மனவழுத்தம் கொண்டவர் – டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் – தமிழில்: கார்குழலி

by கார்குழலி
0 comment

மனவழுத்தம் கொண்டவர் பயங்கரமானதும் முடிவேயில்லாததுமான உணர்வுப்பூர்வமான வலியில் இருந்தார். அதுகுறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ளவோ விவரித்தோ கூறமுடியாத அடிப்படையான பேரச்சமே வலியின் ஒரு கூறாகவும் அது நிகழக்கூடிய ஒரு காரணியாகவும் இருந்தது.

உணர்வுப்பூர்வமான வலியை விவரிப்பதே மனக்கசப்பூட்டுவதாக இருந்தாலும் அது நிகழும் சூழல் குறித்தாவது சொல்லலாம் — அதன் வடிவம், இழையமைப்பு ஆகியவை பற்றி உள்ளது உள்ளபடியே சொல்வது மூலம் அதன் காரணவியலுடன் தொடர்புடைய சூழ்நிலையைப் பற்றி விவரிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார் மனவழுத்தம் கொண்டவர்.

எடுத்துக்காட்டாக, மனவழுத்தம் கொண்டவர் குழந்தையாக இருக்கும்போதே விவாகரத்து பெற்றிருந்த அவள் பெற்றோர், தங்களுடைய நோயுற்ற விளையாட்டுகளில் அவளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினர். மனவழுத்தம் கொண்டவருக்குப் பல்சீரமைப்பு மருத்துவம் தேவைப்பட்ட போது பெற்றோர் இருவருமே அடுத்தவர் தான் அதற்கான செலவை ஏற்க வேண்டுமெனச் சொன்னார்கள். விவாகரத்துத் தீர்ப்பின் மருத்துவச் சட்ட தெளிவற்றதன்மை தான் இதற்குக் காரணம் என்று இடைமறிப்பார் மனவழுத்தம் கொண்டவர். பெற்றோர் இருவருமே பெரும் வசதி படைத்தவர்கள், செலவைத் தானே ஏற்க வேண்டுமென்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டால் பல்லைக் கடித்துக்கொண்டு அதை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை மனவழுத்தம் கொண்டவரிடம் தனித்தனியே சொன்னார்கள். அது பணமோ பல்சீரமைப்போ குறித்த பிரச்சினை அல்ல என்றும் கொள்கை சார்ந்த விஷயம் என்றும் விளக்கம் சொன்னார்கள்.

வயதுவந்த பிறகு ஆதரவாக இருக்கும் தோழி ஒருவரிடம் தன்னுடைய பல்சீரமைப்புக்கான செலவு குறித்து நடந்த நச்சுத்தன்மையுள்ள போராட்டத்தைப் பற்றியும் அந்தப் போராட்டத்தின் பலனாக ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான வலியையும் பற்றி எடுத்துச் சொல்ல முயன்றபோது பெற்றோர் இருவரும் இதைக் கொள்கைசார்ந்த விஷயமாக பார்த்தது போல இருந்தாலும் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான செய்தியைப் பெறும் மகளின் மனநிலையைக் கருத்தில் கொள்ளவில்லை. மகளின் முகவமைப்பு நலனைக் காட்டிலும் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டு வெற்றி பெறுவதே முக்கியமாக இருந்தது. ஒரு கோணத்திலிருந்து இதை ஒரு வகையில் புறக்கணிப்பு அல்லது கைவிடுதல் அல்லது வெளிப்படையான கொடுமைப்படுத்துதல் என்றே கூடச் சொல்லலாம் என்றும், இந்தக் கொடுமைப்படுத்துதல் தான் — இந்தக் கணிப்பை மனநல ஆலோசகர் ஏற்றுக்கொண்டார் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லுவாள் — அவள் தினமும் ஆளாகித் தவிக்கும் முடிவேயில்லாத வளர்ந்தவர்களுக்கான மனக்கசப்புக்கும் பொறியில் சிக்கியது போல நம்பிக்கையிழந்து தவிப்பதற்கும் காரணம் என்று தோன்றும்.

மனநல ஆலோசகர் குறிப்பிட்டிருந்த மனவழுத்தம் கொண்டவருக்கான ஆதரவு அமைப்பில் அங்கம் வகித்த, மருத்துவத்திலும் முதுகலையிலும் பட்டம் பெற்றிருந்த, சுமார் அரை டஜன் பேரும் அவளது குழந்தைப் பருவத்தில் அறிமுகமான தோழிகள் அல்லது பள்ளிக்காலத்தின் பல நிலைகளில் அறைவாசிகளாக இருந்த பெண்களாவார்கள். மனவழுத்தம் கொண்டவரைக் காட்டிலும் பேணி வளர்க்கப்பட்டவர்களாகவும் சேதமில்லாதவர்களாகவும் இருந்ததோடு தற்போது வெவ்வேறு நகரங்களில் அவர்கள் வசித்து வந்தனர். மனவழுத்தம் கொண்டவரைப் பல வருடங்களாகக் கண்ணால் கூடப் பார்க்காதவர்களாகவும் இருந்தார்கள். அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட பகிர்தல், ஆதரவு, அந்த நாளின் துயரம் குறித்த உண்மையான பார்வையை அவள் பெற வேண்டி தேர்ந்தெடுக்கப்பட்ட சில சொற்கள், அவளை நடுநிலைப்படுத்தி அடுத்த நாளின் உணர்வுப்பூர்வமான வேதனையைக் கடப்பதற்குத் தேவையான பலம், இவற்றைப் பெறுவதற்காக மாலை நேரங்களில் தொலைதூர அழைப்பு மூலம் அவர்களுடன் தொடர்புகொண்டாள்.

அவர்களைத் தொலைபேசியில் அழைக்கும்போது அவர்களுடைய சுறுசுறுப்பான, துடிப்புமிக்க, பெரும்பாலும் வலியற்ற தொலைதூர வாழ்க்கையிலிருந்து பிடித்து இழுத்துவந்து துயரத்தில் தள்ளும் அலுப்பூட்டும் பேச்சைப் பேசுவதற்கும் சுய பச்சாதாபத்தையும் வெறுப்பையும் ஊட்டுவதற்கும் மன்னிப்புக் கேட்பாள். கூடவே தன் நிரந்தரமான விவரிக்க முடியாத வயது வந்தவர்களுடைய வலிக்குப் பெற்றோரின் அதிர்ச்சியூட்டும் விவாகரத்தைக் காரணம் சொல்வதும் இழிவான வகையில் தன்னைப் பயன்படுத்தியதற்காகப் பெற்றோரைக் குற்றஞ்சாட்டுவதும் புலம்பல் மற்றும் பரிதாபகரமான செயல் என்று நம்பி, அதுகுறித்து ஆதரவு அமைப்பிலிருந்த நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது கவனமாக இருந்தாள். அவளின் பெற்றோர் — மனவழுத்தம் கொண்டவர் இதைக் கண்டுகொள்வதற்கு மனநல ஆலோசகர் உதவியது போல — அந்த நேரத்தில் அவர்கள் பெற்றிருந்த உணர்வுப்பூர்வமான வளத்தைக் கொண்டு, இயன்ற அளவு சிறப்பான உதவியைச் செய்தனர். இறுதியில் தனக்குத் தேவையான பல்சீரமைப்புச் சேவை கிடைத்தது என்பதையும் சோர்வாகச் சிரித்தபடியே சொல்வார் மனவழுத்தம் கொண்டவர்.

ஆதரவு அமைப்பிலிருந்த முன்னாள் நண்பர்களும் வகுப்புத் தோழர்களும் மனவழுத்தம் கொண்டவர் தன்மீதே காண்பிக்கும் கடுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது மனவழுத்தம் கொண்டவரிடமிருந்து அவளையுமறியாமல் அழுகை வெடித்துக் கிளம்பும். அசௌகரியமான நேரத்தில் அழைத்து தன்னைப் பற்றியே பேசும், எல்லோரும் வெறுத்து ஒதுக்கும், அந்தத் துயரம் தோய்ந்த நண்பர் தாம் தான் என்பது தனக்குத் தெரியும் என்பார். கொஞ்சமும் மகிழ்ச்சியே இல்லாத பாரமாக இருக்கிறோமென்பது வேதனையூட்டும் அளவுக்கு தனக்குத் தெரியும் என்றும் இப்படிக் கொஞ்ச நேரமாவது அழைத்துப் பேசி அன்பும் ஆதரவும் பெறக்கூடிய நண்பர் ஒருவர் தனக்கு இருக்கிறார் என்பதற்காகப் பெருத்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நண்பரின் நிறைவான, மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான வாழ்வு முதன்மை பெற்று அவர் தொலைபேசுவதை நிறுத்துவதற்கு முன் தெரிவித்து விடுவார்.

ஆதரவு அமைப்பில் இருப்பவர்களைப் பின்னிரவுகளில் தொலைதூர அழைப்பில் தொடர்பு கொண்டு உணர்வுப்பூர்வமான வலியைப் பற்றிப்பேசும் தன்னுடைய நயமற்ற செயலின் மூலம் அவர்களுக்குப் பாரத்தைத் தருவதால் ஏற்படும் அவமானமும் போதாமையும் கலந்த உணர்வுகளைக் குறித்துத் தான் மனவழுத்தம் கொண்டவர் மனநல ஆலோசகருடனான கலந்தாய்வில் பெரும்பாலான நேரங்களில் அலசிக் கொண்டிருந்தார். ஆதரவு அமைப்பில் இருப்பவருடன் பிரச்சினையைப் பகிர்ந்துகொண்டிருக்கும் போது அந்த நண்பர் தன்னால் உதவியேதும் செய்ய முடியாதது குறித்த வருத்தத்தைத் தெரிவித்து, தொலைபேசி உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, மனவழுத்தம் கொண்டவரின் விரல்களைத் தன்னுடைய கால்சட்டையின் மடிப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு, அவருடைய முழுமையான துடிப்புமிக்க தொலைதூர வாழ்க்கையின் தேவைகளைக் கவனிக்கச் சென்றுவிட்ட பிறகு, மனவழுத்தம் கொண்டவர் தொலைபேசியின் வெற்று ரீங்காரத்தைக் கேட்டபடி முன்னிருந்ததைக் காட்டிலும் தனித்திருப்பது போலவும் போதாமை ஒத்துணர்வு இல்லாமை என பலவேறுப்பட்ட உணர்வுகளுடன் அமர்ந்திருப்பார். ஆதரவு அமைப்பிலிருக்கும் தொலைதூர நண்பரை அழைக்கும் போது அவருடைய நீண்ட மௌனம், உற்சாகமூட்டப் பயன்படுத்தும் தேய்ந்து போன வழக்குகள் இவையெல்லாம் நம்மீது ஒட்டிக்கொண்டு மகிழ்ச்சியற்ற பாரமாக இருக்கும் ஒருவர் குறித்த அலுப்பும் குற்றவுணர்வும் அவர்கள் குரலில் தொனிப்பதைக் காட்டிக் கொடுப்பதாகவும் கற்பனை செய்துகொள்கிறேன் என்று மனநல ஆலோசகரிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு தோழியும் பின்னிரவில் தொலைபேசி ஒலிக்கும்போது ஏற்படும் அலுப்பிலிருந்தும் எரிச்சலில் இருந்தும் தப்பிக்க வழியில்லாமல் சிக்கிக்கொண்டதையும் அறையில் இருக்கும் மற்றவர்களிடம் முகம் சுளிப்பதை அல்லது உரையாடலுக்கு நடுவே பொறுமையிழந்து கடிகாரத்தைப் பார்ப்பதை அல்லது முகபாவத்தில் அபிநயிப்பதைக் கற்பனை செய்து கொள்ள முடிகிறது என்பதையும் மனவழுத்தம் கொண்டவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போகையில், அவர்களின் முகபாவமும் அபிநயமும் நம்பிக்கையிழந்தது போலவும் தீவிரமாக மாறுவதையும் தன்னால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது என்பதை ஒப்புக்கொண்டார். ஆலோசகரின் கவனிக்கத் தகுந்த தன்னுணர்வின்றி செய்யும் பழக்கம் என்னவென்றால் மனவழுத்தம் கொண்டவர் சொல்வதை ஆதுரமாகக் கேட்டபடியே இரு கையின் விரல் முனைகளையும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பது போல மடியின்மீது வைத்துக்கொண்டு பல வடிவங்களைச் செய்து — சதுரமாக வட்டமாக கூம்பாக உருளையாக என — அவற்றை உன்னிப்பாக பார்த்தபடி அல்லது யோசித்தபடி இருப்பதுதான். மனவழுத்தம் கொண்டவருக்கு இந்தப் பழக்கம் பிடிக்கவேயில்லை என்றாலும் அது ஆலோசகரின் விரல்களும் நகங்களும் கவனத்தை ஈர்ப்பது போல இருந்ததால் தான் என்றும் அவற்றைத் தன்னுடையவற்றோடு ஒப்பிட்டதால் தான் என்பதையும் உடனடியாக ஒத்துக்கொண்டார்.

மனவழுத்தம் கொண்டவர் மூன்றாவது போர்டிங் பள்ளியில் படிக்கும்போது அறைத் தோழி ஒருவர் அவருடைய ஆண் தோழருடன் தொலைபேசியில் உரையாடும்போது ‘சிக்கிக்கொண்டேனே’ என்பதையும் அலுப்பை முகச்சாடையிலும் அபிநயத்திலும் காண்பிப்பதைப் பார்த்தாள். கடைசியில் பிரபலமும் கவர்ச்சியும் தன்னம்பிக்கையுமிக்க அந்தத் தோழி மனவழுத்தம் கொண்டவரிடம் மிகை அபிநயம் பிடித்து யாரோ கதவைத் தட்டுவது போன்ற பாவனையைச் செய்தார். நீண்ட நேரங்கழித்து ஒருவழியாக அதைப் புரிந்துகொண்ட மனவழுத்தம் கொண்டவர் அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே போய் கதவைத் தட்டி அந்தத் தொலைபேசி அழைப்பைத் தோழி துண்டிப்பதற்கு உதவி புரிந்திருக்கிறாள் என்பதைப் பகிர்ந்துகொண்டார். இந்த அதிர்ச்சியூட்டும் நினைவை ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்துகொண்ட மனவழுத்தம் கொண்டவர் பெயர்தெரியாத அந்தப் பரிதாபகரமான பையனாகத் தான் இருந்திருந்தால் எப்படி முடிவேயில்லாத பயங்கரமான அனுபவத்தை பெற்றிருப்போமென என விவரிக்க முயன்றாள். அந்த அனுபவத்தின் வாயிலாக வேறெதையும் விட அருகில் இருப்பவரிடம் அமைதியாக ஏதோவொரு காரணத்தை உண்டுபண்ணி அவளுடைய தொலைபேசி அழைப்பிலிருந்து தப்பிக்க வைக்க உதவும்படி கேட்க வேண்டிய நபராக இருந்துவிடுவோமோ என்பதே அச்சமூட்டுவதாக இருக்கிறது என்றாள்.

ஆதரவு அமைப்பிலிருக்கும் ஒவ்வொரு தோழியிடமும் அலுப்பும் எரிச்சலும் நெட்டித்தள்ளும் அந்தக் கணமே சொல்லி விடுங்கள் அல்லது இதைவிட முக்கியமான சுவாரசியமான வேலை இருந்தால் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி கடவுளுக்குப் பொதுவாக அதைத் தெரிவித்து விடுங்கள் என்றும் மகிழ்ச்சிக்குப் புறம்பாக ஒரு நொடியையும் தன்னுடன் செலவழிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டாள் மனவழுத்தம் கொண்டவர். இப்படிப்பட்ட ஒரு வேண்டுதல் தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க வேண்டி கேட்கப்படுவது இல்லையென்றும் மாறாக அழைப்பைத் துண்டிக்கவே கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொள்ளப்படும் ஒன்று என்றே புரிந்துகொள்ளப்படும் என்பது எனக்கு நன்றாகத் தெரியுமென்று மனநல ஆலோசகரிடம் உறுதியாகச் சொன்னாள் மனவழுத்தம் கொண்டவர்.

இறுதியில் மனவழுத்தம் கொண்டவரின் பல்சீரமைப்புக்கான செலவைப் பெற்றோர் இருவருமே சரிசமமாக ஏற்றுக் கொண்டார்கள்; இந்த உடன்பாட்டுக்கு வர தொழில்முறை நடுவர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தவணையையும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கற்றுத்தரும் கோடைகால முகாம்களுக்கான கட்டணத்தையும் ஓபோ பாடங்களுக்கான கட்டணத்தையும் கார் மற்றும் விபத்து காப்பீட்டையும் இயல்பற்ற வளர்ச்சியைக் கொண்ட முதுகுத் தண்டையும் மனவேதனை தரும் குண்டான நீளமான மூக்கைச் சரிசெய்யும் குருத்தெலும்பு அறுவை சிகிச்சைக்கான செலவையும் பகிர்ந்துகொள்வது குறித்தும் தான். இப்படிப்பட்ட உருவத்தோடு ஒரு நாளில் இருபத்தியிரண்டு மணிநேரம் பல்சீரமைப்புக்கான கம்பியையும் அணிந்துகொண்டு பள்ளி விடுதியின் கண்ணாடியில் பார்த்துக் கொள்வதென்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

*

மேலும், அவள் தந்தை மறுமணம் செய்துகொண்ட ஆண்டில், அரிய உறுதியான அக்கறையின் வெளிப்பாடாகவோ, அம்மா சொன்னதுபோல, அவளை ஒரே போடாகப்போட்டுக் கவிழ்ப்பது மூலம் அம்மாவின் அவமானவுணர்வையும் மீமிகைத்தன்மையையும் தூண்டவோ கடைசிக்கு முந்தைய பள்ளியின் குதிரையேற்றச் சங்கத்தில் சேர்வதற்குத் தேவையான முழுக் கட்டணம், ஜோத்பூர் கால்சட்டை, மட்டுமீறிய விலையுள்ள குதிரையேற்ற பூட்சுகள் எல்லாவற்றுக்கும் தேவையான பணத்தை ஒட்டுமொத்தமாகக் கொடுத்துவிட்டார். கோரமான இரவொன்றில் தந்தைக்குத் தொலைபேசிய போது குதிரையேற்றச் சங்கத்தில் இருக்கும் ஒரு சில பெண்கள் மட்டுமே கொஞ்சமேனும் தன்னைத் தோழியாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையும் தினமும் விடுதி அறையிலிருந்து உணவுக்கூடத்துக்குச் செல்வதற்கே மிகப்பெரிய தைரியம் தேவைப்பட்டது என்றாலும் அவர்களுடன் இருக்கும்போது பன்றிமூக்கு பல்சீரமைப்புக் கம்பி இவற்றினால் ஏற்படும் தாழ்வுணர்ச்சியில்லாமல் இருப்பதாகவும் மனம்திறந்து சொல்லியிருந்தாள்.

இருவருக்கும் இடையேயான சமரசத்தைக் கட்டமைக்க அவளுடைய பெற்றோரின் வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொண்ட தொழில்முறை நடுவர் வால்டர் (வால்ட்) டி. கெண்ட் ஜுனியர் பெருமதிப்பு பெற்ற முரண்பாட்டுத் தீர்வு வல்லுநர். இதுவரை வால்டர் (வால்ட்) டி. கெண்ட்டை மனவழுத்தம் கொண்டவர் நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவருடைய விசிட்டிங் கார்டைப் பார்த்திருக்கிறாள் — அடைப்புக்குறிக்குள் தன்னோடு இயல்பாகப் பழக விடுக்கும் அழைப்புடன் சேர்த்து — மேலும் அவளுக்குக் கேட்கும் வகையில் அவருடைய பெயர் எண்ணிக்கையேயில்லாத அளவு உச்சரிக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ஒரு மணிநேரத்துக்குக் கட்டணமாக, நூற்றி முப்பது அமெரிக்க டாலர்களுடன் சேர்த்து இதர செலவுகளுக்கான பில்லையும் வசூலித்தார் என்ற மலைப்பூட்டும் செய்தியும்.

மனவழுத்தம் கொண்டவர் பெருமளவில் ஆர்வமின்மையைத் தெரிவித்தாலும் ‘உள்மனக் குழந்தை அனுபவக் குவிய சிகிச்சை ஓய்வுநேர வார இறுதி’க்குச் சென்று வந்த பிறகு ஏற்பட்ட முக்கியமான உணர்வுப்பூர்வமான புரிதலொன்றை அவளுடைய ஆதரவு அமைப்பிலிருக்கும் தோழிகளிடம் சொல்லவேண்டுமென்று சிகிச்சைக்கு பதிவுசெய்து அதில் கலந்துகொண்டு திறந்த மனதோடு அந்த அனுபவத்தைப் பெறுவதற்குப்  பக்கபலமாக இருந்த மனநல ஆலோசகர் சொன்னார். உள்மனக் குழந்தை அனுபவக் குவிய சிகிச்சை ஓய்வுநேர வார இறுதியில் சிறு குழு நாடக சிகிச்சை அறையில் மற்ற உறுப்பினர்கள் மனவழுத்தம் கொண்டவரின் பெற்றோராகவும் பெற்றோரின் இணையர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் குழந்தைப் பருவத்தில் உணர்வுப்பூர்வ வலியை ஏற்படுத்திய பல்வேறு மனிதர்களாகவும் பாத்திரமேற்று நடித்தனர். மனவழுத்தம் கொண்டவர் வெளியே தப்பித்துப் போக முடியாதவாறு அவரை வட்டமாகச் சுற்றியபடி, அவரது வேதனையைத் தூண்டவும் வெளிக்கொண்டு வரவும் எழுதப்பட்ட வசனங்களை உணர்ச்சிமிகுதியுடன் பேசினார்கள். அது கடுந்துயரை ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான நினைவுகளை உடனடியாகத் தூண்டி அவளுடைய உள்மனக் குழந்தையை வெளியேவரச் செய்தது. கூடவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த குஷன்களை பலங்கொண்டமட்டும் திரும்பத் திரும்ப ஃபோம் மட்டை ஒன்றைக் கொண்டு தாக்கியும் கொச்சையான சொற்களால் திட்டியும் பல காலமாக அடக்கி வைத்திருந்த காயங்களையும் உணர்வுகளையும் வெளிக்கொணரும் – அகத்தைத் தூய்மைப்படுத்த உதவும் வெறியாட்டம் ஒன்றையும் நடத்தியது.

அதில் மிக முக்கியமானது, நடுவராகவும் கழிவுகளை ஈர்த்துக் கொள்பவராகவும் பாத்திரமேற்று ஒரு மணிநேரத்துக்கு நூற்றி முப்பது அமெரிக்க டாலர்களையும் இதர செலவுகளையும் கட்டணமாக வசூலித்த வால்டர் (வால்ட்) டி. கெண்ட் ஜுனியர் குறித்தும், அவர் செய்த அதே கழிவுகளை ஈர்த்துக் கொள்ளும் வேலையை அவள் ஒவ்வொரு நாளும் இலவசமாகவும் எதையும் மாற்றாகப் பெற்றுக் கொள்ளாமலும் செய்து வந்தாள் என்பது பற்றியும் மனதின் அடியாழத்தில் புதைந்திருந்த கடுங்கோபம். இப்படிப்பட்டச் செயலை ஒரு குழந்தையைச் செய்ய வைப்பதே நியாயமற்ற ஒவ்வாத ஒன்றென்றாலும், அவள் பெற்றோர் அதற்கும் மேலே போய், வால்டர் (வால்ட்) டி. கெண்ட் ஜுனியரின் பெருங்கட்டணமும் அதனால் ஏற்பட்ட தொல்லையும் குழந்தையும் மனவழுத்தம் கொண்டவளுமான அவளுடைய குற்றம்தான் என்பது போல நடந்து கொண்டனர். உண்மையில் ஒருவரோடு ஒருவர் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாத நேர்மையுடன் கலந்துபேசி தங்களுடைய நோய்மைப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாத அவளுடைய பெற்றோரின் இத்துப்போன இயலாமையினால் தான் என்பதை விடுத்து, பருத்த தொடைகளும் பன்றி மூக்கும்கொண்ட கழிவுகளைத் தின்னும் கெட்ட பெண்ணான அவளால் தான் என்பதுபோலவும் நடந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சி, தன்னுடைய அடிப்படையான தனியாச் சினம் சார்ந்த பிரச்சனைகளோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மனவழுத்தம் கொண்டவருக்கு உதவியாக இருந்தது என்று உள்மனக் குழந்தை அனுபவக் குவிமைய சிகிச்சை ஓய்வுநேர வாரஇறுதியின் சிறு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். எல்லோரின் முன்னிலையிலும் கத்திக் குஷன்களை அடிப்பது மனவழுத்தம் கொண்டவரை உணர்வுரீதியாகச் சுக்குநூறாக உடைத்துப் போட்டும் ஆற்றலிழக்கச் செய்தும் மன வேதனையூட்டுவதாகவும் வெட்கப்பட வைப்பதாகவும் இருந்ததால் வார இறுதிச் சிகிச்சை முடிவதற்கு முன்னர் அந்த இரவே விமானமேறி வீடு திரும்ப வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் அவரின் நலம்பெறும் பயணத்தில் உண்மையான திருப்பமொன்றை ஏற்படுத்தியிருக்கும் என்றும் சொன்னார்.

இதைத் தொடர்ந்து, உள்மனக் குழந்தை அனுபவக் குவிய சிகிச்சை ஓய்வுநேர வார இறுதியில் ஏற்பட்ட தகர்க்க வைக்கும் உணர்வுப்பூர்வமான புரிதல்களை மதிப்பீடு செய்யாமல், அவருக்குப் பக்கபலமாக இருக்கும் ஆதரவு அமைப்பின் இரண்டு மூன்று நம்பிக்கைக்குரிய தோழிகளிடம் மட்டும் சொல்லலாம் என்ற சமரசத்துக்கு மனவழுத்தம் கொண்டவரும் மனநல ஆலோசகரும் வந்தனர். இந்தப் புரிதல்கள் குறித்து பகிர்ந்துகொள்வதில் அவளுக்குத் தயக்கம் இருந்தது என்பதைக் கூறவும் அவை எப்படி பரிதாபகரமானதாகவும் பழிபோடுவதாகவும் (அதாவது அந்தப் புரிதல்கள்) தொனித்தன என்பதும் அவளுக்குத் தெரியுமென்றும் சொல்லவும் அனுமதி தந்தார். இந்த நேரத்தில் அவர் உயிர்வாழ ஒரு வருடத்துக்கும் குறைவான காலம் மட்டுமே இருந்தது. இந்தச் சமரசத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ‘பரிதாபகரமான’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘ஊறுபடத்தக்க’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முழுமனதுடன் ஒத்துக்கொள்ள முடியுமென்று ஆலோசகர் சொன்னார். ‘பரிதாபகரமான’ என்ற சொல் நச்சுத்தன்மையுள்ள சுய வெறுப்பைக் காட்டும் ஒன்றாகவும் சாதுர்யமாக கையாளப் பயன்படுத்தப்படுவதாகவும் கேட்பவரின் எதிர்மறையான தீர்ப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியாக அவருக்கு மனம்வருவதற்கு முன்னர் தானே தன்னை மிகுந்த மோசமாக எடைபோட்டுக் கொள்வதைக் காட்டிக்கொள்வதற்காகச் சொல்லப்படுவதாக ஆலோசகருக்குப் பட்டது.

ஆலோசகர் — வருடத்தின் குளிர்ச்சியான மாதங்களில், அவர் வீட்டிலிருந்த எண்ணற்ற சாளரங்கள் ஆபீஸ் அறையை குளிர்ச்சியாகவே வைத்திருந்ததால், கையால் பதப்படுத்தப்பட்ட சிவப்பிந்திய மான் தோலாலான கால்வரை நீளும் அங்கியொன்றை அணிந்துகொள்வார். மடியின்மீது அவருடைய கைகள் உருவாக்கும் வடிவங்களுக்கு கோரமான ஈரமிக்க தோல்நிறப் பின்னணியை அது கொடுத்தது. தங்களுக்கிடையே இருந்த சிகிச்சை சார்ந்த உறவின் ஏற்புடைமையால் நீடித்த மனோநிலைச் சீர்கேடுகூட உணர்வுப்பூர்வமாகக் கையாளும் தற்காப்பு உத்தியை உருவாக்கும் ஒன்றாக இருக்கக்கூடும் என்று சொல்ல முடிகிறது என்றார். மனவழுத்தத்தின் உணர்ச்சிவயப்பட்ட அசௌகரியம் அவள் சிந்தனையை வசப்படுத்தி வைத்திருக்கையில் எப்பாடுபட்டாவது புதைத்தே வைத்திருக்க வேண்டும் என்று விரும்பிய மனதின் அடியாழத்தில் அமிழ்ந்திருக்கும் குழந்தைப் பருவத்தின் காயங்களை உணர்வதைத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் அது.

பல மாதங்களுக்குப் பிறகு மனவழுத்தம் கொண்டவரின் ஆலோசகர் திடீரென இறந்து போனார். கஃபேன் மற்றும் பசியைக் குறைக்கும் ஹோமியோபதி மருந்து இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்ட நச்சுத்தன்மையினால் ஏற்பட்ட விபத்து என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆலோசகரின் பரந்துபட்ட மருத்துவப் பின்னணியைக் கணக்கில்கொண்டால், ஏதோ ஒரு நிலையில் எதையும் மறுதலிக்கும் எண்ணத்தில் உள்ளவர் மட்டுமே, இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பதைப் பார்க்காமல் இருக்கமுடியும்.

இது ஆலோசகருடன் உணர்வுப்பூர்வமான தொடர்பையும் ஓரளவுக்கு நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த நோயாளிகளை ‘வயதுவந்தவர்களின் இழப்பு மற்றும் கைவிடுதல்’ அதிர்ச்சிக்கு ஆளாக்கும் சாத்தியம் இருந்தது என்றாலும் அவர்களுக்குக் கடிதமோ ஒலிநாடாவோ உற்சாகமூட்டும் கடைசி வார்த்தைகளோ எதையும்  விட்டுச் செல்லவில்லை என்பதால் இந்தப் புதிய இழப்பு மனவழுத்தம் கொண்டவரை சுக்குநூறாக உடைத்துப் போட்டது. அதனால் ஏற்பட்ட நம்பிகையிழப்பும் மனக்கசப்பும் தாங்க முடியாததாக இருந்ததால் ஆதரவு அமைப்பைப் பரபரப்புடன் தொடர்ந்தும் நாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

ஒரு மாலையிலேயே மூன்று அல்லது நான்கு வெவ்வேறு தோழிகளையோ சில நேரம் ஒருவரையே ஒரு இரவில் அல்லது இன்னும் காலங்கடந்த பின்னிரவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளோ அவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறோம் என்பதும் அவர்களது இணையுடன் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் இயைந்த கலவியின் நெருக்கத்தில் இருக்கும்போது தடங்கல் செய்கிறோம் என்பதும் உறுதியாகத் தெரிந்த போதிலும் கூட அதைத் தொடர்ந்து செய்து வந்தாள். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் உணர்வுப்பூர்வமான உயிர்ப் பிழைத்தலுக்காக வேண்டி பரிதாபகரமான பாரமாக இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த அவமானத்தை ஒதுக்கிவிட்டு, ஆதரவு அமைப்பில் இருப்பவர்களின் புரிந்துகொள்ளுதலின் மீதும் பேணுதலின் மீதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். இதிலுள்ள முரண்பாடு என்னவென்றால் ஆலோசகரின் இரண்டு அறிவுறுத்தல்களில் ஒன்றான இதைத்தான் அவள் வீரியத்துடன் எதிர்த்திருந்தாள்.

ஆலோசகரின் இறப்பு இதைவிட மோசமான தருணத்தில் நடந்திருக்க முடியாது என்பதை மனவழுத்தம் கொண்டவர் ஆதரவு அமைப்புடன் பகிர்ந்துகொண்டார். மனநல ஆலோசனை பெறுவது குறித்த அடிப்படையான அவமானம் மற்றும் மனவருத்தம் சார்ந்த பிரச்சனைகளைக் குறித்து ஆலோசகருடன் இணைந்து இப்போதுதான் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தார். எடுத்துக்காட்டாக, பணம் குறித்த அவள் பெற்றோரின் நடைமுறைக்கு ஒவ்வாத சிந்தனையும் அந்தச் சிந்தனை குறித்து அவள் சொல்வதைப் பொறுமையுடன கேட்கவும் ஆழ்ந்த புரிதலுடன் பதிலளிக்கவும் தொழில்முறை ஆலோசகர் ஒருவருக்கு மணிக்கு தொண்ணூறு அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தவேண்டிய முரண்பாடான இழிவான நிலைக்குத் தள்ளியிருப்பதையும் ஆலோசகரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். பொறுமையையும் புரிந்துணர்வையும் விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பது இழிவுபடுத்தப்படும் உணர்வை அளிப்பதாக இருக்கிறது என்றும் மறந்துவிட முயற்சி செய்யும் குழந்தைப்பருவ வலியின் துயர்கூட்டும் எதிரொலியாக இருக்கிறது என்றும் ஆலோசகரிடம் ஒப்புக்கொண்டார்.

தன்னுடைய நீண்ட நன்றியற்ற ஊளையிடல் என்று புரிந்துகொள்ளப்படக் கூடிய செயலுக்குப் பிறகும் ஆலோசகர் நெருக்கமாகவும் பொறுமையுடனும் கவனிப்பளித்தார் என்று ஆதரவு அமைப்பிடம் பின்னர் ஒப்புக்கொண்டார் மனவழுத்தம் கொண்டவர். ஒரு நீண்ட மௌனத்துக்குப் பிறகு இருவரும் ஒரே நேரத்தில் ஆலோசகரின் விரல்கள் உருவாக்கிய நீள்வட்டவடிவக் கூண்டு போன்ற அமைப்பை பார்த்துக்கொண்டிருந்த போது, சில நேரங்களில் மனவழுத்தம் கொண்டவர் சொல்வதின் சாராம்சத்தோடு தான் முரண்பட்டாலும் அவர்களிடையே இருந்த சிகிச்சை சார்ந்த உறவில் வரக்கூடிய எந்த உணர்வையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதை முழு மனதோடு ஆதரிக்கிறேன் என்றும் அப்போதுதான் அதை வெளிப்படுத்துவதற்கான பாதுகாப்பான முறையான சூழல்கள்பற்றி இருவரும் இணைந்து ஆய்வு செய்யமுடியும் என்றும் சொன்னார் ஆலோசகர்.

மனநல ஆலோசகரின் ஆதரவளிக்கும் பதில்களை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொள்ளும் போது இழப்பையும் நிராதரவாக இருக்கும் நிலைமையையும் தாங்க முடியாததாகச் செய்ததோடு அளவுக்கதிகமான வெறுப்புணர்ச்சி ஊட்டும் துயரமும் சுய பச்சாதாபமும் அலைபோல சூழ்ந்தது என்று ஆதரவு அமைப்பில் இருப்பவர்களிடம் தெரிவித்தார் மனவழுத்தம் கொண்டவர். இப்போதெல்லாம் தன் கர்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அதன் உறுப்பினர்களை அநேகமாக எல்லா நாட்களிலும் அழைக்க ஆரம்பித்திருந்தாள். பகலிலும், அலுவலகத்திலிருந்தும் கூட அழைத்து அவர்களுடைய துடிப்பும் ஊக்கமுமிக்க பணி வாழ்வில் இருந்து நேரம் ஒதுக்கி, தான் சொல்வதை ஆதரவுடன் கேட்டு, இந்தத் துயரையும் இழப்பையும் ஏதோ ஒரு வகையில் கடந்து வரவும் உயிர்ப்பிழைத்திருக்கவும் உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இந்தத் தோழிகளை பகல்நேரத்தில் அவர்களின் பணியிடத்தில் அழைத்து அவர்களுக்குச் சுமையாக இருப்பதற்காக அவள் கேட்டுக்கொண்ட மன்னிப்பைப் போலவே அவர்களின் இருத்தலுக்குத் தெரிவித்த நன்றியும் விளக்கமாகவும் உரத்த குரலிலும் நிரந்தரமானதாகவும் இருந்தது. ஒரு வார்த்தைகூட சொல்லாமல் ஆலோசகர் கைவிட்டுப்போன பின்னால், மனம்விட்டுப் பேசவும் பரஸ்பர ஊட்டத்தை ஏற்படுத்தும் நெருக்கத்தையும் ஆதரவையும் அளிக்கவும் எவ்வளவு குறைவான நபர்கள் இருக்கிறார்கள் என்பதை மிகுந்த வேதனையுடனும் நடுங்க வைக்கும் தெளிவுடனும் உணர்ந்திருந்தாள். எடுத்துக்காட்டாக, மனவழுத்தம் கொண்டவரின் பணிச்சூழல் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் செயலற்றதாகவும் இருந்ததால் உடன் பணியாற்றுபவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவோ பரஸ்பரம் ஆதரவாக இருக்கவோ எண்ணுவது கூட நகைப்புக்குரிய விஷயமாக இருந்தது. தனிமையில் இருக்கும்போது சர்ச், உணவூட்டம், முழுமையான உடற்பயிற்சி, சமூக இசைப்பயிற்சி போன்ற ஏதாவதொரு குழுவின் மூலம் அக்கறை காட்டும் உறவொன்றை வளர்த்துக் கொள்ளலாம் என்ற முயற்சி வேதனையிலேயே முடிந்ததால், தன்னாலான முயற்சியில் மனவழுத்தம் கொண்டவர் ஈடுபட வேண்டும் என்ற கனிவான பரிந்துரையைச் செய்த ஆலோசகரிடம் கெஞ்சி அவரை அதைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டியிருந்தது.

அடுத்ததாக, கச்சையை இறுக்கக் கட்டிக்கொண்டு வெளியே சென்று உணர்வுப்பூர்வமான ஹோப்பிஸியன் கோட்பாட்டைப் போன்ற மாமிச சந்தையான டேட்டிங் காட்சியில் நுழையும் யோசனையே… இந்த இடத்தில், மனவழுத்தம் கொண்டவர், பணியிடத்தில் அணிந்திருந்த ஹெட்செட்டின் ஒலிவாங்கிக்குள் வெற்றுச் சிரிப்பொன்றைச் சிரித்தபடி அவருடைய தணியாத மனவழுத்தமும் அதிகப்படியான நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகளும் இந்த யோசனையைப் பரிதாபகரமான மறுப்புகள் நிறைந்த விளையாட்டாக மாற்றிவிடும் போது இதுகுறித்து பேசவும் கூட வேண்டுமா என்று கேட்பார்.

துயராற்றும் செயல்முறையின் இப்போதைய நிலையில், மனவழுத்தம் கொண்டவரின் உணர்வுப்பூர்வமான வலி, அவருடைய எஞ்சியிருந்த பாதுகாப்பு நுட்பத்தை முற்றிலும் மூழ்கடித்திருந்தது. அதனால், தொலைபேசியை வைத்துவிட்டு சென்றேயாக வேண்டும் என ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர் மன்னிப்புக் கேட்கும்போது, உணர்வுப்பூர்வமான உயிர்ப் பிழைத்தலுக்கான முதன்மை உள்ளுணர்வுடன், தன் வெட்கத்தையும் நைந்துபோய் எஞ்சியிருக்கும் அகந்தையையும் விழுங்கிவிட்டு, இன்னமும் இரண்டு அல்லது ஒரு நிமிடம் மட்டுமாவது செலவழிக்க வேண்டுமென்று தோழியின் நேரத்துக்காகவும் கவனத்துக்காகவும் கெஞ்சத் துவங்குவார். ஆதரவான தோழி உறுதியாக இருந்து உரையாடலை முடித்துக் கொண்டாலோ தொலைபேசியின் மங்கலான ரீங்காரத் தொனியைக் கேட்கப் பிடிக்காமல் ஆட்காட்டி விரலின் ஏறுமாறான நகத்தின் புறத்தோலை கடிக்கத் துவங்குவாள் அல்லது உள்ளங்கையின் அடிப்பாகத்தை நெற்றியில் மூர்க்கமாகத் தேய்ப்பாள். முதன்மையான விரக்தி மேலிட ஆதரவு அமைப்பின் தொலைபேசி பட்டியலிலிருக்கும் அடுத்த பத்து இலக்க எண்ணை வேகவேகமாக டயல் செய்வாள். இதற்குள்ளாக அந்தப் பட்டியல் பலமுறை நகல் எடுக்கப்பட்டு மனவழுத்தம் கொண்டவரின் முகவரிப் புத்தகம், பணியிடத்தில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒரு ஃபைல், பர்ஸ், முழுமையான உடற்பயிற்சி மற்றும் உணவூட்ட மையத்தின் பாதுகாப்புப் பெட்டகம், இறந்துபோன ஆலோசகரின் பரிந்துரையின் பேரில் தன்னுடன் போகுமிடமெல்லாம் எடுத்துச் சென்ற தோலுறையிடப்பட்ட ‘உணர்வுகள்’ நாட்குறிப்பேட்டின் பின்னட்டையில் இருக்கும் ஒரு பிரத்யேகமான உறை என்று எல்லா இடத்திலும் வைக்கப்பட்டிருக்கும்.

இதே கட்டத்தில்தான் தற்காப்பு உத்தியை விட்டுத்தள்ளி, தன் ஆழ் உணர்வுகளை ஆதரவு அமைப்பிலிருக்கும் ஒரேயொரு நம்பிக்கைக்குரிய இன்றியமையாத உறுப்பினரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டார் மனவழுத்தம் கொண்டவர். கூடவே அதிகப்படியான மருந்தை எடுத்துக் கொண்டதால் மறைந்த ஆலோசகரின் இரண்டு பரிந்துரைகளுள் இரண்டாவதைக் கடைப்பிடிப்பதற்காக, தான் எதையும் எதிர்கொள்ளும் தயார்நிலையில் இப்போது இருப்பதையும் அவருடன் ஒன்றாகப் பணியாற்றிய காலத்தில் இதை படுமுனைப்புடன் எதிர்த்திருந்தேன் என்பதையும் பகிர்ந்து கொண்டார். தன் வாழ்க்கையில் இருக்கும் சில முக்கியமான நபர்களிடம் அவர்களுக்கு எப்போதேனும் அவள்மீது இரகசியமாக இகழ்ச்சியோ ஏளனமோ குற்றம் கண்டுபிடிக்கவோ வெறுப்போ கொள்ளத் தோன்றியதா என்று சொல்லுமாறு கேட்பது மூலம் இதுவரை இல்லாத உணர்வுப்பூர்வமான இடரை எதிர்கொள்ளத் தீர்மானித்தார் மனவழுத்தம் கொண்டவர். இந்த எளிதில் வடுப்படத்தக்க கேள்வி கேட்கும் செயல்முறையை, ஊட்டத்தை வழங்கும் பொறுப்பும் நம்பகத்தன்மையுமுடைய ஆதரவு அமைப்பின் உறுப்பினர் ஒருவரிடம், பணியிடத்திலிருந்த தொலைபேசியின் வழியாகத் தற்போது பகிர்ந்து கொண்டிருந்தாள்.

ஆழ்ந்த துயரை ஏற்படுத்தக்கூடிய இந்தக் கேள்விகளை எந்தவிதமான முன்னுரையோ மன்னிப்போ அல்லது இடைச்செருகலான சுய விமர்சனமோ இல்லாமல் கேட்க முடிவு செய்திருந்தாள். மதிப்புமிக்க எதையும் மறைக்காத தோழியிடமிருந்து தன்னைப் பற்றிய நேர்மையான கருத்தைக் கேட்க வேண்டும் என்றும் எதிர்மறையான குற்றம் சாட்டப்படக்கக் கூடிய, துயரமேற்படுத்தக் கூடிய, காயப்படுத்தக் கூடிய பகுதிகளையும், கூடவே நேர்மறையான, உறுதிப்பாடான, ஆதரவான வளர்ச்சியை எடுத்துக்கூறும் பகுதிகளையும் சேர்த்தே தான். புறவய நிலையில் இருந்தாலும் ஆழ்ந்த அக்கறையும் நெருக்கமும் கொண்ட நபரிடமிருந்து வரும், தன்னைப் பற்றின நேர்மையான கணிப்பைக் குறித்துத் தெரிந்துகொள்ளத் தீவிரமாக இருப்பதாகவும் இந்தச் சமயத்தில் இது ஒரு வாழ்வா சாவா சமாச்சாரம் போலப் பட்டது என்றும் கூறினார் மனவழுத்தம் கொண்டவர்,

தனக்கு நம்பிக்கை வழங்கும், உடல்நலம் தேறிவரும் தோழியிடம் தன்னைப் பற்றித் தானே அறிந்துகொள்ளும் விஷயங்கள் மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கின்றன எனப் பகிர்ந்து கொண்டார் மனவழுத்தம் கொண்டவர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகத் தன்னுடைய ஒரே மதிப்புமிக்க வளமாகவும் நம்பிக்கைக்குரிய ஆதரவாகவும் இருந்த ஆலோசகரின் இறப்புக்குப் பின்னர் — இதனால் ஆதரவு அமைப்பிலிருக்கும் மற்ற தோழிகளை அவமதிக்கவில்லை — உலகத்திலேயே மிகச்சிறந்த நண்பராகவும் அவரேதான் இருந்தார் என்பதுதான் அது. துயரத்தை ஆற்றுப்படுத்தும் செயல்நிலையில், தன்னுடைய தினசரி ‘அமைதி நேரத்தில்’ மௌனமாக நடுநிலைப்படுத்திக் கொண்டு உள்நோக்கி ஆழ்ந்து பார்க்கும்போது, இறந்துபோன ஆலோசகரை ஒரு சக மனிதராக உணரவோ அடையாளம் காணவோ முடியவில்லை. உணர்வை மழுங்கடித்துக் கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள விழையும் ஒருவரால் தான், அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் என்பதைப் பார்க்காமல் இருக்க முடியும். தன்னைப் போலவோ அல்லது தன்னைவிட அதிகமாகவோ பல நிலைகளில் உணர்வுப்பூர்வமான வலியிலும் தனிமையிலும் விரக்தியிலும் துன்பத்தை அவர் அனுபவித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் மனவழுத்தம் கொண்டவர்.

ஆலோசகரின் தற்கொலைக்குப் பின்னர் வேதனையூட்டும் பல உணர்வுகளை மனவழுத்தம் கொண்டவர்  கடக்க வேண்டியிருந்தாலும் இவையனைத்தும் அவளைப் பற்றியதாகவும் அவளுக்கானதாகவும் மட்டுமே இருந்தது, அதாவது, அவளுடைய நஷ்டம், அவளுடைய தனித்து விடப்படல், அவளுடைய துயரம், அவளுடைய வேதனை, வலி மற்றும் முதன்மையான உயிர்ப் பிழைத்திருத்தலுக்கான உணர்ச்சி. அச்சமூட்டும் இந்தப் புரிதல்கள் பரிவு, ஒத்துணர்வு அல்லது ஆலோசகரின்பால் திருப்பப்பட்ட துயரம் போன்ற எந்த உணர்வுகளையும் அவளுக்குள் எழுப்பாது — இந்த இடத்தில் இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்  நம்பிக்கைக்குரிய தோழிக்கு குமட்டிக் கொண்டு வருவதை அவர் கடந்துவிட்ட பின்னர் இதைப் பகிர்ந்துகொள்ளும் உணர்வுப்பூர்வமான இடரை எதிர்கொள்ளலாம் என்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார் மனவழுத்தம் கொண்டவர் — இந்தப் புரிதல்கள் வெறுமனே அவளைக் குறித்த உணர்வுகளையே மீட்டுக்கொண்டு வந்திருந்தது.

பகிர்தலின் இந்தக் கட்டத்தில் தன்னுடைய தொலைதூர, ரொம்பவும் உடல்நிலை மோசமாக இருந்த, அடிக்கடி குமட்டலுக்கு ஆளான, ஆனால் இன்னமும் அவள் அக்கறையும் நெருக்கமும் கொண்ட தோழியிடம் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் நச்சுத்தன்மையோ சூழ்ச்சியுடன் கூடிய சுய வெறுப்போ இல்லையென்றும் அளவுமிகுந்த பயம் மட்டுமே இருந்தது என்றும் சபதமிட்டாள் மனவழுத்தம் கொண்டவர்: அவளையே குறித்த பயம் — அதாவது அவளுடைய ‘மனநிலை’ அல்லது ‘ஆன்மா’, அடிப்படையான மனித ஒத்துணர்வும் பரிவும் குறித்து — என்று நரம்புப் புற்றுநோயால் (நியூரோபிளாஸ்டோமா) பாதிக்கப்பட்டிருந்த அந்தத் தோழியிடம் சொன்னாள் மனவழுத்தம் கொண்டவர்.

இந்தக் கேள்வியை மனமாரவும் நேர்மையாகவும் தீவிரமாகவும் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னாள் மனவழுத்தம் கொண்டவர்: எந்த மாதிரியான மனிதர் ‘எதைப் பற்றியும்’ உணராமல் இருப்பார்? ‘எதைப் பற்றியும்’, என்பதை அழுத்திச் சொன்னாள் — அவளைத் தவிர வேறு யாரைப் பற்றியும்?

தொலைபேசியின் ஒலிவாங்கிக்குள் அழுதபடி, இப்போது உலகத்திலேயே தனக்கிருக்கும் மதிப்புமிக்க, நம்பிக்கைமிக்க ஒரே தோழியிடம் வெட்கமில்லாமல் பிச்சையெடுப்பதாகவும் அவளைப் பற்றிய கொடூரமான வெளிப்படையான கணிப்பைக் கூறுமாறும், எதையும் விட்டு வைக்காமல், ஆறுதல்படுத்தும் வகையிலோ நம்பிக்கையை மீட்டளிக்கும் வகையிலோ குற்றமற்றவர் என்று விளக்கும் வகையிலோ சொல்ல வேண்டாம் என்றும் அப்படியிருந்தாலும் அதை உண்மை என்று தான் நம்பவில்லை என்றும் சொன்னாள். (இந்தத் தோழிக்குத் தான் அட்ரீனல் மெடுல்லாவில் வீரியமிக்க புற்றுநோய்க்கட்டி இருந்தது). அவளை, தான் முழுவதுமாக நம்புவதாக உத்தரவாதம் தந்தாள்.

எவ்வளவுதான் மன உளைச்சலும் துயரமும் விவரிக்க முடியாத தனிமையும் நிறைந்ததாக இருந்தாலும் தற்போதைய அவள் வாழ்க்கை குணமடைதலை நோக்கிய பயணத்தைச் சார்ந்தே இருந்தது என்பதால் உண்மையான கருத்து துயரூட்டுவதாகவோ காயம் ஏற்படுத்துவதாகவோ இருந்தாலும் அதை வரவேற்பது, மேலும் தேவைப்பட்டால் அதற்காக வெட்கமின்றி கெஞ்சக்கூடச் செய்வது என்று அவள் முடிவு செய்துவிட்டாள் என்பதைப் பகிர்ந்து கொண்டாள். குணப்படுத்தவே முடியாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தாலும் எதையும் மறைக்காமல் சொல்லுமாறு தோழியிடம் வற்புறுத்தினார் மனவழுத்தம் கொண்டவர்: இது போன்ற தன்னலமிகுந்த, தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்த, முடிவேயில்லாத உணர்வுப்பூர்வமான வெற்றிடமாகவும் உறிஞ்சு பொருளாகவும் இருப்பது போலத் தோன்றும் ஒருத்தியை என்ன வார்த்தை சொல்லி விவரிப்பது? அவளைப் பற்றி எதை முடிவுசெய்து எப்படி விவரிப்பது — தன்னிடமே, தன்னையே பார்த்தும் கூட — தன்னைப் பற்றித் தானே தெரிந்து கொண்டவற்றைப் பற்றி?

*

டேவிட் ஃபாஸ்டர் வாலஸ்

மூலம்: The Depressed Person, David Foster Wallace, Harpers Magazine.