நிழல் இலா ஒளி (பகுதி 3)

by பாதசாரி
0 comment

1. இன்றின்றின்றெனத்தான் இன்றுகள் மட்டுமே. இங்கே நாள்களென இன்று மட்டுமே. நேற்று என்பது வேண்டா முதுகுச்சுமை. நாளை என்பது விரும்பாத் தலைச்சுமை.

*

2. வெறுமைத்திரள் அச்சத்தை எதைக்கொண்டு நெம்பிவிட்டு அகாலத்தின் பாதாளத்தில் தள்ளிவிட?

*

3. மண்ணுக்கு விண் காட்டும் மின்வீச்சுகளில் கோபமில்லை. கருணைக் கண்சிமிட்டல்கள்தான் மின்னல்கள்.

*

4. துள்ளித் திரியும் சிறார் மீதிருந்து தள்ளாடும் முதியோர் மீது வரை உன் அழுக்காறு பாய்கிறது!

*

5. மனித முகம் தவிர்த்த பிற உயிர்களின் முகமும் அவ்வப்போது மலர்வதை, கண்ணிலே அன்பிருப்பவர்களால் காணமுடியும்.

*

6. எவ்வுயிருக்கும் குருதியின் எல்லையற்ற இளகிய நீர்மைதான் கண்ணீராகிறது. குருதியும் முட்டுவதுண்டு, இறுகிக் கெட்டித்த கண்ணீராகி. எவ்வுயிர்க்கும் வானம்போல, சூரிய ஒளி போல, காற்று போல, மண்போல, மழை போலப் பொதுவானது கண்ணீர்.

*

7. எனக்குச் சமூகம் என்பது நான்தான்.

*

8. உடலை வளர்த்தேன். மனதை வளர்த்தேன். உருவமற்ற மனம் அது, காலக் குகையில் வந்து பதுங்கியது, இன்று நேற்றா? முதல் மனிதனுக்குள் உயிர் புகுந்த எக்கணத்திலிருந்தோ அது பேயாய் வந்து உடனமர்ந்துள்ளது.

*

9. என் சுயம் அதில் நிரம்பவில்லைதான். காற்று நிரம்பின அதனைக் காலிக் கோப்பை என்றெப்படிச் சொல்வேன்!

*

10. மூன்று காலத்தையும் மென்று தின்றபடி ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் மனம். உயிரோ ஒன்றுமறியாது பசியோடு நின்றுகொண்டிருக்கும்.

*

11. மனந்திறந்து உங்களைப் பாராட்டும்போது, என்னையும் பாராட்டிக்கொள்ளும் உணர்வு எனக்கு!

*

12. நிதானம் என்பது ஒருவகை அமைதி. எண்ணம் எழத் தயங்கும் நிதானம் கணமே எனினும் அதில் மொட்டவிழும் பேரமைதி.

*

13. மொழியால் தீண்டவொண்ணா அவ்வோர் அமைதியில், மொழிந்து மொழிந்து மொழிந்து நீ தங்குவதெங்ஙனம்!

*

14. எழுதுவது என்பதே ஒருவகையில் இரகசிய முறையீடுதான் போலும். சிலர் இயற்கையிடம் முறையிடுகிறார்கள், சிலர் மானுடத்திடம் முறையிடுகிறார்கள்.

*

15. கள்ளம் ஒட்டியிராப் புன்னகை ஒரு கைக்குழந்தையின் கடைவாயில் ஒளிரக் கண்டேன்.

*

16. ஆயிரம் சொல்லுங்கள், அறிவின் எல்லை அன்புதான். அறிதொறும் அறிதொறும் அறியாமையின் மாய எல்லையையே அறிவு தொடும்!

*

17. விதியால் சுரந்த விழிநீர் மதியால் உலர்வதில்லை.

*

18. மனிதன் மகத்தான வல்லுநன்! தானுண்டு தன் வேலையுண்டு என்று ருசி பார்த்துக்கொண்டிருந்த நாக்கை, மொழிக்கேற்ப அசையப் பழக்கி ஆட்டுவித்தானே? ஆதியிலேயே மனிதன் மகா திறனறிவாளன்.

*

19. குழந்தைகளின் விளையாட்டு தீர்ந்தவுடன் வாழ்வின் அர்த்தம் தூங்கப் போய்விட்டது.
இனி இங்கே எத்திசைக்கும் அர்த்தமில்லை. எங்கு நீ கிளம்பிப் போனால்தான் என்னாகப் போகிறது!

*

20. சிரிப்பிலும் இலக்கணம் பார்க்காதே. வாய்விட்டு, உடல்விட்டு, மனம்விட்டு, உயிர்விட்டு, உன்னைக் கண்டே சிரிடா… மொழி வலையில் சிக்கிய மனிதனே!

*

21. எல்லா உணர்வுவெளிப்பாடுகளும் அனுமதிக்கப்படும் உறவுகளில் ஒருவருக்கு ஒருவர் ஒரே ஒரு பொய் சொல்லக்கூடத் தேவையிருக்காது!

*

22. மானுடருக்குக் காதல் என்பது ஆயுள் பரியந்தம் போல இருக்கலாம். இயற்கை மீதான காதல் போலும் இயற்கை அது. ஆனால் காமம் என்பது ஆயுளில் ஒரு கட்டத்தில் நாள் குறிக்கப்பட்டதுதான். மனம்தான் ஒத்துக்கொள்வதில்லை!

*

23. அடுத்த மனிதனின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் வேலையில் நீ உட்காராதே. அதுதான் பொறாமைக்கும் அதிகார அகங்காரத்திற்கும் இட்டுச்செல்வது.

*

24. ‘நான்’ நீங்கினால் பின்னே ஒளிர்கிறது ஆனந்தச் சுடர் – என்றேன்.
ஆனால் கவியோ, இருள் இருப்பதால்தான் ஒளிக்கே அர்த்தம் சுடர்கிறது – என்கிறான்.

*

25. உயிர்ப்பற்றே உயிரச்சம். மரண அச்சமிலாச் சிறு வாழ்வே போதுமம்மா!

*

26. ‘சொல்’ எனும் சொல்லே தன்னர்த்தத்தில் கட்டளையிடுவதுபோல இருக்கிறது. கட்டளையாகிய சொல் எதிலும் கருணை இருக்காது. சொல்லில் சுடராது மெய்மை.

*

27. நீங்கள் என்னைக் கோபித்தால், உங்களையே நீங்கள் கோபித்துக்கொள்கிறீர்கள்.
நீங்கள் என்னைத் தூற்றினால், உங்களையே நீங்கள் தூற்றிக்கொள்கிறீர்கள்.
நீங்கள் என்னை வாழ்த்தினால், உங்களையும் நீங்கள் வாழ்த்திக்கொள்கிறீர்கள்.

*

28. உனக்கு வெளியில் நின்று உள்ளே பார்;
நீ நம்பும் உண்மையின் நிறைவின்மை மேலும் துலங்கித் தெளிவாகப் புரியும்.

*

29. நாலுபேர் நலனுக்காக வாழ்தல் இனிது.
நாலுபேர் மெச்ச நடித்து வாழ்வது கரவு.
நல்லதை மட்டுமே நாவால் உரைப்போம்.
நன்மையை மட்டுமே செயலாய்க் கொள்வோம்.

*

30. அர்த்தம் நீங்கிய சொல்,
சொல் நீங்கிய எண்ணம்,
எண்ணம் நீங்கிய மௌனம்,
மௌனம் நீங்கிய ஆனந்தம்.