இளமை – ராஜ சுந்தரராஜன்

0 comment

அம்மாவுக்கு வயதாகவே இல்லை. இறந்தபோதிருந்த இளமையிலேயே இப்போதும்.

அம்மாவோடு கண்மாய்க்கரை நிறுத்தத்தில் பேருந்து வரக் காத்திருந்தான் அவன். “கனகு இருந்திருந்தா உன் கூடப் படிக்க ஒரு துணையா இருந்திருக்கும்,” அம்மா வாயாறினாள். இருந்திருக்குமா என்று, எட்ட நின்ற ஆலமரத்துக்குப் போய்த் திரும்பிய கவனம் அவனை யோசிக்க வைத்தது. கல்லூரிப் படிப்புக்காக பட்டணம் புறப்பட்டுவிட்ட உற்சாகம் ஒருமட்டு குறைந்தது.

பட்டணத்தில், பிரியாணிக் கடைமுற்றத்தில் வரையப்பட்டிருந்த வட்டங்களில் ஒன்றில் காத்து நின்றான். மதியவேளை. இடைவெளி விட்டு, சில நாய்களும் காக்கைகளும்.

கிட்டத்தட்ட வெறித்துக்கிடந்த சாலையில் தெற்கிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். மூன்று பெண்கள். அறிந்த முகமாய் அதிலொருத்தி, தொலைவிலும்.

ஒரு மரத்தின் பருத்தத் தடி நகர்ந்து மறைத்ததில் அவள்களைக் காணவில்லை.

தனக்குமுன் நின்ற தலைகளை எண்ணினான். ஆறு. அப்போது திடுக்கிட அருகில் வந்துநின்ற அவளை ஏறிட்டான். மாசுக்காப்பு. அது மறைக்காத விழிமினுக்கம்! குறுக்கிட்டொரு குழற்கற்றை விழுது. கையேந்தினாள்.

அதே பட்டுப்பாவாடை தாவணி! வெளிப்பட விம்மிய பெருமூச்சை விழுங்கினான்.

“இடதுகையெக் காட்டு!” பைக்குள் கைவிட்டு விரல் சிக்கிய தாளொன்றை இழுத்தான். “அதுதான் லச்சுமியோட கை.”

தயங்கிய அவள் கைமாற்றி ஏந்தினாள். கைமணிக்கட்டில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

தனக்குத்தானே சொல்லிப் பார்ப்பது போல் குரல்தாழ்த்தி உச்சரித்தான், “க-ன-கு-!?”

வெடுக்கென்று அவனை விலகி அவ்விடம் விட்டு அவள் போய்க்கொண்டே இருந்தாள். கணநேரம் திகைத்த அவன், விடுபட்டு, அவள் பின்னால் ஓடினான். அவளைக் காணவில்லை. சாலையிலிருந்து அவள் விலகியதான இடதுபக்கத் தெரு ஐந்து கிளைகளாகப் பிரிந்து கிடந்தது.

தேடித் தென்படவில்லை. அவனுக்குப் பசியெடுத்தது. திரும்பி வந்து வரிசையில் நின்றுகொண்டான். ஏக்கத்தோடு நின்ற நாய்களில் ஒன்று அவனை இமைக்காமற் பார்த்தது. இறுக்கத்தை ஒரு பெருமூச்சால் தளர்த்தி, தனக்குமுன் வரிசையில் நின்ற தலைகளை எண்ணினான். ஆறு. அப்போது, அவள்களில் இன்னொருத்தி அருகில் வந்து கேட்கிறாள்: “கனகாவெ உங்களுக்குத் தெரியுமா?”.

கனகுவைத் தேடிக் கண்மாய்க்கரை ஆலமரத்துக்குப் போனான் அவன். கனகு என்கிற கனகவேலோ, அந்த நேரத்துக்கு அங்கே வந்து கும்மாளமிடுகிற பையன்களில் எவனுமோ காணப்படவில்லை. நிறைந்து கிடந்த நீர் தீண்டி வந்த ஒரு காற்று அவன் தலைமுடியை உலைத்தது. கிறங்கியவன் அப்போதுதான் கவனித்தான், காற்றில் பறந்துவிடாமல் இருக்கக் கல் வைக்கப்பட்டு, கரையில் ஒரு மேல்சட்டை கிடந்தது. கனகவேல் சட்டை.

திக்கென்றது. சே! அப்படியெல்லாம் இருக்காது. அக்கரை வரைக்கும் கண்மாய் நீர்ப் பரப்பைக் கண்களால் சலித்தான். அழுகை வர இருந்தது.

“எலே, சீனு, நா இங்கே இருக்கேன்.” மரத்தின் மேலிருந்து குரல்வந்தது. அவன்தான். அவன்மேல் விட்டெறிய ஒரு கல் கிடைக்குமா என்று தேடினான்.

“எலே, குருடா, நா மரத்துமேல இருக்கேன் பாரு!” என்று சொல்லிக்கொண்டு கனகு, சொல்லும் போதே, நீருக்கு மேலிருந்த கிளையின் ஒரு விழுதுக் கற்றையில் தொங்கி இறங்கினான். இறங்கியவன், அந்தரத்தில் ஓர் ஊஞ்சலாட்டமும் போட்டுக் காட்டி, தொப்பென்று குதித்தான்.

கையில் கிட்டிய ஒரு கரம்பைக் கட்டியை அவன்மேல் எறிந்தான். எறிவாங்கியவன் சிரித்தான். இலேசாகி, சீனு கேட்டான், “எங்கலே இன்னைக்கு ஒரு பயலையும் காணோம்?”

“அது தெரியாதா ஒனக்கு? கொரங்கூரு வேதக் கோவில்ல சினிமா சூட்டிங் நடக்குதாம். போயிட்டானுக.” என்று அதற்கும் சிரித்தான். “தெரிஞ்சிருந்தா நீயும் போயிருப்பேல்ல?”

“நீ வராம நான்மட்டுந் தனியா எங்கெடா, எதுக்குடா போயிருக்கேன்?”

“அதுவுஞ் சரிதான். ஆனா, பத்தாப்புக் கணக்கெல்லாம் வீட்ல உக்காந்து இப்பவே போட்டுப் பார்க்கிறயாமா? லீவுல ஜாலியா இருப்பானா, அத விட்டுப்புட்டு… சரி வா, தண்ணீல குதி! ஒரு ஆட்டம் போட்டுட்டுப் போகலாம்.”

“பயலுக இருப்பானுக; கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்னு வந்தேன். உடுப்பை நனைச்சிட்டுப் போனா அம்மா வையும்.”

“அதெ ஏன் நனைக்கிறே? நாம ரெண்டுபேருதானே இருக்கோம், அவுத்துப் போட்டுட்டுக் குதி!”

“யாராவது வந்துட்டா?”

“தூரத்துல தல தெரியுறப்பவே கரையேறிடலாம். ஒருத்தரும் வரமாட்டாங்க, வா!”

துணிந்து இறங்கிய பிறகுதான் கேட்டான், “மீனு கடிக்குமோ?”

அதுக்கும் சிரித்த கனகு கைநீட்டி சீனுவின் மானியைப் பிடித்தான். சீனு அவனைத் தள்ளிவிட்டான். தண்ணீருக்குள் முங்கிய கனகு, சீனுவை உரசிக்கொண்டு மேலெழுந்த போது, சீனு குழறிக் கேட்டான், “என்னலே பண்ணுனே?”

“நான் ஒன்னும் பண்ணலப்பா. மீனு கடிச்சிருக்கும்.”

மீனிருந்தாப் போதும் என்றிருந்த ஒரு கவிஞரைத் தெரியும் சீனுவுக்கு. அவர் பட்டணத்துக்கு வந்திருந்த ஒருவாட்டி அவரைக் கண்டு தன்னை நினைவுப்படுத்திய போது, அவர், “என்ன, சீனு, இப்படி வயசாளி ஆகிட்டீங்க!” என்று வியந்தார். கூடவே, “நாம சந்திக்காமலே இருந்திருக்கலாம். உங்க இளமை அப்படியே எனக்குள்ள நிலைச்சு இருந்திருக்கும்,” என்று சிரித்தார்.

அவரது கருத்து, அன்றைக்கு, வியப்பைத் தந்தது. இன்றைக்கும் அது நினைவுக்கு வர, இப்படி முகாமுகத் தொடர்புகள் அற்று அடைந்து கிடப்பதிலும் ஆதாயம் உண்டாமோ என்று எண்ண வைத்தது.

எண்ணத்தின் குறுக்கே ஓர் ஆம்புலன்ஸ் கூவிக் கடந்தது.

அரசு மருத்துவமனைக்கு அந்தப் பக்கம் அப்படிச் சிலர் தங்கியிருக்கிறார்கள் இல்லையா?

அலுவலொன்றும் இல்லாமல் மனச்சலிப்பில் மல்லாந்து கிடந்த சீனு, உடனே எழுந்துகொண்டார். முகங்கழுவி உடுத்துக்கொண்டார். ‘பைக்’ எடுத்துப் பரிந்தார்.

அந்தக் காலத்து அமைப்பிலான ஒரே ஓட்டுக்கூரையின் கீழ் நான்கு வீடுகள். அவற்றின் பழமைத் தோற்றத்தை அங்கொரு மூலையில் இருந்த கிணறு வலுப்படுத்தியது. தன்னிறைவு கொண்ட வீடுகள்.

ஒரு வீட்டிலும் ஆள் இருப்பதுபோலத் தெரியவில்லை. காம்பவுண்டுக்கு வெளியே ஓர் அம்மன் கோவில் இருந்தது. அதன் ஒற்றை வேப்பமர நிழலில் சீனு, என்ன செய்வது என்று, குழப்பத்தில் நின்றார்.

நல்லவேளை, கடைசிவீட்டுக் கதவுதிறந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். பெண்-உடுப்பில் இருந்த ஒரு திருநங்கை. பொறுப்பாக மாசுக்காப்பு அணிந்திருந்தாள். வெளியேறிச் செல்ல வந்தவள், ‘கேட்’டில் நின்ற அவரை நோட்டமிட்டாள்.

“இங்கெயெல்லாம் நிக்கக் கூடாது. போங்க! போயிடுங்க!”

“இல்ல.., ஒரு ஆளெத் தேடி வந்தேன்.”

“இங்கெ யாரும் கெடையாது. மத்த வீட்லயெல்லாம் ஊருக்குப் போயிட்டாங்க. நாங்க மட்டுந்தான் இருக்கோம்.”

“உங்கள்ல ஒரு ஆளெத்தான்…”

“எங்கள்லயா? யாரு?”

“கனகு… ஐ மீன், கானகான்னு…”

அவரை அப்போது தான் கவனிப்பது போல் பார்த்து ஆளை அளந்தாள். “அவங்க இங்கெ இருக்காங்கன்னு உங்களுக்கு யாரு சொன்னது?”

“யாருஞ் சொல்லலை. எனக்காத் தோணி, தேடித்தான்…”

“அவங்களெத் தேட நீங்க யாரு?”

“ஒறவுதான். சீனுன்னு சொல்லுங்க, தெரியும்.”

ஒருகணம் பரபரத்தாள். மறுகணம், “கலை!” என்று குரல் உரத்தாள்.

ஒருவரும் வராதது கண்டு இவளே திரும்பி ஓடினாள். சற்றுநேரம் கழித்து பாவாடை சட்டையில் ஒரு சிறுபெண் வெளிப்பட்டாள். அங்கிருந்தே இவரை நோட்டமிட்டாள். மறுபடியும் வீட்டுக்குள் போய் அவளும் மாசுக்காப்பு அணிந்துகொண்டு வந்தாள்.

சீனு நின்றிருந்த இடத்திற்கே வந்து அறிவித்தாள்: “அம்மா ஊர்ல இல்ல.”

கனகுவை அவள் அம்மா என்று சொன்னதால் ஆகலாம், சீனுவுக்கு அவள்மீது ஒரு வாஞ்சை உண்டானது. “எப்பொ வந்தாப் பார்க்கலாந் தாயி?”

அவள் சங்கடப்பட்டாள். “அம்மாட்டக் கேட்டுத்தான் சொல்லணும். எங்க யாரு ஃபோன்லயும் பேலன்ஸ் இல்ல.”

“என் ஃபோன்ல பேசறயா? கனகுக்கு விருப்பம் இல்லைன்னா, போட்ட நம்பரெ டிலீட் பண்ணீட்டுத் திருப்பிக் குடு!”

முதலில் வந்தவளோடு இன்னும் இரண்டுபேர் வந்து கேட்டுக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டார்கள். கலை, சிறிது தயங்கினாள். பிறகு கைமலர்த்தி நீட்டினாள். ஃபோனை வாங்கிக் கொண்டு சற்று எட்டப் போய் முணுமுணுத்தாள்.

திரும்பி வந்து நீட்டி, “அம்மா லைன்ல இருக்காங்க,” என்றாள்.

அவள் கண்களில் ஈரத்தைக் கவனித்தார். “கனகுக்கு ஒன்னுமில்லையே?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல, அம்மா நல்லா இருக்காங்க.”

சீனுவும் சற்று விலகிப்போய், “ஹலோ!” என்றார்.

“என்னலே நல்லா இருக்கியா?” என்று எதிர்முனையில் குரல் உற்சாகமாக ஒலித்தது. “என்னையெல்லாம் இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியா?”

“உன்னையில்லாம வேற யாரெ நெனப்பேன், கனகு?” சீனு குரல் தழுதழுத்தது.

“என்னடா, ரொம்ப ஃபீல் பண்றாப்ல தெரியுது?”

“ஆமா, கனகு, ரெம்பத் தனிமையா இருக்கு.”

“எங்கெ அவ, உன் பருத்திக்காட்டுப் பைங்கிளி?”

“வெளிநாட்ல இருக்கா, மகன் வீட்ல.”

மறுமுனையில் மௌனம். பிறகு, “ஒரு பத்து நிமிஷம் கழிச்சுக் கூப்பிட்றயா? கட்டாயம் கூ… கூப்பிடணும்.” கனகு குரல் உடைந்தது.

“அப்பொ, ஊரு விஷயங்களெ யாரு மூலமாவோ தெரிஞ்சுதான் வெச்சிருக்காப்ல.”

சீனு திரும்பி அந்தப் பிள்ளைகளிடம் வந்தார். “பத்து நிமிஷம் கழிச்சுப் பேசணுமாம்.” அவர் மனம் திறந்து கிடந்தது. பைக்குள் கைவிட்டு நான்கு ஐந்நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவர்களிடம் நீட்டினார்.

“எதுக்குப்பா?” என்ற கலை, கைநீட்டி வாங்கிக்கொண்டாள். மற்ற மூவரும் கலங்கி நின்றார்கள்.

அதிலொருத்தி முறுமுறுத்தாள், “வீட்டுக்கார அம்மா வர்றாங்கடி!”

சீனு திரும்பிப் பார்த்தார். கலையிடம் சொன்னார், “அந்தப் பணத்தை மறைச்சு வையி!”

மஞ்சள் புடவையும் கறுப்பு ப்ளவுஸ், மாசுக்காப்புமாக வந்து நின்றாள் ஒரு பேரிளம் பெண். “பெரியவர் யாரு?”

“கனகாம்மாவுக்கு வேண்டியவரும்மா,” என்றாள் கலை.

“வேண்டியவருன்னா?”

“வணக்கம்மா!” சீனு பணிவோடு கனிவாகப் பேசினார். “கனகுக்கு உறவுக்காரனுங்க. அவுக அத்தை மகன்.”

“அத்தை மகன்னா? சீனுவா?”

திகைத்தார். உலகத்துக்கே தெரியும்போல இருக்கே! “ஆமாம்மா, சீனுவே தான். இவங்களுக்கு வாடகை பாக்கியேதும் இருக்காம்மா?”

“ரெண்டுமாச பாக்கி. ஐயாயிரம்,” என்றவர் அவள்கள் பக்கம் கேட்டார், “ஏ புள்ளைங்களா சாப்ட்டீங்களா?”

அவர்கள் ஊமைகளாய் நின்றார்கள்.

“இன்னும் சாப்பிடலையா பாப்பா?” என்று வருந்தி கலையின் முகம்பார்த்த சீனு, வீட்டம்மாவிடம் சொன்னார். “நான் வாங்கிட்டு வந்து குடுக்குறேன்மா. செக்கு தரட்டுமா, வாடகைக்கு? கைல பணமா இல்ல.”

“அதெக் கொண்டுட்டுப் போயி பேங்க்ல காத்துக் கெடக்கணுமே? எங்க வூட்டுக்காரரும் ஊர்ல இல்ல.”

சீனு ஃபோனில் நேரம் பார்த்தார். “மணி பதினொன்றரை தானே ஆவுது? நானே போயி எடுத்திட்டு வந்து தர்றேன்மா. கலை, ஓனரம்மா வீடு தெரியும்ல?”

“தெரியும்ப்பா.”

“என்னோட ஃபோன் நம்பரெ இவங்களுக்குக் குடு!” என்று தன் ஃபோனைக் கலையிடம் தந்தார். “உங்க நாலுபேரோட நம்பரையும் ஃபோன் கம்பெனியையும் ஒரு பேப்பர்ல எழுதித் தாங்க!”

வீட்டுக்காரம்மா ஒரு திருப்தியோடு விடைவாங்கிப் போனதற்கு அப்புறம், சாப்பாடு பக்கத்திலேயே ஒரு கடையில் கிடைக்கும் என்று அவள்கள் சொன்னதால், அவர் வங்கிக்கு வண்டியை விட்டார்.

வழியில், முதல் வேலையாக, அவள்கள் நான்கு பேருடைய ஃபோன்களுக்கும் ரீ-சார்ஜ் பண்ணிவிட்டு, வங்கியைச் சென்றடைந்து வரிசையில் காத்து நின்றபோது, நினைவுக்கு வந்து, கனகுவை விளித்தார்.

“உன் தழுதழுத்த குரலெக் கேட்டு அழுகையா வந்துச்சுடா, அதான் கட் பண்ணுனேன். இப்பவும் அழுகையா வருது போ! கலை கூப்பிட்டு எல்லாத்தையும் சொன்னா. அந்தப் புள்ளைங்களெ நினைச்சு நான் கவலைப்படாத நாளில்லடா.”

“விடு! நான் பார்த்துக்கிறேன். கலை என்னெ அப்பாங்கிறாளே, அப்படிக் கூப்பிடச் சொன்னியா?”

“அப்டியா? பாவம்டா! பாசத்துக்கு ஏங்குற புள்ளைங்க. அதில்லாம, உன் பேருதான் என் கையில பச்சைகுத்தி இருக்கே? அவ அப்படிக் கூப்பிட்டது உனக்குப் பிடிக்கலையா?”

“பிடிச்சிருக்கு. இப்பொ, நான் தனியாளு இல்லைல? தேங்க்ஸ்!”

“என்ன, கொழுப்பா? ஆமா, நா அந்த எடத்துல இருப்பேன்னு எப்படிக் கண்டுபிடிச்சே?”

“நேத்து உன்னெக் கனவுல பார்த்தேன். இன்னைக்கு அந்த எடத்துக்குப் போகணும்னு ஒரு அறிச்சி தட்டுச்சு.”

“நல்லா இருக்கே! கனவுலகூட வர்றேனா? கொமராவா? கெழடாவா?”

சிரித்துவிட்டு, “கடைசியா உன்னெ எப்படிப் பார்த்தேனோ அப்படி. அந்தப் பட்டுப் பாவாடை தாவணியில.” என்றவர், அவசரமாக, “கனகு, நான் பேங்க்ல க்யூவுல நிக்கிறேன். பக்கத்துல வந்திட்டேன். பணம் எடுத்திட்டு உன்னெக் கூப்பிடுறேன்.” என்று துண்டித்தார்.

துண்டித்துவிட்டது போலவே கனகு இவனை, அன்றைக்கு, கண்மாய்க் கரையிலிருந்து  விரட்டியது நினைவுக்கு வந்து வலித்தது.

‘இரவெல்லாம் கனகுவீட்டில் சண்டை நடந்தது; வீட்டுக்குள் கதவடைத்து அவனை அடித்தார்கள்,’ என்று கதைத்தார்கள். கனகு வீட்டுக்குப் போய்த் திரும்பிய அம்மா, பிறகு, பேசா மடந்தையானாள். சீனுவிடம் மட்டும் பதில் பேசுவாள். ஒற்றைப்பிள்ளை ஆயிற்றே?

கனகு பாவாடை தாவணிக்கு ஆசைப்பட்டதால் உண்டான பிரச்சனை அது என்று சீனு நம்பவில்லை. ஆனால் அப்படித்தான் சொல்லப்பட்டது.

அன்றைக்கு பௌர்ணமி. கனகு சீனுவைக் கண்மாய்க்கரைக்கு வரச்சொல்லியிருந்தான். ராத்திரீலயா? என்றாலும் போனான். எந்த ஊர்ல எந்தக் காலேஜ்ல சேரலாம் என்கிற வெங்காயத்தையே திரும்பவும் உரிப்பான்.

ஆலமரத்தடி இருட்டில் ஒரு பெண் நின்றுகொண்டு இருந்தாள். உதறலெடுத்து, சீனு ஓடிவிடத் திரும்பினான்.

“எலேய், நான்தான். பயப்படாம வா!”

கனகுக்குக் கால் இருந்தது. அக்கா பாவாடை என்று பிறகு தெளிவித்தான். அது அவனுக்குக் கட்டையாக இருந்தது.

“நல்லா இருக்கா சீனு? மொதமொதல்ல உங்கிட்டதான் காட்டணும்னு நெனச்சேன்.”

சீனு பதில் சொல்வதற்குள், சற்றுத் தள்ளி கரையிறக்கத்தில் இருந்த வைக்கோற் படப்புக்கு அந்தப் பக்கம், ஏதோ அரவம்; சிணுங்கல். கனகு சீனு வாயைப் பொத்திவிட்டு, கள்ள எட்டுவைத்து படப்புப் பக்கம் போனான். போனவன், வேகமாய்த் திரும்பிவந்து, “எலேய், நீ போயிரு! நாளைக்குப் பார்க்கலாம்,” என்று விரட்டினான்.

“அங்கெ என்னலே இருக்கு?”

“போங்கிறன்ல?” கனகு சீறினான். தான் உடுத்தியிருந்த பாவாடை, சட்டை, தாவணியை வேகவேகமாக அவிழ்த்துச் சுருட்டினான்.

சீனு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வீடு வந்தான். கனகு, மரத்தடி இருட்டிலேயே தங்கிவிட்டான். அதுதான் கனகுவை சீனு கடைசியாகப் பார்த்தது.

கனகுவிடமிருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. விளித்து, எடுக்கப்பட்ட உடனேயே, சீனு கேட்ட கேள்வி: “அன்னைக்கு ராத்திரி அந்தப் படப்புக்கு அந்தப் பக்கம் யாரெப் பார்த்தே, கனகு?”

கொஞ்சநேரம் பேச்சில்லை. பிறகு, தளர்ந்ததொரு கசந்தகுரல் கேட்டது. “மனசு ஒரு ஒம்போதுடா சீனு. ஆழத்துல ஒருமாதிரி; மேலாப்புல வேறமாதிரி. ஆழத்துல இருந்துதான் என்னெ நீ கண்டுபிடிச்சே. மேலாப்புல அலம்புற அதுக்கு எப்பவுமே வயசாகுறதில்ல. நியாயப் பூளெ ஊம்புறதா நெனச்சுக்கிட்டு குழப்பத்துல இழுத்து விட்டுடும். அதுல மாத்ரம் கவனமா இரு! எங்க அக்காவோ உங்க அம்மாவோ திரும்பிவரப் போறதில்ல. முடிஞ்சா எம் பொட்டைங்களெப் பார்த்துக்கோ! கொரோணா மட்டுப்படட்டும். பொழச்சுக் கிடந்தாப் பார்த்துக்கலாம். பை!”

சாலையில் ஒரு கிறுக்கு, ஒரு பெரிய மூட்டையைச் சுமந்தபடி, போய்க்கொண்டு இருந்தது.