கண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்

0 comment

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தல்ஸ்தோயின் ‘God sees the truth, but waits’ கதையை வாசித்தேன். எங்களது பாடத்திட்டத்தின் பகுதியாக அது இருந்தது. நான் வாசித்த முதல் தல்ஸ்தோய் கதை என்று நினைவு. எந்நேரமும் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்களுடன் கத்தியைத் தூக்கிக்கொண்டு திரிகிற மற்ற நீதிபோதனைக் கதைகளுக்கு நடுவே அது தனித்திருந்தது- பிறரது வலிகளைக் கடத்தவல்ல கதையாகப்பட்டது. அதன் பொதுமையிலிருந்து முழுமையை நோக்கி நகர முடிந்திருந்தது. அக்சினோவின் ஆழத்தனிமையில் தெளிவாய்ப் புலப்பட்டும் குழப்பமாய் மங்கியும் அலைமோதிக் கதுவுகின்ற சஞ்சலங்களின் புதிர்த்தன்மையில் என் மனம் அசைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆற்றுப்பாறைகளைக் கொஞ்சிக் குலாவி உருண்டோடிக்கொண்டிருக்கும் வெண்ணீர் மணிகள் திடீரென ஆவேசங்கொண்டிணைந்து சுழல் உருவானதைப் போல அது என்னை உள்ளிழுத்துக்கொண்டது. முணுமுணுக்கிற சிற்றகல் சுடரை காற்று அசைத்து ஆட்டங்காட்டி அச்சுறுத்தி நிறுத்தியது போலானது. சீராக விட்டுக்கொண்டிருந்த மூச்சை இழுத்துப்பிடித்தது மாதிரி என் மனம் விதும்பியது. எதையோ பெரிதாகக் கண்டடைந்துவிட்ட பூரிப்பில் மிதந்தது.

அதற்குப் பிறகுதான், தல்ஸ்தோயின் புனைவுக் கதைகளைத் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன். ஆர்க்கெஸ்ட்ராவை ஒருங்கமைக்கிற இசை நடத்துனரின் இலாவகத்துடன் தனது கதைகளை எழுதிச் செல்கிறார் தல்ஸ்தோய் என்று ஒவ்வொரு கதையின் முடிவிலும் தோன்றும். ‘இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை’ என்கிற அலட்சிய பாவனையுடனும் ஆழ்ந்த நிதானத்துடன் இசையரங்க மேடையை அவர் நோக்குகிறார். அவரது கையசைப்பிற்கேற்ப இசைந்து முயங்கிடத் துடிக்கும் பலநூறு இசைக்கருவிகள் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதாபாத்திரம். அதன் பிரம்மாண்ட அணிவரிசையைக் கண்டதுமே நம் கண்கள் நிலைகுத்தி மலைத்துவிடுகின்றன. காதுகள் கூர்மையடைகின்றன. மனவிரிவின் முடிவிலாத் தன்மையில் ஊற்றமடைந்து மிழற்றும் உள்ளக்கிடக்கையை எண்ணி உடல் துள்ளுகிறது. எதைப் பார்ப்பது? எதைக் கேட்பது? எதை உணர்வது? எதை அள்ளுவது? எதை விடுவது? நம் மனப்பொக்குகளில் விழுந்து எழுந்து புரள்வதெல்லாம் வேறொன்றாக உருமாறி மறைகிற மின்விரைவுச் சுழற்சியில் நல்லன அனைத்தையும் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆவலாய்ப் பறக்கிறது மனம். அது சாத்தியம்தானா?

மனிதர்களின் உள்வாங்கிக்கொள்கிற திறனைக் குறித்தெல்லாம் தல்ஸ்தோய்க்கு அக்கறையில்லை. நாம் அவருக்குப் பொருட்டேயல்ல என்பது மாதிரி தன்னுள் முகிழ்க்கும் பொருவற்றா போதத்தின் இலயிப்பில் இசைக்குறிப்புகளைப் பணிப்பிக்கத் தொடங்குகிறார். ஏதோவொரு மூலையிலிருந்து ட்ரம்ப்பெட் முழங்குகிறது. தந்திக் கம்பிகளின் மீட்டலில் வாத்தியங்கள் அத்தனையும் உயிர் இயைவுகொள்கின்றன. தேன் தடவின இயம்பலில் பொங்கும் இயம் அனைத்தும் இழைந்து தேய, உள்ளுள்ளும் வெளியேயும் ஊறும் திளைத்தேறல் எங்கணும் இசையே முதலும் மூலமும் ஞாலமும் ஆகி நம்மைக் கடைத்தேற்றுகிறது. பியானோ கட்டைகளின் உற்சாக குதியாட்டங்களில் அமிழ்து களிக்கிறது. அரங்குக்குள் பெருமழை வீசியறைவதைப் போல பேருவகையுடன் சொரிகிறது கானம். மெல்ல மெல்ல வேகமெடுத்துவரும் ட்ரம்ஸின் தப்படிகளில் குதிரைக் குளம்பொலிகளின் ஒத்திசைவு. போருக்கான சமிக்ஞைகளை முழவு எக்காளமிடுகிறது. எங்கோ தூரத்திலிருந்து புள்ளொலிகள் எழுகின்றன. அந்தப் பெருமுழக்கங்களுக்கிடையே தானும் இருப்பதைக் காட்டிக்கொள்கிற முனைப்பில் ஒரு பொன்வண்டு ரீங்காரமிடுகிறது. வாத்தியக் கருவிகளின் அடர்ந்தேற்ற ஆராதித்தல்களில் தல்ஸ்தோயின் இடையீடு இல்லாமலில்லை. அவரது கைகள் நிகழ்த்துகிற மாயாஜாலங்களும் அந்த இசைக் கச்சேரியின் பகுதியே! நாம் அவரையும் இசைச் சங்கமத்தையும் மாறி மாறி கவனிக்கிற இடைவெளியில்தான் ஒரு சிம்பொனியை இயற்றிக்கொண்டு செல்கிறார் தல்ஸ்தோய்.

ஹாஜி முராத் அவருடைய கடைசி நாவல். அவரது மறைவுக்குப்பின் வெளியானது. இதை ஏழெட்டு ஆண்டுகளாக தல்ஸ்தோய் செப்பனிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. ஓர் அநாமதேய கதைசொல்லியின் பார்வையில் ஹாஜி முராத் என்கிற வரலாற்றுக் கதாபாத்திரத்தின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை விவரிக்கிறது. கால்நடைத் தீவனமான உலர்புல் அறுவடை முடிந்திருந்த நடுவேனிற்காலத்தின் மாலைப் பொழுதொன்றில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு தார்த்தாரியப் பூவைக் கண்டெடுக்கிறான் கதைசொல்லி. அது ஒருவகையான நெருஞ்சி முட்செடி. தன்னைப் பறிக்க முயல்பவரைக் காயப்படுத்திவிடும் முரட்டு இயல்புகொண்டது. அந்த மலரைப் பார்க்கையில் அவனுக்கு ஹாஜி முராதின் நினைவு வருகிறது. முராதைப் பற்றி பலர் சொல்லக் கேட்டதையும், தான் நேரடியாகக் கண்டதையும், கொஞ்சம் கற்பனை கலந்து நமக்குச் சொல்லத் தலைப்படுவதாக முதலிலேயே அவன் வாக்குமூலம் அளித்துவிடுகிறான். அந்தக் குறிப்பிட்ட வரியை வாசிக்கிற எவருமே தத்தம் முகத்தில் புன்னகை அரும்புவதைத் தவிர்க்க முடியாது. இதுகாறும் எழுதப்பட்ட புனைவுகளுள் மனிதகுல வரலாறே மாபெரும் கனவுவெளி. நாம் கைநீட்டினால் அகப்படுகிற எல்லைகளுக்குள் நின்றவாறுதான் அப்பாலுக்கு அப்பால் உள்ளதையெல்லாம் அளந்துபார்க்கத் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். இவ்வுண்மையை தல்ஸ்தோய் அளவுக்கு உணர்ந்திருந்தவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்.

அதனால், ஒரு தேர்ந்த கலை இயக்குநருக்குரிய நேர்த்தியுடனும் சாத்தியப்படத்தக்க கச்சிதத்துடனும் நிலனையும் பொழுதையும் நிர்மாணித்துச் செல்கிறார் தல்ஸ்தோய். படைவீரர்களின் அணிகலன்களையும் அவர்கள் உடுத்தியிருக்கிற செம்மறியாட்டுத் தோலாடைகளையும் தொப்பியில் சொருகப்பட்டிருக்கும் இறகின் அடர்த்தியையும் பெண்களின் முகத்தில் படர்ந்திருக்கிற செந்தவிட்டுப் புள்ளிகளையும் அவர்தம் கருவிழிகளின் நிறத்தையும் சிறிதும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் வர்ணிக்கிறார். அவை சில சமயங்களில் ஒன்றுபோலவும் சில நேரங்களில் வெவ்வேறாகவும் அமைந்திருக்கின்றன. மனிதர்கள் மட்டுமல்லாது வானம்பாடிகளும் புள்ளிமான்களும் குதிரைகளும்கூட அவரது பூனைக்கண் பார்வையிலிருந்து தப்புவதில்லை. படிப்படியாக வளர்த்தெடுக்கப்படுகிற விவரணைகளின் ஊடாகத் தெளிந்து வருகிற சித்தரிப்பில் தல்ஸ்தோயின் உள்ளார்ந்த நோக்கங்கள் உணரப்படாமலும் இல்லை. அவற்றின் மூலமாக, தான் அடைய நினைப்பதும் மனமொத்த வாசகருக்கு கடத்த முயல்வதும் எதுவோ, அதை நோக்கிய முழுமையான வெளிக்கொணர்தல்களிலேயே கதையின் ஒவ்வொரு காட்சியும் கருத்தும் அவரிடம் தொழிற்படுகிறது. ஆனால், தல்ஸ்தோயின் மேலதிக விவரிப்புகள் குறித்து பலரும் ஆயாசப்பட்டிருக்கிறார்கள். கதையின் விறுவிறுப்பில் சுணக்கம் ஏற்படுவதாக எடுத்துரைத்திருக்கிறார்கள். எனக்கென்னவோ, கதையை நீட்டி முழக்குவது போன்ற பாசாங்கில் அவர் நம்மை இழுத்துச்செல்ல முனைகிற திசைகளே வேறு என்றே தோன்றுகிறது.

எப்போதெல்லாம் தல்ஸ்தோயின் மனம் கவல்கிறது என்பதையும் எப்போதெல்லாம் உயிர்களின் அநாதி நிலையழிவுகளை அறுவடை செய்கிற விளைபுலமாகத் தழைக்கிறது என்பதையும் அவரது விவரிப்புகளின் வழியாகவே நான் புரிந்துகொள்கிறேன். எதிரிப் படையின் குதிரை நெருங்கிவிட்டதை உணர்ந்ததும் கிளர்ச்சியடைந்து படபடப்பாகிற தன்னுடைய குதிரையை, மேலும் மேலும் விரட்டிக்கொண்டவாறே, ஓர் ஆதூரமான இடக்கைத் தொடுகையால் அதனைச் சாந்தப்படுத்துகிற ஹாஜி முராதின் செய்கையை விவரிப்பது அவசியமற்றது எனச் சொல்லிவிட முடியுமா? வெட்டியெடுக்கப்பட்ட ஹாஜி முராதின் தலையிலிருந்து பீறிடுகிற கருஞ்சிவப்பு இரத்தம் தன் பூட்ஸ் கால்களைக் கறைபடுத்திவிடக் கூடாது என்கிற கவனத்துடன் கையாள்கிற படைத்தளபதியில் வெளிப்படுவது போரின் வலுவான தடங்கள்தானே? ஓர் உயிருக்கான மதிப்பு அவ்வளவுதான் என்பதை இதைவிட அழுத்தமாக எப்படிச் சொல்வது? முராதின் இரத்தமானது காய்ந்த புற்பரப்பை நனைத்தது என்று தல்ஸ்தோய் குறிப்பிட்டுச் சொல்லும்போதே அதன் அனாயசமான விவரிப்பில் அந்தக் காட்சியின் வீரியம் கடத்தப்பட்டு துக்கம் இறுகிவிடுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், புல்லின் நுனியில் தொடங்கி போர்க்களத்தின் பெருங்குழப்பங்கள் வரை அவர் கட்டியெழுப்புகிற அசாத்திய பிரம்மாண்டங்களில் அவரது உலகம் பரந்து விரிந்து முடிவற்றுத் திகழ்கிறது. கணக்கற்ற மனிதர்கள் தோன்றிப் பெருகியவாறும் தேங்கிச் சுருங்கியவாறும் அவரவர் போக்கில் நிலைபிறழாமல் ஒழுகிக்கொண்டு செல்கிறார்கள். அவரது புனைவுலகில் எதிர்ப்படுகிற ஒவ்வொன்றையும் அணுகி அறிந்த களைப்பில் நாம் மல்லாந்து பெருமூச்செறிகிற போது சட்டெனக் கண்படுகிற ஆகாசத்தின் விரிவில் எவருமே திடுக்கிடாமல் இருக்க முடியாது.

போர் குறித்து அவர் வழங்குகிற சித்திரங்களும் வேறானவை. நமது பிரமைகளை ஊதித் தள்ளுகிறவை. ஒரு கதாபாத்திரம் சொல்கிறது-

“போரில் பங்கேற்றவர்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாதிருக்க வாய்ப்பேயில்லை. அந்தக் காலத்தில் ரஷ்ய எல்லையில் நிகழ்ந்த போரில், உண்மையைக் கூறுவதானால் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும், எதிரிகளை நேருக்கு நேர் வெறிகொண்டு தாக்குவதென்பது கற்பனை செய்யப்பட்டு விரிவாக்கப்படுவதுதானே ஒழிய அங்ஙனம் ஒருபோதும் சம்பவிப்பவதில்லை. ஒருவேளை, துப்பாக்கி முனை ஈட்டியாலோ வாட்களாலோ எதிரியை குத்திக் கொலைசெய்யும் வெறிச்செயல் எப்போதாவது நிகழ்ந்திருக்குமாயின் அது விபத்தாக நேர்ந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். தங்களது உள்ளக் கிளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் கர்வத்திலும் களிப்பிலும் தோய்வதற்கும்தான் நேரடி மோதல்கள் குறித்த கட்டுக்கதைகளை படைவீரர்கள் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் நன்றாக இருக்குமே என்கிற தங்களது எதிர்பார்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பிரயதனப்படுகிறார்கள். அவ்வளவுதான் விஷயம். பிறகு எப்படித்தான் போரை வெல்கிறார்களாம்? மரணத்திற்கு அஞ்சி போர்க்களத்திலிருந்து தப்பியோடுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே எந்தப் படை வெற்றிபெறுகிறது என்பதைத் தீர்மானிக்க முடியும்.”

ஹாஜி முராதின் கதையில் தல்ஸ்தோயின் அனுபூதியும் கலந்திருக்கிறது. தன் இளமைக் காலத்தில் கிரிமீயப் போரில் பங்குகொண்டிருந்திருக்கிறார். அதன் நெறிமுறைகளும் நெளிவு சுழிவுகளும் அவருக்கு அத்துப்படியானவை. போரின் போது நிகழ்கிற அபத்தங்களைப் பற்றியும் அட்டூழியங்களைப் பற்றியும் அவர் எழுதாதது என ஏதுமில்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் புதிதாகச் சொல்வதற்கு அவரிடம் ஏதோவொன்று எஞ்சியிருக்கிறது. பல்லாயிரம் பேர் இணைந்து ஈடுபடுகிற காரியத்திலும் அதிகாரத்திலுள்ள தனிநபர்களின் தந்திரச் செயல்பாடுகள் முந்திக்கொண்டு மேலெழுவதை பரிந்து தவிக்கிற முடுக்குதலுடன் கவனப்படுத்துகிறார். எங்கோ ஏதோ இரண்டு நபர்களுக்கிடையே ஒத்துப்போகவில்லை, இவன் சொல்லி நான் கேட்பதா என்கிற அகங்காரம் தணியவில்லை என்பதனால் அரசியல் நிலைப்பாடுகளே தடம் மாறுகின்றன. சுயநலன் பேணுவதே அவர்களது அடிப்படை நோக்கமாயிருப்பதால், தக்கவற்றைச் செயல்படுத்தத் தவறிவிட்டு தகாதவற்றுடன் கட்டிப்புரளும் அவல மனங்களின் முன், மன்னரின் ஆணைகளுக்கே எந்தவிதமான மதிப்புமில்லை என்பதைக் கடைவாயோர ஏளனப் புன்னகையுடன் காட்டிச் செல்கிறார்.

தல்ஸ்தோயைப் பொறுத்தவரை வரலாறு என்பது பல்லாயிரம் கைகள் சேர்ந்து முடைந்துகொண்டிருக்கின்ற மாபெரும் வலைப்பின்னல். அதில் எந்த முடிச்சு எங்கே – எப்போது விழும் என்பதோ அவிழும் என்பதோ கண்ணுக்குப் புலப்படாத பொறிகளின் – விசைகளின் சங்கமத்தால் ஒரே பொழுதில் அடைவிக்கப்படுகிறவை. அந்தச் சதியாட்டக் காய் நகர்த்தல்களில், நல்லியல்புகளை உடைய ஹாஜி முராதும் ஒரு பெரிய முடிச்சாக விழுந்துவிடுகிறான். அவனை அவிழ்க்கிற மும்முரத்தின் தோற்றரவில் அவனது கழுத்தை நெரிக்கிற கள்ளத்தனங்கள் உருவெடுக்கத் தொடங்குகின்றன. ஓர் உயிரைக் காவுகொடுத்து அவர்கள் சாதிக்கப் போவது என்ன? சொல்லப்போனால், தங்களுடைய அந்தரங்கக் கீழ்மைகள் காரணமாக ஒருவன் சாகக்கூடும் என்கிற நிதர்சனத்தை அறிகிற மதிநுட்பமே அவர்கள் எவருக்கும் இல்லை. ஆணவமும் தடித்தனமும் நறநறத்துக்கொண்டிருக்கிற மனதில், எதனாலும் கட்டுப்படுத்தவியலாத காழ்ப்புணர்ச்சியின் திரிகை வேர் பரப்புகின்றது. அவர்களின் சூம்பிப்போன கைகளிலா வரலாறு தம்மை ஒப்படைத்திருக்கிறது? அந்த வரலாறு எப்படிப்பட்டதாய் இருக்கும்? இன்றைக்கு நாம் திரும்பிப் பார்க்கிற வரலாற்றில் எங்கேனும் எப்போதேனும் ஏதாவது நல்லது நடந்திருக்குமாயின் அது கைதவறி நிகழ்ந்துவிட்ட அற்புதம் என்பதே தல்ஸ்தோயின் நிலைப்பாடு. அதைத் திறம்பட எடுத்தியம்புவதே ஹாஜி முராத் நாவலின் இலட்சியம்.

மண்ணிலிருந்து எழுந்து, உச்சத்தை நோக்கிப் பறந்து, வானில் அலைவுறுகிற நாவலாசிரியர்கள் அநேகம் பேர் உண்டு. தல்ஸ்தோய் வேறு விதமானவர். அவர், தன் கால்களை மண்ணில் அழுத்தமாகப் பதிந்தவாறே விண்ணை முட்டுவதில் அசகாய விற்பன்னர். ஒவ்வொன்றும் அதனதன் இயல்பிலிருந்து வழுவாமலும் பொருதிப்போயும் பயணப்படுகிற அல்லல்மிக்க வாழ்வின் மன அவசங்களைக் கண்காணிப்பதில் ஈடுஇணையற்றவர். அடைமழை ஓய்ந்தாலும் செடி மழை ஓயாது என்பதைப் போல ஒன்றைச் சிறப்புறச் சொல்லிக் கடந்துவிட்ட பிறகும் நிறைவின்மையின்பாற் சார்புறுகிற கலைஞனது மனத்திட்பத்துடன் வலம்வந்தவர். எதிலும் 360 பாகை முழுமையைக் கொண்டுவந்தவர். வேறென்ன சொல்வது? இன்னும் இன்னுமென அவரைக் குறித்து எவ்வளவு பிரமிப்பு கூட்டினாலும் அவை போதவில்லை எனத் திருப்தியற்று அரற்றுகிற மனத்தை என்னதான் செய்வது? மனத்தின் எல்லையைச் சொல்லால் விரட்டிச் சென்றவரை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

https://www.prlib.ru/sites/default/files/book_preview/aa056a4b-ed39-4a71-b51c-9d8b588db950/287408_doc1.jpg

இந்த நாவல் எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்த பின்னும் அதன் கட்டமைப்பும் உத்திகளின் சூட்சமும் நம் வியப்பைக் கோருபவையாக இருக்கின்றது. அடைக்கலம் தேடி ஊருக்குள் புதிதாக நுழையும் ஹாஜி முராதை சாக்காக வைத்துக்கொண்டு ஊர் நிலவரங்களின் மீது தன் கூரிய பார்வையைச் செலுத்திக்கொண்டே வருகிறார் தல்ஸ்தோய். அவனது கலங்கிய மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாகத் தஞ்சம் புகும் எண்ணங்களின் நகர்வில் அபாயங்கள் பொதிந்திருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக விரித்தெடுக்கிறார். முராத் போன்ற ஆட்களுக்கு, தாங்கள் எப்போதும் தனித்திருப்பது போலவும் தம்மைச் சார்ந்தோருடன் ஒத்துணர்வு இல்லாமல் ஆதரவற்றுக் கைவிடப்பட்டதைப் போலவும் தோன்றுவது இயல்பானதே. அதை நேர்செய்வதற்காக பலவகையான வழிமுறைகளை அவர்கள் கைக்கொள்வார்கள். முராதுக்கும் அப்படியொரு உள்மனக் குவியம் இருக்கிறது. அவன் தன்னுடைய பகற்கனவுகளில் நிறைவுகொள்கிறவன். தலைமறைவாய்த் திரிய நேர்ந்துவிட்ட சூழல் குறித்த அவமானத்தைக் கொஞ்ச நேரம் மறந்துவிட்டு, இனிமேல் தன்வசப்படுத்த வேண்டிய தருணங்களை எண்ணி, தன் மனதில் அவற்றைப் படக்காட்சிகளாக ஓடவிட்டு ஒருமிப்புக்குள்ளாகிறான். தன்னை அரசியல் கைதியாகச் சிறைவைத்திருக்கும் அதிகாரியின் மனைவியிடம் ஈர்ப்புகொள்ளும் மனதைக் கடிவாளமிட முடியாமல் தடுமாறுகிறான். எல்லாத் திக்குகளிலிருந்தும் எதிரொலிக்கும் அதட்டல் குரல்களுக்கு இடையேயும் அவன் இன்பமாய்க் கனவு காண்பதை வாசிக்கையில், மனசை ஆட்டுவிக்கிற குடைச்சல்கள்தான் எத்தனை பலவீனமானவை என்னும் சிதறடிப்பு நிகழ்ந்துவிடுகிறது. மருட்சியும் பேரச்சமுமாய் கடக்கின்ற வாழ்க்கையை எழுதிச்செல்லும் போது சுய கழிவிரக்கத்தையும் வெறுப்பையும் ஊட்டுவதற்குப் பதிலாக நெகிழ்வைக் கொண்டுவருவது அத்தனை சுலபமல்ல. எதற்குச் சொல்கிறேனென்றால், ஹாஜி முராதை அங்குலம் அங்குலமாய் அகழ்ந்தெடுக்கிற பணியில் தல்ஸ்தோயிடம் துளியும் சலசலப்பில்லை. அதன் நேர்த்தியில் மழுங்கலில்லை.

இந்த நாவலின் மையக் கதாபாத்திரத்தைத் தவிர்த்து, வேறு யாருக்கெல்லாம் தல்ஸ்தோய் தனி அத்தியாயங்களை ஒதுக்கியிருக்கிறார் எனக் கவனிப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும். முதலாம் நிக்கோலஸ் மன்னனுக்கு, இளவரசர் செர்னிஷோவிற்கு, புதிதாகப் பதவியுயர்வு பெற்றிருக்கும் பட்லருக்கு, படைப்பிரிவின் கடைநிலைச் சிப்பாயான அவ்தேயேவிற்கு. வழுக்கைத் தலையும், தான் குனிந்து பார்த்தால் கால் பாதங்களை மறைக்கும் தொந்தியை உள்நோக்கி எக்கித்தள்ளும் பிரயாசையில் இறுக்கிக் கட்டின பெல்ட்டுமாக உலா வருவதாக நிக்கோலஸ் மன்னனைச் சித்தரிக்கிறார் தல்ஸ்தோய். நிக்கோலஸ் எடுக்கிற முடிவுகளெல்லாம் அவருடைய அப்போதைய மனநிலையைப் பொறுத்தே குரூரமாயும் முட்டாள்தனமாயும் அமைகின்றன. மரண தண்டனை விதிக்கக் கூடாது என்கிற உயரிய கொள்கையுடன் செயல்படுவதாய்ப் பெருமிதப்பட்டுக்கொள்பவர், ஒரு வந்தேறி மாணவனுக்கு ஐயாயிரம் கசையடிகளைத் தண்டனையாக விதிக்கிறார். ‘இதற்கு மரண தண்டனையே மேல்’ என உள்ளுக்குள் நினைத்துக்கொள்கிற செர்னிஷோவினால், ‘அபாரமான யோசனை’ என்று வாய்விட்டுப் பாராட்ட மட்டுமே முடிகிறது. மன்னனுடன் ஒப்பிடும்போது செர்னிஷோவ் ஒன்றும் சளைத்தவரல்ல. அவரும் தனக்குரிய மட்டத்தில் நின்றுகொண்டு தன்னால் இயன்ற பாதகங்களைச் செய்துகொண்டிருப்பவர்தான். ஹாஜி முராதின் சரணடைதலை வோரொந்த்சோவ் வெற்றிகரமாகக் கையாண்டுவிட்டார் எனில், நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொண்டு, தன்னை மீறிவிடுவாரோ என்கிற பதைபதைப்பில் முராதின் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு செய்தி அனுப்புகிறார் செர்னிஷோவ். உண்மையில், சரணடைதல் தொடர்பாக வோரொந்த்சோவின் கடிதம் வந்துசேர்ந்த அன்றைக்கு நிக்கோலஸ் மன்னன் இனிமையான மனநிலையில் இருக்கிறார். முராதின் யோசனைகளுக்குச் செவிமடுத்து அவனைப் பக்குவமாய்க் கையாளுமாறு உத்தரவிடுகிறார். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற நல்ல மனநிலையில் செர்னிஷோவ் இல்லை.

https://pictures.abebooks.com/RUSLANIA/22588894370.jpg

பட்லரின் நட்பார்ந்த குணவியல்புகளைக் கடைபரப்பிக்கொண்டு வரும்போதே அவனொரு சூதாடி என்கிற தகவலையும் நம் மனத்தில் போட்டு வைக்கிறார் தல்ஸ்தோய். இறுதியில், ஒரு கடைநிலை ஊழியனிடம் சூதாடித் தோற்று 470 ரூபிள்களுக்கு கடனாளியாகிறான். பிறகு, என்ன செய்வான் என எதிர்பார்க்கிறீர்கள்? மிதமிஞ்சிக் குடிப்பானா? அழுது புலம்புவானா? திக்கற்று அலைந்து இரவைக் கழிப்பானா? அந்த மாதிரியான வழக்கங்களுக்குள் எல்லாம் வாசகரை நெட்டித்தள்ளுவது தல்ஸ்தோய் மேதமையின் இயல்பல்ல. அந்தத் துக்கத்தைச் சந்திக்கத் துணிவில்லாமல் தொடர்ச்சியாகப் பதினெட்டு மணிநேரம் தூங்கியெழுகிறான் பட்லர்.

அவ்தேயவைப் பற்றிச் சொல்லும்போது ரஷ்யப் படைப்பிரிவில் சேர்ந்த அவனது பின்னணிக் கதையையும் விரிவாகவே அறியச் செய்கிறார். அவனுடைய அண்ணனுக்குத் திருமணமாகி குழந்தை இருப்பதால் புதிதாகத் திருமணமான அவ்தேயவைப் போருக்கு அனுப்பி வைக்கிறார்கள். போருக்கு யாரை அனுப்புவது என்பது குறித்த பேச்சு வரும்போது அவனே முன்வருகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அதுபற்றின நன்றியுணர்ச்சியோ அவன்மீதான அக்கறையோ ஏதுமின்றி அவனது வீட்டார் நடந்துகொள்கிறார்கள். அவனது கைச்செலவுக்குக்கூட அவர்கள் பணம் அனுப்புவதில்லை. ஒருவழியாக, நெடுங்காலம் கழித்து, போனால் போகிறதென பணம் அனுப்பிவிட்டுக் காத்திருந்த சமயத்தில் அது திரும்பி வந்துவிடுகிறது. அவ்தேயவ் செத்துப்போய்விட்டான். இதெல்லாம் சாதாரணமாகத் தெரியலாம். எவரும் எழுதிவிடக் கூடியதுதானே என்றும் தோன்றலாம். அந்த இடத்தில்தான், அவ்தேயவ் திருமணம் செய்துகொண்டு கைவிட்டுப்போன மனைவியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் தல்ஸ்தோய். கணவன் இறந்த துக்கச் செய்தியைக் கேட்டு, ஒருபாட்டம் அழுதுத் தீர்த்துவிட்டு, மனதில் எழுந்த கசப்பைக் காறி உமிழ்கிறாள் அவள். தான் தையற்காரனுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதைப் பற்றி ஊரார் இனிமேல் புறம்பேச முடியாது என்றெண்ணி ஆசுவாசமடைகிறாள். அப்போதும் தல்ஸ்தோய் அந்தப் பகுதியை முடிக்கவில்லை. அவனுடனான முந்தைய கூடலின்போது, தான் சுமக்கிற கருவை ஏற்றுக்கொள்வதாக அவன் அளித்திருந்த வாக்குறுதியைத் தற்போது காப்பாற்றுவானா எனச் சந்தேகிக்கிறாள். அவை தன்னைத் தேற்றும் பொருட்டு முயக்கத்தின்போது சொல்லப்பட்ட வெற்று ஆறுதல் வார்த்தைகள்தானா என்று குழம்பித் தவிக்கிறாள்.

இந்த நாவலின் கதையை எழுதிக்கொண்டு வருகிற அடாவடித்தனமான செயலிலும் நான் தல்ஸ்தோயைப் பற்றித்தான் சொல்கிறேன் என்பதை கவனிக்கலாம். மரணம் நெருங்கிக்கொண்டிருக்கும் தறுவாயில் இந்த நாவலை அவர் எழுதி முடித்திருந்தார். மரணத்திற்குப் பிறகு என்ன என்பதை ஹாஜி முராதின் வழியாக தனக்கே நினைவூட்டிக்கொண்டாரோ என்னவோ? உள்ளோ புறமோ, அகமோ வெளியோ – ஒரு கண்சிமிட்டலின் கணத்தைக்கூட நின்று நிதானித்து காட்சிப்படுத்துகிற நுட்பங்களில் அவர் என்றென்றும் நீடித்து நிலைப்பார். அந்த வகையில், உலக இலக்கியப் பரப்பில் அவர் அடைந்த ஈடேற்றத்தைத் தொட்டணைந்தவர் வேறு எவருமில்லை.