முகம்

by எம்.கே.மணி
0 comment

“செத்துப் போகணும்னு முடிவுசெஞ்சேன். ஆட்டோ புடிச்சு நேரா இங்க வந்து படுத்தேன்!“ என்றார் பாசு. அவர் சொல்லி முடிக்கும்போதே காலை வெயிலை ஏற்று எதிரொளித்துக்கொண்டு ஒரு புகைவண்டி போயிற்று. கொஞ்ச நேரம் அந்தத் தடக்தடக்கில் கூடிக்கொண்டிருந்தது மனம்.

சாவதற்கு நல்ல இடம். சாலை விஸ்தரிக்கப்பட்டு, கட்டிடங்கள் அதிகரித்து, சுரங்கப்பாதை எல்லாம் வந்து, போக்குவரத்து நெருக்கினாலும்கூட, நாற்பது வருடங்களுக்கு அப்புறமும் இது சாவதற்கு ஏற்ற இடம்தான். இவ்வளவு காலம் போன பின்னாலும், அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் கூர்ந்து கவனிக்க முடியாது. மரங்கள் அரண்களாகவும், கூரையாகவும் அவ்விடத்தில் மூர்க்கமான நிழலை உண்டு பண்ணியிருந்தன. மிகவும் தனிமைப்பட்டவர்கள் தேடிப் புறப்பட்டால், அங்கிருந்து மரணத்தின் குளுமை அழைப்பது புரிந்துவிடும். காரில் அந்த இடத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். பாசுவின் முகத்தில் சந்தோசம் இருந்தது. 

அவர் சொன்னார். “தெரியும் இல்லையா, அப்ப எல்லாம் போட்டோ ஸ்டுடியோன்னா அதுக்கு தனி கௌரவம். காசு குடுத்து படம் எடுக்க வர்றவனை கழுத்த பிடிச்சு சரியா உக்காருய்யான்னுவாங்க. நான் வேல கத்துக்கப் போனது வேற செம்ம எடம். அந்த மொதலாளி கெத்து பண்ணிப்பார். பக்கவாட்டில பல வக்கிரம். எப்படியாவது இவன் வேலைய கத்துப்பானோன்னு ஊடுருவி பாத்துகிட்டே இருப்பார். சும்மா இருக்கக்கூடாதேன்னு ஒரு எரிச்சல் வந்துட்டா, ரிசப்ஷன்ல இருக்கற டேபிளுக்கு அடியில நாலணா எட்டணா சில்லறைக் காசை போட்டுட்டு, என்னை தேட வைக்கறதெல்லாம் உண்டு. என் வயசுக்கு அதெல்லாம் சிரிப்புதான் வரும். என்னோட பாக்கெட்ல இருந்து காச எடுத்து வெச்சிட்டு கெடைச்சுட்டதா சொல்லுவேன். ஒருவேள அவர் காசேகூட போட்ருக்க மாட்டார், நான் குடுக்கறத வாங்கிப்பார். அப்ப அவர் சிந்தற புன்னகை ஒன்னு உண்டு, அடடா!” 

“ஒருநாள், ஒரு சோம்பலான மதியம்னு வெச்சுக்கலாம். ஸ்டுடியோவில அப்ப நான் தனியாதான் இருந்தேன். சௌமியோட அப்பாவும், கூட ஒருத்தரும் வந்தாங்க. ரெண்டு பேரும் சொந்தம். கூட வந்தவர் பேரு வாசு, அவருக்கு அபுதாபில இருந்து விசா வந்துருக்கு. அத போட்டோஸ்டேட் எடுக்கணும்னு சொன்னாங்க. சந்துக்கு சந்து சிராக்ஸ் கட வந்துருச்சு இல்ல, இது அதுக்கு முன்னால. மொறப்படி, அவங்கள நான் மவுண்ட்ரோட்டுக்கு போவ சொல்லியிருக்கணும். ஆர்டர் எடுத்துருக்க தேவையில்ல. வேற யாராவது இதை கொண்டுவந்துருந்தா, நான் எடுத்துருக்க மாட்டேன். இது சௌமியோட அப்பா இல்லையா? வாங்கி வெச்சுகிட்டேன். அவர் என்னோட மனசார ரெண்டு வார்த்த பேசி, முதுகைத் தட்டிக் குடுத்துட்டுப் போனதில அவ்வளவு சந்தோசம். அத இன்னைக்கு சரியா விளக்க முடியாது, ஏன்னா இந்த பதினேழு வயசு, பதினெட்டு வயசோட மனசிருக்கே, ஒலகத்த பத்தி ஒன்னுமே தெரிஞ்சுக்காம, அதுக்கு இருக்கக்கூடிய கற்பனைய என்னன்னு சொல்லலாம்?” 

“மொதலாளி வந்து என்னதான் மவுண்ட் ரோட்டுக்கு போவ சொன்னார். எல்லாம் சரியாதான் நடந்தது. போட்டோஸ்டேட் எடுத்துகிட்டேன். ஒரே கல்லுல நாலு மாங்கா அடிக்க குதிக்கிறவர் நம்ம மொதலாளி. அங்க போறியா, அங்க இருந்து இங்க போயி இதெல்லாம் வாங்கிட்டு வா. இங்க போறியா, இங்க இருந்து அங்க போயி, அதெல்லாம் வாங்கிட்டு வா. ஓகே. அங்க இருந்து பஸ்ஸ புடிச்சு சூளைக்கு போயி, பிளாக் அண்ட் வைட் பிரிண்ட் போடற ஷீட்ஸ் பாக்ஸ், டெவலப்பர், ஹைப்போ, பிலிம் பேக்குங்க எல்லாம் வாங்கிகிட்டேன். இந்த பெட்டிங்ககூட அந்தக் கவரை சேத்துப் பிடிச்சிருந்தேன். தப்பு அது. பஸ்லயும் கூட்டமா கூட்டம். ஒரு பஸ்ல இருந்து எறங்கி வேற பஸ்சுக்கு ஏறும்போதுதான் கவனிக்கிறேன், கவர் இல்லை. மிஸ்ஸிங்.”

“அப்புறம் நடந்ததை எல்லாம் சொல்லணும்னா இப்பகூட எனக்கு தலை சுத்தும். நான் இறங்கின பஸ்ஸை பிடிக்க ஆட்டோ எடுத்துகிட்டு டெப்போ வரைக்கும் ஓடினேன். அத தேடி ஒரு வழியா பல பேர் முன்னாலையும் அழுது, அவங்க சொன்னத கேட்டு மறுபடி ஒரு ஆட்டோ எடுத்து பொறப்பட்டுப் போன பஸ்ஸை வழி மறிச்சு ஏறிகிட்டேன். சாயந்திர நேரம், ஜனம்! அத்தன பேரோட காலுக்குள்ளேயும் பூந்தடிச்சு தேடி, டெப்போ வந்து ஜனம் ஒஞ்சப்புறம் ஒவ்வொரு இன்ச்சையும் அலசி முடிச்சு உக்காந்துட்டேன். ஏம்பா அழறேன்னு ஆறுதல் சொன்ன ஒரு மொகத்தையும் நான் பாக்கலேன்னு சொன்னா போதாதா?”

“அது கெடைக்காது.”

“இப்ப எல்லாத்தையும் பூ பூன்னு ஊதித் தள்ளிடலாம் சிவதாசா. அன்னைக்கு ஒரு விசான்னு சொன்னா அது என்ன? அது ஒரு கேக்காத அதிசயமில்லையா? ஒர்த்தனுக்கு அது வந்து சேந்துச்சுன்னா அவன் பக்கத்து வீட்டுக்காரங்க, சாதி சனமெல்லாம் வந்து கும்பிட்டுப் போவுமே? வாசு ஒரு ஏழ வீட்டுப் பையன். எத்தன பணம் செலவு செஞ்சாங்களோ? அதுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்களோ? இப்ப அவனால் துபாயிக்குக் கெளம்பி போவ முடியாதுன்னு சொன்னா? இது எல்லாத்தையும் விட்ரலாம். வாசு குடும்பத்துக்கு உதவி செய்ய நெனச்சு பாடு படற சௌமியோட அப்பா? அவர் என்னைப் பத்தி என்ன நெனைப்பார்?”

“அவர் நெனச்சுப் பாக்கக்கூடிய என்னோட அலட்சியத்தை அவமானப்பட்டேன். அதை ஜெயிக்கவே முடியல.”

“ஆட்டோ பிடிச்சு வந்து டிரெயின் டிராக்ல படுத்தேன். ரயில் வர்றப்ப எழுந்துட்டேன். திரும்ப திரும்ப அதையே கொஞ்ச நேரம் செஞ்சுகிட்டிருந்தேன். அழுகை நிக்கவேயில்லை. நேரா நான் போனது எங்க அப்பாகிட்ட. அவர் ஆடிப் போயிட்டார். வளந்த புள்ள அழுவறதாவது. அதுவும் இல்லாம நான் எல்லாம் பெரிய ஆளுன்னு ஒரு டைம்ல நெனப்போம், பெரிய லாடு மாதிரி நடந்துப்போம், என்னால அவர் ரொம்ப அடிபட்டிருந்தார். சொல்லப்போனா எங்களுக்குள்ள பேச்சுவார்த்தையே இல்ல. அதெல்லாம் இப்ப ஒரு நிமிஷத்துல அடிச்சுகிட்டுப் போச்சு. என் தோள்ள கைய போட்டு அணைச்சுக்கிட்டு, என்னைக் கூட்டிகிட்டு நடந்தது எனக்கே பரிதாபமா இருந்துச்சு. மொதலாளி நீங்க எல்லாம் சொந்தம், உங்களுக்குள்ள முடிச்சுக்கங்க என்று தனது வேலையைப் பார்த்தார்.”

“ஒரு மனுஷன் ஒரு சரியை செய்றதில புதுசா சொல்றதுக்கு இல்ல. அது வாழறதுக்கு இருக்கற ஆச. அவன் தன்னை இங்க வெச்சுகிட்டா பிரயோஜனம் இருக்கும்னு நம்பறான். தப்பு செய்யும்போது என்ன நடக்குது? அது மில்லியன் டாலர் கேள்வி. என்னோட புத்தி சட்டுனு திரவமாக உருகி எல்லா பக்கத்துக்கும் ஓடினதுல அது என்ன கைவிட்டுப் போச்சு. நான் எல்லார்கிட்டேயும் என்னோட அசிரத்தையை மறைக்க புதுசா ஒரு கத சொன்னேன். விசா கவரிலதான் பணத்த வெச்சு இருந்தேன். அதுக்காக யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டாங்க. அந்தப் பொய் பாதிகூட வேகாத சோறு. நான் சரியாதான் இருந்தேன், ஒருத்தன் அத திருடிகிட்டுப் போயிட்டா, நான் என்ன செய்ய முடியும்? அந்த ராத்ரில நாங்க தேவுடு காத்து பாத்த அந்த இன்ஸ்பெக்டர் குடிச்சிருந்தான். அந்த ஏரியா பிக் பாக்கெட் மக்களை எல்லாம் அள்ளிகிட்டு வந்து பொளந்து கட்டினாங்க. அந்தக் கூட்டத்துல நான் ஒருத்தரோட மொகத்த நல்லாவே பாத்தேன். வலி! ம்மா, ம்மான்னு சொல்லிகிட்டே அவன் பீடி புடிச்சான். அவன் கண்ணுல எனக்குக் கொடுக்க வேண்டிய சாபத்தை பாத்தேன்.”

“யாரும் எடுக்கல, நான்தான் தொலச்சேன்னு சொல்ல துணிச்சல் வந்துடும் போல இருக்கறப்ப, இன்ஸ்பெக்டர் என் கண்ண பாத்துகிட்டே ஒன்னு சொன்னான்.”

“உங்க பையன் சரி இல்லன்னு நெனக்கிறேன். எதோ புளுவடிக்கிறான். காச சுருட்டிட்டு கத சொல்றான். விசாவ எங்க தூக்கிப் போட்டான்னு கேளுங்க!“

அத்தனை பேரும் அவனையே பார்த்தார்கள். சற்றே குடியின் ஆட்டமிருந்தது.

“இல்லன்ன என்கிட்டே உட்டுட்டு போங்க. நான் விசாரிக்கறேன். மணி மணியா உண்மைங்க வரும்!“

“நாங்க எல்லாரும் திரும்பிட்டோம். அதுக்கு அப்பறம் யாரும் என்கிட்டே எதுவும் கேக்கல. மறுபடி விசா காப்பி வந்து நாலு மாசத்தில வாசு அபுதபிக்கும் போயாச்சு.”

பாசு கொஞ்ச நேரம் காரைக் கையாள்வதில் மும்முரம் காட்டினார். உள்ளே இருந்து ஒரு பாறாங்கல்லைப் புரட்டிப்போட்டதன் அதிர்வு கொஞ்ச நேரமாவது இருக்கத்தானே செய்யும்? நான் கதை கேட்கத் தயார் இல்லாதவன் போல இருந்தேன். ஒரு சீரான சாலைக்கு வந்ததும் பாசு தொடர்ந்தார்.

“சௌமியோட அப்பா எப்பவாச்சும் என்ன பாக்க வேண்டி வந்தா பேசறது கிடையாது, சௌமியோட அம்மா கழுத்தைகூட திருப்பிகிட்டாங்க. எங்க சாதி சனம் மொத்தமுமே என்ன நாலு கண்ணால பாத்துகிட்டு போறது பெரிய காமெடி. பிசாத்து பணத்துக்காக விசாவை கிழிச்சுப் போட்டவனாச்சே பாஸ்கர்!”

“சௌமி?“

“என்ன சௌமி?“

நான் மெளனமாக இருந்தேன்.

“டேய், நான் அவள எப்ப பாத்தேனோ அப்பவே எனக்கு நெஞ்சு பாரம்தான். ஒரு வார்த்த பேசினது கிடையாது. பத்து வருஷம் இருக்குமா, அவ போற வர்றத தூரத்துல இருந்து பாப்பேன். அவ எப்பேர்ப்பட்ட பொண்ணுன்னு ஒனக்கு தெரியுமே? அவளுக்கெல்லாம் நான் ஒரு ஆளாவ முடியுமா? நான் என் நெஞ்சு வலியோட சந்தோஷமாதான் இருந்தேன். விசா காணாமப் போனது பத்தி அவ என்ன நெனச்சான்னு எனக்கு தெரியவே தெரியாது. இன்னும் சொல்லப்போனா அவ சாவுக்கு குடும்பமா போயிருந்தோம் இல்ல? அன்னைக்குதான் அவ மொகத்த நிறைய நேரம் பாத்தேன். தெரியுமா?“

எனக்கு மேலே பேசுவதற்குப் பிடிக்கவில்லை என்று அறிந்தேன்.

“எனக்கு அழ எல்லாம் வரல. ஏன்னு கேளு?“

“ஏன்?“

“அவ யாரு மாதிரியோ இருந்தாடா. அந்த மொகம், அது எனக்குப் பழக்கப்பட்டதே கெடையாது. விசா காணாம போச்சு இல்ல? நானும் அப்பாவும் நேரா சௌமியோட அப்பாவ பாக்கத்தான் போனோம். அப்பா அந்த வீட்டுக்குள்ள போனார். நான் வராந்தால நின்னு தேம்பிகிட்டு இருந்தேன். அப்பா நடந்தத சொல்லிக்கிட்டு இருந்தார்னு தெரியும். அப்ப சௌமி வந்தா. என்னைப் பாத்தா. அழாதன்னா. நான் சத்தம் போட்டு குலுங்கி குலுங்கி அழுதேன். என்னைத் தொட்டா. நிமுந்து பாத்தேன்.”

“ஒன்னும் ஆவாது. கவலைப்படாத. சரியா?“   

“அவ மொகத்துல எனக்காக ஒரு மொகம் இருந்திச்சு சிவதாசா. அத நான் எடுத்துகிட்டேன். அன்னைக்கும் இன்னைக்கும் அது மாயவே மாயல. என்னதான் கஷ்ட நஷ்டம் வரட்டுமே, நம்மள புரிஞ்சுக்காம எவன்தான் காறித் துப்பட்டுமே, அப்ப வரும். ஒன்னும் ஆவாது. கவலைப்படாத சரியா?“ 

“நான் சாவற வர அவளுக்கு சாவு கெடையாது, அவ்வளவுதான்!“

அவன் சட்டென காரில் பாடிக்கொண்டிருந்த பாடலுடன் இணைந்து சீட்டியடிக்கத் தொடங்கினான். நான் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். முகங்கள், முகங்கள், முகங்கள். அவைகள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. கற்பனைகள் பெருகுவதை நிறுத்த முடியவில்லை.