போரும் காமமும்: அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்

0 comment

மண்ணுக்கும் பெண்ணுக்குமான இச்சையே மனித வாழ்வைச் செலுத்தும் இரு புள்ளிகள். பிற உயிர்களைப் போல இயற்கையின் ஒரு பகுதியாக இருந்த மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திய எல்லைகளை அறிவின் திறத்தால் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட போதிலும் ஆதாரமான அந்த இரண்டு விசைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் அவ்விரு விசைகளே இத்தனை தொலைவு அவனைச் செலுத்திக்கொண்டு வந்துள்ளன. இன்றைய மனித வாழ்வின் அனைத்து சாதனைகளையும் முன்னேற்றங்களையும் நவீன அடையாளங்களையும் பகுத்துக்கொண்டே சென்றால் அவற்றின் ஆழத்தில் எஞ்சி நிற்பது இந்த இரண்டு ஆதார இச்சைகளே.

உலக இலக்கியத்தில் போர் இலக்கியங்களுக்கான இடம் மிக முக்கியமானது. போருக்கான காரணங்களில் பெரும்பகுதி மண்ணுக்கும் பெண்ணுக்குமான போட்டியாக இருந்தபோதிலும் சற்று விரிவான தளத்தில் இயற்கையாக அமைந்த எல்லைகளை தொடர்ந்து மீறும் மனிதனின் முயற்சிகளையுமே போர் என்று வகுத்திட முடியும். போர் இலக்கியங்களுக்கான இடம் எல்லா மொழிகளிலுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. மனித வரலாற்றின் முக்கியப் பகுதியாக விளங்கும் போருக்கு இணையாக இலக்கியத்தின் மையத்தில் இடம் பிடித்திருக்கும் இன்னொரு அம்சம் காமம். ஆண் பெண் உறவு சார்ந்த விளங்கவியலா புதிர்களின் ஆழத்தை நோக்கி இலக்கியம் தொடர்ந்து பயணிக்கிறது. திசையறியா இருட்டில் சிறு வெளிச்சத்தைக் காட்ட முயல்கிறது. வெளிச்சம் கூடுந்தோறும் இருட்டும் அடர்த்தியாகிறது.

அனோஜன் பாலகிருஷ்ணன்

சமகால போர் இலக்கியங்களில் முதன்மையான இடத்தை வகிப்பவை ஈழத் தமிழ் எழுத்துகள். வாழ்நிலத்துக்கான போராட்டத்தையும் அதற்காகத் தரநேர்ந்த உயிர்ப்பலிகளையும் உலகத்துக்குச் சொல்லும் ஆவணங்கள். போரின் போது எழுதப்பட்டவை அதிகமும் கவிதைகளே. பெ.கருணாகரமூர்த்தி, ஷோபா சக்தி போன்றோரது புனைவுகள் அந்தக் காலக்கட்டத்தில் வெளியாகின. ஆனால், போருக்குப் பிறகு எழுதப்பட்டுள்ள புனைவுகள் அதுவரையிலும் அறியாத வாழ்வின் பல்வேறு வெற்றிடங்களையும் நிரப்புவதாக அமைந்திருந்தன. ஈழத் தமிழ் வாழ்வு, தமிழர்களுக்குள் இருந்த முரண்கள், இயக்கங்கள், அவற்றுக்குள்ளான மோதல்கள், அரசியல் ஆட்டங்கள், பலிகள், ரத்தம், கண்ணீர், சாபங்கள், காணாமல்போன உறவுகள், இழந்த மண், உதிர்ந்த கனவுகள் என ஒரு பெரும் துயரச் சித்திரத்தின் பல்வேறு துண்டுகளையும் அவை எழுதிக்காட்டின. சயந்தன், குணா கவியழகன், தமிழ்நதி, அகரமுதல்வன், தீபச்செல்வன், தமிழ்கவி ஆகியோரின் புனைவுகள் சமகாலத்தில் உலகளவில் நிகழ்ந்த பெரும் அழிவின் சாட்சிகளாக உள்ளன.

அனோஜன் ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். போருக்குப் பின்னான காலத்தவர். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சதைகள்’ 2016ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னட்டையில் ‘ஈழ விடுதலைப்போர் முழுமையாக ஆயுதப் போராட்டமாக உருவெடுத்திருந்த காலப்பகுதியில் பிறந்த இந்தத் தலைமுறையினர் ஈழவிடுதலைப் போரின் மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவர்கள். அதன் முன்னைய இரண்டு தலைமுறையினருக்கும் இருந்த இடைவெளிகளைப் போலவே இவர்கள் தமது வாழ்வனுபவங்களாலும் சமகால நிகழ்வுகளாலும் முன்னைய தலைமுறையினரை விட வேறுபட்ட இன்னொரு தலைமுறையைப் பிரதிபலித்து நிற்பவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனோஜனின் ஆரம்பகாலக் கதைகளைப் பார்க்கும்போது ‘வேறுபட்ட இன்னொரு தலைமுறையைப் பிரதிபலித்து நிற்பவர்’ என்பது உறுதிப்படுகிறது. அனோஜனின் ஆரம்பகாலக் கதைகளில் வருகிற முதிரா இளைஞனின் இளமைப் பருவம் விநோதமானது, துரதிர்ஷ்டவசமானது. ஆர்வத்துடனும் அச்சத்துடனும் கட்டுக்கடங்கா தேடலுடனும் உள்ளுக்குள் கொப்புளிக்கும் காமம் அகத்திலும் அதற்கு நேர்மாறாக கந்தகமும் ரத்தமும் மணக்கும் போர்ச்சூழல் புறத்திலுமாய் அமையப்பெற்ற பருவம். போர்ச் சூழலின் உக்கிரத்தைத் தாண்டி காமம் சிந்தனையை ஆட்கொண்டிருக்கும் பருவத்தின் வெளிப்பாடுகளாகவே தொடக்ககாலக் கதைகள் அமைந்துள்ளன.

ஆரம்பகாலக் கதைகளைப் பார்க்கும்போது அவற்றின் நிகழிடம் ஈழம் இல்லையோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இயல்பானவையாக ஈழ இலக்கிய அடையாளங்கள் சிறிதும் இன்றி அமைந்துள்ளன. ( ‘அண்ணா’ கதை விதிவிலக்கு ) மாறாக, தொடர்ந்து அவரது கதைகளில் உக்கிரத்துடன் மையம்கொள்கிற ‘காமம்’ வெவ்வேறு நிலைகளில் வெளிப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் மலரும் காதலாக, குழந்தையுடன் உள்ள கணவன் உடனில்லாத பெண்ணுடனான குற்றவுணர்ச்சி தரும் உறவாக, பருத்த மார்புகளின் மீதான ஈர்ப்பாக, மனைவியைப் புரிந்து கொள்ளச் செய்யும் அன்பாக வெவ்வேறு நிலைகளை அடைகிறது. ஈழப்போர் குறித்த எந்தச் சலனமுமில்லாமல் இப்படிப்பட்ட கதைகளை எப்படி எழுத முடிந்தது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. “போருக்குள் பால்யத்தில் இருந்திருந்தாலும் எங்களுக்குள் குதூகலமான வாழ்க்கையும் ஒருபக்கம் இருந்தது. இறப்புகள் மத்தியிலும் கிரிக்கெட்டும், கால்பந்தும் எல்லோரையும் போல நண்பர்களுடன் இணைந்து விளையாடி இருக்கிறோம். வெற்றுச் சன்னங்களை விதம்விதமாக போட்டி போட்டு சேர்த்திருக்கிறோம். காதல், காமம், பிரிவு, உறவுச் சிக்கல் எல்லாம் சராசரி வாழ்க்கையில் இருக்கும் இயல்புடன் நம்மிடமும் இருந்தன. போர் மேலதிகமான ஒன்றுதான்” என்று அனோஜன் ஒரு நேர்காணலில் (பதாகை) குறிப்பிடுவது இதற்கான பதிலாக அமைகிறது.

இரண்டாவது தொகுப்பிலுள்ள கதைகள் இதே கேள்வியை எழுப்பினாலும் அதற்கு பதிலளிக்கும் விதமாக சில கதைகளும் இடம்பெற்றுள்ளன. முறையற்ற காமத்தின் அலைக்கழிப்புகள் பேரலையாக எழும் கதைகளாக ‘பச்சை நரம்பு’, ‘கிடாய்’, ‘இச்சை’ போன்றவை அமைந்துள்ள போதிலும், போர்ச்சூழல் ஏற்படுத்துகிற நெருக்கடிகளையும் வாதைகளையும் கவனித்திருப்பதற்கான அடையாளங்கள் கதைகளில் இடம்பெற்றுள்ளன. துவக்குகள் ஏந்திய ‘ஆர்மி’க்காரர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட அதனால் ஏற்படும் மாற்றங்களையும் சிதைவுகளையும் சொல்கின்றன. இராணுவத்தால் சுடப்பட்ட நண்பனின் மரணம் பெரும் கிலியை, மரண பயத்தை ஏற்படுத்துகிற நெருக்கடியைச் சொல்லும் ‘மனநிழலு’ம், பள்ளிப்பருவத்தில் ஆர்மிக்காரனின் பாலியல் அத்துமீறல்களால் தன் ஆண்மையை மீட்க முடியாமல் தத்தளிக்கும் இளைஞனின் உளச்சிக்கல்களை தீவிரமாகச் சொல்லும் ‘உறுப்பு’ம், ‘மண்மீட்பு இயக்கத்’தைச் சேர்ந்த இளைஞன், முதல் தாக்குதலின் போது தவறுதலாக பலியாகும் பள்ளிச் சிறுவனது மரணம் ஏற்படுத்தும் உளநெருக்கடியைச் சொல்லும் ‘பலி’யும் இந்த வகையில் முக்கியமானவை. இவை அனோஜனின் கதையுலகை ‘காம’த்திலிருந்து முற்றிலுமாக அல்லாவிட்டாலும் போர்ச் சூழலையும் அதனால் நிகழும் சிதைவுகளையும் நோக்கி கவனம் திருப்பியுள்ளன.

இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஆறு கதைகளில், ஐந்து கதைகளின் மையம் முற்றிலுமாக திசைமாறியுள்ளது. ‘காம’த்திலிருந்து விலகி போரிலும் போருக்குப் பிறகான விளைவுகளிலும் தீவிரத்துடன் கால்கொண்டுள்ளன. முழுக்க முழுக்கப் போர் பின்னணியைக் கொண்ட ‘போர்வை’, ‘யானை’, ‘கர்ப்பப்பை’ கதைகளும், போருக்குப் பிறகான நெருக்கடிகளைச் சொல்லும் ‘பேரீச்சை’, ‘கதிர்ச்சிதைவு’ ஆகிய கதைகளும் அனோஜனின் கதையுலகை முன்பைவிட பொருண்மைப்படுத்தியுள்ளன. அந்நிய மண்ணில் தனிமையில் வசிக்கும்போது வெறுமை இறுக்கமாய் சூழ்கிறது. வெறுமையை விரட்ட போதையையும் காமத்தையும் சரணடைய நேர்கிறது. ஆனாலும், இளமைக் காலத்தில் சொந்த மண்ணில் போர்ச்சூழலில் சந்திக்க நேர்ந்த இழப்புகளும் வலிகளும் துயரங்களும் உக்கிரத்துடன் அவன் மீது கவிகின்றன. பெரும் மன அழுத்தத்தைத் தருகின்றன. பெண்ணும் போதையும் அவனை ஆசுவாசப்படுத்த முடியாமல் போகும்போது வன்முறையைக் கையிலெடுக்கிறான். வாய்க்கும் ஒருசில உறவுகளையும் சிதைத்து, தன்னைத்தானே வதைத்துக்கொள்கிறான். மனம் புரண்டு எதிலும் நிலைகொள்ளாது தவிக்கும் ஈழத்து இளைஞன் தன் மீட்பைத் தேடி அலையும் துயரார்ந்த சந்தர்ப்பங்களே அனோஜனின் இன்றைய கதைகள். அண்மையில் எழுதியிருக்கும் ‘சாய்வு’, ‘உதிரம்’ ஆகிய கதைகள் முற்றிலுமாய் ஈழத்து அடையாளங்களின்றி ஆண் பெண் உறவு சார்ந்த சிக்கல்களையும் மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சமூக ஒழுக்கவிதிகளுக்கு மாறான உறவுகளும் அவை ஏற்படுத்தும் மனநெருக்கடிகளும் அவற்றை மீற எத்தனிக்கும்போது வன்முறையாகவும் தீரா வாதைகளைத் தரும் துயரமாகவும் உருக்கொள்ளும் சித்திரங்கள் அனோஜனின் கதைகளின் ஒருபக்கமாக அமைந்துள்ளது. அதன் மறுபக்கமாக விடுதலைக்கான போர் ஏற்படுத்தும் இழப்புகளும் ராணுவத்தின் அத்துமீறல்களும் போருக்குப் பிறகான நெருக்கடிகளும் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களும் அமைந்துள்ளன.

ஆரம்பகாலக் கதைகளிலிருந்தே காமத்தை அவர் அணுகும்விதம் நுட்பமானதாக அமைந்துள்ளது. காமத்தின் உளவியல் கொந்தளிப்புகளை அது கிளர்த்தும் குற்றவுணர்ச்சியை சரி – தவறுகளுக்கிடையே உழலும் மனத்தின் அவசங்களை மிகக் கச்சிதமாக தடம்பிடித்து மிகுந்த முதிர்ச்சியுடன் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. “ஏன் காமத்தை எழுதவேண்டும் என்று கேட்டால், நமது வாழ்க்கையை எழுத காமத்தை எழுதவேண்டும் என்றுதான் சொல்வேன். நீங்கள் குறிப்பிடும் கருத்துகளுடன் நூறுவீதம் உடன்படுவேன். காமத்தை எழுதுதல் என்பது காமத்துக்கு பின்பே இருக்கும் வாழ்க்கையை எழுதுதல் என்பதுதான். சித்தரிப்புகளில் வெறுமே அதிர்ச்சியூட்டும் விவரணைகளுடன் நின்று விடுதல் ஒருபோதும் காமத்தை எழுதுதல் என்பதாகாது. அதன் தருணங்களுக்கு பின்பேயுள்ள உணர்வுகளைத் தொட்டு எடுக்க வேண்டும்” (பதாகை நேர்காணல்) என்ற காமத்தைப் பற்றிய அவரது புரிதலே புனைவில் அவருக்குத் துணைநிற்கிறது.

அனோஜன் ஒரு தேர்ந்த கதைசொல்லி. ஒழுங்கும் வசீகரமும்கொண்ட திருத்தமான சொல்முறை. நேர்த்தியான சித்தரிப்பு. கதைகள் கச்சிதமாகத் தொடங்கி சீராக வளர்ந்து சென்று துல்லியமாக முடிகின்றன. உணர்ச்சி மோதல்களையும் கொந்தளிப்புகளையும் சொல்ல சிரமப்படுவதில்லை. புறக்காட்சிகளை ஓரிரு வரிகளில் வரைந்துகாட்ட முடிகிறது. உரையாடல்களை அளவுடன் நிறுத்தத் தெரிகிறது. நவீன சிறுகதையாளர்களில் பலரிடமும் காணமுடியாத இத்தகைய குணங்கள் அனோஜனைத் தனித்துவப்படுத்துகின்றன.

‘போர் சட்டென்று அமைதியைக் கிழித்துக்கொண்டு ஆரம்பமாக, யாழ்ப்பாணம் அட்டையைப் போலச் சுருண்டது’ ( மனநிழல் ), ‘இருண்ட நீரருவிபோல் அவை (கூந்தல்) காற்றுக்கு அசைந்தவாறிருந்தன’ (இச்சை), ‘சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். இருள் கவியத் தொடங்கியிருந்தது. நுளம்பு திறந்திருந்த சன்னலுக்கால் உள்நுழைந்தவாறிருந்தது. அதன் ரீங்காரங்கள் சினமூட்டின. அம்மா படியேறி உள்ளே வந்தார். உறைந்திருந்த என் வழுவழுப்பான கண்களைப் பார்த்தார். என் இமைகளை இமைத்து அவரின் ஊடுருவலைத் தடுத்தேன். என் பலவீனங்களை உடனே மறைக்கக் கவசங்கள் தேடினேன்.’(மனநிழல்) என்று பல உதாரணங்களைச் சுட்டலாம்.

நுளம்பு (கொசு), இலையான் (ஈ), வெதுப்பகம் (பேக்கரி), தேய்வடி (தேநீர் வடிகட்டி), பெறுபேறு (மதிப்பெண்), துவிச்சக்கரவண்டி (சைக்கிள்), அடிமட்டம்(ஸ்கேல்), புகையிரதம் (ரயில்), கொப்பி (நோட்புக்), கால் சங்கிலி (கொலுசு), தேசிகாய் (எலுமிச்சை) போன்ற ஈழத் தமிழுக்கேயுரிய சொற்கள் வெகு இயல்பாக ஈழத்தைக் களமாகக் கொண்ட கதைகளில் இடம்பெற்றுள்ளன. பூவரசு கதியால்கள் நட்டு தென்னை கிடுகுகள் அடைத்த வேலிகளையும் பலா, மா, கொய்யா மரங்களில் தாவும் அணில்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், கதைகளின் களம் அந்நிய நிலத்துக்கு மாறும்போது நுட்பமான இந்த அவதானிப்புகள் இடம்பெறுவதில்லை. புறக்காட்சிகளுக்கான முக்கியத்துவம் மங்கலாகி அகம் மட்டுமே மேலெழுவதை உணரமுடிகிறது.

மனிதனின் அகத்தைச் சிதைக்கும் காமத்தை ஒருபக்கமும் புறவாழ்வை சீர்குலைக்கும் போரினை இன்னொரு பக்கமும் கொண்ட நாணயமாக அமைந்துள்ளன அனோஜனின் இதுவரையிலான கதைகள். போர் முடிந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இழப்புகளையும் வலிகளையும் கடந்து வாழ்க்கை வெகுதூரம் நகர்ந்துவிட்டது. ‘2009-க்குப்பின் ஏற்பட்ட மாற்றமும் அது தந்த சூழலில் எழுந்த மற்றுமொரு வாழ்க்கையையும் யாரும் எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை. தமிழர்களின் வாழ்க்கை தனியே வடக்கிலும் கிழக்கிலுமோ, மலையகத்திலுமோ இல்லை. சிதறுண்டு வாழும் தமிழர்களின் வாழ்க்கை இலங்கையின் பல பாகங்கள் வரை பரவியிருக்கிறது. அவர்களுடன் பேசிப் பார்க்க அவர்களின் தேடலும் மனநிலையும் முற்றிலும் வேறோர் தளத்தில் இருப்பதைப் புரிந்துகொள்ள இயலுகிறது. இங்கேயிருக்கும் அரசியல் கொந்தளிப்புகள் அற்ற, நாம் அறியாத மற்றோர் உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் படைப்புகளில் இன்னும் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். அவர்களை அணுகிச் செல்லும் எழுத்தாளர்கள் இல்லை என்பது சவாலானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும்’ என்று அவர் தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார். இனிவரும் காலத்தில் ஈழ இலக்கியத்தின் போக்கு எவ்விதமாக திசைமாறும் என்பது தெரியாது. அந்தச் சவால் அனோஜனுக்கும் உள்ளது. ஆனால், அண்மையில் அவர் எழுதியுள்ள ‘சாய்வு’, ‘உதிரம்’ போன்ற கதைகள் அவர் இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான தடயங்களாக அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.