ஏழாவது நோயறிக்கையில் முந்தைய தின மருந்துகளையே இன்றைய தேதியிட்டு மீண்டும் எழுதும்போது மோகனாவிற்கு ரொம்பவே சலிப்பாக இருந்தது. மாற்றம் எதுவும் இருந்தால் மட்டும் குறிப்பிட்டால் போதாதா? ஏன் இப்படி தாள்களையும், பேனா மையையும், நேரத்தையும், மனித வளங்களையும் வீணடிக்க வேண்டும்? எழுதி முடித்த தாள் கொத்தை சற்று தள்ளியிருந்த அதற்கான தட்டிற்குள் வீசினாள். அதிலிருந்த அதிருப்தியை அருகிலிருந்த செவிலி கவனித்து விட்டாரா என்று பார்த்தாள். அவர் பொருட்படுத்தியதாக காட்டிக்கொள்ளவில்லையெனினும் பார்த்திருந்தார். அதனால் அடுத்த சீட்டை எடுக்கும்போது ஓர் அக்கறையான பாவனை. நோயறிக்கையில் இருந்த பெயரைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கி யோசித்து அந்தச் செவிலியிடம் கேட்டாள்,

‘சிஸ்டர், காவ்யாங்கறது…?’

‘கடைசிலிருந்து ரெண்டாவது… நீங்க நேத்து கட் டவுன் போட்டீங்கல்ல..’ – இதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் மோகனாவும் கேட்டிருந்தாள்.

இப்போது, தானிருக்கும் அமைதியற்ற மனநிலைக்கும் அந்த நோயாளிக்கும் ஓர் அழுத்தமான தொடர்பு இருப்பதாக ஏனோ தோன்றியது. பேனாவை ஊன்றியபடி யோசித்துக் கொண்டிருந்தாள். எதுவுமே எழுதவில்லை. ராஜூ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காதுக்குள் கேட்டது. எத்தனை சந்தோஷமான நாளையும் அவனால் ஒரே நொடியில் ஒன்றுமில்லாமல் செய்துவிட முடிகிறது. அந்த அறிக்கையை அப்படியே விட்டுவிட்டு, எழுந்து, காவ்யாவின் படுக்கைக்குப் போனாள். சலைன் தடையின்றி இறங்கிக் கொண்டிருந்தது. அற்பமேயாயினும் அந்தக் கணத்திற்கான ஆகச்சிறந்த நிவாரணம் அது மட்டும்தான்.

’ஃபர்ஸ்ட் டே பேர்ன்ஸ் வார்ட் போஸ்டிங்கா டாக்டர்? ஃபைனல் இயர்ல இங்கெல்லாம் எட்டியே பாத்துருக்கமாட்டீங்களே’ – முந்தைய நாள் அந்த இடத்தில் அடியெடுத்து வைத்தபோது உதவிப் பேராசிரியர் துரை நக்கலாகக் கேட்டார். மோகனா தலையை இடவலமாக அசைத்து அசடு வழிந்தாள்.

‘இங்க நமக்கு கேஸஸ் ஆர் ப்ளெண்ட்டி.. ஆனாலும் எல்லாரும் தியரி மட்டும் தான் படிப்பேன்னு இருக்கீங்க.. ப்ரைவேட் காலேஜ் மாதிரி ஆயிட்டிருக்கீங்க..’

மோகனா அந்த அசட்டுச் சிரிப்பை மாற்றாமல் வைத்திருந்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அருகிலிருந்த செவிலி எதையோ கண்டுவிட்டதைப் போல கடைசி படுக்கைக்கு வேகமாக நடந்து போனார். அந்தக் கட்டிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண், துவண்டு கீழே அமர்ந்து, வலுவில்லாமல் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். செவிலி அங்கிருந்து திரும்பி துரையைப் பார்த்து, உதட்டைப் பிதுக்க, ‘ஹண்ட்ரட் பர்சண்ட் கேஸா?’ என்று கேட்டபடி துரை அந்த இடத்தை நோக்கிச் சென்றார். மோகனாவிற்கு அங்கொரு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று பிடிபடவே சில நொடிகள் ஆயின. சிறப்பான துவக்கம்.

‘சர், சிபிஆர் ஸ்டார்ட் பண்ணவா?’ மோகனா புது பொறுப்பிற்கான ஆர்வத்துடன் முன்வந்தாள்.

‘ஸீ.. எய்ட்டி பர்சண்ட்டுக்கு மேல இருந்துச்சுன்னா தேவையில்லாம எந்த ஹீரோயிஸமும் பண்ணாதீங்க.. யூஸ் இல்ல’ – வாழ்க்கைத் தத்துவம் எதையோ கேட்பதைப் போல மோகனா கர்மசிரத்தையுடன் தலையாட்டி அதைக் கேட்டுக்கொண்டே அந்த ஒப்பாரி பெண்ணைப் பார்த்தாள். இறந்தவளின் தாயாக இருக்க வேண்டும். அழுகையில் பெரிய சுரத்தெல்லாம் இல்லை. தீக்காயங்களுடன் தன் மகள் அனுபவித்த வேதனைகளைக் கணக்கில் வைத்தால் அம்மரணம் அந்த முதியவளுக்கு ஒரு மருந்தாகவே இருக்க முடியும். மோகனா அந்தக் கட்டிலில் தொங்க விடப்பட்டிருந்த சிலேட்டைப் பார்த்தாள்.

முத்துலட்சுமி / 35 , 100%

எதிர் கட்டிலில், ஈஸ்வரி / 43, 35%.. பக்கத்தில், காவ்யா / 22, 90%..

ஒரு சுற்று கண்ணை உருட்டி அங்கிருந்த அத்தனை படுக்கைகளின் பதாகைகளையும் மேய்ந்தாள். பெயர், வயது, தோல் பரப்பில் எத்தனை விழுக்காடு தீயில் கருகியிருக்கிறது என்ற விவரங்கள். யார் யாருக்கெல்லாம் துரை சொன்ன ‘யூஸ் இல்ல’ பொருந்திப்போகும் என்று யோசித்தாள். தான் ஒரு பிணவறைக்கும் சிகிச்சையறைக்கும் இடைப்பட்ட வெளியில் நின்றுகொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. உடல்களைவிட்டு இன்னும் முழுமையாக நீங்கிடாத கெரசின் நெடியும், வெந்த தசைகளிலிருந்து வடியும் திரவத்தின் துர்வாடையும், தீய்ந்து வரட்டியான கெட்டித் தோல்களோடு சேர்ந்திருக்கும் சில்வர் சல்ஃபடயசினின் நாற்றமும் ஒன்று சேர்ந்த வீச்சம் ஒவ்வொரு மூச்சுக்கும் குமட்டலை உண்டு செய்தது. முன்பு வேலை செய்த வார்டிலிருந்த மூத்திர நெடியே தேவலாம் போலிருந்தது. இன்னும் இரண்டு வாரங்கள், இந்த இடத்திற்குள், இந்த இருபத்து நான்கு கருகிய உடல்களோடு தான் வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தைப் பெரிதுபடுத்தி யோசிக்க வேண்டாம் என்று நினைத்தாள். சகிக்கப் பழக வேண்டும். ‘It is far harder to kill a phantom than a reality’ – விர்ஜினியா வூல்ஃபின் மேற்கோளை விடுதியறையில் ஒட்டி வைத்திருப்பவள். அதே எண்ணத்தோடு, அந்த மரணத்தையும் பற்றி அவள் அதிகம் யோசிக்கவில்லை.

‘அந்த கடைசி நைண்ட்டி பர்சண்ட் கேசுக்கு லைன் அவுட்டு சார்.. முடிஞ்சமட்டும் ட்ரை பண்ணி பாத்துட்டேன்.. ஒன்னுங்கெடைக்கல’ அன்று மதியம் இறந்தவளின் அறிக்கைகளில் கையெழுத்து போட்டுவிட்டு, புறப்படும் முனைப்பிலிருந்த துரையிடம் செவிலி சொன்னார்.

‘பிஜிஸ் யார்ட்டயாச்சும் சொல்லி கட் டவுன் போட சொல்லிடுங்க..’ ஆணையிட்டுவிட்டு நகரப் போனவர் மோகனாவிடம் திரும்பி, ‘டாக்டர் நீங்களே ட்ரை பண்றிங்களா?’ என்றார்.

மோகனாவிற்கு அந்தப் பதத்தின் அர்த்தமே அப்போதைக்குத் தெரியவில்லை.

‘சர்..’

‘பாத்ததே இல்லயா? சரி.. நா சொல்லித் தர்றேன்.. பண்ணுங்க.’

செவிலி துரிதமானார். அந்தப் பெண்ணின் படுக்கையைச் சுற்றி ஒரு மறைப்பு வைக்கப்பட்டது. அத்தனை நேரமும் அவளின் நிர்வாணத்திற்கு அந்த மறைப்பு அவசியப்பட்டிருக்கவில்லை. அந்தப் பெண்ணின் அம்மாவிடம் ஒரு தாளில் எழுதியிருந்த நான்கு வரிகளுக்கு கீழ் ஓர் உடனடி கைநாட்டு பெறப்பட்டது. உபகரணங்கள் கொண்டு வரப்பட்டதும் மோகனாவிற்கு குறுகுறுப்பு அதிகமானது.

துரை ஒரு முக்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு அந்தப் படுக்கையின் கால்மாட்டில் அமர்ந்தார். இரண்டு கால்களையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு, இடது காலை அவர் தேர்ந்தெடுப்பதை மோகனா குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘எப்பவுமே அதிகம் பேர்ன் ஆன காலதான் ச்சூஸ் பண்ணுவேன்.. இதுலயே கெடச்சுதுன்னா நல்லது.. இன்னொன்ன லேட்டர் யூஸ்க்கு வெச்சுக்கலாம்..’

அப்போதும் மோகனாவிற்கு அவர் என்ன செய்யப்போகிறார் என்பது புரியவில்லை. போவிடோனை கொஞ்சமாக ஒரு வெண்துணியிலெடுத்து கணுக்காலையொட்டிய சருமத்தில் அவர் தேய்த்ததும், அந்த கரித்தோல் வழுக்கிக்கொண்டு உரிந்து வந்தது. ஓர் இடத்தைக் குறிப்பிட்டு காட்டிவிட்டு, அவர் எழுந்துகொண்டு மோகனாவை அமரச் சொன்னார்.

‘நா காமிச்ச எடத்துல ட்ரான்ஸ்வர்ஸா ஒரு ஒன் இன்ச் கட் கொடுங்க.’

அந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் எதிர்ப்பு தெரிவிக்கும் தொனியில் அந்தப் படுக்கையிலிருந்த நோயாளிப் பெண் ரொம்பவே கோரமாக உருமினாள். அப்போது தான் மோகனா அவளை முழுமையாகப் பார்த்தாள். தலைமயிர் பொசுங்கி, முகம் அகண்டு, மார் கருகிச் சுருங்கி அந்த உருவம் ஒரு பெண்ணைப் போலவே இல்லை. காணச் சகிக்காத குரூபம்.

‘பயப்படாதீங்க டாக்டர்.. பண்ணுங்க’ துரை சாதாரணமாகச் சொன்னார்.

‘சர், லிக்னோகைன் கொடுத்துக்கவா?’ அந்தப் பெண்ணின் சத்தத்தில் மோகனாவிற்கு சற்று வியர்த்துப் போய்விட்டது.

‘இந்த ஸ்கின்லல்லாம் பெய்ன் தெரியாது டாக்டர்.. ப்ரொசீட் பண்ணுங்க.’

ஒரு மென்மையான கீறல். தோல் வெட்டுப்படவில்லை. துரை மேலும் அழுத்தமாக வெட்டச் சொன்னார். ரத்தமே வரவில்லை. மக்கிப்போயிருந்த கொழுப்புதான் பழுப்பு நிறத்தில் கசிந்தது. காலுமே ஒரு ஜடப்பொருளைப் போல எந்தவொரு அசைவையும் காட்டவில்லை. முதலாம் ஆண்டில் பிணத்தின் தோலை வெட்டிய அதே உணர்வு. கையிலிருந்த நடுக்கம் தணிவதை அவளே உணர்ந்தாள். எதிர்ப்பு காட்டாத எதன் மீதும் எளிதில் உண்டாகும் ஆதிக்கம். துரை சொல்லச் சொல்ல மோகனா பிழையின்றி பின்தொடர்ந்தாள். நம்பிக்கை திமிறிய ஒரு கட்டத்தில், அவர் சொல்வதைத் தாண்டியும் செய்ய ஆரம்பித்தாள்.

‘வெய்ன் ரொம்ப க்ளியரா தெரியாது டாக்டர்.. டெண்டன்னு நெனச்சு இஞ்சூர் பண்ணிடாம.. நிதானமா பண்ணுங்க.’

‘சர்.. நீங்களே பண்ணிடுங்களேன்..’ ஒரே நொடியில் அத்தனை உற்சாமும் வடிந்து போய்விட்டது.

‘அட.. பண்ணுங்க பண்ணுங்க.. பயப்படாதீங்க.. டாமேஜ் ஆயிட்டா ரைட் சைட்ல நான் பண்ணிக்கிறேன்.’

அந்த நோயாளிப் பெண் வெடுக்கென்று தன் காலை இழுத்துக்கொண்டாள். கருவிகள் வைக்கப்பட்டிருந்த தட்டு கீழே விழுந்து சிதறியது. மோகனா திடுக்கிட்டு எழுந்து நின்றுவிட்டாள். மீண்டும் அந்த உருவத்திலிருந்து குரூரமான சத்தம். செவிலி அவளைச் சாந்தப்படுத்த முயன்றார். அந்தப் பெண்ணின் அம்மா வைக்கப்பட்டிருந்த மறைப்பின் விளிம்பில் கையெடுத்து கும்பிட்டபடி ஏதோ வேண்டுதலை முணுமுணுத்தபடி கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தாள்.

‘நீங்க ப்ரொஸீட் பண்ணுங்க டாக்டர்.. கண்டுக்காதீங்க..’ துரை கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னார்.

சத்தம் மெல்ல குறைந்தது. அந்த எதிர்ப்பிலிருந்தது மூர்க்கமாக இல்லாமல், இப்போது ஒரு கெஞ்சலாக திரிய ஆரம்பித்தது.

அந்தக் காலை மீண்டும் நீட்டிவைத்து, மோகனா தயக்கத்துடன் தொடர்ந்தாள். சில நொடிகளுக்குள் அந்த வெந்நீல கொடி கண்ணில் பட்டது. துரை சொன்னபடி அதனைத் துண்டித்ததும் கருஞ்சிவப்பு நிற ரத்தம் கொஞ்சமாக சொட்டியது. கீழ்முனையைக் கட்டிவிட்டு, மேல்முனையில் ஊசியைப் பொருத்தினாள். சலைன் பாட்டில் ஒன்றை இணைத்ததும், அந்த ரத்தக்குழாயில் ஓட்டம் ஊர்ஜிதமாகியது. துரை ‘கங்ராட்ஸ்’ என்ற நொடியில் அத்தனை பெருமிதம்.

முந்தைய நாளைவிட இன்று அந்த ஓட்டம் இன்னும் வேகமாகவும் திருத்தமாகவும் இருப்பதாக மோகனாவிற்குத் தோன்றியது.

‘போன மாசம் நா அந்த வார்டு போஸ்டிங்ல இருக்கும்போது அந்த யோக்கியன் எங்கிட்டல்லாம் பேசுனது கூட இல்ல.. இப்ப பாரு.. அதான்.. நானும் பொண்ணா இருந்து, கோட் பட்டன் போடாம, நல்லா ரிவீலிங்கா டைட் டாப்ஸ் போட்டு போயி நின்னா எனக்கும் சான்ஸ் கொடுப்பான்..’ – முந்தைய இரவு ராஜூ சொன்ன வார்த்தைகள் இப்போது மீண்டும் நினைவில் வந்ததும், இறுக்கமாக கண்களை ஒருமுறை மூடித் திறந்தாள். இதைப் போய் ஆசையாய் சொல்லியே இருக்க வேண்டாம்; அவனிடம் நேற்றிரவு பேசியிருக்கவே வேண்டாம். இதே வக்கிர பேச்சுகளுக்காக முறித்த உறவை, மீண்டும் முந்தைய வாரம் புதுப்பித்திருக்கவே வேண்டாம். அவனைக் காதலித்திருக்கவே வேண்டாம். இந்தப் பிறவியில் அவனைச் சந்தித்தே இருக்க வேண்டாம். கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

ஏதோ சமாளிப்பதைப் போல, ’கால ஆட்டாம வெச்சுக்கோங்க’ என்று இவள் சொன்னபோது அந்தப் பெண்ணிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. பக்கத்திலிருந்து அவளது அம்மாவிடம், ‘ஆட்டிடாம பாத்துக்கோங்க, சலைன் எறங்காது..’ என்று சொன்னபோது அந்தப் பெண்மணி பரிதாபமாக நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு, தான் சொல்வது புரிந்ததாகக் கூடத் தெரியவில்லை.

நோயறிக்கையைத் தொடர்ந்தபோது, அந்த தாளிலிருந்த அவளது வயதைப் பார்த்தாள். 22. ஏறக்குறைய சம பிராயம். அந்தப் படுக்கையிலிருக்கும் உருவத்தை அந்த வயதில் பொருத்த முடியவில்லை. நோயறிக்கையின் முன்குறிப்பில், ‘self inflicted’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிருப்தியில் முகத்தைக் கோணிவிட்டு மேற்கொண்டு எழுதினாள்.

அந்த இடத்தின் புழுக்கம் அவளுக்கு இப்போது ஓரளவு பழகிவிட்டிருந்தது. ரவுண்ட்ஸிற்கு துரை வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருந்தது. மேசையில் சற்று தலையைச் சாய்த்தபோது, ‘மூச்சு சத்தம் ஒரு மாதிரியா இருக்கும்மா.. செத்த என்னான்னு வந்து பாருங்களேன்.’ காவ்யாவின் அம்மா தான் செவிலியிடம் வந்து பதற்றமாக சொல்லிக் கொண்டிருந்தாள். இவளும் அந்தச் செவிலியோடு எழுந்து ஓடினாள்.

காவ்யா ஒரு மாதிரி நிதானமிழந்து அரற்றிக் கொண்டிருந்தாள். ஒன்றுமே புரியவில்லை. தொண்டையை நெரிப்பதை எதிர்க்க தவிப்பதைப் போன்ற ஓலம்.

‘பெய்னா இருக்கும்.. மிடாஸ் வேணா போட்டுவிடுங்க.. கொஞ்சம் தூங்கட்டும்’ – செவிலி சொன்னார். மோகனா தயங்கினாள். எதற்கும் துரை சார் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். அருகில் போய் நின்றுகொண்டு, ‘காவ்யா.. என்ன செய்யிது.. கால ஒதறாதீங்க.. என்ன ஆச்சு சொல்லுங்க..’ – முந்தைய வாரம் குழந்தைகள் வார்டில் பணியிலிருந்த போது ஒட்டிக்கொண்ட ராகம்.

‘அவூ.. ண்ண்ணி.. ண்ண்ணி.. அவூ..’ சற்று நேரத்தில் அந்த திணறல் அடங்கிவிட்டாலும் அவள் தொடர்ந்து கத்திக்கொண்டேதான் இருந்தாள். ‘தண்ணி கேக்குறா..’, கொஞ்சம் பதற்றம் தணிந்திருந்த அந்த அம்மா புரியவைத்தாள். வலது உள்ளங்கை தீயில் பொசுங்காமல் இருந்ததை கவனித்த மோகனா, தன் கையை மெல்ல அவ்விடத்தில் வைத்தாள். காவ்யா சட்டென சத்தத்தை நிறுத்திவிட்டு பலமாக அந்த விரல்களைப் பற்றிக்கொண்டாள். பரிசுத்தமான குளிர்ச்சி. மோகனாவிற்கு ஒரு மாதிரி சிலிர்த்துப் போய்விட்டது.

நிதானமாக தன் விரல்களை விடுவித்துக்கொண்டு, கொஞ்சம் முகத்தின் அருகில் குனிந்து, ‘தர சொல்றேன்..தண்ணிதான..’ என்றாள்.

பதிலுக்கு ஏதோ சத்தமெழுப்பினாள். முகத்தையும் தொண்டை பகுதியையும் முழுமையாக தீ கவ்வியிருந்ததால், பேச்சுக்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. ஒரே வார்த்தையை அவள் தொடர்ந்து உச்சரிப்பதாக தெரிந்தது. அருகிலிருந்த அவளது அம்மா, ‘அக்கான்னு கூப்புட்றா உங்கள’ என்றாள். மோகனாவிற்கு என்னமோ போல் ஆகிவிட்டது. அந்த உடலுக்கும் தனக்குமிடையிலான ஒரு மனித உறவுமுறையே அந்தக் கணத்தில் அந்நியமாகவும் அபத்தமாகவும் தெரிந்தது. உடனடியாக அந்த இடத்தைவிட்டு நகரவேண்டும் போலிருந்தது.

2

‘மாத்திக்கனும்ன்னு தான் நெனைக்குறேன்.. முடியல..’ நீண்ட உரையின் முத்தாய்ப்பாக முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு ராஜூ சொன்னான்.

இப்போது ஏன் அவன் அழைத்ததும் வந்து இங்கு அமர்ந்திருக்கிறோம் என்று மோகனாவிற்கு தன் மீதே கோபமாக இருந்தது. அந்தக் கொச்சைகள் பழகிப்போய் விட்டனவா? அவனது சகல கோணங்கித்தனங்களையும் காதலாக பாவித்துக்கொள்ளும் அளவிற்கு இளக்கமாகி விட்டேனா? இதென்ன முழுமையாக ஒரு நாள் கூட தாங்காத வைராக்கியம்; மன்னிப்பதிலிருக்கும் மன்னிக்க முடியாத மந்திர சுகம்? விட்டுக்கொடுக்காத இந்த பாழாய்ப்போன மனதைக் கூறாய்வு செய்தறியவே சோர்வாக இருந்தது.

‘என்ன யோசிச்சிட்டே இருக்க?’

‘அந்த பொண்ணு பாவம்.. 22 வயசுதான்..’

‘கட்டவுன் போட்டதா சொன்னியே.. அவளா?’

‘ம்ம்’

‘சூசைடுக்கு ஐடியாவே தெரியல இதுங்களுக்கெல்லாம்.. எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு சாவனும்.. இதெல்லாம் ஒரு மாதிரி brutality against the self.. எளிய வழியில் தற்கொலை செய்துகொள்வது எப்படின்னு ஒரு புக் எழுதுனா, இன்னிக்கு தேதிக்கு அதுதான் பெஸ்ட் செல்லரா இருக்கும்.’

மோகனா சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

‘கூட ஒரு அம்மாதான் நிக்கிது.. எல்லாத்துக்கும் அதுதான் அலையுது.. விடோ போல.. சொல்ற எதுவும் அதுக்கு புரியல.. எது சொன்னாலும் தலைய தலைய ஆட்டிக்கிது..’

‘டவ்ரி கேஸா?’

‘இல்லல்ல.. அன்மேரிட் தான்..’

‘அந்தம்மாட்ட ஏன்னு கேளேன்.. வயித்து வலின்னு சொல்லும்.. வர்ற பாய்ஸன் கேஸ், ஹேங்கிங், பேர்ன்ஸ்… எல்லாத்துக்கும் வயித்துவலி தான்..’

மோகனா அமைதியாகவே இருக்க, ராஜூ மேலும் தொடர்ந்தான். ‘பாதி கேசுக்கு, கூட இருக்கதுகளே கொளுத்திவுட்ருக்குங்க.. பேஷண்ட்டும் பெரிய தியாகி மாதிரி எதையும் வெளிய சொல்லாது..’

‘தெரியல ராஜூ.. காரணம் தெரிஞ்சு என்ன ஆவப்போவுது? நா அதெல்லாம் கேக்கறதே இல்ல.’

‘ஒன்னும் ஆவப்போறதில்ல தான்..’ சற்று நேரம் அமைதியாக இருந்தான், ‘பட் ஒரு மாரல் ஆங்கர்.. அதுக்குதான்..’

மோகனா ஒரு மென்சோகத்துடன் புன்னகைத்தாள். இப்படியெல்லாம் பேசுவதுதான் அவனை இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்கிறது.

கேண்டீன் மாஸ்டர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதை ஊர்ஜிதமாக்கிக் கொண்டு, ராஜூவை நோக்கி ஒரு முறை உதட்டைக் குவித்துக் காட்டினாள். ஆண்களுக்கே உரிய பிரத்யேக நாணத்துடன் ராஜூ கையை வைத்து வாயை மறைத்துக் கொண்டு புன்னகைத்தான்.

3

‘நைட்டு அந்த கால்ல ஃப்ளோவே இல்லயாம்.. இதுல மாத்திருக்காங்க’  ஊசி அகற்றப்பட்ட காயம் காய்ந்து போயிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த மோகனாவிடம் செவிலி சொன்னார். ஏதோ தனக்கும் அவளுக்குமான உறவு அதோடு முறிந்துவிட்டதைப் போல தோன்றியது. அவள் சீக்கிரம் சாகப் போகிறாள் என்ற நினைப்பு ஒரு மின்னலைப் போல வெட்டி மறைந்தது. பிணமாகப் போகிறவளின் உடலில் தன் பங்கிற்கு ஒரு காயத்தை உண்டுபண்ணியதைத் தவிர அந்த கட் டவுன் எதையும் சாதித்து விடவில்லை என்று தோன்றியது. இதற்காக மூன்று நாட்களுக்கு முன் தான் பெருமைப்பட்டுக் கொண்டதை இப்போது நினைக்கும்போது அவமானமாக இருந்தது.

‘பேசாம விட்றலாம்.. ச்சும்மா ச்சும்மா சலைன போட்டு இழுத்துட்டு இருக்காம..’, செவிலி சொன்னதற்கு, மோகனா மெல்ல தலையசைத்து ஆமோதித்தாள். அருகில் கண்களில் தவிப்புடன் நிற்கும் அந்த அம்மாவிடம் மோகனாவால் எதுவும் சொல்லமுடியவில்லை.

காவ்யா அதே ஓசையை எழுப்பினாள். அதை ‘அக்கா’ என்று புரிந்துகொள்வது மோகனாவிற்கு இப்போது சுலபமாகிவிட்டது. கடந்த மூன்று நாட்களில் அவளுடன் கொஞ்சம் பேசிப் பேசி அந்த புதிய சம்பாஷனைக்கு பழகியிருந்தாள்.

‘இருக்குற வரைக்கும் ஃப்ளூயிட்ஸ் போகட்டும் சிஸ்டர்.. நாமளா எதும் நிப்பாட்ட வேணாம்.’ மேசையில் மீண்டும் வந்து அமர்ந்தபோது அந்த செவிலியிடம் சொன்னாள்.

‘ஹ்ம்ம்.. பாவந்தான்..’ அவர் தொடர்ந்தார். ‘அவ ஃபோட்டோ பாத்துருக்கீங்களா?’

‘இல்லையே’

செவிலி இருந்த இடத்திலிருந்தே காவ்யாவின் அம்மாவை நோக்கிக் கையசைத்தாள். காற்றிலேயே ஒரு கட்டம் வரைந்து காட்டி, புகைப்படத்தைக் கொண்டுவருமாறு குறிப்புணர்த்தினாள்.

அரை கொயர் நோட் ஒன்றிற்குள்ளிருந்து ஒரு புகைப்படம் அவளிடம் நீட்டப்பட்டது. சட்டென மோகனாவின் கண்கள் நிரம்பிக்கொண்டன. அவள் எதிர்ப்பார்த்திருந்ததைவிட ரொம்பவே குழந்தைத்தனமான முகம்.

‘இது எப்ப எடுத்தது?’

‘ஆறு மாசம் இருக்கும்மா.. பரிச்ச ஆல் டிக்கட்டுக்குன்னு எடுத்துட்டு வந்தது..’

‘இவ உங்களுக்கு ஒரே பொண்ணா?’, அதுவரை கேட்காத கேள்விகளைத் தன்னை மீறி கேட்க ஆரம்பித்தாள்.

அந்தப் பெண் புடவை தலைப்பையெடுத்து வாயைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள். மோகனா நிறுத்தாமல், ‘ஏன் இப்படி பண்ணிக்கிட்டா?’ என்றாள்.

அழுகையின் விசையும் ஓசையும் அதிகமானதே தவிர, பதில் ஒன்றும் வரவில்லை. செவிலி மேற்கொண்டு எதுவும் கேட்க வேண்டாம் என்பது போல கண்ணைக் காட்டினார்.

அந்தப் பெண் மேசையிலிருந்து நகர்ந்ததும், ‘இதுவோ வாய்லேந்து ஒன்னுத்தையும் வாங்க முடியாது டாக்டர்.. நானும் முந்திலாம் இதெல்லாம் கேட்டுட்டு இருப்பேன்.. இப்பலாம் அதுங்களா எதாச்சும் பொலம்புனா மட்டும் கேட்டுக்குறது..’ என்றார்.

மோகனாவிற்கு ராஜூ சொன்ன ‘மாரல் ஆங்கர்’ என்பது நினைவுக்கு வந்தது. சற்றுநேரம் சிந்தனையற்று அமர்ந்திருந்தாள். அலைபேசியில் படம்பிடித்துக் கொண்ட காவ்யாவின் புகைப்படத்தைப் பெரிதாக்கி பார்த்தபோது, அந்தப் புகைப்படத்திலிருக்கும் புன்னகை தன் மீது பழிபோடுவதாக தெரிந்தது. கொஞ்சம் எள்ளல் கூட தெரிந்தது.

ராஜூவிற்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.

‘யாரு ஃபோட்டோ அது?’

‘அந்த பேர்ன்ஸ் பொண்ணு சொன்னேன்ல.. அவ..’

‘ஹ்ம்ம்.. விடு.. இன்னும் வார்ட்லதான் இருக்கியா?’

‘ராஜூ.. எனக்கிந்த போஸ்டிங் முடியற வரைக்கும் அவ செத்துற கூடாது..’

‘என்ன புதுசா இப்டிலாம் பேசுற?’

‘என்னவோ இப்ப அப்டி தோனுது’

‘நைண்ட்டி பர்சண்ட்ன்னுதான சொன்ன? அதெல்லாம் சீக்கிரம் டிக்ளேர் ஆயிடும்.’

‘தெரியும்.. பட் ஸ்டில்..’

‘Stop riding on false hopes மோனா.. ச்சும்மா..’

காவ்யாவின் அம்மா இன்னும் அழுதுகொண்டிருக்கிறாளா என்று எட்டிப் பார்த்தாள். கட்டிலுக்கு கீழே அவள் படுத்திருப்பது தெரிந்தது. பிழைத்து விடுவாள் என்று நம்பிக்கொண்டிருக்கிறாளா? – False hopes – மாற்றி மாற்றி மருந்து போட்டு, ரவுண்ட்ஸ் நேரத்தில் அந்தக் கட்டிலருகில் போய் மருத்துவ சங்கேத மொழியில் உரையாடிவிட்டு, கட் டவுன் போட்டு சலைன் ஏற்றி – இதெல்லாம் எத்தனை இரக்கமற்ற தேற்றல்கள்? அவை கொடுக்கும் போலி நம்பிக்கைதான் எத்தனை பெரிய பாவம்?

‘என்ன பேசாமலே இருக்க.. ரொம்ப யோசிச்சு டல்லாகாத.. நா வர்ரேன் இரு.. சாப்ட எங்கயாச்சும் வெளில போலாம்’

‘ம்ம்..’

அந்த மேசையிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

அரை மணி நேரம் கழித்து யாரோ சத்தம்போடுவது கேட்டுத்தான் விழித்துப் பார்த்தாள். ராஜூதான் செவிலியரைத் திட்டிக்கொண்டிருந்தான்..

‘எதுக்கு சிஸ்டர் வெளில ஜன்னல் கிட்ட இத்தன பேர் நின்னு வேடிக்க பாக்குறாங்க.. உள்ள பூரா ஃபீமேல் பேஷண்ட்ஸ்.. எல்லாம் ட்ரெஸ் இல்லாம கெடக்குது.. ஜன்னல இப்படி தெறந்து போட்டு வெச்சுருக்கீங்க’

‘ஏசி ஒர்க் ஆவல.. ஒரு வாரம் ஆச்சு.. விண்டோலாம் தெறக்கலேன்னா இந்த நாத்தத்துக்கு சாவ வேண்டிதான்..’

‘அட்லீஸ்ட் செக்யூரிட்டிய கூப்டு வெளில நின்னு எட்டிப் பாக்குறவனெல்லாம் வெரட்டி விடலாம்ல.. ச்சேர விட்டு மட்டும் எந்திச்சிறாதீங்க..’

‘தேவயில்லாத பேச்செல்லாம் வேணா டாக்டர்..’

‘ராஜூ விடு.. வா கெளம்பலாம்’, மோகனா முகத்தைத் துடைத்துக்கொண்டு தயாரானாள்.

வெளியே வரும்போது, ‘ஒனக்கு தெரியாது மோனா.. காலேஜ் பசங்க மாதிரி ரெண்டு பேரு.. அந்த கடைசி நெட் ஜன்னல்கிட்ட நின்னு ஒளிஞ்சு ஒளிஞ்சு பாக்குறானுங்க.. இங்க ஒருத்தன்.. நாப்பது நாப்பந்தஞ்சு வயசிருக்கும்.. கைல மொபைல தூக்கி வெச்சிக்கிட்டு.. பூரா பெர்வர்ட் நாய்ங்க.. பேஷண்ட்டா, எரிஞ்ச ஒடம்பான்னுலாம் கண்டுக்க மாட்டானுங்க.. ஃபோட்டோ எடுத்து வெச்சு சர்க்குலேட் பண்ணுவானுங்க..’, பல்லைக் கடித்தவாறே சொல்லிக்கொண்டு வந்தான்.

‘விடுன்னு சொல்றேன்ல.. நீ இப்ப வந்திருக்கவே வேணாம்..’ மோகனா எரிச்சலானாள்.

‘ஒன்னையும்தான் அங்கிருந்து ஃபோட்டோ எடுப்பானுங்க.. நீ குனிஞ்சு எதாவது ப்ரொசீஜர் பண்ணும்போது..’ ராஜூ அவளிடமும் கத்த ஆரம்பித்தான்.

அவளது முகம் வெளிறிப் போனது. ’ஹே.. ப்ளீஸ் ஸ்டாப் திஸ்.. உன்கிட்ட சொன்னேன் பாரு.. such a dumb-ass.. நீ கெளம்பு.. நா ஹாஸ்டலுக்கே போறேன்..’, ஸ்கூட்டியை திருப்பிக்கொண்டு அவன் முகத்தையே பார்க்காமல் புறப்பட்டுப் போனாள்.

4

அடுத்த நாள் காலை மோகனா ரொம்பவே தாமதமாகத் தான் பணிக்கு வந்தாள். கண்ணயர்வதே அதிகாலையில் தான் சாத்தியப்பட்டிருந்தது. நான்கைந்து நாட்களாகவே அவஸ்தைப்படுத்திக் கொண்டிருக்கும் மாதவிடாய் மனக்கோணல்களை, ராஜூவுடனான தொடர் சச்சரவுகள், காவ்யாவின் அந்தப் புகைப்படம் என என்னன்னவோ சேர்ந்துகொண்டு ரொம்பவே பூதாகரமாக்கின.

அவசரமாக வார்டுக்குள் நுழைந்தபோது, துரை பாதி ரவுண்ட்ஸ் முடித்திருப்பதைப் பார்த்தாள். ஓடிச்சென்று சத்தம் போடாமல் அதில் இணைந்துகொண்டு, ஒரு கணம், தலையை எக்கி காவ்யா இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஆசுவாசமடைந்தாள்.

ஒரு நோயாளியிடமிருந்து அடுத்தவரிடம் நகரும் இடைவெளியில் நிறுத்தி, ‘ஏன் டாக்டர் லேட்டு?’ துரை கேட்டார்.

பதிலில்லை.

‘இந்த பையன்.. ராஜூ உங்க ஃப்ரெண்டா?’

‘சர்ர்..’. இந்தக் கேள்விக்கு மோகனா தயாராக இருக்கவில்லை.

‘நேத்து வார்ட்ல வந்து ஸ்டாஃப்ட்ட சத்தம் போட்ருக்கான்..’

மோகனா மெல்ல திரும்பி அந்தச் செவிலியைப் பார்த்தாள்.

துரை தொடர்ந்தார், ‘இன்னிக்கு காலேல வந்து யாரோ வெளில நின்ன அட்டெண்டர புடிச்சு எதோ வம்பு பண்ணி அடிக்க போயிருக்கான்..’

அவளுக்கு அழுகை அடைத்தது. துரை புரிந்துகொண்டவராக, ‘விடுங்க.. அவன வந்து என்னை மீட் பண்ண சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு அடுத்த நோயாளிக்கு நகர்ந்தார். அவர் திரும்பியதும் அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

ரவுண்ட்ஸ் நகர்ந்து காவ்யாவின் படுக்கைக்கு சென்றபோது, ‘இந்த கட் டவுனும் பல்ஜ் சார்.. வேற லைன் எதுமேயில்ல.. சிவிசி கேட்ருக்கேன் ஸ்டோர்ல..’ என்று செவிலி ஏதோ ஒப்புவிக்க ஆரம்பித்தாள்.

துரை இடைமறித்து, ’சிவிசில்லாம் போடவேணாம்..’ குரலைக் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு, ‘ஜஸ்ட் வேஸ்ட் ஆஃப் ரிசோர்சஸ்.. ஷி இஸ் கெளண்ட்டிங் டேஸ்..’ என்று சொல்லிவிட்டு எதிர்வரிசைக்கு நகர்ந்துவிட்டார். ராஜூ குறித்த சிந்தனைகளால் அவதியுற்றிருந்ததால், துரை சொல்லிக் கொண்டிருந்த எதற்கும் மோகனா பெரிதாக செவி கொடுக்கவில்லை. அந்த இடத்திலிருந்து முழுமையாக அந்நியப்பட்டிருந்தாள். காவ்யாவையோ அவளது அம்மாவையோ கண்ணெடுத்துக்கூட பார்க்கவில்லை. அவரோடே சேர்ந்து அவள் நகர்ந்தபோது, அந்த ஓசை கேட்டது.

‘அக்க்க்கா’……’அக்க்க்க்க்கா’….

தெளிவாக காதில் கேட்டும் மோகனா திரும்பவே இல்லை. அந்த அழைப்பு அப்போதொரு வெறுப்பை உண்டாக்குவதைப் போலிருந்தது. அவள் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறாள் என்றுகூட தோன்றியது.

5

பன்னிரெண்டாவது முறையாக முழு அழைப்பொலியும் முடிவுற்றது. ஒரு நொடி சிரிக்க வைத்துவிட்டு அதற்கு பரிகாரமாக ஒரு நாள் முழுக்க வதைத்தெடுக்கும் அந்த உறவில் இனிமேலும் வெந்து சாகவேண்டாம் என்று தோன்றியது. இன்றே அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற விளிம்பிற்கு அவள் வந்திருந்தாள். ஏதோவாக அன்றைய வேலைப்பொழுதை ஒப்பேற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டால் போதுமென்று இருந்தது. ஒருவித தப்பித்தலைப் போல.

அறைக்குள் நுழையும்போது, வார்டிலிருந்து அழைப்பு. எடுத்துப் பேச மனம் ஒப்பவில்லை. ஏதாவது சில்லறை வேலைகளுக்காக அந்த செவிலி தான் அழைப்பாள்; அவளால்தான் இன்று இத்தனை அவமானம்? அவளால் தானா? நினைத்த நொடியில் ராஜூவிடமிருந்து அழைப்பு. அது ஓய்ந்ததும் பின்னாலேயே வார்டிலிருந்து மறு அழைப்பு. இரு முனையிலிருந்தும் ஓயாத பாணங்கள். மோகனாவிற்கு அடித்தொண்டையிலிருந்து ஒரு முறை உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தது. அலைபேசியை நிசப்தமாக்கி தலையணைக்கடியில் போட்டாள். அதன் பின்னரும் சில நிமிடங்கள் அது அதிர்ந்துகொண்டேதான் இருந்தது.

அவ்வழைப்புகள் காவ்யாவிற்காக இருக்குமோ என்று திடீரென தோன்றியது. விரும்பவில்லையெனினும் அந்த நினைவு மீண்டும் மீண்டும் வந்து அவளைப் பீடித்தது. ‘கெளண்ட்டிங் டேஸ்’ – இப்போது தான் இந்த வார்த்தைகள் காதில் விழுவதைப்போல இருந்தது. அவள் கடைசியாக ‘அக்கா’ என்றழைத்ததும். நலிந்து போயிருந்த மனநிலையை குற்றவுணர்ச்சி வேறு வந்து புதிதாக குடைந்தெடுக்க ஆரம்பித்தது. இதற்காகவும் சேர்த்து ராஜூவை அந்த நொடியில் முழுமையாக வெறுத்தாள். அலைப்பேசி அதிர்வுகள் ஓய்ந்து போயிருந்தன.

ஏதாவது ஒன்றிலிருந்தாவது விடுபட வேண்டுமென்று மனம் அரற்ற ஆரம்பிக்க வார்டு எண்ணுக்கு அழைத்தாள். எதிர்முனை இப்போது அலட்சியப்படுத்தியது. மறுமுறை முயற்சிக்கும் போது காவ்யாவின் இறப்பை அறிவிப்பதற்காகத் தான் தொடர் அழைப்புகள் வந்துகொண்டிருந்தனவா என்ற பதற்றம் தொற்ற ஆரம்பித்தது. பதிலில்லை என்றதும் வார்டுக்கே நேரில் போய் பார்த்துவிடலாமென கிளம்பிவிட்டாள்.

6

அந்தச் செவிலி இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டே மோகனா மேசைக்கருகில் வந்தாள். மதியப் பணிக்கு வேறொருவர் வந்திருந்தார். காவ்யாவின் படுக்கையருகில் எந்த வினோதமும் இல்லை என்பது நிம்மதியும் ஏமாற்றமுமாய் இருந்தது.

‘கவுண்ட்டிங் டேஸ்’, ‘சீக்கிரம் டிக்ளேர் ஆயிடும்’..

வந்ததற்கு அவளிடம் கொஞ்சம் பேசிவிட்டு போகலாம். ஒரு சில இறுதி வார்த்தைகள்.. பயிற்சியில் உண்டாக்கிய கால் காயத்திற்கு.. காலையில் அவளது விளிகளை உதாசீனப்படுத்தியதற்கு.. ஒரு பாவ மன்னிப்பைப் போல..

‘காவ்யா…’

மூச்சுவிடும் அசைவு மட்டும்தான் தெரிந்தது.

சத்தம்கேட்டு தூக்கம் கலைந்த அவளது அம்மா லேசாக உசுப்பிவிட்டாள்.. ‘டாக்டரக்கா வந்துருக்காங்க பாரு.. காவியா.. இங்கேரு.. காலேல கூப்ட்டே இருந்தேல்ல..’

‘காவ்யா..’ மோகனா மீண்டும் அழைத்தாள்..

‘க்க்க்க்கா…’

மோகனா ஒரு நாற்காலியை இழுத்து அருகில் போட்டுக்கொண்டு பேசாமலே இருந்தாள். குழுப்பமெல்லாம் இல்லை. ஒரு தியானத்தைப் போன்ற நிச்சலனம். கருகாமலிருந்த உள்ளங்கை இப்போது நீர்க்கோர்த்து வீங்கிப்போயிருந்ததால் அவள் அதில் வைத்த விரல்களை காவ்யாவால் பற்றமுடியவில்லை. அந்த நொடியின் மெளனம் ஒரு புது அணுக்கத்தை உண்டு செய்தது.

‘ஏன் இப்டி பண்ணிக்கிட்ட?’ குரலிலொரு கூடுதல் உரிமை. மதியப் பணிக்கு வந்திருந்த செவிலியும் அருகில் வந்து நின்றாள்.

இறுகிப்போயிருந்த கழுத்தைத் திருப்ப முடியாததால், கண்களை மட்டும் உருட்டி அவள் மோகனாவைப் பார்த்தாள். நீர் சுரப்பதெற்கெல்லாம் வழியில்லாத அளவிற்கு விழித்திரை பிசுபிசுத்துப் போயிருந்தாலும், இணக்கத்தை அறிவிக்கும் கூர்மையான பார்வை. அந்த அம்மா எழுந்து காவ்யாவின் நாற்காலியின் பக்கமாக வந்தாள்.

‘சொல்லு.. என்னாச்சு?’ மோகனா மீண்டும் கேட்டாள்.

யாதொரு முகமொழியையும் அனுமதிக்காத கருகிய தசைகளையும் மீறி ஒரு சிறிய ஆமோதிப்பு தெரிந்ததைப் போல இருந்தது. காவ்யாவின் அம்மா பொத்தென கீழே சரிந்து மோகனாவின் காலைப் பிடித்துக்கொண்டு சத்தமே வராமல் கெஞ்சும் தொணியில் அழ ஆரம்பித்தாள். ஈனஸ்வரத்தில், ‘வேணாம்மா.. யம்மா.. அதெல்லாம் வேணாம்மா..’ என்ற வார்த்தைகள் காற்றாக மட்டும் வெளிவந்தன. அந்தச் செவிலி அருகிலிருந்த திரையை இழுத்து மறைவுக்காக வைத்துவிட்டு, மெல்ல அந்த பெண்ணை மோகனாவிடமிருந்து விடுவித்துக் கொண்டுபோய் சுவரோரத்தில் அமர்த்தினாள். அந்தப் பெண்ணின் உடனடி உடைவு மோகனாவிற்கு வியப்பாக இருந்தது.

‘அக்க்கா’

செவிலி அவளது தலையணைக்கடியில் இன்னொன்றைச் சொருகி கொஞ்சம் தலையை உயர்த்தி வைத்தாள்.

‘சொல்லு..’ மோகனா அவள் கண்களை நேரடியாக பார்த்து சொன்னாள்.

நீண்ட மெளனத்திற்குப் பின்னர், ஒரு வழியாக மடை திறந்தது. துண்டுத் துண்டாக காவ்யா சொல்லியவற்றை புரிந்துகொள்ள முயன்றாள். காற்றும், கரகரப்பும், விசும்பலும், திணறலுமாய் சொற்கள். மோகனா நடுவில் ஒருமுறை காவ்யாவின் அம்மாவைத் திரும்பிப் பார்த்தபோது, அந்தப் பெண் தன் ஒட்டுமொத்த உடலையும் குலுக்கி அழுது கொண்டிருந்தாள்.

காவ்யா இயன்றளவிற்கு சொல்லி முடித்ததும், மோகனா அந்தப் பெண்ணிடம் போய் கேட்டாள், ‘உங்களுக்கு இதெல்லாம் முன்னமே தெரியுமா?’ – நிமிர்ந்தே பாராமல் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தாள். மோகனா மீண்டும் அதையே கேட்டாள். ‘போறவ அப்டியே போவட்டும்மா.. இந்த அசிங்கத்தெல்லாம் கொண்டாந்து சந்தியில அடிக்கவேணாம்மா.. டிஸ்ச்சாஜு பண்ணி கொடுத்துருங்க.. நா கொண்டு போயிட்றம்மா..’ மீண்டும் அந்தப் பெண் மோகனாவின் காலில் விழப்போனாள்.

மோகனா திகைப்பு அடங்காமல் நின்றிருந்தாள். ராஜூவிடம் பேசிவிட வேண்டும்போல இருந்தது. அழைத்து முழுவதையும் சொன்னாள்.

‘வெளில நின்னானுங்கன்னு சொன்னேன்ல.. ரெண்டு பசங்க.. எதோ எனக்கு உறுத்தலாவே இருந்துச்சு..’

‘இத வெச்சு நாம இப்ப என்ன பண்றது ராஜூ?’

‘கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியதுதான்.. வேற என்ன பண்றது?’

‘நேராவா? சிஸ்டர் துரை சார்கிட்ட இன்ஃபாம் பண்ண சொன்னாங்க..’

‘அந்தாளு மொக்க போடுவான் மோனா..’

‘நாம எப்டி நேரா கம்ப்ளைண்ட் பண்றது?’

‘சரி.. அவங்கிட்டயே சொல்லித்தொல..’

மோகனாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

‘என்ன யோசிக்கிற?’

‘நீயும் கெளம்பி வாயேன்..’

7

அழைத்த பத்து நிமிடத்திற்குள் துரை வார்டுக்கு வந்துவிட்டார். அத்தனை விரைவாக அவர் வந்ததே மோகனாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. அதற்கு முன்னரே ராஜூவும் வந்திருந்தான்.

‘ஸ்டாஃப் இல்லையாம்மா வார்ட்ல?’

‘இருந்தாங்க சார்..’

‘ஹீரோ சார் இங்கதான் இருக்காரா?’

ராஜூ கண்ணைக் கூட சிமிட்டாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

செவிலி வந்ததும், ’டிடி ஒன்னு சிஸ்டர்..’ என்றவர், ‘மெஜிஸ்ட்ரேட் காலோவர்.. சீக்கிரம் சொல்லிருங்க.. லேட் ஈவ்னிங் ஆயிருச்சுன்னா அந்த பொம்பள வேற வந்து நம்மகிட்ட மொறச்சுக்கும்’, தலையில் அடித்துக்கொண்டார்.

‘எத்தன பசங்களாம்?’ மோகனாவிடம் கேட்டார்.

‘அஞ்சு பேர்ன்னு சொன்னா சார்.’

‘காலேஜ்மேட்ஸா எல்லாரும்..?’

‘ஆமா சார்..’

‘எல்லாமே சாதாரணமாயிடுச்சு இப்ப.. இதுங்களுக்கும் புத்தி இருக்குறதில்ல..’ பெருமூச்சு விட்டார். ‘சரி.. மெஜிஸ்ட்ரேட் வர்றப்ப நீங்களும் இருங்க..’ என்று சொல்லிவிட்டு தன் பணியறைக்கு கிளம்பினார். தொலைபேசியிலும் சரி, நேரிலும் சரி துரை பெரிதாக அதிர்ச்சியடையாதது மோகனாவிற்கு ஏமாற்றமாக இருந்தது. அதுவரையிலிருந்த அதிர்வு மட்டுப்பட்டுவிட்டது. ராஜூ சொன்னபடி நேரடியாக போலீஸில் சொல்லியிருக்கலாமோ என்ற குழப்பம் மேலெழ அவனைத் திரும்பியே பார்க்கவில்லை.

‘டிடின்னா என்ன சிஸ்டர்?’

‘டையிங் டிக்ளரேஷன்.. ஸ்டேட்மெண்ட்ட அவளோட வார்த்தைல ஜட்ஜு வந்து அப்படியே எழுதிப்பாங்க’ – இந்தப் பதில் அவளுக்கு ஏதோ கொஞ்சம் திருப்தியாக இருந்தது.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ராஜூவும் மோகனாவும் வார்டிலேயே காத்திருந்தார்கள். சுவரோரத்தில் இருந்த அந்தப் பெண்மணி அழுகையை நிறுத்தவேயில்லை. மோகனா ராஜூவிடம் அவளைக் காட்டினாள். ‘கண்டுக்காத.. எமோஷனல் இடியட்.. அழுது அழுது எல்லாத்தையும் மூடி வெச்சுக்குங்க..’ அதிலிருக்கும் அபத்தம் அவளுக்கும் தெரிந்தாலும் அந்த அம்மாவைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது.

மோகனா காவ்யாவின் புகைப்படத்தையெடுத்து மீண்டுமொரு முறை பார்த்தாள். அந்தப் புன்னகை இப்போது ஏதோ நன்றி சொல்வதைப் போல இருந்தது. அப்படியெல்லாம் இல்லை என்ற மறுப்பும் அதே புன்னகையில் இருந்தது. ராஜூ எழுந்து வெளியே போய், சற்று நேரங்கழித்து ஒரு பிஸ்லெரியுடன் வந்தான்.

‘வெளில ஜீப் வந்திருக்கு.. வந்துட்டாங்கன்னு நெனைக்குறேன்..’

‘சிஸ்டர்.. சார்க்கு கால் பண்ணிடுங்க’

குமாஸ்தா போல ஓர் ஆசாமி முதலில் அவசரமாக வார்டுக்குள் வந்தார். அங்கிருந்த நாற்காலியொன்றை எடுத்து நடுவில் போட்டு வேகவேகமாக தன் கைக்குட்டையால் துடைத்தார். பின்னால் இரண்டு போலீசாரும் ஒரு நடுவயதுப் பெண்மணியும் வந்தார்கள். சாதாரண காட்டன் புடவையில் இருந்த அந்தப் பெண்ணை, கழுத்திலிருக்கும் பட்டியை வைத்துதான் மேஜிஸ்ட்ரேட் என்று மோகனா அடையாளம் கண்டுகொண்டாள். அவர் அந்த நாற்காலியில் அமர்ந்த கணத்தில் ஒட்டுமொத்த வார்டுமே ஓர் உடனடி ஒழுங்கிற்கு வந்துவிட்டதைப் போலிருந்தது. தேவையற்ற உறவினர்கள் வெளியேற்றப்பட்டார்கள். காவ்யாவின் அம்மாவும் எழுந்து நின்றுகொண்டாள்.

அருகிலிருந்த போலீஸ், ‘ட்யூட்டி சர்ஜன் யாரு?’ என்றதும், செவிலி முன்னே வந்து, ‘கால் பண்ணிட்டேன் சார்.. வந்துட்டு இருக்காரு’, என்றாள்.

‘ஏ.ஆர் காப்பி?’ மேஜிஸ்ட்ரேட் முதன்முறையாக பேசினார். கையிலிருந்த கோப்பிலிருந்து ஒரு தாளை எடுத்து காவல்காரர் நீட்டினார். அதைப் பார்த்தபடி, ஒரு தாளில் பச்சை நிற மையால் வேக வேகமாக ஏதோ எழுதினார்.

‘ராஜூ.. காவ்யா மாத்தி சொல்லிட்டான்னா? இல்ல பயத்துல சொல்லாமலே விட்டுட்டான்னா?’ என்று மோகனா கிசுகிசுத்தாள்

‘அப்டிலாம் ஆவாது.. நீ கூட நின்னு கேளு.. நிச்சயமா சொல்லிடுவா.’

‘அவ ஃபர்ஸ்டு சொல்லும்போதே ரெக்காட் பண்ணிருக்கலாம்.. ப்ச்..’

‘அதெல்லாம் தேவயில்ல.. பேசி சொல்ல வெச்சுரலாம்.. அந்த அம்மாவ மட்டும் கிட்டயே விடக்கூடாது.. நிச்சயம் சொல்ல உடாது..’

‘ம்ம்’

துரை வார்டுக்குள் வந்ததும், அந்தச் செவிலி ஒரு நாற்காலியைக் கொடுத்தார். மறுத்துவிட்டு மேஜிஸ்ட்ரேட்டின் அருகில் பவ்யமாக நின்று அவர் எழுதுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து அந்தப் பெண்மணி நிமிர்ந்து அவரைப் பார்த்து, ‘கேட்றலாமா?’ என்றார். இருவரும் தயாரானார்கள்.

துரை மோகனாவிடம் திரும்பி உடன் வருமாறு கையைக் காட்டினார். ராஜூ, ‘தைரியமா போ’ என்றான்.

‘இவங்க இங்க ஹவுஸ் சர்ஜன்.. இவங்ககிட்ட தான் அந்த விக்டிம் பொண்ணு விஷயத்த சொல்லிருக்கு..’ என்று துரை மோகனாவை முன்னே அழைத்தார். அவர் சொன்னதை அந்தப் பெண்மணி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் நகர ஆரம்பித்தபோது, காவ்யாவின் அம்மா மேசையை நோக்கி நடந்து வந்து, ‘ஒன்னும் அசைவே இல்ல.. கொஞ்சம் பாருங்களேன்..’ என்றாள். துரையும் ராஜூவும் மோகனாவும் செவிலியும் கூட்டமாக ஓடிப்போய் அந்தத் திரைக்கு பின்னால் பார்த்தார்கள். சில வினாடிகள் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அந்த போலீஸ் மெல்ல நடந்துவந்து துரையிடம், ‘முடிஞ்சிருச்சா?’ என்றார்.

மோகனாவிற்கு இயலாமையின் விரக்தியிலும் கோபத்திலும் அழுகை வெடித்தது. ஒரு கணம் நிறுத்தி நெற்றியைச் சுருக்கினாள். சட்டென யோசித்தவளாகத் திரும்பி காவ்யாவின் அம்மாவைப் பார்த்தாள். அந்தப் பெண்மணி அவளது கண்களைத் தவிர்த்துவிட்டு வேறெங்கேயோ பார்க்க ஆரம்பித்தாள்.

1 comment

Comments are closed.