கண்ணகன் கவிதைகள்

by கண்ணகன்
0 comment

உன் தூரிகையிடம் ஒரு கேள்வி
பிறையை வேண்டுமெனில்
நீ
தலைகீழாக வரையலாம்
நிலவை?

*
வலைஞனே,
நதிக்குள்ளிருந்து எதையேனுமன்றி
ஒருபோதும்
பிடித்திழுக்கவே முடியாது
நதியை

*
நீரில் கோபுரம்
கோபுரத்தில் வாழும்
புறாக்களுக்கென்ன?
சிட்டுக் குருவிகளுக்குத்தான் தேவை
சுயமாய்
ஒரு கூடு
ஒரு கூடு
சுயமாய்
சிட்டுக் குருவிகளுக்குத்தான் தேவை
புறாக்களுக்கென்ன?
கோபுரத்தில் வாழும்

*
தரு தழைத்த பின்
கிளைகளின் மொழியில் ததும்பும்
ஜீவிதம்
மௌனம் கனிந்த விதையின்
தியான தரிசனம்

*
நேற்று
சற்று தாமதத்திற்காய்ப் பெற்ற
இழிவசை நினைந்தஞ்சி
தலைக்குளித்து
நீளக் கூந்தலைத் தளர்த்திப் பின்னிய ஈரச்சடை
முதுகில் ஆடை நனைக்க
வெகுசீக்கிரம் வந்து
பூட்டிக் கிடக்கும் கடைவாசல் படிக்கட்டில்
அமர்ந்திருந்த சிறுமியின் பொருட்டு
தொல்லுலகில் இன்று
எல்லோர்க்கும் அடிக்கும் வெயில்

*
பசிகொண்ட நதி மௌனிக்காது
தன் இயலாமையைப் புலம்பவும் செய்யாது
போதை கொண்டதுபோல் மெல்லப் பாடும்
அதன் இசையில் சீவிய வரிகளைக்
கனவில் கேட்டபடி
பாலத்து நிழலில் தூங்கும் துறவி
தலையணைத்திருக்கும் திருவோட்டில்
சங்கமித்துப் புரளும்
பெரும்பசிக் கடலுக்குள்
கடற்கன்னி ஒருத்தியின் மாளிகை
விருந்தாளியாய் நானதில் வாழும் கதையை
உனக்குச் சொல்வேன்
தொந்தி குலுங்கி
நீ சிரிக்கச் சிரிக்க

*
இரந்து பெறுவதை விடவும்
பிடிக்கப் பழகுதல்
சாலச் சிறந்ததென்று
ஞானோபதேசம் செய்தமைக்கு
மிக்க நன்றி
தந்துதவ நினைத்த தூண்டில்
உங்களிடமே இருக்கட்டும்;
வலைகளும் கூட
பசிவருத்தும் இளைப்பாறலுக்குப் பின்
மீண்டும் பறப்பேன்
நதியைத் தேடி
மீன்கொத்தி யான்

*
விசனத்தில் பேதலித்தும்
விம்மிக் களிகூர்ந்தும்
வீணேதான் அலைக்கழிகின்றன
கடலுக்கும் கரைக்குமிடையில்
வேறு கதியற்ற அலைகள்

*
முத்தங்களின் தேவதை சிறுமியாயிருந்தபோது
தந்தைக்கு முதல் முத்தமிட்டாள்
கீழ்வானில் சூரியன் எழுந்தான்
தாய்க்கு முதல் முத்தமிட்டாள்
இரவு விதானத்தில் நிலவு மிளிர்ந்தது
பருவமடைந்தவள்
காதலனுக்குத் தந்த முத்தங்கள் யாவும்
விண்மீன்களாகி மின்னின
தீ ஏங்கியது
ஊடலின்
செல்லப் பிணக்கு தணிந்து தந்த முத்தங்கள்
தீபங்களாகிச் சுடர்ந்தன
பூமி ஏங்கியது
குறிஞ்சி பெற்ற முதல்முத்தம் இசையானது
முல்லை பெற்ற முதல்முத்தம் பூவானது
மருதம் பெற்ற முதல்முத்தம் உணவானது
நெய்தல் பெற்ற முதல்முத்தம் அலையானது
பாலை பெற்ற முதல்முத்தம் நிழலானது
நீர் ஏங்கியது
சுனை பெற்ற முதல்முத்தம் மருந்தானது
அருவி பெற்ற முதல்முத்தம் குளிரானது
நதி பெற்ற முதல்முத்தம் மீனானது
கடல் பெற்ற முதல்முத்தம் முத்தானது
கானல் பெற்ற முதல்முத்தம் கனவானது
காற்று ஏங்கியது
தென்றல் பெற்ற முதல்முத்தம் பறவையானது
குடக்காற்று பெற்ற முதல்முத்தம் மணமானது
வாடை பெற்ற முதல்முத்தம் பசியானது
கொண்டல் பெற்ற முதல்முத்தம் தாகமானது
தன்னைத்தானே முத்தமிட்டுக்கொள்ள
முத்தங்களின் தேவதை ஏங்கினாள்
அவளின் இணையாத அதரங்களாய்
இரவும் பகலும்
இணைந்த அதரங்களாய்
அந்தியும் விடியலும் இயன்றன
அழுதாள்
கார் கூதிர் முன்பனி பின்பனியாய்க்
காலம் கரைந்தது
சிரித்தாள்
இளவேனில் முதுவேனிலாய்க்
காலம் களித்தது
தன்னைத்தானே முத்தங்களின் தேவதை
முத்தமிட்டுக் கொள்ள ஏங்கினாள்
நல்லவேளை! முடியாததால்
கடைசி வரையிலும்
கடவுள் மட்டும் பிறக்கவே இல்லை

*
நறுஞ்சுனை தீரத்தில் காந்தள் கமழும்
பெருவரைச் சரிவில் சிறுகுடிகள் பரவும்
குருதிதிகழ் நடுகல்லில் அமரத்துவமாய்
மறப்புலி வீழ்த்திச் சிரிக்கும் கானவன்
கொலைவில்லிற்கஞ்சிய முதுமா ஒன்றை
பிழைத்துப்போக விட்டுவிட்டு
எதிர்த்துத் தாக்கும் வல்விலங்கின் வரவிற்காய்
காத்திருந்தகாலை திண்தோள் வியர்ப்புறும் நண்பகற்போதில்
பேரமர்க்கண் கொடுச்சியின் வசியத்திற்கு கட்டுண்டு
பின்போய் – மெய்முயங்கிப் புணர்ந்து
பூக்கள் பறித்துத்தரும் குற்றேவல் புரியும் அடிமையாகினன்
பன்மலை அடுக்கங்களெங்கிலும்
தேடித்தேடி அலைந்து திரியுமவன்
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரலுக்குத்
திரும்பும் காலத்தே
கருங்காற் குறிஞ்சி பெருந்தேன் கொண்டு பூக்கும்.
ஓய்ந்தபின் அவன்
பன்னீராண்டுகள் மலையோடியாய் அலைவான்
கொடிச்சி தலைசூடிக் களையும்
பூஞ்சருகுகளைக் கூடிச் சூலுறும் அஞ்சிறைத் தும்பிகள்
கூதிர்கால யாமத்தில்
தனக்கு வழிகாட்டும் தாரகைகளாகியதைக் கதைப்பாடலாக
வேங்கை மரத்தடியில் நின்று கடைசியாகப் பாடியவன்
முழங்கிவீழ் அருவியில்
தன் தொண்டகப்பறையுடன் குதித்ததைப்
பார்த்திருந்தது முழுநிலவு
தேய்ந்து வளர சாபமிட்டாள் கொடிச்சி
“ஒவ்வொரு வெள்ளுவா நாளிலும்
ஒரு கானவன்
அருவிக்குள் மூழ்கி பலியாகாது போயின்
நீ தேயத் தேவையில்லை”
கொடிச்சிகளின் ஆசியுறையும் கொடுங்குகைப் பாழிருளில்
கையெழுத்துத் தெளிவற்ற ஓலைச்சுவடியில்
செல்லரிக்கும் ஓம்படைச் செய்யுளின் முதல்சொல்
‘நித்யா’ என்று
கானவனேறி சன்னதமுற்றவனின் வாக்கிலறிந்தேன்
நித்யா… நித்யா…
முடிவறியாத
கடைத்தேற்றப் பெயர் போற்றி
உன் சேவடிகளில் தாழ்கிறேன்
ஆணையிடு!
உன் நன்னெடுங் கூந்தலுக்குக்
குறிஞ்சிப்பூக்கள் தேடிப் புறப்படுகிறேன்
வளரிளம் கூன்பிறை
நிறைமதியாகும் நன்னாள் அண்மிக்கிறது

*
பகல் நதியில்
நீர்க்கோழிக் குஞ்சுகளின் விளையாட்டுச் சுவடுகள்
அப்போதைக்கப்போதே
அழிந்துகொண்டிருந்தன
விலக்கப்பட்டவனின் கனவுகளைப்போல
நுணாப்பூ வாசம்கொண்ட
வெளிச்சம்
வெளியெங்கும் பொழிந்துகொண்டிருக்க
இரவு நதியில்
பௌர்ணமிக்குள் மிதக்கிறது பாசி
வேலியில் தழைத்திருக்கும்
பசுங்கொடியின்
நெற்றுக்குள்ளிருந்து வெடித்து விழும்
குன்றிமணியின்
கறுப்பு முனையளவேயான ஓர் இரவும்
சிகப்பு முனையளவேயான ஒரு பகலுமாக
கழிந்தும் விடுகிறது அவனின் நாள்

*
அடுத்த பாட்டம்
தூண்டிற்காரனை
விரட்டித் தொடங்குகிறது
விட்டுவிட்டு எழுந்தோடிய
தேக்கிலை மீது புரண்டு நெளிகின்றன
மரணத்திலிருந்து
எதிர்பாராமல் தப்பிக்க நேர்ந்தது
தெரிந்தோ தெரியாமலோ
கரையும் மண்ணில்
நனையும் உருளைப்புழுக்கள்
துள்ளிக் களிக்கின்றன
நதிக்கும் மேலே மழைத்துளிகள்
பிடிபடாத மீன்களுக்குப் பதில்.

*