லாட்டரி – ஷெர்லி ஜாக்சன் – தமிழில் : கார்குழலி

by கார்குழலி
0 comment

அந்த ஜூன் 27-ஆம் நாளின் காலை தெளிவாகவும் ஒளிபடர்ந்தும் முழுநீள கோடைக்கால நாளொன்றின் புத்தம்புதிய கதகதப்பையும் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பூக்கள் பூத்துக் குலுங்கின, புல் செழிப்பான அடர்ந்த பச்சை நிறத்திலிருந்தது. சுமார் பத்து மணியிருக்கும். தபால் நிலையத்துக்கும் வங்கிக்கும் இடையே இருந்த சதுக்கத்தில் கிராமத்து மக்கள் கூட ஆரம்பித்தனர். சில ஊர்களில் மக்கள்தொகை அதிகமாக இருந்ததால் லாட்டரியை நடத்தி முடிக்க இரண்டு நாட்களானது என்பதால் ஜூன் 26-ஆம் தேதியே தொடங்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் வெறும் முந்நூறு பேர் மட்டுமே இருந்ததால் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே ஆகுமென்பதால் காலை 10 மணிக்கு தொடங்கினால் மக்கள் மதிய உணவுக்கு வீட்டுக்குப் போவதற்குள் நடத்தி முடித்துவிடலாம்.

முதலில் வந்து சேர்ந்தது குழந்தைகள் தான். கோடைக்கால விடுமுறைக்காக சமீபத்தில் தான் பள்ளி மூடியிருந்ததால் புதிதாகக் கிடைத்திருந்த விடுதலை அவர்களில் சிலருக்கு இயல்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. முதலில் அமைதியாகக் கூடியவர்கள் சிறிது நேரத்தில் பேரிரைச்சலுடன் விளையாடத் துவங்கினர். இன்னமும் வகுப்பறையையும் ஆசிரியரைப் பற்றியும் புத்தகங்களையும் கடிந்துரைகளைப் பற்றியும் தான் பேசிக்கொண்டிருந்தனர்.

பாபி மார்ட்டின் அதற்குள்ளாக பாக்கெட்டு முழுவதும் கற்களைத் திணித்திருந்தான். அவனைப் பார்த்து மற்ற பையன்களும் உள்ளதிலேயே வழவழப்பாகவும் வட்டமாகவும் இருந்த கற்களை பொறுக்கி எடுத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் பாபியும் ஹாரி ஜோன்சும் டிக்கி டெலகிராயும் ஒன்றுசேர்ந்து சதுக்கத்தின் மூலையில் பெரிய கற்குவியலைச் சேகரித்து வைத்து மற்ற பையன்கள் அதைத் திருடிச் சென்றுவிடாமல் காவல்காத்துக் கொண்டிருந்தார்கள். இளைய பெண்களோ ஒரு பக்கமாக நின்றுகொண்டு அவ்வப்போது திரும்பித்திரும்பிப் பையன்களைப் பார்த்துக்கொண்டே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளதிலேயே சின்னக் குழந்தைகள் புழுதியில் உருண்டுகொண்டோ அல்லது அண்ணன் அக்காக்களின் கையைப் பிடித்துக்கொண்டோ நின்றிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், ஆண்களும் வர ஆரம்பித்தனர். தத்தமது பிள்ளைகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டோ சாகுபடியையும் மழையையும் பற்றியோ ட்ராக்டர்களையும் வரியையும் பற்றியோ பேசிக்கொண்டிருந்தனர். மூலையிலிருந்த கற்குவியலைவிட்டுத் தள்ளி ஒன்றாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களுடைய ஜோக்குகள் அமைதியானவையாக இருந்தன. வாய்விட்டுச் சிரிக்காமல் புன்னகை மட்டும் செய்தார்கள். ஆண்கள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில், சாயம்போன வீட்டு அங்கிகளையும் ஸ்வெட்டர்களையும் அணிந்துகொண்டு பெண்கள் வந்து சேர்ந்தார்கள். ஒருவருக்கொருவர் முகமன் கூறியபடியும் ஊர் கதைகளைப் பேசியபடியும் அவரவர்களின் கணவனின் அருகில் போய் நின்றுகொண்டனர். கணவனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண்கள் சிறிது நேரத்தில் தத்தமது பிள்ளைகளைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். ஐந்தாறுமுறை கூப்பிட்ட பிறகு வேண்டாவெறுப்பாக வந்து சேர்ந்தார்கள் பிள்ளைகள். எட்டிப்பிடிக்க முயன்ற அம்மாவின் கையில் சிக்காமல் மீண்டும் கற்குவியல் இருந்த இடத்துக்கே சிரித்தபடியே ஓடினான் பாபி மார்ட்டின். அப்பா உரக்கக் குரல் கொடுத்ததும் உடனே வந்து அப்பாவுக்கும் அண்ணன்களில் மூத்தவனுக்கும் இடையில் நின்றுகொண்டான் பாபி.

சதுக்க நடன விழாக்கள், இளைஞர் சங்கம், ஹாலோவீன் கொண்டாட்டம் போன்ற பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நேரமும் ஊக்கமும் கொண்டிருந்த திரு. சம்மர்ஸ் தான் லாட்டரியையும் நடத்தினார். வட்டமுகமும் நகைச்சுவையுணர்வும் கொண்டவர். நிலக்கரி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குழந்தையில்லை என்பதாலும் மனைவி ஒரு சிடுமூஞ்சி என்பதாலும் அவருக்காக எல்லோரும் வருத்தப்பட்டனர். கறுப்புநிற மரப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு சதுக்கத்துக்கு அவர் வந்தபோது கிராம மக்கள் முணுமுணுத்த குரலில் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்துக் கையசைத்தபடி, “இன்னைக்குக்  கொஞ்சம் தாமதமாகிடுச்சு, மக்களே!” என்றார்.

அவர் பின்னாலேயே உயரமான முக்காலியொன்றைத் தூக்கிக்கொண்டு வந்தார் போஸ்ட் மாஸ்டரான திரு. கிரேவ்ஸ். முக்காலியைச் சதுக்கத்தின் நடுவில் வைத்ததும் அதன்மேல் கறுப்புப் பெட்டியை வைத்தார் சம்மர்ஸ். முக்காலியிலிருந்து நல்ல இடைவெளிவிட்டு தள்ளி நின்றுகொண்டிருந்தனர் கிராம மக்கள்.

“யாராவது கொஞ்சம் கைகொடுங்களேன்,” என்றார் சம்மர்ஸ். சிறிதுநேரத் தயக்கத்துக்குப் பிறகு திரு. மார்டினும் அவருடைய மூத்த மகன் பாக்ஸ்டரும் வந்து கறுப்புப் பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதும் பெட்டிக்குள்ளே கையைவிட்டு உள்ளே இருந்த சீட்டுகளை நன்றாகக் கலக்கிவிட்டார் சம்மர்ஸ்.

ஆரம்பகாலத்தில் லாட்டரிக்கு பயன்படுத்திய உபகரணங்கள் எல்லாம் பல நாட்களுக்கு முன்னரே  தொலைந்துபோய் விட்டிருந்தது. முக்காலியின் மீது இப்போது இருக்கும் பெட்டியை கிராமத்திலேயே வயதான மனிதரான வார்னர் பிறப்பதற்கு முன்பிருந்தே பயன்படுத்தி வருகின்றனர். பெட்டியை மாற்றிவிடலாமென்று கிராம மக்களிடம் பலமுறை சம்மர்ஸ் சொல்லியும் பாரம்பரியத்தை மாற்றும் எந்த விஷயத்தையும் செய்யவே கூடாது என்று மறுத்துவிட்டார்கள்.

இந்த இடத்துக்கு முதன்முதலாக மக்கள் வந்து குடியேறியபோது பயன்படுத்திய முதல் பெட்டியிலிருந்த சில துண்டங்களைப் பயன்படுத்தித் தான் இப்போதிருக்கும் பெட்டியைச் செய்திருப்பதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு வருடமும் லாட்டரி நடந்துமுடிந்த பிறகு புதுப் பெட்டி குறித்து மறுபடியும் பேச ஆரம்பிப்பார் சம்மர்ஸ், ஆனாலும் யாரும் எதுவும் சொல்லாமலே அப்படியே விடுபட்டுப் போகும். ஒவ்வொரு வருடமும் கறுப்புப் பெட்டி கொஞ்சம்கொஞ்சமாக பழுதடைந்தது, பக்கமெல்லாம் பிளந்து கறுப்பு நிறம் மங்கிப்போய் கறையேறி உள்ளேயிருந்த மரத்தின் நிறம் தெரிய ஆரம்பித்தது.

மார்டினும் அவருடைய மூத்த மகன் பாக்ஸ்டரும் சம்மர்ஸ் பெட்டிக்குள் கையைவிட்டுச் சீட்டையெல்லாம் நன்றாகக் கலைத்துவிட்டு குலுக்கும்வரை பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். பெரும்பாலான சம்பிரதாயங்கள் மறக்கப்பட்டோ விட்டுப்போயோ இருந்ததால் பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்திவந்த மரச் சில்லுகளுக்குப் பதில் பேப்பர் சீட்டுக்களைப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தார் சம்மர்ஸ். சின்னக் கிராமமாக இருந்தபோது மரச் சில்லுகளைப் பயன்படுத்தியது சரிதான். ஆனால் இப்போது முந்நூறு பேருக்கு மேல் இருக்கிறார்கள். இன்னமும் மக்கள்தொகை கூடிக்கொண்டே போகிறது என்பதால் கறுப்புப் பெட்டிக்குள் பிடிக்கக்கூடிய ஒன்றைப் பயன்படுத்துவதுதான் சரியென்று வாதிட்டார் சம்மர்ஸ்.

லாட்டரி நடப்பதற்கு முந்தைய இரவில் சம்மர்ஸ்சும் கிரேவ்ஸ்சும் துண்டுச் சீட்டுக்களை எழுதி பெட்டியினுள் போட்டு, மறுநாள் காலை சதுக்கத்துக்குப் பெட்டியைக் கொண்டுபோகும் வரையிலும் அதை சம்மர்ஸின் நிலக்கரிக் கடையில் வைத்து பத்திரமாகப் பூட்டிவிடுவார்கள். வருடத்தின் மற்ற நாட்களிலெல்லாம் பெட்டி இங்கேயோ அங்கேயோ என்று எங்கு வேண்டுமானாலும் கிடக்கும். ஒரு வருடம் கிரேவ்ஸ்சின் தானியக் களஞ்சியத்திலும் அடுத்த வருடம் தபால் நிலையத்தின் கீழேயும் சில வருடங்கள் மார்டினின் பலசரக்குக் கடையின் அலமாரியிலும் இருக்கும்.

சம்மர்ஸ் லாட்டரியைத் துவக்குவதற்கு முன்பு நிறைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. குடும்பத் தலைவர்கள், ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் வீடுகளின் தலைவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள உறுப்பினர்கள் என்று பலவிதமான பட்டியல்களைத் தயாரிக்க வேண்டியிருந்தது. தபால்நிலையத் தலைவர் ஒவ்வொரு வருடமும் சம்மர்ஸை லாட்டரி நடத்தும் அதிகாரியாக முறையாக பதவியேற்பு செய்து வைத்தார்.

ஒரு காலத்தில் லாட்டரி அதிகாரி இராகமில்லாத பாடலொன்றை ஒவ்வொரு வருடமும் முணுமுணுத்தபடியே விழாவைத் தொடங்குவார் என்பது நினைவில் இருப்பதாகச் சில பேர் கூறினர். அவர் இருந்த இடத்திலிருந்தே பாடலைப் பாடுவாரென்று சில பேரும் அவர் கூட்டத்துக்கு நடுவே நடந்தபடியே பாடுவாரென்று வேறு சிலரும் நினைவுகூர்ந்தார்கள். ஆனால் எத்தனையோ வருடங்களுக்கு முன்பாகவே இந்தச் சம்பிரதாயம் விடுபட்டுப் போயிருந்தது. அதுபோலவே பெட்டியிலிருந்து சீட்டை எடுப்பதற்காக குடும்பத் தலைவர் வரும்போது சம்பிரதாயமான வணக்கமொன்றை லாட்டரி அதிகாரி சொல்லும் வழக்கமும் இருந்ததென்று சொல்லுவார்கள். இதெல்லாம் காலப்போக்கில் மாறிவிட்டது, இப்போதெல்லாம் பெட்டியிலிருந்து சீட்டை எடுக்க வருபவரிடம் அதிகாரி பேசவேண்டுமென்ற பழக்கம் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. இதிலெல்லாம் மிகுந்த திறமை வாய்ந்தவராக இருந்தார் சம்மர்ஸ். வெள்ளைவெளேரென்ற சட்டையும் ஜீன்சும் அணிந்துகொண்டு ஒரு கையைப் பெட்டியின்மீது அசட்டையாக வைத்தபடி கிரேவ்ஸ்சுடனும் மார்டினுடனும் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது தகுதியும் முக்கியத்துவமும் வாய்ந்தவராகத் தெரிந்தார்.

ஒரு வழியாகப் பேசி முடித்து, கூடியிருந்த மக்களை நோக்கி சம்மர்ஸ் திரும்பும்போது திருமதி ஹட்ச்சின்சன் சதுக்கத்தை நோக்கி வரும் பாதையில் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். தோள்களின் மீது ஸ்வெட்டரொன்றை அணிந்திருந்தார். கூட்டத்துக்குப் பின்னாலிருந்து நுழைந்து தன்னுடைய இடத்துக்கு வந்து நின்றார்.

“இன்னைக்கு என்ன நாளென்பதை சுத்தமா மறந்துட்டேன்”, என்று அருகிலிருந்த திருமதி டெல்கிராயிடம் சொன்னதும் இருவரும் சன்னமாகச் சிரித்தார்கள். “என் வீட்டுக் கிழவன் விறகை அடுக்கிக்கிட்டிருந்தார்னு நினைச்சிட்டேன்,” என்று தொடர்ந்தார். “ஜன்னலில் பார்த்தப்போ தான் குழந்தைங்க போயிட்டாங்ககிறதை கவனிச்சேன். அப்போதான் இன்னிக்கி இருபத்தேழாம் தேதிங்கிறதே நினைவுக்கு வந்துச்சு, ஓடோடி வந்திட்டேன்,” என்றபடி கைகளை மேலங்கியில் துடைத்துக் கொண்டார். “சரியான நேரத்துக்கு வந்துட்ட, அவங்க இன்னும் பேசிக்கிட்டு தான் இருக்கிறாங்க”, என்றார் திருமதி டெலகிராய்.

கூட்டத்துக்கு நடுவே தலையை வளைத்து நெளித்து கணவரும் குழந்தைகளும் முன்வரிசையில் நிற்பதைப் பார்த்துவிட்டாள் திருமதி ஹட்ச்சின்சன். திருமதி டெலகிராயின் தோளில் தட்டி விடைபெற்றபடி கூட்டத்துக்கு நடுவே நுழைந்தாள். சிரித்த முகத்தோடு நகர்ந்து வழிவிட்டது கூட்டம். கூட்டத்தினருக்கு மட்டுமே கேட்கக்கூடிய மெல்லிய குரலில், “உன் வீட்டுக்காரி வந்துட்டா, ஹட்ச்சின்சன்,” என்றும், “பில், சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துட்டா”, என்றும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள்.

கணவனின் அருகில் போய் நின்றதும், அவள் வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்த சம்மர்ஸ், “நீங்க இல்லாமலே நடத்த வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன் டெஸ்ஸி,” என்று உற்சாகமாகக் குரல்கொடுத்தார். “அடுப்பங்கரையில பாத்திரங்களைக் கழுவாம அப்படியே போட்டுட்டு வரமுடியுமா, ஜோ?” என்று சிரித்தபடி திருமதி ஹட்ச்சின்சன் பதிலளித்ததும் மெல்லிய சிரிப்பலையொன்று கூட்டத்தில் பரவியது. திருமதி ஹட்ச்சின்சன் வந்து சேர்ந்ததும் மக்கள் நகர்ந்து தத்தமது இடங்களில் நேராக நின்றார்கள்.

“சரி,” நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார் சம்மர்ஸ், “இப்போ தொடங்கினால் தான் இத முடிச்சிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம். இன்னும் யாராவது வரவேண்டியிருக்கா?”

“டன்பார்,” கூட்டத்தில் இருந்து பல குரல்கள் எழுந்தன. “டன்பார், டன்பார்.”

தன்னிடமிருந்த பட்டியலைச் சரிபார்த்தார் சம்மர்ஸ். “கிளைட் டன்பார். ஆமாம், அவர்தான் காலை உடைச்சுக்கிட்டாரே? அவருக்காகச் சீட்டை எடுக்கப்போறது யாரு?”

“நான்தான் எடுக்கப்போறேன்,” பெண் குரலொன்று கேட்டதும் திரும்பிப் பார்த்தார் சம்மர்ஸ். “கணவனுக்காக மனைவி எடுக்கப்போறார்,” என்றபடி “ஜேனி, இதைச் செய்ய உங்க வீட்டில வளர்ந்த ஆண்பிள்ளைங்க யாருமில்லையா?” என்று கேட்டார். சம்மர்ஸ்சுக்கும் கிராம மக்கள் அனைவருக்கும் இதற்கான விடை நன்றாகவே தெரியுமென்றாலும் இதுபோன்ற சம்பிரதாயமான கேள்விகளை லாட்டரி அதிகாரி கேட்கவேண்டுமென்பது வழிமுறை. திருமதி டன்பார் விடையளிப்பதற்காக மரியாதை கலந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தார் சம்மர்ஸ்.

“ஹோரசுக்கு இன்னும் பதினாறு வயசு முடியலையே,” வருத்தபட்டார் திருமதி டன்பார். “என் வீட்டுக்காரருக்குப் பதிலா நான்தான் எடுக்கணும்.”

“சரி,” என்றார் சம்மர்ஸ். தன்னிடமிருந்த பட்டியலில் இதைக் குறித்துக்கொண்டார். “இந்த வருடம் வாட்சனின் மகனா எடுக்கப் போகிறான்?” என்றார்.

கூட்டத்திலிருந்து உயரமான இளைஞனொருவன் கையை உயர்த்தினான். “ஆமாம். இந்த வருஷம் அம்மாவுக்கும் எனக்கும் சேர்த்து நான்தான் எடுக்கப்போறேன்.” “ஜாக் ஒரு அருமையான பையன்” என்றும் “இந்த வேலையைச் செய்ய உன் அம்மாவுக்கு ஒரு ஆண்பிள்ளை வாய்ச்சது சந்தோஷம்” என்றும் கூட்டத்திலிருந்து குரல்கள் எழுந்ததும் படபடப்புடன் கண்களைச் சிமிட்டியபடி தலையைக் குனிந்துகொண்டான்.

“சரி, எல்லோரும் வந்தாச்சுன்னு நினைக்கிறேன். பெரியவர் வார்னர் வந்திருக்காரா?” என்றார் சம்மர்ஸ்.

“இங்க இருக்கேன்,” குரல் கேட்டதும் தலையசைத்தார் சம்மர்ஸ்.

தொண்டையைச் செருமியபடி சம்மர்ஸ் பட்டியலைச் சரிபார்த்தபோது கூட்டத்தில் திடீரென ஒரு அமைதி சூழ்ந்தது. “எல்லாரும் தயாரா? முதல்ல குடும்பத் தலைவர்களோட பெயரைப் படிப்பேன், ஆண்கள் எல்லோரும் வந்து பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுக்கணும். எல்லோரும் சீட்டை எடுத்து முடிக்கும்வரை உங்க கையிலிருக்கிற சீட்டைப் பிரிச்சுப் பார்க்கக்கூடாது. புரிஞ்சுதா?”

ஏற்கனவே பலமுறை செய்ததுதான் என்பதால் வழிமுறைகளை அரைகுறையாகத் தான் காதில் போட்டுக்கொண்டார்கள் மக்கள்: பெரும்பாலானவர்கள் சுற்றுமுற்றும் பார்க்காமல் அமைதியாக உதட்டை ஈரப்படுத்தியபடி நின்றிருந்தார்கள். சம்மர்ஸ் ஒரு கையை உயர்த்தி “ஆடம்ஸ்” என்றார். கூட்டத்திலிருந்து முன்னே வந்தார் ஒருவர். “வணக்கம் ஸ்டீவ்,” என்றார் சம்மர்ஸ். “வணக்கம் ஜோ,” பதிலுக்குச் சொன்னார் ஆடம்ஸ். பதற்றத்துடன் மகிழ்ச்சியின்றி அசட்டுச் சிரிப்பொன்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். பிறகு கறுப்புப் பெட்டிக்குள் கையைவிட்டு மடிக்கப்பட்ட சீட்டொன்றை எடுத்தார் ஆடம்ஸ். அதன் ஒரு முனையைப் பிடித்தபடியே திரும்பி வேகவேகமாக தன்னிடத்தை அடைந்தார். தன்னுடைய கையைப் பார்க்காமல் குடும்பத்தினரிடமிருந்து கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டார்.

“ஆலென்.” என்றார் சம்மர்ஸ். “ஆண்டர்சன்… பெந்தாம்.”

“இப்போதெல்லாம் ரெண்டு லாட்டரிக்கு நடுவுல இடைவெளியே இல்லாதது போல இருக்கு”, என பின்வரிசையிலிருந்த திருமதி கிரேவ்ஸ்சிடம் சொன்னார் திருமதி டெலகிராய்.

“போன வாரந்தான் ஒன்னு நடந்து முடிஞ்சாப் போல இருக்கு.”

“காலம் வேகமாப் போகுது,” என்றார் திருமதி கிரேவ்ஸ்.

“கிளார்க்… டெலகிராய்.”

“என் வீட்டுக்காரர் போறாரு பார்,” என்று தன் கணவன் முன்னே போவதை மூச்சை இறுக்கிப் பிடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் திருமதி டெலகிராய்.

“டன்பார்,” என்று சம்மர்ஸ் சொன்னதும் நிதானமாக நடந்துசென்றார் திருமதி டன்பார். “போ, ஜேனி,” என்றார் ஒரு பெண்மணி. “அதோ போறா பாரு,” என்றார் இன்னொருவர்.

“அடுத்தது நாங்கதான்,” என்றார் திருமதி கிரேவ்ஸ். பெட்டிக்கு அந்தப் பக்கத்திலிருந்து வந்து இறுகிய முகத்துடன் சம்மர்ஸ்சுக்கு வணக்கம் சொல்லிவிட்டு பெட்டிக்குள்ளிருந்து ஒரு சீட்டை எடுத்தார் கிரேவ்ஸ். இதற்குள் கூட்டமுழுவதிலும் இருந்த ஆண்கள் ஒவ்வொருவரும் தங்களது பெரிய கைகளில் சின்னச் சீட்டுகளைப் பதற்றத்துடன் மாற்றிமாற்றி பிடித்துக்கொண்டிருந்தனர். திருமதி டன்பாரும் அவருடைய இரண்டு மகன்களும் ஒன்றாக நின்றுகொண்டிருந்தனர், துண்டுச் சீட்டு திருமதி டான்பாரின் கையிலிருந்தது.

“ஹார்பர்ட்… ஹட்ச்சின்சன்.”

“சீக்கிரமாப் போ, பில்,” என்று திருமதி ஹட்ச்சின்சன் சொன்னதும் பக்கத்திலிருந்தவர்கள் சிரித்தார்கள்.

“ஜோன்ஸ்.”

“வடபுறத்திலிருக்கிற கிராமத்துல லாட்டரிய நிறுத்தணும்னு பேசிக்கிறதாச் சொல்றாங்க,” பக்கத்திலிருந்த பெரியவர் வார்னரிடம் சொன்னார் ஆடம்ஸ்.

“முட்டாக் கூட்டம்,” சீறினார் பெரியவர் வார்னர். “சின்னப் பசங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு. அவங்களுக்கு எதுதான் பிடிக்குதாம்? அடுத்ததா குகைக்குள்ள போயி வாழ்க்கை நடத்தலாம்னு சொல்லுவாங்க. யாரும் எந்த வேலையும் பண்ணாம பிடிச்சா மாதிரி வாழலாம்னு சொல்லுவாங்க. முன்னெல்லாம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, ‘ஜூன் மாசத்துல லாட்டரி, வீடு பூராவும் மக்காசோளம்னு.’ நீ வேணா பாரு, இப்படியே போனா இன்னும் கொஞ்சநாளுல புல்லையும் கொட்டையையும் தான் வேகவெச்சுத் திங்கப் போறோம். எந்தக் காலத்துலயும் நாம லாட்டரி நடத்தாம இருந்ததேயில்லை,” என்று எரிச்சலுடன் சொன்னார். “அந்த ஜோ சம்மர்ஸ் எல்லாரிடமும் சிரிச்சு சிரிச்சு பேசுறது நல்லாவே இல்லை.”

“சில இடங்கள்ல ஏற்கனவே லாட்டரி நடத்துறதை நிறுத்திட்டங்களாம்,” என்றார் திருமதி ஆடம்ஸ்.

“இதுனால தொல்லைதான் வரப்போகுது,” காட்டமாகச் சொன்னார் பெரியவர் வார்னர். “சின்ன முட்டாக் கூட்டம்.”

“மார்ட்டின்”. அப்பா முன்னே போவதைப் பார்த்தான் பாபி மார்ட்டின். “ஒவெர்டைக்… பெர்சி.”

“சீக்கிரமா முடிச்சா நல்லாயிருக்குமே,” மூத்த மகனிடம் சொன்னார் திருமதி டன்பார்.

“இதோ கொஞ்சநேரத்துல முடிச்சிடுவாங்க,” மகன் சொன்னான்.

“ஓடிப்போய் அப்பாகிட்ட சொல்லத் தயாரா இரு,” என்றார் திருமதி டன்பார்.

தன்னுடைய பெயரை, தானே கூப்பிட்டுக்கொண்டு துல்லியமாக முன்னால் அடியெடுத்து வைத்து பெட்டிக்குள்ளிருந்து சீட்டை எடுத்தார் சம்மர்ஸ். பிறகு, “வார்னர்” என்று அழைத்தார்.

“லாட்டரியிலே என்னோட எழுபத்தேழாவது வருஷம் இது,” என்றபடியே கூட்டத்துக்கு நடுவே நுழைந்து வந்தார் பெரியவர் வார்னர். “எழுபத்தேழாவது தடவை.”

“வாட்சன்.” கூட்டத்துக்கு நடுவிலிருந்து தடுமாறியபடியே வந்தான் உயரமான இளைஞனொருவன். “பயப்படாதே ஜாக்,” யாரோ குரல் கொடுத்தார்கள். “பொறுமையா எடு மகனே,” என்றார் சம்மர்ஸ்.

“ஜனினி.”

அதற்குப் பிறகு அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது, மூச்சுக்கூட விடாத மௌனம். தன்னிடம் இருந்த சீட்டை உயர்த்திப் பிடித்து, “ஆரம்பிக்கலாமா, நண்பர்களே,” என்றார் சம்மர்ஸ். அடுத்த ஒரு  நிமிடத்துக்கு யாரும் அசையக்கூட இல்லை, பிறகு எல்லோரும் சீட்டைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். திடீரென எல்லாப் பெண்களும் ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்தார்கள். “யாரது?” “யாருக்கு கிடைச்சிருக்கு?” “டன்பாரா?” “வாட்சனா?”

“ஹட்ச்சின்சன் தான். பில்”, “பில் ஹட்ச்சின்சனுக்குத் தான் கிடைச்சிருக்கு.” எல்லாக் குரல்களும் ஒரே நேரத்தில் பேசின.

“உங்கப்பாக்கிட்டே போய்ச் சொல்லு,” திருமதி டன்பார் மூத்த மகனிடம் சொன்னார்.

எல்லோரும் திரும்பி ஹட்ச்சின்சன் குடும்பத்தையே பார்த்தனர். பில் ஹட்ச்சின்சன் அமைதியாகக் கையிலிருந்த சீட்டைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார். திடீரென சம்மர்ஸ்சிடம் கூச்சலிட்டாள் டெஸ்ஸி ஹட்ச்சின்சன். “அவருக்கு வேண்டிய சீட்ட எடுக்க போதிய நேரம் கொடுக்கலை நீங்க. நான் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். இது நியாயமேயில்ல!”

“கொஞ்சம் பெரியமனசோட இரு டெஸ்ஸி,” என்றார் திருமதி டெலகிராய். “எல்லோருக்கும் ஒரே போலத் தானே வாய்ப்பு கிடைச்சுது,” என்றார் திருமதி கிரேவ்ஸ்.

“வாயை மூடு, டெஸ்ஸி,” என்றார் பில் ஹட்ச்சின்சன்.

“சரி மக்களே,” என்றார் சம்மர்ஸ், “இதைச் சீக்கிரம் முடிச்சுட்டோம், அடுத்தடுத்து எல்லாத்தையும் வேகமா செய்தாத்தான் நேரத்துக்கு முடிக்க முடியும்.” கையிலிருந்த அடுத்த பட்டியலைப் பார்த்தார். “பில், நீங்க ஹட்ச்சின்சன் குடும்பத்துக்குத் தானே எடுத்தீங்க. உங்கள் குடும்பத்தில் வேறு வீடுகள் இருக்கா?”

“டானும் ஈவாவும் இருக்காங்களே,” கூச்சலிட்டார் திருமதி ஹட்ச்சின்சன். “அவங்களோட அதிர்ஷ்டத்தையும் பார்க்க சொல்லுங்க!”

“டெஸ்ஸி, கல்யாணமான மகள் கணவனோட குடும்பத்தோட சேர்ந்துதான் எடுக்கணும்,” என்று மென்மையாகச் சொன்னார் சம்மர்ஸ். “மத்தவங்களைவிட உங்களுக்கு இது நல்லாத் தெரியுமே!”

“இது நியாயமேயில்ல,” என்றார் டெஸ்ஸி.

“ஆமாம் ஜோ,” வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார் பில் ஹட்ச்சின்சன். “என் மகள் அவ கணவனோட குடும்பத்தோட சேர்ந்துதான் எடுப்பா. அதுதான் நியாயம். என் குழந்தைகளத் தவிர எனக்கு வேறு குடும்பமில்ல.”

சரி, அப்போ நீங்கதான் உங்க குடும்பத்துக்கு சீட்டு எடுக்கணும். உங்க வீடுகளுக்கு சீட்டு எடுக்கணும்னாலும் நீங்களே தான் அதையும் செய்யணும். சரியா?” என்று விளக்கினார் சம்மர்ஸ்.

“சரி”, என்றார் பில் ஹட்ச்சின்சன்.

“உங்களுக்கு எத்தனைக் குழந்தைங்க, பில்?” சம்பிரதாயப்படி கேட்டார் சம்மர்ஸ்.

“மூன்று பேர். பில் ஜூனியர், நான்சி, அப்புறம் கடைக்குட்டி டேவ். அப்புறம் நானும் டெஸ்ஸியும்.”

“அப்போ சரி. ஹாரி, அவங்களோட சீட்டுகளை திரும்ப வாங்கிட்டியா?” என்றார் சம்மர்ஸ்.

தலையை ஆட்டி கையிலிருந்த சீட்டுகளைக் காண்பித்தார் கிரேவ்ஸ். “நல்லது, அதத் திரும்பவும் பெட்டிக்குள்ள போட்டுடு,” கட்டளையிட்டார் சம்மர்ஸ். “பில்கிட்ட இருந்து வாங்கி அதையும் உள்ளே போடு.”

“இதை மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்,” முடிந்தவரை அமைதியான குரலில் சொன்னார் திருமதி ஹட்ச்சின்சன். “இது நியாயமே இல்லை. அவர் கவனமா தேர்ந்தெடுக்க போதிய நேரம் கொடுக்கலை நீங்க. அது எல்லாரும் பார்த்துக்கிட்டுதான் இருந்தாங்க.”

ஐந்து சீட்டுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெட்டிக்குள் போட்டார் கிரேவ்ஸ். மற்றவைகளை கீழே போட்டதும் தவழ்ந்துவந்த தென்றல் காற்றில் பறக்க ஆரம்பித்தன அவை.

“நான் சொல்றத கொஞ்சம் எல்லாரும் கேளுங்க,” சுற்றியிருந்தவர்களிடம் சொன்னார் திருமதி ஹட்ச்சின்சன்.

“பில், தயாரா?” கேட்டார் சம்மர்ஸ். மனைவியையும் குழந்தைகளையும் சட்டென ஒரு பார்வை பார்த்த பில் ஹட்ச்சின்சன் மெல்லத் தலையை ஆட்டினார்.

“ஞாபகம் வச்சுக்கோங்க. மத்த எல்லாரும் சீட்டை எடுக்கிற வரைக்கும் உங்க சீட்டைப் பிரிக்காம அப்படியே வெச்சுக்கணும். ஹாரி, டேவ் சின்னவன், அவனுக்கு நீ உதவி பண்ணு,” என்றார் சம்மர்ஸ். பெட்டியின் அருகில் ஆவலோடு வந்த சின்னப்பையனின் கையைப் பிடித்துக் கொண்டார் கிரேவ்ஸ். “பெட்டிக்குள்ள இருந்து ஒரு சீட்டை எடு, டேவ்.” என்றார் சம்மர்ஸ். பெட்டிக்குள் கையைவிட்டபடி சிரித்தான் டேவ். “ஒரேயொரு சீட்டை மட்டும் எடு,” என்றார் சம்மர்ஸ். “ஹாரி, அவன் சீட்டை நீ வெச்சுக்கோ.” குழந்தையின் இறுக்கிய பிடியைப் பிரித்து சீட்டை எடுத்துக் கொண்டு அவன் கையைப் பிடித்துக்கொண்டார் கிரேவ்ஸ். பக்கத்தில் நிற்பவரை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்தது குழந்தை.

“அடுத்தது நான்சி,” என்றார் சம்மர்ஸ். நான்சிக்கு பன்னிரெண்டு வயது. பாவாடையை லாவகமாகத் தூக்கிப் பிடித்தபடி போய் நளினமாக சீட்டை எடுத்தபோது அவளுடைய பள்ளித்தோழர்கள் பலமாக மூச்சுவிட்டனர்.

“பில் ஜூனியர்,” அழைத்தார் சம்மர்ஸ். சிவந்த முகமும் நீளமான கால்களும் கொண்ட பில் சீட்டை எடுப்பதற்குள் கறுப்புப் பெட்டியை கிட்டத்தட்ட கீழே தள்ளிவிட்டான். “டெஸ்ஸி,” என்றார் சம்மர்ஸ். ஒரு நிமிடம் தயங்கி நின்று சுற்றியிருப்பவர்களை எதிர்ப்புடன் பார்த்துவிட்டு இறுக்கமான உதடுகளுடன் பெட்டியின் அருகில் போனார் டெஸ்ஸி. வெடுக்கென ஒரு சீட்டை எடுத்துத் தனக்குப் பின்னால் பிடித்துக்கொண்டாள்.

“பில்,” என்றார் சம்மர்ஸ். பெட்டிக்குள் கையைவிட்டுத் துழாவி எஞ்சியிருந்த ஒரேயொரு சீட்டைக் கையில் எடுத்தார் பில் ஹட்ச்சின்சன்.

கூட்டம் அமைதியாக நின்றது. “நான்சியாக இருக்கக்கூடாதே,” என்று ஒரு சிறுமி முனகியது கூட்டத்தின் கடைசி வரிசை வரையில் கேட்டது.

“எதுவுமே முன்ன மாதிரி இல்லை,” தெளிவாகச் சொன்னார் பெரியவர் வார்னர். “மனுஷங்களும் முன்ன மாதிரி இல்ல.”

“சரி, எல்லோரும் சீட்டைத் திறக்கலாம். ஹாரி, நீ டேவுடையதை திற,” என்றார் சம்மர்ஸ்.

சீட்டைத் திறந்து அது வெறுமையாக இருப்பதை எல்லோரிடமும் காட்டுவதற்காகக் கிரேவ்ஸ் உயர்த்திப் பிடித்தபோது கூட்டமே பெருமூச்சுவிட்டது.

நான்சியும் பில் ஜூனியரும் சீட்டை ஒரே நேரத்தில் திறந்து அது வெறுமையாக இருந்ததைப் பார்த்ததும் முகம் பிரகாசமானார்கள். மகிழ்ச்சியில் சிரித்தபடியே தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்துக் கூட்டத்தினரிடம் காட்டினர்.

“டெஸ்ஸி,” என்றார் சம்மர்ஸ். ஒரு நிமிடத் தயக்கத்துக்குப் பிறகு பில் ஹட்ச்சின்சனைப் பார்த்தார். தன்னிடமிருந்த சீட்டைப் பிரித்தார் பில். அது வெறுமையாக இருந்தது.

“அப்போ டெஸ்ஸி தான்,” அமைதியாகச் சொன்னார் சம்மர்ஸ். “அவளுடைய சீட்டைக் காட்டுங்க, பில்.”

மனைவியிடம் போய் அவள் கையிலிருந்த சீட்டை வலுக்கட்டாயமாகப் பிடுங்கினார் பில் ஹட்ச்சின்சன். அதன் நடுவில் ஒரு பெரிய கறுப்புப் புள்ளி இருந்தது. முந்தைய இரவு நிலக்கரி கடையிலிருந்த கனமான பென்சிலைக்கொண்டு அதை வரைந்திருந்தார் சம்மர்ஸ். பில் ஹட்ச்சின்சன் சீட்டை உயர்த்திப் பிடித்ததும் கூட்டம் சலசலத்தது.

“சரி மக்களே,” என்றார். “இதைச் சீக்கிரமா முடிச்சுடலாம்.”

சம்பிரதாயங்களை மறந்து புராதனமான கறுப்புப் பெட்டியையும் தொலைத்து விட்டிருந்தாலும் கற்களைப் பயன்படுத்த வேண்டுமென்பதை இன்னும் மறந்துவிடவில்லை மக்கள். சிறுவர்கள் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த கற்குவியல் தயாராக இருந்தது. தரையில் ஆங்காங்கே இருந்த கற்களுக்கிடையே பெட்டியிலிருந்து பறந்துவந்த சீட்டுக்கள் காற்றில் படபடத்தன.

திருமதி டெலகிராய் தேர்வுசெய்திருந்த கல் மிகவும் பெரியதாக இருந்ததால் சிரமப்பட்டு இரண்டு கைககளால் தூக்க வேண்டியிருந்தது. திருமதி டன்பாரிடம் திரும்பி “சீக்கிரமா வா, போகலாம்,” என்றார்.

இரண்டு கைகளிலும் சிறிய கற்களை வைத்திருந்த டன்பாருக்கு மூச்சு வாங்கியது. “என்னால ஓட முடியாது. நீ முன்னால போ, நான் பின்னாடியே வர்றேன்,” என்றார்.

குழந்தைகள் ஏற்கனவே கற்களை வைத்திருந்தனர். குட்டி டேவ் ஹட்ச்சின்சனிடம் யாரோ கொஞ்சம் கூழாங்கற்களை கொடுத்தார்கள்.

காலியான சதுக்கத்தின் நடுவில் நின்றிருந்தார் டெஸ்ஸி. தன்னை நோக்கி வரும் கிராம மக்களைப் பார்த்து நம்பிக்கையிழந்த நிலையில் இரண்டு கைகளையும் உயர்த்தியபடி “இது நியாயமேயில்லை,” என்றார்.

அவருடைய பக்கவாட்டு மண்டையைப் பதம் பார்த்தது கல்லொன்று. “வாங்க, எல்லாரும் வாங்க,” என்று அழைப்பு விடுத்தார் பெரியவர் வார்னர். மக்கள் கூட்டத்தின் முன் வரிசையில் இருந்தார் ஸ்டீவ் ஆடம்ஸ், பக்கத்திலேயே இருந்தார் திருமதி கிரேவ்ஸ்.

“இது நியாயமில்லை, இது சரியில்லை,” பெருங்குரலில் அலறினார் திருமதி ஹட்ச்சின்சன். கூட்டம் அவரைச் சுற்றி வளைத்தது.

எழுத்தாளர் குறிப்பு:

ஷெர்லி ஜாக்சன் (Shirley Jackson) ‘லாட்டரி’ (Lottery) சிறுகதையை 1948-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுதினார். உலகச் சிறுகதைகளில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இது முக்கிய சிறுகதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறுவதோடு கடந்த எழுபது ஆண்டுகளில் வெவ்வேறு இதழ்களில் மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது. பல்கலைக்கழகப் பாடங்களில் இடம்பெறுவதோடு மட்டுமல்லாது பலவிதமான இலக்கிய சமூக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. கதையின் மாந்தர்களின் பெயரும் சம்பவங்களும் பொருட்களும் பல குறியீடுகளைத் தாங்கி வருவதைப் பற்றி பல கட்டுரைகளும் ஆய்வறிக்கைகளும் எழுதப்பட்டுள்ளன. இதுதவிர, வானொலி, தொலைக்காட்சி, மேடை மற்றும் ஓரங்க நாடகங்கள், குறும்படம், ஆவணப்படம், பாலே (ballet), ஆபரா (opera) இசை நாடகம் எனப் பற்பல வடிவமெடுத்திருக்கிறது இந்தக் கதை.

புகழ்பெற்ற ‘தி நியூ யார்க்கர்’ இதழில் கதை வெளிவந்ததும் வாசகர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது. இதழுக்குச் சந்தா கட்டியவர்கள் இரத்து செய்தனர். பத்திரிகை அலுவலகத்துக்கு கோபத்தையும் வெறுப்பையும் கக்கும் தொலைபேசி அழைப்புகளும் கடிதங்களும் தினமும் வந்தன. அந்தக் கடிதத்தையெல்லாம் ஷெர்லி ஜாக்சனுக்கு அனுப்பி வைத்தது ஆசிரியர் குழு. திக்குமுக்காடிப் போனார் ஷெர்லி ஜாக்சன். மற்ற இதழ்களும் செய்தித்தாள்களும் கதை குறித்து முதல்பக்கச் செய்தி, தொடர்பத்திகள் என்று எழுதித் தள்ளின. இவை எவற்றுக்கும் பதிலளிக்கவில்லை ‘தி நியூ யார்க்கர்’. ஒரேயோரு விளம்பரத்தை மட்டும் வெளியிட்டது: “இதுவரை நாங்கள் வெளியிட்ட கதைகளிலேயே அதிகமான வாசகர் கடிதங்களைப் பெற்றது இந்தக் கதைதான்.”

ஷெர்லி ஜாக்சன்

கதை எழுதிய சூழலையும் அது வெளிவந்த அடுத்தடுத்த நாட்களிலும் வருடங்களிலும் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் ‘கதையின் வாழ்க்கை வரலாறு’ (Biography of a Story) என்ற பெயரில் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் ஷெர்லி.

“வெதுவெதுப்பான, ஒளிமிகுந்த இளவேனில் காலையொன்றில் என் குழந்தையை நடைவண்டியில் தள்ளியபடி என் வீடிருக்கும் குன்றின்மீது ஏறும்போது கதைக்கான கரு மனதில் தோன்றியது. வீட்டுக்கு வந்து மளிகை சாமான்களையும் காய்கறியையும் எடுத்துவைத்துவிட்டு கதையை எழுத உட்கார்ந்தேன். தங்குதடையின்றி ஒரே மூச்சில் எழுதிமுடித்து விட்டேன். ஒன்றிரண்டு சொற்களைத் தவிர வேறு எந்தத் திருத்தமும் செய்யவில்லை.”

“ஜூன் 28-ஆம் தேதியன்று கதை வெளியான பிறகு பத்திரிக்கை அலுவலகம் மற்றும் நணபர்களின் வாயிலாக என் கதையைக் குறித்து வாசகர்களிடம் பரவலான வெறுப்பொன்று ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். என் பெற்றோரும் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டினர். நல்ல வேளையாக நியூ யார்க்கில் இல்லாமல் இந்தச் சிறிய டவுனில் குடியிருக்கிறேன்.”

“எனக்கு வரும் கடிதங்களை எழுதுபவர்களை வாசக உலகின் துல்லியமான குறுக்குவெட்டாகக் கருதினோமென்றால் இனிமேல் எழுதுவதையே நான் நிறுத்திவிடவேண்டும். கதை படிக்கும் மக்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டும் – எதையும் எளிதில் நம்பக் கூடியவர்கள், மரியாதை தெரியாதவர்கள், நாகரிகமற்றவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், நகைச்சுவை உணர்வில்லாதவர்கள்.”

இந்தக் கட்டுரையில் தனக்கு வந்த கடிதங்களையெல்லாம் மேற்கோள் காட்டியிருக்கிறார். படிக்கச் சுவையாக இருக்கிறது. கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

“வருடங்கள் செல்லச்செல்ல, இந்தக் கதை வெவ்வேறு தொகுப்புகளில் சேர்க்கப்பட்டு, நாடகம், திரைப்படம், நாட்டிய நாடகம் – எனப் பல வடிவங்களைப் பெற்ற பிறகே எனக்கு எழுதப்படும் கடிதங்களின் தொனி மாறியது. கதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று மட்டும் கேட்கிறார்கள். இத்தனை வருடமாக எனக்கு வந்த பல நூறு கடிதங்களில் ஒரு கடிதத்தின் முடிவில் வந்த ஒரு கேள்விக்கு மட்டுமே என்னால் பயமின்றி உண்மையுடன் பதிலளிக்க முடியும்.

கேள்வி: மிஸ். ஜாக்சன், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, மீட்சி தரும் ஒளியான சுவிசேஷத்தின் சீடர் என்று எங்கள் சகோதரத்துவம் நம்புகிறது. அடுத்த தெய்வீக வெளிப்பாட்டை எப்போது பதிப்பிப்பீர்கள்?

என் பதில்: எப்போதுமில்லை, நான் லாட்டரித் தொழிலைவிட்டே வெளியேறி விட்டேன்.”

Source: https://uncengl127.wordpress.com/story-illustrations/