ஜிம்பல் எனும் முட்டாள் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

by எஸ்.கயல்
1 comment

1

நான் ஜிம்பல் என்கிற முட்டாள். நான் என்னை முட்டாள் என்று நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படித்தான் என்னை அழைக்கிறார்கள். நான் பள்ளியில் இருந்த காலத்திலேயே அந்தப் பெயர் என்னை வந்தடைந்தது. மொத்தமாக எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: அறிவற்றவன், கழுதை, ஆளித் தலையன், மடையன், சிடுமூஞ்சி, மூடன், அப்புறம் முட்டாள். இதில் கடைசிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனத்தில் என்னவெல்லாம் அடங்கியிருந்தது?

என்னை எளிதாக ஏமாற்றிவிட முடியும். அவர்கள், “ஜிம்பல் உனக்குத் தெரியுமா? மத குருவின் மனைவி பேறுகாலத்தில் இருக்கிறாள்” என்றார்கள். நான் அதனால் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டேன். ஆனால் அது பொய் எனப் பிறகு தெரிந்தது. அதை எப்படி நான் முன்பே அறிந்திருக்க முடியும்? அவளுடைய வயிறு பருத்திருக்கவில்லை. ஆனால் நான் அவள் வயிறை அதுவரை பார்த்ததே இல்லை. அது அவ்வளவு முட்டாள்தனமா என்ன? அந்தக் கும்பலில் இருந்தவர்கள் சத்தமாகச் சிரித்து, கழுதையின் குரலில் கனைத்து, தம் கால்களைத் தரையில் பலமாக உதைத்து நடனமாடி ஒரு நல்லிரவு வாழ்த்துப் பாடலைப் பாடினார்கள். பிரசவம் முடிந்த பெண்கள் பச்சை உடம்புக்காரியாக இருக்கையில் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு வழக்கமாகத் தரப்படும் உலர் திராட்சையைத் தராமல் அவர்கள் என் கைகளில் ஆட்டுப் புழுக்கையை வைத்து அழுத்தினார்கள்.  நான் பலவீனமானவன் இல்லை. நான் ஒருவனை அறைந்தால் அவன் அப்படியே நேராக க்ரேகோ நகரத்தில் போய் விழுவான். உண்மையில் நான் முரட்டு இயல்புடையவன் இல்லை. இது கடந்து போகும் என்று நான் எனக்குள் நினைத்துக் கொள்வேன். ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது ஒரு நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டேன். எனக்கு நாய்களிடம் பயம் இல்லை. ஆனால் எனக்கு அவற்றை எதிர்கொள்ள விருப்பமில்லை. ஒருவேளை அதிலொரு நாய்க்கு வெறியேறி இருந்து அது உங்களைக் கடித்தால் இந்த உலகில் ஒரு மாயசக்தி வாய்ந்த மருத்துவரால் கூட உங்களுக்கு உதவ முடியாது என்பதால் நான் தலைதெறிக்க ஓடினேன். பிறகு நின்று திரும்பிப் பார்த்தால் மொத்த சந்தையும் என்னைப் பார்த்து பலமாகச் சிரித்துக் கொண்டிருக்கும் ஒலி கேட்டது. அது நாயே இல்லை. வுல்ஃப் லைப் எனும் திருடன். அது அவனுடைய ஓசை என்று எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? அந்த ஒலி நாய் ஊளை போலவே இருந்தது.

என்னை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று தெரிந்துகொண்ட ஒவ்வொரு போக்கிரியும் ஏமாற்றுப் பேர்வழியும் தங்கள் அதிர்ஷ்டத்தை என்னை வைத்து சோதித்துப் பார்த்தனர். “ஜிம்பல், ஜார் அரசர் ஃபராம்போலுக்கு வருகிறார்; ஜிம்பல், நிலா டர்பீனில் விழுந்துவிட்டது; ஜிம்பல், ஹோடல் ஃபர்பீஸ் எனும் சிறுவன் பொதுக் குளியல் அறைக்கு பின்புறம் ஒரு புதையலைக் கண்டெடுத்தான்” என்பார்கள். நானும் களிமண்ணால் செய்த மனிதன் போல அவர்கள் அனைவரையும் நம்பினேன். இதில் முதல் விசயம், விஸ்டம் ஆஃப் ஃபாதர்ஸ் நூலில் எழுதப்பட்டுள்ளது போல எல்லாமே சாத்தியம் தான். எப்படி என்பதை நான் மறந்துவிட்டேன். இரண்டாவது, மொத்த ஊரும் என்னை மோசமாக நடத்தும் போது நான் அதை நம்ப வேண்டியிருக்கிறது. நான் எப்போதாவது துணிச்சலாக. “நீங்கள் விளையாடுகிறீர்கள்” என்று சொன்னால் அது பிரச்சினை ஆகிவிடுகிறது. மக்கள் கோபப்படுகிறார்கள். “இதற்கு என்ன பொருள்? எங்கள் அனைவரையும் நீ பொய்யர்கள் என்று அழைக்க விரும்புகிறாயா?” என்றனர். நான் என்ன செய்ய முடியும்? நான் அவர்களை நம்பினேன். அதுவாவது அவர்களுக்கு எதாவது நன்மை செய்திருக்கும் என நான் நம்புகிறேன்.

நான் ஒரு அநாதை. என்னை வளர்த்து வந்த தாத்தாவின் உடல் ஏற்கனவே கல்லறையை நோக்கித் தாழ்ந்து கொண்டு இருந்தது. ஆகவே அவர்கள் என்னை ஒரு பேக்கரி கடைக்காரரிடம் பணிக்கு அமர்த்தினர். அது எப்பேர்ப்பட்ட காலக்கட்டமாக எனக்கு அமைந்தது! நூடுல்ஸ் வாங்குவதற்காக ‌அங்கு வந்த ஒவ்வொரு பெண்ணும் ஒரு முறையாவது என்னை முட்டாளாக்குவர். “ஜிம்பல், சொர்க்கத்தில் ஒரு சந்தை இருக்கிறது; ஜிம்பல், மதகுருவின் மனைவி ஏழாம் மாதத்தில் ஒரு கன்றைப் பிரசவித்தாள்; ஜிம்பல், ஒரு காகம் கூரை மீது பறந்து வந்து செம்பு முட்டைகளை இட்டது”. ஒருமுறை எஷிவா பல்கலைக்கழகத்தில் இருந்து வாட்டப்பட்ட ரொட்டியை வாங்குவதற்காக வந்த ஒரு மாணவன், “ஜிம்பல், நீ இங்கே இந்த ரொட்டிக் கடையில் நீளமான கரண்டியால் சுரண்டிக் கொண்டிருக்கையில், அங்கே மீட்பர் தோன்றிவிட்டார். இறந்தவர்கள் மீண்டுவிட்டார்கள்” என்றான். “நீ என்ன சொல்கிறாய்? நித்தியத்தன்மையின் கொம்புகள் வாசிக்கப்படும் ஒலி எனக்குக் கேட்கவே இல்லையே”, “நீ செவிடனா?” என்றான் அவன். எல்லோரும் அழத் துவங்கி, “நாங்கள் அதைக் கேட்டோம்! கேட்டோம்” என்றனர். கொழுப்பில் தோய்த்து மெழுகுவர்த்தி செய்கிற ரீட்ஸ் அப்போது அங்கு வந்து தன் கரகரப்பான குரலில், “ஜிம்பல், உன்னுடைய அம்மாவும் அப்பாவும் கல்லறையிலிருந்து எழுந்து விட்டனர். அவர்கள் உன்னைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்” என்றாள்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்படிப்பட்ட எதுவும் நடந்திருக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் ஊர்மக்கள் அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது நான் என்னுடைய கம்பளிச் சட்டையை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். போய்ப் பார்ப்பதால் எனக்கு என்ன குறைந்து விடப் போகிறது! பூனை கத்துவது என்ன ஒரு இசை! இதற்குப் பிறகு நான் எதையும் நம்பக் கூடாது என்று ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. எனக்கு தலையும் வாலும் புரியாத அளவிற்கு என்னை அவர்கள் குழப்பினார்கள்.

நான் அறிவுரை பெறவேண்டி என்னுடைய மதகுருவிடம் சென்றேன். அவர், “ஒரு மணி நேரம் தீயவனாக இருப்பதைவிட வாழ்நாள் முழுதும் முட்டாளாக இருப்பது மேல் என்று எழுதப்பட்டிருக்கிறது. நீ முட்டாள் இல்லை. அவர்கள் தான் முட்டாள்கள். அண்டை அயலாரை அவமானப்படுத்துபவன் தன் சொர்க்கத்தை இழக்கிறான்” என்றார். அவருடைய‌ மகள் என்னை வீட்டுக்குள் வரவேற்றாள். மதகுருவின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது அவள், “சுவரை முத்தமிட்டாயா?” என்று கேட்டாள். “ஏன்? எதற்காக?” என்றேன். அவள், “அது தான் சட்டம். ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் அதைச் செய்ய வேண்டும்” என்றாள். அதில் எதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவள் வெடிச்சிரிப்பு சிரித்தாள். ஓ! ஒரு அருமையான சூழ்ச்சியை என்மீது பிரயோகித்து விட்டாள். பரவாயில்லை. இருக்கட்டும்.

நான் வேறு ஊருக்குச் சென்றுவிட விரும்பினேன். ஆனால் எல்லோரும் எனக்கு வரன் பார்க்கும் விசயத்தில் மும்முரமாகி என்னைத் துரத்தியதில் என் மேலங்கியின் முனைகளைக் கிட்டத்தட்ட‌ கிழித்து விட்டனர். என் காதுகளில் தண்ணீர் வரும் வரை அவர்கள் என்னிடம் தொடர்ந்து பேசினர். அவள் கற்புடைய கன்னிப் பெண்ணில்லை. ஆனால் அவர்கள் ‌அவள் தூய்மையான கன்னி என்றனர். அவள் நொண்டியதையும் கூட, “அது அவளுடைய வெட்கத்தின் வெளிப்பாடு” என்றார்கள். அவள் தன்னுடன் வைத்திருந்த அப்பன் பெயர் தெரியாத ஒரு  குழந்தையை அவளுடைய தம்பி என்று அவர்கள் சொன்னார்கள். “உங்கள் நேரத்தை நீங்கள்  வீணாக்குகிறீர்கள். அந்த நடத்தை கெட்டவளை ஒருநாளும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று நான் உரக்கக் கத்தினேன். ஆனால் அவர்கள் சிறிதும் நியாயமற்று, “இப்படித்தான் பேசுவதா? உனக்கு வெட்கமாக இல்லையா? நாங்கள் உன்னை மத குருவிடம் அழைத்துச் சென்று அவள் மீது நீ வீண்பழி சுமத்தியதற்காக உனக்கு அபராதம் விதிக்கச் செய்வோம்” என்றார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்று எனக்குப் புரிந்தது. அவர்கள் என்னைத் தங்கள் இலக்காக்க முடிவு செய்துவிட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு கணவன் தான் தலைவன் என்பது அவளுக்கு  ஏற்புடையது எனும்போது எனக்கும் பிரச்சினை இல்லை. அதுமட்டுமின்றி எந்தச் சேதாரமும் இன்றி வாழ்ந்து முடிக்க முடியாது, அதை நாம் எதிர்பார்க்கவும் இயலாது.

மணல் மீது கட்டப்பட்டிருந்த களிமண்ணால் ஆன அவளுடைய வீட்டுக்குச் சென்றேன். அந்த மொத்தக் கும்பலும் உரக்கக் கத்திக்கொண்டும் குழுவாகப் பாடிக்கொண்டும் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர். கரடிகளைத் துன்புறுத்தி இன்பம் காணும் விளையாட்டை மேற்கொள்பவர்கள் போல அவர்கள் நடந்துகொண்டார்கள். நான் கிணற்றுக்கு அருகில் வந்ததும் அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில்  நின்றுவிட்டார்கள். அவர்கள் எல்காவுடன் எந்தப் பிரச்சனையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை அவள் வாயைத் திறந்தால் அது தாழ்ப்பாளின் கீல் வடிவில் இருக்கும். அவளுடைய நாக்கு கொடுமையாகப் பேசும் திறனுடையது. நான் வீட்டுக்குள் நுழைந்தேன். எல்லா சுவர்களிலும் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த கயிறுகளில் துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. வெற்றுக் கால்களுடன் அவள் நீர்த் தொட்டியருகில் அமர்ந்து துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள். யாரோ பயன்படுத்தி நிராகரித்த பட்டால் ஆன ஒரு பழைய மேலங்கியை அணிந்திருந்தாள். தன் தலை முடியை மெல்லிய வண்ணக் கயிறுகளால் சுற்றி தலைக்கு மேலே அலங்காரமாக இறுக்கிக் கட்டியிருந்தாள். அவளைப் பார்த்ததும் அங்கிருந்த எதைப் பற்றியும் அக்கறையில்லை எனுமளவுக்கு என் மூச்சே கிட்டத்தட்ட நின்றுவிட்டது.

நான் யாரென்று அவள் அறிந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. என்னை நோக்கி ஒரு பார்வையை வீசியவள், “வந்திருப்பது யார் பார்த்தீர்களா? மிகக் கவர்ச்சியானவன். வா! நாற்காலியில் உட்கார்” என்றாள்.

அவளிடம் எதையும் மறைக்காமல் நான் எல்லாவற்றையும் சொன்னேன். பிறகு அவளிடம், “உண்மையைச் சொல். நீ மெய்யாகவே ஒரு கன்னிப் பெண்ணா? விஷமம் நிறைந்த அந்தச் சிறுவன் நிஜமாகவே உன் தம்பியா? என்னை ஏமாற்றாதே. ஏனெனில் நான் ஒரு அநாதை” என்றேன். அவள், “நானும் ஒரு அநாதை தான். உன்னை யார் ஏமாற்ற முயற்சி செய்கிறார்களோ அவர்களின் மூக்கு நுனி தானாகத் திருகிக் கொள்ளும். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்ற முடியாது என்பதை அவர்களிடம் சொல்லிவிடு. எனக்கு வரதட்சணையாக ஐம்பது தங்க நாணயங்கள் தர வேண்டும். அத்துடன் அவர்களை இன்னும் கொஞ்சம் பணம் வசூலித்து வைக்கச் சொல். இல்லையென்றால் அவர்கள் என்னை…..உனக்குப் புரிகிறது தானே?” என்றாள். அவள் மிக வெளிப்படையாகப் பேசினாள். நான், “வரதட்சணை என்பது மணப்பெண் தரவேண்டிய ஒன்றே தவிர மணமகன் தருவது அல்ல” என்றேன். அதற்கு அவள், “என்னிடம் பேரம் பேசாதே. நேரிடையான ஒரு ஆமாம் அல்லது நேரிடையான ஒரு இல்லை. அப்புறம் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய்விடு” என்றாள்.

நான், ‘இந்த மாவிலிருந்து எப்போதும் எந்த ரொட்டியும் தயாரிக்க முடியாது’ என நினைத்துக் கொண்டேன். ஆனால் எங்கள் ஊர் ஒன்றும் வறுமையானது அல்ல. அவர்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு திருமண ஏற்பாடுகளை கவனிக்கத் துவங்கினார்கள். அப்போது பார்த்து ஆனில் வயிற்றுப் போக்கு கொள்ளை நோய் ஏற்பட்டது. கல்லறை நுழைவாயிலில் பிணங்களைக் குளிப்பாட்டும் சிறிய குடிசையருகே விழா நடைபெற்றது. மக்கள் குடித்தனர். திருமண ஒப்பந்தம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் மிகுந்த இறைபக்தியுடைய ஒரு மதகுரு, “மணமகள் விதவையா அல்லது விவாகரத்து ஆனவளா?” என்று கேட்டார். தேவாலயத்தில் ஊழியம் செய்பவரின் மனைவி, “இவள் விதவை; விவாகரத்து ஆனவளும் கூட” என்று பதில் அளித்தாள். எனக்கு அது ஒரு கறுப்புக் கணமாக இருந்தது. ஆனால் நான் என்ன செய்வது, மணப் பந்தலில் இருந்து ஓடவா முடியும்?

ஆடலும் பாடலுமாக இருந்தது. வயதான ஒரு கிழவி நரைத்த முடியுடைய வயோதிகன் ஒருவனை அணைத்தபடி என் எதிரே நடனமாடிக் கொண்டு இருந்தாள். அந்த உரத்த கொண்டாட்டத்தின் தலைவனாக செயல்பட்டவன் மணமகளின் பெற்றோர் நினைவாக “இறைவனின் கருணை” எனும் ஸ்தோத்திரத்தை சொன்னான். பள்ளி மாணவர்கள் டிஷே பி ஏவ் நோன்பு நாளின் போது கூவுவதைப் போல உற்சாகக் குரல் எழுப்பினார்கள். ரொட்டி தயாரிக்கப் பயன்படும் மாவுக் கட்டை, மாவு பிசைய உதவும் பெரிய கிண்ணம், வாளி, துடைப்பம், அகப்பை, ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் என திருமண விழாவுக்கு நிறைய பரிசுகள் தரப்பட்டிருந்தன. பலம்பொருந்திய இரண்டு இளைஞர்கள் ஒரு தொட்டிலை எடுத்துச் செல்வதைப் பார்த்தேன்.

“இது எதற்கு எனக்கு இப்போது?”என்று கேட்டேன். அவர்கள், “இதற்காக உன் மூளையைக் கசக்க வேண்டாம். அது பின்னால் உதவக்கூடும்” என்றார்கள். நான் வஞ்சிக்கப்படப் போகிறேன் என்று உணர்ந்தேன். இதையே வேறு விதமாகப் பார்த்தால் என்னிடம் என்ன இருக்கிறது இழப்பதற்கு! என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று தெளிவடைந்தேன். ஒட்டுமொத்தமாக ஒரு முழு ஊரும் பைத்தியக்காரத்தனமாக இருக்க முடியாதே!

2

என் மனைவி படுத்திருந்த இடத்திற்கு இரவு சென்றபோது அவள் என்னை அறைக்குள் அனுமதிக்கவில்லை. “இதற்காகத் தான் நமக்குத் திருமணம் செய்து வைத்தார்களா, சொல்!” என்றேன். அவள்,“நான் மாதாந்திரத் தொந்திரவில் இருக்கிறேன்” என்றாள். நான், “நேற்று அவர்கள் உன்னை சடங்குகளுக்கு உட்படுத்தினார்களே! இது அதற்குப் பிறகு நடந்தது. அப்படித் தானே?” என்றேன். “இன்று என்பது நேற்று இல்லை. அதே போல் நேற்று என்பது இன்று கிடையாது. உனக்கு இது பிடிக்கவில்லை என்றால் நீ இங்கிருந்து போகலாம்” என்று சுருக்கமாகச் சொன்னாள். நான் காத்திருந்தேன்.

அதற்குப் பிறகு வந்த நான்கே மாதங்களில் அவள் ஒரு சிசுவைப் பிரசவிக்கும் நாள் வந்தது. ஊர்மக்கள் தங்கள் சிரிப்பை வாயைப் பொத்தி மறைத்துக்கொண்டனர். ஆனால் நான் என்ன செய்வது? அவள் தாங்கமுடியாத வலியால் துடித்து விரல் நகங்களால் சுவரைப் பிராண்டினாள். “ஜிம்பல், நான் போகிறேன்! என்னை மன்னித்துவிடு” என்று அழுதாள். வீடு பெண்களால் நிறைந்திருந்தது. அவர்கள் பாத்திரங்களில் நீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அலறல் சத்தம் வானை எட்டியது. இப்போது நான் செய்யக்கூடியது தேவாலயத்துக்குச் சென்று ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடுவது தான். அதைத்தான் நான் செய்தேன். ஊர் மக்களுக்கு அது பிடித்திருந்தது. நான் ஒரு மூலையில் நின்று கொண்டு ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடியும் பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்தேன். ஊர் மக்கள் என்னைப் பார்த்து தலையசைத்து, “பிரார்த்தனை செய். பிரார்த்தனை செய்! பிரார்த்தனை எந்தப் பெண்ணையும் இதுவரை கர்ப்பமாக்கியதில்லை” என்றனர். பிரார்த்தனைக் கூடத்தில் இருந்த ஒருவர் ஒரு வைக்கோலை என் வாயில் இட்டு, “இது பசுக்களுக்கான வைக்கோல்” என்றார். இறைவனின் பெயரால் செய்யப்படும் இதிலும் எதோ பொருள் இருக்கும்.

அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தேவாலயத்தில் ஊழியம் செய்பவர்களில் ஒருவர் அந்த வெள்ளிக்கிழமையன்று சமயப் பள்ளியிலுள்ள உடன்படிக்கைப் பெட்டியின் முன் நின்று வாசிக்கும் மேசையைத் தட்டியபடி சொன்னார், “செல்வந்தனான திரு. ஜிம்பல் தன் மகனுடைய பிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்தச் சபையை விருந்துக்கு அழைக்கிறார்” என்றார். மொத்த பிரார்த்தனைக் கூடமும் சிரிப்பால் அதிர்ந்தது. என் முகம் கோபத்தில் சிவந்தது. ஆனால் இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. குழந்தையின் பிறப்புறுப்பிலுள்ள நுனித்தோலை நீக்கும் நிகழ்வுக்கும் மற்ற சடங்குகளுக்கும் நான் தானே பொறுப்பேற்க வேண்டும்!

எள் விழ இடமில்லாத அளவு நெருக்கியடித்தபடி ஊரில் உள்ள பாதி மக்கள் திரண்டு வந்தனர். பெண்கள் மிளகுத் தூள் சேர்த்த கொண்டைக் கடலையைக் கொண்டு வந்தனர். விடுதியில் இருந்து ஒரு சிறிய பீப்பாயில் மதுவும் கொண்டு வரப்பட்டது. நானும் அவர்கள் அளவுக்கு உணவு உண்டேன்; குடித்தேன். அவர்கள் அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். பிறகு குழந்தையின் பிறப்பு உறுப்பிலுள்ள நுனித் தோல் நீக்கப்பட்டது. குழந்தைகக்கு என் தந்தையின் பெயரைச் சூட்டினேன். அவருடைய ஆத்மா சாந்தியடைவதாக. அனைவரும் சென்ற பிறகு நானும் என் மனைவியும் தனித்திருக்கும் போது படுக்கையின் திரைச்சீலை வழியாகத் தன் தலையை நுழைத்து என்னை பார்த்த அவள், “ஜிம்பல் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? உன்னுடைய கப்பல் எதாவது கவிழ்ந்து விட்டதா?” என்று கேட்டாள்.

“நான் சொல்ல என்ன இருக்கிறது? நீ எனக்காக எவ்வளவு நல்ல ஒரு செயலைச் செய்திருக்கிறாய்! என் அம்மாவுக்கு இது தெரிந்தால் அவள் இரண்டாவது முறையாக இறந்திருப்பாள்” என்றேன்.

“உனக்கென்ன பைத்தியமா அல்லது வேறெதாவதா?” என்றாள்.

“கடவுளாகவும் தலைவனாகவும் இருக்கக்கூடிய ஒருவனை நீ எப்படி இத்தகைய ஒரு முட்டாளாக ஆக்கலாம்?” என்றேன்.

“உனக்கு என்ன பிரச்சனை? நீ என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறாய்”? என்று கேட்டாள்.

எதையும் மூடி மழுப்பாமலும் வெளிப்படையாகவும் நான் பேசியாக வேண்டி இருப்பதை அப்போது புரிந்து கொண்டேன். “ஒரு அனாதையை இப்படித்தான் பயன்படுத்திக் கொள்வதா? அப்பன் பெயர் தெரியாத ஒரு குழந்தையை நீ பெற்றெடுத்து இருக்கிறாய்” என்றேன்.

“இந்த முட்டாள்தனத்தை உன்னுடைய தலையிலிருந்து துடைத்தெறி. இது உன்னுடைய குழந்தை” என்று அவள் பதில் சொன்னாள்.

“அவன் எப்படி என்னுடைய குழந்தையாக இருக்க முடியும்? நமக்குத் திருமணமான 17 வாரங்களில் அவன் பிறந்துவிட்டான்” என்று நான் வாதிட்டேன்.

“அவன் உரிய காலத்திற்கு முன்பே பிறந்த ஒரு குழந்தை” என்றாள் அவள்.

“உரிய காலத்திற்கு மிக மிக முன்பே பிறந்த குழந்தையாக உனக்குத் தோன்றவில்லையா?” என்றேன். அவளுக்கு ஒரு பாட்டி இருந்ததாகவும் அவளும் தன்னைப் போல மிகக் குறைந்த காலமே கர்ப்பம் தாங்கியதாகவும் சொன்னவள் ஒரு துளி தண்ணீர் எப்படி இன்னொரு துளியைப் போலவே இருக்குமோ அப்படித் தான் இதுவும் என்றொரு உவமையை வேறு சொன்னாள். சந்தையில் இருக்கின்ற ஒரு விவசாயி எவற்றின் மீதெல்லாம் சத்தியம் வைத்தால் நாம் நம்புவோமோ அவற்றின் மீதெல்லாம் அவள் சத்தியம் வைத்தாள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் அவளை நம்பவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை நான் இதைப்பற்றி மதகுருவிடம் பேசியபோது அவர், “ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கூட இதுவே தான் நடந்தது” என்று சொன்னார். இருவராகப் படுக்கைக்குச் சென்றவர்கள் காலையில் நால்வராகத் திரும்பினார்கள் என்றார்.

“உலகிலுள்ள ஒரு பெண்ணில்லாது எல்லாருமே ஏவாளின் பேத்திகள் தான்” என்றார். இப்படியே தான் என்னை ஊமையாக்கி அவர்கள் வாதிட்டனர். ஆனால் உண்மையில் அத்தகைய விசயங்கள் எவ்வாறு இருந்தன என்று யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய துயரத்தை மறக்கத் துவங்கினேன். குழந்தையின் மீது பித்தாக இருந்தேன். அவனும் என்னை நேசித்தான். என்னைப் பார்த்தவுடன் தன்னுடைய பிஞ்சுக் கைகளை அசைத்து தன்னைத் தூக்கிக் கொள்ளும்படி கேட்பான். அவன் வயிற்றுவலியால் தவிக்கும் போது நான் மட்டும் தான் அவனைச் சமாதானப்படுத்துவேன். குழந்தைகளின் பால் பற்கள் வளர்கையில் வாயில் வைத்துக் கடிக்க பெற்றோர் தரும் ஒரு மோதிரமும் ஒரு சிறிய சறுக்கும் தொப்பியும் வாங்கித் தந்தேன். அவனுக்கு எப்போதும் யாருடைய கண் திருஷ்டியாவது பட்டுக்கொண்டே இருந்தது. நான் ஓடோடிப் போய் மந்திரத் தாயத்தை வாங்கி வந்து அதிலிருந்து அவனைக் காப்பாற்றி திருஷ்டியை நீக்குவேன். நான் மாடு மாதிரி உழைத்தேன். வீட்டில் ஒரு குழந்தை இருக்கிற போது செலவுகள் எப்படி அதிகமாகும் என்பது உங்களுக்கே தெரியும். நான் அதைப் பற்றி பொய் சொல்ல விரும்பவில்லை. சொல்லப் போனால் நான் எல்காவையும் விரும்பாமல் இல்லை. அவள் என்னைப் பலவிதமாக  சபிப்பாள். நான் அவளை முழுதும் நேசிக்க அவள் எனக்கு வாய்ப்பே தரவில்லை. அவளுக்குத் தான் எவ்வளவு பலம்! அவளை ஒரு பார்வை பார்த்தால் நாம் பேசும் சக்தியையே இழந்துவிடுவோம். எப்போதும் உரத்த குரலில் ஒலிக்கும் அவளுடைய பேச்சு கந்தகம் கலந்தது போலிருந்தாலும் எப்படியோ அதில் ஒரு அழகு இருக்கும். அவளுடைய ஒவ்வொரு சொல்லையும் நான் நேசித்தேன். ஆனால் இரத்தக் காயங்களைத் தான் அவள் எனக்குத் தந்தாள்.

மாலையில் வெள்ளை ரொட்டியும், கம்பால் செய்யப்பட்ட ரொட்டியும்,  என் கைகளால் தயாரித்த கசகசா ரொட்டியையும் அவளுக்காகக் கொண்டு வந்தேன். முட்டையில் செய்த வெண் அப்பம், உலர் திராட்சை, பாதாம், இனிப்பு அப்பம் என என் கைகளில் சிக்கிய அனைத்தையும் அவளுக்காகத் திருடி சேகரித்தேன். சூடுபடுத்துவதற்காக ரொட்டிக் கடை அடுப்பின் மீது சனிக்கிழமைகளில் வைக்கப்பட்ட  பாத்திரங்களில் இருந்து ஆட்டிறைச்சித் துண்டுகள், இனிப்புத் துண்டங்கள், கோழியின் கால் அல்லது தலை, மாட்டின் குடல் என வேகமாக  எதை விண்டு எடுக்க முடியுமோ அவற்றையெல்லாம் நான் திருடியதற்காக அந்தப் பெண்கள் என்னை மன்னிப்பார்கள் என்று  நம்புகிறேன். அவள் அவற்றை உண்டு செழித்து மேலும் அழகானாள். நான் வாரம் முழுக்க வீட்டை விட்டு வெளியில், பேக்கரியில் தங்க வேண்டி இருந்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் நான் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவள் ஏதாவது ஒரு சாக்கு சொன்னாள். நெஞ்சு எரிச்சல் அல்லது உடம்பில் எதோ ஒரு பக்கமாக பிடிப்பு அல்லது விக்கல் அல்லது தலைவலி என்று அவளுக்கு எதோ ஒரு நோக்காடு இருந்தது. பெண்களின் சாக்குப் போக்குகள் பற்றி உங்களுக்கே தெரியும். எனக்கு இது கசப்பாகவும் கடினமாகவும் இருந்தது. இந்தப் பிரச்சினைகளுடன் சேர்த்து அவளுடைய தம்பி, அந்த அப்பன் பெயர் தெரியாதவன் பெரியவனாக வளர்ந்து கொண்டிருந்தான். அவன் என் மீது கட்டைகளை வீசுவான். நான் அவனைத் திருப்பி அடிக்க நினைக்கும் போது என் கண்களின் முன் பச்சை நிற மூடுபனி தவழ்வதை நான் என் கண்களால் காண்பது போல மிகத் தீவிரமான சொற்களால் அவள் என்னைச் சபிப்பாள். என்னை விவாகரத்து செய்து விடுவதாக ஒரு நாளைக்கு பத்து முறையாவது அவள் என்னைப் பயமுறுத்தினாள். என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் ஃபிரெஞ்ச் விடுப்பு எடுத்துக் கொண்டு அத்துடன் மறைந்து போயிருப்பார்கள். ஆனால் நான் இவற்றைச் சகித்துக் கொண்டு எதையும் பேசாமல் மௌனமாக இருக்கிற வகையிலானவன். நாம் என்ன தான் செய்ய முடியும்? தோள்கள் இறைவனுடையவை என்பது போலவே தான் பாரங்களும்.

ஒருநாள் இரவு பேக்கரியில் ஓவன் வெடித்து ஏற்பட்ட சிறிய தீவிபத்தில் பெரிய சேதம் விளைந்தது. வீட்டுக்குப் போவதைத் தவிர அப்போதைக்கு நான் செய்யக்கூடியது ஏதுமில்லை என்பதால் வீடு திரும்பினேன். வழக்கம் போலில்லாமல் வாரத்தின் இடைப்பட்ட நாளொன்றின் இரவில் வீட்டில் கட்டிலில் படுத்துறங்கும் இன்பத்தை அனுபவிப்போம் என நினைத்தேன். உறங்கிக் கொண்டிருக்கும் சிறிய பூச்சிகளின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாது சத்தமின்றி பூனைப் பாதங்கள் வைத்து வீட்டுக்குள் நுழைந்தேன். உள்ளே சென்றதும் எனக்கு இரண்டு குறட்டையொலிகள் கேட்பதாகத் தோன்றியது. ஒன்று மெலிதாகவும் மற்றொன்று வெட்டப்பட்ட எருதின் குறட்டையொலியாகவும் கேட்டது. ஓ! அது எனக்குப் பிடிக்கவில்லை! அது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. படுக்கையருகில் சென்றபோது திடீரென எல்லாமே இருட்டாக மாறியது. எல்காவின் அருகே ஒரு ஆணின் உருவம் தெரிந்தது. என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் பெரிதாகக் கூச்சல் போட்டு கத்தி மொத்த ஊரையும் எழுப்பியிருப்பார்கள். ஆனால், இதனால் குழந்தையை எழுப்பி விடக்கூடாது என்பதுதான் முதலில் என்னுடைய மனதில் தோன்றியது. இந்த விஷயத்திற்கு ஒரு சிறிய தகைவிலான் குருவியை எதற்கு பயமுறுத்த வேண்டும்? நான்  பேக்கரிக்கு திரும்பச் சென்று ஒரு மாவு மூட்டையின் மீது படுத்துக் கிடந்தேன். விடியும் வரை ஒரு நொடி கூட நான் என் கண்களை மூடவில்லை. மலேரியா கண்டது போல என்னுடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ‘கழுதையாக இருந்தது போதும். ஜிம்பல் தன் வாழ்க்கை முழுக்க ஒரு ஏமாளியாக இருக்கப் போவதில்லை. ஜிம்பல் போன்ற ஒரு முட்டாளின் முட்டாள்தனத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

காலையில் மதகுருவிடம் அறிவுரை கேட்கச் சென்றேன். இது ஊருக்குள் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே தேவாலயத்தின் காவலரை அனுப்பி எல்காவை அழைத்து வரச் செய்தனர். அவள் குழந்தையோடு வந்தாள். அவள் என்ன செய்திருப்பாள் என்று நினைக்கிறீர்கள்!  மறுத்தாள்! எல்லாவற்றையும் மறுத்தாள்! “இவருக்கு எதோ ஆகிவிட்டது. எனக்கு கனவுகளைப் பற்றியோ குறி சொல்வதைப் பற்றியோ எதுவும் தெரியாது” என்றாள். அவர்கள் அவளைப் பார்த்து கூச்சலிட்டு எச்சரித்து மேசையை ஓங்கித் தட்டினர். ஆனால் அவள் தன் நிலையில் தீர்மானமாக நின்றபடி, “இது பொய்யான குற்றச்சாட்டு” என்றாள்.

இறைச்சி வெட்டுபவர்களும் குதிரை விற்பவர்களும் அவளுக்குத் துணை நின்றனர். இறைச்சிக் கடை நடத்துபவர்களில் ஒருவன் என்னிடம் வந்து, “இனி எங்களுடைய கண்கள் உன் மீது தான் இருக்கும். நீ கண்காணிக்கப்படப் போகிறாய்” என்றான். இதற்கிடையில் குழந்தை தன் கால்களை உதைத்து கீழே விழுந்து தன்னுடைய உடலை அழக்குப் படுத்திக்கொண்டது. மதகுருக்களின் நீதிமன்றத்தில் வட்டவடிவ மேசையின் மீது ஒரு உடன்படிக்கை இருந்தது. ஆகவே இதை அனுமதிக்க முடியாத அவர்கள் எல்காவை வெளியே போகச் சொன்னார்கள்.

“நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று மதகுருவிடம் கேட்டேன்.

“நீ அவளை உடனடியாக விவாகரத்து செய்” என்றார் அவர்.

“அவள் மறுத்தால் என்ன செய்வது?” என்று கேட்டேன்.

“நீ விவாகரத்து கேள்! நீ செய்யவேண்டியது அது மட்டும் தான்” என்றார் அவர்.

“சரி! நான் அதைப்பற்றி  யோசிக்கிறேன்” என்றேன்.

“இதில் யோசிப்பதற்கு எதுவும் இல்லை. நீ அவளுடன் ஒரே வீட்டில் இருக்கக்கூடாது” என்றார்.

“நான் குழந்தையைப் பார்க்க விரும்பினால்?” என்று கேட்டேன்.

“அந்த வேசி இங்கிருந்து போகட்டும். அப்பன் பெயர் தெரியாத அந்தக் குழந்தைகளும் அவளுடன் செல்லட்டும்” என்றார்.

என் வாழ்நாள் முழுவதும் அவள் இருக்கும் தலைவாசல் பக்கம் கூட நான் போகக்கூடாது என்பது தான் அவர் விதித்த தீர்ப்பு. பகலில் அது என்னை அவ்வளவாகத் தொந்தரவு செய்யவில்லை. ஏனெனில் அது நிச்சயம் நடக்கும். ஏனெனில் கட்டி என்று இருந்தால் அது உடைந்து தானே ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இரவுகளில் நான் மூட்டைகளின் மீது படுத்து உறங்கிய போது அனைத்தையும் மிகக் கசப்பாக உணர்ந்தேன். அவளுக்காகவும் குழந்தைக்காகவுமான ஏக்கம் என்னை ஆட்கொண்டது. நான் கோபப்பட விரும்பினேன். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் எது என்றால் உண்மையில் என்னால் கோபப்படவே முடியவில்லை என்பது தான். இன்னும் சொல்லப்போனால், ‘சில சறுக்கல்கள் நிகழத்தான் செய்யும்; தவறே செய்யாமல் வாழ்வது இயலாது’ என்பதாகத் தான் என்னுடைய சிந்தனையின் போக்கு இருந்தது. ஒருவேளை அவளுடன் அப்போது இருந்த அந்த ஆண் அவளுக்கு நிறைய பரிசுகளை வாங்கித் தந்திருப்பான். பெண்கள் தங்களுடைய கூந்தலை நீளமாகவும் அறிவைக் குறைவாகவும் வைத்திருப்பதால் அவன் எப்படியோ அவளை நெருங்கிவிட்டான். அவள் அவ்வளவு உறுதியாக மறுப்பதால் ஒருவேளை அந்தக் காட்சி என் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறதா என்றும் தோன்றியது. மாயக் காட்சிகள் நிகழ்வதுண்டு தான். நீங்கள் ஒரு உருவத்தையோ எலும்புக் கூட்டையோ அல்லது எதாவது ஒன்றையோ பார்க்கிறீர்கள், ஆனால் மிக நெருங்கிப் பார்க்கும்போது அங்கு எதுவுமே இருப்பதில்லை.

அப்படியானால் நான் அவளுக்கு அநீதி இழைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருந்தபோது நான் அழத் துவங்கினேன். நான் முகத்தை வைத்துப் படுத்துக்கிடந்த மாவு என் கண்ணீரால் நனைந்துவிட்டது. காலையில் மதகுருவைச் சந்தித்து நான் தவறு செய்து விட்டதாகக் கூறினேன். அவர் அதைப் பறவையின் பெரிய சிறகால் ஆன எழுத்தாணியைக் கொண்டு குறித்து வைத்தார். அப்படியானால் மொத்த விஷயத்தையும் நான் திரும்பவும் பரிசீலிக்க வேண்டும் என்று சொன்னார். அதுவரை நான் என்னுடைய மனைவிக்கு அருகே செல்லக்கூடாது என்றும் வேண்டுமானால் அவளுக்கு உணவையும் பணத்தையும் யார் மூலமாவது அனுப்பலாம் என்றும் முடிவானது.

3

எல்லா மதகுருக்களும் தமக்கு இடையே கடிதப் போக்குவரத்து நிகழ்த்தி ஒத்தக் கருத்துக்கு வருவதற்கு இடையில் ஒன்பது மாதங்கள் கடந்தன. இதைப் போன்றதொரு விஷயத்தில் முடிவெடுக்க இவ்வளவு அறிவு தேவைப்படும் என்பதை அதுநாள் வரை நான் அறிந்திருக்கவில்லை. இதற்கிடையில் எல்கா இன்னுமொரு குழந்தைக்குத் தாயானாள்; இம்முறை பிறந்தது பெண் குழந்தை. சப்பாத்து தினத்தன்று பிரார்த்தனைக் கூடத்துக்குச் சென்று நான் அவளுக்காகப் பிரார்த்தனை செய்தேன்.அவர்கள் என்னை வேத நூலுக்கு அருகே அழைத்தார்கள். நான் அந்தக் குழந்தைக்கு என்னுடைய மாமியாரின் பெயரை வைத்தேன். அவளுடைய ஆன்மா சாந்தி அடைவதாக. முரட்டு இளைஞர்களும் உரத்துக் கூச்சலிடும் போக்கிரிகளும் பேக்கரிக்கு வந்த போது என்னைத் தாக்கினர். எனக்கு ஏற்பட்ட  பிரச்சினையாலும் துயராலும் ஃப்ரெம்பால் முழுமையும் புத்துணர்ச்சி பெற்றது. எனக்குச் சொல்லப்பட்டதையே நான் நம்ப வேண்டும் என்கிற முடிவுக்கு நான் வந்தேன். நம்பாமல் இருப்பதால் என்ன பயன்? இன்றைக்கு நீங்கள் உங்கள் மனைவியை நம்பவில்லை; நாளை கடவுளையே கூட நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போகலாம்.

சோளம், கோதுமை ரொட்டி, கேக் துண்டுகள், சுருள் அப்பம் அல்லது டோநட், எனக்கு வாய்ப்பு கிடைக்கையில் நிறைய இனிப்பு பிட்டு, தேனால் செய்யப்பட்ட இனிப்பு அப்பம், திருமண நிகழ்வுகளுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்படும் பழங்களால் ஆன இனிப்புப் பண்டங்கள் என எவையெல்லாம் என் கைக்குக் கிடைத்தனவோ அவற்றையெல்லாம் அவளுடைய வீட்டுக்கு அருகே குடியிருந்த பேக்கரிக்குப் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒருவன் மூலம் அவளுக்குத் தினமும் அனுப்பினேன். சில சமயங்களில் அவனாகவே சில பொருட்களை அதில் சேர்த்து விடுவான். ஆரம்பத்தில் அவன் என்னை மூக்கின் மீது கிள்ளியும் என் விலாவில் இடித்தும் எரிச்சலடைய வைத்தான். ஆனால் பிறகு அவன் என் வீட்டுக்கு வரத் துவங்கியதும் அன்புடனும்  நட்புடனும் பழக தொடங்கினான்.

“ஹேய் ஜிம்பல்! உனக்குச் சிறந்த மனைவியும் இரண்டு அழகான குழந்தைகளும் இருக்கின்றனர். நீ அதற்குத் தகுதியே இல்லாதவன்!” என்றான்.

“ஆனால் மக்கள் அவளைப் பற்றி பேசுவது எல்லாம்…!” என்றேன்.

“அவர்கள் எல்லாருக்குமே நாக்கு மிக நீளம். அதை வைத்துக் கொண்டு உளறுவதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்.  நீ சென்ற குளிர்காலத்தின் பனியைப் புறக்கணித்தது போல அவர்கள் சொல்வதையும் புறக்கணித்து விடு” என்றான்.

ஒருநாள் மதகுரு என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். “ஜிம்பல்! நீ உன் மனைவியைப் பற்றி நினைத்தது தவறு என்பதில் உறுதியாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

“ஆம். நான் உறுதியாக இருக்கிறேன்” என்று சொன்னேன்.

“அது எப்படி? இங்கே பார் ஜிம்பல். முன்பு நீயே அதைக் கண்ணால் பார்த்தேன் என்றாயே?” என்று கேட்டார்.

“ஒருவேளை அது ஒரு நிழலாக இருக்கலாம்” என்றேன்.

“எதனுடைய நிழல்?” என்றார்.

“உத்திரக் கட்டைகள் ஒன்றின் நிழலாக இருக்கலாம்” என்றேன்.

“அப்படியானால் நீ வீட்டுக்குப் போகலாம். யானோவர் மதகுருவுக்குத் தான் நீ நன்றி சொல்ல வேண்டும். அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாத குறிப்பு ஒன்றை அவர் தான் தத்துவ ஞானி மைமொனைட்ஸின் குறிப்புகளில் இருந்து கண்டெடுத்தார். அது தான் உனக்கு இப்போது சாதகமாக இருக்கிறது” என்றார்.

நான் மதகுருவின் கைகளைப் பற்றி முத்தமிட்டேன். உடனடியாக வீட்டுக்கு ஓடோடிச் செல்ல விரும்பினேன். மனைவியிடம் இருந்தும் குழந்தையிடம் இருந்தும் இவ்வளவு நாட்கள் பிரிந்திருப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்ததும் முதலில் வேலைக்குச் செல்வோம், பிறகு மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவோம் என்று முடிவு செய்தேன். என் மனதைப் பொறுத்தவரை இது புனித தினங்களில் ஒன்று. ஆனாலும் நான் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. பெண்கள் வழக்கம்போல கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருந்தார்கள். நான் என் மனதுக்குள், ‘என்ன வேண்டுமானாலும் தேவையற்று பேசிக் கொண்டிருங்கள். தண்ணீரின் மீது எண்ணையைப் போல உண்மை வெளியே வந்துவிட்டது. மைமொனைட்ஸ் சரி என்கிறார். ஆகவே அது சரி தான்’ என்று நினைத்துக் கொண்டேன். பிசைந்த மாவை உப்புவதற்காக நன்றாக மூடி வைத்துவிட்டு என்னுடைய பங்கு ரொட்டியையும் சிறிதளவு மாவையும் எடுத்துக்கொண்டு நான் வீட்டுக்குக் கிளம்பினேன். முழு நிலவும் ஒளிர்கிற நட்சத்திரங்களும் ஆன்மாவுக்கு அச்சமூட்டியது. நான் வேகமாக நடந்தேன். என் முன் ஒரு நிழல் நீளமாக விழுந்தது. அது குளிர்காலம்; பனி புதிதாக விழுந்திருந்தது. நான் பாட விரும்பினேன். ஆனால் நேரமாகிக் கொண்டிருந்தது. அத்துடன் அந்தச் சத்தத்தைக் கேட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் எழுந்து விடக்கூடாது என்பதால் நான் பாடவில்லை. அதன் பிறகு நான் சீழ்க்கை அடிக்க விரும்பினேன். ஆனால் இரவில் சீழ்க்கை அடித்தால் அது பிசாசுகளை வெளியே கொண்டுவரும் என்பது என் நினைவுக்கு வந்தது. ஆகவே நான் அமைதியாக வேகமாக நடந்தேன்.

வழியில் நாய்களைக் கடந்த போது அவை என்னைப் பார்த்துக் குரைத்தன. ‘எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறையுங்கள். நீங்கள் யார்? வெறும் நாய்கள். நானோ ஒரு மனிதன். அருமையான ஒரு பெண்ணின் கணவன், சிறப்பான இரண்டு  குழந்தைகளின் தந்தை’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் வீட்டை நெருங்கிய போது என்னுடைய இதயம் ஒரு குற்றவாளியினுடைய இதயத்தைப் போல வேகமாக அடித்துக்கொண்டது. எனக்கு அச்ச உணர்வு இல்லை. ஆனால் என்னுடைய இதயம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. ஆனால் திரும்பிச் செல்லக் கூடாது. நான் சத்தமின்றி மெல்ல தாழ்ப்பாளை விலக்கி வீட்டுக்குள் நுழைந்தேன். எல்கா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். குழந்தை தொட்டிலில் இருந்தது. தடுப்பு மறைத்தது. ஆனால், தடுப்பில் இருந்த விரிசல் வழியாக நிலவின் ஒளி பலவந்தமாக உள் நுழைந்தது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தை நான் உற்றுப் பார்த்தேன். அதைப் பார்த்த அந்த நொடியிலேயே அந்தக் குழந்தையை நான் நேசிக்கத் துவங்கினேன். அதன் ஒவ்வொரு சிறிய எலும்பையும்.

பிறகு நான் படுக்கையை நெருங்கினேன். இப்போது நான் கண்ட காட்சியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன் எல்காவுக்கு அருகே படுத்துக்கொண்டிருந்தான். அடுத்த நொடியே நிலவு மறைந்து போனது. கறுமை அந்த இடத்தை முழுமையாக சூழ்ந்தது. நான் நடுங்கத் துவங்கினேன். பற்கள் கடகடத்தன. என்னுடைய கையில் இருந்த ரொட்டித் துண்டு நழுவிக் கீழே விழுந்த ஓசையில் விழித்துக்கொண்ட என் மனைவி, “யாரது?” என்று கேட்டாள்.

“நான் தான்” என்று முணுமுணுத்தேன்.

“ஜிம்பல், நீ எப்படி இங்கே? நீ என்னை இங்கு வந்து பார்ப்தற்குத் தடை இருக்கிறது என்று நினைத்தேன்” என்றாள்.

“மதகுரு சொன்னார்…” என்று பதில் சொல்ல ஆரம்பித்த என்னுடைய குரல் காய்ச்சல் கண்டது போல நடுங்கியது.

“நான் சொல்வதைக் கேள் ஜிம்பல். உடனே கொட்டிலுக்குச் அந்த வெள்ளாட்டைப் பார். அதற்கு உடல்நலம் இல்லாதது போல் தெரிகிறது” என்றாள்.

எங்களிடம் ஒரு வெள்ளாடு இருந்தது என்பதை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். அவளுக்கு உடல் நலம் இல்லை என்று கேட்டதும் நான் உடனே கொட்டிலுக்குச் சென்றேன். முதிர்ந்த அந்த வெள்ளாடு ஒரு நல்ல ஆன்மா. அதனை ஒரு மனித உயிராகவே நான் உணர்ந்தேன்.

வேகமாக நடந்து கொட்டிலை அடைந்து கதவைத் திறந்தேன். வெள்ளாடு நான்கு கால்களுடன் நின்றுகொண்டிருந்தது. நான் அதனுடைய கொம்புகளைப் பற்றி இழுத்து உடல் முழுவதையும் தழுவி அதனுடைய மடியை சோதனை செய்து பார்த்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்தேன். ஒருவேளை மரப்பட்டைகளை அளவுக்கதிகமாக சாப்பிட்டு இருப்பாள். “சிறிய வெள்ளாடே! உடல்நலத்துடன் இரு. நல்லிரவு!” என்று அதைப் பார்த்து சொன்னேன். என்னுடைய நற்சிந்தனைக்கு நன்றி கூறுவது போல அந்தச் சிறிய உயிர் என்னைப் பார்த்து ‘மா’ என்று பதில் சொன்னது.

நான் வீட்டுக்குள் திரும்ப சென்றபோது அந்த உருவம் மறைந்து விட்டிருந்தது. “அந்த ஆண் எங்கே?” என்று கேட்டேன். “எந்த ஆண்?” என்று என் மனைவி பதில் சொன்னாள். “நீ என்ன சொல்கிறாய்? புதிதாக வேலைக்கு சேர்ந்தவனுடன் நீ ஒன்றாகப் படுக்கையில் இருந்தாயே” என்றேன். “நான் இன்றிரவும் நேற்று இரவும் கண்ட கனவுகள் பலிக்கட்டும். என்னுடைய உடலும் ஆன்மாவும் வீழ்ச்சி அடையட்டும். உன்னுள் ஒரு கெட்ட ஆன்மா குடிகொண்டுள்ளது. அது உன்னுடைய பார்வையை மறைக்கிறது” என்றாள்.

“நீயொரு வெறுக்கத்தக்க ஜந்து! முட்டாள்! சாத்தான்! நீயொரு அருவருப்பான மனிதன்! வெளியே போய்விடு அல்லது மொத்த ஃப்ரேம்போலையும் நான் உறக்கத்திலிருந்து எழுப்பிவிடுவேன்” என்று அலறினாள்.

நான் நகர்வதற்கு முன் அவளுடைய சகோதரன் ஓவனுக்குப் பின்புறம் இருந்து வந்து என்னுடைய தலையின் பின்பக்கம் ஒரு குத்து விட்டான். அவன் என் கழுத்தை உடைத்து விட்டான் என்று தான் நினைத்தேன். என்னிடம் ஏதோ ஒரு மிகப்பெரிய தவறு இருக்கிறது என்று தோன்றியது.

“அவதூறு கிளப்பாதே. மக்கள் நான் முட்டாள்களையும் பிசாசுகளையும் வளர்க்கிறேன் என்று என் மீது குற்றம் சுமத்த வேண்டும். அதுதானே உனக்குத் தேவை” என்றேன். ஏனெனில் அவள் சொன்னதன் பொருள் அதுதான்.

“நான் தயாரிக்கும் ரொட்டியை யாருமே தொடமாட்டார்கள்” என்றேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் அவளை எப்படியோ அமைதிப்படுத்தி விட்டேன். “நல்லது. அது போதும். அப்படியே கீழே படுத்து சக்கரங்களுக்கு அடியில் நொறுங்கிப் போ” என்று சபித்தாள்.

அடுத்த நாள் காலை நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவனை அழைத்து “இங்கு பார் சகோதரா!” என்று நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். அதைக் கேட்ட அவன், “நீ என்ன சொல்கிறாய்?” என்று நான் எதோ கூரையிலிருந்து குதித்ததைப் போல முறைத்துப் பார்த்தான். “சத்தியமாக சொல்கிறேன். நீ எதாவது மூலிகை மருத்துவரையோ அல்லது வேறு மருத்துவரையோ பார். உனக்கு எதோ நட்டு கழன்று விட்டிருக்கிறது என நினைக்கிறேன். நான் உனக்காக அதைச் சரியாகப் பொருத்தி விடுகிறேன்” என்றான். அந்த விஷயம் இத்துடன் அப்படியே முடிந்தது.

நீண்ட கதையைச் சுருக்கமாக சொல்வதானால் அதற்குப் பிறகு நான் என் மனைவியுடன் இருபது வருடங்கள் வாழ்ந்தேன். நான்கு மகள்கள் இரண்டு மகன்கள் என அவள் என்னுடைய ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். எல்லா விதமான விஷயங்களும் நடந்தேறின. ஆனால் நான் எதையும் பார்க்கவோ கேட்கவோ இல்லை. நான் நம்பினேன். அவ்வளவுதான். மதகுரு சமீபத்தில் என்னிடம், “நம்பிக்கை என்பதே பயன்மிக்கது. ஒரு நல்ல மனிதன் தன் நம்பிக்கையினாலேயே உயிர் வாழ்கிறான் என்று மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்.

திடீரென என் மனைவியின் உடல்நலம் குன்றியது. மிகச் சாதாரணமான ஒரு விஷயமாக மார்பின் மீது ஒரு கட்டியாகத் தான் அது துவங்கியது. ஆனால் அவள் வெகு நாட்கள் உயிரோடு இருக்க மாட்டாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவள் கணக்கில் ஒரு வருடம் கூட மீதமில்லை. அவளுக்காக நான் பெரும் பணத்தை செலவு செய்தேன். இடைப்பட்ட நாட்களில் நான் ஒரு பேக்கரி உரிமையாளராக மாறியதையும் ஃப்ரேம்போலில் ஒரு பெரிய செல்வந்தனாக நான் கருதப்படுவதையும் உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். மருத்துவர் தினமும் வீட்டுக்கு வந்தார். ஊரில் இருந்த மந்திர வித்தையறிந்த எல்லா மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முதலில் அட்டைப் பூச்சியைப் பயன்படுத்தவும் பிறகு குப்பி சிகிச்சையை மேற்கொள்ளவும் முடிவு செய்தனர். அவர்கள் லுப்லினில் இருந்து கூட ஒரு மருத்துவரை அழைத்து வர முடிவு செய்தார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. இறப்பதற்கு முன் அவள் என்னைக் கட்டில் அருகே அழைத்து, “ஜிம்பல், என்னை மன்னித்து விடு!” என்றாள்.

“மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? நீ நம்பிக்கைக்குரிய நல்ல மனைவி” என்றேன்.

“துயரம் ஜிம்பல். நான் எப்படி உன்னை இத்தனை வருடங்கள் ஏமாற்றினேன் என்று எனக்கே அசிங்கமாக இருக்கிறது. நான் கடவுளிடம் தூய்மையாகச் சென்றடைய விரும்புகிறேன். ஆகவே, இந்தக் குழந்தைகள் உனக்குப் பிறந்தவை அல்ல என்பதை நான் சொல்லியாக வேண்டும்”. ஒரு மரக்கட்டையை எடுத்து என் தலையின் மீது அடித்திருந்தால் கூட நான் அவ்வளவு கலங்கி இருக்க மாட்டேன்.

“அவை யாருடைய குழந்தைகள்?” என்று கேட்டேன்.

“எனக்குத் தெரியாது. அவர்கள் நிறைய பேர்…. ஆனால் அவை நிச்சயமாக உன்னுடைய குழந்தைகள் இல்லை” என்றாள்.

பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய தலை ஒரு பக்கமாக சரிந்தது. கண்கள் கண்ணாடி போல பளபளக்கத் துவங்கின. வெளிறிப்போன அவளுடைய இதழ்களில் ஒரு புன்னகை நிலைத்து  இருந்தது. “நான் ஜிம்பலை ஏமாற்றினேன். என்னுடைய வாழ்வின் கதைச் சுருக்கம் இதுதான்” என்று மரணமடையும் போது அவள் சொன்னதாக நான் கற்பனை செய்து கொண்டேன்.

4

துஷ்டி நிகழ்வு நடந்து கொண்டிருந்த ஒரு இரவில் நான் கனவு கண்டபடியே மாவு மூட்டைகளின் மீது படுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த தீய ஆவி என்னைப் பார்த்து, “ஜிம்பல் நீ ஏன் உறங்குகிறாய்?” என்று கேட்டது .

“நான் வேறு என்ன செய்யட்டும்? கோழி இறைச்சியால் செய்த சூப்  சாப்பிட வேண்டுமா?” என்று கேட்டேன்.

“இந்த மொத்த உலகமும் உன்னை ஏமாற்றுகிறது. பதிலுக்கு நீ இந்த உலகத்தை ஏமாற்ற வேண்டும்” என்றது.

“நான் உலகத்தை எப்படி ஏமாற்ற முடியும்?

“நீ ஒரு குப்பியில் உன் சிறுநீரை சேகரித்து வைத்துக் கொள். இரவு நேரத்தில் அதைப் பிசைந்த மாவில் ஊற்றி வைத்து வீடு. ஃப்ரேம்போலின் புனிதர்கள் அந்த அசுத்தத்தை உண்ணட்டும்” என்றது.

“உலகின் தீர்ப்பு நாளில் எனக்கு என்ன நடக்கும்?” என்றேன்.

“தீர்ப்பு வருவதற்கு எந்த உலகமும் மீதம் இருக்கப் போவதில்லை. உன்னிடம் பொய்யான ஒன்றைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்கள் உன்னிடம் பேசிப் பேசி உன் வயிற்றில் நீ ஒரு பூனையைச் சுமப்பதாக உன்னை  நம்ப வைத்திருக்கிறார்கள். என்ன முட்டாள்தனம்!” என்றது.

“சரி. கடவுள்கள் இருக்கின்றனரா?” என்று கேட்டேன்.

“கடவுள் என்று எதுவும் இல்லை” என்றது.

“வேறு என்னதான் இருக்கிறது?” என்று கேட்டேன்.

“அடர்த்தியான சேறு” என்று பதில் சொன்னது.

வெள்ளாட்டுக்கு இருப்பது போன்ற தாடியுடனும் கொம்புகளுடனும், நீண்ட பல்லும் வாலுமாக அவன் என் கண்ணெதிரே நின்றான். இந்தச் சொற்களைக் கேட்டதும் அவனுடைய வாலைப் பற்றி இழுத்து அவனைப் பிடிக்க விரும்பினேன். ஆனால் நான் மாவு மூட்டை மீதிருந்து உருண்டு விழுந்து என் விலாவைக் கிட்டதட்ட  முறித்துக் கொண்டேன். பிறகு நான் சிறுநீர் கழிக்கும் போது பிசைந்து உப்பியிருந்த மாவு என்னைப் பார்த்து, “அதைச் செய்” என்று சொல்வது போல் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அது என்னை சம்மதிக்க வைக்க நானே அதை அனுமதித்தேன்.

விடிந்த பிறகு புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த அவன் வந்தான். நாங்கள் ரொட்டியைப் பிசைந்து அதன் மீது நறுமண விதைகளைத் தூவி அதை வாட்டத் துவங்கினோம். மிகுந்த கோபத்துடன் ஓவனுக்குப் பக்கத்தில் இருந்த சிறிய பள்ளத்தின் அருகே நான் அமர்ந்திருந்தேன். ‘நல்லது ஜிம்பல். அவர்கள் உனக்குச் செய்த அவமானத்துக்கு எல்லாம் நீ அவர்களைப் பழி வாங்கி விட்டாய்’ என்று நினைத்துக் கொண்டேன். வெளியே பனி மின்னிக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளே ஓவன் அருகே கதகதப்பாக இருந்தது. தீப் பிழம்புகள் என் முகத்தைச் சூடாக்கின. தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த நான் அப்படியே உறங்கிக் போனேன்.

உடன் தோன்றிய கனவில் எல்காவை அவள் சாவுச் சீலையுடன் பார்த்தேன்.

“நீ என்ன செய்துவிட்டாய் ஜிம்பல்?” என்று கேட்டாள்.

“எல்லாமே உன் தவறு தான்” என்று சொல்லி விட்டு அழத் துவங்கினேன்.

“நீ ஒரு முட்டாள். நீ ஒரு முட்டாள்! நான் பொய் என்பதால் எல்லாமே பொய்யாகிவிடுமா என்ன? நான் என்னை ஏமாற்றிக் கொண்டேனே தவிர வேறு யாரையும் ஏமாற்றவில்லை. அதற்கான பலனை  நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு எதுவும் விட்டு வைக்கப்பட மாட்டாது” என்றாள்.

நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அது கறுத்துப் போயிருந்தது; நான் ஆச்சரியம் அடைந்தேன். விழித்துக் கொண்ட நான் அப்படியே பேச்சற்று அமர்ந்திருந்தேன். அனைத்தும் நிச்சயத்தன்மை அற்றது என்பதை நான் உணர்ந்தேன். இப்போது நான் எடுத்து வைக்கும் ஒரு தவறான அடி என்னை நித்தியமான வாழ்வை இழக்கச் செய்து விடும். ஆனால் கடவுள் எனக்கு உதவி செய்தார். ஒரு நீளமான மண்வெட்டியுடன் அங்கிருந்த ரொட்டிகளைத் தொழுவத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று உறைந்து கிடந்த நிலத்தில் ஒரு குழியைத் தோண்டத் துவங்கினேன்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன் அப்போது அங்கு வந்தான். “நீங்கள் என்ன செய்கிறீர்கள், எஜமான்?” என்று கேட்டவன் பிணத்தைப் போல வெளுத்துக் காணப்பட்டான். “நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டே அவன் கண்முன்னேயே அந்த ரொட்டி முழுவதையும் மண்ணில் புதைத்தேன்.

பிறகு வீட்டுக்குச் சென்று பதுக்கி வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் மறைவிடத்திலிருந்து வெளியே எடுத்து அவற்றைக் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுத்தேன்.

“நான் இன்று இரவு உங்கள் அம்மாவைப் பார்த்தேன். பாவம்! அவள் கறுத்து விட்டிருந்தாள்” என்றேன். திகைத்துப்போன அவர்களால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. “நன்றாக இருங்கள். ஜிம்பல் என்று ஒரு மனிதன் இருந்தான் என்பதையே மறந்து விடுங்கள்” என்று சொன்னேன். என்னுடைய சிறிய மேல் அங்கியையும் ஒரு ஜதை காலணியையும் அணிந்து, பிரார்த்தனை சால்வை கொண்ட ஒரு பையை என்னுடைய ஒரு கையிலும், தேவையான சில பொருட்களை இன்னொரு கையிலும் எடுத்துக் கொண்டு இறைப் பெயர் எழுதப்பட்ட கதவின் முகப்பை முத்தமிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். இந்தக் கோலத்தில்  வீதியில் என்னைப் பார்த்த மக்கள் வியப்படைந்தனர்.

“நீ எங்கே போகிறாய்?” என்று அவர்கள் கேட்டனர்.

“வேறொரு உலகத்துக்கு” என்று அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு நான் ஃப்ரேம்போலை விட்டு நீங்கினேன்.

நான் பல இடங்களில் சுற்றித் திரிந்தேன். நல்ல மனிதர்கள் என்னைப் புறக்கணிக்கவில்லை. நிறைய வருடங்களுக்குப் பிறகு வயது முதிர்ந்து வெளுத்துப் போனேன். நிறைய செய்திகளை, பொய்களை, கள்ளத்தனங்களைக் கேள்விப்பட்டேன். பொய்கள் என்ற ஒன்றே உண்மையில் கிடையாது என்பதை என் வாழ்நாட்களின் நீட்சி எனக்குப் புரிய வைத்தது. எதெல்லாம் உண்மையில் நடக்கவில்லையோ அவையெல்லாம் இரவுகளில் கனவுகளில் நிகழ்கின்றன. அது ஒருவருக்கு இன்று நடக்கலாம். மற்றொருவருக்கு இன்றில்லாவிட்டால் நாளையோ, அடுத்த வருடமில்லாவிட்டால் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகோ அது நடக்கலாம். இதில் என்ன பெரிய வேறுபாடு இருக்கப்போகிறது? சில கதைகளை நான் அடிக்கடி கேட்க நேரும்போது அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வேன். இப்படி நான் சொல்லி ஒரு வருடம் கழிவதற்குள் அது உண்மையில் எங்கோ நடந்ததாக நான் பிறகு கேள்விப்பட்டேன்.

எங்கெல்லாமோ அலைந்து திரிந்து, வெவ்வேறு உணவகங்களில் சாப்பிட்டு, பேய்கள், மந்திரவாதிகள், காற்றாடிகள் இன்னும் இது போன்றவற்றைக் குறித்து நிகழச் சாத்தியமற்ற பல கதைகளை நான் பின்னத் தொடங்கினேன். “தாத்தா! ஒரு கதை சொல்லுங்கள்’ என்று என்னை அழைத்தபடி குழந்தைகள் என் பின்னால் வருவார்கள். அவர்கள் சில சமயங்களில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கதையைச் சொல்லுமாறு கேட்பார்கள். நான் அதைச் சொல்லி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன். பருத்த உடலுடைய ஒரு சிறுவன் ஒரு முறை என்னிடம், “தாத்தா இது நீங்கள் எங்களுக்கு முன்பே சொன்ன கதை” என்று சொன்னான். அயோக்கியப்ப பயல்! அவன் சொன்னது சரிதான்.

கனவுகளும் கூட அப்படித்தான். நான் ஃப்ரேம்போலை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நான் என் கண்ணை மூடியதும் உடனே  அங்கு இருப்பேன். நான் யாரை அங்கு பார்க்கிறேன் என்று தெரியுமா? எல்கா. நான் முதன் முதலில் அவளைச் சந்தித்த போது அவள் நின்றிருந்த அதே குளியல் தொட்டிக்குப் பக்கத்தில் அவள் நின்றிருந்தாள். ஆனால், அவளுடைய முகம் பளபளப்பாக இருந்தது. கண்கள் ஒரு ஞானியின் கண்களைப் போல ஒளிர்ந்தன. அவள் இதுவரை என்னிடம் பேசிப் பழக்கமற்ற சொற்களைப் பேசியது விசித்திரமாக இருந்தது. நான் விழித்து எழுந்த பொழுது அவை அனைத்தையும் மறந்து விட்டிருந்தேன். கனவில் இருந்த வரையிலும் நான் ஆறுதல் அடைந்தேன். அவள் என் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உரைத்தாள். இதன் பொருள் எல்லாமே நன்றாக இருக்கிறது என்பது தான். “நான் உன்னுடன் இருக்க அனுமதி தா” என்று அவளிடம் அழுது மன்றாடினேன். அவள் என்னைத் தேற்றி பொறுமை காக்கச் சொன்னாள். காலம்  தொலைவில் இல்லாமல் அருகில் இருந்தது. சிலசமயங்களில் அவள் என்னை வருடி முத்தமிடுவாள்; என் முகத்தின் மீது தன் முகம் வைத்து அழுவாள். நான் கண்விழிக்கும் போது அவளுடைய உதடுகளையும் அவள் கண்ணீரின் உவர்ப்புச் சுவையையும் நான் உணர்வேன்.

முழுமையும் கற்பனையால் ஆனது தான் இந்த உலகம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் நிஜ உலகில் இருந்து ஒரு முறை தான் அது அகற்றப்படுகிறது. நான் படுத்துக் கிடக்கும் தூய்மையற்ற வீட்டின் கதவருகே இறந்தவர்களைக் கொண்டு செல்லும் மரப்பலகை கிடக்கிறது. வெட்டியான் தன்னுடைய மண்வெட்டியைத் தயாராக வைத்திருக்கிறான். இடுகாடு காத்திருக்கிறது, புழுக்கள் பசியுடன் இருக்கின்றன. சாவுத் துணி இடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. என்னிடமிருக்கும் பிச்சைக்கார மூட்டையில் நான் அதைச் சுமந்து செல்கிறேன். இன்னொரு பிச்சைக்காரன் என் வைக்கோல் படுக்கையைத் தன் பரம்பரைச் சொத்தாக உரிமை கொண்டாடக் காத்திருக்கிறான். எனக்கான காலம் வரும் போது நான் ஆனந்தமாகச் செல்வேன். அங்கு எது இருந்தாலும் அது உண்மையாக, சிக்கலற்ற, அபத்தமற்ற, ஏமாற்றுகளற்ற ஒன்றாக இருக்கும். இறைவனைப் போற்றுவோம்: அங்கு ஜிம்பலைக் கூட ஏமாற்ற முடியாது.

மூலநூல்:

Gimpel the fool and other stories by Isaac Bashevis Singer, Translated by Saul Bellow, FSG Classics.

1 comment

ஆத்தூர் சாகுல் March 9, 2022 - 11:25 pm

அருமை

Comments are closed.