தோற்றப்பிழை – குமாரநந்தன்

0 comment

விழிப்பின் போது அவனுக்கு ‘தான்’ என்பது நினைவுக்கு வந்துவிட்டது. கண் விழித்தல் என்ற செயலைத் தொடர்ந்து தன் உடல் படுக்கையில் கிடப்பதைப் புரிந்துகொண்டான். அப்போது அவன் தன்னுடைய பெயர் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி யோசிக்கவில்லை.

அவன் கைகளில் சலைன் இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த சுவர்கள் மெல்லிய வயலட் நிறத்தில் பளிச்சென்றிருந்தன. முன்னால் இருந்த சுவற்றில் ஒரு டிவி தொங்கிக் கொண்டிருந்தது. மனம் துடைத்து வைத்ததைப் போல எந்த நினைவுகளும் இன்றி இருந்தது. சூனியத்திற்கு நடுவே அந்த அறை அமைந்திருப்பதைப் போல அவ்வளவு அமைதி.

கதவின் லாக் அசைந்தது. அப்போது எழுந்த ஒரு சிறு சத்தம், ஒலியைப் புரிந்து கொள்ள போதுமானதாய் இருந்தது. உள்ளே ஒரு பெண் எட்டிப் பார்த்தாள்.

அது அவன் மனைவி வளர்மதி. அவள் குறித்த நினைவுகள் துளையிடப்பட்ட ஒரு கலத்தில் தண்ணீர் நிரம்புவதைப் போல மனதில் நிறைந்தது. வளர்மதி கண்ணீரோடு வந்து அருகில் நின்று அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. படுக்கையில் உட்காரந்து அவன் மார்பின் மீது தலை சாய்த்தாள்.

பின் அஞ்சியவளாய் தலையை எடுத்துக் கொண்டாள். கதவு தட்டப்பட்டது. நர்ஸ் உள்ளே வந்தார். அவர் ஆடைகள் சோப் விளம்பரத்தில் வருவதைப் போல வெகுசுத்தமாய் இருந்தன. அவர் குளித்துவிட்டு வந்தவர் போல இல்லாமல் தன் உடலைக் கழுவித் துடைத்து எடுத்துக் கொண்டு வந்தவர் போல இருந்தார்.

‘சார் முழிச்சிட்டீங்களா?’ என்று புன்னகைத்தாள். சலைன் இறங்குவதைப் பார்த்து வேகத்தை அதிகப்படுத்தினாள்.

‘ஏன் அப்படி பாக்கறீங்க? எத்தனை நாளா ஐசியூல இருந்தீங்க? இந்த வார்டுக்கு எப்ப வந்தீங்கன்னு தெரியுமா?’ எனச் சிரித்தபடி கேட்டாள்.

நான் ஐசியுவில் இருந்தேனா? அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை.

அவனுக்கு அப்போதுதான் தன் முகம் நினைவுக்கு வந்தது. அந்த முகம் அப்படியே இருக்குமா அல்லது மாறி இருக்குமா எனச் சந்தேகமாய் இருந்தது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

வளர்மதியைப் பார்த்து தலையை அசைத்தான். மெல்லிய குரலில் கண்ணாடி என்றான். ‘கண்ணாடியா எதுக்குங்க? முகம் பாக்கணுமா?’ என்றவள், புரியாமல் அவனைப் பார்த்தாள். பின் கட்டிலுக்குப் பின்னால் அலமாரியில் இருந்த சிறிய கைக் கண்ணாடியை எடுத்து வந்து அவன் முன் நீட்டினாள்.

கண்ணாடியில் ஒரு முதுமையான முகம் தெரிந்தது. இளமையும் வசீகரமும் நிறைந்த தன் முகம் எங்கே? அவன் நம்ப முடியாமல் அந்த முகத்தை வெறித்துப் பார்த்தான். அது அவன் தான். அந்த முகம் முழுவதும் அவன் சாயலால் நிறைந்திருந்தது. எப்போதிருந்து தன் முகம் இப்படி ஆனது என அவன் திகைத்துப் போனான்.

இளமையின் சாயல் எல்லாம் வடிந்த போய்விட்ட அந்த முகத்திலிருந்து வேதனையோடு தன் பார்வையை திருப்பிக் கொண்டான். ‘என்னங்க? தாடி வளந்திருக்கா? வீட்டுக்குப் போனதும் எடுத்துக்கலாம்’ என்றாள் வளர்மதி.

தான் மயங்கி விழுந்த அந்தக் கணம் நினைவுக்கு வந்தது. இதயத்தின் மையத்தில் அடர்ந்த அசாத்தியமான வலி. கண்களில் சுழன்ற வினோத வண்ணங்கள். உடல் வேகமாகவும் அவன் மெதுவாகவும் ஒரு முடிவற்ற பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. அதன்பின் தானும் உடலும் மறைந்த அந்தகாரம். பின் அந்த அந்தகாரமும் மறைந்து….

எத்தனை காலம் ஆகியிருக்கும்? பல நூறாண்டுகள்…. அவன் நினைவிழந்த போது அவனுக்கு எந்த முகம் இருந்தது? வாழ்க்கையில் அவன் எங்கே இருந்தான்? மயங்கி விழுந்தபோது தனக்கு என்ன வயது?

இந்த முகம் முதலில் ஞாபகத்தில் வராமல் இளம் முகம் ஏன் நினைவுக்கு வந்தது என அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இளமையில் மயங்கி விழுந்து முதுமையில் கண் விழித்தேனா? நான் இன்னும் அந்த நினைவிலே தான் இருக்கிறேனா? வெறும் மயக்கத்திலேயே இளமையைக் கடந்துவிட்டேனா? அவன் கண்ணோரங்களில் கண்ணீர் துளிர்த்து படுக்கையில் விழுந்தது.

அந்த முகம் இருந்தபோது அவனுக்குள் தான் எவ்வளவு கனவுகள் நம்பிக்கைகள் இருந்தன? ஒரு இளைஞனுக்குள் கனவுகள் தோன்றுவதும் பின் இளமை கடந்தபின் அதெல்லாம் அந்தந்த வயதிற்கே தோன்றும் கனவுகள் என்பதைப் புரிந்து கொள்வதும் தான் வாழ்க்கையா?

இளமையில் ஏன் அவ்வளவு கனவுகள் வர வேண்டும்? வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாததாலா? இளமை அவ்வளவு அப்பாவித்தனமானதா? குழந்தைத்தனமானதா? அவனுக்கு, தான் கடுமையாக ஏமாற்றப்பட்டதைப் போல இருந்தது.

இதுதான் யதார்த்தம் என்று தன்னால் புரிந்து கொள்ளப்பட்ட அந்த வாழ்க்கையை எட்டி உதைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படி எட்டி உதைத்துவிட்டால் மட்டும் தான் கனவு கண்ட வாழ்க்கை தனக்கு கிடைத்துவிடுமா? சாதாரணமான ஒரு வேலையில் ஒட்டிக்கொள்ள அவன் எவ்வளவு பாடுபட்டிருப்பான்? இப்போது இதை உதறித் தள்ளிவிட்டால் இதைவிட மோசமான, மீண்டும் பழைய வாழ்க்கையேயாவது கிடைத்துவிடாதா என ஏங்கிப் போகும் அளவுக்கு மோசமான நிலைமையைத் தான் சந்திக்க வேண்டி வரும் எனப் பயமாய் இருந்தது. இந்தப் பயம் எப்போதும் அவனுக்குள் இருப்பதுதான் என்பது இப்போது அவனுக்கு உரைத்தது. எதற்காக இந்த பயம் வர வேண்டும்? இதுதான் வாழ்க்கையோடு தன்னைப் பிணைத்து வைத்திருக்கும் கயிறா என அவனுக்கு வியப்பாய் இருந்தது.

அவன் அசோக். அவன் அப்பா தர்மராஜ். இவன் பள்ளிச் சிறுவனாய் இருந்தபோது அவருக்கு கிராமத்தில் நிலம், சொந்த வீடு எல்லாம் இருந்தது. அப்போது அவன் வாழ்க்கை திருவிழாக்களால் நிறைந்திருந்தது.

வாழ்க்கை என்றால் மாரியம்மன் கோவில் திருவிழா, தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளைக் கொண்டாடுவது என்றுதான் புரிந்து வைத்திருந்தான்.

மாரியம்மன் கோவில் திருவிழா, துடும்படித்து அறிவிக்கப்படும் பூச்சாட்டுதலில் இருந்து கொண்டாட்டம் ஆரம்பமாகும். தினம் சாயந்திரம் கோவிலுக்குப் போவது. அம்மனுக்கு தினமும் நடக்கும் அலங்காரம். சுவாமி ஊர்வலம். நடு இரவு வரை நடக்கும் கோவிலாட்டம். அந்த ஆட்டம் அந்த வயதில் தன்னை எப்படி பித்தாய் ஆக்கி வைத்திருந்தது?

கல்லூரி வரைக்குமே அந்த வாழ்க்கை நீடித்தது. அப்போதெல்லாம் தான் வேலைக்கு போக வேண்டி வரும் என்று அவன் யோசிக்கவில்லை.

மெயின் ரோட்டிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அவன் கிராமம் இருந்தது. வெளி உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப் போல இருந்த அந்தக் கிராமத்தில் இருந்த அந்த இளைஞனுக்கு சினிமாதான் பெரும் ஆதர்சமாய் இருந்தது. அவனுடைய சுருண்ட கேசம், ஆகிருதியான உடல், திருத்தமான முகம் அவனுக்கு பெரும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தது.

அவன் கனவுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என அவன் ஒருமுறை கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதனால் தான் அப்போது அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தான். அவன் மனமெல்லாம் சினிமாவாய் இருந்தது. நடிகனாகி விடுவான், பெரிய பங்களாவில் வசிப்பான், அவனைச் சுற்றி மக்கள் கூட்டம், விருந்து, கேளிக்கை, பெண்கள். எந்த அடிப்படையும் இல்லாமல் இந்தக் கனவுகளை அவன் வெகுகாலம் கண்டு கொண்டிருந்தான். இதெல்லாம் எப்படி நடக்கும் என்று ஏன் ஒருமுறை கூட சிந்திக்கவில்லை? எப்படியோ அது நடக்கும் என்ற நினைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது. அதுதான் இளமையின் அடையாளமா?

இருந்த கொஞ்ச நிலத்தில் பல ஆண்டுகளாக சரியான வெள்ளாமை எடுக்க முடியாத நிலை தருமராஜூக்கு பெரும் அச்சம் தருவதாய் இருந்தது. சாப்பாட்டுக்கு பிரச்னையில்லை என்ற அளவில் மட்டுமே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தால் போதுமா? அவருக்கு அசோக் மட்டுமில்லை. அவனுக்கு ஒரு தங்கையும் இருந்தாள். அவளுக்கு எப்படி கல்யாணம் செய்யப் போகிறோம் என்ற கவலை அவரை தினம் தினம் அரித்துத் தின்றது.

அசோக் எப்படி அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறான் என அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் அவனை என்ன சொல்ல முடியும்? அவன் இப்போது தான் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கிறான். படிப்பு முடித்து வேலைக்குப் போய் பணம் சேர்த்து அவன் தங்கைக்கு கல்யாணம் செய்வதா? நினைக்கும் போதே அவருக்கு மலைப்பாய் இருந்தது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு அசோக் கண்களைத் திறந்தான். வளர்மதியோடு ஷாலினி வந்திருந்தாள். ‘அப்பா எப்படி இருக்கீங்க?’ எனக் கட்டிலில் உட்கார்ந்து கைகளைப் பற்றியவள் விசித்து அழ ஆரம்பித்தாள்.

வளர்மதி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். ‘அழாத, அழாதடி. அப்பாவுக்கு ஒன்னும் ஆகல’ என அவள் முதுகை நீவித் தேற்றினாள்.

அவன் கொஞ்சநேரம் மகளை வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

கல்லூரி முடித்தபோது அவனுக்குள் எந்த மாறுதலும் ஏற்பட்டிருக்கவில்லை. வெறுமனே வளர்ந்திருந்தான். ‘வேலைக்குப் போ, வேலைக்குப் போ’ என அப்பா நச்சரித்தபோது அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரும் தூக்கத்தில் இருந்து அவன் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தான்.

சோம்பல் முறித்துக் கொண்டு அவன் எழுந்தபோது, அவன் கனவுகள் யதார்த்தத்திற்குள் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பித்தன. அவன் படித்த பிஏ வரலாறு படிப்புக்கு நூல்மில்லில் சூப்பர்வைசர் வேலைதான் கிடைத்தது.

அப்போதும் அவனுக்குள் சினிமா கனவுகள் இருந்தன. ஆனால் இப்போது அவன் அதை வெறும் கனவு என்று புரிந்து கொண்டான். நாட்கள் செல்லச் செல்ல அந்தக் கனவுகளை அவன் வெறுக்க ஆரம்பித்தான்.

யாரோ கைகளைத் தொடுவது போல் இருந்தது. கண் விழித்தான். எதிரில் நின்றிருந்தவர் புன்னகைத்தார். டாக்டர் என்பது புரிந்தது. சிரிக்க முயற்சித்தான். அவரைச் சுற்றி நர்ஸ்கள் குறிப்பேடுகளுடன் நின்றிருந்தனர். அவர் என்ன நினைத்தாரோ அதைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது. அவருடைய அந்தப் புன்னகை அவன் மனதில் வேதனையையும் விரக்தியையும் திறந்துவிடுவதைப் பார்க்க அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

இனி இப்படிப்பட்டவர்களைப் பார்த்து இப்படித்தான் நான் நினைக்கப் போகிறேனா? நினைக்கும் போதே சோர்வாய் இருந்தது. மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போவது சிறந்த அனுபவமாக இருந்தது. நெருக்கடி மிகுந்த சாலை. வாகனங்களின் இரைச்சல், விதவிதமான முகங்கள், அவற்றில் படிந்திருக்கும் பலவகையான வாழ்க்கை எல்லாவற்றையும் அவன் ஆவலுடன் வேடிக்கை பார்த்தபடி சென்றான்.

அதீதக் கனவுகளில் ஒளி வீசும் இளைஞர்களின் முகங்களைப் பார்க்கும்போது அவனுக்குள் குரூர திருப்தி ஏற்பட்டது. அவன் அவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு நாள் ஏமாந்து போவீர்கள் என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

வெகுதூரத்தில் புள்ளியாய் தெரியும் மலைத்தொடர் வரை இருக்கும் எல்லா நிலப்பரப்பையும் பார்த்துவிட வேண்டும் என்பது போல ஜன்னலில் அவ்வளவு கூர்மையாக பார்த்துக் கொண்டு வந்தான். அன்று நெஞ்சின் நடுவே எழுந்த வலி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதைப் போல இந்த உலகமும் தானும் மறைந்து போனது. அது அப்படியே முடிந்திருந்தால் அந்த ‘தான்’ என்னவாகி இருக்கும்? இந்த உலகம் இப்படியே இருந்திருக்குமா? நான் ஆவியாகியிருப்பேனா? ஆனால் ஆவி என்பதற்கு ஒரு தன்னுணர்வு வேண்டும் இல்லையா? ஆனால் மருத்துவமனையில் விழிப்பு வரும் வரை அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லையே?

வாடகை கார் நகரைத் தாண்டிவிட்டது. இப்போது அவ்வளவாக வாகன நெரிசல் இல்லை. ஷாலினி ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். வளர்மதி அவன் கைகளைப் பற்றிக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

நிலப்பரப்பை பார்க்கப் பார்க்க இந்தப் பூமியை மீண்டும் தான் பரிசாகப் பெற்றுவிட்டேன் என்று தோன்றியது. ‘இது மறுஜென்மம் இல்லையா வளர்?’ என்றான்.

எதிரில் பாய்ந்து வரும் சாலையில் கண்களை நிறுத்தி தனக்குள்ளேயே எதையோ பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களின் கீழே கண்ணீர் சுரந்து நின்றது. திரும்பி அவனைப் பார்த்தாள். கண்களை துடைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்தாள்.

அவனுக்கு அப்போது அவனுடைய பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வந்தது.

பாட்டியின் ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் திடீரென இறந்துவிட்டானாம். இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலை இடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அப்போது அவன் தன் மீது குவிந்திருக்கும் மாலைகள் அசைந்து விழ திடீரென்று எழுகிறான்.

முன்னிலும் பெரிதாய் அலறிக் கொண்டு பெண்கள் அவனைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். ஆரவாரமெல்லாம் அடங்கிய பின், அவன் தனக்கு நடந்ததை நினைவுபடுத்திச் சொல்கிறான்.

காலையில் தோட்ட வேலைக்கு கிளம்பும்போது திடீரென அவன் உடல் கீழே விழுந்துவிட்டது. அவன் தன் உடலை விட்டு வெளியேறி இருந்தான். என்ன ஏது என்று புரியாமல் தன் உடலுக்குள் நுழைந்து கொள்ள முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை. அப்போது அவன் அருகே இரு புகை உருவங்கள் இருப்பதைக் கவனிக்கிறான். அவை அவனைப் பிடித்து மேலே இழுத்துச் செல்கின்றன. அதி வேகமாக அவர்கள் பல்லாயிரம் மைல்களைக் கடந்து செல்கிறார்கள்.

பின் அவர்கள் எமதர்மனின் சபா மண்டபத்தை அடைகிறார்கள். அங்கே எமதர்மன் இவனுடைய கணக்கு எடுத்து வாசி எனச் சித்திர குப்தனுக்கு ஆணையிடுகிறான். அவர் தன் அருகில் இருக்கும் ஒரு ஓலைச் சுவடிக் கட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு, ‘பிரபோ! இன்று மரணமடைய வேண்டியவன் இவன் அல்ல. இவர்கள் மாற்றிப் பிடித்து வந்துவிட்டார்கள்’ என்கிறான்.

எமதர்மன் அதிர்ச்சியடைந்தவராய், ‘என்ன இவனை மாற்றிப் பிடித்து வந்துவிட்டீர்களா?’ என்று அவனைப் பிடித்து வந்த அந்த உருவங்களைப் பார்த்து முறைத்தபடி, உடனே இவனைத் திருப்பிக் கொண்டுபோய் விட்டுவிடுங்கள் எனக் கட்டளையிடுகிறான். அதற்கு முன், ,நம் சபைக்கு வந்த இந்த இவனுக்கு விருந்தளியுங்கள்’ என்று சொல்லி அவனை அவர்களோடு அனுப்பி வைக்கிறான். பின் அவனுக்கு விருந்தளிக்கப்படுகிறது. விருந்து முடிந்ததும் அவன் இங்கே கொண்டு வந்து இந்த உடலுக்குள் விடப்படுகிறான்.

இது தான் நடந்தது என அவன் தன் மரணத்திற்குப் பின் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்க விவரிக்கிறான். அப்போது அவனுக்கு வாந்தி வருகிறது. அதில் அளவில் மிகப் பெரிய அரிசிச் சாதமும் அகத்திக் கீரையும் கலந்திருக்கிறது. ஊரார் எல்லாம் அதைப் பார்த்து, ‘ஆமாம். இவன் சொல்வது சரிதான். இது எமலோகத்தில் அவன் தின்ற சாப்பாடுதான். செரிமாணமாகவில்லை’ என்கிறார்கள்.

பாட்டி பலமுறை இந்தக் கதையை அவனுக்குச் சொல்லி இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அது கதை அல்ல, உண்மைச் சம்பவம். அவனும் சின்ன வயதில் அதை உண்மை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தான். இப்போது நினைத்துப் பார்க்க வேடிக்கையாய் இருக்கிறது. அப்படி ஏதாவது இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றியது. எதுவுமே இல்லாமல் ஒரு மின்தடை ஏற்பட்டுவிட்டதைப் போல எல்லாம் முடிந்து உடல், மனம், தான் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுவதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மனித வாழ்க்கை ஏன் இவ்வளவு தூரம் கைவிடப்பட்டதாய் இருக்கிறது.

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளில் வளர்மதி அவனிடம் கேட்டாள். ‘ஏன் ரொம்ப வயசானவராட்டம் நடக்கறீங்க?’

அவனுக்கு வியப்பாய் இருந்தது. ‘ஏன் அப்படிச் சொல்ற?’ என்றான். ‘ஆமாம். முன்னப் போல இல்ல நீங்க. என்னவோ வயசானவராட்டம் நடக்கிறதும் உக்கார்றதும் சிரிக்கிறதும் பாக்க சகிக்கில’ என்று கன்னத்தைப் பிடித்து நிமிண்டினாள்.

அவன் கண்ணாடி முன்னால் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டான். ஐம்பது வயதுக்கு குறையாத தோற்றம். இப்போது போய் எப்படி இளமையானவனாய் நடந்து கொள்வது?

ஆனால் ஒரு வார ஓய்வுக்குப் பின் மீண்டும் மில்லுக்கு வேலைக்குப் போனபோது அங்கும் அவனை எல்லோரும் வினோதமாய் பார்த்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது மெக்கானிக் அருண் கேட்டான். ‘சார் உங்களுக்கு என்ன ஆச்சி?’

‘ஒன்னுமில்லையே. ஏன்?’

‘இல்ல, கொஞ்சம் வயசானவராட்டம் நடந்துக்கறீங்க. பாக்க வேடிக்கையா இருக்கு? ஒரு ஹார்ட் அட்டாக் வந்தா வாழ்க்கையே முடிஞ்சி போச்சா என்ன? நீங்க தப்பிச்சிட்டீங்கங்கறதை புரிஞ்சிக்கங்க. சாப்பாடு, உடற்பயிற்சின்னு கொஞ்சம் திட்டமிட்டு செஞ்சா திரும்ப வராம பாத்துக்கலாம். மனசு விட்றாம இருங்க.’

ஏன் எல்லோரும் இப்படியே சொல்கிறார்கள்? என்னவென்று தெரியவில்லை. எல்லாமே ஏதோ தவறாக நடப்பதைப் போல அவனுக்குச் சந்தேகம் வந்தது. காலையில் இதே யோசனையோடு குளிக்கும்போது, தலையில் அடர்த்தியான முடி கைகளில் தட்டுப்படுவதை உணர்ந்தான். ஆனால் கண்ணாடியில் பார்க்கும்போது முடி இவ்வளவு அடர்த்தியாக இல்லையே?

துண்டால் உடலைத் துவட்டிக் கொண்டு தலையை மீண்டும் மீண்டும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். செழிப்பான அடர்த்தியான சுருள் சுருளான முடிகள். அவன் சந்தேகமாக கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவ்வளவு முடி இல்லை. நரைத்த அடர்த்தியில்லாத சோர்வான முடிகள் தலையில் தொய்ந்து கிடந்தன. அவன் முகத்திலும் சுருக்கங்களும் தொளதொளப்பும்…

அவன் திகைத்துப் போனான். இது என்ன மாயவித்தை கண்ணாடியில் ஏன் தன்னுடைய உண்மையான உருவம் தெரிவதில்லை. மற்றவர்களை கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது அவர்கள் எல்லாம் சரியாகத்தானே தெரிகிறார்கள்?

இந்த உருவம் எங்கிருந்து வந்து என் கண்களில் தெரிகிறது? எங்கிருந்து வர முடியும்? மனதுக்குள் இருந்துதானே வர முடியும்? மனதுக்குள் நான் இவ்வளவு வயதானவனாகவா இருக்கிறேன்? திடீரென்று அவனுக்கு தான் பிறந்த வருடம் நினைவுக்கு வந்தது. நான் பிறந்த வருடம் 1985 தானே? அப்படியென்றால் தனக்கு இப்போது முப்பத்து நான்கு வயது. ஆனால் கண்ணாடியில் ஏன் அவ்வளவு முதிர்ந்த தோற்றம்?

அவனுக்கு குழப்பமாயும் அச்சமாயும் இருந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது?

அன்றிரவு அவனால் தூங்க முடியவில்லை. இதே போல் வேறு யாருக்கேனும் இருக்குமா அல்லது இதற்கு எதிர்மாறாக கண்ணாடியில் பார்க்கும்போது இளமையானவனாக மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் வயதானவனாக தெரியவும் வாய்ப்பு இருக்குமல்லவா?

ஆமாம். அவனுக்குத் தெரியும் பலரை அவன் கவனித்திருக்கிறான். கண்ணாடி முன்னால் நின்று கொண்டு இளைஞனைப் போல் சேட்டை செய்யும் வயதானவர்கள். அவர்கள் மனதில் இருக்கும் இளம் உருவம்தான் அவர்களின் கண்ணாடிகளில் தெரியக் கூடுமோ? இது ஏன் இப்படி?

இந்தச் சிந்தனை விடாமல் அவனை துரத்திக் கொண்டே இருந்தது. மனம் முழுவது கேள்விகள்… கேள்விகள்… மாத்திரைகளால் ஏற்பட்ட மதமதப்பு ஏதோதோ நினைவுகளை முடிவில்லாமல் உயிர்ப்பித்துக் கொண்டே இருந்தது.

உண்மையில் கண்ணாடியில் தெரிவது மனிதர்களின் உண்மையான உருவமா அல்லது மனதில் இருக்கும் அவரவர் உருவமா? மனதில் இருக்கும் உருவம் மாறவில்லை என்றால் கண்ணாடியில் இருக்கும் உருவமும் மாறாதா அல்லது என்னைப் போல மனதில் இருக்கும் உருவம் மாறிவிட்டால் கண்ணாடியிலும் மாறிவிடுமா?

சரி, இப்போது ஒருவன் தன்னை ஒரு கரப்பான்பூச்சியாக கற்பனை செய்து கொள்கிறான் அல்லது ஏதோ மன வியாதி காரணமாக அவன் தன்னை அப்படி நம்புகிறான் என்றால் கண்ணாடியில் அவன் உருவம் கரப்பான்பூச்சியாகத் தெரியுமா?

சிலர் தான் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு தங்களுடைய உருவம் கண்ணாடியில் தெரியாதோ? இது அதீத கற்பனை. ஒருவனால் தான் இறந்துவிட்டதாய் எப்படி நினைத்துக் கொள்ள முடியும்? ஏன் முடியாது? வயதானவனாய் நினைத்துக்கொள்ள முடியும்போது அதுவும் சாத்தியம்தானே?

சரி இப்போது நான் உயிரோடு இருக்கிறேனா அல்லது இறந்துவிட்டேனா? இது என்ன இவ்வளவு அபத்தமாய் யோசிக்கிறேன்? இறந்திருந்தால் இங்கே இருப்பது யார் என அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான். ஆனால் ஒருவேளை தான் இறந்திருக்கக் கூடுமோ என்றும் சந்தேகமாய் இருந்தது. விருட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தான். உடலெல்லாம் வியர்த்திருந்தது.

இரவில் தூங்கும்போது தன்னுடைய கல்லூரி நாட்களை மனதில் திரும்பத் திரும்ப அசை போட்டான். அப்போது அவன் உடல் இளம் உருவத்துக்கு திரும்புவதாக கற்பனை செய்து கொண்டான். அந்த இளம் உடலை தனக்கு அணிந்து கொண்டான். ஆனால் அது எல்லாம் தூங்கும் வரைதான். தூங்கி எழுந்ததும் அவன் உள்ளுக்குள் வயோதிக உடல்தான் அவன் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு குழப்பமாய் இருந்தது. தான் இப்போது வயோதிகனா? இளைஞனா? மனம் சொல்கிறபடி வயோதிகனாய் இயல்பாய் நடந்து கொள்வதா அல்லது அது பொய் என்று தெரிந்துவிட்டதால் இளமையானவனாய் நடந்து கொள்வதா? மனதில் இளமை இல்லாமல் வெறுமனே பாவனைகளில் மட்டும் இளமையை மீட்டுவிட முடியுமா? அவனுக்கு முடியும் என்று தோன்றவில்லை.

ஒருவேளை தன்னுடைய கனவுகள் எதுவும் நிறைவேறாமல், அது நிறைவேற சாத்திமில்லை என மனதுக்குள் முடிவான பின் ஏற்பட்ட விரக்தியிலும் ஏமாற்றத்திலும் தனக்கு இப்படி நடந்திருக்குமா? ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கலாமா அல்லது தன் கனவுகளை சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என நம்பலாமா?

நம்பலாம், ஆனால் திரும்பவும் எதுவும் முடியாமல் போனால் மனதின் சிக்கல் அதிகமாகிவிடாதா?

ஏன் முடியாமல் போகும்? இதுவரை கனவை மட்டும்தானே கண்டு கொண்டிருந்தோம். அதற்காக என்ன முயற்சி எடுத்தோம்? எந்த முயற்சியும் எடுக்காமலேயே எப்படி தான் அந்த முடிவுக்கு வந்தோம்?

இனி ஏதாவது முயற்சித்தால் என்ன?

ஆனால் தன்னுடைய உருவத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாதவன் நடிகனாக விரும்புவது நியாயமா? ஆனால் மற்றவர்கள் கண்ணுக்கு தன் உருவம் சரியாகத்தானே தெரிகிறது? அவனுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்விட்டது. பழைய கனவுகள் மீண்டும் உயிர்பிடித்தன. ஒருபக்கம் பயமாயும் வெட்கமாகவும் இருந்தாலும் அவற்றை எல்லாம் மகிழ்ச்சியோடு தனக்குள் வரவேற்றான்.

அன்றிரவு வளர்மதியிடம் இதைச் சொன்னபோது அவள் அவனை விநோதமாகப் பார்த்தாள். கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தாள். அவன் அவளே பேசட்டும் என்று இருந்தான்.

பின் ஏதோ தீர்மானித்தவளாய் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். பதற்றம் எதுவும் இன்றி அமைதியாக பேசினாள். ‘ஒன்னா வயசானவராட்டம் இருக்கீங்க. இல்லாட்டி உலகம் தெரியாத பையனாட்டம் சினிமால நடிக்க ட்ரை பண்ண போறேங்கறீங்க. உங்களுக்கு புத்தி பிசகிடுச்சோன்னு எனக்கு பயமாய் இருக்கு. இங்க பாருங்க, இப்ப உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. நமக்கு ஒரு பொண்ணும் இருக்கா. அவளோட எதிர்காலத்துக்கு நாமதான் பொறுப்பு. இந்தச் சமயத்தில போய் நீங்க இப்படி வந்து நிக்கறீங்களே?’ என்றாள். வேதனையில் உண்டான அழுகையில் அவள் முகம் சுளித்துக் கொண்டது.

திகைத்துப் போனவனாய் அவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவனுக்கு வெகுநேரம் தூக்கம் வரவில்லை. ஏதோதோ யோசனையாக இருந்தது. காலையில் எழுந்தபோது இரவு வெகுநேரம் கழித்து தான் தூங்கி விட்டதைப் புரிந்து கொண்டான். குளித்து சாப்பிட்டுவிட்டு மில்லுக்கு வேலைக்கு கிளம்பினான்.

பிறகு அவன் எப்போதும் கண்ணாடி பார்க்கவில்லை.