம் தான். ஒன்பது மணி நேரம் ஸ்பானிஷில் உரையாற்றிய வெனிசுவேலாவின் அதிபர் செவெஸ், அமெரிக்க அதிபர் புஷ்ஷை கெட்ட வார்த்தைகளால் திட்டும் போது மட்டும் புரிந்தது. ஆர்ப்பரிப்பில் கலந்துகொண்டு டெக்கீலா ஷாட்களை விடாமல் குடித்தது துல்லியமாய் நினைவிருக்கிறது. El pueblo unido jamás será vencido (ஒன்றுபட்ட மக்களை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது) என்கிற கோஷத்தை ஸ்பானிஷில் கற்றுக் கொண்டு உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த இளைஞர்களோடு பாடிய போது, புரட்சிக்கான மொழி ஸ்பானிஷ் மட்டுமே என்று உளமார நம்பினேன், இன்னும் நம்புகிறேன். சேகுவேராவின் மகள் தன் தந்தையின் உருவத்தை அண்டர்வேரில் பொறிப்பது போன்ற நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்த்துப் பேசியதும், என் ஆவணப்படங்களைத் திரையிட்டதும், இந்தியாவில் சாதியை ஒழிக்க ஆயுதப் போராடடம் தான் ஒரே வழி என்று உரையாற்றியதும், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கை ஜேவிபி-யினரோடு சேர்ந்து புலிகளை டெர்ரரிஸ்ட்டுகள் என்று துண்டறிக்கைகளை விநியோகித்து தமிழீழப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி முன் மொழிந்த தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் மல்லுக்கு நின்றதும், இந்தியா திரும்பியதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக தோழர்கள் ராஜாவுக்கும், பரதனுக்கும் கடிதம் எழுதியதும் தான் என் ஒரே இலத்தீன் அமெரிக்கப் பயண அனுபவங்கள்.
2011-ல், என்னுடைய “செங்கடல் (Sengadal, The Dead Sea)”, “The International Film Festival of Peubla (FIC Puebla)” திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மெக்சிகோவிலும், கோட்மாலாவிலும் திரையிடப்பட்ட போது, லண்டனில் ஆய்வுப் படிப்பில் இருந்தேன . இந்தியா சென்று தான் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்கள். தவற விட வேண்டியதாகி விட்டது. 2018-ல் என்னுடைய ஆவணப்படம் “Is it too much to ask”, MIC Genero விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கியூபா, அர்ஜென்டைனா மற்றும் ப்யுயூர்டோ ரிகோ நாடுகளில் ‘Screening Tour’ போன போது நான் ‘மாடத்தி’ படப்பிடிப்பில் இருந்தேன். கொலம்பியப் பயணத்தை ஒரு ஆதர்சப் பயணமாக்க என் புலன்கள் எல்லாம் சற்று கூடுதலாக வேலை செய்ததற்கு என்னுடைய துரதிருஷ்டங்களின் வரலாறும் முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால் வரலாறு தன்னை வழுவாது நிகழ்த்திக் கொண்டதை இந்தக் கட்டுரை வாசித்து முடிந்ததும் அறிந்து கொள்வீர்கள்.
ஹோட்டல் கரிபே இருந்த பகுதி அசல் மியாமி கடற்கரை நகரம் போல, உலகமயமான அதிநவீன காஸ்மோபாலிடன் தன்மை கூடியது. அங்கு சந்திக்கும் ஒவ்வொரு இரண்டாவது நபரும் வெளிநாட்டவராகத் தான் இருந்தார்கள். நமது கோவா கடற்கரைப் பகுதிகள் போல சாலை நெடுக கடை ஆட்கள் நின்ற கொண்டு கூவிக் கூப்பாடு போட்டு தங்கள் பாருக்கு கடத்திக்கொண்டு போகாத குறை. முதல் நாள் என்பதால், திரைப்பட விழா நடக்கும் மையப் பகுதிக்கு நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினால் வழியெங்கும் கட்டுமஸ்தான கறுப்பர்களும் தொப்பியும் கால்சராய்களுமாக கொலம்பியக் கவ் பாய்களும் தங்கள் கடற்கரை கஃபேக்களுக்குள் மறிக்க, வியர்த்து விறுவிறுத்து டாக்சிக்குள் ஏறிக் கொண்டேன். Estás bonita (நீங்க அவ்வளவு அழகாக இருக்கீங்க) என்று தான் எடுத்தவுடனே பேச்செடுக்கிறார்கள் கொலம்பிய ஆண்கள். கேரள, ஈழத் தமிழ் ஆண்களுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க ஆண்களுக்குத் தான் flirting பிறவிக் கலை என்று நம்புகிறேன். சாம்பலும், நீலமுமாய் ஆளுயர அலைகள் அடிக்க, நம் மீது சுள்ளென இறங்கும் வெயிலை வாங்கிக்கொண்டு கடற்கரை நெடுக ஓய்விலும் கேளிக்கையிலும் இசையிலும், மெய் மறந்து கிறங்கிக் கிடந்த மனித உடல்களைப் பார்க்க, வாழ்க்கையில் ‘உழைப்புக்கு’ அனாவசியமான மதிப்பு தந்து நம்மை நாமே வருத்திக் கொள்கிறோமோ என்று அவ்வப்போது எனக்கு வரும் இருத்தலியல் நெருக்கடி மனதை அப்பிக் கொண்டது.
சென்னையில் உள்ள ஒரு உயர்தர உணவகத்திற்குச் சென்று உணவருந்தினால் என்ன பில் வருமோ, அதே விலைவாசி தான் கார்டடஹீனாவிலும் என்பது ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவிலும், கொலம்பியாவிலும் பியர் அதே நூறு ரூபாய் மற்றும் மினரல் வாட்டர் இருபது ரூபாய் சொச்சம் தான். அரிசி உணவு, தர்பூசணி, மாம்பழம், கத்திரிக்காய், தக்காளி, காலிஃப்ளவர், வாழைப்பழம், இளநீர் என்று காய்கறி பழங்களும், பன்றி, மாடு, ஆடு, கோழி என்று நாம் சமைக்கும் விலங்குகள், பறவைகள் தாம் என்பதால், போதை இறங்காத சில நாட்களில் இருப்பது சென்னையா, கார்ட்டஹீனாவா என்று சின்னதாய் குழம்பிப் போவதற்கும் வாய்ப்புண்டு. சமையலில் மசாலா, எண்ணெய் சேர்ப்பதில்லை என்பதாலோ என்னவோ, கொலம்பியாவின் பெண்கள் கருத்த அடர்த்தியான முடியும், அப்பழுக்கற்ற தோலும், மெல்லிய இடையுமாய் எழில் கொஞ்சுகிறார்கள். லத்தீன் அமெரிக்க சமூகமும் ஆணாதிக்க சமூகம் தான் என்றாலும் ஃபேஷனிலும் செக்சுவாலிட்டியிலும் கட்டுப்பாடுகள் தளர்த்திய சமூகமென்று இலக்கிய திரைப்பட வாசிப்பில் அறிந்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது சற்று பரவசமாகத் தான் இருந்தது.
FICCI திரைப்பட விழா லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாக்களிலேயே பாரம்பர்யம் பெற்றது. அறுபதாவது பதிப்பு இந்த ஆண்டு. போட்டி பிரிவுகள் தளர்த்தப்படட விழா என்பதால், ஒரு வருடமாய் Sundance, Cannes, Berlin, Venice, Toronto, Rotterdam, Busan, IDFA திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற படங்களையெல்லாம் பொறுக்கி அதிலும் வடிகட்டி தேர்ந்தெடுக்கிறார்கள். நேரடி விண்ணப்பங்களையும், இலத்தீன் அமெரிக்காவின் சுயாதீனப் படங்களையும் பரிசீலித்து இணைக்கிறார்கள். பதிமூன்று தேர்வாளர்கள், எல்லாக் கண்டங்களிலுமிருந்து சுமார் 3000 படங்களை மாதக்கணக்காய் பார்த்து ஆய்ந்தெடுத்து தெரிவு செய்து, நேரிலும் சில வாரங்கள் கொலம்பியாவில் கூடி நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கிறார்கள். திரைப்பட விழாவை தேர்வாளர்கள் (Programmers) முன்னின்று நடத்துவது நான் வேறெந்த திரைப்பட விழாவிலும் பார்த்திராத அபூர்வமான காட்சி. பொதுவாக நடைமுறையில் தேர்வாளர்கள் ரகசியக் குழு போல தான் இயங்குவார்கள். இரவு பார்ட்டிகளில் சந்தித்தால் தான் உண்டு. 30 நாடுகளில் இருந்து வந்திருந்த இயக்குநர்களை தேர்வாளர்கள் தான் தொடர்பு கொண்டு, திரையிடலுக்கு அழைத்துச் செல்வதும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், கேள்வி பதில் நேரத்தை ஒழுங்குபடுத்துவதுமாக இருந்தனர்.
வெவ்வேறு நாடுகளிலிருந்தும் கலாச்சாரங்களிலுமிருந்தும் திரைப்பட விழாக் குழுக்களிலிமிருந்தும் என அமைந்திருந்த தேர்வாளர்கள் ஒருவர் தவறாமல் ‘மாடத்தி’ குறித்து தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. திரைப்பட விழாவின் கையேடுகளைப் பெரும்பாலும் அவற்றின் கணம் தாங்காமல் தங்கும் ஹோட்டல்களிலேயே கைவிட்டு விடுவேன். ஆனால் FICCI விழா புத்தகங்களில் இயக்குனர்கள் அனுப்பும் கதைச் சுருக்கங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் பங்குபெறும் படங்களைப் பற்றிய குறிப்புகளையம் பரிந்துரைகளையும் அவ்வளவு நுணுக்கமாகவும் புரிதலுடனும் தேர்வாளர்களே எழுதியிருந்ததாலும், மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்ததாலும், இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டு வர பத்திரப்படுத்திக் கொண்டேன்.
‘Embrace of the Serpent’ திரைப்படத்திற்காக ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கொலம்பிய இயக்குநர் சிரோ குவேராவின் (Ciro Guerra) சமீபத்திய படமான “Waiting for the Barbarians”, திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்தது. இயக்குநரின் முதல் ஹாலிவுட் படம். அதே பெயரில் J M Coetzee எழுதிய நாவலின் திரை வடிவம். படம் திரையிடப்பட்ட Teatro Adolfo Mejia, பிரமிக்கவைக்கும் ஓபரா அரங்கம் (Opera House). இதற்கு முன்னர் ஜெர்மனியின் அசுரத்தனமான ஓபரா அரங்கங்களுக்கெல்லாம் சென்றிருந்தாலும், இத்தாலிய கட்டிடக் கலைஞர்கள் ஸ்பானிஷ் காலனிய காலக்கட்டத்தில் கட்டியிருந்த இந்த அரங்கம் அற்புதமான விலைமதிக்க முடியாத மாயாஜால ஆபரணம் ஒன்று தூண்களாகவும், படிகளாகவும், கூரையாகவும் வடிவம் பெற்று எழுந்து நின்றது போல இருந்தது. அதிசயத்தில் உறைந்து எனக்கு மனம் படத்தில் லயிக்கவே இல்லை. கொலம்பிய இயக்குநர் Guerra, ஜானி டெப்பையெல்லாம் வைத்து ஆங்கிலப் படம் எடுத்திருக்கிறார் என்பதால் ஆர்வமும் வடிந்து போய் ஜெட் லேக்கிற்கு என்னை ஒப்புக்கொடுத்து களைத்துப் போய் தூங்கி விட்டேன். கனடாவிலிருந்து வந்திருந்த இயக்குநர் தட்டி எழுப்பி ரிஷப்ஷன் இருக்கிறது என்று அழைத்து சென்றார். விடிய விடிய ஜாஸ், ராப், பாப் என்று மொத்தக் கூட்டமும் நடனமாடிக் கொண்டிருந்தது. அண்டாவிலிருந்து அள்ளி எல்லோரும் பியரும் சாராயமும் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஆப்பிரிக்கர்களிடமும் லத்தீன் அமெரிக்கர்களிடமும் தான் கொண்டாட்டத்தை கற்றுக் கொள்ள வேண்டும். பிறக்கும் போது அழுது கொண்டு பிறப்பவர்கள் அல்ல இவர்கள்.
அடுத்த நாள், மாடத்தியின் Latin American Premiere; வெர்னர் ஹெர்ஸாக்கின் (Werner Herzog) மாஸ்டர் கிளாஸ், அவரின் கிளாசிக்கான ‘Fitzcarraldo’ படத்தின் ட்ரிபூட் (Tribute) திரையிடல் மற்றும் கலந்துரையாடல்; 46 வருடங்கள் கழித்து தன் தாய்நாடு சிலிக்கு திரும்பியிருக்கும் ‘Battle of Chile’ பட இயக்குநர் பாட்ரீஷியா குஸ்மனின் (Patricio Guzman) “Dreams of Cordillera” திரையிடல்; பிரதான போட்டிப் பிரிவெல்லாம் வெறும் பிராண்டாக மாறிப் போன மாஸ்டர்களின் திரைப்படங்களுக்கான கூடாரமாகி விட்ட நிலையில், புதிய திறமைகளை அக்கறையோடு கண்டெடுக்கும், நான் மிக மதிக்கும், கான் திரைப்பட விழாவின் Un Certian Regard பிரிவில் உச்சபட்ச பரிசை வென்ற பிரேசில் இயக்குநர் கரீமின் (Karim Ainouz) “The Invisible life of Euridice Guzmao” திரைப்படத்தின் முதல் காட்சி, தார்கோவ்ஸ்கியின் மகன் இயக்கியிருக்கும் தன் தந்தை குறித்த “Andrei Torkovsky – A Cinema Prayer’ என்ற ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி என்று வரிசையாக நிகழ்வுகள் இருந்ததால் பித்துப் பிடித்த மனநிலையில் ஓடிக்கொண்டிருந்தேன். தூண்டப்படட அகநிலையின் விசை என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. இந்த ஒரு நாளைக் குறித்து மட்டுமே ஒரு சிறிய புத்தககமாக எழுதிவிட முடியும். இப்படியான நாட்கள் அமைவதற்காகத் தான் ஆயுள் முழுவதும் தவித்து தண்ணீராகிறோம் என்று என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொண்டேன். ஆன்மாவின் மீது குளிர்ந்த நீரை சட்டெனப் பாய்ச்சி வெடவெடத்து நடுங்கி பின் தெளிந்து தானே நிதானத்தை கற்றுக் கொள்ள முடியும்.
நான் திரைப்பட கல்லூரிக்குப் போய் சினிமா படிக்கவில்லை, திரைப்பட விழாக்கள் தான் என் பள்ளிக்கூடம் என்று நேர்காணல்களில் குறிப்பிடுவதுண்டு. எல்லோரும் மன சஞ்சலம் என்றால் கோவில்களுக்குப் போவார்கள், நான் உங்கள் படங்களைப் போட்டு பார்ப்பேன் என்று ஹெர்சாக்கை சந்தித்து நேரில் சொன்னேன். எனக்கு விருப்பமான ஆசிரியர் என்றால், அது ஹெர்ஸாக்கின் படங்கள் தான். அவருடைய மாஸ்டர் கிளாஸில், “Herzog on Herzog”, “Conquest of the useless”, “Walking on the Ice” போன்ற அவரின் நூல்களில் சொல்லாதது எதையும் புதிதாய்ச் சொல்லவில்லை. அவருடைய நூற்றுக்கணக்கான படங்கள் அளவு நேர்காணல்களும் தந்திருக்கிறார் என்பதாலும் அதையெல்லாம் அலசி வாசித்தவள் என்பதாலும் அவர் பேசுவதை விட அவரைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அகந்தை என்று தோன்றுமளவுக்கு தன்னை மட்டுமே முன்வைத்து பேசிக்கொண்டிருந்தார். கேள்விகள் கேட்கும் ஒவ்வொருவரையும் மூக்குடைப்பதிலேயே குறியாய் இருந்தார். நல்லதை படிப்பிப்பவன் மட்டுமே ஆசிரியன் அல்ல தானே என்று நொறுங்கிக் கொண்டிருந்த மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
சில மாதங்களுக்கு முன் தான் பூசான் (Busan) திரைப்பட விழாவில் ஈரானிய இயக்குநர் மக்பல்பஃப் (Mohsen Makhmalbaf) அவர்களைச் சந்தித்தேன். சினிமாவில் மட்டுமல்ல நேரிலும் அரவணைக்க மட்டுமே தெரிந்தவராய் இருந்தார். ஹெர்ஸாக் பிறந்தது ஜெர்மனி என்பதால் வரலாற்றுப் பிரச்சனையாக இருக்கலாம் என்றெல்லாம் குழம்பி, சிக்கலாகி மண்டை வீங்கிய நிலையில் அவரருகிலேயே அமர்ந்து “Fitzcarraldo”, அதுவும் அதே ஓபரா ஹவுஸ் தியேட்டரில் பார்த்தேன். வாழ்க்கை விசித்திரமானது தான். சப்த நாடியையும் ஒடுக்கும் வகையில் விசித்திரமானது. பல வருடங்களுக்கு முன் கேரளத் திரைப்பட விழாவில் இதே போன்றதொரு ட்ரிபியூட் திரையிடலில் அடூரின் “சுயம்வரத்தை” பார்க்கக் காத்திருந்த போது சரியாக என் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தார் இயக்குநர். டில்லியில் “புவன்ஷோம்” பார்க்க பயபக்தியுடன் உட்கார்ந்திருந்த போது அருகில் வந்து சிரித்துக் கொண்டே உட்கார்ந்தார் மிருணாள் சென். கான் விழாவில், “Faces Places” பார்க்க ஃபார்மல்ஸ் எல்லாம் சிரமப்பட்டு போட்டு க்யூவில் பல மணி நேரம் நின்று சிகப்புக் கம்பள திரையிடலுக்கு அடித்துப் பிடித்துப் போய் நின்றால், காதருகே மூச்சு விடும் தூரத்தில் இயக்குநர் ஆக்னஸ் வார்தா.
சில படங்கள் உங்கள் மண்டையோட்டைத் திறந்து இடதை வலதாக மாற்றும், ரத்த நாளங்களைப் பதம் பார்க்கும். நமக்குள் என்ன நடக்கும் என தெரியாது. ஆனால் உலுக்கியெடுக்கும். குஸ்மனின் “Dreams of Cordillera” அதைத் தான் செய்தது. 80 சதவிகிதம் மலைகள் சூழ்ந்துள்ள மலைத்தீவான சிலியின் கார்டில்லரா மலைகளை சாட்சிக்கு அழைத்து தன் கலைத்துறை அரசியல் நண்பர்களின் வாக்குமூலங்களைக் கொண்டு சிலியின் வரலாற்றை பிரதிபலிக்க வைத்து தன் ஆன்மாவை திறந்து வைக்கிறார். “Battle of Chile” படத்தின் மூலம் சர்வாதிகாரி பினோசேயின் கொடூரமான ஆட்சியை தோலுரித்ததால், 1973-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டவர். இடையில் தூரதேசத்தில் பிரான்சில் இருந்து கொண்டே சிலியைக் குறித்து சுமார் 20 படங்கள் எடுத்தவர், 46 ஆண்டுகள் கடந்து தாய்நாட்டிற்கே திரும்பி வந்து இந்தப் படத்தை எடுத்திருப்பதால் அவருடைய வாய்ஸ் ஓவர் கேட்கும் போதெல்லாம் ஒருவித கொந்தளிப்பு ஆட்கொண்டு விடுகிறது.
எனக்கும் என் சதுரகிரி மலைகளுக்குத் திரும்ப வேண்டும். மகாராஜபுரத்தில் என் தாத்தா வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அருகில் நின்றிருப்பது போல தெரியும் மலை ஒவ்வொரு நாளும் புதிதாய் தோற்றமளிக்கும். சிறுபிராயத்தில் மலையேறுவது தான் எனக்குப் பிடித்த விளையாட்டு. எந்தத் திசையிலிருந்து வருகிறது காற்று, எவ்வளவு சாய்வில் அசைகிறது புற்கள், எத்தனை நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது காட்டெருமை, எங்கெல்லாம் காட்டுத் தீ மூண்டதால் புகை மூட்டமாக இருக்கிறது என்றெல்லாம் துப்பு துலக்கிக் கொண்டு காடுகளில் திரிந்த மலைகளுக்குத் திரும்ப வேண்டும், அதன் மேலான புதிர்களுக்கு விடை தேட வேண்டும் என்கிற வேட்கை பல மடங்காகி படம் முடிந்து வெளியேறும் போது உடல் அனலாய் கொதிக்கத் தொடங்கியது.
மாடத்தியின் முதல் லத்தீன் அமெரிக்கத் திரையிடல் ஸ்பானிஷ் சப்-டைட்டிலோடு திரையிடப்பட்டது. எனக்கு ஒவ்வொரு திரையிடலும் முதல் திரையிடல் தான். இவ்வளவு உணர்ச்சிப் பிணைப்பு உன் படைப்புகளோடு அவசியமா என்று கேடடால் வேறு எப்படியும் எனக்கு இருக்கத் தெரியாது என்பது தான் பதிலாக இருக்கும். அரசியல் சினிமா என்றால் என்ன என்பதை லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளிடம் தான் பயில்கிறேன். அர்ஜண்டின இயக்குநர்கள் Fernando Solanas, Octavia Getino எழுதிய “Towards Third Cinema” மற்றும் கியூப இயக்குநர் Garcia Espinosa எழுதிய “Imperfect Cinema” தான் இன்றளவும் எனக்கு Seminal Essays. எனக்குள் இருந்த அடிமை புத்தியை சுட்டிக்காட்டி நான் போக வேண்டிய பாதையை சரியாக அடையாளம் காட்டிய முன்னோடிகள் இவர்கள். சொந்த மண்ணிலிருந்து அகழ்ந்தெடுத்த கிழங்கு போன்று மழை மணக்கும் கலையை ஜப்பானின் குரோசோவாவிடமிருந்தும், எல்லாவற்றைக் காட்டிலும் மனிதத்தை முன்வைக்கிற பண்பை ஈரானின் கைரஸ்டோமியிடமிருந்தும், அரசியலை சினிமா பயிற்சியாக மாற்றும் சாகசத்தை லத்தீன் அமெரிக்கத் திரைப்பட இயக்கத்தை முன்னெடுத்த இயக்குநர்களிடமும் தான் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
திரையிடலுக்குப் பிறகு 45 நிமிடங்கள் கொலம்பிய பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்று அந்த நிலங்களில் வேறு பரிமாணங்களில் இருக்கும் சுரண்டல் அமைப்புகள் குறித்து பேசினோம். மூன்றாம் சினிமா இயக்கம் முன்மொழிந்தபடி, சினிமா தயாரிப்பை, படக்குழு- கதை சொல்லப்படுகின்ற சமூகம் – பார்வையாளர்கள் அனைவரும் பங்கேற்கும் செயலாக நிகழ்த்திக் காட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து பகிர்ந்து கொண்டேன். நாட்டார் தெய்வங்கள், அவை குறித்த கதைகள் மற்றும் நம்பிக்கைகள் இலக்கியங்களுக்கும், சினிமாவுக்கும் மடை மாற்றும்போது சொல்லப்படாத வரலாறுகள் ஆவணமாவது குறித்து விவாதித்தோம். What is not seen doesn’t exist என்ற வாக்கியத்தின் உண்மையை அலசினோம். தணிக்கை குறித்தும், உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் இயங்கும் அலகுகள் குறித்தும் ஆராய்ந்தோம், மாடத்தியின் முதல் லத்தீன் அமெரிக்கத் திரையிடல் இப்படியாக நிறைவாக முடிந்தது. வரும் நாட்களில் நடக்கவிருக்கும் இரண்டு காட்சிகளின் விவரங்கள் பகிரப்பட்டன. கலைந்தோம். இது அத்தனையும் மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் ஸ்பானிஷில் நடந்தது என்பது பிரத்யேக அனுபவம்.
தார்கோவ்ஸ்கியை குறித்த Cinema Prayer ஆவணப்படம் அவருடைய மிக அரிய ஒளி – ஒலி கோப்புகளைக் கோர்த்து அவரே அவரின் படங்களையும் அவற்றின் வரலாறையும் பற்றி நேரடியாக பேசுவது போல தொகுக்கப்பட்டிருந்தது. அவருடைய ஏழு படங்களையும், அவர் எழுதிய Sculpting in Time மற்றும் Time Within Time நூல்களையும் வாசித்திருந்தாலும், Chris Marker, Sukurov என நான் வியக்கும் ஆளுமைகளும் உலகின் மற்ற இயக்குனர்களும் அவரைக் குறித்து எடுத்த ஆவணப்படங்களைப் பார்த்திருந்தாலும் கூட Cinema Prayer புதியதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் தான் இருந்தது. அவர் மீதிருக்கும் காதலினால் கூட இருக்கலாம். சினிமா கதைக்கான களமல்ல கவிதைக்கானது என்று நம்ப வைத்த ஆசான் என்பதால் அவர் மீதான என் சாய்வு அந்தரங்கமானது.
இயக்குநர் கரீமின் (Karim Ainouz) “The Invisible life of Euridice Guzmao”, ஆணாதிக்கம் இறுக்கிய ஐம்பதுகளின் பிரேசிலில் விடுதலையான மனம் கொண்ட ஒரு பெண்ணின் உடைந்த கனவுகள் மீது காலக் கண்ணாடியைத் திருப்பிக் காட்டுகிறது. ‘Cinema is about the present’ என்பார்கள். எந்தக் காலத்தையும் நகரும் சட்டகத்திற்குள் அடக்கி நிகழ்காலமாக்கி நம்மை அதில் மிக யதார்த்தமாக சஞ்சரிக்க வைக்க சினிமாவால் மட்டுமே சாத்தியம். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time புத்தகம் அதைப் புரிந்து கொள்வதற்கான எல்லா சாவிகளையும் வைத்திருக்கிறது. தேடுபவர்களுக்கு தார்கோவ்ஸ்கி தருவார்.
இரண்டாம் நாள் பத்திரிகையாளர் சந்திப்பு, பேட்டிகள் என்று ஏற்பாடுகள் நடக்க, சலூனுக்கு சென்று மொழிபெயர்ப்பு செயலியின் (App) உதவியோடு தலைமுடியை வெட்டி ஒழுங்கு செய்தேன். ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்ற மிதப்பிலிருப்பவர்களை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சில நாட்களாவது அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வார்த்தை ஆங்கிலம் யாரும் பேசிவிட மாட்டார்கள். ஸ்பானிஷ் தெரியவில்லையென்றால், லத்தீன் அமெரிக்காவில் பாமரர் தான். ஆங்கிலம் கையாலாகாத பிரதேசங்கள் தான் உலகின் பெரும்பகுதி என்கிற உண்மை உறைக்கும் போது கர்வம் எல்லாம் அடங்கிவிடும். மதிய உணவு நடந்திருக்கும் போதே கொரோனா கொலம்பியாவுக்கும் வந்துவிட்டது. இத்தாலியில் இருந்து கார்ட்டஹீனா துறைமுகத்திற்கு வந்த கப்பல் கொள்ளை நோயையும் கொண்டு வந்தது என்று ஒரே பரபரப்பு. முதலில் திரைப்பட விழா சில கட்டுப்பாடுகளோடு தொடர்ந்து நடக்கும் என்றார்கள். சற்று நேரத்தில் திறந்தவெளி நிகழ்வுகளும், திரையிடல்களும் நிறுத்தப்படும் என்றார்கள். அந்தி சாய்வதற்குள் விழாவை இழுத்து மூடிவிட்டார்கள். போதாதற்கு ஊரடங்கையும் அறிவித்து அறைகளுக்கு திரும்பச் சொல்லி உத்தரவும் பிறப்பித்து விட்டார்கள்.
நின்றுவிட்ட இதயத்தை இயக்குவதற்கான எரிசக்திக்காக ஐந்து கிலோமீட்டர்கள் நடந்தே ஹோட்டலுக்கு திரும்பினேன். திரைப்பட விழாக் குழுவினர் தங்களால் தொலைபேசி மூலம் செய்ய முடிகின்ற உதவிகளை செய்ய முடியும் என்றும், நாடுகள் தங்கள் எல்லைகளை மூடுவதால் முடிந்தால் விமான டிக்கெட்டுகளை முந்தைய நாட்களுக்கு ஏற்பாடு செய்து திரும்பும் வழிகளைப் பாருங்கள் என்றும், ஹோட்டல் அறை ஏற்கனெவே ஒழுங்கு செய்யப்பட்ட நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிக்கை அனுப்பியிருந்தார்கள். இந்தியாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா, சகோதரன் என்று குடும்பத்தாருக்கு நிலவரங்களைத் தெரிவித்து விட்டு முகநூலில் நிலைத் தகவல் போட்டுவிட்டு ஒரு முழு பாட்டில் வைனிடம் தீர தீர பேசி முறையிட்டு கண்ணீர் விட்டுத் தூங்கிப் போனேன்.
அடுத்த நாள் கார்ட்டஹீனாவில் அகப்பட்டுக் கொண்ட எல்லா இயக்குநர்களும், தேர்வுக் குழுவும் ஹோட்டலில் சந்தித்து துயர ஆலோசனை நடத்தினோம். ஒரு திரையிடல் கூட நடந்திராத விரக்தியும், அமெரிக்க எல்லைகளும், ஜெர்மனியின் எல்லைகளும் மொத்தமாக மூடப்பட்டு விட்டதால், அந்த நாடுகளுக்கு செல்பவர்களும், டிரான்ஸிட் இருப்பவர்களும் விமான டிக்கெட்டை வேறு வழித்தடங்கல்களுக்கு மாற்ற வேண்டிய பதட்டமும், துரிதகதியில் உலக நிலவரங்கள் மாறிக்கொண்டே வருவதன் நெருக்கடிகளும், அடுத்தடுத்த திரைப்பட விழாக்களும் நிறுத்தப்படுவதன் அறிகுறிகளும், அவரவர் படங்களின் தலைவிதியைக் குறித்த கவலைகளுமாய் மணிக்கணக்கில் நீண்டது உரையாடல். மெக்ஸிகோவிலிருந்து வந்திருந்த “Sanctorum” திரைப்படத்தின் இயக்குநர் ஜோஷ்வாவும், வெனிசுவேலாவை சார்ந்தவர் என்றாலும் ஆஸ்த்ரியாவில் வசிக்கும் “Once upon a time in Venezuela” திரைப்படத்தின் இயக்குநர் அனபெல்லும், ரொமானியாவிலிருந்து வந்திருந்த “Acasa” இயக்குநர் ராதுவும் நண்பர்களானோம். வெனிஸ் திரைப்பட விழாவில் வரவேற்பு பெற்ற “Sanctorum”, மரியுவானா விளைச்சல் செய்யும் பண்ணைகளிடம் வேலை செய்யும் தொல்குடிகளின் வாழ்வும் மரணமும் எப்படி கண் கட்டி விளையாடிக் கொள்கின்றன என்பதை கவனப்படுத்தும் ஒரு cinematographic treat.
சன்டான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்காக விருது பெற்ற “Acasa” தாங்கள் வாழும் இயற்கை சூழ்ந்த நிலப்பகுதி அரசுடைமையாக்கப்பட்டு விட நகரத்திற்கு இடம்பெயரும் ஜிப்ஸி குடும்பத்தின் பாடுகளை உயிர்த்துடிப்புடன் ஆவணப்படுத்தியிருக்கும். நீரில் மிதக்கும் வென்சுவேலா நாட்டின் காங்கோ பகுதி பருவநிலைத் திரிபுகளால் மெல்ல மூழ்கிக் கொண்டிருப்பதும், ஆளும் அரசோ தேர்தலுக்கான ஓட்டு வங்கியாக மட்டும் அம்மக்களை பயன்படுத்த நினைப்பதும், ஒரு அவல அரசியல் நாடகமாக விரியும் ”Once upon a time in Venezuela” ஆம்ஸ்டெர்டம் திரைப்பட விழாவில் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. திரையிடல்கள் இல்லாமல் போனதால், பிரிவியூ லிங்குகள் பரிமாறிக் கொண்டோம்.
ஆளற்றுப் போன தெருக்களில் நடை எனது புது நண்பனாகிப் போனான். பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்தடைந்த மார்க்வெஸின் அஸ்தி வைக்கப்பட்டிருக்கும் University of Cartagena-வை அடைத்து விட்டிருந்தார்கள். காவலாளியிடம் கேட்டு இருப்புக் கம்பி கதவைச் சற்று திறந்து தூரத்தில் இருந்தே அவருக்கு வணக்கம் வைத்தேன். வரலாற்றை சிறைப்பிடித்து வைத்திருப்பதைப் போன்று கடலின் சீற்றத்திலிருந்தும் அன்னிய ராஜாங்கங்களிடமிருந்தும் நகரைக் காப்பாற்றுவதற்கு காலனிய காலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவரை இடிக்காமல் அப்படியே விட்டு அதற்குள் அந்தக் காலத்து குடியிருப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். விடுதிகளாகவும், பார்களாகவும், கஃபேக்களாகவும், கடைகளாகவும் இயங்கும் இந்தக் குடியிருப்புகளில் தான் மார்க்வெஸ்ஸின் “Love in the time of Cholera” படமெடுக்கப்பட்டிருக்கும். அவருடைய வீடும் அங்கு தான் தனிச் சொத்தாக இருக்கிறது. ஃபிரான்ஸிஸ்கன் சிஸ்டர்ஸின் மடாலயத்தை வாங்கி வீடாக்கிக் கொண்டாராம்.
பாதி தெருவை அடைத்துக் கொண்டிருக்கும் அவருடைய நீண்ட வீட்டையும் கோட்டைச்சுவர் மீது ஏறி நின்று பார்த்தேன். அவர் இந்த பிளாசாவில் தான் தன் நண்பர்களுடன் இண்டலக்சுவல் விவாதங்களில் ஈடுபடுவார், இந்த பார்களில் தான் குடிப்பார், கியூப அதிபர் Castro அவரோடு தங்கியிருந்த போது இந்தத் தெருக்களில் தான் திரிவார் என்று திரைப்பட விழா நாட்களில் நண்பரான ஸ்பானிஷ் லிடரேச்சர் பேராசிரியர் அலெக்ஸாண்டிரா அல்பா ஆறுதலாக சுற்றிக் காண்பித்தார். மார்க்வெஸ் கேஸ்ட்ரோ நட்பின் பெருமிதத்தில் மார்க்வெஸ் வீடு இருக்கும் தெருவிற்கு ஹவானா தெரு என்று பெயரிட்டிருக்கிறார்கள். அரிவாள் சுத்தியல் சின்னத்தோடு லெனின் பாந்தமாக வரையப்பட்டிருக்கும் ரஷ்யன் பாரில் கொல்மபியன் கஃபே குடித்துவிட்டு ஹோட்டல் திரும்பும் போது என் கைபேசி தொலைந்து போனது. கொலம்பியப் போலீஸில் புகார் கொடுத்தேன். கொள்ளையர்களுக்கும், கஞ்சா மாஃபியாக்களுக்கும், கொடுங்குற்றங்களுக்கும் பெயர் போன நகரத்தில் ஐஃபோன் தொலைவதெல்லாம் காது குடைகிற சமாச்சாரம் என்பது போல என்னை இளக்காரமாகப் பார்த்தார்கள்.
ஆனாலும் மார்க்வெஸ்ஸின் “There are no thieves in this town” சிறுகதையின் நாயகன் டமோசோ (Damaso) போல குற்றவுணர்வுக்கு ஆளாகி என் கைபேசியைத் திருப்பிக் கொண்டு வந்து தந்துவிட மாட்டானா என்ற நப்பாசையில் அடுத்தடுத்த நாட்களில் வீதிகளைக் காவித் திரிந்தேன். ஒரு பயனுமில்லை. என் வருத்தமெல்லாம், அந்த நாட்களில் backup எடுக்கத் தவறியதால் இல்லாமல் போன கொலம்பிய புகைப்படங்களும் வீடியோக்களும் தான். சோசியல் மீடியாக்களிலும் வாட்ஸ்அப்பிலும் நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மட்டும் தான் மிஞ்சின. நடந்து நடந்து கால்கள் வலிக்கும் போதெல்லாம் Abaco Libros Cafe – என்ற அபூர்வமான புத்தகக் கடை -லைப்ரரி – கஃபேயில் எந்தப் புகாரும் இல்லாமல் நேரம் செலவழித்தேன். காலனியாதிக்கத்தின் போது அடிமைகளாக கொலம்பியாவிற்கு கொண்டு வரப்பட்ட கறுப்பர்கள் வாழ்ந்த பகுதி கெட்ஸ்மானியையும் அப்படியே மாற்றுக் குறையாமல் சுற்றுலாப் பயணிகளுக்காக கொஞ்சம் நவீனப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மயக்கும் ஜாஸ் இசையும், அசத்தும் சுவர் சித்திரங்களும், தெருக்களில் அமர்ந்து டோமினோ விளையாடிக்கொண்டும், புட்பால் அடித்துக் கொண்டும் அப்போது தான் பார்த்திருந்தாலும் வீட்டிற்குள் அழைக்கும் அன்பான மக்களுமென எனக்கான இடம் கெட்ஸமானி தான். அடுத்த தடவை கார்ட்டஹீனா செல்லும் வாய்ப்பு வரும்போது அங்கு தான் அறையெடுத்துத் தங்க வேண்டும் என்று முடிவு. கொரோனாவின் ஆசீர்வாதத்தால் கார்ட்டஹீனாவின் அசலான உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளை பார்க்கவே முடியாமல் போனது. என் அரகடக்கா பயணத் திட்டமும் கவிழ்ந்தது.
டச் ஏர்லைன்ஸில் இருந்து அடுத்த விமானத்திற்கான செய்தி வர ஒரு மெல்லிய நூல் போன்று ஆடிக்கொண்டிருந்த வாழ்வை மிக ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தேன்.
அறுபது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புனுவலின் படம் ஒன்று உண்டு. Exterminating Angel எனும் அந்த சர்ரியல் படத்தில் Senor Edmundo Nobile என்கிற மேன்சனில் ஆடம்பரமான விருந்துக்கு எல்லோரும் கூடியிருப்பார்கள். வேலையாட்கள் ஒவ்வொருவராக மறைய, விருந்துண்ட மயக்கத்தில் உறங்கிப் போகிறார்கள் விருந்தில் கலந்து கொண்ட மேன்மக்கள். காலையில் எழுந்து பார்த்தால் ஏதோ ஒரு சக்தி தடுக்க அவர்களால் அங்கிருந்து வெளியேறவே முடியாமல் போய் விடும். நாளுக்கு நாள் உணவுப் பொருட்கள் குறைந்து, உடல்நலம் – மனநலம் எல்லாம் கெட்டு, மனித குணங்கள் மாறி மிருகங்கள் போல அடித்துக்கொள்ளத் தொடங்குவார்கள். இவர்களைப் பூட்டி வைத்திருக்கும் அந்த இன்மபுரியாத சக்திக்கு Exterminating Angel என்று புனுவல் பெயர் வைத்திருப்பார். கொத்துக் கொத்தாய் கொன்று கொண்டிருக்கும், மனிதர்களை மந்தைகள் மாதிரி கொட்டிலில் அடைத்து வைத்திருக்கும் கொரோனா தேவதையா துர்தேவதையா தெரியவில்லை. ஆனால் மனித குலத்திற்கான முக்கியமான செய்தி ஒன்றை கொண்டு வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. எந்தக் கோட்டையும் யாருடைய கிரீடமும் நிரந்தரமானதல்ல. நம்மை மண்டியிட வைக்க ஒரு தீ நுண்மம் போதும்.