சிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன்

by ராஜேந்திரன்
1 comment

ரொட்டியின் கடைசி விள்ளலால் மிச்சமிருந்த மாவு க்ரேவியை துடைத்து வழித்துத் தட்டைக் காலி செய்த டாம் கிங், நிதானமாக ஆழ்ந்த யோசனையுடன் அதனை சுவைத்துத் தின்றார். அவர் மேஜையிலிருந்து எழுந்த போது பசியாறவில்லை என்னும் உணர்வு அவரை வாட்டியது. எனினும் அவர் மட்டுமே உணவருந்தியிருந்தார். மற்றொரு அறையில் இரண்டு பிள்ளைகள் படுத்திருந்தனர். இரவு உணவை சாப்பிடவில்லை என்பதை மறந்து விடும்படி விரைவாக அவர்கள் உறங்க வைக்கப்பட்டிருந்தனர். அவரது மனைவி ஒன்றையும் தொடவில்லை. அமைதியாகக் கணவரைப் பரிவுடன் பார்த்தவாறிருந்தார். மெலிந்து தளர்ந்த உழைக்கும் வர்க்கப் பெண்மணி அவர். ஆயினும் அவரது முகத்தில் முன்னர் எழிலாக இருந்ததன் அறிகுறிகளுக்குப் பஞ்சமில்லை. க்ரேவிக்கான மாவை அறைக்கு அடுத்திருந்தவரிடம் கடன் வாங்கியிருந்தார். மீதியிருந்த இறுதி இரண்டரைப் பென்னி ரொட்டி வாங்குவதில் செலவாயிற்று.

ஜன்னலருகே இருந்த நலிந்து போன ஒரு பழைய நாற்காலியில் டாம் கிங் அமர்ந்தார். அது அவரது எடையைத் தாங்க இயலாமல் ஓசையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. பின் அனிச்சையாகப் பைப்பை வாயில் வைத்து கோட்டின் பக்கவாட்டுப் பைக்குள் கையை நுழைத்தார். அதில் புகையிலை இல்லாததன் காரணமாக தனது கவனக்குறைவை எண்ணி முகஞ் சுளித்தவாறு பைப்பை தூர வைத்தார். அவரது எடை அவருக்கே பாரமாயிருப்பது போலவும் கிட்டத்தட்ட ஒரு பருமனான மனிதரைப் போலவும் அவரது அங்க அசைவுகள் நிதானமாக இயங்கின.

டாம் கிங்கின் முகம் தான் சந்தேகத்திற்கிடமின்றி அச்சு அசலாக அவரை வெளிப்படுத்தியது. அது பரிசுப் பணத்துக்காகக் குத்துச் சண்டையிடும் வீரரின் முகம். குத்துச்சண்டை வளையத்தில் பல ஆண்டுகளைக் கழித்தவரின் முகம். அதன் காரணமாக சண்டையிடும் மிருகத்துக்குரிய எல்லா அடையாளங்களும் அழுத்தமாய் அவரது முகத்தில் பதிந்திருந்தன. முகத்தின் ஒவ்வொரு உறுப்பும் கண் பார்வையிலிருந்து தப்ப முடியாத வகையில் குறிப்பிடத்தக்க தோற்றம் கொண்டிருந்தன. ஒழுங்கு வடிவற்ற உதடுகள் வாயைக் கொடூரமாகப் பெரிதாக நீண்ட வெட்டுக் காயம் போல் எடுத்துக் காட்டின. தாடைகள் கனமாகவும், வன்மையாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தன. இரண்டு முறை உடைபட்டிருந்த அவரது மூக்கு, எண்ணற்ற குத்துக்களால் பலவகையில் வார்க்கப்பட்டிருந்தது. இமைகள் கனத்திருந்தன. புருவங்கள் ஆழ்ந்து அடர்ந்திருந்தன. எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத கண்கள் நிதானமாக இயங்கின. அவரைப் பார்க்கும் போது மிருகமாகவே தோற்றமளித்தார். அத்தகைய தோற்றத்தைப் பெருமளவு வெளிப்படுத்தியது அவரது கண்களே. அவை சண்டையிடும் மிருகத்துக்குரிய கண்கள். சிங்கத்தின் கண்களைப் போல கிறங்கிய, மந்தமான கண்கள். காலிஃப்ளவர் போன்ற பெரிய காதுகள் அவரது முக அலங்காரத்தை நிறைவு செய்தன. அவை நிரந்தரமாக வீங்கி, உள்ளபடியே இருந்த அளவை விட இரண்டு மடங்காக விரிந்திருந்தன. நெற்றி தலைமுடியின் பக்கம் சாய்ந்திருந்தது. முடி வெட்டப்பட்டு வெகுவாகக் குறைந்திருக்கும் போது, அவரது தலை பயங்கர வில்லன் தலையைப் போன்று தோற்றமளித்தது. முகம் சுத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தாடியோ முளை விட்டது போல் காணப்பட்டது. அது அவரது முகத்திற்கு கருநீல வண்ணத்தை வழங்கியது.

ஆக மொத்தத்தில் தனிமையான இடத்திலோ, அல்லது இருட்டான சந்திலோ அவரைக் காண நேரிட்டால், அச்சத்தை விளைவிக்கக் கூடியது அவரது முகம். இருப்பினும் டாம் கிங் குற்றவாளி அல்ல. எந்தவொரு குற்றமும் செய்தவரல்ல. அவரது வாழ்வில் சண்டைகள் சகஜம் என்றாலும் கூட, குத்துச்சண்டை வளையத்தைத் தவிர வேறெங்கும் யாருக்கும் எவ்விதக் கெடுதலையும் செய்திராதவர். எவரிடமும் வலிந்து சென்று சண்டையிட்டதாக யாரும் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதில்லை. அவர் தொழில் முறை குத்துச்சண்டை வீரர். அவரது கொடூரமான ஆற்றலை வளையத்தில் சண்டையிடுவதற்கு மட்டுமே ஒதுக்கியிருந்தார். வளையத்தைத் தவிர வேறெங்கும் நிதானமாகவும், தன்மையுடனுமே நடந்து கொள்வார். அவரது இளமைக் காலத்தில் பணம் மிகுதியாகப் புழங்கிய போது, பலருக்கும் மனமுவந்து தாராளமாக செலவழித்திருந்தார். எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர். எனவே குறைந்த எண்ணிக்கையிலேயே அவருக்கு எதிரிகள் இருந்தனர். அவரது தொழில் சண்டையிடுவது. அதன் காரணமாக வளையத்தில் மட்டுமே தனது வலிமையினால் எதிராளிக்கு ஊறு விளைவித்தார். அவர்களது உறுப்புகளை முடமாக்கினார், அழித்தொழித்தார். அது வெறும் தொழில் ரீதியிலான செயல்பாடு. உண்மையில் அவருக்கு யாரிடமும் பகைமையில்லை. ஒருவரையொருவர் அடித்து வீழ்த்தும் காட்சியைக் கண்டு ரசிக்க பணம் செலுத்தி பார்வையாளர்கள் கூடுகின்றனர். போட்டியில் ஜெயிப்பவரே பரிசின் பெரும் பங்கைப் பெறுகிறார். அதற்கேற்பவே டாம் கிங்கின் செயல்பாடு அமைந்திருந்தது.

இருபது வருடங்களுக்கு முன்னர் டாம் கிங் ஊலுமூலு கூகரிடம் மோதினார். அதற்கு நான்கு மாதங்கள் முன்னதாக நியூ கேஸிலில் நடந்த சண்டையில் கூகரின் தாடை உடைந்திருந்தது கிங்கிற்குத் தெரியும். ஆக, அவரது தாடைக் காயம் நான்கு மாதங்கள் மட்டுமே ஆறியிருந்தது. எனவே, அந்தத் தாடையைக் குறி வைத்தே கிங் ஆடினார். ஓன்பதாவது சுற்றில் மீண்டும் அதே தாடையை உடைத்தார். கூகருக்கு எதிரான எந்தத் தீய எண்ணமும் கிங்கிடம் கிடையாது. ஆனால் போட்டியில் வென்று பரிசின் பெரும் பங்கைக் கைப்பற்ற வேண்டுமானால் கூகரை வீழ்த்துவதற்கு அதுவே சிறந்த வழி. கூகரும் கிங்கிற்கு எதிரான தீய எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. அவ்வளவே. அது தெரிந்தே இருவரும் அதில் பங்கேற்றனர்.

டாம் கிங் அதிகமாகப் பேசுவபரல்ல. அவர் ஜன்னலருகே தனது கையை வெறித்துப் பார்த்தபடி, மகிழ்ச்சியற்ற மனநிலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கைகளில் நரம்புகள் பெரிதாக வீங்கிப் புடைத்திருந்தன. முட்டிகள் நொறுங்கி, உருக்குலைந்து சிதைந்திருந்தன. எதற்காக அவை பயன்படுத்தப்பட்டதோ அதற்கு அத்தாட்சியாய் அவை விளங்கின. ஒரு மனிதரது நாடியின் ஆயுள்காலம்தான், அவரது உயிரின் ஆயுள் காலத்தையும் நிர்ணயிக்கும் என்பதை அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆனால் கையில் பெரிதாகப் புடைத்திருந்த நரம்புகளின் பயன் என்னவென்பது அவருக்குத் தெரியும். அவரது இதயத்திற்குள் பெருமளவு ரத்தத்தை உயர் அழுத்தத்தோடு அவை செலுத்தியிருந்தன. தற்போது அவை அவ்வாறு இயங்கவில்லை. அவற்றின் செயல்திறனை அளவுக்கதிமாகப் பயன்படுத்தி விட்டார். அவை தொய்ந்து போனதும் உறுதியுடன் நீடித்து குத்துக்களைத் தாங்கியும் திரும்பத் தாக்கவும் கூடிய அவரது ஆற்றலும் குறைந்தது. தற்போது அவர் விரைந்து சோர்வுக்குள்ளானார். வேக வேகமாக இருபது சுற்றுகளை இனி அவரால் முடித்துக் காட்ட இயலாது.

வளையத்தில் ஏறியதும் கடின முயற்சியோடும், முழு ஆற்றலோடும் சண்டை, சண்டை, சண்டை. ஓவ்வொரு சுற்றிலும் ஒலிக்கும் மணியோசைலிருந்து மற்றொரு மணியோசைக்குமிடையே, மூர்க்கமான முயற்சிக்கு மேலும் மூர்க்கமான புது முயற்சி. கயிற்றோரம் ஒதுக்கப்பட்டு அடிகள் வாங்கியிருக்கிறார். எதிராளியை கயிற்றோரம் தள்ளி அடிகளும் கொடுத்திருக்கிறார். இறுதி இருபதாவது சுற்றில் மேலும் மூர்க்கமாகத் துரிதமாகச் செயல்பட்டு, பார்வையாளர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டுக் கரகோஷம் செய்ய, இவர் வன்மையோடு வேகமாகப் பாய்ந்து அடித்து, தன்மேல் விழும் அடிகளைக் குனிந்து தவிர்த்து, மழைத் தூறல் போல விடாது தொடர்ந்து குத்துக்களைப் பொழிந்து, அதே போல குத்துக்களையும் பெற்றிருக்கிறார். அச்சமயங்களில் எல்லாம் விசுவாசத்தோடு அவரது இதயம் இயங்கியது. அதற்கெனவே படைக்கப்பட்டிருந்த நரம்புகளின் மூலமாக இதயம் ரத்தத்தை இறைத்துப் பாய்ச்சியது. அப்போது நரம்புகள் வீங்கி விடும். பின் மீண்டும் சுருங்கும். ஆனாலும் ஒவ்வொரு முறையும் விரைந்து முழுமையாகச் சுருங்காது. சுருங்குவது கண்களுக்கு உடனே புலனாகாத வகையில், முதல் பார்வையில் சிறிதளவு பெரிதாகவே தோன்றும். பின்னரே வழக்கமான நிலையைப் பெறும்.

அவர் தன் நரம்புகளையும் உருக்குலைந்த முட்டிகளையும் ஆழ்ந்து பார்த்தார். ஒரு நொடி தனது இளமைக் காலம் நினைவுக்கு வந்தது. அப்போது வாலிப பருவத்திற்குரிய நேர்த்தியோடு கைகள் இருந்தன. ஒரு சமயம் பென்னி ஜோன்ஸிடம் மோத நேர்ந்தது. அவருக்கு வெல்ஷ் திகில் என்ற மற்றொரு பட்டப் பெயரும் இருந்தது. சண்டையின் போது, அவரது தலையில் ஓங்கி அடித்த அடியில் முதல் முறையாக முட்டி ஒடிந்தது.

கிங்கிற்கு பசியுணர்வு மீண்டும் தலை தூக்கியது.

“ஓ! கொஞ்சம் இறைச்சி கிடைக்காதா?” என்று சத்தமாகவே முணுமுணுத்தவாறு தனது பெரிய முஷ்டிகளை இறுக்கி மூடி மெல்லிய குரலில் ஒரு சாபத்தைத் துப்பினார்.

“நான் பர்க், சாவ்லி இருவரிடமும் கேட்டுப் பார்த்தேன்” என்றார் அவரது மனைவி சிறிது வருத்தம் தோய்ந்த குரலில்.

“அவர்கள் தர மறுத்தார்களா?” கேட்டார் அவர்.

“அரை பென்னிக்குக் கூட… மேலும் பர்க் சொன்னது…” மனைவி தயங்கினார்.

“ம்… சொல்லு… வேறென்ன சொன்னார்?”

“நீங்கள் இதுவரை பெற்ற வெற்றி மதிப்பெண்கள் அதிகமாக இருந்தும் கூட, இன்றிரவு சான்டல் உங்களை என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று யோசித்துப் பார்த்தாராம்…”

டாம் கிங் உறுமினார். ஆனால் பதிலேதும் கூறவில்லை. இளமையில் தாம் வளர்த்திருந்த புல் டெரியர் நாயின் நினைவுகளில் மூழ்கினார். அதற்கு முடிவேயின்றி இறைச்சித் துண்டுகளைத் தின்னக் கொடுத்தது ஞாபகம் வந்தது. அச்சமயம் பர்க் அவருக்கு ஆயிரம் இறைச்சித் துண்டுகளைக் கூட கடனாகத் தந்திருப்பார். ஆனால் காலம் மாறி விட்டது. டாம் கிங்கிற்கு வயதாகி விட்டது. இரண்டாம் தர க்ளப்புகளில் சண்டையிடும் வயதானவர்கள் வியாபாரிகளிடமிருந்து எந்த ஒரு விலை பொருளையும் கடனாகத் தொடர்ந்து பெற முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

காலையில் எழுந்த போதே சிறிதளவு இறைச்சிக்காக அவர் ஏங்கியிருந்தார். அந்த ஏக்கம் இன்னமும் தணியவில்லை. அன்றைய சண்டைக்காக அவர் முறையாகப் பயிற்சியும் செய்யவில்லை. உணவும் சத்தானதாகவும், போதுமானதாகவும் இல்லை. அந்த வருடம் ஆஸ்ட்ரேலியாவில் வறட்சி நிலை. வுழக்கமாகக் கிடைக்கக் கூடிய வேலையும் கிடைக்கவில்லை. வழக்கத்திற்கு மாறான வேலையும் கிடைப்பது அரிதாயிருந்தது. கிடைக்கும் போது சொற்ப நாட்கள் கூலி வேலை செய்தார். கால்கள் தொய்ந்து விடாமல் இருக்க காலை வேளையில் சுற்றுப்புறத்தைச் சுற்றிலும் ஓடினார். துணையின்றித் தனியே பயிற்சி செய்வது கடினமாயிருந்தது. மேலும் மனைவி, இரண்டு குழந்தைகள் வேறு. அவர்களுக்கும் உணவளிக்க வேண்டும்.

சான்டலுடன் போட்டியிட நேர்ந்ததும் வியாபாரிகளிடமிருந்த கடன் சலுகை சிறிதளவே உயர்ந்திருந்தது. கெயிட்டி க்ளப்பின் செயலாளர் அவரிடம் மூன்று பவுண்ட்கள் முன்பணமாகத் தந்திருந்தார். அது மொத்தப் பரிசுப் பணத்தில் தோற்பவருக்குரிய பங்கு. அதற்கு மேல் தர மறுத்தார். அவ்வப்போது பழைய நண்பர்களிடம் சில ஷில்லிங்ஸ் கடன் வாங்கியிருந்தார். அந்த வருட வறட்சியினால் அவர்களும் சிரமத்திற்குள்ளாகி இருந்தனர். இல்லையெனில் அவர்கள் அதிகமாகவே கடன் தந்திருக்கக் கூடும்.

இல்லை… உண்மையை மூடி மறைப்பதில் எந்தப் பயனுமில்லை. அவரது பயிற்சி திருப்திகரமானதாக இல்லை. அவருக்கு மேலும் சத்தான ஆகாரம் அதிகமாகக் கிடைத்திருக்க வேண்டும். கவலையற்ற மனநிலையும் இருந்திருக்க வேண்டும். தவிரவும் ஒருவருக்கு நாற்பது வயதான பின், இருபது வயது இளைஞனுக்குரிய உடல், மன நிலையைப் பெறுவது மிகவும் கடினமான காரியம்.

“மணி என்ன லிஸ்ஸி?” என்று கேட்டார்.

மனைவி எழுந்து அறைக்கு வெளியே சென்று கேட்டறிந்து வந்தார்.

“எட்டு மணியாக இன்னும் கால் மணி நேரம் உள்ளது” என்றார்.

“இன்னும் சில நிமிடங்களில் முதல் போட்டி தொடங்கி விடும்” என்றார் அவர். “முதல் போட்டி சோதனை முயற்சி. அதற்கடுத்து டீலர் வெல்ஸூக்கும், க்ரிட்லிக்கும் இடையே நான்கு சுற்றுகள் கண்காட்சிப் போட்டி. பின் ஸ்டார்லைட்டுக்கும், ஒரு மாலுமிக்குமிடையே பத்து சுற்றுகள் நடக்கும். இன்னும் ஒரு மணி நேரம் வரை நான் வளையத்திற்குள் போக வேண்டியதில்லை.”

அடுத்த பத்து நிமிடங்கள் அமைதிக்குப் பின்னர் அவர் எழுந்து நின்றார்.

“உண்மை என்ன தெரியுமா லிஸ்ஸி? நான் முறையாகப் பயிற்சி செய்யவில்லை.”

அவர் தனது தொப்பியை எட்டி எடுத்து கதவுப் பக்கமாக நகர்ந்தார். வெளியேறும் முன் மனைவிக்கு முத்தம் வழங்கவில்லை. எப்போது வெளியேறினாலும் அவர் அவ்வாறு செய்ததில்லை. ஆனால் அன்றிரவு மனைவி துணிந்து முன்வந்து முத்தமளித்தார். தனது கைகளினால் அரவணைத்து, அவரது முகத்தைத் தாழ்த்தி வளையச் செய்தார். அவரது மாபெரும் பருமனான உருவத்தின் முன் மனைவி சிறிய தோற்றம் கொண்டவராயிருந்தார்.

“வாழ்த்துகள் டாம்!” என்றார் மனைவி. “நீங்கள் அவரை வீழ்த்த வேண்டும்.”

“ஆம். நான் அவரை வீழ்த்த வேண்டும்” என்று திரும்பச் சொன்னார். “அவ்வளவுதான். நான் அதைத்தான் செய்ய வேண்டும்.”

மனைவி மேலும் நெருக்கமாக அணைத்த போது சிரித்து, உளப்பூர்வமாக மகிழ முயன்றார். மனைவியின் தோளுக்கு மேலாகக் காலியாக இருந்த அறையை நோட்டமிட்டார். பரந்த உலகில் அந்த அறை மட்டுமே அவருக்குரியதாக இருந்தது. அதற்கும் வாடகை பாக்கியிருந்தது. தவிர மனைவி, பிள்ளைகள். அங்கிருந்து இரவில் வெளியேறி தனது துணையும், குட்டிகளும் உண்பதற்கு மாமிசம் கொண்டு வர வேண்டும். நவீன மனிதன் தொழிற்சாலைக்குச் சென்று இயந்திரத்தை இயக்கி பொருளீட்டுவதைப் போன்று அல்ல. மாறாக பழங்காலத்தைச் சார்ந்த புராதன முறையில், வீரம் செறிந்த விலங்கின வழிவகையில், சண்டையிட்டுப் போராடி, வென்று வயிறார வேண்டும்.

“நான் வீழ்த்தியாக வேண்டும்” என்று மீண்டும் சொன்னார். இம்முறை அவரது குரலில் அவநம்பிக்கை தொனித்தது. “வென்றால் முப்பது பவுண்டுகள். எல்லாக் கடனையும் அடைத்த பிறகும் பெருமளவு மீதியிருக்கும். தோற்றால் எதுவுமே கிடைக்காது. ரயிலில் வீடு திரும்புவதற்குக் கூட ஒரு பென்னியும் கிடைக்காது. தோற்பவருக்குக் கிடைக்கக் கூடிய மொத்த பணத்தையும் செயலாளர் ஏற்கெனவே தந்து விட்டார். போய் வருகிறேன், முதிய பெண்மணியே! வென்றால் நேரே வீட்டிற்குத்தான் திரும்புவேன்” என்று கூறி அறையை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறும் போது, “நான் காத்திருப்பேன்!” என்று அறையிலிருந்தபடியே கூவி பதிலுரைத்தார் மனைவி.

கெயிட்டியைச் சென்றடைய முழுதாக இரண்டு மைல்கள் இருந்தன. அவர் நடந்தே சென்றார். அப்போது முன்னர் கை நிறைய பணமிருந்த காலங்கள் அவருக்கு நினைவுக்கு வந்தன. நியூ சவுத் வேல்ஸின் அதிக எடைக் குத்துச் சண்டை வீரர்களில் அவரே முதன்மை நிலையில் இருந்தார். அவர் வாடகைக் காரில் தான் சண்டைக்குச் செல்வார். பெரும்பாலும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் ஆதரவாளர்களில் யாரேனும் ஒருவர் வாடகைத் தொகையைச் செலுத்தி விடுவர். டாமி பர்னஸூம், அந்த அமெரிக்க நீக்ரோவுமான ஜாக் ஜான்சனும் மோட்டார் காரில்தான் இப்போதும் செல்கின்றனர். ஆனால் டாம் கிங் நடந்து செல்கிறார்! மேலும் சண்டையிடும் போட்டிக்கு முன் இரண்டு மைல்கள் நடந்து செல்வது உசிதமான காரியம் அல்லவென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவர் வயதானவர். ஒரு போதும் உலகம் வயதானவர்களை மதித்து நடப்பதில்லை. தற்போது அவர் கூலி வேலை செய்வதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கில்லாதவர். அவரது உடைந்த மூக்கும், வீங்கிய காதுகளும் அந்த வேலை கிடைப்பதற்கும் தடையாயிருந்தன. வேறு ஏதேனும் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக் கொண்டிருக்கலாம் என மனம் விரும்புவதை அவர் உணர்ந்தார். அது நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக் கூடும். ஆனால் அவ்வாறான ஆலோசனையை யாரும் அவருக்குத் தெரிவிக்கவில்லை. அப்படியே தெரிவித்திருந்தாலும் அவர் அதற்கு செவி சாய்த்திருக்க மாட்டார் என்பதை அவரது ஆழ்மனமே அவருக்கு உணர்த்தியது.

பொன்னான அந்தக் காலகட்டம்! புகழும் பெருமையும் பெற்றுத் தந்த விறுவிறுப்பான சண்டைகள். இடையில் ஒய்வுக் காலங்களில் சோம்பலாய்த் திரிதல், ஆர்வத்துடன் புகழ்ந்து பாராட்டும் ரசிகர்கள், முதுகைத் தட்டிக் கொடுத்தவர்கள், கை குலுக்கியவர்கள், ஐந்து நிமிடம் அவருடன் உரையாடக் கூடும் என்பதற்காக மனமுவந்து மதுபானம் வழங்கத் தயாராயிருந்த நாகரிகக் கனவான்கள், எழுந்து நின்று உற்சாகமாகக் கரகோஷமிடும் பார்வையாளர்கள் நிறைந்த கூடங்கள், சூறாவளி போன்ற இறுதிக்கட்டம், நடுவரின் “கிங் வென்றார்” என்னும் குரல், அடுத்த நாள் விளையாட்டுச் செய்திகளில் காணக்கூடிய அவரது பெயர், வெற்றிப் பெருமிதம், பெரும் பணம் – எல்லாமே அப்போது வெகு சுலபமாய் கிடைத்தன.

தற்போது நிதானமாக ஆழ்ந்த எண்ணங்களில் திளைத்திருக்கும் வேளையில், ஒரு விஷயத்தை அவர் உணர்ந்தார். அவரை விடவும் வயதானவர்களையே அவர் வீழ்த்தியிருந்தார். அவர் வாலிபர், எழுச்சியோடு முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். வயதான எதிராளிகளோ மூழ்கிக் கொண்டிருந்தனர். எனவே வெற்றிகள் சுலபமாயிருந்ததில் ஆச்சரியமில்லை. நீண்ட காலமாக சண்டையிட்டிருந்ததால், அவர்களது நரம்புகள் வீங்கியும், முட்டிகள் சீர்குலைந்தும், எலும்புகள் சோர்ந்தும் இருந்தன.

வயதான ஸ்டவ்ஷர் பில்லை வீழ்த்தியது அவர் நினைவுக்கு வந்தது. ரஷ் கட்டர்ஸ் பே என்னுமிடத்தில் பதினெட்டாவது சுற்றில் அவர் வீழ்ந்தார். பின் ஒரு குழந்தையைப் போல மாற்றுடை அணியும் அறையில் அழுது கொண்டிருந்தார். ஒரு வேளை அவர் வீட்டு வாடகை செலுத்த வேண்டிய தொகை பாக்கி இருந்திருக்கலாம். ஒருக்கால் வீட்டில் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்திருக்கலாம். அநேகமாக சண்டை நடந்த அதே இரவில் சிறிதளவு இறைச்சிக்காகப் பசியோடு ஏங்கியிருக்கவும் கூடும். ஆயினும் பில் போட்டியில் பங்கேற்றார். அதன் காரணமாக நம்ப முடியாத தண்டனையைப் பெற்றார்.

அதே பாதையைத் தானும் கடந்து வந்திருப்பதால் இப்போது தெளிவாகப் புரிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அன்றிரவு ஸ்டவ்ஷர் பில், அவருக்கு அத்தியாவசியமான பெருந்தொகைக்காகவே சண்டையிட்டிருக்க வேண்டும். ஆனால் டாம் கிங் புகழுக்காகவும், எளிதாகக் கிடைக்கப் போகிற பணத்துக்காகவும் சண்டையிட்டார். எனவே ஸ்டவ்ஷர் பில் மாற்றுடை அறையில் அழுததில் வியப்பேதுமில்லை.

சரி, முதலாவதாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஒருவர் எத்தனை சண்டைகள் செய்யக் கூடும் என்கிற வரையறை உள்ளது. அது இந்த ஆட்டத்தின் உறுதியான விதி. நூறு சண்டைகள் செய்வதற்கான ஆற்றல் ஒருவருக்கு இருக்கலாம். வேறொருவருக்கு அது இருபதாக இருக்கலாம். அவர் எவ்வாறாக உருவெடுத்துள்ளாரோ, எவ்வாறான தரத்தில் அவரது உடற்கட்டமைப்பு உள்ளதோ, அதற்கேற்ப எண்ணிக்கை நிர்ணயமாகும். அந்த எண்ணிக்கை முடிந்ததும் அவர் ஓய்ந்து விட வேண்டியதுதான்.

ஆம்! உண்மைதான்! சண்டையிடும் பலரைக் காட்டிலும் கிங் பங்கேற்கக் கூடிய சண்டைகளின் எண்ணிக்கை அதிகம்தான். ஆயினும் அவரது பங்கிற்கும் மேலதிகமாகவே தளர்வூட்டும் கடினமான சண்டைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அத்தகைய சண்டைகள் அவரது இதயத்தையும், நுரையீரலையும் வெடிக்கக் கூடிய நிலைக்குக் கொண்டு விட்டவை. அவரது நாளங்களின் விரிந்து சுருங்கும் தன்மையை நலிவடையச் செய்தவை. இளமையின் பளபளப்பான நெகிழும் தன்மையுள்ள தசைகளை கெட்டியான திரட்சியாக மாற்றி அமைத்தவை. உடலுரத்தையும், நரம்பு மண்டலத்தையும் தளர்வுறச் செய்தவை. வரம்பு மிறிய அவரது கடும் முயற்சியினால் மூளையும், எலும்புகளும் தற்போது சோர்ந்து விட்டன. உடல் வலிகளை நீடித்துத் தாங்கக் கூடிய சக்தியும் அளவுக்கதிகமாக உபயோகிக்கப்பட்டுக் களைத்துப் போய் விட்டது. சண்டையிடுபவர்களில் அவரது வயதிற்கு நிகரான அனைவரையும் விட அவர் மேலானவராக நீடித்திருந்தார். அவரோடு இணைந்து குத்துச்சண்டைகளில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூட இப்போது சண்டையிடுவதில்லை. வயதான வீரர்களில் அவரே இறுதியானவர். அவர்களில் பலரின் சாகசம் ஓய்ந்ததை அவரே கண்கூடாகக் கண்டிருக்கிறார். சிலரை அவரே ஓய்ந்து விடும்படியாகவும் செய்திருக்கிறார்.

வயது முதிர்ந்த பல ஜாம்பவான்களை அவருக்கு எதிராக சண்டையிட வைத்து சோதித்தனர். அவர்களை எல்லாம் ஒவ்வொருவராக வீழ்த்தியிருக்கிறார். ஸ்டவ்ஷர் பில் மாற்றுடை அறையில் அழுதது போல், வேறு பல முதிய ஜாம்பவான்களும் அழுத போது, இவர் சிரித்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் வயது முதிர்ந்தவர். இளைஞர்களை அவருக்கு எதிராக மோத விட்டு சோதிக்கின்றனர்.

இப்போது சான்டல் என்னும் ஒரு ஆளோடு சண்டையிட வைக்கின்றனர். அவர் நியூஜிலாந்தில் சாதனை படைத்து, ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்திருக்கிறார். இங்கு அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. எனவே திறமையான வீரர்களோடு மோத விட்டு அதிகப் பரிசுப் பணமும் வழங்குவர். எனவே அவர் கடுமையாக சண்டையிடுவார் என எதிர்பார்க்கின்றனர். வென்றால் பணம், புகழ், தொழில் முன்னேற்றம் எல்லாமே அவருக்குரியதாகும். வளமான எதிர்காலம் என்கிற நீண்ட பாதையின் நடுவே முட்டுக்கட்டையாய் காவல் இருப்பவர் நரைத்த, வயதான டாம் கிங். அவருக்கு முப்பது பவுண்ட்களைத் தவிர வெல்வதற்கு வேறு எதுவுமில்லை. அதுவும் வியாபாரிகளுக்குத் தர வேண்டிய கடனையும், வீட்டுச் சொந்தக்காரருக்கு வாடகை பாக்கியையும் கொடுப்பதற்காகத்தான்.

இவ்வாறான எண்ணங்களில் டாம் கிங் மூழ்கியிருக்கும் போது, இளமையைக் குறித்த காட்சி புலனாகியது. எளிதில் வளைகிற வெல்ல முடியாத தசைகள், தோலின் வழவழப்பு, ஒரு போதும் தளராத இதயம், நுரையீரல் ஆகிய எல்லாம் இளமைக்கே உரியவை. முயற்சியின் வரையறைகளை சிரித்தவாறே கடக்கும் தன்மை, எழுச்சிமிக்க வெற்றிக் களிப்பு ஆகியனவும் மேன்மையான இளமையைச் சார்ந்தவை.

ஆம்! இளமை வீழ்ச்சிக்கான காலக்கட்டம். அது வயதானவர்களை அழிக்கும். இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல. அவ்வாறாக செய்யும் அதே சமயம் தன்னையே அது அழித்துக் கொள்ளும். அது பிறரை வீழ்த்தும் வேளையில் தனது நாளங்களை வீங்கச் செய்து, முட்டிகளை உடைத்துக் கொண்டு, இளமையின் வலிமையை அழித்துக் கொள்கிறது. இளமை எப்போதும் இளமையாக விரைந்து கழிந்து விடுகிறது. வயதுதான் முதிர்ந்து கொண்டே வருகிறது.

கேஸில்ரீக் தெருவில் இடது புறமாகத் திரும்பினார். மூன்று கட்டிடங்கள் கடந்ததும் கெயிட்டியை அடைந்தார். கதவருகே கூட்டமாய் நின்றிருந்த வாலிபப் போக்கிரிகள், மரியாதையுடன் அவருக்கு வழி விட்டனர். அவர்களில் ஒருவன், “இவர்தான், இவர்தான் டாம் கிங்” என்று மற்றொருவனிடம் சொன்னதைக் கேட்டார்.

உள்ளே தனது மாற்றுடை அறைக்குச் செல்கையில் செயலாளர் எதிர்ப்பட்டார். கூர்ந்த கண்களும், திறமைசாலிக்குரிய முக அமைப்பும் கொண்ட அவர் கிங்கிடம் கை குலுக்கினார்.

“எப்படி இருக்கிறீர்கள் டாம்?” என்று கேட்டார்.

“எஃகு போல் உறுதியாக!” என்று கிங் பதிலளித்தார். தான் சொல்வது பொய் என்று அவருக்கே தெரியும். ஒரு பவுண்ட் கைவசம் இருந்திருந்தால், நன்கு சமைக்கப்பட்ட சிறிதளவு இறைச்சிக்கு அக்கணம் அங்கேயே செலவிட்டிருப்பார்.

மாற்றுடை அறையிலிருந்து கிங் வெளியே வந்தார். அவரது உதவியாளர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அறையின் மையத்தில் அமைந்திருந்த குத்துச்சண்டை வளையத்தை நோக்கி, இருக்கை வரிசைகளின் நடுவே நடந்து செல்கையில், காத்திருந்த பார்வையாளர்களிடமிருந்து தைத்தட்டலும், ஆரவாரமும் வெடித்தெழுந்தன. இடது பக்கமும், வலது பக்கமும் திரும்பி வாழ்த்துகளைப் பணிந்து ஏற்றார். சில முகங்கள் பரிச்சயமில்லாத புதுமுகங்களாயிருந்தன. பார்வையாளர்களில் பலர் வயது குறைந்த வாலிபர்கள். குத்துச்சண்டை வளையத்தில் முதன் முதலாக அவர் வெற்றி வாகை சூடிய போது அவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள்.

சற்று உயர்ந்திருந்த வளையத்தின் மேல் லேசாக எம்பி ஏறி, குனிந்து கயிற்றின் வழியாக நுழைந்து அவரது மூலைக்குச் சென்றார். அங்கிருந்த மடங்கக் கூடிய முக்காலியில் அமர்ந்தார். நடுவராகிய ஜாக் பால் வந்து அவரிடம் கை குலுக்கினார். அவர் பத்து வருடங்களுக்கும் மேலாகக் குத்துச்சண்டையில் போட்டியாளராகப் பங்கேற்காத, ஓய்ந்து விட்ட பழைய வீரர்களில் ஒருவர். அவர் நடுவராக அமைந்ததை எண்ணி கிங் மகிழ்ந்தார். இருவருமே வயதானவர்கள். சுற்றே விதிகளுக்குப் புறம்பாக சான்டலிடம் மோதினாலும், பால் அதனைக் கண்டுக் கொள்ளாதிருப்பார் என நம்பலாம்.

ஆர்வத்துடன் வந்திருந்த அதிக எடைப்பிரிவின் இளம் போட்டியாளர்கள், ஒருவர் பின் ஒருவராக வளையத்தில் ஏறினர். அவர்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார் நடுவர். மேலும் அவர்களது பந்தயப் பணத்தையும் சேர்த்து அறிவித்தார்.

“இளம் ப்ரான்டோ” பால் அறிவித்தார். “வடக்கு சிட்னியைச் சார்ந்தவர். வெல்பவருக்கு ஐம்பது பவுண்ட்கள் கிடைக்கக் கூடிய பந்தயப் போட்டியில் பங்கேற்கிறார்.”

பார்வையாளர்கள் கை தட்டினர். சான்டல் கயிற்றின் நடுவே தாவி வந்து, அவரது மூலையில் அமர்ந்த போது மீண்டும் கை தட்டினர். டாம் கிங் ஆவலுடன் அவர் மீது பார்வையை செலுத்தினார். காரணம் இருவரும் சில நிமிடங்களில் கொடூரமாகச் சண்டையிடப் போகின்றனர். தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி, எழுந்திருக்க முடியாதபடி தளர்ந்து விழும் வரையில் ஒருவர் மற்றொருவரை அடித்து வீழ்த்தப் போகின்றனர். ஆனால் சான்டலின் உடலமைப்பை கொஞ்சம்தான் அவரால் பார்க்க முடிந்தது. ஏனெனில் அவரும் கிங்கைப் போலவே சண்டைக்கான பிரத்யேக ஆடைக்கு மேலாகக் கால்சட்டையும், ஸ்வெட்டரும் அணிந்திருந்தார். அவரது முகம் மிகுந்த கவர்ச்சிகரமாய் இருந்தது. சுருள் சுருளான மஞ்சள் தலைமுடியுடன் காணப்பட்டார். அவரது கனத்த சதைப்பிடிப்புள்ள கழுத்து, நேர்த்தியான உடலமைப்பை ஜாடையாய் தெரிவித்தது.

இளம் ப்ரான்டோ ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் சென்றார். அனைத்து முக்கியஸ்தர்களிடமும் கை குலுக்கிய பின் வளையத்தை விட்டுக் கீழிறங்கினார். மேலும் பந்தயங்கள் அறிவிக்கப்பட்டன. இளைஞர்கள் வளையத்தின் மீதேறி கயிற்றின் ஊடாக வந்து கொண்டேயிருந்தனர். அறிமுகமற்ற அந்த இளைஞர்கள் பெரும் வேட்கையுடன் காணப்பட்டனர். திறமையாலும், பலத்தாலும் எதிராளியுடன் சரிசமமாக போட்டியிட்டு வெல்ல முடியும் என்று அவர்கள் மனிதகுலத்திற்கே அறைகூவல் விடுப்பது போல் தோற்றமளித்தனர்.

ஒரு சில வருடங்கள் முன்பாக, தம்மை எவருமே வெல்ல முடியாத காலத்தில் டாம் கிங்கிற்கு இத்தகைய முன்னேற்பாடுகள் வேடிக்கையாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்திருக்கும். ஆனால் இப்போது அவர் வசீகரிக்கப்பட்டு அமர்ந்திருந்தார். கண்கூடாகப் புலனாகிற இளமைத் தோற்றத்தை அவரது கண்களிலிருந்து அகற்றவே இயலாது சிந்தனை வசமானார் டாம் கிங். எப்போதுமே இந்தக் குத்துச்சண்டை ஆட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றனர். கயிற்றின் ஊடாகப் பாய்ந்து வந்து அவர்கள் சவால் விடுகின்றனர். அவர்களுடன் மோதும் வயதானவர்கள் எப்போதும் வீழ்ச்சி அடைந்து கொண்டேயிருக்கின்றனர். வயது முதிர்ந்தவர்களின் உடல் மீதேறி இளைஞர்கள் வெற்றி பெறுகின்றனர். மேலும் மேலும் இளைஞர்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். தடுக்க இயலாதபடி இளமை, தீராத வேட்கையுடன் வயதானவர்களை வீழ்த்துகிறது. பின் அவர்களுக்கும் வயது முதிர்ந்த பின்னர், அதே வீழ்ச்சிக்குரிய சரிவுப் பாதையில் பயணிக்கின்றனர். அவர்களின் பின்னேயும் முடிவேயற்று புத்துயிர்ப்போடு இளமை அழுத்தமாக நெருக்கியபடியே முன்னேறுகிறது. புதிய குழந்தைகள் வளர்ந்துத் தாபமுற்று முதிர்ந்தவர்களை புறந்தள்ளுகிறது. அவர்களின் பின்னே மேலும் புதிய குழந்தைகள். இவ்வாறாகக் காலத்தின் இறுதி வரை ஓயாமல் நிகழ்கிறது. இளமை தான் விரும்புவதை அடைந்தே தீரும். அது எந்நாளும் அழியாது.

சிந்தனையை விடுத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தப் பகுதியில் பார்வையை செலுத்தினார் டாம் கிங். ஸ்போர்ட்ஸ்மென் நிருபர் மார்கன், ரெஃப்ரியின் நிருபர் கார்பெட் ஆகிய இருவரையும் கண்டு வணக்கம் தெரிவிக்கும் விதமாகத் தலையசைத்தார். பின் தன் கைகளை நீட்டினார். அவரது உதவியாளர்களான சிட் சுலிவனும், சார்லி பேட்ஸ_ம் கையுறைகளை அணிவித்து இறுக்கமாகக் கட்டினர். அதை சான்டலின் உதவியாளர்களில் ஒருவர் கவனமாகப் பார்வையிட்டார். முதலாவதாக அவரது பார்வை கிங்கின் முட்டிகள் மீது கட்டப்பட்டிருந்த நாடாக்களை பரிசீலித்தது. கிங்கின் உதவியாளர்களில் ஒருவர் சான்டலின் பக்கத்தில் நின்றவாறு அதே போல் கவனித்துக் கொண்டிருந்தார்.

சாண்டலின் கால்சட்டை களையப்பட்டது. அவரது ஸ்வெட்டரும் தலையின் மேற்புறமாக உருவப்பட்டது. டாம் கிங் அவரைப் பார்த்த போது, இளமையின் அவதாரமே எதிரே நிற்பதைப் போல் உணர்ந்தார். அகன்ற மார்புகள், உறுதியான உடலமைப்பு, வழவழப்பான வெள்ளைத் தோலுக்குள் உயிர்த்துடிப்புடன் உருண்டு, திரண்டு இயங்கும் தசைகள், அவரது முழு உடலிலும் புத்துயிர் தவழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டார். இளமையின் வலிமை குன்றாத புத்துணர்வோடு சான்டல் காணப்பட்டார். நீண்ட காலமாக சண்டையிடுபவரின் புத்துணர்ச்சி, வலிக்கும் தோலின் நுட்பமான துளைகளின் வழியாகக் கசிந்து வெளியேறி விடுகிறது. புதுமுகமாக அறிமுகமாகும் இளமை, தனது தீர்வையைச் செலுத்தி விடைபெறும் வேளையில் அதே இளமைக்குரிய உணர்வுகள் நீடிப்பதில்லை.

போட்டியாளர்கள் இருவரும் முன்னோக்கி நகர்ந்தனர். மணியோசை ஒலித்ததும் உதவியாளர்கள் முக்காலிகளை மடக்கி வெளியேறும் ஓசை கேட்டது. இருவரும் கை குலுக்கிக் கொண்ட அடுத்த கணமே சண்டையிடும் மனோபாவம் அவர்களைத் தொற்றிக் கொண்டது. விசையால் இயக்கப்படும் எஃகு சுருள்வில் போல சான்டல் முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, மீண்டும் மீண்டும் பாய்ந்துப் பாய்ந்து தாக்கினார். சரமாரியாகக் குத்துக்களைப் பொழிந்தார். எதிர்த் தாக்குதலை தவிர்க்கும் வண்ணம் ஒயிலான நடனம் போல் ஆடியபடியே பின் நகர்ந்து, அச்சுறுத்தும் வகையில் மீண்டும் முன்னகர்ந்து கிங்கைத் தாக்கினார். அவர் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டார். அது காண்போர் மனதை மயக்கும் கண்காட்சி. அரங்கம் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தது.

ஆனால் கிங் அசரவில்லை. அவர் கணக்கற்ற சண்டைகளில் பலப்பல இளைஞர்களோடு மோதியிருக்கிறார். அவர் பெற்ற குத்துக்களின் தன்மை எத்தகையவை என்பது அவருக்குத் தெரியும். துரிதமான திறமையான குத்துக்களே அவை. ஆனாலும் அவற்றால் ஆபத்தில்லை. ஆக, ஆரம்பம் முதலே சான்டல் வேக வேகமாக செயலாற்றப் போகிறார் என்பது தெளிவாய் தெரிந்தது. அது எதிர்பார்க்கக் கூடியதே. கட்டுப்பாடற்ற உணர்ச்சி வேகத்தில் மூர்க்கமாகத் தாக்கித் திறனையும், நேர்த்தியையும் விரைந்துத் தீர்த்துக் கொள்வதும், அளவற்ற மேன்மையான பலத்தைப் பயன்படுத்தி, போரார்வத்துடன் எதிராளியைத் துரிதமாக அடக்கி நசுக்க முயல்வதும் இளமைக்கே உரிய வழிமுறையாகும்.

சான்டல் முன்னும் பின்னும், அங்கேயும் இங்கேயும் எங்கேயும் லேசான கால்களுடன் ஆர்வமிக்க இதயத்துடன், வலிமையான வெள்ளைத் தசைகளோடு, உயிரோட்டமுள்ள ஓர் அற்புதம் போல் செயல்பட்டார். பின்னிப் பிணைந்து கட்டமைக்கப்பட்ட அவரது தசைகள் கடுமையானத் தாக்குதலைக் கவர்ச்சிகரமாக நிகழ்த்தின. பறக்கும் பூப்பந்து போல நழுவித் தாவி தாக்குதல். அனைத்தும் டாம் கிங்கை மையப்படுத்தி அவரை வீழ்த்தி அழிக்கும் வண்ணமாக இருந்தன. ஏனெனில் வளமான அவரது எதிர்காலத்திற்குத் தடையாக இருப்பவர் அவரே.

டாம் கிங் பொறுமையாகத் தாங்கினார். அவர் தனது தொழிலில் திறமையானவர். தான் கடந்து வந்த, இழந்து விட்ட இளமையைக் குறித்தும் நன்கறிந்தவர். எதிராளி சற்று அயர்ந்து ஓயும் வரை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணி அவர் தனக்குள்ளாக சிரித்துக் கொண்டார். வேண்டுமென்றே வலிமையான குத்து ஒன்றை முகத்தில் படாதவாறு தவிர்த்து, தனது தலையில் விழும்படியாக சற்றே குனிந்தார். அது வஞ்சகமான காரியம் என்றாலும், குத்துச்சண்டை விதிகளின்படி மேன்மையானது, நியாயமானது. ஒருவர் தனது முட்டிகளை அவரேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை எதிராளியின் தலை மீது தாக்குவதற்கு பயன்படுத்தினால், அந்த அபாயத்திற்கு அவரே பொறுப்பு. கிங்கினால் மேலும் சற்று குனிந்து, அந்தக் குத்து எந்தத் தீங்கும் இழைக்காத வகையில் கடந்து போக விட்டிருக்கக் கூடும். ஆனால் அவர் போட்டிருந்த பழைய சண்டைகள் அவருக்கு நினைவு வந்தன. வெல்ஷ் திகில் என வழங்கப்பட்டவரின் தலையில் அடித்து முதன் முதலாகத் தன் முட்டியை உடைத்துக் கொண்டது ஞாபகம் வந்தது. அதே ஆட்டத்தையே தற்போது ஆடினார். சற்றே குனிந்து வேண்டுமென்றே குத்தைத் தலையில் வாங்கிக் கொண்டதால், சான்டலின் ஒரு முட்டி பலியாகியிருக்கும். இப்போது அது குறித்து சான்டல் கவலைப்பட மாட்டார். அவர் அதை மறந்து தொடர்ந்து சண்டை முழுக்கவும் பலமாகவே குத்துக்களைப் பொழிவார். ஆனால் பின்னொரு நாள் நீண்ட கால சண்டைகளுக்குப் பிறகு, அந்த முட்டியைக் குறித்து வருந்துவார். டாம் கிங் தலையில் அடித்து அதனை உடைத்துக் கொண்டது அவரது நினைவுக்கு வரும்.

முதல் சுற்றை முழுக்க முழுக்க சான்டல் ஆக்கிரமித்தார். அவரது சுறுசுறுப்பான சூறாவளிப் பாய்ச்சலைக் கண்டு அரங்கமே கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தது. பனிப் பொழிவைப் போல தொடர்ந்த குத்துக்களால் கிங்கை முழுமையாக ஆட்கொண்டார். பதிலுக்கு கிங் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு முறை கூட சான்டலை தனது குத்தால் எதிர்த்துத் தாக்கவில்லை. குத்துக்கள் அவர் மீது விழாமல் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனமாய் இருந்தார். குத்துக்களைத் தவிர்த்தும், தடுத்தும், அடிக்க முடியாதவாறு சான்டலை அணைத்துப் பிடித்துக் கொள்வதிலுமே திருப்தி அடைந்தார். எப்போதேனும் வலிமையான குத்துப்பட்டால், பலமாக வலித்தது போல் தலையைக் குலுக்கிப் பாசாங்கு செய்தார். எதிர்த்துப் பாயாமல், தாவாமல், உணர்ச்சி வசப்படாமல், சக்தியை கொஞ்சமும் வீணாக்காமல் நிதானமாக இயங்கினார். விவேகத்துடன் செயல்படும் முதிர்ந்த வயது, திரும்பத் தாக்குவதற்கு முன்பாக சான்டலின் இளமை பொங்கி நுரைத்துத் தீர்ந்து விட வேண்டும்.

கிங்கின் மொத்த இயக்கமும் நிதானமாகவும், ஒழுங்கு முறையோடும் அமைந்திருந்தன. அவரது கனத்த இமைகளும், மெல்ல அசையும் கண்களும் அவர் அரைத் தூக்கத்திலோ அல்லது குழம்பிய மனநிலையிலோ இருப்பதைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் அவரது கண்கள் அனைத்தையும் கவனித்தன. ஏறத்தாழ இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் சண்டையிட்டிருப்பதால், அனைத்தையும் கவனிக்கக் கூடிய பயிற்சியை அவரது கண்கள் பெற்றிருந்தன. அடி விழுகிற நிலையில் கூட, அவரது கண்கள் அசையவில்லை. இமைகள் மூடிக் கொள்ளவில்லை. அமைதியாகக் கவனித்தவாறு இருவருக்குமிடையே இருந்த தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.

சுற்றின் ஒரு நிமிட ஓய்வின் போது தனது மூலையில் அமர்ந்திருந்தார். பின்னே சாய்ந்தவாறு கால்களை நீட்டி, கைகளைக் கயிற்றின் மேல் பரப்பியிருந்தார். உதவியாளர்கள் துண்டினால் விசிறிய போது வந்த காற்றை அவரது மார்பும், வயிறும் வெளிப்படையாக விம்மி விம்மி உள் வாங்கின. கண்களை மூடியவாறு அரங்கில் எழும்பிய குரல்களைக் கேட்டார். “ஏன் எதிர்த்து சண்டையிடவில்லை டாம்? அவரிடம் பயமா டாம்?” என்று பலர் கத்தினர்.

“தசை கட்டுண்டு விட்டது” எனறு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் சொல்வதைக் கேட்டார். “அவரால் இனி ஈடு கொடுத்து வேகமாக சண்டையிட முடியாது. சான்டல் சார்பாக ஒன்றுக்கு இரண்டு மடங்கு பவுண்ட்கள் பந்தயம்.”

மணியோசை ஒலித்ததும் தங்களது மூலையிலிருந்து இருவரும் முன் நகர்ந்தனர். சான்டல் ஆர்வத்துடன் மீண்டும் சண்டையை ஆரம்பிக்க முக்கால் தூரத்தைக் கடந்து முன்னேறி வந்தார். ஆனால் கிங் குறைந்த தூரம் முன்னகர்ந்ததிலேயே திருப்தியுற்றார். அவர் முறையாகப் பயிற்சி செய்யவில்லை. உணவும் போதுமானதில்லை. எனவே ஒவ்வொரு காலடியையும் கணக்கிட்டு எடுத்து வைத்தார். தவிரவும் ஏற்கெனவே அரங்கத்தை வந்தடைய இரண்டு மைல்கள் நடந்து வந்திருந்தார்.

முதல் சுற்றுப் போலவே இரண்டாவது சுற்றிலும் நிகழ்ந்தது. சான்டல் சூறாவளியாகத் தாக்கினார். பார்வையாளர்கள் கிங் ஏன் எதிர்த்துத் தாக்கவில்லை எனக் கோபத்துடன் கூவினர். கிங் போக்கு காட்டினார். வலிமையற்ற, பயனற்ற சில குத்துக்களால் மெதுவாகத் தாக்கினார். விழும் குத்துக்களை தடுத்து நிறுத்தி, எதிராளியை நெருங்கிக் கட்டிப் பிடிப்பதிலேயே குறியாய் இருந்தார். சான்டல் விறுவிறுப்பாக சண்டையிடுவதை விரும்பினார். கிங் தொழில் அனுபவத்தால் அதற்கு இடம் கொடுக்க மறுத்தார். சரமாரியான அடிகளால் உருக்குலைந்தது போல் தோன்றினாலும், ஒரு வகை வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டாலும் அந்நிலையிலும் புன்னகைத்தவாறே இருந்தார்.

எதிராளியின் ஆற்றலைக் குறித்து கிங்கிற்குப் பொறாமை தோன்றினாலும், சக்தியைப் பேணிப் பாதுகாப்பதிலேயே அவர் குறியாயிருந்தார். அது வயதின் அனுபவத்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. சான்டல் இளமையின் மறு உருவம். அந்த இளமையின் முழு பலத்தையும் வாரி வாரி வழங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டிருந்தார். ஆயினும் சண்டைக்குரிய மேன்மையான திறனும், விவேகமும் கிங்கின் வசமிருந்தது. அது நீண்ட காலமாக சண்டையிட்டு வலிகளைத் தாங்கிய அனுபவத்தில் விளைந்தது. உணர்ச்சி வசப்படாத மனநிலையில், நிதானமாக இயங்கி, அமைதியான அசைவற்ற கண்களால் சான்டலின் இளமை நுரைத்துப் பொங்கி ஓயும் கணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். பார்வையாளர்களில் பெரும்பாலோர் கிங் மீதான நம்பிக்கையை இழந்து, சான்டலை உயர்தரமாக எண்ணினர். சான்டலின் மீதான பந்தய விலையை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் குரலெழுப்பினர். ஆனால் பார்வையாளர்களில் சில புத்திசாலிகளும் இருந்தனர். அவர்கள் நீண்ட காலமாகக் கிங்கை அறிந்தவர்கள். அதிகப் பணம் எளிதாகக் கிடைக்கும் என்றாலும் அவர்கள் பந்தயத்தில் ஈடுபடவில்லை.

மூன்றாவது சுற்றும் அதே விதமாகவே ஆரம்பமானது. சான்டலே முதன்மையாயிருந்து தண்டனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அரை நிமிடம் கடந்தது. சான்டல் முகத்தை முழுமையாக மூடாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஒரேயொரு கணம் சிறிதே இடைவெளி தந்தார். அதே கணத்தில் கிங்கின் கண்கள் ஒளிர்ந்து வலது கரம் பரவசத்துடன் இயங்கியது. இதுவே அவரது முதலாவது வன்மையான அடி. கொக்கி போல கையை வளைத்து, அடி பலமாக விழுவதற்குத் தோதாக உடலை சாய்த்து, முழு பலத்தையும் பயன்படுத்தித் தாக்கினார். தூங்குவது போலிருந்த சிங்கம் மின்னல் வேகத்தில் தனது கூர் நகங்களுடன் கூடிய பாதத்தை நீட்டியது போலிருந்தது அக்காட்சி. தாடையில் தாக்குண்ட அந்த அடியினால் எருது சாய்வது போல வீழ்ந்தார் சான்டல். கிங்கின் தசைகள் கட்டுண்டுப் போகவில்லை. இரும்பு சுத்தியால் அடிப்பது போல அவராலும் அடிக்க இயலும் என்பதை நிரூபித்தார்.

சான்டல் ஆடிப் போனார். அவர் உருண்டு உடனே எழ முயன்றார். எண்ணிக்கையை ஏற்கும்படி அவரது உதவியாளர்கள் கத்தியதைக் கேட்டுக் கட்டுப்பட்டார். ஒரு காலில் முட்டிப் போடடு எழுவதற்கு தயாராய் நின்றபடியே காத்திருந்தார். நடுவர் அவர் அருகே நின்று காதருகே சத்தமாக விநாடிகளை அறிவித்தார். ஒன்பது எண்ணிக்கை முடிந்ததும் சண்டையிடத் தயார் நிலையில் எழுந்து நின்றார். எதிரே நின்ற டாம் கிங், தனது அடி தாடையின் உட்புறமாக ஒரு அங்குலம் தள்ளி விழுந்திருந்தாலும் திரும்ப எழாதவாறு வீழ்த்தியிருக்காலமே என்றும் சுலபமாக முப்பது பவுண்ட்களைப் பெற்று மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தந்திருக்கலாமே என்கிற வருத்தம் தோய்ந்த எண்ணம் மனதில் தோன்றுவதை உணர்ந்தார்.

மூன்று நிமிடங்கள் முடியும் வரையில் அந்தச் சுற்று தொடர்ந்தது. சான்டலுக்கு முதன் முறையாக எதிராளியின் மீது மரியாதை தோன்றியது. கிங் வழக்கம் போல கிறங்கிய கண்களுடன் நிதானமாக இயங்கினார். சுற்று முடியும் தருவாயில், உதவியாளர்கள் கயிற்றினுள் நுழையத் தயாராய் இருப்பதைக் கண்ட கிங் எச்சரிக்கை அடைந்து, சண்டையைத் தனது மூலைக்கருகே முடியும்படியாகச் செய்தார். மணியோசை ஒலித்ததும், தயாராயிருந்த முக்காலியில் உடனே அமர்ந்தார். சான்டல் எதிர்ப்புறமிருந்த அவரது மூலை வரையிலும் நடந்து சென்றார். இது ஒரு சின்ன விஷயம்தான். ஆயினும் சிறிது சிறிதாகச் சேரும் சின்ன விஷயங்களே மொத்தத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கொஞ்ச தூரம்தான் என்றாலும், அத்தனை காலடிகள் வைத்து நடக்க சான்டல் நிர்பந்திக்கப்பட்டார். அதற்குத் தேவைப்படும் சக்தியும் செலவாகி, நடந்து கழியும் சிறிது நேரத்தில் அத்தியாவசியமான ஒரு நிமிட ஓய்வும் அதற்கேற்பக் குறையும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் கிங் தனது மூலையிலிருந்து சோம்பலாக எழுந்து முன்வந்தார். அதன் காரணமாக எதிராளி அதிகத் தூரம் முன்னேறி வரும்படியாகச் செய்தார். ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சண்டையைத் தனது மூலைக்கருகில் முடியும்படியாகக் கிங் திட்டமிட்டுச் செயாலற்றினார். எனவே அவர் உடனுக்குடன் அமர்ந்து ஓய்வெடுக்க முடிந்தது.

மேலும் இரண்டு சுற்றுகள் முடிவடைந்தன. அவற்றில் கிங் மிகச் சிக்கனமாகவும், சாண்டல் வீணாகவும் சக்தியைப் பயன்படுத்தியிருந்தனர். விறுவிறுப்பான சண்டைக்கு சான்டல் வலுக்கட்டாயமாக முயன்றது கிங்கிற்கு அசௌகரியமாயிருந்தது. ஏனெனில் சான்டல் சரமாரியாகப் பொழிந்த குத்துக்களில் மிதமான சதவிகிதம் சரியான இலக்கை அடைந்தன. இருப்பினும் கிங் ஆவேசமடையாமல் விடாப்பிடியாக நிதானமாகவே இயங்கினார். சில இள ரத்தங்கள் முன்னேறித் தாக்கும்படி இரைந்தாலும் அவர் அதற்கு செவி மடுக்கவில்லை. மீண்டும் ஆறாவது சுற்றில் சான்டல் சற்றுக் கவனக் குறைவாயிருந்தார். உடனே கிங்கின் அச்சுறுத்தும் வலது கரம் சான்டலின் தாடையை மின்னலெனத் தாக்கியது. சான்டல் திரும்பவும் ஒன்பது விநாடி எண்ணிக்கையை ஏற்கும்படியானது.

ஏழாவது சுற்றில் மேன்மையான சான்டலின் ஆற்றல் தணிந்து ஓய்ந்தது. அவரது அனுபவத்தில் அதுவரை அவர் போட்டியிட்ட சண்டைகளில் தற்போது நிகழும் சண்டையே மிகக் கடுமையானது என்பதை அவர் உணர்ந்தார். டாம் கிங் வயதானவர்தான். ஆனாலும் சான்டல் சண்டையிட்ட எல்லா வயதானவர்களைக் காட்டிலும் கிங் மேலானவராயிருந்தார். கிங் ஒருபோதும் உணர்ச்சி வசப்படவில்லை. மேலும் தற்காத்துக் கொள்வதில் குறிப்பிடத்தக்கத் திறனுடன் விளங்கினார். அவரது குத்துக்கள் குண்டாந்தடியால் அடிப்பது போல் விழுந்தன. அவரது இரு கைகளுமே அந்த ஆற்றலைப் பெற்றிருந்தன. ஆயினும் டாம் கிங் அடிக்கடி குத்துக்கள் விடத் துணியவில்லை. அவரது சீர்குலைந்த முட்டிகளை அவர் மறக்கவேயில்லை. சண்டையின் இறுதிவரை முட்டிகள் நல்ல நிலையில் நீடிக்க வேண்டுமானால், ஒவ்வொரு குத்துமே முக்கியமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

தனது மூலையில் அமர்ந்தவாறு எதிராளியைப் பார்வையிடுகையில் கிங்கிற்கு ஓர் எண்ணம் தோன்றியது. தனது விவேகமும், அவரது இளமையும் சான்டலிடம் ஒருங்கே அமைந்திருந்தால் உலகளவில் முதன்மையான வீரராக அவர் இருக்கக் கூடும். ஆனால் அதுதான் சங்கடம். சான்டல் ஒருபோதும் உலகளவில் முதன்மை நிலையை அடைய முடியாது. அவருக்குப் போதிய விவேகமில்லை. அதை அடைய அவருக்கான ஒரே வழி அவரது இளமையின் ஆற்றல்தான். பின்னாளில் விவேகம் கிட்டுகிற நிலையில் இளமை கழிந்திருக்கும்.

கிங் தமக்குத் தெரிந்த எல்லா அனுகூலங்களையும் கையாண்டார். நெருங்கிக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அவர் ஒருபோதும் நழுவ விடவில்லை. அவ்வாறாக அணைத்து இறுக்கிப் பிடிக்கும் நிலையில், எப்போதும் தனது தோளை அவரது விலா எலும்புகளில் முட்டி அழுத்தி நெருக்கினார். குத்துச்சண்டையின் சித்தாந்தப்படி கைகளினால் அடிப்பதற்கு இணையானது தோளினால் முட்டுவதும். இருவகையிலும் ஒரேவித சேதமே நிகழும். ஆனாலும் தோளினால் முட்டுவதில் குறைந்த சக்தியே செலவாகும். மேலும் இறுக்கிப் பிடிக்கும் போது தனது முழு எடையையும் எதிராளி தாங்கும்படியாக அழுத்தி விடாப்பிடியாக நிற்பார். இந்நிலை நடுவரின் தலையீட்டை நிர்பந்திக்கும். அவர் இருவரையும் பிரிக்க முயல்கையில், சான்டல் அவருக்கு உதவியாக இயங்கினார். ஓய்வெடுக்கும் உத்தியை இன்னும் சான்டல் கற்றுக் கொள்ளவில்லை. அவரது பறக்கும் கரங்களையும், வளைந்து நெளியும் தசைகளையும் அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

கிங் வேகமாகத் தோளினால் இடித்து, விலா எலும்புகளைக் கட்டி அணைத்து இறுக்கும் போது, சான்டலின் இடது கைக்குக் கீழே அவரது தலை ஓய்ந்திருந்தது. சான்டல் வேறு வழியின்றி தனது வாது கரத்தை முதுகுப் பக்கமாகக் கொண்டு சென்று, நீண்டிருந்த கிங் முகத்தில் குத்தினார். அது புத்திசாலித்தனமான அடிதான். பார்வையாளர்களும் வியந்து மெச்சினர். ஆனால் அதனால் எந்த ஆபத்துமில்லை. எனவே அந்தளவு சக்திதான் விரயம். ஆனால் சான்டல் தளர்வறியாதவர். ஆற்றலின் வரையறைகளையும் அறியாதவர். கிங் உள்ளுர முறுவலித்தபடியே அந்தக் குத்துக்களையெல்லாம் பிடிவாதமாகப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டார்.

சான்டல் கிங்கின் உடல் மீது வலது கரத்தால் மூர்க்கமாகக் குத்தினார். காண்போருக்குக் கிங் பலமான தண்டனைப் பெற்றது போல் தோன்றியது. ஆனால் அந்த அடி வன்மையாகத் தன் மீது விழுவதற்கு முன்பாக, இடது கையுறையினால் சான்டலின் மேற்கையின் உள் தசையைத் திறமையாகத் தட்டி விடுவார். ஒவ்வொரு முறையும் அந்த அடி மூர்க்கமாக விழுந்தது உண்மைதான். ஆனால் கிங்கின் தொடுகை, அடியின் வலிமையை வெகுவாகக் குறைத்து விடும். பழைய வீரர்கள் அந்தத் திறமையான தீண்டலை பாராட்டி ரசித்தனர்.

ஒன்பதாவது சுற்றில், ஒரு நிமிடத்திற்குள்ளாக மூன்று முறைகள் கிங் உடலை வளைத்து, கரத்தையும் கொக்கிப் போல வளைத்து சான்டலின் தாடையில் ஓங்கிக் குத்தினார். மூன்று முறையும் சான்டலின் பெரும் உடல் தரை விரிப்போடு சமமானது. ஓவ்வொரு முறையும் அனுமதிக்கப்பட்ட ஒன்பது விநாடிகள் ஓய்வெடுத்த பிறகே அவர் எழுந்து நின்றார். அதிர்ந்து ஆடிப் போனாலும் இன்னமும் பலமாகவே இருந்தார். அவரது வேகம் வெகுவாகக் குறைந்து விட்டது. வீணாக சக்தியை இழப்பதைத் தவிர்த்தார். உறுதியாகவும், கடுமையாகவும் சண்டையிட்டார். அவரது பெரும் சொத்தான இளமையின் ஆற்றலைப் பிரயோகித்தார். கிங்கின் பெரும் சொத்து அவரது நீண்ட கால அனுபவம். அவரது உடலுரமும், தாங்கும் திறனும் குறைந்தாலும், தனது தந்திரமான உத்திகளினால் அவற்றை நிறைவு செய்தார். நீண்ட கால அனுபவத்தை விவேகமாகப் பயன்படுத்தியும், சக்தியை மிகுந்த கவனத்துடன் பேணியும் சண்டையிட்டார். தேவைக்கு அதிகமாக சிறு அசைவையும் செய்யாமல் இருக்கும் வித்தையைக் கற்றது மட்டுமல்லாமல், எதிராளியை எவ்வாறு கவர்ந்து அவரது ஆற்றலை வீணாகும்படி செய்யலாம் என்பதையும் கற்றிருந்தார். சான்டலை பின்னுக்குத் தாவும்படியும், அடியைத் தவிர்க்கும்படியும், வீணாகக் கையை ஓங்கி எதிர்க்குமாறும் தனது கையினாலும், கால் அசைவினாலும் போக்கு காட்டி ஏய்த்தார். கிங் சண்டையிடும் போதும் ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் சான்டலை ஓய்வெடுக்க அவர் அனுமதிக்கவேயில்லை. அது வயதிற்கேயுரிய சண்டைத் திறன்.

புத்தாவது சுற்றின் ஆரம்பம் முதலே சான்டலின் முகத்தில் நேராக இடது கரத்தால் தாக்கி, அவரது வேகமான அடிகளைத் தடுத்தார். சான்டல் எச்சரிக்கையாகி, தனது இடது கையினால் எதிர்த்து, பின் குனிந்து தவிர்த்து, வலது கையை சுழற்றி கிங்கின் தலையில் பக்கவாட்டில் அடித்தார். அந்த அடி சற்று உயரே பட்டதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் முதல் முறையாக அந்த இடத்தில் அடி பட்டதும், பரிச்சயமான, பழைய கருந்திரையைப் போன்ற மயக்க உணர்வு தோன்றுவதை கிங் உணர்ந்தார். ஒரு கணம், அல்லது கணத்திலும் மிகக் குறைந்த நேரம் அவர் உணர்விழந்தார். அந்த ஒரு நொடியில் எதிராளி அவரது கண் பார்வையிலிருந்து விலகிப் போவதையும், பின்னணியில் வெள்ளை முகங்கள் தன்னைப் பார்வையிடுவதையும் கண்டார். அடுத்த நொடி மீண்டும் எதிராளியையும், பின்னணியிலிருந்த முகங்களையும் கண்டார். ஒரு கணம் அவர் உறங்கி விழித்ததைப் போல் தோன்றியது. இருப்பினும் உணர்விழந்த அந்த இடைவெளி மிக நுண்ணிய நேரமே என்பதால், அவர் கீழே விழவில்லை. பார்வையாளர்கள் அவர் தள்ளாடுவதையும், அவரது கால் முட்டிகள் தளர்ந்து தொய்வதையும் கண்டனர். பின் மீண்டு வந்ததையும், முகவாய்க்கட்டையை இடது தோளில் பாதுகாப்பாக ஆழமாகப் பதித்துக் கொள்வதையும் கண்டனர்.

மீண்டும் மீண்டும் சான்டல் அதே விதமாகத் திரும்பத் திரும்பக் குத்தினார். அவ்விதமான குத்துக்களால் கிங்கின் உணர்வு மழுங்கி குழப்ப நிலையில் இருக்குமாறு செய்தார். பின் கிங் சுதாரித்து தற்காப்பு வழிமுறையைக் கையாண்டார். அது எதிர்த்தாக்குதலாகவும் அமைந்தது. இடது கையால் அடிப்பது போல போக்குக் காட்டி, அரை காலடி பின் நகர்ந்து, அதே சமயம் வலது கையை வெட்டுவது போல தூக்கி முழு பலத்துடன் அடித்தார். மிகச் சரியான கணத்தில் அடித்த வேகத்தில் நேராக சான்டலின் முகத்தின் மீது விழுந்தது. அவர் கீழே குனிந்து தலையைச் சுற்றி விரைந்து நழுவ முயன்ற நேரத்தில் அந்த அடி விழுந்தது. சான்டல் அப்படியே காற்றில் தூக்கப்பட்டு, சுருண்டு பின்புறமாகத் தலையும், தோளும் தரை விரிப்பில் படுமாறு மல்லாந்தார். இருமுறை கிங் அதே சாதனையை நிகழ்த்தினார். பின் கிங் சுயக் கட்டுப்பாடுகளை எல்லாம் களைந்து, எதிராளியை கயிற்றோரம் தள்ளி சரமாரியாகக் குத்தினார். அவரை சற்றேனும் சுதாரிக்கவோ ஓயவோ விடவில்லை. தொடர்ந்து அடி மேல் அடியாகப் பொழிந்து கொண்டேயிருந்தார். பார்வையாளர்கள் உற்சாகத்தில் எழுந்து நின்றனர். அவர்களின் ஆரவாரக் கூச்சலும், கைத்தட்டலும் தொடர்ந்து நீடித்து அரங்கையே நிறைத்தது. ஆனாலும் சான்டலின் பலமும், தாங்கும் சக்தியும் உயர்தரமாயிருந்தது. அவர் கீழே விழுந்து விடாமல் நின்றார். அவர் உணர்விழந்து மயங்கி விழுவது நிச்சயம் என்பதாகவே தோன்றியது. வளையத்தின் அருகே இருந்த தலைமைக் காவலர் ஒருவர், அச்சுறுத்தும் அந்தத் தண்டனையைக் கண்டு திகைத்துப் போய், சண்டையை நிறுத்தி விடும் எண்ணத்தோடு எழுந்தார். அச்சமயம் மணியோசை ஒலித்து சுற்று முடிந்தது. சான்டல் தள்ளாடியபடியே தனது மூலைக்குச் சென்றார். அவர் தலைமைக் காவலரிடம் தான் இன்னமும் பலம் வாய்ந்தவராக, நலமாக இருப்பதாகக் கூறி, காவலரின் எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை நிரூபிக்கும் விதமாக இரண்டு கையாலும் குத்துவது போல பாவனை செய்து காட்டினார். தலைமைக் காவலர் அதனை ஏற்றுக் கொண்டார்.

தனது மூலையில் அமர்ந்து கடுமையாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்த டாம் கிங் ஏமாற்றமடைந்தார். சண்டை நிறுத்தப்பட்டிருந்தால், நடுவர் வலுக்கட்டாயமாக வேறு வழியின்றி கிங் சார்பாக முடிவெடுத்து இருப்பார். பரிசுப் பணமும் அவருக்குக் கிடைத்திருக்கும். சான்டலைப் போல அவர் நற்பெயருக்காகவும், தொழில் முன்னேற்றத்திற்காகவும் சண்டையிடவில்லை. முப்பது பவுண்ட்களுக்காகவே சண்டையிட்டார். இப்போது சான்டல் ஒரு நிமிட ஓய்வில் களைப்பு நீங்கி வலிமை பெற்று விடுவார்.

இளமைக்கு அனைத்தும் வழங்கப்படும்! இச்சொற்கள் கிங்கின் மனதில் பளிச்சிட்டன. முதன் முதலாக அதைக் கேட்டது நினைவுக்கு வந்தது. ஸ்டவ்ஷர் பில்லை வீழ்த்திய இரவில் அவர் காதில் விழுந்தவை அவை. சண்டைக்குப் பின் மதுபானம் வழங்கிய ஒரு கனவான், தோளில் தட்டிப் பாராட்டி அந்த வார்த்தைகளைக் கூறியிருந்தார். இளமைக்கு அனைத்தும் வழங்கப்படும்! அந்தக் கனவான் கூறியது சரியே. பல ஆண்டுகளுக்கு முன்னர் அன்றிரவு கிங்கிடம் இளமை இருந்தது. இன்று இளமை எதிர் மூலையில் அமர்ந்திருக்கிறது.

கிங்கைப் பொறுத்தவரை நிதானமாக சண்டையிட்டதால் வயதான நிலையிலும் முப்பது நிமிடங்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். சான்டல் போன்று சண்டையிட்டிருந்தால் பதினைந்து நிமிடங்கள் கூட தாக்கு பிடித்திருக்க மாட்டார். கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் அவரது களைப்பு நீங்கவில்லை. புடைத்திருந்த நரம்புகளும், சோர்ந்து விட்ட இதயமும் சுற்றுகளின் இடைவெளியில் புத்துணர்வைத் திரும்பத் தரவில்லை. புது உத்வேகத்துடன் மீண்டும் சண்டையைத் துவங்கப் போதிய சக்தி அவரிடமில்லை. அவருடைய கால்கள் கனத்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும் நிலையில் இருந்தன. அவர் இரண்டு மைல்கள் நடந்து வந்திருக்கக் கூடாது. மேலும் அன்று காலையில் எழுந்திருக்கும் போதே இறைச்சிக்கு ஏங்கியிருந்தார். கடன் தர மறுத்த கசாப்பு கடைக்காரர்களின் மீது அவருக்குக் கடுமையான வெறுப்பு தோன்றியது. வயதான ஒருவர் போதிய ஆகாரமின்றி சண்டையிடுவது மிகவும் கடினமான காரியம். சிறிதளவு இறைச்சி எத்தனை சின்னஞ் சிறிய விஷயம். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு சில பென்னிகளே பெறும். ஆனால் அவருக்கு அது முப்பது பவுண்ட்கள் மதிப்புள்ளதாயிருந்தது.

மணியோசை ஒலித்து பதினொராவது சுற்று ஆரம்பித்தது. இல்லாத புத்துணர்வு பெருகியிருப்பது போல பாசாங்கு செய்தவாறு சான்டல் வேகமாக முன்வந்தார். கிங் அதை உடனே புரிந்து கொண்டார். குத்துச்சண்டை விளையாட்டு எவ்வளவு பழமையானதோ, அதைப் போலவே அந்தப் பாசாங்கும் பழமையானதொரு ஏமாற்று வேலை. தன்னைத் தற்காத்துக் கொள்ள இறுக்கிக் கட்டிப் பிடித்தார் கிங். பின் பிடியை விட்டு, சான்டல் தயார் நிலையில் இருக்க வகை செய்தார். இதுவே கிங் விரும்பியது. இடது கரத்தால் அடிப்பது போல் போக்கு காட்டி, அவர் அதைத் தவிர்க்கக் குனியச் செய்து, கொக்கி போல கையை உயர்த்தி அரைக் காலடி பின் வாங்கி முழு பலத்துடன் கீழிருந்து மேலாக முகத்தில் அடித்தார். சான்டல் சுருண்டு தரை விரிப்பைத் தொட்டார். அதன் பின்னர் கிங் அவரை ஓயவே விடவில்லை. அவரே சில குத்துக்களை தண்டனையாகப் பெற்றாலும், அதைக் காட்டிலும் அதிகமாகவே குத்துக்களை வழங்கி, அவரை அடித்து கயிற்றில் தள்ளி, அனைத்து விதமான குத்துக்களையும் அவர் மீது பொழிந்தார். அவர் கட்டிப் பிடிக்க முயல்கையில் வலிந்து விலகி, மீண்டும் முயற்சிக்கையில் ஓங்கிக் குத்தி, சான்டல் கீழே விழும் நிலையில், ஒரு கையால் அவரை உயர்த்திப் பிடித்து, உடனே அடித்து கயிற்றோரம் நெருக்கி, அங்கு கீழே விழ முடியாத நிலைக்குத் தள்ளினார். அதற்குள்ளாக அரங்கம் பித்துப் பிடித்தது போலாயிற்று. முழு அரங்கமும் அவர் சார்பானது. ஓவ்வொரு குரலும் உணர்ச்சி வேகத்துடன் “விடாதே டாம்! வீழ்த்து டாம்! வெற்றி டாம்!” என முழங்கின. அது சூறாவளி போன்ற இறுதிக்கட்டம். அதைக் காணவே பார்வையாளர்கள் பணம் செலுத்தியிருந்தனர்.

அரை மணி நேரம் தனது சக்தியை பெருமளவு சேகரித்து வந்த டாம் கிங், தற்போது அதைக் கட்டவிழ்த்து விட்டு ஊதாரித்தனமாக செலவழித்தார். அவருக்கேயுரிய அந்த இறுதிப் பெரும் ஆற்றலை அவர் உணர்ந்திருந்தார். இந்த ஒரு வாய்ப்புதான். வெற்றி இப்போது அல்லது இல்லவேயில்லை. அவரது பலம் வேகமாகக் குறைந்து வந்தது. முற்றிலுமாக பலத்தை இழக்கும் முன்னர் எதிராளியை வீழ்த்தி, எண்ணிக்கை ஆரம்பமாக வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. அவர் தொடர்ந்து அடிக்கும் நிலையிலேயே, தனது அடிகளின் வலிமையையும், அவற்றால் நிகழ்ந்த சேதத்தின் தரத்தையும் மதிப்பிட்டார். சான்டலை வீழ்த்துவது எவ்வளவு கடினமானக் காரியம் என்பதை உணர்ந்தார். தளராத உடலுரமும், தாங்கும் சக்தியும் அவரிடம் உச்சக்கட்ட அளவிலிருந்தன. அவை உருக்குலையாத இளமையின் உடலுறுதியும், ஆற்றலுமாகும். சான்டல் நிச்சயமாக முன்னேறக் கூடியவர்தான். அதற்கான ஆற்றல் அவரிடமிருந்தது. இவ்வாறான கட்டமைப்பிலிருந்தே வெற்றி வீரர்கள் உருவாகின்றனர்.

சான்டல் தடுமாறித் தள்ளாடினார். ஆனால் டாம் கிங்கின் கால் தசைகள் இறுகிக் கொண்டு வந்தன. அவரது முட்டிகளும் ஒத்துழைக்க மறுத்தன. இருப்பினும் மனோதிடத்துடன் விடாது மூர்க்கமாக அடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடியும் சித்திரவதைக்குட்பட்டிருந்த அவரது கரங்களுக்கு மேலும் வேதனையைத் தந்தன. கிட்டத்தட்ட எந்தத் தண்டனையும் தற்போது அவர் பெறவில்லை எனினும், தண்டனையைப் பெற்றது போலவே பலவீனமாகி வந்தார். அவரது அடிகள் இலக்கை அடைந்தன. ஆனால் அவற்றில் போதுமான பலமில்லை. ஒவ்வொரு அடிக்கும் மிகுந்த மனவலிமையும், பெருமுயற்சியும் தேவைப்பட்டன. கால்கள் ஈயம் போலாகி விட்டன. அவர் அவற்றை வலிந்து நகர்த்துவது தெளிவாகத் தெரிந்தது. அந்த அறிகுறியைக் கண்ட சான்டலின் ஆதரவாளர்கள் அவரை ஊக்குவிக்கும் விதமாகக் குரலெழுப்பினர்.

திடுமென கடும் முயற்சி வெடித்து வெளிப்பட்டது போல் செயலாற்றினார் கிங். ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து இரண்டு அடிகள் கொடுத்தார். இடதால் வயிற்றுக்கு சற்று மேலேயும், வலதால் தாடையின் குறுக்கேயும். அவை பலமான அடிகளல்ல. ஆனால் சான்டல் குழம்பிய மனநிலையிலும், பலவீனமாயும் இருந்ததால் கீழே விழுந்தார். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. நடுவர் அருகே நின்று குனிந்து காதருகே சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் எண்ணிக்கையை உரக்கக் கூறினார். பத்தாவது விநாடியில் அவர் எழவில்லை என்றால், சண்டையில் தோற்று விடுவார்.

அரங்கம் பெரும் அமைதியில் ஆழ்ந்து கூர்ந்து கவனித்தது. கிங் நடுங்கும் கால்களோடு நின்று ஓய்வெடுத்தார். அவர் உயிருக்கே ஆபத்தான மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது கண்களுக்கு முன்னால் முகங்கள் தோன்றித் தொய்ந்து ஊசலாடின. காதுகளில் எங்கோ தொலை தூரத்திலிருந்து கேட்பது போல நடுவரின் எண்ணிக்கை கேட்டது. இருப்பினும் சண்டை தனது வசம் என்ற நிலையில் நின்றிருந்தார். அத்தகைய தண்டனையைப் பெற்ற ஒருவர் எழுந்து நிற்பது என்பது இயலாத காரியம்.

ஆனால் இளமை எழ முடியும். சான்டல் எழுந்தார். நான்காவது விநாடியில் முகம் தரை விரிப்பில் புரள, சுருண்டு, கண் தெரியாத நிலையில் கயிற்றைத் துழாவினார். ஏழாவது விநாடிக்குள் கால்களை முன்னுக்கு நீட்டி, இழுத்து முட்டி போட்டவாறு ஓய்வெடுத்தார். அவரது தலை, தோள்களில் தடுமாறிக் கொண்டிருந்தது. நடுவர் “ஒன்பது” என்று கத்தியதும் சான்டல் நிமிர்ந்து கைகளைத் தற்காப்புடன் தடுக்கும் நிலையில் வைத்து நின்றார். இடது கரம் முகத்தை மூடியபடியும், வலது கரம் வயிற்றை மூடியபடியும் இருந்தது. இப்படியாக அவரது முக்கிய பகுதிகள் காக்கப்பட்டு, கிங்கைக் கட்டிப் பிடித்து நேரம் கடத்தலாம் என்னும் எதிர்ப்பார்ப்புடன் தள்ளாடியபடி நின்றார்.

அவர் எழுந்து நின்றதுமே கிங் அவரைத் தாக்கினார். ஆனால் இரண்டு அடிகளுமே பாதுகாவலாய் இருந்த கைகளில் விழுந்து செயலிழந்தன. அடுத்த கணம் சான்டல் கிங்கை விடாப்பிடியாகக் கட்டிக் கொண்டார். நடுவர் இருவரையும் பிரித்து விட கடும் முயற்சி செய்தார். அவருக்கு கிங் உதவி பலவந்தமாகத் தன்னை விடுவித்துக் கொண்டார். இளமை எவ்வளவு துரிதமாக மீண்டு வந்தது என்பதையும், அந்த மீட்சியைத் தடுத்து விட்டால், சான்டல் தன் வசம் என்றும் உணர்ந்தார் கிங். ஒரு பலத்த அடி அதை நிகழ்த்தி விடும். சான்டல் தன் வசம். சந்தேகமின்றி சான்டல் தன் வசம். சான்டலைக் காட்டிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி விட்டார். அவரை மிஞ்சி சண்டையிட்டார். பலமுறை அவரை கீழே விழச் செய்ததால் அவரை விடவும் அதிக மதிப்பெண்களையும் பெற்றிருந்தார்.

பிரித்து விடப்பட்ட சான்டல் தடுமாறி நின்றார். வீழ்ச்சியா? எழுச்சியா? என்னும் மயிரிழையில் ஊசலாடிய வண்ணம் சற்று நிதானிக்க முயன்று கொண்டிருந்தார். ஒரு வன்மையான அடி அவரை விழச் செய்து வீழ்த்தி விடும். டாம் கிங் மனதில் மின்னலென ஒரு கசப்புணர்வு தோன்றி, தான் விரும்பிய சிறிதளவு இறைச்சியை நினைவு கூர்ந்தார். அது கிடைத்திருந்தால் அதன் பலத்தில் தற்போது அத்தியாவசியமான வன்மையான அடியை வழங்கியிருக்கலாம்.

துணிந்து ஒரு குத்து விட்டார். ஆனால் அது போதிய அளவு துரிதமாகவோ, பலமிக்கதாகவோ இல்லை. சான்டல் தள்ளாடினார். ஆனாலும் விழவில்லை. கடும் வேதனையோடு இதற்கு மேல் இயலாது எனத் தோன்றும் வகையில் மற்றொரு குத்து விட்டார். ஆனால் அவரது உடல் வலிமை அவரைக் கைவிட்டு விட்டது. மிஞ்சியிருந்தது சண்டையிடும் விவேகம் மட்டுமே. முற்றிலும் சோர்வடைந்த நிலையில் அதுவும் மங்கிப் போனது. தாடையைக் குறி வைத்துக் குத்தியது, தோளையே எட்டியது. அவர் விரும்பியது அதற்கும் உயரேதான். ஆனால் சோர்வுற்ற தசைகள் அவர் விரும்பியவாறு இயங்க மறுத்தன. அந்த அடியின் விளைவாக அவரே பின்னகர்ந்து, நிலைகுலைந்து, கிட்டத்தட்ட விழும் நிலைக்கு ஆளானார். மீண்டும் ஒரு முறை அடிக்க முயன்றார். ஆனால் முற்றிலுமாக குறி தவறி, முழுமையாகப் பலத்தை இழந்தார். சான்டல் மீது சாய்ந்து, தான் கீழே விழுந்து விடாமலிருக்க அவரை இறுகப் பிடித்துக் கொண்டார்.

கிங் தன்னை விடுவித்துக் கொள்ள முயலவில்லை. அவர் தனது சக்தி, திறன், விவேகம் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி விட்டார். தற்போது அவர் ஓய்ந்து விட்டார். ஆக, இளமைக்கே அனைத்தும் வழங்கப்படும். இறுகப் பிடித்திருந்த நிலையில் சான்டலின் பலம் அதிகரிப்பதை உணர்ந்தார். நடுவர் அவர்களைப் பிரித்து விட்ட போது, அவரது கண்ணுக்கெதிரிலேயே இளமை திரும்பவும் புத்துணர்வு பெறுவதைக் கண்டார். கணத்திற்கு கணம் சான்டலின் பலம் அதிகரித்தது. சற்று முன்னர் பலவீனமாயும், பயனற்றதாயுமிருந்த சான்டலின் குத்துக்கள், தற்போது வலிமையாகவும், சரியான இலக்கை அடைவதாகவும் இருந்தன. கையுறையணிந்த முஷ்டி தாடையைத் தாக்குவது டாம் கிங்கின் மங்கிய, தெளிவற்ற கண்களுக்குத் தெரிந்தது. அவர் தனது கரத்தால் தடுத்து தற்காத்துக் கொள்ள விரும்பினார். ஆபத்தை உணர்ந்து அதை முறியடிக்க விரும்பினார். ஆனால் கரம் மிகுந்த பளுவாயிருந்தது. நூறு கிலோ எடையுள்ள ஈயத்தின் பாரமாகக் கரங்கள் மாறியிருந்தன. அவை தானாக உயரவில்லை. அவற்றை நெஞ்சுறுதியினாலும், ஆத்ம பலத்தினாலும் உயர்த்த அவர் முயன்றார். பின் கையுறை அணிந்த முஷ்டி இலக்கை எட்டியது. மின்சாரப் பொறி ஒன்று தோன்றியதை உணர்ந்த அதே சமயம் கருந்திரை அவரைச் சூழ்ந்தது.

மீண்டும் கண்களைத் திறந்த போது அவர் தனது மூலையில் இருந்தார். பொண்டி கடற்கரையில் அலைகள் நுரைத்துப் பொங்கி எழும் ஓசையைப் போல, பார்வையாளர்களின் கூச்சலைக் கேட்டார். ஈரமான கடற்பஞ்சால் அவரது மூளையின் அடிப்பகுதியில் அழுத்தித் தேய்த்தனர். சிட் சுலிவன் புத்தணர்வு தரும் குளிர்ந்த நீரை அவரது முகத்திலும், மார்பிலும் தெளித்த வண்ணமிருந்தார். அவரது கையுறைகள் ஏற்கெனவே கழட்டப்பட்டிருந்தன. சான்டல் அவரருகே வந்து குனிந்து கைக் குலுக்கினார். அவரை வீழ்த்தியவரிடம் கிங்கிற்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் தோன்றவில்லை. சான்டலை உளமார வாழ்த்தும் விதமாக அவரது கையை இறுகப் பற்றினார். உருக்குலைந்த அவரது முட்டிகள் அப்போது வலித்தன.

சான்டல் வளையத்தின் மையத்திற்குச் சென்று நின்றார். இளம் ப்ரான்டோவின் சவாலை ஏற்பதாகக் கூறியதும், பந்தயப் பணத்தை நூறு பவுண்ட்களாக உயர்த்தியதற்கு சம்மதம் தெரிவித்ததையும் கேட்டுப் பார்வையாளர்கள் பேய்த்தனமாகக் கூச்சலிட்டனர். கிங் எவ்வித உணர்ச்சியுமின்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மார்பில் தெளிக்கப்பட்ட நீரை உதவியாளர்கள் துடைத்தனர். அவரது முகத்தையும் துடைத்து உலர்த்தினர். வளையத்தை விட்டு வெளியேற அவரைத் தயார்ப்படுத்தினர்.

அவருக்குப் பசியுணர்வு மேலிட்டது. வழக்கமான நீடித்த தொல்லையைக் கொடுக்கும் சாதாரண பசியுணர்வு அல்ல அது. வயிற்றின் மேல் பகுதியில், மார்பின் கீழுள்ள பள்ளத்தில் தோன்றிய கடும் வலி அவரை வாட்டியது. அது உடல் முழுக்கப் பரவி மயக்கமூட்டியது. அவர் நிகழ்ந்த சண்டையை பின்னோக்கிப் பார்த்தார். சான்டல் தள்ளாடியவாறே வீழ்ச்சியின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த கட்டம் நினைவுக்கு வந்தது. ஆ! சிறிதளவு இறைச்சி அவரை வீழ்த்தியிருக்குமே! வெல்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட அந்த இறுதிக் குத்து வன்மையாக விழாதது, சிறிதளவு இறைச்சி கிடைக்காததால்தான். எனவே அவர் தோல்வி அடைந்தார். ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அந்த சிறிதளவு இறைச்சிதான்.

அவர் கயிற்றின் வழியாக வெளியேறுவதற்கு உதவியாளர்கள் சிறிது கைத்தாங்கலாக உதவினர். அவர்களை உதறி விட்டு, யாருடைய உதவியுமின்றி அவரே கயிற்றுக்குள் நுழைந்து, கீழே தொப்பென்று குதித்தார். உதவியாளர்கள் முன்னகர, கிங் அவர்களை ஒட்டிப் பின் தொடர்ந்தார். அவர்கள் இருக்கை வரிசையின் நடுவே திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்தியவாறே சென்றனர். மாற்றுடை அறையிலிருந்து வெளியேறி அரங்கின் வாசலில் இருந்த தெருவிற்குப் போகும் சமயம், ஒரு இளைஞன் அவரிடம் பேசினான்.

“சான்டல் உங்கள் வசமிருந்த போது ஏன் அவரை வன்மையாகத் தாக்கி வீழ்த்தவில்லை?” என்று கேட்டான்.

“ஓ! போய் உன் வேலையைப் பார்” என்ற டாம் கிங் படிகளில் இறங்கி நடைபாதையை அடைந்தார்.

தெருவின் மூலையிலிருந்த மதுபானக் கடையின் கதவுகள் அகலமாகத் திறந்தன. அதனுள்ளிருந்த வெளிச்சத்தையும், புன்னகை தவழும் முகத்துடனிருந்த பணிப் பெண்களையும் கண்டார். பல குரல்கள் சண்டையைக் குறித்து விவாதிப்பதையும், மேஜையில் கைமாறும் செழிப்பான சில்லறைகளின் ஓசையையும் கேட்டார். யாரோ ஒருவர் மது அருந்தும்படியாக அவரை அழைத்தார். ஒரு கணம் தயங்கி, பின் மறுத்து தன் வழியே நடந்தார்.

அவரது பையில் சல்லிக் காசும் கிடையாது. இரண்டு மைல்கள் நடை நீண்ட தூரம் போல் தோன்றியது. நிச்சயமாக அவருக்கு வயதாகிக் கொண்டே வந்தது. அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியதும் நடைபாதையில் இருந்த ஒரு நீண்ட இருக்கையில் திடீரென அமர்ந்தார். சண்டையின் முடிவு என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் வீட்டில் மனைவி காத்திருப்பார் என்னும் நினைவு வந்ததும் கவலையுற்றார். எந்த ஒரு தோல்வியையும் விட, அந்தச் சூழலை எதிர்கொள்வதே முடியாத காரியம் போல் தோன்றியது.

வயிற்றைப் புரட்டும் பசியால் வாந்தி வந்து விடும் போலிருந்தது. தனது உடல் பலவீனமாகவும், மனம் புண்பட்டும் இருப்பதை உணர்ந்தார். ஒருக்கால் கூலி வேலை கிடைத்தாலும் கூட, ஒரு மண்வெட்டியோ அல்லது கோடாரியோ ஒரு வாரத்திற்குக் கையால் பிடித்துத் தூக்க முடியாது என வலிக்கும் முட்டிகள் அவரை எச்சரித்தன. அத்தகைய துயர்மிகு நிலை அவரை வருத்தி மனமுடையச் செய்தது. அவரது கண்களில் அது நாள் வரை தோன்றியிராத ஈரம் சுரந்தது. கைகளால் தனது முகத்தை மூடி அழுதார். ஸ்டவ்ஷர் பில் முகமும், நெடுங்காலம் முன்பு ஓரிரவில் அவரை வதைத்ததும் நினைவுக்கு வந்தன. பரிதாபத்திற்குரிய முதிய ஸ்டவ்ஷர் பில்! மாற்றுடை அறையில் அவர் ஏன் அழுதார் என்பதற்கான காரணம் அப்போது அவருக்கு நன்றாக விளங்கிற்று.

1 comment

கிருஷ்ணா February 10, 2021 - 9:57 am

தரமான மொழி பெயர்ப்பு. கதையின் போக்கிற்க்கு மொழி பெயர்ப்பால் எந்த தடையும் இல்லை. தமிழில் எழுதப்பட்ட கதை போலவே உணர்ந்தேன்.

Comments are closed.