விட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் (பகுதி 2) – தமிழில்: எஸ். ஆனந்த்

0 comment

சார்ல்ஸ் தாமஸ் சாமுவெல்ஸ் (Charles Thomas Samuels) நடத்திய நேர்காணல்.

சாமுவெல்ஸ்: டி சிகா, நீங்கள் சவாட்டினியுடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்குவது என்ற முடிவை எடுக்கக் காரணம் என்ன?

டி சிகா: ‘ப்ரிகோ’ என்ற நாவலைப் படமாக்கும் திட்டத்துடன் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன் மிலான் நகரில் அவரைச் சந்தித்தபோதே அவருடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தேன். அவர் எழுத்து மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.  நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘The Children Are Watching Us’ சிறந்த வரவேற்பைப் பெற்றது. பெற்றோரின் வாழ்க்கை தன் கண் முன்பே உடைந்து போவதைக் காண நேரும் ஒரு சிறுவனின் உணர்வுகளை சவாட்டினியின் கவித்துவமான கதையமைப்பில் வெளிப்படுத்திய படம். அது பாசிஸ்ட் ஆட்சியின் போது வெளியானது. என்னை வெனிஸுக்குச் சென்று பாசிஸ்ட் திரைப்படப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியச் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். அதனால் என் பெயரில்லாமல் படம் திரையிடப்பட்டது..

சாமுவெல்ஸ்: உங்கள் இருவரின் கூட்டணியைத் திரைப்படச் சரித்திரத்திலேயே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். உங்களுக்குள் பிரச்சினைகள் எழுந்ததுண்டா?

டி சிகா: சில தயாரிப்பாளர்கள் ஒரு படைப்பு உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னுடனும் சவாட்டினியுடனும் கலந்து பேசிய பிறகும் மற்ற எழுத்தாளர்களை அணுகுவது எனக்கு சற்றும் பிடிக்காத விஷயம். என்மீது எவ்விதத் தவறும் இருக்காது. துரதிர்ஷ்டவசமாக எங்கள் தயாரிப்பாளர்கள் அமெரிக்க உதவியுடன் அடிக்கடி படங்களைத் தயாரிப்பது உண்டு. அதனால் ஆங்கிலோ சாக்சன் பாணி கதையை உருவாக்க ஆங்கிலம் பேசும் எழுத்தாளர்களை அமர்த்திக் கொள்வது வழக்கம். எந்த ஒரு நல்ல படமும் அது உருவாக்கப்படும் நாட்டின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பது இன்றியமையாதது என்பதை நான் எப்போதும் வலியுறுத்துகிறவன். ஒரு பிரெஞ்சுப் படம் உண்மையான பிரெஞ்சுப் படமாக, ஒரு யூகொஸ்லாவியப் படம் உண்மையான ஸ்லாவிக் படமாக இருக்கவேண்டும். இத்தாலியில் ஆங்கிலோ-இத்தாலியப் படத்தை உருவாக்கும்போது அது தோல்வியடைகிறது.

இங்கிரிட் பெர்க்மனும் டி சிகாவும்

சாமுவெல்ஸ்: அப்படியென்றால் நீங்கள் இத்தாலிக்கு வெளியே இயக்கிய A Young World போன்ற  படங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

டி சிகா: A Young World அப்படியான படம் இல்லை. அது சர்வதேசப் பிரச்சினையைப் பேசுகிறது. இன்றுவரை அந்தப் பிரச்சினைகள் பேசப்பட்டு வருகின்றன. அதை உருவாக்கத் திட்டமிட்ட நேரத்தில் இத்தாலியில் கருத்தடை மேற்கொண்ட லட்சக்கணக்கான பெண்கள் உயிரிழந்தனர். அந்தப் படம் கருத்தடை மாத்திரைகள் பற்றியும் கருத்தடை செய்வது முழுமையாக அங்கீகரிக்கப்படுவதுடன் வெளிப்படைத் தன்மையுடன் சரியான முறையில் மருத்துவமனைகளில் செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திய படம்.

சாமுவெல்ஸ்: நீங்கள் மிகப் புகழ்பெற்ற நியோ ரியலிஸ்ட்டுகளில் ஒருவர். நியோ ரியலிசம் என்பதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள் ?

டி சிகா: நியோ ரியலிசம் என்பது வெளிப்புறப் படப்பிடிப்பு என்று நினைத்துக்கொள்கிறார்கள். அது தவறு. நாங்கள் தொடங்கிய திரைப்படப் புரட்சியைப் பின்பற்றி உருவாக்கப்படுவதாகக் கூறப்படும் இன்றைய யதார்த்த திரைப்படங்கள் பல நியோ ரியலிசத்திற்கு எதிரானவை. உண்மையான இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதனால் மட்டும் ஒரு படம் நியோ ரியலிசப் படைப்பாக ஆகிவிடாது. நியோ ரியலிசம் வெறும் யதார்த்தம் அல்ல, கவிதையினூடாக வடிகட்டப்பட்டு யதார்த்தம் சிதைந்து வெளிப்படும் படைப்பு. அது எமில் ஜோலாவின் இயல்புவாத எழுத்தைப் போன்றதல்ல. அந்தப் பாணியை அடிப்படையாகக் கொண்ட அழகான படைப்பு அல்ல. அதற்கு எதிரானது.

சாமுவெல்ஸ்: கவிதை என்பதற்குச் சில காட்சிகளைக் கூறலாம் என்று நினைக்கிறேன். Bicycle Thieves படத்தில் மகனை மகிழ்விக்க உணவுவிடுதிக்கு அழைத்துச் செல்லும் தந்தையின் மனத்தை அழுத்தும் பிரச்சினைகளின் பாரம் அவர் உணர்வுகளில் வெளிப்படும் காட்சியைச் சொல்லலாம்.

டி சிகா: படத்தின் கனம் குறைந்த காட்சிகளில் ஒன்று…

சாமுவெல்ஸ்: சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி.

டி சிகா: அதைத்தான் கவிதை என்கிறேன். முதலிலேயே எழுதப்பட்டிருந்த காட்சி. இருந்தும் படமெடுக்கும் நேரம் நடிகர்களின் மனத்தினுள்ளிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் அங்க அசைவுகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் தந்தையின் மனத்திலிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இறுதிவரை அக்காட்சியை இயக்கி அமைத்தேன்.

சாமுவெல்ஸ்: கவிதையின் ஊடாகக் கடந்து வருவது நியோரியலிசம் என்று சொல்லி சமீபத்தில்  கடந்துவந்த போர்க்காலத் துயரங்களை மக்கள் மீண்டும் அனுபவிக்கும்படியாகச் செய்து விட்டீர்கள். அதற்கு மக்கள் மறுப்பைத் தெரிவிக்கவில்லையா?

டி சிகா: பாசிச அரசால் நமது தனிமனித சுதந்திரம், கலை, அரசியல் அனைத்துக்குமான சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு இத்தாலி அவமதிக்கப்பட்டதை எதிர்க்கும் அடையாளமாக உருவானது நியோ ரியலிசம். நமது நாட்டின் பெருமையையும் மரியாதையையும் மீட்டுத்தரும் முயற்சியில் ஒரு சிறு பங்கை அது அளித்திருக்கிறது.

சாமுவெல்ஸ்: நடந்து முடிந்த துயரார்ந்த சம்பவங்களை மீண்டும் திரையில் காண்பதற்கு மக்களுக்கு விருப்பமில்லை அல்லவா?

டி சிகா: Shoeshine வசூலில் தோல்வியடைந்த படம். போர் முடிந்த பிறகு வெளிநாட்டுப் படங்களையே இத்தாலியர்கள் அதிகம் விரும்பினார்கள். அமெரிக்கப் படங்களுக்கும் அதற்கு அடுத்ததாக ரஷ்யப் படங்களுக்கும் கூட்டம் அதிகம். ஆனால் அவை அவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துபவையாகவே அமைந்தன. அவற்றிலிருந்து மீண்டு பழைய இயல்புநிலைக்குத் திரும்புவதற்குக் காலம் எடுத்தது. நான், சவாட்டினி, ரோசலினி அனைவரும் அதற்கு முன்பே வந்துவிட்டோம். அப்போது வெளிவந்த எங்களின் படங்கள் பல இப்போது புதிதாக வெளியிடப்பட்டிருந்தால் வெற்றிகரமாக ஓடியியிருக்கும்.

சாமுவெல்ஸ்: எர்மானோ ஓல்மி (Ermanno Olmi) படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

டி சிகா: எனக்கு மிகவும் பிடித்தவை. அவர் ஒரு சிறந்த இயக்குநர்.

சாமுவெல்ஸ்: உங்களின் சமகாலத்தவரான பெல்லாச்சியோ பற்றி..

டி சிகா: பிரச்சாரத்தனமாகப் படம் எடுப்பவர். எனக்குப் பிடிக்காது.

சாமுவெல்ஸ்: பசோலினி பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

டி சிகா: நல்ல இயக்குநர். Accattone போன்ற அவருடைய ரோம் படங்கள் சிறப்பானவை. அவருடைய  Oedipus Rex எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று.

சாமுவெல்ஸ்: கோதாரின் (Godard) பாதிப்பு மற்ற இயக்குநர்களக் கெடுத்துவிட்டது என்று நினைக்கிறேன்.

டி சிகா: கோதார் மிகவும் தனிப்பட்ட இயக்குநர். அவருக்கான தனி  வழியைப் பின்பற்றுபவர். பிரெஞ்சு சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர். அவரைப் பின்பற்றுபவர்களும் அப்படியே நகலெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

சாமுவெல்ஸ்: அவரைப் பின்பற்றிப் படமெடுக்கும் இத்தாலிய இயக்குநர் பெட்ரோலுச்சி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

டி சிகா: பெட்ரோலுச்சி அப்படி அல்ல. அவர் இத்தாலியின் இளம் இயக்குநர்களில் முக்கியமானவர். அவரின் முதலில் இயக்கிய La commare secca படத்தை  எனக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். நல்ல படம். சினிமா பற்றி புதிய பார்வையுடன் படமெடுக்க வந்திருக்கும் இளைஞர்.

சாமுவெல்ஸ்: அவருடைய The Conformist படத்தை உங்களின் The Garden of the Finzi-Continis உடன் எப்படி ஒப்பிடுவீர்கள்? இரு படங்களிலும் ஒரே நடிகை தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

டி சிகா: இரண்டும் வெவ்வேறு வகைப் படங்கள். பெட்ரோலுச்சியின் அழகியல் வேறு. அவர் சர்ரியலிச ஓவியர் மாக்ரிட்டைப் பின்பற்றுபவர் என்று சொல்லியிருக்கிறார்.

சாமுவெல்ஸ்: இளம் விமர்சகர்கள், குறிப்பாக பிரெஞ்சு புதிய அலையின்  ‘கஹியே தூ சினிமா’ (Cahiers du Cinema) விமர்சகர்கள் உங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள்?

டி சிகா: என்னுடைய படங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. நான் பொருட்படுத்துவதில்லை. நான் மதிக்காத விமர்சகர்களின் கருத்துகள் ஒருபோதும் என்னைப் பாதிப்பதில்லை. யார் என்னைத் தவறாக எடுத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நான் என்னுடைய தனிப்பட்ட வழியில் செல்பவன். முற்றிலுமாக என்னுடைய மனத்தையும் உணர்வுகளையும் நம்பிச் செயல்படுபவன். ‘Umberto D-க்குப் பிறகு முக்கியமான திரைப்படம் ஒன்றைக் கூட டி சிகா எடுக்கவில்லை; Garden of the Finzi-Continis அவரின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம்’ என்று சொல்லும் விமர்சகர்களின் கருத்துகளை ஏற்பதற்கு எனக்கு எந்த ஒரு  தயக்கமும் இல்லை. அவர்கள் சொல்வது மிகவும் சரி. அந்த இடைவெளியில் அமெரிக்கத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பப் படமெடுக்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளானேன். உதாரணத்திற்கு சோபியா லாரெனைக் கதாநாயகியாகக் கொண்டு எடுத்த படத்தில் நடிப்பிற்காக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்த நீண்ட இடைவெளியில் Umberto D போன்ற கனமான படங்களை எடுக்கமுடியவில்லை.

The Children are Watching Us, 1943

முதலில் Umberto D படத்தை எடுப்பதற்காகத் தயாரிப்பாளர் ரிஸ்ஸோலியை அணுகியபோது அதற்குப் பதிலாக ‘Don Camillo’-வைப் படமாக்கச் சொன்னார். அதன் தயாரிப்பிற்காக 100 மில்லியன் லிராக்கள் செலவு செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார். என்னுடைய எண்ணங்களுக்கு எதிராக எதையும் செய்ய நான் விரும்பவில்லை. Don Camillo படம் எடுப்பதற்குப் பதிலாக Umberto D-யை எடுத்தேன். என்னிடமிருந்த பணத்தைக் கொண்டு Umberto D, Shoeshine, Bicycle Thieves ஆகிய படங்களைத் தயாரித்ததில் கையிலிருந்த பணம் முற்றிலுமாகக் கரைந்துவிட்டது. வேறு வழியின்றி வெளித் தயாரிப்பாளர்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அப்படியான வெளித் தயாரிப்புகளில் படங்களை எடுத்திருக்கக் கூடாது.

சாமுவெல்ஸ்: நீங்கள் முதன்முதலில் படமெடுக்கத் தொடங்கிய  நாட்கள் மறக்க முடியாத, என்றும் நினைவில் நிற்கும் நாட்கள் அல்லவா?

டி சிகா: நிச்சயமாக. Umberto D சமரசங்களுக்கு இடமளிக்காமல் எடுக்கப்பட்ட படம். வெகுஜன ரசனை, பிரம்மாண்டங்கள், வசூல் என எதைப்பற்றியும் கவலைப்படாது உருவாக்கிய படைப்பு.  விமர்சன அளவுகோல்களின்படி Bicycle Thieves சிறந்த படம். Umberto D அதைவிடத் தனித்துவம் வாய்ந்த படைப்பு என்பேன்.

சாமுவெல்ஸ்: உங்கள் இயக்கத்தில் அமெரிக்க நடிகை Faye Dunaway கதாநாயகியாக நடித்த Amanti போன்ற பிற்காலப் படைப்புகள் உங்களின் மொத்த படைப்புத் திறனையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உங்களை விமர்சிப்பவர்களால் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.

டி சிகா: அம்மாதிரியான படங்களை இயக்கியது என்னுடைய தவறு. மற்ற கலைஞர்களைப் போலவே நானும் தவறுகள் செய்திருக்கிறேன்.

சாமுவெல்ஸ்: இப்போது ஏன் நடிகர்களைப் பயன்படுத்துகிறீர்கள்? நடிகர் அல்லாதவர்களைக் கொண்டு மிகச் சிறந்த படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் அல்லவா?

டி சிகா: நடிகர்கள் என்றால் இத்தாலியில் நூறு பேர் இருப்பார்கள். அதிலும் நல்ல நடிகர்கள் என்றால் எண்ணிக்கை குறைந்துவிடும். ஆனால் நிஜ வாழ்வில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். தெருக்களில் என் பாத்திரங்களைப் பிரதிபலிக்கும் தோற்றம், முகபாவம், குணங்கள் கொண்டவர்கள் கிடைத்தால் அவர்களை என் படங்களில் நடிக்கச் செய்துவிடுவேன்.  அப்படி இல்லாத பட்சத்தில் தொழில்முறை நடிகர்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. The Garden of the Finzi Continis படத்தின் கதாநாயகி நல்ல நடிகை. அவளின் தந்தையாக நடிப்பவரை மேற்சொன்னபடி தெருவில் கண்டுபிடித்தேன். தாயாக நடிப்பவர் தொழில்முறை நடிகர் அல்ல; ட்யூரின் நகர உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாட்டியாக நடிப்பவர் ரஷ்ய உதவி நடிகை.

Bicycle Thieves படத்திற்குப் பணம் தர முன்வந்த ஒரே ஒரு தயாரிப்பாளர் – டேவிட்.ஓ. செல்ஸ்னிக். அமெரிக்கத் தயாரிப்பாளர். அவருக்கோ கதாநாயகனாக நடிக்க நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன் என்ற கவலை இருந்தது. அமெரிக்க நடிகர் காரி கிராண்ட்டை (Cary Grant) கதாநாயகனாக்குவதில் குறியாக இருந்தார். படத்தில் ரிக்கோவின் பாத்திரம் உழைத்து உரமேறிய கரங்கள் கொண்ட ஒரு சாதாரண இத்தாலியர் நடிக்க வேண்டிய ஒன்று என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கதாநாயகன் ஒரு தொழிலாளியாக, படத்தின் கதாபாத்திரத்தை உயிருடன் பிரதிபலிக்கும் பாத்திரமாக இருக்க வேண்டும். நான் காரி க்ராண்ட் வேண்டாம் என்றவுடன் செல்ஸ்னிக் Bicycle Thieves படத்தைத் தயரிக்க மறுத்துவிட்டார்.

The Bicycle Thief, 1948

சாமுவெல்ஸ்: பயிற்சி பெறாத, தொழில்முறை நடிகர்கள் அல்லாதவர்களை உங்கள் படங்களில் எப்படி இயக்குகிறீர்கள்?

டி சிகா: அவர்கள் புரிந்துகொள்ளும்படி மீண்டும் மீண்டும் விவரித்து அவர்களை உணரச் செய்வேன். அந்த நடிகர்களிடம் விளக்கிச் சொல்லிப் புரியவைத்து சிறந்த முறையில் நடிப்பைப் பெறும் திறமை என்னிடம் இருக்கிறது. புன்னகையுடனும் பொறுமையுடனும் மெதுவாக  நடித்துக் காட்டி அவர்களைப் பயிற்றுவிப்பேன். ஒருபோதும் கோபப்பட்டதில்லை..

சாமுவெல்ஸ்: ஒரு காட்சியைப் பலமுறை படமாக்க வேண்டியதிருக்குமா ?

டி சிகா: இல்லை. சரியாக வரவில்லை என்றால் சில நேரங்களில் மீண்டும் அக்காட்சியைப் படமெடுத்திருக்கிறேன். மற்றபடி நான் எதைப் படமாக்கியிருக்கிறேனோ அதை அப்படியே வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் படமெடுப்பதற்குமுன் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன். இத்தாலியில் படத்தயாரிப்புக்குப் போதுமான பணம் கிடையாது. மீண்டும் மீண்டும் ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருக்க முடியாது. ஒருமுறை படமாக்கியதை அப்படியே வைத்துக் கொள்வது வழக்கம்.

சாமுவெல்ஸ்: மற்றவர்களுக்காக நீங்கள் நடிப்பதை என்ன சொல்கிறீர்கள், குறிப்பாக ரோஸெலினி இயக்கி நீங்கள் நடித்த General Delia Rovere பற்றி?

டி சிகா: நான் நடித்தவற்றிலேயே சிறந்த பாத்திரமாக அதைக் கருதுகிறேன். அப்படத்தை  இயக்கியவர் என்னுடைய மதிப்புக்குரியவர். The Gold of Naples படத்தில் நடிப்பது சிரமமாக இருந்தது. படத்தின் ஒளிப்பதிவாளர், தொழில்நுட்ப உதவியாளர் அனைவரிடமும் என் நடிப்பைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தேன். படத்தின் ஒரு வரி வசனத்தை ஓராயிரம் வகைகளில் பேச முடியும். எது சரியான ஒன்று என்று நமக்குச் சொல்வதற்கு காமெராவின் பின் ஒருவர் இருப்பது  அவசியம்.

சாமுவெல்ஸ்: நியோ ரியலிஸ்ட்டுகள் படமெடுக்கும் நேரத்தில் குரலைப் பதிவு செய்யாமல்  பிறகு ஸ்டுடியோவில் ‘டப்’ செய்து படத்தின் யதார்த்த தன்மையைக் குலைத்துவிடுகிறார்கள் என்று ராபர்ட் ப்ரெஸ்ஸோன் என்னிடம் முன்பு சொல்லியிருக்கிறார். பாத்திரத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துவது குரல்தான் என்கிறார் அவர்.

டி சிகா: என்ன பேசப்படுகிறது என்பது முக்கியம் என எண்ணுகிறேன். மேலும் படம் எடுக்கும் நேரத்தில் அப்படியெல்லாம் குரலை நேரடியாகப் பதிவு செய்வதற்கு என்னிடம் பணம் இருந்ததில்லை. Bicycle Thieves எடுக்க ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் செலவானது.

சாமுவெல்ஸ்: வண்ணத்திலும், கருப்பு வெள்ளையிலும் படங்களை எடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு எது பிடிக்கும்?

டி சிகா: வண்ணம் கவனத்தைத் திருப்பிவிடும். இயற்கை நிலப்பரப்பை வண்ணத்தில் காணும்போது கதையை மறந்துவிடுவோம். என்னுடைய சிறந்த படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டவையே.

சாமுவெல்ஸ்: அந்தோனியோனியின் (Michelangelo Antonioni)  வண்ணப் பரிசோதனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டி சிகா: அவர் பரிசோதனை முயற்சியாகத் தனது படங்களில் வண்ண அழகியலைப் பயன்படுத்துபவர். ஆப்பிள்களுக்கு வெள்ளை வர்ணம் பூசிப் படமெடுத்திருப்பார்.

சாமுவெல்ஸ்: ஒரு நல்ல இயக்குநர் தான் எழுதுவதை அப்படியே படமாக்குபவர் என்று இன்றைய விமர்சகர்களில் பெரும்பாலோர் கருதுவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

டி சிகா: அது உண்மை அல்ல. ஒரு படத்தை இயக்குவது அதை எழுதுவதிலிருந்து முற்றிலுமாக  வேறுபடுகிறது. ஒரு உயிரை உருவாக்குவது போன்ற செயல். படிமங்கள் மட்டுமே இன்றியமையாதவை. ‘கரமசோவ் சகோதரர்கள்’ கதையைக் கொண்டு ஐந்து படங்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் ஒன்று மட்டுமே தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புக்கு அருகில் வரும் தகுதியைக் கொண்டது. காரணம் இயக்கம்.

சாமுவெல்ஸ்: ரெனெ க்ளேர், சாப்ளின் இருவரும் உங்களை எவ்விதங்களில் பாதித்திருக்கின்றனர்?

டி சிகா: முற்றிலுமாக இல்லை என்பேன். மற்றவர்களின் ஆக்கங்கள் என்னுடைய படைப்பாக்கத்தை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். அப்படி எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சில முக்கியமான படங்களை நான் பார்த்ததில்லை.

The Roof, 1956

சாமுவெல்ஸ்: உங்கள் படைப்புகளின் வெற்றிகள் உங்களை பாதிப்பதுண்டா?

டி சிகா: ஒருபோதும் இல்லை. என்னுடைய படங்கள் இன்னும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.. மோசமாக எதையாவது செய்திருந்தால் அதை எப்போதும் உடனே என்னால் கண்டுகொள்ள முடியும். நன்றாக வந்திருந்தால் அதை இன்னும் சிறப்பாக எவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.

சாமுவெல்ஸ்: உங்கள் பழைய படங்களைப் பார்ப்பதுண்டா?

டி சிகா: ஆம். சில படங்கள் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருபவை. என் மனைவி மரியா நடித்த Good Morning Elephant, சரியாக ஓடாத The Roof போன்றவை.

சாமுவெல்ஸ்: உங்கள் படங்கள் பல ஏன் சிறுவர்களின் வாழ்க்கை குலைந்து போவதை மையமாகக் கொண்டிருக்கின்றன ?

டி சிகா: ஏனென்றால் வாழ்க்கையில் முதலில் பாதிக்கப்படும் அப்பாவிகள் அவர்கள்தான்.

சாமுவெல்ஸ்: அதைத்தான் The Children Are Watching Us-ல் காட்டியிருக்கிறீர்கள். அந்தப் படத்தில் தந்தையின் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர் யார்?

டி சிகா: அவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவர் பெயர் சிகோலி.

சாமுவெல்ஸ்: உங்களின் அடுத்த படம் The Gates of Heaven (1945) பற்றிச் சொல்லுங்கள்.

டி சிகா: ஜெர்மனியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடுத்த படம். அப்போது உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. வாத்திகனில் (Vatican) இப்படத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. நெகட்டிவ் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் கோயபல்ஸ் அனுப்பிய  ஜெர்மன் தூதுவர் ஒருவர் என்னைச் சந்தித்து செக்கோஸ்லாவியா நாட்டில் ப்ராஹாவில் (Prague) உள்ள ஜெர்மன் திரைப்படப் பள்ளியில் திரைப்படக்கலை பயிற்றுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இயக்குநராகப் புகழின் உச்சியில் நான் இருந்த நேரம். சற்று அவகாசம் தேவை எனக் கேட்டுக் கொண்டேன். உண்மையில் எந்த நேரத்திலும் அவர்கள் என்னை ஒரு ரயிலில் ஏற்றி அங்கு கொண்டு சென்று விடமுடியும். அதற்குள் இத்தாலிய பாசிச அரசு வெனிஸ் நகரிலிருந்த திரைப்படப் பள்ளியை நடத்தித் தருமாறு என்னை நிர்ப்பந்தப்படுத்தத் தொடங்கியது. நல்லவேளையாக டி ஏஞ்செலோ என்ற ஒரு நல்ல மனிதரால் அந்தச் சிக்கலில் இருந்து  காப்பாற்றப்பட்டேன். வாத்திகனுக்காக ஒரு படம் இயக்கித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உடனே சரி என்று சொல்லிவிட்டேன். அதை எப்போது முடித்து வெனிஸ் திரைப்படப் பள்ளிக்கு வருவேன் என்று பாசிஸ்ட்டுகள் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். முடிக்க இரண்டு வருடங்கள் ஆகின. சரியாக பாசிஸ்ட்டுகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கத் துருப்புகள் ரோம் நகருக்குள் நுழைந்த அன்று படத்தை முடித்தேன். அது வாத்திகன் கேட்டுக்கொண்டபடி எடுத்துக் கொடுக்கப்பட்ட படம். இறுதிக் காட்சி மிகமோசமாக இருக்கும். பாசிஸ்ட்டுகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள நான் எடுத்த படம்.

சாமுவெல்ஸ்: The Roof-ஐ விட Shoeshine ஆழமான படம் அல்லவா?

டி சிகா: ஆம். போரின் பின்விளைவுகளை எடுத்துரைத்த படம். முதலில் பாசிஸ்ட்டுகள். அடுத்து அமெரிக்கப் படையினர், பணம், கருப்புச் சந்தை சிகரெட் வியாபாரம் என்று அவர்கள் வரவால் நாசமான சிறுவர்கள், இளைஞர்கள். அவர்களுக்குப் பரிசாக இறுதியில் சிறைத் தண்டனை.

சாமுவெல்ஸ்: சிறை வாழ்க்கை பற்றிய விவரங்களை எப்படி அறிய முடிந்தது?

டி சிகா: சிறைச்சாலைகளுக்கு அடிக்கடி சென்று அங்கிருந்த கைதிகளிடம் பேசினேன். இந்தக் கதைக்கான கரு பல வருடங்களுக்கு முன்பே பிறந்தது. போர் முடிந்த நேரம் திரைப்படப் பத்திரிக்கை ஒன்றை நானும் இன்னும் மூவரும் சேர்ந்து தொடங்கினோம். கம்யூனிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பத்திரிக்கை என்று நான்கு மாதங்களில் அதைத் தடை செய்துவிட்டார்கள். அதில் வெளியான என்னுடைய ஒரு கட்டுரை காலணிகளை மெருகேற்றும் பணி செய்து வாழ்ந்த சிறுவர்களை நான் படமெடுக்க விரும்பியதைப் பற்றியது. அவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்திருந்தது. ஒரு வருடம் கழித்து அவர்களைப் பற்றிப் படம் எடுப்பதற்கு ஒரு தயாரிப்பாளர் விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதை மிக மோசமாக இருந்தது. பதிலாக வேறு கதை வேண்டும் என்று சவாட்டினியிடம் சென்றேன். குதிரைகள் மேல் மிகுந்த விருப்பம் கொண்ட தெருக்களில் ஷூ பாலிஷ் செய்யும் இரு சிறுவர்கள் பற்றிய இந்தக் கதை உருவானது.

Shoeshine படத்திலிருந்து

சாமுவெல்ஸ்: கதையின் முடிவு மிகையுணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது அல்லவா?

டி சிகா: நான் படமாக்க நினைத்திருந்த முடிவு வேறு விதமானது. மிக அழகான முடிவு. இறுதிக் காட்சியை வெளிப்புறப் படப்பிடிப்பாக வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தேன். சரியான தட்பவெப்ப காலநிலைக்குக் காத்திருக்க வெண்டியிருந்தது. அதற்கான பணம் தயாரிப்பாளரிடம் இல்லை என்பதால் ஸ்டுடியோவில் படமாக்க வேண்டியதாயிற்று. பணமில்லததால் அவ்வாறு எடுக்க முடியாமல் இப்படிப் படத்தை முடித்தோம். மிகக் குறைந்த செலவில் – மொத்தம் இருபதினாயிரம் டாலர்கள் செலவில் – முடித்த படம்.

சாமுவெல்ஸ்: Bicycle Thieves படத்தில் உணர்ச்சி அதிகரிக்கும் வகையில் இசையை அதிகமாகப் பயன்படுத்தியிருப்பீர்கள் …

டி சிகா: இசையைப் பயன்படுத்துவதற்கு எதிரானவன் நான். சக தயாரிப்பாளர் வற்புறுத்தும்போது வேறு வழியில்லாமல் அவ்வாறு ஆனது.

சாமுவெல்ஸ்: Bicycle Thieves-இல் ஒருவித சமரசம் இருக்கிறது என்றிருக்கிறீர்கள்…

டி சிகா: அது சமரசமல்ல. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் அன்புமிகுந்த நெகிழ்வான ஒரு நிகழ்வு. அந்த அளவு அதிக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதால் அப்படிச் சொல்லியிருக்கிறேன்.

சாமுவெல்ஸ்: அது படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. மகன் தந்தையை மன்னித்து ஏற்றுக் கொள்வது அற்புதமான  ஒன்றல்லவா? என்னைப் பொறுத்தவரை அது முக்கியமான காட்சி.  அதை மிகையான உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று சொல்ல முடியாது. படத்தின் சிறப்புக்குக் காரணமான காட்சிகளில் ஒன்று என்று சொல்லலாம்.

டி சிகா: அப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. பலர் அதை விமர்சித்திருக்கின்றனர். Bicycle Thieves, Umberto D இரண்டு படங்களையும் என்னுடைய சிறந்த படைப்புகளாகக் கருதுகிறேன்.

சாமுவெல்ஸ்: விமர்சகர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்கள் எப்போதும் அப்படித்தான். Umberto D படத்தின் இறுதியில் அந்த வாயில்லா ஜீவனான நாய் விரைந்து வரும் ரயில் முன் விழுந்து சாவதை உறுதியாக நிராகரித்து ஓடிவிடுவது உம்பர்ட்டோவை மனத்திடத்துடன் மீண்டும் வாழ்க்கையை சந்திக்கச் செய்கிறது. அந்த முடிவைப் பற்றியும் மோசமான விமர்சனங்களை கேட்டிருக்கிறேன். திடீரென சர்ரியலிசப் படங்களிலிருந்து விலகி மாய யதார்த்தக் கதைகளை எடுக்கத் தொடங்கியது ஏன் ?

டி சிகா: Bicycle Thieves உலகெங்கும் அறியப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற பின் நியோ ரியலிசம்  அடிப்படை விதிமுறை – பார்முலா- ஆக ஆகிவிடக்கூடாது என்பதில் நானும் சவாட்டினியும் உறுதியாக இருந்தோம். மாய யதார்த்த / தேவதைக் கதை / இசைக் காவியப் பகுப்புகள் உட்பட சினிமாவின் பிற வடிவங்களில் எங்கள் படைப்புகளை உருவாக்க முடிவு செய்தோம்.

சாமுவெல்ஸ்: Umberto D பாத்திரத்தில் நடிப்பதற்கு அதற்கு முற்றிலும் எதிர்மறையான உயர்தர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஒரு கல்லூரிப் பேராசிரியரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

டி சிகா: அந்தப் பாத்திரத்தில் நடித்த பாடிஸ்டி உயர் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர். நியோ ரியலிசப் படங்கள் அனைத்தும் அடிமட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களைப் பற்றியே உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஏழ்மையின் பாதிப்பில் உழன்ற நடுத்தர வர்க்க மக்களை அறவே மறந்துவிட்டோம். அம்மாதிரியான குடும்பங்களில் நிகழ்ந்த தற்கொலைகள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருந்தன, ஒரு இளைஞன் தான் வாழவிருக்கும் முழு வாழ்வையும் நிராகரித்து மரணத்தைத் தேர்வுசெய்வது முட்டாள்தனம். அதே நேரம் மீதமிருக்கும் தன்னுடைய சொற்ப வாழ்நாட்களைக் கூட எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் ஒரு முதியவரின் நிலை மிகுந்த வேதனைக்குரியது. அதைத்தான் மக்களுக்குக்  காண்பிக்க விரும்பினேன்.

சாமுவெல்ஸ்: நிஜ வாழ்வில் சிறப்பான முறையில் உயர்தர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஒருவரை இந்தப் படத்திற்கேற்ற பாத்திரமாக மாற்றி நடிக்க வைத்தது எப்படி?

டி சிகா: உம்பர்ட்டோ பாத்திரம் பற்றி நான் மனத்தில் கொண்டிருந்த தோற்த்தை அப்படியே கொண்டிருந்தவர் பாடிஸ்டி. அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான நடிகரல்லாத  ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன். வயதானவர்களுக்கான இல்லங்களில் வாழ்பவர்களைச் சந்தித்தேன். ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டிருந்தேன். ஒருநாள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த பாட்டிஸ்டியைப் பார்த்தேன். அந்தக் கணமே அவர்தான் உம்பெர்ட்டோவாக நடிப்பவர் என என் மனம் உறுதி செய்தது. அப்படியே பின்னால் தொடர்ந்து அவர் பணியாற்றிய பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அவருடன் பேசி என்னுடைய அலுவலகத்திற்கு வரவைத்து படத்திற்கான தேர்வை நடத்தி உறுதி செய்துகொண்டேன். திடீரென இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததில் மிகவும் குழம்பிப் போயிருந்தார். அவருக்கு என்னையோ சினிமா பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை.

Umberto D, 1952

சாமுவெல்ஸ்: எதிலும் திருப்தியற்ற இறுகிய மனதுள்ளவராக படத்தில் நடித்திருக்கிறார்.

டி சிகா: அந்தப் பாதிரப்படைப்பு அப்படியானது. உம்பெர்ட்டோ ஓய்வூதியம் பெறும் வயதான ஒரு மனிதர். முடியாதபோதும் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் குணமுள்ளவர். வாழ்வின் யதார்த்தம் அவரை விட சக்தியுள்ளதாயிருப்பதால் வாழ்க்கையை அவரால் நேராகச் சந்திக்க முடிவதில்லை. வாழ்வை முடித்துவிடத் துணிகிறார்.

சாமுவெல்ஸ்: The Roof-க்குப் பிறகு Two Women வரை ஐந்து வருடங்களாக எந்தப் படத்தையும் நீங்கள் இயக்கவில்லை. ஏன்?

டி சிகா: ஏனென்றால் அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். ஹாவர்ட் ஹ்யூஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி படமெடுப்பதற்காக அங்கிருந்தேன். ஒரு வேலையும் நடக்கவில்லை. சகல வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். வேலை இல்லாமல் வாளாவிருக்க வேண்டியதாயிற்று. எவரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

சாமுவெல்ஸ்: Two Women-ஐ ஏன் சினிமாஸ்கோப்பில் எடுத்தீர்கள்?

டி சிகா: அப்போது சினிமாஸ்கோப் பிரபலமாயிருந்தது, அவ்வளவுதான். அதில் எடுப்பது நல்லது என்று சொல்லமாட்டேன்.

சாமுவெல்ஸ்: அது மிகையுணர்வு சற்று அதிகமான படம் எனக் கருதுகிறேன். எப்படி ஒரு பெண்ணிடம் அவள் மானபங்கப்படுத்தப்பட்டு சில நாட்களில் மீண்டும் தனக்கு விருப்பமானபடி இருக்க வெளியே செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது?

டி சிகா: ஆல்பர்ட்டோ மொரோவியா அப்படித்தான் அந்த நாவலில் எழுதியிருக்கிறார். முந்தைய நிகழ்விற்காகப் பழிவாங்கும் வகையில் அவள் நண்பனுடன் இரவைக் கழிக்கச் செல்கிறாள்.

சாமுவெல்ஸ்: உங்கள் படைப்புகளில் பல திரைப்படக்கலையை உயர்த்தியிருக்கும் முக்கியமான படங்கள். ஆனால் நீங்கள் இயக்கிய சில படங்களால் உங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மோசமான சில படங்களைக் கொண்டு அந்த உயர் நிலையிலிருந்து உங்களைப் புறக்கணிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டி சிகா: பணத்தேவைகளுக்காகத் தவறுகள் செய்திருக்கிறேன். விரும்பிய படைப்புகளை உருவாக்கப் பணம் தேவைப்பட்டதால் அந்தப் படங்களை இயக்கினேன்..  ஃப்ளாபேரின் (Flaubert) A Simple Heart-ஐ இப்போது படமாக்கவேண்டும் என்பது எனது ஆசை. ஃப்ளாபேரை வெறும் எரிக் செகாலாக (Erich Segal) மாற்றிவிட்ட அமெரிக்க முதலாளித்துவக் கும்பலுக்குக் கட்டாயம் பதிலளித்தாக வேண்டும்.

சாமுவெல்ஸ்: Yesterday, Today and Tomorrow படத்தின் முதல், இறுதிப் பாகங்கள் எனக்குப் பிடித்தவை. நடுப்பகுதி ஏனோ திருப்தியளிக்கவில்லை. சோபியா லாரெனுடன் மார்செல்லோ மாஸ்ட்ரொயானி (Marcello Mastroianni) இணைந்து நடிக்கப் பரிந்துரை செய்தது யார்?

டி சிகா: கார்லொ பாண்ட்டி. ஒரு படத்தின் மூன்று பாகங்களிலும் ஒரே நடிக ஜோடி நடித்திருக்கும் முதல் படம் இது.

சாமுவெல்ஸ்: இப்போது Sunflower படத்திற்கு வருவோம். ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறீர்கள் ?

டி சிகா: ஒரு இத்தாலியப் பெண்ணின் கதை. ஸ்வீடனில் சுரங்கப் பணி செய்துகொண்டிருக்கும் கணவன் திரும்பி வராதபோது அவனைத் தேடி ஸ்வீடனுக்குச் செல்கிறாள். அவன் ஆர்க்டிக் பனிப் பிரதேசத்திற்குச் சென்றுவிட்டதை அறிந்து சிரமப்பட்டு பயணம் செய்து அங்கும் செல்கிறாள். அவன் மனைவியையும் மகளையும் சந்திக்கிறாள். சவாட்டினி எழுதிய கதை இப்படிப் போகிறது. ஆனால் கதாநாயகியை நிராதரவாகத் தவிக்கவிட்டு கணவன் சென்றுவிடும் கதை தயரிப்பாளர் கார்லோ பாண்ட்டிக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால் கதாநாயகி அவருடன் வாழ்ந்து கொண்டிருந்த சோபியா லாரென். அவருடைய கட்டாயத்தில் லாரெனுக்கேற்ப கதை மாற்றப்பட்டது.

சாமுவெல்ஸ்: எப்படி அதை ஏற்றுக்கொண்டீர்கள்? படத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்திருக்கலாமே?

Sunflower, 1970

டி சிகா: படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு ஏற்கெனவே நிறைய நாட்கள் ஆகியிருந்தது.  படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. அதை விட்டு வருவதற்கான தைரியம் என்னிடம் இல்லை. அனைத்திற்கும் காரணம் கார்லோ பாண்ட்டியாக இருந்த போதிலும் முழுப் பழியையும் நானும் சவாட்டினியும் ஏற்க நேர்ந்தது. படம் முழுக்க பாண்ட்டியின் தலையிடல் இருந்தது. அந்தப் படத்தை இயக்கியது மிக மோசமான அனுபவம். அதற்குப் பழிவாங்குவதற்காக நான் எடுத்த படம்தான் The Garden of the Finzi-Continis.

சாமுவெல்ஸ்: சவாட்டினி ஏன் அந்தப் படத்தில் பணியாற்றவில்லை?

டி சிகா: Sunflower படமெடுத்த நேரத்தில் சவாட்டினி கார்லோ பாண்ட்டியின் பக்கம் சேர்ந்து கொண்டார். நான் தனித்து விடப்பட்டேன். Sunflower படத்தின் அனுபவத்திற்குப் பிறகு உண்மையான ‘டி சிகா’ படம் ஒன்றை நான் நினைத்தபடி, நான் ஒருவனாக உருவாக்க விரும்பினேன். யூதர்களின் அப்போதைய நிலையை அறிந்திருந்த எனக்கு The Garden of the Finzi-Continis கதையைப் படமாக்குவதில் அதிக விருப்பமிருந்தது. போரின் போது கொல்லப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களின் இறப்புக்கு நாம் எல்லோரும் காரணம் எனும் குற்ற உணர்வு என்னுள் இருந்தது. சித்தம் கலங்கிய ஒரு கொலைகாரனின் விருப்பத்தை நிறைவேற்ற அந்தக் கொலைகள் நிகழ்ந்தன. இத்தாலிய பாசிஸ்ட்டுகளும் குற்றவாளிகளே. நான் பாசிஸ்ட் இல்லை என்றாலும் ஹிட்லருடன் ஒத்துழைத்த ஒரு நாட்டின் குடிமகன். இந்தப் படம் என் மனத்திற்கு மிகுந்த திருப்தியை அளித்த படைப்பு. மிகக் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் எடுத்து முடித்த படம்.

*

மூலநூல்: Howard Curle, Stephen Snyder எழுதியுள்ள Vittorio De Sica – Contemporary Perspectives நூலிலிருந்து.