இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் மார்போடு இறுகத் தழுவி நடுங்கித் துடித்த அவளது இதழ்களில் ஆவேசத்துடன் முத்தமிட்டான். ‘வெர்தர்!’ தவிக்கும் குரலுடன் கத்திய அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘வெர்தர்!’ பலவீனமான கைகளால் அவனைத் தன் மார்பிலிருந்து விலக்கித் தள்ள முயன்றாள். ‘வெர்தர்!’ கௌரவமான அமைதியான குரலில் அழுதாள். அவன் தடுக்கவில்லை. 

தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தான். வெறிபிடித்தவன் போல் அவள் காலில் விழுந்தான். அவசரமாக விலகிக்கொண்ட அவள், காதலுக்கும் கோபத்துக்குமிடையே தவித்தவளாய், பதற்றத்துடனும் குழப்பத்துடனும் சொன்னாள், ‘இதுதான் கடைசி வெர்தர்! இனி நீ என்னைப் பார்க்கக்கூடாது.’ உவகையையே அறிந்திராத அவன் மீது காதலின் துயரம் கனக்கும் அவள் பார்வை தவித்தது. 

பிறகு அடுத்த அறைக்கு ஓடிய அவள் உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள். அவளைப் பிடித்து நிறுத்தத் துணிவற்றவனாய் அவளை நோக்கிக் கைகளை விரித்து நின்றான். அரைமணி நேரம் வரையிலும் சோபாவில் தலையை வைத்துக்கொண்டு தரையில் கிடந்தவனை அந்தச் சத்தம் உலுக்கி எழுப்பியது. இரவு உணவுக்காக மேசையை ஒழுங்கு செய்ய வந்த பணிப்பெண்ணின் குரல்தான் அது. எழுந்து அறையில் அங்குமிங்குமாக நடந்தான். அறையில் தான் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து, தாழிட்ட அறையின் கதவருகில் சென்று மெல்லிய குரலில் அழைத்தான். ‘லாதே! லாதே! கடைசியாக ஒரே ஒரு வார்த்தை மட்டும். எனக்கு விடைகொடுத்து அனுப்பு!’ அவள் மெளனமாக இருந்தாள். அவன் காத்திருந்தான். கெஞ்சினான். நெடுநேரம் காத்திருந்தான். பிறகு விருப்பமில்லாமல், ‘லாதே! போய்வருகிறேன் லாதே! இனி ஒருபோதும் வரமாட்டேன். போய்வருகிறேன்’ என்று கதறி அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டான். 

நகரத்தின் நுழைவாயிலுக்குத் திரும்பி வந்தான். அவனை நன்கு தெரிந்திருந்த காவலாளிகள் எதுவும் கேட்காமல் அவனை உள்ளே அனுமதித்தனர். பனியும் மழையுமாய்த் தூறிக்கொண்டிருந்தது. தனது அறைக்கதவை அவன் தட்டியபோது மணி பதினொன்றாகியிருந்தது. வெர்தர் வீடு திரும்பியபோது தொப்பி இல்லாமல் வந்ததை அவனுடைய வேலைக்காரன் கவனித்தான். எதுவும் சொல்ல தைரியம் இல்லாதவனாய் அவன் வெர்தரின் உடைகளைக் களைய உதவினான். எல்லாமே நனைந்திருந்தன. அந்தத் தொப்பி ஆழமான பள்ளத்தாக்கின் அருகிலிருந்த ஒரு மலைச் சரிவில் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. மழை ஈரம் மிக்க அந்த இரவில், தலை குப்புற விழாமல் அவன் எப்படி அந்தச் சரிவில் ஏறினான் என்றே புரிந்துகொள்ளமுடியவில்லை.

படுக்கையில் விழுந்து பல மணி நேரம் தூங்கினான். மறுநாள் காலையில், அவனது அழைப்பிற்குப் பிறகு, காபியுடன் அறைக்குள் வந்த வேலைக்காரன் அவன் எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டான். லாதேவுக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர்ந்து எழுதியிருக்கிறான்.

‘கடைசித் தடவையாக இன்று கண்விழிக்கிறேன். ஐயோ, இனி இந்தக் கண்கள் சூரியனைக் காணப்போவதில்லை. இருண்ட பனிமூட்டமான பொழுதில் அவன் ஒளிந்திருக்கிறான். இயற்கையே, நீ துக்கம் பேணிக்கொள்! உன் மகன், உன் நண்பன், உன் காதலன் தன் முடிவை நெருங்கிவிட்டான். லாதே, ‘இதுதான் என் இறுதிப் பகல்!’ என்று சொல்லும் இந்த உணர்வை எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, ஆனாலும் அந்திப் பொழுதில் கண்ட கனவைப் போன்றது என்று சொல்லலாம். ‘இறுதி’ என்ற இந்தச் சொல்லைப் பற்றி எனக்கு எந்த அனுபவமும் இல்லை. இப்போது நான் உயிர்ப்புடன் இங்கே இருக்கிறேன் இல்லையா? நாளை நான் அசையாது இந்த மண்ணில் கிடத்தப்பட்டிருப்பேன். ‘இறந்துபோவது’ என்பதற்கு என்ன பொருள்? மரணத்தைப் பற்றிப் பேசும்போது நாம் கனவுதான் காண்கிறோம். பல பேர் மரிக்கும் தருணத்தை நான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மனித இனம் தனது இருப்பின் தொடக்கத்தையும் முடிவையும் அறிந்துகொள்ள முடியாதபடி ஓர் எல்லைக்குட்பட்டது என்றே தோன்றுகிறது. இருந்தும் என்னுடையதும் உன்னுடையதும் அப்படியானதுதானா? நாம் இருவரும் காதலர்களாயிருந்து மறுகணம் பிரிக்கப்பட்டுவிட்டோம். பிரிந்துவிட்டோம். ஒருவேளை, இனி சந்திக்காமலே போய்விடுவோம். இல்லை லாதே, அப்படி இல்லை. நான் எப்படி இறக்க முடியும்? நீ எப்படி இறக்க முடியும்? நாம் உயிரோடுதானே இருக்கிறோம். இறப்பது என்று சொன்னால் அதற்கென்ன அர்த்தம்? அதுவும் வெறும் ஒரு சொல்தான். என் இதயத்தில் எந்த எதிரொலியையும் ஏற்படுத்தாத ஒரு வெற்றொலிதான். லாதே, உயிரற்றுப் போனால் இருண்டு இறுகிப்போன குறுகிய குழியில் புதைக்கப்படுவோம். யாருடைய துணையுமில்லாத என் பள்ளிப் பருவத்தில் எனக்கு எல்லாமுமாக ஒருத்தி இருந்தாள். அவள் இறந்து போனாள். அவள் உடலைத் தொடர்ந்து போன நான் அவளது புதைகுழிக்கு அருகில் நின்றேன். சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்கிய பின் அதைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றை மேலே இழுத்தார்கள். மண்வெட்டியால் மண்ணை அள்ளிப் பெட்டியின் மீது போட்டபோது அச்சமூட்டும் அந்தப் பெட்டி மெல்லிய ஓசையை எழுப்பியது. அந்தப் பெட்டி முழுக்க மண்ணால் மூடப்படும் வரையிலும் அந்த ஓசை மேலும் மேலும் சன்னமாகக் கேட்டுக்கொண்டேயிருந்தது. புதைகுழிக்குப் பக்கத்தில் நான் நெகிழ்ந்துபோனவனாய், உலுக்கப்பட்டவனாய், இதயம் வெடிக்க உறைந்து நின்றிருந்தேன். ஆனால் எனக்கு என்னவானது என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. இனி என்ன நடக்கப் போகிறது என்றும் எனக்குத் தெரியாது. மரணம். புதைகுழி. இந்தச் சொற்களெல்லாம் எனக்குப் புரியவில்லை.

என்னை மன்னித்துவிடு. நேற்றைய நாள்! அதுதான் என் வாழ்வின் இறுதித் தருணமாக இருக்கும். ஓ என் தேவதையே! முதன்முதலாக, என் இதயத்தின் ஆழத்தில் முதன்முதலாக, உறுதியாக, ஆனந்தமான பரவச உணர்வு ஒளிவிட்டது. அவள் என்னை நேசிக்கிறாள். அவள் என்னை நேசிக்கிறாள். உன் இதழ்களிலிருந்து கிளர்ந்தெழுந்த அந்தப் புனிதமான காதல் இதோ இன்னும் என் உதடுகளில் எரிந்துகொண்டிருக்கிறது. என் இதயத்தில் புத்துணர்வும் பரவசமும்மிக்க ஒரு வெம்மை. மன்னித்து விடு! என்னை மன்னித்து விடு!

மனமார்ந்த உன் முதல் பார்வையிலிருந்தும், முதன்முதலில் கை குலுக்கியபோது அதிலிருந்த அழுத்தத்திலிருந்தும் நீ என்னை விரும்புகிறாய் என்பதை நான் அறிந்திருந்தேன். இருந்தும் மீண்டும் இங்கிருந்து சில நாட்கள் வெளியில் இருந்த வேளையிலும், உன்னருகில் ஆல்பர்ட்டைப் பார்த்தபோதும் பெருத்த சந்தேகங்களால் நம்பிக்கை இழந்திருந்தேன்.

ஒரு மோசமான விருந்தின்போது என்னிடம் பேச முடியாமல், என்னுடன் கைகுலுக்க முடியாமல் போய்விட, நீ எனக்குப் பூக்களை அனுப்பினாயே, நினைவிருக்கிறதா? ஓ! அந்தப் பூக்களுக்கு முன்னால் இரவெல்லாம் நான் மண்டியிட்டுக் கிடந்தேன். அந்தப் பூக்கள்தான் என் மீதான உன் காதலை உறுதிப்படுத்தின. ஆனால் ஐயகோ! அந்த நம்பிக்கைகள் எல்லாம் நிறமிழந்து போயின. சொர்க்கத்தின் ஆசிர்வாதங்கள் நிறைந்த, அருளே வடிவான புனித தேவதையின் அன்பையும் கருணையையும் அவன் இழந்துவிட்டான்.

இவையெல்லாம் நிலையில்லாதவை. அவ்வப்போது வந்து செல்பவை. ஆனால் நேற்று உன் இதழ்களிலிருந்து உறிஞ்சிய உயிர்த்தேனை, இப்போது எனக்குள் நான் உணர்வதை, மரணத்துக்குப் பின்னான எந்தவொரு கணமும் மாய்க்க இயலாது, அது காலத்தில் வற்றாது. அவள் என்னை நேசிக்கிறாள். இந்தக் கரங்கள் அவளைத் தழுவின. இந்த உதடுகள் அவளுடைய இதழ்களின் மீது நடுங்கி ஒன்றின. இந்த வாய் அவளுடைய குரலுடன் சேர்ந்து பிதற்றியது. அவள் என்னுடையவள். நீ என்னுடையவள். ஆம் லாதே! எப்போதும் நீ என்னுடையவள்.

ஆல்பர்ட் உன் கணவன் என்பதற்கு என்ன அர்த்தம்? கணவன். அது இந்த உலகத்திற்கு. நான் உன்னை நேசிப்பதும் உன்னை அவனிடமிருந்து பிரித்து எனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதும் இந்த உலகத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு பாவம். பாவமா? நல்லது. அதற்காக என்னை நானே தண்டித்துக்கொள்கிறேன். நான் இந்தப் பாவத்தை அதன் பரவசமிக்க அனைத்து ஆனந்தத்துடன், என் இதயத்தின் ஆக்கத்தையும் ஆற்றலையும் மீட்டுக் கொள்ளுமளவு ருசித்துப் பருகிவிட்டேன். அந்தக் கணத்திலிருந்து நீ என்னுடையவளாகிவிட்டாய். லாதே, நீ என்னுடையவள். என் தெய்வத்திடம், உன் தெய்வத்திடம் போகிறேன். அவரிடத்தில் நான் குறைகளை எடுத்துச் சொல்வேன். நீ வந்து சேரும்வரை அவர் எனக்கு ஆறுதல் தந்திருப்பார். அதன் பிறகு நான் உன்னிடம் பறந்து வந்து உன்னைப் பற்றி இறுக்கி, எல்லையின்மையின் முகத்திற்கெதிரே, முடிவற்ற தழுவலுடன் இணைந்துவிடுவேன்.

இது கனவல்ல. கானல் நீருமல்ல. கல்லறையை நெருங்கிவிட்ட நான் இன்னும் தெளிவாகக் காண்கிறேன். நிச்சயமாய் நாம் இருப்போம். மீண்டும் சந்திப்போம். உன் தாயைக் காண்போம். நான் அவளைத் தேடிக் கண்டுபிடித்து என் இதயத்தில் உள்ளதையெல்லாம் அவளிடம் கொட்டித் தீர்ப்பேன். உன் அம்மா! உன்னைப் போலவே இருக்கும் உன் அம்மா!

பதினோரு மணியளவில் வெர்தர் தன் வேலைக்காரனிடம் ஆல்பர்ட் வீடு திரும்பிவிட்டானா என்று விசாரித்திருக்கிறான். அவன் வந்துவிட்டதாயும், அவனது குதிரை போவதைப் பார்த்ததாயும் சொன்னான். பிறகு வெர்தர் அவனிடம் ஒட்டப்படாத இந்தக் குறிப்பைத் தந்திருக்கிறான்.

நான் புறப்படவுள்ள பயணத்திற்கு உன்னுடைய கைத்துப்பாக்கிகளை இரவலாகத் தரமுடியுமா? விடைபெறுகிறேன்.

அன்றிரவு லாதே தூங்கவேயில்லை. கொந்தளிக்கும் மனப்போராட்டத்தில் இருந்தாள். அவளுடைய இதயத்தில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் மோதின. அவளையும் மீறி, வெர்தரின் அணைப்பிலிருந்த மூர்க்கத்தை அவளது மார்பில் அழுத்தமாக உணர்ந்தாள். அதே வேளை களங்கமற்ற வெகுளித்தனமும் எதைப் பற்றியும் கவலைப்படாத தன்னம்பிக்கையும் கொண்டிருந்த முந்தைய நாட்களின் பன்மடங்கு அழகையும் கண்டாள். வெர்தர் வந்துபோனதைப் பற்றி அறிந்த பிறகு அவள் கணவனின் பார்வையையும், வெறுப்பும் கிண்டலும் கலந்த கேள்விகளையும் இப்போதே நினைத்துப் பார்த்து பயந்தாள். அவள் எப்போதும் எதையும் மறைத்ததில்லை. பொய் சொன்னதில்லை. ஆனால் முதன்முறையாக இப்போது தவிர்க்கமுடியாமல் அப்படிச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அவள் உணர்ந்த தயக்கமும் தர்மசங்கடமுமே அந்தத் தவறை அவள் கண்களில் ஒரு பெரிய விஷயமாகப் புலப்படுத்தியது. இருந்தும் அவளால் வெர்தரை வெறுக்கவும் முடியவில்லை. அவனை மறுபடியும் பார்க்கப் போவதில்லை என்று தனக்குத்தானே உறுதி மேற்கொள்ளவும் முடியவில்லை. விடியும்வரை அழுதுகொண்டேயிருந்தாள். ஓய்ந்துபோய் களைத்து தூக்கத்தில் அவள் ஆழ்ந்து கிடந்தாள். அதனால் அவள் கணவன் திரும்பியபோது அவளால் எழுந்துகொள்ளவோ உடுத்திக்கொள்ளவோகூட முடியவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலாக அவளுடைய இருப்பை அவளால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாய் உணர்ந்தாள். கண்ணீருடனே தூக்கமின்றிக் கழித்த இரவின் தடயங்களை அவன் கண்டுகொள்வான் என்று நடுங்கியிருந்த அவளிடம் அவன் அப்படி எதுவுமே கேட்காதது அவளது குழப்பத்தை மேலும் அதிகரித்தது. எனவே அவனை அவள் அவசரமாகத் தழுவியபடி வரவேற்றாள். காதலும் மகிழ்ச்சியுமான தழுவலாக இல்லாமல் அது பதற்றமும் குற்றவுணர்ச்சிமிக்கதாயும் இருக்கவே ஆல்பர்ட்டின் கவனத்தை ஈர்த்தது. சில கடிதங்களையும் பெட்டிகளையும் திறந்து பார்த்த பிறகு, ஏதாவது நடந்ததா அல்லது யாரும் வந்து போனார்களா என்று கடுகடுப்புடன் கேட்டான். முந்தைய நாள் வெர்தர் வந்து ஒரு மணி நேரம் இருந்ததாய் தயக்கத்துடன் சொன்னாள். ‘சமயம் பார்த்துத்தான் வருகிறான் அவன்’ என்று சொல்லிவிட்டுப் படிக்கும் அறைக்குச் சென்றான். கால் மணி நேரம் வரையிலும் லாதே தனியாக அங்கேயே இருந்தாள். அவளது நேசத்திற்கும் மரியாதைக்கும் உரிய கணவன் அங்கிருந்தது அவளது மனத்தில் புதிய எண்ணங்களைத் தூண்டியது. அவனுடைய கனிவையும் பெருந்தன்மையையும் நேசத்தையும் எண்ணிப் பார்த்த அவள் அவற்றுக்குத் தகுந்தபடி தான் நடந்துகொள்ளாததை நினைத்துத் தன்னையே நொந்துகொண்டாள். புரிந்துகொள்ள முடியாத ஓர் உந்துதல் அவனைத் தொடர்ந்து செல்லும்படி தூண்டியது. 

வழக்கமாகச் செய்துகொண்டிருக்கும் தன் கைப்பின்னலை எடுத்துக்கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றாள். அவனுக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்டாள். எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டு மேசையில் அமர்ந்து அவன் எழுதத் தொடங்க, அவள் அங்கேயே உட்கார்ந்து பின்னல் வேலையில் ஈடுபட்டாள். இப்படியே ஒரு மணி நேரம் வரை அவர்கள் ஒன்றாக அந்த அறைக்குள் இருந்தார்கள். அதன் பிறகு ஆல்பர்ட் எழுந்து அறைக்குள் நடமாடத் தொடங்கினான். லாதே அவனிடம் பேசினாள். ஆனால் அவன் அளவாகப் பதில் சொன்னான். சிலசமயம் ஒன்றுமே சொல்லவில்லை. மறுபடியும் தன் இருக்கையில் உட்கார்ந்துவிட்டான். கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு மறைத்து வைக்க முயன்ற துக்ககரமான தொடர்ச்சியான எண்ணங்கள் மீண்டும் அவளை ஆட்கொண்டன.

வெர்தரின் வேலைக்காரனின் வருகை அவளைப் பலத்த தர்மசங்கடத்தில் தள்ளியது. ஆல்பர்ட்டிடம் அவன் வெர்தர் எழுதித் தந்த குறிப்பைத் தந்தான். ஆல்பர்ட் பதற்றப்படாமல் தன் மனைவியைப் பார்த்துச் சொன்னான். ‘கைத்துப்பாக்கிகளை எடுத்துக் கொடு!’ ‘அவனுடைய பயணத்திற்கு என் வாழ்த்துகள்!’ என்றான் அந்த இளைஞனிடம். இது அவளுக்குப் பெருத்த இடி விழுந்தது போலிருந்தது. எழுந்துகொள்ள முயன்று தடுமாறினாள். அவளுடைய உணர்ச்சிகளையே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. மெல்ல அவள் சுவர் அருகில் சென்று நடுக்கத்துடன் அவற்றை எடுத்துத் தூசியைத் துடைத்துவிட்டுத் தயங்கினாள். ஆல்பர்ட்டின் துளைக்கும் பார்வை அவளைக் கட்டாயப்படுத்தாது இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் தாமதித்திருப்பாள். உயிர் கொல்லும் அந்த ஆயுதங்களை அந்த இளைஞனிடம் கொடுத்த அவள் ஒரு வார்த்தையும் பேச முடியாமல், அவன் போனதுமே தன் பின்னல் துணியைத் திரட்டியெடுத்துக் கொண்டு வெளிப்படுத்த முடியாத வேதனையோடு தனது அறைக்குள் சென்றாள். 

அவளது இதயம் அனைத்து விதமான அபாயங்களையும் முன்னறிவித்தது. முதலில் அவள் தன் கணவனின் காலில் விழுந்து எல்லாவற்றையும், முதல் நாள் மாலையில் நடந்தவற்றையும் தனது தவறுகளையும் இப்போது தான் அஞ்சும் தீயசகுனங்களையும் சொல்லிவிடத்தான் நினைத்திருந்தாள். ஆனால் அப்படிச் சொல்வதினால் என்ன பயன் விளையப் போகிறது என்று அவளால் உத்தேசிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் தன் கணவன் வெர்தரைச் சென்று பார்த்து வருவான் என்று மட்டுமே அவள் எதிர்பார்க்க முடியும். உணவருந்த ஏற்பாடானது. வெறுமனே நலம் விசாரிக்க வந்த லாதேவின் தோழி ஒருத்தியை அவள் விடைபெற்றுச் செல்ல அனுமதிக்காமல் இருத்தியதால், உணவருந்தும் போதான பேச்சு சுமுகமாக இருந்தது. அவர்கள் தங்களையே கட்டுப்படுத்திக்கொண்டனர். உதிரி விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். நடந்தவற்றை மறந்துவிடவும் முடிந்தது.

வேலைக்காரன் கைத்துப்பாக்கிகளைக் கொண்டுவந்து வெர்தரிடம் தந்தான். லாதேதான் அவற்றை எடுத்துக் கொடுத்தாள் என்று தெரிந்ததும் அவன் அந்தத் துப்பாக்கிகளை மிகுந்த திருப்தியுடன் பெற்றுக்கொண்டான். ரொட்டியையும் வைனையும் தருவித்துக் கொண்ட அவன், வேலைக்காரனைப் போய் சாப்பிடச் சொல்லிவிட்டு எழுத முனைந்தான்.

‘அவை உன் கைகளால் தீண்டப்பட்டவை. அவற்றிலிருந்த தூசியை நீ துடைத்துத் தந்திருக்கிறாய். நீ தொட்டவை என்பதால் அவற்றை நான் ஆயிரம் முறை முத்தமிட்டேன். தேவலோகத்தின் அற்புத தேவியே, நீ என்னுடைய தீர்மானத்தை வழிமொழிந்திருக்கிறாய். லாதே, நான் உன் கரங்களில்தான் மரணத்தைத் தழுவிக்கொள்ள விரும்பினேன். நீயே எனக்கு ஆயுதங்களைத் தந்திருக்கிறாய். ஐயோ! இப்போது தழுவிக்கொள்ளப் போகிறேன். என்னுடைய பணியாளை எல்லாவற்றையும் சொல்லும்படி கேட்டேன். அவற்றை நீ எடுத்துத் தந்தபோது நடுங்கியிருக்கிறாய். எனக்கு நீ விடைகொடுக்கவில்லை. ஐயோ! நீ விடை கொடுக்கவில்லை. என்னை உனக்காக எப்போதைக்குமாய் முத்திரையிட்டு வைக்கப்போகும் அந்தத் தருணத்துக்காக நீ உன் மனத்தை மூடிக்கொள்வது உனக்குச் சாத்தியமா? லாதே, ஆயிரம் ஆண்டுகளானாலும் அந்த முத்திரையை அழிக்க முடியாது. உனக்காகத் தன்னையே எரித்துக்கொள்பவனை உன்னால் வெறுக்க முடியாது.’

உணவிற்குப் பிறகு தன் வேலைக்காரனிடம் எல்லாவற்றையும் தயார்நிலையில் வைக்கும்படி சொல்லியிருக்கிறான். ஏராளமான தாள்களைக் கிழித்துப் போட்டிருக்கிறான். வெளியே சென்று தனக்கிருந்த சில சில்லறைக் கடன்களையெல்லாம் நேர் செய்திருக்கிறான். வீடு திரும்பிய பிறகு மறுபடியும் நகர எல்லைக்கு வெளியே சென்றிருக்கிறான். மழை பெய்துகொண்டிருந்தபோதும் பிரபுவின் தோட்டம் வரை போயிருக்கிறான். அக்கம்பக்கம் நடந்து திரிந்துவிட்டு இரவானதும் திரும்பி வந்து எழுதியிருக்கிறான்.

‘வில்ஹெம், கடைசியாக ஒருமுறை நான் வயல்வெளிகளையும் காடுகளையும் வானத்தையும் பார்த்தேன். உன்னிடமிருந்தும், என் அம்மாவிடமிருந்தும் விடைபெறுகிறேன். அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். அவளை நீதான் தேற்றவேண்டும், வில்ஹெம். உங்கள் இருவருக்கும் கடவுள் அருள்புரிவாராக. எனது விவகாரங்கள் அனைத்தும் சரியாகவே இருக்கின்றன. விடைபெறுகிறேன். இனிய வேளைகளில் நாம் சந்திப்போமாக.

நான் உன்னை அவமதித்துவிட்டேன், ஆல்பர்ட். என்னை நீ மன்னித்துவிடுவாய். நான் உன் வீட்டின் அமைதியைக் குலைத்துவிட்டேன். உங்களிருவருக்கும் இடையில் சந்தேகங்களை விதைத்துவிட்டேன். விடைபெறுகிறேன். நான் முடிவை எட்ட இருக்கிறேன். என் மரணம் உன் மகிழ்வை மீட்டுத் தரட்டும். ஆல்பர்ட்! ஆல்பர்ட்! அந்த தேவதையை சந்தோஷமாக வைத்துக்கொள். கடவுளின் அருள் உனக்கு எப்போதும் உண்டு.’ 

மாலையில் வெகுநேரம் வரை அவன் ஏதேதோ காகிதங்களைத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவற்றில் பலவற்றையும் கிழித்துக் கணப்பில் போட்டுவிட்டான். நிறைய மூட்டைகளைக் கட்டி அவற்றில் வில்ஹெம்மின் முகவரியை எழுதினான். அவை எல்லாம் சின்னச் சின்னக் கட்டுரைகளும், முற்றுப்பெறாத சில விஷயங்களுமாய் இருந்தன. பெரும்பாலனவற்றை நான் கண்டேன். கணப்பை மூட்டிக்கொண்டு ஒரு குடுவையில் வைனை வரவழைத்த பிறகு வேலைக்காரனைச் சற்று தொலைவில், பிற பணியாட்களுடன் தூங்குவதற்காக அனுப்பிவிட்டான். காலையில் ஆறு மணிக்கு குதிரைகளுடன் வண்டி தயாராக இருக்க வேண்டுமென்று தன்னுடைய எஜமானன் சொல்லியிருப்பதால் சீக்கிரமே எழுந்துகொள்வதற்காக உடுத்தியிருந்த உடையுடன் அவன் படுத்துக்கொண்டான். 

பதினொரு மணிக்குப் பிறகு –

‘என்னைச் சுற்றி எல்லாமே உறைந்திருக்க என் இதயம் அமைதியாக இருக்கிறது. கடவுளே, உள உறுதியும் பெரும் உத்வேகமும் மிக்க இந்த கடைசித் தருணத்திற்காக உனக்கு நன்றி.

என் அன்பே, நான் சாளரத்தின் அருகே செல்கிறேன். சூழ்ந்திருக்கும் மழை மேகங்களுக்கிடையிலும் மின்னும் சில மீன்களைக் காண்கிறேன். இல்லை, நீங்கள் உதிர மாட்டீர்கள். முடிவற்ற ஒருவன் தன் இதயத்தில் உன்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறான். என்னையும்தான். உடுக் கூட்டங்களிலேயே மிக அழகான சார்லஸ் வெயினுடைய சுழல் நட்சத்திரங்களைக் காண்கிறேன். நேற்றிரவு நான் உன்னிடமிருந்து புறப்பட்டு, வாசல் கதவை விட்டு வெளியே வந்தபோது அது என் எதிரில் இருந்தது. எப்போதுமே அதை மிகுந்த போதையுடன் பார்த்திருப்பேன். கைகளை மேலுயர்த்தி அதை ஒரு சின்னமாக, நான் அனுபவித்த பெரும் பரவசத்தின் ஒரு துளியாகக் கண்டிருப்பேன். ஓ லாதே, உன்னை எனக்கு நினைவுபடுத்தாததென்று என்ன இருக்கிறது? நீ எப்போதும் என்னை நினைத்துக்கொண்டிருப்பதில்லையா? உன் புனிதமான கைகள் தீண்டிய ஒவ்வொரு சின்னச் சின்னப் பொருட்களைக்கூட நான் ஒரு குழந்தையைப் போல, எப்போதும் பத்திரப்படுத்தி வைக்கவில்லையா?

இதோ எனக்குப் பிரியமான உன் நிழற்படம். எனது மரணத்தின்போது இதை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன், லாதே. இதை எப்போதும் என் நினைவாக வைத்திருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இதன் மீது நான் ஆயிரமாயிரம் முறை முத்தமிட்டிருக்கிறேன். நான் வெளியில் செல்லும்போதும், திரும்பி உள்ளே வரும்போதும் இதனிடம் ஆயிரம் வந்தனங்களைச் சொல்லியிருக்கிறேன்.

என் உடலை நல்லடக்கம் செய்யுமாறு கேட்டு உன் தந்தைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தேவாலயத்தின் சுற்றுப்புறத் தோட்டத்தில் பின்பக்க மூலையில் வயல்வெளிகளுக்குப் போகும் பாதையில் இரண்டு எலுமிச்சை மரங்கள் உள்ளன. அங்கேதான் நான் உறங்க விரும்புகிறேன். அவர் தனது நண்பனுக்காக இதைச் செய்ய முடியும். செய்வார். நான் கேட்டுக்கொண்டதுடன் நீயும் அவரை வற்புறுத்தவேண்டும். பரிதாபமான ஒரு துரதிர்ஷ்டசாலியின் கல்லறையருகே மதப்பற்றுமிக்க கிறிஸ்துவர்கள் கல்லறையை அமைக்கத் தேவையில்லை. பாதையோரத்திலோ யாருமற்ற பள்ளத்தாக்கிலோ என்னைப் புதைக்க விரும்பியிருக்கலாம். என்னைப் புதைத்த இடத்தில் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கும் கல்லைப் போதகர்களும் மதத் தலைவர்களும் கடந்துபோகும்போது சிலுவையிட்டுச் செல்லக்கூடும். ஏழைப் பங்காளன் யாரும் ஒரு துளி கண்ணீர் சிந்தக்கூடும்.

இதோ, லாதே, மரணத்தின் அமுதத்தைப் பருக இருக்கும் இந்தக் கோப்பையைக் கையில் எடுக்க அஞ்ச மாட்டேன். இதை நீதான் என் கைகளில் தந்தவள் என்பதால் பயப்பட மாட்டேன். என்னுடைய வாழ்வின் எல்லா விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறிவிட்டன. குளிர்ந்து இறுகிய மிக்க திரைகளற்ற மரணத்தின் கதவை இதோ தட்டப்போகிறேன்.

உனக்காக மரிக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. லாதே, உனக்காக என்னையே நான் தியாகம் செய்கிறேன். உன்னுடைய வாழ்வின் அமைதியையும் ஆனந்தத்தையும் என்னால் மீட்டுத்தர முடியுமென்றால் உறுதிகொண்ட நெஞ்சுடன், சந்தோஷமாக நான் இறந்துபோவேன். என்ன செய்வது? தாங்கள் நேசித்தவர்களுக்காக ரத்தம் சிந்தி, தம் மரணத்தின் மூலம் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்வைப் பன்மடங்கு மேன்மைகளுடன் தொடங்கி வைக்கும் பாக்கியம் புனிதமான சில ஆன்மாக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

என்னை இதே உடைகளுடன் புதைத்திட வேண்டுமென விரும்புகிறேன், லாதே. இவற்றை நீ தொட்டுப் புனிதப்படுத்தியிருக்கிறாய். எனக்காக இந்த உதவியைச் செய்ய வேண்டுமென உன் தந்தையிடம் கேட்டிருக்கிறேன். என் சவப்பெட்டியைச் சுற்றி என் ஆன்மா அலைந்து கொண்டுதானிருக்கும். என் உடையில் அவர்கள் எதையும் தேட வேண்டாம். குழந்தைகளுக்கு நடுவில் முதன்முதலாக நான் உன்னைச் சந்தித்தபோது நீ உன் மார்பில் அணிந்திருந்த வில் வடிவிலான ஊதா நிற வில்லை இதோ என்னிடம் இருக்கிறது. குழந்தைகளுக்கு நிறைய முத்தம் கொடுத்து மகிழ்ச்சியற்ற அவர்களது நண்பனின் விதியை எடுத்துச் சொல். என் இனிய குழந்தைகள், அவர்கள்தான் என் மீது எப்படியெல்லாம் ஏறிக் குதித்து விளையாடினார்கள்! அந்த முதல் சந்திப்பிலிருந்து நான் உன்னிடம் எவ்வளவு லயித்துப் போனேன்! உன்னிடமிருந்து விலக முடியாதவனாய் ஆனேன்! இந்த வில்லையும் என்னோடு புதைக்கப்படட்டும். என் பிறந்த நாளின் போது நீ இதை எனக்குத் தந்தாய். இதைத்தான் நான் எவ்வளவு ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டேன். ஐயோ, அந்தப் பாதை என்னை இங்கு கொண்டுவந்து சேர்க்கும் என்று நான் நினைக்கவேயில்லை. அமைதியாக இரு. நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக இரு.

அவை குண்டுகளிட்டு வைக்கப்பட்டுள்ளன. மணி பன்னிரண்டு அடிக்கிறது. சரி, இருக்கட்டும். லாதே, போய்வருகிறேன். லாதே, விடைபெறுகிறேன்.’ 

துப்பாக்கி வெடித்த ஓசையையும் அதன் நெருப்பையும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பார்த்திருக்கிறார். அதற்குப் பின் எந்தச் சத்தமும் இல்லாமல் எல்லாமே வழக்கம்போல் இருந்ததால் அதற்கு மேல் அதைப் பொருட்படுத்தவில்லை.

*

கதேயின் “The Sorrows of Young Werther” நாவலை “காதலின் துயரம்” என்ற தலைப்பில் எம்.கோபாலகிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். 2006ம் ஆண்டு தமிழினி வெளியிட்ட இந்த நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ளது.