கரையொதுங்கும் மீன்கள் – சிக்கா ஓன்யேனேஸி – தமிழில் : லதா அருணாச்சலம்

0 comment

உன் கைகளில் நீ அள்ளிக் கொள்வதற்கென்றே மீன்கள் கரையொதுங்கும் கடற்கரையைப் பற்றிய கனவொன்று நீண்ட காலமாக உன்னுள் இருந்தது. அவையனைத்தையும் உனக்கொரு பாதுகாப்பான பிரயாணத்தையையும் உன் வருகைக்குப் பின் முறையான குடியுரிமைப் பத்திரங்களையும் ஏற்பாடு செய்வதாக அவன் வாக்குறுதி அளித்திருந்தான். உன் வீட்டிற்கு அனுப்புமளவு ஒரு நல்ல தொகையை வருமானமாக ஈட்டப் போகிறாய் எனவும் கூறினான். நீ கனவு கண்டாய்.. அதில் வாழ்ந்திருந்தாய், அதை நனவாக்கத் தயாராக இருந்தாய்.

ஜெனீவா, எண் 10, நேவிகேஷன் தெருவில் இருக்கும் காஃபி நிலையத்துக்குச் சென்று அங்கு பணிபுரியும் எத்தியோப்பியப் பெண்மணியிடம் ஒரு கேப்யுச்சீனோ ஆர்டர் செய்து விட்டு அமர்கிறாய். அந்தப் பெண் ஒருநாள் நிர்வாணமாக உன்னுடன் படுக்கையில் சேர்ந்திருக்கும் காட்சியைக் கற்பனை செய்வதை உன்னால் தவிர்க்க இயலவில்லை. ஒவ்வொரு முறையும் இதைக் கற்பனை செய்யும் போது, உனக்குப் படுக்கையே இல்லையென்பதை மனம் நினைவுறுத்தும். பெருமூச்சு விடுவாய். கோடைக் காலத்தை பாலத்திற்கடியில் உறங்கிக் கழித்த பின், குளிர்காலத்தில் எப்படியோ புகலிடத்திற்குச் சென்று சேர்ந்தாய். மனநிலை பிறழ்ந்தவர்கள் இரவின் நிசப்தத்தில் ஓலமிட்டுக் கொண்டும், முனங்கிக் கொண்டுமிருக்கும் அந்த இடத்தில் நீ வசிக்கிறாய். காலைக் கடன்களுக்காகச் செல்லும் வழியில் கழிப்பறையின் தரையெங்கும் கயிறும் வெள்ளைப் பொடியும் சிதறியிருப்பதைப் பார்ப்பாய். இவை அனைத்தையும் விட முக்கியமானது உன்னுடைய தெளிவான மனநிலை. உனக்கு அது கட்டாயம் தேவை. உன்னுடைய வாழ்க்கையின் கரடுமுரடான பாதைகளைக் கடந்து வருகையிலும் அனைத்துத்  துன்பங்களையும் துணிவுடன் எதிர்கொள்ள நேர்கையிலும் கூட விடாமல் காப்பாற்றி வைத்திருக்கும் அந்தத் தெளிவை இப்போது வீணடிக்கக்கூடாது.

காஃபியை உறிஞ்சியவாறே சிகரெட் எடுத்துப் பற்ற வைக்கிறாய். மேசையைச் சுத்தப்படுத்தும் எத்தியோப்பியப் பெண்ணைக் கவனித்தவாறே சிகரெட் புகையை உன் நாசித் துவாரங்களில் நிரப்புகிறாய். அவள் குனிந்து மேசையின் ஓரங்களைத் துடைக்கையில் அவளது வளைவுகள் உன் முகத்துக்கு நெருக்கமாக உள்ளன. நீ இருமுகிறாய். உன்மீது அவள் காதல் கொள்ளும் முன் எடுத்துக்கொள்ளும் குறைந்த காலமே இது. தாயகத்தில் உன்னுடைய கடைசிக் காதலி நஜேட்கா போல.. அந்த உளவியல் உனக்கு நன்கு தெரியும், ஆனால் இந்த நிலப்பரப்பு உன்னைத் தடுக்கிறது.. காஃபியின் மற்றுமொரு மிடறில் அந்த நினைவை நீக்குகிறாய்..

வலியை உணர்கிறாய்.. அவ்வப்போது வரும் வலி.. ஜெனிவாவின் புகலிடத்திற்குப் பின்புறம் செல்லும் வேகமான ரயில் போல வந்து மோதிச் செல்கிறது. அதன்பின் ஐந்து நிமிடங்கள் காத்திருந்து பின் மீண்டும் அடுத்த வலி வரும். உனக்கு நிகழ்ந்த பல மோசமான அனுபவங்கள் தான் இப்போதெல்லாம் அமைதியான தருணங்களில் இது போன்ற வலியை ஏற்படுத்துகின்றன.. நீ அவற்றைப் பற்றி நினைப்பதை நீ தவிர்ப்பாய்.. ஆனால் இன்று அது நீங்காமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

நைஜர் நாட்டின் சுடுமணல் பாலைவனத்தைக் கடந்து லிபியாவை நீ அடைந்து விட்டதை உன் நினைவில் காண்கிறாய். உங்கள் வழிகாட்டிகள் ஒட்டகத்தின் முதுகின் மீது அமர்ந்து சவாரி செய்கையில், மணலில் நடக்கும் ஜான், குஃபோ, ப்பியாலிட்டா, நெஜேமெனஸ் போன்ற பலர்  பாலையின் கொடும் வெப்பத்திற்கு பலியானதை நினைத்துப் பார்க்கிறாய். ஐரோப்பிய நாடு செல்வதற்காக இரண்டாயிரம் டாலர் தொகை கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தில் தான் அவர்களைச் சந்தித்தாய். தாயகத்திலுள்ள அவர்களுடைய குடும்பத்திற்கு எந்தச் சேதியும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் தம் மக்கள் மத்திய தரைக்கடலின் கடற்கரையை அடைந்திருப்பார்கள் எனக் குடும்பத்தினர் இப்போதும் கூட நினைத்துக் கொண்டிருக்கலாம் என்னும் உண்மையும் இன்றும் உன்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

கடற்பயண அனுபவம் அவ்வளவு மோசமானதாக இல்லை. மிகவும் இதமானதாக இருந்தது. அப்போது தான், ட்ரிப்போலி நகரத்தில், அடுத்த பயணத்தில் உதவுமென்று சம்பாதிக்கும் பொருட்டு மாதக்கணக்கில் நீ செய்து வந்த பாறை உடைக்கும் வேலையை, உன் நினைவிவிலிருந்து உதறியிருந்தாய். நீ கிளம்பிச் சென்ற இரு மாதங்களுக்குப் பின் ட்ரிப்போலியின் மீது பலத்த பீரங்கித் தாக்குதல் நிகழ்ந்தது. அங்கிருந்து உயிர் தப்பியதே உனது அதிர்ஷ்டம் என இன்றும் எண்ணிக் கொள்கிறாய். அங்கு நிலவும் நிறப் பிரிவினை, கடும் துயரம், சொற்ப சம்பளத்துக்காக கற்சுரங்கத்தின் முதலாளிகள் கோரும் கடும் உழைப்பு யாவற்றையும் நினைத்துப் பார்க்கையில் லிபியா கறுப்பர்களுக்கான தேசமே இல்லை என மனதில் உறைக்கிறது. அதைப் பற்றிய நினைவுகளுடன் இன்றும் போராடுகிறாய்.

திறந்த கடலின் வளைகுடாவில் இருந்த கப்பலைக் கடலலைகள் படுவேகத்துடன் நிலைகுலைய வைத்ததை உன்னால் உணர முடிகிறது. சோமாலிய நாட்டுக் கப்பல் அதிகாரி அலைகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார் அல்லது விதியின் கரங்களை இலாவகமாகக் கையாளுகிறார் எனலாம். நிலவற்ற இரவில் கர்ஜனை செய்யும் கடலின் மீது உனது விதி எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அது நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதை சாத்தான்களும் அறிந்து வைத்திருந்தார்கள். மரணம் தான் உன் விதி. உன் வாழ்க்கையில் அதைப் பல முறை நீ ஏமாற்றி விட்டாய். அதனால் உன்னைப் பிடிக்க முடியுமா என்றும் வியந்து போகிறாய்.

பலரும் பல மாறுபட்ட மொழிகளில் தாங்கள் நம்பும் கடவுளையோ அல்லது முன்னோர்களையோ கூக்குரலிட்டு அழைத்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். நீ பிரார்த்தனை செய்தாய். ”ச்சினேக்கே கா ஒன்வு ஆ தி இன்ஃபே” அவ்வளவு தான்.. இலகுவான ஒரு மரணத்துக்காக நீ பிரார்த்தித்தாய்.

மூர்க்கமாக சுழன்றடிக்கும் சூறாவளிப் புயலுக்கு அப்பால், சமுத்திரத்தின் அடியாழத்திலிருந்து ஆயிரம் அரக்கர்களின் குரல்கள் மேலெழும்பி வந்தன, அனைத்தும் உன் காதில் விழுகின்றன. உன் அன்னையின், சகோதர சகோதரிகளின் பழக்கப்பட்ட குரல் கொண்டு உன்னை அழைத்தது. இறந்து போன உன் தந்தையின் குரலே இறுதி அழைப்பின் குரலாக இருந்தது. அந்தச் சிறிய கப்பல் ஆயிரம் துண்டுகளாக உடைந்து சிதறி சிங்கத்தைப் போல கர்ஜிக்கும் கடல் முன் மண்டியிட்டது.

பல மணிநேரங்களுக்குப் பின் நீ ஒரு கரையில் கிடப்பதை அறிந்தாய். கரையின் மறுபுறம், அபாய சைரன்களின் முழக்கமும், ஒலிபெருக்கியில் இத்தாலிய போலீசாரின் அறிவிப்பும் கேட்டது. நீ எப்படியோ எழுந்து நின்றாய், விழுந்தாய், மீண்டும் எழுந்தாய், மீண்டும், மீண்டும். தவழ்ந்து கரையை அடைந்த போது, உன் மூக்கிலிருந்து நீர் கொட்டியது. நீ அங்கிருந்து நகர வேண்டுமென்பது உனக்குத் தெரிந்தது. நீ உயிருடன் இருப்பது ஒரு அதிசயம் என்பதும் உனக்குத் தெரியும். வெண்மையான கடற்கரை மணலில் மண்டியிட்டு நீ கடவுளுக்கு நன்றி சொன்னாய். அப்படியே விரைவாக அங்கிருந்து நடந்து ஒரு தெருவுக்குள் நுழைந்து விட்டாய். அன்றிரவும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன. ஆனால் யார் பலியானார்கள் என்று அறிந்து கொள்ளும் நிலையில் நீ இல்லை. ஒருவேளை அங்கு சட்டத்திற்குப் புறம்பாகக் குடிபுகுந்தவர்களையோ என்று எண்ணி வியக்கிறாய். அந்தப் புதிருக்கு உன்னால் இன்று வரை தீர்வு கிட்டவில்லை.

அந்த வலி மீண்டும் உன்னைத் தாக்குகிறது. அதை நினைத்துப் பார்ப்பது பெருவலியாக உள்ளது. அதை நினைக்க நீ விரும்பவில்லை. அது மிகக் கனமாக உள்ளது.. நீ நினைத்துப் பார்க்கும் அனைத்தையும் விட மிகக் கனமானது. தரையில் படிந்த கறையை, ரசாயனத் திரவத்தால் நீக்குவது போல உன் மூளையில் படிந்து கிடப்பதை நீக்கி விடத் துடிக்கிறாய். ஆனால் நினைவுகளை அப்படித் தேய்த்து அழிக்க முடியுமா? உனக்குப் புரியும், அவை அப்படியே தான்  அப்பிக் கொண்டிருக்கும்.

சிசிலியன் தீவுகள் உனக்கான இடமில்லை என்பதை விரைவில் அறிந்து கொள்கிறாய். அப்படித் தான் நெஜேக்கு சொன்னான். தாங்கள் இயேசு பிறந்த இடமான பெத்லஹெம் நகருக்குக் கால்நடையாகப் போய்க் கொண்டிருப்பதாக சொன்ன ஹிப்பிகளில் ஒருவன் வழங்கிய வெம்மை ஆடையை அணிந்துகொண்டு, ஒரு குளிர்கால இரவில் தங்குமிடம் தேடி தெருவில் அலைந்து கொண்டிருந்தாய். அங்கு நீ சந்தித்த கருணையுள்ளம் கொண்ட நைஜீரியன் அவன். இந்தச் சமுதாயத்துடன் உனக்கு ஏற்பட்ட உண்மையான முதல் தொடர்பு அது. வாழ்க்கையில் அவர்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாய், ஆனால் உனது நிலையை உணர்ந்த போது, அதே காரணங்களுக்காகத் தான் அந்தக் கரையில் அவனை விட்டு நீ வந்தாய் எனவும் புரிந்தது. பாதைகள் வேறானவை. இலக்கு ஒன்றுதான்.

மீட்சிக் காலம். இந்த உலகத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாய்.. மீட்பென்பது எதுவென்று உனக்குத் தெரியும். இந்த தேவாலயத்தில் அமர்ந்து கொண்டு, உனக்கான பாதைக்கு அருள் வழங்குமாறு இயேசுவைப் பிரார்த்திக் கொண்டிருக்கிறாய் என்பது தான் அது. சிசிலியின் கடற்கரையோரம் வரை உன்னைச் சேர்ப்பித்தவருக்கு அவர்களையும் தன் பிறப்பிடம் வரை அழைத்துச் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. மற்ற யாராலும் செய்ய முடியாத அளவு நெஜோக்கு உனக்கு அதிக உதவிகள் செய்தான். குடியுரிமைப் பத்திரங்கள் இல்லாமல் ஜெனிவா செல்லும் வழிமுறைகளைக் கூறினான். ஒரு ரயிலில் ஏறிக் கொண்டு, அதில் இரவு நேரத் தேடும் படையினர் வராமலிருக்கப் பிரார்த்தனை செய்து கொள் என்று சொல்லிச் சென்றான். உனக்கு எது விதிக்கப்பட்டது என நீ அறிந்து கொண்டாய். நீ பிழைத்துக் கொண்டாய். ஆம், வாழ்வில் நித்தமும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறாய். பிழைப்பு!

காலை உணவு கொண்டு வந்த எத்தியோப்பிய அழகியின் முகத்தில் மலர்ந்திருந்த புன்சிரிப்பு, உணவுத்தட்டை மேசை மீது வைத்ததும் உடனடியாகத் தேய்ந்து போனது. அந்தப் புன்னகையை ஆயிரம் முறை கண்டிருக்கிறாய். அது போன்ற புன்னகைகளுக்கு நீ ஒன்றும் புதியவனல்ல. ”எனக்கு உன்னைப் பிடிக்காது, ஆனால் உனக்குப் பரிமாற வேண்டியது என் கடமை”. இதுவே அதன் பொருள். உண்டு முடித்ததும் சட்டைப் பையைத் தொட்டுப் பார்க்கிறாய். புகலிடம் தேடுவோர்களுக்கு அளிப்பதாக அரசு அறிவித்திருந்த தொகை கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லையாதலால் உன்னிடம் ஐந்து யூரோக்கள் மட்டுமே இருந்தன. ம்ம், நீ தலையாட்டிக் கொள்கிறாய். அது உன்னுடைய உரிமை அல்ல, கருணையின் அடிப்படையில் உனக்கு அளிக்கப்படும் உயர்ந்த சலுகை, எப்படியோ நாட்களை ஓட்ட உதவுகிறது. ஆனால், அதை மட்டும் நம்பி உன் வாழ்க்கை இல்லை.

’மிக்க நன்றி!’ அந்த அழகிக்கு நன்றி தெரிவிக்கிறாய். ’நன்றி’, பதிலை உதிர்த்து விட்டுத் திரும்பி கண்ணாடித் தம்ளர்களை உருட்டத் தொடங்கி விட்டாள். பேச்சைத் தொடர்வதற்கான மனநிலையில் அவள் இல்லை என்று உணர்ந்ததும் நீ வெளியேறுகிறாய்.

’நகர விரைவு ரயிலில் ஏறி கிழக்கு ஆப்பிரிக்க டான்ஸனைட் மதுச்சாலை செல்லும் தெருவில்  இறங்கி நடக்கிறாய். அங்குதான் உன் நண்பர்களைக் காணும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்களை நண்பர்கள் என்று சொல்ல முடியாது. லாகோஸில் இருந்த நாட்களிலிருந்தே  அப்படித்தான். காடுகளில் நண்பர்கள் என்று எவருமே இல்லை என்னும் எண்ணம் உனக்கு உள்ளது. இந்தத் தெரு உனது காடு. இங்கே எந்த நண்பனும் இல்லை என்னும் தெளிவை அடையும் அளவுக்கு நீ கற்றுத்  தேறியிருக்கிறாய். அப்படி சிலர் இருந்த போதும், அவர்களைப் போலீஸ் கடத்திச் சென்று விட்டது அல்லது அவர்கள் காணாமல் போய் விட்டார்கள். உனது வேலையை மட்டும் நீ பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், அதுதான் இங்கு பிழைத்தலின் நிமித்தம் செய்யக்கூடிய காரியம் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். அந்த உண்மையை ஒருபோதும் உதாசீனம் செய்வதே இல்லை. தெருவில் நடக்கையில் உன் மேற்சட்டையின் உள்புறத்தில் அமைந்திருக்கும் பைக்குள் கையை நுழைத்துப் பார்க்கிறாய். உறையிலிட்டு, நன்கு சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொருளின் எடையை உன் மனம் கணக்கிடுகிறது. ஆர்டர்களும், அதற்கேற்றவாறு வழங்கவும் சரியான அளவில் உள்ளன. அதில் ஒன்றைக் கூட இழந்தாலோ அல்லது அவர்கள் பணத்தில் விளையாடி விட்டாலோ நேரக்கூடிய அபாயம் பற்றித் தெரியும். சிலர் தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை அடகு வைத்துத் தொகை செலுத்தியுள்ளனர்.

“இன்று எப்படிப் போகிறது?” கொஞ்சம் ஆங்கிலம் பேசக்கூடிய செனேகல் நாட்டுக்காரன் உன்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கேட்டான்.

’இது என்னுடைய எல்லைக்குட்பட்ட பகுதி, தெரியும் அல்லவா? ஆனால் பரவாயில்லை’, சொல்லிக்கொண்டே துள்ளிக் குதித்து நடந்தபடி தெருவின் சுவரோரமாக நகர்ந்து அதில் சாய்ந்து நின்றான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்தாய். இந்தத் தொழில் அவரவர் எல்லைகளுக்குட்பட்டது. அப்படித்தான் விற்பனை நடக்கும். காடுகளில் மிருகங்கள் தங்கள் எல்லைகளை வகுத்துக் கொள்வதைப் போல, ஒவ்வொரு விற்பனையாளனும் தங்கள் பகுதிகளை நிர்ணயிப்பார்கள்.

பெண்கள் தங்கள் திரட்சியைப் பளபளவெனக் காட்டிக் கொண்டிருந்த சிவப்பு வண்ண ஜன்னல் அறைகள் உள்ள வடக்குத் தெருப் பக்கமாக நடக்கிறாய். செலவழிக்கும் அளவு அதிகமாகப் பணம் புழங்குகையில் அந்த இடத்திற்குப் பலமுறை நீ சென்றிருக்கிறாய். வருமானம் நல்லபடியாக இருக்கும் ஒரு நாளில் உல்லாச அனுபவத்திற்காக எண்பது யூரோ செலவழிப்பதொன்றும் பெரிய விஷயமில்லை. அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி உன்னைப் பார்த்ததும் கையசைக்கிறாள். உனக்கு அவள் அறிமுகமானவள் தான். அவளுக்கு உன்னைப் பிடிக்கும், ஆனால் உனக்குத் தான் அவளைப் பிடிக்காது. அவள் மிக பருமனாகவும் பெருத்த முலைகளுடனும் இருக்கிறாள் என்று உனக்குத் தோன்றுகிறது. அவளுடன் இரு முறை கலவி கொண்ட போதும், ஒரு கசந்த எலுமிச்சையை நாவால் சுவைப்பது போல இருந்த அனுபவத்தை எப்படியோ விழுங்கித் தொலைத்தாய். அதன் சுவை உனக்குத் தெரியும்.

’போன்ஜோர் சாம்’

’போன்ஜோர், எப்படி இருக்கிறீர்கள் அழகியே?’ அந்தப் பெண் தன்னைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டுமென்று தான் அழகி என்னும் சொல்லை சேர்த்துச் சொல்கிறாய். அவள் மிக மலிவானவள், விலைமகள் என்று நீ எண்ணுகிறாய், ஆனால் இலவசமாகக் கிடைக்கும் பட்சத்தில், அது கசந்த எலுமிச்சையாகவே இருந்தாலும் கூட எடுத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது என்று உனக்குள் சொல்லிக் கொள்கிறாய்.

உன்னருகே வந்து அணைத்துக் கொள்கிறாள். அவள் அப்படித்தான் செய்யப் போகிறாள் என்பது தெரியும். அவள் விரும்பியவாறே அவளுடைய கன்னங்களில் முத்தமிடுகிறாய். நீ கடந்து செல்கையில் உன்னைப் புன்னகையுடன் பார்க்கிறாள்.

அந்தச் சந்தில் நடந்து தெருவின் ஓரத்திற்குச் செல்கிறாய். நீண்ட கேசமும், நரைத்த மீசையும் கொண்ட வெள்ளைக்காரனொருவன் உன்னை நோக்கி வருகிறான். அவன், வயதான அமெரிக்கன் கென்ட். எப்போதும் உன் வெள்ளைப் பொடிகளின் தேவை உள்ளவன். உனது சட்டைப் பையிலிருந்து சில கிராம் பொட்டலங்களை எடுத்து அவன் கைகளில் திணித்து விட்டு, உன் இடது கையால் பணத்தை வாங்கிக் கொள்கிறாய். அவனை நீ நம்புகிறாய், ஏனென்றால் சிறிய சில்லறையைக் கூடத் தவறாமல் கொடுத்து விடுவான், எப்போதும் தொழிலில் ஏமாற்றாதவன். வழக்கமான வாடிக்கையாளன். அவன் தெருவுக்குள் நுழைகையில் நீ வேறு புறம் பார்த்து நிற்கிறாய்.

பனிப்பொழிவு கடுமையாகிறது. உன் கோட் சட்டையின் பின்புறம் சுருட்டியிருந்த இணைப்புத் தொப்பியை எடுத்து தலையை மறைத்துக் கொள்கிறாய். காலை நேரம் தொழிலில் அதிக வருமானம் ஈட்டித் தரும். அவர்களுக்கு என்ன அவசரமென்று தெரியாது, ஆனால் எப்போதும் அந்த நேரத்தில் தான் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். அதனால் நீ காலையில் விரைந்தும்,  இரவில் நேரங்கழித்தும் திரும்புகிறாய். நீ நின்று கொண்டிருக்கும் தெருமுனைக்கு அப்பால் போலீஸ் வண்டியின் சங்கொலி கேட்கிறது. சிவப்பு ஜன்னல்கள் கொண்ட விபச்சார இல்லத்துக்குள் அவசரமாக நுழைந்து, சுவரோரத்தில் ஒண்டிக்கொண்டு கூர்ந்து கவனிக்கிறாய். சங்கொலி சத்தம் குறைந்து விட்டது, ஆனால் வண்டி நெருங்கிக் கொண்டிருந்தது. ஜெனிவாவின் குற்றத்தொழிலுக்கு நீ புதியவன் அல்ல. அந்த அளவு இந்த நகரத்தில் தங்கியிருக்கிறாய். அகப்பட்ட பின் மீண்டும் பலரை ஆப்பிரிக்காவுக்கே அனுப்பப்பட்டதையும் அறிவாய். அங்கிருந்து நகர்ந்து பிரதான சாலைக்கு வருகிறாய். குறைந்தபட்சம் ஏதோ விற்பனை நடந்திருக்கிறது.

ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாய். கைகளை கால் சட்டைப் பைக்குள் நுழைத்துக் கொண்டு, வாயில் ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு, உனது அண்மையில் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு கடந்து செல்லும் சிறுவனைப் பார்க்கிறாய். நைஜீரியாவில் இப்படி சக்கரப் பலகையை எடுத்துக் கொண்டு பள்ளி செல்வதை உன்னால் கற்பனை செய்யக்கூட இயலாது. அது போன்ற பொம்மைகளுடன் உனது இளமைப் பருவம் கழியவில்லை. சிலமுறை கால்பந்தை எடுத்துக் கொண்டு பள்ளி சென்ற போதெல்லாம், தலைமையாசிரியர் அதைப் பிடுங்கி வைத்துக்கொண்டு திரும்பத் தரவேயில்லை.அவர்கள் வாழ்க்கை எளிதாகவும் சுதந்திரமாகவும் உள்ளது என்று நினைத்துக் கொள்கிறாய்.ரயில் நெருங்கி வர, மெலிதான சீழ்க்கை எழுப்பிக் கொண்டே அதனுள் ஏறுகிறாய்.

உடற்பயிற்சிக் கூடத்தின் அருகில் நிற்கிறாய். உடல் எடையைச் சரியாகப் பேணுவதற்காக மட்டும் அங்கு செல்வாய். உள்ளே நுழைந்து, வரவேற்பில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் உன் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்று குத்துச்சண்டை ஆடையை அணிந்து கொள்கிறாய். மணல் மூட்டை உன்னை வெறித்துப் பார்க்கிறது. இதைத்தான் உன் வாழ்க்கை முழுவதும் செய்து கொண்டிருக்கிறாய். குறி பார்த்து தாக்குவது. அதைச் சுற்றிச் சுற்றித் துள்ளிக் குதித்து, உனது சரியான நிலையைத் தேர்வு செய்து, கைகளைச் சுழற்றி மணல் மூட்டையின் மீது குத்து விடுகிறாய். அது அசையாமல் உள்ளது. நிற்கும் நிலையை மாற்றி  மீண்டும் குறி பார்க்கிறாய். மிகக் கடுமையாகப் பலமுறை குத்து விடுகிறாய். அது மெல்ல அசைகிறது. அப்படித்தான் உன் வாழ்க்கை இருக்கிறது, நீ எப்போதும் விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்கிறாய், பாலைவனங்களுக்கும் சமுத்திரங்களுக்கும் இடையிலும் கூட உன்னுடைய நிலையை மிகச் சரியாகப் பொருத்தி அவற்றைத் தாக்குதல் செய்கிறாய். அப்போது வாழ்க்கை அடிபணிகிறது.

நீ எந்தச் சூழலிலும் மனம் தளராத ஒரு அசலான குத்துச்சண்டை வீரன். பூமி விழுங்க மறுத்த, கடல் துப்பித் தள்ளிய ஒருவன். பல விஷயங்களை நீ தோற்கடித்திருக்கிறாய். அவற்றில் மகத்தானது மரணத்திற்கு எதிரான போராட்டம். சருமத்தின் நுண் துளைகள் விரிய விரிய வியர்வை பொங்குகிறது. மீண்டும் ஒரு குத்து.. நீ எளிதில் விட்டு விடுவதில்லை. உடலின் அனைத்து பலத்தையும் திரட்டி மணல்மூட்டை மீது இறக்குகிறாய். அது சுழல்கிறது. அது உனது விருப்பத்தை மதிக்கிறது, இந்த வாழ்க்கையைப் போலவே…, மற்றும் கடின உழைப்பைக் கோரும் எந்த வேலையையும் போல..

பனி மறைந்து விட்டதை ஜன்னல் வழியாகப் பார்க்க முடிந்தது. பாய், மற்ற படுக்கைப் பொருட்களையெல்லாம் சுருட்டி எடுத்து, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டுகிறாய். அறையெங்கும் புகையிலை மற்றும் ஜின் வாடையுடன் மனிதர்களும் நிறைந்துள்ளார்கள். ஒவ்வொரு நாளையும் ஆண்களால் நிரம்பிய அறையில் உன்னால் எப்படி கழிக்க முடிகிறது என்று வியப்படைகிறாய். உன்னைப் போலவே மற்ற நாடுகளிலிருந்து வந்த ஆண்கள்.. அவர்களில் சிலர் வழி தவறியவர்கள், அவர்களுக்கு மீட்சிக்கான எந்தப் பாதையும் இல்லை. ஏனென்றால், வீடு திரும்புவதற்கு முதலில் தெளிந்த மனநிலையோடு இருப்பது மிக முக்கியம் என்று உனக்குத் தெரியும்.

உனக்கும் வீட்டைப் பற்றிய கனவு இருந்தது. அது, பல கடல்களுக்கு அப்பால், பல நிலப்பரப்புகள் கடந்து, உனது பயணத்தின் இரு ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நடந்து பூங்காவிற்குள் சென்ற போது குளிரான மதியத்தில் தகதகக்கும் சூரியனின் கதிர்களை உணர்கிறாய். அது வரம் போல இருந்தது. சிகரெட்டை புகைத்த போது உன் முகத்தில் ஆழ்ந்த திருப்தியும், மனதில் அமைதியும் நிலவுகின்றன. அந்தப் பாதையின் ஓரத்தில் மிகக் கனமான வெம்மை ஆடை அணிந்தபடி கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பின் எழுந்து அவர்களை நோக்கிச் செல்கிறாய்.

“ஹாய், எங்களுடன் விளையாட வருகிறீர்களா?” நல்ல ஆங்கில உச்சரிப்பில் கேட்ட ஒருத்தி உன்னை நோக்கி பந்தை வீசினாள். அதை உள்ளங்கையில் வைத்த பின் ஒரு முறை தட்டிக் குதிக்க வைத்து, கூடையைக் குறி வைக்கிறாய். முதல் முறை வீசியதிலேயே மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. அவர்கள் உன்னுடைய திறமையைக் கண்டு ஆர்வமாகி விட்டனர். ஒரு வெற்றி வீரன் போல உன்னை உணர்கிறாய்.

“நல்ல பந்து வீச்சு”. பொன்னிறக் கூந்தல் கொண்ட பெண் சொல்கிறாள். நீ புன்னகைக்கிறாய்.

’நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?’ முதல் பெண் கேட்கிறாள். மீண்டும் பந்தை உன் பக்கம்  வீசுகிறார்கள்.

’நைஜீரியா’, புன்னகையுடன் பதில் சொல்லி விட்டு பந்தைச் சுற்றிலும் தட்டிக் கொண்டே இரண்டாம் வாய்ப்புக்குக் குறி பார்க்கிறாய். பென்ஞ்சில் அமர்ந்து தனது ஷூ லேசை கட்டிக் கொண்டிருந்த ஸ்பானிஷ் பெண், இப்போது உன்னைத் தடுக்க ஓடி வருகிறாள். ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனைப் போல் அவளைச் சுற்றி வளைந்து மடங்கி, இரண்டாவது முறையும் பந்தைக் கூடையினுள் வீசி விட்டாய்.

‘நான் ஜெனிவா யுனிசெஃப்பில் பணி புரிகிறேன். என் பெயர் ஜீனா’. அந்த முதல் பெண் முகத்தில் புன்னகை மலரப் பேசினாள்.

‘சாம்’. நீயும் புன்முறுவலுடன் பதிலளிக்கிறாய்.

‘இவர்கள் எல்லோரும் என் தோழிகள்’, முதல் ஸ்பானிஷ் பெண்ணைக் காட்டிச் சொல்கிறாள்.

‘ஷீனா’. ஸ்பானிஷ் பெண் புன்னகைக்கிறாள்.

அப்புறம்.. அந்தப் பொன்னிறக் கூந்தல் பெண்ணைச் சுட்டுகிறாள்.

‘நடாஷா’, சொல்லிக் கொண்டே உன் கைகளைப் பிடித்துக் குலுக்குகிறாள்.

இது ஜெனீவா என்னும் சர்வதேச நகரம்.. உலகம் முழுவதுமிலிருந்து இங்கு வந்து வாழ்கிறார்கள். யாருடனும் யார் வேண்டுமானாலும் பேசி எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். அதை எண்ணி இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறாய். ஆனால், நீ வாழும் நிலையை நினைத்துப் பார்த்தவுடன் உனது மகிழ்வெல்லாம் பனிக்கட்டி போல உருகி ஓடி விடுகிறது. அவ்வளவு மோசமான நிலையாக இருந்திருக்கக் கூடாதென விரும்புகிறாய்.. ஆனால், எல்லாமே அதன் போக்கில் சரியாக வேண்டும்  என ஆசைப் படுகிறாய், நீ ஒரு குத்துச் சண்டைக்காரன். பொறுமையை ஆள்பவன். நம்பிக்கையுடையவன்!

உன்னுடைய விலையுயர்ந்த காரை கூடைப் பந்து மைதானத்தில் நிறுத்தி வைக்கும் நாள் வரக் கூடும், இந்தப் பெண்களையும் அதில் இங்கே அழைத்து வரலாம். கற்பனை செய்து பார்க்கிறாய்.  இவ்வளவு தொலைவு வந்திருக்கிறாய்.., தோல்வியடைவது உனது திட்டத்திலேயே இல்லை.. தாய்நாட்டில் உள்ள பாதிரியார் சொல்வார், “கடவுளின் கருணை மெதுவாக வரும்”. அதை மற்ற யாரையும் விட நீ நம்புகிறாய்.

கூடையில் பந்தை எளிதாகப் போடுமளவுக்கு உயரமானவன் நீ. அந்தப் பெண்களைக் கவர, கூடையை நோக்கி வேகமாகப் போய், உனது கனமான புஜங்களும் பலமும் கூடையைப் பற்றித் தொங்க உதவ பந்தை உள்ளே போடுகிறாய். அவர்கள் அனைவரும் உனக்குக் கைதட்டுகிறார்கள். உண்மையிலேயே உன் திறமையால் ஈர்க்கப் படுகிறார்கள்.

“ஹே, உங்களைச் சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்கலாமா?” என ஜீனா கேட்டாள்.

அந்த ஒரு கேள்விக்கு உன்னால் பெருமிதமாக பதில் சொல்ல இயலாது.. அப்படியே தவிர்க்கப் பார்க்கிறாய்.. எளிதில் பதிலுரைக்க முடியாத கேள்வி. உன் மனது சொல்கிறது, ‘ஆனால் இதை உனக்குள்ளேயே புதைத்து வைத்து என்ன பயன்? ஏன் மறைக்க வேண்டும், இவர்கள் உனக்கு யார்? அந்நியமானவர்கள். இவர்களை இனிமேல் பார்க்கவா போகிறாய் நீ?’ சமாதானமானவுடன் மனம் திறந்து நீ யாரென்பதைச் சொல்கிறாய். உன் தலைவிதியை ஏற்றுக்கொள்ளப் பழகி விட்டாய்.. அந்தப் பெயரைச் சொல்லக் கற்றுக் கொண்டு விட்டாய். தாயகமான நைஜீரியாவில், தொலைக்காட்சியில் அந்தப் பெயர் ஒலிக்கும் போதெல்லாம் அதைக் கேட்பதற்கே நடுங்குவாயே, அந்த ஒரு பெயர். அதை உச்சரிப்பதும் அல்லது ஒருபோதும் உன்னை அந்தப் பெயரால் அழைக்கவும் விரும்பாதது. ’அகதிகள்’. உன்னைப் பொறுத்தவரை அதன் அர்த்தம், வீடற்றவர்கள், வறுமையில் உழல்பவர்கள், உதவியை நாடுபவர்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. உனக்கு யாரையும் உதவி கேட்கப் பிடிக்காது, உனக்கான தேவைகள் அனைத்தையும்  நீயே சமாளித்துக் கொள்ளவே விரும்புவாய். அரசு தரும் அற்பத் தொகைக்காகக் காத்திராமல், தெருக்களில் இறங்கி உனது வெற்றியின் வாய்ப்புகளைத் துரத்த ஆயத்தமாக இருக்கிறாய். எப்போதும் போராடும் கடும் உழைப்பாளி. அப்படித்தான் உன்னைப் பார்க்க விரும்புகிறாய்.. ஒரு அகதியாக அல்ல..

‘ம்ம், என்னுடைய சக பணியாளர் நைஜீரியாவைச் சேர்ந்தவர். தங்குமிடம் அல்லது வேறு ஏதோ வகையிலோ அவர் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யக்கூடும். பார்க்கலாம்..’ என அவள் சொன்னாள். பேச்சிழந்து நிற்கும் நீ,  அவள் அலைபேசியின் அழைப்பைத் தடுக்க நினைக்கிறாய். ஆனால், உன்னுள் ஏதோ ஒன்று வேண்டாம், விடு என்று சொல்கிறது. உன்னை ஒரு நன்றியற்றவனாகவோ, அகம்பாவம் பிடித்தவனாகவோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அன்பின் செயல்களை ஆராதிப்பவனாகவே உன்னை வளர்த்திருக்கிறார்கள். நன்றி என்னும் ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்க்கிறாய்.

அலைபேசி அழைப்பை அனைவரும் கேட்கும்படியான குரல் முறைக்கு மாற்றி வைத்ததால் மறுமுனையில் அழைப்பு மணி அடிப்பதைக் கேட்க முடிகிறது. பதில் ஒலிக்கிறது. ’ஹாய் ஜீனா, இன்று தான் என்னை அழைக்கும் நினைவு வந்ததா? நாமிருவரும் இரவு உணவுக்கு எங்காவது போகிறோமா என்ன?’

ஜீனா புன்னகைக்கிறாள். அதன் அர்த்தம், ‘நான் உன்னுடன் ஊர் சுற்றுவதற்காக அழைக்கவில்லை, ஒரு உதவிக்காகவே அழைக்கிறேன்’ என்பதாகும்.

‘ஹேய், ஜான். இங்கே என்னுடன் நைஜீரியன் ஒருவன் இருக்கிறான், உங்களுடைய இனத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கக்கூடும். மிகவும் நல்லவன், உன்னுடைய உதவி தேவைப்படும் சூழலில் இருக்கிறான்..’

எதிர்முனையில் காதலனைப் போல கொஞ்சிக் கொண்டிருந்தவனின் தொனி மாறி இம்முறை
பதற்றத்துடனும் எரிச்சலுடனும் ஒலித்தது.

‘இல்லை இல்லை, ஜீனா. இந்த நாட்டைப் பற்றி உனக்குத் தெரியாது, அப்புறமாக உனக்கு நான் விளக்கிச் சொல்கிறேன்…’

‘குறைந்தபட்சம் அவருடன் பேசவாவது முடியுமா?

‘அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்? ஈக்போ வா?”

பதிலுக்காக என்னை நிமிர்ந்து பார்க்க, நான் ஆமென்று தலையசைத்தேன்.

‘ஆமாம்’

மறுபுறம் சற்று அமைதி நிலவியது..

’இல்லை ஜீனா.. எனக்கு அவரிடம் பேச வேண்டாம். நாம் நாளை அலுவலகத்தில் சந்தித்து இதைப் பற்றிப் பேசுவோம்’.

இந்த நாடு எப்படிப்பட்டது என்று உனக்குத் தெரியும். உனது நாட்டிலிருந்து வந்து குடிபுகுந்த நல்லவர்கள், மோசமானவர்கள் அனைவரையும் அறிவாய். உனது நாட்டிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலோனோருக்கு மற்றவர்களின் பாரத்தைச் சுமக்க விருப்பமில்லை. காடுகளில் வாழ்வதைப் போல, அவரவர் தேவையை மட்டுமே பார்க்கின்றனர். மற்றவர்கள் எப்படிப் பிழைக்கின்றார்கள், எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்திக் கூட உதவி செய்ய முன் வருவதில்லையென்று உனக்குத் தெரியும். நீ ஜீனாவைப் பார்த்துப் புன்னகைக்கிறாய். ஆனால் அவள் முகத்தில் புன்னகை இல்லை. நடந்ததை விளங்கிக் கொள்வதை விடவும், நம்ப முடியாத உணர்வே அவள் முகத்தில் படர்ந்திருந்தது. வினோதமான முறையில் தலையை ஆட்டிக்கொண்டாள். மறுமுனையில் கேட்ட குரல் மெல்ல அடங்கிப் போனது. உன் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டாய்.

‘என்னை மன்னித்துக் கொள், நான் இதை விட ஏதாவது முயற்சி செய்திருக்கலாம்’. வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள் ஜீனா. அவள் முகத்திலிருந்த இயலாமையின் ரேகைகள் அவள் எவ்வளவு உண்மையாக முயற்சி செய்தாள் என்பதைக் கூறியது. அவள் நெற்றியில் இரக்கமும் தோய்ந்திருந்தது. நீ மேலும் மேலும் பார்க்க விரும்பும் ’கருணை’. உனக்கு மிகவும் பரிச்சயமான கருணை, அது மற்றவர்கள் உயிர்வாழும் நோக்கத்திற்காக ஒருவரை எந்தக் காரியத்தையும் செய்ய வைக்கக் கூடியது. ஆனால் அவளுடைய இரக்கத்தின் சாயையில் அதுபோல எதுவுமே தென்படவில்லை. ஆப்பிரிக்கக் கிராமங்களில் மிஷனரீஸ் என்று கூறிக்கொண்டு வருபவர்களிடம் தோன்றும் இதே போன்ற இரக்கத்தின் சாயலைப் பல முறை நீ பார்த்திருக்கிறாய்.

சமத்துவத்தையும் கௌரவத்தையும் விட ஏழை ஆப்பிரிக்கனுக்கு தரப்படும் சிறப்புக் கவனம் தான் அந்த இரக்கத்தின் சாயை. ஒரு வளர்ப்புப் பிராணியை கவனத்துடன் பராமரித்து வந்தாலும், அதன் இறப்புக் காலம் நெருங்கும் போது விருப்பத்துடன் அதன் சாவிற்கு அனுமதி வழங்குவதைப் போலாகும். ஆப்பிரிக்காவின் யுத்தத் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் அவர்களைப் போன்ற பலர், முகத்தில் அதே கருணையுடனும் அக்கறையுடனும் விமானத்தில் ஏறி அந்த இடத்தை விட்டு நீங்குவதையும் பார்த்திருப்பீர்கள். அது வழக்கமான ஒன்று என்பதால் அவள் மௌனமாக காரில் ஏறிச் செல்வதைச் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். உனது எண்ணம் சரியாக இருக்கலாம். தவறாகவும் இருக்கக்கூடும். அதைத் தவறென்று நிரூபிப்பவர்களுக்காக இன்று வரை காத்திருக்கிறாய், ஆனால் இது வரை அப்படி ஒருவரைக் கூடக் கண்டதேயில்லை.

தூரத்து மேகங்களின் ஊடே சூரியன் பிரகாசமான ஒரு ஆரஞ்சுப் பழம் போல ஒளிர்ந்தது. திறந்தவெளிப் பூங்காவில் சில மீட்டர் தூரத்திற்கு வியர்வையுடனும் குளிருடனும் நடக்கிறாய். சட்டைப் பையிலிருந்து மற்றுமொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறாய். புகையை இழுக்கையில் மனம் அமைதியடைகிறது. ஒவ்வொரு இழுப்பிலும் அது ஆறுதலை ஏந்தி வருவது போல உணர்கிறாய்.

’எல்லாமே என் தலைக்குள் தான் இருக்கிறது’ என்று சிந்திக்கிறாய்.

புகலிட த்தின் வாயிலுக்கு மிக அருகில் நெருங்கி வருகையில் ஒரு இளைஞன் உன் அருகில் வந்து தொப்பியை சற்றே உயர்த்தி உன்னை வணங்கி, தனது அங்கியைச் சரி செய்து கொள்கிறான். அவன் இந்த இடத்தைச் சேர்ந்தவனல்ல என்று தெரிகிறது. இங்கு வந்து தங்கத் துவங்கிய நாளிலிருந்து இவனைப் போன்ற பலரைப் பார்த்திருக்கிறாய். அவர்களுக்குத் தேவையானது சில உண்மைகளும் புள்ளி விவரங்களும் என்பதையும், அவர்களைப் பொறுத்தவரை உன்னுடைய தகுதி அந்த அளவு வரை தான் என்பதையும் நீ அறிவாய். அவன் கண்களில் எந்த மரியாதையும் தெரியவில்லை. அவன் பார்வையில் இந்த அரசாங்கத்தின் நிதியைத் திருடுபவர்களில் நீயும் ஒருவன். அந்த உணர்வின் வெளிப்பாடு உனக்குப் புதியது அல்ல. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு உன்னால் புன்னகை செய்ய முடிகிறது .

’உங்களுக்கு ஜெர்மன் மொழி பேச வருமா?’ புன்முறுவலுடன் கேட்கிறான். இங்கு நீண்ட காலமாக வாழ்கிறாய். ஐரோப்பாவின் அனைத்து நாட்டு மக்களையும் சந்தித்திருக்கிறாய். ஓரளவு அவர்களைப் பற்றியும், முக்கியமாக மொழியைப் பற்றியும் அறிவாய். ஜெர்மன் மொழியில் பதில் சொல்வது உனக்குப் பிரச்சனையாக இராத போதும் சரளமாக உரையாட இயலாது என்பதை அறிவாய்.

‘இல்லை, ஆங்கிலம் அல்லது ஃபிரெஞ்ச்’  உனக்குத் தெரிந்த ஜெர்மன் புலமையில் அவனிடம் ஓரளவு பேச வரும் மொழியைப் பற்றிச் சொல்கிறாய்.

‘ஆங்கிலம் சரியாக இருக்கும் சார்’. மிக மரியாதையுடன் பேசுகிறான்.

உன்னை சார் என்று யாராவது விளித்தால் உனக்குப் பிடிக்காது. அதனால் உடனடியாக குறுக்கிட்டுச் சொல்கிறாய்.

‘சாம்யுவெல், என்னை சாம்யுவெல் என்றே அழைக்கலாம். நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? ’

‘என் பெயர் பர்க்.’ பெர்லின் பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தின் முகவர் ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பதாகக்  கூறுகிறான். அகதிகளும் இவனைப் போல எண்களும் புள்ளியியலும் தேவைப்படும் படித்தவர்களும் தவிர புகலிடங்களில் வேறு எவரும் நுழைவதில்லை என்று உறுதியாக உனக்குத் தெரியும்.

‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?’. மீண்டும் புன்முறுவல்.

அவர்கள் முகத்தில் இந்தப் புன்னகையுடனே தான்  சில கேள்விகளைக் கேட்பார்கள், அது நன்றி கூறும் செயல் அல்ல.. உன்னிடம் பதிலுக்காக ஏங்கி நிற்கும் புன்னகை. இரக்கம் சிந்தும் புன்னகையுமல்ல, மாறாக பிரமிப்பும் ஆர்வமும் நிறைந்திருக்கும் புன்னகை. உன் கதையைச் சொல்லி முடிக்கும் போது, உயிரைப் பணயம் வைத்து, தன் சொந்த நாட்டை விட்டு கடல் கடந்து வந்த மற்றுமொரு பைத்தியக்காரன் இவன் என அவர்கள் நினைக்கக்கூடும். உன் மனதிற்குள் சிரித்துக் கொள்கிறாய், இந்தச் சூழலால் மனமுடைந்து போனவர்களுக்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை அல்லவா?

‘ஜெனீவாவுக்கு வந்து புகலிடம் தேடுவோரில் ஒருவனாக ஆனது எப்படி என்று சொல்ல முடியுமா?’

இதயத்தைப் பிளக்கும் அந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வைப் பலமுறைகள் விவரித்திருந்ததால் மீண்டும் அதைக் கூற நீ விரும்பவில்லை. இங்கே நீண்ட காலமாகத் தங்கியிருப்பதால் அதைக் கூறுவதால் எந்தவொரு பயனும் விளையப் போவதில்லை என்னும் புரிதலும் உள்ளது.

‘நான்கு மாதங்களுக்கு முன்  ஜெனீவாவுக்கு ஒரு கலந்தாய்வுக் கூட்டத்திற்காக வந்தேன். எனது நாட்டின் நிலையற்ற அரசியல் சூழலால் புகலிடத்திற்கு விண்ணப்பித்தேன்’ என்று பதில் சொல்கிறாய்.

‘உங்களை அவர்கள் நியாயமான முறையில் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இங்குள்ள சௌகரியங்களுக்கு என்ன மதிப்பீடு தருவீர்கள்? நன்று, சுமார், மோசம், அல்லது மிக நன்று?’ கேட்ட பின் அவனது கையிலிருந்த அட்டையில் ஏதோ கிறுக்குகிறான்.

‘மோசம்’ என்று பதில் சொல்கிறாய்.

’அது ஏன் என்று உங்களைக் கேட்கலாமா?’ கேட்டவன், உனது பதிலுக்கும் உனது முக பாவனைக்கும் ஏதோ நேரடிப் பொருத்தம் இருப்பது போல உன் கண்களையே நோக்குகிறான்.

‘ம்ம், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேயில்லை, இந்தக் குடியிருப்பைப் பாருங்கள், இதைப் பற்றி நல்ல விதமாகச் சொல்ல ஏதாவது இருக்கிறது?’ மீண்டும் பொறுமையாக பதில் சொல்கிறாய். நீ அதிகமான வார்த்தைகளைச் செலவழிக்க மாட்டாய். இது போன்ற விஷயங்களைப் பேசுகையில் விரைவில் எரிச்சலடைந்து விடுவாய். உன்னுடைய எரிச்சலை உணர்ந்து கொண்ட இளம் மாணவன் மேலும் கேள்விகள் கேட்பதைத் தவிர்த்து விடுகிறான்.

’இந்த ஆராய்ச்சிக்கு உதவியதற்கு மிக்க நன்றி சாம்யுவெல்.’

நீட்டிய அவன் கைகளைப் புன்முறுவலுடன் குலுக்கிய பின் கட்டிடத்தை நோக்கி நடந்து செல்கிறாய்.

எத்தியோப்பியனும் பாலஸ்தீனனும் அறையின் இரு வேறு மூலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களுடைய ஹூக்காவில் ஷீஷா புகைத்துக் கொண்டிருக்கின்றனர். அறையில் நீ ஒருவன் தான் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன். அவர்கள் இருவருடனும் நீ புகைக்க மாட்டாய். படுக்கையை விரித்துப் போட்டு அமைதியாக படுத்துக் கொள்கிறாய். ஞாபகங்கள் மீண்டும் உன் தலைக்குள் ஓடுகின்றன. பாலைவனத்தில் மனிதர்கள் இறப்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்த போராளி.. கடலின் மையத்திலிருந்து அதிசயங்களால் காப்பாற்றப்பட்ட போராளி… அப்படியே நீ கண்ணயர்ந்து விட்டாய்.

இரவு கவிகிறது. தொலைவிலிருந்து விளக்குகள் மின்னுகின்றன. கடிகாரத்தை நீ பார்த்த போது நள்ளிரவு பனிரெண்டு மணியாகிறது. இரவு விடுதியை நோக்கிச் செல்கிறாய். அங்குதான் நீ இருக்க விரும்புகிறாய். வண்ண விளக்குகள் ஒளிரும் அறையில், பெண்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் இடத்தில் தான் இருக்க விரும்புகிறாய். அந்தக் கூடத்தில் அமர்கிறாய். அழகிகள் தங்கள் புட்டங்களை அசைத்தபடி ஆடிக்கொண்டே உன்னைக் கடந்து செல்கிறார்கள். ஒரு கோப்பையில் பொன்னிற மதுவை நிரப்பி எடுத்து வந்து அருந்துகிறாய். அதன் முதல் மிடறு உன் தொண்டையை எரிக்கும் முன் வாயில் எரிகிறது.

மீதமுள்ள திரவத்தையும் விழுங்கிய பின் நடன அறைக்குள் நுழைகிறாய். உன்னை நீயே உணர்வதற்காக, எவ்வளவு வினோதமாகத் தெரிந்தாலும், தனியாக நடனமாடவே வருகிறாய். அழகிய பெண் யாராவது உன் நடன வட்டத்துக்குள் வந்தால் அது பிரச்சனையில்லை. அன்றைய இரவில் நேர்த்தியாக ஆடையணிந்து வந்திருந்த இளைஞர்களுக்கும், இரவு விருந்திற்காக நாகரீக உடையணிந்து வந்திருந்த யுவதிகளுக்கும் போதை மருந்து விற்று மேலும் வருமானம் ஈட்டுகிறாய். அது உன் பிழைப்புக்காகவேயன்றி வேறெதற்கும் அல்ல என்பதை நீ நன்கு புரிந்து வைத்திருக்கிறாய். நடன அரங்கின் விளக்குகள் அணையும் வரை எந்தப் பெண்ணும் உன் அருகில் நெருங்கவில்லை. வீடு திரும்புகிறாய்.

மறுநாள் உடற்பயிற்சிக் கூடத்திற்கு மீண்டும் செல்கிறாய். குத்துச்சண்டை வீரர் தன்னுடைய பயிற்சியை ஒரு போதும் நிறுத்துவதில்லை. வாழ்க்கை உன் தலையில் குத்து விடும் போது, தடுமாறாமல் சமாளிப்பதற்காக நீ வேறு எதையாவது தாக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் ஒரு குத்துச்சண்டை வீரனாவதை நீ தேர்ந்தெடுத்தாய். எதிர்காலத்தில் உன் மீது சூரியன் பிரகாசமாக ஒளிர்கையில், அதன் மெல்லிய, சிறிய வெளிச்சக் கதிர்களில் உன் இதயத்தைக் கண்டடைவாய் என்று உனக்குத் தெரியும்.

கரையோரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் கரையொதுங்கவில்லையெனினும், அவற்றில்  உன்னால் கைப்பிடி அளவாவது கைப்பற்ற முடிகிறது. உன் தாயகம், அது இப்போது உன் இதயத்தில் மட்டுமே உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும், பாலை நிலத்தையும் நெடிய கடலையும் கடந்து சென்றடைய ஏங்கிக் கொண்டிருக்கும் இடம்,.. ஒருவர் மேற்கொள்ளும் மிக மிகக் கடினமான வேதனையும் வலியும் நிறைந்த பயணம்.. ஒரு குத்துச்சண்டை வீரனால் மட்டுமே தாங்கிக்கொள்ளக் கூடிய கொடிய வலி அது…

*

எழுத்தாளர் குறிப்பு:

சிக்கா ஓன்யேனேஸி (Chika Onyenezi) நைஜீரியாவில் (1986) பிறந்தவர். தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில் வசித்து வருகிறார். ஆஸ்திரியா நாட்டின் Peace University-யில் Peace and Conflict பட்டப்படிப்பு பயின்றவர். அவரது கதைகள் பல்வேறு இணைய தளங்களிலும் சர்வதேச அச்சு இதழ்களிலும் பிரசுரமாகி உள்ளன. நைஜீரியாவின் மிகவும் முக்கியமான சிறுகதை – நெடுங்கதை எழுத்தாளராகக் கவனிக்கப்படுகிறார்.